அத்தியாயம் – 3
வையகத்து வீரன் அவன்
அஞ்சனம் பூசிய
விழியாளிடம் மயங்கி
தன்னிலை மறந்து தனித்து
கிடக்கின்றான் !
தன்னை மறந்திருக்கும்
மன்னவனின் உயிரைத்
தேடி அவள் வருவாளா?
மூணாறில் வந்திறங்கிய வினையும், சிந்துவும் தங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு ஆட்டோவில் சென்றிறங்கினர். அவரவர் அறைக்கான சாவியை வாங்கிக் கொண்டு சென்று அடைந்தனர். இரவு நேரமானதால் மலைப் பிரதேசத்தின் அடர்ந்த இருள் எங்கும் கவிழ்ந்திருக்க, அறையின் ஜன்னலில் இருந்து வெளியே பார்த்தவளுக்கு ஒருவித பயம் எழுந்தது.
திரையை இழுத்து மூடி விட்டு சற்று நேரம் படுக்கையில் விழுந்தவள் கண்ணயர்ந்தாள். பேருந்தில் வந்த அசதியில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் கனவில் காட்சிகள் தோன்றலாயின.
அடர்வனத்தின் நடுவே பேரழகி ஒருத்தி கையில் வாளுடன் நின்றிருந்தாள். அவளது பொன்மேனியிலிருந்து வீசிய ஒளி வனத்திற்கே வெளிச்சத்தை அளித்தது. எதிரே அரசிளங்குமரன் ஒருவன் குதிரையின் மீதமர்ந்து அவளின் அழகை ரசித்தக் கொண்டிருந்தான்.
அவனது பார்வையில் ஓடிய ரசனையை கண்ட ரத்னாவதிக்கு சினம் தலைதூக்க “வீரரே! இந்த வனம் எமது எல்லை. வந்தவழியே திரும்பி போய் விடுங்கள்” என்றாள் மிரட்டலாக.
இளவரசனின் சிநேகிதனோ கோபத்தோடு “பெண்ணே! யாரைப் பார்த்து போகச் சொல்கிறாய்? இவர் யாரென்று தெரியுமா? இந்நாட்டின் இளவரசர்” என்றான் கம்பீரமாக .
அவளோ சற்றும் பணியாமல் “இவ்வனத்தின் அரசர் என் தந்தை. இங்கு என் தந்தையின் உத்தரவில்லாமல் உள்ளே நுழைந்தது நீங்கள் செய்த தவறு” என்றவள் மரங்களினூடே பார்த்து “யாரங்கே! இவர்களை இழுத்து வாருங்கள்! தந்தையிடம் கொண்டு செல்வோம்” என்று உத்தரவிட்டாள்.
அவளது குரலிற்காகவே காத்திருந்ததை போல பத்து பதினைந்து வீரர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். தனது வாளை உருவிக் கொண்டு அவர்களுடன் சண்டைக்கு தயாரான இளமாறனை தடுத்த விக்கிரமன் “மாறா! வாளை உறையுள் வை! நாம் இவர்களுடன் செல்வோம்” என்றான்.
அவர்களை முறைத்த மாறன் “நீ யாரென்று கூறியும் இழுத்துச் செல்ல உத்தரவிடும் இப்பெண்ணை தண்டிக்காமல் விடுவது தவறு விக்ரமா”.
விக்ரமனின் பார்வையோ நடந்து செல்லும் மடந்தையின் பின்னே செல்ல, “தண்டனை தானே கொடுத்து விட்டால் போகிறது” என்றான் இன்பமாக.
அவனது குரலில் தோன்றிய பேதத்தை உணர்ந்தவன் “விக்ரமா! இது சரியல்ல! நீ இந்நாட்டின் இளவரசன். வனத்தில் வாழும் பெண் மீது மையல் கொள்வது சரியாகாது. வா! இப்போதே இவர்களை வீழ்த்தி விட்டு செல்வோம்” என்றான்.
அவனை திரும்பியும் பாராமல் நளினமாக அசைந்து செல்லும் பெண்ணின் பேரழிலிலிருந்து கண்ணெடுக்காமல் “என் மனம் அவளின் பின்னே செல்கிறது மாறா. நானாக செல்லவில்லை அவள் இழுத்துச் செல்கிறாள்” என்று பிதற்றினான்.
அவனது பிதற்றலைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட மாறன் “புத்தி பேதலித்து விட்டது நண்பா! அரசருக்கு என்ன பதில் சொல்வது?” என்றான் கோபமாக.
இவர்கள் வழக்கடித்துக் கொண்டே செல்ல குடில்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு வந்திருந்தனர். முன்னே சென்று கொண்டிருந்த ரத்னாவதி வீரர்களிடம் “இவர்களை இறக்கி தந்தையின் குடிலுக்கு இழுத்து வாருங்கள்” என்று கம்பீரமாக உத்தரவிட்டு விட்டு அங்கிருந்த பெரிய குடிலின் உள்ளே நுழைந்தாள்.
வீரர்களிடம் வம்பேதும் செய்யாமல் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு பின்னே சென்றார்கள் நண்பர்கள் இருவரும்.
குடிலின் உள்ளே நடுநாயகமாக போடப்பட்டிருந்த இருக்கையில் கம்பீரமாக அமர்ந்திருந்த போஜராஜன் “இத்தனை விரைவில் ஏன் திரும்பினாய் ரத்னா? புள்ளினங்களுடன் விளையாட போகிறேன் என்று கூறினாயே?”
“நமது வனம் விலங்குகளுக்கு பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருந்தோமே தந்தையே. ஆனால் அது பொய். நம் சொந்தங்களை வேட்டையாட வனத்தினுள் இருவர் நுழைந்து விட்டனர் . அவர்களை இழுத்து வந்திருக்கிறேன்” என்றாள் கோபமாக.
“என்ன! இங்கே வேட்டையாட வந்தார்களா? யார் அவர்கள்?”
“அவர்களை உள்ளே அழைத்து வாருங்கள்!” என்று சத்தமாக உத்தரவிட்டாள். வீரர்கள் புடை சூழ உள்ளே நுழைந்தவனை கண்டதும் அதிர்ச்சியுடன் இருக்கையிலிருந்து எழுந்த போஜராஜன் “பிரபோ! தாங்களா? தங்களையா இழுத்து வந்திருக்கிறாள்” என்றார் கோபத்தோடு.
தந்தை அவனை பிரபோ என்றழைத்ததில் அதிர்ந்து ‘யார் இவன்? என் தந்தையே இவனை கண்டு எழுந்து நிற்கிறார்’ என்றெண்ணி அவனை ஆராய்ந்தாள்.
மஞ்சள் வண்ண மேனி தகதகக்க நெடியவனாக நின்றிருந்தவனின் தோள்கள் இரு குன்றுகளை நிறுத்தி வைத்தது போல் தோற்றமளிக்க, புஜங்கள் இரெண்டும் வாள் பிடித்த கையின் உறுதியினை பறைசாற்றிக் கொண்டிருந்தன. எதிராளியை துளைக்கும் கூர்விழிகளும், நீண்ட நாசியும், இறுகிய உதடுகளும், தோள்வரை சுருண்டு கிடந்த கார்குழலும், காதில் அணிந்திருந்த குண்டலங்கள் அவனுக்கு மேலும் அழகூட்டியது.
தன்னை மறந்து அவனை நோக்கிக் கொண்டிருந்தவளின் விழிகளை அவனது விழிகள் சந்தித்து மீண்டது. அதில் சற்று வெட்கமடைந்து விழிகளை தாழ்த்திக் கொண்டாள்,
சொர்ணமென ஜொலித்த அவளது மேனியில் அவனது பார்வை படரத் தொடங்கியது. போஜராஜன் அவனை அமர வைத்து உபசரிக்க, பார்வை அவள் மீதும் பேச்சு அவரிடமுமாக இருந்தது.
அளவான உயரமும், கார்மேகமென கறுத்த கார்குழல் இடையை தாண்டி இறங்கி இருக்க, குறுவாளை போன்ற அஞ்சனம் பூசிய விழிகளும், நீண்ட கூர் நாசியும், தேனூறும் இதழ்களில் நின்று இளைப்பாறிய அவனது விழிகள் கழுத்தின் கீழே இறங்கி பயணிக்க ஆரம்பித்தது. இறுக்கி கட்டிய கச்சையும், மெல்லிய இடையும் தாண்டி பயணித்த அவனது பார்வையை தடை செய்து போஜராஜனிடம் திருப்பினான்.
“எப்படி இருக்கிறீர்கள் போஜராஜரே?”
“தங்கள் தந்தையின் பாதுகாப்பில் இந்த வனமே செழித்து விளங்குகிறது இளவரசே”
அவர் இளவரசே என்றழைத்தவுடன் சரேலென நிமிர்ந்த ரத்னா அவனை பார்த்தாள்.
சற்றே குறும்புடன் “ம்ம்...தாங்கள் அப்படி கூறுகிறீர்கள் போஜராஜரே! ஆனால் தங்கள் மகள் எங்களை ஒரு கைதி போல் இழுத்து வந்தாள்” என்றான் குறும்புடன்.
அவனது குறும்பான பேச்சில் சீற்றமடைந்தவள் “ஒரு முறை கூட பார்த்திராத இளவரசரை எங்கனம் நான் அறிவேன் தந்தையே?”.
அவர்களை பேச்சின் இடையே குறுக்கிட்ட மாறன் “நான் தான் கூறினேனே தேவி. இவர் இந்நாட்டின் இளவரசர் என்று. தாங்கள் தான் அதை மதிக்காமல் எங்களை இழுத்து வந்துள்ளீர்கள்” என்றான் இடக்காக.
அதற்குள் அவர்களின் பேச்சில் குறுக்கிட்ட போஜராஜன் “என் மகள் இழைத்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் இளவரசே” என்று கை கூப்பினார்.
தன் தந்தை அவனிடம் மன்னிப்பு கேட்பதா என்று வருந்தத்துடன் தலையை குனிந்து கொண்டாள். அதை பொறுக்காதவன் “தாங்கள் என் தந்தையை போன்றவர் போஜராஜரே! நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா?” என்றான்.
அவனது பதிலில் அவள் மனம் மகிழ்வடைய நன்றியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருவரின் பார்வைகளும் கலந்து பிரிந்தன. அப்போது தான் அதை உணர்ந்தாள் அவள். அவனது விழிகள் நீல நிறத்தில் இருந்தது.
இந்த நாடகத்தை எல்லாம் கவனித்து கொண்டு அமர்ந்திருந்த இளமாறனுக்கு எப்பொழுதடா அங்கிருந்து கிளம்புவோம் என்றிருந்தது. அந்நேரம் காட்டிற்குள் பலத்த காற்று வீசத் தொடங்கியது. எங்கிருந்தோ கருமேகங்கள் சூழ்ந்து கொள்ள தொடங்கியது. பலமாக இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
வெளியில் நின்றிருந்த வீரர்களும் பெண்களும் தங்களின் குடில்களுக்குள் நுழைந்து கொண்டனர். எதிரே இருப்பவரின் முகம் தெரியாத அளவிற்கு கனத்த மழை பெய்து கொண்டிருந்தது.
போஜராஜனின் குடிலுக்குள் இருந்த அனைவரும் வெளியே வந்து மழையைப் பார்த்தபடி நின்றிருந்தனர். அவர்கள் நின்றிருந்த திசைக்கு எதிர் திசையில் இருந்து மழை நீரின் ஊடே ஒரு உருவம் வேகமாக நடந்து வருவது தெரிந்தது.
கிட்டே நெருங்க-நெருங்க போஜராஜனுக்கு அது யாரென்று தெரிந்தது. விக்ரமனும், இளமாறனும் சுவாரசியமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.
சற்றே தூரத்தில் வரும் போதே “என்ன போஜராஜா? விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் போல் இருக்கிறதே” கேட்டவரின் குரல் அந்த இடியை ஒத்திருந்தது.
அந்த குரலை கண்டுகொண்டவளின் முகத்தில் வெறுப்பின் சாயல்.
போஜராஜனின் எதிரே வந்து நின்றவன் அரக்கனை போன்றிருந்தான். விக்கிரமனின் பக்கம் திரும்பாது “உன்னிடம் யாசகம் கேட்க வந்திருக்கிறேன் போஜராஜா?” என்றான் அவரை கூர்ந்து பார்த்தபடி.
“குடிலுக்குள் வாருங்கள் பத்ரரே!”
“நேரமில்லை போஜராஜா! எனக்கு யாசகம் அளிப்பாயா மாட்டாயா?”
சிறிது சங்கடத்துடன் “கேளுங்கள் பத்ரரே”
“உனது மகளை இந்த நிமிடமே எனக்கு திருமணம் செய்து தர வேண்டும்”.
பத்ரனின் பதிலில் திடுக்கிட்ட போஜராஜன் “என்ன! விளையாடுகிறீரா ரிஷி குமாரரே?” என்றார் கோபமாக.
“போஜராஜா! நான் கேட்பதை கொடுக்க முடியுமா முடியாதா என்பதை மட்டும் கூறு” என்றார் அந்த காடே அதிரும்படி.
அதுவரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த விக்ரமனின் கைகள் தானாக வாளின் பிடியை தொட்டது.
“ரிஷிகுமாரரே! இதென்ன விளையாட்டு? அவரை விட்டு விடுங்கள்!”
அவன் புறம் சரேலென திரும்பியவன் உறுத்து விழித்து “விக்கிரமா! உனது வழியைப் பார்த்து செல்! இதில் தலையிடாதே!” என்றார் அதிகாரமாக.
இளவரசரை எதிர்த்து பேசியதை கண்டதும் உருவிய வாளுடன் அவர் முன்னே பாய்ந்த மாறன் “யாரை பார்த்து தலையிடாதே என்கிறீர்கள்? ரிஷிகுமாரரே! வந்தவழியே திரும்பிச் செல்லுங்கள்” என்று மிரட்டினான்.
அவனை புழுவை பார்ப்பது போல் பார்த்தவர் மீண்டும் போஜராஜனிடம் “சொல் போஜராஜா! உன் பெண்ணை எனக்கு மணம் முடித்து தருவாயா மாட்டாயா?” என்றார் இறுகிய குரலுடன்.
அவரை எதிர்த்து கொள்ளவும் மனமில்லாத போஜராஜன் தவிப்புடன் நின்றிருக்க, தந்தையை முந்திக் கொண்ட ரத்னாவதி “உன்னை மணப்பதற்கு பதில் சிங்கத்திற்கு இரையாகலாம்” என்றாள் சீற்றத்துடன்.
ஒரு நிமிடம் அவளை கூர்ந்து பார்த்தவர் ஆகாயத்தை நோக்கி கையை உயர்த்தி “ரிஷிகுமாரனுக்கு யாசகம் மறுக்கப்பட்ட இவ்வனம் அழிந்து சுடுகாடாகட்டும். இப்பெண்ணின் ஆசைப்படி சிங்கத்திற்கு இரையாக கடவது” என்று சபித்து விட்டு தனது கையிருந்த கமண்டலத்தில் இருந்த நீரை எடுத்து தெளித்து விட்டு அங்கிருந்து விரைந்து சென்றார்.
அவரின் சாபம் கண்டு திகைத்து போய் நின்றிருந்தனர் அனைவரும். முதலில் சுதாரித்து கொண்ட விக்ரமன் “போஜராஜரே! கவலை கொள்ளாதீர்கள்! தவறான எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட சாபம் பலிக்காது” என்றான் சமாதானமாக.
அவரோ “அவன் காளி உபாசகன் இளவரசே! அவனை பகைத்துக் கொள்வது நல்லதல்ல” என்றார் கவலையுடன்.
தன் பங்கிற்கு ரத்னாவதியும் எத்தனை சமாதானப்படுத்தியும் மனதிற்குள் பயத்துடனே இளவரசனை வழியனுப்பி வைத்தார். அதன்பின்னர் வந்த நாட்கள் அமைதியாக சென்றது. இளவரசனும், ரத்னாவதியும் அவ்வப்போது சந்தித்து கொண்டனர்.
போஜராஜனும் நாட்கள் செல்ல செல்ல ரிஷிகுமாரன் கொடுத்த சாபத்தை மறந்து உற்சாகமாக இருந்தான். சாபமிட்ட பிறகு ஒரு மாதத்திற்கு பின் வந்த முதல் பௌர்ணமியில் அவ்வனத்தின் நடுவே வந்து நின்று ரிஷிகுமாரன் காளியை நோக்கி தவமிருக்க ஆரம்பித்தான்.
அன்றிரவு அங்கிருந்த மக்கள் எவராலும் உறங்க முடியவில்லை. ரிஷிகுமாரனின் கடுந்தவம் அனைவரின் நிம்மதியையும் கெடுத்தது. இரவெல்லாம் அவனது ஜெபமே காடெங்கும் ஒலித்தது. புள்ளினங்கள் மிரண்டன. புலிகளும், சிங்கங்களும் ரிஷிகுமாரனோடு கர்ஜிக்க ஆரம்பித்தது. பறவைகள் இனம் புரியாமல் பறக்க ஆரம்பித்தது. மறுநாள் காலை அம்மக்கள் தங்களுக்குள் புலம்ப ஆரம்பித்தனர்.
இவ்வாறு பத்து நாட்கள் தொடர்ந்த தவத்தால் பறவையினங்கள் சோர்வடைந்து மரத்திலிருந்து விழுந்து இறக்க ஆரம்பித்தது. புள்ளினங்கள் தானே சென்று புலியின் முன்னே விழுந்தது. மக்களோ இரவெல்லாம் உறக்கமில்லாமல் காலையில் எழுந்ததும் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த போஜராஜனுக்கு பயம் பிடித்துக் கொண்டது. பத்ரன் தங்களை அழிக்கத் தான் காளியை நோக்கி தவமிருக்கிறான். இப்படியே சென்றால் நிச்சயம் தங்களது வனம் சுடுகாடாவது உறுதி என்று உணர்ந்தார். இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தடுமாறி நின்றார்.
அவரின் மனதிலிருப்பதை உணர்ந்த ரத்னாவதி “தந்தையே! பத்ரனின் தவம் தொடர்ந்தால் நம் வனம் அழிந்து விடும். அதை தடுப்பதற்கு ஏதேனும் வழி உள்ளதா?”
அவளை கவலையுடன் பார்த்து விட்டு “நானும் அதைத் தான் சிந்திக்கிறேன் மகளே! எனக்கு எதுவும் புலப்படவில்லை” என்றார்.
சற்றே தயக்கத்துடன் “நாம் ஏன் இளவரசரை சந்தித்து இங்கு நடப்பவற்றை கூறி உதவி கேட்க கூடாது?” என்றாள்.
அவளை யோசனையுடன் பார்த்தவர் “அவர் நாடாளும் மன்னர். நாமோ அவர் நிழலில் ஒதுங்கி இருக்கும் குடிமக்கள். நம்மை சந்திக்க அவர் சம்மதிப்பாரா மகளே!”.
“என்னை சந்திப்பார் தந்தையே!”
அவளின் கூற்றில் அதிர்ந்தவர் “ரத்னா!”
“ஆம் தந்தையே! அவரை என் மணாளனாக வரித்து விட்டேன். அவரும் என்னை மறக்க மாட்டார். நான் சென்று அவரிடம் முறையிடுகிறேன்!” என்றாள் உறுதியாக.
மெல்ல இருக்கையில் இருந்து எழுந்தவர் அவள் தலையில் கை வைத்து “குழந்தாய்! உன் மக்களுக்காக உதவி கேட்கப் போகிறாய். அங்கு எது நடந்தாலும் உனக்கு நிதானம் அவசியம். நம் மக்களின் நலன் முக்கியம். சென்று வா மகளே!” என்று ஆசிவதித்தார்.
தந்தையிடம் விடை பெற்று கிளம்பிய காரிகை தன்னுடய காவலுக்கு வீரர்கள் இருவரை அழைத்துக் கொண்டு குதிரையில் கிளம்பினாள்.
ஒரு இரவு பயணித்து நகரத்தை அடைந்தாள். அவள் சென்ற விடியலின் நேரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அவற்றை கவனித்துக் கொண்டே குதிரையில் இருந்து இறங்கி நடந்தவள், என்ன விழா என்பதை அறிந்து கொள்ள மக்களிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“எங்கள் இளவரசருக்கு முடிசூட்டு விழா. அதனால் தான் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது” என்றார்கள்.
இன்னொரு பெண் அவளருகே வந்து “அது மட்டுமா? எங்கள் இளவரசருக்கு விவாகம் நடக்க இருக்கிறது. அங்கத தேசத்து ராஜகுமாரியுடன்” என்று குண்டை அவள் தலையில் இட்டு சென்றார்.
இடி போன்ற செய்தி தாக்கியதில் ஆவேசம் கொண்டவளாக அரண்மனையை நோக்கிச் சென்றாள். அவளை உள்ளே விட மறுத்த வீரர்களிடம் சண்டயிட ஆரம்பித்தாள். வாட்போரில் தேர்ச்சி பெற்றவளிடம் வீரர்கள் திணற ஆரம்பித்தனர்.
வாயிலில் நடந்த கலவரம் பற்றி உள்ளே இருந்தவர்களுக்கு தெரிந்தது. விக்ரமனுக்கு செய்தி போனதும் தானே உப்பரிகைக்கு வந்து நின்று “நிறுத்துங்கள்! அவளை விடுங்கள்” என்றான்.
வீரர்கள் ஒதுங்கி நின்று கொள்ள அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் அவனது உருவத்தை மன பெட்டகத்துள் நிறைத்துக் கொண்டது.
அவனது அடுத்த கேள்வி அவளை மொத்தமாக வீழ்த்தியது.
“பெண்ணே! யார் நீ? எதற்காக இங்கு வந்து சண்டையிடுகிறாய்?”
அவனது கேள்வியில் அதிர்ந்து போனவள் அவள் மட்டுமல்ல, அவனருகே நின்றிருந்த இளமாறனும் தான்.
“முடிசூடும் முன்பே மனம் கவர்ந்த காரிகையை மறந்த மன்னா நீ வாழ்க! நான் யாரென்றா கேட்டீர்? எம் வனத்தின் புள்ளினங்களை கேளும் அவை சொல்லும் நமதுறவை. பறவையினங்களை கேளும் நீர் பேசிய காதல் மொழிகளை. உங்கள் அருகில் நிற்பவரை கேளுங்கள் நான் யாரென்று தெரியும்” என்று கூச்சலிட்டாள்.
விக்ரமனுக்கு அவளை நினைவில்லை.
“இதோ பாரம்மா! நீ தவறானவனிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறாய். உன்னை ஏமாற்றியவன் யாரென்று என்னிடம் முறையிடு. அவனுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன்”.
“ஹா! ஏமாற்றியவனிடமே முறையிடுவதா? நகர மக்களே! நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்! இங்கே நிற்கும் உங்கள் இளவரசர் தான் என்னை ஏமாற்றியவர். இன்று என்னை அறியாதது போல் நடிக்கிறார்” என்றாள் ஆவேசமாக.
அப்போது விக்ரமன் அருகில் வந்து நின்ற மந்தாகினி “நேரமாகிறது மகனே! இங்கு என்ன செய்கிறாய்” என்றாள்.
அவளை பார்த்த ரத்னாவதிக்கு அதிர்ச்சி தன்னை அறியாமல் “மந்தாகினி! இவள் எங்கே இங்கே” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
ரத்னாவதியை கையை காண்பித்து “இந்தப் பெண் நான் அவளை ஏமாற்றி விட்டேன் என்று வந்து நிற்கிறாள் அன்னையே” என்றான்.
தனது விஷம் தோய்ந்த விழிகளை அவளை நோக்கி திருப்பிய மந்தாகினி “பாவம் மூளை பிரண்டவள் போலிருக்கிறது. வீரர்கள் அவளை பார்த்துக் கொள்வார்கள். நீ போ மகனே” என்றாள்.
அவன் அவளை திரும்பி பார்த்துவிட்டு உள்ளே நகர, இளமாறன் அவன் பின்னோடு செல்லாமல் ரத்னாவதியின் முன் வந்து நின்றான்.
அவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவள் “இங்கு என்னவரிடம் உதவி கேட்டு வந்தேன். ஆனால் உதவி கேட்கும் நிலையில் அவரில்லை. விஷ நாகமொன்று அவரை நெருங்கி இருக்கிறது. அவரை பார்த்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
அவளின் பேச்சில் அதிர்ந்தவன் “என்னம்மா சொல்கிறாய்?”
“ஆம்! மந்தாகினி எனும் விஷ நாகமொன்று அவருடன் இருக்கிறது. முதலில் அவர் என்னை மறந்துவிட்டார் என்றெண்ணி தவித்தேன். ஆனால் அந்த நாகம் அவரை தன்னிலை இழக்க செய்திருக்கிறது. அவள் பத்ரனின் தமக்கை. மிகுந்த கவனத்துடன் அவரை பாருங்கள்” என்றாள்.
“உனக்கு உதவி தேவைப்படுகிறதே அம்மா”
அவனை வருத்ததுடன் பார்த்து “நான் பார்த்துக் கொள்கிறேன். எம்மக்களை காப்பது எங்கள் கடமை” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தாள்.
அப்போது ஒயிலாக அங்கு வந்து நின்ற மந்தாகினி “ரத்னா! பத்ரனை மறுத்து இங்கு வந்து இவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாயா? உன் வனம் அழியாமல் இருக்க பத்ரனிடம் செல்! விக்ரமன் எந்த ஜென்மத்திலும் உனக்கு கிடைக்க மாட்டான்” என்றாள் அலட்சியமாக.
அவளை திரும்பி பார்த்து சிரித்தவள் “போகிறேன்! பத்ரனிடம் அல்ல! என் மக்களை காக்க! முதலில் என் மக்கள். அடுத்து அவர் என் மணாளன். இந்த ஜென்மம் மட்டுமல்ல எத்தனை பிறவிகள் எடுத்தாலும். நிச்சயம் நாங்கள் ஒன்று சேர்வோம். உன்னால் முடிந்ததை செய்து கொள்” என்று சவாலிட்டு விட்டு குதிரையின் மீது தாவி ஏறினாள்.
அவளது எண்ணம் முழுவதும் விக்ரமனே! தாங்கள் பேசி விளையாடிய பொழுதுகள் ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்தாள். மனமோ விக்ரமா! என்று அவனை அழைத்துக் கொண்டே இருந்தது.
அவளது எண்ண அலைகள் அவன் மனதை அசைத்து பார்க்கத் தொடங்கியது. மந்தாகினியின் மந்திரத்தால் கட்டுண்டு கிடந்தவனின் மனம் குழம்பித் தவிக்க, புத்தி பேதலித்தவனை போல் நடந்து கொள்ள தொடங்கினான். அதில் அதிர்ந்து போனவர்கள் முடிசூட்டு விழாவையும், விவாகத்தையும் ரத்து செய்தனர். அரண்மனை மருத்துவர் வந்து அவனை பரிசோதித்து உடலளவில் எந்த பாதிப்பும் இல்லை, மனம் சற்று குழம்பி இருக்கிறது என்று கூறி அவனை உறங்க வைக்க மருந்து கொடுத்து விட்டு சென்றார்.
விக்ரமனின் சிற்றன்னையான மந்தாகினி மனதில் வெறுப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
காட்டை நெருங்கிக் கொண்டிருந்தவளின் முன்னே ஆஜானுபாகுவாக வந்து நின்றான் பத்ரன்.
“மறந்து விடு அவனை! என்னை மணந்து உன் வனத்தை காத்து கொள்!” என்றான்.
“பத்ரா! இங்கிருந்து சென்று விடு!” என்றாள் அழுத்தமான குரலில்.
கொடூரமான முகத்தோடு “உன் மரணம் வரை இங்கிருப்பேன் ரத்னா! உனது அத்தனை பிறவிகளிலும் என்னால் மட்டுமே உனக்கு மரணம் சம்பவிக்கும். விக்ரமனை மறந்தால் மட்டுமே உன்னை மரணம் தீண்டாது” என்றவனின் முகம் அவளருகே நெருங்கி வந்தது.
உறங்கிக் கொண்டிருந்தவளின் வியர்வை நாளங்கள் பொங்கி வழிய வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள். அந்த முகம் அவளை பயமுறுத்தியது. கண்களை அறையை சுற்றி சுழற்றினாள். தான் எங்கிருக்கிறோம் என்று உணர்ந்தவளுக்கு தான் கண்டது கனவு என்று புரிந்தது. ஆனாலும் பத்ரனின் முகம் அவளை மிரட்டியது.
வஞ்சியவள் உள்ளம்
கண்ணனை நினைக்க!
வந்தததோ பகை
முடிக்கும் நாகமொன்று!
பிறவிகள் பல எடுத்தாலும்
மன்னவனை மறந்தால் மரணம்
தழுவாது என்றுரைக்க
மறந்திட தான் முடியுமோ
உயிரானவனை!