Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
129
473
63
அத்தியாயம் 8


அலுவலகத்திற்குள் நுழைந்த சித்தார்த்துக்கு ஏனோ பரபரவென இருந்தது. வழக்கமாக வரும் அதே அலுவலகம், ஊழியர்கள். ஆனால், மனத்தின் சந்தோஷம் அவனது முகத்திலும் பிரதிபலித்தது.

மதுமிதா இன்னும் வந்திருக்கவில்லை என்று அறிந்திருந்தவன், அவளது வருகைக்காக ஜன்னலருகில் காத்திருந்தான். நேரம் தான் ஓடியதே தவிர அவள் வரவில்லை. ஓரிடத்தில் நிற்க முடியாமல் இங்கும் அங்குமாக நடந்தவன், இருக்கையில் அமர்ந்து இடமும், வலமுமாக சுழன்று கொண்டிருந்தான்.

அறைக்குள் வந்த ஜீவா, மென்சிரிப்புடன் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றிருக்க, எதையோ எண்ணிச் சிரிப்புடன் நிமிர்ந்தவன், நண்பனைக் கண்டதும் சுழல்வதை நிறுத்திவிட்டு, “குட் மார்னிங்டா!” என்றான் மலர்ச்சியுடன்.

பதிலுக்குக் காலை வணக்கம் சொல்லியபடி, அவனெதிரில் வந்து அமர்ந்த ஜீவா,

“என்னை யாரோ ஆஃபிஸுக்கு வந்தா, வேலையைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க. அந்த ஆளை, ரெண்டு நாளா காணோம்” என்றான் கிண்டலாக.

“போதும்டா! நான் இங்கே தான். இப்போ வேலையைப் பத்திப் பேசுவோமா!” என்றான்.

“அதுக்குத் தானே வந்திருக்கோம்” என்றவன் மடிக்கணினியைத் திறந்தபடி, “நேத்து ப்ராஜெக்ட் பத்தி ஒர்க் அவுட் பண்ணி, உனக்கு ஒரு மெயில் அனுப்பினேனே பார்த்தியா?” என்றான் குறும்புடன்.

“பார்த்தேன்டா! ரொம்ப ஓட்டாதே” என்று சிரித்துக்கொண்டே, “ம்ம், மது வந்தாச்சா?” என்று கேட்டான்.

“இன்னும் வரல. வந்திடுவா” என்ற ஜீவாவிற்குச் சிரிப்பாக வந்தது.

“டேய்! போதும். நான் ஜென்ரலா கேட்டேன்” என்றான் சித்தார்த்.

“சரிப்பா! நான் எதுவும் சொல்லல” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, முடியவில்லை என்பதைப் போலத் தலையை ஆட்டியவன், வேலையில் கவனத்தைத் திருப்பினான்.

அலுவலகத்திற்குள் நுழைந்த கீதா, “குட் மார்னிங் தல!” என்றாள் உற்சாகத்துடன்.

சிவாவும், “குட்மார்னிங்!” என்றான் முறுவலுடன்.

“பஸ் லேட்டு, சரியான கூட்டம்” என்று அவள் சலிப்புடன் சொல்ல, “பஸ் இல்ல; நீ லேட்டு” என்றான் அவன் கிண்டலாக.

“ஹய்யோ! முடியல. ரொம்ப முன்னேறிட்டீங்க பாஸ்!” என்றவள் தங்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல், தனது வேலையில் கவனமாக இருந்த லதாவை திரும்பிப் பார்த்தாள்.

திரும்பிச் சிவாவைப் பார்த்துப் புருவங்களை உயர்த்த, அவன் மௌனமாக தனது வேலையைக் கவனிக்கத் துவங்கினான்.

சிறிது நேரம் செல்ல, “என்ன? மதுவை இன்னைக்குக் காணோம்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஜீவா அவர்களை நோக்கி வந்தான்.

“சிவா! மணி பத்தரை ஆகுது. மது வரலையா?” என்று கேட்டான்.

“எனக்கும் எதுவும் இன்ஃபார்ம் பண்ணல ஜீவா!” என்றான்.

ஜீவா, கீதாவைப் பார்க்க, “நான் கால் பண்ணிப் பார்க்கிறேன்” என்று மொபைலை எடுக்க, மதுமிதா வேகமாக வந்துகொண்டிருந்தாள்.

மேல் மூச்சு வாங்க, “சாரி! கொஞ்சம் லேட் ஆகிடுச்சி” என்றாள் தாழ்மையான குரலில்.

செவ்வரியோடிய விழிகளுடன், களைத்த முகமுமாக நின்றிருந்தவளைப் பார்த்தவன், “ஆர் யூ ஓகே?” என்றான் ஜீவா.

“ம்ம்” என்றாள் முறுவலுடன்.

ஆனால், அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கவனித்தபடியே, “டீ பிரேக் முடிஞ்சதும், நாலு பேரும் சித்தார்த்தோட ரூமுக்கு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

சித்தார்த்தின் பெயரைக் கேட்டதும் மதுமிதாவின் முகத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டதை ஜீவா மட்டுமல்ல, சிவாவும் கவனித்தான். ஜீவா அங்கிருந்து நகர்ந்தபின் அவரவர் தங்களது வேலைகளைக் கவனிக்க சிவா, கீதாவின் இருக்கையைத் தட்டி அழைத்தான்.

‘என்ன?’ என்று செய்கையிலேயே கேட்டவள், இருக்கையை அவனருகில் நகர்த்தினாள்.

“அன்னைக்கு நான் கேட்டப்போ ரெண்டு பேருக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லன்னு சொன்ன. ஆனா, எனக்கு டௌட்டாவே இருக்கு. மதுவும்…” என்று இழுத்தவனை ஆயாசத்துடன் பார்த்தவள், “உங்க நிலைமையே இங்கே திரிசங்கு சொர்க்கமா அந்தரத்துல ஆடிட்டு இருக்கு. இதுல எதுக்கு சார் உங்களுக்கு அடுத்தவங்க கதை?” என்றாள் கிண்டலாக.

அவளை முறைத்தவன், “மது மேல இருக்கற அக்கறைல மட்டும்தான் பேசறேன். அதுக்காக, அடுத்தவங்க பிரைவசியில நிச்சயமா நுழையமாட்டேன்” என்று எரிச்சலுடன் சொன்னவன், தனது இடத்திற்கு நகர்ந்தான்.

வெளியே சாதாரணமாகக் காண்பித்துக் கொண்டாலும், கீதாவின் மனம் தோழிக்காக தவித்தது. இது எதுவும் அறியாமல், கணினியை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மதுமிதா.

உள்ளே சென்ற ஜீவா, கணினியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்த சித்தார்த்தின் எதிரில் அமர்ந்தான்.

நிமிர்ந்து பார்த்தவன், “என்னடா? என் முகத்தையே பார்த்துட்டு இருக்க.” என்று கேட்டுக்கொண்டே கணினி திரையில் பார்வையைப் பதித்தான்.

“மச்சான்! நேத்து மதுகிட்ட ஏதாவது பேசினியா?” என்று கேட்டான்.

கூர்ந்து நோக்கியவன், “ஏன்?” என்றான் கேள்வியாக.

“அவளைப் பார்த்தா, நைட்டெல்லாம் சரியா தூங்கியிருக்க மாட்டா போல…” என்றான்.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், “சரி, நான் பார்த்துக்கறேன்” என்றான் நிதானமாக.

“அதைத் தான் சொல்ல வந்தேன். ஆர்வக்கோளாறுல, அநாவசியமா எதுவும் பேசிடாதே. சொல்லணுன்னு தோணுச்சி; சொல்லிட்டேன்” என்றவன், ‘மகனே இனி, உன் சமர்த்து’ என எண்ணிக்கொண்டான்.

“அதான் நான் பார்த்துக்கறேன்னு சொன்னேனே…” என்றவன் யோசனையுடன் பின்னங் கழுத்தைத் தடவிக்கொண்டான்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, சித்தார்த்தின் அறைக்குச் சென்றனர். சித்தார்த் அவர்களுக்கு இருக்கையைக் காண்பிக்க, நால்வரும் அமர்ந்தனர். மதுமிதா மறந்தும் அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.

ஜீவா அவர்களுக்குப் ப்ராஜெக்ட் பற்றி விளக்க, அனைவரும் ஆழ்ந்து கேட்டுக் கொண்டனர். சித்தார்த்தின் காதுகள் அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டாலும், கண்கள் அவளது காதோரம் புரண்ட சுருள் முடியிலும், நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த விழிகளிலும் படிந்தன.

அவனை நேராகப் பார்க்காவிட்டாலும், அவனது பார்வை தன்னை ஆராய்வதை அவளால் உணரமுடிந்தது. அவனைப் பார்க்கத் துடித்த விழிகளைச் சிரமப்பட்டுக் கட்டுப்பாட்டில் வைக்க முயன்றாள்.

ஆனாலும், மனமோ தனது எண்ணத்தைக் கைவிடாமல் மீண்டும் மீண்டும் தனது இலக்கினை நோக்கித் திரும்ப முயன்றது.

“இதுதான் நம்மோட ப்ராஜெக்ட். நாம ரெண்டு பேட்சா பிரிஞ்சி அனிமேஷன் ஒர்க்கை முடிக்கணும். சிவா அண்ட் மது சித்தார்த் டீம்லயும், கீதா அண்ட் லதா என்னோட டீம்லயும் இருக்கப் போறீங்க” என்ற ஜீவா சொன்னதும், மதுமிதாவிற்கு உள்ளுக்குள் தவிப்பாக இருந்தது.

‘இவனுடனா! என்ன சொல்லி மறுப்பது? மறுத்தாலும், ஏன் என்ற கேள்வி வருமே!’ என்ற தவிப்புடன் நிமிர்ந்தவளுக்கு திக்கென்று இருந்தது.

இருக்கையின் கைப்பிடியில் கையை ஊன்றி அதில் முகவாயைத் தாங்கியபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த். அவனது விழிகளின் கூர்மையில் அவளது இதயம் முரசாக கொட்டியது. பொட்டுப் பொட்டாக வியர்த்த நெற்றியை கைக்குட்டையால் துடைத்தாள்.

சித்தார்த், அவளது உணர்வுகளைப் படித்ததைப் போல, தண்ணீர் பாட்டிலை அவளருகில் நகர்த்தினான். அந்த நேரத்திற்கு அவளுக்கும் தேவையாக இருக்க, மளமளவென தொண்டையில் சரித்துக்கொண்டாள்.

ஆழ்ந்த பார்வையுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவன் கரத்தை, ஜீவா யாரும் அறியாமல் மெல்ல தட்ட, சுதாரித்தவன் தனது பார்வையை விலக்கிக் கொண்டான்.

“மது! ரிலாக்ஸ் ஆகிட்டீங்களா?” என்றான் மென்குரலில்.

அவளுக்குத் தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

“தட்ஸ் குட்!” என்றவன் மற்றவர்களை நோக்கி, “புதுப் ப்ராஜெக்ட். பெரிய கம்பெனி… நமக்கு நல்ல ஆப்பர்சூனிட்டி. உங்க கோ-ஆபரேஷனோட அவங்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துடுவோம்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்மோட பெஸ்டைக் கொடுப்போம்” என்று சித்தார்த்தும் சொல்ல, அனைவரும் புன்னகையுடன் அதை ஆமோதித்தனர்.

“ஓகே கைஸ்! ஆல் த பெஸ்ட்!” என்ற ஜீவா, அவர்களை அனுப்பி வைத்தான்.

“டேய்! என்னடா நீ?” என மென்குரலில் கேட்ட ஜீவாவிற்கு புன்னகையையே பதிலாகக் கொடுத்தான் சித்தார்த்.

“உனக்கு, ரொமான்ஸ் பண்ண இடமா இல்ல? இப்படி அத்தனைப் பேருக்கும் நடுவில... என்னை வம்புல மாட்டிவைக்காம விடப்போறதில்லை நீ!” என்று அலுத்துக் கொண்டவனது வார்த்தைகள், அவனது செவிகளில் விழவே இல்லை.

வெளியே வந்த கீதா, ‘நீ சொன்னது அனைத்தும் உண்மை’ என்பதைப் போலச் சிவாவைப் பார்த்தாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கணினித் திரையை வெறித்துக் கொண்டிருந்த மதுவின் தோற்றம், அவளது மனத்தைப் பிசைந்தது.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
129
473
63
அத்தியாயம் 9



வீட்டிற்கு வந்த மதுமிதா, ஹாலில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

“என்னம்மா! சோர்வா இருக்க?” அன்புடன் கேட்ட தந்தையின் அருகில் அமர்ந்தாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா. வெயில் அதிகம் அதான் அப்படித் தெரியுது” என்றவள், “அம்மா எங்கே?” என்றாள்.

“கோவிலுக்குப் போயிருக்கா” என்றார் அவர்.

“ஓஹ்! மறந்தே போயிட்டேன். நீங்க காஃபி சாப்பிடுறீங்களா?” என்று கேட்டாள்.

“சாப்பிட்டேன்டா. உனக்கும் ஃபாஸ்க்ல இருக்கு. சர்க்கரை மட்டும் சேர்த்துக்க” என்றார் பரிவுடன்.

“கொஞ்ச நேரம் ஆகட்டும்ப்பா” என்றவள், தனது அறைக்கு வந்தாள்.

உடையைக் கூட மாற்றாமல், கண்களை மூடி கட்டிலில் சாய்ந்தாள். அவளது மனம் மீண்டும் அலுவலகத்தில் நடந்த நிகழ்வை அசைபோட்டது. அவனது விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று இப்போது நினைக்கும் போதும், அவளது உடலில் சில்லென்ற உணர்வை உண்டாக்கியது.

கண்களை இறுக மூடி, தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். வேலை சோர்வுடன், மனச்சோர்வும் ஒன்றிணைந்து கொள்ள அவளையும் அறியாமல் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

திடீரென, உடல் அதிர எழுந்து அமர்ந்தவளுக்கு மூச்சு வாங்கியது. நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஆறு என்று காட்டியது. ‘பத்து நிமிடம் தான் ஆகிறதா? திடீரென்று ஏன் இப்படிப் பதறி எழுந்தோம்?’ என யோசித்துக்கொண்டே கட்டிலை விட்டு இறங்கவும், கீழே தீபக்கின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

‘ஹும்... வந்தாச்சா. இந்த அத்தானுக்கு இதே வேலை. ஆபிஸ் முடிஞ்சதும் நேரா இங்கே வந்துட வேண்டியது. மது, இங்கே போகலாம். அங்கே போகலாம்ன்னு என் உயிரை வாங்க வேண்டியது. நல்லவேளை, திங்கட்கிழமையிலிருந்து இந்தத் தொல்லைக்கு ஒரு கும்பிடு போட்டுவிடலாம்’ என எண்ணிக்கொண்டே, முகத்தைக் கழுவிக்கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.

தீபக், காபி குடித்துக்கொண்டே பெரியவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

அவளைக் கண்டதும், “ஹாய் மது!" என்றான் உற்சாகமாக.

“ஹாய் அத்தான்!" என்றாள் சுரத்தே இல்லாமல்.

அவளை உற்றுப் பார்த்தவன், “மேடம், மூட் அவுட்ல இருக்கீங்க போல" என்றான் ஆராய்ச்சி பார்வையுடன்.

இவன் ஒருத்தன் இருக்கிற பிரச்சனையில’ என எண்ணிக்கொண்டவள், “அதெல்லாம் ஒண்ணும் இல்ல” என்று சொல்லிவிட்டு அன்னையிடம், “சீக்கிரமா வந்துட்டீங்க?” என்று விசாரித்தாள்.

“வர்ற வழியில தீபக்கைப் பார்த்தேன். கூடவே வந்தாச்சு. சரி நீ காஃபி சாப்பிடுறியா?” என்றார் விமலா.

“ம்ம்” என்றவள் தீபக்கின் எதிரில் அமர்ந்தாள்.

அவளது தந்தையின் மொபைல் ஒலிக்க, அவர் பேசிக்கொண்டே எழுந்து சென்றதும், “மது” என்றழைத்தான் தீபக்.

“அத்தான்! நீங்க, எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். என்னை பாதுகாக்கறேன்னு எல்லோரும் சேர்ந்து இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்யாதீங்க. நான் கோழை இல்ல” என்றாள் எரிச்சலுடன்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “அப்படியா ரொம்பச் சந்தோஷம். நீ கோழை இல்ல. ஆனா, சரியான முந்திரிக்கொட்டை. நான் ஆன்ட்டியை டிராப் பண்ண மட்டும்தான் வந்தேன். அப்புறம், அம்மா சன்டே இன்விடேஷன் வாங்கப் போகலாம்னு, உன்கிட்ட சொன்னாங்களாமே. அவங்களுக்கு ஏதோ அவசர வேலை வந்துடுச்சாம். அதனால, சன்டே நாம ரெண்டு பேரும்தான் இன்விடேஷன் வாங்கப் போறோம். ரெடியா இரு” என்றான் அழுத்தமாக.

“ம்ம், சோழியன் குடுமி சும்மா ஆடாது. ஆன்ட்டியை டிராப் பண்ணத்தான் வந்தேன்னு சாக்கு சொல்லிட்டு, பின்னாடியே ஒரு எக்ஸ்ட்ராவையும் சேர்த்துக்கறது” என்று கடுப்புடன் சொன்னாள்.

“எப்படியும் அப்பா, அம்மாவோட நீ போவதாக தானே இருந்த. உனக்கு விருப்பம் இல்லன்னா, நான் கம்பல் பண்ணல” என்றான் நிதானமாக.

மறுகணமே, ‘முதன்முதலில் அவனது வாழ்வில் நடக்கும் நல்லவிஷயம். தனக்காக எவ்வளவோ செய்திருப்பவன். இப்போது என்னை அழைப்பதும், என்னுடைய சந்தோஷத்திற்காக மட்டுமே’ என எண்ணியவள், “சரி, வரேன்” என்றாள்.

“அதைக் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்றது” என்றான் உர்ரென்ற முகத்துடன்

அவனது பாவத்தில் அவளுக்குப் புன்னகை அரும்ப, “சரி” என்றாள்.

“சிரிக்காதே. கொஞ்ச நேரத்துக்கு முன்ன, உன் மூஞ்சியும் அப்படித்தான் இருந்துச்சி” என்று அவன் கலாய்க்க, அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

***************​

“அண்ணா! இந்தக் கலர் ரொம்ப நல்லாயிருக்கு. இதையே எடுத்துக்கலாமா?” பெற்றோரின் அறுபதாம் கல்யாணத்திற்காக அழைப்பிதழ் வாங்க வந்திருந்த அஷ்வந்த், சித்தார்த்திடம் காண்பித்தான்.

“ரொம்பக் கிராண்டா இருக்கே. கொஞ்சம் சிம்பிளா இருக்கட்டுமே” என்றான் சித்தார்த்.

“அப்படியா சொல்றீங்க! ஓகே. சரி, நீங்க இங்கே பாருங்க. நான், அந்தப் பக்கமா போய்ப் பார்க்கிறேன்” என்றவன் எதிர்புறத்திற்குச் சென்றான்.

சித்தார்த் அங்கிருந்த அழைப்பிதழ்களைப் பார்த்துக் கொண்டிருக்க, “நாம வந்து, அரைமணி நேரமாச்சு. ஒரு இன்விடேஷன் செலக்ட் பண்ண இவ்ளோ அலப்பறை” என்று சலிப்புடன் வந்த குரலில் சட்டென நின்றான்.

‘மது!’ அவனது உள்ளம் உற்சாகக் குரல் கொடுக்க, சப்தம் வந்த திசையைக் கணக்கிட்டு அந்தப் பக்கமாக நடந்தான்.

“வாழ்க்கைல ஒரே ஒரு முறைதான் கல்யாணம். அதுக்காக கொஞ்சம் மெனக்கெடுறதுல தப்பில்லயே” என்றான் தீபக்.

அவர்கள் நின்றிருந்த ஷெல்ஃபின் பின்னால் வந்த சித்தார்த்தின் காதுகளில், தீபக் சொன்ன வார்த்தைகள் ஸ்பஷ்டமாக விழ, சிறு அதிர்ச்சியுடன் நின்றான். ஒருநிமிடம் தன் சொர்க்கம் தன்னை விட்டு நீங்கியது போல தோன்றியது.

மனம், இல்லை இல்லை என்று கூக்குரல் இட்டாலும், கேட்ட வார்த்தைகள் உண்மை தானே! ஆனாலும், அவனது மனம் அதை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.

‘என்னுடைய அவசரத்தால், ஒருமுறை அவளை இழந்து விட்டதாக எண்ணித் தவித்தது போதும். மீண்டும் ஒருமுறை அவளை இழக்க, நான் தயாராக இல்லை’ என தனக்குள் சொல்லிக்கொண்டவன், தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றான்.

“ஹய்யோ அத்தான்! கல்யாணம் வாழ்க்கைல ஒருமுறை தான் வரும். ஒத்துக்கறேன்! அதுக்காக, ஒரு இன்விடேஷனுக்கு இவ்வளவு செலவு பண்ணணுமா? கொஞ்சம் சிம்பிளா இருக்கட்டும். எனக்குச் சிம்பிளா இருந்தா தான் பிடிக்கும்" என்றாள்.

சித்தார்த்தின் இதயம் தடுமாறிக்கொண்டிருந்தது. இழுத்து வைத்த பொறுமை எந்த நேரமும் கட்டவிழத் துடித்துக் கொண்டிருந்தது.

“உன் கல்யாணத்துக்கு, சிம்பிளா இன்விடேஷன் போடலாம். இது, என் கல்யாணம். நீ கார்டை மட்டும் செலக்ட் பண்ணு!" என்றான் தீபக்.

“ஆமாம் அது ஒண்ணுதான் குறைச்சல்” என முணுமுணுத்தவள், வந்த வேலையைப் பார்க்கலானாள்.

தீபக்கின் பதிலைக் கேட்டச் சித்தார்த்துக்கு, கூடைக் கூடையாகப் பூக்களை வாரி, தன் மீது கொட்டியது போலிருந்தது. தனக்குத் தோன்றிய விடுதலை உணர்ச்சியை, ஒரு கணம் கண்களை மூடி அனுபவித்தான். ‘மனம், ஒரு நிமிடத்திற்குள் உலகைச் சுற்றி வரும் என்பது சரியாகத்தான் இருக்கிறது” என எண்ணிக்கொண்டான்.

கையில் ஒரு அழைப்பிதழுடன் திரும்பி வந்த அஷ்வந்த், அண்ணனின் படபடப்பையும், தவிப்பையும், அடுத்த நிமிடமே அவன் முகத்தில் தெரிந்த நிம்மதியையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

“மது! இந்தக் கார்டைப் பாரேன். நைஸ் இல்ல" என்றான்.

ஆழ்ந்து மூச்சுவிட்டவள், “அத்தான்! உங்க ஆளுக்குக் கிரீன் கலர் பிடிக்கும்னா, எல்லாத்தையும் அதே கலர்ல வாங்கணுமா? ஆனாலும், உங்களை இந்த அளவுக்கு ஜால்ரான்னு நினைக்கலப்பா. உங்களோட இம்சை தாங்காம, அவள் ஓடாம இருந்தா சரி" என்றாள் சிரிப்புடன்.

“அவளை, நான் பார்த்துக்குவேன். ஆனால், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவஸ்தைப்படப் போறவனை நினைச்சா!” என்று சொல்லும்போதே அவனுக்குச் சிரிப்பு வந்துவிட, "நல்லவேளை! என்னைக் காப்பாத்திட்ட கடவுளே!" என மேலே பார்த்து ஒரு கும்பிடு போட்டான்.

எரிச்சலுடன், "போதும் அத்தான்! எல்லோரும் நம்மளைத் திரும்பிப் பார்க்கறாங்க" என்றாள்.

“எல்லோருக்கும் அவங்களோட வேலை தான் சரியா இருக்கும். நாம தான் எல்லோரும் நம்மளையே கவனிச்சிப் பார்க்கறதா நினைச்சிக்கிறோம். சரி, ரிசப்ஷனுக்கு ஒரு கார்ட் செலக்ட் பண்ணு. கிளம்புவோம்” என்றவன் அவளிடம் சொல்லிக்கொண்டே அடுத்த பகுதிக்குச் செல்ல, அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினான்.

“ஹலோ சார்! எப்படி இருக்கீங்க?” என அவன் கேட்டதும் தான் சித்தார்த், தீபக்கை கவனித்தான்.

“ஹலோ தீபக்! எப்படியிருக்கீங்க?" என்று அவனுடன் கை குலுக்கினான்.

“ஐ அம் பைன்” என்றவன், அவன் கையிலிருந்த அழைப்பிதழைக் கண்டதும், “யாருக்குக் கல்யாணம்? உங்களுக்கா!" என்றான்.

“எங்க அப்பா, அம்மாவுக்கு அடுத்த மாசம் சஷ்டியப்த பூர்த்தி. கிராண்டா பண்ணலாம்னு பிளான். அதுக்குத் தான் நானும், என் தம்பியும் இன்விடேஷன் வாங்க வந்தோம்” என்று சொல்லிக் கொண்டே அஷ்வந்தைத் தேடினான்.

நடப்பது எல்லாவற்றையும் கவனித்துகொண்டிருந்த அஷ்வந்த், எதுவும் அறியாதவனைப் போல அவனருகில் வந்தான்.

“இவன் என் தம்பி அஷ்வந்த். ஹவுஸ் சர்ஜனா ப்ராக்டிஸ் பண்ணிட்டிருக்கான்” என அறிமுகப்படுத்தியவன், தீபக்கைத் தனது நண்பன் என அறிமுகப்படுத்தினான்.

முவரும் பேசிக்கொண்டிருக்க, கையில் இரண்டு வெட்டிங் கார்டுடன் தீபக்கைத் தேடி வந்தாள் மதுமிதா. ஷெல்பின் மறுபுறம் அவனது குரல் கேட்டதும், ‘யாருடன் பேசிக்கொண்டிருக்கிறான்?’ என எண்ணிக்கொண்டே சென்றவள், அங்கே சித்தார்த்தைக் கண்டவுடன் தயங்கி நின்றாள்.

மெதுவாக வந்த வழியிலேயே திரும்பிச் சென்றுவிட எத்தனிப்பதற்குள், அவளைப் பார்த்துவிட்ட தீபக், “மது! இங்கே பார்த்தியா யாருன்னு? எதிர்பாராத இடத்தில், திடீர் சந்திப்பு” என்று சொல்லிச் சிரித்தான்.

அவளும் தயக்கத்துடன் ஒப்புக்குச் சிரித்து வைத்தாள். சித்தார்த் ஏதாவது பேசுவான் என அவள் எதிர்பார்க்க, அவனோ ஏதும் பேசாமல் மென்னகையுடன் நின்றிருந்தான்.

மதுவும் விதியே என, “ஹலோ!" என்றாள்.

பதிலுக்கு அவனும், “ஹாய்!" என்றான்.

அதற்கு மேல் அவளும் பேசவில்லை. அவனும் அதற்காக முயற்சிக்கவில்லை. அவளது அருகாமையே அவனுக்கு பெரும் உவகையை தந்தது. மனம் நிறைய அந்த நினைவை பொக்கிஷமாகச் சேகரித்துக்கொண்டிருந்தான்.

இருவரின் நடவடிக்கையையும், கவனித்துக் கொண்டிருந்த அஷ்வந்த், “ஹலோ மேடம்! நான் அஷ்வந்த். சித்தார்த்தோட தம்பி. என்னை யாரும் அறிமுகப்படுத்தல. அதனால நானே அறிமுகமாகிக்கிறேன்" என்றான் சிரிப்புடன்.

அவனிடம் ஒரு ஸ்நேகபாவம் தெரிய, “ஹலோ! நான் மதுமிதா” என்று அவள் நிறுத்திக்கொள்ள, “என்னோட கொலீக்” என்றான் சித்தார்த்.

அஷ்வந்த், அண்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தான். ‘பத்தே நாள்ல ஒரு காதல் கதையா! ஆனா, கொஞ்சம் இழுபறியா இருக்கும் போல இருக்கே’ என எண்ணிக் கொண்டவன், "ஆஃபிஸ்ல எங்க அண்ணன் எப்படி?” என்றான் அவளிடம்.

அவள் புரியாமல் விழிக்க, “நல்லா உருட்டி மிரட்டி வேலை வாங்குவாறே. அதைச் சொல்றேன்” என்றதும், அமைதியாக முறுவலித்தாள்.

“பார்த்தீங்களா... ஆமாம்ன்னு சொல்றதுக்கே நடுங்கறீங்க. அவர் எப்பவுமே அப்படித்தான். இப்போ தான், நாம பிரெண்ட்ஸ் ஆகிட்டோமே. இனி, ஏதாவது மிரட்டினா, என்கிட்டச் சொல்லுங்க. நான் பார்த்துக்கிறேன்" என்றான் வீரத்துடன்.

“சரிடா அரட்டை. வேலை முடிஞ்சதா?” என்றான் தம்பியிடம்.

டன் என்பதைப் போலக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

மதுமிதாவும், “இந்த ரெண்டு கார்டும் எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு ஓகேன்னா வாங்கிக்கலாம்” என்றாள் தீபக்கிடம்.

“உங்க வீட்லயும் அறுபதாம் கல்யாணமா?” என்று அப்பாவியாகக் கேட்டான் அஷ்வந்த்.

சிரித்துக்கொண்டே, “எங்க அத்தானுக்குக் கல்யாணம்” என்றாள் இயல்பாக.

“கல்யாணமா! அப்போ, கண்டிப்பா ட்ரீட் கொடுத்தே ஆகணும். ஏண்ணா! நீங்க கேட்க மாட்டீங்களா?” என்றான் அஷ்வந்த்.

“டேய்! என்னடா” என்ற சித்தார்த் தயக்கத்துடன், தீபக்கைப் பார்த்தான்.

“ஃப்ரெண்ட்கிட்ட என்ன தயக்கம்?” என்றான் அஷ்வந்த்.

“அதானே… ஃப்ரெண்ட்கிட்ட என்ன தயக்கம்?” என்று உற்சாகத்துடன் சொன்ன தீபக், “இப்பவே ட்ரீட் கொடுத்திடுறேன். எங்கே போகலாம்?” என்றான் அஷ்வந்திடம்.

“அவன் விளையாட்டுக்குச் சொல்றான். நாங்க கிளம்பறோம்” என்றான் சித்தார்த்.

“நீங்க வாங்க பாஸ்!” என்று அவர்கள் இருவரும் முன்னால் நடக்க, மதுவும், சித்தார்த்தும் எதுவும் சொல்ல முடியாமல், முதன்முறையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
129
473
63
அத்தியாயம் 10


உயர்தர ஹோட்டலின் முன்னே காரை பார்க் செய்துவிட்டு, நால்வரும் உள்ளே நடந்தனர்.

“பாஸ்! நீங்க எப்பவும் இப்படி ஹைய்ஃபை ஹோட்டலுக்குத் தான் போவீங்களா?” என்று கேட்டான் அஷ்வந்த்.

“ஏன் கேட்கறீங்க?” என்றான் தீபக்.

“அடுத்தமுறை நாம மீட் பண்ணும் போது, நல்ல கையேந்தி பவனுக்குப் போகலாம். அங்கே தான், சாப்பாடு செம்மையா இருக்கும். இங்கேல்லாம் பேசறதுக்கும் கூட காசு கேட்கற ஆட்கள் தான் வருவாங்க” என்றான்.

‘இவன், நமக்கு மேலே இருப்பான் போலிருக்கிறதே. உண்மையாகச் சொல்கிறானா, விளையாடுகிறானா’ என்று புரியாமல், “உங்களுக்கு அப்படித்தான் பிடிக்கும்ன்னா போகலாமா?” என்று கேட்டான்.

“பரவாயில்லை. அடுத்தமுறை கண்டிப்பாகப் போகலாம்” என்றான்.

நம்பமுடியாமல் தீபக் அவனைப் பார்க்க, “நானெல்லாம் தர லோக்கல் பாஸ்! எப்பவும் பேசிக்கிட்டு, அடுத்தவங்களைக் கலாய்ச்சிக்கிட்டு லைஃபை என் ஜாய் பண்ணுற ஆளு” என்று இரசித்துச் சொன்னவனைப் பார்த்துக் கலகலவெனச் சிரித்தாள் மதுமிதா.

“டேய்! மானத்தை வாங்காதேடா!” என்றான் சித்தார்த்.

“பார்த்தீங்களா! எங்க அண்ணாத்தைக்குத் தான், இந்த மாதிரி இடம் பொருந்தும்” என்றவனைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது சித்தார்த்திற்கு.

உணவு வகைகளை ஆர்டர் கொடுத்துவிட்டு, “லவ் மேரேஜா? இல்ல…” என்று அஷ்வந்த் அவனைக் கேட்க, அதற்குப் பதில் சொல்லும் முன் தீபக்கின் மொபைல் ஒலித்தது. எடுத்தவன் சிரித்துக்கொண்டே, மதுவிடம் மொபைலை கொடுத்தான்.

‘மேகி’ என்று திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும், "திங்க் ஆப் தி டெவில்" என்று புன்னகையுடன் சொன்னவள், “எக்ஸ்க்யூஸ்மீ” என்று கேட்டுக்கொண்டு மொபைலை ஆன் செய்தாள்.

எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்க, அவளால் அங்கிருந்து எழுந்து செல்ல முடியவில்லை.

அவள் பேசுவதற்குள், “என்ன அத்தான்? போனை எடுக்க இவ்வளவு நேரமா? நான் ரொம்ப நேரமா ட்ரை பண்றேன். இப்போ எங்கே இருக்கீங்க?" என்று கொஞ்சலும் கோபமுமாக மறுபக்கம் பேசியவளது குரல் ஒலித்தது.

“அம்மா மேகலை! யார் போன் எடுக்குறாங்கன்னு குரலைக் கூடக் கேட்க மாட்டியா? உன்னோட அத்தான்னு நினைச்சி, ஏதாவது ஏடாகூடமா பேசிட்டியானா, நான் என்னடி பண்ணுவேன்?" என்றாள் போலியான பயத்துடன்.

“ஹே மது, எப்படிடீ இருக்கே? அக்சுவலி, நான் உன் கூடத்தான் பேசணும்னு நினைச்சு போன் செய்தேன்” என்றாள் சத்தமாக.

இமைகள் விரிய, “ம், அப்படியா! என்கிட்ட பேசணும்ன்னு தான், உன் அத்தானோட நம்பருக்குப் போன் பண்ணியா?” என்று கிண்டலாகப் பேசி, அவளது காலை வாரினாள்.

“நிஜம்ப்பா!” என்று அவள் அசடு வழிய, “ஹய்யோ! பார்த்து… நீ அங்கே வெட்கப்படறது; இங்கே தெரியுது” என்றாள் கேலியாக.

தீபக்குடன் பேசிக்கொண்டிருந்த போதும், சித்தார்த்தின் பார்வை அவ்வப்போது அவளை வருடிச் சென்றது. அவனறியாமல் அதை மற்ற இருவரும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

“உன்கிட்டச் சண்டை போடணும்னு இருந்தேன். குலதெய்வம் கோவிலுக்குப் போக வர முடியாதுன்னு சொல்லிட்டியாமே!” என்று தாங்கலுடன் கேட்டாள் மேகலா.

“ம்ம், ஆஃபிஸ்ல புதுப் ப்ராஜெக்ட் ஆரம்பமாகிடுச்சி. கல்யாணத்துக்குள்ள முடிஞ்சிடும்” என்றவள் ஓரவிழியால் சித்தார்த்தைப் பார்த்தாள்.

அவள் மேலும் ஏதோ கேட்க விழைய, “வீட்டுக்கு வந்துட்டுப் பேசறேன். இப்போ, உன் அத்தான்கிட்ட தரேன் பேசு” என்றவள் மொபைலை தீபக்கிடம் கொடுத்தாள்.

“இரண்டு வார்த்தைகள் பேசிய தீபக், “சிக்னல் கட் ஆகுது. பேசிட்டு வரேன்” என்று காரணம் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

“அடடா! என் ஃப்ரெண்டுக்குப் பேசணும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். எக்ஸ்க்யூஸ்மீ! நானும் பேசிட்டு வந்திடுறேன்” என்றஅஷ்வந்த், தமையனைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிவிட்டுச் செல்ல, இருவரும் தனியாக அமர்ந்திருந்தனர்.

அவன் கைகளைக் கட்டிக்கொண்டுவலது கையால் தாடையைத் தடவியபடி அமர்ந்திருக்க, அவனுடன் தனியாக அமர்ந்திருப்பது மதுமிதாவிற்குச் சற்று படபடப்பைக் கொடுத்தது.

அருகிலிருந்த மெனு கார்டைப் புரட்டினாள். சுற்றும் முற்றும் விழிகளைச் சுழற்றினாள். அதிலும் நேரம் செல்லாமல், மேஜை மீதிருந்த பிளாஸ்டிக் பூக்களை வருடிக்கொடுத்தாள்.

எதிரில் அமர்ந்திருந்தவன், அனைத்தையும் கண்டும் காணாதது போல் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் கண்ணில் படாதவாறு மறைந்து நின்றிருந்த அஷ்வந்த், ‘இது வேலைக்காகாது. ரெண்டு பேரும் முகத்தைக் கூடப் பார்த்துக்க மாட்டேன்னு உட்கார்ந்திருக்காங்களே! நாம இங்கேயே ஒளிந்திருந்து பார்த்து, ஒரு பிரயோஜனமும் இல்ல. நேராகப் போய்ப் பேசவைக்க முயற்சி செய்ய வேண்டியது தான்’ என்று கடுப்புடன் எண்ணிக்கொண்டே வந்து தமையனின் அருகில் அமர்ந்தான்.

மதுவைப் பார்த்துப் புன்னகைத்தவன், “அப்புறம், உங்களைப் பத்திச் சொல்லுங்க” என்றான்.

“என்னைப் பத்தின்னா...” என்று இழுத்தாள்.

“ஓஹ்! ஸ்டார்ட்டிங் ட்ரபுளா? அப்போ, என்னைப் பத்தி முதல்ல சொல்றேன். நீங்க, அதைப் பிடிச்சிக்கிட்டுப் பின்னாடியே வாங்க” என்றான்.

மென்நகையுடன், “சொல்லுங்க” என்றாள்.

“எங்க அப்பா, இந்த ஊர் நாட்டாமைல ஒருத்தர்” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.

“நீதிபதிங்க. நீதி அரசர்” என்றான் அழுத்தமாக.

“ஓஹ்!” என்றாள் ஆச்சரியத்துடன்.

“ஊருக்கெல்லாம் அவர் நாட்டாமையா இருந்தாலும், எங்க வீட்டு உள்துறை அமைச்சருக்கு… அதாவது, எங்க அம்மாவுக்குக் கட்டுப்பட்ட மனுஷன். ரொம்ப அப்பாவி! எங்க அம்மாவுக்கு, அசிஸ்டெண்ட் ஒருத்தங்க இருக்காங்க. எங்க அண்ணி மீரா. இந்த இடத்துல எங்க பெரியண்ணனைப் பத்திச் சொல்லல. இதை நல்லா கவனிக்கணும்” என்று அவன் பாவனையுடன் சொல்ல, சித்தார்த் ஆயாசத்துடன் தலையைக் கோதிக் கொண்டான்.

தம்பியின் அட்டகாசத்தை நிறுத்த வழி தெரியாமல், தவிப்புடன் அமர்ந்திருந்த சித்தார்த்தைக் கண்டவளுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“எங்க பெரிய அண்ணன் ஆடிட்டர் ஆதித்யா. அவரோட ஆட்டமெல்லாம், அவரோட ஜூனியர்ஸ்கிட்ட மட்டும்தான். வீட்டுக்கு வந்துட்டா, எங்க அண்ணி கொடுக்கற சாவிக்கு மட்டும்தான் ஆடுவார். அவ்ளோ சதி பக்தி!” என்று பவ்யமாகக் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல, மதுமிதா கலகலவென நகைத்தாள்.

சித்தார்த், “டேய்! அடங்குடா” என்றான் மென்குரலில்.

“டிஸ்டர்ப் பண்ணாதீங்க ப்ரோ! அப்புறம், ப்ளோ போயிடும்” என்றவன், “மேடம்! நான் என்ன கதாகாலாட்சேபமா நடத்தறேன். இந்த மானே தேனேன்னு பாட்டு எழுதும் போது போட்டுக்கறதைப் போல, கதை சொல்லும்போது நீங்க ஓ! ஆஹா! அப்படியான்னு! கேட்டாதானே சொல்ற எனக்கும், ஒரு என்கரேஜிங்கா இருக்கும். இல்லன்னா, எங்க அண்ணன் என்னையில்ல தப்பா நினைப்பார்” என்றான் சலிப்புடன்.

“ஆஹாங்! இதெல்லாம் வேற சொல்லணுமா?” என்று, அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“கண்டிப்பா!” என்றான் அவன்.

“மது! அவன் சொல்றதைக் கேட்காதே. பாதிக்கு மேலே கட்டுக்கதை தான்” என்றான் சித்தார்த் வேகமாக.

“வெரி இண்ட்ரஸ்டிங் சித்தார்த்! அஷ்வந்த் சொல்வதைக் கேட்கும்போதே, உங்க வீட்ல இருக்கவங்களைப் பார்க்கணும் போல ஆசையா இருக்கு” என்றாள் இயல்பாக.

அந்த வார்த்தைகள் போதாதா அவனுக்கு. அவள் முதன்முறையாக, இவ்வளவு இயல்பாகத் தன்னிடம் பேசிவிட்டதே அவனுக்குப் பெரும் சந்தோஷமாக இருக்க, குறுகுறுவென்று அவளைப் பார்த்தான். ஆனால், அவனது பார்வையைப் பார்க்க அவளுக்கு எங்கே நேரமிருந்தது. அஷ்வந்திடம் பேச ஆரம்பித்துவிட்டாள்.

“எங்கே விட்டேன்… ஆஹ்! எங்க அண்ணிக்கு வலது கை, இடது கைன்னு எங்க வீட்ல ரெண்டு பாடிகார்ட்ஸ் இருக்காங்க. வலது கை எங்க அக்கா சுபத்ரா. ஆதி அண்ணாவுக்கும், சித்தார்த் அண்ணாவுக்கும் நடுவுல பிறந்தவங்க. இடது கை என்னோட ஒட்டிப் பிறந்த தங்கை நேத்ரா” என்றான்.

“நீங்க ரெண்டு பேரும் ட்வின்ஸா!” என்று விழி விரித்தாள்.

“ஆமாம். இப்படிப்பட்ட ஒரு கலாட்டாவான குடும்பத்துல ஒரே ஒரு அப்பாவியா நானும் இருக்கேன்” என்றான் பாவமாக.

நீண்ட பெருமூச்சை விடுத்தவள், “குடும்பம் மொத்தத்தையும் இப்படி ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிட்டு, நீங்க அப்பாவியா!” என்று அவனது பேச்சிற்கு சளைக்காமல் பதில் கேள்வி கேட்டாள்.

அவள் உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி வந்த தீபக், மனமுருகிப் போனான். வெகுநாட்களுக்குப் பின் அவளை முகம் முழுவதும் சிரிப்புடன் பார்த்தவனின் இமைகளில் ஈரம் படர, வேகமாகத் துடைத்துக் கொண்டு வந்து அவளருகில் அமர்ந்தான்.

“சாரி! கொஞ்சம் லேட் ஆகிடுச்சி” என்றான் இறங்கிய குரலில்.

“அஷ்வந்த் சார் சொன்ன ஃபேமிலி ஸ்டோரியை மிஸ் பண்ணிட்டீங்க அத்தான்!” என்றாள் உற்சாகத்துடன்.

சில நொடிகள் அவளது முகத்தை, ஆழ்ந்த அமைதியுடன் பார்த்தான் தீபக். ‘எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி மது! சீக்கிரமே நீ எங்க மதுவா கிடைச்சிடுவ’ என எண்ணிக்கொண்டான்.

அதற்குள் ஆர்டர் செய்திருந்த உணவுகள் வர, பேச்சு பொதுவான விஷயத்திற்குத் தாவியது. சாப்பிட்டு முடித்த சித்தார்த் கைகழுவ எழுந்து செல்ல, மதுமிதாவும் எழுந்தாள்.

மற்ற இருவரும் அமர்ந்திருப்பதைக் கண்டதும், “நீங்க ரெண்டு பேரும் கை கழுவ வில்லையா?” என்று கேட்டாள்.

“நாங்க, உங்க அளவுக்குச் சுத்தம் கிடையாது. எங்களுக்குப் பிங்கர் பவுல் வரும்” என்றான் தீபக்.

அஷ்வந்தோ ஒருபடி மேலே சென்று, “இருக்கிற தண்ணி கஷ்டத்துல, பிங்கர் பௌல் [finger bowl] எதுக்கு? நமக்கெல்லாம், மௌத் பௌல் [mouth bowl] போதும்” என்றவுடன், மதுவால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.

“உங்க வீட்ல இருக்கவங்க ரொம்பப் பாவம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

பில் வந்ததும், சித்தார்த் தனது க்ரெடிக் கார்டைக் கொடுத்தான். மறுத்த தீபக்கிடம், “உங்க கல்யாணத்துக்காக நான் கொடுத்த விருந்துன்னு இருக்கட்டும்” என்று சொல்ல, தீபக் சரி என்பதைப் போலத் தோளைக் குலுக்கினான்.

நால்வரும் காரின் அருகில் வந்ததும் தீபக், சகோதரர்கள் இருவருக்கும் கை கொடுத்துவிட்டு, காரில் ஏற மறுபுறம் சென்றான்.

காரில் ஏறும் முன், “ரொம்பத் தேங்க்ஸ் சித்தார்த்! இந்த ஈவ்னிங்கை என்னால மறக்கவே முடியாது” என்றவள், “தேங்க்யூ அஷ்வந்த்” என்றாள்.

புன்னகையுடன், “வெல்கம்” என்றான் சித்தார்த்.

சிறு முறுவலுடன் காரின் கதவில் கை வைக்கவும், சித்தார்த்தும் அவள் அமர்வதற்காக கதவைத் திறக்க முயல, இருவரது கைகளும் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, அவள் வேகமாக கையை இழுத்துக் கொண்டாள்.

அவன் கதவைத் திறந்துவிட, மௌனமாக அமர்ந்தாள். மனம் படபடவென அடித்துக் கொண்டது. தன் படபடப்பை வெளியில் தெரியாமல் மறைக்க பெரும் பாடுபட்டாள். உதடுகளை அழுந்தக் கடித்து, கை விரல்களை இறுக மூடினாள்.

சித்தார்த்தின் அருகில் நின்றிருந்த அஷ்வந்தும், அவளருகில் அமர்ந்திருந்த தீபக்கும் இவைகளைக் கண்டும் காணாமல் இருந்தனர். அவர்களது கார் கண்ணிலிருந்து மறையும்வரை சித்தார்த் அங்கேயே நின்றிருந்தான்.

அவனது தோளைத் தட்டிய அஷ்வந்த், “அண்ணா! அவங்க இந்நேரம் வீட்டுக்கே போயிருப்பாங்க. நீங்க சாவியைக் கொடுங்க. உங்களை நம்பி, என் உயிரைப் பணயம் வைக்க, நான் தயாரா இல்லை" என்றவன் சாவியை வாங்கிக் கொண்டு, “தொண்டை தண்ணி வத்த ஊர் கதையெல்லாம் சொன்னது நானு. தேங்க்ஸ் இவருக்கு. சும்மாவா சொன்னாங்க எல்லாத்துக்கும் ராசி வேணும்” என்று வேண்டுமென்றே புலம்பிக் கொண்டே காரைக் கிளப்பினான்.

Comments :
 

Ashra2018

New member
Feb 8, 2021
7
4
3
Ashwanth reminds me of Indher (theeyinil uyir jothiye ) .. charming character 🤩

Too many characters in this story .. now after 10 chapters .. oru clarity vandhurku enakku !
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
129
473
63
அத்தியாயம் - 11



நாட்கள் மெல்லக் கைவீசி நடந்தது. ப்ராஜெக்ட் துவங்கிய நாள் முதல் அவர்களது பெரும்பாலான நேரத்தை, அலுவலகத்திலேயே செலவிட வேண்டியிருந்ததுடன், மதுமிதா, சித்தார்த்தின் நேரடி பார்வையில் பணிபுரிய வேண்டி வந்தது.

அவ்வப்போது சித்தார்த்தின் விவரணைகளும், ஆலோசனைகளும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவனும் விளக்கமாக நிதானமாக ஒவ்வொன்றையும் விவரித்தான். ஜீவாவுடன் ஏற்கெனவே பணியாற்றியிருந்தவர்களுக்கு, அதே அளவில் சித்தார்த்தின் பணியாற்றும் முறையும், வேகமும், அவர்களையும் துரிதமாகச் செயல்பட வைத்தது.

மதுமிதா எதிர்பார்த்த அளவிற்குச் சிரமமாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் இலகுவாகவே கழிந்தது. ஜீவா, சித்தார்த் இருவரது பேச்சிலும் வெளிப்பட்ட ஹாஸ்யமும், கிண்டலும் அந்த இடத்தையே அவ்வப்போது கலகலக்க வைத்துக் கொண்டிருந்தது.

எப்போதும் சிறு புன்னகையுடன் வலம் வரும் மதுமிதா, இப்போதெல்லாம் கலகலவென நகைக்க ஆரம்பித்திருந்தாள். ஆரம்பத்தில் அவன் மீதிருந்த ஒதுக்கமும், தயக்கமும் சற்று விலக ஆரம்பித்தது. வேலை நேரத்தில் சித்தார்த்துடன் இயல்பாகப் பேசித் துவங்கினாள்.

அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் அவளது மாற்றத்தை உணர்ந்த அனைவருக்கும், அது பெரும் ஆறுதலாகவும், ஒரு எதிர்பார்ப்பையும் உண்டாக்கியது. வசந்தம் வீசிய கல்லூரிக் காலத்தைப் பற்றிய நினைவுகளை, அதிகமாக மற்றவருடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தாள்.

காலம் எப்போதும் நம்மைச் சமதளத்தில் நடக்க விடுவதில்லை. ஏற்ற இறக்கமும், மேடு பள்ளங்களும், நாம் விரும்பாவிட்டாலும், அவற்றைக் கடக்க வேண்டிய சூழலையை உருவாக்கி விடுகிறது. அவற்றை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு, நாம் பலவந்தமாகத் தள்ளப்படுகிறோம்.

கடலில் சங்கமிக்கப் பாய்ந்தோடும் ஆற்றின் நீரோட்டத்தில், துடுப்பில்லாமல் சென்று கொண்டிருந்த மதுமிதாவின் வாழ்க்கை எனும் படகு வரப்போகும் சூறாவளியைச் சந்திக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

அன்று சனிக்கிழமை ப்ராஜெக்ட் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியிருந்தது. வார இறுதி நாட்கள் விடுமுறை என்ற போதும், தங்களது பிராஜெக்டை விரைந்து முடிக்க, ஒரு நாள் கூடுதலாக அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

சித்தார்த்தும், ஜீவாவும் ப்ராஜெக்ட் சம்மந்தமாக தங்களது அறையில் பேசிக் கொண்டிருக்க, மற்ற அனைவரும் கிளம்பிச் சென்றிருக்க, மதுமிதா ஏதோ வேலை செய்துகொண்டிருந்தாள்.

கையில் கத்தையாக பேப்பருடன் பிரிண்டர் அறையிலிருந்து வெளியே வந்த ஜீவா, “மது நீங்க கிளம்பலையா?” என்று கேட்டான்.

“இதோ, கிளம்பிட்டே இருக்கேன். ஒரு ஐந்து நிமிடம்” என்றாள்.

சிறு முறுவலுடன் மீண்டும் சித்தார்த்தின் அறைக்கு வந்த ஜீவா, அவன் எதையோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

விழிகளை உயர்த்தி நண்பனைப் பார்த்த சித்தார்த், “உட்காரேன்டா!” என்றான்.

“உனக்கு உடம்புக்கு எதுவும் இல்லையே!” என்று கிண்டலாகக் கேட்டான் ஜீவா.

கூர்ந்து பார்த்தபடி, “ஏன்? நீ கேட்கற தொனியே சரியில்லையே!” என்றான்.

“பின்னே, வெளியே மது தனியா உட்கார்ந்திருக்கா. அவகிட்டப் பேச உனக்கு எவ்ளோ நல்ல ஆப்பர்சூனிட்டி. அதை விட்டுட்டு இன்னும் ப்ராஜெக்டைக் கட்டிட்டு இருக்கியே” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

“ரொம்ப நல்லவன்தான்டா நீ! அவளே இப்போ தான் முகத்தைப் பார்த்துப் பேச ஆரம்பிச்சிருக்கா. இதுல நானே போய்ப் பேசினேன்னு வை…” என்றவன், ‘வம்பே வேண்டாம்’ என்பதைப் போலத் தலையை ஆட்டினான்.

“ப்பா! என்னா பயம்? இனிமே, எனக்குக் காரியம் ஏதாவது ஆகணும்ன்னா ரொம்பச் சுலபமா நடத்திக்குவேன்” என்றான் சிரிப்புடன்.

“நடத்துவடா! எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். இன்னைக்கு மதுவைப் பத்தி வீட்ல சொல்லப் போறேன்” என்றான் ஆசையுடன்.

“அடப்பாவி! இன்னும் உன் லவ்வை நீ அவகிட்டயே சொல்லலைடா!” என்றான் ஜீவா ஆச்சரியத்துடன்.

“ப்ராஜெக்ட் முடிஞ்சதும், முதல் வேலை அதுதான்” என்றான் நிறைவுடன்.

“எப்படியோ! எல்லாம் நல்லபடியா நடந்தா சரி. சீக்கிரமா கல்யாணச் சாப்பாடு போடு” என்றான் மகிழ்ச்சியுடன்.

ஜீவா அவளிடம் பேசிவிட்டுச் சென்றபின் சிஸ்டமை அணைத்துவிட்டு எழுந்தவள், அவளை நோக்கி வந்த அட்டெண்டரைக் கண்டதும் நின்றாள்.

“மேடம்! உங்களைப் பார்க்க, விசிட்டர் வந்திருக்காங்க” என்றார்.

‘என்னைப் பார்க்க யார் வந்திருப்பார்கள். அதுவும் அலுவலகத்திற்கு?’ என எண்ணிக்கொண்டே “யாரு?” என்றாள் நெற்றிச் சுருங்க.

“பேரைக் கேட்டேன். அவங்க காலேஜ் ஃப்ரெண்டுன்னு சொல்லுங்க தெரியும்ன்னு சொல்லிட்டார்” என்றார் அட்டெண்டர்.

‘காலேஜ் ஃப்ரெண்ட்’ என்றதும் அவளது கண்களில் சிறு ஒளி தோன்றி மறைந்தது.

“நான் பார்த்துக்கறேன். தேங்க்ஸ்!” என்றவள், வேகமாக பார்வையாளர் அறையை நோக்கி நடந்தாள்.

நூறடி தொலைவிலிருந்த பார்வையாளர் அறையை அடைவதற்குள், இதயம் லப்டப் என வேகமாக அடித்துக்கொண்டது. சொல்ல இயலாத ஒர் உணர்வு, நெஞ்சை அடைப்பதைப் போலிருந்தது.

அறை வாசலில் நின்றவள், தயக்கத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தாள். சுவர்புறமாக அவன் திரும்பி நின்றிருந்த போதும், அவன் நின்றிருந்த தோரணையே அது அவன் தான் என்று சொல்லாமல் சொல்ல, சிலையென நின்றாள். விழிகள் கண்ணீரைப் பொழியத் தயாராக இருந்தன.

காலடி ஓசையைக் கேட்டுத் திரும்பியவன், அவளைக் கண்டதும், “ஹாய் மது! என்னை எதிர்பார்க்கல இல்ல” என்று கேட்டது தான் தாமதம், அவளது கன்னங்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது.

அவன் அதைச் சற்று எதிர்பார்க்கவில்லை. தன்னிடம் சண்டையிடுவாள், பேச மாட்டாள் என அவன் நினைத்துக்கொண்டிருக்க, அவளது அழுகை அவனைக் கலவரப்படுத்தியது.

“மது! சாரி சாரி. நான் செய்ததெல்லாம் தப்புத்தான். ப்ளீஸ் அழாதே!” என்று, அவளது கண்களைத் துடைக்க விழைந்தவனின் கரத்தைத் தட்டிவிட்டாள்.

“எருமை மாடு! உன்னை யாருடா இங்கே வரச்சொன்னது? உன்னைப் பார்க்காம இங்கே, ஏங்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சியா? என் கண்ணு முன்னால நிக்காதே” என்றவள் வேகமாக அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

அவளது பேச்சு அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. ‘இப்படி அவளிடம் திட்டுவாங்கி எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன’ என நினைத்தவனுக்குப் புன்னகை அரும்பியது.

“ரெண்டு அறை வேணும்னாலும் அறைஞ்சிக்க. தயவுசெய்து அழாதே” என்று பரிதாபமாகச் சொன்னவன், “படு கேவலமா இருக்கு” என்று சற்று மென்குரலில் சொன்னான்.

மீண்டும் அவனைப் பார்த்தச் சந்தோஷம் இருந்தபோதும், அவனது சில செயல்களால் காயம்பட்டிருந்த அவளது மனம் வீராப்புடன் முறைத்துக்கொண்டு நின்றது. ஆனால், வழக்கமான அவனது குறும்புப் பேச்சு வெளிப்பட்டது, கையிலிருந்த கைப்பையால் அவனை இரண்டு போடு போட்டாள்.

“அறிவு கெட்ட எருமை!” என்று திட்டிக்கொண்டே அவள் அடிக்க, அவன் கனிவுடன் அவளைப் பார்த்துக்கொண்டே அத்தனை வசவுகளையும் வாங்கிக் கொண்டான்.

“போதும் மது! கை வலிக்கப் போகுது” என்றான் குழந்தைக்குச் சொல்வதைப் போல்.

“மனசை வலிக்க வச்ச. அதையே தாங்கிக்கிட்டேன். இந்தக் கை வலியைத் தாங்க மாட்டேனா?” என்றவள் அங்கிருந்த இருக்கையில் அமர, சுரேஷ் வேதனையுடன் அவளருகில் அமர்ந்தான்.

“சாரிமா! இன்னைக்கு இருக்கிற பக்குவம், அன்னைக்கு இல்ல. நீ எவ்வளவோ சொன்ன... ஆனாலும், அப்போ இருக்குற வலி மட்டும்தான் பெரிதா தெரிஞ்சது. பெத்தவங்க, கூடப் பிறந்தவங்க, ப்ரெண்ட்ஸ் யாரும் தெரியலை” என்றவன் முகம் வேதனையை வெளிப்படுத்தியது.

அமைதியாக அவனைப் பார்த்தாள். தோற்றத்தில் கம்பீரம் கூடியிருப்பது மட்டுமல்லாமல், அவனது வார்த்தைகளிலும் தெரிந்த முதிர்ச்சியும், அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

“உன்னோட இந்த மாற்றத்தைப் பார்க்கச் சந்தோஷமா இருக்கு சுரேஷ்!” என்றாள் ஆத்மார்த்தமாக.

முறுவலித்தவன், “இதே வார்த்தையை நானும், உன்னைப் பார்த்துச் சொல்லணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு மது!” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல, அவள் சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளது முகத்தில் தெரிந்த ஆழ்ந்த அமைதி, சுரேஷிற்கு பரிதவிப்பைக் கொடுத்தது.

அவளது கரத்தைப் பற்றியவன், “சரி, வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?” என்று பேச்சைத் திசைத் திருப்பினான்.

கண்களைத் திறந்தவள், “ம்ம், நல்லாயிருக்காங்க. அத்தானோட கல்யாண வேலைல எல்லோரும் ரொம்பப் பிஸி. ஆன்ட்டி, தீபா, அண்ணாலாம் எப்படி இருக்காங்க? தீபாவுக்கு ரெண்டாவது பெண் குழந்தை தானே? உங்களோடலாம் டச்ல இல்லன்னாலும், அப்பப்போ அத்தான்கிட்ட விசாரிச்சிக்குவேன்” என்று படபடவென பேசினாள்.

“எல்லோரும் நல்லா இருக்காங்க. நீ எங்களைப் பத்தி தீபக்கிட்ட விசாரிச்சிக்குவேன்னு தெரியும்” என்றான் சிரிப்புடன்.

அசடு வழிந்தவள், “நீ இன்னும் எவ்ளோ நாள் இங்கே இருப்ப? வந்தது வந்த, அத்தானோட கல்யாண நெருக்கத்துல வந்திருந்திருக்கலாம்” என்றாள்.

“நான் இங்கேயே இருக்கலாம்ன்னு வந்திருக்கேன். நீ என்னைக் கிளப்பி அனுப்பறதுல இருக்கியே” என்றான் விளையாட்டாக.

“ஹேய்! உண்மையாகவா சொல்ற? அப்போ, ஆன்ட்டி, அண்ணாலாம்…”

“எல்லோருமே தான். நம்ம வீட்டைக் கொஞ்சம் ரெனோவேட் பண்ணணும். அதைக் கவனிக்கத்தான் நான் முன்னால கிளம்பி வந்தேன். அம்மாலாம் இன்னும் ரெண்டு வாரத்துல வந்திடுவாங்க” என்றான்.

“உன்னை நம்பி ஒரு வேலையைக் கொடுக்கற அளவுக்கு நீ ஆளாகிட்டியே! சூப்பர்ப்பா!” என்றாள் சிரிப்புடன்.

“அவ்ளோ தானே நினைச்சிட்டு இருக்க. இன்னும், நீ எதிர்பார்க்காததை எல்லாம் செய்யப் போறேன். பார்த்துட்டே இரு” என்றான் மர்மப் புன்னகையுடன்.

“உன்கிட்ட மாற்றம் வந்ததில் அதிகமா சந்தோஷப்படுற ஆள் நான்தான். சரி, இன்னும் எவ்ளோ நேரம் இங்கேயே உட்கார்ந்து பேசிட்டு இருக்கறது. வா வீட்டுக்குப் போகலாம்” என்றபடி எழுந்தவள், “ஆனா, நான் இங்கே இருக்கேன்னு எப்படித் தெரியும்? அத்தான்கிட்ட பேசினியா?” என்றாள் புரியாமல்.

“என்னை ரிசீவ் பண்ணதே தீபக் தான். இங்கே வந்தது உன்னை மட்டும் பார்க்க இல்ல… இன்னும் முக்கியமான ரெண்டு பேர் இருக்காங்க” என்றவன், மொபைலை எடுத்து யாரையோ அழைத்தான்.

‘யாராக இருக்கும்?’ என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க, “ஹலோ! ரெண்டு பேரும் என்ன செய்றீங்க? அங்கேயே இருங்க ரெண்டே நிமிஷம்” என்று மட்டும் சொல்லிவிட்டு போனை அணைத்தவன், “மது வா!” என்று அவள் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு மீண்டும் அலுவலகத்தினுள்ளே செல்ல, அவள் புரியாமல் பார்த்தாள்.

சித்தார்த்தின் அறைக்கதவைத் தட்டிவிட்டு அவன் உள்ளே செல்ல, அவள் தயக்கத்துடன் அவன் பின்னால் சென்றாள்.

அவனைக் கண்டதும் சந்தோஷத்துடன், “சுரேஷ்! நீ எப்படி இங்கே?” என்ற ஜீவா எழுந்து வந்து அவனை அணைத்துக்கொள்ள, சித்தார்த் அவனைத் தோளோடு சேர்த்தணைத்து, “எப்படிடா இருக்க?” என்று தட்டிக் கொடுத்தான்.

அவர்கள் மூவரையும் பார்த்து, மலங்க மலங்க விழித்தாள் மதுமிதா.

“ரொம்ப நல்லாயிருக்கேன்” என்றவன், மதுவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டி, “மது! இவங்க சைல்ட் ஹூட்லயிருந்து, அண்ணாவோட ஃப்ரெண்ட்ஸ்” என்றான் சிரிப்புடன்.

நம்பமுடியாமல், அவர்களைப் பார்த்தாள். இங்கே வேலைக்குச் சேர்ந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒருநாள் கூட ஜீவா இதைத் தன்னிடம் சொன்னதில்லையே! அப்படியானால், ரமேஷ் அண்ணாவின் மூலமாகத் தான் இந்த வேலையும் கிடைத்ததா? கீதா…?’ என்று கேள்வி மேல் கேள்வி பிறக்க, விடைகளுக்காக அவர்களைப் பார்த்தாள்.

“மது! குழப்பமே வேண்டாம். முதல்ல உட்கார்” என்று அவளுக்கு இருக்கையைக் காண்பித்தான் சித்தார்த்.

அவள் மௌனமாக அமர, அவளருகில் அவனும் அமர்ந்தான். ரமேஷின் நட்பு, சுரேஷின் பாசம், அம்மாவின் அன்பு, என்று வரிசையாகச் சொன்ன சித்தார்த், கவனமாக தீபாவின் திருமண விழாவில், அவளைப் பார்த்ததைப் பற்றிச் சொல்லாமல் விடுத்தான்.

ஜீவாவிடம் திரும்பியவள், “அப்போ, எங்க காலேஜ்ல டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி என்னைக் காண்டாக்ட் பண்ணேன்னு சொன்னதெல்லாம்…” என்று ஆரம்பித்தவள், “என்னை, உங்களுக்கு இண்ட்ரடியூஸ் செய்தது ரமேஷ் அண்ணாவா?” என்று கேட்டாள்.

ஆமென தலையை அசைத்தவன், அவளது படிப்பு முடிந்த பின் உடல்நலக் குறைவால் கேம்பஸ் இண்டர்வியூவில் கிடைத்த வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்தபோது ரமேஷ், அவளை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும்படி தன்னிடம் கூறியது வரையில், சொல்லி முடித்தான் ஜீவா.

“இதை என்கிட்ட நீங்க சொல்லவே இல்லையே” என்றாள் ஜீவாவிடம்.

“அதுக்கான அவசியமே இல்லயே மதுமிதா! ஒரு நல்ல கேண்டிடேட்டை இல்ல எனக்காகக் கொடுத்துட்டுப் போயிருக்கான்” என்றான் அவன் சிரித்துக்கொண்டே.

நெகிழ்ந்து போன மதுமிதாவின் கண்கள் கலங்கின. தனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்ய இத்தனை சுற்றங்களைக் கொடுத்த இறைவனுக்கு மனதார நன்றி சொன்னாள். அதற்கு மேல் அவளால் அங்கே அமர முடியவில்லை.

“சரி, ரொம்ப நாள் கழிச்சி மீட் பண்ணியிருக்கீங்க. நீங்க பேசுங்க. நான் கிளம்பறேன்” என்றாள்.

“ஒரு பத்து நிமிஷம் இரு. நானும் உன்னோட வரேன்” என்றான் சுரேஷ்.

அதற்குள் அவர்களுக்கு காஃபியும் வந்துவிட, பேசிக்கொண்டே குடித்து முடித்தனர்.

நால்வருமே ஒன்றாகக் கிளம்பி, கீழே வந்தனர்.

இரவு வீட்டிற்கு வந்துவிடும்படி சுரேஷிடம் கூறிவிட்டு ஜீவா கிளம்பிச் செல்ல, “சாவியைக் கொடு மது! வண்டியை எடுத்துட்டு வரேன்” என்று சுரேஷ் ஹோண்டாவின் சாவியை வாங்கிக் கொண்டு சென்றான்.

அருகில் நின்றிருந்த சித்தார்த்திடன், “உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?” என்றாள் மென்குரலில்.

குறுநகையுடன், “கேட்கலாமே” என்றான்.

“நீங்க, தீபாவோட கல்யாணத்துக்கு… அம்மாகூட எனக்கு இண்ட்ரடியூஸ் பண்ணினது…” என்று முடிக்காமல் இழுத்தாள்.

“நானே தான்” என்று கண்களை மூடித் திறந்தவனை, தவிப்புடன் பார்த்தாள்.

இருசக்கர வாகனத்துடன் அங்கே வந்த சுரேஷ், “தேங்க்ஸ் அண்ணா! இன்னைக்கு நான் இங்கே வரக் காரணமே நீங்கதான்” என்று மர்மச் சிரிப்பொன்றை உதிர்த்தவன், “நாளைக்கு வீட்டுக்கு வரேன். பெரிம்மாகிட்டச் சொல்லிடுங்க. நைட் ஜீவாண்ணா வீட்டுக்குப் போய்ட்டு, போன் செய்றேன்” என்றவன் விடைபெற்றான்.

“பத்திரம்” என்று கையசைத்தவன், காரை நோக்கி நடந்தான்.