நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம்—34


காலையில் எழுந்தவளின் சிவந்த கண்களும், அதில் தெரிந்த சோர்வும் அவளது தூக்கமின்மையை நன்கு பறைசாற்றியது. முன்தினம் நடந்ததை நினைத்துக்கொண்டே, கல்சுரல் ப்ரோக்ராமுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.

அனைவரும் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு பூஜையறைக்குச் சென்று தன் பெற்றோரின் படத்தை வணங்கி விட்டு வந்தாள்.

அனைவரும் டைனிங் ஹாலிற்குச் செல்லும் போது தான் அங்கே அர்ஜுன் இல்லாதது நினைவிற்கு வந்தது. இல்லாத வரை சந்தோஷம் என எண்ணிக் கொண்டு கடமைக்காக உணவை விழுங்கினாள்.

அவள் கல்லூரிக்குக் கிளம்பும் நேரம் அவளை அழைத்த ராஜி, “மதும்மா! கல்சுரல் முடிஞ்சதும் நைட் டின்னருக்கு ஹோட்டல் போறோம். அர்ஜுன் உன்னை மீட் பண்ணணும்னு சொன்னார்” என்றதும் சலனமற்ற விழிகளுடன் அத்தையைப் பார்த்தாள்.

“பயப்படாதே. பேசு... உனக்குப் பிடிச்சிருந்தா தான் கல்யாணம். புரிஞ்சுதா” என்று அன்புடன் சொன்னவரிடம் அவனைப் பற்றிய அனைத்தையும் சொல்லிவிடலாமா! என்ற எண்ணம் தோன்றியது. ஆனா, என்ன என்று சொல்வது? அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? வீணாக மனத்தை அலையவிடக் கூடாது. மாமா, அத்தையின் சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடாது’ என்ற முடிவுடன், “சரிங்கத்தை” என்றாள்.

“நான் கோவில் போயிட்டு அப்படியே காலேஜ் போறேன்" என்றவள் கோவிலின் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் போது தான் அந்தக் காரை கவனித்தாள்.

‘கடவுளே! இன்னைக்குமா இவனைப் பார்க்கணும்? அவன் கண்ணில் படும் முன் இங்கிருந்து போய்விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே குனிந்த தலையுடன் படிகளைக் கடந்தவள் முன்னால் நின்றிருந்தவரின் மீது மோதாமல் நிற்க முயன்று தள்ளாடினாள்.

அவள் விழ்ந்துவிடாமல் பிடித்தவருக்கு நன்றி சொல்ல நிமிர்ந்தவள், தனது கரத்தைப் பிடித்திருந்தவனைப் பார்த்ததும், வெளிறிப் போனாள்.

“இது கோயில். அதோட உன்னை மீறி எதுவும் நடந்திடாது. வா நேரம் ஆகுது” என்றவன் அவள் கையை விடாமல் பற்றியபடி அழைத்துச் சென்றான்.

அர்ச்சனை முடித்து சன்னதியை வலம் வந்தபின் அவள் புறப்பட, “நானே உன்னைக் காலேஜில் விடுறேன்” என்று அவளை அழைத்தான்.

பட்டும் படாமலும், “நான் வண்டியில் வந்தேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவளை, “இப்படிச் சொன்னா கேக்க மாட்ட...” என்றவன் அவளது கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக காரில் ஏற்றினான்.

அச்சத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கே யாருமே இல்லை.

“ப்ளீஸ்! என்னை விடுங்க. நான் காலேஜ் போகணும்...” என்றவளுக்குப் பதிலே சொல்லாமல் காரைக் கிளப்பினான்.

அவள் கதவைத் திறக்க முயல, “சைல்ட் லாக் போட்டிருக்கேன்” என்றான்.

அவளது பொறுமை பறந்தது. இவன் யார் என்னை வற்புறுத்தி அழைத்துச் செல்ல என்று கோபத்துடன் நினைத்தவள், “என்னை எங்கே கூட்டிக்கிட்டுப் போற? இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. வீணா உனக்குப் பிரச்சனை வரும். என்னை விட்டுடு” என்றவளை அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

சற்று நேரம் பொறுத்து, “இன்னைக்கு, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம். இங்கயிருந்து பதினைந்து கிலோ மீட்டர் உன்னால ஓடி வர முடியாதுன்னு, கார்ல கூட்டிட்டுப் போறேன். நம்மள யாரும் ஓடிப்போய்க் கல்யாணம் செய்துகிட்டாங்கன்னு சொல்லமுடியாது. ஏன்னா, நான் தான் உன்னைக் கார்ல கூட்டிகிட்டுப் போறேனே" என்றான் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்.

அவனை உற்றுப் பார்த்தவள், "நீங்க அப்படியெல்லாம் கல்யாணம் செய்ய மாட்டீங்க" என்றவளைப் பார்த்து சிரித்தபடி, "திடீர்னு மரியாதை வருது, திடீர்ன்னு தேயுது” என்று சிரித்தவன், “என் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையா?" என்றான் கனிவுடன்.

“ஆமாம்" என்றாள்.

"ரொம்பத் தேங்க்ஸ் தேனு! ஆனா, நான் அவ்ளோ நல்லவன் இல்ல” என்று சிரித்தவனை ஆழ்ந்து பார்த்தாள்.

அதைக் கவனித்தும் எதுவும் பேசாமல் அவன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

“நான் பதினொரு மணிக்கு எனக்கு ரிகர்சல் இருக்கு. நான் காலேஜ்ல இருக்கணும்” என்றாள்.

"மணி ஒன்பது கூட ஆகல. உன்னைப் பதினோரு மணிக்குக் காலேஜில் சேர்ப்பது என்னோட வேலை. அதுவரைக்கும் என் கூடவே இரு தேனு..." என்று கெஞ்சலும் கொஞ்சலும் கலந்து சொன்னவனைப் பார்த்தவளுக்கு வேதனையாக இருந்தது.

இரண்டு மனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும், மனத்தை கட்டுப்படுத்தும் தைரியம் இல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். ‘இவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னால், நிச்சயம் தன் வீட்டில் எந்த மறுப்பும் சொல்லப் போவதில்லை. ஆனால், மாமாவின் மரியாதை தன்னால் கெட்டுவிட்டால் என்ற எண்ணமும் எழ, அவளுக்கு ஆயாசமாக இருந்தது.

‘கடவுளே! எனக்கு ஒரு நல்ல வழியைக் காண்பி’ என்று வேண்டிக்கொண்டாள்.

காரை ஒரு ஹோமிற்கு உள்ளே கொண்டு நிறுத்தியவன், “தேனு! நீ எந்த முடிவெடுத்தாலும், எனக்கு அது சாதகமாதான் இருக்கும். மனசைக் குழப்பிக்காம இறங்கு. இன்னைக்கு எல்லாத்துக்கும் நல்லதா முடிவு கிடைக்கும்" என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி உள்ளே அழைத்து சென்றான்.

அங்கிருந்த குழந்தைகளைப் பார்க்கும் போது, அவளுக்கு வேதனையாக இருந்தது. ‘கடவுள் நமக்குஅற்புதமான வாழ்க்கையைக் கொடுத்தும், அதை பாழ் படுத்திக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் மீது பரிதாபம் வந்தது.

கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தவளை, நிர்வாகியின் அறைக்கு அழைத்துச் சென்றான். ஒரு நடுத்தர வயதுள்ளவரை எதிர்பார்த்தவள், அங்கே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் திகைத்தாள்.

“மது இவன் ஸ்ரீராம். ஏரோனாட்டிக்கல் எஞ்ஜினியர். ரெண்டு பேரும் டேராடூன்ல ஒண்ணா படிச்சோம். ஒண்ணாவே வேலைக்குச் சேர்ந்தோம். அவனோட அப்பாவுக்குப் பிறகு, இந்த ஹோமை பார்த்துக்க வேலையை விட்டுட்டு வந்துட்டான்" என்று தன் நண்பனைப் பற்றிப் பெருமையாக சொன்னான்.

இளம் வயதில், இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்று நடத்துபவன் மீது மதிப்பும், மரியாதையும் பெருக, இருகைகளை கூப்பி வணங்கினாள்.

ஸ்ரீராம், அவளுக்கு இல்லத்தைச் சுற்றிக் காட்டியபடி, " இந்த ஹோம் எங்க தாத்தா காலத்தில் இருந்து நடத்திகிட்டு இருக்கோம். இப்போ நிறைய பேர் ஹெல்ப் பண்றாங்க. இவனும், மாசா மாசம் ஒரு தொகையை ட்ரஸ்ட்க்கு அனுப்பிடுவான்” என்றான்.

அங்கே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் மீது, அவளுக்கு மரியாதை உண்டானது.

அதைக் கவனித்த ஸ்ரீராம் புன்னகையுடன், “சாரை சாதாரணமா நினைச்சிடாதீங்க. பார்க்கத் தான் விளையாட்டுதனமா இருப்பான். ஆனால், ரொம்ப ஹெல்ப்பிங் மைண்ட். மாசம் பிறந்தவுடன் அவனிடமிருந்து செக் வந்திடும்” என்று அவளை அழைத்து வந்தவனைப் பற்றிப் புகழ்ந்தவன், மறந்தும் கூட அவன் பெயரைக் குறிப்பிடவில்லை.

அங்கு இருந்த இரண்டு மணி நேரத்தில், அந்த இரு இளைஞர்களின் சமூக அக்கறையும், நற்குணமும் அவளுக்கு நன்மதிப்பை உண்டாக்கியது. அதேநேரம் அவள் மனத்திலும் குழப்பம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

பத்து மணிக்கு, “மது கிளம்பலாமா?" எனக் கேட்டுக்கொண்டே வந்தான்.

மது, “ம்ம்ம்...." என்றவள் குழந்தைகளை ஒரு நொடி திரும்பிப் பார்த்துவிட்டு ஸ்ரீராமிடம், “நானும், எனக்கு நேரம் கிடைக்கும் போது இங்கே வரேன். என்னால் முடிந்த ஹெல்ப் பண்றேன். என் ஃப்ரெண்ட்ஸுக்கும் சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு காரில் சென்று அமர்ந்தாள்.

அவளைக் கல்லூரியில் இறக்கிவிடும் வரை, இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.

கல்லூரி வாசலில் கார் நின்றதும் வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “தேங்க்ஸ்! நான் இதுவரை இவ்வளவு நிம்மதியா, சந்தோஷமா இருந்ததில்ல. ஆனா, இதையே காரணமா வச்சி... என்னைப் பார்க்க வராதீங்க. நாம ரெண்டு பேரும் சந்திக்கறது இதுவே கடைசியா இருக்கட்டும்" என்றவள் அவனுடைய பதிலை எதிர்பாராமல் இறங்கிச் சென்றாள்.

அவளது கண்ணீர் முகம், அவனுக்குக் கவலையைக் கொடுத்தாலும், ‘ஈவ்னிங் நாம யாருன்னு சொல்லிடப் போறோமே...’ என்றெண்ணிக் கொண்டான்.

அன்று முழுதும் ஒரு செயற்கையான புன்னகையை இதழ்களில் தேக்கியபடியே இருந்தாள். ஒரு வழியாக ப்ரோக்ராம் முடிய ஆறு மணியாகிவிட்டது. மது சோர்வுடன் அங்கிருந்த மேக்கப் அறையில் சென்று அமர சுரேஷ் அவளெதிரில் வந்து நின்றான்.

அதேநேரம் மேகலாவிடம் இருந்து போன் வர, “இதோ வரேன்” சொல்லிவிட்டுப் போனை வைக்க, அவள் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “நீதான் மது ஹெல்ப் பண்ணணும். கீதாகிட்ட பேசு” என்றவன் மேற்கொண்டு பேச, கைகளை உதறி கொண்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

“முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும். உடைஞ்ச மனசை ஒட்ட வைக்க முடியாது. உன் மனசை மாத்திக்க முயற்சி செய். முட்டாள்தனமா நடந்ததையே நினைச்சிக்கிட்டு, உன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதே. இன்னொரு முறை என்னிடம் சொன்னாயே தற்கொலை செய்து கொள்ளவேன் என்று அது போல உளறாதே. சொல்றதை யாரும் சொல்லிட்டுச் செய்ய மாட்டாங்க” என்றவள் விறுவிறுவென நடந்தாள்.

“அப்போ, என் காதல் பொய்யா? இவ்வளவு நாள் என்கூட சிரிச்சிப் பேசினது பொய்யா? இப்போது அப்பா சொல்லும் மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்து கொள்வேன்னா எந்த விதத்தில் நியாயம்?” என்று விரக்தி நிறைந்த குரலில் கேட்டான்.

“இங்கே பார் சுரேஷ், இந்த நியாயம், அநியாயம் இதெல்லாம் எனக்குத் தெரியாது. என் உயிரை வாங்காதே. நானே குழப்பத்தில் இருக்கிறேன். எதுவா இருந்தாலும், கொஞ்சம் நாள் ஆகட்டும் பார்க்கலாம். படிப்பை முடிச்சிட்டு கிடைத்திருக்கும் வேலைக்குப் போறதைப் பார்.

இனியும், நீதான் என் உயிர்; நீ இல்லனா நான் இல்லைன்னு சினிமா டயலாக் விடாதே. அதெல்லாம் சினிமாவுக்குத்தான் பொருந்தும். வாழ்க்கைக்கு ஒத்துவராது” எனச் சொல்லிவிட்டு, நடந்தவளுக்கு யாரோ தூணின் பின்புறம் நிற்பது போலத் தோன்றியது. ‘அது யார் என்று பார்க்கக் கூடத் தோன்றவில்லை அவளுக்கு.

குழப்பதுடனே வந்தவளைக் கண்ட மேகலா, “என்ன மது? வெளியே போகணும்னு மாமா சொல்லி தானே அனுப்பினாங்க. கிளம்பு" என்றாள்.

அப்போதுதான் காலையில் வண்டியை கோவில் அருகிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவு வர, "என் வண்டி" என்று அவள் ஆரம்பிக்க, “ஆமாம். நீதான் காலைல வண்டில ஏதோ பிரச்சனைன்னு, மெக்கானிக் ஷெட்ல விட்டுட்டு வந்தியாம். மதியம் கொண்டு வந்து கொடுத்தாங்க. நேரமாகுது கிளம்பு” என்று துரிதப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டிற்கு வந்தவளிடம், “மது! அம்மா இந்தப் புடவையைக் கட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க" என்று கொடுத்துவிட்டுச் சென்றாள் வித்யா.

முகத்தைக் கழுவிவிட்டுக் கண்ணாடியைப் பார்த்தவளுக்கு, அர்ஜுனின் முகம் தான் தெரிந்தது. இந்த ஆறே நாட்களில், தன் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து விட்டவனை மறக்க முடியாமல் தவித்தாள்.

“ஏய் மது! என்னடி அங்கேயே தூங்கறியா? குரலாவது கொடுடி. நீ உள்ளே போய்ப் பத்து நிமிஷம் ஆகுது" என்று மேகலா சத்தம் போட., “இதோ வரேன்" என்று குரல் கொடுத்தாள்.

“தலையை வாரி, இந்தப் பூவை வச்சிக்க. சீக்கிரம் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம்" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் தயாராகவும் வித்யாவும், மேகலாவும் வந்தனர். மேகலா, “ஹும்! இந்தப் புடவைல அம்சமா இருக்க. உன்னைப் பார்த்து அர்ஜுன் இப்பவே தாலிகட்டிடறேன்னு சொல்லாம இருந்தா சரி" என்று சிரிக்க, அவள் அமைதியாக நின்றாள்.

அவளது முகவாயைப் பற்றிய வித்யா, “மது! எல்லாம் உன் மனசு போலவே நல்லதா நடக்கும் கவலைப்படாதே” என்றவள், அதற்கும் மேல் அங்கே நின்றிருந்தால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டி இருக்கும் என்ற எண்ணத்தில் மேகலாவை அழைத்துக்கொண்டு சென்றாள்

மேலே வந்துகொண்டிருந்த தீபக், நீங்கள்லாம் அங்கிள், ஆன்ட்டியைக் கூட்டிட்டு ராஜேஷோட கார்ல வாங்க. நான் அப்பா, அம்மாவோட மதுவைக் கூட்டிட்டு வரேன்” என்றவன் மதுவின் அறைக்குச் சென்றான்.

“கிளம்பிட்டிய?” என்றவனுக்கு, “ம்” என்று தலையை ஆட்டினாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஒரு வாரமா எங்ககிட்ட எதையோ மறைக்கிற. சொல்லு யாரையாவது விரும்பறியா?" என்று நேரடியாகக் கேட்டான்.

இந்தத் திடீர் கேள்வியை எதிர்பாராத மது தயங்கி நிற்க, “நீ யாரையாவது விரும்பறியா? வீட்ல சொல்ல பயப்படறியா? நீ இப்படியிருப்பது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு" என்றதும் மது மடை திறந்த வெள்ளமாக எல்லாவற்றையும் கொட்டினாள்.

"அவ்வளவு தானே விஷயம். நீ எதையும் காட்டிக்காதே. திரும்ப வீட்டுக்கு வந்ததும் நானே, அப்பாகிட்ட சொல்றேன்" என்றவனைப் பார்த்து, "எனக்குப் பயமாயிருக்கு அத்தான்" என்றாள்.

“உன் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது. அப்பாவும் புரிஞ்சிப்பாங்க. என்ன இந்த விஷயத்தை நீ முதலிலேயே சொல்லியிருக்கலாம். சரி, கொஞ்சம் சிரியேன்" என்றதும், லேசாகப் புன்னகைத்தாள்.

அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டுக் கீழே சென்றவன் ராஜியும், விமலாவும் பேசியது காதில் விழ அப்படியே நின்று கேட்க ஆரம்பித்தான்.

விமலா, நடந்த அனைத்தையும் சொல்ல, ராஜி ஏதும் சொல்லாமல் கேட்டுக்கொண்டார். மதுவை இப்படி அலைக்கழித்தது தீபக்கின் மனதுக்குச் சற்றுக் கஷ்டமாக இருந்தாலும், அவளது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது.

அனைவரும் ஹோட்டலுக்குச் சென்று இறங்கியதும், ‘இங்கே தானே என்னிடம் அவ்வளவு உரிமையோடு பேசினான்’ என நினைத்துக்கொண்டே வந்தாள். பெரியவர்கள் ஒரு புறம் அமர, மறுபுறத்தில் மற்றவர்கள் அமர்ந்தனர். நேரம் ஆக ஆக அவளது பதட்டம் அதிகரித்தது.

"என்ன மது டென்ஷனா இருக்கா?"என்று ஆறுதலாகக் கேட்டாள் வித்யா.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல" எனச் சொல்லிவிட்டு அவள் நிமிர, பெரிய பூங்கொத்துடன் டைனிங் ஹாலின் கதவைத் திறந்துகொண்டு வந்தவனைக் கண்டதும், அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போல ஆனது.

‘கடவுளே! இந்த நேரத்திற்கு இவன் எதற்கு இங்கே வரணும்? என்னை அவன் கண்ணில் படாமல் காப்பாற்று’ என வேண்டிக்கொண்டே ஓரக்கண்ணால் பார்த்தாள். அவனோ, அவர்கள் அமர்ந்திருந்த மேஜையை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான்.

அர்ஜுன் வருவதைக் கவனித்த வித்யா, "அர்ஜுன் அண்ணா வந்தாச்சு" என்றாள் சப்தமாக.

மதுவிற்கோ, பயத்தில் காதுகள் அடைத்துக்கொண்டன. ‘இந்த நேரம் பார்த்து அர்ஜுனும் வந்தாச்சா சுத்தம். என்ன நடக்கப் போகிறதோ?’ என்று நினைத்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

ஈஸ்வரிடம் வந்த அர்ஜுன், “சாரி அங்கிள் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி" என்று மென்குரலில் சொன்னவன் மதுவின் அருகில் இருந்த இருக்கையின் அருகில் வந்து நின்றான்.

ராஜேஷ், “மது!” என்று அழைக்க நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹலோ! ஐயம் அர்ஜுன். விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே” என்றபடி பூங்கொத்தை நீட்ட, அவள் திகைப்பும், சந்தோஷம், கோபம், என்று கலவையான முகபாவனைகளை வெளிப்படுத்தினாள்.

“மது...” என்று அருகிலிருந்த வித்யா அழைக்க, நினைவுலகிற்கு வந்தவள், “தேங்க்யூ” என்றபடி வாங்கிக் கொண்டாள்.

பெரியவர்கள் அதற்கு மேல் இவர்களைப் பார்க்காமல் பேசிக்கொண்டிருக்க, மது திரும்பி ராஜேஷையும், தீபக்கையும் பார்த்தாள். இருவரும் மதுவைப் பார்த்து சிரிக்க மதுவும் லேசான மனதுடன் புன்னகைத்துவிட்டுத் திரும்பி அர்ஜுனைப் பார்த்தாள்.

தான் தான் அர்ஜுன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டது முதல், மது உள்ளுக்குள் அவனைத் திட்டுவதாக நினைத்து, அவன் செய்தவைகளை ரசித்துக்கொண்டிருந்தாள்.

‘பேரைப் பார் பேரை... அர்ஜுனாம் அர்ஜுன். ஆனாலும், உனக்கு ரொம்பத் தான்டா லோல்லு. இந்த ஒருவாரமா என்னை என்னம்மா அலைகழிச்ச இடியட்! சிரிப்பை பாரு. பெரிய புன்னகை மன்னன்னு நினைப்பு. நீ வந்து ஐயம் அர்ஜுன்னு சொன்னதும், உன்னைப் பார்த்து மயங்கிடுவேன்னு நினைச்சியா?

நாளைக்கு ஈவ்னிங் வரை, என்னோட பதிலை சொல்லப் போவது இல்லை. நான் என்ன சொல்வேன்னு எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். உனக்கு மட்டும்தான் ஆட்டம் காண்பிக்கத் தெரியுமா? நான் உனக்குக் காட்டுகிறேன் பார்’ என எண்ணிக்கொண்டாள்.

சாப்பிட்டு முடிக்கும் வரை அவளிடம் எதுவும் பேசாமல் இருந்தவன், அவள் எழுந்துச் செல்ல முயல சட்டென கையை பிடித்துக்கொண்டான். மற்றவர்கள் இவர்களைக் கண்டுகொள்ளாமல் வெளியே செல்ல, தன் கையை விடுவிக்க முயன்று தோற்றது தான் மிச்சம்.

"விடுங்க அர்ஜுன்" என்றவளுக்குக் கண்கள் கலங்க, தன் பிடியை விட்டவன், "ஹே தேனு சாரிடா! நான் தமாஷுக்காக தான் அப்படிச் செய்தேன்" என்றவனை கோபத்தோடு பார்த்தவள், "எங்களுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு மிஸ்டர். அர்ஜுன்" என்றவள் வேகமாக சென்றாள்.

‘ஹும்ம்! இப்போ உன்னோட டேர்ன்? தேனு! நீ என்னதான் கோபப்படறா மாதிரி நடித்தாலும், உன்னை எனக்குத் தெரியும்டி செல்லம். உன் மனசுல என்ன நினைப்பேன்னும் எனக்குத் தெரியும். ஆனால், அது போல நடந்தால் நான் அர்ஜுன் இல்லையே’ என நினைத்துக்கொண்டே சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம்—35


அதிகாலையிலேயே எப்போதும் எழும் நேரத்திற்கு முன்பே எழுந்த மது, குளித்துவிட்டு கூந்தலை விரித்துவிட்டுக்கொண்டு இறங்கி நேராக பூஜையறைக்கு வந்து வணங்கிவிட்டு வீட்டின் பின்புறம் இருந்த தோட்டதிற்குச் சென்றாள்.

காலைப்பனி துளி பூக்களின் மீது இலைகளின் மீதும் தான் வந்து சென்றதற்கான தடயத்தை விட்டுச் சென்றிருந்தது. இருகைகளையும் விரித்து ஆழ மூச்செடுத்தவள், அந்தப் புத்துணர்ச்சியால் எழுந்த புன்னகையுடன் வீட்டிற்குச் செல்லத் திரும்பினாள்.

அங்கே மல்லிப்பந்தலின் அருகில், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் அர்ஜுன். அவனைச் சற்றும் எதிர்ப்பார்க்காதவளின் வதனம் இளங்காலை சூரியனைப் போல, நாணத்தால் சிவந்தது.

அதை ரசித்தபடியே, “குட் மார்னிங் மது!" என்றான்.

‘இத்தனை நாட்களாகத் தேனு தேனு என்று உருகிக்கொண்டிருந்தவன் பெயர் சொல்லி அழைக்கிறானே’ என நினைத்துக்கொண்டே, “குட் மார்னிங்!” என்றாள்.

அவனைக் கடந்து தான் வீட்டிற்குச் சென்றாக வேண்டும் என்பதால், வேகமாக வந்தவள் அங்கிருந்த கல் தடுக்கி விழ எத்தனிக்க, ஒரு கையால் அவளது இடையையும் மற்றொரு கையால் அவளது ஒரு கையையும் பிடித்தான். அவளும், ஒரு கையால் அவனது தோளையும், மற்றொரு கையால் அவன் கழுத்தைச் சுற்றியும் பிடித்துக் கொள்ள, இருவரும் ஏறக்குறைய அணைத்த நிலையில் நின்றிருந்தனர்.

காலை நேர குளிர்ச்சியில், விடிந்தும் விடியாத அந்த நேரத்தில், ஈரக் கூந்தலில் இருந்து வந்த வாசமும், அவனைத் தன் வசம் இழக்கச் செய்தது. அவளது இடையைப் பற்றியிருந்த கரத்தின் பிடியை மேலும் இறுக்கி அவளை அருகில் இழுக்க, சுதாரித்தவள் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடினாள்.

“இன்னும் நீ, என்மேல கோபமா இருக்கேன்னு நம்பச் சொல்றியா?" என்று அவன் சிரிக்க, மனதிற்குள் அவனைச் செல்லமாகத் திட்டியபடி வீட்டிற்குள் நுழைந்தவள் எதிரில் வந்த வித்யா, மேகலா இருவரின் மீதும் மோதிக் கொண்டாள்.

அவள், அசட்டுச் சிரிப்பை உதிர்க்க, இருவரும் மேலிருந்து கீழ் வரை அவளை அளவெடுத்தனர். அவள், என்ன என்பது போல இருவரையும் பார்த்தாள்.

“இல்லை அர்ஜுன் அண்ணா உன்னை இழுத்துப் பிடிச்சதுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாம வந்திருக்கியான்னு பார்த்தோம்” என்று வித்யா சிரிக்க, ‘இவளுங்க கண்ணுல மாட்டிக்கிட்டோமா! இனி, இதைச் சொல்லியே என்னை ஓட்டுவாளுங்களே!’ என எண்ணிக்கொண்டே இருவரையும் தர்ம சங்கடத்துடன் பார்த்தாள்.

“காலங்கார்த்தாலே இப்படி ஒரு ப்ரீ சினிமா பார்ப்பேன்னு நினைக்கவே இல்லைடி" என்று சிரிக்க, அதேநேரம் அர்ஜுன் அவர்களை நோக்கி வருவதைப் பார்த்த வித்யா, "குட் மார்னிங் அண்ணா!" என்றாள்.

அவனைக் கண்டதும், மதுமிதா உள்ளே ஓட, அவளைப் பார்த்துக்கொண்டே, “என்ன காலையிலேயே ரெண்டு பேரும் தோட்டத்துப் பக்கம்" என்றான்.

“அதை நாங்க கேக்கணும்" என்றாள் மேகலா.

“காலையில் தோட்டத்தைப் பார்க்க ரொம்பவே அழகா இருந்தது. ஃப்ரெஷ் ஏர்..." என்றதும், "இவ்ளோ நாள் நமக்கு இது தெரியாம போச்சேடி! தோட்டத்தில் காலையில் வெறும் லவ் சீன் தான் பார்க்க முடியும்னு நினைச்சேன்" என்ற வித்யா சிரித்துக் கொண்டே மேகலாவையும் இழுத்துக்கொண்டு உள்ளே ஓடியவள், எதிரில் வந்த ராஜேஷைக் கவனிக்காமல் அவன் மேலே மோத, மேகலா சிரிப்பை அடக்க முடியாமல் வாயை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓடினாள்.

ஆபீஸ் ரூமிலிருந்து வெளியே வந்த மதுவும், சப்தம் கேட்டு எட்டிப் பார்க்க, வித்யா திரு திருவென விழித்துக்கொண்டு நின்றிருக்க, ராஜேஷ் ஒரு சிரிப்புடன் அங்கிருந்து சென்றான். மதுமிதா, வித்யாவின் பின்னால் வந்து நிற்க, ராஜேஷ் சென்று விட்டான் என உறுதி செய்துகொண்டு மேகலாவும் அங்கே வர, இருவருமாகச் சேர்ந்து வித்யாவைப் பார்த்துச் சிரித்தனர்.

வித்யா முகத்தை தூக்கிக்கொண்டு தன் அறைக்குச் செல்ல, “ஏய்! இதுக்கெல்லாமா சீரியஸாவ...” என்று கேட்டுச் சிரித்த மேகலாவிடன், “ரொம்பச் சிரிக்காதீங்க மேடம்! நீங்க மட்டும்தான் பாக்கி. நீயும் எதிலாவது மாட்டப் போற. நானும், வித்யாவும் சேர்ந்து உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கப் போறோம்" என்றதும் அவள் திருதிருவென விழித்தாள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தனது வேலையை முடித்துக் கொண்டு கீழே வந்தவள் தீபக்கின் அறை பூட்டியிருப்பதைக் கண்டதும், தன்னிடம் இருந்த சாவியால் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

கட்டிலில் அவனைக் காணாமல், மறுபுறம் சென்று பார்த்தாள். தலைவரை போர்வையை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்தது.
"அத்தான்! நான் உம்முன்னு இருப்பது உனக்குப் பிடிக்கலன்னு சொன்ன இல்ல... இப்போ, சிரிச்சிகிட்டே உன்னை என்ன செய்றேன்னு பாரு" என்றபடி, ‘தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் மீது ஊற்றிவிடலாமா? பிறகு துரத்தினால்’ என்றும் தோன்றியது.

வீட்ல தான் யாரும் இல்லையே. முதல்ல எழுப்புவோம். அது வொர்க் அவுட் ஆகலைன்னா, உனக்கு இன்னைக்குத் தண்ணீர் அபிஷேகம் தான்’ என எண்ணிக்கொண்டு, "அத்தான்! டேய் அத்தான்... எழுந்திரிடா!" என்று அவன் பெட்ஷீட்டைப் பிடித்து இழுத்தாள்.

நல்ல தூக்கத்தில் இருந்தவன் எரிச்சலுடன், “ஏன்டி காலங்கார்த்தால என் உயிரை வாங்கற" எனச் சொல்லிவிட்டு, மீண்டும் முகத்தை மூடிக்கொண்டான்.

"மணி ஏழு ஆகுது. இது உனக்குக் காலங்கார்த்தாலையா எழுந்திருடா சோம்பேறி!" என்றாள்.

பெட்ஷீட்டை விலக்காமல், “நீ மொதல்ல கதவைச் சாத்திட்டு வெளியே போடி! பூட்டி வச்சிருந்த ரூமை கள்ளச் சாவி போட்டுத் திறந்து உள்ளே வர்ற. கட்டிக்கப் போறவன் டிஃபன்ஸ்ல இருக்கான். இவ இங்கே திருட்டு வேலை செய்துட்டிருக்கா" என்று எரிச்சலுடன் சொன்னவன் எழவே இல்லை.

"உனக்குச் சொன்னா புரியாது" என்றவள், முகத்தில் இருந்த பெட்ஷீட்டை மட்டும் விலக்கிவிட்டு பாட்டிலைத் திறந்து தண்ணீரை முழுவதையும் அவன் முகத்தில் ஊற்றினாள். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காதவன் திணறிக்கொண்டு எழுந்தான்.

"ஏய் மது..." என்று கத்திக்கொண்டு அவளைத் துரத்த, அவள் அறையை விட்டு வெளியே ஓடினாள்.
அதற்குச் சற்று முன்னர் தான் ஜாகிங் சென்றிருந்த அர்ஜுனும், ராஜேஷும் வீட்டிற்கு வந்திருந்தனர். இருவரும் வந்ததை யாரும் கவனிக்கவில்லை. ராஜேஷ் தன் அறைக்குச் சென்றுவிட, அர்ஜுன் அப்போதுதான் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் செல்ல கதவைத் திறந்தான்.

அவள் தீபக்கின் அறையிலிருந்து சிரித்துக்கொண்டே ஓடிவர, பின்னாலேயே தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்டத் துரத்திக்கொண்டு தீபக் வருவதையும் பார்த்தவன் சிரித்துக்கொண்டே நடப்பதை வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

இவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜி, "காலையிலேயே ஆரம்பிச்சாச்சா. வீட்டுக்கு மனுஷங்க வந்திருக்காங்கன்னு இல்லாம... நல்லவேளை யாரும் வீட்ல இல்ல" என்றவர் சமையலறையை விட்டு வெளியே வரவில்லை.

ஹாலைச் சுற்றிச் சுற்றி ஓட, “ஏய்! நில்லுடி இல்ல... என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது?" என்றவனை, "உனக்கே தெரியாத போது என்னை நீ என்னடா பண்ணுவ?" என்று அவனுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள்.

ஆபிஸ் ரூமிலிருந்து ப்ராஜெக்ட் வேலைக்காக, சில பேப்பர்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொண்டு வந்த மேகலா இவர்களைக் கவனிக்காமல் நடுவில் வர, பின்னால் வந்த தீபக் அவள் மீது மோதி இருவரும் சேர்ந்து சோஃபாவில் விழுந்தனர்.

சப்தம் கேட்டு ஆபீஸ் ரூமை பூட்டிக்கொண்டிருந்த வித்யாவும், திரும்பிப் பார்த்த மதுவும் இருவரையும் பார்த்ததும், மது கைகளைப் படம் எடுப்பது போல வைத்துக்கொண்டு, "நம்தன நம்தன நம்தன தாளம் வரும்" என்று பாட, வித்யாவும் உடன் சேர்ந்துக்கொள்ள அதைப் பார்த்த அர்ஜுன் சத்தம் போடாமல் சிரித்தான்.

சமையலறையிலிருந்து என்றபடி ராஜி ஹாலுக்கு வருவதைப் பார்த்த மது, "அத்தை! சீக்கிரம் இங்கே வாங்க. இது மாதிரி ஏதாவது நடக்கும்னு தான் உங்க அண்ணன் மேகலாவை இங்கே விடமாட்டேன்னு சொன்னார்" என்று கத்தினாள்.

ஹாலுக்கு வந்த ராஜி, “ஏய்..! என்னடா இது… எழுந்திருடா” என்றார்.

“முதல்ல உங்க அண்ணன் பொண்ணை எழுந்துக்கச் சொல்லுங்க” என்று அவன் பதிலுக்குக் கத்தினான்.

“ஏய்!ரெண்டு பேரும் அவளைத் தூக்காம வேடிக்கை பார்த்துட்டு பாட்டு வேற. நல்ல வேளை வீட்ல யாரும் இல்ல" என்று சொல்லிக்கொண்டே மேகலாவைத் தூக்க முயன்றார்.

அவளோ மீண்டும் அவன் மீதே விழுந்தாள். வித்யாவும், மதுவும் சிரிப்பை அடக்கிக் கொண்டு உதவிக்கு வந்தனர்.

"அத்தை! என்னோட துப்பட்டா அத்தானுக்கு அடியில் மாட்டிக்கிட்டு இருக்கு" எனச் சொல்ல, மது சிரித்துக்கொண்டே இழுத்துவிட அவளைத் தூக்கிவிட்டனர்.

வித்யா தன் அண்ணனுக்கு கை கொடுத்து எழுப்ப, எழுந்தவன் நறுக்கென மதுவின் தலையில் கொட்டினான். மது "ஸ்ஸ்ஸ்...ஆஹ்" என தலையைத் தடவிக்கொண்டு தீபக்கை பார்த்து ஒழுங்கெடுக்க. தீபக்கும் அவளைப் பார்த்து அதே போல செய்தான்.

ராஜி, “டேய்! தீபக் சும்மா இரு. ஒரு நாளை போல, உங்க ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ணவே சரியாயிருக்கு” என்றவர் மதுவிடம் திரும்பி, "மது! உனக்குக் கல்யாணம் ஆகப் போகுது. இன்னும் விவரம் தெரியாத மாதிரி நடந்துக்கறது சரி இல்ல. அப்புறம், உனக்கு வரப்போற மாமியார் என்ன பொண்ணு வள்ர்த்திருக்கீங்கன்னு என்னிடம் தான் சண்டை போடுவாங்க" என்றார் கோபத்துடன்.

“ஏம்மா சும்மா அவளைக் கோவிச்சிக்கிற. இங்கே இருக்கும் வரை தானே இது மாதிரி விளையாட முடியும். போகிற இடத்தில் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? நம்ம வீட்டில் இருக்கும் வரைக்கும் அவள் ஜாலியா இருக்கட்டுமே " என்றான்.

“உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்" எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட, உர்ரென்று நின்றிருந்தவளைப் பார்த்தவன், “அம்மா சொன்னாங்கன்னு ஃபீல் பண்றியா? நீ எப்போதும் போலச் சந்தோஷமா இரு" என்றான் சிரிப்புடன்.

அவளும், “சரிடா தீபக்! நாளைக்கு ஒரு பக்கெட் நிறைய தண்ணி பிடிச்சி உன் தலைல ஊத்தறேன்" என்று குறும்புடன் சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே தன் அறைக்குச் செல்ல படியேறினாள்.

அனைத்தையும் பார்த்து மதுவின் குறும்பை ரசித்துக்கொண்டிருந்த அர்ஜுன், அவள் வருவதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த திரைச்சீலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான்.

அவன் தங்கியிருந்த அறைக்கு முன்னால் வந்து நின்றவள் சுற்றி ஒருமுறை பார்வையை ஓடவிட்டு மேலே யாரும் இல்லை என்று கண்டதும், “அர்ஜுன் சார்! ஜாகிங் போயிருக்கீங்களா? காலைல என் முன்னால வந்து ரொமான்ஸ் லுக் கொடுக்கறீங்களா? உன்னைப் பார்த்தா சிரிக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்.

ஆனா, உன் மேல கோபம் கூட வர மட்டேன்னுதுடா! என்னைப் போட்டு இப்படிப் படுத்துறியேடா இடியட்! என்னோட பதிலுக்காக இன்னைக்கு ஈவ்னிங் வரைக்கும் வெய்ட் பண்ணு. அப்போ தான் என்னோட அவஸ்தை உனக்குப் புரியும்" என்றவள், "மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது. முரடா உன்னை ரசித்தேன்" என்று மெல்லிய குரலில் பாடியவள் சிரித்துக்கொண்டே தன் அறைக்குச் சென்றாள்.

ராஜேஷ் தன் அறைக்கதவைத் திறக்கவும், மது அர்ஜுனின் அறை எதிரில் நின்று செய்ததையும், அவள் தன் அறைக்குச் சென்றதும் ஸ்க்ரீனின் பின்னாலிருந்து வந்த அர்ஜுன் சிரித்துவிட்டு அறைக்குச் சென்றதையும் பார்த்தவன், தங்கையை எண்ணி நகைத்துக் கொண்டான்.

மது கல்லூரிக்குக் கிளம்பத் தயாராகி வந்தாள். “இன்னைக்குக் காலேஜ் லீவ் தானே" என்றார் விமலா.

"ஆமாம் ஆன்ட்டி! நேத்து ம் பாதியிலேயே விட்டுட்டு வந்தாச்சு. எல்லாத்தையும் கொஞ்சம் அரேஜ் பண்ணணும். சுரேஷ், இன்னும் சிலர் மட்டும் வருவாங்க" என்றாள்.

ராஜியும், வித்யாவும் பரிமாற அவள் சாப்பிட்டு முடிக்கும் வரையிலும், அர்ஜுன் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. ராஜேஷுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"அத்தை! நான் கிளம்பறேன். மூணு மணிக்குத் தான் வருவேன்" எனச் சத்தமாகச் சொல்லியும் அர்ஜுன் அவளைப் பார்க்கவே இல்லை. கோபத்தோடு, "ட்யூப்லைட்டு” என்று சப்தமாக சொல்லவும் அர்ஜுன் நிமிர்ந்து பார்த்தான். "ஆஹ்... அண்ணா, என் ரூம்ல ட்யூப்லைட் சரியா எரியல கொஞ்சம் என்னன்னு பாருங்களேன்" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

‘தேனு... ஆனாலும் உனக்குக் கொழுப்பு கொஞ்சம் இல்ல’ என்று மனத்திற்குள் சிரித்துக்கொண்டான் அர்ஜுன்.

கல்லூரிக்குச் சென்றதும் சோர்வுடன் அமர்ந்திருந்த சுரேஷிடம், நேற்று தனக்கு இருந்த கோபத்தில் ஏதோ பேசிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டவள், அவனுக்கு தைரியம் சொல்லித் தேற்றிவிட்டு வேலையைத் துவங்கலானாள்.


அத்தியாயம் — 36வேலைகளை முடித்துவிட்டுச் சோர்வாக இருந்த போதும் சந்தோஷத்தோடு வீட்டிற்கு வந்தவள், அர்ஜுன் எங்கோ செல்லத் தயாராகி நின்றிருப்பதைப் பார்த்தாள்.

“ஓகே ராஜேஷ்! மதுமிதாவும் வந்தாச்சு. நான் கிளம்பறேன். ரொம்பத் தேங்க்ஸ்" என்றான் பொதுவாக.

ராஜேஷ், அவளைக் கவலையோடு பார்க்க, மது அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.

அனைவரிடமும் தனித்தனியாகச் சொல்லிக்கொண்டவன், மதுவிடம் வந்தான். அவள் எதிர்பார்ப்போடு அவனைப் பார்த்தாள். ஆனால், அவனது பார்வையில் இத்தனை நாள் தெரிந்த காதலோ; குறும்போ ஏதும் இல்லாமல், புதியவரைப் பார்ப்பது போல இருந்தது.

"சாரி மிஸ். மதுமிதா! நான் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன். உங்களுக்குப் பிடிக்கலன்னு நினைக்கிறேன். நான் கிளம்பறேன். இனி, என்னால எந்தத் தொந்தரவும் இருக்காது" என்றவன் திரும்பியும் பார்க்காமல் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அவளுக்கு அழுகையாக வந்தது. ‘என்னுடைய சம்மதத்தைச் சொல்ல எவ்வளவு ஆசையாக வந்தேன். என்னைப் பேசவே விடாமல் அவனே என்னவோ எல்லாம் தெரிந்தவன் போலப் பேசிவிட்டுச் செல்கிறானே!’ என்று கோபத்துடன் அறைக்குச் சென்றாள்.

“இவன் எப்போது என் வாழ்க்கையில் வந்தானோ; அப்போதிலிருந்து எனக்கு அழுவதே வேலையாகப் போச்சு. அழக்கூடாது. அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாதா? ஏன் இருக்க முடியாது? ஒரு நல்ல பொண்ணை வேணாம்ன்னு சொல்லிட்டோம்ன்னு அவன்தான் அழணும். நீ ஏன் அழணும்? ஒரு ராட்சசி, பிசாசு தான் அவனுக்குப் பொண்டாட்டியா வந்து அவன் உயிரை வாங்கணும். அப்போ தெரியும் இந்த மதுவோட அருமை" என்று சொல்லிக்கொண்டே திரும்பியவள், கதவருகில் நின்றிருந்த வித்யாவும், மேகலாவும் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும், இருவரையும் விலக்கி விட்டுக் கீழே இறங்கி வந்தாள்.

கீழே வந்தவள், "அண்ணா! அத்தை எங்கே?" என்று கேட்டாள்.

“டெல்லி அங்கிள் ஏதோ பர்ச்சேஸ் பண்ணணுன்னு மதியமே கூட்டிட்டுப் போனார்" என்றான்.
ஏனோ எரிச்சலாக வர, டி.வி யைப் போட்டாள். அவள் போதாத நேரம், "அர்ஜுனா..., அர்ஜுனா... அம்பு விடும் அர்ஜுனா" என்று ஒலிக்க, "அடச்சீ...." என்றபடி நிறுத்தினாள். கையில் கிடைத்த சி. டி யைப் போட்டுவிட்டு வந்து அமர்ந்தவள் தலையில், அர்ஜுன் என்ற பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் உன் காதில் விழக்கூடாது என எழுதி இருந்ததோ என்னவோ, "அர்ஜுனரு வில்லு, ஹரிச்சந்திரன் சொல்லு" என்று பாட.., கோபத்தோடு எழுந்தவள் அந்தச் சி.டி யை எடுத்து இரண்டாக உடைத்துத் தூக்கி எறிந்தாள்.

இவள் செய்கையைக் கண்ட நால்வரும் சிரித்துவிட, "அண்ணா! உங்களுக்கும், அத்தானுக்கும் கூட என்னோட கஷ்டத்தைப் பார்த்தா சிரிப்பா இருக்கா" என்றவள் இருகைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு, குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினாள்.

இதை எதிர்பார்க்காத நால்வரும் திகைத்தனர். முதலில் சுதாரித்த ராஜேஷ், "மது ப்ளீஸ், அழாதேடா!தப்பு உன் பேர்லயும் இருக்கு. நீ உன் மனசுல இருக்கறதைச் சொல்லாம அர்ஜுனை அவாய்ட் பண்ண. அதனால் தானே இப்படியெல்லாம் நடந்தது" என்றான்.

மது ஆத்திரத்துடன், “போதும் அண்ணா! நான் ஒரு நாள் செய்தது தானே உனக்குப் பெரிசா தெரியுது. எல்லோரும் சேர்ந்து என்னோட ஃபீலிங்சோட விளையாடுவாங்க. ஆனால், நான் மட்டும் எதுவும் செய்யக்கூடாது அதானே. நான் என்ன மரக்கட்டையா? எனக்குன்னு உணர்ச்சிகள் கிடையாதா? இந்த அர்ஜுன், ஒரு வாரம் என்னை எப்படி அலைகழித்தான். இவன் இல்லன்னா என்னோட கல்யாணம் நடக்காதா?" என்றவள் அழுதபடி தன் அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

அவள் கதவை தாளிட்டதும் பதறிய தீபக், “ஏய்! நீங்க ரெண்டு பேரும் அவ கூட போவது தானே. சிலை மாதிரி நிக்கிறீங்களே" என கத்திவிட்டு மதுவின் அறையை நோக்கி ஓடினான்.

அதேநேரம் ராஜேஷின் மொபைல் ஒலிக்க எடுத்து, “சொல்லுங்க அர்ஜுன்” என்றான்.

அவன் பெயரைக் கேட்டதும் வேகமாக இறங்கி வந்த தீபக், ராஜேஷின் கையிலிருந்து மொபைலை பிடுங்கிக் கோபத்தோடு, “அர்ஜுன்! இப்போ நீ எங்கே இருக்க? போதும் உன்னோட விளையாட்டு. நான் அப்போதே சொன்னேன். அவள் இதுக்கு மேல ஏதாவதுன்னா தாங்க மாட்டான்னு. ஆனா, நீநான் சொன்னதைக் கேட்கவே இல்ல. அழுதுகிட்டே ரூம்ல போய்க் கதவைத் தாழ் போட்டுக்கிட்டுத் திறக்க மட்டேன்றா. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் சும்மா விடமாட்டேன்" என்று கோபத்துடன் எதிரில் இருப்பவனைப் பேச விடவில்லை.

அவன் பேசி முடித்தபோது, மறுபக்கத்திலிருந்து என்கேஜ்ட் டோன் மட்டுமே வந்துகொண்டிருந்தது. அதேநேரம் அர்ஜுன், மதுவின் மொபைலுக்கு தொடர்ந்து முயற்சிக்க, ரிங் போய்க்கொண்டே இருந்தது. அவள் போனை எடுக்காதது அர்ஜுனுக்கே பயமாகிவிட, எவ்வளவு வேகமாக வர முடியுமோ அவ்வளவு வேகமாக வந்தான். காரை நிறுத்திவிட்டு ஓடிவந்தவன், மதுவின் அறை முன்பு தான் வந்து நின்றான்.

அனைவரையும் விலக்கிவிட்டு , “மது… மது ப்ளீஸ்… கதவைத் திற" என்று கத்தியும் அவர்களுக்கு எந்தப் பதிலும் இல்லை. "ப்ளீஸ் மது! கதவைத் திற. இல்லனா நான் கதவை உடைச்சிக்கிட்டு வருவேன்" என்றதற்குப் பின்னும் பதில் இல்லாததால், தான் தங்கியிருந்த அறை வழியாகச் அவளது அறைக்குச் செல்லலாம் என்றெண்ணியபடி திரும்ப, அவள் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.

தாழ்ப்பாளைத் திறந்ததும் உள்ளே சென்றவன், அழுதழுது கண்கள் சிவந்திருந்ததைக் கண்டதும் விளையாட்டு என்ற பெயரில் அவளை பெரிதும் அலைகழித்துவிட்டோம் என்று புரிய, "மதூ..." என்றபடி அவளை நெருங்கினான்.

எல்லோர் முன்னிலும் என்னை அவமானப்படுத்தி விட்டு, இப்போது எதற்காக வரவேண்டும்?’ என்ற ஆத்திரத்தில், என்ன செய்கிறோம் என்று உணரும் முன்பே அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

அவளது செய்கையில் அனைவரும் அதிர்ந்து போயினர்.

"சாரி அர்ஜுன்!” என்ற ராஜேஷ், “ஏய் மது! பைத்தியமா உனக்கு" என்று அதட்டலாகச் சொல்ல, அப்போதுதான் தன்னுடைய செயலை உணர்ந்தாள் அவள்.

“பரவாயில்ல ராஜேஷ். தப்பு என் பேர்லயும் இருக்கு. நான் தான் இந்த விளையாட்டை ஆரம்பித்தேன். நானே அதை முடிச்சிக்கிறேன்" என்றதும், இருவரையும் விட்டுவிட்டு மற்றவர் வெளியேறினர்.

“தேனு... சாரிடா! நான் உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டேன். ஆனா, உன் மனம் கஷ்டப்படும்ன்னு நான் நினைக்கவே இல்ல" என்றதும், அவ்வளவு நேரம் தான் அவனை அடித்துவிட்டதை எண்ணித் தன்னையே திட்டிக்கொண்டிருந்தவள், "அர்ஜுன்! சாரி…” என்று அவனை அணைத்துக்கொண்டவள், அவனது கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள்.

ஒரு கையால் அவள் தலையை வருடியவன் மறுகையால் அவளை தன்னோடுச் சேர்த்து அணைத்துக்கொண்டான். மெல்ல அழுகையை நிறுத்தியவள் வெட்கத்துடன் அவன் அணைப்பிலிருந்து விலக நினைத்து தன் கைகளை அவன் மீதிருந்து எடுத்தாள். ஆனால், அவனது பிடி சிறிதும் தளராமல் மேலும்ம் அவளை இறுக்கி அணைத்தன.

“அர்ஜுன்!” என்றவளது குரலில் பிசிறு தட்டியது.

“சொல்லுடா தேனு!” என்றவன் அவளது இமைகளில் முத்தமிட்டான்.

"அ..ர்..ஜு..ன் இதுவும் விளையாட்டுன்னு சொல்லிட மாட்டீங்களே" என்று குரல் நடுங்கக் கேட்டவளை இறுக அணைத்துக்கொண்டான். "தேனு... இனி, விளையாட்டுக்குக் கூட இப்படிச் செய்யமாட்டேன்" என்றான் பொங்கி வழியும் காதலுடன்.

“உன்கிட்ட நிறைய பேசணும். பத்து நிமிஷம் டைம் கொடு. நீயும் தோட்டத்துக்கு வந்திடு” என்றவன், தனது அறைக்குச் சென்றான்.

மதுமிதாவும் முகத்தைக் கழுவிக்கொண்டு வேறு உடை அணிந்துகொண்டு தோட்டத்திற்கு வந்தவள் அங்கிருந்த பாரிஜாத மரத்தின் மீது சாய்ந்து நின்றிருந்தாள்.

பூரண சந்திரன் வானில் ஜொலிக்க , பறவை இனமும் புல்லினங்களும் தன் கூட்டிற்குத் திரும்பும் நேரம். ரம்யமான அந்த நேரத்தில் மது தன்னை மறந்து நின்றிருக்க, சற்று தொலைவில் ஜீன்ஸ் பாண்ட்டும், பழுப்பும் வெள்ளையும் கலந்த டி-ஷர்ட்டுடன், இரண்டு கைகளையும் பேண்ட் பாகெட்டில் விட்டுக்கொண்டு தலையை ஒருபக்கமாகச் சாய்த்து அவளைப் பார்த்துச் சிரித்தபடி நின்றிருந்தவனைக் கண்டதும் வெட்கத்துடன் தலை குனிந்தாள்.

அவளை நெருங்கியவன், “மதூ...." என்று தாபத்துடன் அழைத்தபடி, அவளது தோள்களைத் தொட, துவண்ட சிறு கொடியைப் போல அவன் மார்பில் சாய்ந்தாள். “தேனு! என்னைக் கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்" என்றான்.

“ம்ஹ்ம்ம்..." என்று மேலும் அவன் நெஞ்சோடு ஒண்டிக்கொள்ள, "உன்னோட கண்ணை நேருக்கு நேரா பார்க்கணும். உன்னோட காதலை நீ சொல்வதை உன் கண்கள் மூலமா நான் உணரணும். உன்னோட இந்த அழகான முகத்தில் தெரியும் வெட்கத்தையும், பூரிப்பையும் பார்க்கணும்” என்று காதலுடன், குரலில் தாபத்தையும் இழைத்துக் கேட்டவனின் அன்புக்கு இசைந்து, தலையை உயர்த்தி, அவனைப் பார்த்தாள்.

அவளது கண்களை ஊடுறுவியன், “தேங்க்ஸ்டா தேனு! என்றவனது அன்பில் நனைந்து கொண்டிருந்தவள், “ஐ லவ் யூ அர்ஜுன்! லவ் யூ சோ மச்” என்றுன இதயத்தின் ஆழத்திலிருந்து தன் காதலைச் சொன்னவளின் மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்ட,

எந்தன் உயிரே எந்தன் உயிரே......
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னைக் கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நான் இருந்தால்
தினம் உன்னருகில் நான் இருந்தால்’
என்று காதலைக் குரலில் இழைத்து மெல்லிய குரலில் அவள் பாட, இருவரும் காதலில் கரைந்து உருகிக் கொண்டிருந்தனர்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் — 37


மல்லிப்பந்தலின் கீழே, அர்ஜுனின் தோளில் தலையைச் சாய்த்தபடி அவள் அமர்ந்திருக்க, தனது கரத்துடன் அவளது கையைச் சேர்த்துப் பிணைத்தபடி ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.

“ராஜி சித்தியும், எங்க அம்மாவும் இந்த விளையாட்டுக்கு ஒத்துக்கல. கொஞ்சம் கெஞ்சி கஷ்டப்பட்டு ஒத்துக்க வச்சேன். நீ வர்றதுக்கு முன்னால பெரியவங்க எல்லோரும் நம்ம நிச்சயத்துக்கு வேண்டியதை வாங்கக் கிளப்பி அனுப்பிட்டு உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஆனால், அது இப்படிச் சிக்கலா மாறும்னு நினைக்கல. ஹப்பா வச்சியே ஒரு அடி... கடைசி வரைக்கும் என்னால் மறக்க முடியாது" என்று கன்னத்தைத் தேய்த்துக்கொண்டான்.
அதைப் பார்த்த மது , “சாரி அர்ஜுன்! இனி, இது போல அடிக்கமாட்டேன்" என்றாள்.

"இனி, அடிக்க மாட்டியா? அப்போ அப்படி ஐடியா இருந்ததா?" என்றான் இரு கன்னத்தையும் கைகளால் மூடியபடி.

சிரித்துக்கொண்டே, “இனி, கன்னத்தில் அடியெல்லாம் கிடையாது” என்றவள் அவன் எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, சிரித்துக்கொண்டே எழுந்து ஓடியவள், தீபக் வருவதைக் கண்டதும் நிதானித்து நின்றாள்.

அர்ஜுனின் கையை பிடித்து குலுக்கி, “வாழ்த்துக்கள்!” என்றவன், கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டான்.

“தீபக் என்ன இது?” என்றவனுக்கு, “இது, சந்தோஷத்தில் வந்த கண்ணீர். இந்த ஒரு வாரமா மதுவைப் பார்க்க நல்லாவே இல்லை. அவளோட குறும்பு, விளையாட்டுத்தனம் எல்லாம் மிஸ்ஸிங். இப்போ கூட, அவ என்னோட வம்பு செய்து விளையாடும் போது அம்மா என்னைத் திட்டுவாங்க.

ஆனா, எனக்கு அவளைப் பார்க்கும் போதெல்லாம் இருபத்தோரு வயசு பொண்ணா தெரியாது. அப்பாவும், அம்மாவும் அவளைக் கூட்டிக்கிட்டு வரும் போது துருதுருன்னு கோலி குண்டுக் கண்ணோடு, ரெட்டை குதிரை வால் போட்டுக்கிட்டு, முகத்தில் சிரிப்போடு வந்த குட்டிப் பொண்ணா எனக்கு இன்னொரு குட்டித் தங்கச்சியா தான் நினைச்சிட்டு இருக்கேன்.

ஆஸ்ட்ரேலியா போன ரெண்டு வருஷம், நான் அவளை ரொம்ப மிஸ் பண்ணினேன். இந்த வீட்டில ஒரு குட்டி இளவரசி போல ஆடி, ஓடிக்கிட்டு இருந்தா. கல்யாணத்துக்கு அப்புறம், எங்களை விட்டுட்டுப் போகப் போறான்னு நினைக்கும்போதே கஷ்டமா இருக்கு. அவளை நாங்க ரொம்பவே மிஸ் பண்ணுவோம். நீங்க அவளை நல்லா பார்த்துப்பீங்கன்னு தெரியும். ஆனாலும், மனசுல ஒரு தவிப்பு..." என்றவனின் தோளில் சாய்ந்து அவள் கண்கலங்க, ஆறுதலாக அவளைத் தட்டிக்கொடுத்தான் தீபக்.

ராஜேஷ் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்க, வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும், இளையவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். முகம் நிறைய சந்தோஷத்துடன் நின்றிருந்த மதுவின் முகத்தைப் பார்த்தவர்களுக்கு பேரானந்தமாக இருந்தது.

இருவரும் ஜோடிப் பொருத்தத்தையும், பெற்றவர்கள் கண்குளிரப் பார்த்தனர்.

நிச்சயத்திற்கு எடுத்த புடவை நகை அனைத்தையும் பார்த்தனர். நாளை மறுநாள் நல்ல நாள் அன்றைக்கே நிச்சயத்தை வைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இரவு உணவுக்குப் பின் அனைவரும் அவரவர் அறைக்குச் செல்ல மது, விமலாவுடன் பேசிக்கொண்டு முன்னால் நடந்தாள். விமலா தன்னுடைய அறைக்குச் சென்றதும், அவசரமாக மதுவின் பின்னால் சென்றவன், "தேனு! மொட்டை மாடிக்கு வா" என்றான்.

“என்னால முடியாது நான் வரமாட்டேன்" என அவசரமாகச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்று கதவைப் பூட்டினாள்.

‘போடி முண்டக்கண்ணி! கண்ணை உருட்டி உருட்டிக் காட்டியே என்னைக் கவிழ்த்துட்ட. நீ வரலன்னா என்ன? என்று தன் அறைக்குச் சென்றவன் விளக்குகளை நிறுத்திவிட்டு பால்கனி கதவை ஓசை வராமல் திறந்து எட்டிப் பார்த்தான். அவன் நினைத்தது போல, மது ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.

சத்தமில்லாமல் சன்ஷேடில் இறங்கி, அவள் அமர்ந்திருந்த பால்கனிக்கு ஏறிவந்தான். அவள் எழுந்து பால்கனி கைப்பிடிச் சுவர் மீது சாய்ந்து நின்று நிலவை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னால் வந்து நின்றவன், அவளது கழுத்தில் மெல்ல ஊத திடுக்கிட்டுத் திரும்பியவள், தன்னை நெருங்கி நின்றிருந்த அர்ஜுனைக் கண்டதும் வெட்கமும், பயமும் போட்டியிட, “எப்படி வந்தீங்க? " என்று கேட்டுவிட்டுச் சுற்றிப் பார்த்தாள்.

"தேனு.... எதுக்குப் பயப்படற?” என்றவன், அவளது இருகைகளையும் பிடித்துத் தன் அருகில் இழுத்தான். அவள் நெற்றியில் புரண்டு விளையாடிக்கொண்டிருந்த முடியை ஒதுக்கியவனின் கைகள், அவளது கன்னம், காதுமடல் என்று அலைய கூச்சத்தில், “ப்ளீஸ் அர்ஜுன்" என கிறங்கிய குரலில் சொன்னாள்.

அவன் கைகள் செய்த வேலையை இப்போது, அவனது உதடுகள் செய்ய ஆரம்பிக்க சுதாரித்தவள், “அர்ஜுன்! எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்" எனக் கண்டிப்பானக் குரலில் சொல்லி, அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டாள்.

“இதெல்லாம் உனக்கே அதிகமா இல்லை. நீ தானே என்னை முதல்ல கட்டிப்பிடிச்ச. நான் ஏதாவது செய்தேன்..." என்று பாவமாகச் சொல்ல, “நானா? எப்போ?" என்றாள் புரியாமல்.

“நீ தானே சாயந்திரம் ஓடிவந்து, என்னைக் கட்டிப்பிடிச்சி டயலாக்லாம் பேசின. இப்போ, நானான்னு கேட்கற?" என்றான்.

வெட்கத்துடன் சிரித்தவல், “அது அப்போ இருந்த நிலமைல..." என்றாள் மெதுவாக.

“ஆனாலும், சுத்த மோசம். உனக்கு ஒரு நியாயம்; எனக்கு ஒரு நியாயமா? இது ரொம்பவே அநியாயம்" என்றவன், அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி நின்றான்.

அவனுடைய பொய்க் கோபத்தை இரசித்தவளாக, “சாருக்கு என்ன கோபம்?" என்றாள் கொஞ்சலாக.

“ஆமாம் , நான் கோபப்பட்டதும், நீ ஓடிவந்து என்னைச் சமாதானம் செய்யப் போற. என் மேல நம்பிக்கை இல்லாம தானே அப்படிச் சொன்ன. என்னோட லிமிட் என்னன்னு எனக்குத் தெரியாதா?" என்றான் கேள்வியாக.

அவள் கவலையுடன், “ப்ளீஸ் அர்ஜுன்! நான் உங்களை நம்பலைன்னா, என்னையே நம்பலைன்னு அர்த்தம். நீங்க இன்னும் மூணு நாலு நாளில் கிளம்பிப் போய்டுவீங்க. அப்புறம் எனக்கு, உங்க ஞாபகமாவே இருக்கும். ரொம்பக் கஷ்டம்பா" என்றவள் சலுகையாக அவன் கையைத் தன் கையுடன் கோர்த்துக்கொண்டு, அவன் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டாள். “படிப்பு முடியவே இன்னும் ஐந்து மாதம் இருக்கு. அப்புறம் கல்யாணம் எப்போ வைப்பாங்களோ?" என்றாள் கொஞ்சும் குரலில்

அவளது கரத்தைப் பற்றிக்கொண்டவன், “குறைந்தது ஏழு மாசத்துக்குக் கிடையாது" என்றதும், “அவ்வளவு நாளா!” என்று கண்களை விரித்துக் காட்டிக் கேட்டாள்.

தீவிர முகபாவனையுடன், “நான் ஒண்ணு சொல்றேன். கேக்கறியா?" என்றதும், ஏதோ முக்கியமான விஷயம் போல என எண்ணி அவனைப் பார்த்தாள். "இனி நாம தனியா இருக்கும் போது இப்படிக் கண்ணை விரிச்சிப் பார்க்காதே. அப்புறம், என்னைத் தப்பு சொல்லக்கூடாது" என்றான்.

அவன் சொன்னதை கேட்டு, உதட்டைக் கடித்துக்கொண்டு வந்த சிரிப்பை அவள் அடக்க, “வேண்டாம் தேனு! மனுஷனோட பொறுமைக்கும் எல்லை இருக்கு. இப்படி என்னைச் சுத்திச் சுத்தி அடிக்காதே” என்றவன், குறும்பும், காதலும் சேர்ந்து நர்த்தனமிடும் அவள் விழிகளைப் பார்த்ததும், “என்னையும் மீறி ஏதாவது நடக்கறதுக்குள்ள நான் கிளம்பறேன். நீயும், போய்த் தூங்கு” என்றபடி அவளை விலக்கிவிட்டுச் சென்றவன் அதே வேகத்தில் திரும்பி வந்தான்.

"இன்னைக்கு, இதான் கடைசி" என மின்னல் வேகத்தில் அவளை இழுத்து இறுக்கி அணைத்தவன் இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு, அதே வேகத்தில் அவளை விலக்கிவிட்டு வந்த வழியிலேயே சென்றான்.

அறைக்கு வந்து படுக்கையில் சாய்ந்தவள், கன்னத்தைத் தொட்டுப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க, அவளது மொபைல் அழைத்தது. எடுத்தவள், “அர்ஜுன் இப்போ தானே பேசிட்டுப் போய்ப் படுத்தீங்க அதுக்குள்ளே என்ன போன்?" என்றாள்.

“தூக்கமே வரமட்டேன்னுதுடா தேனு!" என்று குழைந்தான்.

“வராது வராது. அப்படித் தூக்கம் வரலனா ஒண்ணு, ரெண்டு, மூணு எண்ணுங்க தூக்கம் தானா வரும்" என்றாள்.

“நான் என்ன எல்.கே.ஜி படிக்கிற பையனா? ஒண்ணு, ரெண்டு, மூணு எண்ண..." என்று சலிப்புடன் கேட்டவன், “தேனு நீ என்னடா செல்லம் செய்யற?" என்றான்.

“ம்ம்...! ஒரு எல்.கே.ஜி பையன்கிட்டப் பேசிக்கிட்டு இருக்கேன். பேசாம தூங்குங்க அர்ஜுன்" என்றாள் செல்ல முறைப்புடன்.

“தூங்கலாம்னு கண்ணை மூடினா... உன்னோட கண்ணுதான்டி முன்னால வந்து நிக்குது. நான் என்னடி செல்லம் செய்வேன்?"

“ஐயோ! கொஞ்சங்கூட வெட்கமே இல்லாம, இப்படி வழியிறீங்க? சரியான ஜொள்ளு பார்ட்டிப்பா நீங்க."

“நான் யாருகிட்ட வழியுறேன்! என்னோட தேனுகிட்டத் தானே?"

சிரித்துக் கொண்டாலும், “போதும் அர்ஜுன். எனக்குத் தூக்கம் வருது" என்றாள்.

“என்னது தூக்கம் வருதா? உன்னோட லவ்வர் உன்கிட்ட லவ்வைச் சொல்லியிருக்கேன் நீ என்னையே நினைச்சிக்கிட்டு இருக்காம, தூக்கம் வருதுன்னு சொல்ற. இதெல்லாம் நியாயமா?"

“எல்லாம் நியாயம் தான்."

“சரி, இது மட்டும் சொல்லு. நான் கால் பண்ணும் போது நீ என்ன செய்துட்டு இருந்த?"

“படுத்துட்டு இருந்தேன்."

“பொய்! உன் கன்னத்தைத் தடவிப் பார்த்துச் சிரிச்சிகிட்டு இருந்த."

ஆச்சரியத்துடன், “நேர்ல பார்த்தா மாதிரி சொல்றீங்க!" என்றாள்.

“அப்போ, உண்மையா அதான் செய்துட்டு இருந்தியா? இதுக்குப் பேருதான் போட்டு வாங்கறது."

செல்லமாக முறைத்தவள், “இப்போ நான் வந்து உங்களை ரெண்டு போட்டா தான் நீங்க தூங்குவீங்க" என்றாள்.

“நீ வரப்போறியா... வேண்டாம் செல்லம். நீ கதவைத் திறந்து வை. நானே அங்கே வரேன். நாம ரெண்டு பேரும் ஜாலியா..." என்றவனை, "என்னது" என்று இடைமறித்தாள். “அடடடடா! ரெண்டு பேரும் ஜாலியா பேசிக்கிட்டு இருக்கலாம்னு சொல்ல வந்தேன்" என்றான்.

“இன்னையோட இந்த ராத்திரி பேசுறதெல்லாம் விடுங்க. இப்போ போய்த் தூங்குங்க."

“என்னடி நானும் பார்கிறேன் போய்த் தூங்கு தூங்குன்னு உயிரை வாங்கற. நானே தூக்கம் வராம தானே இப்படிப் புலம்பிக்கிட்டு இருக்கேன். உன் கண்ணு, வெட்கப்படும்போது சிவக்கும் உன் கன்னம், அந்த வெட்கத்தோடு நீ உன்னோட உதட்டைக் கடித்தபடி நிக்கறது… அப்புறம் உன்னோட சங்குக் கழுத்து... அந்தச் சங்குக் கழுத்துப் பூனை முடி..." என அவனது வர்ணனை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருந்தது.

வெட்கத்துடன், “ஹய்யோ! போதும் என்னால தாங்க முடியல. குட் நைட்" என்றவள் சிரிப்புடன் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.


அத்தியாயம் — 38


மறுநாள் கல்லூரி முடிந்து தோழிகளுடன் பேசிக்கொண்டே வெளியில் வந்த கீதா, காரின் மீது சாய்ந்து நின்றிருந்தவனைக் கவனித்த கீதா, “ஏய் மது! அங்கே பாருடி உன்னோட இடியட்..." என்றாள்.

“இடியட்டா..?" என்றபடி அவள் பார்க்க புன்னகையுடன், “ஹாய்!” என கையசைத்தான் அர்ஜுன்.

“எவ்வளவு கொழுப்புடி அவனுக்கு? நீ திட்டியும் அடங்கல. அன்னைக்கு எங்க எல்லோரையும் சாட்சிக்குக் கூப்பிட்டான். இன்னைக்கு நான் இருக்கேன். வா அவனை ரெண்டுல ஒண்ணு பார்க்கலாம்" என்று அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

இவர்களின் பின்னால் வந்துகொண்டிருந்த வித்யாவும், மேகலாவும் இவர்களைப் பார்த்தும், “ரெண்டு பேரும் எங்கேடி போறீங்க?" என்றாள் மேகலா.

வாய் மேல் விரல் வைத்து இருவரையும் பேசாம வரச்சொல்லி சைகை செய்தவள், கீதாவுடன் செல்ல இருவரும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

அர்ஜுன் எதிரில் வந்து நின்ற கீதா கோபத்தோடு, “ஏய் மிஸ்டர்! உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க? அன்னைக்குத்தான் ஏதேதோ மழுப்பலா சொல்லித் தப்பிச்சிட்ட. ஆனால், இன்னைக்குக் காலேஜுக்கே வந்திருக்க. இனி, இவளைப் பாஃலோ பண்ற வேலையே விட்டுட்டு, உன் வேலையே பார்த்துகிட்டு இரு" என அதிகாரத்துடன் சொல்லிவிட்டு அவனை முறைத்தாள்.

மதுவை ஒரு பார்வை பார்த்தவன், இரு கைகளையும் தட்டிவிட்டு கார் பானட்டின் மீது ஏறி அமர்ந்தான். “ஹப்பா.... என்ன சூடு? "எனக் கையால் விசிறிவிட்டுக் கொள்வது போலச் செய்ய, கீதாவின் கோபம் ஏறியது. மற்ற மூவரும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தனர்.

“பார்க்கத்தான் நீங்கல்லாம் டீசன்டா இருக்கீங்க. ஆனா, பண்றது அவ்வளவும் சீப்பா தானேயிருக்கு" எனக் கோபத்துடன் பேச, அர்ஜுன் சிரித்தபடி அமர்ந்திருந்தான்.

கீதாவின் வார்த்தைகள் அளவு மீறுவதைப் பார்த்து, “ஏய் கீதா சும்மா இருடி" என்றாள் மது.

“விடு மது!” என்றவன், “நீ பேசு கீதா. இன்னும் என்ன சொல்லி திட்டப் போற?" என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

கீதா, “எங்க எல்லோருடைய பேரையும் எப்படியோ தெரிந்து வச்சிக்கிட்டு, பேர் சொல்லிக் கூப்பிட்டுக் கலாட்டா செய்றியா?" என்று குரலை உயர்த்தினாள்.

“என்ன மது, உன் ஃப்ரெண்டுக்கு இவ்வளவு கோபம் வருது. இப்படிக் கோபப்பட்டா நல்லதில்லைன்னு அட்வைஸ் பண்ணுமா. பாவம் சுரேஷ்! உன்கிட்ட மாட்டிக்கிட்டு எப்படி முழிக்கப் போறானோ?" என சுரேஷின் பேரை நடுவில் இழுத்ததும், அதுவரை அவனை முறைத்துக்கொண்டிருந்த கீதா பேசாமடந்தையாக மாறினாள்.

அவளைக் கவனித்த மது, "அர்ஜுன்! ப்ளீஸ், நீங்க கொஞ்சம் சும்மா இருங்களேன்" என்றவள், “கீதா சாரிடி..." என்று கெஞ்சினாள்.

தன்னைச் சற்று சீராக்கிக் கொண்ட கீதா, “என்னடி நடக்குது இங்க? ரெண்டு பேரும் என்னவோ உரிமையா பேரைச் சொல்லிக் கூப்பிடுறீங்க. இவளுங்க வாயை மூடிக்கிட்டுச் சிரிக்கிறாங்க. ஹய்யோ! என் மண்டையே வெடிச்சிடும் போலிருக்கே" என்றாள் குழப்பத்துடன்.

அவள் சிரிப்புடன், “இவர்தான்டி அர்ஜுன். என்னோட...” எனச் சொன்னபடியே அவனைப் பார்த்தவளின் முகம் நாணத்துடன் சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் திணறினாள்.

அதைக் கண்ட கீதா, “சரி சரி எனக்குப் புரிஞ்சிது. ஆனா, நீ எங்ககிட்ட எதுவுமே சொல்லலையே? பரவாயில்ல புடிச்சாலும் ஒரு சூப்பர் ஹீரோவைத் தான் பிடிச்சிருக்க" என்றவள், " நீங்க ரொம்பவே லக்கி தெரியுமா? எங்க மது மாதிரி ஒரு பொண்ணு உங்களுக்கு கிடைச்சிருக்கா..." எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களை நோக்கி சுரேஷ் வருவதைப் பார்த்தவள், “எனக்கு நேரம் ஆகுது. நான் கிளம்பறேன்” என அங்கிருந்து நகர்ந்தாள்.

கீதாவைப் பார்த்தபடியே மதுவின் அருகில் வந்தான் சுரேஷ். துரத்தில் வரும்போதே அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டே வந்தான். அருகில் வந்தவனை, “ அர்ஜுன் இது..." என ஆரம்பிக்க, “இது சுரேஷ், உன்னோட ஃப்ரெண்ட்” என்றவன், “ஹாய் சுரேஷ் நான் அர்ஜுன். மதுவோட ஃப்யான்ஸி" என்று அவனுக்குக் கை கொடுக்க, அவன் யோசனையோடு மதுவைப் பார்த்தான்.

அர்ஜுனுக்கு, வாழ்த்தைத் தெரிவித்துவிட்டு விடைபெற்றுச் சென்றான். சுரேஷின் முகத்தைப் பார்த்ததும், கீதாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணியபடி அர்ஜுனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

அர்ஜுன் அமைதியாக புன்னகைத்தபடி காரை ஒட்டிக்கொண்டிருக்க, மது அர்ஜுனைப் பார்த்து, “இப்போ நாம எங்கே போறோம் அர்ஜுன்?" என்றாள்.

“உனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். உன் மனசுக்கு நிறைவான இடம்" என்றதும், “ஸ்ரீராம் அண்ணாவைப் பார்க்க போறோம் " என்றாள்.

“புத்திசாலிடி நீ" என்றவாறே காரைச் செலுத்தினான்.

இருவரையும் வரவேற்ற ஸ்ரீராம், "என்னம்மா மது, ஒரு வழியா நம்ம அர்ஜுனைக் கல்யாண பந்தத்தில் சிக்கவச்சிட்ட?" என்றான் சிரிப்புடன்.

“அண்ணா! இந்தக் கல்யாண விஷயத்தில் எனக்கு எந்தச் சமந்தமும் இல்ல. எல்லாத்துக்கும் உங்க ஃப்ரெண்ட் தான் காரணம்" என்று சிரித்தாள்.

இருவரும் சேர்ந்து நிச்சய தாம்பூலத்திறு அழைத்துவிட்டு, குழந்தைகளுக்காக ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த இனிப்புகளைக் கொடுத்துவிட்டுச் சிறிதுநேரம் குழந்தைகளுடன் விளையாடிவிட்டுக் கிளம்பினர்.

காலையிலிருந்து வீடே பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. நிச்சயத்திகு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருக்க, உடன் பணிபுரிபவர்கள், நண்பர்கள், என அந்த வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

நல்ல நேரத்தில் இரு வீட்டு பெரியோர்களாலும் தட்டு மாற்றப்பட்டது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள, நண்பர்களின் உற்சாகக் குரல் அந்த இடத்தையே கலகலப்பாக்கியது.

சுரேஷ் தனது சோகத்தைக் கூட ஒதுக்கிவிட்டு தோழியின் நிச்சயதார்த்தத்தில் அதகளம் செய்து கொண்டிருந்தான். அர்ஜுனின் அருகில் நின்றபடி அவன் வார்த்தைக்கு வார்த்தை கிண்டலடித்துக் கொண்டிருக்க, கீதா அவர்களில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தாள்.

அவனது கிண்டல் தாளாமல், ரமேஷுடன் பேசிக்கொண்டிருந்த தீபக்கை அழைத்தாள்.

“அத்தான் நீயே கேளு. எல்லோரும் ஒண்ணா சேர்ந்து என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க?" எனச் சிறு குழந்தை போலக் குற்றப் பத்திரிகை வாசித்தாள்.

சுரேஷை பார்த்து, "ஏன்டா எப்போ பாரு மதுவைக் கிண்டல் செய்றீங்க? பாவம்டா அவ" என்றவன், “பேசிப் பேசிக் கிண்டல் பண்ணது போதும்டா. இனி, கொஞ்சம் பாடிக் கிண்டல் பண்ணுவோமே” என்றதும் மதுவின் முகம் போன போக்கை பார்த்து சிரித்தவன், “சுரேஷ் ரெடியாடா பாடலாமா?" என்றான்.

"அடடே! அந்தப் பாட்டுத் தானே சீனியர். பாடிட்டா போச்சு” என்ற சுரேஷ், “ரெடி ஒன் , டூ, த்ரீ” என்றதும் இருவரும் சேர்ந்து, “அர்ஜுனரும் வந்துவிட்டார் அல்லிராணி! அந்த ஆணழகரோடுச் சேர்ந்து வாழப்போற நீ” என்று பாட, அனைவரும் சேர்ந்து சிரிக்க, விழிகளில் காதல் பொங்க அர்ஜுனைப் பார்த்தாள்.

அன்று மாலை திருமணத்திற்குத் தேதி குறிப்பதைப் பற்றி பேச்சு வந்தது.

ராஜேஷ் – வித்யா இருவருக்கும் இப்போது குருபலன் இருக்கிறது. அதனால் திருமணத்தை இன்னும் மூன்று மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும். அதே போல் தீபக் – மேகலா திருமணம் அடுத்த ஆறு மாதங்களில் நடக்காவிட்டால் பல சிக்கல்களுக்குப் பின் நடக்கலாம். நடக்காமல் போகலாம் என்று ஜோஸியர் சொன்னதாக ராஜி சொல்ல, அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

அதைக் கேட்ட அர்ஜுன், தான் இன்னும் மூன்று மாதங்களில் தான் ட்ரெயினிங் ஒன்றிற்காகச் செல்ல வேண்டியிருக்கும். அதனால், ராஜேஷ் திருமணத்தை முதலில் முடித்துவிடும் படிச் சொல்ல, ஈஸ்வரன் சற்று கவலையுடன் சந்திர சேகரைப் பார்த்தார்.

“கல்யாணத்தை முடிச்சிக்கிட்டு நீ போகலாமே அர்ஜுன்” என்றார் சந்திரசேகர்.

“இல்லப்பா! ட்ரெயினிங் முடிய மூணு மாசம் ஆகும். இது சீக்ரெட் ஆபரேஷனுக்காக கொடுக்கப்படும் பயிற்சி. சில நாள் என்னால உங்களைக் காண்டாக்ட் பண்ணக் கூட முடியாம போகலாம். நான் ஏற்கெனவே மதுகிட்ட இதைப் பத்திச் சொல்லியிருக்கேன்” என்று அவளைப் பார்த்தான்.

“எப்படியும் மதுவோட படிப்பு முடிய அஞ்சி ஆறு மாசம் ஆகும். அதுவரை ஏன் இவங்க கல்யாணத்தையும் தள்ளிப் போடணும். அதுக்கு முன்னாலேயே நடத்திடுங்களேன்" என்றான்.

அவள் கண்ணில் ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லை என்ற கேள்வி இருந்தது.

அனைவரும் பேசி அர்ஜுன் சொன்னபடியே முதலில் வித்யா, ராஜேஷ் கல்யாணத்தை முடித்து விடலாம் என்றும், அதன்பிறகு மது, அர்ஜுன் கல்யாணம் முடிந்ததும் அடுத்த முகூர்த்தித்திலேயே தீபக், மேகலா கலயாணம் எனப் பேசி முடிவு செய்யப்பட, மது தன் அண்ணன், வித்யா கையைப் பிடித்து வாழ்த்தியவள், அர்ஜுனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.

அனைவரும் ராஜேஷ், வித்யா கல்யாணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்க,
அர்ஜுன் மதுவின் அறைக்குச் சென்றான். இரு கால்களையும் கட்டிக்கொண்டு கண்கள் கலங்க அமர்ந்திருந்தவள் அருகில் சென்று அமர்ந்தான்.

அவளது முகத்தைக் கைகளில் ஏந்தி, “என்னடா தேனு..?" எனக் கேட்டதும் தான் தாமதம், அவன் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

ஆதரவாக அவள் தலையைத் தடவிக் கொடுத்தவன், “ஆறு மாதம் தானே... இப்படின்னு சொல்வதற்குள் ஓடிடப் போகுது. நீ சந்தோஷமா சிரிச்ச முகத்தோட என்னை வழி அனுப்பினால் தானே எனக்கும் நிம்மதியா இருக்கும். எனக்கு மட்டும் உன்னைப் பார்க்காமல் நினைத்த போது பேசாமல் இருப்பது கஷ்டம் தானே" என்றான் ஆறுதலாக.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து, அவனைப் பார்த்தாள். அர்ஜுன் புன்னகையுடன் அவள் மூக்கை பிடித்து ஆட்டி, “சரியான அழுகாச்சிடி நீ" எனச் சொல்ல மது, "ஹ்ம்ம்...” எனச் சொல்லிவிட்டு உரிமையுடன் அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

தன் மீது அவளை சாய்த்தபடியே , “ஏன்டா தேனு.. நான் வேணும்னா இந்த ட்ரைனிங் போக இஷ்டம் இல்லைன்னு எழுதிக் கொடுத்துடட்டுமா?" எனச் சொல்லத் திடுக்கிட்டு எழுந்தாள்.

மது, “வேண்டாம் அர்ஜுன் , இது உங்க திறமைக்குக் கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு. என்னால உங்களோட காரியர் மேல வரணுமே தவிர ,கீழே போகக்கூடாது. என்னால, உங்க கூட நினைத்தபோது பேச முடியாது; பார்க்க முடியாது. ஆனா, நீங்க தான் எப்போதும் என் மனசுக்குள்ளயே இருக்கீங்களே" என்றாள் அன்புடன்.

“தேங்க்ஸ்டா” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, தன் கழுத்திலிருந்த செயினைக் கழற்றி அவள் அணிவித்தவன், காதலுடன் கொடுத்த பரிசுகளை, மறுக்காமல் ஏற்றுக்கொண்டாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் – 39


இன்றுடன், அர்ஜுன் கிளம்பிச் சென்று பத்து நாட்கள் ஆகிவிட்டன. தினமும் காலையில் அர்ஜுனின், "குட் மார்னிங்டா தேனு!" என்ற குரலுக்காகக் கண்விழித்து காத்திருப்பதும், இரவில் குறைந்தது அரைமணி நேரம் சாட்டிங்கில் பேசிக்கொள்வதும் வழக்கமாகியது.

பத்து நாட்களுக்கு முன் ஏர்போர்டில் நின்றிருந்த போது, “தேனு! நீ ரொம்ப நல்லா படிப்பியாமே. உங்க அண்ணன் பெருமையா சொல்லிட்டிருந்தார்" என்றான்.

அவள், புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன தேனு சிரிக்கிற? நான், நீ கண்டிப்பா கோல்ட்மெடல் வாங்குவேன்னு எங்க அம்மாவிடம் சொல்லியிருக்கேன். அதை நான் முதல் வரிசைல உட்கார்ந்து பார்க்கணும். வாங்குவ இல்ல" என்று கேள்வியுடன் பார்த்தான்.

"எதுக்காக இல்லைன்னாலும், உங்களுக்காகக் கண்டிப்பா கோல்ட்மெடல் வாங்குவேன். அதை முதல் வரிசைல உட்கார்ந்து நீங்க பார்க்கத் தான் போறீங்க" என்றாள்.

அதே உறுதியோடு படிக்க ஆரம்பித்தாள். ராஜேஷ், வித்யாவின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்க, அவர்களின் திருமணம் முடிந்த இரண்டாம் நாள், அர்ஜுன் ட்ரைனிங்கிற்காக கிளம்புகிறான். தன்னுடைய ப்ராஜெக்ட் முடியாத நிலையில் அவனை வழி அனுப்பக் கூடப் போக முடியாதே... இன்னும் மூன்று மாதங்கள் அவனைப் பார்க்க முடியாதே’ என நினைக்கும் போதே அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.

ராஜேஷின் திருமணத்திற்கு முதல் நாள் விமலாவும், சந்த்ருவும் வந்து சேர்ந்தனர். மது ஓடிவந்து அவர்களை வரவேற்றாள்.

“இந்தாடா மது! நீ கேட்டியாமே... அர்ஜுன் கொடுக்கச் சொன்னான்" என்று ஒரு பார்சலை அவளிடம் கொடுத்தார். தன் அறைக்கு ஓடியவள் கட்டிலில் படுத்துக்கொண்டு பார்சலைப் பிரித்தாள்.

அதில், ஏர்போர்ஸ் சூட்டில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான் அர்ஜுன். போடோவிற்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, "இன்னும் மூணு மாதம் ஆகுமா அர்ஜுன் உங்களைப் பார்க்க" என்று பெருமூச்சு விட்டவள், கட்டிலருகில் இருந்த மேஜையின் மீது வைத்தாள்.

அன்று மாலை நிச்சயதாம்பூலம் முடிந்து, அர்ஜுனின் போனுக்காகக் காத்திருந்தாள். ஆனால், போன் வரவேயில்லை. மதுவிற்குக் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இரவு பதினொரு மணிக்கு அனைவரும் படுத்துவிட, மது தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவளின் மொபைல் ஒலிக்க, அர்ஜுனின் பெயரைப் பார்த்ததும் சந்தோஷத்தோடு வெளியே வந்து பேச ஆரம்பித்தாள்.

"அர்ஜுன்!" என்றவளின் குரலில் அமுதத்தின் இனிமை நிறைந்திருக்க, “தேனு!” என்றவனின் குரலில் நேசத்தைக் குழைத்துப் பூசியிருந்தான்.

"நான் நல்லாயிருக்கேன் தேனு, நீ எப்படிடா இருக்க?" என குழைந்த குரலில் கேட்டதும்,

அவளது குழைந்த குரலைக் கேட்டவனது மனம் நெகிழ, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “தேனு! என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தர் வந்திருக்கார். இப்போ அங்கே தான் கார் பார்கிங்கிட்ட இருக்காராம். யாரும் வெளியே இல்லைன்னு சொன்னார். நீ கொஞ்சம் கீழே போய் அவரை ரிசீவ் பண்ணிக்கிறியா? நான் ஃபைவ் மினிட்ஸ் கழிச்சிப் பேசறேன்" என்று கேட்டான்.

எதற்கு வேறு யாருக்கும் சொல்லாமல் தன்னிடம் சொல்கிறான் எனத் தோன்றாமல், "சரி" என்றாவள், கார் பார்க்கிங்கை நோக்கிச் சென்றாள். பார்க்கிங் அருகில் ஒரு கைப்பை மட்டும் இருந்ததைப் பார்த்துவிட்டு அருகில் சென்று சுற்றிப் பார்த்தாள். அங்கே யாரும் இல்லை.

திரும்பிச் சென்று விடலாம் என்று எண்ணியவள் வாயை யாரோ மூடி காரின் பின்புறம் இழுத்துச் செல்வதை உணர்ந்து கத்த முடியாமல் திமிறியவளை, தன் புறமாகத் திருப்பி, “ஹாய் தேனு!” என்று குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்தவனைக் கண்டதும், “அர்ஜுன்..." என்று அணைத்துக்கொண்டாள்.

"என்னடா தேனு பயந்துட்டியா?" என்றவனைத் தள்ளிவிட்டு விட்டு, “இன்னும் உங்களுக்கு இந்த விளையாட்டுப் புத்திப் போகல..." என்று கோபத்துடன் சென்றவளை பின் தொடரவோ, தடுக்கவோ செய்யாமல் தலையைச் சாய்த்துச் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் வராததையறிந்து திரும்பிப் பார்த்தவள், அவனுடைய சிரிப்பைக் கண்டதும், “யூ இடியட்..." என இருகைகளையும் மூடி அவன் மார்பில் குத்த முயல, அவளது கரங்களை லாவகமாக பிடித்தவன், அவளைத் திருப்பிப் பின்புறமாக வளைத்து அணைத்துக் கொண்டான்.

"அடேங்கப்பா... எவ்ளோ கோபம் வருதுடி தேனு" என்று சிரிக்க, “பின்னே, கோவிச்சிக்கிட்டுப் போறேன். என்னைச் சமாதானம் செய்ய வராம சிரிச்சா, கோபம் வராதா?" என்றாள் கடுப்புடன்.

"ஹ்ம்ம்... நீ உண்மையாவே கோவிச்சிக்கிட்டுப் போயிருந்தா நான் சமாதானம் செய்ய வந்திருப்பேன். நீதான் சும்மா கோபப்படுவது போல நடிக்கிறியே" என்றவனின் உதடுகள் அவளது கழுத்தில் தன் வேலையே செய்ய ஆரம்பிக்க , வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.

"அன்னைக்குச் சொன்னதுதான். வாங்க உள்ளே போகலாம்” என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு, ராஜேஷ் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.

தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த தீபக், அர்ஜுனைக் கண்டதும் ஆச்சரியத்துடன் வரவேற்றான். தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷும் எழுந்துவிட, தான் அறைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு மது கிளம்பினாள்.

அவள் பின்னாலேயே வந்த தீபக், "ஆனாலும், இதெல்லாம் ரொம்ப அநியாயம். இல்ல மது!" என்று சிரித்தவனை முறைக்க முயன்று முடியாமல் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.

காலையில் திருமண மண்டபமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. இதில் அர்ஜுனின் வருகை முக்கிய செய்தியாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சந்துரு , “என்னடா! எங்ககிட்டக் கூடச் சொல்லல" என்றார்.

"ஒண்ணுமில்லப்பா! ஊருக்குப் போகும் முன்னால் வந்தா, எல்லோரையும் மச்சான் கல்யாணத்தில் பார்த்திடலாமேன்னு வந்தேன்" என்றான்.

அருகில் நின்றிருந்தவர், “என்னப்பா, மச்சானைப் பார்க்க வந்தியா? இல்லை மச்சானோட தங்கச்சியை பார்க்க வந்தியா?" என்று கேட்க, பக்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

அவன் சற்றும் அசராமல், “அதான் நீங்களே சொல்லிடீங்களே. நான் மதுவைப் பார்க்கத் தான் வந்தேன்" என்றான் பளிச்சென.

மகனைப் பார்த்த விமலா, “இது என்னடா? பட்டுவேட்டி, சட்டை. நீதான் வேட்டியே சட்டையே கட்ட மாட்டியே?" என்றார்.

மேகலாவின் அம்மா, “இப்பவே ரிகர்சல் பார்த்துக்கறார் போல" என்று சிரிக்க, இது எதையுமே கவனிக்காமல் அவன் கண்கள் மதுவைத் தேடிக்கொண்டிருந்தன. காலையில் "குட் மார்னிங் தேனு" எனச் சொன்னதோடுச் சரி அதன் பிறகு அவள் குரலை கூட கேட்க முடியவில்லை.

மணப்பெண்ணின் அறைக்குள்ளே வித்யாவை விட்டுவிட்டு, அனைவரின் கிண்டலும் மதுவை நோக்கியே இருந்தது. அர்ஜுன் பேசியதைக் கேட்டுவிட்டு வித்யாவின் அறைக்கு வந்த மேகலா, "அவளை ஏண்டி போட்டுப் படுத்துறீங்க. அதோ அடுத்த மாப்பிள்ளையே சொல்லிட்டார் அவர் வந்ததே மதுவைப் பார்க்கதானாம்" என்றாள்.

அனைவரின் கிண்டலுக்கும் பயந்தே மது, அந்த அறையை விட்டு வெளியே வராமல் இருந்தாள். மேகலா, “மது! அர்ஜுன் உன்னை மண்டபம் முழுசும் சல்லடை போட்டுத் தேடாத குறையா தேடிக்கிட்டு இருக்கார். நீ இந்த ரூமை விட்டு வெளியே வர மாட்டேன்ற வாடி” என்று வெளியே இழுத்துச் சென்றாள்.

வெகு நேர தேடலுக்குப் பின் மணப்பெண்ணின் அறையிலிருந்து வெளியே வந்த மதுவை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவளை அழைத்த ராஜி, மேலே அறைகளைப் பூட்டிவிட்டு வரும்படி அனுப்ப, அவளுக்கு முன்னால் அங்கே சென்றான் அர்ஜுன்.

மது அந்த அறைக்குள் நுழையும் போது, உள்ளே பேச்சுச் சப்தம் கேட்க, கதவைத் திறந்து மெதுவாக எட்டிப் பார்த்தாள். அங்கே அர்ஜுன் ஒரு கையைச் சுவற்றில் ஊன்றியபடி மொபைலில் பேசிக்கொண்டிருந்தான். கதவைத் திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பியவன், அவளது திகைத்தப் பார்வையைக் கண்டதும், "நான் அப்புறம் பேசுகிறேன்" எனச் சொல்லி மொபைலை அணைத்தான்.

மதுவின் அருகில் வந்து நின்றவன், “என்ன தேனு? அப்படியே மலைச்சி போய் நின்னுட்ட" என்றான் சிரிப்புடன்.

"சூப்பரா இருக்குங்க. ரொம்பத் தேங்க்ஸ்! எனக்காக, நான் வாங்கிக் கொடுத்த பட்டுவேட்டி சட்டை போட்டுக்கிட்டுச் சும்மா அசத்துறீங்க" என்றாள்.

"நீயும் தான் தேனு. நான் வாங்கிக் கொடுத்தப் பட்டுப்புடவையைக் கட்டிக்கிட்டு அப்படியே என்னை அள்ளுறியே" என்றபடி அவளை இழுத்து அணைத்தான்.

"விடுங்க அர்ஜுன்! யாராவது வரப்போறாங்க" என்று அவனது கையை விலக்கிவிட்டு அங்கிருந்த ஷெல்பில் சாவியைத் தேடினாள்.

" என்ன தேனு என்ன தேடிக்கிட்டு இருக்க?"

"இல்ல ரூம் சாவியைத் தேடிகிட்டு இருக்கேன், இந்த அத்தான் எங்கே வச்சாங்கன்னு தெரியலையே?" என்று மேலும், கீழும் பார்த்தாள்.

தன் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து, "இதுவான்னு பாரு" என்று அவளிடம் காட்டினான்.

"ஆமாம் இதுதான்.நீங்க எடுத்து வச்சிருக்கீங்களா? இது தெரியாமல் நான் சாவியை எல்லா இடத்திலும் தேடிகிட்டு இருக்கேன். வரும் போது நீங்களே பூட்டிட்டு வந்துடுங்க" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முயல அவளுக்கு முன்னால் வேகமாக சென்று கதவை மூடினான்.

மது பதட்டத்துடன், “அர்ஜுன், கதவைத் திறங்க யாராவது பார்த்தால் தப்பாகிடும்" எனச் சொல்லிக்கொண்டே பின்னால் நகர்ந்தாள்.

அவளை நோக்கி முன்னேறியபடி, “உனக்காக நான் என்னோட சீனியர்ஸ்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி, ரெண்டு நாள் பெர்மிஷன் வாங்கிட்டு உன்னைப் பார்க்க ஓடிவந்தா, நீ என் கண்ணுலேயே படாமல் ஆட்டம் காட்டிகிட்டு இருக்க" என்றான் பரிதாபமாக.

“எவ்ளோ கொஞ்சினாலும், கெஞ்சினாலும்... நோ தான்” என்றவள் சிரித்துக்கொண்டே வெளியே செல்ல, அவளையே பார்த்தவன் மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.

திருமணமும், வரவேற்பும் முடிந்து, அனைவரும் அலுத்து களைத்த முகத்துடன் இருந்தாலும், மனம் நிறைவுடன் இருந்தனர்.

வீட்டில் அர்ஜுனும், தீபக்கும் சேர்ந்து ராஜேஷின் அறையை அலங்கரிக்க, மதுவும், மேகலாவும் சேர்ந்து வித்யாவை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். நல்ல நேரம் பார்த்து மேகலாவின் அம்மாவும், பெரியம்மாவும் வித்யாவை அழைத்து செல்ல, மேகலா தன்னுடைய அறைக்குச் சென்று படுத்துவிட்டாள். மது தோட்டத்தில் இருந்து வந்த வாசனையுடன் கூடிய தென்றல் அனுபவித்தபடி மல்லிப் பந்தலின் கீழே சென்று அமர்ந்தாள்.

அந்த ஏகாந்த சுழலை அனுபவித்தபடி கண்களை மூடி அமர்ந்திருந்த மதுவின் அருகில் சத்தமில்லாமல் வந்து அமர்ந்தான் அர்ஜுன். அருகில் அசைவு தெரியவும் மது கண்களைத் திறந்து பார்த்தாள், “என்ன நீங்க தூங்கலையா?" என்றாள் புன்னகையுடன்.

"ஹ்ம்ம்... எங்க தூங்கறது?" என்றவன் மதுவின் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டான்.

“இன்னும் ஒரு நாள்... நாளை மறுநாள் காலைல பத்து மணிக்குக் கிளம்பணும். உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றான் நெகிழ்ச்சியுடன்.

கண்கள் கலங்க அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“உங்களுக்கக வெயிட் பண்ணிட்டு இருப்பேன் அர்ஜுன். உங்களால எப்போலாம் முடியுதோ... என்கிட்டப் பேசணும்” என்றாள் தழுதழுப்புடன்.

“கண்டிப்பா!” என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான். “போய் படுடா... நேரமாகுது” என்றான்.

அவனது அருகாமை தரும் இதத்தை இழக்க மனம் இல்லாத போதும், எழுந்து சென்றாள்.

மறுநாள் மதியம் அவளது மொபைல் ஒலிக்க எடுத்துப் பேசியவளின் கண்கள் கண்ணீரைப் பொழிய, "எங்கே? எந்த ஹாஸ்பிட்டல்?" என்று பதட்டத்துடன் விசாரித்தாள்.

ராஜி, "என்ன மது யாருக்கு என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டார்.

"அத்தை சுரேஷ்... சுரேஷ்..." என்றவளால் மேற்கொண்டு பேசமுடியாமல் தடுமாற, அவளது திணறலைப் பார்த்த அர்ஜுன் வேகமாக இறங்கி வந்தான்.

“என்ன மது என்ன ஆச்சு?" என பதறியவனிடம் ராஜி , “சுரேஷ்க்கு என்னவோ தெரியல, போன் வந்தது" எனச் சொல்லிக்கொண்டே இருக்க விமலா ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து அவளுக்குக் கொடுத்து சற்று ஆசுவாசப்படுத்தினார்.

"சுரேஷ், நேத்து நைட் சூசைட் பண்ணிக்க ட்ரை பண்ணியிருக்கான். ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம். நான் அவனைப் பார்க்கணும் " என்றாள் கண்ணீருடன்.

"அவ்வளவு தானே! நானே, உன்னைக் கூட்டிட்டுப் போறேன்" என்றவன் சொன்னபடி பத்து நிமிடத்தில் கிளம்பி வந்து அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

போகும் வழியில் மது அழாதே அவனுக்கு இப்போ ஒண்ணும் பிரச்சனை இல்லையே. அழாதடா. அங்கே போனதும் நீயும் சேர்ந்து அழுதால் அவங்க அம்மாவுக்கு யார் ஆறுதல் சொல்வது" என தேற்ற மதுவும் சற்று சமாதானம் அடைந்தாள்.

ஆனால், மருத்தவமனைக்கு வந்து சுரேஷை பார்த்ததும் அவளால் தன்னைக் கட்டுப்படுதிக்கொள்ளவே முடியவில்லை. “இவன் இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவேஇல்லை ஆன்ட்டி. அன்னைக்கு என்கிட்டப் பேசும்போது நான் எதோ என்னை மிரட்டத் தான் அப்படிச் சொல்றான்னு நினைச்சேன். நான், அதைக் கொஞ்சம் கூடச் சீரியசா எடுத்துக்கல. இப்போ இப்படிச் செய்துவிட்டானே”என்றாள் அழுகையுடன்.

அதற்குள் சுரேஷின் தாயாருடன் பணிபுரிபவர்கள் வரவும், மது அந்த இடத்தை விட்டு நகர்ந்து அந்த வராண்டாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் வந்து அமர்ந்தாள். அவள் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், இரு கைகளால் தன் தலையை தாங்கிப் பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்க, தன்னை யாரோ உற்று பார்ப்பதைப் போல உணர்ந்து நிமிர்ந்தாள். அர்ஜுன், அவளருகில் வந்தான்.

"என்ன மது யாரை அப்படித் தேடிகிட்டு இருக்க?"

"இல்ல யாரோ என்னைப் பார்க்கறது போல இருந்தது” என்றாள்.

“பின்ன, இப்படிக் கதறி அழுதா...” என்றவன், அவளது தோளைத் தட்டிக்கொடுத்தான்.

“நான் ஆன்ட்டிகிட்டச் சொல்லிட்டு வரேன். கிளம்பலாம்" எனச் சொல்லிவிட்டு அபிராமியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். வராண்டாவின் திருப்பத்தில் தனக்கு முதுகைக் காட்டியபடி போனில் பேசிக்கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்து காரில் ஏறி அமர்ந்தாள்.

"ஏய் தேனு.... நான் இங்கே இருக்கேன். நீ என்னடான்னா யாரையோ பார்த்துகிட்டு வரியே?"

"சும்மா விளையாடாதீங்க அர்ஜுன்! பின்னால பார்க்க உங்களை மாதிரியே இருந்தது" என்றாள்.

காரை, ஸ்ரீராமின் ஹோமிற்குச் செல்லும் வழியில் செலுத்தினான். மதுவிற்கும் அந்த நேரம் மன அமைதி தேவையாக இருந்தது. அங்கிருந்த நேரம், அந்த நிம்மதியை உணர்ந்தாள்.

மறுநாள் காலையில் அர்ஜுன் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.

கிளம்பும் நேரம் மதுவிடம் , “மது! மூணு மாதம் சீக்கிரம் ஓடிவிடும். நான் முடிந்தவரை உன்னோடு பேச முயற்சி செய்றேன்.ஓகே. நல்லா படி கோல்ட் மெடல் நியாபகம் இருக்கா?'' எனக் கேட்க, மதுவும் தன் பிரிவு துயரை மறைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே தலை அசைத்தாள்.

“சரி, நீ அப்பப்போ போய்ச் சுரேஷைப் பார்த்துப் பேசிட்டு வா. நம்ம கல்யாணம் முடியட்டும். சுரேஷ், கீதா விஷயத்தைப் பேசி நான் முடிச்சி வைக்கிறேன். லவ் யூடா தேனு!” என அவள் கையைப் பற்றி அழுத்தி விட்டு அவளது பார்வையிலிருந்து மறையும் வரை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான்.

“ஐ லவ் யூ அர்ஜுன்” என்று முணுமுணுத்த தங்கையை ஆறுதலுடன் தோளில் தட்டினான் ராஜேஷ். சிறு புன்னகையுடன் அர்ஜுன் சென்ற வழியைப் பார்த்துவிட்டு, அண்ணனுடன் கிளம்பினாள்.


அத்தியாயம் – 40​தனது ட்ரெயினிங் பீரியட்டை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, அன்று டெல்லி திரும்பும் அர்ஜுனை வரவேற்க, சென்னையிலிருந்து அண்ணனுடன் வந்திருந்தாள் மதுமிதா.

சந்தோஷத்துடனும், பரபரப்புடனும், நிமிடதிற்கு ஒருமுறை தன் கைகடிகாரத்தைப் பார்ப்பதுமாக நேரத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தாள். ராஜேஷ் தன் தங்கையின் தவிப்பைப் பார்த்துவிட்டு , “மதும்மா! மூணு மாசம் அர்ஜுனைப் பார்க்காமல் இருந்த. இன்னும் பத்து நிமிடத்தில் ப்ளைட் வந்துட போகுது. அதுக்குள்ளே இந்தத் தவிப்பு தவிக்கிறேயேடா" என்றான் தங்கையிடம்.

“உங்களுக்கு என்ன தெரியும், எங்க தவிப்பு? உங்களுக்கெல்லாம் கண்டதே காட்சி கொண்டதே கோலம்ன்னு இருப்பீங்க. எங்களைக் கூட்டிக்கிட்டு வெளியே போக வேண்டியது. ஆனா, வழியில யாரையாவது பார்த்துட்டா, கூட வந்த எங்களை மறந்து போய்விடும். ஆனா, நாங்க எங்கே போனாலும், என்ன செய்தாலும், மனசெல்லாம் உங்களையே சுத்தி வரும்ன்னு மறந்துடறீங்க" என்றாள் வித்யா.

"ஹப்பா! இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு, இப்படி ஒரு பதில். நாத்தனாருக்கு ரொம்பத் தான் சப்போர்ட்., இனி, நான் ஏதாவது வாயைத் திறந்தா கேளு" என்றான்.

விமலாவும், சந்துருவும் இவர்களின் பேச்சையும், மதுவின் தவிப்பையும் பார்த்தும் பார்க்காமல் சற்று தள்ளி அமர்ந்திருந்தனர்.

மதுவின் கவனமெல்லாம் வந்துகொண்டிருந்த அனௌன்ஸ்மென்டில் இருக்க, அவசரமாக ராஜேஷிடம் வந்த மது, “அண்ணா அவர் வர்ற ஃப்ளைட் வந்தாச்சு.வாவா” என்று பொக்கேவை எடுத்துக்கொண்டு முன்னால் சென்று அவனைத் தேடினாள்.

அவள் எண்ணத்தின் நாயகன், ட்ராலியைத் தள்ளிக்கொண்டு வந்தபடி தன் மொபைலில் ஏதோ அழுத்தியபடி வந்தவனது முகத்தில் களைப்பையும் மீறி எரிச்சல் தெரிந்தது.

அதைக் கவனித்த மது சைலன்ட்மோடில் இருந்த தன் மொபைலைப் பார்த்தாள். அதில் நான்கு மிஸ்ட் கால்கள் அர்ஜுனின் நம்பரிலிருந்து வந்திருப்பது தெரிந்து சந்தோஷத்தோடு சிரித்துக்கொண்டே அவனுக்குப் பின்புறம் சென்று நின்றாள்.

அவன் பின்னால் நின்றபடி, “எக்ஸ்கியூஸ்மீ" எனச் சொல்ல, “எஸ்" என்றபடி திரும்பியவன், அங்கே தன் காதல் தேவதையே நேரில் கண்டதும் ஆச்சரியத்துடன், “தேனு!" என்றான்.

“வெல்கம் பாக் டு ஹோம் டௌன்" எனச் சொல்லி இரு கண்களையும் சிமிட்டியபடி பொக்கேவை அர்ஜுனிடம் நீட்டினாள்.

புன்னகையுடன் வாங்கிக்கொண்டு, “தேங்க்ஸ் தேனு! வாட் எ ஸர்ப்ரைஸ். எப்படிடா இருக்கே?" என மதுவின் கைகளை பிடித்துக்கொண்டான் .

"அத்தை, மாமா வராங்க" என்று கையை அவன் பிடியிலிருந்து விலக்கிக்கொண்டாள்.

இவர்களுக்காகவே மெதுவாக வந்தவர்கள், அர்ஜுனின் அருகில் வந்ததும், அர்ஜுனை விசாரிக்க, தன் பெற்றோரின் கால்களை தொட்டு வணங்கியவன் ராஜேஷை தன்னோடுச் சேர்த்து அணைத்துக்கொண்டான். வித்யாவை நலம் விசாரித்துவிட்டு அனைவரும் வீட்டிற்குப் புறப்பட்டனர்.

மதுவின் அருகில் வந்த வித்யா, “இதுக்கு மேல மெதுவா வர முடியல மது!" என்று சொல்ல, நறுக்கென வித்யாவின் கையைப் பிடித்துக் கிள்ளினாள்.

வீட்டிற்கு வந்து இறங்கிய பிறகு மதுவோடு பேசவே முடியவில்லை. மாற்றி மாற்றி அவனுக்குப் போன் வந்த வண்ணம் இருக்க, நண்பர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்ல என்று நேரம் கடந்து கொண்டிருந்தது.

அர்ஜுன் காலை உணவை முடித்துக்கொண்டு சிறிதுநேரம் ரெஸ்ட் எடுப்பதாக கூறி தன் அறைக்குச் சென்றான். டைனிங் ஹாலில் அமர்ந்து வித்யா, விமலாவுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறி செல்லும் அர்ஜுனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அர்ஜுன் மேல் படிக்குச் சென்றதும் அங்கிருந்து டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தவளைத் திரும்பிப் பார்த்தான். அதை எதிர்பார்த்த மது சட்டென தன் பார்வையை விலக்கி வித்யாவுடன் பேசுவது போலப் பாவனை செய்ய, முறுவலுடன் தன் அறைக்குச் சென்றான்.

சாப்பிட்டு முடித்ததும் மதுவை அழைத்து, “இந்த ஜூஸை அர்ஜுன் கிட்டக் கொடுத்துட்டு வாம்மா" என்று ஜூஸ் டம்ளரை மதுவின் கையில் கொடுத்தார் விமலா.

டைனிங்கிற்கு வந்தவள், “வித்யா, இந்த ஜூஸை உங்க அண்ணனுக்குக் கொஞ்சம் கொடுத்துட்டு வாயேன்" என்றாள்.

"இங்கே பாரு... உங்க அண்ணனுக்கு ஏதாவது கொடுக்கணுமா சொல்லு... போய்க் கொடுத்துட்டு வரேன். எங்க அண்ணனுக்கு நீயே கொண்டு போ. அவர் உன்னைத் தான் எதிர்பார்த்துட்டு இருப்பார்" எனச் சொல்லிவிட்டுச் செல்ல. மதுவே தயக்கத்துடன் எடுத்துக்கொண்டு அர்ஜுனின் அறைக்குச் சென்றாள்.

கதவை லேசாக திறந்துவைத்துவிட்டுக் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்த அர்ஜுன் மது ஜுஸ் எடுத்து வருவதைப் பார்த்தவன் அவசரமாக எழுந்து கதவின் பின்னால் சென்று நின்றுகொண்டான்.

மது கதவை ஒருமுறை தட்டிவிட்டு காத்திருக்க உள்ளிருந்து சத்தமே வரவில்லை. ஒருவேளை தூங்கி விட்டானோ என நினைத்து கதவைத் திறந்து உள்ளே உள்ளே வந்தவள் கட்டிலில் அர்ஜுனைக் காணாமல், லாஞ்ஜில் அமர்ந்திருக்கிறானோ என கதவைத் திறந்து பார்க்க அங்கேயும் காணாமல் திரும்ப எதன் மீதோ மோதிக்கொண்டவள், நிமிர்ந்து பார்க்க அர்ஜுன் கைகளைக் கட்டிக்கொண்டு புன்னகையுடன் இருபுருவங்களையும் உயர்த்தி என்ன என கேட்க,

"இல்ல ஜுஸ் நான் குடிக்க... இல்ல நீங்க குளிக்க.... ச்ச, நீங்க குடிக்க ஜுஸ் அத்தை கொடுத்துட்டு வரச்சொன்னாங்க" என டம்ளரை நீட்ட, அவளது உளறலை ரசித்தபடி டம்ளரை வாங்காமல் அவளையே பார்த்தான்.

மது கூச்சத்துடன் ஜுஸ் டம்ளரை அங்கிருந்த டேபிள் மேல் வைத்து விட்டு அறைக்கதவைத் திறக்க முயல கதவு திறக்க முடியாமல் லாக் ஆகி இருக்க மது திரும்பி அர்ஜுனைப் பார்த்தாள்.

அர்ஜுன் தன் கையிலிருந்த சாவியைக் காட்டினான். மது "விளையாடாதீங்க அர்ஜுன், எல்லோரும் ஹாலில் உட்கார்ந்துகிட்டு இருக்காங்க. நீங்க கதவை மூடி வச்சிக்கிட்டு விளையாடிகிட்டு இருக்கீங்க" என்றாள் பதட்டத்துடன்.

அருகில் வந்தவன், “உன்கிட்ட யாரு ஜூஸைக் கொடுத்து அனுப்பியது?" என்றான்.

“அத்தை தான்..."

"கொடுத்துட்டு உடனே வரவா சொன்னாங்க. சரியான பைத்தியமா இருக்கியே. நாம ரெண்டு பேரும் தனியா பேசத்தானே அம்மா உன்னை மேலே அனுப்பி இருக்காங்க" எனச் சொல்லிக்கொண்டு அவள் கையை பிடித்து அழைத்து சென்று சோஃபாவில் அமர்ந்தான். மதுவின் கையை எடுத்து தன் கன்னத்தில் பதித்துக்கொண்டவன், இமைக்காமல் அவளைப் பார்த்தான்.

"என்னங்க ஆச்சு உங்களுக்கு ?" என்றாள் புன்னகையுடன்.

"லவ் யூடா தேனு! இந்த மூணு மாசம்... ஹப்பா! எப்படி உன்னைப் பார்க்காமல் இருந்தேனோ? இப்போ நினைச்சா ஆச்சரியமா இருக்கு."

"எல்லாத்தையும் ஒரு நாளைக்குக் கடந்து வந்து தானே ஆகணும். ஆனால், முன்னைக்கு கொஞ்சம் இளைச்சி இருக்கீங்க. ட்ரைனிங்ல ரொம்ப வேலை வாங்கிட்டாங்களா?" எனக் கவலையுடன் கேட்டவளைப் பார்த்துச் சிரித்தபடி, “இது என்னோட தலைவியை பிரிந்த ஏக்கத்தால் வந்த இளைப்பு. இப்போ தான் தேவியார் நேரடியா வந்து எதிர்பாராமல் ஒரு தரிசனம் கொடுத்து அசத்திட்டீங்களே" எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போது மொபைல் ஒலிக்க, எழுந்து சென்று பேசிவிட்டு வந்தான்.

"தேனு! சீக்கிரம் கிளம்பு. மதியானம் நாம என்னோட சீனியர் வீட்டுக்குப் போறோம். நமக்கு மதியம் லஞ்ச் அவங்க வீட்டில் தான். அங்கே போனதுக்கு அப்புறம், நான் மீதியைச் சொல்றேன்" என்றவன், தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டு ராஜேஷ், வித்யாவையும் உடன் அழைத்தான். அவர்கள் இருவரும் மறுத்துவிட, மதுவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

“சுபா… சுபா. ..” என்று அழைத்தபடி சித்தார்த் வருணைத் தூக்கிக்கொண்டு கிச்சனுக்கு வந்தான்.

"என்ன சித்தார்த்? வருண் உன்னைப் படுத்தறானா?" எனக் கேட்டபடி கிச்சனிலிருந்து வெளியே வந்தாள் சுபாஷிணி.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவன் சமர்த்துப் பையன். என்ன இன்னைக்குச் சமையல் வாசனை மூக்கைத் துளைக்குது. நீ வேற சமையல் ரூமே கதின்னு இருக்கியேன்னு கேட்டேன்."

"இன்னைக்கு ஸ்பெஷல் தான். ஒரு முக்கியமான கெஸ்ட் வராங்க. நீ வெளியே எங்கேயும் போகலையே. வீட்ல தானே இருக்க?"

"இன்னைக்குச் சண்டே தானே... வீட்ல தான் இருப்பேன். ஏதாவது முக்கியமான வேலைன்னா போன் வரும்" என்றான்.

"உங்க மாமாவை வேற காணோம். வருணை இன்னும் கொஞ்ச நேரம் நீ பார்த்துக்கோ. நான் போய்க் குளிச்சிட்டு வந்துதுடுறேன்" என்று தன் அறைக்குச் சென்றாள்.

சித்தார்த், வருணுடன் விளையாடிக்கொண்டிருக்க காலிங் பெல் சப்தம் கேட்டு வருணை கதவைத் திறந்தான். அங்கே தன் வயதை ஒத்த, உருவ அமைப்பிலும் ஏறக்குறைய தன்னை ஒத்திருந்தவனைக் கண்டதும், அவனது விழிகள் பளிச்சிட்டன.

ஒரு கணம் யோசித்த சித்தார்த், "நீங்க அர்ஜுன் தானே?" என்றான்.

அவன் சிரித்துக்கொண்டே, “நீங்க சித்தார்த்! சுபா அக்காவோட பிரதர். கரெக்டா?" என கேட்க, இருவரும் சிரித்துக்கொண்டே கை குலுக்கிக் கொண்டனர். சித்தார்த் அர்ஜுனை உள்ளே அழைத்து சென்றான்.

"வாவா அர்ஜுன்! பார்த்து மூணு மாசம் ஆயிடுச்சி . எப்படியிருக்க? அம்மா, அப்பா எல்லோரும் எப்படியிருக்காங்க?" விசாரித்தபடி வந்தாள் சுபா.

"எல்லோரும் நல்லாயிருக்காங்க. நீங்க எப்படியிருக்கீங்க? சார் எங்கே இன்னும் வரலையா?" என்றான்.

"உங்க சார் தானே! அதெப்படி சொன்ன நேரத்துக்கு வந்துட்டா என்ன ஆவது? ராஜஸ்தான் ஏர் பேஸ்லயிருந்து போன் வந்திருக்காம். அதான் வர கொஞ்சம் நேரம் ஆகும்னு இப்போ தான் போன் செய்து சொன்னார்" என்றாள்.

"ராஜஸ்தான் ஏர் பேஸ்லயிருந்தா ஏதாவது ப்ராப்ளமா என்ன?" எனக் கவலையுடன் கேட்டான்.

"போதும்டா! உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் போய்டுச்சி. நீ ஒரு வாரம் லீவ்ல தானேயிருக்க. நிம்மதியா இரு” என்றவள், “இவன்தான் என்னோட தம்பி சித்தார்த். இங்கே எம்.என்.சியில் வேலை செய்கிறான். ஆறேழு மாசமா இங்கே தான் இருக்கான். இதுக்கு முன்னால் தனியா இருந்தான். நீ வரும் போது அவன் இருக்க மாட்டான் அதனால் தான் உனக்கு முதலிலேயே அறிமுகப்படுத்த முடியல."

"நீ இவ்வளவு லேட்டா எங்களை அறிமுகப்படுத்துவேன்னு தெரியும். அதான், வந்ததும் நாங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகப்படுத்திக்கிட்டோம்" என்று சிரித்தான் சித்தார்த்.

"அப்புறம் அர்ஜுன் கேட்க மறந்துட்டேன்னே, உன்னோட தேனு எப்படியிருக்கா?" என்றாள்.

அவள் கேட்டது தான் தாமதம், "ஹய்யையோ! அக்கா... நான் என் தேனையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். உங்களுக்கு ஒரு ஸர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு, அவளைக் கார்லயே உட்கார வச்சிட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன். இங்கே வந்ததும் பேச்சு சுவாரஸ்யத்தில் மறந்துதே போய்ட்டேன். இருங்க போய்க் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

"போ போ உன்னோட தேனு இந்த நேரம் வெயில்ல வச்ச தேனா கொதிச்சிக்கிட்டு இருக்கப் போறா" என்று சிரித்தாள்.

அர்ஜுன் சென்றதும், "அது யாரு சுபா தேனு?” என்றான் சித்தார்த்.

“அர்ஜுனோட ஃபியான்சி. இவன் அவளைத் தேனுன்னு தான் கூப்பிடுவான். ஒரு நாள் இங்கே வந்திருந்தப்போ அந்தப் பொண்ணோட போன் வந்திருந்தது. இவன் தேனு தேனுன்னு பேசிக்கிட்டு இருந்தான். அதிலிருந்து இவனை அப்பப்போ அதைச் சொல்லியே கிண்டல் செய்துட்டு இருப்பேன்" என அவள் சொல்லிக் கொண்டிருக்க , சித்தார்த்தின் அலுவலகத்திலிருந்து போன் வரவும் அவனை முறைத்தாள்.

அவன் சிரித்துக்கொண்டே, தன் அறைக்குச் சென்றான்.

"ஹ்ம்ம்.. போன் வந்தாச்சா. இனி, இவன் எங்கே வீட்லயிருக்கறது! என்னவோ இவன் ஒருவன் தான் அங்கே வேலை செய்வது போல இவன் உயிரை வாங்க வேண்டியது." என திட்டிக்கொண்டிருக்க, அர்ஜுனும், மதுவும் உள்ளே வருவதைப் பார்த்தவள் "வாம்மா" என மதுவை வரவேற்றாள்.

அர்ஜுனின் காதில், “அர்ஜுன், உன்னோட தேனு போட்டோல பார்த்ததைவிட, நேர்ல சூப்பரா இருக்கா. நீ ஏன் தேனு தேனுன்னு உருகறன்னு, இப்போ தானே தெரியுது. சும்மா சொல்லக்கூடாது ஜோடிப் பொருத்தம் பிரமாதம்!" என்றாள் கிசுகிசுப்பாக.

"ரொம்பத் தேங்க்ஸ்க்கா" என்றவன், “தேனு! இவங்க தான் சுபா அக்கா. இவங்க ஹப்பி என்னோட பாஸ். வீட்ல இவங்க அவருக்குப் பாஸ்" என்று சிரித்தான்.

"நானாவது கல்யாணத்துக்கு அப்புறம் தான் என் வீட்டுக்காரருக்குப் பாஸ். ஆனா, நீ இப்போவே உன்னோட தேனை உனக்குப் பாஸ் ஆக்கிட்டியே" என்று பதிலுக்குச் சிரித்தாள்.

மது வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே சுபாவைப் பார்க்க, “நான் அர்ஜுனோட பாஸ்சுக்கு வைஃப் மட்டும் இல்ல. உனக்கு நாத்தனார். புரிஞ்சுதா தேனு?" எனச் சொல்ல, “உங்களுக்கும் நான் தேனா?" என்றாள் மதுமிதா.

“எல்லாம் இந்த அர்ஜுனால. அவன்தான் தேனு தேனுன்னு சொல்லி உன்னோட உண்மையான பேரே எனக்கு மறந்து போச்சு” என்றாள்.

"உனக்கு ஒண்ணு தெரியுமா? அர்ஜுன் மாதிரியே, எனக்கு ஒரு தம்பி இருக்கான். அர்ஜுனை முதன்முதல்ல பார்த்ததும் எனக்கு என் தம்பியைப் பார்ப்பது போலவே இருந்தது.ரெண்டு பேரோட மேனரிஸமும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கும். எனக்கே இது ஆரம்பத்தில் ரொம்ப ஆச்சரியமா இருக்கும்" எனச் சொல்ல, மது அனைத்தையும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டாள்.

வருணனைப் பார்த்தும் மது, குழந்தையுடன் விளையாட ஆரம்பிக்க, சுபா கிச்சனுக்கு எழுந்து சென்றாள். குழந்தையுடன் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டே மது பின்னால் இருந்த தோட்டத்திற்குச் சென்றாள்.

அலுவலகம் செல்லத் தயாராகி வந்த சித்தார்த்தை முறைத்தபடி, “என்னடா ஆபீஸ் கிளம்பியாச்சா?" என்றாள்.

"கோச்சிக்காத சுபா, வைரஸ் அட்டாக் ஆகி நூத்தி அம்பது கம்ப்யூட்டர் முழுசா ஷட் டௌன் ஆயிடுச்சி. நான் கிளம்பணும்” என்றவன் அர்ஜுனிடம், “சாரி அர்ஜுன்! என்னால உங்களோடு டைம் ஸ்பெண்ட் பண்ண முடியல. அவசரமா ஆபீஸ் போகணும்" என்றான்.

"பரவாயில்லை சித்தார்த் நீங்க கிளம்புங்க. நைஸ் டூ மீட் யூ" என்றான்.

"சித்தார்த் இந்த சூப்பையாவது கொஞ்சம் குடிச்சிட்டுப் போடா"

"சரி கொடு” என இரண்டு ஸ்பூன் மட்டும் எடுத்துக் குடித்துவிட்டு, “வரேன் சுபா. நான் எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது. நைட் எனக்காக வெயிட் பண்ணாதே " என்றவன் புறப்பட்டான்.

சித்தார்த்தை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த சுபா, "மதுமிதாவுக்கு அவனை அறிமுகப்படுதணும்னு நினைச்சேன் அர்ஜுன். சரி, இன்னொரு நாள் பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டு அர்ஜுனிடம் பொதுவாக பேச ஆரம்பித்தாள்.

சற்றுநேரத்தில் ஹரியும் வந்துவிட அறிமுகப்படலம் அனைத்தும் முடிந்து கலகலவென பேசிக்கொண்டே சாப்பிட்டனர். மாலை ஆறு மணிக்கு அர்ஜுனும் மதுவும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர். இந்த ஐந்து மணி நேர பழக்கத்தில் மது சுபாவை அண்ணி என்றும், ஹரியை அண்ணா என்று அழைக்கும் அளவுக்குப் பழகி இருந்தாள்.

மது, “அண்ணி நான் நாளைக்கு நைட் ஊருக்கு கிளம்பறேன். நீங்க சென்னை வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்" என்று அன்புக் கட்டளை இட்டுவிட்டுக் கிளம்பினர்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் – 41


காரில் வரும்போது அர்ஜுன் சுபாவைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

"சுபா அக்கா, தம்பி மாதிரின்னு சொல்வது மட்டும் இல்ல. தன்னோட தம்பிக்கு எது வாங்கினாலும், அதே போல எனக்கும் வாங்கிட்டு வருவாங்க. ஒருமுறை வெளிநாடு போயிட்டு வந்தபோது எனக்கும் அவங்க தம்பிக்கும் ஒரே மாதிரி டி-ஷர்ட் வாங்கிட்டு வந்தாங்க. உனக்குக்கூட அந்த டி-ஷர்ட் ரொம்பப் பிடிக்குமே" என்றான்.

“அந்தப் பழுப்பு கலரும் வெள்ளைக் கலரும் சேர்ந்த டி-ஷர்ட்டா" என்று கேட்க அர்ஜுன் ஒப்புதலாக தலை அசைத்தான்.

சிரித்துக் கொண்டவள், “உங்களால எனக்குப் புதுசா அண்ணின்னு ஒரு உறவு கிடைச்சிருக்கு. எனக்கு அவங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு அர்ஜுன். உறவில்லாத ஒருத்தர்கிட்ட இவ்ளோ அன்னியோன்யமா இருக்கறது ரொம்பவே ஆச்சரியம் இல்ல” என்றவளுக்கு ஒப்புதலாகத் தலையசைத்தான்.

அன்று இரவு சந்த்ருவும், விமலாவும் ஒரு பார்ட்டிக்குச் சென்றுவிட ராஜேஷ், வித்யா, அர்ஜுன்,மது நால்வரும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அர்ஜுனும், ராஜேஷும் ஷேர் மார்க்கெட், தொடங்கி உலக விஷயங்கள் என அலசிக் கொண்டிருந்தனர்.

அர்ஜுனின் பார்வை மதுவிடம் சென்று வருவதைக் கவனித்த வித்யா, “எனக்குத் தூக்கம் வருது கீழே போகலாமா?" என்றாள் இருவரையும் ஜாடையாகக் காட்டி.

அதைப் புரிந்து கொண்ட ராஜேஷ், "ஆமாம் எனக்கும் தூக்கம் வருது. போய்ப் படுக்கலாம்" என்று எழுந்ததும் மதுவும் எழுந்தாள். “நீ தூக்கம் வரும் வரை, பேசிட்டு வா மது" என்றவன் வித்யாவை அழைத்துக்கொண்டு சென்றான்.

அர்ஜுன் புன்னகையுடன் அவளைப் பார்க்க, நாணத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டாள் அவள்.

"நாணமோ, இன்னும் நாணமோ இந்த ஜாடை நாடகம் என்ன? அந்த பார்வை கூறுவதென்ன" என்று அவன் பாட, “எனக்குத் தூக்கம் வருது அர்ஜுன். நான் கீழே போறேன் குட் நைட்" என்றபடி எழ, அவன் எதுவும் சொல்லாமல் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

மது மீண்டும், “நான் தூங்கப்போறேன் அர்ஜுன்" என்றாள்.

"எனக்கு நல்லா காது கேட்கும் தேனு! தாராளமாய் போய்த் தூங்கு. குட் நைட்" என்றான்.

எரிச்சலுடன் பொத்தென மீண்டும் சேரில் அமர்ந்தாள்.

“என்ன தேனு தூங்கப் போகல" என்று கேட்டான்.

“ம்ம், தூக்கம் வரல” என்றாள் முறைப்பாக.

"தூக்கம் வரலையா? சரி, அப்போ நீ இரு. எனக்குத் தூக்கம் வருது” என்றவன் கைகளுக்கு இடையில் கொட்டாவியை வெளியேற்றினான்.

“உனக்குத் தூக்கம் வரலைன்னா இந்தப் புக்கை படிச்சிக்கிட்டு இரு" என்று அவள் மடியில் வைத்துவிட்டு, "குட் நைட் தேனு!” என்றவன் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி, “ஹப்பா! என்ன அசதி போய் நல்லா தூங்கணும்" எனச் சொல்லிக்கொண்டே அங்கிருந்து செல்ல, அவள் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள்.

"இவனுக்காக நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இவன் என்னடான்னா தூங்கப் போய்ட்டான். இதுல தூக்கம் வரலைன்னா படின்னு புத்தகம் வேற" எனச் சொல்லிக்கொண்டே கோபத்தோடு புக்கை தூக்கி எறிந்தாள். எதிரில் வந்து நின்றவன் அதைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, அவன் திரும்ப வந்து எதிரில் நிற்பான் என எதிர்பாராத மது கோபத்துடன் எழுந்தாள்.

அவள் கையைப் பற்றி நிறுத்தியவன், “என்ன தேனு தூக்கம் வருதா?" என்று வேண்டுமென்றே கேட்க. "அர்ஜுன்!" என்று சிணுங்கினாள்.

அவள் தலையில் தன் கன்னத்தைப் பதித்துக்கொண்டு, "ஐ லவ் தேனு!" என்றதும், “நானும்” என்றாள் கொஞ்சலாக.

"தேனு! நான் ரொம்ப லக்கிடீ" என்றான்.

"உங்களை விட, நான் தான் ரொம்ப லக்கி. சின்ன வயசுலேயே அம்மா, அப்பா இல்லாம வளர்ந்த எனக்கு மாமா, அத்தை ரெண்டு பேரும் ஒரு குறையும் இல்லாமல் வளர்த்து ஆளாகிட்டாங்க. கல்யாணத்துக்குப் பிறகும், எனக்கு ஒரு குறையும் இல்லாம மாமனார் மாமியார்ன்னு சொல்ல முடியாமல், அவங்களும் எனக்கு இன்னொரு அம்மா, அப்பாவா இருக்கப் போறாங்க. எல்லாத்துக்கும் மேல, எனக்கு நீங்க கிடைசிருக்கீங்கன்னு நினைக்கும் போதே, நானும் கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்திருக்கேன் போல" என்று கண்கலங்கினாள்.

"என்னடா தேனு எதுக்கு இப்போ இப்படி கண்கலங்குற" என அவள் கண்களை துடைக்க, “நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் அர்ஜுன். இப்படியே நான் செத்துப்போனாலும் எனக்குச் சந்தோஷம்" என்றவளை விலக்கி நிறுத்தினான்.

"போய்ப் படு மது! நேரம் ஆகுது" என்றவன் அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி நின்றான்.

‘திடீரென என்னவாயிற்று இவனுக்கு?’ என யோசித்தபடியே, “நீங்க வரலியா?" என்றாள்.

"நீ போ! நான் கொஞ்சநேரம் கழித்து வருகிறேன்" எனத் திரும்பாமலேயே பதில் சொல்ல, எதுவும் புரியாமல் தன் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டாள்.

மறுநாள் காலையில் எப்போதும் வரும் போனும் வராமல், மது தவிப்புடன் தன் வேலைகளை முடித்துக்கொண்டு கீழே வந்தாள். விமலாவிடம் எப்படிக் கேட்பது என புரியாமல் தவிப்புடன் இருந்தாள். காலை உணவிற்கு வருவான் என எண்ணி காத்திருக்க, அவன் வரவேயில்லை.

"அத்தை! அவர் சாப்பிட வரலியா?" என விமலாவிடமே கேட்டாள்.

"அவன் காலைல ஐந்து மணிக்கே கிளம்பிப் போய்ட்டானேம்மா. உன்னிடம் நேத்தே சொல்லி இருப்பான்னு நினைத்தேனே" என்றவர், அவளின் முக வாட்டத்தையும் கவனித்த்தார். ஆனால், எதுவும் கேட்கவில்லை.

இதைக் கவனித்த வித்யா, “மது! உனக்கும், அண்ணனுக்கும் ஏதாவது பிரச்சனையா?" என்றாள்.

சிரித்துக்கொண்டே , “அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் போய் என்னோட ட்ரெஸ்செல்லாம் பேக் பண்றேன்" என்று அறைக்கு வந்தவள் அவனது செயலுக்கான காரணம் புரியாமல் தயாராகிக் கொண்டிருந்தாள்.

தான் பேசிய ஏதோ ஒன்று அவனைக் காயப்படுத்தி இருக்கிறது என்று புரிந்து கொண்டவளுக்கு, மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொன்ன வார்த்தையையே அவனால் தாங்க முடியவில்லையே... நான் கொடுத்துவைத்தவள் என்று சந்தோஷத்துடன் அர்ஜுனுக்குப் போன் செய்தாள்.

இவளுடைய எண்ணைப் பார்த்ததும் போனைக் கட் செய்தான். திரும்பத் திரும்ப முயல போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டான். மதுவிற்கு அழுகை வந்தது. ‘ஒரு வேளை முக்கியமான மீட்டிங் எதாவதில் இருக்கிறானோ!’ அவனே தன்னை தொடர்பு கொள்வான் என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டாள்.

ஆனால், இரவு ஸ்டேஷன் வரும் வரை, அர்ஜுன் வீட்டிற்கு வரவே இல்லை. மது தன்னைச் சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக்கொண்டாலும், அவளது முக வாட்டத்தை வைத்தே இருவருக்கும் எதோ பிரச்சனை என்று ஊகித்துக் கொண்டனர்.

விமலாவிற்கு, மகனின் மீது கோபமாக வந்தது. ‘எப்போ பாரு அந்தப் பொண்ணை அழவைப்பதே இவனுக்கு வேலையாக போச்சு’ என மனதிற்குள் திட்டிக்கொண்டார்.

ட்ரைனில் ஏறிய பின்னரும்,அவன் எங்காவது தென்படுகிறானா என எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ட்ரைன் கிளம்ப ஐந்து நிமிடம் இருக்கும் போது அர்ஜுன் தூரத்தில் வருவது தெரிந்ததும், மதுவின் முகம் மலர்ந்தது.

சந்தோஷத்துடன், “அத்தை! அவர் வராரு" என்றவள் சிரிப்புடன் அவனைப் பார்த்தாள். வந்தவன் ராஜேஷ், வித்யாவுடன் பேசிக்கொண்டு இருந்தானே தவிர, அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை.

விமலா, “மது ட்ரைன் கிளம்ப சிக்னல் கொடுத்தாச்சு ஏறும்மா" எனச் சொல்ல மதுவும் கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்தபடி ஏறினாள். அவ்வளவு நேரம் மதுவைப் பார்க்காமல் தவிர்த்த அர்ஜுனால், அதற்கு மேல் முடியாமல் அவளைப் பார்த்தான். அந்த நேரம், அவள் கண்களைத் துடைத்தபடி உள்ளே செல்லத் திரும்பியது தான் அவன் கண்ணில் பட்டது.

அவளது கலங்கிய விழிகளைப் பார்த்தவனால் அன்று இரவு முழுதும் தூங்க முடியவில்லை. விமலாவும் ஜாடைமாடையாக அவனைத் திட்டிக்கொண்டிருந்தார். ட்ரைனில் வித்யாவின் வற்புறுத்தலால் மது ஏதோ சாப்பிட்டுக்கொண்டு வந்தாள்.

வீட்டிற்கு வந்தவள் அத்தை, மாமாவுடன் பேசிவிட்டுத் தன் அறைக்கு வந்தாள். வெளியே சென்றிருந்த தீபக், அவளைத் தேடிக்கொண்டு அவள் அறைக்கு வந்தான்.

"ஏய் அல்லிராணி! உன்னோட அர்ஜுனரைப் பார்த்துட்டு வந்துட்டியா? என்ன சொன்னார் உன்னோட அர்ஜுன்? உன்னைப் பார்த்ததும் அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்டாரா" எனக் அவன் கேட்டுக்கொண்டிருக்க, ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

"என்னடி டெல்லி போயிட்டு வந்ததும், பேசாமடந்தை ஆயிட்டியா?" என்று அவள் முகத்தைப் பற்றி நிமிர்த்த, மது அவசரமாகத் தன் கண்களைத் துடைத்தாள்.

"மது! என்னடா, என்ன ஆச்சு?" எனப் பதறிப்போய்க் கேட்டதும், அனைத்தையும் அவனிடம் கொட்டினாள்.

"சரிடா, நீ பேசினது அவருக்குக் கஷ்டமா இருந்திருக்கும். சரி விடு. எல்லாம் சரி ஆகிடும். நான் இப்போவே அர்ஜுனுக்குப் போன் செய்து பேசறேன்" என்றான்.

"ஒண்ணும் தேவை இல்ல. யாரும் எனக்காக பேச வேணாம். எங்க பிரச்சனையை நாங்களே பேசி தீர்த்துக்கறோம். சொல்லபோனால் இது பிரச்சினையே இல்ல. அவர் மனசு கஷ்டப்படறா மாதிரி நான்தான் பேசினேன். அவர் மேல எந்தத் தப்பும் இல்ல. அவருக்கா எப்போ பேசணும்னு தோணுதோ அப்போ அவரே போன் பண்ணுவார். அவர் பேசாததுல எனக்குச் சந்தோஷம் தான். என்மேல அவர் எவ்ளோ பாசமா இருக்காருன்னு நானும் தெரிஞ்சிக்க ஒரு சந்தர்ப்பம்..." என்று சொல்லிக்கொண்டே திரும்பி தீபக்கைப் பார்க்க, அங்கே அவன் இல்லை. ஆனால், அர்ஜுன் நின்று கொண்டிருந்தான்.

தன் கண்களை நன்கு ஒரு முறை மூடித் திறந்து பார்த்தாள்.

அர்ஜுன் புன்னகையுடன், “ஐ அம் சாரிடா தேனு" என்று கைகளை நீட்ட, அவனது கைகளில் தானாகச் சென்று சிறைபட்டாள்.

"நான்தான் அர்ஜுன் சாரி சொல்லணும். உங்க மனசைக் கஷ்டப்படுத்திட்டேன்"

"அதை விட நான் தான் உன்னைக் கஷ்டப்படுத்தினேன். ஆனால், மாத்தி மாத்தி சாரி சொன்னா சொல்லிகிட்டே இருக்கணும். நான் நைட் ஃப்ளைட்லயே கிளம்பணும். சோ நீ கிளம்பி வா நாம ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயிட்டு வரலாம். இனி, நமக்குள்ள எந்தப் பிரிவும் வரக்கூடாது" என்றதும் சிரிப்புடன் ஆமோதித்தாள்.

மனம் நிறைந்திருக்க கடவுளின் சன்னதியில் கைகளைக் கூப்பி, ‘எங்க ரெண்டு பேரையும் கடைசி வரைக்கும், இப்படியே சந்தோஷமா வைத்திரு கடவுளே! என வேண்டிக்கொண்டாள்.

அர்ஜுன் கிளம்பும் நேரம், “மது நான் போன் செய்றேன். இதோடு கல்யாணத்துக்கு முதல் நாள் தான் வர முடியும்" என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டுக் கிளம்பினான்.
அத்தியாயம் – 42இருவரும், தங்கள் திருமண நாளை எதிர்பார்த்து, நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தனர். அர்ஜுன் நினைத்த போது மதுவுடன் போனில் பேசிக் கொண்டிருந்தான். தீபக்கின் கிண்டலையும் பொருட்படுத்தாமல், அர்ஜுனின் போனை எதிர்பார்த்து காத்திருப்பதும், போன் வந்ததும் மணிக்கணக்கில் பேசுவதுமாக தங்களின் காதலை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் சந்துருவும், விமலாவும் வந்து சேர்ந்தனர். மதுவிற்கு நகை, புடவை என்று வாங்கிக் குவித்தனர். அர்ஜுனும் மதுவும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது.

அர்ஜுன் திருமணத்திற்குப் பிறகு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என எண்ணி அன்று காலை விமானத்தில் தான் டெல்லியிலிருந்து கிளம்பினான். அர்ஜுன் வந்ததும் நேராக ஸ்ரீராமின் வீட்டிற்குச் செல்வதாகவும், அங்கிருந்து மாலை திருமண மண்டபத்திற்கு அழைத்து வரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு அதன் படி ராஜேஷும், ஸ்ரீராமும் ஏர்போர்டிற்குச் சென்றனர். ஆனால், ப்ளைனில் ஏதோ கோளாறு காரணமாக நான்கு மணி நேரம் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

தீபக்கும், சுரேஷும் பம்பரமாகச் சுழன்று வாசலிலிருந்து வீடு முழுதும் தோரணம் கட்டுவது, வந்தவர்களை வரவேற்பது என மும்முரமாக இருக்க, மது கையில் காபியுடன் தீபக்கிடம் வந்தாள்.

“அத்தான் இந்தாங்க. முதலில் காஃபியைக் குடிங்க." என்றாள்.

“நீ ஏன்டா இன்னைக்கும் வேலை செய்துக்கிட்டு இருக்க. நீ போய் ரெஸ்ட் எடு. இன்னும் ரெண்டு நாளைக்கு ஆசிர்வாதம் வாங்கறேன்ற பேர்ல, குனிந்து நிமிர்ந்து எல்லோர் காலிலும் விழுந்து எழுந்து எக்ஸர்சைஸ் செய்யவே சரியா இருக்கும்" என்று சிரித்தான்.

"எல்லோரும் இதையே சொல்லுங்க. எனக்கு ஒரே இடமா உட்கார்ந்திருக்க போர் அடிக்குது" என சிணுங்க

"பின்ன எப்படிப் போர் அடிக்காம இருக்கும்? இன்னும் அர்ஜுன் பிளைட்ல தானேயிருக்கார். இன்னைக்குப் பார்த்தா உன்னைச் சோதிக்கிறா மாதிரி ஃப்ளைட் லேட்டா வரணும்" என்றான்.

‘இந்தப் ஃப்ளைட்டே இப்படித் தான். இவர் ரெண்டு நாள் முன்னால் வரக்கூடாதா’ என ஏக்கமாகவும் இருக்க, தோழிகளின் “மது” என்ற சத்தத்தில் கலைந்தவள் அவர்களை வரவேற்பதில் தன் கவனத்தைத் திசை திருப்பினாள்.

வழக்கம் போல் கலாட்டாவும் பேச்சும், சிரிப்புமாக வீடே அமர்க்களமாக இருந்தது. இவர்களின் சந்தோஷத்தைக் கண்ட, பெரியவர்களின் நெஞ்சம் முழுதும் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தது. ஈஸ்வரன் அனைவரையும் வரவேற்பதும், அவர்களைக் கவனிப்பதுமாக, வளைய வந்து கொண்டிருந்தார்.

அர்ஜுனோடு வாழ்நாள் முழுதும் இரண்டர கலந்து இருக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில், அவளது மனம் ஒரு புறம் மகிழ்ச்சியில் திளைத்தாலும், அத்தை, மாமா, வித்யா, தீபக் , ராஜேஷ், மற்றும் தன் நண்பர்களை பிரிந்து செல்ல வேண்டுமே என்று அவள் உள்ளம் கலங்கத்தான் செய்தது.

காலையில் வர வேண்டிய ஃப்ளைட், ஒரு வழியாக மதியம் இரண்டு மணிக்கு வந்து இறங்கியது. அர்ஜுனை அழைத்துக்கொண்டு ஸ்ரீ ராமின் வீட்டிற்குச் சென்றனர். ஏர்போர்டில் வந்து இறங்கியதுமே மதுவிற்குப் போன் செய்து, தான் வந்துவிட்டதை அறிவித்துவிட்டு, வீட்டிற்கு வந்ததும் பேசறேன் என்று வைத்து விட்டான்.

அன்று மாலை சுற்றமும் நட்பும் புடை சூழ, மாப்பிள்ளை கோலத்தில் திருமண மண்டபத்திற்கு வந்து இறங்கினான் அர்ஜுன். மதுவை ஆவலுடன் எதிர்பார்த்து, அவனது விழிகள் தவமிருக்க, அலங்காரச் சிலையாக ரோஜா வண்ணப் பாட்டில் அழைத்து வரப்பட்டாள் அவனது தேனு.

அர்ஜுனின் விழிகள் காதலுடன் அவளைத் தீண்ட, அந்த ஸ்பரிசத்தில் விழி உயர்த்திப் பார்த்தாள். இருவரது விழிகளும் ஒரு புள்ளியில் சந்திக்க, வெட்கப் புன்னகையுடன் தன் விழிகளைத் தாழ்த்தி நிலம் பார்த்தாள். வெட்கத்தில் சிவந்த அவளது முக அழகை ரசித்தபடி புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அனைத்துச் சம்பிரதாயமும் முடிந்து அர்ஜுனையும், மதுவையும் வைத்து விதம்விதமாகப் போட்டோக்கள் எடுத்தவுடன் அனைவரும் சாப்பிட சென்றனர். அப்போதுதான் இருவரும் பேசிக்கொள்ள நேரம் கிடைத்தது.

எல்லாம் முடிந்து அறைக்கு வந்தவனுக்கு, அப்போது தான் செய்ய மறந்த வேலை ஒன்று நினைவிற்கு வந்தது. ஸ்ரீராமை போனில் அழைத்து, தானும் அவனுடன் வீட்டிற்கு வருவதாகச் சொன்னான். பின் தன் தந்தையிடம் சென்று, “அப்பா! நான் ஸ்ரீராமோட அவன் வீட்டுக்குப் போறேன். காலைல ஐந்து மணிக்கெல்லாம் வந்துடுறேன்" என்றான்.

"என்ன அர்ஜுன் இது? காலைல முகூர்த்தத்தை வச்சிக்கிட்டு. நீ எங்கேயும் போக வேண்டாம்" என்றார்.

"ப்ளீஸ்ப்பா! போயிட்டு காலைல சரியாய் ஐந்து மணிக்கு வந்திடுறேன். அம்மாவைக் கொஞ்சம் சமாளிச்சிக்கோங்க" என்றபடி அங்கிருந்து கிளம்பினான்.

ஸ்ரீராமுடன் வாசல் வரை வந்தவன் என்ன நினைத்தானோ, “ஸ்ரீ நீ இங்கேயே இரு வந்துவிடுகிறேன்" என்றவன் மது தங்கி இருந்த அறைக்கு வந்தான்.

கதவைத் திறந்த வித்யாவிடம், “மதுவைக் கொஞ்சம் கூப்பிடேன்" என்று சொல்ல அவள் சிரித்துக்கொண்டே மதுவை வெளியே அனுப்பி வைத்தாள்.

மாடியின் மூலையில் நின்றுகொண்டிருந்த அர்ஜுனை நெருங்கி, “என்ன அர்ஜுன், இப்போ தானே பேசிட்டு வந்தோம். அதுக்குள்ளே என்ன விஷயம் பேச வந்திருக்கீங்க" என்று சிரித்தாள்.

“நான் ஸ்ரீராம் கூட, அவன் வீட்டுக்குப் போறேன். அதான், நான் போறேன்னு சொல்லிட்டுப் போக வந்தேன் மது. நான் கிளம்பறேன். நீ பத்திரமா இருடா" என்று அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றவன் திரும்பி வந்து அவளை இறுக அணைத்து, "ஐ லவ் யூ தேனு!" என்றாவன் அவளது இருகன்னத்திலும் முத்தமிட்டவன், அவளது முகத்தைத் தன்னுள் நன்கு பதித்துக்கொள்வது போல ஆழப்பார்வை ஒன்றை செலுத்திவிட்டு, "பை மது" என்றவன் திரும்பிப் பார்க்காமல் சென்றான்.

இவ்வளவிற்கும் மது அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவனது செய்கை அவளுக்கு வித்தியாசமாகப் பட்டது. எப்போதும் இருக்கும் ஒரு துள்ளல் பேச்சே இப்போது அவனிடம் இல்லை. மனதிற்குள் ஏதோ நெருடலாக தோன்றியது. யோசனையுடன் அவன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இனி, அந்த குறும்பு பேச்சையும், காதல் பார்வையையும் திரும்ப காணப்போவதில்லை என்ற எண்ணம் இல்லாமல் ஏதோ மாய வலையில் சிக்கியது போன்ற ஒரு தயக்கத்துடன் யாரிடமும் பேசாமல், வந்து படுத்தாள். அவ்வளவு நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்தவள் இப்போது ஏன் சுருண்டு படுத்துக்கொண்டாள்? என்று எண்ணியபடி மேகலாவும், வித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

படுத்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. ‘என்னவோ நடக்கப் போகிறது’ என அவள் உள்மனம் எச்சரிக்க, பயத்துடன் சஷ்டி கவசம் சொல்லியபடி கண்களை மூடி உறங்க முற்பட்டாள்.

ஸ்ரீராமும், அர்ஜுனும் பத்து மணிக்கு வீட்டை அடைந்ததும், அர்ஜுன் ஒரு பார்சலை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அதைக் கவனித்த ஸ்ரீராம், “என்னடா அர்ஜுன்? மணி பத்து ஆகுது. இந்த நேரத்திலா போய் இதைக் கொடுக்கணும்? அப்படி என்ன அவசரம்? அப்படியே கொடுக்கணும் என்றாலும், நாளைக்கு நான் கொண்டு போய்க் கொடுக்கறேன்" என்றான்.

"இல்லை ஸ்ரீ! இந்தப் ஃப்ளைட் லேட் ஆனதால் எல்லா வேலையும் கெட்டுது. நாளைக்குக் காலையில் அவங்க ஊருக்குப் போய்டுவாங்க. அதுவும் இல்லாம, சுபா அக்காவோட அண்ணன் வீடு. அதனால நானே கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்திடுறேன்” என்றான்.

"உனக்கு ரொம்பப் பிடிவாதம்டா. சொன்னால் கேட்க மாட்ட. நீ தனியா போக வேண்டாம். நானும் வருகிறேன்” என்று ஸ்ரீராமும் உடன் கிளம்பினான்.

ஆனால், சென்ற இடத்தில் அவர்கள் நாளைக்குப் போவதாக இருந்த பிளானை மாற்றி அன்று மாலை தான் ஊருக்குக் கிளம்பிச் சென்றதாகவும், வர பத்து நாள் ஆகும் என அந்த வீட்டின் வாட்ச்மேன் சொல்ல, பார்சலை அவர்களிடம் கொடுத்துவிடும்படி சொல்லிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினர்.

மனசஞ்சலத்துடன் அரைகுறை உறக்கத்தில் இருந்த மது திடீரென எழுந்து அமர்ந்தாள். அவளது உடல் தெப்பலாக நனைந்திருந்தது. என்ன இது இப்படி ஒரு கனவு? யாருக்கு என்ன ஆச்சு? எனப் பயத்துடன் திரும்பிப் பார்த்தாள். அந்த அறையில் அவளைத் தவிர யாருமே இல்லை.

‘எங்கே போய்ட்டாங்க ரெண்டு பேரும்?’ என நினைத்தபடி மணியைப் பார்த்தாள். மணி இரண்டு.

படபடவென அடித்துக்கொண்ட இதயத்தை ஆழமூச்செடுத்து சற்று நிதானப்படுத்த முயற்சித்தபடி கட்டிலில் இருந்து இறங்கினாள். அப்போதுதான் வெளியில் பேச்சுக் குரல்களும், யாரோ அழுவது போலவும் இருக்க, பயத்துடன் கதவைத் திறந்தவள் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாள். தீபக்கும், ராஜேஷும் வேகமாகக் கார் பார்க்கிங்கை நோக்கி ஓடுவது தெரிந்தது.

‘யாருக்கு என்ன ஆச்சோ? ஒருவேளை இதற்குத்தான் தன் மனம் இப்படி அடித்துக் கொண்டதோ?’ என்று அச்சத்துடன் வேகமாக படி இறங்கி ஓடிவந்தாள். அவள் ஓடிவரும் சப்தம் கேட்டு மற்றவர் திரும்பிப் பார்க்க ராஜி அழுகையோடு, "மதும்மா" என்று அவளை அணைத்துக்கொண்டார்.

பயத்தில் கண்களில் நீர் திரள, "அத்தை! யாருக்கு என்ன ஆச்சு? சொல்லுங்க அத்தை எனக்குப் பயமாயிருக்கு" என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. வித்யாவும், மேகலாவும், "மது" என்று அவள் தோளில் சாய, அழுகையோடு நிமிர்ந்தவளுக்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் தன்னைப் பரிதாபமாகப் பார்ப்பது போலத் தோன்றியது. அப்போதுதான் கவனித்தாள் அங்கே, விமலா, சந்துரு, ஈஸ்வரன் மூவரும் மட்டும் இல்லை.

அவளுக்கு உள்ளுக்குள் அர்ஜுன் வித்தியாசமாக நடந்து கொண்ட முறை தன்னுடைய பயம் எல்லாம் சேர்ந்து அர்ஜுனுக்கு எதாவதா... கடவுளே! அப்படி ஏதும் இருக்காது . இருக்கவும் கூடாது’ என எண்ணிக்கொண்டிருக்கும் நேரம் ராஜேஷ் காரைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, மதுவின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தவனால் ஸ்டியரிங்கை பிடிக்க முடியாமல் தடுமாறினான்.

"ராஜேஷ்! நான் காரை ஓட்டறேன்" என டிரைவர் சீட்டில் வந்து அமர்ந்தான் தீபக்.

ராஜி, “மது வாம்மா" என்று அவளை அழைத்துச் சென்று காரில் அமரவைத்தார்.

கண்களை மூடி கடவுளை வேண்டியபடி அமர்ந்திருந்த மதுவைப் பார்த்த தீபக், ‘கடவுளே! அவளை சோதிச்சிடாதே!’ என வேண்டிக்கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்டு காரை எடுத்தான்.

ஹாஸ்பிட்டல் சென்று சேர்ந்ததும் ராஜி இறங்கி உள்ளேயே அமர்ந்திருந்த மதுவைப் பார்த்து, "மது, வா" எனச் சொல்ல மதுவால் தன் கால்களை அசைக்க கூட முடியாதபடிக்குக் கனத்து போனது போலயிருந்தது.

"இல்ல…, இல்ல… அத்தை நான் வரமாட்டேன். வரமாட்டேன்… எனக்குப் பயமாயிருக்கு" என்று அழ, அதைக் கண்ட ராஜேஷ் தலையிலேயே அடித்துக்கொண்டு காரின் மீது சாய்ந்துக்கொண்டான்.

அவனருகில் வந்த தீபக், “ராஜேஷ்! ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் ஸெல்ப். நீயே இப்படி இடிந்து போனா என்ன செய்வது? வா வந்து மதுவைக் கூப்பிடு" என்றான்

"முடியாது தீபக்! என்னால் முடியாது. அவளே விஷயத்தைப் புரிஞ்சிக்கிட்டா. இனி, என் தங்கையோட வாழ்க்கை என்ன ஆகும்?" என்று கதறினான்.

"டாக்டர் சொல்றது எல்லாமே நடந்திடுமா? ஏதாவது மிராக்கல் நடந்து அர்ஜுன் நல்லபடியா திரும்பி வரலாம் இல்லையா? நாம நல்லதையே நினைப்போமே" என்று ராஜேஷைத் தேற்றி அழைத்து வந்தான்.

மதுவைப் பார்த்த ராஜேஷ், “அவளோட அழுகையை என்னால் பார்க்க முடியாதுடா. எப்போதும் பூ போல சிரிச்சிகிட்டு இருந்தவடா அவ. அவளுக்கு இப்படி ஒரு சோதனை வரணுமா?" என்றான் கண்ணீருடன்.

தீபக்கே மதுவின் அருகில் சென்று, “மது பயப்படாம வா" என அவள் கையைப் பிடித்து அழைக்க, தளர்ந்த நடையுடன் சென்றாள். அங்கே ஐ.சி.யு வின் முன்னால் சந்துரு, ஈஸ்வரன்,விமலா கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருக்க, அவளைப் பார்த்த விமலா தாங்க முடியாமல் அழுதாள்.

அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து, “அத்தை... அத்தை... அவருக்கு என்ன ஆச்சு அத்தை? சொல்லுங்க அத்தை! எனக்குப் பயமாயிருக்கு" என அவர் மடியில் முகம் புதைத்துக் கதறினாள்.

"மது... மது…, இங்கே பாரும்மா அவனுக்கு ஒண்ணும் ஆகாது. நீ கவலைப்படாதே. தைரியமா இருடா" என்று தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

ஐ.சி.யுவிலிருந்து வெளியே வந்த டாக்டர், “ஏதாவது பேசணும்னா போய்ப் பேசிட்டு வாங்க" எனச் சொல்லிவிட்டுச் செல்ல, மது "அர்ஜுன்..." என்று கதறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

அங்கே கட்டிலில் இருந்த அர்ஜுனைக் கண்டவளால், தன் கண்களையே நம்ப முடியவில்லை. எப்போதும் குறும்பு பார்வையுடன், சிரிப்புடன், துருதுருவென வளைய வந்தவன் இன்று கிழிந்த நாறாய் படுக்கையில் கிடந்ததைக் கண்டவளின் கண்கள் கண்ணீரை அருவியாகப் பொழிந்தது.

உடல் முழுதும் கட்டுகள் போடப்பட்டு, செயற்கை சுவாசம் தரப்பட்ட நிலையில் கிடந்தவனை அருகில் சென்று சலைன் ஏறிக் கொண்டிருந்த அவன் கையைப் பற்றித் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நடுங்கும் குரலில், “அர்ஜுன்....” என அழைத்தாள்.

வலியின் வேதனையிலிருந்தவன், ஏதோ பேச முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. அழுதபடி அர்ஜுனின் முகத்தருகில் வந்தாள். “தேனு.... I am சாரிடா" என்று வாயை மட்டுமே அசைத்தான்.

"அர்ஜுன், உங்களுக்கு ஒண்ணும் ஆகாது அர்ஜுன்! ஒண்ணும் ஆகாது!" என தான் தைரியமாக இருப்பது போலக் காட்டிக்கொள்ள முயன்று தோற்றுப்போய் அழ, விமலா அர்ஜுனின் அருகில் வந்து அவன் தலையைக் கோதினார்.

தன் அம்மாவைப் பார்த்த அர்ஜுன், “அம்மா நான் உங்களையெல்லாம் விட்டுப் போகப்போறேன். என்னை மன்னிச்சிடும்மா" என்று சொல்வதைப் போல அவன் பார்வையால் கெஞ்சினான்.

"அர்ஜுன்... நீ இல்லாம நாங்க எப்படிடா இருப்போம்? இங்கே பாருடா... மதுவைப் பாரு... அவளுக்காகவாவது நீ கண்டிப்பா குணமாகி வரணும்" என்றார் அழுகையுடன்.

மதுமிதாவின் கரத்தைப் பிடித்துத் தன் அன்னையின் கரத்தில் வைத்தான்.

அவனது செய்கைக்கு அர்த்தம் புரிந்தவளாக, "இல்ல அர்ஜுன்! நீங்க குணமாகி வரத்தான் போறீங்க. நாம எல்லோரும் சந்தோஷமா இருக்கத்தான் போறோம்" என அழுதபடியே சொன்னாள்.

"அழாதே மது!” என்று பலகீனமான குரலில் சொன்னவன், “நீ எப்போதும் சந்தோஷமா இருக்கணும்" என்றவன் தன் அம்மாவைப் பார்த்து, “அம்மா எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுங்க" என்றான்.

"என்னடா கண்ணா சொல்லு! கண்டிப்பா செய்றேன்" என்றார்.

"அம்மா மதுவை இனி, உங்க பொண்ணு. அவ உங்க ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துப்பா. அவளுக்கு ஒரு நல்லவனா, அவ மனசைப் புரிந்து நடந்துக்கறவனா பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கிறேன்னு சத்தியம் செய்து கொடும்மா" என வலியோடும், வேதனையோடும் பேசினான்.

"அத்தை! இல்ல அத்தை! தயவுசெய்து நீங்க ஏதும் சொல்லாதீங்க. அர்ஜுன்... அர்ஜுன்... உங்களுக்கு எதுவும் ஆகாது. எனக்காக.... எனக்கா... இந்த ஒரு விஷயத்தில் என்னை ஏமாத்திடாதீங்க அர்ஜுன். நீங்க எனக்கு வேணும். நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சிக்கூடப் பார்க்க முடியாது. இந்த ஒரு விஷயத்தில் நான் சுயநலக்காரியாவே இருக்க ஆசைப்படறேன். எனக்குத் தெரியும் நான் கஷ்டப்படுவதை உங்களால பார்க்க முடியாது. நீங்க என்னை விட்டுட்டுப் போக மாட்டீங்க. அர்ஜுன்... அர்ஜுன்..." என அவன் கன்னங்களைத் தன் கைகளால் ஏந்தி கதறினாள்.

"நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேண்டா மது. உன்கூடவே இருப்பேன் .நீ என்னையே நினைச்சிகிட்டு உன் வாழ்க்கையை பாழாக்கிக்காதே. யாரையாவது கல்யாணம் செய்துகிட்டுச் சந்தோஷமா இருக்கணும்."

வெறிகொண்டவள் போல, “முடியாது அர்ஜுன், முடியாது. நான் உங்களை விடமாட்டேன். நீங்க என்னை விட்டுட்டுப் போகக் கூடாது. நீங்க போக மாட்டீங்க” எனக் கதற, ராஜேஷும், தீபக்கும் அவளைப் பிடித்து நிறுத்தினர்.

ராஜேஷிடம் திரும்பியவள், “அண்ணா! பாருங்கண்ணா அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க. நீங்க சொல்லுங்கண்ணா அவருக்கு ஒண்ணும் ஆகாது இல்ல. என் மேல ஏதாவது கோபம்னா என்னை ரெண்டு அடி அடிக்கச் சொல்லுங்கண்ணா. ஆனா, அவரை இப்படிப் பேசவேண்டாம்னு சொல்லுங்கண்ணா, சொல்லு… சொல்லு… என அவனது சட்டையைப் பிடித்து உலுக்க, தன் தங்கையின் வேதனையைக் கண்ட ராஜேஷ் அவனும் சேர்ந்து அழுதான்.

நடுவில் வந்த தீபக் “மது! அர்ஜுனுக்கு ஒண்ணும் ஆகாது. அழாதே” எனத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

திடீரென அர்ஜுனுக்கு மூச்சு திணற ஆரம்பிக்க, “அர்ஜுன்..., அர்ஜுன்.... என பதட்டத்துடன் அழைக்க அர்ஜுனின் இறுதி போராட்டம் ஆரம்பித்தது. "கடவுளே! என் பிள்ளைய எடுத்துக்கறது தான் எடுத்துக்கற, அவனை ரொம்பக் கஷ்டப்படுத்தாம எடுத்துக்கோப்பா" என அழுதுகொண்டே மயங்கி விழ, மது வேகமாக அர்ஜுனிடம் வந்தவள், “அர்ஜுன்.... ப்ளீஸ் என்னைவிட்டுட்டுப் போய்டாதீங்க அர்ஜுன்..." என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

அவள்கையை பிடித்து முத்தமிட்டவன், “ஐ லவ் யூ தேனு....." எனத் திணறியபடி சொல்லி முடிக்க, அவனது இதயம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.

அவனது கடைசி துடிப்பையும், வேதனையையும் கண்டவள், “என்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போய்ட்டீங்களா? அர்ஜுன்....” என்றவளின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை. ஓய்ந்து போனவள் போல அந்த அறையிலிருந்து தள்ளாடியபடி வந்து வராண்டாவில் இருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.

அவள் பின்னாலேயே வந்த ராஜி, “மதும்மா... மதும்மா..." என அவளை உலுக்க பதில் ஏதும் சொல்லாமல் வெறித்த பார்வையுடன் அமர்ந்தாள். வீட்டிற்கு வந்த பின்பும் அதே வெறித்த பார்வையுடன், யாருடனும் பேசாமல் சுவற்றை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். மற்றவரின் பேச்சோ, அழைப்போ எதுவும் அவளைத் திசை திருப்பவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட நண்பர்கள் கூட்டம் மொத்தமும் ஓடிவந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர், நண்பர்கள் கூட்டம் வீட்டிற்கு வந்து குவிந்தது. அர்ஜுனின் உடலை கொண்டுவந்ததும், அவ்வளவு நேரம் அசையாமல் இருந்தவள் எழுந்து சென்று அருகில் அமர்ந்து அவனது வலதுகையைப் பிடித்தபடி அவன் கைகளிலேயே தலையை சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஒருவழியாக எல்லாம் முடிந்து உறவினர்கள் கூட்டமும் சென்றுவிட, வீடே அமைதியாக இருந்தது. கல்யாணம் முடிந்து கலகலவென்று இருக்க வேண்டிய வீடு களையிழந்து ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து மெளனமாக அழுது கொண்டிருந்தனர்.

திருமணம் எப்படி நடந்தது என விசாரிக்க டெல்லியிலிருந்து போன் செய்த ஹரி, அர்ஜுனின் மரணச் செய்தியைக் கேட்டு இடிந்து போனார். அதுவும், தனக்காக சென்றுவந்த போது தான் இந்த அசம்பாவிதம் நடந்தது என கேள்வியுற்று அவரது மனம் வேதனையில் தவித்தது.

ஸ்ரீராமின் இடது கை முறிவு மட்டுமே இருந்ததால் மறுநாளே வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். நடந்த அனைத்தையும் ஸ்ரீராம் தான் சொன்னான். பார்சலை கொடுத்துவிட்டு வரும் வழியில் கார் ரிப்பேர் ஆகிவிட, வேறு ஒரு காரில் லிப்ட் கேட்டு வந்ததாகவும், எதிரில் வந்த லாரி நேருக்கு நேராக மோதியதில் முன்னால் அமர்ந்திருந்த டிரைவர் அங்கேயே இறந்துவிட தான் அமர்ந்திருந்த பக்கம் கதவு சரியாக லாக் ஆகாததால் தான் இடித்த வேகத்தில் கதவு திறந்து வெளியில் விழுந்து விட்டதாகவும் சொன்னான்.

மதுவின் நிலையைக் கண்ட ஈஸ்வர் டாக்டரை வரவழைத்துப் பார்க்க, "அவங்க அதிர்ச்சியிலிருக்காங்க. டிப்ரெஷன். அவங்களை மனசுவிட்டு அழ வைங்க. சரி ஆகிடும் இப்போ தூங்க இன்ஜெக்ஷன் போடறேன்" என்றார்.

மதுவும் படுத்து உறங்கிவிட மேகலா, வித்யா, கீதா, மூவரும் அவளுடன் அந்த அறையிலேயே படுத்துக்கொண்டனர். ராஜேஷ் மதுவைப் பார்த்துவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொண்டு செல்ல, தீபக் அவள் தலையைத் தடவிக் கொடுத்தான்.

முன்பெல்லாம் இருவரும் சண்டை போடும் போது "பார்த்துகிட்டே இருடீ எங்களை எவ்வளவு படுத்தற, இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி ஒரு நாள் உட்கார்ந்து அழப்போற பாரு" எனச் சொல்ல, மது, “அது இந்த ஜென்மத்துல நடக்காது. அப்படியே நான் அழுதாலும் நீ சந்தோஷமா அதைப் பார்த்து சிரிச்சிகிட்டு இரு" எனச் சொன்னது நினைவில் வர, நான் சொன்ன வார்த்தை இப்படியா பலிக்க வேண்டும் என எண்ணி கண்ணீருடன் அங்கிருந்து சென்றான்.