Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
453
63
அத்தியாயம் – 48

வெளியே வந்தவள், காரின் மீது சாய்ந்து நின்றிருந்த ராஜேஷைக் கண்டதும் அவளது ஆத்திரம் இருமடங்காக அதிகரித்தது. அவனிடம் எதுவும் பேசாமல் காரில் அமர்ந்தாள். அவளது கோபத்தை எதிர்பார்த்தே இருந்த ராஜேஷ், காரை கிளப்பினான். இருவருமே வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. செல்லும் போது மௌனமாக இருந்த போதும் அவர்களுக்குள் ஒரு ஆத்மார்த்தமான அன்பு இருந்தது. இப்போது, அதே மௌனம் தனது தமையனின் மீதிருந்த ஆத்திரத்தில் வாளாக அறுத்துக் கொண்டிருந்தது.

வீட்டிற்கு வந்து இறங்கியவள் தன் கோபம் மொத்தத்தையும் காட்டி, காரின் கதவை அறைந்து சாத்தினாள். அறைக்குச் சென்றவள் தன் உடைகளை எடுத்துப் பேகில் அடுக்கியவள், "அத்தை! அத்தை!" என்று அழைத்தபடி கீழே இறங்கி வந்தாள்.

வித்யாவும், மேகலாவும் அமைதியாக நின்றிருந்தனர். "மேகலா! அம்மாவும், அத்தையும் எங்கே?" என்றாள்.

“கோவிலுக்குப் போயிருக்காங்க. நீ எங்கே கிளம்பிட்ட?" என்று அவள் கையிலிருந்த பையைப் பார்த்தாள்.

"என் வீட்டுக்குப் போறேன். அத்தை வந்தா சொல்லிடு. அம்மாவையும், அப்பாவையும் வீட்டுக்கு வரச்சொல்லிடு" என்றவள் வாசலருகில் நின்றிருந்த ராஜேஷைப் பார்த்து வெறுப்புடன் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

தன்னுடைய செல்லத் தங்கையின் கையைப் பிடித்துத் தடுத்த ராஜேஷ், “மதும்மா! உன்னோட நல்லதுக்குத்தான்...." என்று தவிப்புடன் சொன்னவனை இடைமறித்தாள்.

"முதல்ல என் கையை விடு! எது... நல்லது. நீ செய்த காரியம் நல்லதா?" என்று கலங்கிய விழிகளுடன் அவள் கேட்டுக்கொண்டிருக்க, கையில் பேகுடன் தளர்ந்த கொடியாக நின்றிருந்தவளைப் பார்த்ததும் வாசலிலேயே நின்றான்.

"கூடப் பிறந்த தங்கைக்கு, ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்ன்னு எதிர்பார்க்கறது தப்பா?" என்று கேட்டான் ராஜேஷ்.

ஆத்திரத்துடன், “உன் தங்கை நல்லா வாழணும்னு நினைச்சித் தான், இந்த மாதிரி கேவலமான வேலை செஞ்சியா? உன் தங்கை வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு யாராவது கூட்டிக்கிட்டு வரச்சொன்னா, கூட்டிக்கிட்டுப் போயிடுவியா?" என்று கேட்டதும், “மது! முட்டாள் மாதிரி பேசாதே" என்று இறைந்தான்.

"என்ன? நீ சத்தமா பேசினா, செய்தது சரின்னு ஆகிடுமா? நீ என் கூடப் பிறந்த அண்ணன் தானே... எனக்கே சந்தேகமா இருக்கு. நீ செய்தது ஒரு அண்ணன் செய்யும் வேலையா? அதுக்கு வேற பேர் இருக்கு... " என்று ஆத்திரத்துடன் கத்தியவள் கன்னத்தில், ஓங்கி அறைந்தான் ராஜேஷ்.

அடுத்த அறை அவள் மீது விழும் முன், அவளை வேகமாகத் தன் பக்கமாக இழுத்த தீபக், ராஜேஷின் கையைப் பிடித்தான்.

"விடு தீபக்! அவளை என்ன செய்றேன் பார்" என்று கத்தினான்.

தீபக் கோபத்தோடு, “ராஜேஷ்! என்ன செய்றன்னு தெரிஞ்சி தான் செய்றியா. இப்படியா அவளை அடிப்ப. அவளை அடிக்க, உனக்கு என்ன உரிமை இருக்கு. அவள் கேட்டதுல என்ன தப்பு? அவதான் பிடிவாதமா இருக்கான்னா, நாமதான் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகணும். ஆளாளுக்கு அவளைப் பாடு படுத்தினா, அவள் யாரிடம் போய்ச் சொல்வா. யாரோ ஒரு சித்தார்த்துக்காக யோசிக்கிற... உன் தங்கையோட மனசைப் புரிஞ்சிக்க மாட்டேன்ற” என்றவன் கன்னத்தைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

அவள் பேசிய வார்த்தையை விட, ‘உயிருக்கு உயிரான தன் தங்கையை அடித்து விட்டோமே!’ என்ற எண்ணத்தில் மருகிக் கொண்டிருந்தா ராஜேஷ்.

ராஜேஷின் தோற்றத்தைப் பார்த்த வித்யா, “அத்தான்!" என்று அவன் தோளைத் தொட்டு ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தவள் தீபக்கை பார்த்து, “அண்ணா! என்ன பேசற நீ? அண்ணன், தங்கச்சி ரெண்டு பேரும் பேசிட்டிருக்கும் போது, நீ எதுக்குத் தலையிடற? ஒரு அண்ணனைப் பார்த்துக் கேட்கும் கேள்வியா இது? படிச்சவ தானே... எதுக்காக இப்படிச் செய்தாங்கன்னு புரிஞ்சிக்கத் தெரியாத முட்டாளா அவள்?" என்று கணவனுக்காக, தமையனிடம் முறைத்துக் கொண்டு நின்றாள்.

"நீ எதுவும் பேசாதே! எல்லோரும் சேர்ந்து அவளை ஏன் டார்ச்சர் பண்றீங்க. அவளுக்குத் தெரியாதா... நாம ஏன் சொல்றோம்ன்னு. அவளுக்கும் யோசிக்க நேரம் கொடுக்க வேண்டாமா" என்று பேசிக்கொண்டே, ‘எதுவும் சொல்லாதே என்று கண்களாலேயே தங்கைக்குத் தகவல் பரிமாறியவன், மதுவிடம் திரும்பினான்.

கன்னத்தை பிடித்தபடி அழுது கொண்டிருந்தவளிடம், “மது! வா வெளியே போய்ட்டு வரலாம்" என்றான்.

பயத்துடன் பின்னால் சென்றவள், "இல்ல... நான் வரமாட்டேன். எனக்கு இங்கே இருக்கவே பயமாயிருக்கு. யாரை நம்பறது? யாரை நம்பக்கூடாதுன்னே தெரியல" என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

ராஜேஷ் கண்களை மூடி, மனத்தின் வலியை மறைக்க முயன்றான். வித்யா கோபத்துடன் மௌனமாக இருக்க, கண்கள் கலங்க மதுமிதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மேகலா.

அருகில் சென்ற தீபக், “மது, நீ அழுததெல்லாம் போதும். உன்னை மீறி எதுவும் நடக்காது. வா" என்றவன் மேகலாவிடம், “நீயும் வா" என்றான்.

"இல்லத்தான்! நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க" என்றாள்.

மதுவை அழைத்துக்கொண்டு பீச்சில் வந்து அமர்ந்தான். அவளது கண்கள் அலையை பார்த்துக் கொண்டிருக்க கைகள் மணலில் அலைந்துக்கொண்டிருந்தது.

"மது! என்ன நடந்தது எனக்குச் சொல்லு" என்றதும், நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு, “சித்தார்த் நல்லவரா இருக்கவும் ஒரு பிரச்சனையும் இல்ல. இல்லான்னா, என்னோட நிலைமை..." என்று சொன்னதும், தீபக்கிற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

சற்றுநேரத்திற்குப் பின், “அப்போ, சித்தார்த் நல்லவன்னு நீ ஒத்துக்கற?" என்றான்.

"நல்லவனை, நல்லவன்னு சொல்றதுல தப்பில்லயே. எத்தனையோ முறை நான் சித்தார்த்தோடு தனியாக காரின் போயிருக்கேன். ஆபீஸ்ஸிலுல் தனியா இருந்திருக்கேன். அவரோட பார்வை ஒரு முறை கூட என்மேல தவறாக விழுந்ததில்லை" என்றதும் சிரிப்புடன் தீபக் ஏதோ சொல்லவர இடைமறித்தவள், "அதுக்காக சித்தார்த்தைக் கல்யாணமெல்லாம் செய்துக்க முடியாது” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
எழுந்தவன் பேண்ட்டில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிடும் போது, ஈர மணலில் அவள் எழுதியிருந்ததை பார்த்தவனின் மனத்தில் குப்பென சந்தோஷம் பரவ, அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“அடி முட்டாள் பெண்ணே! உன் மனத்தில் இருப்பவனின் பெயரை எழுதத் தெரிந்த உனக்கு, அவன் உன் மனத்தை வென்றுவிட்டதை அறிந்து கொள்ள முடியவில்லையே" என்று நினைத்துக்கொண்டு, மொபைலில் அதைப் படமும் எடுத்துக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான்.

********************​

சித்தார்த் வீட்டிற்கு வரும்போது இருட்ட ஆரம்பித்திருந்தது.

சோர்ந்த முகத்துடன் வந்த மகனைப் பார்த்த தேவகி, "சித்தார்த்! என்னப்பா ஒரு மாதிரி இருக்க?" என்றார் வாஞ்சையுடன்.

"ஒண்ணுமில்லம்மா. கொஞ்சம் பிசினஸ் டென்ஷன். நான் வெளியிலேயே சாப்பிட்டுட்டேன். ரூமுக்குப் போகிறேன்" என்று அறைக்குச் சென்றவன், லாஞ்சில் வெறும் தரையில் படுத்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் சுபா குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கே வர குழந்தைகள் ஓடிவந்து அவன் அருகில் அமர்ந்துக்கொண்டு, “மாமா! ஒரு கதை சொல்லுங்க. சித்தப்பா! யானைக் கதை சொல்லுங்க” என்றதும், குழந்தைகளின் மழலையில் சிறிதுநேரம் தன்னை மறந்து அவர்களுடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தான்.

அருகில் வந்த சுபா, “கதை கேட்டது போதும். இப்போ குட் நைட் சொல்லிட்டு எல்லோரும் போய்த் தூங்குவீங்களாம். அப்போ தான் நாளைக்கு நாம எல்லோரும் வெளியே போகலாம்” என்றதும், குழந்தைகள் ஓடிச் சென்று சித்தார்த்தின் கட்டிலில் படுத்துக்கொண்டனர்.

டெல்லியிலிருந்து சுபா வந்தால், குழந்தைகள் நால்வரும் சித்தார்த்துடன் தான் படுத்துக் கொள்வார்கள். அவனும் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி கதை சொல்வது, பாட்டு பாடுவது என்று தனது ஏமாற்றத்தைச் சற்று நேரம் மறந்திருப்பான்.

இப்போதும் அவன் அதே ஏமாற்றத்துடன் இருந்தாலும், அது தற்காலிகமானது என்ற நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால், அந்த நம்பிக்கை மெய்யாக எத்தனைக் காலங்கள் ஆகுமோ! என்ற சிறு கவலை மட்டும் நெஞ்சை நெருடிக்கொண்டே இருந்தது.
குழந்தைகள் சென்றதும், அவனருகில் அமர்ந்த சுபா, “எங்கேடா அவ்வளவு அவசரமா போன?" என்றாள்.

ஆழமூச்செடுத்தவன், ஸ்ரீராமை பார்த்துவிட்டு, மதுவைச் சந்தித்து பேசியது வரை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு தமக்கையைப் பார்த்தான்.

“பைத்தியமாடா உனக்கு? அவளே எதிலும் பட்டும், படாமலும் இருக்கா. அவளே மனசு மாறி வர மாட்டாளா? நீ ஏன்டா நடுவில் போய் இப்படிச் சொல்லிட்டு வந்திருக்க" என்று கோபத்துடன் கேட்டாள்.

"இல்ல சுபா! முதல்ல எனக்கும் ஆத்திரம் வந்தது. ஆனா, அவள் என்னைப் பார்த்தாலே பயப்படுறா. அவளோட கண்ணுல அந்தப் பயம் தெரியுது. நான் அவளைச் சந்தோஷமா வச்சிக்கணும்னு தான் நினைக்கிறேன். என்னைப் பார்த்தாலே பயப்படுறவளை, என்னால் தான் நிம்மதியே போச்சுன்னு சொல்றவளை என்ன செய்றது? அவளைப் பார்த்தா பாவமா இருக்கு.

வாழ்க்கைல நிறையவே அழுதுட்டா. போராடித் தான் ஓரளவு தேறி வந்திருக்கா. அவள் பழையபடி சாதாரணாமா இல்லனாலும், இப்படியே இருக்க என்ன வேணாலும் செய்வேன். நான் அவளோட வாழ்க்கையிலிருந்து போனால் தான், அவளுக்குச் சந்தோஷம்னா, என்னோட காதல் தான் அவளோட நிம்மதியைக் குலைக்குதுன்னா, அப்படிப்பட்டக் கல்யாணம் எனக்குத் தேவை இல்லை” என்றான் அழுத்தமாக.

“அவள் என்னைக் கல்யாணம் செய்யாமல் இருந்தாலும், ஒருவேளை அவளோட மனசு மாறி, வேற யாரையாவது கல்யாணம் செய்துகிட்டாலும், எனக்குச் சந்தோஷம் தான். அவளோட சந்தோஷத்தைப் பார்த்துக்கிட்டே நான் நிம்மதியா இருந்துடுவேன்" என்றான்.

தன் தம்பியைப் பார்த்து வருத்தப்படுவதா! இல்லை, அவனுடைய நல்ல மனத்தைப் பார்த்துச் சந்தோஷப்படுவதா என்று புரியாமல், "சித்தார்த்! உன்னோட நல்ல மனசு, நிச்சயமா அவளோட சேர்த்து வைக்கும். பார்த்துக்கிட்டே இரு... கூடிய சீக்கிரமே மது உன்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதம்ன்னு சொல்வா" என்று கண்கலங்க சொன்னாள்.

சாப்பிடாமல் வந்து விட்ட மகனுக்காக, பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு அறைக்கு வந்த தேவகி, மகன் சொன்ன அனைத்தையும் கேட்டுவிட்டு, கனத்த மனத்துடன் வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றார்.

பூஜையறைக்குச் சென்றவர், ‘கடவுளே! என் மகனோட நல்ல மனசை அவள் என்னைக்குப் புரிஞ்சிக்குவா? அவனுக்காக, அவனோட சந்தோஷத்துக்காக தானே நாங்க அத்தனைப் பேரும், அவனுக்கு ஆதரவா நிக்கிறோம். என் பிள்ளை மனசறிஞ்சி யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்ல. அவனோட நல்ல மனசை நோகடிச்சிடாதேப்பா! அவனுக்கு வாழ்க்கைல நிம்மதியைக் கொடு’ என்று மனமுருக பிராத்தித்துக் கொண்டார்.

****************​

"அம்மா! நான் ஆபீஸ் கிளம்பறேன். வரேன் அத்தை" என்று சொல்லிக்கொண்டு கிளம்பிச் செல்பவளை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால், இன்று மது ஆபீஸ் கிளம்பி செல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

சித்தார்த்திடம் பேசியதையோ, ராஜேஷிடம் சண்டை இட்டதையோ பெரியவர்கள் இதுவரை அறியவில்லை. ஆனால், வீட்டில் இருந்த ஒருவிதமான இறுக்கத்தை வைத்தே ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டனர்.

அலுவலகத்திலும் அவள் மீண்டும் வந்தது குறித்து, அனைவருக்கும் ஆச்சரியம் மட்டுமல்லாமல் சந்தோஷமாகவும் இருந்தது. தன் அறையிலிருந்தபடியே அவள் வந்திருப்பதை பார்த்தான் சித்தார்த்.

அவள் வேலையை விட்டுச் செல்லப் போவதை, யாரிடமும் சொல்லவில்லை. காலையில் விரைவாகவே வந்து விடுவதும், மாலையில் அவள் சென்ற பின்னே செல்வதும், மதிய உணவு நேரத்தில் எதாவது காரணம் சொல்லி வெளியே சென்றுவிடுவதுமாக இருவரும் மூன்று நாள்களாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அன்று மாலை அலுவலகம் முடியும் நேரம் நண்பர்கள் இருவரிடமும், நாளை தான் மது அலுவலகம் வருவது கடைசி நாள். அதனால், அவளுக்குப் பிரிவு உபச்சாரத்திற்குபார்ட்டிக்கு ஏற்பாடு செய்யும்படியும், மதியம் அனைவருக்கும் லஞ்ச் தன்னுடைய செலவு என்று சொன்னான்.

ரமேஷ் அதிர்ச்சியுடன், “என்னடா! என்ன நடக்குது இங்கே? எங்களுக்கு ஒண்ணுமே புரியல. அவள் என்னவோ சமாதானம் ஆகி வரா, நீதான் கொஞ்சம் விலகிப் போறன்னு நாங்க நினைச்சிட்டிருக்க, நீ இப்படிச் சொல்கிற" என்றான்.

சித்தார்த் எதுவும் சொல்லாமல், இரண்டு கைகளையும் கோர்த்து டேபிள் மேல் வைத்து அதில் தன் நெற்றியைப் பதித்தபடி அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்கவே, இருவருக்கும் வேதனையாக இருந்தது.

ஜீவா, “ஏன்டா அவள் திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்தா?" என்று கேட்டான்.

சித்தார்த் கண்களை மூடியபடியே, "அவள் வேலையை விட்டுப் போறதுக்குக் காரணமே நான்தான். ப்ளீஸ்! இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதீங்க" என்றவன் எழுந்து வெளியில் சென்றான்.

அதேநேரம் மதுவும் தன் கேபினிலிருந்து வெளியில் வருவதைக் கவனித்தவன் அங்கே நின்றிருந்த சிவாவிடம் ஏதோ கேட்பதைப் போல திரும்பி நின்று பேசினான். ரமேஷும், ஜீவாவும் இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சித்தார்த்தின் செய்கையைக் கண்டவளுக்குச் சற்று கஷ்டமாக இருந்தது. அவள் மீண்டும் தன் இடத்திற்குச் சென்றுவிட, சித்தார்த்தும் அங்கிருந்து சென்றான். அவன் அந்த ஹாலைக் கடந்து வெளியில் செல்லும் வரை, மது அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று காலையிலிருந்தே மனத்தில் இனம் புரியாத ஒர் உணர்வு ஆட்கொண்டு, அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் அலுவலகம் வந்த சித்தார்த் பதினோரு மணிக்கெல்லாம் முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி கிளம்பிவிட்டான். மதியம் மூன்று மணிக்கு, மதுவிற்குப் பிரிவு உபச்சார விழா நடந்தது. சித்தார்த் வரவே இல்லை. உடன் பணிபுரிபவர்கள் யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. கீதா மிகவும் வருத்தப்பட்டாள்.

சிவாவும், லதாவும் கூட வந்து பேசினார்கள். ஆனால், அனைத்துக்கும் வலிய வரவழைத்த புன்னகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டு, “என்னால் உங்க யாரையும் மறக்க முடியாது. நாம எப்போதும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் தான். இங்கேயிருந்து போனாலும் உங்களையெல்லாம் என்னால் மறக்க முடியாது" என்றாள்.

சிவாவும், லதாவும் பேசிவிட்டுச் சென்றதும் கீதா மதுவைப் பார்த்து, “நீ எங்கே போனாலும் எங்களை மட்டும் இல்ல மது, சித்தார்த்தையும் உன்னால மறக்க முடியாது" என்று சொல்லிவிட்டுச் சென்றாள். அலுவலகத்தில் அனைவரும் கிளம்பிச் சென்றிருக்க, மதுமிதா டேபிளில் தலைகவிழ்ந்து அமர்ந்தாள்.

அங்கே வந்த ஜீவா, "மதுமிதா!" என்று அழைக்க, வேகமாக எழுந்தாள்.
ஜீவாவும், ரமேஷும் நின்றிருந்தனர்.

ரமேஷ், "மது! நீ ரொம்பப் புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா, இவ்வளவு முட்டாளா இருப்பன்னு நினைக்கவே இல்ல. சித்தார்த் மாதிரி ஒருத்தன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும். அவனோட வலியையும், வேதனையையும் தனக்குள்ளயே புதைச்சிக்கிட்டு நடமாடிட்டிருக்கான். வலிய வரும் நல்ல வாழ்க்கையை உதறித் தள்ளிட்டு நீ இருக்க. முடிஞ்சா உன்னோட பிடிவாதக் குணத்தை மாத்திக்க முயற்சி செய். இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல" என்றான் கவலையுடன்.

“கையில கிடைச்ச பொக்கிஷத்தை நழுவ விட்டுட்டு நிக்கிற மதுமிதா! நீ நழுவவிட்டப் பொக்கிஷம் இன்னும், உன் முன்னால தான் இருக்கு. அதைப் பாதுகாப்பா எடுத்து வச்சிக்கிறதும்; போனால் போகட்டும்ன்னு விட்டுட்டுப் போறதும் உன் கையிலதான் இருக்கு" என்றான்.

தலைகுனிந்தபடியே இருவரும் சொன்னதைக் கேட்டுக் கொண்டவள் வாயைத் திறக்கவே இல்லை. ஒரு பெருமூச்சுடன் இருவரும் சென்றதும், சித்தார்த்தின் அறையைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனைச் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வும் அவளை ஆக்கிரமித்தன. அந்த நினைவுகளின் ஆதிக்கத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள எண்ணி, வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலைகளை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் புது வேலைக்கான உத்தரவுக் கடிதத்தை எடுத்தாள். அதையே ஆழ்ந்து நோக்கியவள் சுக்குநூறாகக் கிழித்துப் போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சந்துரு, விமலாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அவளது முக வாட்டத்தைக் கண்ட விமலா, “என்னம்மா ஒரு மாதிரியிருக்க?" என்று கரிசனத்தோடு கேட்டார்.

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று தயங்கினாள்.

“சொல்லுமா!" என்றார் சந்துரு.

வறண்ட இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு, "நா..நான்.. வேலையை விட்டுட்டேன் அப்பா" என்றாள்.
விமலாவும், சந்துருவும் ஒருசேர அதிர்ந்தனர். "என்னம்மா சொல்ற? எங்ககிட்டக் கூடச் சொல்லாம... ஏன் இந்தத் திடீர் முடிவு?" என்று கேட்டார்.

"எனக்குப் பிடிக்கல" என்றாள்.

விமலா கோபத்தோடு, “நாங்க உன்னை வேலைக்குப் போக வேண்டாம்ன்னு சொன்ன போது, எனக்கு ஒரு மாற்றம் வேணும்ன்னு நீயாதானே வேலைக்குப் போன. இப்போ திடீர்ன்னு பிடிக்காமல் போக என்ன காரணம்? வேலைக்குப் போகப் பிடிக்கலையா? இல்லை, அங்கே இருக்கறவங்களைப் பிடிக்கலயா?” என்று கேட்க, என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.

"விடு விமலா. அவளுக்குப் போகப் பிடிக்கல விட்டுட்டா. அதை ஏன் பெரிசுப்படுத்துற?"

"இன்னுமா உங்களுக்குப் புரியல. வரவர அவள் நம்மள மதிக்கறதே இல்ல. அவளோட இஷ்டத்துக்கு நடந்துக்கறா" என்றார் கடுமையாக.

மறுப்பாக, "அப்படியெல்லாம் இல்லம்மா" என்றாள் வேகமாக.

"என்ன அப்படியெல்லாம் இல்ல? உன்னை நான் நேரடியா கேட்கறேன் சொல்லு. ஏன் சித்தார்த்தை வேண்டாம்னு சொல்ற?” என்று கேட்டதும் " சம்மந்தமே இல்லாம இப்போ எதுக்கும்மா அந்தப் பேச்சு" என்று எரிச்சலுடன் கேட்டாள்.

"சம்மந்தம் இல்லாமலா வேலையை விட்டுட்டு வந்த? இன்னும் கொஞ்ச நேரத்துல உன் அண்ணன் வந்திடுவான். வந்து அவனே கேட்கட்டும்" என்று சொல்லும்போதே கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

"இதோ வந்தாச்சு. போ போய் நீயே கதவைத் திற" என்றார்.

‘கடவுளே! இந்த நேரம் பார்த்தா இவர்கள் வர வேண்டும்?’ என்று எண்ணிக்கொண்டே கதவைத் திறந்தாள்.

ஈஸ்வரன், ராஜி இருவரும் கல்லூரியில் அனைவருடனும் சுற்றுலா சென்றிருக்க, அவர்களைத் தவிர மற்ற நால்வரும் வந்திருந்தனர். வித்யா, இன்னமும் மதுவிடம் சரியாகப் பேசுவதில்லை.

"வாங்க" என்ற அவளது வரவேற்புக்கு தீபக், “வாய்தான் வாங்கன்னு வரவேற்குது. முகம், ஏன்டா இவங்க வந்தாங்கன்னு கேட்கறது போல இருக்கே... என்ன விஷயம்?" என்றான்.

அதற்குள், “வாங்கப்பா! அப்பா, அம்மா எப்படி இருக்காங்களாம்?" என்று கேட்டுக் கொண்டே பெரியவர்கள் இருவரும் உள்ளே வந்தனர்.

காரை நிறுத்திவிட்டு ராஜேஷ் அப்போதுதான் உள்ளே நுழைந்தான். மதுவிற்கு அவனைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.

"மது எப்படிடா இருக்க?" என்று வாஞ்சையுடன் கேட்டதும், “ம்ம், நல்லா இருக்கேண்ணா" என்று கண்களில் நீர் தளும்பக் கூறினாள்.

அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, “ரெண்டு நாள் லீவ் தானே. எங்கேயாவது அவுட்டிங் போகலாமா?" என்று தீபக் கேட்க, ஆளுக்கொரு இடத்தைச் சொன்னார்கள். மது மட்டும் மௌனமாகவே அமர்ந்திருந்தாள்.

மேகலா, “மது, உனக்கு நாளைக்கு ஆபீஸ் லீவ் தானே..." என்று கேட்டதும், "இனி, அவளுக்கு எப்பவுமே லீவ் தான். அவள்தான் வேலையை விட்டுட்டு வந்துட்டாளே" என்றார் விமலா ஆற்றாமையுடன்.

“ஏன் வேலையை விட்ட மது?" என்று ராஜேஷ் கேட்டும், அவள் எதுவும் சொல்லாமல் கலவரத்துடன் அமர்ந்திருந்தாள்.

"இன்னைக்குக் கூடச் சித்தார்த்கிட்டப் பேசினேனே. அவன் என்னிடம் ஒண்ணுமே சொல்லலையே” என்றவன் அழுத்தமாக அமர்ந்திருந்தவளை எரிச்சலுடன் பார்த்தான்.

“நீ செய்றது எதுவும் சரியில்ல. இப்படிக் கேட்கறதுக்கு எதுக்கும் பதிலே சொல்லாம தலை குனிஞ்சி உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? அன்னைக்கு வீட்டுக்கு வந்த சித்தார்தோட அப்பா, அம்மாவிடம் மட்டும் வாய் கிழியப் பேசின இல்ல. இப்போ வாயைத் திறக்க முடியலையா? சொல்லு” என்று அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்தினான்.

அவள் கோபத்தோடு, “எனக்குப் போக இஷ்டம் இல்ல. அவ்வளவு தான். ஒரு வேலையை விட்டுட்டு வந்ததுக்கா இவ்வளவு கேள்வி? நீங்க இதைச் சாக்கா வச்சி என்ன பேசுவீங்கன்னு எனக்குத் தெரியாதா?" என்றாள்.

“மது! ஒரு குடும்பம்ன்னு இருந்தா, அதில் இருக்கும் எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது இயல்பு தானே. நாங்கலாம் எங்களுக்குன்னு ஒரு துணையோடு இருக்கும் போது நீயும் அப்படி இருக்கணும்ன்னு நினைக்கறதுல தவறு இல்லயே" என்றான் தீபக்.

"எனக்கு புதுசா எந்தத் துணையும் வேண்டாம். நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்" என்றாள் தவிப்புடன்.

ராஜேஷ் ஆதங்கத்துடன், "அறிவிருந்து தான் பேசறியா? ஏம்மா, இப்படியிருக்க? எங்களோட ஏக்கத்தை புரிஞ்சுக்கவே மாட்டியா? நீ புருஷன், குழந்தைகள்னு உன் குடும்பத்தோடு சந்தோஷமா இருப்பதைப் பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா?" என்றான்.

கண்ணீரை அடக்கியபடி, “வேண்டாண்ணா! உன் தங்கைக்கு அந்தக் கொடுப்பினை இல்லன்னு நினைச்சிக்கோ. எனக்கு நீங்க இத்தனைப் பேர் இருக்கீங்க. யாராவது எனக்கு மூணு வேளை சாப்பாடு போட மாட்டீங்களா? உங்களுக்குப் பிறக்கப் போற குழந்தைகளைப் பார்த்துக்கிட்டு உங்க எல்லோருடனும் சந்தோஷமா இருந்துட்டுப் போறேனே" என்றாள் கெஞ்சலாக.

ராஜேஷ் வெறுப்புடன், “குழந்தைகளா! அது எப்படி வரும்? உனக்காக, உனக்கு ஒரு குடும்ப வாழ்க்கை அமையும் வரை நமக்கு குழந்தை வேண்டாம்ன்னு இருக்கா வித்யா. அவளை விடு. அவளாவது உனக்கு மாமா பொண்ணு. ஆனா, மேகலா... அவ என்ன பாவம் பண்ணினா? அவளுக்குத் தலையெழுத்தா? கல்யாணமாகி இதுநாள் வரைக்கும், ரெண்டு பேரும் தனித்தனியா தான் இருக்காங்க. தெரியுமா உனக்கு? இதெல்லாம் யாருக்காக? உனக்காக. உன் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கவங்களை நீ எவ்வளவு வேதனைப் படுத்துறன்னு புரிஞ்சிக்க" என்றான்.

மதுவின் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. விமலாவும், சந்துருவுமே இதைக் கேட்டு உறைந்திருந்தனர்.

"ஏன் எல்லோரும் என்னைக் கொல்லாம கொல்றீங்க? நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ, இந்த ஜென்மத்தில் மனசுல நிம்மதியே இல்லாம இருக்கேன். நீங்களும் சேர்ந்து ஏன் என்னை வதைக்கிறீங்க" என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

"மது! நம்ம மூணு குடும்பத்து சந்தோஷமும் உன் கையில் தான் இருக்கு. நீ உன் கல்யாணத்திற்குச் சம்மதம்ன்னு ஒரு வார்த்தைச் சொல்லு. உன்னோட அந்த ஒரு வார்த்தைக்காக, எத்தனைப் பேர் ஏங்கிட்டு இருக்காங்க? தெரியுமா" என்றான் தீபக்.

ராஜேஷ், "மது! சித்தார்த்துக்கு என்ன குறை? படிச்சிருக்கான்; அழகாயிருக்கான்; புத்திசாலி; நல்லவன் எல்லாத்துக்கும் மேலே, உன்னை அளவுக்கு அதிகமா நேசிக்கிறான். இதுக்கு மேல என்னடா வேணும்?" என்று தங்கையின் கரத்தைப் பிடித்துக்கொண்டு உருக்கத்துடன் பேசினான்.

"நான்தான் கல்யாணம் வேண்டான்னு சொல்றேனே. ஏன் என்னைத் திரும்பத் திரும்ப வதைக்கறீங்க" என்றவள், தன் அறைக்குச் செல்ல முயன்றவளைப் பிடித்து வேகமாகத் திருப்பினான்.

“லூசா நீ! கிளிப்பிள்ளைக்குச் சொல்றா மாதிரி சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடானா உன் விருப்பப்படி இருக்க. அதென்ன அப்படி ஒரு பிடிவாதம் உனக்கு" என்றான் சீற்றத்துடன்.

அவளை இழுத்துச் சென்று விமலா, சந்துரு எதிரில் நிற்க வைத்து, "இவங்க யாரு? உனக்கும், இவங்களுக்கும் என்ன சம்மந்தம்? அர்ஜுனைப் பெத்து, வளர்த்து, ஆளாக்கி பிள்ளைக்குக் கல்யாணம் செய்து வைக்கணும் என்ற நேரத்தில், மொத்தமா அவனை இழந்துட்டு நிற்கிறாங்க.

அவங்களே மனசைத் தேத்திக்கிட்டு இல்லயா? தன்னோட பிள்ளை, உன்னை ஆசைப்பட்டான்னு... அவன் சொன்ன ஒரு சொல்லுக்காக, அவனோட விருப்பத்தை நிறைவேத்த, உன்னை அவங்க பொண்ணா ஏத்துக்கிட்டு உனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கணும்னு நினைக்கிறாங்களே... அவங்களைப் பத்தி ஒரு நாளாவது நினைச்சிப் பார்த்தாயா?

அவங்களோட கெஞ்சல், கொஞ்சமாவது உன் காதுல விழுதா? நீ செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு போறாங்க. சொல்லப்போனா, நீ இழந்தது ஒண்ணுமே இல்ல. ஆனா, அவங்க வாழ்க்கையோட மொத்தச் சந்தோஷத்தையும் அர்ஜுனோட இழப்போடுச் சேர்த்து இழந்துட்டு நிக்கிறாங்க” என்று சொன்னதும் குமுறிக் குமுறி அழுதாள்.

"நீ என்ன சொன்னாலும் சரி, எனக்குக் கல்யாணம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம். என்னால சித்தார்தோட வாழ்க்கையே நரகம் ஆகிடும். உன் பிரெண்டோட வாழ்க்கையே நாசம் ஆகிடும். அது தான் உனக்கு வேண்டுமா?" என்றாள் அழுகையோடு.

தீபக், “மது எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். என் கல்யாணம் நடக்க, நான் போட்டக் கண்டிஷனை நீ இன்னும் மறந்துதிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். நான் சொன்னதைச் செய்வேன் மது. ரெண்டு நாள் யோசி நல்ல முடிவா எடு" என்றான்.

"ஐயோ...! என்னை ஏன் புரிஞ்சிக்க மாட்டேன்றீங்க? எனக்குக் கல்யாணம் வேண்டாம். சித்தார்த்தோட வாழ்க்கை, என்னால கெட வேண்டாம். சித்தார்த் சந்தோஷமா இருக்கணும். என்னைக் கல்யாணம் செய்துகிட்டா அவருக்குப் பிரச்சனை தான். என்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து வச்சி, அவரோட வாழ்க்கையைச் சூனியமா ஆக்கிடாதீங்க" என்றவள் வேகமாக தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

நடந்த அனைத்தையும் நடுவில் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்கள் இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

விமலா கண்கலங்க அதைக் கண்ட தீபக், "ஆன்ட்டி, ப்ளீஸ் அழாதீங்க! அவ கூடிய சீக்கிரமே நல்ல பதிலா சொல்லுவா. நாங்க கிளம்பறோம். வரோம் அங்கிள்” என்று விடைபெற்றனர்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
453
63
அத்தியாயம் – 49


அடுத்து வந்த நாட்களில், மது தனக்குள் சுருண்டுகொண்டாள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள். ராஜேஷ் வந்து பேசிவிட்டுச் சென்ற நான்கு நாள்களுக்குப் பிறகு, விமலா ஒருநாள் மயங்கி விழுந்துவிட, ‘ஹைபர் டென்ஷன். கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்’ என்று டாக்டர் அறிவுறுத்த அதன்படி சந்துருவும், மதுவும் எப்போதும் விமலாவின் அருகிலேயே இருந்தனர்.

மது, நேரத்திற்குத் தேவையானதை செய்துகொண்டு அவரது அறையிலேயே இருந்தாள். ஆனால், விமலா அவளைப் பார்க்கும் போதெல்லாம், ‘தன் மகனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ! அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்காமலேயே இறந்து விடுவோமோ!’ என்று மருகிட உடல் நலம் மேலும் குன்றத் துவங்கியது.

ஒருநாள் இரவு விமலாவிற்குப் பிபி அதிகமாகி, தன் சுயநினைவை இழக்க அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரை ஐ.சி.யு வில் அட்மிட் செய்துவிட்டு தவிப்புடன் வெளியே நின்று கொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் சந்துருவும் மருந்து வாங்கச் சென்றுவிட, நெற்றியைப் பிடித்தபடி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தாள்

"அண்ணி! நீங்க எங்கே இங்கே?" என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவள், அஷ்வந்தைப் பார்த்ததும் கண்ணீருடன் விஷயத்தைச் சொல்லிவிட்டு, "யாரும் எதுவும் சொல்ல மாட்டேன்றாங்க அஷ்வந்த்! எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு" என்றாள்.

"கவலைப்படாதீங்க அண்ணி! இங்கே அப்பாவோட ஃப்ரெண்ட்தான் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் நான் போய் அவரைப் பார்த்துப் பேசிட்டு வரேன்" என்று ஆறுதல் சொல்லிவிட்டு, டாக்டரின் அறையை நோக்கி நடந்தவன், சித்தார்த்திற்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு டாக்டர் குழு விமலாவைப் பரிசோதித்து, வைத்தியம் செய்து கொண்டிருந்தனர். சந்துரு வந்ததும், அவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அதேநேரம் சித்தார்த், தன் அன்னையுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

சந்துரு நின்றுகொண்டிருக்க, மது அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து சஷ்டி கவசத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்தவனின் நெஞ்சம் கனத்தது. தன் மீது சாய்த்து ஆறுதல் கூறத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு சந்த்ருவிடம் சென்று பேசினான்.

தேவகி, “மது!" என்று அழைக்க, "ஆன்ட்டி!" என்றபடி, அவர் தோளில் சாய்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவள் முதுகைத் ஆதரவுடன் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னார் தேவகி. அவரது வார்த்தையில் சற்று தெளிந்தவல் நிமிர்ந்து பார்க்க சித்தார்த், சந்துருவுடன் பேசிக்கொண்டிருந்தான்.

தேவகி கொண்டு வந்திருந்த பாலை ஊற்றி இருவருக்கும் கொடுத்துவிட்டு, மதுவிற்கும் ஒரு டம்ளரைக் கொடுத்தார். "எனக்கு வேண்டாம் ஆன்ட்டி!" என்றவளை, "நைட் சாப்பிட்டுக் கூட இருக்கமாட்ட. மணி பன்னெண்டு ஆகுது. இந்தப் பாலையாவது குடிம்மா. வயித்தைக் காயப்போடாதே" என்று அன்புடன் சொன்னார்.

"அம்மாவுக்கு இப்படி ஆக நான்தான் காரணம். என்னையே நினைச்சித் தான் அவங்களுக்கு இந்த நிலைமை. அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, என்னால யார் முகத்திலும் விழிக்க முடியாது" என்று அழுதவளை ஆறுதலுடன் அணைத்துக்கொண்டார்.

"நல்லதையே நினைப்போம். கவலைப்படாதே. அவங்க நல்லபடியா குணமாகி, நாளைக்கு இந்த நேரம் உன்னோட பேசுவாங்க பார்த்துகிட்டே இரு. இந்தா முதலில் இந்த பாலை குடி” என்று கொடுக்கவும் மதுவும் மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.

"நீங்களும் கொஞ்சம் குடிங்க" என்றாள்.

"இல்லம்மா எனக்கு இந்த நேரத்தில் வேண்டாம். நீ குடி!" என்றார்.

முழுதாக ஒருமணி நேரம் டாக்டர்களும், அஷ்வந்தும் தேவையான பரிசோதனை அதற்கு உண்டான வைத்தியம் என்று செய்துவிட்டு வெளியில் வந்தனர்.

சந்த்ருவிடம், “ஒண்ணும் பயப்பட வேண்டாம். செகண்ட் அட்டாக். மயக்கம் கொடுத்து ரெஸ்ட்ல வச்சிக்கோம். ரொம்பக் கோபமோ, டென்ஷனோ வராம பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டுச் சித்தார்த்திடமும், தேவகியிடமும் பேசிவிட்டுச் சென்றார்.

“ரொம்பத் தேங்க்ஸ் அஷ்வந்த்! நீங்க மட்டும் இல்லனா, என்ன நடந்து இருக்குமோ?" என்றாள் கண்கள் கலங்க.

"என்ன அண்ணி? இதுக்குப் போய்த் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. நீங்க எனக்குத் தேங்க்ஸ் சொல்லணும்னா, அதை வேற மாதிரி சொல்லுங்க. சரி, நான் கிளம்பறேன். நாளைக்குக் காலேஜ் போகணும்" என்றான்.

“வாயேன் மது! உன்னை, உங்க மாமா வீட்ல விட்டுட்டுப் போறேன்" என்றார் தேவகி.

"இல்லை ஆன்ட்டி! மாமா வீட்ல யாரும் இல்ல. அண்ணனும், அத்தானும் கும்பகோணம் போயிருக்காங்க. மாமாவும், அத்தையும் டூர் போயிருக்காங்க. எல்லோரும் நாளைக்குத் தான் வருவாங்க. அவங்களுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கேன்" என்றாள்.

"சரி, அப்போ நானும் உனக்குத் துணையா இங்கேயே இருக்கேன்" என்றார்.

"அம்மா! நீங்க கிளம்புங்க. நைட்ல நீங்க இங்கே கண்விழிக்க வேணாம். நான் இங்கே இருக்கேன். ஏதாவது தேவைன்னா, நான் பார்த்துக்கொள்கிறேன். அஷ்வந்த்! நீ அம்மாவைக் கூட்டிக்கிட்டு காரை எடுத்துட்டுப் போ" என்று அவனிடம் சாவியைக் கொடுத்தான்.

மது அவசரமாக, "வேண்டாம் ஆன்ட்டி! நாங்களே பார்த்துக்கறோம். இப்போ ஒண்ணும் அவசியம் இல்லையே" என்றாள்.

சித்தார்த், அவளை முறைத்துப் பார்க்க, “இருக்கட்டும்மா. ஏதாவது அவசரம்னா என்ன செய்றது?. நீ இரு சித்தார்த்" என்று சொல்லிவிட்டுச் சந்துருவிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார் தேவகி.

சித்தார்த்தும் கார் வரை வந்து அம்மாவை அனுப்பிவிட்டு, டாக்டரிடம் சென்று பேசிவிட்டு வந்தான். சந்துருவிடம், “அங்கிள்! பக்கத்து ரூம்ல நம்மள தங்கிக்கச் சொல்லிட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க" என்றான்.

“இல்லப்பா நான் இங்கேயே உட்கார்ந்திருக்கேன்" என்றார் சந்துரு. தனது இணையை நினைத்து வெகுவாகக் கலக்கிப் போயிருந்தார் அவர்.

அவரருகில் சென்றவள், “அப்பா! நீங்க ரொம்ப நேரம் கண் முழிக்காதீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் இங்கே உட்கார்ந்துக்கறேன்" என்றாள்.

“ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க. ஆன்ட்டி மயக்கத்தில் தானே இருக்காங்க. இப்போ நீங்க ரெண்டு பேரும் இங்கே உட்கார்ந்து என்ன செய்வீங்க? ஐ.சி.யு ல அவங்க பார்த்துப்பாங்க" என்று சொல்ல, அரை மனதாக இருவரும் சென்றனர்.

கட்டிலில் சந்துருவைப் படுக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அவளருகில் வந்த சித்தார்த், “மது! நீ அந்த பெஞ்சில் படுத்துக்கோ" என்றான்.

அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே, “வேண்டாம். நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்" என்றாள்.

"சொல்றதைக் கேளு மது! நீ போய்ப் படு. சோர்ந்து போயிருக்க. நான் உட்கார்ந்துட்டே தூங்கிடுவேன். உனக்குப் பழக்கம் கிடையாது" என்று சொல்ல, எழுந்து பெஞ்சில் படுத்துக் கொண்டாள்.

சோஃபாவில் அமர்ந்த சித்தார்த், எதிரில் இருந்த டீபாயில் கால்களை நீட்டிக் கண்களை மூடிக்கொண்டான். ஆனால், உறக்கம் மட்டும் வரவில்லை. கண்களைத் திறந்து மதுவைப் பார்த்தவன் ஏசி குளுமையால், துப்பட்டாவை இழுத்து மூடிக்கொண்டு காலை குறுக்கிக்கொண்டு, லைட் வெளிச்சத்தில் கண்கள் கூசியதால் கண்களை கைகளால் மறைத்தபடி படுத்திருந்தாள்.

ஏசியைக் குறைத்துவிட்டு, கட்டில் மேலிருந்த ஒரு பெட்ஷீட்டை எடுத்து, அவளது தூக்கம் கலைந்து விடாமல் மெல்லப் போர்த்திவிட்டு, இரவு விளக்கைப் போட்டவன் லைட்டை அணைத்துவிட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தான்.

இவை அனைத்தையும் தூங்குவது போலக் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த சந்துரு கவனித்ததை சித்தார்த் கவனிக்கவில்லை. காலையில் எழுந்தவள் தன் மீது போர்த்தியிருந்த பெட்ஷீட்டையும், சித்தார்த்தையும் பார்த்தாள், அவன் அயர்து உறங்கிக் கொண்டிருந்தான். தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு ஐ.சி.யு வின் அருகில் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தாள்.

சற்று நேரத்தில் காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தவள் தீபக்கும், ராஜேஷும் வருவதைக் கண்டு எழுந்தாள். அவர்களுக்கு நடந்ததை விவரித்தாள்.

தீபக், “வீட்டுக்கு வந்ததும் தான் மெசேஜ் பார்த்தோம். உடனே கிளம்பி வந்துட்டோம். அப்பாவுக்கும் போன் செய்து சொல்லிட்டேன். ட்ரைன் வந்தாச்சு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவார்கள்" என்றான்.

சந்த்ருவும், சித்தார்த்தும் எழுந்து வெளியில் வர ராஜேஷும், தீபக்கும் சந்த்ருவை விசாரித்துவிட்டு, சித்தார்த்திற்குத் தன் நன்றியை கூறினர். தீபக் சொன்னது போல ஈஸ்வரும், ராஜியும் ஸ்டேஷனிலிருந்து நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

அத்தை, மாமாவைப் பார்த்தும், அவளுக்குச் சற்று தைரியமாக இருந்தது. அருகில் வந்த ஈஸ்வரனை, “மாமா" என்று அழைக்க, அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு நண்பரிடம் பேசியவர், அவளை வெறுப்போடு பார்த்தார்.

தயக்கத்துடன், "மாமா" என்றவளை, "சீ... அப்படிக் கூப்பிடாதே. நான் வளர்த்தப் பொண்ணா நீ! அப்படிச் சொல்லிக்கவே எனக்கு வெட்கமா இருக்கு. அவன் ஒருத்தன் போனது போதாதா? நீ இருந்து, இன்னும் எத்தனைப் பேரைச் சாகடிக்கப் போற? என் மூஞ்சியிலேயே முழிக்காதே!" என்று கோபமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, கண்களை மூடி உதட்டைக் கடித்து, அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.

அருகில் வந்த ராஜி, “மதும்மா! மாமா ஏதோ கோபத்தில் சொல்லிட்டாருடா. கவலைப்படாதே” என்று அவளுக்குச் சமாதானம் சொன்னார்.

தீபக் கோபத்தோடு, “ஏம்மா அப்பாவுக்கு எப்போ, என்ன பேசுறதுன்னு தெரிதா? அவளே பயந்து போயிருக்கா... இந்த நேரத்துல அவளை வாய்க்கு வந்தபடி பேசிட்டுப் போறாரு. இதுக்கா, நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு அவசரமா வந்தீங்க" என்று கடிந்து கொண்டான்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டே அறைக்குச் சென்றவள், தாங்க முடியாமல் கைகளில் முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதாள்.

மொபைலை எடுக்க உள்ளே வந்த சித்தார்த், அவள் அழுவதைத் தாங்க முடியாமல், "மது! அழாதே. அவர், ஏதோ கோபத்தில் சொல்லிட்டார்” என்றான் ஆறுதலாக.

கண்களைத் துடைத்துக்கொண்டு, “இது எங்க குடும்ப விஷயம். நீங்க தலையிடவேண்டாம்" என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்ல, சித்தார்த் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப, ராஜேஷ் கண்களில் கோபத்தோடு நின்றிருந்தான். அவனையும் அழைத்துக் கொண்டு சித்தார்த் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

அன்று காலை தேவகியும், ராமமூர்த்தியும் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். இரண்டு நாள்கள் ஐ.சி.யு வில் இருந்த விமலாவை அறைக்கு மாற்றினர். அறைக்கு வந்த விமலா முதலில், மதுவைத் தான் அழைத்துப் பேசினார். அவரது கரத்தைப் பற்றிக்கொண்டு அழுதாள். ஈஸ்வரன் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து ஈஸ்வரன் வரும்நேரம் அவள் அங்கே இருப்பதில்லை. முடிந்தவரை அவர் கண்ணில் படாமல் ஒதுங்கி இருந்தாள்.

தேவகியும், அடிக்கடி வந்து பார்த்துவிட்டுச் சென்றார். சித்தார்த், தினமும் இருவேளையும் வந்துவிட்டுச் சென்றான். பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். இந்தப் பத்து நாட்களாக, மது ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தாள்.

ஒருநாள் விமலா கணவரிடம், “நம்ம மது இந்தக் கல்யாணத்துக்கு ஒதுக்கவேமாட்டா போல. அவளோட கல்யாணத்தைப் பார்க்காமலேயே நான் செத்துப் போய்டுவேனா" என்று சொல்ல சந்துரு அவருக்கு ஆறுதல் சொன்னார்.

அந்தப் பக்கமாக வந்த மதுவின் காதில் இந்த வார்த்தைகள் விழுந்ததும் துடித்துவிட்டாள். ‘இதற்காகவா, அவர்களுடன் நான் இருக்கிறேன். அன்பான அந்த இரு உள்ளங்களும் தன்னால் அல்லவா வாடி வருந்துகின்றன’ என்று இரண்டு நாட்கள் பெருத்த யோசனையில் இருந்தாள்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்துவிட்டுக் கோவிலுக்குச் சென்றுவிட்டு பெரியவர்களின் அறைக்கு வந்தாள். விமலா குங்குமத்தை எடுத்து, மதுவின் நெற்றியில் வைத்தார்.

பின்னரும் அவள் தயக்கத்துடன் நிற்க, “என்னம்மா தயங்கி தயங்கி நிக்கிற" என்றார் விமலா.

"அம்மா! நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதான், எப்படிச் சொல்றதுன்னு தெரியல" என்றாள்.

"அப்படி என்னம்மா விஷயம்" என்று கேட்டதும் தயக்கத்துடன், “நா..ன் உங்க விருப்பப்படியே சித்தார்த்தைக் கல்யாணம் செய்துக்க சம்மதிக்கிறேன்" என்றாள்.

விமலா ஆச்சரியத்துடன், “மதும்மா! உண்மையாவா சொல்ற! நல்லா யோசிச்சித் தானே சொல்ற. உனக்கு மனப்பூர்வமா சம்மதம்தானே. இல்ல, எனக்காக உன் மனசை மாத்திக்கிட்டதா நடிக்கிறாயா?" என்றார்.

பதட்டத்துடன், “இல்லம்மா! உண்மையாவே எனக்குச் சம்மதம்" என்றாள்.

விமலா சந்தோஷத்துடன், “பார்த்தீங்களா! என் பொண்ணு கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டா. எனக்குத் தெரியும் அவ கண்டிப்பா தன்னோட மனசை மாத்திப்பான்னு. சீக்கிரம், ராஜிக்குப் போன் பண்ணுங்க. சித்தார்த் வீட்டுக்குப் போய் என்னைக்குப் பேசுறதுன்னு கேளுங்க. ஐயோ! என்னால சந்தோஷத்தைத் தாங்க முடியலையே" என்று மகிழ்ந்தவரை, சந்துரு கட்டுப்படுத்திவிட்டு ஈஸ்வரனுக்குப் போன் செய்து உற்சாகத்துடன் விஷயத்தைச் சொன்னார்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டே தன் அறைக்குச் சென்றவள், கதவை மூடிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அன்று மாலை லாப்டாப்பில் சேமித்து வைத்திருந்த அர்ஜுனின் நினைவுகளை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு அனைத்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் கண்ணீருடன் அழித்தாள். அர்ஜுன் தனக்கு வாங்கிக் கொடுத்த பொருட்களை ஒரு பேகில் போட்டு சந்த்ருவிடம் கொடுத்தாள்.

"அப்பா! இதெல்லாம் உங்க பிள்ளை, எனக்காக வாங்கிக் கொடுத்தது. இனி, இதையெல்லாம் உபயோகிக்கும் உரிமை எனக்கு இல்ல. அதனால எல்லாத்தையும் கொண்டு வந்திருக்கேன். இது, அவரோட செயின்" என்று கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் கழற்றிக் கொடுத்து விட்டுச் சென்றாள்.

சந்திரசேகரின் இதயம் கனத்தது. அந்தப் பையை மகனின் உடமைகளுடன் சேர்த்து வைத்துவிட்டு அந்த அறையைப் பூட்டினார்.

அன்றே, ஈஸ்வரன் குடும்பத்தினர் சித்தார்த்தின் வீட்டிற்குச் சென்று விஷயத்தைச் சொல்லி நிச்சயத்திற்கு நாளும் குறித்துக்கொண்டு வந்துவிட்டனர். அலுவலகத்திலிருந்து வந்தவனை அஷ்வந்தும், நேத்ராவும் சேர்ந்து கிண்டல் செய்துகொண்டிருக்க, மது கல்யாணத்திற்குச் சம்மதித்துவிட்டாள் என்ற விஷயத்தை மகனிடம் சொன்னார் தேவகி.

விஷயத்தைக் கேட்டுப் பெரிதாக எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் இருந்த போதும், அவனது முகத்தில் தெரிந்த நிம்மதியையும், சிறு புன்னகையையும் கண்ட தேவகிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
453
63
அத்தியாயம் - 50


ஈஸ்வரனும் ராஜியும் நிச்சயத்திற்குத் தேதி குறித்துவிட்டு, மதுவின் வீட்டிற்கு வந்தனர். மது ஈஸ்வரன் எதிரில் வரவே இல்லை.

அவரே எழுந்து சமையலறையில் நின்றிருந்தவளை, “மதும்மா" என்றது தான் தாமதம், "மாமா" என்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

"சாரிடா கண்ணா! நான் அது போலப் பேசியிருக்கக் கூடாது. உன்னிடம் கோபத்துல பேசிட்டேனே தவிர என் மனசும் இத்தனை நாளாக சரியாவே இல்லை. சரி போனது போகட்டும். நீ ஒரு சந்தோஷமான செய்தி சொல்லியிருக்க உனக்கு என்ன வேணும்?" என்றார்.

"சொல்றேன் மாமா" என்றவள் அவருடன் ஹாலுக்கு வந்தாள். “நான் கல்யாணமாகி போனால் அப்பாவும், அம்மாவும் இந்த வீட்டில் தனியா இருப்பாங்க. அவங்களுக்குத் தனிமை ரொம்பக் கொடுமையா இருக்கும். அதனால் இனி, அவங்க ரெண்டு பேரையும் நீங்க நம்ம வீட்டிலேயே வச்சிக்கணும். எனக்கு வேற எதுவும் வேணாம். அவங்க வேணாம்ன்னு சொன்னா, நானும் யோசிக்க வேண்டியிருக்கும்" என்றாள் கறாராக.

நிறைய வாக்குவாதத்திற்குப் பிறகு விமலாவும், சந்துருவும் சம்மத்தித்தனர். மளமளவென வேலைகள் நடந்தன. மது தனது சந்தோஷத்தையும் காண்பிக்கவில்லை அதேநேரம் சோகத்திலும் புரளவில்லை.

அவள் திருமணத்திற்குச் சம்மதித்தது, அனைவருக்குமே மகிழ்ச்சி. சித்தார்த்தே சுபாவிற்குப் போன் செய்து சொன்னதும், அவளால் நம்பவே முடியவில்லை. மறுநாளே குடும்பத்துடன் கிளம்பி வந்துவிட்டனர். வீடே சந்தோஷத்தில் மூழ்கி இருந்தது. விஷயம் கேள்விப்பட்டு கீதாவும், சுரேஷும் தன் குடும்பத்துடனும் வந்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நிச்சயத்திற்கு, நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். நல்ல நேரத்தில் தாம்பூல தட்டு மாற்றப்பட்டு நிச்சயம் உறுதி செய்யப்பட்டது. முதலில் மது மோதிரம் அணிவிக்க, அடுத்து சித்தார்த் அவளுக்கு மோதிரம் அணிவித்துவிட்டு கையை விடாமல் பிடித்திருக்க, மது சங்கடத்துடன் நின்றிருதாள்.

யாரும் அறியாவண்ணம் அவள் தன் கையை இழுக்க முயல, சித்தார்த் வேண்டுமென்றே அவள் கையைப் பிடித்து விரலால் அவள் உள்ளங்கையில் லேசாகச் சுரண்டினான். அவளுக்கு உடலில் மின்சாரம் பாய, கையை வேகமாக இழுத்துக் கொண்டாள்.

அஷ்வந்த், “அண்ணா! இதெல்லாம் ரொம்ப ஓவர். நாங்க இத்தனைப் பேர் இருக்கோம் இப்படியா டைரக்டா ரெண்டு பேரும் கையைப் பிடிச்சி இழுத்து விளையாடுவீங்க. அங்கே பாரு அண்ணி எப்படி வெட்கபடறாங்க" என்று சிரித்தான்.

அவள் எதுவும் பேசாமல், தலையைக் குனிந்தபடி நின்றிருந்தாள். மேகலாவும், வித்யாவும், “ஏய்! கொஞ்சம் சிரிச்சா மாதிரி இருடி. முகத்தை என்னவோ தின்ன எதோ போல வச்சிருக்க" என்று சொல்லியும், மதுவால் லேசானப் புன்னகையைக் கூட வெளிப்படுத்த இயலவில்லை.

தலையை உயர்த்தாமல் நின்றிருந்தவளை, "மது வெட்கப்படுறதை இப்போவே நல்லா பார்த்துக்கோங்க. கல்யாணத்துக்கு அப்புறம், அப்படியே ரெண்டு பேரும் ஆப்போசிட்டா ஆகிடுவாங்க. விட்டா அண்ணன் மதுவுக்குக் கூஜாவே தூக்குவார்" என்று சிரித்தான் சுரேஷ்.
"என் பொண்டாட்டிக்கு நான் கூஜா தூக்காம வேற யாருடா தூக்குவா? என்ன கீதா உங்க கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படித்தானே" என்று கேட்டான் சித்தார்த்.

“இப்போவே அப்படித்தான். கல்யாணத்துக்குப் பின்னால மட்டும் மாறிடவா போகுது?" என்று கீதா சொல்ல, இப்போது அனைவரும் சுரேஷைப் பார்த்துச் சிரித்தனர்.

அனைத்து பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்தாலும், மதுவின் மனதில் வருங்காலத்தை எண்ணி பயம் தான் நிறைந்திருந்தது. சித்தார்த், அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளது மனத்தில் என்ன உழன்றுகொண்டிருக்கிறது என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

கண்களில் காதலைத் தேக்கி, ‘விரைவிலேயே உன் மனத்தை உனக்குப் புரிய வைத்து சந்தோஷத்தோடு வைத்துக் கொள்வேன் மது! என்று எண்ணிக்கொண்டான்.

வீடே மகிழ்ச்சி கடலில் இருந்தது. மணமக்களைவிட சுற்றத்திற்கும், உறவுகளுக்கும் மனம் நிறைந்திருந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் சித்தார்த் சற்று தாமதமாக ஆபீஸ் சென்றான். சித்தார்த் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். சித்தார்த் புன்னகையுடன் அவர்களின் வரவேற்பிற்கு நன்றி கூறினான்.

“மது வேலையை விட்டுப் போனதும் நாங்களெல்லாம் என்னவோ ஏதோ என்று நினைத்தோம், ஆனால், கடைசி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் உங்க காதலை வெளியே யாருக்கும் தெரியாமலேயே மறைத்து வைத்திருந்து விட்டீர்களே?”

“நிச்சயத்திற்குத் தான் எங்களை எல்லாம் கூப்பிடவில்லை அட்லீஸ்ட் கல்யாணத்துக்காவது சொல்வீங்களா" என்று ஆளாளுக்கு கேட்டனர்.

சித்தார்த் சிரித்துக்கொண்டே, “சாரி பிரெண்ட்ஸ்! கல்யாணத்துக்கு யாரையும் கூப்பிட முடியாத சூழ்நிலை. ஆனால், எல்லோருக்கும் வரவேற்புக்கு அழைப்பு உண்டு. எல்லோரும் குடும்பத்தோடு வந்து உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசிர்வாதத்தையும் கொடுக்கணும்" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

பின்னாலேயே வந்த ரமேஷும், ஜீவாவும், "என்னடா மாப்பிள்ளை லீவ் போட்டுட்டுக் கனவுலகத்தில் இருப்பேன்னு பார்த்தா ஆபீஸ் வந்து நிக்கிற" என்றனர்.

“கனவுலகத்தில் இருக்கணுமா? கனவு காணத்தான் நைட் இருக்கே. பகல்ல பிழைப்பைப் பாருங்கப்பா" என்றான் சிரிப்புடன்.

"டேய் ஜீவா! சித்தார்த் முகத்தில், எக்ஸ்ட்ரா பிரகாசம் தெரியுது இல்ல" என்றான் ரமேஷ்

ஜீவாவும், "ஆமாம்ப்பா... இவ்வளவு நாள் ஜீரோ வாட்ஸ் பல்பு அதுவும் அப்பப்போ மினுக்கு மினுக்குன்னு எரிஞ்சிட்டு இருந்தது. இப்போ ஃபிஃப்டி வாட்ஸா... ஹண்ட்ரட் வாட்ஸா" என்று கேலியாகச் சொன்னான்.

"ரெண்டு பேரும் என்னை ஒரு வழி பண்றதுன்னு முடிவோட இருக்கீங்க. போங்கடா! போய் வேலையைப் பாருங்க" என்றான் சித்தார்த்.

"வேலையா? அது எங்கேடா போகுது? இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சநேரம் கழிச்சி வேலையைத் தொடங்கினால் தப்பில்லை” என்ற ஜீவா, “ஆமாம் என்னடா கல்யாணத்துக்கு யாரையும் கூப்பிடமாட்டேன்னு சொல்லிட்ட?" என்று கேட்டான்.

"கல்யாணத்தைக் கொஞ்சம் சிம்பிளா பண்ணலாம்னு தான். கோவில்ல கல்யாணம், அங்கிருந்து நேரா ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு, ஈவ்னிங் ரிசப்ஷன். இது தான் பிளான்" என்றான்.

"நீயே முடிவு பண்ணிட்டியா! அம்மா, அப்பாகிட்டச் சொன்னாயா? என்ன சொன்னாங்க ? மது வீட்டில ஒத்துக்கிட்டாங்களா?" என்று ரமேஷ் கேட்டான்.

சிரித்துக்கொண்டே, "அம்மா, அப்பாவுக்குச் சொல்லாமலா. இந்த முடிவை எடுக்கக் காரணமே மதுதான். கல்யாணம் கிராண்டா செய்தா, அவளுக்கு மனசு கஷ்டமா இருக்கும்" என்றான் புன்னகையுடன்.

"என்னடா! இதுக்குள்ள வரப்போற பொண்டாட்டிக்குச் சப்போர்டா" என்றான் ஜீவா.

"சப்போர்ட் இல்லடா அவளோட மனசைக் காயப்படுத்தாம இருக்கத் தான். கல்யாணத்துக்கே அரைமனதா தான் சம்மதம் சொல்லியிருப்பா. என்னோட முடிவு மட்டும் இல்ல, அவளோட எண்ணமும் அதுவாகதான் இருக்கும். அம்மாவும், அப்பாவும் கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டு ஈவ்னிங் மது வீட்டுக்குப் போய்ப் பேசறேன்னு சொல்லி இருக்காங்க."

"உன்னைப் பார்த்தா எனக்குப் பெருமையா இருக்குடா. நீ கண்டிப்பா மதுவோட மனசை மாத்திடுவன்னு நம்பிக்கையும் இருக்கு" என்ற ரமேஷ் சித்தார்த்தை அணைத்துக் கொண்டான்.

மது தன் வீட்டிலும், அதையே தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"கல்யாணத்தைச் சிம்பிளா வச்சிக்கலாம்னு சொல்லுங்க மாமா" என்றதும், "அது எப்படிடா? அவங்க என்ன பிளான் வச்சிருக்காங்களோ? அதுமட்டும் இல்லை நம்ம வீட்டிலயும் சரி, அவங்க வீட்லயும் சரி இதுவரை நடந்த கல்யாணமெல்லாம் கிராண்டா செய்துட்டு உன் கல்யாணத்தை மட்டும் எப்படிம்மா சிம்பிளா பண்ணமுடியும்?" என்றார் கேள்வியாக.

"ப்ளீஸ் மாமா!" என்று கெஞ்சியவளைப் பார்த்த ஈஸ்வர், “சரிடா அவங்க வரட்டும். பேசுவோம். அவங்க சரின்னு சொன்னாதான், நீ சொன்னது போல நடக்கும். இல்லனா, நாமதான் மாத்திக்கணும்" என்றதும், அவளும் அரைமனதாக ஒப்புக்கொண்டாள்.

வீட்டிற்கு வந்த சித்தார்த், “அம்மா! இதைப் பாருங்க என்று அன்னையிடம் புடவை ஒன்றையும், நகைப் பெட்டியையும் கொடுத்தான்.

அழகிய இலை பச்சை நிறத்தில் மெல்லிய கரையிட்ட பட்டுப் புடவை, அதற்கு இணையாக பச்சைக் கல் ஒற்றைச் சரத்தில் கழுத்தணி என்று அமர்க்களமாக இருந்தது.

“ரொம்ப நல்லாயிருக்குப்பா. ஒண்ணு செய் நீயும் கிளம்பி வா. உன் கையாலேயே மதுக்குக் கொடுத்திடு" என்றார்.

"வேற வினையே வேண்டாம். இதைக் கொண்டு போய்க் கொடுங்க. ஆனா, நான் வாங்கிட்டு வந்தேன்னு சொல்லாதீங்க" என்றான்.

சித்தார்த் சொல்வதை கேட்டுக்கொண்டே வந்த சுபா, “அடேங்கப்பா! நீயா பயப்படுற? அதிசயம் தான். நான் அப்போதே சொல்லலை, உனக்கு வரப்போற பொண்டாட்டி, உன் காதைப் பிடித்துத் திருகுவான்னு" என்றாள் சிரித்துக்கொண்டே.
“உனக்கு நேரம் காலமே கிடையாது.

“சுபா! கிளம்பு வந்து பேசிக்கலாம். மீரா, இந்தப் புடவையையும் சேர்த்து எடுத்து வச்சிக்க" என்று அனைவரையும் துரிதப்படுத்திக் கொண்டிருந்தார் தேவகி.

மதுவின் வீட்டில் மேகலாவும், வித்யாவும் சேர்ந்து, "மது! இந்தப் புடவையைக் கட்டு, இந்த நகையைப் போட்டுக்கோ மேட்சா இருக்கும்" என்று ஆளாளுக்குப் போட்டுக் குழப்ப, மது இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூவுடன் அங்கே வந்த ராஜி, "மது! இன்னுமா நீ ரெடியாகல? அவங்க இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுவாங்க. சீக்கிரம் ரெடியாகு! திரும்பு இந்தப் பூவை வச்சிக்கோ" என்று நெருங்கக் கட்டிய மல்லிச் சரத்தை அவளது கூந்தலில் சூட்டிவிட்டார்.

"அத்தை! இவங்க ரெண்டு பேரையும், முதல்ல இங்கேயிருந்து இழுத்துட்டுப் போங்க. நானே கிளம்பி வரேன்."

"நீங்க ரெண்டு பேரும், கீழே போய்... கிச்சன் வேலையைப் பாருங்க!" என்று இருவரையும் கீழே அனுப்பிவிட்டுத் திரும்பியவர், அவள் சிலையாக அமர்ந்திருப்பதைப் பார்த்து, "மதும்மா! உனக்குக் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். எங்களுக்குப் புரியுது. அவங்க வரும் போது முகத்தைக் கொஞ்சம் சிரிச்சது போல வச்சிக்கோடா" என்று வாஞ்சையுடன் சொல்ல, சரியென்று தலையை அசைத்தாள்.

"என் ராஜாத்தி! சீக்கிரம் கிளம்பிவாடா" என்று சொல்லிவிட்டு கீழே சென்றார். சிலநொடிகள் கண்களை மூடியபடி நின்றிருந்தவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கிரேப் சில்க் ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு, தயாராக ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் சித்தார்த்தின் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர். அனைவரும் வாசலுக்கே வந்து வரவேற்க, மது மட்டும் தன் அறையிலேயே இருந்தாள்.

சுபா, “சித்தி! மது எங்கே?" என்றாள்.

“ரூம்ல இருக்காமா. வித்யா அக்காவைக் கூட்டிட்டுப் போம்மா" என்றார் ராஜி.

கதவைத் தட்டிவிட்டு எட்டிப் பார்த்த மீரா, “ஹாய் மது! எப்படி இருக்க? என்றாள் புன்னகையுடன்.

“வாங்க” என்று இருவரையும் வரவேற்றவள் அவர்களது நலத்தை விசாரித்தாள்.

அவள் காதருகில், "என்ன கல்யாணப் பொண்ணே நைட்ல தூக்கம் வருதா? தூக்கத்தில் கனவு வருதா?" என்று கேட்ட மீரா குறும்புடன் சிரிக்க, அவள் வலிந்து முறுவலித்தாள்.

சுபா, “அண்ணி, மூணு கேள்வி கேட்டாங்க. ஆனா, வந்தது ஒரே ஒரு பதில்தானா. சரி விடு. நாங்க எல்லோரும் நல்லாயிருக்கோம். நீ எப்போ எங்க வீட்டுக்கு வரப்போறன்னு எதிர்பார்த்துக் காத்துட்டிருக்கோம்" என்றதும், வேண்டாவெறுப்பாக ஒரு புன்னகை புரிந்தாள்.

“சரி, வா. கீழே போகலாம். எல்லோரும் நம்ம வீட்டில் இருப்பவர்கள் தானே அப்புறம் என்ன வெட்கம் வா" என்று அழைத்தாள் மீரா.

மது , “அக்கா, அண்ணி" என்று தயக்கத்துடன் அழைக்க.

இருவரும் நின்று திரும்பி மதுவைப் பார்த்தனர். "உங்க ரெண்டு பேர்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கறேன். அன்னைக்கு, ஏதோ கோபத்துல எடுத்தெறிஞ்சி பேசிட்டேன்" என்று வருத்தத்துடன்.

மீரா சிரித்துக்கொண்டே, “இவ்வளவு தானா, நாங்க என்னவோ ஏதோன்னு நினைத்தோம். அதை நாங்க மறந்தே போய்ட்டோம். இப்போ நீ எங்க வீட்டுப் பொண்ணு" என்றாள்.

சுபா ஆதரவுடன் அவளது தோளைத் தொட்டு, “ இன்னுமா அதையே நினைச்சிட்டு இருக்க? அதுக்குத்தான் நிச்சயதார்த்தம் அன்னைக்குச் சோர்ந்து போயிருந்தியா?” என்று கேட்டதும் தயக்கத்துடன் நின்றிருந்தவளைப் பார்த்த மீரா, “நீ உன் மனசுல இருந்ததை வெளியே கொட்டிட்ட... உன்னுடைய சூழ்நிலை அப்படி. நாங்க யாரும் உன்னைத் தப்பா நினைக்கல. வா" என்று அவளை அழைத்துக்கொண்டு கீழே வந்தனர்.

அவளும் தான் சாதரணமாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டாள். மீரா, தேவகியிடம் சித்தார்த் கொடுத்தனுப்பிய பார்சலைக் கொடுக்க, அவர் மதுவிடம் கொடுத்தார்.

“மது! இது உனக்கு. பிரிச்சிப் பார்த்துப் பிடிச்சிருக்கான்னு சொல்லு" என்று கனிவாகச் சொல்ல, "எதுக்கு ஆன்ட்டி?” என்றவள் நாக்கைக் கடித்துக்கொண்டு, “அத்தை... இப்போ இந்தக் கிப்ட்?" என்று நெளிந்தாள்.

“மது! அது வேற; இது வேற. இது சம்திங் ஸ்பெஷல். பார்த்துட்டு உன்னோட கமெண்டைச் சொல்லு. உன்னோட கமெண்டுக்காக, ரொம்ப நேரமா வெய்ட்டிங்" என்று மர்மமாகப் புன்னகைத்தால்.

மது கிப்ட் ராப் செய்யப்பட்டிருந்த அந்தப் பார்சலைப் பிரித்து, புடவை இருந்த பெட்டியைத் திறந்தாள். உள்ளே, அழகிய இலை பச்சை நிறத்தில் பார்டர் இல்லாமல் தங்க நிறச் சரிகையில் சற்று இடைவெளி விட்டு மயில் பிரிண்ட் செய்யப்பட்டு அழகாக இருந்தது. அவளுக்குப் பார்த்தவுடன் பிடித்துவிட, முகத்தில் புன்னகையாக வெளிப்பட்டது.

"ம்ம்.. ரொம்ப அழகா இருக்கு அத்தை! எனக்காக இவ்வளவு அழகா செலக்ட் பண்ணி வாங்கிட்டு வந்திருக்கீங்க தேங்க்ஸ்!" என்றாள்.

சிரித்த தேவகி, “போய்க் கட்டிட்டு வாயேன்" என்றதும் எழுந்தவளிடம், ஜுவெல் பாக்சையும் கொடுத்து அனுப்பினார்.

புடவையைக் கட்டிக்கொண்டு நகைகளை அணிந்து கொண்டு வர, தேவகி அவளது கன்னத்தை வழித்துத் திருஷ்டி கழித்துவிட்டு, “ராஜாத்தி மாதிரி இருக்கேடா கண்ணம்மா" என்றார்.

அவள் அழகாக புன்னகைக்க, சுபா தன் மொபைல் கேமராவில் கிளிக்கிக் கொண்டாள்.

லேப்டாப்பில் மும்முரமாக இருந்த சித்தார், தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த கைப்பேசியை எடுத்து, “சுபா! முக்கியமான மெயில் அனுப்பிட்டு இருக்கேன். அப்புறம் பேசு” என்று போனை வைக்க முயல, "இருடா! உன் பெர்சனல் மொபைலுக்கு ஒரு இமேஜ் அனுப்பியிருக்கேன் அதைப் பாரு" என்றாள்.

"ஏய்... எனக்கு வேலையிருக்கு. நான் அப்புறம் பார்க்கறேன். நீ போனை வை" என்றவன் போனைக் கட் செய்துவிட்டு வேலையில் மூழ்கினான்.

அடுத்த இரண்டாம் நிமிடம் மீண்டும் ஒலிக்க, எடுத்தவன் எரிச்சலுடன், “நான்தான் அப்புறம் பார்க்கறேன்னு சொல்றேனே" என்றதும், "போடா! நீயும்; உன் வேலையும். முதல்ல நீ அந்த இமேஜைப் பாரு. அதுக்குப் பிறகு திட்டலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணு" என்றாள் பிடிவாதமாக.

"உன்கிட்ட பெரிய தொல்லையா போச்சுடி” என்றவன், படத்தைத் திறந்து பார்க்க, தான் வாங்கிக் கொடுத்த புடவையும், நகைகளையும் அணிந்திருந்த படத்தைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டான்.

இந்த முறை அவனே தமக்கைக்குப் போன் செய்ய, அவள் இரண்டு முறை எடுக்காமல் போக்குக் காட்டிவிட்டு மூன்றாவது முறை எடுத்தாள்.

“சுபா, ப்ளீஸ்...ப்ளீஸ்... ஒரு க்ளோசப் ஷாட் எடுத்து அனுப்பேன்" என்றான் கெஞ்சலாக.

சுபாவோ, “முடியாது போடா! நீ போய் மெயிலை அனுப்பு" என்று கோபித்துக்கொண்டது போலச் சொல்ல, "அக்கா... உன் தம்பிக்காக இதைக் கூடச் செய்யமாட்டியா, ஒண்ணே ஒண்ணு. ப்ளீஸ்ஸ்..." என்று கெஞ்சுவதைப் போல சிரித்துக்கொண்டே கேட்டான்.

"பிழைச்சிப் போடா சிறுவா" என்றவள், அவன் கேட்டபடியே அவளை க்ளோசப் ஷாட் ஒன்று எடுத்து அனுப்பினாள்.

போட்டோவைப் பார்த்த சித்தார்த் உதடுகளில் நிறைந்திருந்த புன்னகை, உள்ளத்தில் இல்லை என்பதை அவளது விழிகளின் வெறுமை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. அதுவும், ஒரு வகையில் அழகாய் தோன்ற, மளமளவென மெயிலை அனுப்பிவிட்டு வெளியில் கிளம்பிச் சென்றான்.

இந்தத் புடவை உனக்கு ரொம்ப அழகாயிருக்கு மதுஎன்று மெச்சுதலாகச் சொன்ன மேகலாவிடம், "தேங்க்ஸ்" என்றாள்.

மீரா, “ம்ம், நம்ம மாப்பிள்ளை சாரோட செலக்ஷன் ஆச்சே சும்மாவா! பொண்ணையே சூப்பரா செலக்ட் பண்ணவருக்குப் புடவை செலக்ட் பண்றதா கஷ்டம்" என்று ரகசியத்தைப் போட்டு உடைக்க, மதுவின் முகம் சுருங்கியது.

அதைக் கண்ட மேகலா உடனே மதுவின் தோளை தொட்டு அழுத்த மது தன்னை நிதானப்படுத்திக் கொள்ள கைகளை இறுக மூடிக்கொண்டாள். ஆனாலும், சுபா மற்றும் மீராவின் கண்களுக்கு எதுவும் தப்பவில்லை.

பொதுவாக பேசிக்கொண்டிருந்த பெரியவர்களின் பேச்சு, கல்யாணத்தைப் பற்றித் திரும்பியது.

“சம்மந்தி! இன்னும் பதினைந்து நாள்ல அருமையா ஒரு முகூர்த்தம் இருக்கு. அதை விட்டா, இன்னும் ரெண்டு மாசத்துக்கு முகூர்த்தம் அவ்வளவு நல்லதா இல்ல. நீங்க என்ன சொல்றீங்க?" என்றார் ராமமூர்த்தி.

ராஜேஷ் அவசரமாக, “வர்ற முகூர்த்தத்திலேயே வச்சிக்கலாமே மாமா! அதன்பிறகு என்றால் நானும் ஆபீஸ் போய் ஜாயின் பண்ணணும். அப்புறம் லீவ் கிடைப்பது கஷ்டம். தீபக்கும் இப்போ லீவ்ல தான் இருக்கான். அப்புறம் அவனுக்கும் லீவ் போட முடியாது. அதனால் தான் சொல்கிறேன்" என்று ஓரக்கண்ணால் தங்கையைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

ராஜேஷின் அவசரமான பேச்சை கேட்டவள், ‘லீவுக்காகவா சொல்ற நீ? உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா. என்னோட மனசு மாறி, எதாவது சொல்லிவிடுவேன் என்று உனக்குப் பயம்’ என்று நினைத்துக்கொண்டாள்.

அனைவரும் கல்யாணப் பேச்சில் மூழ்கியிருக்க, அவளுக்குத் தொண்டையை அடைப்பது போலிருந்தது. ‘இன்னும் பதினைத்து நாட்கள் தான், இங்கே இருக்க முடியுமா?’ என்று எண்ணும்போதே அழுகை வரும் போலத் தோன்றியது.

“அப்புறம் ஒரு விஷயம், கல்யாணத்தைக் கொஞ்சம் சிம்பிளா பண்ணா நல்லாயிருக்கும்னு சித்தார்த் சொல்றான். ஈவ்னிங் ரிசப்ஷனைக் கிராண்டா வச்சிக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க?" என்றார் தேவகி.

சந்துரு புன்னகையுடன், “நாங்களும் இதை எப்படிச் சொல்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருந்தோம். பரவாயில்லை ரெண்டு பேருக்கும் இந்த விஷயத்திலே ஒரே மாதிரி யோசிச்சிருக்காங்க" என்று சிரிக்க, மதுவிற்கோ எரிச்சலாக வந்தது.

‘சித்தார்த் சொன்னானாம் சித்தார்த். அப்படியே என் மனசுல இருக்கறதைச் சொல்றானாம். எனக்காக செய்வதைப் போல, எல்லோரிடமும் நடிக்க வேண்டியது’ என்று மனசுக்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.
மதுவிற்கு அங்கே அமர்ந்திருப்பது ஒருவித இறுக்கத்தைக் கொடுக்க, “அத்தை! நான் ரூமுக்குப் போகட்டுமா?" என்று தேவகியிடம் கேட்டதற்கு, "சரிம்மா" என்றார்.

அவளது மனம் முழுவதும் ஒருவிதமான அச்சம் சூழ்ந்திருந்தது. இவ்வளவு நாள் இருந்த சொந்தங்களை விட்டுச் செல்லப் போகிறோம். புதுச் சொந்தங்கள், புது இடம், அவர்களுடன் எப்படிப் பொருந்தப் போகிறோம்?’ என்ற எண்ணமே அவள் மனதில் சுழன்று கொண்டிருந்தது. ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டே வந்தவளுக்கு, கடைசியாக சித்தார்த்தை நினைத்ததும் பயத்தில் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

‘இனி, நாளெல்லாம் அவனோடு ஒரே அறையில். கடவுளே! நினைக்கும் போதே நெஞ்சம் கனத்து மூச்சு முட்டியது. எப்படி? அவனுடன் ஒரே அறையில் இருக்கப் போகிறேன்? நூறு பேருக்கு முன்பாக மோதிரம் போடும்போதே, தன் விரலால் உள்ளங்கையில் சுரண்டினான். இனி, தனியறையில் என்னவெல்லாம் செய்வானோ!’ என்று எண்ண எண்ண, அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன்றியது.

இதையெல்லாம் எண்ணிப் பயந்து கொண்டிருந்தவளின் பின்னால் வந்த மேகலா, அவளது தோளைத் தொட “ஆஆ... " என்று அலறினாள் மதுமிதா.

அவளை விட மேகலா பயத்துடன் நின்றிருக்க, நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, "நீயா?" என்றாள்.

"வேற யாருடி வருவாங்க? நீயான்னு ஒரு கேள்வி வேற. ஏன்டி திடீர்னு கத்தின. எனக்குப் பயத்தில் உடம்பே நடுங்கிடுச்சி. அப்படி என்ன நினைப்புல இருந்த?" என்றாள் கடுப்புடன்.

"அது... கல்யாணத்துக்கு அப்புறம் நானும், சித்..." என்றவள் சட்டென நிறுத்திவிட்டு மேகலாவைப் பார்க்க அவள் கிண்டலாகச் சிரித்தாள்.

"ஒஹ்.. கனவா! நான் போறேன். நீ உட்கார்ந்து நல்லா கனவு காணு" என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே செல்ல, “ஏய்! நீ நினைக்கிறா மாதிரி ஒண்ணுமில்ல" என்றவளது பேச்சைக் கேட்க மேகலா அங்கே இல்லை.

‘இவள் ஒருத்தி! அவளாக ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு போகிறாள்’ என்று எண்ணிக்கொண்டே தன் உள்ளங்கையைப் பார்த்தாள். சித்தார்த் தன் விரலால் தீண்டியது நினைவிற்கு வர, உடலில் ஒரு குறுகுறுப்பு தோன்ற, புடவை முந்தானையால் அந்தக் கையை இறுகக் கட்டிக்கொண்ட போதும், குறுகுறுப்பு மட்டும் அடங்கவே இல்லை.

தனியாக இருக்க இருக்க, சித்தார்த்தின் நினைவு அதிகமாக அவளை ஆக்கிரமித்து இம்சிக்க, கீழே இறங்கி வந்தாள். அவளைப் பார்த்த சுபா, குழந்தைகளை அவளிடம் அனுப்பி வைக்க, அவர்களுடன் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தாள்.

இரண்டு மணி நேரம் கழித்து ஒரு பாக்கிங்குடன் வீட்டிற்கு வந்தான் சித்தார்த். அது வரையிலும் கூட வீட்டிற்கு யாரும் வந்து சேரவில்லை. தன் அறைக்கு வந்தவன் பேக்கிங்கில் இருந்த மதுவின் லாமினேஷன் செய்யப்ட்டிருந்த க்ளோசப் புகைப்படத்தை, தன்னுடைய வார்ட்ரோபின் மறைவான பகுதியில் மாட்டி வைத்தான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
453
63
அத்தியாயம் – 51

நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தன. ஆளாளுக்குக் கல்யாண வேலையில் மூழ்கியிருக்க, சித்தார்த் திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால், மதுவோ அதற்கு நேர்மாறாக, தவித்துக் கொண்டிருந்தாள்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது. முதல் நாள் இரவெல்லாம் மதுவிற்கு ஏதோ குழப்பமும், பதட்டமும் தோன்றி தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். விடியும் நேரம் தான் களைப்பில் உறங்க ஆரம்பித்தாள்.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவள் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்த விமலா, கலங்கிய விழிகளைத் துடைத்துக்கொண்டு, எல்லோரையும் தயாராகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு, மணக்கோலத்தில் வந்தவளை அனைவரும் மனநிறைவுடன் பார்க்க, ராஜேஷ் கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டான். அவனது மனம் பெரும் சந்தோஷத்தில் இருந்தது. பெற்றோரின் புகைப்படத்தை வணங்கியவள், பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

கோவிலில் சுவாமியைத் தரிசித்துவிட்டு மணவறையை நெருங்க நெருங்க, கால்கள் தள்ளாட கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருந்தது அவளுக்கு. சிகப்பு வண்ணப் பட்டில் எழில் ஓவியமாய் தன் அருகில் அமர்ந்தவளைப் பார்த்த சித்தார்த், வாழ்வின் மொத்தச் சந்தோஷத்தையும் ஒன்றாக அடைந்தது போல மகிழ்ந்தான்.

மது, சித்தார்த்தின் குடும்பம், அவர்களது நண்பர்கள் குடும்பம், ஸ்ரீராம் இருவீட்டுச் சம்மந்திகள் என்று குழுமி இருக்க, வேத மந்திரம் முழங்க நல்ல நேரத்தில் மதுவின் சங்குக் கழுத்தில் சித்தார்த்தின் வலிய கரங்கள் மங்கள நாணைப் பூட்ட, அனைவரும் மனநிறைவுடன் அட்சதைத் தூவி வாழ்த்த திருமணம் நல்லபடியாக முடிந்தது.

அனைவரின் மனமும் நிம்மதியிலும், சந்தோஷத்திலும் நிறைந்திருக்க,அவளது விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது. மங்கல நாணைப் பூட்டிவிட்டுக் குங்குமத்தை வைக்கும் போது அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீர் அவன் கைகளில் பட்டுத் தெறிக்க, சிறுவேதனையுடன் மதுவைப் பார்த்தான்.

மதுவின் நெற்றியில் திலகமிட அருகில் நெருங்கியவன், அவள் காதுகளில் மட்டும் விழும் குரலில், “மது கன்ட்ரோல் யுவர் ஸெல்ஃப்" என்றதும், நாசூக்காக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அதன்பின் நடந்த சடங்குகளில், ஒருவிதமான இயந்திரதனத்துடன் தான் நடந்துகொண்டாள். அவளது கண்ணீரைக் கண்ட சித்தார்த் அவளை எதுவும் சீண்டவில்லை. சடங்குகள் முடிந்ததும், ரெஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டு, ஸ்ரீராமின் ஹோமிற்குச் சென்று அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து காலை உணவை முடித்துக்கொண்டு, சித்தார்த்தின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ஆரத்திச் சுற்றி மணமக்களை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிகொண்டிருக்க, மணமக்கள் இருவரும் அருகருகில் அமர்ந்திருந்த போதும், எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சற்றுநேரம் கழித்துச் சித்தார்த் எழுந்து சென்று தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

தேவகி நேத்த்ராவை அழைத்து, “அண்ணியை உன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போ. கொஞ்ச நேரம் படுக்கக் சொல்லு. ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றதும், நேத்ரா மதுவை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

பின்னாலேயே வந்த சுபா, “மது புடவையை மாத்திக்க. கொஞ்சம் படுத்து எழுந்திரு. மதியம் சாப்பிட்டுட்டு கிளம்பச் சரியாக இருக்கும்” என்றதும், அவள் சொன்னபடியே செய்தவள், இரவில் சரியாக உறங்காததும், சோர்வும் சேர்ந்து அழுத்த படுத்த அடுத்த நிமிடமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

சித்தார்த் அந்த அறைக்கு வந்ததையோ, ஆழ்ந்து உறங்கும் தன்னைக் காதலுடன் பார்த்ததையோ அறியாமல் நித்திரையில் ஆழ்ந்திருந்தாள்.

மீரா அவளை எழுப்பிய போது மணி இரண்டாகி இருந்தது. ‘ஐயோ! ரெண்டு மணி நேரம் தூங்கியிருக்கோம். அத்தை என்ன நினைத்துக் கொள்வார்களோ!’ என்று எண்ணி அவசர அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.

தேவகி, “என்னம்மா நல்லா தூங்கினாயா?" என்றதும், “சாரி அத்தை! ரொம்ப டயர்டா இருந்தது அதான்..." என்றாள்.

“அதனால் என்ன? வா சாப்பிடலாம்” என்றவர், “நேத்ரா! அண்ணி எழுந்தாச்சுன்னு அண்ணனைச் சாப்பிடக் கூட்டிட்டு வா" என்றார்.

மீரா, “உனக்காகத் தான் சித்தார்த் காத்துகிட்டு இருந்தார். நீ சாப்பிடாம அவர் சாப்பிடமாட்டாராம்" என்று சிரிக்க, ‘ஆமாம் அவருக்கு நடிக்கச் சொல்லிக் கொடுக்கணுமா?’ என்று நினைத்துக்கொண்டாள்.

அனைவரும் மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பினர். ராஜா முத்தைய்யா ஹாலில் மாலை வரவேற்பு. மாலை ஆறுமணிக்கு சித்தார்த், ஆழ்ந்த நீல நிற கோர்ட் சூட்டில் கம்பீரமாக நிற்க, மது மெருன் வண்ணப் பட்டில் அவனுக்கு இணையாக பொருத்தமான ஜோடியாக உதட்டில் மென்னகையுடன் நின்றிருந்தாள்.

நண்பர்கள், உறவினர்கள், அலுவலக ஊழியர்கள், என்று மண்டபமே நிரம்பி வழிந்தது. அனைவருமே பொருத்தமான ஜோடி என்று வாழ்த்தினர். அதிரடி இசை எதுவும் இல்லாமல் மென்மையான புல்லாங்குழல் இசையில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. போட்டோ எடுக்கும் போதும் போட்டோகிராஃபர் எவ்வளவோ சொல்லியும் ,சித்தார்த் சில போட்டோக்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

“ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கோடா” என்று சுபா வற்புறுத்தினாள். சித்தார்த், மதுவைப் பார்க்க அவளோ, அவன் இருந்த பக்கம் திரும்பவே இல்லை. பின்னர், மீரா வந்து மதுவிடம் ஏதோ சொல்ல, அரைமனதுடன் தலையாட்டினாள். அதன்பிறகே ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுக்கச் சம்மதித்தான்.

ராஜேஷ் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். ‘தங்கைக்கு நல்லதொரு வாழ்க்கை அமையுமா?’ என்று இருந்தவனுக்கு, நல்லபடியாகத் திருமணம் முடிந்து, தன் கணவனுடன் அவள் சேர்ந்து நிற்பதைப் பார்த்துப் பார்த்து, அவனது உள்ளம் பூரித்தது.

வரவேற்பு முடிந்ததும் சித்தார்த்தைத் தனியாக அழைத்துச் சென்ற ராஜேஷ், அவனை ஆரத் தழுவிக் கொண்டான்.

"சித்தார்த் உனக்கு ரொம்பப் பெரிய மனசு. அவள் ஏதாவது கொஞ்சம் இடக்காக நடந்து கொண்டாலும், நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்கோடா” என்று சொல்ல

"இதை நீ சொல்லணுமா. என் மதுவை அதாவது, உன் தங்கையை நான் பத்திரமாக பார்த்துக்கறேன். போதுமா!" என்றான் சிரிப்புடன்.

சித்தார்த் சொன்னதைக் கேட்டுச் சிரித்தவன், "எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அவளும் உன்னைப் புரிஞ்சிக்கற நாள் தூரத்தில் இல்ல. உன்னுடைய குடும்ப வாழ்க்கைக்கு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கையைப் பிடித்துக் குலுக்கித் தன் வாழ்த்தைத் தெரிவித்தான்.
வரவேற்பு முடிந்ததும் இருவரையும் அழைத்துக்கொண்டு, மதுவின் மாமா வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். சித்தார்த்துடன் வந்த சுபா, ஹரி இருவரும் சற்றுநேரம் இருந்துவிட்டுக் கிளம்பிச் சென்றதும், மது தன் அறைக்கு வந்து அமர்ந்தாள். எப்போது இந்தப் புடவை, நகைகளையும் அவிழ்போம் என்று இருந்தது.

வித்யா, மதுவிற்குத் தலைவாரிக் கொண்டிருக்க, மேகலா நகைகளை எடுத்து நகைப்பெட்டியில் வைத்தாள். மது சற்று பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள். அவள் மனம் திக்திக்கென அடித்துக்கொண்டது.

“என்னடி டென்ஷனா இருக்க?" என்று கேட்டாள் வித்யா.

“ஒண்ணுமில்லை" என்றாள்.

“இன்னைக்கு நேரம் அவ்வளவா நல்லா இல்லையாம். அதனால, சடங்கை நாளன்னைக்கு வச்சிருக்காங்க" என்றாள் மேகலா.

மதுவிற்கு, ‘அப்பாடா!’ என்று இருந்தது. வித்யாவும், மேகலாவும் கீழே சென்றுவிட, தன் அலுப்பு தீர நன்கு குளித்துவிட்டுக் கீழே இறங்கி வந்தாள்.

அவள் படியில் இறங்கி கிச்சனுக்குச் செல்லும் வரை, கண்களை அகற்றாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். கணவனின் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்தாலும், அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு பார்வைக்குக்கூடப் பஞ்சமாகிப் போனதை எண்ணி, பெருமூச்சு விட்டபடி அமர்ந்திருந்தான்.

“மது! நீ உன்னோட பக்கத்து ரூமில் படுத்துக்கோ. உன் ரூம்ல சித்தார்த் தங்கிக்கட்டும்" என்றதும் அவசரமாக, “அத்தை! என்னோட ரூமை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். வேணும்னா அவரைப் பக்கத்து ரூம்ல தங்கிக்கச் சொல்லுங்க" என்றாள்.

"மது! என்ன இது? நீ என்ன யாருக்கோவா உன் ரூமை கொடுக்கப் போற. உன் வீட்டுக்காரருக்குத் தானே" என்றார்.

"ஏன்? சித்தார்த் பக்கத்து ரூமில் படுத்தா தூங்கமாட்டாரா?" என்றாள் வெடுக்கென.

"என்ன மது இது? இப்படித் தலைல அடிப்பது போலப் பேரைச் சொல்லிக் கூப்பிடுற. அத்தான்னு கூப்பிடு" என்றான் உறுதியான குரலில்.

"என்னது அத்தானா! அதெல்லாம் முடியாது அத்தை" என்றாள்.

இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டே வந்த வித்யாவும், மேகலாவும் அவளைப் பார்த்துச் சிரிக்க, ராஜி இருவரையும் முறைத்தார்.

"சரி நீ எப்படியாவது கூப்பிடு. நான் சொல்றதைக் கேளு. அந்த ரூம்ல ஏசி சரியா வேலை செய்யல. நீதான், ஏசி போட்டுக்க மாட்டியே. உன் ரூம்ல நல்லா காத்து வரும். அதனால் தான், உன்னை அந்த ரூம்ல தங்கிக்கச் சொல்கிறேன்" என்றார்.

அவள் யோசனையில் இருக்க, “வேற யாருடைய ரூமாக இருந்தாலும், அவருக்குச் சங்கடமா இருக்கும்" என்றதும், பட்டும்படாமலும், சரியென்பதைப் போலத் தலையை ஆட்டினாள்.

ராஜி சிரித்துவிட்டு, “வரவர உனக்குப் பிடிவாதம் அதிகமா ஆகிடுச்சி. சரி அவரை உன் ரூமுக்குக்கூட்டிக்கொண்டு போ" என்றதும். என்னவோ கேட்கக்கூடாத ஒன்றை கேட்டுவிட்டது போல மது, "என்னது.... நானா... நான் போய் அவரை எப்படி அத்தை கூட்டிகிட்டுப் போவது?" என்றதும்.

மேகலா, “என்னடி என்னவோ சித்தார்த் அத்தானை இன்னைக்குத்தான் பார்ப்பது போல பேசுற. ஏற்கெனவே நல்லா பேசி பழகியவர் தானே. இதில் இப்போ என்ன புதுசா வெட்கம்?" என்றாள்.

“எப்படிக் கூப்பிடுறதுன்னு உனக்கு டியூஷனா எடுக்க முடியும்? வேணும்னா, நான் சொல்றதை ட்ரை பண்ணிப் பாரு!” என்றவள், “அத்தான், வாருங்கள் தங்கள் அறைக்குச் செல்லலாம்ன்னு பழைய காலத்து ஹிரோயின் மாதிரி, அன்ன நடையில் போய்ப் பக்கத்தில் நின்னு சொல்லு" என்றாள் வித்யா கிண்டலாக.

மது அவளை முறைக்க, ராஜி சிரிப்பை அடக்கிக்கொண்டு, “போ மது! நேரம் ஆகுது பாரு" என்றதும், முணுமுணுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.

சித்தார்த் தன் மொபைலுக்கு குறுஞ்செய்தியில் வந்த வாழ்த்துச் செய்திகளுக்குப் பதில் அனுப்பிக் கொண்டிருந்தான். அவனருகில் சென்று நின்றவள், ‘அவனாகத் தன்னைப் பார்ப்பான். அவனைப் பார்க்காமலேயே விஷயத்தைச் சொல்லி அழைத்துச் சென்று அறையைக் காட்டிவிட்டு வந்துவிடவேண்டும்’ என்று எண்ணிக்கொண்டு நின்றிருந்தாள்.

அவனோ, அங்கே ஒருத்தி நிற்பதைக் கூடப் பார்க்காமல் குறுஞ்செய்தி அனுப்புவது தான் முக்கியம் என்பது போல அதில் கவனமாக இருந்தான்.

எரிச்சலுடன், தொண்டையைச் செருமினாள். நிமிர்ந்து பார்த்தவன், அவளது பார்வை வேறெங்கோ நிலைத்திருப்பதைப் பார்த்து, மீண்டும் வேலையில் கவனத்தைச் செலுத்தினான். அவன் தன் வேலையில் ஈடுபட்டிருப்பதை ஓரகண்ணால் பார்த்தவள், ‘ஒருத்தி வந்து நிற்கிறாளே... என்னவென்று கேட்டானா? இப்போது எஸ்.எம்.எஸ் அனுப்புவது தான் முக்கியம்’ என்று நினைத்தவளுக்கு அந்த மொபைலைப் பிடுங்கித் தூர ஏறிய வேண்டும் என்று ஆத்திரமாக வந்தது.

ஆனால், அதைச் செயல்படுத்த முடியுமா? முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "உங்களைத் தான்..." என்று அழைக்க, அவன் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. எரிச்சலுடன், “சித்தார்த்! உங்களைத் தான் கூப்பிடுறேன்" என்றாள்.

‘அப்படி வா வழிக்கு’ என்று நினைத்துக்கொண்டு, “என்ன மது?" என்றான்.

"நீங்க தங்க வேண்டிய ரூமை காட்டுறேன் வாங்க" என்று சொல்லிவிட்டு முன்னால் நடக்க, சித்தார்த் அவளைப் பின்தொடர்ந்தான். தன்னுடைய அறையைத் திறந்துவிட்டவள், "உங்க திங்க்ஸ் உள்ளேயே இருக்காம். நீங்க இங்கே தங்கிக்கோங்க" என்றவல் வாசலோடு திரும்பிவிட்டாள்.

உள்ளே வருவாள், அவளுடன் சிறிதுநேரம் ஏதாவது பேசலாம் என்று நினைத்தவனுக்கு, அவளது செயலை நினைத்து எரிச்சல் வந்தது. உள்ளே சென்றவன் பைஜாமாவையும், டவலையும் எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்.

மேலே சென்றவள் அதே வேகத்தில் கீழே இறங்கி வருவதைக் கண்ட விமலா, “என்ன ராஜி, இவள் இப்படிக் கொஞ்சங்கூட ஒட்டாமல் விலகியே இருக்கா" என்று கவலையுடன் கேட்டார்.

"அவளுக்கும் சங்கோஜமா இருக்கும் இல்லயா. ரெண்டு மூணு நாளானா சரியாகிடும் அக்கா! நீங்க வாங்க" என்று அவரை அழைத்துச் சென்றார் ராஜி.

"என்னவோ ராஜி! இவ நமக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கான்னு நினைக்கிறேன். ஆனா, எவ்ளோ எதிர்பார்ப்போட இருந்திருப்பான் அந்தப் பிள்ளை. இவள் செய்ற வேலைக்கு, நாம எல்லோரும் சேர்ந்து சித்தார்த்தை ஏமாத்தறது போல இருக்கு" என்றார் கவலையுடன்.

ராஜி அவசரமாக, “அதெல்லாம் இல்லக்கா! நீங்க வீணா வருத்தப்பட்டு உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க. நான் அவளுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறேன்" என்றார்.

டைனிங் ஹாலில் அமர்ந்து ஏதோ யோசனையில் மூழ்கி இருந்த மதுவை அழைத்த ராஜி,
“இந்தப் பாலை கொண்டு போய், உன் வீட்டுக்காரருக்கு கொடு" என்றார்.

"என்ன அத்தை நீங்க? அவர் இவ்வளவு நேரம் இங்கே தானே இருந்தார். அப்பவே கொடுத்திருக்கலாம் இல்ல" என்று சலிப்புடன் சொன்னவளை வைத்த கண்வாங்காமல் பார்த்தார்.

அவள் தலையைக் குனிந்து கொள்ள, "மது! நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? கல்யாணம் செய்துகிட்டா மட்டும் போதாது. இனி, நீ அவரோட பாதி. அவருக்கு வேண்டியதை நீதான் பார்த்துக்கணும். தாலி கட்டியதோடு அவரோட கடமை முடிஞ்சிதுன்னும், தாலி கட்டிக்கிட்டதோடு உன் கடமை முடிஞ்சதுன்னும் நினைச்சிட்டு இருக்கியா? இனி, தான் உங்களுக்கு வாழ்க்கையே ஆரம்பிக்குது. நீ இன்னும் சின்னப் பொண்ணில்லை.

ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, அந்தக் குடும்பத்தில் ஒருத்தியா... அந்தக் குடும்பத்துக்காகவே இருக்கணும். உன்னோட கஷ்டம், நஷ்டம், இன்பம், துன்பம் எல்லாமே சித்தார்த்தோடு தான். இதுக்கு மேல உனக்குப் பளிச்சின்னு எப்படிச் சொல்றது? நான் என்ன சொல்ல வறேன்னு புரியாத அளவுக்கு முட்டாள் இல்லை நீ" என்று ராஜி சொல்வதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.

வெளியில் தான் உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் இருந்தாள். உள்ளுக்குள் மனம் பெரும் போராட்டத்தில் இருந்தது. முதலில் நினைத்த போது இவ்வளவு பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம் என்று இருந்த தைரியமெல்லாம், அதை எதிர்கொள்ளும் போது நிராயுதபாணியாக போர்க்களத்தில் நிற்பதைப் போல அச்சமாக இருந்தது.

"நீ நடந்துக்கறதைப் பார்த்து, விமலா அக்கா கவலைப்படுறாங்க. எங்களுக்காகத் நீ கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிட்டு, இப்போது சித்தார்த்தை வருத்துறியோன்னு அவர்களுக்குச் சந்தேகம் வந்துடுச்சி" என்றதும், அவளது கண்கள் கலங்கின.

அவளது கண்களைத் துடைத்துவிட்டவர், “உன்னோட மனசு எனக்குப் புரியுது. அவ்வளவு சீக்கிரம் மறந்துடக்கூடிய விஷயம் இல்ல... அதுக்காக, இன்னும் பழைய கதையையே நினைச்சிட்டு இருக்க முடியுமா?" என்று ஆதரவுடன் அவள் தலையை வருடிகொடுத்தார்.

அவள் அவசரமாக , “இல்ல அத்தை! பழைய விஷயங்களை நினைக்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா... அவரைப் பார்த்தாலே என்னால சகஜமா பேச முடியல. அவர் முகத்தைப் பார்க்கவே எனக்குச் சங்கடமாக இருக்கு அத்தை!" என்று அழுதவளை, தன் மீது சாய்த்துக்கொண்டு முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

"உன்னுடைய கஷ்டம் எனக்கும் புரியுதுமா. அதுக்காக, அவர்கிட்டயிருந்து இப்படி விலகியே இருக்க முடியுமா?" என்றவர் அவள் முகத்தை நிமிர்த்தி, “மனசுங்கறது பலகை மாதிரி. முதல்ல எழுதற எழுத்து அழுத்தமா தான் தெரியும். என்னதான் அதை அழிச்சிட்டு எழுதினாலும், அடுத்ததா எழுதறதைப் படிக்கிறது சிலருக்குச் சிரமமாகத் தான் இருக்கும். முடியும்ன்னு நினைச்சா; முடியாதது எதுவும் இல்ல. இதுக்கு மேல் உனக்கு நான் ஒண்ணும் சொல்ல தேவையில்லன்னு நினைக்கிறேன். இந்தா பாலை கொண்டு போ. அதுக்கு முன்ன, முகத்தைக் கழுவிட்டுப் போ. பாலை அவருக்குக் கொடுத்துட்டு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிரு" என்றவரைப் பார்த்துத் தலையாட்டிவிட்டுச் சென்றாள்.

சித்தார்த் இருந்த அறையின் கதவை தயக்கத்துடன் மெல்லத் தட்டினாள். குளியலறையில் இருந்தவனுக்கு அந்தச் சப்தம் காதில் விழவில்லை. எந்தப் பதிலும் இல்லாமல் போக, கதவைத் தள்ள அது திறந்துகொண்டது. எட்டிப்பார்த்தவள் உள்ளே நுழைந்தாள். பால்கனி கதவு திறந்திருப்பதைப் பார்த்து, ஒருவேளை அங்கே இருக்கிறானோ என்று எண்ணிக்கொண்டே சென்றவள், குளியலறையைத் திறக்கும் சப்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.

குளித்துவிட்டு பைஜாமா அணிந்து கொண்டு வெற்றுடம்புடன் தலையைத் துவட்டியபடி வெளியே வந்தவனைப் பார்த்தவள் தடுமாற்றத்துடன் நின்றாள். அவளைக் கண்டதும் வியப்புடன், ‘என்ன?’ என்று புருவங்களை உயர்த்தி கேட்டான்.

அவன் இயல்பாக நின்றிருக்க, இவளுக்குப் படபடவென வந்தது.

“எ.. என..க்கு , இல்..ல.. உங்..களுக்கு..” என்று குழற, அவன் குறுஞ்சிரிப்புடன் பார்த்தான்.

கண்களை மூடி தலையைத் தட்டிக்கொண்டவள், “அத்தை... உங்களுக்கு இந்தப் பாலை கொடுத்துட்டு வரச்சொன்னாங்க. நீங்க பாத்ரூம்ல இருந்ததை நான் கவனிக்கல. சாரி!” என்று திக்கித் திணறிச் சொல்லிவிட்டு, கட்டிலருகில் இருந்த மேஜை மீது வைத்தாள்.

தலையைக் குனிந்தபடியே அவனைத் தாண்டிச் செல்லும் போது, “நில்லு மது! உன்கிட்டப் பேசணும்" என்றான்.

‘எப்போதடா இந்த அறையை விட்டு வெளியேறுவோம்’ என்ற எண்ணத்துடன் இருந்தவளை, அவனது அழைப்பு கலவரப்படுத்த, “எனக்குத் தூக்கம் வருது, நாளைக்குப் பேசலாமே..." என்று திரும்பிப் பார்க்காமலேயே சொன்னவள் கரத்தை எட்டிப் பிடித்தான்.

அதை எதிர்பார்த்ததைப் போல, அதே வேகத்தில் அவனுடைய பிடியிலிருந்து கையை உதறி விடுவித்துக் கொண்டவள் பக்கத்து அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டாள். படபடவென அடித்துக் கொண்ட நெஞ்சத்தைக் கையால் அழுத்தியபடி கதவின் மீதே சாய்ந்து நின்றாள்.

ராஜி சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்து, தன் எரிச்சல் கோபம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுச் சித்தார்த்துடன் சற்றுநேரம் பேசிக்கொண்டிருக்கலாம்’ என்று எண்ணித்தான் அவன் இருந்த அறைக்குச் சென்றது. ஆனால், அவனை வெற்றுடம்புடன் பார்த்ததும் ஏதோ ஒன்று அவளை அங்கே நிற்க விடாமல் தடுத்ததுடன், அவனது தொடுகையும் பயத்தைக் கொடுக்க, கையை உதறிவிட்டு ஓடிவந்துவிட்டாள்.

‘சித்தார்த், அத்துமீறி நடப்பவன் இல்லை என்று புரிந்தாலும்... இப்போது, தன்னிடம் எல்லா உரிமையும் உள்ளவன் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தால்...’ என்ற அச்சம் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. ‘இன்று எப்படியோ சமளித்துவிட்டோம்! ஆனால், இனிவரும் நாட்களில்!’ பயத்துடனே கட்டிலில் விழுந்தாள்.

இங்கே, சித்தார்த்தின் நிலையோ சொல்லவே வேண்டாம். அவளுடைய நிராகரிப்பு அவனுக்கு முள்ளாய் உறுத்தியது. மது, திருமணத்திற்குச் சம்மதம் என்று சொன்ன நிமிடத்திலிருந்து, பால் போல் பொங்கிக்கொண்டிருந்த அவனுடைய இதயத்தில், காலையில் அவள் சிந்திய கண்ணீர்த் துளி விழுந்ததில், சட்டென்று அடங்கியது.

அறைக்கு உள்ளே கூட வராமல் சென்றவள், இப்போது அறைக்குள் கையில் பால் தம்ளருடன் கண்டதும், இதயத்தில் எஸ்ட்ரா பிஜிஎம் இசையோடு துவங்கிய இன்னிசைக் கச்சேரியை அவளது செய்கையால் தாளம் தப்பிச் சுருதி பேதத்தைக் கொடுத்தது.

இவ்வளவு நாளாக வேறுவேறாக இருந்தவர்கள், இன்று திருமண பந்தத்தில் இணைந்து தங்கள் வாழ்வில் அடியெடுத்து வைத்த முதல் நாள். அவளது ஓரப் பார்வைக்கும், அவள் உதிர்க்கும் ஒற்றை வார்த்தைக்கும் தான் ஏங்கி காத்திருக்கையில், இப்படித் தன்னைக் கண்டதும் பயந்து ஓடினால் என்ன செய்வது?

இது இன்னும் எத்தனை நாளைக்குத் தொடரும்? அன்றி, காலம் முழுதும் இருவரும் வேறு வேறு பாதையில் பயணிக்க நேரமோ!’ என்ற ஏக்கமும், தன்னையும், தன் காதலையும் புரிந்து கொள்ள அவள் சிறிதும் முயலவில்லையே என்ற கோபமும் ஒன்று சேர, தூங்க பிடிக்காததால் எழுந்து சென்று பால்கனியில் நின்று தூரத்தில் தெரிந்த கடலலையை பார்த்துக்கொண்டிருந்தான்.

மதுவும், தூங்காமல் தன் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள். எழுந்து விளக்கை அணைத்துவிட்டு பால்கனி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். பக்கத்து அறையிலிருந்து வந்த விளக்கொளியில் சித்தார்த் இருகைகளையும் கட்டிக்கொண்டு பால்கனியில் நின்றிருப்பது தெரிந்தது. சிலநொடிகள் அவனையே ஆழ்ந்து பார்த்தவள். மீண்டும் தன் அறைக்கு வந்து படுத்தாள். மதியம் ஆழ்ந்து உறங்கியதாலோ, இல்லை மனதில் இருந்த சஞ்சலமோ அவளைத் தூங்க விடாமல் தடுத்தது.

கண்களை மூடியபடி படுத்திருந்தவளின் விழிகளுக்குல் சித்தார்த் மீண்டும் மீண்டும் வந்து சிரித்தான். ஏக்கத்தோடும், காதலோடும் அவனைப் பார்த்தான். சட்டெனக் கண்களைத் திறந்தவள் அதன்பிறகு மறந்தும் கண்ணை மூடவில்லை. அதேநேரம் நமக்கு ஏன் இப்படித் தோன்றுகிறது என்றும் அறியவும், அதை உணரவும் தோன்றாமல் வெகு நேரம் விழித்துக் கொண்டிருந்தவள், விடியும் நேரம் தன்னையும் அறியாமல் நித்திரை தழுவ, உறக்கத்திற்குச் சென்றாள்.


அத்தியாயம் – 52

காலையில் விமலா, இருவரையும் கோவிலுக்குச் சென்று வரும்படி சொன்னார். அவளுக்கு வெறுப்பாக இருந்தாலும், எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சித்தார்த்துடன் கிளம்பிச் சென்றாள்.

மது அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டிருக்க, சித்தார்த் பூ வாங்கி வந்து கொடுத்தான். மறுக்காமல் அவள் வாங்கிக் கொள்ள சித்தார்த்தின் மனம் மகிழ்ந்தான். சுவாமி சன்னதியில் அர்ச்சனைத் தட்டுடன், மொத்தப் பூவையும் சேர்த்துக் கொடுத்தவள், கண்களை மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள்.

‘தான் ஆசையுடன் அவளுக்குப் பூ வாங்கிக் கொடுத்தால், அதை அப்படியே எடுத்துக் கொடுத்து விட்டாளே!’ என்று வருத்தமாக இருந்தாலும், ‘உனக்குத்தான் வாங்கினேன் என்று சொல்லாமல் கொடுத்ததால், சுவாமிக்கு வாங்கினேன் என்றெண்ணிக் கொடுத்து விட்டிருப்பாள்’ என்று, தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்

கோவிலைச் சுற்றி வந்தபின் பிரகாரத்திற்கு வந்ததும், அங்கிருந்த தூணில் சாய்ந்து கண்களை மூடித் தியானம் செய்வது போல அமர்ந்துகொண்டாள். இப்போதாவது ஏதாவது பேசலாம் என்று அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளது விலகல் கடும் எரிச்சலைக் கொடுத்தது.

இருந்தாலும், அவளது மன நிலையைக் கருத்தில் கொண்டும், ‘அவளுடைய மனம் மாறும் வரை, தான் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு இப்போது எரிச்சல்பட்டால் எப்படி?’ என்று தன்னைத் தானே சமாதானமும் செய்து கொண்டான்.

இருவரும் எதுவும் பேசாமலேயே வீட்டிற்கு வந்தபோது சுபா தனது குடும்பத்துடனும், அண்ணனின் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். இயல்பாக பேசிய மனைவியை சிறு தாங்கலுடன் பார்த்தான்.

ஹரியிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது மலர்ந்த செந்தாமரையைப் போலயிருந்த அவளது முகத்தை பார்வையால் வருடிக்கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளை! கொஞ்சம் எங்களைக் கவனிப்பா" என்று சொல்ல, சிரித்துக்கொண்டே தலையைக் கோதிக் கொண்டான்.

குழந்தைகளுடன் தன் அறைக்குச் சென்றவள் ஊஞ்சலில் அமர்ந்து அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். சித்தார்த் அறைக்கு வந்ததை அறியாமல், குழந்தைகளுடன் சேர்ந்து பால்கனியில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள். அவன் சப்தம் போடாமல், ஜன்னல் வழியாக வெளியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


“ஒரு கதை சொல்லுங்க சித்தி!” என்று ஆரம்பிக்க, “கதை... கதை... கதை வேணும்...” என்று மற்ற மூவரும் அவளைப் பின் தொடர்ந்தனர். “சரி சரி சொல்றேன். ஆனா, ஒரே ஒரு கதை தான் சரியா" என்றாள்.

குழந்தைகளும் ஒன்றாக, “சரி" என்றனர்.

அவள் ஊஞ்சலில் அமர்ந்து அருந்ததியை மடியில் இருத்திக்கொள்ள, ஆர்த்தியும், ஆகாஷும் இரண்டு பக்கமும் அமர்ந்திருக்க, வருண் ஊஞ்சலின் கைப்பிடியில் அமர்ந்து அத்தையின் கழுத்தைக் கட்டிக்கொள்ள, குழந்தையோடு குழந்தையாக, கதைக்கு ஏற்றார் போலக் கண்களில் பாவத்தைக் கொண்டுவந்து அவள் கதை சொல்லிக்கொண்டிருக்க, இவை அனைத்தையும் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

குழந்தைகளை அழைக்க அங்கே வந்த சுபா, தம்பியின் பார்வையில் இருந்த காதலைக் கண்டதும் சற்று ஆற்றாமையாக இருந்தது. எல்லாம் சரியாகிவிடும் என்று சமாதானம் செய்து கொண்டவள், “சித்தார்த்!” என்று அழைத்தாள்.

சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன், ஷ்’ என்று வாயில் விரலை வைத்து சகோதரியை அமைதியாக இருக்கச் சொன்னான்.

கடுப்புடன் அவனருகில் அமர்ந்தவள், “இதெல்லாம் ஒரு பொழப்பாடா! அவள் என்னடான்னா அங்கே உட்கார்ந்திருக்கா. நீ என்னடா இங்கே தனியாக உட்கார்ந்து அவளை இரச்சிட்டு இருக்க. இப்படியே விலகி விலகி இருந்தா எப்படி? இங்கே சரி... இதையே நம்ம வீட்லயும் செய்வீங்களா?" என்றாள் சிறு கோபத்துடன்.

புன்னகைத்தவன், "தெரிஞ்சிதானே கல்யாணம் செய்துகிட்டேன். என் பேரைக் கேட்டாளே வேண்டாம்ன்னு ஓடினவ, என்னைக் கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்ற அளவுக்கு மனசு மாறி வந்திருக்கா. சில சமயம் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. ஆனா, சரியாகிடும்” என்றவனை, கவலையுடன் பார்த்தாள்.

“உனக்கு அந்த நம்பிக்கை இருந்தா… சந்தோஷம். எங்களோட வேண்டுதலும் அது தான்" என்றாள் ஆறுதலாக.

அவன் அமைதியாக தலையை ஆட்டிக்கொள்ள, "சரி, நான் மதுகிட்ட பேசிட்டு வரேன்" என்று பால்கனிக்குச் சென்றாள்.

அவளைக் கண்டதும் சிரித்துக்கொண்டே அருந்ததியைத் தூக்கிக்கொண்டு எழுந்தாள்.

"என்ன குட்டீஸ் அத்தையோட அரட்டையா?” என்று குழந்தைகளிடம் கேட்டவள், “உனக்கு செட் இவங்க தானா?" என்று சிரிப்புடன் கேட்டாள் சுபா.

“குழந்தைகளோட விளையாடிட்டு இருந்தா, மனசுல இருக்கற கவலை கூட மறந்துபோயிடும்” என்றவளை ஆழ்ந்து பார்த்தாள். “நாமளும் குழந்தையாவே மாறிட்ட மாதிரி ஒரு ஃபீல். எனக்குக் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும்" என்றாள் ஆத்மார்த்தமாக.

"ஒஹ்! அப்போ அடுத்த வருஷம் உன் கைகளிலும் ஒரு குட்டிச் சித்தார்த்தையோ, இல்ல மதுவையோ எதிர்பார்க்கலாம்" என்று சிரிக்க, அவள் திடுக்கிடலுடன் சுபாவைப் பார்த்தாள்.
தன்னை ஆராய்வது போல சுபாவின் பார்வை இருக்க, தகித்த மனத்துடன், “கூப்பிடுறது மாதிரி இருக்கு. நான் கீழே போறேன் அண்ணி" என்றவள் வேகமாக அறையை நோக்கி வந்தவள், வாசற்படியில் நின்றுகொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தைக் கண்டதும், அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் கவிழ்ந்துகொண்டு அவனைத் தாண்டிச் சென்றாள்.

“அத்தை எவ்வளோ ஜாலியா எங்ககூட விளையாடிக்கிட்டு இருந்தாங்க. போங்கம்மா இப்போ யாரு எங்க கூட விளையாடுவாங்க" என்று வருண் அழ, “ஏன்டா மாமா இல்லயா? என்று அவன் கேட்டதும், குழந்தைகள் ஆர்ப்பரிப்புடன் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

“இப்போ உன்னோட டர்னா?” என்றாள் அவள் கிண்டலாக.

சிரித்தவன், “குழந்தைகளோட விளையாடிட்டு இருந்தா, மனசுல இருக்கற கவலை கூட மறந்து போயிடும் சுபா!” என்றவன் குழந்தைகளிடம் கவனத்தைத் திருப்ப, பரிதவிப்புடன் தம்பியைப் பார்த்தாள்.

‘கடவுளே! எப்போது மதுவின் மனம் மாறி, இருவரும் மனம் ஒன்றி வாழ்வது? என் தம்பிக்குப் பொறுமையைக் கொடு’ என்று வேதனையோடு வேண்டிக்கொண்டவள், கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

மாலையில் அனைவரும் கிளம்பி கடற்கரைக்குச் சென்றுவிட்டு, இரவு உணவையும் வெளியிலேயே முடித்துக்கொண்டு, சுபா குடும்பத்தினர் கிளம்பிச் சென்றுவிட, சித்தார்த்தும், மதுவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். காரில் வரும்போது கூட அவன் பக்கமாக, அவள் திரும்பக்கூட இல்லை. சித்தார்த்தும் அமைதியாகக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

சித்தார்த் காரை பூட்டிவிட்டு வரும்வரை அங்கேயே நின்றிருந்தவள், அவனுடன் இணைந்து புன்சிரிப்புடன் வீட்டினுள்ளே நுழைந்தாள். அவளது செய்கையைக் கண்டவனுக்குப் புன்னகை அரும்பியது. அவர்கள் இருவரும் இன்முகத்துடன் உள்ளே நுழைந்தவர்களைக் கண்ட பெரியவர்களுக்கு, பெரும் ஆறுதலாக இருந்தது.

அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, ராஜி எழுந்து சமையலறைக்குச் செல்ல, மதுவும் அவருக்குப் பின்னாலேயே சென்றாள். பால் டம்ளர்களுடன் வந்தவள் அனைவருக்கும் கொடுக்க, சித்தார்த் வாங்கி பக்கத்திலிருந்த டேபிள் மீது வைத்தான்.

தன் அறைக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டே, ‘அப்பாடா! இன்னைக்குத் தப்பித்தோம்’ என்று நினைத்துக்கொண்டே மீண்டும் கீழே செல்ல, மேலே வந்துகொண்டிருந்த சித்தார்த் அவளைத் தாண்டி அறைக்குச் செல்ல, அவன் அமைதியாகச் செல்வது அவளுக்கு வியப்பாக இருந்தது.

அறை வாசலில் நின்றவன், "மது!” என்றதும் அவளுக்குத் திக்கென்றிருந்தது.

விமலா அங்கே அமர்ந்திருக்க எதுவும் சொல்ல முடியாமல், திரும்பி மேலே பார்த்தாள்.

“பாலை அப்படியே வச்சிட்டு வந்துட்டேன். கொஞ்சம் எடுத்துட்டு வர்றியா?" என்று கேட்டதும், அவளது முகம் போன போக்கைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பாக வந்தது.

விமலா தன்னைப் பார்ப்பதை உணர்ந்து தன் முகத்தைச் சீர்படுத்திக்கொண்டு, பால் டம்ளரை எடுக்க, “கொஞ்சம் சூடா கொண்டு போம்மா ஆறிட்டிருக்கும்" என்றார் ராஜி.

மது, “ம்ம்" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவர்களுக்குப் பின்னால் சென்றதும், முனகிக்கொண்டே சென்றாள்.

கதவைத் தட்டியதும், திறந்தவனிடம் டம்ளரை நீட்டினாள். அவன் வாங்காமல் வழிவிட்டு விலகி நின்றான். அவள் தயக்கத்துடன் நிற்க, "உள்ளே வா மது! நீ அங்கேயே நின்னுட்டிருந்தா பெரியவங்க என்ன நினைப்பாங்க?" என்று காரணத்தைச் சொன்னான்.

அவன் சொன்னதன் உண்மையை உணர்ந்தவள் உள்ளே வந்து டேபிள் மேல் பாலை வைத்துவிட்டு, “நான், என் ரூமுக்குப் போறேன்" என்றாள்.

"உன் ரூமா? இதுதானே உன் ரூம். இதைத் தானே எனக்குக் கொடுக்கமாட்டேன்னு சொன்ன?" என்று முறுவலுடன் கேட்க, அவள் திருதிருவென விழித்தாள்.

‘அப்படியானால் நான் அத்தையிடம் பேசியதைக் கேட்டிருக்கிறான்’ என்று நினைத்தவள் அவனை முறைத்தாள்.

"என்ன முறைக்கிற? நீயே எனக்குச் சொந்தமாகிட்ட. இனி, உன்னோடது எல்லாமே என்னோடது. உன்க்கு உரிமையானதெல்லாம் இனி, எனக்கும் உரிமையானது தானே" என்று கேட்டுக்கொண்டே அவள் பின்னால் வந்து நின்றான்.

பயத்தில் உடல் நடுங்கியது, "அ..த்..தை கூப்பிடுற மாதிரியிருக்கு... நா..ன் போய்.." என்று அங்கிருந்து செல்ல முயல, "அவங்க உன்னைக் கூப்பிட்டிருந்தா என் காதிலும் விழுந்திருக்கும்" என்றபடி அவளுக்கு முன்னால் வந்து நின்றான்.

பயமும், பதட்டமும் சேர அவளுக்குக் கைகள் நடுங்க ஆரம்பித்தன.

"ஏன் மது என்கிட்டேப் பேசக் கூட மாட்டேன்ற? நீயா சம்மதிச்சித் தானே இந்தக் கல்யாணம் நடந்தது. உன்னோட மனசு மாறும் வரைக்குக் காத்திருக்கேன்னு சொல்லியும், இன்னும் உனக்கு என்ன தயக்கம்? சொல்லு... நான் என்ன செய்தேன்?” என்றான்.

"எல்லாம் உங்களால் தான். நீங்க என் வாழ்க்கைல வந்த பின்னதான் எல்லாக் குழப்பமும் வந்தது. எனக்கு நிம்மதியே இல்லாமல் போச்சு" என்றாள் கோபத்துடன்.

"நான் என்ன உன்னைக் கடத்திகிட்டுப் போயா கல்யாணம் செய்துகிட்டேன். நானே விலகிப் போன பிறகு, நீயே சம்மதம் சொல்லித் தானே நம்ம கல்யாணம் நடந்தது. சின்னச் சின்னச் சீண்டல், சிரிப்பு இதுக்கெல்லாம் கூட எனக்கு அனுமதி இல்லயா? நான் ஜடம் இல்ல மது!" " என்று ஆற்றாமையுடன் சொன்னான்.

தலையை அழுத்திக் கோதிக்கொண்டு "சரி, போனதெல்லாம் போகட்டும்" என்றவன், கவரிலிருந்து மல்லிகைப் பூவை எடுத்து, "உனக்காக வாங்கிட்டு வந்தேன்" என்றான் தழைந்த குரலில்.

‘நானும் இவனோடு தானே இருந்தேன். இந்தப் பூவை எப்போது வாங்கினான் என்று யோசிக்க அதை யூகித்வன், “வரும்போது சிக்னல்ல வாங்கினேன். நீ கொஞ்சமாவது என்னைத் திரும்பிப் பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும். நீதான், என் பக்கமே திரும்பலையே” என்று ஏக்கமாக சொல்லி கொண்டே அவளிடம் நீட்டினான்.

அவள் அமைதியாக நிற்க, "காலைல கோவிலுக்குப் போகும்போதும் உனக்குத்தான் பூ வாங்கினேன். ஆனால், நீ அம்மனுக்குன்னு நினைச்சிக் கொடுத்துட்ட" என்றதும் முகத்திலடித்தாற் போல, “தெரிஞ்சிதான் கொடுத்தேன்" என்றாள்.

சித்தார்த் ஒரு கணம் கோபத்தில் இறுகினான். ‘எவ்வளவு பிரியத்துடன் இவளுக்காக வாங்கி வந்தேன். ஆனால், இவளுக்குத் தெரிந்தே கொடுத்திருக்கிறேன் என்கிறாள். எவ்வளவு திமிர் இவளுக்கு?’ என்று எண்ணியவன், வெறுப்புடன் கையிலிருந்த பூவை அங்கிருந்த குப்பைக் கூடையில் போட்டான்.

மது திகைப்புடன் நின்றிருக்க, "உன்கிட்ட வந்தாலும், திரும்ப இந்தக் குப்பைக்குத்தானே போகப் போகுது. நீ போடுறதைப் பார்க்கற தைரியம் எனக்கு இல்ல..." என்று வேதனையுடன் சொன்னவன், கதவைத் திறந்துவிட்டான்.

அவனது கோபத்தையும் வேதனையையும் கண்டவள், வெளிறிய முகத்துடன் அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டே அறைக்குள் செல்வதை மாடியிலிருந்து இறங்கி வந்த மேகலா, தீபக் இருவரும் பார்த்தனர். அவ்வளவு நேரம் தனிமையில் பேசிச் சிரித்தது எல்லாம் மறந்து போக, தீபக் மௌனமாக இறங்கிச் செல்ல, மதுவின் அறையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே கணவனைத் தொடர்ந்தாள் மேகலா.

தீபக் ஏதாவது பேசுவான் என்று காத்திருக்க, அவன் லேப்டாபில் அமர்ந்துவிட, மேகலா கோபத்தோடு அவன் மடியிலிருந்த லாப்டாபைப் பிடுங்கித் தூரமாக வைத்தாள்.

"என்ன மேகி? இப்போ என்ன ஆச்சு உனக்கு? இவ்ளோ நேரம் நல்லா தானே இருந்த. உன்னை மேகின்னு கூப்பிடுறதால, ரெண்டு நிமிஷத்துக்கு ஒருமுறை மூட் மாறிகிட்டே இருப்பியா?" என்றான் சிரித்துக்கொண்டே.

"ஹய்யோ! போதுமே. இந்த வக்கணைல ஒண்ணும் குறைச்சலே கிடையாது. அங்கே ஒருத்தி அழுதுகிட்டே இருக்கா. நீங்க, என்னை நக்கல் பண்ணிட்டு இருக்கீங்க" என்றாள் சப்தமாக.

"ஹப்பா...! என் காது... சின்ன வயசுல உனக்கு ஒரு கழுதைப் பாலை வாங்கி ஒண்ணா ஊத்தினாங்களா என்ன? இந்தக் கத்துக் கத்தற. நீ இப்படிப் பேசினா, என் காது சீக்கிரமே செவிடாகிடும்" என்று சொல்லிவிட்டு அவளைத் தன்னருகில் இழுக்க, கையை உதறிக்கொண்டு எழுந்தாள்.

"என்னடி! என்னை என்ன செய்யச் சொல்ற?" என்று கேட்டுக்கொண்டே எழுந்து அவளருகில் சென்றான்.

"உங்களை எத்தனை முறை சொல்றேன் மேகலான்னு கூப்பிடுங்கன்னு. என்னவோ கண்றாவியா மேகி, நூடுல்ஸ்னு" என்றவள், “சரி, விடுங்க. நான் போய் மதுவைப் பார்த்து என்ன ஆச்சுன்னு கேட்கப் போறேன்?" என்றாள்.

"மேகலா! சொல்வதைக் கொஞ்சம் புரிஞ்சிக்க. கல்யாணத்துக்கு முன்னால் அவள் நம்ம மது. ஆனால், இப்போ மிஸஸ். மதுமிதா சித்தார்த்! இனி, அவள் மேல நமக்கு உரிமை கிடையாது. அதுவும் இல்லாம, அவங்க ரெண்டு பேரோட பிரச்சனைக்கு நடுவில நாம எப்படித் தலையிட முடியும்?" என்று கேட்டான்.

"நீங்க என்னதான் சொல்லுங்க, என்னால் சமாதானம் ஆக முடியல. நான் போய் ராஜேஷ் அண்ணாகிட்டச் சொல்லப் போறேன்" என்று சீரியசாகச் சொல்ல, “யாரு, ராஜேஷ்கிட்டயா? அவன் நேரா போய், மதுகிட்டத் தான் சண்டை போடுவான். அதுக்கு நீ சும்மா இருக்கலாம். அவனுக்கு கோபம் வராது வந்தால் அவ்வளவு தான். பேசாமல் போய்ப் படுடி" என்று சொல்லிவிட்டு லாப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

“சரி நான் போய் தண்ணி எடுத்துக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே செல்ல, அந்த நேரம் சித்தார்த் இறுகிய முகத்துடன் தோட்டதிற்குச் செல்வது தெரிந்ததும் தீபக்கிடம் சென்று சொன்னாள்.

தீபக் யோசனையோடு அமர்ந்திருக்க, மேகலா மெல்ல கதவை நோக்கிச் சென்றாள்.

"ஏய் மேகலா! நீ போய் வீணா பிரச்சனையைப் பெரிசுபடுத்தாதே. அவங்களே சமாதானம் ஆகிக்குவாங்க" என்றான் அதட்டலாக.

"நான் ஒண்ணும் உங்க அத்தை பொண்ணுகிட்டப் பேசப் போகல. என் ஃப்ரெண்டைப் பார்த்துப் பேசப் போறேன்" என்று சொல்லிவிட்டு மதுவின் அறைக்குச் சென்றாள்.

அறைக்கதவில் கை வைத்ததுமே திறந்து கொள்ள, "மது" என்று குரல் கொடுத்தாள்.

தோட்டத்தில் உலவி கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்தபடி பால்கனியில் நின்றுகொண்டிருந்தவள், வேகமாக கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

"வா மேகலா! இன்னும் தூங்கலையா?” என்றதும், "நீ ஏன்டி இன்னும் தூங்கல? கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு. அழுதியா?" என்றாள்.

புன்னகையுடன், “இல்...இல்லையே... கண்ணுல தூசி விழுந்துடுச்சி" என்று சமாளிப்பாகச் சொன்னாள்.

"தூசி விழுந்ததுக்கும், அழுததுக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாளா நான்? தூசி விழுந்து கண்ணுல தண்ணி வந்தா குரல் கரகரன்னு இருக்குமா?" என்று சொன்னதும், மது உதட்டைக் கடித்துக்கொண்டு நின்றாள்.

"மது, என்னடி பிரச்சனை? சித்தார்த் ஏதாவது சொன்னாரா?" என்று கேட்க, இல்லை என்பது போலத் தலையை அசைத்துவிட்டுப் பேசாமல் நின்றாள்.

"மது! உன் மனசை விட்டுப் பேசு. உனக்குள்ளேயே எல்லாத்தையும் போட்டுப் புதைச்சிக்கிட்டு அழுத்தமா இருக்காதே. ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னாலேயே தாங்க முடியாது. சொல்லு! நீயும் சந்தோஷமா இருக்கணும்னு தானே நாங்க எல்லோரும் ஆசைபடுகிறோம். நீ எப்பவும் இப்படி அழுதுட்டே இருந்தா என்ன நினைக்கிறது?" என்று ஆதரவுடன் பேசினாள்.

தோழியின் தோளில் சாய்ந்து அழுதவள், " என்னால ஒருத்தரோட வாழ்க்கையே பாழாகிவிடும்... எனக்குக் கல்யாணம் வேண்டாம்ன்னு எவ்வளவு சொன்னேன். ஆனா, நீங்க எல்லோரும் சேர்ந்து என்னை எப்படியெல்லாம் பேசினீங்க. என்னால் அம்மாவுக்கு அட்டாக்கே வந்துடுச்சி. அதனால் தான், கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.

அதன் பிறகும் அர்ஜுனோட நினைப்பு எனக்கு இருக்கக் கூடாது. அப்படியிருந்தா அது, சித்தார்த்துக்குச் செய்யும் துரோகம்ன்னு, எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். அவருக்கு உண்மையா இருக்கணும்னு அர்ஜுன் சம்மந்தப்பட்ட எல்லாத்தையும் அப்பாவிடம் கொடுத்தேன். ஆனா, அது எல்லாமே கொஞ்சமும் பிரயோஜனம் இல்லாம போயிடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு" என்றாள் கண்ணீருடன்.

"அதுக்கும் இப்போ நீ அழுவதற்கும் என்ன சம்மந்தம்?" என்று கேட்ட மேகலாவை ஆதங்கத்துடன் பார்த்தாள்.

"நானும், சித்தார்த்கிட்ட சாதாரணமா பேசணும்னுதான் நினைக்கிறேன். ஆனா, அவர் என் பக்கத்தில் வந்தாலும், அவர் பேசும் போது அவரோட சில மேனரிசம், இதையெல்லாம் பார்க்கும் போது, அர்ஜுனை அப்படியே ஞாபகப்படுத்துகிறார். அந்த ஆத்திரத்தில் நான் அவரை ஏதாவது சொல்லிடுறேன். இன்னிக்கும் அப்படித்தான் ஆச்சு. நான் எந்த விஷயம் எனக்கு ஞாபகம் வரக்கூடாதுன்னு நினைக்கிறேனோ, அந்த விஷயமே என் கண் முன்னால் நடக்கும் போது என்னால் அவரோட சேர்ந்து எப்படி வாழ முடியும்? என்னால் அர்ஜுனையும் மறக்க முடியாம; சித்தார்த்துடனும் வாழமுடியாமல் தவிச்சிட்டு இருக்கேன் மேகலா! சித்தார்த்தோட வாழ்க்கையை பாழாக்கிட்டு இருக்கேங்கற உறுத்தல் தான் எனக்கு வருகிறது. நான் என்ன பாவம் செய்தேன்? கடைசிவரை இப்படி நிம்மதியே இல்லாம தான் இருக்கணுமா?" என்று சொல்லி அழுதவளைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் தடுமாறியவள், அவளைத் தன்னோடுச் சேர்த்து அணைத்து ஆறுதலாக முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

"அழாதே மது! ஒரு பிரச்சனைன்னு இருந்தா கண்டிப்பா ஒரு தீர்வும் இருக்கும். உன்னுடைய பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு தீர்வு நிச்சயம் இருக்கும். மனசைப் போட்டு குழப்பிக்காதே. நம்பிக்கையோடு இரு. அதேநேரம் சித்தார்த்திடம் சகஜமாமா இல்லனாலும், பேசவாவது முயற்சி செய் மது! அவரும், சாதாரண மனுஷன் தானே. காதலித்து கல்யாணம் செய்துகிட்ட மனைவிகிட்ட சாதாரணமா பேசக் கூட முடியாமல் தவிப்பாக தானே இருக்கும். இப்போ எதையும் யோசிக்காம, படுத்துத் தூங்க முயற்சி செய். குட் நைட்" என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

அனைத்தையும் கணவனிடம் சொல்ல, தீபக் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான்.

"சித்தார்த்தும், அர்ஜுனும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போவதை வைத்து, அவரோடு சீக்கிரமே சேர்ந்துடுவான்னு நினைத்தோமே! இப்போ, அவளோட மனக்குழப்பத்துக்கு நாமே வழி ஏற்படுத்திட்டோம். ஆனா, நிச்சயம் மது இதிலிருந்து வெளியே வருவாள். அதுக்கு முதல்ல அவளோட மனசுல இருக்கறது அவளுக்கே புரியணும். இதை யாரும் புரிய வைக்க முடியாது. அப்படி செய்தா, அது சித்தார்த் மேல வெறுப்பைத் தான் அதிகமாக்கும். புரியும்" என்றான்.

"அவள் ஏன் சித்தார்த்தைப் பார்த்து ஒதுங்கி ஒதுங்கிப் போனான்னு இப்போ தானே நமக்குப் புரியுது. இதை, அவள் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தாலும், கல்யாணத்தை மறுக்கக் காரணம் சொல்றான்னு தான் நினைச்சிருப்போம்" என்றாள்.

தலையை ஆட்டிக்கொண்டே, "நான் போய்ச் சித்தார்த்தைப் பார்த்துட்டு வரேன். அவன் என்ன மூட்ல இருக்கான்னு தெரியல" என்று எழுந்தான்.

தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த சித்தார்த், தன்னையே திட்டிக்கொண்டான். ‘அவள் தான் புரியாமல் நடந்து கொள்கிறாள். நானும், அவளிடம் கொஞ்சம் கடுமையாகத் தான் நடந்து கொண்டேன். பாவம்! பயந்துவிட்டாள் போல. கண்ணெல்லாம் கலங்கியது போலத்தான் தெரிந்தது. ச்சே! எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? அவளைப் பற்றித் தெரிந்துதானே கல்யாணம் செய்து கொண்டேன். அவளும் சின்னப் பெண் தானே.

சுபாவுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான். என்னைப் பேசியே தீர்த்து விடுவாள். இனி, மது ஏதாவது கோபமாக பேசினாலும், நான் கொஞ்சம் பொறுத்துப் போக வேண்டும். அவளை அவளுக்கே புரியும் வரை, பொறுமை காத்தாக வேண்டும்’ என்று தனக்குத்தானே சொல்லி கொண்டதும், மனம் சற்று லேசானது போலயிருந்தது. தன் அறைக்குச் செல்ல எழுந்து வீட்டின் உள்ளே வர, அவனை நோக்கி தீபக் வந்து கொண்டிருந்தான்.

"புது மாப்பிள்ளை எங்கே இந்த நேரத்தில் தோட்டத்திலிருந்து வரீங்க?" என்றான்.

"சும்மாதான். காத்து நல்லா குளுகுளுன்னு இருந்தது. அதான், சரிப்பா எனக்குத் தூக்கம் வருது. குட் நைட்" என்றான் புன்னகையுடன்.

தீபக்கும், தெளிந்திருந்த சித்தார்த்தின் முகத்தைப் பார்த்துவிட்டு, “குட் நைட்" என்றான்.

சித்தார்த், மதுவின் அறைக்குச் சென்று கதவை தட்ட, அது திறந்தே இருந்தது. அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். விளக்கைக் கூட நிறுத்தாமல் தூங்குபவளையே சற்றுநேரம் பார்த்தவன், ஒரு பெருமூச்சுடன் விளக்கை நிறுத்திவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
115
453
63
அத்தியாயம் –53

ராஜியும், வித்யாவும் காலை உணவு தயாரித்துக் கொண்டிருக்க, “வித்யா! மது இன்னும் எழுந்து வரல. மணி ஏழரை ஆகப்போகுது" என்று சொல்ல, “ஆமாம்மா! நான் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்ற வித்யா, சோர்ந்த முகத்துடன் படுத்திருந்த மதுவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

ராஜியிடம் சென்று சொல்ல, “இப்படி ஜுரம் அடிக்குதே! இன்னைக்கு அவளை, அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக வருவாங்களே! என்ன செய்றது? எதுக்கும் தேவகி அக்காவுக்குப் போன் செய்து தகவல் சொல்லிடுவோம்” என்று தேவகிக்குப் போன் செய்து சொல்ல, தான் உடனே அஷ்வந்துடன் வருவதாகக் கூறிப் போனை வைத்தார்.

சொன்னபடி தேவகியும், அஷ்வந்தும் வந்து சேர்ந்தனர். மதுவைப் பார்த்துவிட்டு, "ஒண்ணுமில்ல கொஞ்சம் அலைச்சலில் வந்த பீவர் தான். மூணு நாளில் சரியாகிவிடும்" என்றவன் கொண்டு வந்திருந்த மருந்தைக் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கி வர, ஜாகிங் சென்றிருந்த சித்தார்த்தும், ராஜேஷும் வந்து சேர்ந்தனர்.

"என்னடா? திடீர்னு வந்திருக்க. வீட்ல எல்லோரும் எப்படியிருக்காங்க?" என்று கேட்டான் சித்தார்த்.

“நான் மட்டும் இல்ல. அம்மாவும் வந்திருக்காங்க. அண்ணிக்குப் பீவர். அதான், மெடிசின் கொடுத்துட்டு வந்தேன்" என்றான்.

"பீவரா?" என்றவன், அவளுடைய அறைக்குச் சென்றான். தன் அம்மாவிடம் பேசிவிட்டுத் துவண்ட கொடியைப் போலயிருந்தவளின் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

மகனின் கவலை படிந்த முகத்தைக் கண்ட தேவகி, “அலைச்சல் தான் கண்ணா! ரெண்டு மூணு நாள்ல சரியாகிடும்” என்று சமாதானம் செய்ய, புன்முறுவல் பூத்தான்.

அன்னையிடன் சிறிதுநேரம் பேசியவன் குளித்துவிட்டு மனைவியின் அருகில் அமர்ந்தான். பெரியவர்கள் அனைவரும் பேசி மதுவின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு மதுவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதை மேலும், நான்கு நாட்களுக்குத் தள்ளி வைத்தனர்.

அடுத்து வந்த இரண்டு நாள்களும், அவளுக்கு நேரத்திற்கு மருந்து கொடுப்பது, சித்தார்த்தின் பொறுப்பாக ஆயிற்று. அவள் சற்றுத் தெளியும் வரை, சித்தார்த்தே அனைத்தையும் கவனித்துக் கொண்டான். சித்தார்த்தின் இந்தக் கவனிப்பு அவளுக்குச் சற்றுத் தயக்கத்தைக் கொடுத்தாலும், அவன் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது.

மதுவின் உடல் சற்றுத் தேறியதும், நல்ல நாளில் இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல சுபாவும், ஹரியும் வந்திருந்தனர்.

மது அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள விமலா, “ஒரு நிமிஷம் சுபா! மதுகிட்டக் கொஞ்சம் பேசிட்டு அனுப்புறேன்" என்றார்.

சித்தார்த் பெரியவர்களுடன் பேசிகொண்டிருக்க, மதுவை அழைத்து சென்ற விமலா, “மது உன் மனசுல கவலை, சஞ்சலம் இருக்கலாம். எங்க எல்லோர் மேலயும் கோபமும் இருக்கும்” என்றதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள். “கண்டிப்பாக இருக்கும். பழசையெல்லாம் கனவா நினைச்சி மறந்துட்டு கிடைச்சிருக்குற நல்ல வாழ்க்கையை சந்தோஷமா ஏத்துக்கோ. இனிமேல், இதுதான் உன்னோட வாழ்க்கை. அந்த வாழ்க்கையைச் சந்தோஷமா வாழ்றதும், சங்கடப்படுத்திக்கறதும் உன் கைலதான் இருக்கு.

அதுமட்டும் இல்லைடா, சந்தோஷம் துக்கம் எல்லாமே நாமளே நமக்கு ஏற்படுத்திக்கறது. உன்னை மத்தவங்க புரிஞ்சிக்கணும்னு நினைக்காம, நீ மற்றவர்களைப் புரிஞ்சி அனுசரிச்சி நடந்துக்க முயற்சி செய். நான் சொல்லவர்றது உனக்குப் புரிஞ்சிருக்கும். புத்திசாலித்தனமா நடந்து நல்ல பேர் எடு. இனி, அவங்கதான் உன்னுடைய முதல் சொந்தம். உன்னால எல்லோருக்கும் நிம்மதியும், சந்தோஷமும் வரும்படி இருக்கணும்” என்றவர் கலங்கிய விழிகளுடன் அவள் கன்னத்தில் முத்தமிட, அவரை அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.

ராஜி ஆறுதலாக அவளைத் தட்டிக்கொடுக்க, “நீங்க வளர்த்த பொண்ணு, நிச்சயமா உங்க எல்லோர் பேரையும் காப்பாத்துவேன். நீங்க உடம்பைப் பார்த்துக்கோங்க. நேரத்துக்கு மருந்து சாப்பிடுங்க. நான் தினம் போன் செய்வேன். உங்களுக்கு என்னைப் பார்க்கணும்னா சொல்லுங்க, அவரோட வந்திடுறேன். அத்தை! நீங்களும் என்னை நினைச்சிக் கவலைப்படக் கூடாது” என்று அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசி, அனைவரது மனத்தையும் குளிர வைத்தாள்.

“என்ன ஆன்ட்டி! இன்னும் உங்க பொண்ணுக்கு அட்வைஸ் முடியலையா?" என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் மேகலா.

விமலா கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு, "கிளம்புடா மது!" என்றதும், இரண்டடி சென்றவள் ராஜியை சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதாள்.

ராஜிக்கும் அழுகை பொங்கியது. சமாளித்துக் கொண்டு, “இவ்ளோ நேரம் எங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு நீ அழற?” என்றதும், "உங்க எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். எப்படி விட்டுட்டு இருப்பேன்?" என்று அழுகையோடு சொன்னாள்.

“என்னடா நீ? என்ன தனியாகவா இருக்க போகிறாய். உனக்குப் புதுசா எவ்வளவு சொந்தம் வந்திருக்கு. தேவகி அக்கா உன்னைத் தன்னோட பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க. எல்லாத்துக்கும் மேல சித்தார்த் இருக்கார். உன்னைப் பத்திரமா பார்த்துப்பார். கண்ணைத் துடை. நாங்க எல்லோருமே இப்போ உன்கூட வரப்போகிறோம். அப்புறம் என்ன? வா நேரம் ஆகுது" என்று ஆறுதல் படுத்தி அழைத்துக்கொண்டு வர, ராஜேஷையும், தீபக்கையும் பார்த்ததும் தானாக அழுகை வர, அங்கே சித்தார்த்தும் நின்றிருப்பதைப் பார்த்தவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

சித்தார்த்தின் கையைப் பிடித்த ராஜேஷ், “சித்தார்த்! என் தங்கையைப் பத்திரமா பார்த்துக்கன்னு நான் உனக்குச் சொல்ல வேண்டியது இல்லை. கொஞ்சம் படபடன்னு பேசுவா. ஆனா, மனசுல எதையும் வச்சிக்க மாட்டாள். அவள் ஏதாவது தெரியாம செய்துட்டாலும் நீ கொஞ்சம் பொறுத்துக்கோ சித்தார்த்!" என்றவன், தங்கையின் கையைப் பற்றி சித்தார்த்தின் கைகளில் ஒப்படைத்தான்.

"நான் பத்திரமாக பார்த்துக்கறேன் ராஜேஷ்!" என்றவன் கண் கலங்கிய மதுவின் தோளை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தான்.

தீபக்கிடம், "நான் கிளம்பறேன் அத்தான்!" என்றதும், “மது! எல்லா விஷயத்தையும் நாம பார்க்கும் விதத்தில் பார்த்தால், அதில் இருக்கும் நல்லது; கேட்டது, ஒற்றுமை; வேற்றுமை தனித்தனியா தெரியும். பார்க்கும் விதத்தில் தான் இருக்கு. அதனால, அதையும் இதையும் போட்டுக் குழப்பிக்காம தெளிவாக சிந்திச்சி நல்ல முடிவு எடு" என்று அவளுக்கு மட்டும் புரியும் விதத்தில் சொன்னான்.

சுபாவும், ஹரியும் ஒரு காரில் செல்ல, சித்தார்த் தன்னுடைய காரில் மதுவுடன் கிளம்பினான். பின்னாலேயே மற்றவர்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றனர். ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர். மது பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு வந்து ஹாலில் சோஃபாவில் அமர, அங்கு வந்த சித்தார்த் இயல்பாக அவளருகில் அமர்ந்தான்.

அவனது அருகாமை அவளுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், சித்தார்த்தோ எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், அனைவரிடமும் பேசிகொண்டிருந்தான். அதேநேரம் ஜீவாவும், ரமேஷும் வந்தனர்.

ஜீவா உள்ளே நுழையும் போதே, “என்னடா புது மாப்பிள்ளை எப்போ வந்த? எப்படி இருக்க?" என்று கேட்டுக்கொண்டே வர, அதுதான் சமயம் என்று எழுந்தவள், "வாங்க ஜீவாண்ணா! ரமேஷண்ணா! எப்படியிருக்கீங்க?" என்றாள்.

இருவரும் புன்னகையுடன், “நான் நல்லாயிருக்கேன் மது நீ எப்படியிருக்க?" என்று விசாரிக்க, அவர்களை உபசரித்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள். அங்கு தேவகி சமையலை மேற்பார்வை செய்துகொண்டிருக்க ராஜியும், விமலாவும், அவருடன் பேசிக்கொண்டிருந்தனர்.

"என்னம்மா எழுந்து வந்துவிட்ட?" என்று தேவகி கேட்க, “ஜீவாண்ணாவும், ரமேஷண்ணாவும் வந்திருக்காங்க அத்தை! காஃபி போட்டுக் கொண்டு போகலாம்னு வந்தேன்" என்றாள்.

"நீ இரும்மா நான் கொடுத்தனுப்புறேன்" என்றவர் வேலையாட்கள் மூலமாகக் கொடுத்தனுப்பினார். "நீ போய்ச் சுபா, மீராவோட பேசிட்டிரு" என்றவர், நேத்ராவை அழைத்து அவளுடன் மதுவை அனுப்பி வைத்தார்.

சந்த்ருவும், ஈஸ்வரனும், சித்தார்த்தின் தந்தையுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, ஆதியும், ஹரியும் சித்தார்த்தின் அறையை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். இரவு உணவுக்குப் பின் ஜீவாவும், ரமேஷும் கிளம்பிவிட ஆதி, சித்தார்த்தை அழைத்தான்.

தன் அறைக்குச் சென்றவன் அங்குச் செய்திருந்த அலங்காரத்தைப் பார்த்து, "என்ன அண்ணா இது? இப்போ எதுக்கு இதெல்லாம்? அவள் மனசு கஷ்டப்படும்னு தானே கல்யாணமே சிம்புளா செய்தோம்" என்று சற்று கோபத்தோடு சொன்னான்.

“சித்தார்த், இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகற? போய் ரெடியாகு" என்று ஹரி சொல்ல, முணுமுணுத்தபடி குளித்துவிட்டுப் பட்டுவேட்டி, சட்டையில் வந்தான். ‘ஏற்கெனவே முறுக்கிக் கொண்டிருக்கிறாள். இன்னும், இதையெல்லாம் பார்த்தால் அவ்வளவுதான். வேப்பிலை எடுக்காத குறையாக ஆடினாலும் ஆடுவாள்’ என்று எண்ணிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தான்.

சுபா, மீராவின் லேசான ஒப்பனையிலேயே தேவதையாகத் தெரிந்த மதுமிதாவின் கன்னத்தை வழித்துத் திருஷ்டிக் கழித்த ராஜி, “மதும்மா! சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். நாங்க இப்போ கிளம்பறோம். நாளைக்கு வரோம்" என்றவர் சுபாவையும், மீராவையும் அழைத்துப் போகச் சொன்னார்.

சித்தார்த்தின் அறைக்குள் வந்தவள், அறையின் விஸ்தரிப்பையும், செய்திருந்த அலங்காரத்தையும் பார்த்தவளது இதயம் மேலும் வேகமாகத் துடித்தது. சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சித்தார்த்தைத் தேடினாள். அவன் பால்கனியில் நின்றுகொண்டு யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தான். உடல் சற்றுச் சீரான போதும், மனத்திற்கு இன்னமும் பலமில்லாத காரணத்தால் களைப்புடன் சேர்ந்து கால்களும் தள்ளாட, சோஃபாவில் அமர்ந்து கண்களை மூடினாள்.

அதன்பிறகு எவ்வளவு நேரம் ஆனதோ சித்தார்த் உள்ளே வர, அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த மதுவைப் பார்த்துவிட்டுச் புன்சிரிப்புடன் அவளருகில் அமர்ந்தான். வெண்பட்டுச் சேலையில் களைத்த முகத்துடன் ஒரு ஓவியம் போன்று உறங்கி விட்டிருந்தவளை காதலுடன் பார்த்தான்.

‘இப்படி உரிமையுடன் உன் அருகில் அமர, எத்தனைப் போராட்டாம்’ என்று நினைத்துக்கொண்டவன், அவளைக் கட்டிலில் படுக்கச் சொல்லலாம் என்ற எண்ணத்துடன், "மது!" என்று மென்மையாக அழைத்தான்.

அந்தக் குரல் அவனுக்கே கேட்டிருக்குமோ என்னவோ! ஆனால், படாரென கண்ணைத் திறந்தவள் அத்தனை அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.

அவளது செய்கை சிரிப்பை வரவழைக்க, “மரியாதை மனசுல இருந்தா போதும். உட்காரு” என்றான்.

அவனது வார்த்தைகள் அவளைச் சீண்டிவிட, சோஃபாவில் அமர்வதாக எண்ணிக்கொண்டு விறைப்பாக அமர்ந்தவள், பொத்தென கார்பெட்டில் அமர்ந்தாள். சட்டென சுதாரித்துக் கொண்டவள், அப்படியே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தாள்.

சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு, “இப்போதானே சொன்னேன். மரியாதை மனசுல இருந்தா போதும். வந்து மேலே உட்கார்" என்றான்.

"எனக்குக் கீழே உட்கார்ந்தா வசதியா இருக்கும். அதனால தான், கீழே உட்கார்ந்தேன்" என்று வீம்பாக கூற, "சரி, அப்போ நானும் கீழேயே உட்கார்ந்துக்கறேன். என்னோட பாதி நீயே கீழே உட்கார்ந்திருக்க. அப்புறம், நான் மட்டும் எப்படி மேலே உட்காருவது?" என்று சொல்லிக்கொண்டே, அவளருகில் அமர்ந்தான்.

சற்று நகர்ந்து அமர முயன்றவளின் கரத்தைப் பிடித்துத் தன் கைகளில் வைத்துக்கொள்ள, அவளது இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. அவன் பிடியிலிருந்து தன் கையை எடுக்க முயல, அவன் விடாமல் கையைப் பற்றி உள்ளங்கையில் தன் ஆட்காட்டி விரலால் கோடு போட்டான்.

குறுகுறுப்பில் மீண்டும் அவள் கையை இழுக்க, “ஏன் மது நம்ம கல்யாணம் ரொம்ப சிம்புளா முடிந்து விட்டதேன்னு உனக்குக் கவலையா?" என்று அவளது கவனத்தைத் திசை திருப்ப முயன்றான்.

அவள் எரிச்சலுடன், “கவலையா! சேச்சே... அப்படியே சுவிட்சர்லாந்த் பனிமலைல நின்னது மாதிரி குளுகுளுன்னு இருக்கேன்" என்று வெடுக்கெனச் சொன்னாள்.

"ஆஹ்... ஸ்விஸ்ன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. நாம ரெண்டு பேரும் ஹனிமூனுக்கு எங்கே போகலாம் சொல்லு?" என்று உள்ளங்கையில் கோடு போடுவதை விட்டுவிட்டு விரலில் சொடுக்கெடுத்தபடி கேட்க, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "கொஞ்சம் கையை விட்டுட்டுப் பேசறீங்களா?" என்றாள்.

"அதுமட்டும் முடியாது” என்றவனை திகைப்புடன் பார்த்தாள். “உன்னைக் கடைசிவரை கைவிடாமல் காப்பாற்றுவேன்னு உன் கழுத்தில் தாலி கட்டும் போதும், அக்னியை வலம் வரும்போதும் மந்திரம் சொல்லி உன் கையைப் பிடித்திருக்கேன். என்னைப் போய் என்ன வார்த்தைச் சொல்லிவிட்டாய் மது?" என்று அவன் கவலையுடன் கேட்டதும், "கடவுளே! என்னை ஏன் இப்படிச் சோதிக்கிற" என்று முணுமுணுத்துக்கொண்டே தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

ஆனாலும், அவன் அதைக் கண்டுகொள்ளாமல், “என்னம்மா! ஒண்ணுமே சொல்லமாட்டேன்ற? எங்கே போகலாம்? இப்போதைக்கு இந்தியாலேயே ஏதாவது ஒரு இடத்திற்குப் போகலாம். கொஞ்சம் நாள் ஆகட்டும்... ஒரு ஃபாரின் ப்ராஜெக்ட் ஒண்ணு வரும் போலத் தெரியுது. அதோட, சேர்த்து நம்ம ஹனிமூனையும் வச்சிக்கலாம்" என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க, அவள் கண்களை மூடி ஒரு கையால் தலையைத் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளது நிலையைக் கண்டவன், "மது!தூக்கம் வருதா?" என்றதும் அவசரமாக, "இல்லையே, எனக்குத் தூக்கமெல்லாம் ஒண்ணுமில்ல. உங்களுக்குத் தூக்கம் வந்தா நீங்க போய்ப் படுத்துக்கோங்க" என்றாள் வேகமாக.

"ரொம்ப நல்லதா போச்சு! எனக்கும் தூக்கம் வரல. தூக்கம் வரும் வரை, நாம ரெண்டு பேரும் பேசிட்டிருக்கலாம்" என்றவனை, என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தாள்.

அவள் அமைதியாக இருப்பதைக் கண்டவன், "மது! உனக்குச் சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டான்.

"ரொம்பப் பிரமாதமாக சமைக்க வராது. ஏதோ சாப்பிடும் அளவுக்குச் சமைப்பேன்" என்றாள்.

"ஒஹ்... அந்த அளவுக்குச் சமைப்பாயா? காஃபி போடத் தெரியுமா?" என்றான்.

திரும்பி அவனை முறைத்துக்கொண்டே, “காஃபி நல்லாவே போடத் தெரியும்" என்றாள்.

"வெரி குட்! சரி காஃபில எத்தனை ஸ்பூன் உப்பு போட்டுக் குடிப்ப?" என்று கேட்க, கேள்வியைச் சரியாகக் காதில் வாங்காமல், "ஒரு ஸ்பூன் போட்டுக்குவேன்" என்றாள்.

அவனோ, “நானெல்லாம் காஃபில சர்க்கரை தான் போட்டுக் குடிப்பேன். உப்பெல்லாம் போட்டுக் குடிக்கமாட்டேன்" என்று தீவிர பாவனையுடன் சொல்ல, எரிச்சலுடன் நிமிர்ந்து அமர்ந்தாள்.

“அப்புறம்...” என்று அவன் ஆரம்பிக்க, “இங்கே பாருங்க சமையலுக்கு ஆளா எடுக்குறீங்க? இப்படி இடக்குமடக்கா கேள்வி கேட்கிறீர்கள்? இதெல்லாம் ஒரு கேள்வி, அதுக்கு சிரிப்போட பதில் வேற" என்று பொரிந்தாள்.

"நான் என்னதான் செய்யட்டும்? நீதான், என் முகத்தைப் பார்த்தாலே திருப்பிக்கிட்டுப் போற. இந்த லட்சணத்தில் உன்கிட்ட ரொமான்ஸாகவா பேச முடியும்? சினிமால வரா மாதிரி, பக்கம் பக்கமா லவ் டயலாக் பேசணும்ன்னு நெஞ்சு நிறைய ஆசையிருக்கு. ஆனாலும், உனக்குப் பயந்தே கன்ட்ரோல் பண்ணிக்க வேண்டியதா இருக்கு. நீ மட்டும் உம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு... காதல் வசனமா பேச நான் ரெடி" என்று காதலுடனும், ஏக்கத்துடனும் சொன்னவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்கத் தைரியம் இல்லாமல், “ப்ளீஸ்! ஏன் இப்படிப் பேசறீங்க? என்றவளின் கண்கள் கலங்கின.

அவளது கண்ணீரைத் துடைக்கத் துடித்தக் கைகளை அடக்கிக்கொண்டு, அவளது மன நிலையை மாற்றும் பொருட்டும், கைகள் இரண்டையும் உயர்த்தி சோம்பல் முறித்தான்.

“ஹப்பா... எனக்குத் தூக்கமாக வருது. நான் தூங்கப் போகிறேன். நீதான் சாதரணமா பேசறதுக்கே பைசா கேட்பா போல. நீ எங்கே, பெட்ல என் பக்கத்துல படுப்ப? ஒரு பெட்ஷீட்டைப் போட்டுக் கீழே படுத்துக்கோ. இல்லன்னா, இந்தச் சோஃபால படுத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே எழுந்தவனைத் தொடர்ந்து எழுந்தாள்.

கப்போர்டிலிருந்து அவளுக்கு ஒரு பெட்ஷீட்டையும், தலையணையையும் எடுத்துச் சோஃபாவின் மேல் வைத்தவன், “குட் நைட்!” என்றவன் கட்டிலை நோக்கி நடந்தான்.

அவனுடைய எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல், “இங்கே பாருங்க... எனக்குக் கீழே படுத்தோ, சோஃபாவில் படுத்தோ பழக்கம் கிடையாது. நான் பெட்ல தான் படுப்பேன். உங்களுக்கு வேணும்னா நீங்க கீழே படுங்க. நான் பெட்டில் தான் படுப்பேன்" என்று சொன்னவள், நேராகச் சென்று கட்டிலின் ஒரு பக்கத்தில் அமர்ந்து, தனது நகைகளை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

சிரித்தபடி, ‘உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா! நான் என்ன சொல்வேனோ அதற்கு நேர்மாறாகத் தானே செய்வாய்!’ என்று எண்ணிகொண்டே, “உனக்குப் பிரச்சனை இல்லன்னா, தாராளமா பெட்லயே படுத்துக்கோ. நான் எல்லாத்தையும் உன் கூடச் ஷேர் பண்ணிக்கத் தயார். சிலரை மாதிரி, என் ரூமை யாருக்கும் கொடுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்க மாட்டேன்" என்று சொல்லிகொண்டே கட்டிலில் அமர்ந்தான்.

தன் வேலையைச் சில நொடிகள் நிறுத்திவிட்டுப் பிறகு தொடர்ந்தவள், "எனக்கு ஏசி பிடிக்காது. அதனால கொஞ்சம் ஏசியை நிறுத்தறீங்களா?" என்று அவன் பக்கமாகத் திரும்பாமலேயே கேட்டாள்.

"அதுமட்டும் முடியாதே! எனக்கு ஏசி இல்லனா தூக்கமே வராது" என்றதும், கோபத்துடன், “எனக்கு நைட் குளிரினா என்ன செய்றது?" என்றாள்.

"இதென்ன கேள்வி? நான்தான் உன் பக்கத்திலேயே இருக்கேனே" என்றான் சாதாரணமாக.

“என்ன?” என்று பதட்டத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து கண்ணை அகற்றாமல், “உனக்குக் கற்பனை சக்தி அதிகம்ன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல. கேட்டா ப்ளாங்கெட்டை எடுத்துக் கொடுக்க மாட்டேனா? என்ற அர்த்தத்தில் சொன்னேன்" என்று சொல்லி விட்டுச் சிரிப்பை அடக்க முயல்வதைக் கண்டவள், ‘பார்க்கத் தான் ஒண்ணும் தெரியாத மாதிரி இருக்கார். ஆனாலும், லொள்ளு அதிகம்’ என்று எண்ணிகொண்டே அவன் எடுத்துக் கொடுத்த ப்ளாங்கெட்டை மூடிக்கொண்டு, சித்தார்த்திற்கு எதிர்புறமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

காலையிலிருந்து இருந்த தயக்கம், பயம், பதட்டம் எல்லாம் இப்போது சற்று குறைந்தது போலயிருந்தது. அந்த நிம்மதியுடன், கண்களை மூடியவுடன் உறங்கிவிட்டாள். சற்றுநேரம் புத்தகம் படித்துக் கொண்டிருந்தவன், திரும்பி அவளைப் பார்த்தான்.

தூக்கத்தில் அவன்புறமாகத் திரும்பிப் படுத்தவளின் முகத்தில் புரண்ட முடியை மெல்ல ஒதுக்கிவிட்டவன், ‘மது! இப்போ என்னோட பெட்டை ஷேர் பண்ணிட்டு இருக்க. கூடிய சீக்கிரம் எல்லா விஷயத்திலும் நடக்கும்’ என்று எண்ணிச் சிரித்துக்கொண்டே எழுந்து ஏசியை நிறுத்திவிட்டு, பால்கனி கதவைத் திறந்துவிட்டான்.

குளிர்ந்த காற்று இதமாக உடலைத் தழுவிச் செல்வதை நின்று ரசித்தவன், விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தான். மனத்திற்குப் இனியவளின் அருகாமையே அவனுக்கு இதமளிக்க, ‘அவளது மனம் விரைவில் மாறும்’ என்ற நம்பிக்கையுடன், படுத்ததும் உறக்கம் அவனைத் தழுவியது.




அத்தியாயம் - 54

காலையில் அவள் எழும்போது, சித்தார்த் அறையில் இல்லை. ஜாகிங் சென்றிருப்பான் என்று எண்ணிக்கொண்டே குளித்துவிட்டு பூஜையறைக்கு வந்தவளை, தேவகி புன்னகையுடன் எதிர்கொண்டார்.

“என்ன மதும்மா சீக்கிரம் எழுந்துவிட்டாய்? உடம்பு பரவாயில்லையா? இன்னும் கொஞ்சநேரம் தூங்கி இருக்கலாமே?" என்று கரிசனத்துடன் கேட்டார்.

"நான் எப்போதும் இந்த நேரத்திற்கு எழுந்துவிடுவேன் அத்தை!" என்றவள் சுலோகம் சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தாள். தேவகி பெருமையுடன் மறுமகளைப் பார்த்தார்.

சுபாவும், குழந்தையுடன் வெளியே வர, “குட் மார்னிங் அண்ணி" மலர்ச்சியுடன் சொல்ல, “குட் மார்னிங் மது" குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

"என்னடா குட்டி! அம்மாவைத் தூங்க விடலையா?" என்று கேட்டதும் குழந்தையும் சிரித்துக்கொண்டே, "ஆமாம்" என்று மழலையில் சொல்ல, “என் செல்லக் குட்டி..." என்று சொல்லிகொண்டே குழந்தையின் மூக்கைப் பிடித்து ஆட்டினாள்.

"அண்ணி! நீங்க இன்னும் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. இந்தக் குட்டிப் பொண்ணை நான் பார்த்துக்கறேன்" என்றதும், "ரொம்பத் தேங்க்ஸ் மது! கொஞ்ச நேரம் பார்த்துக்கோ" என்ற சுபா மீண்டும் தன் அறைக்குச் சென்றாள்.

குழந்தைக்குப் பால் கலந்து எடுத்துவர, பாலைப் பார்த்ததும் குழந்தை ஓடியது. அவளும் பின்னாலேயே ஓடி, தாஜா செய்து பாலை முழுவதுமாகக் குடிக்க வைத்தாள். பூஜையை முடித்துக்கொண்டு தேவகி வெளியே வந்ததும், இருவருக்குமாக காஃபி கலந்து கொண்டு வந்து தன் அத்தைக்கு கொடுத்தாள்.

வாங்கிக்கொண்ட தேவகி, காஃபியை ஒரு வாய் குடித்துவிட்டு ரொம்ப நல்லாயிருக்கு மது" என்று பாராட்ட மதுவும் சிரித்துக்கொண்டே, “தேங்க்ஸ் அத்தை!” என்றாள்.

இருவரும் பேசிக்கொண்டிருக்க மது, “அத்தை! இன்னைக்குக் காலையில் என்ன மெனுன்னு சொல்லுங்க. இன்னைக்கு நான்தான் சமைப்பேன்" என்றாள்.

"இனி, காலம் பூரா வேணாம் வேணாம்ன்னு சொன்னாலும், நீ சமைச்சித் தான் ஆகணும். அதனால, கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ" என்றார்.

“சும்மா இருந்தா போரடிக்குமே அத்தை!" என்று சிணுங்களுடன் சொல்ல, அதைக் கேட்டபடி அங்கே வந்த மீரா, “என்ன? புதுப் பொண்ணுக்குப் போரடிக்குதா! நல்ல கதையாயிருக்கே? நீ சித்தார்த்தைக் கவனிச்சிக்க. அவர், உனக்குப் போரடிக்காம பார்த்துப்பார்" என்றதும் அவள் தலையைக் குனிந்து கொள்ள, "ஒஹ்.. பொண்ணுக்கு வெட்கமா?" என்று சிரித்தாள் மீரா.

"சரி மது! உன் ஆசையை ஏன் கெடுக்கணும்? இன்னைக்கு உன் சமையல்” என்ற தேவகி மெனுவைச் சொல்லிவிட்டு, “தக்காளி சட்னின்னா, சித்தார்த்துக்கு ரொம்பப் பிடிக்கும். அதையும் செய்துடு" என்றார்.

‘தக்காளி சட்னின்னா, சித்தார்த்துக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்ற வரியே மீண்டும் மீண்டும் மனதில் ஓடியது.

மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மது அருந்ததியை மடியில் வைத்துக் கொண்டிருந்தாள். வீட்டின் தவப்புதல்வர்களும், மாப்பிள்ளையும் ஜாகிங் முடித்துவிட்டு உள்ளே வந்த நால்வரும், பேசிக்கொண்டிருதவர்களைப் பார்த்துவிட்டு ஹாலிலேயே அமர்ந்தனர். சித்தார்த், சோஃபாவில் அமராமல் அவள் அமர்ந்திருந்த சோஃபாவின் கைப்பிடியில் அமர்ந்தபடி, அருந்ததியை கொஞ்சிக்கொண்டிருந்தான்.

‘என்ன இது? இவ்வளவு பேர் இருக்கிறார்கள் இப்படிச் செய்கிறானே?’ என்று தர்ம சங்கடத்தில் உட்காரவும் முடியாமல் எழுந்து செல்லவும் முடியாமல் தடுமாறினாள். ஆனால், மற்றவர்கள் இவர்கள் இருந்த பக்கமாகத் திரும்பக்கூட இல்லை.

“அம்மா! இன்னைக்கு என்ன டிஃபன்?” என்றான்.
“உன் சின்ன அண்ணி தான் இன்னைக்குச் சமையல். அவளிடமே கேளு” என்றார் தேவகி.

“ஏன் இந்த விஷப்பரிட்சை? நாங்களெல்லாம் நல்லாயிருப்பது உனக்குப் பிடிக்கலையா?" என்று மதுவைப் பார்த்துக் கேட்டான்.

அவள் மௌனமாக இருக்க, "டேய்! காஃபி போட்டுக் கொண்டுவந்தா எவ்வளவு நல்லா போட்டிருந்தா தெரியுமா?" என்று தேவகி மதுவிற்குப் பரிந்துவர, "அப்போ, எனக்கும் நீங்களே காஃபி போட்டுக் கொண்டு வரீங்களா அண்ணி?" என்று கேட்டான் அஷ்வந்த்.

"கண்டிப்பா" என்றவள் குழந்தையைச் சித்தார்த்திடம் கொடுத்துவிட்டு எழுந்தாள்.

“உப்பு டப்பா எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று அவன் தீவிர பாவனையுடன் கேட்க, கண்களை உருட்டி முறைத்தாள்.

“உப்பு எதுக்கு?” என்றபடி சுபா தம்பியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“அது, உப்பு பெறாத விஷயம்” என்றவன், “மது எனக்குக் காஃபி ஸ்ட்ராங்கா இருக்கட்டும். இங்கே வேண்டாம். எனக்குச் ஸ்பெஷலா ரூம் சர்வீஸ்" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

மீராவும், சுபாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்ள, தேவகி கவனமாக கடைக்குட்டி மகனுடன் பேசுவதைப் போலப் பாவனைச் செய்ய, எரிச்சலுடன் சமையலறைக்குச் சென்றாள் மது.

‘ரூம் சர்வீஸாம்... ரூம் சர்விஸ். இது என்ன ஹோட்டலா ரூம் சர்வீஸ் பண்ண?’ என்று முனகிக்கொண்டே அனைவருக்கும் காஃபியைக் கொடுத்துவிட்டு மீண்டும் கிச்சனுக்குச் சென்றாள்.

‘நேத்து என்ன கேட்டீங்க? காஃபில எத்தனைச் ஸ்பூன் உப்பு போட்டுக் குடிப்பன்னு தானே. இன்னைக்குத் தெரியும். யாரு எத்தனைச் ஸ்பூன் உப்பு போட்டுக் காஃபி குடிக்கப் போறாங்கன்னு’ என்று சினந்துகொண்டே, இரண்டு ஸ்பூன் உப்பை போட்டுக் கலக்கி எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள்.

சித்தார்த்திடம் கொடுத்துவிட்டு வெளியே நகர முயன்றவளை, “என்ன மேடம், உங்க காஃபியைக் குடிச்சிட்டு எப்படியிருக்குன்னு கமெண்ட் சொல்ல வேணாம். இருங்க" என்றான்.

அவளும் வேறு வழில்லாமல் நிற்க, ஒரு வாய் குடித்தவனின் முகம் அஷ்டக்கோணலாக மாறியது. நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவளும் ஓரக்கண்ணால் தன்னைக் கவனிப்பதைக் கண்டதும், காஃபி முழுவதையும் குடித்தவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

“ரொம்பத் தேங்க்ஸ்! இந்த மாதிரி ஒரு காஃபியை நான் குடிச்சதேயில்ல" என்று சொல்லிவிட்டுக் குளிப்பதற்காக எழுந்துச் சென்றான்.

ஒருவாய் குடித்துவிட்டு, உப்பு போட்டிருக்கிறது என்று வைத்துவிடுவான். ஏதேனும் கேட்டால், ‘பதிலுக்கு நன்றாக ஏதாவது சொல்லவேண்டும்’ என்று நினைத்துதான் கொண்டு வந்தாள். ஆனால், இப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்க்கவே இல்லை.

‘ஒருவேளை, உப்புக்குப் பதிலாகச் சர்க்கரைப் பவுடரைப் போட்டுக் கொடுத்து விட்டோமோ?’ என்ற சந்தேகத்துடன் எதையுமே யோசிக்காமல் கப்பிலிருந்த காஃபியைத் தன் வாயில் ஊற்றினாள்.

‘ம்...’ என்று முகத்தைச் சுழித்தவள், ‘சே! இப்படி உப்புக் கரிக்குது...’ என்று எண்ணியபடி நிமிர, குளியலறை வாசலில் நின்று அவளைப் பார்த்து கிண்டலாகச் சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

அந்த அறையை விட்டுப் போனால் போதும் என்று ஓட்டமும், நடையுமாக அங்கிருந்து வெளியேற, சித்தார்த் சப்தமாகச் சிரித்தான்.

குளித்துவிட்டுச் சாப்பிட டைனிங்கில் வந்து அமர்ந்தவனுக்கு, தக்காளி சட்னியைக் கொண்டு வந்து வைத்தாள். தானே அனைவருக்கும் பரிமாறுவதாகச் சொல்லி, யாரையுமே அருகில் வரவிடவில்லை. ஒவ்வொருவராக சாப்பிட்டுவிட்டுச் செல்ல, சித்தார்த் வந்து அமர்ந்தான்.

தனக்காக என்று தனியாக அவள் எடுத்துவரும் போதே சுதாரித்துக் கொண்டவன், அந்தக் கிண்ணத்திலிருந்த தக்காளிச் சட்னியைத் தொடாமல் இருந்தான். ஏற்கெனவே, சுரேஷுக்கு நேர்ந்ததை நேரில் பார்த்தவன். போதாகுறைக்கு இன்று காலையில், அவனுக்கே நடந்த அனுபவம் எல்லாம் அவனை உஷாராக்கின.

அவள் திரும்பவும் கிச்சனுக்குச் சென்ற நேரம் அங்கே வந்த அஷ்வந்த், "வாவ்! தக்காளி சட்னி வாசனை மூக்கைத் துளைக்குதே" என்று சொல்லிகொண்டே, "ப்ரோ! கொஞ்சம் இந்தப் பக்கம் சட்னியைத் தள்றது" என்றான்.

“உனக்கு இல்லாததா? மொத்தத்தையும் நீயே எடுத்துக்கோடா” என்று பாசத்துடன் தம்பியிடம் கிண்ணத்தை நகர்த்தினான்.

அண்ணனின் பேச்சும், சிரிப்பும், பூடகமாக எதையோ உணர்த்த, “எக்ஸ்க்யூஸ் மீ? இதுல வில்லங்கமா எதுவும் இல்லயே” என்றான் அண்ணனிடம்.

சிரித்தவன், “சேச்சே! உன் அண்ணியோட கைப்பக்குவத்தை நீ பார்க்க வேணாம்” என்றான் கிண்டலாக.

“ஓஹ்!” என்று அவன் சிரிக்க, வேகமாக அங்கே வந்த மதுமிதா, “அஷ்வந்த்! நான் உங்களுக்கு வேற சட்னி கொண்டு வரேன். இது வேண்டாம்" என்றாள்.

“என்ன அண்ணி? அண்ணனுக்காக ஸ்பெஷலா தயாரிச்சதா" என்று கேட்டதும், அவள் கடுப்புடன் சித்தார்த்தைப் பார்த்தாள். அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு மனைவியைப் பார்த்தான். மதுவின் முகம் கோபத்திலும், போட்ட பிளான் தப்பி விட்டதே என்ற ஆத்திரத்தில் முகம் சுருங்கி விட்டது.

“அம்மா! ஏம்மா இப்போல்லாம் நீங்க பச்சைச் சுண்டக்காய் குழம்பு வைக்கறதில்ல?" என்று சம்மந்தம் இல்லாமல் கேட்டதும், ஹாலில் அமர்ந்திருந்த தேவகி, “பச்சை சுண்டக்காய் கிடைக்கல சித்தார்த்" என்றார்.

அவன் கேள்விக்குக் கவனமாகப் பதில் சொல்ல, “நம்ம வீட்லயே ஐந்தே முக்கால் அடிக்கு ஒரு சுண்டக்காய் செடி புதுசா வச்சிருக்கோமே... இனி, நிறைய சுண்டக்காய் கிடைக்கும்" என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு எழுந்து சென்று கையைக் கழுவினான்.

"என்னடா சொல்ற? நம்ம வீட்ல ஏது சுண்டக்காய் செடி?" என்று தேவகி கேட்டுக் கொண்டிருக்க, அவனோ, “நினைத்தது ஒண்ணு; நடந்தது ஒண்ணு; அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு..." என்று பாடிவிட்டு வெளியே கிளம்பிச் சென்றான்.

பதினோரு மணிக்கு மது வீட்டிலிருந்து அனைவரும் வந்ததும், அவர்களுடன் பேசுவதும் சித்தார்த் வீட்டினரோடு அனைத்திலும் ஒன்றாகக் கலந்து இருப்பதுமாக இருந்தாள். ராஜியும், விமலாவும் அவள் சித்தார்த் குடும்பத்தினருடன் சேர்ந்து கலகலப்பாகப் பழகுவதைப் பார்த்ததும் நிம்மதி அடைந்தனர்.

இரவு நெருங்க நெருங்க அவளுக்குப் பயம் தொற்றிக் கொண்டது. காலையில் ஏதோ ஒரு தைரியத்தில், என்னென்னவோ செய்தாகி விட்டது. இப்போது என்ன செய்வது என்று பயத்துடன் அறைக்குச் சென்றாள்.

சித்தார்த் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். அவள் சத்தமே இல்லாமல் கட்டிலில் படுத்துக்கொண்டாள். அவன் உள்ளே வருவதைக் கண்டதும், உறங்குவதைப் போலக் கண்களை மூடிக் கொண்டாள்.

அவளது நடிப்பைக் கண்டு கொண்டவன், “என்ன மேடம் என்னைப் பார்த்தும் தூங்குவது போல நடிக்கிறீங்களா? அப்படியெல்லாம் கஷ்டப்படாதீங்க. நான் உங்களை ஒண்ணும் சொல்ல மாட்டேன். உண்மையிலேயே ரொம்ப ரசிச்சேன். உன்னோட இந்தக் குறும்பு தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு" என்றான் ஆத்மார்த்தமாக.

கண்ணை திறந்தவள், “உங்களுக்கு என் மேல கோபமே இல்லையா?" என்று விழிகளை விரித்து கேட்டதும், அவளையே இமைக்காமல் பார்த்தான்.

“கோபமா? நீ என்ன தப்பு செய்த? என் தம்பி, தங்கையெல்லாம் என்னோட விளையாடுவாங்களே தவிர, இப்படியெல்லாம் குறும்பு செய்ததே கிடையாது. ரியலி என்ஜாய்ட்! சொல்லப் போனா, உனக்குத் தேங்க்ஸ் சொல்லணும். தேங்க்ஸ் மது!” என்றவன் அவள் கையை பிடித்து உள்ளங்கையில் ஒரு முத்தம் கொடுக்க, கூச்சத்துடன் கையை இழுத்துக்கொண்டாள்.

"சாரி மது, டிபன் ரொம்ப நல்லாயிருந்தது. காலையிலேயே சொல்லணுன்னு நினைச்சேன்" என்றவன் புன்னகையுடன் படுத்துவிட, அவளுக்குத்தான் உறக்கமே வரவில்லை.

இதயம் கனப்பது போலத் தோன்ற, தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். பக்கத்தில் படுத்திருந்தவனோ, நிம்மதியாக உதட்டில் உறைந்த புன்னகையுடன் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளையும், தூக்கம் தழுவியது.