தீயினில் வளர் ஜோதியே

Anuya

Well-known member
Apr 30, 2019
255
274
63
அத்தியாயம் - 23

பிரெட் ஆம்லெட்டின் கடைசி விள்ளலை வாயிடலடைத்துக் கொண்டு டிஷ்யூவில் கையைத் துடைத்தபடி எழுந்த கிஷோர், “சுமி! கிளம்பலாமா?” எனக் குரல் கொடுத்தான்.

“வந்துட்டேன் கிஷோர்!” பதில் சொல்லிக்கொண்டே வந்தாள் சுமித்ரா.

கையிலிருந்த பாலை ஒரே மூச்சாக குடித்துவிட்டு, “ம், வரேம்மா! வரேன்ப்பா!” என்றவன் ப்ரீஃப்கேஸுடன் நடந்தான்.

“வரேன் அங்கிள்! ஆன்ட்டி!” என்றவள், அவனைப் பின் தொடர்ந்தாள்.

விழிகள் பிரகாசிக்க, உதடுகளில் சிரிப்புடன் கணவரைப் பார்த்தார் மந்த்ரா.

“அடேங்கப்பா! ரொம்ப நாளைக்குப் பிறகு, உன் முகத்துல இப்படியொரு சிரிப்பைப் பார்க்கறேன் மந்த்ரா!” என்று சிரிப்புடன் சொன்னார் கேஷவ்நாத்.

“இருக்காதா? சுமி கொஞ்சம் கொஞ்சமா இப்போதானே நம்ம வழிக்கு வர்றா” என்றார்.

“என்ன வழி…?” என்றார் புரியாமல்.

சுதாரித்துக்கொண்டு, “குறுக்குக் கேள்வி மட்டும் நல்லா கேளுங்க. நம்ம வழின்னா, திரும்ப அவள் பழையபடி மாறி வர்றான்னு சொன்னேன்” என்றார் சமாளிப்பாக.

“அது சரி. நம்ம பிள்ளையும் இப்போதானே பழைய நிலைமைக்கு வந்திருக்கான். நடுவுல அவனை எந்த மோகினி பிடிச்சி ஆட்டுச்சோ…” என்றார்.

“இப்போ இந்தப் பேச்சு தேவையா. சாப்டீங்களா? உங்களுக்கு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாருங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு ஆஃபிஸ் பக்கமே நீங்க போகக்கூடாது” என்றார் கட்டளையாக.

“மகாராணி சொல்லி, என்னைக்குத் தட்டியிருக்கேன். ஆனா, நான் செய்யறதுக்கு என்ன வேலையிருக்கு? கங்கா இருந்தா அவனோட பேசலாம்…” என்றவருக்குக் குரல் உடைந்தது.

“ஆரம்பிச்சாச்சா! இப்போதான் சுமிகிட்ட ஒரு மாற்றம் தெரியுது. ரெண்டு நாளா ஆஃபிஸுக்கும் போய்ட்டு வர்றா. அவ எதிர்ல இப்படி ஏதாவது பேசி, அவளை அழவச்சிடாதீங்க” என்றார் எரிச்சலுடன்.

“சுமிகிட்ட மாற்றம் இருக்கோ இல்லயோ… உன்கிட்ட தெரியற மாற்றம்தான் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க்குது” என்ற கணவரை அதிருப்தியுடன் பார்த்தார்.

“சரி, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு. நான் லேடீஸ் கிளப் கிளம்பறேன். உங்க ஃப்ரெண்டு இறந்து மூணு மாசம் முடிஞ்சதும் ஒரு ஹோமத்தைப் பண்ணிட்டு, கல்யாணத்தை முடிக்கணும். நாள் குறிக்கத்தான் ஈவ்னிங் புரோகிதரை வரச்சொல்லியிருக்கேன்” என்றார்.

“ஏம்மா! அவசியம் மூணே மாசத்துல கல்யாணத்தை வச்சிக்கணுமா? நியாயமா, ஆறுமாசம் வரைக்குமாவது காத்திருக்கறது தானே நம்ம வழக்கம். அட்லீஸ்ட் நாம முதன்முதல்ல குறிச்ச நாள்லயே கல்யாணத்தை வச்சிக்கலாமே” என்றார் தயக்கத்துடன்.

“எனக்கு மட்டும் அந்த எண்ணம் இல்லைன்னு நினைக்கறீங்களா? அவள் நம்ம வீட்டுக்கு வரப்போற மருமகள்தான். அதுக்காக, கல்யாணம் முடிக்காம எத்தனை நாளைக்கு அவளை நம்ம வீட்ல வச்சிக்கமுடியும்? நானும் நாலையும் யோசிச்சித்தான் சொல்றேன்” என்றார்.
“இருந்தாலும், சுமியையும் ஒரு வார்த்தைக் கேட்டுக்கலாமே…” என்றார்.

“அவள் சின்னப் பொண்ணு! நாம என்ன அவளுக்குக் கெடுதலா பண்ணப்போறோம்?” என்ற மனைவியைக் குழப்பத்துடன் பார்த்தார்.

“நீ ரொம்ப அவசரப்படுறியோன்னு தோணுது மந்த்ரா…”

“இந்த விஷயத்துல வொர்ரி பண்ணிக்காம உங்க வேலையை மட்டும் பாருங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றவர் கைப்பையுடன் எழுந்தார்.

‘அன்னையிலயிலிருந்து இன்னைக்கு வரைக்கும் என் வேலையை மட்டும்தானே பார்த்துட்டிருக்கேன்’ என்றவர் பெருமூச்சு விட்டார்.

**************
”மேடம்! சாய்…” என்று ஆஃபீஸ் பாய் கதவைத் தட்டி எட்டிப்பார்த்தான்.

எதையோ பேப்பரில் வரைந்துகொண்டே, “வச்சிட்டுப் போங்க…” என்றாள்.

டீயையும், பிஸ்கெட்டையும் வைத்தவன், “மேடம்!” என்றான்.

“என்ன?” என்று நிமிர்ந்து பார்த்தாள்.

“சொன்னா தப்பா நினைச்சிக்காதீங்க மேடம்!” எனா இழுத்தவன், “நீங்க ஆஃபிஸுக்கு வந்தைபின்னதான் எம்.டி சாரோட முகத்துல ஒரு சந்தோஷம் தெரியுது மேடம்!” என்றவனை எதுவும் சொல்லாமல் பார்த்தாள்.

“தப்பா நினைச்சிக்காதீங்க மேடம்! சொல்லணும்னு தோணுச்சி… வரேன் மேடம்!” என்றான்.

”ம்” என்றவள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

வெறும் முடிச்சிலேயே அவிழ்த்திருக்க வேண்டிய விஷயத்தை, இடியாப்பச் சிக்கலாக மாற்றிவிட்டோம்’ என்று புரிய ஆயாசத்துடன் கண்களை மூடினாள்.

கிஷோரின் அருகாமையும், அவனது செயல்களில் வெளிப்படும் காதலையும் எண்ணி எண்ணி மனம் களைத்துப் போனது.

முன்பிருந்ததைப் போல அவன் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயலிலும் பேச்சிலும் ஒரு ஆதிக்கத்தைச் செலுத்தினால், முகத்திலடித்ததைப் போலப் பேசிவிடலாம். ஆனால், அவனது நடவடிக்கையெல்லாம் தனக்குப் பழைய கிஷோரையல்லாவா நினைவுபடுத்துகிறது.

நண்பனாக அவன் தன்னிடம் காட்டிய அத்தனை அன்பையும், அக்கறையௌம் அக்கவா இப்போது வெளிப்படுத்துகிறான். அவனை ஒதுக்கி வைப்பதைப் போல எப்படிப் பேசுவது?

நண்பனிடத்தில் ஒரு தோழியாகத்தான் பேசவேண்டும் என்ற முடிவுடன்தான் மீண்டும் அலுவலகத்திற்கு வருவதாகச் சொன்னாள். ஆனால், இப்போதுதான் அதைப் பற்றிப் பேசவே நா எழும்பாமல் தடுமாறுகிறது.

இதற்கு என்னதான் தீர்வு?’ என தத்தளிக்கும் மனத்தின் குழப்பத்திற்கான தெளிவு பிறக்கும் வழி புரியாமல் நெற்றியைத் தடவிக்கொண்டாள்.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, தனது கைப்பேசியின் ஒலியில் நினைவிற்கு வந்தவள் போனை எடுத்தாள்.

“நீத்து…!” மனத்திற்குள் மெல்லிய சந்தோசத்துடன் தோழியின் அழைப்பை எடுத்தாள்.

”ஹலோ நீத்து!” என்றாள்.

“பேசாதேடி. ஊருக்குப் போய்ச் சேர்ந்தவ எனக்கு ஒரு போன் பண்ணியா? நாங்க மூணு பேரும் உனக்குப் போ ந் செய்து ஓய்ஞ்சி போய்ட்டோம். மூணு நாள் உன் போன் ஸ்விட்ச் ஆஃப்ன்னே வந்தது. அங்கிளோட போனுக்குப் போட்டாலும் இதே கதைதான்” என்றாள் பொருமலுடன்.

“சாரி நீத்து…” என்றவளாது குரல் இறங்கியிருந்தது.

“நான்தான் கல்யாண பிஸியில் இருந்தேன். உனக்கு எங்க நினைப்பே வரலையா… போனை நிறுத்தி வைக்கிற அளவுக்கு என்னடி நடந்தது?” என்று கோபத்துடன் கேட்டாள்.

கண்கள் கலங்க, “எல்லாமே முடிஞ்சி போச்சு நீத்து!” என்றவள், உடைந்து போய் அழத்துவங்கினாள்.

”சுமி! என்னடி சொல்ற?” என்று பதறிப்போனாள் நீத்து.

தன்னைச் சமாளித்துக்கொண்டு தழுதழுத்தபடி நடந்தவற்றைச் சொல்லி முடித்தாள்.

“நான் இருந்த நிலைல கேஷவ் அங்கிளும், கிஷோரும் இல்லன்னா என்னால எதுவுமே செய்திருக்க முடியாது. நாலு நாள் என் போன் ஸ்விட்ச் ஆஃப்லயே தான் இருந்தது. அப்பாவோட போனும் காணாமல் போச்சு. நான் நானாவே இல்லாதப்ப போனைப் பத்தி நினைக்கற நிலைமலயும் இல்ல. அதான் ஸ்விட்ச் ஆஃப் ஆனது கூட எனக்குத் தெரியல. ஒரு வாரமா கிஷோர் வீட்லதான் இருக்கேன். வீட்ல இருந்தா அப்பாவோட நினைப்பு அதிகமா வருதுன்னுதான் ரெண்டு நாளா ஆஃபிஸுக்கும் வரேன்” என்றாள்.

“உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியலடி. நாங்க இத்தனைப் பேர் இருந்தும், உனக்குத் தேவையான நேரத்துல பக்கத்துல இருக்கமுடியாம போயிடுச்சே சுமி!” எனக் கலங்கியவளை சுமித்ரா தேற்ற வேண்டியிருந்தது.

“எனக்கு இப்பவே உன்னைப் பார்க்கணும் போலிருக்கு. ஆனா, இவர் ஆஃபிஸ்ல கொஞ்சம் பிஸி. நான் கண்டிப்பா சண்டே வரேன் சுமி!” என்றாள்.

“பரவாயில்ல நீத்து! நோ பார்மால்ட்டீஸ்…” என்றாள்.

“பார்மாலிட்டி அது இதுன்ன உதைவாங்குவ. நான் வரேன் அவ்வளவுதான்” என்றாள்.

“சரி வா. நம்ம வீட்டுக்கே வந்திடு” என்றாள்.

“ஓகே. நீ தைரியமா இரு…” என்றவள் மனமேயில்லாமல் போனை வைத்தாள்.

அன்று மாலை வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போது நீத்து போன் செய்ததை கிஷோரிடம் பகிர்ந்துகொண்டாள்.
“உன் ஃப்ரெண்டை நம்ம வீட்டுக்கே வரச்சொல்லியிருக்கலாமே…”

“எனக்கும் வீட்டுக்குப் போகணும் போலயிருந்தது கிஷோர்! சாட்டர்டே போய்ட்டு, மண்டே நேரா ஆஃபிஸ் வந்திடுறேனே” என்றாள்.

“ம்ம், ஓகே. பத்திரமா இருந்துப்பியா? எதுவா இருந்தாலும் எனக்குப் போன் பண்ணு. நான் கிளம்பி வரேன்” என்றான்.

“ம், சரி” எனத் தலையை அசைத்தாள்.

அவளையே பார்த்தவன், “நீ இப்படித் தலையை ஆட்டும்போது, உன் கம்மல் ஆடுறது பார்க்கவே அழகாயிருக்கு” என்று அவன் சிரிக்க, அவள் தவிப்புடன் வெளியே வேடிக்கைப் பார்க்கலானாள்.

**************

இரண்டு நாள்களுக்குப் பிறகு…

“சுமி! முக்கியமான க்ளையண்ட் ஒருத்தரை மீட் பண்ணணும். நீ கிளம்பினா, நான் உன்னை வீட்ல டிராப் பண்ணிட்டுப் போறேன்” என்றான்.

”எனக்குக் கொஞ்சம் வொர்க் இருக்கு. முடிச்சிட்டு நான் ஆட்டோ பிடிச்சிக்கிறேன். நீங்க கிளம்புங்க” என்றாள்.

“இல்லனா, நான் வீட்லயிருந்து, வேற கார் அனுப்பச் சொல்றேன்” என்றான்.

“அதெல்லாம் எதுவும் வேணாம். ஆன்ட்டியும், அங்கிளும் இன்னைக்கு வெளியே போறதா சொல்லிட்டிருந்தாங்க. நீங்க கவலைப்படாம கிளம்பிப் போங்க” என்றாள்.

“ம், ஓகே. வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் எனக்கு ஒரு மிஸ்ட் கால் கொடு…” என்றவன், கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி, “டைம் ஆகிடுச்சி… பை” என்று ஓட்டமும் நடையுமாகக் விரைந்தான்.

இரவு எட்டுமணி அளவில் வீட்டிற்கு வந்து சேர்ந்த சுமித்ரா, தான் வந்து சேர்ந்துவிட்டதாகக் கிஷோருக்குத் தகவலை அனுப்பிவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள்.

பசி வயிற்றைக் கிள்ளியது. மாலை நான்கு மணிக்கு டீ குடித்ததோடு சரி. கொண்டுவந்த ஸ்நாக்ஸையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.

கீழே வந்தவள் சமையலறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

“வாங்க சின்னம்மா!” என்ற சமையல்காரப் பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“புதுசா என்ன சின்னம்மா! எப்பவும் போல சுமித்ரான்னே கூப்பிடுங்க…” என்று சிரித்தவள், “டின்னர் ரெடியா இருக்கா? ஒரே பசி…” என்றாள்.

“உட்காரும்மா ரெண்டு நிமிஷத்துல சப்பாத்தி போட்டுடுறேன்” என்றார்.

“நான் மட்டும்தானே… இப்படியே உட்கார்ந்துக்கறேன்…” என்று அங்கிருந்த சிறிய டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இந்த அந்த வயதான பெண்மணி, தயங்கித் தயங்கி அவளருகில் நின்றிருந்தார்.

“நீங்க சாப்பிடலையா?” எனக் கேட்டாள்.

“அதுக்கு இன்னும் நேரம் இருக்கும்மா…” என்றவர், “உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்மா!” என்றார்.

அவரது முகத்தில் லேசான பதட்டத்துடன் அவ்வப்போது வீட்டு வாயிலைப் பார்ப்பதும், சுமித்ராவைப் பார்ப்பதுமாக இருந்தார்.

“ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க? நானும் மூணு நாலு நாளா உங்களைக் கவனிக்கிறேன் என்னைப் பார்க்கறப்போலாம் ஏதோ தௌமாறுறது போலவே இருக்கீங்க” என்றாள்.

“உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்மா…” என்றவர் ஒருமுறை வாசலைப் பார்த்துவிட்டு, “இன்னைக்குத்தாம்மா அதுக்கு நேரம் அமைஞ்சிருக்கு. உங்க அப்பா இறந்த அன்னைக்கு இங்கே வந்திருந்தார்” என்றார்.
என்னவோ ஏதோவென்று கேட்டுக்கொண்டிருந்த சுமித்ரா, முற்றுலுமாக அதிர்ந்து போனாள்.

“என்ன சொல்றீங்க? அப்..பா…!”

“ஆமாம்மா! அவர் வந்தார். பெரியம்மாவும், சின்னம்மாவும் தான் வீட்ல இருந்தாங்க. வெளியே போயிருந்த நான் பின்பக்கமா உள்ளே வந்ததை ரெண்டு பேருமே பார்க்கல. உங்க அப்பா இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு கோபமா சொல்ல, பெரியம்மா அவரோட சட்டையைப் பிடிச்சி உலுக்கி ஏதோ கோபமா சொன்னாங்கம்மா! நான் பயத்துல அப்படியே வந்த வழியே வெளியே போய்ட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியலம்மா…” என்றார்.

இடியாக இறங்கிய செய்தியில் சுமித்ராவின் கண்கள் அழுகையைக் கூட மறந்து போனது.

“தயவுசெய்து நான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரியவேணாம்மா. எனக்கு மனசு தாங்கலம்மா. அம்மாவும், பொண்ணும் தான் எல்லாத்துக்கும் காரணம். பெரியவருக்கும், தம்பிக்கும் எதுவுமே தெரியாதும்மா. வாட்ச் மேனுக்கும், தோட்டகாரருக்கும் அவர் வந்ததைச் சொல்லக்கூடாதுன்னு மிரட்டி வச்சிருக்காங்க. பெரிய இடத்து பொல்லாப்பு எதுக்குன்னு சும்மா இருக்க நினைச்சாலும், உன்னைப் பார்க்கறப்போலாம் என மனசே ஆறலம்மா…” என்றார் அந்தப் பெண்மணி.

நடைபிணமாக தனது அறைக்கு வந்த சுமித்ரா, தலையைப் பிடித்துக்கொண்டு கதவிலேயே சாய்ந்து அமர்ந்தாள்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
255
274
63
அத்தியாயம் - 24

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கிஷோர், திடுக்கிட்டு விழித்தெழுந்தான். ‘என்ன சப்தம் அது? யாரோ அலறியதைப் போல… ஆனால், இப்போது எந்தச் சப்தம் இல்லையே. ஒருவேளை ஏதேனும் கனவு கண்டு விழித்தேனோ! அல்லது எனது பிரமையா!’ என யோசித்துக்கொண்டிருக்கும் போதே மீண்டும், “வேணாம். ப்ளீஸ் வேணாம்…” என்ற அலறல் கேட்க, பிளாங்கெட்டை உதறிவிட்டு வேகமாக எழுந்து வெளியே வந்தான்.

“அப்பா…!” என்று அலறல் எழ, “சுமி!” என்றபடி அவளது அறைக்கு ஓடினான்.

“சுமி! சுமித்ரா!” கதவைத் திற” என்று வேகமாகக் கதவைத் தட்டினான்.

அதற்குள் அவனது பெற்றோரும் அங்கே வந்து சேர்ந்தனர்.

“சுமித்ரா! கதவைத் திறம்மா!” கேஷவ்நாத்தும், கிஷோரும் மாறி மாறிக் கதவைத் தட்டினர்.

“கதவை உடைச்சிடலாமாப்பா! என்னன்னே தெரியலையே… கதவையும் திறக்க மாட்டேன்றா” என்று பரிதவித்தான் கிஷோர்.

“சரிப்பா! என கேஷவ்நாத் சொல்லிக்கொடிருக்கும் போதே கதவைத் திறந்தாள் சுமித்ரா.

உடல் தெப்பலாக நனைந்து, விழிகளில் அப்பட்டமான பீதி தெரிய, பயத்தில் தொண்டைக் குழி ஏறியிறங்க நின்றிருந்தாள்.

“சுமி! என்னாச்சு?” என்றபடி உள்ளே நுழைந்தான் கிஷோர்.

பின்னாலேயே வந்த கேஷவ்நாத்தும் பதற்றத்துட விசாரிக்க, “நீங்கள்லாம் இந்தப் பக்கம் வாங்க” என்ற மந்த்ரா, “என்னம்மா! கனவு ஏதாவது கண்டியா?” என்றார்.

ஆம் என்பதைப் போலத் தலையை அசைத்தாள்.

“ஆனா…” என்றவளுக்குப் பேச்சு வராமல் விக்கியது.

“கிஷோர்! அந்தத் தண்ணியை எடு…” என்ற மந்த்ரா, “குடி சுமி!” என்று டம்ளரைக் கொடுக்க, நடுங்கிய விரல்களால் பற்றிக்கொண்டு ஒரே மூச்சில் குடித்துமுடித்தாள்.

அதுவரை அமைதியாக இருந்த கிஷோர், “கெட்டக் கனவு ஏதாவது வந்ததா?” என்று கேட்டான்.

“ஆஹ்… ம்” என்று தலையை ஆட்டியவள் மந்த்ராவின் தோள்மீது சாய்ந்து கொண்டு, அவரது கரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“சுமிம்மா!” என்று கேஷவ்நாத் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, “கேஷவ்! விடுங்க. அவளே பயந்து போயிருக்கா. நீங்கள்லாம் போங்க. நான் பார்த்துக்கறேன்” என்றார்.

ஆண்கள் இருவரும் மனமேயில்லாமல் அங்கிருந்து செல்ல, இன்னமும் அவளது இதயம் தாறுமாறாகத் துடிக்க, வேகமாக மூச்சுவிட்டபடி அவரது தோளில் சாய்ந்தபடியே இருந்தாள் சுமித்ரா.

”படுத்துக்கறியா சுமி!” என்று தேன் தடவிய வார்த்தைகளில் கேட்டார் மந்த்ரா.

“ஆன்ட்டி ப்ளீஸ்! நீங்க என்னோட இருங்களேன். எனக்குப் பயமாயிருக்கு…” என்றவளது கண்கள் கலங்கின.

“சரி, நீ படு. நானும் இங்கேயே தூங்கறேன்” என்றவர் அவளருகில் வந்து படுத்தார்.

விளக்கை அணைத்தவரிடம், “ப்ளீஸ் ஆன்ட்டி லைட் இருக்கட்டுமே…” என்றாள் கெஞ்சலாக.

படுத்திருந்த இருவருக்குமே உறக்கம் வரவில்லை. அவள் புரண்டு கொண்டிருக்க, மந்த்ரா அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“கண்ணை மூடித் தூங்கேன் சுமி!”

“இல்ல ஆன்ட்டி! கண்ணை மூடினா… நீங்..க..” என்றவள் மலங்க மலங்க விழித்தாள்.

“என்னாச்சு உனக்கு?” எனச் சற்று எரிச்சலுடன் கேட்டார்.

எழுந்து அமர்ந்தவள், “அப்பா உங்களைப் பார்க்க இங்கே வீட்டுக்கு வரலதானே ஆன்ட்டி!” என்றாள்.
அவளது கேள்வியில் திடுக்கிட்ட மந்த்ரா, எதுவும் சொல்லாமல் விழித்தார்.

“அப்பா இங்கே வந்தபோது, அங்கிள் இல்ல. அப்பா கோபமா உங்ககிட்ட இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்றாரு. நீங்க வெறித்தனமா அவரோட சட்டையைப் பிடிச்சி உலுக்கறீங்க…” என்றவள் நேராக மந்த்ராவின் முகத்தைப் பார்த்தாள்.

அவள் சொன்னதைக் கேட்ட மந்த்ராவின் முகம் பேயறைந்ததைப் போலயிருந்தது.
அதுவரை சுமியிடம் தெரிந்த உணர்வுகளும், நடவடிக்கைகளும் மந்த்ராவிற்குப் புலம் பெயர்ந்தன.

பிரயத்தனப்பட்டுத் தன்னை மீட்டுக்கொண்டவர், “என்ன உளர்ற?” என்றார் மிரட்டலாக.

“நான் ஏன் ஆன்ட்டி உங்களை மிரட்டப் போறேன்? என் கனவுல வந்த விஷயத்தைச் சொன்னேன்” என்றாள் அப்பாவியாக.

நம்பாத பாவனையுடன் அவளது முகத்தைப் பார்க்க, அவளும் ஒன்றும் அறியாததைப் போல அவரையே பார்த்தாள்.

“அங்கிள் எதிர்ல சொன்னா ஏதாவது விபரீதமாகிடப் போகுதுன்னுதான்… அப்போ சொல்லலை ஆன்ட்டி! எனக்குப் பயமாயிருக்கு ஆன்ட்டி! அப்பாதான் இங்கே வரவேயில்லையே… அப்படியே, அவர் வந்திருந்தா இல்லைன்னு நீங்க ஏன் சொல்லப் போறீங்க?” என்றவள் அவரது கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

மந்த்ராவின் கரங்களில் தெரிந்த மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தவளுக்கு, உள்ளுக்குள் கனன்றது. ஆனாலும், எதையும் முகத்தில் வெளிப்படுத்தாமல் மறைத்துக்கொள்ள அரும்பாடுபட்டாள்.

தனக்கிருந்த பதட்டத்தில் மந்த்ராவும் அவளது கண்கள் வெளிப்படுத்திய கோபத்தை உணரவில்லை.

“ஏன் ஆன்ட்டி எனக்கு இப்படி ஒரு கனவு வரணும்? எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு ஆன்ட்டி!” என்றாள்.

“அ..அது.. வந்து உன் அப்பாவையே நினைச்சிட்டு படுத்திருந்திருப்ப… அதான்” என்றவர் கைகளால் கழுத்தையும், நெற்றியையும் துடைத்துக் கொண்டார்.

“நீ படுத்துக்க. நான்தான் பக்கத்துலயே இருக்கேனே…” என்றவர் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தார்.

“ம்” என்ற சுமித்ரா, படுத்துக் கண்களை மூடினாள்.

மந்த்ராவிற்கோ மனத்திற்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.
‘இவள் என்ன நடந்ததை நேரில் பார்த்தவளைப் போலச் சொல்கிறாள். இவளுக்கு எப்படித் தெரியும்? கங்காதரன் இங்கே வந்தது என்னையும், மிதுனாவையும் தவிர யாருக்கும் தெரியாதே.

தோட்டக்காரனும், வாட்ச்மேனும் நிச்சயம் எனக்கெதிரிராக எதையும் செய்யமாட்டார்களே… பின் எப்படி? மிதுனா ஏதேனும் பேச்சோடு பேச்சாக உளறியிருப்பாளோ!’ என்று மகள் மீதே சந்தேகம் எழுந்தது.

அங்கே அமரவும் முடியவில்லை. வெளியே செல்லவும் வழியில்லாமல் குறுகுறுத்த மனத்துடன் அறைக்குள்ளேயே நடந்தார்.

டேபிள் மீதிருந்த கங்காதரனின் புகைப்படம் தன்னைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பதைப் போலத் தோன்ற, ஆத்திரத்துடன் போட்டோவை கவிழ்த்து வைத்தாள்.
‘இல்ல விஷயம் கைமீறிப் போகக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் இந்தக் கல்யாணத்தை முடிக்கணும்’ என்று மனத்திற்குள் திட்டமிட்டுக் கொண்டார்.

அவர் திரும்பி நடக்கும்போது கண்களைத் திறந்து பார்த்த சுமித்ராவின் விழிகள் அருவறுப்பையும், கோபத்தையும் ஒருசேர உமிழ்ந்தன.

‘உன்னோட கனவு எதுவுமே நடக்காது மந்த்ரா. இன்னும் இந்தச் சுமித்ராவைப் பத்தி உனக்குத் தெரியல. இந்த நேரத்துல நிச்சயமா முட்டாள்தனமா நடந்து என்னைக் காட்டிக்கொடுத்துக்க மாட்டேன்.

புத்திசாலித்தனத்தைவிட, சாணக்கியத்தனம் தான் உன்னிடமிருந்து என்னைக் காப்பாத்தும். நிச்சயமா, இந்தச் சுமித்ரா உன்னோட வலையில் விழவேமாட்டா’ என எண்ணிக்கொண்டு கண்களை மூடினாள்.

மனக்கண்ணில் தோன்றிய தந்தையிடம், ‘துரோகம் எவ்வளவு பெரிய இழப்பைக் கொடுக்கும்னு புரிஞ்சிகிட்டேன்ப்பா! உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கின என்னை, முடிஞ்சா மன்னிச்சிடுங்கப்பா!’ என மானசீகமாக மன்னிப்புக் கேட்டவள், விழிகள் பனிக்க உறங்கிப் போனாள்.

அடுத்து வந்த நான்கு நாள்களும், சுமித்ரா இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாள். ஆனால், மந்த்ராவால் அன்றாட வேலைகளைக்கூட ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. அவள் ஆன்ட்டி என்று அழைத்தாலே, கண்களில் ஒருவித அச்சம் படற, அவளைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

“ஏன் ஆன்ட்டி டென்ஷனா இருக்கீங்க? அப்பாவைப் பத்தி நான் சொன்னதை நினைச்சி கவலைப்படறிங்களா? நான் உங்களை நம்பறேன் ஆன்ட்டி!’ என்று சிநேகமாக ஒரு புனகையைச் சிந்தி அவரைக் கலங்கடித்தாள்.

சனிக்கிழமைக் காலையில் அலுவலகத்திற்குக் கிளம்பியவள், தனது உடமைகளுடன் வந்தாள்.

அவளை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்த மந்த்ரா, “ஆஃபிஸுக்குத் தானே போற. எதுக்கு இதெல்லாம்?” எனத் திகைப்புடன் கேட்டார்.

“மண்டேவே சொன்னேனே ஆன்ட்டி!” என்றாள்.

நெற்றிச் சுருங்க, “என்ன சொன்ன?” என்றார்.

“ஆமாம்மா! சுமியோட ஃப்ரெண்ட்ஸ் நாளைக்கு வராங்கன்னு சொன்னாளே… அதுக்குத்தான் வீட்டுக்குக் கிளம்பறா. மண்டே காலைல நேரா ஆஃபிஸ் வந்திடுவேன்னு சொன்னா… நீங்களும் சரின்னு சொன்னீங்களே” என்றான் கிஷோர்.

அதைக்கூட மறந்துவிடக் கூடியவரா மந்த்ரா!

‘இவன் ஒருத்தன்…என் நிலைமைப் புரியாம… ஏற்கெனவே இவள் கனவுன்னு சொல்லி அப்பப்போ என்னைக் கலங்கடிக்கிறா. இவளுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்குமா… இல்ல உண்மைலயே கனவான்னு தெரியாம இருக்கேன். இந்த நிலைமைல அவளை வெளியே அனுப்பினா, என்ன நடக்குமோன்னு பயந்துட்டிருக்கேன். இவளை எப்படி நிறுத்தறது…’ என யோசிக்க ஆரம்பித்தார்.

“இல்ல, ஏற்கெனவே நைட்ல பயந்து போயிடுறா… ஏதேதோ கனவெல்லாம் வருது. அவளை எப்படி நைட்ல தனியா விடுறது? அதான் யோசனையா இருக்கு. வேணும்னா அவளோட ஃப்ரெண்டை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லிடலாமே. ஏன் சுமி” என்றவரை கேஷவ்நாத்தும் ஆமோதித்தார்.

உள்ளுக்குள் சிறு சஞ்சலம் எழுந்தாலும், முயன்று முகத்தின் பாவனைகளை மாறாமல் காத்தாள் சுமி.
கிஷோர் தயக்கத்துடன் அவளைப் பார்த்தான்.

சிறு யோசனைக்குப் பிறகு, “சரி அங்கிள்! நீங்க சொன்னபடியே செய்றேன். அந்தக் கனவு வந்ததிலிருந்தே வீட்டுக்குப் போகணும் போலயிருந்தது. அப்பாவோட இருக்கறது மாதிரியிருக்கும்னு தோணுச்சி. சரி, நான் போகல” என சோர்ந்த முகத்துடன் சொன்னாள்.

அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தார் மந்த்ரா. அவளது முகம் சோர்ந்து போயிருந்ததே தவிர, ஏமாற்றமோ வேறெந்த உணர்வுகளும் தெரியவில்லை.

“அம்மா! அவள்தான் இவ்ளோ சொல்றாயில்ல. திடீர்னு சொல்லாம கொள்ளாம நாம கூட்டிட்டு வந்துட்டோம். போய்ட்டு வரட்டுமே. இன்னைக்கு ஒருநாள் தானே… வேணும்னா நாளைக்கு நைட்டே நான் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடுறேன்” என்றான்.

கேஷவ்நாத்தும், “ஆமாம் மந்த்ரா! போய்ட்டு வரட்டும்” என்றார்.

இத்தனைப் பேச்சிற்கும் அவள் எந்தவித பாவனையையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தாள்.

“சுமி! நீ என்ன சொல்ற?” எனக் கேட்டார் மந்த்ரா.

“உங்க விருப்பம் ஆன்ட்டி!” என்றாள் நிதானமாக.

ஆழமூச்செடுத்தவர், “சரி, போய்ட்டு வா. நைட் எனக்குப் போன் பண்ணணும் சரியா…” என்றார்.

“தேங்க்யூ ஆன்ட்டி! நீங்க செய்ததையெல்லாம் நான் மறக்கவே மாட்டேன்” என்றாள்.

“என்னது?” என்றார் மந்த்ரா.

அவரை ஆழ்ந்து பார்த்தவள், “கிளம்பறேன் ஆன்..ட்டி!” என்றாள் அழுத்தமாக.
மாலையில் அலுவலகம் முடிந்ததும் கிஷோரே அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வாசலிலேயே நின்றவன், “வரேன் சுமி! பத்திரமா இருந்துப்ப இல்ல” ஆழ்ந்த குரலில் கேட்டான்.

அவனது கண்களைப் பார்க்க முடியாமல், “ம்” எனத் தலையை அசைத்தாள்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்று அவளது கரத்தைப் பிடித்தான்.

சுமித்ரா மௌனமாக இருந்தாள்.

“என்னன்னு தெரியல… உன்னை இங்கே விட்டுட்டுப் போக மனசே வரல” என்றான் உருக்கமாக.

‘ஏதேனும் பேசுவாளா!’ என்று அவளது முகத்தையே பார்த்தான்.

அவளோ, அவனை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற உறுத்தலில் உதட்டைக் கடித்தபடி மௌனமாக நின்றிருந்தாள்.

அவளது மௌனம், அவனுக்குச் சலிப்பைக் கொடுக்க, “ஓகே, நீ உள்ளே போ! நான் கிளம்பறேன்” என்றவன் சிறுத்த முகத்துடன் காரில் ஏறினான்.

சுதாரித்தவள், “கிஷோர்!” என்றழைத்தாள்.

அவனும் திரும்பிப் பார்க்க, “தேங்க்ஸ்…” என்றாள்.
காரைக் கிளப்பியவன், “நான் எதிர்பார்க்கறது தேங்க்ஸ் இல்ல சுமி!” என வேதனை நிறைந்த குரலில் சொன்னவன், கிளெச்சை விடுவித்துப் பறந்தான்.

அவன் கண்ணிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தவள், “சாரி கிஷோர்! நீங்க எதிர்பார்க்கற எதுவுமே இனி, நடக்கவே நடக்காது” என முணுமுணுத்தாள்.

உள்ளே வந்தவள் அந்த வீட்டை பார்வையால் அலசினாள். அவளையும் அறியாமல் கண்கள் கசிந்தன. தந்தையின் அறைக்குச் சென்றவள் அவரது கட்டிலில் அமர்ந்தாள். மெல்லக் கட்டிலைத் தடவிக்கொடுத்தாள்.

‘அழாதே சுமி! உன்னை நீயே பலகீனமாக்கிக்காதே. எழுந்திரு… நீ போகவேண்டிய தூரம் அதிகம். அதைத் தைரியமா எதிர் நோக்கியே ஆகணும்’ என் நினைத்துக் கொண்டவள், தந்தையின் பீரோவைத் திறந்தாள்.
*****************
“ஹா மம்மி! வயிற்றுக்கு ஏதாவது ஈயலாமே… பசி தாங்கல” என்றபடி வீட்டினுள் நுழைந்த சோஃபாவில் சரிந்து படுத்தான்.

“ஏ..ச்சீ! நேரா உட்காரு. படிச்சிட்டிருக்கேன் இல்ல. காலைத் தூக்கி என்மேல போடுற…” என எரிந்து விழுந்தாள் பவித்ரா.

“வீட்ல என்னவோ இடமே இல்லாதது மாதிரி எப்பப் பாரு ஹால்லயே உட்கார்ந்துக்க வேண்டியது. அஞ்சி கிரவுண்ட்ல வீட்டைக் கட்டிவச்சிருக்காங்களே… எங்கேயாவது போய் உட்காரவேண்டியது தானே. நான் எங்கே இருக்கேனோ அங்கேயே வரவேண்டியது” என்றவன் அதேவேகத்தில் திரும்பித் தங்கையின் தலையில் கொட்டினான்.

‘ஆ’ வென அலறியவள், “அம்மா! இங்கே பாருங்கம்மா!” எனக் கத்தினாள்.

அங்கே வந்த வித்யாவதி, “பவித்ரா! நீ உன் ரூமுக்குப் போ!” என்றார்.

“எப்பவும் என்னையே கண்ட்ரோல் பண்ணுங்க. இந்த தடிமாட்டை எதுவும் சொல்லாதீங்க” எனப் புலம்பிக் கொண்டே பிராக்டிகல் நோட்டால் அவனது தலையில் அடித்துவிட்டுச் சென்றாள்.

“ஸ்…ஆஹ்…!” எனத் தலையைத் தேய்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தான்.

டிஃபன் தட்டை சென்டர் டேபிள் மீது வைத்தவர், அறையிலிருந்த மாமனாருக்கும், கணவருக்கும் டிஃபனைக் கொடுக்கும்படி வேலையாளிடம் பணித்துவிட்டு மகனின் அருகில் அமர்ந்தார்.

”எப்பவும் அவளைச் சீண்டிகிட்டே இருக்கவேண்டியது. இன்னும் கொஞ்ச நாளைக்குத் தானே இந்த வீட்ல இருக்கப் போறா. கல்யாணம் ஆனதும் அவள் இல்லாம தவிப்பப் பாரு, அப்போ தெரியும் உனக்கு” என்றார்.

“அதனாலதாம்மா அவ இருக்கும் வரைக்கும் என்னை எண்டர்டெயின் பண்ணிக்கிறேன்!” என்றவன் ரவா கிச்சடியை ஒரு ஸ்பூன் உள்ளே தள்ளினான்.

“இந்த வாய்ல ஒண்ணும் குறைச்சல் இல்ல. உன்னைச் சமாளிக்க வகையா ஒருத்தி வரணும்” என்றார் புன்னகையுடன்.

“டோண்ட் வொர்ரி மாம்! ம்ன்னு ஒரு வார்த்தைச் சொல்லுங்க… உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காம, நானே கூட்டிட்டு வந்திடுறேன்” என்றவன் கடமையாகக் கிச்சடியை விழுங்கிக் கொண்டிருந்தான்.

“அரட்டை! அண்ணன் ஒருத்தன் இருக்கான்னு நினைப்பிருக்கட்டும்” என அதட்டலாகச் சொன்னாலும், அவரையும் அறியாமல் உதடுகள் மலர்ந்தன.

“ஹப்பா! அம்மாகிட்டயிருந்து கிரீன் சிக்னல் வந்தாச்சு…”

“நான் எப்போடா கிரீன் சிக்னல் கொடுத்தேன்?”
“இப்பத்தான் சிரிச்சீங்களே…”

“உன்னை…” அடிக்க வருவதைப் போலக் கையைத் தூக்கியவர், வாய்விட்டு சிரித்தார்.

“ம், டபுள் சிக்னல்…” என்று சிரித்துக்கொண்டே எழுந்தவனிடம், “அண்ணன் எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னான்?” எனக் கேட்டார்.

”ஆடிட்டர் வந்திருந்தார். வேலை முடிஞ்சதும் என்னைக் கிளம்பச் சொல்லிட்டாங்க. கொஞ்சநேரம் ரிலாக்ஸ்டா பேசிட்டு வரேன்னு என்னை அனுப்பிட்டார். எப்போ வருவாருன்னு ஐடியா இல்ல…” என்றான்.

“அப்போ, நைட் டின்னரையும் முடிச்சிகிட்டுத்தான் வருவான். நாளைக்குச் சண்டே வேற…” என்றவர், “உனக்கு நைட் பனீர் பண்ணிடட்டுமா?” எனக் இளைய மகனிடம் கேட்டுக் கொண்டே எழுந்தார்.

“போதும்மா! நான் கொஞ்சநேரம் தோட்டத்துல இருக்கேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.

விஜய்மித்ரன் வீட்டிற்குள் நுழைந்தபோது மணி பதினொன்று.

அவனுக்காகவே ஹாலில் காத்திருந்த அன்னையிடம் பேசிவிட்டுத் தனது அறைக்கு வந்தவன், ஒரு குளியல் போட்டுவிட்டு படுக்கையில் வீழ்ந்தான்.
வழக்கம் போல அவனது மனம் சுமித்ராவையும், கங்காதரனையும் சுற்றி வந்தது.

‘சாரோட போன் ஏன் ஸ்விட்ச் ஆஃப் என்றே வருது. மித்ராவுக்குப் போன் செய்தாலும் அப்படியே தான் வந்தது. ஆனால், இன்று அவளுக்கு அழைத்தபோது ரிங் போனதே. அப்போதும் ஏன் அவள் எடுக்கவில்லை’ என்று மண்டையைக் குடைந்து கொண்டான்.

ஒவ்வொரு நாளும் அவளிடம் பேச முயலக்கூடாது என்ற எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான்.

அவனது தோழர்கள் இரண்டு மூன்று பேரிடம் விசாரித்தும் அவனுக்கு எந்தத் தகவலும் சரிவரக் கிடைக்காததால் அவனுக்குக் குழப்பம் தான் அதிகரித்தது.

மித்ராவிற்கு போன் செய்து ஓய்ந்து போன இரண்டு நாள்களுக்குப் பிறகு, ‘நீத்துவின் சகோதரன் ரிஷபிற்குப் போன் செய்யலாமா’ என்று எழுந்த எண்ணத்தையும் மாற்றிக்கொண்டான்.

அவனும் புதிதாக மணமானவன். தேன்நிலவிற்குச் செல்லப் போவதாக அவன் கூறியிருந்ததே அதற்குக் காரணம். யோசனையுடன் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான். அவன் லேசாகக் கண்ணயர்ந்த நேரத்தில், அவனது போன் அலறியது.

”ரிஷப்!” என்றவன், வேகமாகப் போனை எடுத்தான்.

“என்ன்னடா இந்த நேரத்துல போன் பண்ற?” ஆச்சரியமும், குழப்பமுமாகக் கேட்டான் மித்ரன்.

“சும்மாதான்டா! பத்து மணிக்குத்தான் வந்தேன் ஊர்லயிருந்து வந்தோம். என் சிஸ்டர் வந்திருந்தா… பேசிட்டிருந்தோம் அப்போதான் ஒரு விஷயம் சொன்னா…” என்றவன் நிறுத்தினான்.

“என்னடா விஷயம்?” சற்று கலவரத்துடன் என்றான் மித்ரன்.

“ரொம்ப ஷாக்கிங்காக இருந்ததுடா! உன்னோட ப்ரொஃபசர் கங்காதரன் இறந்துட்டாராம்” என்று அவன் முடிக்கவில்லை, “வாட்?” என்ற மித்ரன் துள்ளிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தான்.

நீத்து, சுமித்ராவிடம் பேசியதையெல்லாம் அவனிடம் சொன்னான்.

“எனக்கு உடனே உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சிடா. நாளைக்குச் சுமியைப் பார்க்க என் சிஸ்டர் கிளம்பறா” என்றான்.

“ஓஹ்!” என்றான் வெறுமையாக.

“சாரிடா! தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.”

“பரவாயில்லடா. மறக்காம எனக்குச் சொன்னதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்” என்ற மித்ரன் போனை அணைத்தான்.

“மித்ரா! நீ எப்படியிருக்க? எப்படி இந்த வேதனையைத் தாங்கின?” என முணுமுணுத்தவன், வேகமாக உடையை மாற்றிக்கொண்டு, இரண்டு உடைகளை எடுத்து ஏர்பேகில் போட்டுக்கொண்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
255
274
63
அத்தியாயம் - 25

கேட்டைத் திறந்துகொண்டு அவள் வருவதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண்மணி அன்புடன் அவளை நோக்கி வந்தார்.

சுமித்ராவும் அவரிடம் அன்பாகவே பேசினாள். இரண்டு நாள்கள் தங்கிவிட்டுச் செல்ல இருப்பதாகச் சொன்னாள்.

“அப்படியா! அவங்க வீட்ல உன்னை நல்லபடியா பார்த்துக்கறாங்களா சுமி!” என அக்கறையுடன் விசாரித்தார்.

“ம்” என்று முறுவலித்தாள்.

”நான்கூட பயந்துட்டே இருந்தேன். ஆனா, நல்ல பையன்” எனக் கிஷோருக்கு நற்சான்றிதழை அவர் வழங்க அதற்கும் அவள் புன்னகைத்துக் கொண்டாள்.

சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தவர், “சரி நைட் நம்ம வீட்டுக்கு வந்திடு சாப்பிட” என்றார்.

“இல்ல ஆன்ட்டி! கிஷோரோட ஈவ்னிங் டிஃபன் சாப்டுட்டுத் தான் வந்தேன்” என்றாள்.

“பரவாயில்ல ஒன்பது மணிக்குத் தானே சாப்பிடப் போற. நான் வந்து கூப்பிடுறேன்” என்றவர் அவள் மறுக்க மறுக்க வந்தே ஆகவேண்டுமெ என்று அன்புக் கட்டளை இட்டுவிட்டுச் சென்றாள்.

அவர் சொன்னதைப் போல வந்து அழைத்துச் சென்றார். அவளும் மறுக்காமல் சென்று வந்தாள். கிளம்பும் போது பெரியவர்கள் இருவரது காலிலும் விழுந்து வணங்கி நன்றி கூறிவிட்டுக் கிளம்பினாள்.

சற்றுநேரம் எதுவுமே தோன்றாமல் அமர்ந்திருந்தவள், மெல்ல நிதானத்திற்கு வந்தாள். முன்பே முடிவு செய்திருந்தபடி வேகமாக செயலில் இறங்கினாள். தந்தையின் ஆதார் அட்டை முதல் ரேஷன் கார்ட், பாஸ்புக் வரை எடுத்து ஒரு கவரில் போட்டாள். தன்னுடைய எஜுகேஷனல் ஃபைலை மொத்தமாக எடுத்துக்கொண்டாள்.

’நல்லவேலை கிஷோர் என்பதால் தன்னுடைய சர்ட்டிஃபிகேட்ஸ் எதையும் அவன் கேட்கவில்லை’ என நினைத்துக்கொண்டே அனைத்தையும் ஒரு சிறு பையில் போட்டு ட்ராலி பேகில் வைத்தாள்.
நல்லதாக சில உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டவள், ஆங்காங்கே வைத்திருந்த பணத்தையும் மொத்தமாக எடுத்துக்கொண்டாள்.

கங்காதரன் இறந்த ஒரே வாரத்தில், தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி பேங்க் முதல் அனைத்து இடங்களிலும் நாமினேஷனிலிருந்த சுமித்ராவின் பெயருக்கு அனைத்துப் பணத்தையும் எடுத்துக் கொடுத்திருந்தார்.

உங்களிடமே இருக்கட்டும் அங்கிள் என்றவளிடமே பணத்தைக் கொடுத்தவர் வச்சிக்கம்மா… கொஞ்ச நாள் போகட்டும். மொத்தமா, உன் பேர்ல பேங்க்ல டெபாஸிட் பண்ணிடலாம்’ என்று அவளிடமே கொடுத்தார்.

செலவிற்கு என்று கொஞ்சம் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மீதியை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டாள். அந்தப் பணமும், தன்னிடமிருந்த பணமும் சேர்ந்து கையில் முப்பதாயிரம் இருந்தது. ‘இப்போதைக்கு இது போதும்’ என்று அதையும் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

வீட்டின் அனைத்து அறையையும் பூட்டியவள், எதுவோ தோன்ற விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஹாலிலிருந்த ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள்.

வாசல் கேட்டருகில் கிஷோரின் வீட்டுத் தோட்டக்காரர் மறைந்து நின்றிருப்பதைப் பார்த்ததும், அவளுக்குத் திக்கென இருந்தது.

‘அப்படியானால் தன் மீது மந்த்ராவிற்கு சந்தேகம் எழுந்திருக்கிறது’ எனப் புரிய, உடலுக்குள் மெல்லிய நடுக்கம் பரவியது. ‘பயப்படாதே சுமித்ரா! அந்தக் கடவுளும், அப்பா, அம்மாவும் எப்பவும் உனக்குத் துணையாக இருப்பாங்க’ என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டாள்.
வீட்டின் எல்லாக் கதவு ஜன்னல்களும் பூட்டியிருப்பதை உறுதி செய்துகொண்டு தந்தையின் அறைக்குச் சென்று அமர்ந்தாள். ஜன்னலில் கனமான பிளாங்கெட்டை எடுத்து வெளிச்சம் வெளியே செல்ல இயலாதவாறு மூடினாள்.

வேகமாக எடுத்துவத்த பொருட்களை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டாள். தன் கையால் பின்னிக்கொடுத்த மஃப்ளரைத்தான் எப்போதும் அவர் கழுத்தைச் சுற்றிப் போட்டிருப்பார். அதை எடுத்துக்கொள்ள வேண்டுமெனத் தோன்ற, பீரோவைத் திறந்து மஃப்ளரை இழுத்த வேகத்தில் அதனடியிலிருந்த தடிமனான நோட்டு ஒன்றும் சேர்ந்து கீழே விழுந்தது.

‘இதென்ன நோட்! இத்தனை நாள்களில் தான் ஒருமுறைகூட இதைப் பார்த்ததில்லை’ என்பது புரிய குனிந்து எடுத்தாள்.

‘சாமானியனின் வாழ்வில் வந்த, வசந்தத்தின் நினைவுகள்’ என்று தேதி வாரியாக அவர் எழுதியிருந்ததைப் புரட்டினாள்.

‘அப்பாவிற்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கா என்ன?’ இதுவரை தான் அறிந்திராத ஒரு புதிய விஷயத்தைப் பார்த்ததும் வியப்பில் அவளது புருவங்கள் ஏறி இறங்கின.

தான் ஜெய்பூரில் சாதாரண பள்ளி ஆசிரியனாக வாழ்க்கையைத் துவங்கியதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் சிறுசிறு குறிப்பாக எழுதி வைத்திருந்தார். படிக்கப் படிக்க அவளது இதழ்கள் மெல்ல முறுவலித்தன. சில பக்கங்களைக் கடந்து வந்தவள் அதன்பிறகு இருந்த பக்கம் பக்கமான கட்டுரையை வாசிக்க வாசிக்கத் திகைத்துப் போனாள்.

‘தன்னுடைய வாழ்க்கையில் தானறியாமல் இவ்வளவு இரகசியங்களா?’ திகைத்த மனத்துடன் நோட்டை மூடினாள். அவளுக்கு ஒன்றுமட்டும் புரிந்தது. அவர் யாருக்காகவென்று வாழ்ந்தாரோ, அவர்களில் ஒருவராலும்கூட நிம்மதியையும், சந்தோஷத்தையும் அடையவில்லை’ என்று உணர கண்கள் கசிந்தன.

“நீங்க எவ்வளவு நல்லவர்ப்பா! ஒருமுறைகூட நீங்க அம்மாவைப் பற்றி என்கிட்ட விட்டுக்கொடுத்தே பேசினதில்லையே” என்று முணுமுணுத்தவள், சுவற்றில் மாட்டியிருந்த தந்தையின் புகைப்படத்தில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

கிளம்புவதற்காக மொபைல் போனில் வைத்திருந்த அலாரம் அடிக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள். மணி இரண்டரை ஆகிவிட்டது. கிளம்பவேண்டியது தான் என நினைத்ததுமே மனத்திற்குள் ஒரு பரபரப்பு உண்டாக, வேகமாக குளித்துவிட்டு தயாராகி வந்தாள்.

அப்போதுதான் கையிலிருந்த நிச்சயதார்த்த மோதிரத்தின் மீது பார்வை விழ, சற்றும் தயங்காமல் கழற்றி பூஜையறை மாடத்தில் வைத்தாள்.

ஒரு கைப்பை, இரண்டு ட்ராவல் பேக் என்று அவள் சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய அளவிலேயே பொருட்களை எடுத்துக்கொண்டாள். வெளிகேட்டை இரவே பூட்டிவிட்டதால், முன் கதவு மூடியிருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டவள், சமையலறை வழியாகப் பின் வாசலுக்குச் சென்றாள்.

மூன்று மணிக்கு சாலை இருளும், பனியுமாக அமானுஷ்யத் தன்மையுடன் தெரிந்தது. ஜீன்ஸும் ஜெர்க்கினும் அணிந்திருந்ததால், சுலபமாக வீட்டின் சுவற்றை ஏறி குதித்தாள். மதில் சுவற்றின் மீது வைத்திருந்த பையிலிருந்து நீண்ட சால்வை ஒன்றை எடுத்துத் தலையைச் சுற்றி முக்காடாக அணிந்துகொண்டாள்.

கையிலிருந்த சிம்கார்டை டிச்சில் வீசிவிட்டு, தனது எதிர்காலம் என்னும் வெளிச்சப் புள்ளியை நோக்கி, அந்த இருளில் நடக்க ஆரம்பித்தாள்.

**************
பத்து மணிநேரம் பிரயாணம் செய்யவேண்டிய தூரத்தை எட்டே மணிநேரத்தில் கடந்து வந்திருந்தான் விஜய்மித்ரன். தான் எப்போதும் தங்கும் ஹோட்டலில் ரூம் எடுத்தவன், குளித்துவிட்டு ஒரு பிரெட் சாண்ட்விச்சை மட்டும் உண்டுவிட்டு, சுமித்ராவைப் பார்க்கக் கிளம்பினான்.

அவளை எப்படி எதிர்கொள்வது? என்னவென்று அவளுக்கு ஆறுதல் சொல்வது?’ என்ற தயக்கம் அவனிடம் நிறைந்திருந்தது. ‘எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பவள் இப்போது எப்படியிருப்பாள்?’ என்ற எண்ணத்துடன் காரை கேட்டின் வெளியே நிறுத்தினான்.

வீடு பூட்டியிருப்பதைக் கவனித்தவன், சுற்றும் முற்றும் பார்த்தான். பக்கத்து வீட்டிலிருந்த ஆன்ட்டி, அவனை யாரென விசாரித்தார்.

விஷயத்தைச் சொன்னவனிடம், “நேத்து தான் வந்தா. உள்ளே இருப்பாளாயிருக்கும். காலிங்பெல்லை அழுத்துங்க” என்றார்.

அவர் சொன்னதைப் போலவே செய்தும் கதவைத் திறக்கவில்லை என்றதும், கேட்டைத் தாண்டிக் குதித்தான். பக்கத்து வீட்டுப் பெண்மணி சற்றுக் கலவரத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
காலிங் பெல்லை அழுத்தியும், கதவைத் தள்ளியும் பார்த்தவன் பலனில்லாமல் திரும்பி வந்தான்.

அவரிடம் விஷயத்தைச் சொல்ல, “எங்கேயாவது வெளியே போயிருப்பாளோ என்றவர், “போன் பண்ணிப் பாருங்களேன்” என்றார்.

‘ஆமாம். அவள் எடுத்துட்டுத்தான் மறுவேலை’ என நினைத்துக்கொண்டவன், அவருக்காக சொன்னதைச் செய்தான். மீண்டும் மீண்டும் எண்ணைச் சரிபார்க்க என்றே வர, இல்லை என்பதைப் போன்று தோளைக் குலுக்கினான்.

“ஐயோ! நேத்து என்கிட்ட நல்லாத்தானே பேசிட்டிருந்தா. எங்கே போயிருக்கான்னு தெரியலையே” என்றவர், தங்கள் வீட்டுத் தொலைபேசியிலிருந்து அழைத்தார்.

அவருக்கும் அதே பதில் வர பயந்தே போனார்.

அவரது கணவர் தான், “எங்கேயாவது வெளியே போயிருப்பா. அவளோட ஃப்ரெண்ட்ஸ் வராங்கன்னு சொன்னா இல்ல” என்று நினைவுபடுத்த அந்த அம்மாவும் சற்று ஆசுவாசமானார்.

ஆனால், மித்ரனின் இதயம் வேகமாகத் துடித்தது.

‘தப்பு பண்ணிட்ட மித்ரா! எங்கேடி போன?’ என மனத்திற்குள் சீறிக்கொண்டான்.

“கொஞ்சநேரம் வெயிட் பண்ணேன்ப்பா வந்திடுவா” என்றார் அந்தப் பெரியவர்.

அவனும், அவர்களது வீட்டிற்குச் சென்றான். ப்ரொஃபசரின் இறப்பைக் குறித்து அவருடன் பேசிக்கொண்டிருந்தான். தங்களுக்குத் தெரிந்தவரை அனைத்து விஷயத்தையும் அவர்களிடம் விளக்கினர் இருவரும்.

‘ஆக, திருமண விஷயத்தில், ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது. பிரச்சனையின் ஆரம்பம், கிஷோரின் வீட்டில்தான். ஒருவேளை சுமித்ரா அதை அறிந்து கொண்டிருக்கலாம்’ என்ற முடிவிற்கு வந்தான்.

“ரொம்ப நன்றிங்க. எனக்கு ஒரு வேலையிருக்கு முடிச்சிட்டு மதியானம் வரேன். சுமித்ரா வந்தா சொல்லுங்க” என்றவன், இறுகிய முகத்துடன் காரைக் கிளப்பினான்.

அந்தத் தெருவின் ஒருபக்கமாக காரை ஓரமாக நிறுத்தினான். அங்கிருந்து பார்த்தால், அவளது வீடு நன்றாகவே தெரிந்தது. ரிஷப்பிற்குப் போன் செய்தான்.

”சொல்லுடா!” என்றான் ரிஷப்.
“நீத்து எப்போ சுமித்ராவைப் பார்க்கப் போறா?” என விசாரித்தான்.

“தெரியலையே… இன்னைக்குப் போறேன்னு சொன்னா. ஆனா, இன்னும் கிளம்பலையே. ஏதாவது சொல்லணுமா? நீத்துவைக் கூப்பிடவா! மேலே குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்திட்டிருக்கா” என்றான்.

“இல்லயில்ல… நீ நீத்துவோட நம்பர் மட்டும் கொடு. நானும் கொஞ்சம் முக்கியமான வேலைல இருக்கேன். அப்புறமா பேசறேன்” என்றான்.

நீத்துவின் எண்ணைக் குறித்துக்கொண்டவன், சற்றுநேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

‘சம்திங் ராங். என்னவோ நடந்திருக்கு… ஏன் மித்ரா இப்படிப் பண்ண? என் மேலகூட உனக்கு நம்பிக்கையில்லாம போகும் அளவுக்கு என்ன நடந்தது?’ கேள்விகள் அணிவகுத்து வந்ததே தவிர, அதற்கு பதில் மட்டும் கிடைக்கவே இல்லை.

‘கிஷோரின் வீட்டிற்குச் செல்லலாமா!’ என்ற எண்ணத்தை அதேவேகத்தில் களைந்தான்.

அவளே எந்தவொரு சூழ்நிலையில் அங்கேயிருந்து வந்தாளென்று தெரியவில்லை. நானும் ஏதாவது செய்து, வேண்டாம்’ என நினைத்தவன் ஸ்டீயரிங் வீலைத் தட்டினான். கிட்டதட்ட இரண்டு மணிநேரமாகியும் சுமித்ரா வராமல் அவனது நினைப்பை ஊர்ஜிதப்படுத்தினாள்.

இப்போது நீத்துவின் எண்ணிற்கு அழைத்தான்.

”ஹலோ!” என்றவள் பேசுபவன் விஜய்மித்ரன் என்று அறிந்துகொண்டதும் சற்றுத் தடுமாறினாள்.

“சொல்லுங்கண்ணா!” என்றாள்.

“நீ ஏன் சுமித்ராவைப் பார்க்க வரலை?” என நேரடியாகக் கேட்டான்.

“அ..து இவருக்குக் கொஞ்சம் வேலை…”

“பொய்ச் சொல்லாத நீத்து! சுமித்ரா உன்கிட்ட என்னவோ சொல்லியிருக்கா. நான் எத்தனையோ முறை போன் செய்தும், எடுக்கவேயில்ல. என்னவோ நடந்திருக்கு. நீயும் மறைக்காத. உன் ஃப்ரெண்டோட நல்லதுக்காகக் கேட்கறேன். இப்போ, அவள் எங்கே போயிருக்கா? உனக்கு நிச்சயமா தெரியும்” என்றான்.

அவள் சொல்லச் சொல்ல இறுகிய முகத்துடன் கேட்டுக்கொண்டான்.
“அண்ணா! நான் சொன்னேன்னு அவளுக்குத் தெரியவேணாம். ப்ளீஸ்!” என்றாள்.
“என்கிட்ட அவளைப் பத்திச் சொன்னன்னு அவளுக்குத் தெரியவேணாம். அவளை எப்படி மேனேஜ் பண்றதுன்னு எனக்குத் தெரியும்” என்றவன் போனை வைத்தான்.

“வரேன் மித்ரா மேடம் ரெடியாகிக்கங்க… எல்லாத்துக்கும்” என்றவன் கூலர்ஸை மாட்டிக்கொண்டு காரைக் கிளப்பினான்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
255
274
63
அத்தியாயம் – 26

ஏர் போர்ட்டிலிருந்து வெளியே வந்த சுமித்ராவை, கட்டியணைத்துக் கொண்டாள் சங்கீதா.

தோழியின் பாசமான அணைப்பிலும், “சுமி!” என்ற அழைப்பிலும் மனத்திலிருந்த இறுக்கம் களைஎது அழுதுவிட்டாள் சுமித்ரா.

“அழாதே சுமி! நாங்கள்லாம் இருக்கோம். நீ எதுக்கும் கவலைப்படாதே” என்றவள் தோழியுடன் காருக்கு வந்தாள்.

“சாரி சங்கீ! என்னால உனக்குச் சிரமம். இவ்ளோ காலைல எனக்காகக் கிளம்பி வந்திருக்க” என்றாள் தாங்கலுடன்.

“சாரி பூரின்ன, உதை விழும். உனக்காக இது கூடச் செய்யமாட்டேனா? பெரிசா சாரி சொல்ல வந்துட்டா” என்று வசைபாடினாள்.

புன்னகைத்த சுமித்ரா, “உன் ஹஸ்பண்ட் ஏதாவது சொன்னாரா சங்கீ!” எனக் கேட்டாள் தயக்கத்துடன்.

“ம், உன் ஃப்ரெண்டை நல்லா கவனிச்சிக்க. நான் இருபதே நாள்ல வந்திடுறேன்னு சொல்லிட்டு, நேத்து ஆஃபிஸ் டூர் கிளம்பிப் போய்ட்டார்” என்றாள்.

“ஓ! அப்போ உன் ஹஸ்ப்ண்ட் இல்லையா!” என்றாள்.

“இல்ல. நம்ம இராஜாங்கம் தான்” என்று கிளுக்கிச் சிரித்தாள் அவள்.

“கொழுப்புதான் உனக்கு” என்று புன்னகைத்தாள் சுமி.

தோழியுடன் பேசிக்கொண்டே வந்தாலும், மனத்திற்குள் சற்று நெருடலுடன் தான் அமர்ந்திருந்தாள் சுமித்ரா.

அதைக் கண்டுகொண்ட சங்கீதா, “என்னடி! வாய்தான் பேசுது; மனசு எங்கேயோ அலையுது” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா!”

“சமாளிக்காதே. எனக்கு உன்னோட ஃபீலிங்க்ஸ் புரியுது. நீ சும்மா மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. எவ்வளவு நாள் வேணும்னாலும், தங்கிக்க. உன் வீடு மாதிரி நினைச்சிக்க. முதல்ல உனக்கு வேலை கிடைக்கட்டும். மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்” என்ன சொல்ற!” என்றாள்.

“ம், சரி” என்றவளது மனம் மீண்டும் முரண்டியது.

“உனக்கு எதுவும் டிஸ்டர்பென்ஸ் இல்லயே சங்கீ!” என்றவளை முறைத்தாள் சங்கீதா.

“வீட்டுக்குப் போய் இறங்கறதுக்குள்ள உதை வாங்கப் போற” என்றவள், சாலையில் கவனத்தைச் செலுத்தினாள்.

சுமித்ராவும், பனி படந்திருந்த அந்தக் காலைவேளையில் புதுடெல்லியைச் சுவாரசியமே இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நேரு ப்ளேசில் இருந்த சங்கீதாவின் வீட்டிற்கு இருவரும் வந்து சேர்ந்தனர். அந்த டியூப்ளெக்ஸ் வீட்டின் அழகில், சிறுமுறுவல் ஒன்றைச் சிந்தினாள் சுமித்ரா.

“வீடு ரொம்ப அழகாயிருக்கு சங்கீ!” என்றாள்.

“தேங்க்யூ! உள்ளே வா இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு பாரு” என்று தோழியை உள்ளே அழைத்துச் சென்றவள், “இதுதான் எங்க மாளிகை! நீ இந்த ரைட் சைட் ரூம்ல தங்கிக்க சுமி. எங்க ரூம் மேலேயிருக்கு. இப்போ, நீ குளிச்சிட்டு வா. சாப்பிடுவோம்” என்றவள் தனது அறைக்குச் சென்றாள்.

குளித்துவிட்டுத் தலையைத் துவட்டிக்கொண்டே வெளியே வந்தாள் சுமித்ரா.

”வா சுமி! ஹேர் ட்ரையர் வேணுமா!”

“இல்லயில்ல… வேணாம்.”

“இந்தக் குளிருக்குத் தலை மெதுவாத்தான் காயும்” என்றவள், “உட்காரு” என டைனிங்கை காட்டினாள்.

“இன்னைக்குக் கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணிக்க இட்லிதான் பண்ணேன். நாளைலயிருந்து உனக்குப் பிடிச்ச சப்பாத்தி, குல்சாவெல்லாம் பண்ணிக்கலாம்” என்றாள் சங்கீதா.

“பரவாயில்ல சங்கீ! சௌத் இண்டியன் வீட்டு இட்லி சாம்பாரை அடிச்சிக்க முடியாதில்ல” என்று சிரித்தாள் சுமி.

“அது சரி. நீயும் பாதி சௌத் இண்டியன் தானே…”

“ம். ஆனா, எங்க அம்மாவுக்கு இட்லியே செய்ய வராதாம். உங்க அம்மா செய்யும் இட்லியை, நான் பேப்பர் வெயிட்டா யூஸ் பண்ணுவேன் இல்லன்னா, கம்மா யூஸ் பண்ணுவேன்னு அப்பா சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்” என்று கலகலத்தவள், சட்டென உடைந்து அழலானாள்.

“சுமி! கண்ட்ரோல் யுவர் செல்ஃப்” எனத் தோழியின் தோளை ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள்.

கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவள், “சாரி!” என்றாள்.

“முதல்ல, இப்படி மூணாவது மனுஷங்ககிட்ட பேசறது மாதிரிப் பேசறதை நிறுத்து. ஒரு இழப்போட வலி என்னன்னு, எனக்கும் தெரியும். ஆனா, இப்படியே அழுதுட்டிருந்தா உன் மனசும், உடம்பும் தான் பலகீனமாகும். முகத்தைக் கழுவிக்க… வா” என்று கையோடு அழைத்துச் சென்றாள்.

“இன்னொரு இட்லி வச்சிக்க” என தோழியில் தட்டில் இட்லியை வைத்தாள்.

“போதும் போதும்” என்றவள், “சாம்பார் சூப்பர் சங்கீ!” என்று ஸ்லாகித்துச் சொன்னாள்.

“இதென்ன பிரமாதம்! என் வீட்டுக்காரர் வைக்கிறதைச் சாப்பிட்ட, நான் வைக்கிற சாம்பாரைத் தொடவேமாட்ட” என்றவளைப் பார்த்துச் சிரித்தாள் சுமித்ரா.

“பின்னே நள மகராஜான்னு பேர் மட்டும் இருந்தால் போதுமா… அதைப் ப்ரூவ் பண்ணவேணாமா?” என்றாள் சங்கீதா.

“ஹேய்! ஆமாம்ல உன் வீட்டுக்காரர் பேர் நளன் இல்ல” என்றாள் வியப்புடன்.
“இல்ல, இல்ல. ஆமாம்” என்று தோழியுடன் இணைந்து நகைத்தாள் சங்கீதா.

மதிய சமையலுக்குக் காய்கறி நறுக்கியபடியே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

“நான் சமைச்சிக்கிறேன். நீ கொஞ்சநேரம் போய்த் தூங்கு” என்று சுமித்ராவை அனுப்பிவைத்தாள்.

அவளாக எழுந்து வரும் வரை சுமித்ராவை அவள் எழுப்பவில்லை. நடுவில் நீத்துவிடமிருந்து வந்த அழைப்பில், அவள் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தாள்.

“அவளோட வாழ்க்கைல சந்தோஷம் வந்தா சரி” என்றவள் மகிழ்ச்சியுடன் போனை வைத்தாள்.

மாலையில் இருவரும் மொட்டை மாடியில் அமர்ந்து தேநீர் பருகியபடி மந்த்ராவின் நடவடிக்கையைப் பற்றி தோழியிடம் பகிர்ந்து கொண்டாள் சுமித்ரா.

“நல்லவேளை சுமி! எதுவும் விபரீதமா நீ ரியாக்ட் பண்ணாம, சாமர்த்தியமா தப்பிச்சி வந்ததே நல்லது. இவள்லாம் பொம்பளையா! பணம் பணம்னு போகும்போது எல்லாத்தையும் தூக்கிட்டா போகப் போறா? மூதேவி!” என்று வாய்க்கு வந்தபடி திட்டினாள்.

“சரி, கிஷோருக்கு எதுவுமே தெரியாதா? பெத்தவளே ஒரு ஃப்ராடுன்னு தெரியாம, என்ன பிஸ்னஸ் மேன் அவன்! எப்படியோ தொலையட்டும். உன்னைப் பிடிச்ச பீடையெல்லாம் ஒழிஞ்சதுன்னு இனியாவது, இதையெல்லாம் மறந்துட்டுச் சந்தோஷமாயிரு சுமி! உனக்கான சந்தோஷமான வாழ்க்கை, நிச்சயமா உன்னைத் தேடி வரும்” என்றாள் ஆறுதலாக.

“ம்” என்று தலையாட்டிய சுமித்ரா, சால்வையை இழுத்துப் பிடித்துக்கொண்டு மாடியின் முனையில் வந்து நின்றாள்.

‘சுலபமா நினைக்கறது எல்லாமே நடந்திடுமா! இன்னும் வாழ்க்கையில் நான் என்னவெல்லாம் பார்க்கணுமோ!’ எனப் பெருமூச்சு விட்டாள் சுமித்ரா.

*****************

காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு லிஃப்டினுள் நுழைந்த விஜய்மித்ரன், தனது மொபைலை எடுத்தான்.

வேகமாக தனது அலுவலக உதவியாளரை அழைத்தவன், “கிரிஷ்! நம்ம கம்பெனிக்கு ஒரு டிசைனர் வேணும்னு எல்லா பேப்பர்லயும் ஆட் (Ad) கொடுங்க. நாளைக்குக் காலைல இங்கிலீஷ், ஹிந்தி எல்லாப் பேப்பர்லயும் வரணும்” எனப் பேசிக்கொண்டே லிஃப்டிலிருந்து வெளியே வந்தவன், கதவைத் திறந்து தனது அறைக்குள் நுழைந்தான்.

“சார்! நமக்கெதுக்கு சார் புதுசா டிசைனர்? ஏற்கெனவே…” என்றவனை இடைமறித்தான் மித்ரன்.

“சொன்னதை மட்டும் செய் மேன். ஈவ்னிங் நான் டெல்லி வந்திடுவேன். நாளைக்குக் காலைல நான் பேப்பர்ல ஆட் பார்க்கணும்” என்று போனை வைத்தான்.

“மித்ரா! நீ எங்களை விட்டு விலகிப் போகணும்னு ஏன் நினைச்ச? அதுக்கான காரணம் எனக்குத் தெரிஞ்சே ஆகணும். சீக்கிரமே உன்னைத் தேடி வரேன்” என்று முணுமுணுத்தவன் எரிச்சலுடன் கார் சாவியைக் கட்டிலின் மீது வீசினான்.

கிளம்பி வரும்போது யாரிடமும் சொல்லாமல் குறிப்பு மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்திருந்தான்.
‘சுமித்ராவைப் பார்க்கவேண்டும் என்ற அவசரத்தில், வீட்டிற்கு ஒரு போன்கூடச் செய்யவில்லை’ என்று எண்ணிக்கொண்டே அன்னைக்கு அழைத்தான்.

“மித்ரன்! என்னப்பா… இப்படி ஆகிடுச்சி? உன்னோட நோட்டைப் பார்த்ததும் ரொம்பக் கஷ்டமாப் போச்சு. அந்தப் பொண்ணைப் பார்த்தியா?” என்று வித்யாவதி படபடவென விசாரித்தார்.

“இல்லம்மா! இப்போ அவள் இந்த ஊர்லயே இல்லயாம். அவளோட ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய்ட்டாளாம். அதனால பார்க்கமுடியலம்மா” என்றான்.

“ஓஹ்! அவ்வளவு தூரம் போயும்… பிரயோஜனமில்லாம போச்சே! நீ அந்தப் பொண்ணுக்கு, ஒரு போன் பண்ணிட்டுக் கிளம்பிப் போயிருக்கலாம்” என்றார் வருத்தத்துடன்.

“சரிம்மா! நான் இன்னும் கொஞ்சநேரத்துல கிளம்பிடுவேன். டெல்லி வந்ததும் பேசறேன்” எனப் போனை அணைத்தான்.

ஒரு காஃபியை மட்டும் வரவழைத்துக் குடித்துவிட்டு உடையை மாற்றிக்கொண்டு புறப்பட்டான்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தவனுக்கு உடம்பு அடித்துப் போட்டதைப் போலிருந்தது. இரண்டு நாள்களாகத் தூக்கமில்லாததால் கண்கள் ஓய்வு கேட்டு இறைஞ்சின.

படுத்தவனோ, அந்த அசதியிலும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

உறக்கம் வரவில்லை என்பதைவிட, நீத்துவிடம் பேசியதே மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து அவனது உறக்கத்தைக் கலைத்தது.

“அவள் டெல்லியில் இருக்குற எங்க ஃப்ரெண்ட் சங்கீதா வீட்டுக்குப் போயிருக்கா. பஸ், ட்ரெயின்னா பிரச்சனைன்னு ஃப்ளைட்ல போயிருக்கா. டெல்லியில் ரீச் ஆகிட்டா. காலைல ஒரு பத்து மணியிருக்கும் என்கிட்டப் பேசினா. யார்கிட்டயும் எதுவும் சொல்லவேணாம்னு சொன்னா. செல் நம்பரைக்கூட மாத்திட்டா. உங்களைத் தவிர, வேற யார்கிட்டயும் நான் எதுவுமே சொல்லலை” என்றாள் விரக்தியாக.

“உன் ஃப்ரெண்டுக்கு ரிவால்வர் ரீட்டான்னு நினைப்பா! இவ்வளவு விஷயம் நடந்திருக்கு, நான் எத்தனை முறை போன் செய்தேன். எடுத்துப் பேசணும்னு தோணவே இல்லையாமா?” என்று கடுப்புடன் கேட்டான் மித்ரன்.

நீத்து அமைதியாக இருக்க, “சரிம்மா! உன் ஃப்ரெண்டோட அட்ரஸும், சுமித்ராவோட செல்நம்பரையும் கொடு” என்றான்.

அவளும் யோசிக்காமல், அவன் கேட்டதைக் கொடுத்தாள்.

“அண்ணா! ஒரே ஒரு ரெக்வெஸ்ட். தயவுசெய்து நீங்க தடாலடியா நேர்ல போய் நின்னுடாதீங்க. ஏற்கெனவே, மனசால ரொம்ப உடைஞ்சி போயிருக்கா. அவளுக்கு யாரை நம்பறதுன்னு தெரியல. உங்ககிட்டப் பேசாம இருக்கறதுக்கும், இதான் காரணமாயிருக்கும்” என்று தோழிக்குச் சாதகமாகப் பேசினாள்.

தன்னையும் மீறி புன்னகைத்தவன், “இதைக்கூடப் புரிஞ்சிக்க முடியாதவன் இல்லம்மா! மனசுல சின்ன ஆதங்கம் வேற ஒண்ணுமில்ல. நீ பயப்படும் அளவுக்கு எதுவும் நடக்காது. என்னை நம்பற இல்ல…” எனக் கேட்டான்.

“நீங்க கேட்டதுமே, சுமித்ராவோட நம்பரைக் கொடுத்திருக்கேனே” என்றாள்.

“ரொம்பத் தேங்க்ஸ்!” என்றான்.

“அவளுக்கு ஒரு நல்லது நடந்தால், எங்களுக்குச் சந்தோஷம்ண்ணா! நீங்க ரெண்டு பேரும், ரிஷப் அண்ணா கல்யாணத்துல பேசிட்டிருக்கும்போதே நாங்க கவனிச்சோம். ஆனா, சுமிகிட்ட எதுவும் கேட்டுக்கல… இப்போ உங்ககிட்ட கேட்கட்டுமா!” என்றாள்.

“என்ன?” என்றான்.
“நீங்க சுமியை விரும்பறீங்களா?” எனக் கேட்டாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காதவன், பதில் சொல்லாமல் மௌனம் காத்தான்.

“அண்ணா!” என்றாள்.

சுதாரித்துக் கொண்டவன், “சரிம்ம்மா! உன் ஹெல்புக்கு ரொம்பத் தேங்க்ஸ்!” என்றான்.

“பரவாயில்லண்ணா! அவளை, ரொம்ப மிரட்டிடாதீங்க” என்றாள்.

“உன் ஃப்ரெண்டை எப்படி மேனேஜ் பண்றதுன்னு எனக்குத் தெரியும்” என்றவன் புன்னகையுடன் போனை வைத்தாள்.

எழுந்து பால்கனியில் வந்து நின்றவனுக்கு நள்ளிரவு பனியும், சுகமாகத் தோன்றியது.

‘நீ கிஷோரை லவ் பண்றியான்னு கேட்டதும், சேச்சேன்னு மித்ரா சொன்னதைப் போல, நீத்து கேட்டபோது என்னால் ஏன் சொல்ல முடியவில்லை?’ எனத் தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டான். அதற்கான பதில் மனத்திற்கு பெரும் உவப்பாக இருக்க, புன்னகையுடன் தலையைக் கோதிக்கொண்டான்.

எப்போது? எப்படி? எங்கே? என தன்னைக் குழப்பிக்கொள்ள அவன் தயாராக இல்லை. இப்போதைய நிலையில் தன் மனத்திலிருப்பதை அறிந்து கொண்டாகிவிட்டது. அந்த மனநிலையை சந்தோஷத்துடன் அனுபவிப்போம்’ என நினைத்துக் கொண்டான்.
 
  • Like
Reactions: saru
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!