Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
450
63
அத்தியாயம் - 16​


நாளொரு மேனியும்; பொழுதொரு வண்ணமுமாக அவர்களது ப்ராஜெக்ட் வளர்ந்து முடியும் தருவாயை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சித்தார்த்தின் காதலும் வளர்ந்து மொட்டவிழும் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தது.

“ஹப்பா! இன்னைக்கு வேலையை முடிச்சிட்டா, நாளைக்கு ஒருநாள் நிம்மதியா ரெஸ்ட் எடுத்துக்கலாம். வரவர வீட்ல லேப்டாப்பைத் தொடுறதே இல்ல. எங்க அம்மா என்னவோ உலக அதிசயம் மாதிரி அதையே சொல்லிட்டு இருக்காங்க” சிரித்துக்கொண்டே காஃபியை உறிஞ்சினாள் கீதா.

தோழியின் பேச்சைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே காஃபியை பருகிய மதுமிதாவின் அருகில் வந்து அமர்ந்தவள், “வீட்ல எல்லோரும் என்னைக்கு குலதெய்வம் கோவிலுக்குப் போறாங்க?” என விசாரித்தாள்.

“இன்னும் நாலு நாள் இருக்கு. ஆனா, அதுக்குள்ள நான் ஒருவழியாகிடுவேன் போல. உன்னைத் தனியா விட்டுட்டுப் போறது இதான் முதல்முறை. பத்திரமா இரு. ஆஃபிஸ் கிளம்பும் போதும், வீட்டுக்கு வந்ததும் கால் பண்ணு. வீட்டைப் பூட்டிக்க. யார் வந்தாலும் சட்டுன்னு கதவைத் திறந்திடாதேன்னு ஏகப்பட்ட அட்வைஸ். இவங்கல்லாம் என்னைக்கு ஊருக்குப் போய்ட்டுத் திரும்பி வருவாங்கன்னு இருக்கு” என்றால் போலியான சலிப்புடன்.

“இப்படி ஒரு குடும்பம் கிடைச்சதுக்கு நியாயமா நீ சந்தோஷப்படணும். எப்பவும் நமக்குக் கிடைச்சிருக்கற வாழ்க்கையை சந்தோஷமா வாழ, நிறைய பேசுக்குத் தெரியறது இல்ல. இல்லாததுக்குத் தான் நாம ஒவ்வொருத்தரும் ஆளா பறக்கறோம்” என்றான் சிவா ஜாடையாக.

“என்ன தல பிலாசஃபியா? நீங்க ஆயிரம் தான் அடிச்சாலும், நாங்க எதையும் தாங்கும் இதயமா ஸ்ட்ராங்கா இருப்போம்” என்று அவர்களது பேச்சில் கலந்துகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த லதாவைப் பார்த்துக்கொண்டே சொன்னாள் கீதா.

“ஏய்! சும்மா இருடி!” என்று அவளது கரத்தில் மதுமிதா தட்ட, “நீ சும்மா இரு. கல்லு மாதிரி எப்படி உட்கார்ந்திருக்கா பாரு” என்று சற்று சப்தமாகவே முணுமுணுத்தாள் கீதா.

“உன்னால திரும்ப அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வரப்போகுது விடு” என்ற மது காஃபி கப்புடன் எழ, “ஆமாம்… என்கிட்ட நேரா வந்து பேசட்டும், அப்புறம் இருக்கு அவளுக்கு” என்று எரிச்சலுடன் சொல்லிக்கொண்டே திரும்பிய கீதா அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தவனைக் கண்டதும் சிலையென நின்றாள்.

தன் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. மனத்தின் ஆசையும், காதலும் அவனைக் கண்டதும் பூத்துக் குலுங்கத் தான் துடித்தன. ஆனால், ஏதோ ஒரு இரும்புத் திரை அவர்கள் இருவருக்கும் இடையில் எழுந்திருக்கிறதே! அதைத் தகர்த்து அவன் கைபிடிக்கும் தைரியம் அவளுக்கு இல்லையே!

அவன் தங்களை நெருங்குவதற்குள் அவளது மனம் உலகைச் சுற்றி வந்திருந்தது.

அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே வந்தவன் அவர்களருகில் வந்ததும், “ஹாய் மது!” என்றான்.

“வாப்பா! ஊர்லயிருந்து வந்துட்டுப் போனவருக்கு, ஒரு போன் கூடச் செய்ய முடியலை” என்றாள் கிண்டலாக.

அவன் அவளுக்கு ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டே அவளுடன் நடக்க, அவர்கள் இருவரும் சரளமாகப் பேசிக்கொண்டே செல்வதை வியப்பும், கோபமுமாகப் பார்த்தாள் கீதா.

சற்றுநேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தவன், அவளை அழைத்துக்கொண்டு சித்தார்த்தின் அறைக்குச் சென்றதை அவள் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் திரும்பி வந்தவன், வேகமாக கீதாவின் அருகில் சென்றான்.

குழப்பத்துடன் அலுவலக அறைக்கு வெள்ளியே நின்றிருந்த கீதாவிடம் சிரிப்புடன் ஏதோ சொன்னவன், “பை!” என்று சொல்லிக்கொண்டு கிளம்ப, அவன் பின்னாலேயே வந்த மதுமிதா, “போடா!” என்றாள் முறைப்புடன்.

“உன் ஃப்ரெண்டை ஒண்ணும் சொல்லல. வரேன். நாளைக்கு வந்திடு” என்றவன் விடைபெற்றுக் கிளம்பினான்.

கீதாவின் வெறித்த பார்வை, சுரேஷை தொடர்வதை பார்த்தவளுக்குப் பாவமாக இருந்தது. இவன் இப்படி அதிரடியாக வந்து அவளுக்கு அதிர்ச்சி அளித்திருக்க வேண்டாம். இப்படிச் செய்யத்தான் நான் வந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னானோ!’ என்று எண்ணிக்கொண்டே கீதாவின் தோளைத் தொட்டாள்.

ஆத்திரத்துடன் அவளது கரத்தைத் தட்டிவிட்டவள், "ஏன்டி! உனக்கு நான் ஃப்ரெண்டா; இல்ல, அவனா! அவன் வந்திருப்பது உனக்குத் தெரியும். ஆனாலும், என்கிட்டச் சொல்லல. என்னைவிட, சுரேஷ் உனக்குப் பெரிசா போய்ட்டான் இல்ல?" என்று வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.

“ஏய்! பைத்தியம் எதுக்கு நீ இப்படி அழற? கண்ணைத் துடை யாராவது பார்க்கப் போறாங்க. அவன் வந்ததைச் சொல்லக்கூடாதுன்னு இல்ல. எல்லாத்தையும் மறந்துட்டேன். புதுசா வாழ்க்கையைத் தொடங்கியிருக்கேன்னு சொல்றவனை, என்னன்னு சொல்றது? அவனும், இல்லாதவன் இல்லாதவனாகவே இருக்கேன். நீ யாரிடம் வந்திருக்கேன்னு சொல்லவேணாம்ன்னு சொன்னான். இப்படி திடுதிப்புன்னு வந்து நிற்பான்னு எனக்கென்ன தெரியும்?” என்றாள் அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக.

“என்னை மறந்து போனதால தானே, அவனால அப்படிப் பேச முடிஞ்சது…” என்றவளுக்குக் கண்ணீர் பெருகியது.

“அவனுக்காக நான் சாரி கேட்டுக்கறேன். அப்படி என்ன சொன்னான்?” என்று கேட்டாள்.

“நான் நல்லா... இருக்கேனான்னு கேட்டுட்டு, இனி இங்கே தான் இருப்பேன். உன்னைப் பார்த்ததுல சந்தோஷம். உனக்குக் கல்யாணாம் நிச்சயமானா சொல்லு. அப்படி நீ சொல்லாட்டாலும், கண்டிப்பா நான் வருவேன்னு சொன்னான்" என ஆவேசமாக ஆரம்பித்து அவன் சொன்னது போலவே சொன்னவள் சொல்லி முடித்ததும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

அதைக் கேட்ட மதுமிதாவின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.
‘ப்ராடு! இருக்கு அவனுக்கு’ என மனத்திற்குள் கறுவிக்கொண்டாள். அன்று முழுவதும் அவனுக்குப் போன் செய்தும், அவனைப் பிடிக்க முடியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலையில் மதுமிதாவை, தீபக் அழைத்துக்கொண்டு சுரேஷின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். கல்யாண வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால், தான் சாவதானமாக ஒருநாள் வருவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.

அவளுடன் பேசிக்கொண்டே அபிராமி சமையலறைக்குச் செல்ல, அவளும் பின்னாலேயே சென்றாள்.

“ப்ராஜெக்ட், ஒரு நாள் தான் ரெஸ்ட்ன்னு கதை சொல்லக் கூடாது. ஈவ்னிங் வரைக்கும் இங்கே தான் இருக்கணும். நான் ரமேஷைக் கூட்டிட்டுப் போய் விடச்சொல்றேன்” என்று அவர் அன்புக் கட்டளையிட, அதற்குக் கட்டுப்பட்டுச் சிரித்தாள்.

“சுரேஷ் எங்கே ஆன்ட்டி?” என்று அக்கறையுடன் விசாரித்தாள்.

“கடைக்குப் போயிருக்கான். வந்திடுவான்” என்று சொல்ல, அவனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்றுநேரம் அபிராமிக்கு சமையலறையில் உதவி செய்துகொண்டிருக்க, ரமேஷ் அவரை அழைத்தான்.

“இவன் ஒருத்தன்! மேலயும், கீழேயுமா வீட்டைக் கட்டிட்டு நமக்கு நடக்கவே நேரம் சரியா இருக்கு” என்று அலுப்புடன் எழுந்தவர், “மதும்மா! இந்த பாட்டில்ல தண்ணி பிடிச்சி வச்சிடு. இதோ வரேன்” என்று அங்கிருந்து சென்றார்.

அவர் சொன்னதைச் செய்துவிட்டு, சமைக்க தண்ணீர் பாத்திரத்தை எடுத்து வசதியாக மேடையில் அவள் வைக்கவும், வாசலில் பைக் வந்து நிற்கும் சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

‘துரை வந்தாச்சு போலிருக்கே. இன்னைக்கு இவனை...’ என்று நினைத்துக்கொண்டே சுற்றி பார்வையை ஓடவிட்டவள் பார்வையில் தண்ணீர் பாத்திரத்தில் தான் தெரிந்தது.

அழைப்பு மணி ஒலிக்கவும், கதவைத் திறந்தவள் அதே வேகத்தில், ‘யார் நிற்கிறார்கள்?’ என்று கூடப் பார்க்காமல், பாத்திரத்தில் இருந்த மொத்த தண்ணீரையும் அங்கே நின்றிருந்தவன் மேலே ஊற்றினாள்.
எதிர்ப்பாராத இந்தத் தாக்குதலில் தடுமாறி, சமாளித்து முகத்தைத் துடைத்தபடி நின்றவனைப் பார்த்தவள், "ஐய்யய்யோ!" என்றபடி, கையிலிருந்த பாத்திரத்தைக் கீழே போட்டுவிட்டு உள்ளே ஓடினாள்.

சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று ஓடிவந்த ரமேஷ், சித்தார்த் நின்று கொண்டிருந்த கோலத்தைப் பார்த்துச் சிரித்தவன், “வாடா!” என்று வரவேற்றான்.

"நல்ல வரவேற்புடா!” என்றபடி உள்ளே வந்தான் சித்தார்த்.

ரமேஷ், சிரித்தபடி துண்டு ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். அங்கே வந்த அபிராமி, "வா சித்தார்த், என்ன இப்படி நனைந்து போய் வந்திருக்க?" என்றார்.

“எனக்கு மட்டும் உங்க வீட்டு வாசலில் மழை பெய்தது" என்றவனது பார்வை அதற்குக் காரணமானவளைத் தேடியது.

அவள் தனது செயலை நினைத்து தலையிலேயே அடித்துக்கொண்டு சமையலறையில் நின்றுகொண்டிருந்தாள்.

"மது! பயப்படாமல் வா. நம்ம சித்தார்த் தானே ஒண்ணும் சொல்லமாட்டான்" என்றான் சிரிப்புடன்.

"ஆமாம்டா! நான் ஒண்ணும் சொல்லமாட்டேன். ஏன்னா, சித்தார்த் ஒரு கேனையன்னு என் நெத்தியிலே எழுதி ஒட்டியிருக்கே... அப்புறம், எதுக்குப் பயப்படணும்?" என்றான் போலியான எரிச்சலுடன்.

அவனது பதிலைக் கேட்டுச் சிரித்தவள், மெல்ல அபிராமியின் பின்னால் வந்து நின்றாள்.

"வாங்க மேடம்! இப்படி ஒரு வரவேற்பை இதுவரைக்கும் யாரும் எனக்குக் கொடுத்ததும் இல்ல. நான் எங்கேயும் பார்த்ததும் இல்ல?" என்றான் கிண்டலாக.

"சாரி! நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. சுரேஷுன்னு நினைச்சித் தான்...” என முடிக்காமல் இழுத்தாள்.

"நல்லவேளை! தண்ணியோட போச்சு. என்ன… தெரிந்திருந்தா, குளிக்காமலேயே வந்திருப்பேன்" என்றதும், ரமேஷும், அபிராமியும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றனர்.

ரமேஷ் ஒரு டி-ஷர்ட்டுடன் அங்கே வரவும், ஹெல்மெட் அணிந்தபடியே சுரேஷ் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. வாசலில் இருந்த தண்ணீரும், தலையைத் துவட்டிக்கொண்டிருந்த சித்தார்த்தையும் பார்த்தவுடனே, நடந்ததை அவனுக்குப் புரிய வைத்துவிட, சிரிப்பை அடக்கிக் கொண்டு மதுமிதாவைப் பார்த்தான்.

“ஒரு பயங்கரமான ரியாக்‌ஷனை எதிர்பார்த்து வந்தா, இங்கே ஆக்‌ஷன் வேற இடத்துக்கு மாறியிருக்கு” என்று சொல்லிக்கொண்டே சிரித்தான்.

‘இருக்குற கடுப்புக்கு… உன்னை’ என எரிச்சலுடன் எண்ணிக்கொண்டே அவள் உள்ளே செல்ல, நிம்மதி பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்தான் சுரேஷ்.

"ஏன்டா இன்னும் ஹெல்மெட்டைக் கழட்டாம, முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி உட்கார்ந்திருக்கே" என்றான் சித்தார்த்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றியவன், “உங்களுக்குத் தெரியாது. ஏற்கெனவே என் மேல கடுப்புல இருந்தா. போதாக்குறைக்கு இப்போ இதுவேற... இன்னைக்கு என்னை ஒரு வழி பண்ணிடுவா” என்றான் பரிதாபமாக.

ரமேஷ், "சரிவிடு. இதெல்லாம் உனக்குப் புதுசா என்ன?” என்றான் கிண்டலாக.

“யூ டூ ப்ரூட்டஸ்” என்று கடுப்புடன் சொன்னவன், “ஆனா, என்னால் இன்னைக்கு சித்தார்த் அண்ணாவுக்கு ஒரு குட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருக்கு. கல்யாணத்துக்குப் பின்னால, உங்களுக்கு யூஸ் ஆகும்" என்றான் தீவிரமான பாவனையுடன்.

“எழுந்து போடா! இவன் அவகிட்ட வாங்காம அடங்கமாட்டான்” என்றான் ரமேஷ்.

“ம்ம், பெரிசா நமக்கு ஏதாவது ஆப்பு ரெடி பண்றதுக்குள்ள, சமாதானக்கொடியை பறக்க விட முடியுதான்னு பார்க்கிறேன்” என்றபடி அவளைத் தேடிச் சென்றான்.

சுரேஷ், சமையலறையை எட்டிப் பார்த்தான். அவள், பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள்.

தொண்டையைச் செருமிக்கொண்டவன், “கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத் தோழி! என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்புத்தோழி!" எனப் பாவனையுடன் பாட, அவனை முறைத்துக்கொண்டே மாவைக் குத்தினாள்.

"இன்னைக்குப் பூரி பயங்கர சாஃப்ட்டா வரும் போலிருக்கே. என்மேல விழவேண்டிய குத்தெல்லாம், மாவு மேலே விழுதே. மது... மது... மது செல்லம்... என்னடா கோபமா?" என்றான் கொஞ்சலாக.

கோபத்துடன், “டேய்! மரியாதையா, இங்கேயிருந்து போயிடு. இல்ல இந்தப் பூரி கட்டையாலேயே உன் தலையில் நாலு போடுவேன்" என்றாள்.

“நோ வயலன்ஸ்! ப்ளீஸ் ஐயம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட். ஃபர்கிவ்மீ" என்றபடி தனது கைக்குட்டையை எடுத்துச் சமாதானக் கொடியை ஆட்டினான்.

அவனது செய்கை அவளுக்குச் சிரிப்பை வரவழைக்க, "ஹப்பா! மீ கிரேட் எஸ்கேப்" என்றான் மகிழ்ச்சியுடன்.

அபிராமி அங்கே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “நீ எதுக்கு நேத்து கீதா கிட்ட அப்படிப் பேசின? பாவம். எப்படி அழுதா தெரியுமா?" என்றாள் பரிதாபமாக.

சற்று மௌனமானவன், “நானும் மனுஷன் தான் மது! இன்னமும் அவள் மேல நான் வச்சிருந்த நேசம் அப்படியே தான் இருக்கு. நான் இங்கே வந்ததே, அவளுக்காகத் தான்” என்றவனை விழிகள் அகல பார்த்தாள்.

“அன்னைக்கு என்னென்னவோ சொன்ன...” என்றாள் வேகமாக.

“உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கச் சொன்னேன். ஏன்னா, அம்மாவுக்கு நிச்சயமா விருப்பம் இருக்காது. ஆனா, மனசு கேட்கமாட்டேன்னுது மது! சீக்கிரமே புரிய வச்சிடுவேன். சித்தார்த் அண்ணாவும், பெரிம்மாவும் அம்மாகிட்டப் பேசறேன்னு சொல்லியிருக்காங்க. இந்த முறை யாரோட மனசையும் காயப்படுத்திடக் கூடாதுன்னு ரொம்பக் கவனமா இருக்கேன்” என்றான் தீவிரமாக.

புன்னகைத்தவள், “ரொம்பச் சந்தோஷமா இருக்கு சுரேஷ். என்னால முடிஞ்சதை நானும் செய்றேன்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

மனத்தில் சந்தோஷமும், நிம்மதியும் இருக்கும்போது அந்த இடமே சொர்க்கமாகத் தோன்றும். அப்படித்தான் அன்றைய பொழுது அவளுக்குக் கழிந்தது. மதியம் ஜீவாவும் வந்துவிட, வீடே கலகலவென இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
ரமேஷை எப்போதிலிருந்து அலுவலகத்திற்கு வரப்போகிறாய் என்று சித்தார்த்தும், ஜீவாவும் மாற்றி மாற்றிக் கேட்டு உலுக்க, “வரேன் அம்மாகிட்டப் பேசிட்டுச் சொல்றேன்” என்றவனை, அவர்கள் விடுவதாக இல்லை.

“டேய்! மூணு பேரும் பேசினபடி சேர்ந்து தான் பிஸ்னஸ் பண்ணப் போறோம். நாங்க முடிவு செய்துட்டோம். நீ வர்ற” என்றான் ஜீவா.

“அம்மா வேண்டாம்ன்னு சொல்லப் போறதில்ல. இந்தப் ப்ராஜெக்ட் முடிஞ்சதும், ஒரு வாரம் உனக்கு டைம். வந்து சேர்ற” என்று திட்டவட்டமாகச் சொன்னான் சித்தார்த்.

ரமேஷுக்கும் அந்த எண்ணம் இருந்த போதும் தயக்கமும் இருந்தது. இப்போது அவர்களே கேட்கவும், தனது சம்மதத்தையும் தெரிவித்து விட்டான்.

மாலையில் மதுமிதா விடைபெற்றுக் கொள்ள, சித்தார்த்தும் கிளம்பினான்.

“சித்தார்த்! மதுவை அவங்க வீட்ல ட்ராப் பண்ணிடேன்” என்றான் ரமேஷ்.

அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் அசௌகர்யத்துடன் நின்றிருந்தாள்.

“கார்ல வந்திருந்தா கூட்டிட்டுப் போயிருப்பேன். பைக்ல வந்திருக்கேன். சுரேஷை விட்டுடச் சொல்லு” என்று நண்பனிடம் கூறியவன், “சாரி மது!” என்று அவளிடம் சொல்லிவிட்டு அபிராமியிடம் விடை பெற்றான்.

இறுக்கம் தளர்ந்தவளாக புன்னகைத்தவளுக்கு, அவன் மீதான மரியாதையும், அபிமானமும் பன்மடங்காகப் பெருகியது.

“நைஸ் ஜெண்டில்மேன்!” என்று அவளது இதழ்கள் முணுமுணுத்தன.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
450
63
அத்தியாயம் - 17


விரல்களைச் சொடுக்கெடுப்பதும், கடிகாரத்தைப் பார்ப்பதுமாக ஹாலில் அமர்ந்திருந்தாள் மதுமிதா.

விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்த ராஜி, “மதும்மா! தூங்கலையா? மணி ரெண்டு ஆகுதே” என்றார் பரிவுடன்.

“அண்ணனுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன் அத்தை! இந்நேரம் ஃப்ளைட் லேண்ட் ஆகியிருக்கும் இல்ல” என்றவளை அன்புடன் பார்த்தார்.

“தீபக் உன்னைக் கூப்பிட்டானே. நீயும் போயிருக்கலாமில்ல” என்றார் அவர்.

“இருக்கட்டும் அத்தை! அத்தானும், வித்யாவும் போயிருக்காங்க இல்ல” என்றாள் முறுவலுடன்.

எங்கே தான் சென்றால் அண்ணனின் கவனமெல்லாம் தன்மீதே இருக்குமோ என்ற சந்தேகத்தில் தான் அவள் வித்யாவை மட்டும் அனுப்பி வைத்தாள் என்று அவருக்குப் புரிய, மனம் கனத்தது அவருக்கு.

“கொஞ்ச நேரமாவது படு. அவங்க வர இன்னும் ரெண்டு மணிநேரமாவது ஆகும். நீ காலைல ஆஃபிஸுக்கு ஓடணும்” என்று அவளது தலையைத் தடவிக்கொடுத்தார்.

“தூக்கம் வரலை அத்தை! நான் இங்கேயே திவானில் படுத்துக்கறேன்” என்றாள்.

அதற்கு மேல் அவர் எதுவும் சொல்லாமல் விளக்கை அணைத்துவிட்டு தனது அறைக்குச் சென்றார். அங்கே விழித்துக்கொண்டு அமர்ந்திருந்த கணவரின் தோளில் சாய்ந்தவருக்குக் கண்ணீர் பெருகியது.

“சீக்கிரமா அவளுக்கு ஒரு நல்லது நடக்கணுங்க. என்னால, அவளை இப்படிப் பார்க்க முடியல. என் குழந்தைங்கள்லாம் நல்லாயிருக்க, நான் தூக்கி வளர்த்த இவளுக்கு மட்டும் அந்தக் கடவுள் ஏன் இப்படி வஞ்சனை பண்ணிட்டாரு?” என்று குமுறிய மனைவியை, ஆறுதலாகத் தட்டிக்கொடுத்த ஈஸ்வரனின் விழிகளும் கலங்கியிருந்தன.

அரைகுறை உறக்கத்தில் இருந்த மதுமிதாவின் செவிகளில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்க, சடாரென எழுந்து வாசலுக்கு ஓடினாள்.

கதவைத் திறந்துகொண்டு, “அண்ணா!” என்று அழைத்துக்கொண்டே வந்தவளைக் கண்ட ராஜேஷிற்கு சந்தோஷத்தில் விழிகள் பனித்தன.

“மதும்மா!” என்று தங்கையைத் தோளோடு அணைத்துக்கொண்டவன், "என்னடா இப்படி இளைத்துப் போயிருக்க. வேலை அதிகமா" என்று அன்புடன் விசாரித்தான்.

அதற்குள் பெரியவர்கள் அங்கு வர, தங்கையின் கையைப் பற்றியபடியே உள்ளே சென்றான். ராஜி மருமகனுக்குப் பாதாம் பாலைக் கொண்டு வந்து கொடுக்க, அதைப் பருகியபடியே சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

வித்யாவின் பார்வை அவ்வப்போது கணவனின் மீது சென்று திரும்புவதைக் கவனித்த மது, “அண்ணா! நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. மூணு மாசம் இங்கே தானே இருக்கப் போறீங்க. நிதானமா பேசிக்கலாம். நானும் காலைல ஆஃபிஸ் கிளம்பிடுவேன்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்துவிட்டு அறைக்குச் சென்றாள்.

தங்கள் அறைக்குச் சென்றதும் வித்யா கதவைத் தாளிட, பின்னாலிருந்து அவளை அணைத்துக்கொண்டான் ராஜேஷ்.

கணவனின் அன்பும், காதலும் அவளை நெகிழவைக்க, அவனது நெஞ்சில் சாய்ந்துகொண்டாள். கன்னங்களில் வழிந்த கண்ணீர் அவனது சட்டையை நனைத்தது.

அவளது முகவாயைப் பற்றி உயர்த்தியவன், மென்மையாக அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

“விது! நான் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தறேன் இல்ல” என்றவனது வாயைப் பொத்தினாள்.

“அத்தான்! நாம இதைப் பத்தி நிறைய பேசிட்டோம். நீங்க உங்களை வருத்திக்காதீங்க. இது தற்காலிகமான பிரிவு தான். மதுவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும். அதுவரைக்கும் நான் காத்துட்டு இருப்பேன்” என்றாள் கனிவுடன்.

“இல்ல விது! என்மேலயும் தப்பு இருக்கு. என் தங்கைக்காக, உன்னோட சந்தோஷத்தைப் பறிச்சிட்டேனோன்னு அடிக்கடி தோணுதுடா" என்றான் கவலையுடன்.

“ஏங்க என் தங்கைன்னு பிரிச்சிப் பேசறீங்க. நான் என்னைக்காவது அப்படி நினைத்திருப்பேனா. அவள் உங்களுக்குத் தங்கைன்னா, எனக்கு நாத்தனார், அதைவிட என்னோட ஃப்ரெண்ட். ஒரு அண்ணனா நீங்க உங்க கடமையைச் செய்யறீங்க. இதுல வருத்தப்படவோ, குற்ற உணர்ச்சி உண்டாகவோ எதுவுமே இல்ல. சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்" என்றாள் ஆறுதலாக.

“ரொம்பத் தேங்க்ஸ் விது!” என்றவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், “நீங்க முதல்ல செய்யவேண்டிய வேலை ஒண்ணு இருக்கு” என்றாள்.

“என்ன?” என்றான் ஆர்வத்துடன்.

“ம், நான் உங்க மனைவி. உங்க சுக துக்கத்துல எனக்கும் பங்கிருக்குன்னு நினைங்க. மத்ததெல்லாம் தானா நடக்கும்” என்றாள் போலியான கோபத்துடன்.

“ஆஹா! இந்த நினைப்பு எனக்கு எப்போ போச்சு? நினைக்க…” என்றவன் ஆசையுடன் அவளது நெற்றியில் முட்ட, அவள் சிணுங்கலுடன் அவனது அணைப்பிற்குள் கட்டுண்டாள்.

****************

“அத்தை! ரெண்டு இட்லி போதும் நேரமாகிடுச்சி” என்றவள் நின்றபடியே இட்லியை விழுங்கிவிட்டு கையைக் கழுவ, “இதுக்குத் தான் தூங்குன்னு ராத்திரி சொன்னேன். எழுந்தது லேட். சாப்பிடக் கூட நேரம் இல்லாம என்ன வேலையோ!” என்று அலுத்துக்கொண்டார் ராஜி.

“வேலைக்குப் போய் சம்பாதிச்சித் தான் சாப்பிடணும்ன்னு இருக்கா? சொன்னா கேட்டா தானே உன் மருமக” என்று உடன் சேர்ந்து ஆரம்பித்தார் விமலா.

“இப்போ உங்களுக்குப் பதில் சொல்லக்கூட எனக்கு நேரமில்ல. ஈவ்னிங் வந்து கண்டினியூ பண்றேன்” என்றவள் அரக்கப்பரக்க வாசலுக்கு ஓடியவள், “ஹய்யோ!” என அலறினாள்.

என்னவாயிற்றோ என்ற எண்ணத்துடன் பெரியவர்கள் இருவரும் வாயிலுக்கு ஓடி வர, எரிச்சலுடன் பஞ்சரான ஸ்கூட்டியைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் மதுமிதா.

இருவரும் வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டனர்.
“ஆட்டோல போயிடேன்” என்றார் விமலா.

“இங்கேயிருந்து அஞ்சு நிமிஷம் நடந்து மெயின் ரோட் போய் பிடிக்கணும். கால் டேக்ஸிக்காரன் இந்த ஏரியாவுக்கே வரமாட்டேன்றான். இன்னும் அரை மணி நேரத்தில் நான் ஆஃபிஸ்ல இருந்தாகணும். அத்தானும் வீட்ல இல்ல…” என அவள் புலம்பிக்கொண்டிருக்க, சப்தம் கேட்டு ராஜேஷ் வெளியே வந்தான்.

விஷயமறிந்தவன், “ரெண்டு நிமிஷம் இரு” என்றவன் வேகமாகத் தயாராகி வந்தான்.

“என்னால உங்களுக்குக் கஷ்டம்” என்றாள் மது.

“ம், அது இப்போ தான் தெரியுதாக்கும்” என்று பட்டெனச் சொன்னாள் வித்யா.

“ம்க்கும், நான் கஷ்டம்னா நீ இம்சை” என்று அண்ணன் மனைவிக்கு ஒரு குட்டு வைத்துவிட்டு அண்ணனுடன் கிளம்பினாள்.

அலுவலகத்தில் இறங்கியவள், “தேங்க்ஸ் அண்ணா! ஈவ்னிங் நானே வந்துடுறேன்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க சித்தார்த்தின் கார் உள்ளே நுழைந்தது.

தங்கையுடன் பேசிக்கொண்டிருந்த ராஜேஷ், காரை விட்டு இறங்கியவனைப் பார்த்த ராஜேஷுக்கு ஆனந்த அதிர்ச்சி. சித்தார்த்தும் அவனைப் பார்த்துக்கொண்டே வந்தான்.

“அண்ணா! எங்க எம்.டி சித்தார்த்!” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க, “ராஜேஷ்!” என்று உற்சாகமாக அழைத்தான் அவன்.

“ஹேய் சித்தார்த்! உன்னைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு” என்று இருவரும் உரிமையுடன் பேசிக்கொள்ள, மதுமிதா அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“நீங்க இங்கே மதுகூட…” என்று அவன் கேட்க, “என்னோட சிஸ்டர்” என்றான் ராஜேஷ்.

“ஓஹ்!” என்றான் ஆச்சரியத்துடன். “உங்களைத் திரும்ப மீட் பண்ணியதில் சந்தோஷம். உங்க நம்பரை மதுகிட்ட வாங்கிக்கிறேன். ஃப்ரீயா இருக்கும் போது பேசறேன்” என்றவன் விடைபெற்று அலுவலகத்தை நோக்கி நடந்தான்.

அவனைத் தொடர்ந்து வந்த மது, “எங்க அண்ணாவை உங்களுக்குத் தெரியுமா?” என்று ஆச்சரியம் குறையாமல் கேட்டாள்.

“யூ.எஸ்ல, ரெண்டு பேரும் ஒரே ஆஃபிஸ்ல, வேற வேற ப்ராஜெக்ட்ல ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணோம். அப்பப்போ தமிழ் ஃப்ரெண்ட்ஸ் கெட்டு கெதர்ல மீட் பண்ணினா பேசிக்குவோம். ரொம்ப நெருக்கமும் இல்ல. தூரமும் இல்ல” என்றான் புன்னகையுடன்.

அவன் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டாள்.

ராஜேஷுக்கு எதையும் நம்பமுடியவில்லை. வழியெல்லாம் யோசனையுடனே இருந்தான். கடவுள் என்ன நினைக்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுமிதாவிற்குத் திருமணப் பேச்சை ஆரம்பித்தபோது இந்தச் சித்தார்த்தைப் பற்றி வீட்டில் பேசியபோது, சில காரணங்களால் அந்தப் பேச்சு அப்படியே நின்று போனது.

அதன் பின் தங்கையின் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் அவனை இங்கேயிருந்து ஓட வைத்தது. ஆனால், இப்போது மீண்டும் அதே சித்தார்த். அதுவும் தங்கையின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவனாக சந்தித்த போது அவனுள் சிறு நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது.

அதே நேரம் அவளது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அறிந்தால், சித்தார்த்தின் பதில் என்னவாக இருக்கும் என்றும் அவனுக்குப் புரியவில்லை. குழம்பிய மனத்துடன் வீட்டிற்கு வந்தான்.

திருமண அழைப்பிதழ் ப்ரூஃப் பார்த்துக்கொண்டிருந்த தீபக்கின் அருகில் சென்று அமர்ந்தான்.

யோசனையுடன் இருந்தவனைப் பார்த்த தீபக், “என்னடா! ஏதோ யோசனைல இருக்க?” என்று கேட்டான்.

வீட்டில் பெரியவர்களிடம் இதைப் பற்றிப் பேசும் முன்பாக, தனது மைத்துனன் என்பதை விட நல்ல நண்பனான தீபக்கிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தான். அத்துடன் தன் அளவிற்குத் தங்கையின் மீது அன்பும், அக்கறையும் கொண்டவன் அவன் என்பதால் அனைத்தையும் அவனிடம் சொன்னான்.

ஆழ்ந்து கவனமாக அனைத்தையும் கேட்டுக்கொண்ட தீபக், “நீ சித்தார்த்கிட்ட பேசறதுக்கு முன்னால் மதுகிட்டப் பேசு. அவளோட சம்மதம்ன்னு சொல்றதை விட, மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க வேண்டியது தான் கட்டாயம். நான் ஃபீல் பண்ண வரைக்கும் சித்தார்த்துக்கு மதுமேல ஒரு எண்ணம் இருக்குன்னு தான் நினைக்கிறேன்” என்றான்.

கண்கள் மின்ன, “உண்மையாகவா சொல்ற? அப்படி மட்டும் நடந்தால், மதுவோட லைஃப் நிச்சயம் நாம நினைச்சதை விட நல்லா இருக்கும்” என்று ஆர்வத்துடன் சொன்னவனை ஆயாசத்துடன் பார்த்தான்.

“ராஜேஷ்! நம்ம எல்லோருக்குமே மது நல்லா இருக்கணும்ன்னு ஆசை இருக்கு. ஆனா, அவளோட மனசுல சித்தார்த்தைப் பத்தி என்ன நினைக்கிறான்னு என்னால ஒரு முடிவுக்கு வரமுடியல. கொஞ்ச நாள் வெயிட் பண்ணு. குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வருவோம். நிச்சயமா ஏதாவது நல்லது நடக்குன்னு அம்மா சொல்வாங்க. இதை வேண்டுதலா வச்சிக்கிட்டு போவோம். நல்லதே நடக்கும்னு நம்புவோம்” என்று சமாதானம் சொன்னான்.

ரஜேஷிற்கும் அது சரியென்று பட, சம்மதமாக தலையசைத்தான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
450
63
அத்தியாயம் – 18​


“மது! கதவைத் தாழ் போட்டுக்கோ. முடிஞ்ச வரைக்கும் தனியா இருக்காதே. நம்ம வீட்ல வேலை செய்ற மீனாட்சி இராத்திரியில உனக்குத் துணையா வந்து படுத்துக்கச் சொல்லியிருக்கேன். தலைக்கு குளித்துவிட்டு அப்படியே காயவிடாமல் படுத்துக்காதே. அப்புறம் உனக்குத் தலைவலி வந்துவிடும்” என்று ராஜி, விமலா இருவரின் குரல்களும் அசரீரி போல ஒலித்துக் கொண்டிருக்க, பொறுமையை இழுத்துப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் மதுமிதா.

“எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே தலைவலி ஆரம்பிச்சாச்சி. இதுல புதுசா தலைவலி வரணுமாக்கும்” என்று முணுமுணுத்தாள்.

“சொல்றது புரிஞ்சதா!” என்று விமலா அவளிடம் கேட்க, “நான் என்ன சின்னக் குழந்தையா? ரெண்டு பேரும் இந்தப் பாடுபடுத்தறீங்களே. இங்க இருக்கிற கும்பகோணம் போயிட்டு வர, இவ்ளோ பில்ட்அப்பா! இன்னைக்கு வியாழக்கிழமை நடுவில் ரெண்டு நாள் தான் இருக்கு. ஞாயிற்றுக்கிழமை ஈவ்னிங் எல்லோரும் வீட்டுக்கு வந்துடப் போறீங்க. இதுக்கு என்னவோ என்னைத் தனியா விட்டுட்டு எல்லோரும் செவ்வாய் கிரகத்துக்குப் போறா மாதிரியில்லை பேசிக்கிட்டு இருக்கீங்க" என்று எரிச்சலுடன் சொன்னாள்.

“உன்னை இது போலத் தனியா விட்டுட்டுப் போனதில்லையே. அதான், எங்க மனசு கிடந்து தவிக்குது" என்ற விமலாவை ஆதூரத்துடன் பார்த்தாள்.

“அம்மா! கவலைப்படாதீங்க. நான் பத்திரமா இருந்துக்கறேன். நீங்க கோவிலுக்கெல்லாம் போய்ட்டு வாங்க. தினம் மூணு வேளையும் பேசறேன். சனிக்கிழமையோடு ப்ராஜெக்ட் முடிஞ்சிடும். ஞாயிற்றுக்கிழமை நீங்க வரும்போது ஃப்ரீ ஆகிடுவேன். அப்புறம், ஒரு நாலு நாள் ஆஃபிஸ் போய்ட்டு வந்துட்டா, இருபது நாளைக்கு லீவ். கிளம்பும் போது சந்தோஷமா போய்ட்டு வரணும். ஆஃபிஸ் கிளம்பறேன்” என்றவள் அவரை அன்புடன் அணைத்துக்கொண்டாள்.

“வித்யா! மேகலாவைக் விசாரிச்சேன்னு சொல்லு. அப்படியே அவளைத் தனியா விடாதே. அப்புறம், தேடினாலும் கிடைக்க மாட்டா? முடிஞ்சா ரெண்டு பேருக்கும் நடுவில், ஒரு திரையைப் போட்டு நிற்க வைங்க" என்று தீபக்கையும் கிண்டலடித்து விட்டுக் கிளம்பினாள்.

அடுத்த இரண்டு நாட்களில் அவர்களது காலக்கெடுவிற்குள் ப்ராஜெக்டை முடித்து விட்டதில் அனைவருக்கும் பரம திருப்தி. அனைவரும் ஒன்றாக அமர்ந்து முழு படத்தையும் பார்த்துவிட்டு, அதன் ப்ரொமோவையும் பார்த்து சிற்சில மாற்றங்களைச் செய்தால் போதும் என்று முடிவெடுத்தனர்.

ஃபைனல் டச் மட்டும் தானே பாக்கி. அதை மண்டே பார்த்துக்கலாம். கிளம்புவோம். இன்னைக்காவது நேரத்தோடு போகலாம்” என்று சொல்ல, சோர்வாக இருந்த போதும், அனைவரும் புன்னகையுடனே புறப்பட்டனர்.

சிவா முன்னால் சென்று கொண்டிருக்க, “சிவா ஒன் மினிட்” என்றபடி அவன் பின்னாலேயே ஓடிய லதாவை, தோழிகள் இருவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

“மது! உன்னை ஒரு கிள்ளு கிள்ளிக்கவா?” என்று கிசுகிசுத்தாள் கீதா.

“கொன்னுடுவேன்” என்றவள் நறுக்கென அவளது கரத்தைக் கிள்ளிவிட, “அடிப்பாவி! என்று சப்தமாக அலறினாள் கீதா.

“இப்போ புரிஞ்சிதா இது நிஜம்ன்னு” என்று சிரித்த மதுவை முறைத்துக்கொண்டே சென்றாள்.

மது தன் வண்டியை எடுக்க, அது ஸ்டார்ட் ஆகாமல் முரண்டு பிடித்தது. “நினைச்ச மாதிரியே காலை வாரிடிச்சி. முதல்ல வண்டியை மாத்தணும்” எனப் புலம்பிக்கொண்டே மீண்டும் ஸ்டார்ட் செய்ய, அது எல்லா திட்டையும் வாங்கிக்கொண்டு அப்படியே நின்றிருந்தது.

எல்லோரும் கிளம்பியதும் கடைசியாக சித்தார்த்தும், ஜீவாவும் வந்தனர்.

அவளது போராட்டத்தைப் பார்த்தவன், “என்ன ஆச்சு?” என்று கேட்டபடி அருகில் வந்தான்.

“ஸ்டார்ட் ஆகல” என்றாள்.

“இந்த வண்டியை எப்போ வாங்கினது? இரண்டாம் உலகப் போர் போதா? என்று ஜீவா தீவிர பாவனையுடன் கேட்க, அவள் திருதிருவென விழித்தாள்.

“டேய்! சும்மாயிரு” என்ற சித்தார்த், “காலைல உன் பிரதர்கிட்ட பேசினேன். ஊருக்குப் போயிருக்கறதா சொன்னார்” என்றான்.

"குலதெய்வம் கோவிலுக்குப் போயிருக்காங்க" என்றாள்.

“அப்போ வீட்ல தனியாகவா இருக்க? சுரேஷ் வீட்டுக்குப் போயிருக்கலாம் இல்லயா?” என்றான்.

“ஆன்ட்டியும், சுரேஷும் தீபா வீட்டுக்குப் போய் ஒரு வாரம் ஆகிடுச்சி. அத்தையும் அவங்க வீட்ல வேலை செய்யும் மீனாட்சி அக்காவைத் துணைக்கு வச்சிட்டுத் தான் போயிருக்காங்க. அதனால, ஒண்ணும் பிரச்சனை இல்லை” என்றாள்.

அவளுடன் பேசிக்கொண்டே, நான்கைந்து முறை வண்டியை ஸ்டார்ட் செய்து பார்த்தான். அது மூச்சுகூட விடமாட்டேன் என்று அது பிடிவாதமாக நின்றது.

“இதுக்கு மேலே அசையாது. வண்டியை மெக்கானிக்கிட்ட தான் விடணும்” என்றவன் தன்னுடைய மெக்கானிக்கிற்கு போன் செய்து, வண்டி நம்பரையும் சொல்லி வந்து எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, “வாட்ச்மேன்கிட்ட விஷயத்தைச் சொல்லி சாவியைக் கொடுத்துட்டு வா, நானே உன்னை ட்ராப் பண்றேன்” என்றான்.

அவளும் சாவியைக் கொடுக்கச் சென்ற நேரத்தில் அதுவரை ஏதும் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜீவா, ஒரு கள்ளச் சிரிப்புடன் சித்தார்த்தைப் பார்த்தான்.

"என்னடா சிரிப்பு?" – சித்தார்த்.

“ம்ம், ஒரே பிக்அப்பும், ட்ராப்புமா இருக்கு. நேரம்டா உனக்கு. கொஞ்சம் லேட்டா ஆரம்பிச்சாலும் நல்லாவே வோர்க் அவுட் ஆகுது" என்று சொல்லிச் சிரித்தான்.

“பொறமை பிடிச்சவனே!” என்றான் சிரிப்புடன்.

“ஃப்ரெண்டோட தங்கச்சிலாம் நமக்கும் தங்கச்சின்னு ஒருத்தன் அப்பப்போ லெக்சர் அடிப்பான். இப்போ அவனே...” என்று ஜீவா இழுக்க, சித்தார்த் முறைத்தான்.

“அவளை லவ் பண்ண ஆரம்பிக்கும் போது அவங்க அண்ணன் எனக்குப் ப்ரெண்டே இல்லை” என்றான் காட்டமாக.

அதற்குள் மதுமிதா வந்துவிட, சிரித்துக்கொண்டே ஜீவா விடைபெற்றுக் கிளம்பினான்.

அவளை வீட்டில் இறக்கிவிட்ட சித்தார்த், “நாளைக்குக் காலைல நானே வந்து கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

இறங்கியவள், “நோ தேங்க்ஸ்! நான் வந்திடுவேன். டிராப் பண்ணதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்” என்று மீண்டும் சொல்லிவ்ட்டு வீட்டிற்குள் செல்ல, சித்தார்த் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.


**************​

காலையில் எழுந்த மது தனது குடும்பத்தினருடன் பேசிவிட்டு, குளித்துத் தயாராகி வந்தாள். அதற்குள் மீனாட்சி காலை உணவை டைனிங்கில் அடுக்கி வைத்திருக்க, “அக்கா! ரொம்பத் தேங்க்ஸ். நான் பார்த்துக்கறேன். நீங்க வீட்டுக்குப் போய்ட்டு ஈவ்னிங் வந்தா போதும்” என்று அவரை அனுப்பி வைத்தாள்.

அவர் கிளம்பியதும் கதவை பூட்டிவிட்டு வந்தவளின் மொபைல் ஒலிக்க எடுத்தவள், “சொல்லு கீதா!" என்றாள்.

“மது! இன்னும் கொஞ்சம் நேரத்துல வரேன். நீ தயாரா இரு. நாம ஒரு முக்கியமான இடத்துக்குப் போறோம்” என்றாள்.

“அதெல்லாம், எங்கேயும் வர முடியாது. ஈவ்னிங் எல்லோரும் ஊர்லயிருந்து வந்திடுவாங்க" என்றாள் மறுப்பாக.

“என்னடி இப்படிச் சொல்ற? என்னோட சந்தோஷத்தை உன்கூட ஷேர் பண்ணிக்கணும்னு தானே சொல்றேன்."

"அப்படி என்ன சந்தோஷம்?" என்றாள் வியப்புடன்.

“நீ ரெடியா இரு. நான் வந்து சொல்றேன்” என்று போனை வைத்தாள்.

சரி வீட்டில் இருப்பதற்கு எங்காவது சென்று வருவோம் என்று எண்ணி ராஜேஷுக்குப் ராஜீக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.

“போய்ட்டு வாம்மா! வந்த வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சது. நாங்களும் லஞ்ச் முடிச்சிட்டுக் கிளம்பிடுவோம்” என்று தகவல் சொல்ல, தோழிக்காகக் காத்திருந்தாள்.

கால் டாக்ஸியை வெயிட்டிங்கில் விட்டுவிட்டு வந்த கீதா, கிளம்பு கிளம்பு என்று செய்த அவசரத்தில் மதுமிதா தனது மொபைலை கூட மறந்துவிட்டுக் கிளம்பினாள்.

“எப்போ பாரு அவசரம்! அப்படி என்ன சந்தோஷமான செய்தி? இப்பவாவது சொல்லு" என்றதும், கீதா புன்னகையோடு ஏதும் சொல்லாமல் அவளைப் பார்த்தாள்.

“ஏண்டி எங்கே போறோம்னாவது சொல்லேன்!"

“இன்னும் கொஞ்சம் நேரத்தில் உனக்கே தெரியும்" என்றவள் தனக்குள் சிரித்துக்கொள்வதைப் பார்த்து, “என்னடி! இன்னைக்கு ஒரு மார்க்கமாவே இருக்க. முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை வேற” என்றவுடன், கீதா வெட்கத்துடன் சிரித்தாள்.

“மது! எனக்குக் கல்யாணம் முடிவாயிடுச்சி” என்றதும், அதிர்ச்சியுடன் கீதாவைப் பார்த்தாள். சுரேஷின் முகம் அவள் நினைவில் வந்து சென்றது.

“கீதா உனக்குச் சம்மதமா?” என்றாள் உள்ளடைந்த குரலில்.

“என்னோட சம்மதம் இல்லாமலா? எங்கே போறோம்னு கேட்டயில்ல. அவரைப் பார்க்கத்தான்” என்றாள் வெட்கத்துடன்.

மதுவின் மனம், சுரேஷிற்காக இரக்கப்பட்டது. அதற்கு மேல் அவள் எதுவுமே பேசவில்லை. சற்று நேரத்தில் கார் ஓரிடத்தில் நிற்க, இருவரும் இறங்கினர்.

“எங்கே லேட் பண்ணிடுவீங்களோன்னு நினைச்சேன். இரு நான் கொடுக்கறேன்” என்றபடி அங்கே வந்த சுரேஷைப் பார்த்ததும் அவளது முகம் மலர்ந்து விகசித்தது.

"கொஞ்ச நேரத்துல என்னைக் கதிகலங்க வச்சிட்டியேடி!" என்றவள் சந்தோஷத்துடன் அவளை அணைத்துக்கொண்டாள்.

"நீ, ரொம்பச் சந்தோஷப்படுவேன்னு எனக்குத் தெரியும். அதான், கொஞ்சம் சஸ்பென்ஸா சொல்லலாம்னு இருந்தேன். ஒரு வேளை நீயே, கண்டுபிடிச்சிடுவேன்னும் நினைத்தேன். ஆனால், இந்த விஷயத்தில் நீ கொஞ்சம் ட்யூப் லைட்ன்னு ப்ருவ் பண்ணிட்டே" என்று சிரித்தாள் கீதா.

"இன்னைக்கு நீ என்ன சொன்னாலும், எனக்குக் கோபமே வராது. அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்" என்றவளின் கண்கள் கலங்கியன.

"என்னடீ! இப்படி எமோஷனல் ஆகற?" என்று ஆதூரத்துடன் கேட்டாள்.

“நினைச்ச வாழ்க்கை எல்லோருக்கும் கிடைச்சிடாது. உனக்குக் கிடைச்சிருக்கு. கடைசி வரைக்கும், நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

அவர்கள் இருவரது விழிகளும் ஈரமாக, “சாரி! என்னால உங்க மூட் ஸ்பாயில் ஆக வேணாம். நீங்க ரெண்டு பேரும் தனியா வந்து என்ஜாய் பண்றதை விட்டுட்டு, என்னை எதுக்குக் கூட்டுட்டு வரணும்?" என்றாள்.

“இன்னைக்கு நாங்க சேரக் காரணமே நீயும், சித்தார்த் அண்ணாவும் தான். நீ எங்களுக்காக மனசார வேண்டிக்கிட்ட. அவர் பெரியம்மா, பெரியப்பாகிட்டச் சொல்லி கீதா வீட்லயும், அம்மாகிட்டயும் பேசி வழிக்குக் கொண்டு வந்துட்டார்” என்றான்.

“ஓஹ்! இது விஷயமாதான் தீபா வீட்டுக்குப் போனீங்களா?”

“ஆமாம். அம்மாவை அங்கேயே விட்டுட்டு நேத்து ஈவ்னிங் நான் சென்னை வந்துட்டேன்” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சித்தார்த்தின் கார் அங்கே வந்தது.

“அதோ... அண்ணா வந்தாச்சு” என்றபடி சுரேஷ், சித்தார்த்தின் காரை நோக்கிச் சென்றான்.

மதுவும் கார் இருந்த திசையைப் பார்க்க, யாருடனோ மொபைலில் பேசியபடி சன்கிளாஸைக் கழற்றிக்கொண்டே இவர்களைப் பார்த்துச் சிரித்தான் சித்தார்த்.

மதுமிதாவிற்குத் தலையைச் சுற்றியது. தன்னையும் அறியாமல் இரண்டடி பின்னோக்கிச் சென்றாள்.

அவள் தடுமாறுவதைப் பார்த்த கீதா, “என்னடி! என்னாச்சு?” என்று அவளது கரத்தைப் பற்ற, “ஒண்ணுமில்ல. கொஞ்சம் தண்ணி” என்றதும், தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.

மதுமிதாவின் முகவாட்டம் அவனது புருவங்களை இடுங்கச் செய்தது.

அவர்களருகில் வந்தவன், “ஹாய் மது, ஹாய் கீதா, “என்றான்.

மதுவும் “ஹாய்” என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக்கொள்ள, கீதா மீண்டும் ஒரு நன்றியை அவனுக்குத் தெரிவித்தாள்.

நால்வரும் பேசியபடியே ஹோட்டலுக்குள் சென்றனர்.

“என்ன மது திடீர்ன்னு டல்லாகிட்ட?” என்று கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்றவள் தன்னை இயல்பாகக் காண்பித்துக் கொள்ளும்பொருட்டு, “அப்புறம் சுரேஷ், எப்போ கல்யாணம்?" என்றாள்.

“கல்யாணமா? எனக்கு ஒரு அண்ணன் இருக்கார். நினைவிருக்கா?" என்றான்.

"ஒஹ்! உனக்கு அண்ணன் இருக்கறது இப்போதான் நினைவுக்கே வந்ததா?" என்றாள் கிண்டலாக.

"அம்மா தாயே! என்னை விட்டுடு. இதுக்குத்தான் உன்கிட்ட நான் எந்தப் பிரச்சனையும் வச்சிக்கறது இல்லை" என்றான் பரிதாபமாக.

“பிழைச்சிப் போ!” என்றவள், “உங்க ரெண்டு பேர் வீட்டிலும் எப்படிச் சமாதானம் ஆனாங்கன்னு சொல்லவே இல்லையே."

“யாரோட பேச்சுக்கும் காது கொடுக்காத எங்க அப்பாவையே, பேசிப் பேசி சரிகட்டி இருக்கார் நம்ம எம்.டி” என்ற கீதா சித்தார்த்தைப் பார்த்துச் சிரித்தாள். தொடர்ந்து, “நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒருத்தர், நம்ம பொண்ணுக்காக இவ்வளவு யோசிக்கிறார். நாம ஏன் அவளுக்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துத் தரக்கூடாதுன்னு ரொம்பவே பீல் பண்ணினார்" என்றாள்.

“கீதா வீட்ல சித்தார்த் அண்ணான்னா, எங்க அம்மா, அண்ணாகிட்டப் பேசி சம்மதம் வாங்கினது பெரியம்மாவும், பெரியப்பாவும் தான்” என்ற சுரேஷ் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

"கடைசில என்னைத் தனியா கழட்டி விட்டுட்டீங்க. நீங்க மட்டுமே பேசி முடிச்சிட்டீங்க. சரி இந்தக் கல்யாணத்துக்கு கொஞ்சம் நாமளும் பேசி ஹெல்ப் பண்ண ஏதாவது கமிஷன் கிடைக்கும்னு பார்த்தேன். மொத்தமா அதை நீங்களே வாங்கிகிட்டீங்க" என்று சொல்லி சிரித்தாள்.

சித்தார்த் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தன் காதலை அவளிடம் எப்படிச் சொல்வது என்று அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அனைவரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர். " அடுத்து எங்கே போகலாம்? மாயாஜால் போகலாமா? இல்லை முட்டுகாடுப் போகலாமா?" என்று கேட்டான் சுரேஷ்.

“முதன்முதல்ல அவளை வெளியே கூட்டிட்டு வந்திருக்க. கோவிலுக்குக் கூட்டிட்டுப் போ. இங்கே திருவிடந்தை கோவில் பக்கம்தானே. அங்கே போகலாம்" என்றாள்.

“ஆரம்பிச்சிட்டியா நீ! சரியான சாமியார் அம்மா" என சுரேஷ் சலிப்புடன் சொல்ல, “திருவிடந்தை கோவில் திருமணஞ்சேரி போயிட்டு வருவதற்குச் சமம். அங்கே போக முடியாதவங்க, இங்கே போய் வேண்டிக்கிட்டா கல்யாணம் எந்தவிதமான தடையும் இல்லாமல் நடக்கும்ன்னு ஐதீகம்" என்றாள்.

“அடடே! கல்யாணம் தடை இல்லாமல் நடக்கணும்னா, அங்க போயிட்டு வரலாமா? இதை முதலிலேயே சொல்ல கூடாது. கண்டிப்பா அந்தக் கோவிலுக்குப் போகணும்” என்று சொன்னபடி சித்தார்த்தைப் பார்த்து சிரித்தான்.
சித்தார்த்தும் சிரித்துவிட்டுத் தன் காரை எடுக்கச் செல்ல, மதுமிதா சுரேஷின் காருக்குச் சென்றாள்.

“மது! நீ சித்தார்த் அண்ணன் கூட வாயேன். அவர் தனியாதானே வரார்" என்றான்.

“இல்லை சுரேஷ்! நான் உன்கூடவே வரேன்" என்று அவள் தயங்கினாள்.

“மது! நான் ஏன் சொல்றேன்னு புரிஞ்சிக்க” என்று அவளைக் கெஞ்சலாகப் பார்க்க,
“சரி சரி போ" என்றவள் சித்தார்த்தின் காரை நோக்கி நடந்தாள்.

சித்தார்த் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே மது வந்து அமர்ந்ததும், காரை எடுத்தான். இவர்கள் சென்று சேரவும், கோவிலைத் திறக்கவும் சரியாக இருந்தது. மெளனமாக நால்வரும் கோவிலைச் சுற்றி வந்தனர். மதுவின் மனம் சொல்லமுடியாத அளவுக்கு நிம்மதியாக இருந்தது.

காரில் போகும் போதும், வரும் போதும் இருவருமே ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

அங்கிருந்து நீலாங்கரையில் இருக்கும் ஜீவாவின் கெஸ்ட் ஹவுஸிற்கு அழைத்துச் சென்றான் சித்தார்த். சுற்றிலும் தோட்டமும், செடி கொடிகளும் நடுவில் அழகாக மூன்றடுக்கு சிறிய பங்களா ஒன்றும் இருந்தது.

அங்கே இருந்த கேர்டேக்கரிடம் சொல்லி மாலை காஃபிக்கு ஏற்பாடுச் செய்துவிட்டு வந்ததும் நால்வரும் பேசியபடி சிட்அவுட்டில் அமர்ந்து கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். காஃபி வந்ததும் பருகிவிட்டு கேர்டேக்கரிடம் எட்டு மணிக்கு வந்தால் போதும் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு கடற்கரைக்குச் சென்றனர்.

மதுவும், சித்தார்த்தும் மணலில் அமர்ந்திருக்க கீதாவும், சுரேஷும் அலையில் நின்றிருந்தனர். அலைகள் நிறையவே இருந்தது. அடுத்துஅடுத்து வந்த அலையில் சுரேஷ் கீழே விழ, அவன் கையைப் பிடித்திருந்த கீதாவும் அவன் மேலேயே விழுந்தாள்.

இந்தக் காட்சியைப் பார்த்தும் சித்தார்த் சிரித்துக்கொண்டே மதுவைப் பார்க்க மதுவோ கன்னம் சிவக்க, வேறுபுறம் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

"இங்கே இருக்கறது நாம ரெண்டு பேர். இதில் ஆளுக்கு ஒரு பக்கா வெறிச்சிட்டு இருந்தா எப்படி? கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பி என்கூடப் பேசலாமே" என்றான்.

“ரொம்பத் தேங்க்ஸ்!" என்றாள்.

“எதுக்கு? என்னோடு பேசச் சொன்னதுக்கா?" என்றான் வேண்டுமென்றே.

சிரித்தவள், “நீங்க ரெண்டு மனசை மட்டும் இல்ல, ரெண்டு குடும்பத்து நிம்மதி, சந்தோஷம் எல்லாத்தையும் திரும்ப கொடுத்திருக்கீங்க. நீங்க மட்டும் அவங்களுக்காக பேசாம இருந்திருந்தா, இந்தச் சந்தோஷத்தைப் பார்க்க முடியாமலே போயிருக்கும்” என்றாள்.

“அவங்க ரெண்டு பேரும் உனக்குப் ப்ரெண்ட்ஸ்னா, எனக்கு அவன் கூடப் பிறக்காத தம்பி!" என்றான்.

மது கண்களை விரித்து சித்தார்த்தைப் பார்த்தபடி அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க. அவள் கண்களின் பார்வை சித்தார்த்தை மெல்ல தன் வசம் இழக்க வைத்தது.

அவன் அவளிடம் பேச முற்படுகையில், கடலில் ஆடிக்கொண்டிருந்த இருவரும் அவர்களை நோக்கி வந்தனர்.

கீதா மதுவின் கைகளை பிடித்து "எழுந்து வா மது! கொஞ்சநேரம் அலையில் நின்னுட்டுப் போகலாம், வாடி" என வற்புறுத்த அரைமனதாக எழுந்து சென்றாள்.

“ஹலோ! உங்களுக்குத் தனியா சொல்லணுமா? அதான், உங்க ஹீரோயின்னே எழுந்து போய்ட்டாங்க இல்ல. அப்புறம், ஹீரோ மட்டும் இங்கே உட்கார்ந்து என்ன செய்யப் போறீங்க? எழுந்து வாங்க” என்று சித்தார்த்தையும் அழைத்துச் சென்றான் சுரேஷ்.

மது பெரிய அலை வரும் போது பின்னால் செல்வதும், சிறிய அலையில் முன்னால் வந்து காலை நனைப்பதுமாக இருக்க, திடீரென அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பெரிய அலை ஒன்று வந்து ஒரு சுழற்று சுழற்றி மீண்டும் உள்ளே சென்றது.

அலையின் வேகத்தில் மதுவிற்குக் கண்களை இருட்டிக்கொண்டு வர, தலையைப் பிடித்துக் கொண்டு தள்ளாடினாள். சுதாரித்து நின்ற கீதா சிரித்துக்கொண்டே திரும்ப, தள்ளாடிய தோழியைப் பிடித்துக் கொண்டாள்.

சித்தார்த்தும், சுரேஷும் அருகில் வேகமாய் வர அதற்குள் சமாளித்த மதுமிதா, “ஒண்ணுமில்ல. ப்ளீஸ்! நான் கெஸ்ட் ஹவுஸ் போறேன். நீங்க இருங்க” என்று சொல்லிவிட்டு நகர, “மது ஆர் யூ ஓகே? என்றான் சித்தார்த் கவலையுடன்.

அவளும், “ம்ம், ஓகே” என்று கூறிவிட்டு, தானும் வருவதாகச் சொன்ன கீதாவை மறுத்து விட்டு கெஸ்ட் ஹவுஸை நோக்கி நடந்தாள்.

அவள் சென்ற சில நிமிடங்களில், சித்தார்த்தும் கெஸ்ட் ஹவுஸை நோக்கி நடந்தான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
450
63
அத்தியாயம் - 19​


கெஸ்ட் ஹவுஸின் உள்ளே நுழைந்தவன், அவள் அங்கே இல்லாததால், ‘ஒருவேளை அறைக்குள் இருக்கிறாளோ?’ என்று எண்ணிக் கதவைத் தட்டினான். ஆனால், கதவு தாழிடப்படாமல் இருந்ததால், பின்னோக்கி நகர்ந்தது.

அதே நேரம், தோட்டத்தில் குயில் கூவும் சத்தமும், பின்னாலேயே மதுவும் கூக்கூ என்று குயிலுக்கு இணையாகக் குரல் எழுப்பினாள். மீண்டும் மீண்டும் இது தொடர ஜன்னலருகில் நின்று பார்த்தவன் சிரித்துக்கொண்டே, அறைக்குச் சென்றான்.

சற்று நேரத்திற்கெல்லாம் தன்னைச் சற்று சீர்படுத்திக்கொண்டு, அவனுக்கு மிகவும் பிடித்த பழுப்பும் வெள்ளையும் கலந்த டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு வெளியே வந்தான். மீண்டும் ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தான். மரக்கிளை ஒன்றின் மீது இரு கரங்களையும் கோர்த்து முகத்தைத் தாங்கியபடி மோகனப் புன்னகையுடன், கண்களை மூடி நின்றிருந்தாள்.

பரவசத்தில் மிளிர்ந்த முகத்தைப் பார்த்தவன், காதலைக் கண்களில் தேக்கியபடி அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக முன்னேறினான்.

அந்தி மயங்கும் நேரத்தில் இனிய குயிலோசையும், கடல் அலைகளின் ஆர்பரிப்புச் சத்தமுமே அங்கே நிறைந்திருக்க, நிலாப் பெண் வானில் தனது உலாவைத் துவங்கினாள். ஆசையுடன் உரசிச் செல்லும் இளந்தென்றல் காற்றும், அதில் மிதந்து வந்த பூக்களின் வாசத்தையும், இனிமையான சூழலையும், ஏகாந்தத்தையும் அனுபவித்தபடி தன்னையே மறந்த மோன நிலையில், பாட ஆரம்பித்தாள்.

"எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னைக் கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நான் இருந்தால்
தினம் உன்னருகில் நான் இருந்தால்.....

மெய் மறந்து பாடிக் கொண்டிருந்தவள் மெல்ல சிப்பி போன்ற தன் இமைகளைத் திறந்தாள்.

எதிரே இரண்டு கைகளையும் பேண்ட் பாகெட்டில் விட்டுக்கொண்டு தலையை ஒருபக்கமாகச் சாய்த்து அவளைப் பார்த்துச் சிரித்தபடி நின்றிருந்தவனைக் கண்டதும், அவளுடைய விழிகளில் தோன்றிய ஆச்சரியமும், காதலும், கனிவும் சேர்ந்து முகம் விகசிக்க, வெட்கத்துடன் சிரித்தாள்.

இதுவரை அவளிடம் காணாத ஒரு பார்வையும், புன்னகையும், கண்களில் பொங்கிய காதலையும் கண்டவன் தன்னிலை மறந்தான்.

"அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க என்னாலே முடியவில்லை.
இங்கே எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒருபோதும் அலுக்கவில்லை” என்று அவள் நிறுத்திய பாடலின் அடுத்த வரியைத் தொடர்ந்து பாடியபடி அவளை நெருங்கினான்.

அவன் நெருங்கி வர, அவள் வெட்கத்துடன் பின்னால் விலகியவள்,
"புது மஞ்சத்தாலி மின்ன, மெட்டி கேலி பண்ண,
பக்கத்தில் நான் கிடப்பேன்" என்று பாடியவள், வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள்.

"ஹனி!" என்று தாபத்துடன் அவளது தோளைத் தொட, அதற்காகவே காத்திருந்தது போல அவனது நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

இதைச் சற்றும் எதிர்பாராத சித்தார்த்திற்கு இன்ப அதிர்ச்சி. "ஹனி!" என நெகிழ்ந்து அழைக்க, "ம்ம்..." என்றாள்.

“ஐ லவ் யூ மது!” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.

இருவரது இதயத் துடிப்பும் ஒன்றோடொன்று தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டன. அவள் தலையில் கன்னத்தைப் பதித்துக்கொண்டவன், “மது! நிமிர்ந்து என்னைப் பாரேன்” என்றதும் மேலும் அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

சிரித்தவன், “ஹேய்! என்னைப் பார்த்து ஐ லவ் யூ சித்தார்த்ன்னு உன் வாயால் சொல்லுடா!" என்றவனது குரல் தாபத்தில் இழைந்தது.

அவ்வளவு நேரம் அவன் அணைப்பில் தன்னை மறந்து நின்றிருந்தவளுக்கு, அவன் சொன்ன வார்த்தைகள் நினைவுலகுக்கு இழுத்து வந்தது. அவசரமாகக் கண்களைத் திறந்தவள், தன் நிலையை உணர்ந்து வேகமாக விலகினாள்.

அவனுக்கு முதுகைக் காட்டியபடி நின்றிருந்தவளின் மனம் பதறியது. ‘என்ன காரியம் செய்துவிட்டேன்! இப்படி என்னையே மறந்து நான் செய்திருக்கும் செயல், இப்போது சித்தார்த்தையும் தானே பாதிக்கும். இனி, எந்த முகத்தோடு அவரைப் பார்ப்பேன்’ என தனக்குள் மருகிக் கொண்டிருந்தாள்.

மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த சித்தார்த்தோ, அவளது விலகலில் திணறினாலும், ‘ஒருவேளை வெட்கத்தால் முகம் பார்க்க மறுக்கிறாளோ!’ என்று எண்ணியவன், பின்னாலிருந்து அவளை அணைத்தான்.

“என்னடா! வெட்கமா?" என்றபடி அவள் கழுத்தில் முகம் புதைக்க, பதறியவள் அவனது கைகளை முழுவேகத்துடன் விலக்கிவிட்டு ஒட முயன்றாள்.

அவளது செயல் அவனுக்குக் குழப்பத்திற்கு மேல் குழப்பத்தை உண்டாக்க, இரண்டே எட்டில் அவளது கையைப் பற்றி நிறுத்தினான்.

"என்ன ஆச்சு உனக்கு?" என்று சொல்லியபடி தன்பக்கமாக அவளைத் திருப்பியவன் அவளது கண்களில் கலக்கத்தைக் காணவும், “உன்னை நான் ஏமாத்திடுவேன்னு பயப்படறியா? நாளைக்கே நம்ம கல்யாணத்திற்கு..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கைகளை உதறிக்கொண்டு பின்னால் சென்றபடியே, “இல்ல, இல்ல, இல்ல... நீங்க நினைக்கின்ற எதுவுமே நடக்காது. கடவுளே! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிற? நான் ஏன் இங்கே வரணும்? ஏன் என்னையும் மீறி இப்படியெல்லாம் நடக்கணும்?” எனப் புலம்பினாள்.

வேகமாக வந்தவன், அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, "ஏன் மது இப்படியெல்லாம் பேசற? உனக்கு என்ன பிரச்சனை?" என்றவனது கையை ஆவேசத்துடன் தட்டிவிட்டாள்.

“இங்க நடந்த எதுவுமே நிஜமில்ல. நான் உங்களைக் காதலிக்கல” என்று கத்தியவள் விறுவிறுவென அங்கிருந்து நடந்தாள்.

அவளது மாற்றத்திற்கான காரணமும் புரியாமல், அவள் பேசிச் சென்ற வார்த்தைகளின் வீரியத்திலும் அவளைத் தடுக்கக்கூடத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தான்.

சிரித்தபடி உள்ளே வந்து கொண்டிருந்த சுரேஷும், கீதாவும், அவளது ஆவேசமான குரலைக் கேட்டு தோட்டத்தை நோக்கி ஓடிவந்தனர். மது உள்ளே வந்த வேகத்தைப் பார்த்த இருவருக்கும் அவளது நிலை சொல்லாமலே புரிந்தது.

“மது என்ன ஆச்சு? எதுக்கு இப்படி ஆவேசமா வர? என்றான் பதட்டத்துடன்.

“சுரேஷ்! ப்ளீச் சீக்கிரமா என்னை இங்கேயிருந்து கூட்டிகிட்டுப் போ. இல்லனா, நான் செத்துடுவேன்" என்றாள் அழுகையுடன்.

“மது ஏன் இப்படிப் பேசற? உனக்கு இப்போ யார் மேல கோபம்?" என்றபடி அவளை அணைத்துப் பிடித்தாள்.

"என் மேலேயே தான். மனசை என்னோட கட்டுப்பாட்டில் வச்சிக்கத் தெரியாத ஜென்மம்னு எனக்கே என் மேல கோபம்” என்று கதறியவள், “சுரேஷ் தயவுசெய்து என்னை இங்கே இருந்து கூட்டிக்கிட்டுப் போ. இல்லை, நானே போறேன்" எனப் பேசிக்கொண்டே, விறுவிறுவென கேட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

சுரேஷ் கீதாவை அவளிடம் போகச் சொல்லிவிட்டு, இறுகிய முகத்துடன் நின்றிருந்த சித்தார்த்திடம், "அண்ணா! ரொம்பச் சாரி. நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க. எதுவாக இருந்தாலும் நாளைக்குப் பேசலாம் ப்ளீஸ்!" என்று சொல்லிவிட்டு தனது காரை நோக்கி ஓடினான்.

தான் செய்த செயலை எண்ணி மருகியபடி கணகளை மூடி அமர்ந்திருந்தவளைப் பார்த்த கீதாவுக்கு, கண்களில் நீர் கோர்த்தது. அவள் உள்ளுக்குள் எவ்வளவு காயப்பட்டிருக்கிறாள் என்பதை அவளது முகத்தில் தெரிந்த வேதனையே தெளிவாகச் சொல்ல, கீதாவின் மனம் தவித்தது.

‘கடவுளே! இவள்மீது, உனக்கு என்ன இவ்வளவு வெறுப்பு? பூ போல இருந்தவளை, ஒரு சூறாவளியில் சிக்க வைத்துச் சிதைத்தது போதாதா? இன்னும் அவளைப் பாடாய் படுத்தணுமா?’ என்று மெளனமாக தோழிக்காக அழுதாள்.

சுரேஷ், ஆறுதலுடன் அவளது கரத்தைப் பற்றினான். ஆனால், அவளாது அழுகை அதிகமானதே தவிர, சற்றும் குறையவில்லை.

மதுமிதா கண்களை மூடியபடியே, "சுரேஷ்! காரை மெயின்ரோட்டிலேயே நிறுத்திக்க” என்றாள்.

“இல்லை மது! உன்னை இந்த நிலையில் தனியா விடமாட்டேன்” என்றவனை வேகமாக இடைமறித்தவள், “நீ காரை மெயின்ரோட்டிலேயே நிறுத்தப் போறியா இல்லையா?" என்று கத்தினாள்.

வேறு வழியில்லாமல், அவள் சொன்னபடி நிறுத்தினான். இறங்கியவள் வீட்டிற்குச் செல்லாமல், வழியிலிருந்த அம்மன் கோவிலின் உள்ளே சென்று அமர்ந்தாள். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. நடந்தவையே அவளது நினைவை ஆக்ரமித்திருக்க, பொங்கிவந்த அழுகை அருவியென வழிந்தது.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ! கோவிலை மூடும் நேரம் என்று ஒருவர் வந்து சொன்னதும், எழுந்து அங்கிருந்த குழாயில் முகத்தைக் கழுவிக்கொண்டு, வீட்டை நோக்கி நடந்தாள். தன் பின்னாலேயே வரும் சுரேஷைகூட அவள் கவனிக்கவில்லை.

தான் செல்லும்போது பூட்டிவிட்டுச் சென்ற கேட், பூட்டாமல் இருப்பதை கூட அவளுக்கு உணரமுடியாத நிலையிலிருந்தாள்.

சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த வித்யா, “இந்த வீட்லயிருக்கவங்க தொல்லை இல்லாம, மூணு நாள் நல்லா என்ஜாய் பண்ணியா?” என வித்யா பேசிக்கொண்டிருக்க, அவள் மலங்க மலங்க விழித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி இப்படிக் கண்ணை உருட்டி உருட்டிப் பார்க்குற?" என்று கேட்டுக்கொண்டிருக்க, "மதும்மா என்னடா இது மூணே நாளில் ஆளே என்னவோ போலிருக்க" என்று விமலா கேட்டதும் அவரைக் கட்டிக்கொண்டாள்.

“அம்மா…” என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. பேசினால் எங்கே அழுது விடுவோமோ என்ற அச்சத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

பின்னாலேயே வந்த ராஜியும், “என்னமா! ஏன் டல்லா இருக்கே? கண்ணெல்லாம் சிவந்திருக்கு” என்றாவர் நெற்றியைத் தொட்டுப் பார்த்தார்.

இங்கே நின்றிருந்தால், என்னால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது’ என நினைத்துக்கொண்டே, “நான் ரூமுக்குப் போறேன். என்னவோ, ஒரு மாதிரி இருக்கு” என்று அவர்களின் பதிலுக்குக்கூடக் காத்திராமல் படியேறினாள்.

சாப்டுட்டுப் போய்ப் படுத்துக்க என்ற ராஜியின் குரலுக்குத் திரும்பிப் பார்க்காமல் “நான் சாப்பிட்டுட்டேன்” என்று சொல்லிக்கொண்டே, அறைக்குச் சென்று கதவை மூடினாள்.

பெண்கள் மூவரும் அவளது நடவடிக்கை புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னம்மா அவ இன்னைக்குச் ஆளே சரியில்ல. வந்ததும் எல்லோரையும் கேள்வி மேல கேள்வி கேட்டுத் துளைப்பா. இன்னைக்கு நாம கேட்கறதுக்குக் கூடச் சரியா பதில் சொல்லமாட்டேன்றா. எனக்கென்னவோ பயமாயிருக்கு. முதல்ல அவங்க அண்ணனுக்குப் போன் செய்து வரச்சொல்றேன்” என்றாள் பரிதவிப்புடன்.

“முதல்ல கூப்பிடு. அவனே வந்து கேட்கட்டும்” என்றார் விமலா.

குளியலறையில் ஷவரைத் திறந்து நின்றவளின் உடலில் தண்ணீர் படப் பட, தான் செய்த செயலை நினைத்து அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அணையை உடைத்த வெள்ளம் போல பெருகி வர குமுறிக் குமுறி அழத் துவங்கினாள்.

உடல் லேசாக நடுங்க தொடங்கிய பின்னரே ஷவரை நிறுத்திவிட்டு, உடையைக் கூட மாற்றத் தோன்றாமல், ஊஞ்சலில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

சித்தார்த்தின் உருவம் மீண்டும் மீண்டும் மூடிய விழித்திரைகளுக்குப் பின்னால் வந்து நிற்க, “என்னை மன்னிச்சிடுங்க சித்தார்த். நான் தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்” என்று அரற்றினாள்.

கணவனுக்குப் போன் செய்து களைத்துப் போனாள் வித்யா. “லைன் கிடைக்கவே மாட்டேன்னுது” என்று எரிச்சலுடன் சொன்னாள்.

“நம்ம வீட்டு லேண்ட் லைனுக்குப் போடும்மா!” என்றார் விமலா.

“நினைவே வரலை” என்றவள் முயன்றாள். அதுவும் எடுக்கப்படாமல் போக, “அங்கேயிருந்து கிளம்பி இருப்பாங்களா இருக்கும். வந்திடுவாங்க” என்றார் ராஜி.

இரவு பத்து மணிக்கு மேல், ஆண்கள் நால்வரும் வீட்டிற்கு வந்து சேர, “அத்தான்! நான் எவ்வளவு நேரம் போன் ட்ரை பண்ணேன். உங்களுக்கு லைனே போகல?" என்றாள்.

“என்ன அவ்வளவு அவசரம்? சரி மது வந்தாச்சா? நான் போய் பார்த்துட்டு வரேன்" என்ற ராஜேஷை, “அவ படுக்கபோறேன்னு போய்ட்டா. நீ முதலில் சாப்டுட்டுப் போய் உன் தங்கையைப் பாரு” என்றபடி உணவை எடுத்து வைத்தார் ராஜி.

“சரி, நாங்க போய் குளித்துவிட்டு வந்துவிடுகிறோம்” என தீபக்கும், ராஜேஷும் சென்றுவிட, பெரியவர்கள் ஆண்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

“ராஜீ! இந்தப் பாலையாவது அவளுக்குக் கொடுத்துட்டு வரேன்” என்ற விமலா, அவளது அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே பார்த்தார். அங்கே அவள் இல்லை.

‘எங்கே போய்ட்டா? பால்கனி கதவு திறந்திருக்கு. ஊஞ்சலில் உட்கார்ந்திருக்காளோ?’ என்று தனக்குள் பேசிக்கொண்டே ஊஞ்சலின் அருகே செல்ல, அங்கே அவள் அனத்திக்கொண்டு படுத்திருந்தாள்.

அதைக் கண்ட விமலாவின் மனம் பதறியது. “மதும்மா! மது, என்னடா ஆச்சு? உடம்பெல்லாம் தெப்பலா நனைந்திருக்கு, ஈரத் துணியைக் கூட மாத்தாம ஏன் படுத்திருக்க?” என்று அவளது இரு கன்னங்களையும் பற்றியவர், “ஐயோ! உடம்பு நெருப்பா கொதிக்குதே” என்று பரிதவித்துப் போனார்.

வேகமாக அவரது கையைத் தள்ளிவிட்டவள், “நான் தப்பு பண்ணிட்டேன்! தப்பு பண்ணிட்டேன்” என்று மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளையே புலம்பிக் கொண்டிருந்தாள்.

செய்வதறியாமல் சற்று நேரம் நின்றிருந்த விமலா, “ராஜீ... ராஜீ கொஞ்சம் இங்கே வாயேன்” என்று சப்தமாக அழைக்க, என்னவோ ஏதோவென ஓட்டமும் நடையுமாக அனைவரும் மேலே வர, குளிக்க சென்ற ராஜேஷும், தீபக்கும் தங்கள் அறையிலிருந்து ஓடிவந்தனர்.

“அக்கா! என்ன ஆச்சு?” என்ற ராஜியிடம், “நம்ம மது...” என்ற விமலாவால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“மதுவுக்கு என்ன?” என்று கேட்டுக்கொண்டே அவளருகில் ஓடிய ராஜேஷ், “மது... மது... இங்கே பாருடா” என்று அவளது கன்னத்தைத் தட்ட, அச்சத்துடன் அவனது கைகளைத் தள்ளிவிட்டாள்.

“மதும்மா... இங்கே பாருடா! அண்ணன்டா...” என்ற ராஜேஷின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

“ண்..ணா! அண்..ணா! நான்...” என்ற மதுவை, “சொல்லுமா! என்னடா ஆச்சு உனக்கு?” என்றவனது கரங்கள் நடுங்கின.

அவளுக்கு நடந்த விபத்திலிருந்து மீண்டு வரவே, அவளுக்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆனது. உடன்பிறந்தவளின் அல்லலையும், தவிப்பையும் காணும் தைரியம் இல்லாமல் ஒடுங்கி நின்றவன் அவன். இப்போது, காரணமே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.

அலைப்புறுதலுடன் கண்களைத் திறக்காமல், “நான் தப்பு பண்ணிட்டேண்ணா!” என்றவளது குரல் கேவலுடன் வெளிவர, எதுவும் புரியாமல் தடுமாறினான்.

“ராஜேஷ்! அப்புறமா விசாரிச்சிக்கலாம். முதல்ல, அவளை உள்ளே தூக்கிட்டு வா” என்றான் தீபக்.

“வந்ததிலிருந்தே, அவள் ஆளே சரியில்லை? வீட்டுக்கு வந்தவ யாரிடமும் நின்னுக் கூடப் பேசல” கவலையுடன் சொன்னாள் வித்யா.

“கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு. இதை ஏன் முதலிலேயே சொல்லல? வித்தியாசமா ஏதாவது தெரிஞ்சா அதை என்னன்னு பார்க்க மாட்டியா? ஆளே சரியில்லன்னு தெரியுது. அப்புறம் அவளைத் தனியா ஏன் விட்ட? படிச்சி என்ன பிரயோஜனம்?” என்று தங்கையிடன் கத்தினான் தீபக்.

“அப்புறம் பேசிக்கலாம் தீபக். நீங்க டாக்டருக்குக் கால் பண்ணுங்க” என்றார் ராஜி.

ஆண்கள் அனைவரும் வெளியே வர, அவளது ஈரத் துணியை மாற்றி, தலையைத் துவட்டி விட்டனர். சில்லிட்டிருந்த கால்களில் நீலகிரி தைலத்தைப் பரபரவென தேய்த்துவிட்டாள் வித்யா.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு, “ஏதோ அதிர்ச்சியில் இருக்காங்க. இன்ஜெக்‌ஷன் போட்றேன். அவசரம்னா, கால் பண்ணுங்க. பயப்படவேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவரை வழியனுப்பி விட்டு வந்த தீபக், “கீதா தானே, இவளைக் கூட்டிட்டுப் போனா. அவளுக்குக் கால் பண்ணு” என்றான் தங்கையிடம்.

அவ்வளவு நேரமும், ‘மது எப்படி இருக்கிறாளோ?’ என்ற பதட்டத்தில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த கீதாவிற்கு, வித்யாவின் அழைப்பு பயத்தைக் கொடுத்தது.
“வித்யா!” என்றாள் தயக்கத்துடன்.

தங்கையிடமிருந்து போனை வாங்கிக் கொண்டு தனியாகச் சென்ற தீபக், "கீதா! மதுவை எங்கே கூட்டிட்டுப் போன? உன்னோடு யார் யார் வந்தது?" என்றான் நிதானமாக.

பயத்துடன் இருந்தவளுக்கு, அவனது நிதானமான விசாரிப்பு சற்று ஆசுவாசத்தைக் கொடுக்க, எங்கே, எதற்காக, யாருடன் சென்றனர் என்பது வரை சொன்னாள்.

“சித்தார்த்தா?” என்றான் கேள்வியுடன்.

“ஆமாம்ண்ணா!” என்றவள் தான் பார்த்தவற்றை மட்டும் அவனிடம் சொன்னாள்.

சித்தார்த் என்றதுமே, தீபக் ஓரளவிற்கு விஷயத்தை யூகித்து விட்டான். அவனது மௌனம் அவளைக் கலவரப்படுத்த, “அண்ணா! மது…" என்று இழுத்தாள்.

தீபக் நடந்தவற்றைச் சொல்ல, கீதாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“சாரிண்ணா! நாங்க இதை எதிர்பார்க்கவே இல்லை” என்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “நான் நாளைக்கு வரேன்” என்றாள்.

“இல்லம்மா! ரெண்டு நாள் ஆகட்டும். அவள் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு எங்களுக்கே புரியல” என்றவன் போனை வைத்தான்.

பேசிவிட்டு வந்த தீபக்கை அனைவரும் சூழ்ந்து கொள்ள, மெள்ள விவரத்தைச் சொன்னான். யாருமே இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை என்பது, அவர்களின் முக பாவத்திலேயே புரிந்தது. விமலா அழுதுகொண்டே, உறங்கிக் கொண்டிருந்த மதுவின் அருகில் சென்று அமர்ந்தார்.

மயக்க நிலையிலும், அவளது உடல் அவ்வப்போது நடுங்கிக் கொண்டிருக்க, அவளது தலையை வருடிக் கொடுத்தார். யாராலும் எதையும் பேசமுடியவில்லை. ராஜேஷ் தலையைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
450
63
அத்தியாயம் - 20

ஒரே நேரத்தில் எல்லாமாகவும்,
ஏதுமற்றதாகவும், ஏதோ ஒன்றாகவும்
இருப்பதற்கு பெயர் தான் காதல்..

சித்தார்த்தின் உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க இயலாவண்ணம் குழப்பத்திலும், ஏமாற்றத்திலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றாமல் அமர்ந்திருந்தான். வாழ்க்கையில் முதன்முறையாக, தோற்றுப் போன உணர்வு. மனம் முழுதும் புயலும், சூறாவளியுமாக சுழன்று அடித்துக்கொண்டிருந்தது.

‘அவள், என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், என் காதலை ஏற்றுக்கொண்ட சில நொடிகளிலேயே, நிராகரிக்க என்ன காரணம்?’ தன்னுடைய காதல் நிராகரிக்கப்பட்டது என்பதைவிட, அது நிராகரிக்கப்பட்ட விதம் அவனை இம்சித்தது.

‘ஒருத்தியால் இரண்டே நிமிடங்களில், நடந்தவை அனைத்தும் உண்மையல்ல என்று சொல்ல இயலுமா? என்னவாயிற்று அவளுக்கு. மனத்திற்குள் தன் மீதிருக்கும் காதலை ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு, அவளைத் தடுப்பது எது? காதலில் கிறங்கி நின்ற விழிகள் பொய்யா? அன்றி, வெளிப்பட்ட நேசத்தை இல்லையென்று மறுப்பது நிஜமா?

எது உண்மை? என்று புரியாமல் ஒருவித கையாலாகாதனத்துடன் அமர்ந்திருந்தவன், கதவைத் திறக்கும் சப்தம்கூட உணர முடியாத நிலையிலிருந்தான்.

மதுமிதாவை கோவிலருகில் இறக்கிவிட்ட சுரேஷ் உடனே, தனது தமையனுக்குப் போன் செய்து அனைத்தையும் சொல்ல, ரமேஷ் அதிர்ந்து போனான். சித்தார்த் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறான் என்று புரியாமல், ஜீவாவையும் அழைத்துக்கொண்டு அங்கே வந்துவிட்டான்.

இறுக பிணைத்திருந்த கரத்தில் முகத்தைத் தாங்கியபடி அவன் அமர்ந்திருந்த தோற்றம், நண்பர்கள் இருவருக்கும் பெரும் வேதனையைக் கொடுத்தது.

அவனது தோளைத் தொட்டு, “சித்தார்த்!" என்று அழைத்தான் ஜீவா.

கணகளை இறுக மூடி தலை கவிழ்ந்தவனைப் பார்க்கவே அவர்களுக்குக் கொடுமையாக இருந்தது. அவனை எப்படித் தேற்றுவது எனப் புரியாமல் தவித்தனர்.
இத்தனை ஆண்டுகளில் அவனை இப்படி ஒரு சூழ்நிலையில் கண்டிராத ஜீவாவிற்கு, தன் நண்பனின் மனத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டாளே!’ என்று மதுமிதாவின் மீது ஆத்திரமாக வந்தது.

“சித்தார்த்! நீ எதுக்குடா இப்படி எல்லாமே முடிஞ்சி போய்ட்டது போல உட்கார்ந்திருக்க. எழுந்திரு. உன்னை மாதிரி ஒருத்தனை உதறிட்டுப் போனவ தான் கவலைப்படணும். உனக்கென்ன? எங்களால உன்னை இப்படிப் பார்க்கமுடியலடா!” என்று வேதனையுடன் பேசினான் ஜீவா.

அவர்களது பேச்சில் கலந்து கொள்ளாமல், ரமேஷ் சற்றுத் தள்ளி நின்றிருந்தான்.

சித்தார்த் தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு, "எல்லாமே முடிஞ்சு போச்சுடா" என்றவனின் முகம் சொல்ல முடியாத வேதனையைச் சுமந்திருந்தது.

மெல்ல அவனருகில் வந்த ரமேஷ், “சித்தார்த்! அவசரப்பட்டு எதுவும் பேசாதே. நான் மதுகிட்ட..." என்றவனை உறுத்து விழித்தான்.

“என்ன? காதலுக்குத் தூது போகப் போறியா? முட்டாளா நீ! காதல்ங்கறது கம்பல்ஷன்ல வர்றது இல்ல. அது, இயல்பா ஒருத்தரைப் பார்த்தும் வரணும். எங்க ரெண்டு பேருக்குமே அந்த எண்ணம் மனசு முழுக்க இருக்கு. ஆனா, அவள் ஏன் என்னை நிராகரிச்சிட்டுப் போனா? எதுக்காக தன்னோட மனசை மறைக்கணும்? அதுக்கு அவசியம் என்ன?” என்றான் கோபத்துடன்.

தன்னுடைய நண்பனின் உணர்வுகளை புரிந்துகொண்ட ஜீவா, “அவனை ஏன்டா கேட்கற? அருமை தங்கச்சிக்குத் தான், அவன் எப்பவும் சிபாரிசு பண்ணுவான்” என்றான் கோபமாக.

“ஜீவா விஷயம் தெரியாம மதுமேல ஆத்திரப்படாதே. அவள் மறுத்ததுக்கான காரணம் என்னன்னு, எனக்குத் தெரியும்” என்றான் தயக்கத்துடன்.

“என்னடா! புதுசா ஏதாவது கதை சொல்லப்போறியா? சொல்லு சொல்லு. அதையும் கேட்டுக்கறோம்” என்று ஜீவா கிண்டலாகச் சொன்னான்.

“மதுவுக்கு...” என்று ரமேஷ் ஆரம்பிக்க, “ரமேஷ்!” என்று இடைமறித்தான் சித்தார்த்.

அவன் நண்பனையே பார்க்க, “பாதிக்கப்பட்டவன் நான். அதுக்குக் காரணம் மது. இனி, அவளோட மறுப்புக்குக் காரணம் எதுவாக இருந்தாலும், அது அவள் மூலமாகத் தான் எனக்குத் தெரியணும். யாருடைய சமாதானத்தையும் கேட்கும் நிலையில் இல்லை. எனக்கு அவள் பதில் சொல்லியே ஆகணும்” என்றான் சீறலாக.

ரமேஷ் செய்வதறியாமல் தலையைக் கோதிக்கொண்டான். எழுந்த சித்தார்த் தன்னைச் சீர்படுத்திக்கொண்டு கிளம்பினான். அவனது வேகம் ரமேஷிற்கு பயத்தைக் கொடுத்தது.

“சித்தார்த்! எங்கே கிளம்பிட்ட?” என்றான் நெடுடலுடன்.

“ம், உன் தங்கச்சியைப் பார்க்கத்தான்” என்றவன், வாசலை நோக்கி நடந்தான்.

“சித்தார்த்! ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளு. இந்த ஒரு முறை... உன்னைக் கெஞ்சிக் கேட்டுகறேன். ப்ளீஸ்டா!” என்று இறைஞ்சும் குரலில் சொல்ல, “ரமேஷ்!” என்ற சித்தார்த்தின் கரத்தைப் பிடித்துக் கொண்டான்.

“உன்னால, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குதுன்னா... அதுக்காகச் சந்தோஷப்படுறவங்கள்ல நானும் ஒருத்தன். எல்லாத்துக்கும் நேரம் காலம் இருக்கு சித்தார்த்! இந்தச் சூழ்நிலைல நீ எது பேசினாலும், பிரச்சனை பெரிதாகும். இந்த இராத்திரி நேரத்துல அவங்க வீட்ல போய் என்ன பேசுவ? ப்ளீஸ் கொஞ்சம் யோசி. நேரம் வரட்டும் நானே மதுகிட்டப் பேச ஏற்பாடு செய்றேன்” என்றவனை நம்பாதபாவனையுடன் பார்த்தான் சித்தார்த்.

“எனக்காடா ப்ளீஸ்!” என்றான் கெஞ்சலாக.

“அவன் சொல்றதும் சரிதான். ரெண்டு நாள் விட்டுப்பிடி” என்றான் ஜீவா.

யோசனையுடன் தலையைக் கோதிக்கொண்டவன், சாவியை டீபாயின் மேல் போட்டுவிட்டு சோஃபாவில் அமர்ந்தான்.

“இன்னைக்கு இங்கேயே தங்கிடு சித்தார்த். இந்த நிலைல நீ வீட்டுக்குப் போக வேண்டாம். அம்மாவுக்குப் பதில் சொல்ல முடியாது" என்று ஜீவா சொல்ல, மறுத்தவனை இருவரும் பேசி வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தனர்.

ஜீவா சித்தார்த்துடன் ஹாலில் அமர்ந்திருக்க, ரமேஷின் கைப்பேசி அழைத்தது. சுரேஷ் என்று தெரிய வீட்டிற்கு வெளியே வந்தவன், “சொல்லுடா!” என்றான் மெதுவாக.

கீதா தன்னிடம் சொன்ன அனைத்தையும் கேட்டவனுக்குப் பிரச்சனையின் வீரியம் புரிய, கலக்கமாக இருந்தது.

“மது! இப்போ எப்படி இருக்கா?” என்றான்.

“தெரியலண்ணா! நான் இப்படியாகும்ன்னு நினைக்கவே இல்ல. தப்பெல்லாம் என் மேலத்தான். அவளைக் கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதுண்ணா!” என்றான் வருத்தத்துடன்.

“சரி விடுடா! நீ என்ன இப்படியெல்லாம் ஆகும்ன்னு நினைச்சியா? நானும், சித்தார்த்தை இப்போதைக்குச் சமாதானப்படுத்தி வச்சிருக்கேன். காலைல என்ன நடக்கும்ன்னு புரியாம முழிச்சிட்டு இருக்கேன். இதுக்கு மேல அவனைச் சமாளிக்கிறதும் கஷ்டம்” என்ற அண்ணனின் தர்மசங்கடமான நிலை, அவனுக்குமே புரிந்தது.

ஒரு பக்கம், உயிர் நண்பன். மறுபக்கம், தங்கையின் ஸ்தானத்தில் ஒருத்தி. இதை எப்படிச் சமாளிப்பது என்று சுரேஷிற்கு மண்டையைக் குடைந்தது.

“சுரேஷ்! நான் நைட் இங்கேயே தங்கிடுவேன். நீ தூங்கு. எதையும் குழப்பிக்காதே. நடப்பது நடந்தே ஆகும்” என்றவன் போனை அணைத்தான்.

போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு திரும்பியவன், அங்கே நின்றிருந்த சித்தார்த்தை சங்கடத்துடன் பார்த்தான்.

“மதுக்கு என்ன?” என்றான் கடினமான குரலில்.

சிறு தயக்கத்திற்குப் பின் சுரேஷ் கூறியவற்றை அப்படியே கூறினான்.

சித்தார்த் ஆயாசத்துடன் கண்களை மூடி இரு விரல்களாலும் நெற்றியைப் பிடித்துக் கொள்ள, “என்னடா இது? ஒரேடியா இப்படி சீன் கிரியேட் பண்றா?” என்று எரிச்சலுடன் சொன்னான் ஜீவா.

“ஜீவா!” என்று ரமேஷ் ஆரம்பிக்க, “ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்கடா! இது, என்னோட பர்சனல் விஷயம். நான் பார்த்துக்கறேன். என்னால, உங்க ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்சனையும் வேண்டாம். ப்ளீஸ்!” என்று அழுத்திச் சொல்லிவிட்டு உள்ளே செல்ல, ரமேஷை முறைத்துக் கொண்டே அவன் பின்னால் சென்றான் ஜீவா.

கிழக்கே முளைத்த செங்கதிரோனின் அழகை இரசிக்கும் மனமில்லாமல், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ராஜேஷ். ‘என்றாவது, தங்கையின் வாழ்க்கை சீராகிவிடும்’ என்ற நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால், அதற்கு அவளே தடையாக இருக்கிறாளே! என்ற வேதனையுடன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தவனின் கைப்பேசி ஒலிக்க எடுத்தான்.

திரையில் ஒளிர்ந்த சித்தார்த்தின் பெயரைப் பார்த்ததும், சட்டென நிமிர்ந்து அமர்ந்தான்.

“ஹலோ!” என்றான் பரபரப்புடன்.

“ராஜேஷ்!” என்றவன் சற்று நிறுத்தி, “உங்ககிட்டக் முக்கியமான விஷயம் பேசணும். இன்னைக்குப் பேச முடியுமா?” என்றான்.

அதற்காகவே காத்திருந்தவனைப் போல, “நானும் உங்ககிட்டப் பேசணும். பேசலாம். எங்கே? எப்போ?” என்றான்.

ஒரு ஹோட்டலின் பெயரைச் சொன்னவன், “லஞ்சுக்கு வாங்க. முடிஞ்சா, தீபக்கையும் கூட்டிட்டு வாங்க” என்றான்.

“லஞ்ச்செல்லாம்…” என்று ராஜேஷ் இழுக்க, “பரவாயில்லை ராஜேஷ்! வாங்க” என்று சித்தார்த் சொல்ல, அவனும் சம்மதித்தான்.
தீபக்கும், ராஜேஷும் அங்கே சென்றபோது, அவர்களை எதிர்பார்த்து காத்திருந்தான் சித்தார்த். மூவருக்குமே சிறு தயக்கம் இருந்த போதும் பரஸ்பர நலம் விசாரிப்பிற்குப் பிறகு, உள்ளே சென்றனர்.

உணவுகளை ஆர்டர் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தவன், “சாரி! என்னால உங்களுக்கெல்லாம் தேவையில்லாத டென்ஷன்” என்றான்.

“சில விஷயங்கள் முடிவுக்கு வரணும்னா, சில டென்ஷன் தேவைப்படுதே” என்ற ராஜேஷைப் பார்த்து முறுவலித்தான்.

ஆழமூச்செடுத்தவன், “இன்னைக்கு நான் சில விஷயங்களை உங்ககிட்டச் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்துல இருக்கேன். தீபக்கை ஏன் கூட்டிட்டு வரச் சொன்னேன்னு குழப்பம் இருக்கலாம். மதுவுக்கு ஆரம்பத்திலிருந்தே ரொம்ப்ச சப்போர்ட்டிவா இருக்கறது தீபக்ன்னு சுரேஷ் மூலமா கேள்விப்பட்டிருக்கேன். அதை நேரிலும் பார்த்திருக்கேன்” என்றவன் தீபக்கைப் பார்த்துப் புன்னகைக்க, அவனும் கீற்றாக புன்னகைத்தான்.

“நான் சொல்லப்போற விஷயம் உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியையோ, கோபத்தையோ ஏற்படுத்தலாம். நான் சொல்லப்போகும் அனைத்துமே உண்மை என்றவன், மதுமிதாவை முதன்முதலில் பார்த்தது முதல், சுரேஷைப் பார்க்கச் சென்ற இடத்தில் நடந்தவை என அனைத்தையும் சொல்லச் சொல்ல எதிரில் இருந்த இருவரது முகத்தில் திகைப்பையும், கேள்விகளையும், சிறு ஏமாற்றத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

“நீங்க, எதோ முக்கியமான விஷயம்னு சொன்னதும் நேத்து நடந்ததைப் பத்தித் தான் பேசுவீங்கன்னு நினைச்சோம். ஆனா, இப்படி ஒரு அதிர்ச்சி கொடுப்பீங்கன்னு நாங்க நினைக்கவே இல்லை" என்றான் தீபக் அதிருப்தியுடன்.

நெற்றியைத் தடவிக்கொண்டவன், “தயவுசெய்து என்னைத் தப்பா நினைச்சிடாதீங்க. அன்னைக்கு இருந்த பக்குவம் இல்லாத சித்தார்த்துக்கும், இப்போ இருப்பவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஆனா, என் காதல் உண்மையானது. மதுவை எனக்குப் பிடிச்சிருந்தது. அன்னைக்கு என்னோட சூழ்நிலை அப்படி.

ஆனாலும், அவமேல கோபம் தான் இருந்ததே தவிர, வெறுப்பு இல்லை. திரும்ப அவளைப் பார்த்தது நிச்சயமா தெய்வ செயல் தான். அவளோட கள்ளமில்லா மனசைப் புரிஞ்சிக்காத முட்டாளா நான் இருந்தேன். இப்போ தெரிஞ்சிகிட்டேன். அவள் இல்லாத வாழ்க்கையை, என்னால நினைச்சிக் கூடப் பார்க்க முடியல. வெறும் பூஜியத்துக்கு, என்னைக்குமே மதிப்புக் கிடையாது.

சித்தார்த்தின் வார்த்தைகளைக் கேட்ட ராஜேஷ், அவனை ஆழ்ந்து பார்த்தான். அவனது கண்கள் வெளிப்படுத்திய உண்மையையும் உணர்ந்தே இருந்தான். ஆனாலும், தான் ஒருவன் மட்டும் பேசி, முடித்துவிடும் விஷயமல்ல இது’ என்று எண்ணியவன், பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தான்.

“சித்தார்த்! உன்னுடைய சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ இதை என்னிடம் சொல்லணும்ன்னு எந்த அவசியமும் இல்ல. ஆனா, சொல்லிட்ட. நான் மட்டும் பேசி முடிக்கிற விஷயமும் இல்ல. உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்ல. ஆனாலும், நீ உன்னோட காதலை முதலிலேயே சொல்லியிருந்தா, பல விஷயம் தடுக்கப்பட்டிருக்கும்” என்றான் ஆழ்ந்த குரலில்.

சித்தார்த், அவனையே பார்த்துக் கொண்டிருக்க, மைத்துனனின் கரத்தைப் பற்றி சொல்லாதே என்பதைப் போலக் கையைப் பற்றினான் தீபக்.

ராஜேஷ் சுதாரித்துக்கொண்டு, தீபக்கைப் பார்க்க, “சித்தார்த்! நீங்க எங்ககிட்டச் சொன்ன இந்த விஷயம் மட்டும், மதுவுக்கு என்னைக்கும் தெரியாமல் பார்த்துக்கங்க. அப்புறம் நீங்க தலைகீழா நின்னாலும், அவ தன்னோட மனசை மாத்திக்கமட்டா” என்றான் இலகுவாக.

அவனது வார்த்தைகளே சித்தார்த்திற்குப் போதுமென்று இருந்தது. அவர்கள் தன்னை மன்னித்ததுடன், தன் காதலையும் ஆதரிப்பதைப் போல அவர்களது பேச்சு அமைந்ததில் மகிழ்ந்து போனான்.

இறுதியாக, “இன்னொரு விஷயம். நான் மதுகிட்டப் பேசணும்” என்றான்.

தயங்கிய ராஜேஷ், “ரெண்டு மூணு நாள் ஆகட்டுமே” என்றான்.

“ரொம்பத் தேங்க்ஸ்” என்றவனது முகம் விகசித்தது.

இருவரும் விடைபெற்றுக் கிளம்பி வரும் வழியில், “மதுவைப் பத்திச் சொல்லி இருக்கலாம் தீபக். அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். அவனோட மனசும், நமக்குப் புரிஞ்சிருக்கும்” என்றான் ராஜேஷ்.

காரைச் செலுத்திக்கொண்டிருந்த தீபக், “அதுக்கு அவசியமே இல்ல ராஜேஷ்! நாலஞ்சு வருஷத்துக்கு முன்ன நடந்த விஷயத்தை அவன் சொல்லணும்னு அவசியமே இல்ல. அப்போலயிருந்து மதுவைக் காதலிக்கிறேன்னு ஒரே வரியில் முடிச்சிருக்கலாம். அவனுக்கு மன்னிப்புக் கேட்கணும்ன்னு எந்த அவசியமும் இல்ல. ஆனாலும், கேட்டான். ஏன்?

அதுக்குக் காரணம் மது மேல அவன் வச்சிருக்கும் காதல் மட்டும் தான். நிச்சயம் அது என்னைக்கும் மாறப்போறதில்ல. இத்தனை வருஷத்தில் அவன் வாழ்க்கைல எத்தனைப் பெண்களைச் சந்திச்சிருப்பான். ஆனா, இன்னமும் நம்ம மதுவைத் தானே நினைச்சிட்டு இருக்கான். இதுக்கு மேல மதுவுக்கு ஒரு நல்லவனை நாம தேடிப்பிடிக்க முடியுமா?” என்றான்.

“நீ சொல்றதைக் கேட்கச் சந்தோஷமா இருக்கு. ஆனா, மது சம்மதிக்கணுமே” என்றான் கவலையாக.

“அந்தக் கவலையே உனக்கு வேணாம்” என்றவன் மேலும் சில விவரங்களைச் சொல்ல, ஆச்சரியமும், திகைப்புமாக மைத்துனனைப் பார்த்தான் ராஜேஷ்.

“ஆமாம்டா! இது எனக்குத் தோணவே இல்லையே. எப்படி மிஸ் பண்ணேன்?” என்றான் புன்னகையுடன்.

“இப்படி இருக்கலாம்ன்னு என்னோட கெஸ் தான். இது அப்படியே பல்டி அடிக்கவும் சான்ஸ் இருக்கு. இருந்தாலும் நம்பிக்கையோட அடுத்த அடியை எடுத்து வைப்போம்” என்றான் நம்பிக்கையுடன்.

“நானும் முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும். சித்தார்த் என்னோட வேலை செய்துட்டு இருந்தபோதே, நம்ம மதுவுக்கு வரன் பார்ப்பதைப் பத்திப் பேசினோம் நினைவிருக்கா?” என்றான்.

“ஆமாம். அப்பா கூட…” என்று அவன் இழுக்க, “ம்ம், அப்போ சித்தார்த்தை மனசுல வச்சிக்கிட்டுத் தான் பேசினேன். ஆனா, அதுக்கு அவசியமே இல்லாம போச்சு” என்ற ராஜேஷின் குரல் இறங்கிப் போயிருந்தது.

தீபக்கும் சற்று நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். வீட்டை நெருங்கும் சமயம், “போனது போகட்டும். ஆக வேண்டியதைப் பார்ப்போம். அதுக்கு முதல்ல, ரெண்டு பேரும் பேசணும். அதுக்கான வேலையைப் பார்க்கணும். மது இப்போதைக்கு ஆஃபிஸ் போறது சாத்தியமில்ல. அதனால…” என்றவன் கூறியதைக் கேட்ட ராஜேஷிற்கு திகைப்பாக இருந்தது.

“இதெல்லாம் தேவையா? நம்ம பொண்ணு…” என்றவனை, “மச்சான்! அதுக்காகத் தான் சொல்றேன். என்னை நம்பு. சித்தார்த் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுவும் நாலு வருஷத்துக்கு முன்னாலேயே உன் தங்கையை அவனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆசைப்பட்டவன் நீ. அவன் கூடவே யூ.எஸ் ல இருந்திருக்க.

நிச்சயமா அவனைப் பத்தி ஓரளவுக்காவது தெரியாம, அந்த முடிவை எடுத்திருப்பியா? மருந்து கசக்குதேன்னு குடிக்காம இருந்தா உடம்பு தான் கெட்டுப் போகும். மூக்கைப் பிடிச்சி வலுக்கட்டாயமா வாய்ல ஊத்தறது இல்ல. ஊத்துவோம்” என்றவனது வார்த்தைக்கு மெள்ள தலையை ஆட்டினான் ராஜேஷ்.

தங்கையின் வாழ்க்கை, நீர்க்கோலமாக அழிந்து போவதை எந்த உடன்பிறந்தவன் விரும்புவான். தீபக் சொன்னதைப் போல கசப்பு மருந்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டான்.

காரை விட்டு இறங்கும் முன், “எல்லாத்தையும் பகிர்ந்துக்கறேன்னு என் தங்கச்சிக்கிட்ட உளறி வைக்காதே. அவள் ஒருத்தி போது மொத்தமா எல்லாத்தையும் கெடுக்க. நம்ம ப்ளான் வெளியே தெரிஞ்சா, வீட்டை விட்டுத் துரத்தினாலும் துரத்துவாங்க ஜாக்கிரதை” என்ற மைத்துனனைப் பார்த்துப் புன்னகைத்தான் ராஜேஷ்.