Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript பரகாய பிரவேசம் | SudhaRaviNovels

பரகாய பிரவேசம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“பரகாய பிரவேசம்”


ஆபிசிலிருந்து சீக்கிரம் கிளம்பிய மனோஜ் வீடு வந்து சேருவதற்குள் போதும் போதும் என்றானது. மறுநாள் விடுமுறையாதலால் அன்று சினிமாவுக்குச் செல்லலாம் என்று பிள்ளைகளுக்கு வாக்குக் கொடுத்திருந்தான்.

ஆனால் நாளெல்லாம் உழைத்து மிகவும் களைத்துப் போய்த் திரும்பியவனுக்கு எங்கும் செல்ல மனமில்லை. பிள்ளைகளோ மிகவும் உற்சாகத்துடன் வெளியில் செல்ல தயாராகிக் காத்திருந்தனர்.

மனைவி ஷாலினியும் தயாராகி இருந்தாள்.

அவர்களின் உற்சாகத்தைப் பார்த்து மனதை மாற்றிக் கொண்டான் மனோஜ்.

“ஷாலு..சீக்கிரம் ஓடிப் போய்க் காப்பிக் கொண்டு வா. நான் அதுக்குள்ளே பேஸ் வாஷ் பண்ணி ரெடியாகிடுறேன்” என்றான்.

அவள் காப்பிப் போட செல்ல, மனோஜ் விரைந்து முகம் கழுவி ஆடை மாற்றி வெளியில் செல்வதற்குத் தயாராக வந்தான்.

காபியை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டே “ நீ எத்தனை மணிக்கு வந்த ஷாலு?” என்றான்.

அவன் எதிரில் அமர்ந்தவள் “நாலு மணிக்கே வந்துட்டேன் மனோ. போன வாரம் தானே ப்ராஜெக்ட் முடிந்தது. அதனால இப்போ கொஞ்சம் ப்ரீ தான்” என்றாள்.

“ம்ம்..” என்றவன் மீதியிருந்த காப்பியை வாயில் கவிழ்த்துக் கொண்டே “நேரமாச்சு கிளம்புங்க..டிராபிக் வேற அதிகமாயிருக்கும்” என்று கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அதற்குள் மகள் ஷிவானி அவசரமாகப் படுக்கையறைக்குள் சென்று கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைச் சரி பார்த்துவிட்டு வெளியே வந்தாள்.

அவர்களது நான்கு வயது மகன் சஞ்சய் செருப்பை மாற்றி மாற்றிப் போட்டு நடனமாடிக் கொண்டிருந்தான்.

கதவை பூட்ட சாவியை எடுத்துக் கொண்டு வந்த ஷாலினி மகன் முதுகில் ஒன்று வைத்து “நாலு வயசாவது இன்னும் செருப்பு போட தெரியல” என்று குனிந்து ஒழுங்காக அணிவித்து அவனை வெளியே அனுப்பி வீட்டை பூட்டினாள்.

காரிலேறி அமர்ந்து கொஞ்சம் தூரம் நகர்ந்ததும் சற்று ஆசுவாசமடைந்த மனோஜ் தனது பத்து வயது மகளிடம் “ என்னடா உங்க கிளாஸ்ல எல்லோரும் பார்த்துட்டாங்களா இந்தப் படத்தை?” என்றான்.

“இல்லப்பா! விதுவும், ரதியும் மட்டும் தான் பார்த்திருக்காங்க. கீர்த்தி இன்னும் பார்க்கல. அவ பார்க்கிறதுக்கு முன்னாடி நான் பார்த்திடுவேனே” என்றாள் குஷியாக.

அவளது பேச்சைக் கேட்டுச் சிரித்துக் கொண்ட கணவன் மனைவி இருவரும் வேறு விஷயங்களுக்குத் தாவ, பிள்ளைகள் இருவரும் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

டிராபிக்கில் மிதந்து, போராடி அரைமணியில் தியேட்டரை அடைந்தனர். இரு நாட்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் புக் செய்திருந்ததால், டிக்கெட் மெசினில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

தங்கள் இருக்கையைத் தேடி அருகே சென்றதும் முதல் போராட்டம் ஆரம்பமானது. மகன் அம்மா அருகில் தான் அமருவேன் என்று சொல்ல, மகளோ நான் நடுவில் தான் அமருவேன் என்று அடம் பிடித்தாள். மனோஜும் அவன் பங்குக்கு ஷாலினியை தன் பக்கத்தில் தான் அமர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.

பத்து நிமிஷம் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக மகளைச் சமாதனம் செய்து மனோஜ், ஷாலினி, சஞ்சய் அடுத்து ஷிவானி என்று அமர்ந்தார்கள்.அனைவரும் திரையை நோக்க மற்ற படங்களின் ட்ரெய்லர்கள் ஓட ஆரம்பித்தது.

மனோஜ் மெல்ல மனைவியின் பக்கம் சரிந்து “ அதென்ன போகன்னு பேர் வச்சிருக்காங்க படத்துக்கு. உனக்கு அர்த்தம் தெரியுமா?” என்றான்.

அவன் கேட்டது காதில் விழுந்த சஞ்சய் “ அது ஒரு தாத்தா பேரு பா” என்றான்.

அதைக் கேட்டு “தாத்தாவா?” என்று புரியாமல் ஷாலுவைப் பார்த்தான்.

“ஆமாங்க! போகர்-ன்னு ஒரு சித்தர். அவர் பேரு தான்” என்றாள்.

மேலும் குழம்பிய முகத்துடன் “அவன் தாத்தான்னு சொல்றான். நீ சித்தர்ன்னு சொல்ற. அது யாரு சித்தர்” என்று மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினான்.

அவனது கேள்வியில் கடுப்பான ஷாலினி “ம்ம்..உங்க தாத்தா தான்” என்றாள்.

“எங்க தாத்தா பேரு எனக்கே தெரியாது. உனக்கெப்படித் தெரியும்?”

கடைசியில் அமர்ந்திருந்த மகளோ தந்தையின் கேள்விகளைக் கண்டு உதட்டை மடக்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

பொங்கி வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு “உங்க அம்மா கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்” என்றாள்.

“ஒ...” என்றவன் “ஆமாம் எங்க தாத்தா பேர் இவனுக்கு எப்படித் தெரியும்” என்றான்.

அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் திரையைப் பார்க்க ஆரம்பித்தவளின் முகத்தில் தெரிந்த கோபத்தில் பேசாமல் வாயை மூடிக் கொண்டு அவனும் பார்க்க ஆரம்பித்தான்.

சிறிது நேரம் அமைதியாகப் பார்த்தவன் பொறுக்க முடியாமல் மெல்ல அவள் தோளை சுரண்டி “படத்தோட கதை என்ன? நீ விக்கி பீடியால படிச்சிருப்பியே” என்றான்.

அவன் கதையைக் கேட்டதும் அதுவரை இருந்த கோபம் நீங்கி “ம்ம்..படிச்சிட்டேங்க பரகாயப் பிரவேசம் தான் கதை” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு முழித்தவன் “அதென்ன பரகாயம்? பெருங்காயம் தெரியும்.இதென்ன புதுசா?” என்றான்.

அவன் மீது எழுந்த கடுப்பில் “ம்ம்...வெங்காயம்” என்றாள்.

மிகவும் சமாதனாமாக “எனக்குத் தெரியலேன்னு தானே கேட்கிறேன். சொல்லு ஷாலு” என்றான் பாவமாக.

அவனது கெஞ்சலை கண்டு “சரி சொல்றேன்..ஆனா, இதுக்கு மேல கேள்வி கேட்க கூடாது. பரகாயப் பிரவேசம்ன்னா கூடு விட்டு கூடு பாயுறது” என்றாள்.

அதைக் கேட்டு முகத்தைச் சுளித்தவன் “ அடடா! இதென்ன குழந்தைங்க படமா?” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு “என்ன சொல்றீங்க?” என்றாள் புரியாதவளாக

அவளுக்குப் புரியவில்லை என்றதும் தோள்களைக் குலுக்கிக் கொண்டு பெருமையாக ஒரு பார்வை பார்த்து “கூட்டில் என்ன இருக்கும். பறவை இருக்கும். சோ இந்தப் படத்தில் அனிமேஷன் கலந்து கொடுத்திருக்காங்க போல” என்றான்.

அவனது விளக்கத்தில் அரண்டு போனவள் ‘ஆண்டவா! இந்த மனுஷன் கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்து’ என்று முணுமுணுத்து விட்டு “கூடு விட்டு கூடு பாயுறதுன்னா, நம்ம உடம்பிலிருந்து வேற உடம்புக்கு மாறுவது..இப்போ நான் சேர் விட்டு சேர் பாயப் போறேன். இனி, உங்க கூட உட்கார்ந்தா படம் பார்க்க முடியாது” என்றவள் மகளைக் கூப்பிட்டு அவன் அருகில் உட்கார வைத்துவிட்டு கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

மகள் அருகில் அமர்ந்ததும் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திரையை நோக்கி கண்களைத் திருப்பினான்.

படம் ஆரம்பித்துச் சிறிது நேரம் ஆனது.

மனோஜின் கையை மெல்ல தட்டினாள் ஷிவானி.

அவள் புறம் திரும்பி “என்னடா எதுக்குக் கூப்பிட்ட?” என்றான்.

“இங்கே எந்தப் பாப்கார்ன் நல்லா இருக்கும்? நார்மலா? சீசா? இல்ல சாக்லேட் பாப்கார்னா?” என்று தனது அரிய சந்தேகத்தைக் கேட்டாள்.

அதைக் கேட்டு கடுப்பானவன் “வாங்கும் போது கேட்டுக்கலாம் பேசாம படத்தைப் பாரு” என்றான்.
 
Last edited:
  • Like
Reactions: Sankari dayalan

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
சிறிது நேரம் அமைதியாகக் கழிந்தது. மீண்டும் கையில் ஏதோ ஊர்வது போல் தோன்ற மகளின் பக்கம் திரும்பி என்னவென்று விசாரித்தான்.

“ஸ்லஷ் கிடைக்குமாப்பா இங்கே?” என்று அதி முக்கியக் கேள்வியைக் கேட்டாள்.

“நீங்க இங்க படம் பார்க்க வந்தியா சாப்பிட வந்தியா?” என்றான் கடுப்பாக.

கண்களை விரித்து “ பாப்கார்ன்க்காகவும், ஸ்லஷ்காகவும் தான் வந்தேன் பா” என்று கூறி மேலும் எரிச்சலை கிளப்பினாள்.

“இந்தப் பாப்கார்னை வீட்டிலேயே வாங்கி வச்சு திங்க வேண்டியது தானே. அதுக்கு எதுக்கு இங்கே கிளம்பி வந்து என் உயிரை எடுக்கிற” என்று வெடுவெடுத்தான்.

இப்படியாகப் பல போராட்டங்களுக்கிடையில் படம் முடிந்து வெளியே வந்து, உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு காரில் ஏறினர்.

பிள்ளைகள் இருவரும் உறங்கிவிட, ஷாலினியோ படத்தைப் பற்றிய எண்ணத்திலேயே பேசாமல் அமர்ந்திருந்தாள்.

வண்டியை ஒட்டிக் கொண்டே அவள் புறம் திரும்பி “ என்ன யோசனை ஷாலு” என்றான்.

“ஒன்னுமில்லைங்க படத்தைப் பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன். நல்லா அனுபவிச்சுப் பார்த்தேன். பசங்களும் நல்லா அனுபவிச்சாங்க” என்றாள்.

“அரவிந்த்சாமி தான் நல்லா அனுபவிசிருப்பார்” என்றான் கிண்டலான தொனியில்.

படத்தின் முதல் சீனில் பல பெண்களுடன் வரும் அரவிந்தசாமியை தான் சொல்கிறான் என்று புரிந்தவள் “ச்சே..பேச்சை பாருங்க! ஆனா, ஆச்சர்யமா இருக்குங்க செம சப்ஜெக்ட் எடுத்திருக்காங்க” என்றாள்.

“லூசுத்தனமான சப்ஜெக்ட். இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல.எங்கே இருந்து தான் பிடிக்கிறாங்களோ” என்று சிடுசிடுத்தான்.

“இல்லைங்க..போகர்ன்னு ஒரு சித்தர் இருந்தது உண்மை” என்று பேசத் தொடங்கியவளை இடைமறித்து ‘எரிச்சலைக் கிளப்பாதே ஷாலு! எவனாவது அந்தக் காலத்து ஏமாற்றுக்காரனா இருப்பான்” என்று கடித்தான்.

வாக்குவாதத்தில் தெருவைப் பார்க்காது திடீரென்று வண்டியில் வந்து விழுந்த கிழவனைக் கண்டு இருவரும் அதிர்ந்து போனார்கள்.

உடனே காரை நிறுத்தி இறங்கி அவரருகில் ஓடினான் மனோஜ்.

லேசான தள்ளாட்டத்துடன் எழுந்த கிழவன் நிமிர்ந்து இருவரையும் பார்த்தான்.

தீட்சண்யமான கண்களுடன் இருந்த அவனது பார்வை இருவரையும் ஆராய்ந்தது. பின் இதழ்கடையில் புன்சிரிப்பை படர விட்டுப் பேசாமல் நின்றான்.

அவன் தங்களைப் பார்த்துச் சிரித்ததும் கோபமடைந்த மனோஜ் “ஏய்! நீ குடிச்சிட்டு வந்து விழ என் கார் தான் கிடைச்சுதா?” என்று பாய்ந்தான்.

அதற்கும் கொஞ்சமும் அசராது சத்தமாகச் சிரித்தவன்

“யான் யாரென்று அறியாது.உலகமுமறியாது ,யான் பொய்யென்று உரைத்தாயோ மானுடா? விடியலில் பார்வதி சிவனாக, சிவன் பார்வதியாகக் கடவது! மீட்சியைத் தேடி எனைக் காண ஓடி வா!”

என்று ஏதோ சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே சென்றான்.

ஷாலினிக்கு நெஞ்சுக்குள் இனம் புரியாத பயம் கவ்வியது.

“என்னங்க அவர் ஏதோ சாபமிட்டிடு போற மாதிரி இருக்கு. பயமா இருக்குங்க” என்றாள்.

“லூசாடி நீ! ஏதோ குடிகாரப் பயல் கத்திட்டுப் போறான். அதைப் பார்த்துச் சாபம் கொடுத்திட்டு போறான்னு உளறிகிட்டு இருக்கா” என்று கடித்துவிட்டு வண்டியை எடுத்தான்.

உள்ளுக்குள் பயத்துடன் ஷாலினியும், அந்தக் கிழவன் மேல் கொண்ட எரிச்சலில் மனோஜும் பேசிக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தனர்.

பிள்ளைகளைப் படுக்க வைத்துவிட்டு தானும் படுத்தவளுக்கு உறக்கம் வர மறுத்தது. அவனோ படுத்ததுமே அயர்ந்து உறங்க ஆரம்பித்து விட்டான்.

கிழவனின் கண்கள் தங்களையே சுற்றிக் கொண்டிருப்பது போல் தோன்ற மெல்ல மனோஜை எழுப்பினாள்.

“ மனோ! எனக்குப் பயமாயிருக்கு. அவர் நமக்குச் சாபம் தான் கொடுத்திருக்கார்” என்றாள்.

ஆழ்ந்த தூக்கதிலிருந்தவன் அது தடைபட்டதில் “ அடி வாங்க போற! மனுஷனை நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா? சாபம் விட்டுடானாம் சாபம்! நாளைக்குக் காலையில நீ ஆம்பிளையாவும் நான் பொம்பளையாகவும் மாறப் போறோம்”என்று சிடுசிடுத்தவன் “பேசாம படுத்து தூங்குடி” என்று மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

சிறிதுநேரம் தனது எண்ண சுழலில் மூழ்கி இருந்தவள் தன்னை அறியாமலே உறங்க ஆரம்பித்தாள்.

அன்று விடுமுறையாதலால் வழக்கமான நேரத்திற்கு எழாமல் மெதுவாக எழுந்தாள். படுக்கையில் அமர்ந்தபடியே சோம்பல் முறித்தவள், உறங்கும் பிள்ளைகளைப் பாசத்துடன் பார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

பிரஷில் பேஸ்ட்டை எடுத்து வைத்துக் கண்களை மூடிக் கொண்டே கண்ணாடி முன் நின்று பல் தேய்க்க ஆரம்பித்தாள். அரைகுறையாகக் கண்ணைத் திறந்து பார்க்கும் போது அவனுருவம் தெரிய “என்ன அதிசயம்! இப்போவே எழுந்திருச்சிடீங்களா?” என்றாள்.

அவனிடமிருந்து பதில் வராது போக மீண்டும் அரைகுறையாகக் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்துவிட்டு “என்ன தலைவா? காலையிலேயே ரொமான்ஸ் மூட்ல இருக்கீங்க போல” என்று கிண்டலடித்தாள்.

அதற்கும் பதில் வராமல் போகக் குனிந்து முகக் கழுவியவள் கண்களை அகலத் திறந்து தனக்குப் பின்னே திரும்பி பார்த்தாள்.

‘ம்ம்..மறுபடியும் போய்ப் படுத்தாச்சா?’ என்று கேட்டுக் கொண்டே கண்ணாடியின் புறம் திரும்பினாள்.

அங்கே அவனுருவம் தெரிய “போங்கப்பா சும்மா காலையிலேயே விளையாட்டு காட்டிகிட்டு” என்றாள் சிணுங்கலுடன்.

அப்படியும் அவன் எதுவும் பேசவில்லை என்றதும் திரும்பிப் பார்த்தாள். அங்கு அவனில்லை.

‘ச்சே’ என்று கையை உதறிக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தவளுக்கு அந்த நிமிடம் உரைத்தது. அங்கே தனதுருவம் தெரியாமல் அவன் உருவம் தெரிகிறதென்று. அவசரமாகக் குனிந்து தன்னைப் பார்த்தாள்.

அவளுக்குப் புரிந்து போனது தன்னுடைய உருவம் அவனுடையதாக மாறி போயிருக்கிறதென்று.

“ஐயோ! நான் என்ன செய்வேன். இப்படி ஆகிப் போச்சே” என்று கண்ணீருடன் புலம்ப ஆரம்பித்தாள். சிறிது அழுது முடித்த பிறகு ‘நான் அவனாக மாறி இருந்தால் அவன் என்னைப் போல மாறி இருப்பானா? என்கிற எண்ணம் தோன்ற அவசரமாக அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே அவளது உருவத்தில் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அவசரமாகச் சென்று அவனை எழுப்பினாள்.

“என்னடி இது படுத்தி எடுக்கிற” என்று எழுந்து அமர்ந்தான்.

“நான் பயந்த மாதிரியே ஆகிப் போச்சுங்க. கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க” என்று அழுதாள்.

லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தவன் “என் லுங்கியை எடுத்து எதுக்குக் கட்டியிருக்க? அதுதான் வீடு முழுக்கப் புடவை வாங்கி வச்சிருக்கியே” என்றான் கடுப்புடன்.

“ஐயோ! ஒழுங்கா கண்ணைத் திறந்து பாருங்க” என்றாள்.

அவனோ சளைக்காமல் “எப்படிப் பார்த்தாலும் பதினொரு வருஷமா பார்த்த மூஞ்சி தானேடி. அதைக் காலையிலேயே காட்டி பயமுறுத்தாதே” என்று மீண்டும் படுத்துக் கொண்டான்.

அவனது அலட்சியத்தில் தவித்துப் போனவள் ‘நேரம் காலம் தெரியாம படுத்துறானே’ என்று சுற்றுமுற்றும் பார்த்துத் தண்ணீர் ஜாடியில் இருந்து ஒரு டம்பளர் தண்ணீரை எடுத்துச் சரியாக அவன் முகத்தில் அடித்தாள்.

தண்ணீர் முகத்தில் பட்டதில் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவன் ஆங்காரத்துடன் கட்டிலில் இருந்து குதித்து அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

அவன் நின்ற கோலத்தைக் கண்டதும் அதுவரை இருந்த பயம் மாறி சிரிக்க ஆரம்பித்தாள்.

“காஞ்சனா மாதிரியே இருக்கு” என்று விழுந்து பிறண்டு சிரித்தாள்.

அப்போதும் தங்களுக்கு நடந்திருக்கும் அசம்பாவிதத்தை உணராதவன் “ஷாலு!” என்று அதட்டினான்.

அவளோ அவனைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போய்க் கண்ணாடியின் முன் நிறுத்தினாள்.

அங்குத் தன் உருவத்தைப் பார்த்து முதன்முறையாகப் பயந்து போய் “என்னடி இது! நான் போய்ப் புடவை கட்டிக்கிட்டு..ஐயோ கருமம் நாளைக்கு எப்படி ஆபிசுக்கு போவேன்’ என்று புலம்ப ஆரம்பித்தான்.

‘நான் அப்போவே சொன்னேன் அந்தக் கிழவன் கிட்ட வம்பு வச்சுக்காதீங்கன்னு. அவன் தான் நமக்குச் சாபம் விட்டுட்டான்” என்றாள் கலங்கிய குரலில்.

“அதை விடு! நாம எப்படிப் பழைய மாதிரி மாறுவோம்? பசங்களுக்குத் தெரிஞ்சா அவ்வளோ தான் ஊர் பூரா சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க” என்றான் பயத்துடன்.

“ஆமாங்க! முதலில் நாம எப்பவும் இருக்கிற மாதிரி நடந்துக்குவோம். அப்போ தான் பசங்களுக்குச் சந்தேகம் வராது. ஆனா, இதை எப்படிச் சரி பண்றது?”

இருவரும் பேசி முடிவெடுத்து ஷாலு உருவத்தில் இருப்பவன் உடல்நலம் சரியில்லாததால் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று முடிவானது.

பேசியதை செயல்படுத்த அவள் சமயலறைக்குச் செல்ல, அவன் படுக்கையில் படுத்தான். அவள் போவதையே பார்த்திருந்தவன் “அடியே! என் உருவத்துக்கு மரியாதை குடுடி..இப்படி ஆடி ஆடி நடக்காத சகிக்கல” என்றான் கெஞ்சும் குரலில்.

மனோஜின் உடம்பிலிருந்த ஷாலு கடுப்புடன் திரும்பிப் பார்த்து “ நீங்க மட்டும் என்ன ? என் உடம்பை அசிங்கப்படுதிகிட்டு இருக்கீங்க? ஒழுங்கா பொம்பளையா லட்சணமா அடக்க ஒடுக்கமா படுங்க” என்றாள்.

அவள் சொன்னதக் கேட்டுத் தன்னைப் பார்த்துக் கொண்டவன் ‘அரைமணி நேரமே கண்ணைக் கட்டுதே ஆண்டாவா! எப்படி ஓட்டப் போறேன்னு தெரியலையே’ என்று புலம்பினான்.

ஒருமணி நேரம் கடந்த நிலையில் சஞ்சு எழுந்து சமயலறைக்குச் சென்றான். அங்கே மனோஜ் உருவத்தைக் கண்டதும் “அப்பா! இங்கே என்ன பண்றீங்க?” என்று அலறினான்.

அவனை அப்படியே அலேக்காகத் தூக்கிய ஷாலு “சமைக்கிறேண்டா! அதுக்கு ஏன் இப்படிக் கத்துற?” என்றாள்.

திடீரென்று மகள் வாயில் புறமிருந்து சப்தம் போட்டாள்.

“அப்பா! இங்கே வந்து பாருங்க! அம்மா என்ன செய்றாங்கன்னு”.

மகளின் குரலில் அவன் ஏதோ ஏடாகூடமாகச் செய்துவிட்டான் என்றெண்ணி அலறி அடித்துக் கொண்டு ஓடினாள்.

அங்கே சேலையின் மாராப்பை பூணூல் போலப் போட்டுக் கொண்டு, லுங்கியை மடித்துக் கட்டுவது போல் மடித்துக் கட்டிக் கொண்டு காரை கழுவி கொண்டிருந்தான் மனோஜ். எதிர்வீட்டு மாமி முகத்தைச் சுளித்துக் கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். தெருவில் போவோர் வருவோர் எல்லாம் காம்பவுண்ட் சுவரோரம் வந்து நின்று பார்த்து சென்றனர்.

மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டவள் ‘ஆண்டவா! இவனை என்ன செய்றது? இப்படி மானத்தை வாங்கிட்டானே’ என்று திட்டிக் கொண்டே ஓடிப் போய் அவனை உள்ளே இழுத்து சென்றாள்.

தங்கள் அறைக்குள் தள்ளி கதவை மூடியவள் “என்ன பண்றீங்க? உங்களை இங்கே தானே படுத்திருக்கச் சொன்னேன். ஐயோ! என் மானம் போச்சு. தெருவில் உள்ளவங்க எல்லாம் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என்று புலம்பினாள்.

அவனுக்கு அப்போது தான் தவறின் அளவு புரிந்து “சாரி டி! நான் எப்பவும் போல நினைச்சு தான் போனேன். மறந்தே போயிட்டேன்” என்றான் பாவமாக.

அவனை மன்னித்து “சரி! போய்க் குளிச்சிட்டு வாங்க” என்று விட்டு குழந்தைகளைப் பார்க்க சென்றாள்.

அதற்குள் மகளையும், மகனையும் ஒருவாறாகச் சமாளித்து உணவைக் கொடுத்து வெளியே விளையாட அனுப்பினாள்.

அப்போது குளியறையில் இருந்தவன் “ஷாலு! அடியே! என்னால இதெல்லாத்தையும் போட்டுக்கிட்டு நாள் முழுக்க இருக்க முடியாது டி. என்னோட லுங்கியை கொடுடி” என்று கத்தினான்.

அதைக் கேட்டு பல்லைக் கடித்தவள் “ஏன் ஐயாவுக்கு வலிக்குதோ? என்ன பேச்சு பேசுவீங்க? ஆண்கள் மாதிரி கடின உழைப்பா இருக்கு. சும்மா ஜாலியா சுத்துற பெண்களுக்கு என்னவோ தியாகம் பண்ணுகிற நினைப்பு. அப்படி இப்படின்னு. இப்போ ஒரு டிரஸ் விஷயத்தில் உங்களால அட்ஜஸ்ட் பண்ண முடியல இல்ல” என்று அவளும் கத்தினாள்.

அப்போது உறங்கிக் கொண்டிருந்த மனோஜ் ‘என்னால புடவையைக் கட்ட முடியாது! என்னை விடுடி!’ என்று அலறிக் கொண்டே எழுந்தமர்ந்தான்.

அவனது சத்தத்தில் அவசரமாக எழுந்த ஷாலினி “என்னங்க! என்ன ஆச்சு?” என்று உலுக்கினாள்.

கண்களை விரியத் திறந்தவன் அவசரமாகக் குனிந்து தன்னைப் பார்த்து ஆசுவாசமாக நெஞ்சில் கை வைத்து “இத்தனை நேரம் கண்டது கனவா? அம்மாடி! பயந்தே போயிட்டேன்” என்றான்.

“என்ன கனவு கண்டீங்க?என்ன பயம்?”

தலையணை எடுத்து அவளை நன்றாக மொத்தியவன். “இனிமே இந்த மாதிரி படத்துக்கு யாராவது கூப்பிடீங்க தெரியும் சேதி. கதிகலங்கி போச்சு. சை” என்று கையை உதறிக் கொண்டான்.

அவளோ விடாமல் “என்ன கனவு கண்டீங்க?” என்று கேட்டாள்.

அவளிடம் தன் கனவை பகிர்ந்து கொண்டாள் வாழ்நாள் முழுவது ஒட்டி எடுத்து விடுவாள் என்றறிந்து “ஒண்ணுமில்ல..கெட்ட கனவு” என்று சமாளித்தான்.

மனதிற்குள் இனிதெருவில் போகும் குடிகார கிழவன் கிட்ட சண்டை போட கூடாது. யாருக்குத் தெரியும். அவன் பாட்டுக்கு சபிச்சிட்டு போயிட்டா யார் அவஸ்தைபடுவது என்று எண்ணிக் கொண்டான்....
 
  • Like
Reactions: Sankari dayalan