தீயினில் வளர் ஜோதியே

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 30

“சித்தப்பா! இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? உடம்பைக் கெடுத்துக்கறது தான் மிச்சம். நான் எத்தனையோ முறை நாம போய்ப் பேசலாம்னு சொன்னேன். கொஞ்சநாள் ஆகட்டும், விட்டுப் பிடிக்கலாம்னு சொன்னீங்களே தவிர, நான் சொன்னதைக் காதுலயே வாங்கல.
அந்தப் பண்டிட்கிட்ட நான் பேசறேன்... சுமித்ராவை கன்வின்ஸ் பண்றேன்னு சொல்லியும், நீங்கதான் வேணாம்னு ஒரேடியா தடுத்துட்டீங்க. இப்போ, பிரச்சனை இவ்வளவு பெரிசா போய்டுச்சி. அந்தப் பண்டிட் இறந்ததும் இல்லாம, சுமித்ராவையும் காணோம்” வருத்தமும், எரிச்சலுமாகப் பேசினார் சிவராமன்.

இராமநாதன், வருத்தம் தோய்ந்த முகத்துடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.

மாமனாருக்கு இரவு உணவுடன் அறைக்கு வந்த வித்யாவதி, கணவரின் பேச்சைக் கேட்டு ஆயாசத்துடன் தலையை அசைத்தார்.

”ஏங்க! இதெல்லாம் பேசற நேரமா இது!” எனத் தாங்கலுடன் கேட்டவர், மாமனாரிடம் வந்தார்.

“மாமா! நீங்க ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க. முதல்ல சாப்பிடுங்க. சுமித்ரா எங்கேயிருக்கான்னு கண்டுபிடிப்போம். ஒரு டிடெக்டிவ்கிட்டச் சொல்லுவோம். அவளோட போட்டோவும் நம்மகிட்ட இருக்கே” என்றார் ஆறுதலாக.

“இதுதான் தும்பை விட்டுட்டு, வாலைப் பிடிக்கிறது. நான் சுமித்ராகிட்டப் பேசி, அவளுக்குப் புரிய வைக்கிறேன்னு எத்தனைமுறை சொன்னேன். அப்போல்லாம் விட்டுப் பிடிக்கலாம் பேத்தியோட மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு வார்த்தைக்கு வார்த்தைச் சொல்லிட்டு இப்போ, இல்லாதவளை எங்கே போய் தேடுறது?” என்றார் காட்டமாக.
“ஐயோ! நீங்க கொஞ்சம் அமைதியா இருங்களேன்” எனக் கணவரைச் சமாதானப்படுத்த முயன்றார் வித்யாவதி.

“என்னவோ பண்ணுங்க…” என்ற சிவராமன் கோபத்துடன் அறையிலிருந்து வெளியேறினார்.

மாமனாரின் காலருகில் அமர்ந்த வித்யாவதி, “மாமா! அவர் ஏதோ ஆதங்கத்துல பேசறதைப் பெரிசா எடுத்துக்காதீங்க. நீங்க டிஃபனைச் சாப்டுட்டு மாத்திரையைச் சாப்பிடுங்க. சுமித்ராவை எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்” என்று குழந்தைக்குச் சொல்வதைப் போலச் சொன்னார்.

“தப்பெல்லாம் என்மேலதான் வித்யாம்மா! நான் ஆரம்பத்திலேயே நேராக போய்ப் பேசியிருக்கணும். என் பேத்தி எங்கே இருக்காளோ… என்ன கஷ்டப்படுறாளோ தெரியலையே…” என்றவரைப் பரிதாபமாகப் பார்த்தார் வித்யா.

“பெத்த மகளை மொத்தமா தூக்கிக் கொடுத்துட்டேன் வித்யாம்மா! அந்தப் பயம், அந்தப் பயம்தான் என்னை ரொம்பவே நிதானமா நடந்துக்கவச்சது. என் மகள்தான் எங்களுக்கு இல்லன்னு போயிட்டா… என்னோட கடைசிக் காலத்துல, பேத்திங்கற ஒரு உறவாவது எனக்கு இருக்கும்னு நினைச்சேன். இப்போ, அவளையும் தொலைச்சிட்டு நிக்கிறேன். ஒண்டிக்கட்டையா இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படி ஏங்கி ஏங்கியே சாகப்போறேனோ!” விரக்தியில் புலம்பியவரைத் தேற்றுவதற்குள், வித்யாவதிக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

அவரைச் சாப்பிடவைத்து மாத்திரையைக் கொடுத்துவிட்டு, கணவரை நாடிச் சென்றார்.
இறுக்கமான முகத்துடன் பால்கனியில் அமர்ந்திருந்த சிவராமனின் பார்வை, தூரத்தில் தெரிந்த மலைமுகட்டை வெறித்துக்கொண்டிருந்தன. கணவனின் எதிரில் வந்து அமர்ந்த வித்யாவதி, அவரது முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

“இப்போ, என்ன கோபம் உங்களுக்கு?”

“உனக்குத் தெரியாதா… என்னவோ குழந்தை மாதிரி கேள்வி கேட்கற” என்று எரிந்து விழுந்தார் சிவராமன்.

ஆயாசத்துடன் பெருமூச்சு விட்ட வித்யாவதி, “சரி, மாமா விட்டுப் பிடிக்கிறேன்னு சொல்லி, மொத்தமா விட்டுட்டார்” என்ற மனைவியைத் திரும்பி முறைத்தார்.

“எங்க சித்தப்பாவைப் பார்த்தா உனக்குக் கிண்டலாயிருக்கா?” என்றார் கடுப்புடன்.

“இந்தக் கேள்வியை நான் கேட்கணும். மாத்தி மாத்தி அப்பாவும், பிள்ளையும் பேசிகிட்டீங்க. இப்போ உங்ககிட்ட மாட்டிக்கிட்டது நானா!”

நெற்றியைத் தடவிக்கொண்ட சிவராமன், “என்ன செய்றது வித்யா! அன்னைக்கு என் தங்கையைத் தொலைச்சோம். இன்னைக்கு அவளோட மகளை… நான் எவ்வளவு தூரம் சொன்னேன். சுமித்ராவை நேர்ல பார்த்துப் பேசலாம். ஆயிரம்தான் இருந்தாலும், தாத்தாங்கற பாசம் போயிடுமான்னு கேட்டேனே.

அப்போல்லாம் என் பேத்தியே விருப்பப்பட்டு வரட்டும். என் மகளைத் தான் இல்லாம பண்ணிட்டேன். அவளோட இரத்தமாவது என்னை முழுமனசோட வந்து சேரட்டும்னு டயலாக் பேசினார். இப்போ என்ன ஆச்சு?” என்ற கணவரை வாஞ்சையுடன் பார்த்தார் வித்யாவதி.

காஞ்சனாவின் மீது எந்த அளவிற்குப் பாசம் வைத்திருந்தார் என்பதைப் பார்த்தவறாயிற்றே… அதிலும், அவளது காதலனுடன் வீட்டை விட்டுச் சென்றபின், எத்தனை இரவுகள் உறங்காமல் கழித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் தங்கைக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்று அறிந்ததும் எத்தனைத் தூரம் மகிழ்ந்து போனார். இப்போது ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டதைப் போல, சூன்யமாகி விட்ட நிலையை நினைத்து வருத்தப்பட மட்டுமே அவரால் முடிந்தது.
தங்களது வக்கீலுக்கு சுமித்ராவைப் பற்றித் தகவல் சொல்லிக்கொண்டிருந்த அவரது நண்பர் வேர்ல்ட் டூர் சென்றிருக்கிறார் என்று அறிந்திருந்ததால் தானே, இந்த ஒரு மாதமாக அவளைப் பற்றி எதுவும் தெரியாமல் போயிற்று. ஆரம்பத்திலேயே இவர் சொன்னதைப் போலப் பேசியிருந்தால், இன்று இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்’ என்று எண்ணியவருக்கு வேதனையாக இருந்தது.

“நானும் உங்களோட அஹமதாபாத் வந்திருக்கணும். நான் ஏதாவது கேட்டிருந்தா, அந்தம்மா ஏதாவது மனம்விட்டுப் பேசியிருப்பாங்க” என்றார் வித்யாவதி.

“நீ வேற… அந்தம்மா தான் ரொம்பப் பேசினாங்க. உங்க வீட்டுப் பொண்ணால எங்க மானம், மரியாதை எல்லாமே போச்சு. என் பிள்ளை அவளோட நினைப்பாவே ரூம்ல அடைஞ்சி கிடக்கறான். இதுக்கெல்லாம் அவள் பதில் சொல்லியே ஆகணும். எங்க கண்ணுல படாத வரைக்கும் தான் அவளுக்கு நிம்மதி. எங்க சந்தோஷத்தையெல்லாம் மொத்தமா துடைச்சி எடுத்துட்டுப் போய்ட்டான்னு, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினாங்க. நானா இருக்கவும், அமைதியா கேட்டுகிட்டேன். நீ அங்கே இருந்திருந்தா, பிரச்சனை வேறமாதிரி போயிருக்கும்” என்றார்.

“இதென்ன அநியாயமா இருக்கு. அவங்க வீட்டுக்கு வந்த பொண்ணு காணோம்னா, அதுக்குக் காரணம் இவங்க தானே” என்ற மனைவியைப் புரியாமல் பார்த்தார்.

“நீங்க அந்தப் பையனைப் பார்த்தீங்களா?”

“இல்லை. அவங்க வீட்டு ஹால்ல பெரிசா ஃபேமலி போட்டோ இருந்தது. அதைப் பார்த்தேன். பையன் நல்லா ஜம்முன்னுதான் இருக்கான்” என்றார்.

“ஓஹ்!” என்றவர், “எனக்கென்னவோ, அவங்க எதையோ மறைக்கறாங்கன்னு தோணுது. கல்யாணம் நிச்சயமான பொண்ணு, அந்த வீட்லயிருந்து காணாம போயிருக்கான்னா அப்போ பிரச்சனை அந்த வீட்லதான் ஆரம்பிச்சிருக்கு” என்றார் தீர்க்கமாக.

“நீ எதையாவது உளறாதே” என்றார் சலிப்புடன்.

“இது உளறல் இல்ல… கெஸ். கெஸ்ன்னு மட்டும் சொல்லமுடியாது. அந்தம்மா பேசினதுன்னு நீங்க சொன்னதைக் கேட்டா, என் மனசுல அப்படித்தான் படுது. இது தப்பாக்கூட இருக்கலாம். ஒருவேளை உண்மையாயிருந்தா…” என்ற மனைவியை ஆழ்ந்த பார்வைப் பார்த்தார்.

‘தங்களது முப்பத்தோரு ஆண்டுகால திருமண வாழ்க்கையில் வித்யாவதியின் கணிப்பும், செயல்களும் பெரும்பாலும் சரியாகவே இருக்கும். நிச்சயம் இதிலும் அப்படி உண்மை இருக்குமோ!’ என்ற யோசனையில் ஆழ்ந்தார் அவர்.

“நாம இவ்வளவு நாளா மித்ரன்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லாமல் இருக்கறதே என் மனசுக்குச் சரின்னு படல. மாமாவோட வார்த்தைக்காகத் தான் பொறுமையா இருக்கேன்” என்ற வித்யா, “ஏங்க போலீஸ்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கலாமா?” எனக் கேட்டார்.

“ஏய்! சும்மா இரு. சித்தப்பா காதில் விழப்போகுது. நீ சொன்னதும்மாதிரி டிடெக்டிவ் யாரையாவது வச்சு விசாரிப்போம். இவ்ளோ நாள் பொறுத்தாச்சு இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இரு. அப்புறம், மித்ரன்கிட்ட சொல்வோம்” என்றார்.

“சரி செய்யணும்னு நினைச்சதை முதல்ல செய்து முடிங்க. மாமாவோட உடம்பு சரியாகற வரைக்கும் நாம இங்கேதான் இருந்தாகணும். வீட்டுக்குப் போனா பசங்களோட கேள்விக்குப் பதில் சொல்லி மாளாது” என்றார்.

“என்னது… நீ தனியா பார்த்துக்கமாட்டியா? அங்கே கம்பெனியைத் தனியா உன் சின்னப் பிள்ளைக்கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன். நான் கிளம்பணும்” என்றார்.

“அவன் என்னோட சின்னப் பிள்ளைத்தான். ஆனா, சின்ன… பிள்ளை இல்ல. உங்களைவிட அவன் பொறுப்பாவே கம்பெனியைப் பார்த்துப்பான். மாமாவை என்னால தனியாக சமாளிக்கவே முடியாது. அவருக்கும் டைவர்ஷன் வேணும். அதனால தான் பவித்ராவையும் கூட்டிட்டு வந்திருக்கேன். நீங்க ஆகவேண்டிய வேலையை இங்கேயிருந்தே பாருங்க. அதான் நல்லது” என்றார் முடிவாக.

“நீ முடிவே பண்ணிட்ட. இதுக்கு மேல நான் சொல்றது எங்கே எடுபடப் போகுது” என்றார்.

“ம், அப்படியே நான் சொல்றதைத் தட்டாம கேட்கறவர் மாதிரி பேசறீங்க” என்று கேலியாகச் சிரித்தார் வித்யா.

“ஏன் பேசமாட்டா… நீ சொல்றபடி ஆடுறேன் இல்ல. இதுவும் பேசுவ; இன்னமும் பேசுவ” என்றார்

கணவர் பேசுவதையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த வித்யாவதி, பவித்ரா அழைக்கும் சப்தம் கேட்டு கீழே எட்டிப் பார்த்தார்.

“அம்மா! அண்ணாகிட்டயிருந்து போன் வந்தது. பத்து நிமிஷத்துல லேண்ட் லைனுக்குப் பேசறாங்களாம்” எனத் தகவல் சொன்னாள்.

“சரி, நான் எடுத்துக்கறேன். நேரமாகுது நீ போய்த் தூங்கு” என மகளுக்குப் பணித்தார்.

போன் ஒலிக்கவும் எடுத்தார் வித்யாவதி.

“சொல்லு கண்ணா! எப்படியிருக்க?” பாசத்துடன் மகனை விசாரித்தார்.

“நல்லாயிருக்கேன்ம்மா! நீங்க என்ன கிட்டதட்ட இருபது நாளா அங்கே தங்கிட்டீங்க? தாத்தா நல்லாதானே இருக்காங்க?”

“எதுவும் இல்லைன்னு உன்கிட்ட மறைக்க விரும்பல மித்ரன். தாத்தாவுக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியல” என்றார்.

“என்னம்மா! இப்போ தானே கொஞ்சம் உடம்பு தேறி வீட்டுக்குப் போனார். நான் அப்பவே சொன்னேன் இனிமே நீங்க இங்கேயே இருங்க. உதய்பூர் வீட்டை ஆள் வச்சி மெயிண்டெயின் பண்ணிக்கலாம். வேணுங்கற போது போய் ரெண்டு மூணு நாள் தங்கிட்டு வரலாம்னு. ஏன் சொன்னா கேட்க மாட்டேன்றாரு. நீங்க அவரைக் கூட்டிட்டு உடனே கிளம்பி வாங்க” என்றான்.

“இல்லப்பா! தாத்தாவுக்கு மனசு சரியில்லை. அதான் உடம்பைப் பாடா படுத்துது. இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்” என்றார் வித்யா.

சற்றுநேரம் மௌனம் காத்தவன், “நான் கிளம்பி வரட்டுமா? இல்ல அதுக்கும் ஏதாவது தடா போடுவீங்களா?” எனக் கேட்டான்.

“மித்ரன்! பெரிசா எதுவும் இல்ல. உன்னைப் பார்க்க வராதேன்னு நான் சொல்லல. ஆனா, எதையும் தாத்தாகிட்ட துறுவித் துறுவி கேட்காம இருக்கறதுன்னா வா” என்றார்.

“மறைமுகமா வராதேன்னு சொல்றீங்க” என்றான் கோபத்துடன்.

வித்யாவதி அமைதியாக இருக்க, “சரிம்மா! நான் இப்போதைக்கு வரல. உங்க வார்த்தையை நம்பறேன். சப்போஸ் ஏதாவது அவசரம்னா என்னைக் கூப்பிடுங்க” என்றான்.

“மித்ரன்! உன்னோட கோபம் புரியுது. ஆனா, இதுவும் தாத்தவுக்காக. புரிஞ்சிக்க” என்றார்.
“அதனால தான் நான் அங்கே வரல” என்றான் அழுத்தமாக.

“சரிப்பா! நீ சாப்டியா?”

“ம், சாப்பிட்டேன். நீங்க?”

“ஆச்சுப்பா!” என்றார்.

“சரிம்மா! அப்பாகிட்ட போனைக் கொடுங்க” என்றான்.

தந்தையிடன் பொதுவாகப் பேசியவன், “நம்ம ஆஃபிஸுக்குப் புதுசா ஒரு டிசைனரை அப்பாயின் பண்ணியிருக்கேன்ப்பா!” என்றான்.

அதற்குள் அவரது மொபைலுக்கு அழைப்பு வர, “சரி கண்ணா! நான் அப்புறம் பேசறேன்” என்றவர் போனை அணைத்தார்.

சுமித்ராவைப் பற்றித் தந்தையிடம் சொல்ல வேண்டும் என நினைத்தவனது எண்ணம் நிறைவேறாமலேயே போனைத் துண்டித்தான் மித்ரன்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 31

”சுமி! டோர் லாக் பண்ணிக்க. நாங்க ஒன் ஹவர்ல வந்திடுறோம்” செருப்பை மாட்டிக்கொண்டே சொன்னாள் சங்கீதா.

”சரிப்பா!”

“உனக்கு, வேற ஏதாவது வாங்கணுமா?”
“இல்லப்பா தேவையானதை வாங்கியாச்சு. மத்த ஐடம்ஸ்ஸை ஜெய்பூர்லயே வாங்கிக்கிறேன். எல்லாத்தையும் இங்கேயிருந்தே தூக்கிட்டுப் போக வேணாம்ல” என்றாள் சுமித்ரா.

“சமர்த்து சுமித்ரா!” எனச் சிரித்தவள், காரிலிருந்த அவளது கணவன் ஹாரன் அடிக்கவும், “வரேன்ப்பா!” எனக் குரல் கொடுத்தவள், “ஓகே, பை” என்றபடி வேகமாகச் சென்று காரில் ஏறினாள்.

புன்னகையுடன் கதவை மூடிவிட்டு உள்ளே வந்த சுமித்ரா, கட்டில் மீது எடுத்து வைத்திருந்த பொருட்களை ட்ராவல் பேகில் அடுக்கினாள். எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒரு பக்கமாக அடுக்கி வைத்தாள்.

நீத்துவிற்குப் போன் செய்து பேசவேண்டும் என நினைத்துக்கொண்டே போனை எடுத்தவளை, வாசலில் அழைப்புமணி அழைத்தது.

‘என்ன, அவசரத்தில் எதையாவது விட்டுட்டுப் போய்ட்டாளா? இவளுக்கு இதே வேலை’ என மனத்திற்குள் சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தவள் வாசலில் நின்றிருந்த விஜய்மித்ரனைக் கண்டதும் துணுக்குற்றாள்.

‘இதற்காகத்தான் இந்தச் சங்கீதா அவசரம் அவசரமாக ஏதோ வாங்கவேண்டுமென கிளம்பிவிட்டாளா?’ என எரிச்சலுடன் நினைத்துக் கொண்டாள்.

“ஹலோ மேடம்! இன்னும் எவ்வளவு நேரம் நான் வாசலிலேயே நிற்கட்டும்?” எனக் கேட்டான்.

கதவைத் திறந்தவள், “வாங்க!” என்றாள்.

உள்ளே வந்தவன், “சங்கீதா இல்லையா?” எனக் கேட்டான்.

வெடுக்கென, “அவங்க இல்லன்னு தெரிஞ்சிதானே வந்தீங்க” என்றாள்.

திரும்பி அவளைப் பார்த்தவன், “கற்பனை சக்தி கொஞ்சம் அதிகமாவே இருக்கு. பேசாம கதை எழுது” என்றான் கிண்டலாக.

அவள் அவனை முறைத்துப் பார்க்க, கையிலிருந்த கவரை சென்டர் டேபிள் மீது வைத்துவிட்டு சோஃபாவில் அமர்ந்தான்.

டைனிங் டேபிள் மீதிருந்த தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து அவனெதிரில் வைத்துவிட்டு தனது அறையை நோக்கிச் சென்றாள்.

“மித்ரா!” என்றழைத்தான்.

கதவைத் திறந்தபடி அவள் நிற்க, “நான் உன்கிட்ட பேசத்தான் வந்திருக்கேன்” என்றான்.

“நான்தான்…” என ஆரம்பித்தவள், வேக நடையுடன் தன்னை நோக்கி வந்தவனைக் கண்டு, பட்டென வாயை மூடிக்கொண்டாள்.

“அந்த டயலாகைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு. நீயும் ஒவ்வொரு முறை நாம பார்க்கறப்போலாம் அதையே தான் சொல்ற. ஆனா, நாம திரும்பத் திரும்ப மீட் பண்ணி, பேசிட்டுத்தான் இருக்கோம். இந்த முறையாவது அதைச் சொல்லாம இரு. சான்ஸ் எப்படியிருக்குன்னு பார்க்கலாம்” என்று நிதானமாகச் சொன்னான்.

அவள் பார்வையை வேறெங்கோ வைத்திருந்தாள்.

“ஏன் மித்ரா! உனக்கு வேலை கிடைச்சிருக்கு. ஜெய்பூர் போகப் போறேன்னு என்கிட்ட ஒரு வார்த்தைச் சொல்லணும்னு தோணவே இல்லையா உனக்கு. அந்த அளவுக்கு உனக்கு வேண்டாதவனா ஆகிட்டேனா?” வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டவனைக் கவலையுடன் பார்த்தாள்.

“என்னை மொத்தமா அவாய்ட் பண்ணணும்னு நினைச்சிட்ட. நானும் வரக்கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா, மனசு கேட்கல. என்னை விட்டுத் தூரமா போகணும்னு முடிவு பண்ணிட்ட. அதைத் தடுக்க எனக்கு எந்த உரிமையும் இல்ல…” என்றவன் அவளைப் பார்க்க, அவளும் பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

“அப்படின்னு… என் மனசுல இந்த நிமிஷம் வரைக்கும் தோணல. நீ சொன்னதைத்தான் சொல்றேன்” என்றான் அப்பாவியாக. “சரி, உன்னைப் பார்க்கணும் போலயிருந்தது. வந்தேன்; பார்த்துட்டேன்; கிளம்பறேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.

‘என்ன இது? உண்மையாகவே போகிறானா!’ என எண்ணியவள், “விஜய்!” என்றழைத்தபடி அவனருகில் சென்றாள்.

திரும்பி அவளைப் பார்த்தான்.

“கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க. சங்கீதாவும், அண்ணாவும் வந்திடுவாங்க. நீங்க பார்த்துட்டுக் கிளம்புங்க” என்றாள்.

“நான் உன்னைத்தான் பார்க்க வந்தேன். சங்கீதாவை இல்ல” என்றான் அழுத்தமாக.

“தெரியுது. இருந்தாலும், அன்னைக்கு நீங்க லஞ்ச் என்னாலதானே சாப்பிடாம போனீங்க” என்றாள்.

“அதெல்லாம் இல்ல. எனக்கு முக்கியமான வேலை இருந்தது” என்றான்.

“சரி, உட்காருங்க. நான் காஃபி கொண்டுவரேன்” என்றாள்.

அதற்கு மேலும் அவளிடம் வம்பைத் தொடராமல் சோஃபாவில் அமர்ந்தான்.

இருவருக்குமாக காஃபியுடன் வந்தாள்.

“நாளைக்கு எந்த ட்ரெயின்?” எனக் கேட்டான்.

கப்பை அவனிடத்தில் கொடுத்தபடி, “ காலைல ஆறுமணிக்கு” என்றாள்.

“அஜ்மீர் ஷதாப்தியா!” எனக் கேட்டான்.

“ஆமாம்” என்றாள் வியப்புடன்.

அவன் சிரித்துக்கொண்டான்.

“ஜெய்பூர் போய்ட்டா, என்னோட தொல்லை இருக்காது. நிம்மதியா இருப்ப” என்றான்.

விழிகளை உயர்த்தியவள், “நான் உங்களைத் தொல்லையா என்னைக்குமே நினைச்சதில்ல” என்றாள்.

“சரி நம்பறேன். இல்லன்னா, கிளம்பற நேரத்துக்கு உனக்கு மூட் அவுட் ஆகிடும்” என்றான் கிண்டலாக.

அவள் மௌனமாகக் காஃபியைப் பருகினாள்.

“வேலையில் சேர்ந்தது என்ன பிளான்?” எனக் கேட்டான்.

“இப்போதைக்கு வேலையில் சேருவது மட்டும்தான் ப்ளான்” என்றாள்.

“பொட்டிக் ஆரம்பிக்கணும். அதைப் பெரிய ஷோரூம் ஆக்கணும். உன்னோட டிசைன்ஸ் யூனிக்காக இருக்கணும்ங்கற உன்னோட கனவெல்லாம் அவ்வளவு தானா? வேலை செய்தே காலத்தைக் கழிச்சிடுவியா?” எனக் கேட்டான்.

“ஆசை மட்டும் இருந்தா போதுமா? கனவு காணவும், ஒரு தகுதி வேணும். நான் இனிதான், அந்தத் தகுதியை வளர்த்துக்கணும்” என்றாள்.

சீறலாக மூச்சுவிட்டவன், “வலிய வர்ற உதவியை வேணாம்னு சொல்றது முட்டாள்தனம்” என்றான்.

கப்புகளை ட்ரேயில் அடுக்கியபடி, “உங்ககிட்ட உதவி வாங்கிகிட்டா, அதுதான் நான் செய்ற பெரிய முட்டாள்தனம்” என்றவள் கிச்சனுக்குச் சென்றாள்.

“அப்போ, இன்னும் என்னை அன்னியமாகத் தான் நினைக்கற…” என்றபடி அவளுக்குப் பின்னால் வந்து நின்றான்.

“இதைத்தானே அன்னைலயிருந்து சொல்லிட்டிருக்கேன். நீங்கதான் புரிஞ்சிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கீங்க” என்றவளது இதயம் படபடவென அடித்துக்கொண்டது.

“இன்னும் எதுவுமே புரியாதது போலவே இருக்கப்போறியா? நான் சொல்லலைன்னாலும் என் மனசுல, நீ இருக்கறது உனக்குப் புரியுது. ஆனா, அதை ஏத்துக்க உனக்கு மனசு இல்ல” என்றான்.

தகித்த மனத்துடன், “நீங்..க தேவையில்லாம யோசிக்கிறீங்க” என்றவளது குரலில் புதிதாக நடுக்கம் குடியேறியிருந்தது.

“நீ என் மனசுல இருக்க. அதேபோல, நானும் உன் மனசுல இருக்கேன். அதை ஒத்துக்க உனக்கு ஈகோ தடுக்குது” என்றான் காட்டமாக.

‘அங்கேயிருந்து சென்று விடு’ எனக் கட்டளையிட்ட உள்ளுணர்வை அவள் புரிந்துகொண்டு செயல்படுத்துவதற்குள், விஜய் மித்ரனின் கரங்கள் அவளது தோள்களைப் பற்றியிருந்தன.

தாறுமாறாகத் துடித்த இதயத்தை கட்டுப்படுத்தும் வழியறியாமல் உடல் சிலிர்க்க, கண்களை இறுக மூடினாள்.
அவளைத் தன்புறமாகத் திருப்பியவன் தனது கரங்களில் துவண்டவளை, “மித்ரா!” என மென்மையாக அழைத்தான்.

‘வேண்டாம்’ என்று மூளை உரைத்தாலும், மனம் அந்த நொடியை இதயத்தில் பொக்கிஷமாகச் சேகரிக்க ஆரம்பித்தது. மூடியிருந்த இமைகளுக்குள் விழிகள் அலை பாய்ந்து கொண்டிருந்தன. தோள்களைப் பற்றியிருந்த அவனது கரங்கள் அவளது முகத்தைத் தாங்கின.

“என்னோட மனசு புரிஞ்சும், விலகிப் போகப் போறியா மித்ரா! உன்னால, என்னை மறந்திட முடியுமா?”

மனத்திலிருந்த காதலை அவனது ஆழ்ந்த குரல் பிரதிபலிக்க, சிப்பியென மூடியிருந்த இமைகளைத் தாண்டி கண்ணீரைப் பொழிந்தன அவளது விழிகள். கரங்களில் தாங்கிப் பிடித்திருந்த கைகளை விலக்காமல் அவளது கண்ணீரைத் துடைத்தான்.

“விட்டுடு மித்ரா! எல்லாத்தையும் என்கிட்ட விட்டுடு. எந்தப் பிரச்சனையும் உன்னை நெருங்காம நான் பார்த்துக்கறேன்” என்றான்.

கீழுதட்டைக் கடித்தபடி அழுகையைக் கட்டுப்படுத்தியவள், அவனது கரத்தை விலக்கினாள்.

“வேணாம். என்னோட பிரச்சனை என்னோட போகட்டும் விஜய்! நான் யார் மேலெல்லாம் பாசம் வைக்கிறேனோ, அத்தனைப் பேரும் என்னைப் பரிதவிக்க விட்டுட்டுப் போயிடுறாங்க. நீங்களாவது எனக்கு வேணும் விஜய்! உங்களைத் தூரமாயிருந்தே பார்த்துச் சந்தோஷப்பட்டுக்கறேன்” என்றவளது குரல் தழுதழுத்தது.

“பைத்தியம் மாதிரி பேசாதடி! நான்தான் சொல்றேன் இல்ல” என்று அவளது தோள்களை வளைத்தான்.

இலாவகமாக அவனது கரங்களிலிருந்து விலகியவள், “இங்கே பாருங்க விஜய்! நான் சொன்னா சொன்னது தான். நீங்க விரும்பினாலும், இல்லன்னாலும் இதுதான் நம்ம கடைசி சந்திப்பு” என்று மூச்சு வாங்க கத்தினாள்.

பின்னந்தலையைக் கோதியபடி அவளைப் பார்த்தவன், “இதான் உன் முடிவா!” என நிதானமாகவே கேட்டான்.

அவளும் தயங்காமல், “ஆமாம்” என்றாள்.

“அப்போ நான் சொல்றதையும் கேட்டுக்க… எப்போ உன் மனசுல நான் இருக்கேன்னு சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிஞ்சிடுச்சோ… இனி, என்னைக் கண்ட்ரோல் பண்ணவோ, அவாய்ட் பண்ணவோ நினைக்காதே. அது, உன்னால நிச்சயமா முடியாது” என்றான் பிடிவாதமாக.

கோபத்துடன் கண்களைத் துடைத்துக்கொண்டவள், “இதுக்குமேல உங்ககிட்ட பேச நான் தயாரா இல்ல” என்றபடி சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

அதேநேரம் அழைப்புமணி ஒலிக்க, துப்பட்டாவால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். தன்னைப் பார்த்ததும் நமுட்டுச் சிரிப்புச் சிரித்த தோழியை முறைத்துக்கொண்டே உள்ளே வந்தாள் சுமித்ரா.

சங்கீதா, “ஹலோ அண்ணா!” என்றபடி மித்ரனிடம் பேச அமர்ந்துவிட, அவளது கணவனிடம் கைக்கொடுத்தவன், உற்சாகத்துடன் அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

அவர்களது பேச்சில் கலந்துகொள்ளா விட்டாலும், சுமித்ராவும் அங்கேயே அமர்ந்திருந்தாள்.

சற்றுநேரத்தில் சங்கீதா சமையலறைக்குச் செல்ல, சுமித்ராவும் அவளுடன் சென்றாள். சங்கீதா துறுவித் துறுவிக் கேட்ட கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தை பதிலைக் கூடச் சொல்லாமல் மௌனமாகக் காய்களை அரிந்தாள்.

மளமளவென சமைத்து டைனிங் டேபிளில் அடுக்கினர். சாப்பிட்டு முடிக்கும் வரைக்குமே சுமித்ராவின் முகம் தெளியாமல் யோசனையுடனேயே இருந்தது. சங்கீதா டெஸர்ட்டைப் பரிமாற, மறுத்துவிட்டு சற்று வேலையிருப்பதாகக் கூறி அறைக்குச் சென்றாள்.

மித்ரன் கிளம்பும்நேரம், “ஒரு அஞ்சு நிமிஷம் மித்ராகிட்ட பேசணும்” என்றான்.

“ஷ்யூர்! போய்ப் பேசுங்க மித்ரன்!” என சுமித்ராவின் அறைக்கே அனுப்பி வைத்தான் நளன்.

”இல்ல… கூப்பிடுங்க போதும்” என்றான் மித்ரன்.

“அண்ணா! நோ ஃபார்மாலிட்டீஸ். நாங்க உங்களை நம்பறோம்” எனக் கலகலத்தாள் சங்கீதா.

பின்னந்தலையைத் தடவிச் சிரித்துக்கொண்டவன், சென்டர் டேபிள் மீதிருந்த கவரை எடுத்துக்கொண்டு சென்றான்.

கதவைத் தட்டும் சப்தம் கேட்டதும் தோழிதான் வந்திருக்கிறாள் என எண்ணி, “வா சங்கீ!” என்றாள் சுமி.

உள்ளே வந்தவனைக் கண்டதும், வேகமாகக் கட்டிலிலிருந்து எழுந்தாள். முகம் இறுக வேறெங்கோ வெறித்தபடி நின்றிருந்தாள்.

அவளருகில் வந்தவன், ”கோபமா! கண்டிப்பா வரும். அதையெல்லாம் பார்த்தா நம்ம வேலை எப்படி ஆகறது!” என்றவன், அவளது கரத்தைப் பிடித்துத் தன் பக்கமாகத் திருப்பினான்.

“உனக்காக வாங்கிட்டு வந்தேன். தயவுசெய்து, மறுக்காம வாங்கிக்க” என்றான்.

“உங்களுக்கு ஒருமுறை சொன்னா புரியாதா?” எனப் பற்களைக் கடித்தாள்.

அவனும் பிடிவாதமாக, “மித்ரா! ப்ளீஸ்!” என்றான்.

ஏனோ, முகத்திலடித்தாற் போல அவனிடம் நடந்துகொள்ள முடியவில்லை.

‘என்னை வற்புறுத்துகிறான் தான். அவனது விருப்பத்தை என்மீது திணிக்கவும் செய்கிறான். ஆனால், இவன்மீது எனக்குச் சிறு கோபம்கூட வரவில்லையே. இவனை என்னால் ஒதுக்கித் தள்ள முடியவில்லையே. இந்தக் காதல் இப்படிப் பாடாய்படுத்துகிறதே’ என எண்ணிக்கொண்டே வாங்கிக் கொண்டாள்.

“நீ வாங்கிக்கிட்டது சந்தோஷம். இதைப் பிரிச்சிப் பார்த்தா இன்னும் சந்தோஷம். போட்டுகிட்டா ரொம்பச் சந்தோஷம்” என்றான்.

கண்களை மூடி ஆழமூச்செடுத்தவள், “நீங்க சொன்னதுக்காக வாங்கிக்கிட்டேன். அதுக்கு மேல எதையும் எதிர்பார்க்காதீங்க” என்றவள், “எதையும் எதிர்பார்க்காதீங்கன்னு சொன்னது எல்லாத்துக்குமே தான்” என்றாள்.

“ம்ம்” எனத் தலையை அசைத்தவன், “உன்னால அப்படி எந்த எதிர்பார்ப்புமே இல்லாம இருக்க முடியுமா?” எனக் கேட்டான்.

அவள் மௌனமாக இருக்க, “பதில் சொல்ல முடியல இல்ல. சில கேள்விகளுக்குப் பதிலே இருக்காது. நீ சொன்னதும், அப்படிப்பட்ட ஒரு விஷயத்தைத் தான். ஒரு நாள்ல, ஒரு முறைகூட என்னோட நினைப்பு உனக்கு வராதுன்னு சொல்லு, உன் வாழ்க்கைலயிருந்து மொத்தமா விலகிடுறேன். அதுவரைக்கும் என்னைக் கண்ட்ரோல் பண்ண உனக்கு அதிகாரம் கிடையாது. ஓகே” என அவளது கன்னத்தைத் தட்டிக்கொடுத்தான்.

அவள் திகைத்து விழித்துக்கொண்டு நின்றாள்.

“சரி, நேரமாகுது நான் கிளம்பறேன். குட் நைட்!” என்றான்.

உதட்டைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தவள், “குட் பை!” என்றாள்.

திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்தவன், “ஹேப்பி ஜெர்னி!” எனச் சொல்லிவிட்டுச் செல்ல, ஆயாசத்துடன் அமர்ந்தாள் சுமித்ரா.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 32

தனது உடமைகளுடன் இரயிலிலிருந்து இறங்கிய சுமித்ரா, தனது பார்வையைச் சுழற்றினாள்.

கையிலிருந்த பொருட்களை கீழே வைத்தவள் இரு கைகளையும் வெப்பம் வர உரசிக்கொண்டு கன்னங்களில் வைத்துக்கொண்டாள்.

முன்பகல் நேரத்திலும், மிதமான குளில் உடலைச் சிலிர்க்க வைத்தது. அதுவரை பேகிற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஸ்வெட்டரை எடுத்து அணிந்துகொண்டாள். தோளிலிருந்த துப்பட்டாவை தலையைச் சுற்றியபடி தோளில் போட்டுக்கொண்டாள்.

மீண்டும் பார்வையைச் சுழலவிட்டவள், கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு டிராவல் கேஸை இழுத்தவள், “எக்ஸ்க்யூஸ்மீ மேடம்!” என்றகுரலில் நிமிர்ந்து பார்த்தாள்.

எதிரில் நின்றிருந்த புதியவனை நெற்றிச் சுருங்க பார்த்தபடி, “எஸ்!” என்றாள்.

“நீங்கதானே மிஸ். சுமித்ரா கங்காதரன் ஃப்ரம் அஹ்மதாபாத்…” எனக் கேட்டான்.

புருவ மத்தியில் விழுந்த முடிச்சு கலையாமல், “ஆமாம்” என்றாள்.

“ஹலோ மேம்! நான் ஆதித்யா. காஞ்சி கிரியேஷன்ஸ்ல ஹெச். ஆர் டிபார்ட்மெண்ட்ல இருக்கேன். உங்களை ரிசீவ் பண்ண வந்திருக்கேன்” என்றான்.

“ஓஹ்! தேங்க்யூ!” என்று புன்னகைத்தாள்.

உள்ளுக்குள் தன்னை அழைத்துச் செல்ல ஏற்பாடா? என்று ஆச்சரியமாக இருந்தது.

“ஜஸ்ட் எ மினிட் மேம்!” என்றவன் மொபைலில் யாரையோ அழைத்தான்.
“சார்! மேடமை ரிசீவ் பண்ணிட்டேன்” என்றவன், “ஓகே சார், எஸ் சார்…” என மாற்றி மாற்றி ஐந்தாரு முறை சொன்னவன், போனை அணைத்துப் பாக்கெட்டில் வைத்தபடி, “கிளம்பலாம் மேடம்” என அவளிடமிருந்த ட்ராலி கேஸை வாங்கிக்கொண்டான்.

சுமித்ராவிற்கு எல்லாமே வியப்பாக இருந்தது.

‘எந்தச் சாருக்கு இவன் போன் செய்து சொல்கிறான்? தான் என்ன அவ்வளவு முக்க்கியமான ஆளா?’ எனக் குழம்பிப் போனாள்.

அலுவலகத்திலேயே ட்ரெயின் அதுவும் ஏசி கோச்சில் பயணச்சீட்டு எடுத்துக் கொடுத்தது முதல், தங்க இடமும் அவர்களே ஏற்பாடும் செய்ததோடு, தன்னை அழைத்துச் செல்லவும் ஒருவரை அனுப்பியிருப்பதை நினைத்து ஆச்சரியத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.

மனத்திற்குள் குறுகுறுத்த கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டுமென எண்ணியவள், “மிஸ்டர். ஆதித்யா!” என அழைத்தாள்.

“சொல்லுங்க மேடம்!” என்றான்.

“இப்போ யாருக்குப் போன் பண்ணீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” எனக் கேட்டாள்.
“ஹெச் ஆர் மேனேஜருக்கு மேடம்!”” என்றவன், “என்ன மேடம் என்னைப் பார்த்தா டௌட்டா இருக்கா?” எனச் சிரித்துக்கொண்டே கேட்டான்.

’பின்னே, இப்படியெல்லாம் வரவேற்பு கொடுத்தா டௌட் வராதா!’ என மனத்திற்குள் நினைத்துக்கொண்டவள், “சேச்சே!” என்றாள்.

அவளது மழுப்பலான வார்த்தைகளை கேட்டவன் புன்னகை மாறாமல், “உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா இல்லை மேடம்… இங்கே வேலைக்கு வர்ற அத்தனைப் பேருக்கும் யூஷுவலாக நடக்கும் விஷயம் தான் இது. நீங்க வேணா வெளியூரிலிருந்து வேலைக்கு வந்திருக்கும் நம்ம ஆஃபிஸ் ஸ்டாஃப்ஸ் கிட்ட கேட்டுப்பாருங்க” என்றான்.

“ஓஹ்!” என கேட்டுக்கொண்டாள்.

அதற்குள் இருவரும் கார் பார்க்கிங்கிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

அடுத்த இருபது நிமிடத்தில் அவள் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த வுமன்ஸ் வொர்க்கிங் ஹாஸ்டலிற்கு வந்து சேர்ந்தனர்.

அவளை உள்ளே அழைத்துச் சென்றவன், ரிசப்ஷனில் அவளை அமரவைத்துவிட்டு அலுவலக அறைக்குள் சென்றான்.

அடுத்த பத்து நிமிடங்களில் முறைப்படி செய்யவேண்டிய வேலைகள் முடிந்து அவளது அறைக்கான சாவியைக் கொடுத்தனர்.

“ஓகே மேடம்! என்னோட வேலை முடிஞ்சிடுச்சி. நாளைக்குக் காலைல உங்களைப் பிக் அப் பண்ணிக்க நான் வரேன். நாளைக்கு நீங்க எப்படி வரணும்னு சொல்லிட்டேனா… அடுத்த நாள்லயிருந்து நீங்களே வந்திடலாம்” என்றான்.

“ஓகே தேங்க்ஸ் மிஸ்டர் ஆதித்யா!” என்றாள்.

“என்னோட டியூட்டி தானே மேடம்!” என்றான்.

புன்னகைத்தவள் முதல் மாடியிலிருந்த தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றாள்.

அறை விசாலமாக, காற்றோட்டத்துடன் இருந்தது.

கல்லூரி நாள்களில் விடுதியில் தங்கியிருத தோழிகள் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கேட்டு விடுதி வாழ்க்கை என்றாலே சற்று ஒவ்வாமைதான் அவளுக்கு.

கடைசியில் தனக்கும் அந்த நிலைதானே என்று சற்று ஆயாசத்துடன் இருந்தவளுக்கு, அந்த அறை தன் ஒருத்திக்குத் தான் என்றதும் பெருத்த நிம்மதியாக இருந்தது.

திறந்திருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். நான்கு கட்டிடங்கள் தள்ளி காரிலிருந்து இறங்கிய ஆதித்யாவைப் பார்த்தாள். அவளுக்கு ஏதோ வித்தியாசமாகத் தோன்ற, அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சாலையைக் கடந்து எதிர்சாரிக்குச் சென்றவன், அங்கே நின்றிருந்த பச்சை நிற வோல்க்ஸ் வேகன் காரை நோக்கிச் சென்றான்.

இரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் போது அந்தக் கார் அங்கே இருந்ததையும், சற்று தொலைவு வந்த பின்னும் ஒரு திருப்பத்தில் இந்தக் காரைப் பார்த்ததும் நினைவுவர, திடுக்கிடலுடன் பார்த்தாள்.

காரின் கண்ணாடி திறக்கப்படுவதைப் பார்த்ததும் நெஞ்சம் படபடக்க யார் எனப் பார்க்கும் எண்ணத்துடன் கூர்ந்து நோக்கினாள்.

ஆனால், அவனது முகம் தெரியாதவண்ணம், ஆதித்யா நின்று அவனிடம் ஏதோ பேசினான்.

நெஞ்சம் படபடவென அடித்துக்கொள்ள, ‘ஒருவேளை கிஷோர்…’ என நினைத்ததுமே அந்தக் குளிரிலும் உடலில் வெப்பத்தை அவளால் உணரமுடிந்தது.

மறுநொடியே, ‘சேச்சே! அவனாக இருக்க வாய்ப்பே இல்லை. நான் இங்கே இருப்பது தெரிந்தால் நேராக வந்து என்னெதிரில் நின்றிருப்பான்… அப்படியானால் இவன் யார்? ஒருவேளை நான்தான் தேவையில்லாமல் யோசிக்கிறேனோ! இது தற்செயலான நிகழ்வு தானோ! ஆனால், அந்தக் கார்…’ என யோசித்தவளே, ‘ஏன் பச்சை நிறத்தில் இந்த ஒரு கார்தான் இருக்குமா…’ என சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

ஆனாலும், மனம் ஒரு நிலையில் நில்லாமல் இங்கும் அங்குமாகத் தாவிக்கொண்டிருந்தது.

தலையை உலுக்கிக் கொண்டவள், மீண்டும் வெளியே பார்த்தாள்.

ஆனால், அங்கே அவள் எதிர்பார்த்த காரும், ஆதித்யாவும் இல்லை. குழப்பத்துடனேயே அங்கிருந்து நகர்ந்தாள்.

ஏசியில் வந்திருந்த போதும் பயண களைப்பு போக குளித்துவிட்டு வந்தாள்.

சங்கீதாவிற்கும், நீத்துவிற்கும் போன் செய்து பேசினாள்.

இந்த விஷயத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா என நினைத்தவள், வேண்டாம். எதுவும் தெரியாமல் அவர்களையும் குழப்பி பயமுறுத்த வேண்டாம்’ என நினைத்து அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.

போனை அணைத்துவிட்டு எழுந்தவளை அழைப்பு மணி அழைத்தது.

கதவைத் திறந்தவள், ஆவி பறக்கும் இஞ்சி டீயுடன் நின்றிருந்தவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“வார்டன் கொடுக்கச் சொன்னாங்க” என்றவள், “ஒரு மணிக்கு மணியடிப்பாங்க, “டைனிங் ஹாலுக்கு வந்திடுங்க” என சொல்லிவிட்டுச் செல்ல, குளிருக்கு இதமாக தொண்டைக்குள் இறங்கிய தேநீரைப் பருகியபடி ஜன்னலருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள் சுமித்ரா.

சற்றுநேரத்திற்கு முன்பிருந்த குழப்பமும், பயமும் மறைந்து தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தாள். வெகுநாள்களுக்குப் பிறகு, தன்னைப் பழைய சுமித்ராவாக உணர்ந்தாள் அவள்.
கண்களை மூடி அமர்ந்திருந்தவளது இமைகளுக்குள் வந்து நின்றான் விஜய்மித்ரன்.

அவளையும் அறியாமல் இதழ்கள் மலர, கன்னக்கதுப்புகள் செம்மையைப் பூசிக்கொண்டன. மனத்தின் இன்பத்தைக் கெடுப்பதைப் போல, மூளை அவளை இமைகளைத் திறக்க உத்தரவிட்டது.

அதை அசட்டைச் செய்த மனமோ, ‘யார் என்ன சொன்னாலும், மனத்திற்குள் கல்வெட்டாகப் பதிந்து போன அவனது நினைவுகளை உன்னால் துடைத்தெறிய முடியுமா?’ எனப் பதில் கேள்வி கேட்டது.

‘நினைவுகள் உன்னை என்ன செய்துவிடும்!’ என்று மனம் கொடுத்த தைரியத்தை இறுகப் பற்றிக் கொண்டாள். ஓங்கி ஒலித்த மணிச் சத்தத்தில் தூக்கி வாரிப் போட எழுந்தாள். மணி ஒன்றாகியிருந்தது.

‘தலையை உலுக்கிக் கொண்டவள், முகத்தைக் கழுவிக்கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றாள்.
அவள் நினைத்ததை விட, உணவு அருமையாகவே இருந்தது. அருகில் அமர்ந்திருந்த சிலரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அளவாக அவர்களுடன் பேசிச் சிரித்தாள்.

மாலையில் ஹாஸ்டலுக்குப் பின்னாலிருக்கும் பூங்காவிற்கு வரச்சொல்லிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்தவள், மேல்ல சோம்பல் முறித்தாள். திருப்தியான சாப்பாடும், மனத்திலிருந்த இதமும் சேர்ந்ந்து உறக்கத்தைக் கொடுக்க, ரஜாயை மூடிக்கொண்டு படுத்தாள்.

மீண்டும் அவள் கண்விழித்த போது அறைக்குள் லேசான இருள் கவிழ்ந்திருந்தது.

படக்கென எழுந்து அமர்ந்தவள், மணியைப் பார்த்தாள். ஆறு ஆகியிருந்தது. ஜில்லென குளிர்காற்று அறைக்குள் ஊடுருவ, ஜன்னல்களை இழுத்து மூடினாள்.

முகத்தைக் கழுவி, தலையை வாரிக்கொண்டு ஸ்வெட்டரை மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிக்கொண்டு ஹாஸ்டலின் பின்புறமிருந்த பூங்காவிற்குச் சென்றாள்.

மதியம் அறிமுகமான தோழிகளிடம், “சாரி! கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்” என்றவளை புன்னகையுடன் தங்களது கூட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.

புதிதாக சிலரை அறிமுகப்படுத்தினர். தங்களது வேலைகளைப் பற்றிச் சொன்னவர்கள் தங்களது மொபைல் எண்ணையும் பரிமாறிக்கொண்டனர்.

ஏழு மணிவரை அரட்டையடித்துக்கொண்டிருந்தவர்கள், “இதற்கு மேல் இங்கே அமர முடியாது குளிர் படுத்திடும்” என்றபடி அறைக்குத் திரும்பினர்.

ரிசப்ஷனிலிருந்த அன்றைய தினசரியைச் சற்றுநேரம் புரட்டியவள், அங்கு வேலை செய்துகொண்டிருந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தாள்.

தான் வேலை செய்யப் போகும் இடத்திற்கும், ஹாஸ்டலுக்கும் இடையில் இருக்கும் தூரம்; எப்படிப் போகலாம்? எங்கே இறங்க வேண்டும் என சில விஷயங்களைக் கேட்டுக்கொண்டாள்.

அறைக்கு வந்தவள் டேட்டா கார்டை ஆன் செய்தாள். கூகுள் மேப்பில் ஒருமுறை கேட்டறிந்தவற்றைச் சரிபார்த்துக்கொண்டாள். இரவு உணவிற்குப் பிறகு, மறுநாள் வேலைக்கு உடுத்திச் செல்ல உடுப்பை எடுத்து வைத்தாள்.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் எதிர் ஷெல்ஃபில் இருந்த பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள்.

****************
அலுப்புடன் வீட்டிற்குள் நுழைந்த இந்தர், ஏதோ படித்தபடி ஹாலில் அமர்ந்திருந்த அண்ணனைப் பார்த்தான்.

தான் வந்ததைக் கூட உணராமல் அப்படி என்ன படித்துக்கொண்டிருக்கிறான்?’ என எண்ணிக்கொண்டே அண்ணனின் அருகில் சென்றவனுக்குச் சிரிப்பாக வந்தது.

விஜய்மித்ரனின் பார்வை மட்டும்தான் கையிலிருந்த ஃபைலில் இருந்தது. அவனது எண்ணமெல்லாம் அங்கே இல்லை என்பதை புன்னகை உறைந்த அவனது உதடுகளே காட்டிக் கொடுத்தன.

’அடேங்கப்பா! இது தாங்காதுடா சாமி!’ என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் இந்தர்.

தாமரை நிற சல்வாரும் மெருன் நிற ஸ்வெட்டருமாக இரயிலிலிருந்து இறங்கியவளைச் சற்று தொலைவிலிருந்து பார்த்தான் மித்ரன்.

பனியில் குளித்த செந்தாமரையைப் போன்று அவள் நின்றிருந்ததை இதயத்திற்குள் நிறைத்துக் கொண்டிருக்க, அவள் சுற்றும் முற்றும் பார்ப்பதை உணர்ந்து சட்டென அங்கிருந்த தூணின் பின்னால் மறைந்து கொண்டான்.

ஆதித்யா அவளிடம் சென்று பேசியதையும், அவள் தோண்டித் துருவிக் கேள்வி கேட்டதையும் பார்த்துக்கொண்டே, சற்று இடைவெளிவிட்டு அவளுக்குப் பின்னால் நடந்து வந்தான்.

அவர்களது கார் கிளம்பியதும், தன்னுடைய வோல்க்ஸ் வேகனில் அவர்களைப் பின்தொடர்ந்தான்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவள் இரண்டொரு முறை பின்னால் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்து, அவளது கவனத்தை ஈர்க்காத வண்ணம் இடைவெளி விட்டே வந்துகொண்டிருந்தான்.

ஹாஸ்டலில் அவளை விட்டுவிட்டு வெளியில் வந்த ஆதித்யா, தன்னைக் கவனித்துவிட்டுப் பேச வரவும் ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கியவன், ஜன்னலருகில் நின்று தங்களைப் பார்த்துக் கொண்டிருந்த மித்ராவைக் கவனித்துவிட்டான்.

அவள் தங்கப் போகும் அறை என்று முன்பே அறிந்திருந்ததால், சட்டென சுதாரித்துக்கொண்டான். ‘தன்னை மட்டும் பார்த்திருந்தால் அவ்வளவுதான் அடுத்த நிமிடமே இங்கேயிருந்து கண்காணாத இடத்திற்கு ஓடிவிடுவாள்’ என எண்ணிக்கொண்டான்.

அவனருகில் வந்த ஆதித்யா, “மேடமை செட்டில் பண்ணிட்டேன்ணா!” என்றான்.

“தேங்க்யூ ஆதி!” என்றான் மித்ரன்.

“ஆனா, கேள்வியா கேட்டு என்னைத் துறுவி எடுத்துட்டாங்கண்ணா!” எனப் புன்னகைத்தான்.

சிரித்துக்கொண்ட வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு வந்துவிட்டான். இப்போது அதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டவன், பைலை மூடிவிட்டு நிமிர்ந்தான்.

இரவு உடையுடன் ஒரு காலை மடித்து அமர்ந்தபடி, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தம்பியைப் பார்த்தான்.
“நீ எப்போ வந்த?” எனக் கேட்டான்.

“மோகினி அடிச்ச எஃபெக்ட்ல நீங்க உட்கார்ந்திருந்த போதே வந்துட்டேன். நீங்க நிமிர்ந்து பார்க்கறது மாதிரி தெரியல… அதான், ஒரு குளியலைப் போட்டுட்டு வந்து உட்கார்ந்திருக்கேன்” என்றான்.

இதழ்க்கடையோரம் முகிழ்த்த முறுவலை அடக்கியபடி, “சரி சாப்பிடலாமா?” எனக் கேட்டான்.

”சாப்பிடணுங்கற அளவுக்கு சுயநினைவோட இருக்கீங்களா! சந்தோஷம்” என்றவன் டைனிங்கிற்குச் சென்றான்.

மித்ரன் அமைதியாக உணவருந்திக் கொண்டிருக்க, இந்தர் உணவை மென்றபடி அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

எதேச்சையாக நிமிர்ந்த மித்ரன், “என்னடா?” என்றான்.

“இல்ல நீங்களா சொல்வீங்கன்னு நினைச்சேன். ஆனா, வாயையே திறக்கலையேன்னு பார்க்கறேன்” என்றான்.

”எதைப் பத்தி?” எனக் கேட்டான்.

சட்டென எழுந்த இந்தர், “அண்ணா! டைனிங் டேபிளா இருந்தாலும் வரவாயில்லை… உன் காலைத் தூக்கி மேல வை. தொட்டுக் கும்பிட்டுக்கறேன்” என்றான் கடுப்புடன்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு அடுத்த விள்ளல் சப்பாத்தியை உள்ளே தள்ளினான் மித்ரன்.

“உலக நடிப்புடா சாமின்னு கத்தணும் போலயிருக்கு…” என்றான் எரிச்சலுடன்.

“இப்போ என்னடா ஆகிடுச்சி?” எனக் கேட்டான்.

”என்ன ஆகிடுச்சா? உன் ப்ரொஃபசரோட பொண்ணு வந்தாச்சு போலயிருக்கு” என்றான்.

“ஆமாம். வந்துட்டா. என்ன இப்போ?”

”இனி, அடிக்கடி ஜெய்பூர் விசிட் இருக்கும்னு நினைக்கறேன்” என்றான் கிண்டலாக.

“எனக்கு வேலை வெட்டி இல்லன்னு நினைச்சிட்டிருக்கியா?” என முறைத்துக்கொண்டே கேட்டான்.

“ஹா ஹா இந்த பில்டப்லாம் கொடுத்தாலும் உண்மை அதானே…” எனச் சிரித்தான்.

“தேவையில்லாம பேசாதே…” என்றான்.

“நாங்க எத்தனைப் பேரைப் பார்த்திருக்கோம்…”

“இப்போ என்னத்த பார்த்துட்டா நீ?”

“அப்போ, ஒண்ணுமே இல்லையா?”

“என்ன ஒண்ணுமே இல்லையா?” என்றான் வேண்டுமென்றே.

“இங்க பாருங்க ப்ரோ! என்னோட பொறுமைக்கும் அளவிருக்கு. அவங்களுக்கும் நமக்கும் ஏற்கெனவே வாய்க்காய்த் தகராறு… என்ன வாய்க்கா தகராறுங்கற கதையா என்னைக் கேள்வி கேட்காதீங்க. நான் கடுப்பாகிடுவேன் சொல்லிட்டேன்” என்றான்.

“இப்போ எதுக்குடா இப்படிச் சிலிர்த்துகிட்டு எழுந்துக்கற. ஒண்ணுமில்லன்னா ஒண்ணுமில்ல தான். அதுக்காக இல்லாததை இருக்குன்னா சொல்வாங்க…” என்றான்.

“அப்போ, உண்மையாவே எதுவும் இல்ல” கிண்டலாகப் பார்த்தபடி கேட்டான்.

மித்ரன் பதில் சொல்லாமல் கைக்கழுவ எழுந்து சென்றான்.

பின்னாலேயே சென்ற இந்தர், “அப்போ ரூட் கிளியரா!” என்று கெத்தாகக் கேட்டான்.

“கேட்கறதை நேரா கேளு. சொல்ல வர்றதை ஒழுங்கா சொல்லு” என்று கடுப்படித்தான் மித்ரன்.

“ரைட்டு விடு! எனக்கு ரூட் கிளியர்…” என்றான் மீண்டும்.

சட்டெனத் திரும்பிய மித்ரன், “அவகிட்ட உன் வாலாட்டத்தை வச்சிக்காதே” என்றான் எச்சரிக்கும் விதமாக.

“யூ டோண்ட் வொர்ரி ப்ரோ! எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” என்றான்.
முடியவில்லை என்பதைப் போலத் தலையை ஆட்டிய மித்ரன், “அவகிட்ட வாங்காம நீ அடங்கப்போறதில்ல” என்றான் கடுப்புடன்.

“போங்க ப்ரோ! நம்மகிட்டயேவா? போய் வேற ஃபைல் ஏதாவது இருந்தா பாருங்க” என்றவன், கையைக் கழுவிக்கொண்டு நகர்ந்தான்.

“சுமித்ரா… எப்படிக் கூப்பிடலாம். சுரா… சேச்சே சுரா இறான்னு சுமி… சரி ஓகே அப்படியே கூப்பிட்டுக்குவோம். மித்ரா பத்ரானெல்லாம் நமக்கு வேணாம்…” என தனக்குத் தானே பேசிக்கொண்டு செல்லும் சகோதரனை அமைதியாகப் பார்த்தான் மித்ரன்.

’எப்படியாவது தன்னிடமிருந்து உண்மையை வாங்கிவிடும் முனைப்புடன் இருக்கும் தம்பியைப் பார்த்துச் சிரிப்புத்தான் வந்தது மித்ரனுக்கு.

‘ஹும்! உன்கிட்ட சொல்றதுக்கு என்னடா… முதல்ல, மேடம் கிரீன் சிக்னல் கொடுக்கட்டும்’ என எண்ணிக்கொண்டே புன்னகையுடன் அறைக்குச் சென்றான்.
 
  • Like
Reactions: saru