Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் - 3



அலுவலக வாகன நிறுத்தத்தில், சித்தார்த் தனது காரை நிறுத்திவிட்டு இறங்கும் நேரம், தனது ஸ்கூட்டியில் வந்திறங்கினாள் மதுமிதா.

மாம்பழ நிற சல்வாரும், வலப்புற காதோரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒற்றை ரோஜாவுடன், புத்தம் புது மலரைப் போலப் புத்துணர்ச்சியுடன் தெரிந்தாள். அவள் அங்கிருந்து நகரும்வரை அவனது கண்கள், அவளது எழிலை ரசித்துக் கொண்டிருந்தன.

இது எதையும் அறியாதவளாக, கைப்பையுடன் அலுவலகத்திற்குச் செல்லப் படி ஏறினாள் அவள். நீண்ட மூச்செடுத்துக் கொண்டு, அவளைப் பின்தொடந்து அலுவலகக் கட்டிடத்தை நோக்கி நடந்தான் சித்தார்த்.

எதிர்பட்ட நபரைப் பார்த்துப் புன்னகைத்தபடி படியேறிக் கொண்டிருந்தவள், காலடி ஓசைக் கேட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தாள். இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறி வந்துக்கொண்டிருந்தவனைக் கண்டதும், சற்று ஒதுங்கி நின்றாள்.

தன்னைக் கடக்கும்போது கூறுபோடுவதைப் போல வெட்டிச் சென்ற அவனது பார்வையைக் கண்டதும், அவளது விழிகள் விரிந்தன.

பழைய நினைவுகளெல்லாம் வெள்ளமெனக் கரைபுரண்டு ஓடியது. ‘அந்த வெள்ளத்தில் கரைந்து, பழைய நினைவுகளோடு கலந்து விடமாட்டோமா!’ என ஏக்கமாக இருந்தது.

இனிமையான இளமைப்பருவம், கல்லூரி காலத்தில் சந்தோஷத்துடன் சுதந்திரப் பறவையாகப் பறந்து திரிந்தது என தன்னுடைய நினைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாள்.

‘என்னுடைய சின்னஞ்சிறு உலகத்தில், எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன். நடக்கக் கூடாத சில விஷயங்களை நடத்தி, என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டாயே கடவுளே!’ என மனத்திற்குள் குமைந்தாள்.

மறக்க முயன்ற அனைத்து விஷயங்களையும் நினைத்து உள்ளுக்குள் மருகியதில், தலைவலி வந்ததுதான் மிச்சம். அப்படியே மேஜையின் மேல் கவிழ்ந்து கொண்டாள்.

சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சித்தார்த், இடம் வலமாக அசைந்தபடி இருந்தான். மருண்ட விழிகளுடன் அவள் தன்னைப் பார்த்த அந்தக் காட்சியே அவனது எண்ணத்தில் தோய்ந்திருந்தது.

‘ச்சே!’ அவளிடம் ஏதாவது பேசியிருக்கலாம் சித்தார்த்!’ என்ற மனத்தை ஓங்கிக் குட்டினான்.

“என்னை என்னவோ ராட்சசன் போல நினைத்து, அப்படி மிரண்டு போய்ப் பார்க்கிறாள். அவளிடம் என்னவென்று பேசுவது!” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டான்.

‘தான் இத்தனைச் சீக்கிரம் வந்திருக்கவே கூடாது. சரி நான்தான் வந்தேன். இவள் எதற்காக இவ்வளவு காலையில் வரவேண்டும்? நான் சின்சியர் சிகாமணி என்று எனக்குக் காண்பித்துக் கொள்ளவா! எதுவாக இருந்தாலும் இனி, அவளது எந்த ஜாலத்தையும் நம்புவதற்குத் தயாராக இல்லை’ என்று மனத்திற்குள் சாடிக் கொண்டான்.

ஆனாலும், மனம் நிலைகொள்ளாமல் போக்குக்காட்ட, அங்கிருக்க முடியாமல் எழுந்து வெளியே வந்தான். மனம் ஆயிரம் காரணங்களைக் கற்பித்துக் கொண்டாலும், அதையெல்லாம் சிந்திக்கிறதா இந்த அறிவு! அவளது கேபினைக் கடக்கும் போது, அவள் அமர்ந்திருக்கும் இடத்தைக் கண்கள் துழாவின.

கைகளில் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவளைக் கண்டதுமே, அன்று மருத்துவமனையில் அவள் அமர்ந்திருந்த காட்சி நினைவிற்கு வர, ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அப்போது தான் அலுவலகத்திற்குள் நுழைந்த சிவா, தங்களது கேபினிலிருந்து வேகமாக வெளியே வந்த சித்தார்த்தைப் பார்த்தான். கடுகடுவென்றிருந்த அவனது முகத்தைப் பார்த்தவன், சட்டென அவனது கண்களில் படாதவாறு மறைவாக நின்றான். தனக்கிருந்த குழப்பத்தில் அவன், சிவாவைக் கவனிக்கவே இல்லை.

வேலையில் கவனமாக இருந்த மதுவின் அருகில் சென்று அமர்ந்தான் சிவா.

திரும்பிப் பார்த்தவள், “குட் மார்னிங் சிவா!” என முறுவலித்தாள்.

“குட் மார்னிங் மது!” நட்புடன் அவனும் புன்னகைத்தான்.

வியப்புடன் மது அவனைப் பார்த்தாலும், எதுவும் கேட்காமல் அவனிடம் சில சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஹாய் மது!” உற்சாகமாகக் குரல் கொடுத்தபடி வந்த கீதா, அங்கே சிவாவும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள்.

“என்ன தல? இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்தாச்சு? பஸ் ஸ்டாண்ட்ல தவம் இருக்கலையா?” வியப்புடன் கேட்டாள் கீதா.

சிவா அவர்களுக்கெல்லாம் சீனியராக இருந்தாலும், அனைவரிடமும் இயல்பாகப் பேசிப் பழகக் கூடியவன். அதிலும், கீதா அவனிடம் எப்போதும் வம்பிழுப்பதும், அவன் திருப்பிக் கொடுப்பதுமாக கலகலவென இருக்கும்.

ஆனால், அன்று அவனிருந்த மனநிலையில், கீதாவின் கேலிக்குச் சிறு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு, தனது வேலையைக் கவனிக்கலானான்.

அவளை, “ஏய் சும்மா இருடி!” மென்குரலில் அதட்டினாள் மது.

‘ஏதாவது பிரச்சனையா?’ கண் ஜாடையிலேயே தோழியிடம் விசாரித்தாள் கீதா.

‘தெரியலை’ என்பதைப் போலத் தோள்களைக் குலுக்கினாள் மதுமிதா.

சூழ்நிலையைச் சகஜமாக்க, “அப்புறம் மது! கல்யாண வேலைகள் எவ்வளவு தூரத்திலிருக்கு?" எனக் கேட்டாள் கீதா.

"ம்ம், நல்லபடியா நடந்துட்டிருக்கு" என்றாள்.

“ரொம்ப நாள் ஆச்சுடி கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு. தீபக் அண்ணா கல்யாணத்தில் ஒரு பிடி பிடிச்சிடணும்” என்றவளை முறுவலுடன் பார்த்தாள்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கே வந்தாள் லதா.

“வாம்மா மின்னல்! பத்து நாள் லீவ் போட்டது போதுமா?” கிண்டலாகக் கேட்ட கீதாவை அவள் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.

சிவாவின் பார்வை அவளைத் தொடர்ந்தது. சற்றுநேரம் அமைதியாக இருந்தவன், எழுந்து லதாவின் அருகில் சென்றான். அவன் வந்து பேசுவான் என்பதை அவள் யூகித்திருந்தாளோ என்னவோ… சட்டென எழுந்து கேபினின் மற்றொரு வழியாக வெளியேறினாள்.

சிவாவிற்கு அவமானமாக இருந்ததென்றால், தோழிகள் இருவருக்கும் திக்கென்றிருந்தது. கறுத்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறியவனைப் பார்க்க வேதனையாக இருந்தது.

‘வேலைக்குச் சேர்ந்த புதிதில், அவளுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாக, புரியும் விதத்தில் சொல்லிக் கொடுத்தவன் அவன். எத்தனையோ உதவிகளை அவளுக்குச் செய்திருக்கிறான்.

உடன்பிறந்தவனான ராஜேஷிற்குத் தன்னிடமிருக்கும் அதே சகோதர பாசத்தை, அவனிடமும் உணர்ந்தாள் மதுமிதா. அப்படிப்பட்டவனுக்கு ஏன் இந்தத் துன்பம்? இது வெறும் ஊடலாகத் தோன்றவில்லை அவளுக்கு.

காலையில் தனக்கிருந்த கவலையை மறந்து, சிவாவை நினைத்து வருந்தினாள். கீதாவுடன் அவனைச் சந்திக்க டைனிங் ஹாலிற்குச் சென்றாள்.

அவர்களைப் பார்த்ததும், “ப்ளீஸ் மது! கொஞ்ச நேரம் நான் தனியா இருக்கணும்” என்றான்.

“இன்னும் பத்து நிமிஷத்துல ஆஃபிஸ்ல எல்லோரும் வந்திடுவாங்க. அப்புறம் எங்கேயிருந்து தனியா இருக்கறது? உங்க முகமே உங்களைக் காட்டிக் கொடுத்திடும். மனசுல இருக்கறதைக் கொட்டிடுங்க. பாரமாவது குறையும்.”

அவன் அமைதியாகவே இருக்க, “ஒருவேளை பெர்சனல்…” என்றவளை அவசரமாக இடைமறித்தான் அவன்.

“அப்படியெல்லாம் இல்லம்மா! எங்க காதல் விவகாரம் ரெண்டு பேர் வீட்டிலும் தெரிஞ்சி போச்சு. நான் கொஞ்சம் உறுதியாயிருந்து எங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டேன். ஆனா, லதா வீட்ல பிரச்சனை பண்றாங்க.

என்னை நம்பி வா. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னா, இவ பயப்படறா. எனக்கு எல்லோருமே வேணும்னு அழறா. எல்லோர் சம்மதமும் கிடைச்சாதான் கல்யாணம். இல்லனா, இப்படியே இருக்கேன்னா.

அதுக்குக் கொஞ்சம் கோபத்தோடு பேசிட்டேன். பத்து நாளா லீவ் போட்டுட்டு வீட்ல உட்கார்ந்துட்டா. போன் பண்ணா எடுக்கறதில்ல. ரெண்டு நாளைக்கு முன்ன வீட்டுக்குப் போனேன். பேச்சு பெரிசாகி, அவங்க அண்ணன் அடிக்க வந்துட்டார்.

நானும் கையை ஓங்கிட்டேன். இவள் ஒரேடியா உனக்கும், எனக்கும் ஒத்துவராது. அதனால நாம பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டா. என்னைப் பத்திக் கொஞ்சமாவது நினைச்சிப் பார்த்தாளா!” மனத்திலிருந்த ஆதங்கத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தான்.

சிவா, லதாவின் காதலை அவர்கள் இருவருமே அறிவர். இத்தனைக்கும், சிவாவிடம் முதலில் காதலைச் சொன்னவளே லதாதான். ஆனால், இன்று தங்களது காதலை முறித்துக் கொள்வதாகச் சொல்வதும் அவளே!

அவன், அவளை எந்த அளவிற்கு நேசித்தான் என்பது, மதுவிற்கு நன்றாகவே தெரியும். திடீரென, அவள் இப்படிப் பின்வாங்குவது அவளுக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

"கவலைப்படாதீங்க சிவா! பிரச்சனைன்னு வந்தா, அதுக்கு முடிவுன்னு ஒண்ணு இருக்கும். இந்தத் தற்காலிகப் பிரிவுகூட, உங்களுக்குச் சாதகமா முடியலாம். இதையும், பாசிடிவ் அப்ரோச்லயே எடுத்துக்கலாமே” என அவனைத் தேற்றினாள்.

“எதையும் சொல்றது ஈஸி. நமக்கு நடக்கும் போதுதான், அந்த வலி தெரியும்” என்றான் விரக்தியுடன்.

அவனது பதில், அவர்களது மனத்தைச் சுருக்கென தைத்தது.

“நல்லதே நடக்கும்னு கொஞ்சம் நம்புவோமே. உண்மையான காதலுக்குச் சக்தி அதிகம். என்னைக்குமே அது பொய்க்காது” என்றவளை, விழிகள் விரியப் பார்த்த மதுவிற்கு வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.

“நான் எத்தனையோ முறை யோசிச்சிருக்கேன். காதல் நிறைவேறலன்னா, ஏன் தற்கொலை செய்துக்கணும்னு? இன்னைக்கு நான் அனுபவிக்கும் போதுதான், அந்த வலி என்னன்னு புரியுது. மனசுக்குப் பிடிச்சவங்களோட உதாசீனத்தைத் தாங்கவே முடியாது” சொல்லிக்கொண்டே அங்கிருந்து அகன்றான்.

சிவாவின் பேச்சு, மதுவின் சங்கடத்தை அதிகப்படுத்தியது. ஏற்கெனவே இருந்த தலைவலி, இப்போது இன்னும் அதிகமானது போலத் தோன்ற அலுவலக வராண்டாவில் வந்து நின்றாள்.

பின்னாலேயே வந்த கீதா, "என்ன மது?” சற்று பயத்துடன் கேட்டவளிடம், “நீ போ. நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்” என்றாள் அழுத்தமாக.

“நீ யாரைப் பத்தி நினைச்சிட்டு இருக்கேன்னு எனக்குத் தெரியும். தேவையில்லாததை நினைக்காதே. எல்லாமே முடிஞ்சி போனது” என்றாள்.

மது எதுவும் சொல்லாமல், வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள்.

"நீ சுரேஷைப் பத்தித் தானே நினைச்சிட்டிருக்க" கீதா தயங்கத்துடன் கேட்க, மது கோபத்தில் விழிகளை உருட்டினாள். கைகளை மடக்கித் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தினாள்.

"போதும் கீதா நான் எதுக்காக அவனைப் பத்தி நினைக்கணும்? அவன் செய்த வேலைக்கு அவனை... என்னுடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்காதவங்களை நான் ஏன் மதிக்கணும்? இது எல்லாத்தையும் விட, வேண்டியவங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு எதுக்கு?" கோபத்துடன் கடைசி வாக்கியத்தை அழுத்திச் சொல்லி விட்டுச் சென்றாள்.

அலுவலகத்திற்குள் இருக்க முடியாமல் மொட்டை மாடியில் உலவிக்கொண்டிருந்த சித்தார்த் நேரமாதை உணர்ந்து கீழே வந்தான். வராண்டாவில் நின்றிருந்த மதுவையும், அவளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த கீதாவையும் பார்த்ததும் அப்படியே நின்றான்.

சுரேஷ் என்ற பெயர் அவனது காதில் விழ, விறைப்புடன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். மது பேசப் பேச அவனுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது.

‘இவள் என்ன சொல்கிறாள்? வேண்டியவங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு எதற்கு? இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்? அப்படியானால்... அன்றைக்கு நான் பார்த்தது, கேட்டது எல்லாமே பொய்யா? இல்லை, இப்போது இவள் பேசியதை, நான் சரியாகக் கேட்கவில்லையா? ஒருவேளை நான்தான் அன்று நடந்ததைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டேனோ! அப்படியிருந்தால்…’ அந்த நினைவே அவனுக்குப் பயமாக இருந்தது.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் - 4


“ஆகாஷ்! ஆர்த்தி! எழுந்திருங்கடா, செல்லம்ஸ். சீக்கிரம் உங்க ஹோம் ஒர்க்லாம் முடிச்சிட்டா, நாம எல்லோரும் அவுட்டிங் போகலாம்" குழந்தைகளைக் கொஞ்சி எழுப்பிக் கொண்டிருந்தாள் மீரா.

“பீச்சுக்குப் போலாம்மா!” தூக்கத்திலேயே ஆகாஷ் முனக, “பாப்பாக்கு ஐஸ்கிரீம்...” கண்ணைக் கசக்கியபடி தனது தேவையைச் சொன்னாள் குட்டிப் பெண் ஆர்த்தி.

“ஓகே! ஆனா, சீக்கிரம் எழுந்தால்தான் இதெல்லாம். கெட் அப் கெட் அப்...” என்றாள் மீரா.

“ப்ளீஸ்மா! இன்னைக்குச் சண்டே தானே. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறோம்மா!” ஆகாஷ் கொஞ்சலாகச் சொல்ல, மீராவுக்கு எரிச்சலாக வந்தது.

“ஏங்க, நீங்களாவது எழுந்திரிக்கக் கூடாதா? குழந்தைங்க தான் தூங்கறாங்கன்ன நீங்களுமா?” அவளது எரிச்சலெல்லாம், அத்தனை ஆர்ப்பாட்டத்திற்கும் அசராமல் இழுத்து மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த கணவனிடம் திரும்பியது.

ஜாகிங் முடித்துக்கொண்டு வந்த அஷ்வந்த், “அண்ணி!” என்றபடி அறைக்கதவைத் தட்டினான்.

“வா அஷ்வந்த்!” என்றாள் மீரா.

“என்ன அண்ணி, சுப்ரபாதம் இன்னும் முடியலையா?” சிரித்துக்கொண்டே கேட்டான்.

“எங்கே? இந்த மூணு கும்பகர்ணன்களையும் எழுப்பறதுக்குள்ள, என் தொண்டை வறண்டு போறது தான் மிச்சம். குழந்தைகளாவது பரவாயில்லை, உங்க அண்ணணும் சேர்ந்து படுத்தினா என்ன செய்றது?” சலிப்புடன் மைத்துனனிடம் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "அண்ணி" என்றழைத்தபடியே வந்தாள் நேத்ரா.

“இன்னைக்கு அவுட்டிங் போக, இதுல எந்த டிரெஸ்ஸைப் போட்டுக்கட்டும்?” இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டு வந்திருந்த உடைகளுடன் கேட்டவளைப் பார்த்து ஆயாசமாக இருந்தது மீராவிற்கு.

‘ஆர்த்தியும், ஆகாஷும் சிறு குழந்தைகளென்றால், இவள் வளர்ந்த குழந்தை’ மனத்திற்குள் நாத்தனாரைச் செல்லமாகத் திட்டிக்கொண்டாள் மீரா.

“ஏய்! நீ என்ன சின்னக் குழந்தையா? எல்லாத்துக்கும் அம்மாவும், அண்ணியும் துணைக்கு வேணுமா உனக்கு? ப்பே…” தன்னுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரியைக் கடுப்புடன் விரட்டினான் அஷ்வந்த்.

“உனக்கென்னடா வந்தது? மூஞ்சியப் பாரு…” திட்டிக்கொண்டே கையிலிருந்த உடைகளை அவன்மீது தூக்கியெறிந்தாள்.

“உன்ன…” அவன் வேகமாக எழ, “ஐயோ அண்ணி! ஹெல்ப் ஹெல்ப்…” கத்திக் கொண்டே மீராவின் பின்னால் ஒளிந்தாள்.

“கடவுளே! இப்போ நீ, என்னைக் காப்பாத்து…” மீரா புலம்ப, தங்கையைத் துரத்துவதை நிறுத்தினான் அஷ்வந்த்.

“உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்டி” என்றவன், “அண்ணி! இப்போ அண்ணனை எழுப்பணும் அவ்வளவு தானே! இப்பப் பாருங்க” என்றவன், ஒரு பட்ஸை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த ஆதியின் மூக்கில் விட்டான்.

தும்மலுடன் எழுந்த ஆதி, “ஏன்டா! மனுஷனைக் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடமாட்டிங்களா?” எனத் தூக்கம் கலைந்த எரிச்சலில் கத்தியவன், மீரா சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்பதைக் கண்டதும், கடுகடுவெனப் பார்த்தான்.

“ஏன்டி! அவன்தான் இப்படிப் பண்றான்னா, நீயும் பார்த்துச் சிரிக்கிற? காலங்கார்த்தால வந்து என் உயிரை வாங்குறீங்க எல்லோரும்” உறக்கம் கலைந்த ஆத்திரத்தில் கத்தினான் ஆதித்யா.

இடுப்பில் கைவைத்தபடி, “ஹலோ! மணியென்ன தெரியுமா? எட்டு. இது உங்களுக்குக் காலங்கார்த்தாலயா, போங்க... போய்க் குளிச்சுட்டு வாங்க” கணவனை வற்புறுத்தி எழுப்பிக் குளியலறைக்குள் தள்ளினாள்.

எதையோ சாதித்துவிட்டதைப் போன்ற நினைப்புடன், “இத்தனை நாளா இந்த ஐடியா எனக்கு வராமல் போச்சே அஷ்வந்த்! இப்படிக் கரடி மாதிரிக் கத்திட்டு இருந்திருக்க தேவை இருந்திருக்காது” என்று பெருமூச்சு விட்டாள்.

பாத்ரூமிலிருந்து எட்டிப் பார்த்த ஆதி, “அப்போ, நீதான் இவ்வளவு நேரம் கத்தியதா! நான் கரடிதான் கத்துதோன்னு நினைச்சேன்” என்று தீவிர பாவனையுடன் சொல்லிவிட்டு கதவை மூடிக்கொள்ள, நேத்ரா அடக்க முடியாமல் சிரித்தாள்.

கணவனின் பதிலில் சற்று விழித்த மீரா சமாளிப்புடன், “ஏன் சொல்லமாட்டீங்க? நைட்ல பக்கத்துல ஆள் தூங்கறாங்களேங்கற நினைப்புக்கூட இல்லாம, நீர்யானை மூச்சு விடுறது மாதிரி கொறட்டை விட்டுத் தூங்கறவங்க பேசற பேச்சைப் பாரு... என்றவள், “ரெண்டு காதிலேயும் பஞ்சை அடைச்சிகிட்டுத் தூங்கினாலும் நிம்மதியா தூங்க முடியுதா? மாசா மாசம் ரெண்டு பண்டல் பஞ்சு வாங்க வேண்டியிருக்கு” எனப் பதிலுக்குக் கத்தினாள்.

இவர்களது ஆர்ப்பாட்டத்தில் விழித்துவிட்ட குழந்தைகள், ஆர்வத்துடன் அவர்களது வாதத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அஷ்வந்த் அனைவரது முகத்தையும் உற்றுப் பார்த்தான்.

“டேய் அஷ்! என்னடா ஆச்சு? இப்படி திருதிருன்னு முழிக்கிற” - நேத்ரா.

“எனக்கு இப்போ சூ- ல (zoo) இருக்கிற பீலிங் வருது. நீர்யானை,கரடி...” சொல்லிக்கொண்டே திரும்பியவன், “ஏய், நேத்ஸ்! அப்படியே இரு. அசையாதே... இந்த ஆங்கிள்ள உன்னைப் பார்க்கும் போது, மூக்குக் கொஞ்சம் உள்ள போய்த் தாடை கொஞ்சம் வெளியே வந்தா மாதிரி இருக்குடி” எனத் தீவிர முகபாவத்துடன் சொன்னவன், அவளது முகம் போன போக்கைப் பார்த்துச் சிரித்தான்.

“அடப்பாவி! என்னவோ ஏதோன்னு நான் அப்படியேயிருந்தா, என்னைக் குரங்குன்னு சொல்கிறாயா... எருமை!” என்றவள், அஷ்வந்தின் முதுகில் ஓங்கிக் குத்தினாள்.

“ஆ! அம்மா!” வலியால் கத்தியவன், “தங்கச்சியாடி நீ? இந்தக் குத்துக் குத்துற. அடுத்து வர்ற ஒலிம்பிக்ல, பாக்ஸிங்குக்குப் போ. நம்ம நாட்டுக்கு ஒரு தங்கம் எக்ஸ்ட்ராவா கிடைக்கும்” எனத் தங்கையிடம் செல்லமாகச் சண்டையிட்டான்.

“ரொம்பக் கொழுப்புல இருக்குடா உனக்கு… இரு அம்மாகிட்டயே சொல்றேன்…” என்று சிணுங்கிக் கொண்டே வெளியே சென்றாள்.

“போய்ச் சொல்லேன்டி! நீ எதைச் சொன்னாலும், அம்மா சிரிக்கப் போறாங்க” என மேலும் அவளை வெறுப்பேற்றினான்.

“சரிதான் போடா!” என்றவள் சமையலறையிலிருந்த அன்னையிடம் ஒன்றுவிடாமல் சொல்லிக் கொண்டிருக்க, அவர் கருமமே கண்ணாக சஷ்டி கவசத்தை முணுமுணுத்தபடி அடுப்பில் எதையோ கிளறிக் கொண்டிருந்தார்.

“நான் சொல்லிட்டே இருக்கேன். நீங்க கவனிக்காம உங்க வேலையைப் பார்த்துட்டு இருக்கீங்க. அந்தத் தடியன் சொன்னதுதான் சரி. உங்களுக்கு அவன்தான் செல்லம்” என்று முறுக்கிக் கொண்டாள்.

டைனிங்கில் வந்தமர்ந்த தேவகி, ஆயாசத்துடன் மகளைப் பார்த்தார்.

“இப்போ என்னடி பண்ணச் சொல்ற? ரெண்டு பேரும் சின்னக் குழந்தைங்களா? இன்னும் ஆறுமாசத்துல டாக்டராகப் போறீங்க…”

அங்கே வந்த அஷ்வந்த், “டாக்டரானா என்ன சண்டைப் போடக்கூடாதா?” அன்னையிடம் கேட்டவன், “ஏன் குண்டூஸ்… நீ சொல்லு” என்று நடுவில் நேத்ராவையும் வம்பிழுத்தான்.

“பார்த்தீங்களா பார்த்தீங்களா… நான் குண்டாயிருக்கேன்னு என்னைக் கிண்டல் பண்றான்” என்று சிணுங்கினாள்.

‘கடவுளே! இன்னைக்குப் பூரா இதுங்களை எப்படிச் சமாளிக்கப் போறேனோ தெரியல’ மனத்திற்குள்ளேயே புலம்பிக் கொண்டார் தேவகி.

அங்கே அத்தனை ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்க, இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் பேப்பரில் மூழ்கியிருந்தான் சித்தார்த். அதற்குள் டைனிங் ஹாலிற்கு வந்துவிட்ட குழந்தைகள் இருவரும் அத்தை, சித்தப்பாவின் அமர்க்களத்தை ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நீங்க ரெண்டு பேரும் படிச்சி டாக்டர் பட்டம் வாங்கப்போறீங்களோ இல்லையோ, வாயாடி பட்டம் வாங்கிடுவீங்க” என்றாள் மீரா.

அதேநேரம் ஆதி வருவதைப் பார்த்த அஷ்வந்த், “என்ன அண்ணி இப்படிச் சொல்லிட்டீங்க? ஆதி அண்ணாவைக் கேட்டுப் பாருங்க, நீங்க இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான், நாங்க ரெண்டு பேரும் இப்படிப் பேச ஆரம்பிச்சுட்டோம்னு சொல்லுவாரு” என்றான்.

“அஷ்வந்த்...” என்று மீரா முறைக்க, “ஏன்டா என்னிடமே வந்து வம்பு பண்றே” என்ற ஆதி, சித்தார்த்திடமிருந்து ஸ்டாக்மார்க்கெட் பேஜை வாங்கிக் கொண்டு அமர்ந்தான்.

“சரி சரி போதும் உட்கார்ந்து சாப்பிடுங்க முதல்ல…” என்றபடி பரிமாற ஆரம்பித்தார் தேவகி. பேப்பரில் ஒரு கண்ணும், டிஃபன் தட்டில் ஒரு கண்ணுமாக இருந்த சித்தார்த்திடம், “கண்ணா! இன்னைக்கு வீட்லதானே இருக்க. எல்லோரும் சேர்ந்து வெளியே போய்ட்டு வரலாம்” என்றார்.

அன்னையின் அன்பான அழைப்பிற்குத் தலையாட்டத் தோன்றினாலும், “இல்லம்மா! கொஞ்சம் வேலையிருக்கு. நீங்க போய்ட்டு வாங்க” என்றான்.

இப்படி எதிலும் ஒரு ஈடுபாடில்லாமல் இருக்கும் இளைய மகனைப் பார்க்க, அவருக்கு வேதனையாக இருந்தது.

“கிட்டத்தட்ட நாலு வருஷம் கழிச்சி இப்போதான், நீ இங்கே வந்திருக்க. எல்லோரும் ஒண்ணா சேர்ந்து இருக்கோம். போய்ட்டு வரலாமே” என்றார் மீண்டும்.

குழந்தைகளும், “வாங்க சித்தப்பா!” என்றழைக்க, மறுக்க முடியாமல் சரியென்றான்.

“அம்மா! முதல்ல ஷாப்பிங்… எனக்கு அந்த டயமண்ட் ரிங் வாங்கிக் கொடுக்கறேன்னு சொன்னீங்க இல்ல. இன்னைக்கு வாங்கிடலாம்” என்றாள் நேத்ரா.

“அலையாதே… அது ஹவுஸ் சர்ஜனை நல்லபடியா முடிச்சா வாங்கித் தரேன்னு சொன்னாங்க. முதல்ல முடி” என்றான் அஷ்வந்த்.

“இங்க பாரு நான் எங்க அம்மாகிட்டப் பேசிட்டு இருக்கேன். நீ நடுவில வராதே…” என்று பொங்கியவள், “அம்மா போலாமா?” என்று கெஞ்சலுடன் கேட்டாள்.

“முதல்ல சொன்னது தான் இப்பவும்” என்றார் அழுத்தமாக.

“அப்போ, சில்க் சாரியாவது வேணும். அதையும் முடியாதுன்னு சொல்லக்கூடாது” என்றாள் கடுப்புடன்.

“சரி. ஆனா, அதைக் கட்டுறதா இருந்தா வாங்கித் தரேன். இல்லனா டையமண்ட் ரிங்கும் கட்” என்றார்.

“தேங்க்யூம்மா!” என்று அன்னையின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“ஐயையோ! புடவைக் கடைக்கா... அந்தக் கடைக்காரனே, அம்மா! என்னால முடியல. இந்தப் புடைவையையாவது எடுத்துக்கோங்கன்னு கெஞ்சும் வரை, வெளியே வரமாட்டாங்களே” என்று அலறினான் அஷ்வந்த்.

“இப்படிச் சொல்றவன் தான், நாளைக்குப் பொண்டாட்டி முந்தானையைப் பிடிச்சிக்கிட்டுச் சுத்தி வருவாங்க. நீ எத்தனைக் கடை ஏறியிறங்கப் போறேன்னு நானும் பார்க்கத்தான் போறேன்” என்று சாபம் விட்டாள் நேத்ரா.

“ம், பொண்டாட்டி சொல்வதைக் கேட்டுக்கிட்டு ஆட, நான் என்ன ஆதி அண்ணாவா?” என்று அவன் கேலியாகச் சொல்ல, உணவருந்திக் கொண்டிருந்த ஆதி நிமிர்ந்து பார்த்தான்.

"என்னடா, திமிரா? நானும் பார்க்கிறேன். காலையிலிருந்து என்னை வீணா வம்புக்கு இழுக்கற. சின்னப் பையனா ஒழுங்கா இரு" என மிரட்டலாகச் சொன்னான்.

"அதானே! எப்போ பாரு அண்ணன்கிட்டயே என்ன வம்பு?" கணவனுக்கு ஒத்து ஊதினாள் மீரா.

அவன், நம்பமுடியாத ஒரு பார்வையை மனைவியின் மீது வீச, அவள் அடக்க முடியாமல் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.

அவனது முறைப்பைக் கண்டதும், "சாரிங்க! என்னால சிரிப்பை...” என்றவள் மேலும் சிரிக்க, ஆதியும் பட்டெனச் சிரித்து விட்டான்.

பிள்ளைகளின் சிரிப்பையும் சந்தோஷத்தையும் கண்ட தேவகியின் மனநிறைவுடன், ‘கடவுளே! எங்க குடும்பம் இதே போல சந்தோஷமா, ஒற்றுமையா இருக்கணும் என வேண்டிக்கொண்டார்.

குடும்பத்துடன் ஷாப்பிங், சினிமா என்று சுற்றிவிட்டு மாலையில் கடற்கரைக்கு வந்தனர். ஆர்த்திக்கும், ஆகாஷுக்கும் மணலைப் பார்த்தவுடன், கொண்டாட்டமாக விளையாட ஆரம்பித்துவிட்டனர். பெரியவர்கள் இருவரும் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்கள் விளையாடுவதை ரசித்துக்கொண்டு இருந்தனர்.

மீரா, ஆதி, அஷ்வந்த்,நேத்ரா நால்வரும் அலையில் காலை நனைத்துக்கொண்டு அலை உள்ளே செல்லும் போது உடன் செல்வதும், அலை வரும்போது கரைக்கு ஓடி வருவதுமாக விளையாடிக்கொண்டு இருந்தனர். இவர்களுடன் இணையாமல், கரை ஓரமாகவே கால்களை நனைத்தபடி நடந்து கொண்டிருந்தான் சித்தார்த்.

‘வேண்டியவங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு எதுக்கு?’ அவள் பேசிய வார்த்தைகளே, மீண்டும் மீண்டும் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. கடலலையைப் போலவே, அவனது உள்ளமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

‘இத்தனை நாள்களாக, அவள் மீதிருந்த கோபம் சரி தானா?’ என்ற கேள்வியும், ‘தானும், அதில் தவறு செய்திருக்கலாமே’ என்ற எண்ணமும், தோன்றிய நிமிடத்திலிருந்து அவளை வெறுத்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த மனத்தில், அவள் மீதான நேசம் இம்மியளவும் குறையாமல் மேலும் வளர்ந்திருப்பது புரிந்தது.

‘தான் புரிந்து கொண்ட அத்தனையும் பொய்யென்றால், இதை எப்படிச் சரி செய்வது?’ என்ற குழப்பத்திலேயே, கடந்த இரண்டு நாள்களாக உழன்று கொண்டிருந்தான்.

அப்போதுதான், அதே யோசனையில் நீண்ட தூரம் வந்துவிட்டோம் எனப் புரிய வந்தவழியே திரும்பியவன், ஏதோ தோன்ற அதே வேகத்தில் மீண்டும் பழையபடியே திரும்பிப் பார்த்தான்.

சற்றுத் தொலைவில் கீழே குனிந்து எதையோ தேடிக்கொண்டிருந்த மதுவைக் கண்டதும், மனத்தில் சிறு மகிழ்ச்சியொன்று குமிழிட, அவளை உற்றுப் பார்த்தான்.

கரையோரம் ஒதுங்கியிருந்த சிறுசிறு சிப்பிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும், ‘இன்னமும் இவள் இதையெல்லாம் விடவில்லையா?’ என எண்ணி மெல்லப் புன்னகைத்தான்.

அதேநேரம், யாரோ அவளை அழைக்கும் சப்தம் கேட்டு, சுயநினைவுக்கு வந்தான்.

“டைம் ஆச்சு! கிளம்பலாம்டீ” என்றபடி அங்கே வந்த வித்யாவை அடையாளம் கண்டுகொண்டான்.

“கிளம்பிட்டேன் கிளம்பிட்டேன்” என்றவள், சேகரித்த சிப்பிகளைத் தனது கைக்குட்டையில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு நடந்தாள்.

சற்றுநேரம் அங்கேயே நின்றிருந்தவன் ஆழமூச்செடுத்துக் கொண்டு மீண்டும் வந்த வழியே திரும்ப, யார் மீதோ மோதிக்கொள்ள இருந்தவன் சுதாரித்து நின்றான்.

அங்கே, குறும்புச் சிரிப்புடன் நின்றுகொண்டிருந்த அஷ்வந்தைப் பார்த்தவுடன், “என்னடா! இவ்வளவு பக்கத்துல வந்து நிக்கிற?” கேட்டுக்கொண்டே காற்றில் கலைந்த தனது கேசத்தைக் கோதிவிட்டுக் கொண்டான்

எதுவும் சொல்லாமல் சிரித்த அஷ்வந்த், வேண்டுமென்றே சித்தார்த்தின் முதுகுக்குப் பின்புறம் எட்டிப் பார்த்தான்.

அவனது செய்கைக்கான காரணம் புரிய, “அது... தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருந்தது” சற்று அசடு வழியச் சொன்னான்.

“எதுக்குண்ணா! இப்படித் திணறுற? நான் உன்னை ஒண்ணுமே கேட்கலையே” சிரித்துக்கொண்டே சொன்னான் இளையவன்.

தன்னிலை விளக்கம் கொடுத்து மாட்டிக்கொண்டது விளங்க, அமைதியாக நடக்க ஆரம்பித்தான்.

“அண்ணா! உண்மையாவே தெரிந்த பொண்ணு மாதிரி இருந்ததுன்னு பார்த்தியா? இல்லை, அந்தப் பெண்ணைப் பத்தித் தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தியா?”

சடாரென நிமிர்ந்தவன், “ஓவரா கற்பனை பண்ணாதே! அதெல்லாம் ஒண்ணுமில்ல” கடுகடுவெனச் சொல்லிவிட்டு நடையில் வேகத்தைக் கூட்டினான்.

இளையவனோ விடாமல், “உண்மையிலேயே ஒண்ணுமில்லையா?” அப்பாவியாக விழிகளை விரித்துக் கேட்டான்.

தம்பியின் பாவனையில், சித்தார்த்திற்குச் சிரிப்பு வந்தது. ஆயினும், முகத்தை இறுக வைத்துக்கொண்டு மௌனமாக நடந்தான்.

‘அண்ணா எனக்கே காது குத்துகிறாயா? தெரிந்த பெண்ணாக இருந்திருந்தால், நீ போய்ப் பேசியிருக்க வேண்டும். தெரியாத பெண்ணாக இருந்தால், பார்த்தவுடன் திரும்பி வந்திருக்க வேண்டும். யாரிடம் கதை விடுகிறாய். உண்மை என்றாவது வெளியே வந்து தானே ஆகவேண்டும்’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான் அஷ்வந்த்.

சித்தார்த்தின் உடல் மட்டும் அங்கிருக்க, மனம் மதுவையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘பேசவேண்டும், அவளிடம் மனம்விட்டுப் பேசவேண்டும். அதற்குமுன் அன்று நடந்தவைகளை அறிந்து கொண்டே ஆகவேண்டும்’ என்ற தீர்மானத்திற்கு வந்தான்.



Comments : https://sudharavinovels.com/threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1120/
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் - 5​



மறுநாள் அலுவலகத்தில், “ஹாய் கைய்ஸ்! சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சி” தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டபடி, ஜீவாவின் அறைக்குள் வந்தான் சித்தார்த்.

அவனது வரவிற்காக காத்திருந்தவர்கள் இருக்கையிலிருந்து எழ முயல, “உட்காருங்க ப்ளீஸ்!” என்றபடி மதுவின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“இன்னைக்கு நாம புது அனிமேஷன் ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் இங்கே சேர்ந்திருக்கோம். இந்தப் ப்ராஜெக்டுக்கு நீங்கதான் பொருத்தமா இருப்பீங்கன்னு, ஜீவா ரெகமண்ட் பண்ணினார். அரைமணி நேரம் ஓடக்கூடிய ஷார்ட் பிலிம். ஆனா, முழு ஸ்டோரியையும் கிரியேட் பண்றதுல இருந்து, டப்பிங் வரைக்கும் நாமதான் செய்யப்போறோம். நமக்கு இது புது விஷயம் இல்ல. இருந்தாலும் நம்ம கம்பெனி பேரை, இன்னும் மேலே கொண்டு வர நல்ல வழி” சொல்லிக் கொண்டே ப்ராஜெக்ட் சம்மந்தமான பேப்பர்களை ஆளுக்கொன்றாகக் கொடுத்தான்.

‘இந்தப் ப்ராஜெக்டை ஏற்றுக்கொள்வதா? இல்லையா’ என்ற குழப்பத்துடன் இருந்தவளுக்கு, சட்டென முடிவைச் சொல்ல முடியவில்லை.

தீர்க்கமான பார்வையை அவள்மீது செலுத்திய சித்தார்த், அவளது உணர்வுகளைப் படித்துவிட்டவனாக இருக்கையிலிருந்து எழுந்தான்.

“யாருக்காவது, இந்தப் ப்ராஜெக்ட் பண்ண முடியாது, விருப்பம் இல்லன்னு நினைச்சா, லஞ்ச் டைம்க்குள்ள சொல்லிடுங்க. வேறவொரு ஆளை நாங்க தேர்ந்தெடுக்கணும்” என்றவன் விருட்டென எழுந்து தனது அறைக்குச் சென்றான்.

மற்றவர்களும் விடை பெற்றுச் செல்ல, “ஒரு நிமிஷம் மதுமிதா!” என்றான் ஜீவா.

அனைவரும் அறையிலிருந்து வெளியேறியதும், "மதுமிதா ஏதாவது பிரச்சனையா?" என்றான்.

தன்னைக் கண்டுகொண்டானே என்ற குன்றலுடன், “அது…” என்றவள் தயக்கத்துடன் நிறுத்தினாள்.

சீறலாக மூச்சுவிட்டவன், “இந்தப் ப்ராஜெக்ட் உங்க டேலண்டை வெளிப்படுத்த கிடைச்சிருக்கும் நல்ல ஆப்பர்ச்சூனிட்டி. அதைப் பயன்படுத்திக்கறது உங்களுடைய சாமர்த்தியம். ஒருவேளை... நீங்க சித்தார்த்கூட வொர்க் பண்ணத் தயங்கறீங்களோ!" என்றான்.

அவனது பெயரைக் கேட்டதுமே, அவளது உடல் மெல்ல அதிர்ந்தது.

“பழகற வரைக்கும், அவனைப் புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சம் கெடுபிடியா பேசுவானே தவிர… நைஸ் பெர்சன்” என்று நண்பனுக்காகப் பரிந்து பேசினான்.

அவள் சற்றும் சமாதானம் ஆகவில்லை என்பதை, அவளது அலைபாய்ந்த விழிகளிலேயே கண்டு கொண்டவன் அதிருப்தியுடன், “இதுக்கு மேலே நீங்கதான் முடிவு செய்யணும்” என்று தோள்களைக் குலுக்கினான்.

“ம்ம்” என்றவள் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

தன் இடத்திற்கு வந்து அமர்ந்தவள் எவ்வளவு யோசித்தும், ஒரு முடிவிற்கு வரமுடியாமல் திண்டாடினாள்.

அதேநேரம் அவளது மொபைல் ஒலிக்க, எடுத்தவளது மனம் சற்று ஆறுதலடைய, “சொல்லுங்கப்பா!” என்றாள் பாசத்துடன்.

மது தந்தையுடன் போனில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சிவா, கீதாவிடம் தான் கண்ட விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.

“சித்தார்த்துக்கு, நம்ம மதுவை ஏற்கெனவே தெரியும்னு நினைக்கிறேன்" என்றவனை, நிதானமாகப் பார்த்தாள்.

“சான்சே இல்லை சிவா! நானும், அவளும் ஒண்ணாத்தானே படிச்சோம். ஆண்களிடமும் பழகுவாள். ஆனா, ஒரு அளவுக்கு மேல யாரையும் நெருங்க விட்டதில்ல. கொஞ்சம் க்ளோஸ்னா... சுரேஷ் மட்டும்தான். மத்தபடி எனக்குத் தெரிஞ்சி சித்தார்த்..." என்றவள், இல்லை என்பதைப் போலத் தலையை அசைத்தாள்.

“இல்ல கீதா! நிச்சயமா ஏதோ இருக்கு. இல்லனா, ஒருத்தரை முதன்முதல்ல பார்த்ததும் யாராவது அதிர்ச்சி ஆவாங்களா?” என்று அவன் கேள்வி எழுப்ப, கீதா வெகுவாகக் குழம்பிப் போனாள்.

“சித்தார்த் வந்த அன்னைக்கே, மதுவைப் பார்த்த பார்வையில் அப்படி ஒரு கோபம் தெரிஞ்சது. மதுவும், அவரை அவாய்ட் பண்றது போலத்தான் தெரியுது. அவரைப் பார்த்தாலே டிஸ்டர்ப் ஆகறா” என்றவன் அலுவலகத்தில் தான் கவனித்தவற்றை சொன்னான்.

போனில் பேசிக்கொண்டிருந்த மதுவை, ஆராய்ச்சியுடன் பார்த்தாள்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, சித்தார்த்தின் அறைக்கதவைத் தட்டினாள் மதுமிதா.

"எஸ், கம் இன்!" என்றான் தன் கம்பீரக் குரலில்.

அவள் உள்ளே செல்ல, கணினியிலிருந்த பார்வையை விலக்கி அவளைப் பார்த்தவன், புருவங்கள் லேசாக நெறிய, “உட்காருங்க” என்று இருக்கையைக் காட்டினான்.

“தேங்க்யூ!” என்றவள் உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தியப்படி, “ப்ராஜெக்ட்ல நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றாள்.

ஆழ்ந்த பார்வை ஒன்றை வீசியபடி, "பரவாயில்லையே... ஜீவா, உங்களைக் காம்ப்ரமைஸ் பண்ணிட்டான் போலிருக்கே” சற்றுக் கேலியான குரலில் கேட்டான்.

அவனுக்கு முகத்திலடித்தாற் போல பதில் சொல்லத் துடித்த நாவைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, "இல்லை சார்!" என்றவளை எரிச்சலுடன் கை நீட்டி தடுத்தவன், "முதல்ல இந்தச் சார், மோரை நிறுத்துங்க" என்றான் எரிச்சலுடன்.

‘இப்போது நான் பெயர் சொல்லி அழைப்பதுதான் முக்கியமா?’ கடுப்புடன் நினைத்துக் கொண்டவள், "சாரி ஸ்.சா..” என்றவள் சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு, “சாரி சி.த்.தா.ர்.த்…” என்றாள் தயக்கத்துடன்.

அவனது விழிகள், அவளைக் கனிவுடன் வருடின. ‘சுரேஷைப் பற்றிக் கேட்டு விடுவோமா?’ எழுந்த எண்ணத்தை அதே வேகத்தில் அடக்கிக் கொண்டான்.

‘இன்றைக்குத் தான் பேசவே ஆரம்பித்திருக்கிறாள். உடனே, அவனைப் பற்றிய பேச்செடுத்தால், வேறு வினையே வேண்டாம்’ என்று நிதானப்படுத்திக் கொண்டான்.

"நான் கிளம்பட்டுமா" என்று கேட்டாள் மெதுவாக.

சிந்தனை கலைந்தவனாக, "ம்ம்" என்றான்.

அதற்காகவே காத்திருந்ததைப் போல, “தேங்க்யூ!” என்றபடி எழுந்து விடுவிடுவென அறையிலிருந்து வெளியேறியவளை, ஆழ்ந்து பார்த்தான்.

*********************​

வீட்டிற்கு வந்தவள் உடையைக்கூட மாற்றாமல், கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். மனம் எதிலும் இலயிக்காமல் தள்ளாடிக்கொண்டிருந்தது. வாய்விட்டுக் கதறி அழவேண்டும் போலிருந்தது. ஆனால், அதைச் செயல்படுத்த முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க, கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

யாரோ அவளது தோளைத் தொட, சடாரென நிமிர்ந்தாள். காஃபி கப்புடன் நின்றிருந்த அன்னையைக் கண்டதும், அவளது மூச்சு சீரானது.

“என்னம்மா நீங்களே வந்துட்டீங்க? கூப்பிட்டிருந்தா நானே கீழே வந்திருப்பேனே” என்றாள் சமாளிப்பாக.

தன்னைத் துளைக்கும், அன்னையின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள்.

“காஃபி ஆறிடப் போகுது. குடி!” என்றவர் இறுக்கமான முகத்துடன் வெளியேற, ஓய்ந்து போனவளாக நெற்றியைத் தடவியபடி அமர்ந்தாள்.

முகத்தைக் கழுவிக்கொண்டு அவள் கீழே வரவும், “ஹாய் மது" உற்சாகமாக அழைத்தபடி வீட்டினுள் நுழைந்தான் தீபக்.

இதழ்களில் மெல்லிய முறுவல் படர, “வாங்க அத்தான்!" என்றாள்.

“வாப்பா தீபக்!” என்ற விமலாவின் அருகில் சென்று அமர்ந்தவன், “வந்துட்டேன் ஆன்ட்டி! அங்கிள் எங்கே?” என விசாரித்தான்.

“வாக்கிங் போயிருக்கார். வர்ற நேரம்தான்” என்றார்.

‘நல்ல நேரத்துல வந்தேன்டா சாமி! அவர் வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆகிடணும். அவர் கைல மாட்டேனேன்னா அவ்ளோதான். யோகா பத்தியும், டயட் பத்தியும் ஒரு லெக்சர் அடிச்சிட்டுத்தான் ஓய்வார். தேவையா எனக்கு!’ என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தான்.

அவனது முகபாவத்தை வைத்தே விஷயத்தை உணர்ந்து கொண்டவளுக்குச் சிரிப்பு குமிழிட்டது.

“என்னப்பா! நான் கேட்டுட்டே இருக்கேன். நீ ஏதோ யோசனையில் இருக்க...” என்ற விமலாவின் விளிப்பில் நிதானத்திற்கு வந்தான்.

“ஹா… என்ன ஆன்ட்டி கேட்டீங்க?” என்றவனை, ‘சரியாப் போச்சு’ என்ற ரீதியில் பார்த்தார் விமலா.

“அத்தானே, எப்போ கிளம்பலாம்னு இருக்கார். இதுல ரொம்ப நாள் கழிச்சி வந்ததுக்கு நீங்க விருந்து சாப்டுட்டுப் போகச் சொல்றீங்க” என்று நகைத்தாள்.

அவளைப் போலியாக முறைத்தவன், “ஹலோ மேடம்! நான் அங்கிளைப் பார்த்துட்டுப் போகணும்ங்கற முடிவோட தான் வந்திருக்கேன். நீங்க போய்ச் சூடா காஃபியோட வாங்க” என்றான்.

“நம்பிட்டேன் நம்பிட்டேன்” என்றபடி சிரிப்புடன் அங்கிருந்து சென்றாள்.

அவள் பார்வையிலிருந்து மறைந்ததும், “என்ன ஆன்ட்டி ஏதாவது பிரச்சனையா? திடீர்ன்னு போன் பண்ணி வரச்சொன்னீங்க? மதூ….” என்றவனது பார்வை, அவள் சென்ற திசையை வெறித்தன.

அவர் மென்குரலில் சொன்னதை, மௌனமாகக் கேட்டுக்கொண்டான்.

“நீங்க கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கறேன்” என்று ஆறுதலுடன் அவரது கரத்தைப் பற்றிக் கொண்டான்.

“அந்த நம்பிக்கை இருக்கறதால தான், என் உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்கேன்” என்று கண்கள் கலங்கக் கூறியவரை, ஆதரவுடன் நோக்கினான்.

மதுமிதா இருவரையும் ஆராய்ச்சியாகப் பார்த்துக்கொண்டே காஃபியை அவனிடம் கொடுத்தாள்.

“மது! நெக்ஸ்ட் வீக் என் ஃப்ரெண்ட் வீட்ல ஒரு விசேஷம். கிஃப்ட் வாங்கணும். உன்னோட சாய்ஸ் எப்பவுமே நல்லா இருக்கும்னு அம்மா, உன்னையும் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க” என்றவனை அமைதியாகப் பார்த்தாள்.

“வர்றதானே…” என்று கேள்வியுடன் நோக்கினான்.

“ம்ம்…” எனத் தலையசைத்தாள்.

“ஓகே, நாளன்னைக்கு இதே நேரத்துக்கு வரேன். ரெடியா இரு” என்றவன் மேலும் இரண்டு மணிநேரம், அவர்களுடன் செலவிட்டு விட்டே கிளம்பினான்


*************​

தன்னுடைய சந்தேகத்திற்கு விடை கிடைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் சித்தார்த். அதற்கு ஒரே வழி ரமேஷிடம் பேசுவது மட்டுமே. இனியும், குழப்பத்துடனும், ஏமாற்றத்துடனும் வாழ்க்கையைக் கடக்க முடியாது என்று எண்ணியவன் தனது லேப்டாப்பை ஆன் செய்தான்.

“ஹாய் ரமேஷ்! எப்படி இருக்க?” ஸ்கைப்பில் நண்பனை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தான் சித்தார்த்.

“நல்லா இருக்கேன். ம்ம், நீயும் செம ஸ்மார்ட்டா இருக்கேடா. அம்மா கைப் பக்குவத்துல சாப்பாடு இல்லயா!” என்றான் சிரிப்புடன்.

“நிச்சயமா! நம்ம சொந்தங்களோட இருக்கறதே, பாதி தெம்பைக் கொடுத்திடுது” என்று நண்பனின் கூற்றை ஆதரித்தான் சித்தார்த்.

அவனது தம்பி சுரேஷை, தங்கை தீபா பற்றி விசாரித்துவிட்டு, பொதுவாகச் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தவன், “ரமேஷ்! எனக்கு ஒரு உண்மை தெரியணும்” என்றான் ஆழ்ந்த குரலில்.

“உண்மையா! என்ன பொய்ச் சொன்னேன்? உனக்கு உண்மையைச் சொல்ல?” எனப் புரியாமல் கேட்டான்.

“சுரேஷோட… சொல்லப்போனா, ஒரு வகைல நம்ம எல்லோருடைய வாழ்க்கையும் மாறிப் போக யார் காரணம்?” என்றான்.

குழப்பத்துடன், “அதுக்கும் நம்ம வாழ்க்கைக்கும் என்னடா சம்மந்தம்?” என்று கேட்டான்.

“சரி, என்னோட வாழ்க்கைன்னு வச்சிக்கோ” என்றான் சித்தார்த் பொறுமை இழந்தவனாக.

குழப்பமும், வியப்புமாக நண்பனைப் பார்த்தவன் மௌனமாகவே இருக்க, “சுரேஷ்கிட்டக் கேட்டுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது ரமேஷ். ஆனா, அதிலிருந்து மீண்டு வந்திருக்கறவனைக் கேட்டுத் தர்மசங்கடப்படுத்த எனக்கு விருப்பமில்ல” என்றான் அழுத்தமாக.

சில நொடிகள் இருவருக்கிடையிலும், ஆழ்ந்த அமைதி நிலவ, “நிச்சயமா மது இல்லண்ணா!” என்ற சுரேஷின் குரலில் இருவரும் சுதாரித்துப் பார்த்தனர்.

சுரேஷ், ரமேஷின் பின்னால் வந்து நின்றான்.

“நீ எப்போடா வந்த?” என்ற அண்ணனுக்கு, “சித்தார்த் அண்ணா கேள்வி கேட்கும் போதே வந்துட்டேன்” என்றவன், கணினி திரையில் தெரிந்தவனைப் பார்த்து, “நான் சொல்றது உண்மை” என்றான்.

கண்களை இறுக மூடிய சித்தார்த்தின் முகம், பெரும் வேதனையை வெளிப்படுத்தியது.

ரமேஷ், சந்தேகத்துடன் தம்பியைப் பார்த்தான். அவன் மௌனமாக, ‘ஆம்’ என்பதைப் போலத் தலையை அசைக்க, ஆயாசத்துடன் நெற்றியைத் தடவிக் கொண்டான் ரமேஷ்.

இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டவன், “கொஞ்ச நேரத்தில் நானே கூப்பிடுறேன்” என்று ஸ்கைப்பை அணைத்தான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் – 6



ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம், வீட்டின் முன்புறமிருந்த தோட்டத்தில் விமலா ஊஞ்சலில் அமர்ந்திருக்க, அவரருகில் அமர்ந்து பூக்களைச் சரமாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள் மதுமிதா.

“ஹலோ பூக்காரம்மா! என்ன கிளம்பலையா?" என்றபடி கேட்டைத் திறந்துகொண்டு வந்தான் தீபக்.

“எங்கே?" என்றாள் யோசனையுடன்.

"எங்கேயா?” என விழிகள் விரிய கேட்டவன், “என்ன ஆன்ட்டி இது? நான் அவ்வளவு தூரம் சொல்லிட்டுப் போனேன். உங்க பொண்ணு என்னடான்னா, எங்கேன்னு பொறுப்பில்லாம கேட்கறா? சீக்கிரம் ஒரு நல்ல டாக்டர்கிட்டக் காட்டுங்க. இல்லன்னா, ஞாபக மறதி முத்தி... அம்னீஷியாவா மாறிடப் போகுது" என்றான் கிண்டலாக.

விமலா சிரித்துக்கொண்டே," மதும்மா! நீ போய்க் காஃபி எடுத்துட்டு வாம்மா" என்றதும், தீபக்கைப் பார்த்து முணுமுணுத்துக்கொண்டே சென்றாள்.

அவன் சிரித்துக்கொண்டே, விமலாவைப் பார்த்தான்.

"நீ சொன்னது போல, அவளுக்கு அம்னீசியா வந்தாலும் எனக்குச் சந்தோஷம் தான். அப்போதாவது பழசையெல்லாம் மறந்துடுவா இல்லையா?” என்று கவலையுடன் கேட்டவரது இமைகள் ஈரமாகின.

“ஆன்ட்டி! அவள் உங்க ரெண்டு பேருக்காகத் தான், முடிஞ்ச அளவுக்கு எல்லாத்தையும் மறக்க முயற்சி செய்திட்டு இருக்கா” என்றான் வருத்தத்துடன்.

“உண்மைதான். ஆனா, உள்ளுக்குள்ளே எல்லாத்தையும் வச்சி புழுங்கிட்டு இருக்கா. ரெண்டு நாளா வேலை நேரம் தவிர, மீதி நேரம் ஒண்ணு ரூம்ல போய் அடைஞ்சிக்கிறா. இல்லனா, ஹோமுக்குப் போறேன்னு கிளம்பிடுறா" என்றார் கண்ணீருடன்.

“கவலைப்படாதீங்க ஆன்ட்டி! அவள் பழைய மதுவா திரும்ப நமக்குக் கிடைக்கத்தான் போறா. அதுக்கு, நான் பொறுப்பு" என்று ஆறுதலாகக் கூறியவன், “மது வர்றா. கண்ணைத் துடைச்சிக்கோங்க” என்றான் மெல்லிய குரலில்.

அன்னையின் முகத்தைப் பார்த்தபடி ஒரு கப்பை அவரிடம் கொடுத்தவள், தீபக்கிடம் தட்டை நீட்டினாள்.

“தேங்க்யூ” என்றவனின் காதுகளில் மட்டும் விழுவதைப் போல, “எனக்கு அம்னீஷியா வர்றதுக்குப் பதிலா, உங்களுக்கெல்லாம் வந்தா, எனக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும்" என முணுமுணுத்தாள்.

“என்னம்மா! என்ன சொல்ற?” என்றான் வேண்டுமென்றே.

"ம்ம், பத்து நிமிஷத்துல தயாராகி வரேன்" என்றாள் முறைப்பாக.

"ஓ! அம்னீஷியா சரியாயிடுச்சி போல" என்று அவன் சிரித்துக்கொண்டே சொல்ல, கண்களை உருட்டிக் காட்டி முறைத்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

அந்த நிலையிலும் விமலா முறுவலிக்க, தீபக்கிற்கும் சிரிப்பு வந்தது.

“பர்ச்சேஸ் முடிச்சிட்டு, அவளை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன் ஆன்ட்டி! அம்மா பார்க்கணும்னு சொன்னாங்க. நாளைக்கு அங்கேயிருந்தே அவள் ஆஃபிஸ் போகட்டும்” என்றான்.

“சரிப்பா” என்ற விமலாவின் குரலைத் தொடர்ந்து, “அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நைட் எவ்ளோ நேரம் ஆனாலும், வந்திடுவேம்மா! சாவி எடுத்துட்டுப் போறேன். நீங்க நேரத்தோட சாப்டுட்டு, மாத்திரை போட்டுகிட்டு தூங்குங்க” என்று உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள் அவள்.

“சரியான பாம்பு காது…” என்று மென்குரலில் சொன்னவன், “ஓகே ஆன்ட்டி! நான் எவ்ளோ நேரமானாலும் கூட்டிட்டு வந்து விட்டுடுறேன்” என்று சப்தமாகச் சொன்னான்.

****************​

எல்லியட்ஸ் பீச்சின் அருகில், சித்தார்த் காரை நிறுத்தினான். இரவு ஒன்பதரை மணிக்கும், இளைஞர்கள் பட்டாளம் அந்த இடத்தையே கலகலக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

“இந்தப் பசங்களைப் பார்க்கும்போது எனக்கு நம்ம காலேஜ் டேஸ் நினைவுக்கு வருது சித்தார்த்” என்றான் அவனருகில் அமர்ந்திருந்த ஜீவா.

மிருதுவாக புன்னகைத்தவன், “ஆமாம்டா! நாம மூணு பேரும் எவ்ளோ சந்தோஷமா இருந்தோம்...” என்றவனது குரலில் ஏக்கம் தென்பட்டது.

அதே உணர்வு ஜீவாவிற்கும் உண்டாக, “இந்த ரமேஷ் இவ்ளோ பிடிவாதமா இருக்க வேண்டாம்டா. நம்மகிட்டக் கூட எதையும் வெளிப்படையா பேசமாட்டேன்றான் பார்த்தியா! நாம எவ்வளவோ சொல்லியும் கேட்காம குடும்பத்தோடு ஊரை விட்டே போனான். பேசறதும் குறைஞ்சி போச்சு. இப்போலாம் மாசத்துக்கு ஒரு முறை பேசினாலே பெரிசு. நானும் ரொம்ப எதுவும் பேசிக்கிறதில்ல. மனசு விட்டுப்போச்சுடா” என்றான் சலிப்புடன்.

சற்றுநேரம் இருவருக்கிடையிலும் கனத்த மௌனம் நிலவியது.

“மூணு பேரும் ஒண்ணாவே படிச்சோம். ஒண்ணா பிஸ்னஸ் ஆரம்பிச்சி நடத்தணும்னு விரும்பினோம். ஆனா, கடைசில ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சி போனோம். நான்கூட, நம்ம ஃப்ரெண்ட்ஷிப் அவ்வளவு தான்னு நினைச்சேன். ஆனா, உங்க அப்பாவுக்குத் திடீர்ன்னு சென்னைக்கே ட்ரான்ஸ்ஃபர் வந்ததும், தற்செயலா நீ சென்னை வந்த. வந்த உன்னை, விடாம பிடிச்சிக்கிட்டேன். இப்போ என்னோட பிஸ்னஸ்ல ஜாயின் பண்ணிகிட்ட. ரமேஷும் உன்னை மாதிரியே திரும்ப வந்துட்டா, எவ்ளோ நல்லாயிருக்கும்” என்றான் ஏக்கத்துடன்.

“அவ்வளவு தானே சீக்கிரமே நடத்திடலாம்” என்றான் சித்தார்த் இலகுவாக.

“உனக்கு எல்லாமே ஈஸியா இருக்கு…” என்றான் அவன் கிண்டலாக.

சித்தார்த்தும், “நம்புடா!” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

“நம்பறேன் நம்பறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை” எனத் தத்துவத்தைப் பொழிந்தவன், “சொல்லப்போனா, ரமேஷுக்கு இங்கேயிருந்து போக ஒரு காரணம் இருந்தது. ஆனா, இந்தியாவுக்கே வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்த உன்னோட கேஸ் என்னன்னே, இப்போ வரைக்கும் எனக்குத் தெரியலை” என்றவன் குறுகுறுவென நண்பனைப் பார்த்தான்.

சட்டென பார்வையை வெளியே திருப்பியவன், “தேவையில்லாம கண்டதையும் யோசிக்காதே. இறங்கு” என்றபடி காரிலிருந்து இறங்கினான்.

ஜீவா குறுஞ்சிரிப்புடன், “காரணம் இல்லாம, கோபம் வராது. அதான்…” எனக் கேலியாக இழுத்தான்.

அவன் எதுவும் சொல்லாமல் நண்பனை முறைக்க, “சரி, விடு மச்சான்! இப்போ எது கேட்டாலும், உனக்குக் கோபம் வரும். உண்மையை ரொம்ப நாளைக்கு மூடி மறைக்க முடியாது. அன்னைக்குப் பார்த்துக்கறேன்” என்றான் சாதாரணமாக.

‘இவன் வீட்டிற்கு வந்திருந்தபோது, அஷ்வந்துடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தானே… அப்போது பீச்சில் நடந்ததை ஏதேனும் இவனிடம் உளறி வைத்திருப்பானோ!’ என்ற எண்ணம் உண்டான போதும், “பார்க்கலாம் பார்க்கலாம். இப்போ என்னோட வர்றியா இல்லயா? நான் காலாற நடக்கப்போறேன்” என்றான் பேச்சை மாற்றும் விதமாக.

“அதுக்குத் தானே வந்தது” என்றபடி இறங்கினான் ஜீவா.

இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு நடக்க, “ஹலோ ஜீவா!” என்ற குரலில் இருவரும் பின்னால் திரும்பிப் பார்த்தனர்.

ஜீவாவின் நண்பன் ஒருவன் நின்றிருந்தான். வெளிநாட்டில் இருந்து வந்திருந்த தன் நண்பனைச் சித்தார்த்திற்கு அறிமுகம் செய்து வைத்தான். இருவரும் சந்தித்து ஒருசில வருடங்கள் ஆனதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, இருவரையும் சற்றுநேரம் பேசச் சொல்லிவிட்டு, தனது நடையைத் தொடர்ந்தான்.

மனம் அன்று காலையில் சுரேஷிடம் பேசிய நிகழ்வுகளை, மீண்டும் அசை போட்டது. நான், எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம். தவறே செய்யாத ஒருத்தியைக் குற்றவாளியாக்கி இருந்தேனே. இப்போது குற்றவாளியாக நான் அல்லவா நிற்கிறேன். அவளிடம் எப்படி மன்னிப்பு கேட்கப் போகிறேன்?

அதை, அவள் அனுமதிப்பாளா? என்னை மன்னிப்பாளா? நாளை அலுவலகத்தில் அவளை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்?” என்று தன்னைச் சுற்றிக் கேள்விகளால் வலை பின்னிக் கொண்டே நடந்தவன், சட்டென ஒரு இடத்தில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

எதிரில் இருந்த ஐஸ்கிரீம் பார்லரில், மதுமிதா அமர்ந்திருப்பது தெரிய, அவனது முகத்திலிருந்த குழப்பங்களெல்லாம் விலகி, மென்மையாக மாறியது. அவளது முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.

‘முதன்முதலில் அவளைப் பார்த்ததற்கும், இப்போது இருப்பவளுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அந்த நீள் விழிகளில் ஒளி மங்கியதைப் போன்ற தோற்றம். ஏன் மது? என்னவாயிற்று உனக்கு?’ என எண்ணிக் கொண்டிருந்தவனின் நினைவிற்கு தடைபோடுவதைப் போல அவளெதிரில் வந்து அமர்ந்தான் ஒருவன்.

கீற்றாக முறுவலித்தவள், அவன் கொடுத்த ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டாள். அவளது பார்வை, தான் இருக்கும் பக்கமாகத் திரும்புவதை உணர்ந்தவன், அவளது பார்வையில் படாதவாறு வெளிச்சம் குறைவான பகுதியில் மறைவாக நின்றான்.

எதிரிலிருந்தவன் ஏதோ கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள். அவன் ஏதோ பேசப் பேச மௌனமாக ஸ்பூனால் ஐஸ்கிரீமை அளைந்து கொண்டிருந்தாள்.

அவள் பேசியபோது வருத்தம், வேதனை, எரிச்சல் என முகம் பலவித பாவனைகளை வெளிப்படுத்தியது. எதிரில் இருந்தவன் ஏதோ சொல்லிக்கொண்டே, அவளது இடது கரத்தைத் தட்டிக்கொடுத்தான்.

சித்தார்த்தால், அவனது முதுகைத் தான் பார்க்க முடிந்தது. ‘ஒருவேளை, அவளது சகோதரனோ!’ என அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, அவளது மொபைல் ஒலித்தது.

கைப்பேசியைப் பார்த்ததும் அவளது முகம் பூவாக மலர, “அண்ணா!” என்றாள் மிருதுவான குரலில்.

அவள் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க, அவளெதிரில் அமர்ந்திருந்தவன் எங்கோ சென்று வருவதாகச் சைகையில் சொல்லிவிட்டுச் சென்றான். அவளையே கவனித்துக்கொண்டிருந்த சித்தார்த், அவள் பேசி முடித்து போனை வைத்ததும் மெல்ல அவளை நோக்கி முன்னேறினான்.

தமையனுடன் பேசியதில் சற்று இலகுவாக உணர்ந்தவள், “ஹாய் மது!” என்ற ஆழ்ந்த குரலில் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

மின்னலாக ஒளிரும் கண்களும், சிரித்த முகமுமாகத் தன்னெதிரில் நின்றிருந்த சித்தார்த்தைப் பார்த்தவள், தன்னையும் அறியாமல் எழுந்து நின்றாள்.

அதேநேரம் அவர்களை நோக்கி வந்த தீபக் சற்றுத் தொலைவிலேயே, அவளுடன் பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்தும் அப்படியே நின்றுவிட்டான். அவனை வியப்பும், ஆர்வமுமாகப் பார்த்தவனது விழிகள், சட்டென மதுமிதாவின் முகத்தை ஆராய்ந்தன. அவளது அதிர்ந்த முகமும், பேச்சற்ற நிலையும் அவனுக்கு எதையோ உணர்த்த, வேகமாக அவளை நெருங்கினான்.

“மது!” என்றபடி அவளது கரத்தைப் பற்றிக்கொண்டவன், பார்வையால் அந்தப் புதியவனை அளந்தான்.

அவனுக்கு ஈடுகொடுப்பதைப் போலச் சித்தார்த்தின் பார்வையும், அவனை ஆராய்ந்தது.

“எக்ஸ்க்யூஸ்மீ நீங்க…” என்று தீபக் ஆரம்பிக்க, “ஹாய்! நான் சித்தார்த். மதுவோட எம்.டி” என்றபடி அவனிடம் கைநீட்டினான்.

மதுவை ஒரு பார்வை பார்த்தவன், “ஹாய்! நான் தீபக். மதுவோட கசின்” என்று கை குலுக்கியவன், “உங்களைச் சந்திச்சதுல சந்தோஷம்” என்றான் புன்னகையுடன்.

அவள், எதோ இக்கட்டில் மாட்டிக்கொண்டதைப் போல செய்வதறியாமல் தடுமாறினாள்.

உபசரிப்பாக, “உட்காருங்க…” என இருக்கையைக் காட்டினான் தீபக்.

அவன் உபசரித்த போதும், அதை முழுமனதாக அவன் சொல்லவில்லை என்பதை, சித்தார்த் புரிந்துகொண்டான். அதுவரை இருந்த மலர்ச்சியையும் மறந்தவளாக, சிறு பதற்றத்துடன் நின்றிருந்தவளைப் பார்த்தான்.

“இட்ஸ் ஓகே. நான் உங்க ப்ரைவசியை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்” என்றதும் தீபக், “அப்படியெல்லாம் இல்ல...” என்றான் அவசரமாக.

“ஃப்ரெண்டோட வந்தேன். மதுவைப் பார்த்ததும், ஹாய் சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்தேன். யூ கேரி ஆன்” என்றவன், “நைஸ் டூ மீட் யூ தீபக். இன்னொரு நாள் லீஷியரா பேசுவோம்” என்றவனது பார்வை, மதுமிதாவை வருடி மீண்டும் தீபக்கின் பக்கமாகத் திரும்பியது.

“நிச்சயமா!” என்றபடி தீபக் அவனிடம் கை குலுக்க, புன்னகையுடன் விடைபெற்றான்.

அவன் அங்கிருந்து சென்றதும், தளர்ந்து போன மனத்துடன் இருக்கையில் அமர்ந்தாள். அழுகை வரும் போலிருக்க, உதட்டைக் கடித்துத் தன்னைக் கட்டுப்படுத்தினாள்.

அவளருகில் அமர்ந்த தீபக், “மதும்மா!” என்றபடி ஆதரவுடன், அவளது தோளில் கை வைத்தான்.

“அத்தான்! கிளம்பலாம். இதுக்கு மேல, என்னால ஒரு நிமிஷம் கூட இங்கேயிருக்க முடியாது” என்றவளது விழிகள் கண்ணீரை அணையுடைக்கக் காத்திருந்தன.

மறுபேச்சில்லாமல், “ஓகே” என்றான்.

அவளை வீட்டில் இறக்கிவிட்டவன், அவள் உள்ளே செல்லும் வரை காரிலேயே காத்திருந்தான். தளர்ந்த நடையுடன் செல்பவளை ஆழ்ந்து பார்த்தான்.

‘வாழ்க்கை, இருபுறமும் கூர்முனைகளைக் கொண்ட வாளாக, அவளை நெருக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்று, அவள் இதிலிருந்து மீண்டு வரவேண்டும். இல்லையெனில், விதியின் கரங்களில் இருக்கும் வாளுக்கு இரையாக வேண்டும். அவளது மனத்திடமும், தன்னம்பிக்கையும் மட்டுமே அவளை மீட்டுக் கொண்டுவர முடியும்’ என்று கவலையுடன் நினைத்தவன், கனத்த மனத்துடன் காரைக் கிளப்பினான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் 7


தீபக்கிடம் விடைபெற்று வந்தபிறகு, சித்தார்த்திற்கு எதுவோ சரியில்லை என்றே தோன்றிக்கொண்டிருந்தது. மனத்திற்குள் அது குடைந்துகொண்டிருந்த போதும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் காரின் மீது அவன் சாய்ந்து நின்றிருக்க, அவனெதிரில் வந்து நின்றான் ஜீவா.

நண்பனைக் கண்டதும் முகத்தைச் சாதாரணமாக்கிக் கொண்டு, “கிளம்பலாமா?” என்று கேட்டான் இலகுவாக.

ஜீவா குறுகுறுவென அவனைப் பார்த்தபடி, “ம்ம், கிளம்பலாம்” என்றான்.

சற்றுநேரம் மௌனத்திலேயே கழிய ஜீவா, “அப்புறம் மச்சான்! மது என்ன சொன்னா?” என மெல்லக் கேட்க, சித்தார்த் சடாரென நண்பனின் பக்கமாகத் திரும்பினான்.

“டேய் டேய்! மெயின் ரோடுடா. எங்க அம்மாவுக்கு, நான் ஒரே பையன்டா” என்று ஜீவா போலியாக அலற, காரைச் சாலையோரமாக நிறுத்திய சித்தார்த் கண்களைச் சிமிட்டி, “பயந்துட்டியா?” என்றான் குறும்புப் புன்னகையுடன்.

“மச்சான்! வீ ஆர் செயிலிங் இன் த சேம் போட். மதுகிட்டப் பேசிட்டுத் திரும்பும் போது நீ, என்னைப் பார்த்துட்டேன்னு தெரியும். விஷயத்தை நீயா சொல்லமாட்டேன்னும் தெரியும். அதான், ஒரு நங்கூரத்தைப் போட்டேன். உனக்கு அவளை ஆரம்பத்திலிருந்தே பிடிக்கல. ஆனா, எப்படி? அதுதான் கொஞ்சம் இடிக்குது” என்றான் தீவிர பாவனையுடன்.

நீண்ட மூச்செடுத்து தலையைக் கோதிக்கொண்டவன், ஸ்டியரிங் வீலின் மீது கையை ஊன்றியபடி ஜீவாவைப் பார்த்தான்.

“எனக்கு, அவளை ரொம்பப் பிடிக்கும்டா!” என்று சொல்ல, இப்போது ஜீவா விழித்தான்.

“அவள், ரமேஷோட சிஸ்டர் தீபாவோட ஃப்ரெண்ட்” என்றான்.

“ம், தெரியுமே. மதுமிதாவை வேலையில் சேர்த்துவிட்டதே, அவன்தான்” என்றான்.

“ரமேஷா!” என்றான் ஆச்சரியத்துடன்.

“ஆமாம். ஊரைவிட்டுப் போனவன், திரும்ப அவனா எனக்குக் கால் பண்ணது, மதுமிதாவுக்காகத் தான். அவன் மேலயிருந்த கடுப்புல வேண்டாம்ன்னு சொல்லியிருப்பேன். ஆனா, அவளுக்கு நடுவில் கொஞ்சம் ஹெல்த் இஷ்யூஸ் ஏதோ வந்ததாலயும், அவளும் எனக்கு ஒரு சிஸ்டர் மாதிரின்னும் சொல்லி, என் வாயை அடைச்சிட்டான். நானும் ரெகமண்டேஷன்ல வந்தவளாச்சேன்னு நினைச்சேன். ஆனா, செம ஷார்ப்” என்று சொல்ல, அனைத்தையும் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் சித்தார்த்.

“இப்படியே, என் மூஞ்சியைப் பார்த்துட்டு இருக்காம, உன் விஷயத்தைச் சொல்லு” என்றான் ஜீவா.

“சொல்றேன்” என்றவன் ஆழ்ந்து மூச்செடுத்துக்கொண்டு, “அவளை முதன்முதல்ல தீபாவோட கல்யாணத்துல தான் பார்த்தேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.

‘அப்போதேவா’ என்பதைப் போலப் பார்த்த ஜீவா, “மது, அப்போ ரொம்பச் சின்னப் பொண்ணுடா! செகண்ட் இல்லனா, தேர்ட் இயர்தான் படிச்சிட்டு இருந்திருப்பா” என்றான்.

“அதனால தான், அப்போ என்னோட லவ்வைச் சொல்லல” என்று எரிச்சலுடன் சொன்னவன், “சுரேஷ் மூலமாதான் அவளைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன். அவளோட மாமா பையன் தீபக்கைக் கல்யாணம் செய்து வைக்க வீட்ல பேச்சு இருக்கறதாகவும், மதுவுக்கு அதில் விருப்பம் இல்லன்னும் தெரிஞ்சது.

இந்த ரெண்டு விஷயத்தாலயும், என்னோட லவ்வுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காதுன்னு நினைச்சேன். அவளும் படிப்பை முடிக்கணும், நானும் அப்போதான் வேலையில் சேர்ந்த புதுசுங்கறதாலயும், என் காதலைச் சொல்ல முடியாம போச்சு.

இதுக்கு நடுவில் ஆன்சைட்டுக்காக, ரெண்டு வருஷம் ஃபாரின் போயாச்சு. திரும்பி வந்தபோது, அவளைத் தேடி காலேஜுக்குப் போனேன். அன்னைக்கு, அவங்க காலேஜ்ல கல்சுரல் ப்ரோக்ராம். அவளை மீட் பண்றதுக்காக மேக் அப் ரூமுக்குப் போனேன். அங்கே சுரேஷுக்கும், அவளுக்கும் பெரிய வாக்குவாதமே நடந்துட்டு இருந்தது” என்றவனுக்குத் தொண்டை அடைத்தது.

ஜீவா அமைதியாகத் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.

மறுத்தவன் முகத்தைத் துடைத்துக்கொண்டு, “மறுநாள், சுரேஷைப் பத்தி விசாரிக்க, ரமேஷுக்குக் கால் பண்ணேன். நல்லாயிருக்கான் காலேஜ் போயிருக்கான்னு சொன்னான். நானும் கொஞ்சம் சமாதானம் ஆனேன். ஆனா, அவள் மேல இருந்த கோபம் மட்டும் அப்படியே தான் இருந்தது.

இந்த நிலைல தான் திரும்ப சென்னை வரவேண்டிய சூழ்நிலை வந்தது. எதேச்சையா ரமேஷுக்குக் கால் பண்ணேன். சுரேஷ் தற்கொலை பண்ணிக்க முயற்சி செய்து, ரொம்பச் சீரியஸா ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கறதா சொல்லவும், பதட்டத்தோட அவனைப் பார்க்கப் போனேன். என் மனசு கொதிச்சது. ஒரு மோசக்காரியை காதலிச்சிட்டோம்ன்னு என்னையே திட்டிக்கிட்டேன்.

ஹாஸ்பிட்டலுக்குப் போனேன். மதுவும், அங்கே வந்திருந்தா. அவளைப் பார்த்ததும், இதுக்கெல்லாம் காரணம் அவள்தான்னு... அவளோட கழுத்தை நெறிக்கணும்னு கொலைவெறியே வந்தது. அங்கே நிற்கவே பிடிக்காம, வெளியே வந்துட்டேன். திரும்ப ரமேஷுக்குப் போன் செய்து அங்கே விசிட்டர்ஸ் யாரும் இல்லன்னு தெரிஞ்ச பின்ன போய் அவனைப் பார்த்தேன். சுரேஷைப் பார்க்கப் பார்க்க, என்னோட கோபம் அதிகமாச்சு” என்றவனது குரல் தழுதழுத்தது.

“அவளை மறந்திட முடியும்ங்கற எண்ணம் வரும்வரை திரும்ப இந்தியா வரக்கூடாதுன்னு பிடிவாதமா இருந்தேன். நீ கூப்பிட்டதும், அம்மாவும் ரொம்ப கெஞ்சினதாலயும் மட்டுமில்ல, அவளும் என் மனசுல ஒரு வடுவாக மட்டுமே இருக்கான்னு நினைச்சித்தான் வந்தேன்.

திரும்பவும் நம்ம ஆபிஸ்லயே அவளைப் பார்த்ததும் என்னுடைய பழைய கோபமும், ஆத்திரமும் மட்டுப்பட்டிருந்தாலும், வெறுப்பு மட்டும் அப்படியே இருந்தது. அதனால தான் அவள் உன்கூடச் சிரிச்சிப் பேசினதைக் கூட தப்பாகவே நினைச்சேன். ஆனா, அவள் மேல தப்பே இல்லன்னு, அவளோட பேச்சிலேயே புரிஞ்சது. ரமேஷ்கிட்டயும், விசாரிச்சி தெரிஞ்சிகிட்டேன்” என்றவன் இருக்கையில் தலையைச் சாய்த்து அமர்ந்தான்.

“தேவையே இல்லாம அவளை வெறுத்து, ஊரை விட்டுப் போய் எங்க அம்மா, அப்பா அத்தனைப் பேரையும் வருத்தி, என்னையும் சித்ரவதை பண்ணிக்கிட்டேன்னு ரொ.ம்.ப லேட்டா தெரிஞ்சிகிட்டேன் ஜீவா. என்னோட முட்டாள்தனத்தால எல்லாமே மாறிப் போச்சு” என்றவனது கண்கள் ஈரத்தில் மின்னின.

அனைத்தையும் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்ட ஜீவா, “விடுடா! நீ தெரியாம தானே செய்த. அந்த வயசுல எதையும் யோசிக்கிற பக்குவம் இல்ல. இப்போ வந்திருக்கு. அதான், விசாரிச்சி தெரிஞ்சிகிட்ட. இப்போதான் எல்லாம் தெரிஞ்சி போச்சே.

இனி என்ன? உனக்கு நிறைய டைம் இருக்கு. ஆஃபிஸ்ல எப்பவும் உன் கூடவே இருக்கப் போறா. உன்னைக் கொஞ்சம் கொஞ்சமா புரியவை. அவள் ரொம்பப் பிரில்லியண்ட் புரிஞ்சிக்குவா” என்றான் சமாதானமாக.

“இப்போ, பயமா இருக்குடா! அவளைப் பார்க்கும் போதெல்லாம், என்னோட தப்பு கண்ணு முன்னால தெரியுது” என்றான் தீவிர பாவனையுடன்.

“அப்படியா! கொஞ்ச நேரத்துக்கு முன்னால பார்த்தபோது, அப்படித் தெரியலையே” என்ற ஜீவாவின் குரலில் கிண்டல் தெறித்தது.

சடாரென திரும்பியவன், நண்பனின் முகத்தைக் கண்டதும் சிரித்தபடி, “அது… அவளோட பேசிட்டிருந்தது யாருன்னு தெரிஞ்சிக்கத் தான். அது தீபக்ன்னு தெரிஞ்சதால, மனசுல சின்னச் சந்தோஷம்” என்றான்.

வெட்கமும் சிரிப்புமாகச் சொன்னவனை அன்புடன் பார்த்தவன், “இனி உன்பாடு கொண்டாட்டம் தான். என் நிலைமையை நினைச்சாதான்…” என்றவன் பெருமூச்சு விட்டான்.

“ஏன்டா? உனக்கென்ன!” என்றான் சித்தார்த்.

“உனக்கென்னவா!” என்று கண்களை விரித்தவன், “இந்த லவ் பண்ற பைத்தியங்களெல்லாம், பீல் பண்றேங்கற ரேஞ்சுல தன் காதலைப் பத்திப் புலம்பறதுக்குன்னே, கூட ஒரு ஃப்ரெண்டை வச்சிருப்பானுங்க. இனி, அந்தப் புலம்பலையெல்லாம் நான் கேட்கணுமேன்னு நினைச்சே… ஐயோ!” என்று போலியாக அலற, முகம் கொள்ளா சிரிப்புடன் காரைக் கிளப்பினான்.

*****************​

நீண்ட நாள்களுக்குப் பிறகு, நல்லபடியாக இரவில் தூங்கி அதிகாலையிலேயே எழுந்த சித்தார்த்துக்குத் தன்னைச் சுற்றியிருந்த உலகமே, மிக அழகாகத் தோன்றியது. தோட்டதிலிருந்து வந்த மலர்களின் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்து நெஞ்சில் நிறைத்துக்கொண்டான்.

‘மனநிலைக்கும், சுற்றுப்புற சூழ்நிலைக்கும் சம்மந்தம் உண்டு என்று சொன்னது எவ்வளவு உண்மை. தூசு படிந்த கண்ணாடிபோலிருந்த தன்னுடைய மனநிலை, இப்படி வானவில் வண்ணத்துக்கு மாறி விட்டதே!’ என்று எண்ணிச் சிரித்துக் கொண்டான்.

அலுவலகத்திற்குச் செல்லத் தயாரானவன், பாடல் ஒன்றை விசிலடித்தபடி, இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கி ஹாலுக்கு வந்தான். செய்தித் தாளில் மூழ்கியிருந்த அஷ்வந்தும், மெடிக்கல் ஜார்னரை வாசித்துக்கொண்டிருந்த நேத்ராவும் நிமிர்ந்து, தமையனை வியப்புடன் பார்த்தனர்.

கண்களில் குறும்பு கூத்தாட அண்ணனின் அருகில் வந்து அமர்ந்த அஷ்வந்த், “என்ன அண்ணா இன்னைக்கு ஆபிஸ் போறீங்களா? இல்லை, ஏதாவது கல்யாணத்துக்குப் போறீங்களா?” என்றான்.

கையிலிருந்த புத்தகத்தை டீபாயின் மீது வைத்துவிட்டு, ஆர்வத்துடன் அண்ணனைக் கவனித்தாள் நேத்ரா.

நெற்றிச் சுருங்க தம்பியைப் பார்த்தவன், “ஆஃபிஸுக்குத் தான்” என்றான்.

“இன்னைக்கு அலங்காரமெல்லாம், ரொம்ம்ம்ப அமர்க்களமாக இருக்கே?" என்றான் கண்களைச் சிமிட்டி.

“ம்ம், எனக்குப் பொண்ணு பார்க்கப் போறேன். நீ தானே, என் ரூட்ட க்ளியர் பண்ணுன்னு சொல்வ” அவன் கையிலிருந்த செய்தித்தாளை வாங்கிக்கொண்டே சொன்னவன், மறந்தும் தம்பியின் முகத்தைப் பார்க்கவில்லை.

குறுகுறுவென்று அஷ்வந்தின் பார்வை, அண்ணனின் முகத்தைத் துளைத்துக் கொண்டிருக்க, ‘இப்படி வாயை விட்டு மாட்டிக்கொண்டோமே!’ என்றிருந்தது சித்தார்த்திற்கு.

செய்தித்தாளுக்குள் முகத்தை மறைத்துக்கொண்டு கடமையே கண்ணாக அமர்ந்திருக்கும் சகோதரனை மர்மச் சிரிப்புடன் பார்த்தவன், தங்கள் அருகில் அமர்ந்திருந்த நேத்ராவைக் கண்டதும், “இங்கே என்னடி செய்துட்டு இருக்க? கிளம்பு கிளம்பு நிறைய விஷயத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு” என்றான் கடுப்புடன்.

“உனக்கென்னடா! நான் அண்ணனோட பேச வந்தேன்” என்றாள் பதிலுக்கு முறைப்பாக.

“உன்னை மாதிரிச் சின்னப் புள்ளைங்களுக்கு இங்கே என்ன வேலை?” என்றான் காட்டமாக.

“உன்னை விட ஒரு நிமிஷம் தான் லேட்டா பிறந்தேன். நான் சின்னப் பிள்ளையா? அப்போ, நீ என்ன? நியாயமா சயின்ஸ்படி பார்த்தா, நான்தான் உன்னை விடப் பெரியவ தெரியுமா!” என்று அவள் ஆரம்பிக்க, சித்தார்த்திற்கு ஆயாசமாக இருந்தது.

“அடச்சே! எப்போ பாரு நச்சுப் பண்ணிக்கிட்டு. என்கிட்டயே சயின்ஸ் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டா. கிளம்பு அமுல் பேபி! அம்மா உனக்குக் காம்ப்ளான் கலந்து வச்சிருப்பாங்க. போய் அதைக் குடிச்சிட்டு, வளரப் பாரு” என்றான் கிண்டலாக.

“அம்மா! பாருங்கம்மா இவனை…” என்று அவள் ஆரம்பித்தபடி சமையலறையிலிருந்த அன்னையை நாடிச் செல்ல, அஷ்வந்த் தமையனின் பக்கமாகத் திரும்பினான்.

“அண்ணா! இன்னைக்குப் பழைய சித்தார்த் ரிட்டர்ன்ஸா!” என்றான் சிரிப்புடன்.

“காலைல உனக்கு வேலையில்லையா? என்னையே நோட்டம் பார்ப்பியா? நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்” என்றான் செய்தித் தாளிலிருந்து கண்களை விலக்காமல்.

“அதை, நாங்க இல்லச் சொல்லணும். ஆனா, அதுக்கு அவசியமே இல்லாம… நான் வித்தியாசமா இருக்கேன்னு பாட்டெல்லாம் பாடிச் சொல்லிட்டு…” என்று சொல்லிக்கொண்டே டைனிங் சேரைத் தன் பக்கமாகத் திருப்பிப் போட்டு அமர்ந்தான்.

அதுவரை இழுத்துப் பிடித்திருந்த சிரிப்பைச் சித்தார்த் வெளிவிட, அஷ்வந்த் வைத்த கண்ணை விலக்காமல் பார்த்தான்.

“அண்ணா! உண்மையிலேயே இன்னைக்குச் செம ஸ்மார்ட்டா தெரியறீங்க. எனிவே, எப்பவும் நீங்க இப்படியே இருக்கணும்” என்றவன் கையை நீட்டினான்.

“என்னடா புதுசா கை கொடுக்கற?” என்றபடி தம்பியின் கரத்தைப் பற்றினான்.

“வாழ்த்து சொல்றேன்ண்ணா!” என்றவன், “அன்னைக்குப் பீச்ல பார்த்த மேடம் தானே…” என்று அவனது காதோரம் கிசுகிசுக்க, “டேய்! உன்னை…” என்றபடி அதட்டலாகக் கேட்டபடி எழுந்தான் சித்தார்த்.

“இதுக்கெல்லாம் பயந்தா எப்படிப் ப்ரோ!” என்று சிரித்த அஷ்வந்த், சட்டென அமைதியாக அமர்ந்த அண்ணனை அதிசயமாகப் பார்த்தான்.

ஏதோ தோன்ற, பின்னால் திரும்பிப் பார்த்தான் அஷ்வந்த். அங்கே படியருகில் மீராவும், சமையலறை வாசலில் அவனது தங்கையும், அம்மாவும் நின்றிருக்க, “ஆஹா! இனி, அந்த ஆண்டவன் தான் உங்களைக் காப்பாத்தணும். வீட்டோட விடிவிளக்கு, குலவிளக்கெல்லாம் இங்கேதான் சங்கமம் ஆகியிருக்காங்க” என்றான் சிரித்துக்கொண்டே.

கிண்ணத்திலிருந்த நூடுல்ஸை வாயிலிட்டபடி, “டேய் அஷ்! அம்மாவையும், அண்ணியையும் சொன்ன... என்னை விட்டுட்டியே” என்று கேட்டாள் நேத்ரா.

“ஹே ஹே! இதுதான், சொந்தச் செலவுல சூனியம் வச்சிக்கிறது” என அவன் சிரிக்க, மீரா தலையில் அடித்துக்கொண்டாள்.

“நீ, இந்த வீட்டோட குழல் விளக்கும்மா… குழல் விளக்கு” என்றான் போலியான நெகிழ்வுடன்.

அவள் புரியாமல், “என்னதுடா!” என்றாள்.

“நீ அதுவே தான் தெய்வமே!” என்று மேலே கையைக் காட்டியபடி சொல்ல, அனைவரும் அடக்கமுடியாமல் சிரித்தனர்.

அவளுக்கு மெல்ல அவன் சொன்னதன் அர்த்தம் விளங்க, “எருமை மாடு…” என்றாள் கோபத்துடன்.

“ஐயோ! அம்மா, அண்ணி, அண்ணா உங்க எல்லோரையும் திட்றா” என்றான் வேண்டுமென்றே.

“நான் உன்னதான்டா சொன்னேன்” என்றாள் அவள் அழுத்தமாக.

“நான் எருமைன்னா, நம்ம குடும்பமும்…” என அவன் இழுக்க, “போதும்டா! காலைல வம்பு வளர்த்துக்கிட்டு” என்ற தேவகி, “மீரா, ஆதி எங்கே?” என்று கேட்டார்.

“இதோ வந்துட்டேன்” என்றபடி அவனும் இறங்கி வர, தேவகி மகன்களுக்குக் காலை உணவைப் பரிமாற ஆரம்பித்தார்.

இரண்டு தமையன்களுக்கும் எதிரில் அமர்ந்த அஷ்வந்த், “என்ன சமையலோ? அண்ணி! இன்னைக்கு, என்ன சமையலோ?” என்று பாடினான்.

அதற்குள் இட்லியும், பொங்கலும் இருந்த தட்டு அவனெதிரில் வைக்கப்பட, “அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப் போனதே நாக்கு மரத்துப் போனதே" எனப் பாட, "அடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே” எனப் பின்பாட்டுப் பாடினாள் நேத்ரா.

அவர்கள் இருவரையும் முறைத்தபடி, “உடம்புல கொழுப்பு ஏறிப் போயிருக்கு” என்றாள் மீரா.

“அதைத்தான் அண்ணி இவகிட்டச் சொல்றேன். கேட்டால் தானே. எப்போ பாரு தீனி…” என்றான் சகோதரியைப் பார்த்துக்கொண்டே.

“இங்கே பாரு அஷ்! உனக்கு இவ்ளோ தான் மரியாதை” என்றபடி நூடுல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த முள்கரண்டியை அவனெதிரில் நீட்டினாள்.

“வேணாம் குண்டூஸ்! அப்புறம், கொலை கேஸ்ல உள்ளே போயிடுவ. அங்கே போனா இப்படி வகைவகையா சாப்பிட முடியாது” என்றவனை முதுகிலேயே குத்தினாள்.

“ஆஹ்! ஐயோ!” என்று அவன் கத்த, “காலங்கார்த்தால இதுங்களுக்கு வேற வேலை இல்ல. மீரா, நீ வேலையைப் பாரு” என்ற தேவகி, “கொஞ்சம் பொங்கல் வைக்கட்டுமா கண்ணா!” என்றார் இளைய மகனிடம்.

“இல்லம்மா! போதும்” என்று சொல்லிவிட்டு எழுந்து செல்ல, தேவகி மகனின் முகத்தில் தெரியும் மலர்ச்சியைக் கண்டும் காணாமல் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டார்.

“கிளம்பறேம்மா! புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிறோம். ஈவ்னிங் வர லேட் ஆகும்” என்றவன், “வரேன் அண்ணி, வரேண்ணா” என்றவன் தம்பி, தங்கைக்கு கையசைத்து விடைபெற்றுக் கிளம்பினான்.

அவன் கிளம்பிச் சென்றதும், “மீரா! சாய்ந்தரம் கோவிலுக்குப் போய்ட்டு வந்திடலாம். போன வாரம் பாபா கோவிலுக்குப் போன போது, சித்தார்த்துக்காக வேண்டிட்டு வந்தேன். இப்போ பாரு, அதோட பலன் தெரியுது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

“இதுக்கு எதுக்குப் பாபாவை டிஸ்டர்ப் பண்ணிகிட்டு? எனக்கே தெரியுமே. விஷயம் என்னன்னா…” என்றபடி தன்னருகில் வந்தவனை, முறைத்தார் தேவகி.

“பெரியவங்க பேசும்போது குறுக்க குறுக்க என்னடா பேச்சு வேண்டியிருக்கு? எங்கேயோ போகணும்னு சொன்னியே கிளம்பு” என்றார் கட்டளையாக.

“ஆஹா! தாய்க்குலம் இன்னைக்கு செம மூட்ல இருக்காங்க போல. மாட்டினோம் அவ்ளோ தான். அஷ்வந்த் எஸ்கேப்” எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அங்கிருந்து செல்ல, மாமியாரும், மருமகளும் மௌனமாகச் சிரித்துக்கொண்டனர்.

எல்லாம் இருந்தும் சில வருடங்களாக, ஏதோ ஒரு குறை இருப்பதைப் போன்றே தோன்றிக் கொண்டிருந்தது தேவகிக்கு. இன்று, அது முற்றிலுமாக களைந்து மனம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க இளைய மகனின் வாழ்க்கை சீரடைந்துவிடும் என்று எண்ணிக்கொண்டவரது மனம் நிறைந்திருந்தது.

Comments : https://sudharavinovels.com/threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1120/page-3#post-9854