Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 12



“எல்லாம், சரியான திருட்டுக்கோட்டுங்க. எனக்குத் தெரியாம எவ்ளோ வேலை செய்திருக்கீங்க, நீங்க ரெண்டு பேரும்” உணவைப் பரிமாறியபடி சாரமாரியாக வசைபாடிக் கொண்டிருந்தாள் மதுமிதா.

“இதென்னடா கொடுமை! சாப்பாடு போட்டுட்டு கூடவே இப்படி வாங்கிக் கட்டிக்கிறதா இருக்கே. இதுதான் செவிக்கு உணவில்லாத போது…” எனப் பேசிக்கொண்டே சென்ற சுரேஷ், அவளது முறைப்பைக் கண்டதும் கப்பென வாயை மூடிக்கொண்டான்.

“என்னைக்கோ, ஒரு நாளைக்குக் கேட்கற உனக்கே இப்படி இருக்கே… தினம் கேட்கற எங்களுக்கு எப்படி இருக்கும்?” உணவை உள்ளே தள்ளியபடி பேசினான் தீபக்.

விமலாவும், சந்திர சேகரும் சிரித்துக்கொண்டே சாப்பிட, “கொன்னுடுவேன் ரெண்டு பேரையும். செய்றதெல்லாம் செய்துட்டு வாயைப் பாரு” என்றாள் கோபத்துடன்.

“ஏம்மா! நீ அண்டர்கிரௌண்ட் தாதாகூட கூட்டாளியா ஆகிட்டியா என்ன? வாயைத் திறந்தா வெட்டுக்குத்தாவே இருக்கே. இப்போ நாங்க சாப்பிடுறதா வேணாமா?” என்று பரிதாபமாகக் கேட்டான் சுரேஷ்.

“ம்க்கும். கொட்டிக்க” என்று அவனது இலையில் இன்னொரு ஜாங்கிரியை வைத்தாள்.

“ஹி ஹி! நம்ம மது பலாப்பழம் மாதிரி. மேலே தான் முள்ளு. மனசு தேன் பலா” என்று அவளுக்குத் தலையில் ஐஸ்கட்டியை வைத்தான் சுரேஷ்.

“போதும்டா! அடங்கு. ஏன் அத்தான் நீங்களாவது ஒரு வார்த்தை என்கிட்டச் சொல்லியிருக்கலாமில்ல. ரமேஷ் அண்ணாவுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லியிருப்பேன். இந்தக் குரங்கால நான் இவ்ளோ நாள் அவங்ககிட்டயும் பட்டும் படாமல் பேசிட்டு இருந்தேன்” என்று சுரேஷின் தோளில் ஒரு அடி அடித்தாள்.

தீபக்கைப் பார்த்து, “சீனியர்! என்னால முடியல. இன்னைக்கு, என் காது ஜவ்வு கிழியறது உறுதி. இந்தப் பேச்சுப் பேசறா” என்றான் சற்று சலிப்புடன்.

“ஓ! நான் பேசறது சாருக்கு காது வலிக்குதாமா. சரி, இனி பேசல. நீயா வந்து சாரி மது நான் பேசினதெல்லாம் தப்பு. இனி, இப்படிப் பேசமாட்டேன்னு சொல்ற வரைக்கும் நான் பேசப்போறதே இல்ல. பார்த்துட்டே இரு. நான் ஒண்ணும் விளையாட்டுக்குச் சொல்லல…” என அவள் விடாமல் பேசிக்கொண்டிருக்க, அவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“என்னடா பார்வை வேண்டியிருக்கு? இப்படில்லாம் பார்த்தா மட்டும் பேசிடுவேனா” என்றாள் கடுப்புடன்.

“அம்மா தாயே! என்னை விட்டுடு. பேசமாட்டேன்னு சொல்லிட்டு இவ்ளோ பேசறயே. பின்னே, காது ஜவ்வு கிழியாம என்னவாகும்?” என்று சொல்ல, அவள் அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

“டேய்! அவள் எதையாவது எடுத்து, உன் தலைல ஊத்தறதுக்குள்ள ஓடிடு” என்று எச்சரிக்கை குரல் கொடுத்தான் தீபக்.

“ஐயையோ! இன்னும் அந்தப் பழக்கத்தையெல்லாம் விடலையா!” விட்டு விருட்டென எழுந்து இரண்டடி தள்ளிச் சென்று நின்றுகொண்டான்.

“போதும்டா! ஓவரா சீன் போடாதே” என்றாள் எரிச்சல்.

“கண்டுபிடிச்சிட்டியா!” என்று சிரித்துக்கொண்டே வந்து அமர்ந்தான்.

பேச்சும் சிரிப்புமாக, அவர்களது முன் இரவு நேரம் மகிழ்ச்சியுடன் கழிந்தது. சுரேஷ், மதுவிடம் பேசிக்கொண்டிருக்க, தீபக் பெரியவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“ஓகே மது! கிளம்பறேன். மணியாகிடுச்சி” என்று எழுந்தான் சுரேஷ்.

“ஓகே பத்திரம். ஆட்டோல போறியா?” என்று கேட்டாள்.

“இல்ல, சீனியரை வீட்ல ட்ராப் பண்ணிட்டு, அவரோட வண்டியை எடுத்துட்டுப் போகச் சொன்னார்” என்றான்.

“ஓ! வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், எனக்குக் கால் பண்ணு” என்றவள் மெதுவாக, “நீ வந்து இவ்ளோ நேரம் ஆச்சு. ஆனா, கீதாவைப் பத்தி நீ ஒரு வார்த்தைக் கூடக் கேட்கலையே!” என்றாள் எதிர்பார்ப்புடன்.

சுரேஷ் சற்றுநேரம் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தி கொண்டான். தன்னுடைய கேள்வி அவனை மிகவும் பாதித்ததை மது உணர்ந்து கொண்டாள்.

ஆழ்ந்த மௌனத்துடன் சில நொடிகளைக் கடத்தியவன், “வாழ்க்கையைப் புதுசா துவங்கணும்ன்னு இருக்கேன் மது. என் அம்மாவுக்காக, என் குடும்பத்துக்காக அவங்களோட சந்தோஷத்துக்காக வாழணும்ன்னு நினைச்சித்தான் இந்தியாவுக்கே வந்தேன். இருப்பேன்” என்றான் கீற்றான புன்னகையுடன்.

அவன் சொன்னதை சற்று சங்கோஜத்துடன் கேட்டுக்கொண்டவள், “ஆல் த பெஸ்ட் சுரேஷ். லேட்டா எடுத்திருந்தாலும், உன்னோட இந்த முடிவு ரொம்ப சரியானது” என்று வாழ்த்தி அவனை வழியனுப்பி வைத்தாள்.

புன்னகையுடன் கையசைத்து விடைகொடுத்தவளால், அதைத் தொடர முடியாமல் மௌனத்தில் அமைதியானாள்.

‘என்றாவது ஒரு நாள், எல்லாம் சரியாகிவிடும்’ என்று மனதார நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், சரியாகிவிடும் என்ற அந்த வார்த்தை இங்கே முற்றுப் பெற்றது என்றல்லவா மாறி விட்டது’ என்று எண்ணியவளுக்கு மனம் வாடியது.


*************​

இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பெற்றோரிடம் மதுமிதாவைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான் சித்தார்த்.

ஒவ்வொருவராக தங்கள் அறைக்குச் செல்ல, “என்ன சித்தார்த்? தூங்கப் போகலையா?” என்று கேட்டார் தேவகி.

தயக்கமும், தவிப்புமாக தலையைக் கோதிக்கொண்டவனை, வியப்புடன் பார்த்தனர் தேவகியும், ராமமூர்த்தியும்.

“உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்?” என்றான்.

அமைதியாக இருந்தாலும், எதையும் படாரென உடைத்துப் பேசும் மகனின் இந்த பதற்றமும், அவனது மாற்றமும் தேவகிக்குப் புன்னகையை வரவழைத்தது.

“ஏம்பா! உன் அம்மாகிட்ட தனியா பேசணுமா? இல்ல…” என்று ராமமூர்த்தி வேண்டுமென்றே கேட்க, “என்னப்பா நீங்க? ரெண்டும் பேர்கிட்டயும் தான்” என்றான் சங்கோஜத்துடன்.

“என்ன தேவகி! உன் பையன் இந்த நெளி நெளியறான்? மூக்கணாங்கயிறு போடுற நேரம் வந்துடுச்சிப் போல” என்றார் சிரிப்புடன்.

“அப்பா ப்ளீஸ்!” என்று தலையைக் கோதிக்கொண்டவனின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

“பாருடா! ம்ம், ஆம்பளைங்களுக்கு வெட்கப்படத் தெரியாதுன்னு எவன் சொன்னான்? இதுவும் நல்லாத்தான் இருக்கு” என்று மகனின் தோளைத் தட்டிக்கொடுத்தார் அவர்.

“அவனே எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாம திணறிட்டு இருக்கான். நீங்க வேற கிண்டல் பண்ணிக்கிட்டு” என்ற தேவகி, “நீ சொல்லு கண்ணா!” என்று மகனைச் சொல்லும்படி ஊக்குவித்தார்.

அலுவலகத்தில் தன்னிடம் வேலை செய்பவள் என்றும், அவளது பெயரையும் மட்டும் சொன்னான். பெற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவன் சற்று பரிதவிப்புடன் அவர்களது பதிலுக்காகக் காத்திருந்தான்.

“என் பிள்ளைங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. உங்க எல்லோருக்குமே, நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கோம். உங்க வாழ்க்கைல முக்கியமான முடிவுகளை எடுக்க, சுதந்திரமும் கொடுத்திருக்கோம். அந்த முடிவு நல்லதா இருக்கும்பட்சத்தில் ஆதரவும் கொடுத்திருக்கோம். இந்த விஷயத்திலும், எங்களுக்கு எந்தத் தடையும் இல்ல. அந்தப் பொண்ணுக்கிட்டப் பேசிட்டியா?” என்று கேட்டார் அவனது தந்தை.

“இல்லப்பா! உங்ககிட்டத் தான் முதல்ல சொல்றேன்” என்றான்.

“முதல்ல அங்கே இல்ல நீ பேசியிருக்கணும்” என்ற தந்தையை சங்கடத்துடன் பார்த்தான்.

“என் பிள்ளையைப் பிடிக்கலன்னு சொல்ல என்ன இருக்கு? நல்லா படிச்சான், கை நிறைய சம்பாதிச்சான், இப்போ சொந்தமா தொழில் செய்றான். இந்தக் காலத்துப் பிள்ளைங்க ரொம்பப் புத்திசாலி. எதையும் ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிச்சித்தான் முடிவெடுப்பாங்க” என்று மகனை விட்டுக்கொடுக்காமல் பேசினார் தேவகி.

“புத்திசாலியா இருந்தா பிரச்சனை இல்ல தேவகி. ஓவர் ஸ்மார்ட்டா இருந்தாதான் பிரச்சனையே” என்று சிரித்தார் அவனது தந்தை.

“ஹும்! உங்க வாதத் திறமையெல்லாம் கோர்ட்டோட நிற்கட்டும். பிள்ளை சங்கடப்படறான் இல்ல” என்று கணவரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், “நாங்க இப்போ என்ன செய்யணும்? அவங்க வீட்டில் பொண்ணு கேட்கணுமா?’ என்று கேட்டார்.

“இப்போ வேண்டாம்மா! முதல்ல மதுகிட்டப் பேசிட்டு, நல்ல பதிலா சொல்கிறேன்" என்றான் சந்தோஷத்துடன்.

“இப்பவே என் பிள்ளை என் வழியைப் பின்பற்ற ஆரம்பிச்சிட்டான் பார்த்தியா தேவகி” என்ற கணவரை செல்லமாக முறைத்தவர், “சரி கண்ணா! நீ, பேசிட்டுச் சொல்லு. மத்ததை நாங்க பார்த்துக்கறோம்” என்று நிறைந்த மனத்துடன் சொன்னார் தேவகி.

தலையை ஆட்டிவிட்டு இரண்டடி சென்றவன் திரும்பி வந்து, “ரொம்பத் தேங்க்ஸ்ம்மா!” என்று அன்னையின் கரத்தைப் பற்றிக்கொண்டான்.

தேவகி மகிழ்ச்சியுடன் அவனைப் பார்க்க, “டேய் மகனே! இங்கே அப்பன்னு ஒருத்தன் இருக்கேன்டா” என்று ராமமூர்த்தி சொல்ல, “தேங்க்ஸ்ப்பா!” என்றவன் தலையைத் தடவியபடி தனது அறையை நோக்கித் துள்ளலுடன் நடந்தான்.

மகன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த மனைவியைத் தட்டி அழைத்தவர், “என்ன ஏதாவது வேண்டுதல் பண்ணிட்டு இருக்கியா?” என்றான் கிண்டலாக.

“புதுசா என்ன வேண்டிக்கப் போறேன்? என் குழந்தைகளைக் கடைசி வரைக்கும் இப்படியே சந்தோஷமா வச்சிக்கன்னு வேண்டிக்கிறேன்” என்றார்.

“அது சரி. எப்பவும் இனிப்பையே சாப்பிட்டுட்டு இருக்க முடியுமா?” என்றவரது வாயைப் பொத்திய தேவகியின் விழிகள் கலங்கியிருந்தன.

“என்ன தேவகி? நெருப்புன்னா வாய் வெந்திடுமா?” என்றார் சமாதானமாக.

“இந்த ரெண்டு வருஷமா, அவன் எப்படி இருந்தான்னு பார்த்தீங்க தானே. எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. அவனா சொல்லட்டும்னு இருந்தேன். இப்பவும், அவன் முழுசா நம்மகிட்ட விஷயத்தைச் சொல்லலை. சித்தார்த் சொல்றதை வச்சிப் பார்க்கும் போது, எனக்கென்னவோ அந்தப் பொண்ணை இவன் இதுக்கு முன்னாடியே பார்த்துப் பழகியிருக்கணும்னு தோணுது” என்றார்.

“ஓஹ்! அப்படிச் சொல்றியா?”

“எதுவா இருந்தாலும் என் பிள்ளையோட நல்ல மனசுக்கு எந்தக் குறையும் வராது. நான் பூஜிக்கிற என்னோட பாபா, என்னைக்கும் என் குழந்தைகளுக்குத் துணை இருப்பார்” என்றார் நம்பிக்கையுடன்.

அறைக்கு வந்த சித்தார்த்திற்கு வானமே வசப்பட்டதைப் போல அவ்வளவு சந்தோஷம். அவனது சந்தோஷத்தில் பங்குகொள்வதைப் போல, அவனது கைப்பேசி ஒலித்தது.

சிரிப்புடன் எடுத்தவன், “சுபா!” என்றான் சந்தோஷம் பொங்க.

மறுமுனையில் இருந்த அவனது சகோதரி, “சித்தூ! நீயா பேசற… உண்மையிலேயே நீதானா!” என்றாள் நம்பமுடியாமல்.

“உனக்கென்ன சந்தேகம்?” என்றான் சிரிப்புடன்.

“ரொம்ப நாளைக்குப் பிறகு பழைய சித்தார்த்தோட குரலைக் கேட்கறேனே!” என்று சுபா சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “ஆஹ்ஹ்!” என்ற அலறல் கேட்டது.

“என்னாச்சு சுபா?” என்றான்.

“என்னாச்சா! காண்றது கனவில்லன்னு தெரிஞ்சிக்க, என்னைக் கிள்றா உன் அக்கா” என்று அவர்களது பேச்சில் இடைபுகுந்தார், அவனது சகோதரியின் கணவர் ஹரி பிரசாத்.

சித்தார்த் சிரிக்க, “இது வலிச்சிடுச்சா உங்களுக்கு. என்ன விஷயம்ன்னு நான் மட்டும் தெரிஞ்சிக்கிறேன்” என்று வேண்டுமென்றே சொன்னவள் ஸ்பீக்கரை நிறுத்திவிட்டும், “சொல்லு சொல்லு என்ன விஷயம்?” என்று ஆரவத்துடன் தம்பியிடம் கேட்டாள்.

அவன் மெல்ல விவரத்தைச் சொல்ல, எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டவள், “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடா! நீ கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம். சரி விடு. யாரா இருந்தாலும், அந்த நேரத்துல இப்படித்தான் நடந்துட்டு இருப்பாங்க” என்று அவள் சொன்னதும், அவன் மௌனமாக இருந்தான்.

தொடர்ந்து, “ஆனா, உன்னோட லவ் ரொம்பச் ஸ்ட்ராங் தான். இல்லன்னா, திரும்ப அதே பொண்ணு உன் வாழ்க்கைல வருவாளா?” என்றாள் தம்பியைச் சமாதானம் செய்யும் பொருட்டு.

ஆழ்ந்த மூச்சு விட்டவன், “என்னோட தப்பைப் புரியவைக்கவும் மன்னிப்புக் கேட்கவும் தான், மது என்னோட வாழ்க்கைல வந்திருக்கா” என்றான் தழுதழுப்பாக.

அவளுக்குத் திக்கென்றது. “என்ன சொல்ற? மதுகிட்ட மன்னிப்பு கேட்கப் போறியா?” என்றாள் எரிச்சலுடன்.

“இல்லன்னா, என்னோட மனசு ஆறாது சுபா” என்றான் பரிதாபமாக.

“அட உண்மை விளம்பி! உனக்கு மூளையே இல்லையா? ஒரு பொண்ணு எதை வேணும்னாலும் தாங்கிப்பா. நீ அவளைச் சந்தேகப்பட்டேன்னு தெரிஞ்சிது, உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டா நினைவு வச்சிக்க. ஏதாவது உளறி வச்சி, உனக்கு நீயே முட்டுக்குகட்டையைப் போட்டுக்காதே. முதல்ல கல்யாணம் முடியட்டும். புரிஞ்சுதா?” என்றாள் கட்டளையாக.

அரை மனத்துடன், “ம்ம்” என்றான்.

அவனைச் சமாதானம் செய்யும் வகையில், “ரெண்டு பேருக்கும் பெயர் பொருத்தம் சூப்பரா இருக்கு!” என்றாள்.

அவன் அமைதியாக இருக்க, “ரொம்ப யோசிக்காதே சித்தார்த்! உன்னோட நல்லதுக்காகத் தான் சொல்றேன். சரி, மதுவோட போட்டோ அனுப்பேன். என் தம்பியோட வருங்கால வைஃபை நாங்களும் பார்ப்போமில்ல” என்றாள்.

“போட்டோலாம் இல்ல சுபா!” என்றான் முறுவலுடன்.

“இதை நான் நம்பணுமா?” என முறைப்பாகக் கேட்டாள்.

“அது உன் விருப்பம். இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணா நீயே நேர்ல பார்த்துடலாம்” என்றான் அவன்.

“ம்க்கும். அது எங்களுக்குத் தெரியாதாக்கும். எனிவே, ஆல் த பெஸ்ட்! சொன்னதை மறந்துடாதே. சீக்கிரமே அவகிட்ட பேசிட்டு, எங்களுக்கெல்லாம் நல்ல விஷயம் சொல்லு” என்றாள்.

“கண்டிப்பா! மாமாகிட்டச் சொல்லு. நான் நாளைக்கு அவருக்குப் பேசறேன். பாப்பாவைப் பார்த்துக்க” என்று தமக்கையிடன் பேசிவிட்டுப் போனை வைத்தபோது அவனது உள்ளம் நிறைந்திருந்தது.

ஆனாலும், மனதோரம் சிறு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 13


காதல் கனவுகள் ஒருபுறம் ஆக்கிரமித்திருந்த போதும், அலுவலகத்திற்கு வந்துவிட்டால், தனது வேலையில் கவனமாக இருந்தான் சித்தார்த்.

அனைவருமே ப்ராஜெக்டில் முழுக் கவனத்தையும் செலுத்தியதில் குறித்த நாட்களுக்கு முன்பாகவே வேலையை முடித்துவிட முடியும் என்ற நிலை அனைவருக்குமே சந்தோஷத்தைக் கொடுத்தது.

அன்று ஜீவாவும், சிவாவும் டப்பிங் ஸ்டுடியோவிற்குச் சென்றுவிட, சித்தார்த் தான் முழுநாளும் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். தலைவலி மண்டையைப் பிளந்தது.

முக்கியமான வேலை இருக்கிறது என கீதா சற்று விரைவாகச் சென்றுவிட, மதுமிதாவும், லதாவும் மட்டுமே இருந்தனர். இப்போதெல்லாம் லதா அவளிடம் அதிகம் பேசுவதில்லை என்பதால், மதுவும் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள்.

தனது வேலை முடிந்துவிட்டதென சித்தார்த்திடம் சொல்லிவிட்டு அவள் கிளம்பிவிட்டாள். சற்று நேரம் பொறுத்து மதுமிதாவும் கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்யும் முன்பு தான் செய்த வேலைகளைப் பற்றிய குறிப்புடன் சித்தார்த்தின் அறைக்குச் சென்றாள்.

“இன்னைக்கு ஷெட்யூல் முடிச்சிட்டேன். நான் கிளம்பட்டுமா!” என்று கேட்டவள், சோர்வுடன் இருந்தவனைப் பார்த்தாள்.

“யா! நீங்க கிளம்புங்க” என்றான்.

கதவு வரை வந்தவள் திரும்பி, “உங்களுக்குத் தலைவலியா? கண்ணெல்லாம் சோர்வா தெரியுதே” என்றாள் சிறு தயக்கத்துடன்.

“ம்ம், கண்ணோடு சேர்த்து வலிக்குது. ஜீவாவோட போர்ஷனையும் சேர்த்து முடிச்சிட்டு இருக்கேன். இன்னும் அரைமணி நேரத்தில் முடிஞ்சிடும். நீங்க கிளம்புங்க” என்றவன் நெற்றியைப் பிடித்துவிட்டுக் கொண்டான்.

சரி என நினைத்தபோதும், அங்கிருந்து செல்ல மனம் தவித்தது.

“இஃப் யூ டோண்ட் மைண்ட்! நான் செய்யட்டுமா? நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்களேன்” என்றாள்.

“இல்ல மது! நான் மேனேஜ் பண்ணிக்குவேன்” என்றான்.

“என்கிட்ட பேரசிட்டமால் இருக்கு. ஆல்ஃப் டேப்லட் போட்டுக்கிட்டுக் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. ரொம்ப சிவியர் ஆகிட்டா, உங்களுக்கு மட்டுமில்ல… ப்ராஜெக்டும் அஃபெக்ட் ஆகும்” என்றாள்.

சிறு யோசனைக்குப் பிறகு, “உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லயே” என்றான்.

“நான் கால் பண்ணிச் சொல்லிடறேன். ரெண்டு நிமிஷம்” என்றவள் தனது அன்னைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, கைப்பையுடன் அவனது அறைக்கு வந்தாள்.

“இந்தாங்க” என்று மாத்திரையைக் கொடுத்தவள், “சீனு அண்ணாகிட்ட காஃபி வாங்கிட்டு வரச்சொல்லியிருக்கேன்” என்றாள்.

அவளது அக்கறையான செய்கையில், சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான். “தேங்க்யூ!” என்றான் ஆழ்ந்த குரலில்.

“வெல்கம்” என்றவள், இமைகளைத் தாழ்த்தினாள்.

உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், “நான் ஜீவா ரூம்ல இருக்கேன். நீங்க வேலையைப் பாருங்க” என்றவன், ஜீவாவின் அறைக்குச் சென்றான்.

காஃபியுடன் வந்த அட்டெண்டரை ஜீவாவின் அறையில் இருப்பவனுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்தாள்.

மருந்தும், ஃபில்டர் காஃபியும், அவனது தலைவலியை பெருமளவு குறைத்திருக்க, முகத்தைக் கழுவிக்கொண்டு இரண்டு அறைகளுக்கும் இடையிலிருந்த கதவின் வழியாகத் தனது அறைக்கு வந்தான். வேலையில் ஆழ்ந்திருந்தவள், தன் பின்னால் வந்து நின்றவனைக் கவனிக்கவில்லை.

திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்த அனிமேஷனை முழுமையாக வரைந்து முடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன், “எக்ஸலண்ட் மது!” என்றான் பாராட்டும் விதமாக.

வேதனைக் கொடுத்த பின்னங்கழுத்தை பிடித்துவிட எண்ணி கைகளை உயர்த்தியவள், திடீரென தனக்குப் பின்னாலிருந்து குரல் வரவும், உடல் அதிர எழுந்த வேகத்தில் தடுமாறியவளின் இரு தோள்களையும் பற்றி நிறுத்தினான்.

தனது உடலிலிருந்த சக்தியெல்லாம் வடிந்து கால்கள் வலுவிழந்தது போலிருக்க, பொத்தென இருக்கையில் அமர்ந்தாள். இதயம் படபடவென அடித்துக்கொள்ள, ஏ.சி அறையிலும் அவளுக்கு வியர்த்திருந்தது.

அவளது நிலையைக் கண்டு சங்கடமாக இருக்க, “வெரி சாரி மது! உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு அமைதியா இருந்தேன். நீங்க விழுந்துடப் போறீங்கன்னு...” என்றதும், "பரவாயில்லை” என்றவளுக்கு வார்த்தைகள் தடுமாறின.

அதற்கு மேல் அவளால் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

அதை உணர்ந்தவனாக, “உன்னோட ஹெல்புக்கு ரொம்பத் தேங்க்ஸ் மது! நீங்க கிளம்புங்க" என்றான்.

தலையசைத்தவள் எதுவும் சொல்லாமல் கிளம்பிவள், கதவருகே சென்றதும், “தேங்க்யூ மது!” என்றவனது குரலால் நின்று திரும்பிப் பார்த்தாள்.

கீழுதட்டைக் கடித்தவள், "தேங்க்ஸை எதிர்பார்த்துச் செய்யல…" என்றாள் அடங்கிய குரலில்.

புருவத்தை உயர்த்தி, “பின்னே…” என்றான் குறும்புப் புன்னகையுடன்.

இப்படி ஒரு கிடுக்கிக் கேள்வியை எதிர்பார்க்காததால், “அ..து..” என்று ஆரம்பிக்க, “ப்ரெண்ட்ஷிப்பா!” என்றான் வேகமாக.

அவளும் மறுக்காமல், “ஆமாம்” என்றாள்.

“அப்போ! ஃப்ரெண்ட்ஷிப்குள்ள தேங்க்ஸ்லாம் தேவையில்ல தானே!” என்றவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல், ஆம் என்பதைப் போலத் தலையை அசைத்தாள்.

“அப்போ! நீங்க, வாங்க, போங்கன்னு சொல்லாம, அதைச் ஷார்ட்டா மாத்திக்கலாமா. அதாவது, நீங்க நீ - யாக மாறிடும்” என்றவனைக் கண்கள் அகல பார்த்தாள்.

“உனக்குப் பிடிக்கலன்னா…” என்று இழுத்தவன், அவளது நீள் விழிகளில் தெரிந்த குறுகுறுப்பை இரசித்தபடி, “ங்கன்னு சேர்த்துக்கலாம்” என்றான்.

அவனது பாவனையில் புன்னகை அரும்ப, “நான் உங்களை விடச் சின்னவதான்” என்றாள் மெதுவாக.

”இதுக்குத் தேங்க்ஸ் சொல்லணும்னு தோணுது. இருந்தாலும், ஃப்ரெண்ட்ஷிப் வேண்டாம்ன்னு தடுக்குது” என்றான் சிரிப்புடன்.

அதே வேகத்தில், “நானும், தேங்க்ஸை எதிர்பார்க்கல” என்றாள்.

“இட்ஸ் மை ப்ளஷர்!” என்று அவன் பவ்யமாகச் சொல்ல, சிரிப்புடன் விடைபெற்றுக் கிளம்பினாள்.

வீட்டிற்குள் நுழைந்த மகளிடம், “என்னம்மா வேலை அதிகமா?” என்றவருக்கு, “ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள்.

“காஃபி போடட்டுமா?” என்று விமலா மீண்டும் கேட்க, “வேணாம்மா! ஆஃபிஸ்ல சாப்டுட்டுத் தான் வரேன்” என்றவள், மேற்கொண்டு எதுவும் பேசாமல் தனது அறைக்குச் சென்றாள்.

அந்த ஒரு விஷயம் மட்டுமல்ல, இரவு உறங்கச் செல்லும் வரையில் அவளது உதடுகளில் உறைந்திருந்த புன்னகையும், விமலாவிற்கு வியப்பை ஏற்படுத்தியது. காரணம் தெரியாவிடினும், அவளிடம் தோன்றியிருக்கும் இந்த மாற்றம் அவருக்குப் பெரும் ஆறுதலை அளித்தது.

அதைத் தனது கணவரிடமும் பகிர்ந்துகொண்டார்.

அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், “நானும் கவனிச்சேன். ஆனா, எனக்கு ஒண்ணும் பெரிசா தெரியல” என்றார்.

“நான் சொல்றதை என்னைக்கு நீங்க உடனே ஏத்துட்டு இருந்திருக்கீங்க. நிச்சயமா அவளோட மனசுல ஒரு மாற்றம் வந்திருக்கு. நமக்கு ஒரு பெரிய கடமை இருக்கு. அதை முடிச்சாத்தான் எனக்கு நிம்மதி” என்றார் ஆயாசத்துடன்.

“அவசரப்படவேண்டாம் விமலா! நடக்கறது அதுவே நடக்கும். நீ இப்போதைக்கு எதையும்…” என்றவரை இடைமறித்து, “நீங்க எப்போதுமே இப்படித் தான். எனக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நம்பிக்கை இருக்கு" என்றவர் நீண்ட நாள்களுக்குப் பிறகு, நிம்மதியுடன் கண்ணயர்ந்தார்.

சந்துரு மட்டும் உறக்கம் வராமல் ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்தபடி தன் மனைவியின் முகத்தில் தெரிந்த நிம்மதியுடன் கூடிய புன்னகை தொடர்ந்து நீடிக்கவேண்டுமே என வேண்டிக்கொண்டார்.


**************​

சித்தார்த் லாஞ்சில் அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பார்வை தான் குழந்தைகள் மீது இருந்ததே தவிர, நினைவெல்லாம் மதுவையே சுற்றி வந்தது.

அங்கே வந்த ஆதி, “என்னடா? மதுமிதாவோட டூயட்டா. ம்ம், ஜமாய்" என்றான் சிரித்துக்கொண்டே.

“அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா! ப்ராஜெக்ட் பத்தி நினைச்சிட்டிருந்தேன்" என்றான்.

“நானும் காதலித்துக் கல்யாணம் செய்தவன் தான். காதலில் விழுந்தவனோட நடவடிக்கை எப்படியிருக்கும்னு எனக்குத் தெரியாதா?" என்று கிண்டலாகச் சொன்னவன், ஒரு கவரை தம்பியிடம் கொடுத்தான்.

“என்னண்ணா?” என்றபடி கவரைப் பிரித்தவன், மெல்லிசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள் சில அதில் இருந்தன.

“தேங்க்யூண்ணா! நீங்க போகலையா?” என்று கேட்டான்.

“நான் வராம, உன் அண்ணி போக மாட்டாளாம். என்னால, இந்த வாரம் முழுக்க நகர முடியாது. உனக்குத் தான் மியூசிக்னா ரொம்பப் பிடிக்குமே முடிந்தால் போய்வா” என்றான்.

மிகவும் பிடித்தமான பாடகரின் இசைக் கச்சேரி. விடவும் மனமில்லை. போகலாம் என்ற முடிவிற்கு வந்தபின், ஜீவா, சுரேஷ் இருவருக்கும் போன் செய்து அழைத்தான்.

“அடுத்தவாரம் அம்மா, அண்ணாலாம் வராங்கண்ணா! வீட்டு வேலை இன்னும் முடியல” என்று சுரேஷும், “சண்டே ஒரு நாள் தான் நிம்மதியா இருக்கமுடியும். அதோடு, எனக்கும் மியூசிக்கிற்கும் ரொம்பத் தூரம்ன்னு உனக்குத் தான் தெரியுமே” என ஜீவாவும் தங்களது நிலையை விலக்கி விட்டனர்.

தான் மட்டும் செல்லும் முடிவுடன் எழுந்தவன் எதிரில் வந்து அமர்ந்தான் அஷ்வந்த்.

“உங்களுக்கு எப்படி லவ் செட் ஆச்சு? உங்க இடத்துல நான் இருந்திருந்தா, என் லவ்வரைத் தான் கூட்டிட்டுப் போயிருப்பேன். என்னமோ போங்க! கேட்டா நீ சின்னப் பையன்னு நமக்கு ஒரு டயலாக் ரெடியா வச்சிருப்பாங்க” என்று யாருக்கோ சொல்வதைப் போலச் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, சித்தார்த் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான்.

‘அவளைக் கூப்பிடும் அளவுக்கு இன்னும் நாங்க நெருங்கவே இல்லையே. அதிலும், நான் அழைத்தவுடன் வந்துவிடும் அளவிற்கு அவளும் கிடையாது. அதற்கான நேரம் வரும்போது, நிச்சயம் அழைத்துச் செல்வேன்’ என்றெண்ணிக் கொண்டவன், தனது வேலையைப் பார்க்கலானான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 14


இசையால் வசமாகா இதயம் எது? என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, இன்னிசைக் கச்சேரியில் பாடிய பாடகரின் தேனில் குழைத்த குரலும், லயித்துப் பாடிய முறையும் கேட்டுக்கொண்டிருந்த அனைவரது மனத்திலும், உணர்வுகளிலும் புத்துணர்ச்சியைக் கூட்டின.

எந்த உணர்வில் இருப்பவரையும் இரசிக்க வைக்கும் இசை, காதல் கொண்டிருந்த அவனது மனத்தை வெகுவாகக் கவர்ந்ததுடன், சுற்றியிருக்கும் அனைத்தையும் இரசிக்கும் மனநிலைக்கு ஆட்படுத்தியிருந்தது. மூன்று மணிநேரம் சென்றதே தெரியாமல், அனைவரது உள்ளத்தையும் வருடிய இன்னிசை நிறைவுற, வெளியே வந்தான் சித்தார்த்.

தெரிந்தவர் ஒருவருடன் பேசிக்கொண்டே திரும்பிப் பார்த்த மதுமிதா, வெளியே வந்துகொண்டிருந்த சித்தார்த்தை, வியப்புடன் நோக்கினாள். ஆனால், அவன் அவளைப் பார்க்கவில்லை.

பேசிக்கொண்டிருந்தவர் அவளிடம் விடைபெற, அவனை அழைத்துப் பேசுவதா வேண்டாமா என்று புரியாமல் நின்றிருக்க, எதேச்சையாகத் திரும்பியவன் அவளைக் கண்டுகொண்டான்.

முகம் மலர, “ஹாய்!” என்று கைகளை உயர்த்தினான்.

“ஹாய்!” என அவளும் கைகளை அசைக்க, இருவரும் அடுத்தவரை நோக்கி அடியெடுத்து வைத்தனர்.

“சர்ப்பைஸ்! உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை?" என்றான் புன்னகையுடன்.

முறுவலுடன், “நானும் தான்” என்றாள்.

“என்னோட ஃபேவரிட் சிங்கர் இவர். எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கள் வரிசைப்படுத்த சொன்னா, என் ஃபேமலிக்கு அடுத்து மியூசிக். அதுல குறிப்பா இவர் பாடின பாட்டுகள் தான்” என்றான்.

“ரியலி! எனக்கும் அப்படித்தான். முடிஞ்சவரைக்கும் இவரோட ப்ரோக்ராம் நடக்குது என்று தெரிஞ்சா போதும் மிஸ் பண்ணவே மாட்டேன்” என்றாள் மகிழ்ச்சியுடன்.

இருவரும் பேசிக்கொண்டே பார்க்கிங்கை நோக்கி நடந்தனர்.

“டாக்டரை பார்த்தீங்களா?" என்று கேட்டாள்.

“எதுக்கு?” என்றான் அவன் புரியாமல்.

“நேத்து தலைவலியில் அவஸ்தைப்பட்டீங்களே…”

“ஓ! எங்க வீட்டிலேயே ரெண்டு டாக்டர்ஸ் இருக்காங்களே!” என்றான்.

“ரெண்டு டாக்டரா? உங்க தம்பி தெரியும், இன்னொருத்தர்?” என்று கேட்டாள்.

“எங்க வீட்டுக் குட்டி இளவரசி. என் தங்கை" என்றான்.

“ஓஹ்! நைஸ்” என்றாவள், “சரி, நான் கிளம்பறேன்” என்றாள்.

“டூவீலரா?” என்றான்.

“ஆட்டோவில் வந்தேன்” என்றவள் மீது மேகம் சாரலைத் தூவிவிட்டுச் செல்ல, “மழை வரும் போல. இருட்டிக்கிட்டு வருது. நான் கிளம்புகிறேன் சித்தார்த்" என்றாள் அவசரமாக.

“ஏன் மது? ஆட்டோவில் போறவங்க என் கூட வந்தால், நான் டிராப் பண்ண மாட்டேனா?" என்றான்.

“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நான் ஆட்டோவிலேயே...” என்றாள்.

“ஹலோ! நானா உன்னைச் சுமக்கப் போறேன். என் கார்ல தாராளமா ஐந்துபேர் உட்காரலாம். அதே பெட்ரோல் தான் செலவாகப் போகுது” என்றான்.

“அதுக்கில்ல. நான், மாமா வீட்டுக்குப் போகணும். கொட்டிவாக்கம்" என்றாள் தயக்கத்துடன்.

“மேற்கொண்டு பத்து நிமிடம் டிரைவ் தானே" என்று காருக்கு அழைத்துச் சென்றான்.

இருவரும் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் மழை லேசாகத் தூறல் போட ஆரம்பிக்க, மண் வாசனை மணம் பரப்பியது.

காரின் கண்ணாடியை இறக்கியவள், ஆழமூச்செடுத்து மண் வாசத்தை நுகர்ந்து அனுபவித்தாள். அவன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, சிறுபிள்ளையைப் போல அவள் செய்யும் செயலை, புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தான்.

மனத்தை மயக்கும் வாசத்தை அனுபவித்தபடி திரும்பியவள், “எனக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்கும். மண்வாசம் அதைவிடப் பிடிக்கும். மழைல நனைந்துகிட்டே கரை ஓரமா நடக்கப் பிடிக்கும். மணல்ல உட்கார்ந்து மணிக்கணக்கா பேசப் பிடிக்கும். ஆனால், எங்க வீட்ல இதை அலௌவ் பண்ணவே மாட்டாங்க. பெரியவங்களுக்குத் தெரியாம, நாங்க மொட்டை மாடியில் விளையாடுவோம்” என்று குதூகலத்துடன் சொல்ல, சிரித்தபடி காரைக் கிளப்பினான்.

எல்லியட்ஸ் பீச்சில் காரை நிறுத்தியவன், “இன்னைக்கு உன் விருப்பப்படி மண் வாசனையை அனுபவிக்கலாம். மழைல நனையலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. உன்னை சரியா வீட்டுக்குக் கொண்டு போய் சேர்க்கறது என்னோட பொறுப்பு” என்றான்.

உற்சாகம் கரை புரள, “உண்மையாகவா!” என்றாள்.

இருவரும் கரை ஓரமாகவே நடக்க ஆரம்பித்தனர். அன்று மழை வருவது போலயிருந்ததாலோ என்னவோ கூட்டமும் குறைவாகவே இருந்தது. இருவருமே ஏதும் பேசாமல் மெளனமாக நடந்தனர். சற்று தூரம் நடந்து வந்ததும் மது, “சித்தார்த் இப்படி கொஞ்சநேரம் உட்காரலாமா?" என்றாள்.

“தாராளமா உட்க்காரலாம்” என்றபடி அவள் அமர்ந்தவுடன் இரண்டடி இடைவெளி விட்டுத் தள்ளி அமர்ந்தான்.

“மண் வாசனையை நுகர்ந்தாச்சு. கரையோரமா நடந்தாச்சு, இப்போ மணல்லயும் உட்கார்ந்தாச்சு. அடுத்தது பேச்சு தானே” என்றான்.

சிரித்துக்கொண்டே, “என்ன பேசணும்?" என்றாள்.

“நீதானே மணிக்கணக்கா பேசணும்ன்னு சொன்ன?”

“சொன்னேன். ஆனா, உங்ககிட்ட என்ன பேசறது?” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.

அவனது பார்வை அவளை இடித்துரைக்க, “இல்ல, நான் தப்பா எதுவும் சொல்லல. உங்களைப் பத்தி எனக்கு ரொம்பத் தெரியாதே. ரெண்டு மூணு நாளா தானே நாம பெசவே ஆரம்பிச்சிருக்கோம்” என்றாள் தயக்கத்துடன்.

சட்டென நகைத்தவன், "இப்போதைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் ஈடுபாடு மியூசிக்ல அதுவும் குறிப்பிட்ட அந்தப் பாடகரோட பாட்டுமேல. அங்கேயிருந்தே ஆரம்பிப்போமே” என்றான்.

“அவரைப் பத்திப் பேசிட்டே இருக்கலாம்” என்றவள் தான் இரசித்த, மகிழ்ந்த, அழுத பாடல்களைப் பற்றி விவரமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவனும், “ஒரு பாட்டுக்கு உயிர் கொடுக்கறது அந்தக் குரல் தான். நம்ம மனசைக் குளிர்வித்த எத்தனையோ பாட்டுகளை சினிமாவா பார்க்கும் போது, ரொம்பக் கொடுமையா இருக்கும். அதுக்குப் பின்னால அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் குரங்கை நினைக்காம மருந்தைக் குடிங்கற கதையா அந்த கொரியோகிராஃபியும், படமும் தான் கண் முன்னால தெரியும். அப்படிப் பல பாட்டுகளை கேட்கும் போது, இந்த சினிமாவைப் பார்க்காமலே இருந்திருக்கலாம்ன்னு தோணும்” என்று அவன் விளக்கிக் கொண்டிருக்க, அதை ஆமோதித்து அவளும் சிரித்தாள்.

“உங்களுக்கு வேலை மட்டும்தான் தெரியும்ன்னு நினைச்சேன். இன்னைக்குத் தான் நல்ல இசை இரசிகரா, விமர்சகரா புது அவதாரம் தெரியுது” என்று சொல்லிச் சிரித்தாள்.

“அட! பரவாயில்லையே மதுகிட்ட நல்ல பேர் வாங்கிட்டேனே! வெரிகுட் சித்தார்த்” என்று தனக்கே சொல்லிக்கொண்டவன், “தேங்க்யூ மேடம்!” என்று அவளுக்கு ஒரு சல்யூட் அடித்துச் சிரித்தான்.

அந்த கணம்; அந்த ஒரே ஒரு கணம் அவனைக் கண்கள் விரியப் பார்த்தாள். சித்தார்த் அவள் முன்னே சொடக்குபோட்டு, “ஹலோ என்ன எங்கே போய்ட்டீங்க?" என்றான்.

தலையைக் குலுக்கி, “ஒன்றுமில்லை” என்றவள், “கிளம்பலாமா? மழை வர ஆரம்பிச்சிடுச்சி” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மழை சடசடவெனப் பொழிய ஆரம்பித்தது.

காருக்குச் செல்வதற்குள் தெப்பலாக நனைந்தே விடுவோம் என்று உணர்ந்து, ஒதுங்க இடம் தேடி ஓடினர். ஒரு இடத்தில் சின்ன தகரம் அடித்து ஷெட் போலயிருந்தது.

“மது! அங்கே போகலாம்” என்று அவளை அழைத்துச் சென்றான்.

அங்கே நான்கு பேர்கூட நிற்க முடியாத அளவுக்குச் சிறியதாக இருந்தது. சித்தார்த் மதுவிடம் “ஏற்கெனவே, சின்னப் பசங்க நின்னுட்டிருக்காங்க. நானும் நின்றால், ரெண்டு பேருமே நனையணும். நான் காருக்குப் போறேன். மழை நின்றதும் நீ வா" என்றான்.

“விளையாடாதீங்க சித்தார்த்! நீங்க காருக்குப் போறதுக்குள்ள முழுசா நனைந்துடுவீங்க. நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். நேத்து முழுக்க தலைவலியில் அவஸ்தைப்பட்டீங்க. இங்கேயே நில்லுங்க. இல்லைனா, நானும் உங்க கூடவே காருக்கு வரேன்” என்றாள்.

அதற்குமேல் எதுவும் சொல்லாமல் அவளது சொல்லுக்குக் கட்டுப்பட்டு அங்கேயே நின்றான். சற்று அசைந்தாலும், அவள்மீது உரசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக நின்று கொண்டிருந்த போதும், முடிந்த அளவுக்கு விலகியே நின்றான்.

அவளது காதோரத்தில் அடங்காமல் பறந்து, அவளது கன்னத்தில் புரண்டு கொண்டிருந்த முடியை ஒதுக்கிவிடத் துடித்தக் கரத்தையும், அவளது அண்மையை ரசித்துக் கொண்டிருந்த மனதையும், கடிவாளமிட்டு அடக்கினான்.

‘எங்கே, தன்னையும் மீறி ஏதேனும் நடந்துவிடுமோ!’ என அஞ்சினான். மது அவனை ஒரு கணமே பார்த்த அந்த பார்வை அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது. ‘அவளை அழைத்து வந்திருக்கவே கூடாது’ என்று தன்னையே நொந்து கொண்டான்.

மழை எப்போது விடும் என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். வருண பகவானும், அவனை அதிகமாகச் சோதிக்காமல் பொழிந்து கொண்டிருந்த மழையைச் சிறு தூறலாக மாற்றினார்.

"மழை விட்டிருக்கு. அதிகமாகும் முன்னால் காருக்குப் போய்டலாம்" என்றான்.

இருவரும் காரில் வந்து அமர்ந்ததும், டாஷ் போர்டிலிருந்த சிறிய துண்டு ஒன்றை எடுத்து, “தலையைத் துவட்டிக்க" என்று கொடுத்தான்.

“தேங்க்ஸ்” என்று வாங்கிக்கொண்டாள்.

அவனது அக்கறையான பேச்சிலும், கண்ணியமான நடத்தையினாலும் அவன்மீதான மதிப்பு, அவளது மனத்தில் கூடிக்கொண்டே போனது.

அதன்பிறகு, தீபக்கின் வீட்டின் முன்பாக காரை நிறுத்தும் வரை, அவளுடன் பேசிக்கொண்டே வந்தானே தவிர, மறந்து அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை.

காரிலிருந்து இறங்கும் முன், “வீட்டுக்கு வாங்களேன். உங்களைப் பார்த்தா எங்க வீட்ல ரொம்பச் சந்தோஷப்படுவாங்க” என்றாள்.

“இருக்கட்டும் மது! இன்னொரு நாள் சாவகாசமா, என் குடும்பத்தோடு வரேன்” என்றான் குறிப்பாக.

அதை உணராதவளாக, “அந்த நாளுக்காகக் காத்திருக்கேன்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

அந்தப் பதில் அவனது காதலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக எண்ணி புன்னகையுடன் காரைக் கிளப்பினான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
445
63
அத்தியாயம் - 15


அனிமேஷன் வேலைகள் முடிக்கும் தருவாய்க்கு வந்துவிட, அன்று ரெக்கார்டிங் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. சிவா வீட்டிலிருந்து நேராக ஸ்டுடியோவிற்கு வந்து விடுவதாகச் சொல்லியிருந்ததால் சித்தார்த்தும், மதுமிதாவும் அங்கே செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

இருவரும் ரெகார்டிங் ஆபிஸ் சென்று இறங்க, சிவாவும் அவர்கள் பின்னேலேயே வந்து சேர்ந்தான். அவனுடைய ஆராய்ச்சி பார்வை சிரித்து பேசியபடி வந்த இருவர் மீதும் படிந்தது. மதுமிதா, தனது வாகனத்தில் வருவாளென்று அவன் நினைத்துக்கொண்டிருக்க, சித்தார்த்தின் காரிலேயே வந்து இறங்கியது அவனுக்கு வியப்பாக இருந்தது.

அவர்கள் எதிர்பார்த்ததை விட விரைவாகவே வேலை முடிந்துவிட, சிவாவை அலுவலகத்திற்குச் செல்லும்படி பணித்தவன், முடித்த வேலையை பேக் அப் எடுத்துகொண்டு அவளுடன் கிளம்பினான்.

வரும் வழியில் ஜீவா போன் செய்து சித்தார்த்திடம் இருக்கும் ஃபைல் ஒன்றைக் கேட்க, அது வீட்டில் இருப்பதாகக் கூறினான் சித்தார்த். வரும் வழிதானே கொண்டு வந்துவிடு’ என்று ஜீவா கூற, பக்கத்தில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் சித்தார்த்.

“போகும் வழிதானே. நான் காரிலேயே இருக்கேன். நீங்க போய் எடுத்துட்டு வந்திடுங்க” என்றாள் மதுமிதா.

சரி என்றவன், ஜீவாவிற்குச் சொல்லிவிட்டு கைப்பேசியை அணைத்தான்.

காரை கேட்டின் அருகிலேயே நிறுத்திவிட்டு, “இஃப் யூ டோன்ட் மைண்ட். உள்ளே வா மது. பத்து நிமிஷத்தில் கிளம்பிடலாம்” என்றான்.

சிரித்தவள், “நானும்தான் உங்களைக் கூப்பிட்டேன்...” என்றாள் குறும்புடன்.

“இவ்ளோ தூரம் வந்துட்டு நீ காரிலேயே இருந்தால், அம்மா என்னைக் கோச்சுக்குவாங்க” என்று இறங்கிய குரலில் சொல்ல, மேற்கொண்டு எதுவும் பேசாமல் காரை விட்டு இறங்கினாள்.

வீட்டினுள் நுழையும் போதே, “அம்மா! என்று அழைத்தபடி செல்ல, மருமகளுடன் அமர்ந்து புடவை ஒன்றில் பூ வேலை செய்துகொண்டிருந்த தேவகி திரும்பிப் பார்த்தார்.

சித்தார்த்தின் இணையாக அவனருகில் வந்து நின்றவளைக் கண்டதுமே தேவகிக்குப் புரிந்துவிட்டது. மகனை ஆர்வத்துடன் ஏறிட அவனது விழிகள் அவரிடம் ஆம் என்று உரைத்தது.

தேவகி, “வாம்மா!” என்றார்.

“அம்மா! இவங்க மதுமிதா. மது! இவங்க என் அம்மா, அண்ணி” என இருவரையும் அறிமுகப்படுத்தினான்.

சித்தார்த், “மது இவங்க எங்க அம்மா, இவங்க என் அண்ணி” என அறிமுகப்படுத்த, இருவருக்கும் வணக்கம் தெரிவித்தாள்.

“உட்காரும்மா!” என இருக்கையைக் காட்ட, தயக்கத்துடன் அமர்ந்தாள்.

மெதுவாக “நான் முதன் முதலில் வந்திருக்கேன் ஆனால், உங்களுக்கு எதுவுமே வாங்கிட்டு வர முடியவில்லை" என்றாள் சற்று சங்கோஜத்துடன்.

அவளெதிரில் அமர்ந்த மீரா, “நான் உன்னை ரெண்டு மூணு முறை பாபா கோவில்ல பார்த்திருக்கேன்” என்றாள்.

“நோ பார்மாலிட்டீஸ்! நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு அதெல்லாம் தேவையே இல்ல” என்றார் பாசத்துடன்.

“அப்படியா! சாரி நான் உங்களைக் கவனிச்சதே இல்லை” என்றாள்.

“பார்க்குற எல்லோரையும் நினைவுல வச்சிக்க முடியுமா?” என்றார் தேவகி.

வேலையாள் பழச்சாரு கொண்டுவர, மீரா அவற்றை இருவருக்கும் கொடுத்தாள்.

“பரவாயில்லை மேடம்! நாங்க லன்ச் முடிச்சிட்டுத் தான் கிளம்பி வந்தோம்" என்றாள் மதுமிதா.

“தண்ணிக்குப் பதிலா ஜூஸ்! ஆஃபிஸ் போறதுக்குள்ள செரிச்சிடும்” என்றாள் அன்புடன்.

“தேங்க்யூ மேடம்!” என்று சொல்லிக்கொண்டே ஜுஸை எடுத்துக் கொண்டாள்.

“முதலில் என்னை மேடம்ன்னு கூப்பிடுவதை நிறுத்து” என்றாள்.

அவள் புரியாமல், “ஏன் மேடம்?" என்றாள்.

“இப்போதானே சொன்னேன் மேடம்னு கூப்பிடாதேன்னு" எனத் திரும்பச் சொல்ல, அவள் சித்தார்த்தைத் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன? உங்க சித்தார்த்தைத் துணைக்குக் கூப்பிடுறியா? உங்க எம்.டி சாரோட அதிகாரமெல்லாம் ஆஃபிஸ்ல தான். வீட்டுக்கு வந்தால், ஷுவைக் கழட்டற மாதிரி எல்லா அதிகாரத்தையும் வாசலோட விட்டுட்டு வந்திடணும்" என்றாள்.

“நான் வாயையே திறக்கல அண்ணி! நீங்களாச்சுஅது போல இனி, உங்க சாமர்த்தியம்” என்றான் புன்னகையுடன்

“அப்போ, நானும் உங்களை அண்ணின்னே கூப்பிடட்டுமா?" என்றாள் வேகமாக.

சித்தார்த் மீராவை உறுத்து விழிக்க, சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு, “என்னை அண்ணின்னு கூப்பிட, நிறைய பேர் இருக்காங்க. நீ வேணா என்னை அக்கான்னு கூப்பிடு" என்றாள்.

சரியென்பதைப் போல அவள் தலையை ஆட்ட, மாடியிலிருந்து “டேய் அஷ்வந்த்” எனவும், “அடிக்காதடி வெள்ளை பீப்பா” எனவும் குரல் வர, மதுமிதா நிமிர்ந்து பார்த்தாள்.

“ஆரம்பிச்சாச்சு இதுங்க அட்டகாசத்தை. இன்னைக்கு என்ன பஞ்சாயத்துன்னு தெரியலை" என்றார் தேவகி.

“இவங்க இந்த வீட்டோட ரெட்டை வாலுங்க" என்றாள் மீரா சிரிப்போடு.

மாடிப்படியின் கைப்பிடியில் அமர்ந்து சறுக்கிக்கொண்டே இறங்கிய அஷ்வந்த், அங்கே அமர்ந்திருந்த மதுமிதாவைக் கண்டதும், “ஹலோ! வாங்க வாங்க. எப்போ வந்தீங்க?" என்று விசாரித்துக்கொண்டே அவளெதிரில் அமர்ந்தான்.

சிரித்துக்கொண்டே, “ஹலோ! நீங்க சண்டை போட ஆரம்பிக்கும் முன்னாடியே வந்துட்டேன்” என்று சிரித்தாள்.

"தினமும், ஒரு பத்து சண்டையாவது நடக்கும். அதைக் கண்டுக்காதீங்க" என்றான்.

மாடியிலிருந்து எட்டிப்பார்த்த நேத்ரா, “அம்மா அந்தத் தடியனை அப்படியே பிடிச்சி வைங்க. வந்து அவன் மண்டையை உடைக்கிறேன்” என்று கத்திக்கொண்டே இறங்கி வர, பின்னாலேயே ஆர்த்தியும், ஆகாஷும் ஓடி வந்தனர்.

“டேய் தடியா! நீதான் உருப்படாம போகப் போறே. பசங்களையும் ஏன்டா கெடுக்கிற” என அஷ்வந்தை நோக்கி வந்தாள்.

அவள் கையில் அகப்படாம ஆட்டம் காட்டியபடி, “வேண்டான்டி நான் சொல்றதைக் கேளு... வீட்டுக்குக் கெஸ்ட் வந்திருக்காங்க. என்னைத் துரத்துறேன்னு பின்னாலே ஓடி வந்து வீட்டைப் பள்ளம் ஆக்கிடாதே" என்றான் அப்போதும் கேலியாக.

அப்போது தான் மதுமிதாவைக் கவனித்தவளாக, அசட்டுச் சிரிப்புடன் அன்னையின் அருகில் அமர்ந்தாள். மீராவிடம் யாரென்று கேட்டுத் தெரிந்துகொண்டவள், “உங்களைப் பற்றி அண்ணா நிறைய சொல்லியிருக்காங்க" என்றாள் பேச்சோடு பேச்சாக.

அவள் வியப்புடன் சித்தார்த்தைப் பார்க்க, “நீங்க கார்ட் செலக்ட் பண்ணிக் கொடுத்ததையும் சொன்னோம்” என்று அவனுக்கு உதவிக்கு வந்தான் அஷ்வந்த்.

புதிதாக இருந்தவளைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த குழந்தை ஆர்த்தியை, ‘இங்கே வா’ என்பது போலக் கையசைத்து அழைத்தாள் மதுமிதா. குழந்தையும் ஓடிவந்து அவள் மீது சாய்ந்துகொள்ள, சிரித்துக்கொண்டே குழந்தையின் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டாள்.

பதிலுக்குக் குழந்தையும், அவளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, கன்னம் குழிவிழ அழகாகச் சிரித்தது. மெல்ல ஆகாஷும் அவளாருகில் வர, அவளது கவனம் குழந்தைகளிடமே இருந்தது.

“ரெண்டு பேரும் எந்தக் கிளாஸ்ல படிக்கிறீங்க?" நான் எல்.கே.ஜி, ஆர்த்தி நர்சரி” என்றான்.

“ஓஹ்! நீங்க ரெண்டு பேரும் நல்லா படிப்பீங்கன்னு அம்மா சொன்னாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ரைம்ஸ் சொல்லுங்க பார்ப்போம்" என்றாள்.

வேகமாக இடைமறித்த அஷ்வந்த், "எதுக்கு இப்போ ரைம்ஸ்? வேற ஏதாவது ஸ்டோரி சொல்லுங்கடா செல்லம்" என்றான்.

“சித்தப்பா நீங்க தானே இனி, யார் கேட்டாலும் இந்தத் தமிழ் ரைம்ஸ் சொல்லுங்கன்னு சொல்லிக் கொடுத்தீங்க அதுக்குள்ளே மறந்துட்டீங்களா!" என்று அஷ்வந்தை மடக்கினான் ஆகாஷ்.

“மாட்டினேடா! இன்னைக்குத் தர்ம அடி வாங்காம நீ போகப் போறதில்லை” என்று சொல்லிப் பலமாகச் சிரித்தாள் நேத்ரா.

அப்படி என்ன ரைம்ஸ் என அனைவரும் யோசிக்க ஆகாஷும், ஆர்த்தியும் பாட ஆரம்பித்திருந்தனர்.

“ஜானி ஜானி

இன்னா நைனா

சக்கர தின்னியா

இல்ல நைனா

கப்சா உடாத

இல்ல நைனா

வாய தொற

ஆ ஆ ஆ .....”
என்று பாட, அஷ்வந்த் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.

எட்டி அவனது சட்டையைப் பிடித்து இழுத்தான் சித்தார்த். “உன் அட்டகாசத்தை உன்னோடு வச்சிக்காம, குழந்தைகளை ஏன்டா இப்படிக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குற" என்றான்.

மது சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன அஷவந்த் இது" என்று மீரா கடுப்பாக, "நீ உண்மையாவே மெடிக்கல் காலேஜ்ல தான் படிக்கிறியா. இல்லை, ஏதாவது குப்பத்துல சுத்திட்டு வர்றியான்னு எனக்குச் சந்தேகமாயிருக்கு" என்றார் தேவகி.

“இதுக்குத்தான் நான் அவனை துரத்திகிட்டு வந்தேன்” என்ற தங்கையின் தலையில் குட்டினான் அஷ்வந்த்.

அவள் கோபத்துடன் “அம்மா பாரும்மா இவனை எப்போ பாரு என்னை வம்பு இழுத்துட்டே இருக்கான்" என்று சிணுங்க, தேவகி, “வீட்டுக்கு ஒருத்தர் வந்திருக்காங்கன்னு கூட இல்லாம... கடவுளே!” என்று தலையைப் பிடித்துக் கொண்டார்.

சற்று சங்கடத்துடன் தான் மதுமிதா அந்த வீட்டிற்குள் வந்தாள். ஆனால், அவர்களது அன்னியோன்யமும், கலகலப்பாக எப்போதும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் பார்த்தாள்.

“அப்படியெல்லாம் இல்ல ஆன்ட்டி. எல்லோருமே அவங்க அவங்க வீட்ல தானே சந்தோஷமா சிரித்துப் பேச முடியும். இந்த வால்தனத்துக்குப் பின்னால அவங்களோட அன்பு தான் தெரியுது. எனக்குப் புது இடத்துக்கு வந்திருக்கோம்ன்னு நினைக்கவே தோணல. எங்க வீட்லயே இருப்பது போல பீல் பண்றேன்" என்றாள் இலகுவாக.

தன் அன்னையை ஆன்ட்டி என்று உறவைச் சொல்லி அழைத்தவளை, கனிவு பொங்க பார்த்தான் சித்தார்த்.

ஆகாஷும், ஆர்த்தியும் மதுவிடம் நன்கு ஒட்டிகொண்டனர்.

“வாங்க ஆன்ட்டி எங்க டாய்ஸ் கேம்ஸ் எல்லாம் காட்றோம்" என அழைத்தான் ஆகாஷ்.

"இல்ல கண்ணா! ஆன்ட்டி, சித்தப்பா கூட ஆபிஸ் போகணும். இன்னொரு நாள் வரேன். நாம எல்லோரும் விளையாடலாம்" என்றாள் நிதானமாக.

“ப்ளீஸ் ஆண்ட்டி!” என்ற ஆர்த்தியைத் தூக்கி முத்தமிட்டு, மீண்டும் சமாதானமாகப் பேசினாள்.

தேவகியும், "இரும்மா மது, தினம் தான் வேலைக்குப் போகிறோம். இன்னைக்கு இல்லைனா, நாளைக்குக் கூட கொஞ்சநேரம் இருந்து வேலையே முடிச்சிடுங்க. இல்லனா, சித்தார்த் கிளம்பட்டும். அஷ்வந்த் உன்னைக் கூட்டிட்டுப் போய் விடுவான்" என்றார்.

“ஆஹ்” என்று வாயைப் பிளந்த அஷ்வந்த், “இப்படி ஒரு தெய்வத்தாய் கிடைக்க, நாம என்ன புண்ணியம் செய்தோமோ?” என்று கைகள் இரண்டையும் மேலே தூக்கி ஒரு கும்பிடு போட்டவன், “உன் ப்ராஜெக்ட் என்ன கதியானா என்ன?” என்று சொல்லிவிட்டு சப்தமாகச் சிரித்தான்.

“இதுக்கு மேலே இருந்தா வேலைக்கு ஆகாது. நாங்க கிளம்பறோம்மா!” என்றபடி எழுந்தான் சித்தார்த்.

எழுந்த மதுமிதாவும், “வரேன் ஆன்ட்டி!” என்றாள் புன்னகையுடன்.

“சரிம்மா!” என்ற தேவகி, மீரா கொண்டு வந்து கொடுத்த குங்குமத்தை அவளுக்கு வைத்துவிட, அவரது காலில் விழுந்து வணங்கி எழுந்தாள்.

“வரேன் ஆன்ட்டி! வரேங்க்கா!” என்றவள், இரட்டையர்களிடமும் சொல்லிக்கொண்டு, தான் மீண்டும் ஒருநாள் வருவதாகக் குழந்தைகளுக்குச் சமாதானம் கூறிவிட்டுச் சித்தார்த்துடன் கிளம்பினாள்.

“எப்படி இருந்தது மது எங்க குடும்பம்?” என்று கேட்டான் சித்தார்த்.

“ஒரு வார்த்தையில் சொல்ல முடியலையே. எல்லோருமே ரொம்ப அஃபெக்‌ஷனேடிவ். உங்க வீட்டு ட்வின்ஸ் செம வாலு. ஆனாலும், ஹார்ம்ஃபுல். இந்த மாதிரி ஒரு குடும்பம் எல்லோருக்குமே கிடைச்சிடாது. அந்த வகையில் நீங்களும், நானும் ரொம்ப லக்கி” என்றாள் சிரிப்புடன்.

“நீங்களும், நானும்ன்னா?” என்றான்.

“உங்க பேமலி மாதிரியே எங்க பேமலியும் ரொம்ப கேரிங். அதைச் சொன்னேன். வெரி குட் எக்ஸ்பீரியன்ஸ். உங்களுக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்றாள்.

அலுவலக பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன், “ஓகே. உன் தேங்க்ஸையெல்லாம் மூட்டைக் கட்டி வை. ஒரு நாளைக்கு மொத்தமா வாங்கிக்கிறேன்” என்றான்.

ஆமோதிப்பாக புன்னகைத்தவள் இறங்கிச் செல்ல, சித்தார்த் அவளைப் பின் தொடர்ந்தான்.

அவன் வந்துவிட்டதை அறிந்த ஜீவா, “சித்தார்த்! ஃபைலைக் கொடு” என்றதும், அலுவலக மேஜை அறையைத் திறந்து எடுத்துக் கொடுத்தவனை, ‘அடப்பாவி!’ என்பதைப் போல ஜீவா செய்வதறியாமல் பார்க்க, கண்களைச் சிமிட்டிச் சிரித்தான் அவன்.

Comments: