பாடல்களும் நாமும்

sudharavi

Administrator
Staff member
#1
பாடல்களும் நானும்
இசையை ரசிக்காதவர் எவரும் இருக்க முடியுமா? நம்மைச் சுற்றி எழும் ஒலிகளை கொண்டது தான் நம் உலகம். ஒலிகள் இல்லாத உலகத்தை எண்ணிப் பார்க்கிறேன்...எங்கும் அமைதி...அமைதி...

அந்த அமைதியின் நடுவே நம் மனதை வருடிச் செல்லும் இசை எனும் ஒலி இருந்தால் எத்தனை ரசனையுடயதாக இருக்கும். எனது நாட்கள் இசையுடன் ஆரம்பித்து இசையிலேயே தான் முடிவடையும்.
மனதிலிருக்கும் எண்ணத்திற்கு தகுந்தவாறு என்னைச் சுற்றி பாடல்கள் ஒலிக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் குத்து பாடல்களும், அமைதியாக கதையை பற்றிய சிந்தனையில் இருக்கும் போது மெல்லிய உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடல்களும் ஒலிக்கும்.

என்னால் எல்லாவிதமான இசையை ரசிக்க முடியும் என்றாலும், இன்றைய பாடல்களை விட எண்பதுகளில், தொண்ணூறுகளில் வந்த பாடல்களே என் மனதிற்கு மிகவும் பிடித்தவை.
சொற்சுவை, பொருட்சுவை கொண்ட பாடல்கள் என்றால் கருப்பு வெள்ளை படங்களின் பாடல்கள் எனக்கு விருப்பமானவை.

எனது சிறுவயது முதல் நான் கேட்ட ரசித்த பாடல்களைப் பற்றி பார்க்கலாம். அந்தக் கால கட்டத்தில் ஒரு படம் வந்தவுடன் அதன் பாடல்கள் அடங்கிய பாட்டு புத்தகங்கள் தியேட்டர் வாசலிலேயே விற்கப்படும்.
அதை சேகரிப்பது ஒரு பொழுது போக்காகவே செய்வோம். அதிலிருக்கும் பாடல்களை மனனம் செய்து பாடுகிறோம் என்கிற பெயரில் ஒப்பிப்போம்.

பாட புத்தகங்களை பைண்ட் செய்கிறோமோ இல்லையோ இந்தப் பாட்டு புத்தகங்களை செய்து வைத்திருப்போம்.இப்படி பாடல்கள் மீது காதல் கொண்ட நான் கேட்ட பாடல்களை பார்க்கலாம்.

எனது தந்தைக்கு இனிமையான பாடல்களை கேட்பதிலும் அதை ரசித்து பாடுவதிலும் விருப்பம் உள்ளவர். அவர் மூலியமாக தான் எனக்கு நிறைய பாடல்களின் அறிமுகம் கிடைத்தது.

பாடல்: மாலை பொழுதின் மயக்கத்திலே
பாடல் இயற்றியவர் : கண்ணதாசன்
இடம் பெற்ற படம்: பாக்கியலட்சுமி
இசையமைப்பு : எம். எஸ். வி & டி. கே .ராமமூர்த்தி
பாடியவர் : சுசீலா
படம் வந்த வருடம்: 1952

இந்தப் பாடலை அடிக்கடி பாடி அதன் இசையில் என்னை மயங்க வைத்தவர் என் தந்தை. சுசீலா அம்மாவின் குரல் ஒவ்வொரு வரியிலும் இழைந்து நம்மை பாடலோடு கட்டிப் போடும்.

கண்ணதாசனின் வரிகள் படத்தின் கருவை கோடிட்டு காட்டியிருக்கும். ஒவ்வொரு வரியிலும் ஆயிரம் அர்த்தங்கள்.

இன்பம் சில நாள் துன்பம் பல நாள் என்றவர் யார் தோழி? வாழ்க்கையின் அர்த்தங்களை ஒரு வரியில் சொல்லக் கூடிய திறமை அவரிடம் உண்டு.
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
ஒரு படத்தின் அடிநாதத்தை பாடலில் கொண்டு வர முடியுமா? முடியும் என்றிருக்கிறார் கண்ணதாசன். இந்த ரெண்டு வரியிலேயே அப்படத்தின் கருவை தொட்டிருக்கிறார்.

அடுத்து தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்.. என்று அங்கு பாடுபவளின் நிலையை அழகாக எடுத்துரைக்கிறார்.
கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப எம். எஸ்.வி அவர்கள் உருக்கமான இசையை தந்து மனதை அசைத்துப் பார்த்திருப்பார்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி இரெண்டாம் வருடம் வந்த இந்தப் பாடலை பற்றிய ஒரு கூற்று நிலவுகிறது. இந்தப் பாடலில் ஒரு மென் சோகம் இழையோடும். இப்பாடலை ரிகார்ட் செய்து வைத்திருப்பவர்களுக்கோ, அலைப்பேசியில் வைத்த்திருப்பவர்களுக்கோ ஏதோவொரு நேரத்தில் விபத்து ஏற்படுகின்றது என்பது தான் அது.

இதை ஒரு பிரபல பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. அது உண்மையா என்றெல்லாம் தெரியாது. ஆனால் இரேண்டாயிரத்து ஏழாம் வருடம் என் குடும்பம் மிகப் பெரிய விபத்தொன்றில் சிக்கி மீண்டு வந்தோம். அப்போது எனது தந்தையின் அலைப்பேசியின் ரிங் டோனாக இந்தப் பாடல் வைக்கப்பட்டிருந்தது.

அந்த விபத்திற்கு பிறகே அந்தக் கட்டுரையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அந்தப் பாடலை எடுத்து விட்டோம். எப்பொழுதெல்லாம் கேட்க விருப்பமோ அப்போது நேரடியாக ஆன்லைனில் கேட்டுவிட்டு விட்டுவிடுவோம்.

இசையை விரும்புபவர்கள் நிச்சயம் கேட்க வேண்டிய ஒரு பாடல்...