Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript பாசப்பறவைகள் - கதை திரி | SudhaRaviNovels

பாசப்பறவைகள் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 2


தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்திருந்த பாக்கிக்கு ஒரு தட்டில் முறுக்கை கொண்டு வந்து கொடுத்து விட்டு அருகே அமர்ந்த வைதேகி அவளிடம் பேச ஆரம்பித்தாள்.


அவர்களுக்கு சிறிது தூரத்தில் பிள்ளைகள் அனைவரும் ஒன்று கூடி விளையாடிக் கொண்டிருந்தனர். மகளும் மருமகளும் அன்னியோன்யமாக பேசிக் கொண்டிருப்பதை பெருமையாகவும் பேரப்பிள்ளைகள் விளையாடுவதை பாசமாகவும் பார்த்துக் கொண்டு முல்லை பந்தலின் கீழே அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்தார் வசந்தி. அப்போது அவருக்கு ‘இவளைப்போலவே அடுத்த இரண்டு மருமகள்களும் இப்படி தன் மகள்களிடம் சகஜமாக இருந்தால் எப்படி இருக்கும்?’ என்ற எண்ணம் தானாக மனதில் முளைத்தது.


வைதேகி அளவிற்கு இவரின் இரண்டாவது மருமகள் வந்தனா, தன் நாத்தனார்களிடம் அவ்வளவாக நெருங்கி பழக மாட்டாள். ‘வந்தாயா...வா!’ என்றழைத்ததோடு ஒதுங்கி கொள்வாள். அவர்களிடம் மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அவள் அப்படிதான் பழகுவாள். தாமரை இலை தண்ணீர் போலவே இங்கு அவளின் பழக்கம் இருக்கும்.


மணமுடித்து வந்த இந்த ஆறு ஆண்டுகளில் அவள் வாயைதிறந்து அனைவரின் முன்பு எதையும் பேசி யாரும் பார்த்ததில்லை. வீட்டில் பிறந்த பெண்களுக்கு செய்யும் வருடாந்தர சீர் பற்றி குறையோ, வீட்டு ஆண்களின் கூட்டுதொழில் பற்றி புகாரோ, போன வருடம் நடந்த கடைசி மகனின் திருமணத்திற்கு பெண் பார்ப்பதில் தன்னுடைய கருத்தோ இப்படி எதை பற்றியும் பேசமாட்டாள். மொத்தத்தில் வந்த மாட்டை கட்டவும் மாட்டாள், போன மாட்டை தேடவும் மாட்டாள். அப்படி ஒரு விசித்திர பிறவி!



கடைக்குட்டியின் கண்ணாட்டி சஞ்சனாவோ... வைதேகி போலவும் இருக்கமாட்டாள்; வந்தனா போலவும் இருக்கமாட்டாள். அவள் ஒரு தனி பிறவி. பெரியவள் இடம் பொருள் பார்த்து பேசக்கூடியவள்; இடையவள் எங்குமே பேசாதவள்; கடையவளோ... யார் இருந்தாலும் கவலைப்படாது மனதிற்கு சரியென பட்டதை பட்டென்று சொல்லக்கூடியவள். அக்குடும்பத்தினர் அனைவரும் அவளை சிறுவயதிலிருந்தே அறிந்தவர்கள் என்பதால் இதுவரை இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.


அந்நேரம் மிதமான அலங்காரத்தோடு அங்கே வந்த வந்தனா, வைதேகியிடம் “அக்கா நாங்க ரிசப்ஷன் போறோம். எங்களுக்கு நைட் சாப்பாடு வேண்டாம்” என்றாள்.


“என்ன ரிசப்ஷன்? எனக்கு தெரியாம எங்க அண்ணி போறீங்க” என்றாள் பாக்கி அவசரமாக.


வந்தனா அவளுக்கு பதிலேதும் சொல்லாது வைதேகியை பார்த்ததும், ”அது நம்ம கஸ்டமர் ஒருத்தரோட பொண்ணுக்கு பைபாஸ்ல இருக்கே புதுசா கட்டின பெரிய கல்யாணசத்திரம், அங்க நாளைக்கு கல்யாணம் பாக்கி. நம்ம கடைக்கு அவங்க ரெண்டுதலைமுறையா வாடிக்கையாளர்கள். அதுவுமில்லாம பொண்ணோட அப்பா கடைக்கு நேரில் வந்து பத்திரிகை கொடுத்து கண்டிப்பா வரணும்னு சொன்னாங்களாம். எல்லோருக்கும் நாளைக்கு முக்கியமான வேலையிருக்கறதால இன்னைக்கு ரிசப்ஷன்க்கு வந்தனாவோட ரகுவை அனுப்பிவிட சொன்னான் சதீஷ்” என்றாள்.


“ஆங்... அந்த சத்திரமா... அங்க இதுவரை நான் போனதே இல்லை.அது கடல் போல இருக்குமாம் அண்ணி. என்னோட ஃபிரெண்ட் போன மாசம் அங்க ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்து ரொம்ப ஓவரா பெருமை பேசினா. அண்ணி... பேசாம இப்படி பண்ணா என்ன? நீங்க ரகுக்கு போன் செய்து, அவனை கடையில வேலை பார்க்க சொல்லுங்க.அவன் ஒன்னும் ரிசப்ஷனுக்காக வேலையெல்லாம் விட்டுட்டு வரவேணாம். வீட்டு பெம்பளைங்க நாம எல்லோரும் ஃபங்க்ஷனுக்கு போகலாம். அப்போதான் அவங்க செய்த மரியாதையை நாம மதித்ததை போல இருக்கும்” என பாக்கியலட்சுமி சொன்னதும் அப்படியா... என வைதேகி அவளை அப்பாவியாய் பார்த்துவைத்தாள்.


இதை பார்த்த வந்தனாவிற்கு பாக்கியை அப்படியே கன்னம்கன்னமாக அறைய தோன்றியது. எவ்வளவு கஷ்டப்பட்டு இவளும் சதீஷும் சேர்ந்து பிளான் போட்டு அதை வைதேகி வழியாக செயல்படுத்த நினைத்து, அதில் வெற்றியை அடையும் கடைசி நிமிடத்தில் சொதப்பினால்... இவளுக்கு இப்படி தோன்றத்தானே செய்யும்!


பாக்கியின் பேச்சால் விளைந்த கோபத்தை குரலில் காட்டாது வந்தனா,“அக்கா... அவர் நான் கிளம்பிட்டதும் கால் செய்ய சொன்னார். இப்ப நான் என்ன செய்யட்டும்?” என வைதேகியிடம் கேட்டாள்.


அவளுக்கு இப்போது என்ன பதில் சொல்வது என இவள் திகைத்துக் கொண்டிருக்கும் போதே,
“அதெல்லாம் நீ ஒன்னும் அவன்கிட்ட சொல்லவேணாம் வந்தனா. எல்லாத்தையும் அண்ணி பார்த்துப்பாங்க” என்றவள் வைதேகியிடம், “அண்ணி... பொங்கலுக்கு நீங்க எடுத்த மாம்பழக்கலர்ல அரக்கு பாடர் வச்ச அந்த பட்டுப்புடவையை நான் இன்னைக்கு கட்டிக்கட்டுமா? அப்பவே நான் அதுக்கு தோதா ப்ளவுஸ் தச்சி வச்சிட்டேன்” எனக் கண்ணில் ஆசை மின்ன கேட்டாள்.


தன்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டு நிற்கும் இருவரில் யாருக்கு முதலில் பதில் கொடுப்பது என தெரியாது வைதேகி திகைத்துக் கொண்டிருந்த வேளையில் வந்தனாவின் கையிலிருந்த பேசி இசைத்தது. அதில் “ஆஹாங் சொல்லு!” என்றவள் அங்கிருந்து திரும்பி நடந்தாள்.


உள்ளே வந்துக் கொண்டிருந்தவள் தோட்டத்தில் இருந்தவர்களின் பார்வைக்கு மறைந்ததும்,”டேய் எருமை! சரியான பறக்காவெட்டி குடும்பம்டா உங்களோடது!” என எரிந்து விழுந்தாள்.


காலையில் இவளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டி சதீஷ் கடைக்கு சென்ற சிறிது நேரத்தில் வைதேகிக்கு அழைத்து பொய்யான ஒரு கல்யாணத்தை பற்றி சொல்லி, அதற்கு தங்களில் யாராலும் போகமுடியாத சூழ்நிலையை கூறி, ரகுவையாவது தம்பதி சமேதிரராய் அனுப்புவதுதான் தங்களின் குடும்பத்தின் கவுரவத்திற்கு அழகு என ஒரு பத்து நிமிடம் விளக்கி, வைதேகியை வைத்தே அதை ரகுவிடமும் வந்தனாவிடமும் சொல்ல வைத்தான்.


தான் செய்த சாகசத்தை வந்தனாவிடம் சொல்லி, இனிமேல் தன்னை எருமை என அழைக்க கூடாது என கண்டிக்க வேண்டுமென எண்ணி அவளை அழைத்தவனோ இந்த மண்டகப்படி ஏன் என புரியாது விழித்தான்.


“என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கடிச்சி வைக்கற” என கேட்டவனிடம் நடந்ததை இவள் சொல்லி, “நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. நான் இன்னும் அரை மணிநேரத்தில் இங்க இருந்து உங்க அண்ணனோட சினிமாவிற்கு கிளம்பியிருக்கனும்” என சொல்லி போனை கட் செய்தாள்.

‘ஐய்யோ... பாக்கிக்கா! இப்படி சொதப்பிட்டியே!’ என புலம்பியவன் மீண்டும் வைதேகியை அழைத்தான்.


“அண்ணி! ரகு அண்ணா கிளம்பிட்டான். அங்க அண்ணி ரெடியா?” என ஒன்னும் அறியாதவனைப்போல கேட்டான்.


அவன் விரித்த வலையில் விழுந்த வைதேகியும் இங்கு நடந்ததை சொல்ல,”அண்ணி... பாக்கி அக்காக்குதான் அறிவில்லை. நமக்குமா அது இல்லை? நாம படையோட போக கல்யாணத்திற்கு அழைச்சவங்க என்ன நம்ம பங்காளியா.அதுவும் வீட்டு மகாலக்ஷ்மிங்க எல்லோரும் அங்க போறதுக்கு அவங்க என்ன அவ்வளவு பெரிய ஆளுங்களா?அதெல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணி. நீங்க போகற அளவுக்கு அவங்க எல்லாம் வர்த் இல்லை. அண்ணாவையும் அண்ணியையும் மட்டும் அனுப்புங்க போதும்” என்றவன் ‘ஊஃப்’ என அமர்ந்திருந்த சேரில் சாய்ந்தான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
‘எந்த பக்கம் இருந்து யார் எப்படி பந்து போட்டாலும் அசால்டா அடிக்கறியே ராஜா, ஆனா அந்த சஞ்சு மூஞ்சூறுகிட்ட மட்டும் ஏன் அப்படி பம்பிட்டு நிக்கற?’ என கேட்ட மனசாட்சியிடம்,’விதி வலியது யூ நோ?’ என்றான் கொஞ்சம் கூட கூச்சமின்றி.


சதீஷ் சொன்னதை வந்தனாவை கூப்பிட்டு அவளிடம் கூறி, ரகு வந்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் சொல்லி அவளை அனுப்பிவைத்த வைதேகி தன்னருகில் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு அமர்ந்திருந்த பாக்கியிடம்,

“வயசுக்கு வந்த பொண்ணு, தலைக்கு மேல வளர்ந்த பையன் இவங்களுக்கு அம்மாவை போலவா நடந்துக்கற நீ? இன்னும் அதே சின்னபிள்ளைதனம் தான்! இப்ப என்ன உனக்கு அந்த மண்டபத்தை பார்க்கனும். அவ்வளவுதானே! அடுத்த மாசம் வர மாமாவோட எழுபதாவது பிறந்தாள் விழாவை அங்க வச்சிட்டா போச்சு.இப்ப நீ கேட்ட அந்த பட்டு புடவையை எடுத்து தாரேன். அதைக் கட்டிட்டு வா. நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம். ஓடு...” என்றாள் அவளின் முகவாட்டத்தை பொறுக்காது.


நடப்பவை அனைத்தையும் தன் மாமிக்கு பூ தொடுக்க ஏதுவாக பூக்களை அடுக்கிவைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனா, தன்னிடத்தில் இருந்து எழுந்து வைதேகியிடம் வந்தாள்.இதை பார்த்த வசந்தி ‘அச்சோ... அங்க போய் என்ன கேட்டுவைக்கபோறாளோ...’ என தவித்தார்.


இங்கு தனது அலங்காரத்தை சரி பார்த்துக் கொண்டிருந்த வந்தனா அறைக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பினாள். உள்ளே நுழைந்த ரகுவை கண்டதும் “வந்துட்டீங்களா? நேரமாகிடுச்சேன்னு நினைச்சேன்” என்றாள்.

சட்டையின் பட்டனை கழட்டிக் கொண்டே “காபி கொடு வந்து” என்றான்.


அவளோ மும்மரமாக கண்களுக்கு மை தீட்டிக் கொண்டிருக்க “வரும் போதே அண்ணி கிட்ட கேட்டு குடிச்சிட்டு வர வேண்டியது தானே ரகு” என்றாள்.


சட்டையைக் கழட்டி தூர எறிந்தவன் “ஒரு காப்பி கொடுக்க முடியாதா உன்னால? இந்த வீட்டில் நீ என்ன தான் பண்ற? அண்ணி தான் சமையல் முதல் வீட்டின் ஒவ்வொரு வேலையும் பார்க்கிறாங்க” என்றான் எரிச்சலாக.


ஸ்டைலாக திரும்பி நின்று “என்ன இப்படி சொல்லிட்டீங்க ரகு. காலையில உங்களுக்கு செர்வ் பண்றதுல ஆரம்பிச்சா நைட் வரைக்கும் பண்ண வேண்டியிருக்கு இல்லையா” என்று கூறி கண்ணடிக்க, அவனோ தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான்.


அவன் சென்றதும் அவசரமாக அறையை விட்டு வெளியேறியவள் சமயலறைக்கு சென்று காப்பி கலக்க ஆரம்பித்தாள்.


அப்போது அங்கே கவலை படிந்த முகத்தோடு அரக்கபறக்க வந்த வைதேகி “ரகு வந்தாச்சா வந்தனா?” என்றாள்.


என்ன... ஏன் இவங்க இப்படி சோககீதம் வாசிக்கறாங்க?என்னன்னு கேட்போமா...’ என எண்ணியவளின் வழக்கமான விட்டேற்றி குணம் தலை தூக்க நமக்கெதுக்கு வம்பு என உதட்டை பிதுக்கிக் கொண்டு,“ம்ம்..வந்தாச்சு அக்கா” என்று தட்டில் முறுக்கையும், கையில் காப்பியையும் எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.அவளை பார்த்து கையை பிசைந்துக் கொண்டு சமையலறையின் வாயிலில் நின்ற வைதேகி மேலே பார்த்துக் கொண்டிருந்தாள்.


குளித்து முடித்து வெளியே வந்தவன் மனைவி காப்பியுடன் வருவதைக் கண்டதும் ‘அதானே! நான் ஒன்னு கேட்டு என்னோட வந்து இல்லைன்னு சொல்லிடுவாளா? என் செலக்ஷன் எப்பவும் போல டாப்டக்கர்!’ என்று தன்னை தானே பாராட்டிக் கொண்டான்.


அவளோ அங்கிருந்த டீபாயில் காபியை வைத்துவிட்டு “மனசுக்குள்ளேயே பேசுனது போதும் பாஸ் காப்பி ஆறிட போகுது குடிங்க” என்றாள் கிண்டலாக.


ஈரத் துண்டுடன் அவளருகே சென்றவன் பின்னிருந்து அணைத்து “பார்க்க தாண்டி நீ கறார். ஆனா அள்ளிக் கொடுக்கிறதுல கெட்டிகாரி” என்று உரசிக் கொண்டான்.


“ஹையோ என்ன இது ரகு! நானே பார்த்து பார்த்து கட்டியிருக்கேன். நீங்க வேற” என்று நகர்ந்து கொண்டாள்.


“ஆமாம்டி நீயே தான் பார்த்து கட்டுன” என்று மேலும் இழைய வர, அவசரமாக நகர்ந்து கொண்டவள் “என் தலைவர் படம் ரகு. ப்ளீஸ்! சீக்கிரம் கிளம்புங்க” என்று அவனைப் பிடித்து தள்ளினாள்.


“சரி தான் போடி! என்னை விட தலைவர் முக்கியமா போயிட்டாரா” என்று கோபித்துக் கொண்டு காப்பியை எடுத்து அருந்த தொடங்கினான்.


அப்போது கதவு படபடவென்று தட்டப்பட, அவசரமாக சென்று திறக்க அங்கே...


பாக்கி வைதேகி இருவரின் அருகில் வந்த சஞ்சனா,”பாக்கி அண்ணி! கடவுள் உங்களுக்கு மூளை வைக்கும்போது அதில் ஏதாவது பாக்கி வச்சிட்டானோ?” என நக்கலாய் கேட்டாள்.


அத்தை மகள். தங்களைவிட வயதில் மிகவும் சிறியவள். அவளின் துடுக்கு பேச்சை சிறுவயதிலிருந்தே அறிந்திருந்தாலும் இப்போது அவள் கேட்ட கேள்வி பாக்கியை கடுப்பேற்ற,”என்ன பேச்சு இது சஞ்சு?நாத்தனார் என்ற உறவுக்குத்தான் உன்கிட்ட மரியாதை இல்லை. வயசுக்கு மரியாதை வேணாமா? என்றாள் கோபக்குரலில்.


“வயசுக்கு தகுந்த நடவடிக்கை இருந்தா மரியாதை தானா கிடைக்கும் பாக்கி அண்ணி!” என்றாள் சஞ்சு.


“அப்படி என்னம்மா வயசுக்கு மீறி நடந்துட்டேன் நான்?” என ஆத்திரமாக கேட்டவளுக்கு,“வயசுக்கு மீறி நடக்கல. வயசுக்கு தகுந்தாமாதிரி நடந்துக்கல நீங்க” என பதிலளித்தாள் சஞ்சு.

அவள் இப்படி சொன்னதும், “இவளை பாருங்க அண்ணி எப்படி பேசறா. நான் அப்படி என்ன பண்ணிட்டேன் இப்ப?” என வைதேகியிடம் பாக்கி குறைப்பட, “அங்க என்ன கேட்கறீங்க. நீங்க என்ன செய்தாலும் அவங்களுக்கு தப்பாவே தெரியாது.அவங்க கொடுக்கிற இடத்தாலதான் நீங்க இங்க எல்லோர் தலை மேலையும் ஏறி உட்காந்துக்கறீங்க” என சஞ்சு சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த வசந்தி,“சஞ்சு! அண்ணிகிட்ட இப்படிதான் பேசுவியா?” என அவளை அதட்டினார்.

“உங்க பொண்ணை நான் ஒன்னு சொன்னதும் என்னை அடக்க ஓடி வந்த நீங்க கொஞ்ச நேரம் முன்னாடி உங்க பொண்ணு பேசும்போது ஏன் வரல மாமி?” என மாமியாரிடம் பாய்ந்தாள்.


“நான் அப்படி என்ன பேசினேன்னு சொல்லாம இப்ப எதுக்கு நீ அம்மாகிட்ட வம்பு வளர்த்துகிட்டு இருக்க சஞ்சு?” என வசந்தி பேசுவதற்கு முன் கேட்டாள் பாக்கி.


‘இந்த பொண்ணு வாயை வச்சிட்டு சும்மா இல்லாம இவகிட்ட வாங்கிகட்டிக்கதான் போற!’ என நொந்த வசந்தி மூத்தவளை சோகமாக பார்த்து ஏதாவது செய் என கண்களால் கட்டளையிட்டார்.


வைதேகி, சஞ்சு என அழைத்து அவளின் கைகளை பிடிக்கும் முன்பே,”வந்தனா அக்கா ஆசையா ரகு மாமாவோட வெளிய போக கிளம்பி வந்ததை பார்த்த பிறகும் நீங்க அப்படி சொன்னது சரியா பாக்கி அண்ணி? அவங்களே எப்போவாவதுதான் சேர்ந்து வெளில போறாங்க ” என்றாள் சஞ்சனா.

வந்தனா அவளின் கணவனோடு தனியே செல்லக்கூடாது என நினைத்து வேண்டுமென்றே பாக்கி அப்படி சொல்லவில்லை.எப்போது எப்படி பேச வேண்டும் என்ற வரைமுறை தெரியாதே தவிர அவள் அப்படி ஒன்றும் கெட்ட எண்ணம் கொண்டவள் இல்லை.இப்போது சஞ்சு சொன்னதும்தான் அப்படி பேசியது எவ்வளவு கேவலம் என்பதே இவளுக்கு புரிந்தது. இருந்தும் அதை வெளியே காட்டாது,“நான் என்ன அவளை விட்டுட்டு போலாம்ன்னா சொன்னேன். அவளையும் நம்ம கூட கூட்டிட்டு போகலாம்னு தானே சொன்னேன்” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“ஆமா! வந்துக்கா ரகு மாமாவோட போறதை விட நம்ம கூட வராதுக்குதான் பறந்துட்டு இருக்காங்க. எல்லோரும் உங்களைப்போலவே இருப்பாங்களா அண்ணி?” என நக்கலாய் சஞ்சு கேட்டதும், நிலைமை கைமீறி போவதைப் பார்த்த வைதேகி,”பாக்கி... வந்தனா ரகுவோட வெளிய கிளம்பறா. அதனால விவேக்கையும் ஐசு குட்டியையும் நாமதான் இன்னைக்கு பார்த்துக்கனும். அங்க விளையாடிட்டு இருக்கற அவங்களை உள்ள இழுத்துட்டு போய், கொஞ்சம் காம்ப்ளான் கலக்கி தரியா?” என கேட்டு அவளை உள்ளே அனுப்ப முயற்சித்தாள்.

அதற்கு அவ்வளவு எளிதில் விட்டுவிடுவேனா என்பதைபோல, ”என்னமோ இன்னைக்குதான் இதை புதுசா செய்யறதை போல சொல்றீங்க அண்ணி. இது தினமும் வழக்கம் தானே? பெத்து போட்டதுதான் அவள்.மத்தபடி நாமதானே அவங்களை வளர்கிறோம்!” என்றாள் பாக்கி.


“அம்மா வீட்டுக்கு அடிக்கடி வந்தா இப்படி ஆயா வேலைப் பார்க்கத்தான் செய்யனும்!” என சரியான நேரத்தில் சொல்லிக் காட்டினாள் சஞ்சு.


இதைக் கேட்டதும் அவமானத்தில் முகம் கறுத்த பாக்கி,”நான் ஒன்னும் உன்னோட புருஷன் சம்பாதிக்கற சொத்தில் உட்கார்ந்து சாப்பிட இங்க வரல!என்னோட அம்மா வீட்டுக்கு நான் வரேன். அதை நீ ஒன்னும் சொல்லிக் காட்ட தேவையில்ல” என சிடுசிடுத்தாள்.


“நீங்க இங்க அடிக்கடி வரதால என்னோட அண்ணாக்குதான் அசிங்கம். அதனால நான் கண்டிப்பா சொல்லித்தான் காட்டுவேன்!” என்றாள் இவளும் விடாது.


சஞ்சனாவின் பெரியப்பா மகனுக்குத்தான் பாக்கியலஷ்மியை கொடுத்திருந்தார்கள். அங்கு மூன்று ஆண்களுக்கு இடையில் பிறந்த ஒரே பெண் சஞ்சு.அதனால் பாக்கியின் மாமியார் வீட்டிலும் இவளுக்கு செல்வாக்கு அதிகம்.இவளிடம் சண்டை கட்டினால் வைதேகியைதவிர யாரும் தனக்கு துணை வரமாட்டார்கள் என்பதை உணர்ந்த பாக்கி,”அண்ணி! பசங்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்துட்டு நாம கோவிலுக்கு போய் வரலாம். நீங்க உங்க புடவையை எடுத்து கொடுங்க. வாங்க” என வைதேகியை அழைத்தாள்.


“ம்க்கும்! அடுத்த ஆட்டைக்கு ரெடி!” என சஞ்சு முணுமுணுத்தாள்.


ஏற்கனவே கோபத்தில் இருந்த பாக்கி சஞ்சனா இப்படி சொன்னதும் அவளிடம் வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கட்டி, அவளிடம் இவளின் வாய் எடுபடாது வழக்கம் போல கோபித்துக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 3


“சஞ்சு! ஒரு நிமிஷம்! நீ பேசறது சரின்னாலும் பாக்கி கிட்ட இனிமே அப்படி பேசாதே. பாவம் அவ வருத்தப்பட்டு அழுகிறாள் பாரு!” என வசந்தி சொன்னதும், சஞ்சு ஒரு மெல்லிய புன்னகையுடன் “அவங்களுக்குன்னு ஒரு லைப் இருக்கு. அவங்க புருஷன், அவங்க வீடு, அவங்க பசங்க இதெல்லாம்தான் அவங்களுக்கு முக்கியம். அதை அவங்க புரிஞ்சுக்கனும். நீங்க ஆதரவு காட்டுவதில் தப்பில்லை. ஆனா எங்க அண்ணாக்கும் தன் மனைவியோட இருக்கனும், வெளியே போகனும்னு ஆசை இருக்கும் இல்லையா? இவங்க வாரத்தில் ஐந்து நாள் இங்கேயே இருந்தா அவருக்கு வாழ்க்கையில் வெறுப்பு வந்துடாதா? உங்ககிட்ட அது வேணும், இதுவேணும்னு கேட்பதை போல எங்க அண்ணாகிட்ட கேட்டிருந்தா அவர் செய்திருக்கமாட்டாரா அக்கா? இல்ல... எங்க அண்ணாக்கு அந்த அளவுக்கு வசதி இல்லையா? அவங்க இங்க வந்து எல்லாத்துக்கும் நின்னா எங்க வீட்டுக்குதானே அசிங்கம்.நாம ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னு. நமக்கு எல்லாம் தெரியும். ஆனா வந்துக்கா? அவங்க எங்க அண்ணாவீட்டை பத்தி என்ன நினைப்பாங்க? மனைவிக்கு சாப்பாடு போட வக்கில்லாதவங்கன்னு எங்க குடும்பத்தை அவங்க நினைச்சிட்டா... அது எங்க பெரியப்பாக்கு எவ்வளவு கேவலம். என்னமோ போங்க... நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.

அசால்டாக ஒரு விஷயத்தை அவள் சொல்லிச் சென்றதில் அதிர்ந்து தான் போனாள் வைதேகி. அவள் சொன்ன விஷயம் சரிதான் என்றாலும் பாக்கிக்கு இதை எப்படி உணர்த்துவது என்று மாமியாரும் மருமகளும் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருந்த வேளையில் அடுத்த கலவரத்தை கிளப்ப பாக்கி தயாரானாள்.


கோபித்துக் கொண்டு தன்னறைக்கு வந்த பாக்கி, கண்ணில் நீர்வடிவதை கூட பொருட்படுத்தாது உடைகளை பையில் திணித்துக் கொண்டிருந்தாள். சஞ்சனா சொன்னதில் இருந்த நியாயம் வைதேகியின் மனதை சுட்டதால் பாக்கியிடம் பக்குவமாக அதைப் பற்றி பேச எண்ணி அங்கு வந்த வைதேகிக்கு அதை பார்த்ததும் பேச வந்தது எல்லாம் மறந்துபோனது.


“பாக்கி! இப்படி ஆன்னா ஊன்னா கண்ணுல தண்ணி விடற பழக்கத்தை எப்ப நீ மாத்திக்கபோற? இன்னும் சின்ன பிள்ளையா நீ?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் கண்ணீரை துடைத்துவிட்டாள்.


“ம்ம்ம்... நீங்களும் என்னை குறை சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க இல்ல!” என குறைப்பட்டுக்கொண்டு அவளின் தோளில் சலுகையாய் சாய்ந்துக் கொண்டாள்.


“லூசு! உன்னை நான் அப்படி சொல்வேனா?” என்றவள், அவளின் பயணப்பையை ஒரு கண்ணில் பார்த்துவிட்டு,

“கண்டிப்பா இன்னைக்கு கிளம்பத்தான் போறியா?” எனக் கேட்டாள்.


“பின்ன? அவ அப்படி பேசின பிறகும் இங்க இருக்க நான் என்ன ரோஷம் கெட்டவளா?” என சீறினாள்.


பாக்கியின் கோபத்தைப் பார்த்த வைதேகி, “ இந்தமாதிரித்தான் பேசாதேன்னு சொல்றேன். யாரு அவ? உன்னோட அதை பொண்ணு. உன் குட்டி தம்பியோட பொண்டாட்டி. உன் வீட்டுக்காரரோட தங்கச்சி.இது எல்லாத்துக்கும் மேல நீ பார்த்து வளர்ந்தவ.அவளை பத்தி நான் சொல்லித்தான் உனக்கு தெரியனுமா? உனக்கு உங்க அண்ணன் பெருசுன்னா அவளுக்கும் அப்படிதானே! அடிக்கடி நீ அவங்க அண்ணனை தனியாவிட்டுட்டு இங்க வந்துடறேன்ற கோபத்தில் அவ அப்படி பேசறா. மத்தபடி நீ இங்க வர கூடாதுன்ற கெட்டபுத்தி எல்லாம் அவளுக்கு இல்ல. அது உனக்கும் தெரியும்தானே?” எனக் கேட்டாள்.


“ச்சேச்சே... அவ அப்படி எல்லாம் நினைக்கமாட்டா” என்றாள் பாக்கி பட்டென்று.


இதைக் கேட்ட வைதேகியின் மனம் அப்போதுதான் நிம்மதியடைந்தது. கூட்டுக் குடும்பத்தில் ஒரு சிறு பேச்சும் ஒருவரின் மனதில் நின்றுவிட்டால் அது அந்த குடும்பத்தின் ஆணிவேரையே அசைக்கும் வல்லமையுடையது என்பதை அறியாதவளா இவள்! சிறுசிறு சண்டைகள் இங்கே அடிக்கடி நிகழ்பவைதான்.அதனால் இதுவரை எந்த மனகஷ்டமும் குழப்பமும் யாருக்கும் வந்ததில்லை.


பெரியவள் தனலட்சுமியின் வருகை இங்கு அத்திப்பூத்தாற்போல நிகழும் ஒன்று. அப்போதும் அவள் பாக்கியைபோல யாரிடமும் நடந்துக் கொள்ளமாட்டாள். வைதேகியை போல பலவருட திருமண வாழ்க்கை அவளுக்கு பக்குவத்தை பரிசளித்திருந்தது.ஆனால்...


பாக்கிக்கும் சஞ்சனாவிற்கும் இன்று நடந்ததைப்போல அடிக்கடி முட்டிக்கொள்ளும்.அப்போது இவள் கோபித்துக் கொண்டு கிளம்புவதும், வைதேகி சமாதானப்படுத்துவதும் அதைக் கேட்காது இவள் முறுக்கிக்கொண்டு போவதும், அப்படி போன மறுவாரமே மீண்டும் இங்கு வந்திறங்குவதும் தொடர்கதை.அதனால் அவளின் புறப்பாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளாத வைதேகி, “உங்க பெரிய அண்ணா வரட்டும். நீ அவரோட உங்க வீட்டுக்கு போ!” என்றாள்.

“இல்ல அண்ணி! நான் ரகு இப்ப கிளம்புவான் இல்ல, அவன் கூட நானும் போய் எங்க வீட்டில் இறங்கிக்கிறேன்” என்றவளிடம், “அவங்க புருஷன் பொண்டாட்டி தனியா போகும் போது நீ எதுக்கு கூட போகற? இவர் வரட்டும். நீ இவர் கூட போ” என்றாள்.

“என்னண்ணி! நீங்களும் சஞ்சனா போலவே சொல்றீங்க? நான் என்ன அவங்க கூட ரிசப்ஷன் போறேன்னா சொன்னேன்? போற வழியில இறங்கிக்கிறேன்னுதானே சொன்னேன். என் தம்பிகிட்ட இதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா?” என இவள் மீண்டும் கண்ணை கசக்கவும் அங்கிருந்து தப்பித்தால் போதும் என எண்ணி வைதேகி சமையலறையில் தஞ்சமடைந்தாள்.


ரகு கதவை திறந்ததும் அங்கிருந்த பாக்கி, அவளும் இவர்களோடு வரப்போவதை சொல்லி சென்றாள். அதைக் கேட்ட ரகு தலையில் கையை வைத்துக் கொண்டு வந்தனாவைப் பார்க்க அவள் இவனை பார்வையில் எரித்து நின்றாள்.


“ஒரே ஒரு படம். அதை தியேட்டர் போய் பார்க்க எவ்வளவு அக்கப்போரு! ரெண்டு நாளா மூனு பேரு சேர்ந்து பிளான் பண்ணி, அதை நாலாவதா ஒருத்தர் மூலமா ப்ரோசீட் செய்து, அது சக்சஸ் ஆகுமா.. ஆகாதான்னு நொடிக்கு நொடி திக்கு திக்குன்னு காத்திருந்து கடைசியில எல்லாம் ஊத்தி முடியாச்சா?” என கடுப்படித்தவளை ஆயாசமாய் பார்த்தவன், “அதுக்குள்ள நீ இப்படி முடிவு பண்ணிடாத வந்து!இன்னைக்கு கண்டிப்பா நாம படம் பார்க்க போறோம்” என்று என சொல்லிக் கொண்டே அவளின் கைகளை பிடித்தான்.

அதை உதறியவள்,”அப்படியா... அப்ப போய் மொத்த குடும்பத்தையும் கிளம்ப சொல்லுங்க. தியேட்டர் முழுக்க நாமளே புக் பண்ணிடலாம். வீட்டிலிருக்கிற முறுக்கு, தட்டை எல்லாம் நான் போய் பாக் பண்றேன். நீங்க போய் ஒரு லாரி புக் பண்ணுங்க எல்லோரும் சேர்ந்து போகலாம்” என நையாண்டி பேசவும் அதுவரை பொறுமையாய் இருந்த ரகு,


“கூட்டுக் குடும்பத்துக்கு என்று சில முறைகள் இருக்கு. எல்லோரையும் அனுசரித்து போனால் தான் இங்கே எல்லாம் நல்லவிதமாக அமையும். இது கட்டாயமில்ல. அன்பினால கட்டப்பட்டது. இங்க நீ வந்து வருஷம் பல ஆனபோதும் இதை இன்னும் நீ புரிஞ்சுக்கலையே...” என்றான் சுதியேறிய குரலில்.


அப்போதும் அடங்காதவள்,”இன்னும் பல வருஷம் ஆனாலும் உங்க கூட்டு குடும்ப சித்தாந்தத்தை நான் எப்பவும் புரிஞ்சிக்க போறதில்லை.அதனால எனக்கு லெச்சர் கொடுக்கறதை விட்டுட்டு வேற வேலையை பாருங்க.நான் இன்னைக்கு எப்படியும் தல படத்தை பார்த்தே தீருவேன். உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் தரேன். அதுக்குள்ள என்கூட நீங்க வரலன்னா... எங்க கம்பனியில இருந்து அவசரமா கால் வந்ததுன்னு உங்க அண்ணிக்கிட்ட சொல்லிட்டு நான் போயிட்டேன் இருப்பேன்.ஜெயில்ல கூட பரோல் ஈஸியா கிடைச்சிடும் போல. இந்த வீட்டில் இருந்து வெளியே போறதுக்குள்ள எத்தனை பேருகிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு நிக்கனும். அப்பா... சாமி! முடியல” என்றவள் கட்டிலில் சட்டமாக அமர்ந்துக் கொண்டு போனை பார்க்க ஆரம்பித்தாள்.


அந்த வீட்டில் வைதேகியை தவிர மற்ற மருமகள்கள் இருவரும் தாங்கள் படித்த படிப்பை வீணடிக்காமல் அவரவருக்கு தெரிந்த துறையில் பணி செய்தனர். வந்தனா அவளின் தந்தையின் கட்டுமான தொழிலிலும், சஞ்சு தங்களின் கடைகளுக்கு நகைகளை வடிவமைத்து தரும் பணியிலும் பங்கெடுத்தனர்.


மனைவியின் மிரட்டலில் முழி பிதுங்கி நின்ற ரகு, வழக்கம் போல தன் தம்பியை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற அழைத்தான். அவனின் கைபேசி தொடர்ந்து பிசியாக இருக்கவே அடுத்து என்ன என்று கதிகலங்கிப் போய் நின்றான்.

“என்ன மாம்ஸ்! உங்க க்ரைம் பாட்னர் படத்துக்கு போறாங்க போல! ஏற்பாடு எல்லாம் தாங்கள் தானோ?” என்ற கிண்டல் குரலில் அதிர்ந்தவன், “உனக்கு எப்படிடி தெரியும்?” என்றான்.

“உன்னை நான் அறிவேன்... என்னையன்றி யாரறிவார்...” என அவள் பாட்டாகவே படிக்கவும்,எப்போதும் போல இப்போதும் அவளை ‘எமகாதகி’ என செல்லமாக மனதினுள் வைத்தவன், “என் சஞ்சுகுட்டி எப்படி இருக்காங்க? என் புஜ்ஜிகுட்டி எப்படி இருக்காங்க?” எனக் கொஞ்சினான்.

மூன்றுமாதக் கருவை சுமந்துக் கொண்டிருக்கும் சஞ்சனா, தன் வயிற்றை ஆசையாக தாவிக்கொண்டு,“உங்க ரெண்டு குட்டிங்களும் நல்லா இருக்காங்க. ஆனா... ரகு மாமாதான் இப்போ நல்லாவே இல்லை” என தொடங்கியவள் இங்கு வீட்டில் நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.அதைக் கேட்டவன், ‘இந்த பாக்கி அக்காவை ஏன்தான் உள்ளூருல கல்யாணம் பண்ணிதந்தாங்கன்னு ஒரு நாளைக்கு ஒம்பது தடவை பீல் பண்ணவச்சிடுது!’ என எரிச்சலாக நினைத்தவன், சஞ்சுவிடம் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி, தான் இப்போது சொல்வதை அப்படியே பாக்கியிடம் போய் சொல் என்று ஒன்றை சொன்னான்.


வந்தனா கொடுத்த பத்து நிமிடங்கள் முடிந்திருக்க அவள் கட்டிலை விட்டு எழவும் அவர்களின் அறைக்கதவு மீண்டும் தட்டப்பட்டது.அதைக் கண்டு ‘இப்போது என்ன வந்திருக்கிறதோ... என அரண்டுப்போன ரகு கதவை திறக்காமல் நின்ற இடத்திலேயே நிற்க,அவனை அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வந்தனா கதவை திறந்தாள்.


மீண்டும் அங்கே பாக்கிதான் நின்றுக் கொண்டிருந்தாள். தன முன்னே நிற்கும் வந்தனாவை ஒரு பொருட்டாய் பார்க்காது, அவளின் பின்னே பாத்து,”ரகு... நான் உன்கூட வரல. நீங்க எனக்காக வெயிட் பண்ணாம சீக்கிரமா கிளம்புங்க.நான் புதுசா திறந்திருக்கும் மாலுக்கு போகப் போறேன். இப்போதான் சதீஷ் போன் செய்தான். அவனோட பிரெண்ட் வினோ இருக்கான்ல... அந்த மால்ல கடை திறந்திருக்கானாம். என்னை கண்டிப்பா அவன் கடைக்கு வர சொன்னானாம்.இருக்காத பின்ன! சின்ன வயசுல இருந்தே அக்கா அக்கான்னு என்பின்னாடியே சுத்துவான்.அவன் அவ்வளவு ஆசையா கூப்பிடும்போது நான் போகலைன்னா நல்லாவா இருக்கும் சொல்லு? அதான் நான் பிள்ளைங்க எல்லோரையும் கூட்டிட்டு அங்க போகப்போறேன். எல்லாத்தையும் ரெடி செய்து, நாங்க கிளம்ப நேரம் எடுக்கும்.அதனால நீ வெரசா வந்தனாவோட புறப்படு” என பொரிந்து தள்ளியவள் அவசரமாக அங்கிருந்து சென்றாள்.


அதுவரை அவளையே அமைதியாக பார்த்துக்கொண்டு நின்றிந்த வந்தனா, அவள் சென்றதும் கதவடைத்து,”ஷப்பா... இன்னைக்கு நடந்த சம்பவங்கள் திரில்லர் படத்தை மிஞ்சிடும்.வாங்க... அடுத்து யாரும் வந்து குட்டைய குழப்பறத்துகுள்ள சீக்கிரமா ஓடிடலாம் வாங்க. போவோமா... போகமாட்டோமா... யோசிச்சு, யோசிச்சு அட்லாஸ்ட்.... நாம தலைய பார்க்க போகப்போறோம்.... ஹேய்...” எனக் கத்தினாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 4


அடுத்த வாரம் எந்தவித குழப்பங்களும் இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது. பாக்கி சஞ்சனா பேசியதை மனதில் வைத்துக் கொண்டு அந்த வாரம் வீட்டிற்கு வராமல் இருந்தாள். அவளது கணவனுக்கு அது உலக அதிசயமாக தெரிந்தது.


என்னாவாயிற்று இவளுக்கு? ஊரில்லாத அதிசயமாக அம்மா வீட்டிற்கு போகாமல் இங்கேயே இருக்கிறாளே என்று எண்ணினானே தவிர அவளிடம் வாய் விட்டு கேட்கவில்லை. அவள் தங்கள் வீட்டில் இருப்பதை மனதிற்குள்ளேயே ரசித்தான்.


வைதேகிக்கு தான் சிறு உறுத்தல் எழுந்தது. சஞ்சனா பேசியதால் தான் பாக்கி வராமல் இருந்து விட்டாளோ என்றெண்ணி புழுங்கிக் கொண்டிருந்தாள். வசந்தியும் மகளை காணாமல் வைதேகியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.


அந்நேரம் அங்கே வந்த சஞ்சனாவை சமயலறைக்கு அழைத்துச் சென்று “பாரு சஞ்சு! நீ பேசியதில் பாக்கி இந்த வாரம் வரவே இல்லை” என்றார் குற்றம் சாட்டும் குரலில்.


அவரை அதிசயமாக பார்த்த சஞ்சு “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே” என்றாள்.


என்னவென்று புரியாமல் “கேளு சஞ்சு” என்றார்.


“நீங்க கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்ததில் இருந்து எத்தனை தடவை உங்க வீட்டுக்கு போயிட்டு வந்திருப்பீங்க?” என்றாள்.


என்ன இது சம்மந்தம் இல்லாத கேள்வி என்கிற யோசனையுடன் “வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ போயிட்டு வருவேன்” என்றார்.


அவரை பார்த்து சிரித்தவள் “பாக்கி அக்கா மாசத்துக்கு நாலு முறை இங்கே வருவாங்க. முக்கியமா சொல்லனும்னா மாசத்துல பாதி நாள் இங்கே தான் இருப்பாங்க” என்றாள்.


“அது உள்ளூரில் இருக்கிறதுனால” என்று இழுத்தார்.


அவரை கூர்ந்து பார்த்தவள் “நீங்க உள்ளூரில் இருந்தா இப்படித்தான் உங்கம்மா வீட்டுக்கு போவீங்களா?” என்றாள்.


பேச்சு போகும் திசையை உணர்ந்து கொண்டவர் “இதென்ன பேச்சு சஞ்சு. ஏற்கனவே நீ சொன்னதில் தான் அவ வரலேன்னு மனசு கஷ்டமா இருக்கு” என்றார் கண்டிப்புடன்.


“எங்க அண்ணனுக்கும் வாழ்க்கை இருக்கு. அதை அவங்க புரிஞ்சுக்க நீங்களும் உதவனும்” என்றாள்.


அதைக் கேட்டதும் சட்டென்று வாயை மூடிக் கொண்டார். அதோடு வசந்தியும் வந்துவிட, அந்த பேச்சை விட்டுவிட்டு மற்ற வேலைகளை தொடர்ந்தனர்.


காலை சாப்பாட்டு வேலை நடக்க, ஒவ்வொருவராக சாப்பிட வந்தனர். வந்தனாவும் மற்றவர்களுடன் இணைந்து வேலையைப் பார்க்க, சாப்பாட்டு மேஜை கலகலவென்று ஆனது.


ராஜாராமன் குளித்து முடித்து பக்தி பழமாக மேஜையில் வந்து அமர, ரகுவும் சதீஷும் அவர் அருகில் வந்து பவ்யமாக அமர்ந்தனர்.


பெரியவர் வேலையைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு பதிலளித்துக் கொண்டே சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்தான் ரகு. அதை கவனித்துக் கொண்டிருந்த வந்தனாவிற்கு உள்ளுக்குள் எரிச்சல் வந்தது. தான் ஒரு நாள் ஆசையாக சமைத்தாலும் இப்படி சாப்பிடாதவன் அண்ணி கையால் சமைத்த உணவை மூக்குப் பிடிக்க சாப்பிடுவதை கண்டு கடுப்பானாள்.


உணவருந்திக் கொண்டே தோழியின் முகத்தை கவனித்த சதீஷுக்கு அண்ணனுக்கு ஆப்பு ரெடியாவது புரிந்தது. தன்னால் முடிந்த உதவியை அண்ணனுக்கு அளித்திட முடிவு செய்தவன் “என்ன அண்ணி அண்ணன் சாப்பிடுறதை அப்படி பார்க்குறீங்க?” என்றான் கிண்டலாக.


கணவன் மேலிருந்த கடுப்பில் சதீஷ் கேட்டதும் “உங்க அண்ணனுக்கு என் சமையலைத் தவிர, மற்றது எல்லாம் பிடிக்கும்” என்றாள்.


அவர்களின் பேச்சில் கவனத்தை திருப்பிய ராஜாராமன் சதீஷின் திருவிளையாடலை புரிந்து கொண்டார். மெல்லிய சிரிப்புடன் அவனிடம் “உன் தட்டை பார்த்து சாப்பிடு சதீஷ்” என்றார்.


ரகுவோ அவனை முறைத்து விட்டு மனைவியைப் பார்த்து “நல்லா இருக்கிறதை தானே நல்லா சாப்பிட முடியும்” என்று கூறி தன் தலையிலேயே தணலைக் கொட்டிக் கொண்டான்.


எல்லோர் முன்பும் அவன் அப்படி சொன்னதில் அதிர்ந்து போனவள் கண்கள் கலங்க வேகமாக அங்கிருந்து தங்கள் அறைக்கு ஓடினாள்.


வைதேஹி அவர்களின் பேச்சில் கடுப்பாகி “என்ன ரகு பண்ணி வச்சிருக்க! சதீஷ்! உனக்கேன் இந்த வேலை? பாவம் அவ அழுது கிட்டே போறா” என்று கடிந்து கொண்டார்.


சதீஷோ குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ரகுவும் அவள் அழுது கொண்டே சென்றதைப் பற்றி கவலைப்படாமல் சாப்பிட்டு முடித்து அண்ணனுடன் ஆபிஸ் செல்ல கிளம்பினான்.


அவனை வழிமறித்த வைதேஹி “ரகு! முதல்ல போய் அவளை சமாதானப்படுத்திட்டு அப்புறமா கிளம்பலாம்” என்றார் கண்டிப்புடன்.

ராஜாராமனும் அதை ஆமோதித்து “நீ பேசிட்டு வா ரகு. நானும் சதீஷும் கிளம்புறோம்” என்றார்.


அவர் சொன்னதும் வேறுவழியில்லாமல் தலையை ஆட்டியவன் தங்களது அறைக்குச் சென்றான். அண்ணனுடன் அவசரமாக வெளியேற முயன்ற சதீஷை நிறுத்திய வைதேஹி “இனிமே இது மாதிரி பேசாதே சதீஷ். நீ கிளப்பி விட்டுட்ட இப்போ ரகு தான் கஷ்டப்படுறான் பாரு” என்றார்.


வைதேஹியை பாவமாக பார்த்து “அண்ணி அண்ணனை முறைச்சிட்டே இருந்தாங்க அது தான் கேட்டேன்” என்றான்.


ராஜாராமன் அவனை திரும்பி பார்த்து “கணவன், மனைவி உறவுக்குள்ள நாம நுழையக் கூடாது சதீஷ். நமக்குன்னு எல்லைகள் இருக்கு” என்றவர் “வா போகலாம்” என்றார்.


அவர் சொன்னதை புரிந்து கொண்டவன் மௌனமாக அவரின் பின்னே சென்றான்.


வந்தனாவை சமாதானப்படுத்த அறைக்குள் சென்றவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. தன்னையே மனதிற்குள் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தான். உனக்கு வாயில வாஸ்து சரியில்லடா ரகு. அந்தப் பய தான் கிளப்பி விட்டானா உனக்கு எங்கே போச்சு அறிவு? என்று திட்டிக் கொண்டே “வந்து! வந்தும்மா” என்று குழைந்து கொண்டே கூப்பிட்டான்.


படுக்கையில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்தவளோ அவனது குரலைக் கேட்டவுடன் “வெளியே போ ரகு! பேசாதே! இருக்கிற கடுப்பில் எதையாவது எடுத்து அடிச்சிடுவேன்” என்றாள் கண்களை துடைத்தபடி.


அவள் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் பயந்தவன் அதை மறைத்துக் கொண்டு “வந்து செல்லம்...அதெல்லாம் சும்மா சொன்னதுடா...எனக்கு உன் சமையல் ரொம்ப பிடிக்கும் டா” என்றான் மெல்லிய குரலில்.


அவனை கடுமையாக முறைத்து “நானென்ன கேனையா? அங்கே எல்லோர் முன்னாடியும் நல்லா இருந்தா சாப்பிடுவேன்னு சொல்லிட்டு இங்கே வந்து ஐஸ் வைக்கிறியா?” என்றாள் கடுப்பாக.


மெல்ல அவளருகில் நெருங்கி “இல்லடா! அதெல்லாம் சதீஷுக்காக சொன்னது. உன்னை கலாய்ச்சா அவனுக்கு சந்தோஷம்” என்றவனை கேவலமாக ஒரு லுக் விட்டு “இப்படி சொல்ல வெட்கமா இல்ல?” என்றாள்.


மேலும் அருகில் நெருங்கியவன் சற்றே தைரியத்துடன் அவள் கைகளைப் பற்றி “சாரி டா! இனிமே இப்படி செய்ய மாட்டேன்” என்றான்.


அவன் சொல்லி முடிக்கவும் பக்கத்தில் வைத்திருந்த தண்ணி பாட்டிலை எடுத்து நடு மண்டையில் நச்சென்று வைத்தாள்.


அதை எதிர்பார்க்காதவன் ‘உஸ்’ என்று தலையைப் பிடித்துக் கொண்டு “ராட்சசி! உன் கிட்ட பேச வந்த என்னை சொல்லணும்” என்று வலியில் முகத்தை சுளித்தான்.


“எல்லோர் முன்னாடியும் கேலி பண்ணிட்டு தனியா வந்து சமாதனப்படுதினா நான் தலையை ஆட்டிக்கிட்டு ஒத்துக்குவேன்னு நினைச்சியா. இனிமே தான் உனக்கு இருக்கு. மதியத்துல இருந்து இன்னும் ஒரு வாரத்துக்கு என் கையால சமைச்ச சாப்பாடு தான். அண்ணி சமைச்சதை நீ சாப்பிடக் கூடாது” என்றாள்.


அதுவரை இதை பெரிய பிரச்சனையாக கருதாத ரகு மனதிற்குள் அலறி விட்டான். ஓரிரு நாட்களே தாங்க முடியாத சமையலை ஒரு வாரம் சாப்பிடுவதா? சதீஷை தாளித்து எடுத்தான். இவனால தான் எல்லாம். அவ முகத்தை எப்படி வச்சிருந்தா என்ன? இப்போ என்னை கோர்த்து விட்டு அவன் நிம்மதியா கிளம்பிட்டான் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.


அவளோ “சரி சரி கிளம்புங்க...நான் மதியம் சமைச்சு அனுப்புறேன்” என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.


சதீஷின் மீது கொலைவெறியோடு கடைக்குச் சென்றான். போகும் வழியில் இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று பலவாறு யோசித்துக் கொண்டே சென்றான். இறுதியில் அருமையான தீர்வு கிடைத்தது.


சதீஷோ கடைக்கு வந்ததும் ரகு தன்னிடம் எகிருவான் என்று எதிர்பார்த்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான். அவன் இஷ்டத்திற்கு விட்டுப் பிடித்த ரகு மதியம் உணவு வந்ததும் வந்தனா தனக்காக ஸ்பெஷலாக கொடுத்தனுப்பியதை சதீஷிற்கு எடுத்து வைத்து விட்டு காத்திருந்தான்.


மதிய உணவிற்காக உற்சாகமாக வந்தவன் ரகு தனக்காக காத்திருப்பதை கண்டதும் அமைதியாக வந்தமர்ந்தான்.


வைதேஹி கொடுத்தனுப்பியதை தனக்கும் ரகுவிற்கும் எடுத்து வைத்துக் கொண்டு வந்தனா கொடுத்தனுப்பியதை அவன் புறம் நகர்த்தி வைத்தான்.


“என்னதிது”


தம்பியை நக்கலாக பார்த்து “என் பொண்டாட்டி சமைச்சு அனுப்பி இருக்கா. இன்னும் ஒரு வாரத்திற்கு உனக்கு அவ அனுப்புற சாப்பாடு தான்” என்றான்.


ரகுவை பார்த்து முறைத்தவன் வைதேஹி கொடுத்தனுப்பியதை தன் பக்கம் இழுக்க முயல “உங்க பொண்டாட்டி அனுப்பியதை நீங்க தான் சாப்பிடனும். நான் ஏன் சாப்பிடனும்” என்றான்.


இருவரின் போராட்டத்தையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த ராஜாராமன் “என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?” என்றார்.


“அண்ணா நீங்களே சொல்லுங்க நியாயத்தை? காலையில அண்ணன் அண்ணியை பேசினது தப்பு. அதுக்கு அவங்க தண்டனை கொடுத்திருக்காங்க. அதனால அதை சாப்பிட வேண்டியது அண்ணன் தானே?” என்றான் சதீஷ்.


இருவரையும் மாறி மாறி பார்த்தவர் “எதுக்கு இப்போ அடிச்சுகிறீங்க? அதை கொடுங்க நானே சாப்பிடுறேன்” என்று கையை நீட்டினார்.


அதில் இருவரும் பயந்து போய் “வேண்டாம் அண்ணா...நாங்களே பார்த்துக்கிறோம்” என்றனர்.


அவர் மௌனமாக தட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார். அதற்கு மேலும் பிரச்னையை பெரிது செய்யாது ரகு வந்தனா கொடுத்தனுப்பிய உணவை எடுத்து வைத்து சாப்பிட முயன்றான்.


அவன் மேல் இருந்த கடுப்பில் உப்பு தூக்கலாகவும், காரம் தூக்கலாகவும் போட்டு அனுப்பி இருந்தாள். அதை இருவரிடமும் காட்டிக் கொள்ளாது கஷ்டப்பட்டு உண்டு முடித்தவன் அவசரமாக வாஷ் ரூம்மிற்கு சென்று தண்ணீர் அடித்து வாயைக் கழுவிக் கொண்டான்.


‘பாவி! பாவி! நல்லா வச்சு செஞ்சிட்டா’ என்று திட்டிக் கொண்டே வெளியேறினான்.


அவனுடைய மனது வேலையில் மூழ்க விடாமல் மதியம் சாப்பிட்டதையே எண்ணி அலறிக் கொண்டிருந்தது. இரவிற்கும் இப்படியே சாப்பிட வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்குள் தனது நிலை என்ன என்று பயந்து போனான்.


அவனது மூளை கடுமையாக யோசிக்க ஆரம்பித்தது. எப்படியாவது இரவு வேறு வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.


மாலை வேலை முடிந்து ராஜாராமனும், சதீஷும் கிளம்ப “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க ரெண்டு பேரும் போங்க” என்று கூறி அனுப்பி வைத்தான்.


அவர்கள் சென்றதும் அவசரமாக கிளம்பியவன் நேரே சென்றது ஒரு நல்ல ஹோட்டலுக்கு. செம பசியில் இருந்தவன் பல் வேறு விதமான ஐட்டங்களை ஆர்டர் செய்தது சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டான்.


சுமார் எட்டு மணியளவில் வீட்டிற்கு சென்றவன் குளித்து முடித்து வந்தவன் “எனக்கு வயிறு கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு. நைட் சாப்பாடு வேண்டாம்” என்று கூறினான்.


வந்தனாவோ மதியம் தான் அனுப்பியதை சாப்பிட்டு தான் அவனுக்கு இப்படி இருக்கிறது என்றெண்ணி மகிழ்ந்து போய் ‘மவனே! என்னை காலாய்க்கிரப்ப நல்லா இருந்தது இல்ல. இப்போ அனுபவி’ என்றெண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.


அவனோ நன்றாக உண்ட களைப்பில் படுத்து விட்டான்.


வந்தனா வருவதற்குள் மதியம் நடந்ததை வைதேஹியிடம் போட்டுக் கொடுத்திருந்தான் சதீஷ். அதில் வந்தனா மேல் கோபத்தோடு இருந்த வைதேஹி அவள் வந்ததும் “ரகு எங்க வந்தனா?” என்றார்.


“அவங்களுக்கு வயிறு என்னவோ பண்ணுதாம் அக்கா. அதனால படுதுட்ட்டாங்க” என்றாள்.


அவளை முறைத்த வைதேஹி “மதியம் என்ன செஞ்சு கொடுத்த?” என்றார்.


அவர் கேட்டதும் பயத்துடன் கையைப் பிசைந்தவள் “நல்லா தான் செஞ்சு கொடுத்தேன் அக்கா” என்றாள்.


அவளை முறைத்தவர் “இங்கே பார் வந்தனா! வீட்டு ஆம்பளைங்க நமக்காக உழைக்கிறாங்க. அவங்க வயிற்றை காயப் போடாம சத்தான உணவா கொடுக்கணும். அதை விட்டுட்டு நம்ம கோபதாபங்களை எல்லாம் அவங்க சாப்பாட்டில் காட்டக் கூடாது” என்றார்.


தான் செய்த தவறின் அளவை உணர்ந்தவள் தலையைக் குனிந்தபடி “சரிக்கா” என்றாள் குற்ற உணர்வுடன்.


அதன்பின் இரவு வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பியவள் அசந்து உறங்கும் ரகுவை பார்த்து மனதிற்குள் வருத்தம் எழுந்தது. மதியம் எப்படி அந்த காரமான உணவை சாப்பிட்டு கஷ்டப்பட்டானோ என்று வருந்தினாள்.


சதீஷோ சஞ்சனாவிடம் சிக்கி இருந்தான்.


“எதுக்கு காலையில ரகு அத்தானை மாட்டி விட்டீங்க?”


அவனோ அவளது கேள்வியில் கவனத்தை வைக்காமல் அவளுடன் இழைந்து கொண்டே “அடியே! காலையில இருந்து இப்போ தான் உன் கூட இருக்க டைம் கிடைச்சிருக்கு. இப்போ எதுக்கு அந்தப் பேச்சு” என்றான்.


அவனது கையில் ஒரு அடியைப் போட்டு “இன்னொரு தடவை இப்படியொரு வேலையைப் பார்த்தீங்க. வந்தனா அண்ணி மாதிரி நானும் மிளகாய் தூளை அள்ளிப் போட்டு சமைச்சு கொடுத்திடுவேன்” என்றாள்.


அதைக் கேட்டதும் ரகுவின் நிலையை எண்ணி அதிர்ச்சி அடைந்தவன் “அடபாவமே! அந்தப் பிசாசு இப்படியா பண்ணுச்சு” என்றான் தன்னை மறந்து.


அதைக் கேட்டவள் “என்ன இது! அண்ணியை பிசாசுன்னு சொல்றீங்க” என்று முறைத்தாள்.


அப்போது தான் வாய் விட்டு சொன்னதை எண்ணி விழித்தவன் “ஐயோ செல்லம்! உன்னை சொல்ற மாதிரி அவங்களை சொல்லிட்டேன்” என்று கூறி தலையில் கொட்டு வாங்கிக் கொண்டான்.
 
  • Love
Reactions: Chitra Balaji
Status
Not open for further replies.