தீயினில் வளர் ஜோதியே

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 27

“சுமித்ரா! இந்த ஆட் பார்த்தியா? கார்மெண்ட்ஸ் டிசைனர் தேவைன்னு, விளம்பரம் வந்திருக்கு” என்று பேப்பரைக் காட்டினாள் சங்கீதா.

“காஞ்சி கிரியேஷன்ஸ்… ரெக்வயர்ட் டிசைனர்ஸ்… க்வாலிஃபிகேஷன்ஸ்…” எனப் படித்துப் பார்த்தவள், “ம்ம். உடனே, ரெஸ்யூம் அனுப்பிடுறேன். ஃபர்ஸ்ட் ரௌண்ட் ஆன்லைன் இண்டெர்வியூ. ஃபைனல் ரௌண்ட், நேர்ல வரச்சொல்லியிருக்காங்க” என்றாள்.

“அப்போ, முதல்ல அப்ளை பண்ணு. நான் சூடா டீ போட்டுட்டு வரேன்” என்று எழுந்து சென்றாள் சங்கீதா.

“முதல்ல கம்பெனி பத்தி அவங்க வெப்சைட் பார்த்துக்கறேன்” என்றவள் அவர்கள் கொடுத்திருந்த வளைதள முகவரியைத் திறந்தாள்.

“இந்தா டீயைக் குடி! எப்போ இண்டெர்வியூன்னு அவங்க சைட்ல ஏதாவது போட்டிருக்கா?” எனக் கேட்டாள்.

“ம்ம், இருபத்தஞ்சு வருஷ கம்பெனி. சி.இ.ஓ மிஸ்டர்.சிவராம்! சௌத் இண்டியன் கம்பெனியா?” என்று சந்தேகத்துடன் சங்கீதாவைப் பார்த்தாள்.

“ஏன், நார்த் இண்டியன் கம்பெனிக்குத்தான் வேலைக்குப் போவியா?” என்று கிண்டலாகக் கேட்டாள் சங்கீதா.

“சாய்ஸ் கேட்கற நிலைமைலயா நான் இருக்கேன்” என்றாள் சலிப்புடன்.

“அப்போ என்ன முடிவு பண்ணியிருக்க?” கேட்டுக்கொண்டே டீயை உறிஞ்சினாள் சங்கீதா.

“ரெஸ்யூமை அனுப்ப வேண்டியது தான்” என்றவள், தனது சர்ட்டிஃபிகேட்ஸ், ரெஸ்யூம் அனைத்தையும் மெயிலில் அனுப்பி வைத்தாள்.

“ம், அனுப்பியாச்சா… ஓகே ஈவ்னிங் கால்காஜி மந்திர் போய்ட்டு அப்படியே பஹாய் டெம்பிள் போய்ட்டு டின்னரையும் முடிச்சிகிட்டு வருவோம்” என்றாள்.

“அவசியம் போகணுமா?” – சுமித்ரா.

“ஆமாம். வரேன்னு சொல்லிட்டேனே…” என்றவள், சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

“வரேன்னு சொல்லிட்டியா! யார்கிட்ட?”

“கால்காஜி மாதாகிட்ட” என்று சமாளிப்பாகச் சொன்னவள், “நான் போய் ட்ரெஸ்ஸை அயர்ன் பண்ணி வச்சிட்டு வரேன்” என அந்த இடத்தை விட்டு ஓடினாள்.

கால்காஜி காளிமாதாவை வணங்கிவிட்டு வெளியில் வந்த சுமித்ராவிடம், “ரொம்பப் பழமையான கோயில். விசேஷ நாள்ல நாம காலை வைக்கக்கூட இடம் இருக்காது” என பேசிக்கொண்டே தோழிகள் இருவரும் படியிறங்கி வந்தனர்.

“காளி கோயில்ன்னு சொன்னதும் நான் பெரிய உருவமா இருக்கும்னு நினைச்சேன். இங்கே பார்த்தா வெறும் முகம் மட்டும்தான் வச்சிருக்காங்க. பட், நைஸ்…” என்று இரசித்துச் சொன்னாள் சுமி.

“இன்னும் பஹாய் டெம்பிள் வந்து பாரு புரியும்” என்றவள் காரைக் கிளப்பினாள்.

பத்து நிமிடத்தில் அவள் காரை நிறுத்திய இடத்தைப் பார்த்த சுமித்ரா வியப்பில் புருவங்கள் மேலேற அயர்ந்து நின்றாள்.

வண்ண விளக்குகளால், அவ்வப்போது நிறம் மாறிக்கொண்டிருந்தது அந்தத் தாமரை வடிவ கட்டிடம்.

“வாவ்” என்று ஆச்சரியத்துடன் சொன்னாள் சுமித்ரா.

“ம்ம், இதுக்குத் தான் உன்னைக் கொஞ்சம் லேட்டா கூட்டிட்டு வந்தேன். வா” என்று தோழியுடன் உள்ளே சென்றாள்.

நீண்ட நடைபாதையைத் தாண்டி சில படிகளைக் கடந்து மேலே வந்த சுமித்ரா உண்மையிலேயே மெய்மறந்து நின்றிருந்தாள்.

“எவ்ளோ அழகு, சங்கீ!” என்றாள் வியப்புடன்.

“ம், பேசறதெல்லாம் இங்கேயே பேசிக்க. உள்ளே போய்ப் பேசக்கூடாது. அது தியான மண்டபம். அதைத்தான் பஹாய் டெம்பிள்ன்னு சொல்றாங்க” எனக் கூறிக்கொண்டே தோழியை உள்ளே அழைத்துச் சென்றாள்.

கிட்டத்தட்ட மூன்றாயிரம் பேர் அமரக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய ஹாலாக இருந்தது. ஆங்காங்கே அமர்ந்து சிலர் தியானம் செய்து கொண்டிருந்தனர். ‘உட்கார்’ என்பதைப் போல சுமித்ராவிற்குச் செய்கை செய்தவளும், கண்களை மூடி அமர்ந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாளோ! மெல்லக் கண்களைத் திறந்தவள், எதிரில் அமர்ந்திருந்த சங்கீதாவைக் காணாமல், சுற்றும் முற்றும் தேடினாள். வாயிலருகில் நின்றிருந்த சங்கீதா, கையசைத்து அவளை அழைத்தாள்.

“என்னடி! என்னை அங்கே விட்டுட்டு நீ இங்கே வந்து நிக்கிற?” எனக் கேட்டுக்கொண்டே திரும்பியவள், அவள் நின்றிருந்த வாயிலை நோக்கி வந்துகொண்டிருந்த விஜய்மித்ரனைக் கண்டதும் திகைத்துப் போனாள்.

சட்டெனத் தோழியின் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு, மற்றொரு வழியாக வெளியே வந்த சுமித்ராவின் இதயம், படபடவென அடித்துக்கொண்டது.

“எதுக்குடி இப்படியிருக்கற வழியை விட்டுட்டு வேற வழில கூட்டிட்டு வர்ற. இல்லயில்ல… இழுத்துட்டு வர்ற” எனக் கடுகடுத்தாள் சங்கீதா.

“பேசிட்டிருக்க நேரமில்ல கிளம்பு போகலாம்” என்றாள் வேகமாக.

“என்னடி விளையாடுறியா? வந்து அரைமணிநேரம் கூட ஆகல. அதுக்குள்ள கிளம்பச் சொல்ற” என்று அதட்டலாகக் கேட்டாள்.

“ப்ளீஸ்! கிளம்பலாம்” என்றாள்.

“பெரிய தொல்லையா போச்சுடி. இப்போ, என்ன பிரச்சனை உனக்கு?” என்றாள்.

“அ..து… விஜய் வந்திருக்கார்” என்றாள் திணறலாக.

“யாரு விஜய்?”

“நீத்துவோட அண்ணன் கல்யாண ரிசப்ஷன்ல பார்த்தோமே… விஜய்மித்ரன்” என்றாள்.

“அவர் உன் ஃப்ரெண்ட் தானே. அப்புறம் என்ன? போய்ப் பேசு. ஒருவகைல நீ அவருக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்றாள்.

“வேணாம் சங்கீ! எனக்குப் பயமாயிருக்கு. விஜய்கிட்ட நிச்சயமா என்னால பேசமுடியாது. அவரோட உறவே வேணாம்” என்றாள் கண்டிப்பாக.

“ஏய்! என்ன இது? அவர் என்னடி செய்தாரு?” எனக் கேட்டுக்கொண்டே நிமிர்ந்த ச்ங்கீதா பாதியிலேயே நிறுத்திவிட்டு, “சுமி” என்று அழைத்தாள்.

தோழியின் பார்வை தனக்குப் பின்னால் செல்வதை உணர்ந்து திரும்பிப் பார்த்த மித்ரா திடுக்கிட்டுப் போனாள்.
தனக்குப் பின்னால் நின்றிருந்தவனுக்கு, தான் பேசிய அனைத்தும் நிச்சயமாகக் கேட்டிருக்கும் என்று நினைத்துத் தவிப்பாக இருந்தது.

“வி..ஜ..ய்!” என்று அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, வேகமாகத் திரும்பி நடந்தான் மித்ரன்.

சுமித்ரா வேதனையுடன் தலையைப் பிடித்துக்கொண்டாள்.

“சுமி! என்னயிருந்தாலும் நீ செய்தது பெரிய தப்பு. அவர்கிட்ட ஒரு வார்த்தை பேசியிருக்கலாம். என்னவோ போடி” என்றவள் அலுப்புடன் அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தாள்.

‘கடவுளே! நான் ஏன் இப்படி நடந்துக்கறேன். எனக்கு என்ன ஆச்சு? எதுக்காக என் மனசுல இவ்வளவு குழப்பம்?’ என எண்ணியவளுக்கு தலை வலித்தது.

”எழுந்திரு. வீட்டுக்குக் கிளம்பலாம். எனக்கும் ஹோட்டலுக்குப் போற மூட் இல்ல” என்று சங்கீதா முன்னால் நடக்க, அவளைப் பின்தொடர்ந்தாள் சுமித்ரா.

ஏதோ யோசனையோடே காரை ரிவர்ஸ் எடுத்த சங்கீதா அவளைக் கடக்க முயன்ற காரை வேகமாக இடித்துவிட்டாள்.

காரிலிருந்தவன் வேகமாக இறங்கிவந்து அவளைத் திட்ட, சங்கீதா செய்வதறியாமல் கைகளைப் பிசைந்தாள். எங்கிருந்தோ வந்த விஜய்மித்ரன், அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

“பார்த்துப் போங்க. மனசுல குழப்பத்தோட வண்டியை ஓட்டாதீங்க. கொஞ்சநேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு கிளம்புங்க” என்றவன், சுமித்ராவின் பக்கம் திரும்பக்கூட இல்லை.

தோழியைத் திரும்பிப் பார்த்த சங்கீதா, அவள் எங்கேயோ வெறித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் எரிச்சலானாள்.

“ரொம்பத் தேங்க்ஸ் சார்! நல்ல நேரத்துல வந்து ஹெல்ப் பண்ணீங்க. என்னைத் தெரியுதா?” எனக் கேட்டாள்.

“நல்லாவே தெரியுது. நீத்துவோட ஃப்ரெண்ட்” என்றான்.

“ஓஹ் ஃபைன்!” என்றவள், தனது கணவனின் பிஸ்னஸ் கார்டை அவனிடம் கொடுத்தாள்.

“அவசியம் நீங்க வீட்டுக்கு வரணும்” என்ற அழைப்பையும் முன்வைத்துவிட்டு, அவனது பிஸ்னஸ் கார்டை வாங்கிக்கொண்டு புன்னகையுடன் அவனிடம் விடைபெற்று வந்தாள்.

அவன் திரும்பிச் செல்வதையே இமைக்காமல், பார்த்துக்கொண்டிருந்தாள் சுமி.

“போதும் பார்த்தது. உட்கார்றியா! கிளம்பணும்” எனக் கடுப்படித்தாள் சங்கீதா.

வீட்டிற்கு வந்து சேரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் சுமித்ராவை பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.

“நீ பேசாட்டி போகுது. காரை இடிச்சதும் அந்தக் கார்க்காரன் காச்மூச்சுன்னு கத்தினானே… அங்கே இருந்தவங்க அத்தனைப் பேரும், வாயை மூடிட்டு வேடிக்கைப் பார்த்தாங்க. மித்ரன் தானே வந்து ஹெல்ப் பண்ணாரு. அவர் என்ன எனக்காகவா செய்தார்? உனக்காகத்தான்டி செய்தார். முதல்ல தான் வாயைத் திறக்கல. அட்லீஸ்ட், தேங்க்ஸாவது சொல்லியிருக்கலாமில்ல” என்று கடிந்து கொண்டாள்.

எதற்கும் வாயைத் திறக்காமல், கமுக்கமாக அமர்ந்திருந்தாள் சுமித்ரா.

“எப்படியோ போ! நல்லவங்கள்லாம் உன் கண்ணுக்குத் தெரியாது. அந்த மந்தரா மாதிரி குரங்கையெல்லாம், ஆன்ட்டின்னு சொந்தம் கொண்டாடு. அறிவு கெட்டவ!” என்றபடி தனது அறைக்குச் சென்றாள்.

இரவு உணவைப் பெயருக்குக் கொறித்தாள், சுமித்ரா.
“சுமி! நான் சொன்னதுக்குக் கோச்சிகிட்டியா?” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் இல்ல…” என்றாள்.

“கோச்சிகிட்டாலும் பரவாயில்ல. நீ செய்ததுல, எனக்கு உடன்பாடே இல்ல” எனக் சொல்லிவிட்டுச் சென்ற தோழியை ஆயாசத்துடன் பார்த்தாள் சுமித்ரா.

“எனக்கொன்னும் தேங்க்ஸ்ன்னு சொல்லக்கூடாதுன்னு இல்ல. ஆனா, வேணாம்னு விட்டதைத் திரும்ப இழுத்துவிட்டுக்க வேணாம்னு பார்த்தேன். அதைப் புரிஞ்சிக்காம நீ என்னென்னவோ பேசற. விஜய் பத்தி உனக்குத் தெரியாது” என்றாள்.

சங்கீதாவிற்குச் சிரிப்பாக வந்தது. இருந்தும், கட்டுப்படுத்திக்கொண்டாள்.

“இந்தம்மாவுக்கு, ரொம்பத் தெரியும். எங்களுக்குத் தான் தெரியாது” என்று நொடித்தாள்.

சுமித்ரா மௌனமாக உதட்டைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஏன்டி! விலகிப் போறவங்ககிட்ட யாராவது வேணும்னே வருவாங்களா! இன்னைக்கே அவர் அப்படித்தானே நடந்துகிட்டார். உன் மனசுல அவரை எந்த இலட்சணத்துல புரிஞ்சிட்டிருக்கேன்னு தெரிஞ்சி, பேசாமல் தானே போனாரு. அப்புறம் என்ன?” என்றாள்.

“உனக்குச் சொன்னா புரியாது. விஜய்க்கு, என்னை ரொம்பப் பிடிக்கும். அதனால…” என்றவளை ஆர்வத்துடன் பார்த்தாள்.

“அப்போ, உனக்கும் அவரை ரொம்பப் பிடிக்குமோ…” என்று தோழியின் தோளை இடித்தாள் சங்கீதா.

“ம்ச்சும், சும்மா ஏதாவது உளறிட்டிருக்காதே. எனக்குத் தூக்கம் வருது” என்றவள் வேகமாகத் தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

“நான் உளறல. நீ எதுவும் உளறிடாதே…” என்றவள், மெல்ல முறுவலித்துக் கொண்டாள்.

கட்டிலில் விழுந்தவளுக்கு மனம் முரண்டியது. ‘சங்கீ சொன்னதுபோல, ஒரு தேங்க்ஸ் சொல்லியிருக்கலாம்’ என நினைத்துக்கொண்டாள்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 28

”சார்! உங்களைப் பார்க்க ஒரு மேடம் வந்திருக்காங்க!” என்ற ப்யூன் ஒரு காகிதத்தை நீட்டினான்.

‘சுமித்ரா கங்காதரன்’ என்றிருந்த பெயரைப் பார்த்ததும் சிறுபுன்னகையுடன், “வரச்சொல்லுங்க” என்றான் விஜய்மித்ரன்.

படபடத்த இதயத்துடன் அனுமதிக்காகக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள் சுமித்ரா.

“வாங்க! உட்காருங்க” என இருக்கையைக் காட்டினான் மித்ரன்.

பட்டும்படாமலும் அமர்ந்தவள், எப்படி ஆரம்பிப்பதெனத் தெரியாமல் தடுமாறினாள். இருக்கையில் நன்றாக சாய்ந்ந்து அமர்ந்திருந்தவன், முழங்கையால் தாடையைத் தாங்கியபடி லேசாக இருக்கையில் சுழன்றபடி ஆடிக்கொண்டிருந்தான்.

‘நிச்சயமாக அவனாக பேச்சை ஆரம்பிக்கப் போவதில்லை’ என உணர்ந்தவள், உதட்டைக் கடித்தபடி தவிப்புடன் அவனது முகத்தைப் பார்த்தாள்.

அவன் கேள்வியாக ஒற்றைப் புருவத்தை உயர்த்த, அவள் பட்டென எழுந்துவிட்டாள். கைப்பையுடன் விறுவிறுவென கதவருகில் வந்தவள் நின்றாள்.

‘சுமி! ஏன் இப்படிச் சொதப்பற? சொல்ல வந்ததைச் சொல்லிட்டுப் போயேன்’ எனத் தன்னையே கடிந்துகொண்டு, தயக்கத்துடன் திரும்பினாள். அவளது செய்கைகள் அனைத்தையும், திரைப்படம் பார்ப்பதைப் போல ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

வேகமாக வந்து இருக்கையில் அமர்ந்தவள், “ஏன் விஜய் என்னை இப்படிப் படுத்தறீங்க?” என்றாள்.

அவன் எதுவுமே சொல்லாமல், அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனது மௌனம், அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

“உங்க ஹெல்ப்புக்கு ரொம்பத் தேங்க்ஸ்! இதைச் சொல்லத்தான் வந்தேன். கிளம்பறேன்” என்று எழுந்தாள்.

இரண்டடி நடந்தவளிடம், “நான் உன்னிடம் பேசாமல் இருந்ததுக்கா இந்தத் தேங்க்ஸ்!” எனக் கேட்டான்.
அவனது வார்த்தைகள் அவளுக்குப் பெரும் வருத்தத்தைக் கொடுக்க, “ஏற்கெனவே, நான் நொந்து போயிருக்கேன். நீங்களுமா!” என்றவளுக்குக் குரல் தழுதழுத்தது.

எழுந்து அவளருகில் வந்தவன், இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு லேசாகச் சாய்ந்து நின்றான். அவனது கண்களைச் சந்திக்கமுடியாமல், அவளது இமைகள் தாழ்ந்தன.

“ஏன் மித்ரா! நானா, உன் உறவே வேணாம்னு சொன்னேன்” எனக் கேட்டான்.

அந்த வார்த்தைகளை உச்சரித்தபோது, அவனது குரல் வெளிப்படுத்திய வேதனையை அவள் நன்றாகவே உணர்ந்தாள்.

“உங்களைக் கஷ்டப்படுத்தணும்னு நிச்சயமா நான் நினைக்கல. ஆனா, எனக்கு வேற வழி தெரியல” என்றாள்.

“அதுக்காக என் உறவே வேணாம்னு ஒதுக்கி வைக்கும் அளவுக்கு, என்ன தப்பு பண்ணேன்?” எனக் கேட்டான்.

விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

அவளைக் கூர்ந்து நோக்கியவன், “நாம இங்கே பேசவேணாம். வா!” எனக் கார் சாவியை எடுத்துக்கொண்டு முன்னே நடந்தான்.

ஒரு பூங்காவின் அருகில் காரை நிறுத்திவிட்டு, அவள்புறமாகச் சற்றுத் திரும்பி அமர்ந்தான்.

“ம், இப்போ சொல்லு. என்ன நடந்தது?” எனக் கேட்டான்.

அதுவரை அவனது உறவே வேண்டாம். அவனிடம் பேசவேண்டாம் என்று ஓடி ஒளிந்தவள், அவன் கேட்டதும் மளமளவென நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள். அவளது கண்ணீர், தந்தையின் மீது கொண்டிருக்கும் பாசம், ஏக்கம், அன்பு என அத்தனையையும் ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டான்.

“எப்படியாவது இந்த இக்கட்டுலயிருந்து தப்பிக்கணும்னு நினைச்சேன். முடிஞ்ச வரைக்கும், பல்லைக் கடிச்சிக்கிட்டுப் பொறுமையா இருந்தேன். நான் அப்பாவைப் பத்தி மந்த்ரா ஆன்ட்டிகிட்ட பேசும் போதெல்லாம் அவங்களோட முகம் போகும் போக்கைப் பார்த்தே திருப்திப் பட்டுக்கிட்டேன். அதைத் தவிர என்னால என்ன செய்ய முடியும்? எனக்குன்னு யார் இருக்காங்க?” என்றாள்.

“நீ ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கலாம் மித்ரா!” என்றான் ஆற்றாமையுடன்.

விரக்தியாகப் புன்னகைத்தவள், “அதனால, எங்க அப்பா திரும்ப வந்திடுவாரா விஜய்?” எனக் கேட்டவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

‘ஆதரவில்லாத ஒரு பெண்ணை, அந்த மந்த்ரா எப்படியெல்லாம் படுத்தியிருக்கிறாள்? இவளெல்லாம் பெண்ணா? மனைவியின் இரட்டை முகத்தைப் பற்றி அறியாமல், நண்பரின் மகளுக்காக வேதனைப்படும் கணவர்’ எனக் கிஷோரின் குடும்பத்தின் மீது பெருஞ்சினம் கொண்டான்.

ஆனால், ‘இப்போது என்ன செய்யமுடியும்? மித்ராவை ஆறுதல் படுத்துவதைத் தவிர’ என நினைத்துக்கொண்டான்.

“அப்போகூட என்னோட நினைப்பு, உனக்கு வரலையா மித்ரா!” ஆழ்ந்து ஒலித்த அவனது குரலில் சிறு ஏமாற்றம் தென்பட்டது.

“வரலைன்னு சொல்லணும்னு தான் நினைக்கிறேன். ஆனா, முடியல…” என்றவளைக் கனிவுடன் பார்த்தான்.

“அப்போ, ஏன் என்னை ஒதுக்கின? எத்தனை முறை உனக்குப் போன் செய்தேன் தெரியுமா? சாரோட போனும் ஸ்விட்ச் ஆஃப்; உன்னோட போனும் ஸ்விட்ச் ஆஃப்… முதல் நாள் என்கிட்ட சந்தோஷமா பேசினவளுக்கு, என்ன ஆச்சுனு நான் பதறினது தெரியுமா உனக்கு? சரி, அப்போதான் உன்னால முடியல. ஓகே.

ஆனா, போனை ஆன் செய்த பின்னால, உனக்கு எத்தனை போன் செய்தேன். அப்பவும், நீ ஏன் எடுக்கல? அட்லீஸ்ட், எடுத்து இனி எனக்குப் போன் பண்ணாதேன்னு சொல்லியிருக்கலாமில்ல. உனக்கு ஒண்ணுமில்லன்னு, நான் நிம்மதியாகவாவது இருந்திருப்பேனே” என்றான் ஆற்றாமையுடன்.

“உங்ககிட்டப் பேசியிருக்கலாம். ஆனா, உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வரவேணாம்னு தான்” என்றாள்.

”இதுல பிரச்சனை எங்கேயிருந்து வந்தது?” என்றான் கிண்டலாக.
“கிஷோர் மூலமா… உங்களுக்கும், உங்க பிஸ்னஸுக்கும் பிரச்சனை வரும்” என்றாள்.

“என்ன?” என்றவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

அவனது முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“உங்களுக்குத் தெரியாது விஜய்! கிஷோர், எனக்காக என்னவேணாலும் செய்வான். அவனோட செல்வாக்கை வச்சி உங்களையும், உங்க பிஸ்னஸையும் ஒண்ணுமே இல்லாமல் பண்ணிடுவான். நீங்களே, இப்போதான் ஓரளவுக்கு முன்னேறிட்டு வர்றீங்க. நீங்க ரெண்டு பேருமே ஒரே பிஸ்னஸ்ல இருக்கறது, அவனுக்கு ரொம்பவே சாதகமாகயிருக்கும். ஏற்கெனவே, அவனுக்கு உங்களைப் பிடிக்காது. நாம ரெண்டு பேரும் அன்னைக்குப் பேசிட்டு இருந்ததுதான் அவனோட கோபத்துக்கே காரணம். அப்படிப்பட்டவன், நீங்க திரும்ப என் வாழ்க்கைல வர்றதை நிச்சயமா விரும்பமாட்டான்” என்றாள் பரிதாபமாக.

“எனக்கு வர்ற பிரச்சனையை சால்வ் பண்ணிக்க, எனக்குத் தெரியும். இருந்தாலும், என்மேல உனக்கு ரொம்ப அக்கறைதான்” என்று கிண்டலாகச் சிரித்தான்.

அவனை முறைத்தவள், “ஏன் உங்கமேல நான் அக்கறையா இருக்கக்கூடாதா?” என்றாள் காட்டமாக.

சிலாகிப்பாகப் புருவத்தை உயர்த்தியவன், “நான் யாரையும் உன் உறவே வேணாம்னு ஒதுக்கலையே. அப்படிச் சொல்லியிருந்தா, நீ கேட்கறது சரியாயிருக்கும்” என்றான்.

அவனது பதிலைக் கேட்டவளுக்குச் சுர்ரென ஏறியது.

“நான் எது சொன்னாலும், விதண்டாவாதமாவே பேசறீங்க. உங்களுக்குத் தேங்க்ஸ் சொல்ல வந்தேன். சொல்லிட்டேன். கிளம்பறேன்” என்றாள்.

ஸ்டியரிங் வீலில் தாளம் தட்டிக்கொண்டே, “அப்படியா! சரி கிளம்பு” என்றான்.

இப்படியொரு பதிலை எதிர்பார்க்காதவள், திகைத்துப் போனாள். கோபத்துடன் படக்படக்கென இமைகளைக் கொட்டியவள், கதவைத் திறக்க முயன்றாள்.

சிரித்துக்கொண்டே அவளது கரத்தைப் பற்றியவன், “ஹேய்! விளையாட்டுக்குச் சொன்னாக்கூட கோச்சிக்குவியா? என்மேல இவ்ளோ அக்கறை வச்சிருக்க உன்கிட்ட நான் விளையாடக்கூடாதா?” என்றான்.
உர்ரென்ற முகத்துடன் அவள் அமர்ந்திருக்க, மித்ரன் வாய்விட்டு நகைத்தான்.

“எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க?” என்றாள் எரிச்சலுடன்.

“இல்ல, வேணாம்னு தள்ளிப் போனவங்க, இப்போ தேடி வந்து பேசறீங்களே. இந்த நேரத்துல கிஷோர் இங்கே வந்து நம்ம ரெண்டு பேரையும் சேர்ந்துப் பார்த்தா…” என அவன் சொல்லும்போதே, அவளது முகம் பயத்தில் வெளிறியது.

“ஹேய்! நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்” என்றவனது கரத்தை வேகமாகத் தள்ளிவிட்டாள்.

“எல்லாமே உங்களுக்கு விளையாட்டாயிருக்கா! என் ஃபீலிங்க்ஸை புரிஞ்சிக்கவே மாட்டீங்களா?” எனப் படபடத்தாள்.

“ரிலாக்ஸ் மித்ரா! நெருப்புன்னா வாய் வெந்துடாது.”

“ஆனா, நெருப்பு சுடும்தானே” என்றாள் வேகமாக.

“ஓகே. சாரி! இனி, கிஷோரோட பேச்சை எடுக்கல. ஆனா, எனக்கு ஒரு விஷயத்தைக் கிளியர் பண்ணு” என்றான்.

‘என்ன?’ என்பதைப் போலப் பார்த்தாள்.

“இப்போ, கிஷோர் உன் முன்னால வந்து நின்னா, தைரியமா அவங்க அம்மாவைப் பத்தி எடுத்துச் சொல்லணும்னு உனக்குத் தோணலையா?” எனக் கேட்டான்.

“சொன்னதும் நம்பிடுவானா! ஆயிரம் இருந்தாலும், அவங்க அம்மா இல்லயா? இந்தக் கல்யாணம் நடக்காமலிருக்க, நான் சொல்ற பொய்ன்னு மந்த்ரா ஆன்ட்டியே சொல்வாங்களே. எனக்கு ஆதாரமா என்னயிருக்கு?” எனக் கேட்டாள்.

“ம்” எனத் தலையை அசைத்தவன், “உண்மைதான். பட், நீ சாமர்த்தியமா தப்பி வந்தது பெரிசில்ல. அவனைப் பார்த்தாலும், தைரியமா பேசணும். அதுக்கு உன்னைத் தயார் பண்ணிக்க. உனக்கு ஆதாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனா, ஆதரவா நாங்க எல்லோரும் இருக்கோம். அதை மறந்துடாதே” என்றான்.

அவளும், ஆமோதிப்பாக தலையை ஆட்டிக்கொண்டாள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு, உன் ஃப்ரெண்ட் வீட்ல வாசம் பண்ற ஐடியாலயிருக்க?”

“வேலை கிடைக்கும் வரைக்கும்…”

“ஓஹ்! உன்னைப் பத்தி அம்மாகிட்ட சொன்னேன். உன்னைக் கையோட வீட்டுக்குக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க” என்றான்.

“அது, சரியா வராது விஜய்!” என்றாள்.

“ஏன்? இங்கே வேலை பார்க்கறதை அங்கே வந்து பாரு. உனக்குத் துணையா எங்க ஃபேமலி இருக்கும்” என்றான்.

“இல்ல வேணாம். நான் உங்களைப் பார்த்துப் பேசணும்னு மட்டும்தான் வந்தேனே தவிர, நம்ம உறவை இனியும் தொடரணும்னு இல்ல” என்றாள்.

சற்றுநேரம் மௌனம் காத்தவன், “நமக்குள்ள என்ன உறவு இருக்குன்னு, சும்மா சும்மா அதையே சொல்லிட்டிருக்க. நீ என் ஃப்ரொஃபசரோட பொண்ணு. அந்த முறைலதான் உனக்கு ஹெல்ப் பண்றேன். நீயா, ஏதாவது கற்பனை பண்ணிக்காதே!” எனச் சுருக்கெனச் சொன்னான்.

அதிர்ந்து போனவளாக, “நான், அந்த அர்த்தத்துல சொல்லல…” என்றாள்.

போதும் என்பதைப் போலக் கையை நீட்டியவன், “நீ எங்கே இறங்கணும்னு சொல்லு உன்னை டிராப் பண்ணிடுறேன்” என்றான்.

“பரவாயில்ல நான் இங்கேயே…” அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே காரைக் கிளப்பினான்.
மெட்ரோ ஸ்டேஷனில் அவளை இறக்கிவிட்டவன், “இங்கேயிருந்து பத்திரமா போயிடுவதானே” எனக் கேட்டான்.

“ம்…” என்றாள்.

அவளுடனே வந்தவன், இரயில் வரும் வரை அவளுக்குத் துணையிருந்தான்.

“வீட்டுக்குப் போனதும், எனக்கு ஒரு மிஸ்ட் கால் கொடு. இவனுக்கு எதுக்குக் கொடுக்கணும்னு விட்டுடாதே” என்றான்.

அதற்கும், “ம்” என்றாள்.
அவள் செல்ல வேண்டிய இரயிலுக்கான அழைப்பு வந்ததும், “ஆமா…, கிஷோர் மூலமா எனக்குப் பிரச்சனை வரும்னு நீ ஒதுங்கிப் போனதா சொன்னியே, அது மட்டும்தான் காரணமா! இல்ல…” என்றவனை உறுத்து விழித்தாள்.

இரயில் வந்து நிற்க, “உங்களுக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு” என்றவள், வேகமாகச் சென்று இரயிலில் ஏறினாள்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 29

வாசலில் நின்றிருந்த காரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே, கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள் சுமித்ரா. உள்ளேயிருந்த சிரிப்பொலியில் நிதானித்தவள், கதவு முழுதாக மூடாமலிருந்த கதவைத் தட்டிவிட்டு மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தாள்.

“ஹேய் சுமி! வந்துட்டியா? உன்னைப் பத்தித் தான் பேசிட்டிருந்தோம். இண்டர்வியூ எப்படி செய்த?” என்றபடி அவளை உள்ளே அழைத்தாள் சங்கீதா.

“ம், நல்லா செய்திருக்கேன்” என்றவள், அங்கே அமர்ந்திருந்தவனை இமைக்காமல் பார்த்தாள்.

இரண்டு பேர் அமரக்கூட சோஃபாவில், நட்டநடு நாயகமாகக் கால்மேல் கால் போட்டு வலது கையை சோஃபாவின் சாய்மானத்தில் நீட்டியபடி சற்றுத் திரும்பி அமர்ந்திருந்தான் விஜய்மித்ரன்.

“ஹாய்! என்றான் மலர்ச்சியுடன்.

இவளும் பெயருக்கு, “ஹாய்!” என்றவள் சங்கீதாவிற்குக் கண்ணைக் காட்டிவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

“அண்ணா! டூ மினிட்ஸ்” என விஜய்மித்ரனிடம் சொல்லிவிட்டு, சுமித்ராவின் பின்னால் சென்றாள்.

சங்கீதா உள்ளே வந்ததும் கதவைத் தாளிட்ட சுமித்ரா, “என்னடி! உறவு முறையெல்லாம் பலமா இருக்கு” என்று குதறாதக் குறையாகக் கேட்டாள்.

“உனக்குத்தான் எந்த உறவு தேவையில்ல. ஆனா, எங்களுக்கு அப்படி எந்தக் கட்டாயமும் இல்ல. அவரும் தமிழ், நாங்களும் தமிழ். இந்த ஊர்ல எல்லா மொழிக்காரனும் அவனோட ஊர்க்காரனுக்குச் சப்போர்ட் பண்ணுவான். ஆனா, எங்க ஆளுங்க இருக்காங்களே… பாதி பேர் வாயையே திறக்கமாட்டாங்க. இவ்வளவு ஏன் தமிழ்க்காரன்னே காட்டிக்கமாட்டாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு நடுவுல, மித்ரன் அண்ணா மாதிரி ஒருசிலர் இருக்கத்தான் செய்றாங்க” என்று நீண்ட பிரசங்கம் ஒன்றைச் செய்தாள்.

“போதும். தாங்கல… ஆளாளுக்கு இந்த உறவு கதையைச் சொல்லி, என்னைக் கொல்லாம கொல்லாதீங்க. தெரியாம அப்படியொரு வார்த்தையைச் சொல்லித் தொலைச்சிட்டேன்!” எனத் தலையை உலுக்கினாள்.

“ஆளாளுக்கா! அப்படி யார் சொன்னது?”

“ம், வேற யாரு?” என ஆரம்பித்தவள், சட்டென சுதாரித்துக்கொண்டாள். “ஏன் உனக்குத் தெரியாதா?” என இறங்கிய குரலில் கேட்டாள்.

“தெரிஞ்சும் கேட்க நான் என்ன பைத்தியமா?” என்றாள்.

பைத்தியம் என்ற வார்த்தை சுமித்ராவிற்குச் சுர்ரென ஏற, உடல் அதிர நிமிர்ந்தாள்.

“ஏய்! எதுக்கு இப்படித் திருதிருன்னு முழிக்கிற? வீட்டுக்கு வந்தவங்களை அங்கே உட்கார வச்சிட்டு, நாம இங்கே பேசிட்டிருக்கறது நல்லாயில்ல. சீக்கிரம் டிரெஸ்ஸ மாத்திக்கிட்டு வா” என்றாள்.

“இப்போ எதுக்கு வந்திருக்காராம்?” மனத்தில் முனுமுணுவென்ற கேள்வியைக் கேட்டாள் சுமி.

இடுப்பில் கைவைத்தபடி, “ம், உன்னைப் பார்க்கத்தான்” என்றாள் நிதானமாக.

“எ..எ..ன்..னை..யா…!” எனத் திகைத்து விழித்தாள்.

“அதுக்கு எதுக்குடி இந்த முழிமுழிக்கிற! சும்மா, உன்னைக் கடுப்படிச்சேன். அன்னைக்கு வீட்டுக்கு வரச்சொல்லி சொன்னேன் இல்லயா… அப்புறம், என் வீட்டுக்காரரும் அண்ணாகிட்ட தேங்க்ஸ் சொல்லப் பேசினார். இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தாராம், அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்திருக்கார்” என்றாள்.

சுமித்ரா அமைதியாக இருக்க, “சீக்கிரமா வா! குலோப்ஜாமூனும், வெஜிடபிள் கட்லெட்டும் செய்திருக்கேன். சூடாயிருக்கும் போதே சாப்பிட்டுடலாம்” எனச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

கட்டிலில் அமர்ந்த சுமித்ராவிற்கு, அன்று விஜய்யிடம் பேசிவிட்டு வந்தது நினைவில் வந்தது.

‘எனக்குப் பிரச்சனை வரும்னுதான் நீ ஒதுங்கிப் போனதா சொன்னியே, அது மட்டும்தான் காரணமா! இல்ல…’

‘தன்னை ஏன் அப்படிக் கேட்டான்? ஒருவேளை அப்படியொரு எண்ணம் ஏதேனும் அவனுக்கு இருக்குமோ’ என நினைத்தவள் தலையை உலுக்கிக் கொண்டாள்.

‘சேச்சே! நிச்சயமாக இருக்காது. அவன்தான் தெளிவாகச் சொல்லிவிட்டானே. நீ என் ஃப்ரொஃபசரின் மகள் என்று. அதுதான் நிஜம். நீ இப்படி யோசித்து, இருக்கும் மூளையைக் கசக்கிக் கொள்ளாதே’ என தனக்குத் தானே தேறுதல் சொல்லிக்கொண்டாள்.

‘அவன் சிரித்துக்கொண்டே தான் கேட்டான். அந்தச் சிரிப்பிற்கான அர்த்தம் என்ன?’ மீண்டும் மனம் அவனிடமே சென்றது.

ஒரு வாரமாக இந்த நிகழ்வை, முயன்று புறந்தள்ளியிருந்தாள். எப்போதும் ஏதேனும் வேலையைச் செய்வதிலும், தோழிகளுடன் பேசுவது, கை போன போக்கில் வரைவது என தன்னை எப்போதும் ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொண்டாள். ஆனால், இன்று அவனது வருகையால் அந்த நினைவுகளை ஒதுக்கித் தள்ள முடியவில்லை.

’இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும்’ என நினைத்துக் கொண்டு முகத்தைக் கழுவிக்கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.

“வந்துட்டியா! நீ பேசிட்டிரு நான் அஞ்சு நிமிஷத்துல வந்திடுறேன்” என்ற சங்கீதா அங்கிருந்து நழுவினாள்.

“எப்போ வந்தீங்க?” எனக் கேட்டாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவன், “ஓஹ்! என்னைத்தான் கேட்டியா? நான் வந்து சரியா இருபது நிமிஷம் ஆகுது” என்றான்.

லேசான முறைப்புடன், அவனைப் பார்த்தாள்.

“ம், இண்டர்வியூவுக்குப் போனியாமே எப்படிச் செய்திருக்க? எந்தக் கம்பெனின்னு சொல்லு. நான் வேணா அவங்களுக்கு உன்னைப் பத்திக் குட்வில் சர்ட்டிஃபிகேட் கொடுக்கறேன்” என்றான்.

நிமிர்ந்து அமர்ந்தவள், “அதுக்கெல்லாம் அவசியம் இல்ல. என்னோட திறமைக்கு வேலை கிடைச்சா போதும்” என்றாள்.
“ம், ஓகே” எனத் தோள்களைக் குலுக்கினான்.

“எந்தக் கம்பெனி?” என்று மீண்டும் கேட்டான்.

“நான்தான் அவசியம் இல்லன்னு சொல்லிட்டேனே” என்றாள்.

“எனக்கு ஒருமுறை சொன்னா, புரியாதுன்னு நினைச்சிட்டிருக்கியா?” என்று எரிச்சலுடன் சொன்னவன், “எந்தக் கம்பெனின்னு சொன்னா, கம்பெனியோட இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்” என்றான்.

மெல்ல, “காஞ்சி கிரியேஷன்ஸ்” என்றாள்.

“ஓஹ்! அந்தக் கம்பெனி ஜெய்பூர்ல இருக்கு” என்றான்.

“ஆமாம். வேலை அங்கே தான்” என்றாள்.

“ம், வேலைக்காக எங்கேயெல்லாமோ போற. எங்க அம்மா உன்னைக் கூட்டிட்டு வரச்சொன்னாங்கன்னு சொன்னா, நீ அதைப் பத்திப் பேசவே இல்ல” என்றான் தாங்கலுடன்.

“அதெல்லாம் சரிவராதுன்னு அன்னைக்கே சொல்லிட்டேனே” என்றாள் எரிச்சலுடன்.

“ஆனா, எங்க அம்மாகிட்ட இன்னும் அதை நான் சொல்லலையே. அவங்க என்கிட்ட பேசும்போதெல்லாம் கேட்டு நச்சரிக்கிறாங்களே.”

“உங்க அம்மாகிட்ட சொல்லாதது, உங்க தப்பு” என்றாள்.

அவன் மௌனமாக அவளைப் பார்த்தான்.

வாய்க்குள்ளேயே ஏதோ முணுமுணுத்தவள், “நான்தான் எதுவுமே வேணாம்னு ஒதுங்கிப் போறேனே. திரும்பத் திரும்ப ஏன் என்னை டிஸ்டர்ப் பண்றீங்க?” என்றாள் கோபத்துடன்.

மித்ரன் சமையலறையைத் திரும்பிப் பார்த்தான். சங்கீதா மும்முரமாக எதையோ செய்து கொண்டிருந்தாள்.

“இந்த அறிவெல்லாம், என்னைப் பார்க்க ஆஃபிஸுக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்திருக்கணும்” என்றவன் சில நொடிகள் நிறுத்தி, அவளது திகைத்த முகத்தைப் பார்த்தான்.
“இப்படிச் சுறுக்குச் சுறுக்குன்னு மிளகாயக் கடிச்சாமாதிரி பேசற உன்கிட்ட நறுக்குன்னு கேட்கணும்னு தான் இருக்கு. ஆனா, என்ன பண்றது? நான் வந்தது, உன்னைப் பார்க்க இல்லயே. சங்கீதா, என்னை வீட்டுக்கு இன்வைட் பண்ணதால” என்றான் அழுத்தமாக.

அவனது பதிலில் மூக்குடைப்பட்டது போலானாள் சுமித்ரா.

“அப்போ, என்னைப் பார்க்க வரலையில்ல. சந்தோஷம் ஸ்வீட்டும், காரமும் வரும் சாப்டுட்டு சந்தோஷமா கிளம்புங்க” என்றவள், அதே கோபத்துடன் எழுந்தாள்.

“ஸ்வீட், காரம், காஃபி சாப்பிட நான் என்ன பொண்ணா பார்க்க வந்திருக்கேன்?” என்று கிண்டலாகச் சிரித்தான்.

அவனை ஆழ்ந்து பார்த்தவள், “நீங்க பழைய விஜய்யே இல்ல” என்றாள்.

“ம், அப்படியா!” என்று தன்னையே குனிந்து பார்த்துக்கொண்டான்.

“உங்க பேச்சும், நடவடிக்கையும் புதுசாயிருக்கு. ஆளே மாறிட்டீங்க. என்னால உங்க கண்ணைப் பார்த்துப் பேசமுடியல. என்னோட விஜய், நீங்க இல்ல” என்றவள், வேகமாகத் தனது அறைக்குச் சென்றாள்.

அவன் அயர்ச்சியுடன் தலையைக் கோதிக் கொண்டான்.

சமையலறையிலிருந்து வந்த சங்கீதா, “என்னாச்சு?” என்றாள்.

“நத்திங்! சரியாகிடுவா” என்று புன்னகைத்தான்.

*****************

பதினைந்து நாள்களுக்குப் பிறகு, ஆர்.கே புரத்திலிருந்த மலைமந்திர் முருகன் கோவிலுக்கு, சங்கீதா மற்றும் அவளது கணவனுடன், சுமித்ராவும் வந்திருந்தாள்.

“ரொம்ப அழகான கோவில். காத்து சும்மா சுழண்டு சுழண்டு அடிக்குது” காற்றில் நிலையில்லாமல் பறந்துகொண்டிருந்த துப்பட்டாவை இழுத்து பிடித்தபடிச் சொன்னாள் சுமித்ரா.

“சரி கிளம்பலாமா?” என்ற சங்கீதா, படியிறங்கிக் கொண்டிருந்த மித்ரனைப் பார்த்தாள்.
“ஹேய்! அது மித்ரன் அண்ணா தானே” என்றவள் வேகமாக தனது மொபைலில் அவனது எண்ணுக்கு அழைத்தாள்.

கடைசி படியிலிருந்து இறங்கியவன் போனை எடுத்தான்.

“அண்ணாவே தான்” என்றவள், “ஹலோ அண்ணா! நாங்க மேலேயிருக்கோம். இங்கே…” எனச் சொல்லிவிட்டுக் கையை அசைக்க, மித்ரன் திரும்பிப் பார்த்தான்.

பதிலுக்குக் கையை அசைத்தான்.

“அஞ்சே நிமிஷம் வந்திடுறோம்” என்றவள், “வா சுமி!” என அழைத்துவிட்டு, முன்னால் கணவனுடன் நடந்தாள்.

அவர்கள் இருவரும் முன்னால் வேகமாகச் செல்ல, இவள் தயங்கித் தயங்கி நடந்தாள்.

அன்று சங்கீதாவிடன் அவன் பேசிவிட்டுச் சென்றபின் அவன் அவளைத் தொடர்புகொள்ளவே இல்லை. சுமித்ராவிற்கும் அது பெரும் நிம்மதியாக இருந்தது.

‘அவனைச் சற்று மறந்திருக்கும் நேரத்தில், மீண்டும் இங்கே அவனது தரிசனமா!’ என உள்ளம் சோர்ந்து போனது.

“என்னடி அன்னநடை போட்டு வர்ற. சீக்கிரம் வா” என கீழேயிருந்து அழைத்தாள் சங்கீதா.

“ம்” என முறுவலித்தவள், தன்னை ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்த விஜய்யின் பார்வையைத் தவிர்த்தாள்.

அவள் அருகில் வந்ததும், “எப்படியிருக்க?” என்று விசாரித்தான்.

“ம்” என்று தலையை ஆட்டினாள்.

அதற்குமேல் அவனும், சங்கீதாவின் கணவனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“எப்பவுமே செவ்வாய்கிழமைல வருவேன்…” என அவர்களுக்கு அவன் பதில் சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தும் இவள், அவன் பக்கமாகத் திரும்பவே இல்லை.

மனத்தில் ஏதோ இனம்புரியாத கலக்கம் நிறைந்திருந்தது. அது ஏனென்று அவளுக்குப் புரியவில்லை.

சங்கீதாவின் கணவனது வற்புறுத்தலுக்கு இணங்க மதிய உணவை அவர்களுடன் சாப்பிடுவதாக ஒப்புக்கொண்டான்.

“ஓகே. அப்போ அந்த ஹோட்டலுக்குப் போகலாம். சௌத் இண்டியன் ஃபுட் நல்லாயிருக்கும்” என்றாள் சங்கீதா.

“நாம சாப்பிடலாம்… சுமித்ராவுக்கு…” என இழுத்தான் மித்ரன்.

சுமித்ராவிடம், “உனக்கு சௌத் இண்டியன் ஃபுட் ஓகே தானே சுமி!” எனக் கேட்டாள்.

‘ம்க்கும் அது ஒண்ணுதான் குறை’ என நினைத்துக்கொண்டவள், “போகலாம்” என்றாள்.

கார் பார்க்கிங்கிற்கு வந்தவர்கள், “ஏங்க! நீங்க பெட்ரோல் போடணும்னு சொன்னீங்க இல்ல. போய்ப் போட்டுட்டு அப்புறம் ஹோட்டலுக்குப் போவோமா…” என்று கண்களால் கணவனுக்குச் ஜாடை காட்டினாள்.

“ம், ஆமாம். முதல்ல பெட்ரோல் போட்டுட்டு வந்திடுவோம்” என்றார் அவளது கணவன்.

“சுமி! பெட்ரோல் பங்க் இந்தப் பக்கம் கிடையாது. நீ, மித்ரன் அண்ணாகூட ஹோட்டலுக்குப் போய்டு. நாங்க பின்னாடியே பத்து நிமிஷத்தில் வந்திடுறோம்” எனச் சொல்லிக்கொண்டே காரில் ஏறினாள்.

“இல்ல சங்கீ நானும்…” என்றவளை, “அது சுத்தும்மா… நீ அண்ணாவோட வந்திடு. நீங்க கூட்டிட்டு வந்திடுங்கண்ணா!” என்றவள் கணவனைக் காரைக் கிளப்பும்படி சொன்னாள்.

வேறு வழியில்லாமல் சுமித்ரா நின்றிருக்க, “கிளம்பலாமா?” எனக் கேட்டான் விஜய்.

அவளும் தலைவிதியே என அவன் பின்னால் நடந்தாள்.

பத்துநிமிட பயணத்திற்குப் பின் அவர்கள் சொன்ன ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். சுற்றிலும், தோட்டம் போன்ற அமைப்புடன் அருமையாக இருந்தது அந்த இடம்.

பெரிதாக கூட்டம் எதுவும் இல்லாததால், காரில் சாய்ந்து நின்றான் மித்ரன்.
“அவங்களும் வந்திடட்டும் போகலாம்” என்றான்.

இரண்டு நிமிடங்கள் எதுவும் பேசாமல் இருந்தவள் அதற்கு மேல் முடியாமல், “நான் போற இடத்துக்கெல்லாம் ஃபாலோ பண்ணிட்டே வருவீங்களா?” எனக் கேட்டாள்.

புருவம் முடிச்சிட அவளைப் பார்த்தவன், “ரொம்பப் புத்திசாலிதான். இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட” என்றான் கிண்டலாக.

“உங்களுக்கு ஒருமுறை சொன்னா புரியாதா? ஏன் இப்படி…” என்றவள், அவனது முறைப்பில் அப்படியே அடங்கிப் போனாள்.

“சும்மா சும்மா இதையே சொல்லிட்டிருந்த என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. உறவே வேணாம்னு சொல்லிட்டு, என்னைத் தேடி நீதானே வந்த. அன்னைக்குச் சங்கீதா வீட்டுக்கு உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். போதுமா.

ஆனா, இன்னைக்கு நான் ஒண்ணும் ப்ளான் பண்ணி வரல. நான் எப்பவும் வர்றது தான். அப்படிப் பார்த்தா, நீதான் என்னைப் ஃபாலோ பண்ணிட்டு வர்றன்னு நான் சொல்லட்டுமா” என்றான் கடுப்புடன்.

அவனது பேச்சு அவளுக்குக் கடுப்பை கிளப்ப, “உங்களைப் ஃபாலோ பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்ல” என எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னாள்.

“என்னை நேருக்கு நேராப் பார்க்கவே உனக்குத் தயக்கம். இதுல வாய்மட்டும் நீளுது” என்றான் எரிச்சலுடன்.

“உங்க முகத்தைப் பார்த்து பேசவே வேணாம்னு தானே இருக்கேன். அப்புறம் எதுக்குப் பார்க்கணும்?” என்றவளது கரத்தைப் பற்றி தன்னருகில் இழுத்தான்.

அவனது செயலை ஸ்தம்பித்துப் போனவளாக, “விஜய்! கையை விடுங்க வலிக்குது” என்றாள்.

“கைதானே வலிக்குது. நீ பேசறது, எனக்கு மனசு வலிக்குது. அதுக்கு என்ன சொல்ற?” எனச் சினந்தான்.

“யாராவது பார்க்கப் போறாங்க. விடுங்க” என்றவள் மறந்தும் அவனது முகத்தைப் பார்க்கவில்லை.

கையை விடுவித்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தாள்.
அவளது முகம் வெளிப்படுத்திய வேதனையால் கைகளை விடுவித்தவன், அவளது தோள்களைப் பற்றினான்.

“உன்னால என் கண்ணைப் பார்த்துப் பேசமுடியலன்னா, பிரச்சனை என்கிட்ட இல்ல; உன்கிட்ட. யோசி. காரணம் என்னன்னு புரியும்?” என்றவன், அவளை விடுவித்தான்.

திகைப்புடன் அவனது முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவள், அவனது விலகலில் சுயநினைவிற்கு வந்தாள்.

முகம் இறுக, “இல்ல… எனக்கு எதைப் பத்தியும் யோசிக்கவேண்டிய அவசியமில்ல. இதுக்குத்தான் நாம ரெண்டு பேரும் மீட் பண்ண வேணான்னு சொன்னேன்” என்றாள்.

அந்த நிலையிலும் புன்னகைத்தவன், “மீட் பண்ணலன்னா, சரியாகிடுமா. முதல்ல நீ நடக்கற விஷயங்களை நேருக்கு நேரா ஃபேஸ் பண்ற தைரியத்தை வளர்த்துக்க. அப்பத்தான் பிரச்சனைகளை நினைச்சிக் கவலைப்படாம இருக்கலாம்” என்றான்.

“உங்க அட்வைஸுக்குத் தேங்க்ஸ்! இன்னைக்குத்தான் கடைசி. இனி, நாம மீட் பண்ணப் போறதில்ல. குட் பை!” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

“உனக்கு இந்தக் குட்பைலதான் சந்தோஷம்னா, கு..ட்..பை..!” என்றான் அழுத்தமாக.

கலங்கிய விழிகளுடன் அவனைத் திரும்பிப் பார்த்தவள், முடிந்த அளவு அவனிடமிருந்து விலகிச் சென்றுவிட வேண்டுமென்ற எண்ணத்தில் விறுவிறுவென நடந்தாள்.

அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டே போனை எடுத்தவன், “ரிஷப்! அந்தக் கேண்டிடேட் சுமித்ரா கங்காதரனுக்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர் அனுப்பிடுங்க” என்றான்.

“சார்… அவங்களுக்கா… அவங்களைவிட எக்ஸ்பீரியன்ஸ்ட் கேண்டிடேட்ஸ் ரெண்டு பேர் இருக்காங்க சார்!” என்றான்.

“ஐ நோ. இங்கே எக்ஸ்பீரியன்ஸைவிட, ஐடியாஸுக்குத்தான் முதலிடம். அப்படிப் பார்த்தா சுமித்ரா கங்காதரன் தான் சரியான சாய்ஸ். நான் சொன்னதைச் செய்ங்க” என்றவன் போனை அணைத்தான்.

தம்பியின் எண்ணுக்கு அழைத்தான்.

“இந்தர் எங்கேயிருக்க?”

“ஆஃபிஸ்லண்ணா!”

“ஓகே… ஈவ்னிங், நம்ம லேடி ஸ்டாஃப் தங்கறதுக்கு நல்ல ஒரு லேடீஸ் ஹாஸ்டலாகப் பாரு. எந்தக் குறையும் இருக்கக்கூடாது. சேஃப்ட்டி முக்கியம்” என்றான்.

“லேடி ஸ்டாஃபா! யாரது எனக்குத் தெரியாம?”

“சுமித்ரா கங்காதரன்” என்றான்.

“சு..சுமித்ரா… அதுவும் நம்ம ஆஃபிஸ்லயா! இதென்ன புதுக்கதை! நீங்க டிசைனர் வேணும்னு ஆட் கொடுத்தது இவங்களுக்கா!” எனக் கேட்டான்.

“ஆமாம். நான் எல்லாத்தையும் நேர்ல வந்து சொல்றேன். அவள் வர்ற சண்டே ஜெய்பூர் வந்திடுவா. ஆதியை அனுப்பி, அவளை ரிசீவ் பண்ணிக்க. அவசரப்பட்டு நீ போய்டாதே. அவள் ஆஃபிஸ்ல ஜாயின் பண்றவரைக்கும், உன் முகத்தை அவகிட்ட காட்டிடாதே. புரிஞ்சிதா” என்றான் கட்டளையாக.

“எஸ் பாஸ்! இதுக்கூடப் புரியாம, நான் என்ன உங்க தம்பி!” என்று சிரித்தான்.

“சரி பத்திரமா இரு. நான் சாட்டர்டே நைட் ஊருக்கு வரேன். அம்மாவுக்குப் போன் செய்து பேசினியா?”

“ம் பேசிட்டேன். அவங்க இப்போதைக்கு உதய்பூர்லயிருந்து கிளம்பறதா தெரியல” என்றான்.

“சரி, டேக்கேர்! பை” எனப் போனை அணைத்தான்.

“மித்ரா! சீக்கிரமே ஜெய்பூர்ல சந்திப்போம். குட் பை!” என்று முனகியவன், மெல்லப் புன்னகைத்துக் கொண்டான்.

பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு, அங்கே வந்த சங்கீதா, “அண்ணா எங்கே சுமி?” எனத் தோழியைக் கேட்டாள்.

“அ..து ஏதோ போன் வந்ததுன்னு அவசரமா கிளம்பிப் போய்ட்டார். உங்ககிட்ட சொல்லச் சொன்னார்” என்றவளை நம்பாத பாவனையுடன் பார்த்தாள் சங்கீதா.
ஏற்கெனவே, மித்ரன் அப்படியொரு காரணத்தைச் சொல்லிவிட்டு அடுத்தமுறை நிச்சயமாக சேர்ந்து சாப்பிடுவோம் எனச் சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தான். அப்போதே சிறு சந்தேகத்துடன் அங்கே வந்தவளுக்கு, தோழியின் முகம் அதை ஊர்ஜிதப்படுத்துவதைப் போல தெரிய, ஆயாசத்துடன் கணவனைப் பார்த்தாள்.
 
  • Like
Reactions: saru