பிஜிலியின் பிறப்பு

Kripnythaa

Moderator
Mar 26, 2018
453
130
63
இருளும், நிசப்தமும் நிறைந்திருந்த அவ்வறையில் குழுமியிருந்த எங்கள் அனைவரின் மனதிலும் நாளை யாரின் முறையோ, எவ்வித பிரச்சனைகளும் இன்றி அவர்கள் வெளியேற முடியுமோ? என்ற எண்ணமே ஆக்கிரமித்திருந்தது.

நொடியில் எங்களை மரணிக்கச் செய்திடுபவர்களின் கையில் சிக்கிடும் முன்னரே சித்திரவதைகளை சிந்தாமல் சிதறாமல் அனுபவிக்க வேண்டுமே என்ற துன்பம்
ஒருபுறமிருந்தாலும்,அதிலும் நீ பெரிதா? நான் பெரிதா? என்ற போட்டி மனப்பான்மை எங்களுக்குள்ளும் உண்டு. முக்கியமாக எனது அருகில் அமர்ந்திருக்கும் இந்த குண்டான உருவத்திற்கு என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் இகழ்ச்சி ஆன முறுவலே அதனிடம் தோன்றும்.

மற்றவர்களை விட உருவத்தில் சிறிதாக, சற்று சிவப்பு நிறத்துடன் மெலிந்த உருவமாக இருக்கும் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தததில் அவர்களுக்கு எல்லாம் பொறாமை இருந்தாலும் என்னுடைய உருவத்தை இகழ்ச்சியாக்கி பேசுவதில் ஒரு வித மன திருப்தியை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

எனக்கும் அவர்களை எல்லாம் விட்டு ஒதுங்கிச் செல்லதான் ஆசை. ஆனால் அதற்கான வழிதான் இப்பொழுது இல்லை. இன்னும் 10 மாதங்களுக்கு என்னை மரணிக்கச் செய்வதற்கான தகுதியுடன் உருவாக்குவார்கள். அதன் பின்னர்தான் ஒரு விலையை நிர்ணயித்து என்னை வாங்குபவர்களிடம் தருவார்கள். வாங்கியவர்கள் மிகவும் அலட்சியமாகவே என்னை உபயோகப்படுத்தி தூக்கி எறிவார்கள்.

அதில் என்னை உருவாக்குபவர்களும், நானும் பெற்ற வலிகளும் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டுவிடும். எங்களின் மரணத்தில் மகிழ்ச்சி அடைபவர்களுக்கு எங்களை உருவாக்குபவர்கள் பெறும் வலிகளும், வேதனைகளும் எள்ளளவும் தெரிவதும் இல்லை, புரிவதும் இல்லை.

அட உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கதவு திறக்கும் ஓசை என் காதில் விழுகின்றது. வந்துவிட்டான் எங்களை சிதைப்பதற்கு முன் சிற்பம் ஆக்கிடும் சிற்பி வந்துவிட்டான். வந்தவனின் பார்வை அனைத்து திக்கிலும் சுழல்கின்றது. சுழலும் அந்த கரு விழிகளில் அகப்பட போகும் அப்பாவி யாரோ?

அட! என்னது இது? ஐயோ! என்னை நோக்கிய அவனது கருவிழிகள் உறைந்துவிட்டன. அப்படின்னா இன்னிக்கி நான்தான் சிக்கினேனா? என்ன செய்றது? இருங்க என்னை படுத்தற பாடு எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்றேன்.

நான்தான் இன்னிக்கி சிக்கி இருக்கேன் அப்படிங்கறதை அவன் கூட வேலை பாக்குறவன்கிட்டயும் என் காதுல விழுகிற மாதிரியே சொல்றான். அவனும் அட இன்னிக்கு இந்த பிஜிலிதான் நம்மளை சவட்டி எடுக்கப் போகுதோ அப்படின்னு நொந்துட்டே எனக்கான அலங்காரப் பொருட்களை எடுக்கப் போறான். ஆமாங்க! இவ்வளவு நேரம் என்னுடைய பெயரை சொல்லாமல் வெறுமனே பேசிகிட்டு இருந்த நான் பிஜிலி!

இதோ என்னை அலங்கார படுத்துவதற்கு முன்னர் அவர்கள் வைத்திருக்கும் அளவில் நான் இருக்கிறேனா என்று சரிபார்த்து எனக்கான உள்ளாடையை வெட்டி எடுக்கிறார்கள். இந்த ஆடை சற்று குறுகலாகவே எனது உருவத்திற்கு ஏற்றவாறு உள்ளது.

இதற்கு மேலே வாசனை கலந்த பவுடர் பூசுகிறார்கள். பூசி முடிச்ச உடனே ஒரு வெள்ளைக் டிரஸ்ஸ மேல சுத்தி விட்டுட்டாங்க. இதுக்கடுத்தும் சிவப்பு கலர்ல இருக்கிற ஒரு மேலாடையை ஒட்டி விடுறாங்க. இதிலேயே எனக்கு அலுப்பாய் இருக்கு.இதோட ஏன் அலங்காரம் முடிஞ்சிருச்சுன்னு நினைக்காதீங்க. இனிதான் முக்கியமான அலங்காரத்தை ஆரம்பிப்பாங்க.

அட மீதி முடிச்சுட்டு போங்கடா! எங்க போறீங்க? பாதி அலங்காரத்தில் என்னை உட்கார வச்சுட்டு சாப்பிட போறாங்க. சாப்பிடறதுக்கு முன்னாடி கையை எப்படி தேச்சு தேச்சு கழுவினாலும் எனக்கு மேக்கப்க்கு போட்ட அந்தப் பவுடர் இன்னும் அவங்க கையில அப்படியே ஒட்டிக்கிட்டு இருக்கு.

அந்தப் பவுடர் கெடுதின்னு தெரிஞ்சாலும் அதோட சாப்பிடறாங்க. ஐயோ! பாவம் இது உள்ளுக்குள்ள போயி என்னென்ன பண்ணுமோ? அவங்களுக்காக என்னால வருத்தப்பட மட்டும்தான் முடியுமே தவிர அறிவுரை சொல்ல முடியாது. அந்த சாப்பாட்டுக்காகதானே என்னை மாதிரி ஜென்மங்களையும் அவங்க உருவாக்க வேண்டியதா இருக்கு.

என்னோட சிற்பிகள் சாப்பிட்டு முடிச்சிட்டு வந்துட்டாங்க. இவங்க மீதி மேக்கப் செஞ்சி முடிக்கிற வரைக்கும் நான் பொறுமையா உக்காந்து இருக்கணும். என்னோட இஷ்டத்துக்கு ஆடவோ அசையவே முடியாது. அவங்க திருப்பினால் திரும்பனும். உருட்டி விட்டா உருண்டு உருண்டு போகணும். எந்திரிச்சு நிக்க வச்சா நிக்கணும். என்ன கொடுமை இது?

எனக்கு போட்டுவிட்ட டிரஸ்குள்ள மண்ணை அள்ளி கொட்டிட்டாங்க. அதுவும் ஒரு அளவுக்குதான். இல்லைனா ரொம்ப ஊதிப் போய் தெரிவேன். ஒருத்தர் மேக்கப் செஞ்சுகிட்டு இருக்கும்போதே இன்னொருத்தர் வெளியே எட்டிப் பார்த்தார்.மழை வரும் போல இருக்கு என்ற அவரின் வார்த்தைகளில் எனக்குள்ள லேசா வெடவெடப்பு வந்துருச்சு.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
453
130
63
ஐயா! வருண பகவானே இன்னிக்கு ஒரு நாளைக்கு வராதீங்க. இந்த மேக்கப்போட கொஞ்சம் வெயில்ல நின்னாதான் நான் எல்லாத்தையும் தாங்குவேனா அப்படின்னு உறுதி செய்ய முடியும். இன்னிக்கு மழை பெஞ்சா நாளைக்கு வரைக்கும் இதே மேக்கப்போட இந்த இருட்டு அறையில் நான் அடைஞ்சு கெடக்கணும். இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு மழை வரலைன்னு உறுதிப்படுத்திட்டு என்னை வெயிலுல நிற்க வெச்சுட்டாங்க.

அப்பாடி முதல்கட்ட மேக்கப்பில் பாஸாயிட்டேன்.அடுத்து கலர் கலரா பவுடரை பூசி விட்டுட்டாங்க. ஒவ்வொரு பவுடரும் பூசுறதுக்கு முன்னாடி அளவெடுத்து பூசுவாங்க. கொஞ்சம் கூடி போனாலும் பின்னாடி நடக்கிற சேதத்துக்கு யாருமே தப்ப முடியாது. ரெண்டு கலர பூசி முடிச்ச உடனே இது என்ன கடைசியா பூசுறது உப்பு மாதிரியே இருக்கு. டேய் கொஞ்சம் மெதுவாப் பூசுங்க எறியுது. என்னதான் நான் திட்டினாலும் அதெல்லாம் என்னோட மனசுக்குள்ள மட்டும்தான் வச்சுக்க முடியும். ஒவ்வொரு வேலையும் முடிஞ்சது வெயிலுல நிக்க வச்சு நான் பாஸாகுறேனா இல்லை தேறாமல் போறேனான்னு முடிவு பண்ணிட்டாங்க.

இதுக்கு அடுத்துதான் என்னோட கடைசி கட்ட அலங்காரம் ஆரம்பிக்கப் போகுது.எனக்குள்ள ஒரு நூலை நுழைச்சுடுவாங்க. இந்த நூலையும் நிறைய கலர் பொடியை கலந்து காயவச்சுதான் விடுவாங்க. இது ஆடாம அசையாம நான் பாத்துக்கணும். அட முழுசா ரெடியாயிட்டேன்.

என்னை இந்த மேக்கப்பில் பார்க்கிறவங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அதனாலதான் உருவத்தில் சின்னதா இருந்தாலும் எல்லாருக்குமே என்னை ரொம்ப பிடிக்குது. நான் மட்டும் இந்த இருட்டு அறை விட்டு வெளியேறப் போறது கிடையாது. என்னை மாதிரியே மொத்தமா 50 பேருக்கு மேக்கப் போட்டு விடுவாங்க. முடிச்சதும் பத்து பத்து பேராக சேர்த்து எங்களுக்கான அறையில பூட்டிடுவாங்க.

கத்தினாலும், கதறினாலும் எங்களால வெளியேற முடியாது. எங்களை இவ்வளவு கஷ்டப்பட்டு அழகா சிற்பம் ஆக்குற இவர்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும்ன்னு நினைக்கிறீங்க? ஒண்ணுமே இல்லை... கைக்கும் வாய்க்கும் எட்டாத சம்பளம்தான். ஆனால் தொழில் மாத்திக்க முடியாமல் எங்களைப் பிடிச்சு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்காங்க.

அவங்களோட வருத்தத்தை தாங்க முடியாமல் சில நேரம் எங்களுக்கும் அளவுக்கதிகமான விரக்தி ஏற்பட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் வாழுறாங்க அப்படின்னு நாங்க எல்லாரும் ஒண்ணு கூடி எங்களை எரிச்சிக்கிறப்ப அவங்களையும் சேர்த்து சாகடிக்கிறோம். இதோ நாங்க வெளியேற வேண்டிய நேரம் வந்துடுச்சு.

உங்களுடைய பிஜிலியான நான் என்னோட பிறப்புனு சொல்லி இறப்பைப் பத்தி உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துருச்சு. இதோ என்னை கையில எடுத்துட்டான். அந்த நூல் லைட்டா சாஞ்சி இருந்ததை அவனோட ஒரு விரலாலே நிமிண்டி விடுறான். வேண்டாமே இந்த கஷ்டம் எனக்கு வேண்டாமே அப்படின்னு நான் கதறிட்டு இருக்கறப்பவே கையில வச்சிருந்த பத்தியால என் மேலிருந்த நூலில் நெருப்பை வச்சு என்னை இந்த உலகத்தில் இருந்தே என் உடம்பிலிருந்து வெடிச்ச சத்தத்தோட தீபாவளியைக் கொண்டாடுறேன்னு அனுப்பி வச்சுட்டான்.

நரகாசுரன் செத்ததோட எங்களையும், எங்களை உருவாக்குறவங்களையும் சேர்த்து ஒவ்வொரு வருஷமும் சாகடிக்கிறது எந்த விதத்தில் நியாயம் அப்படின்னு தெரியலையே! பிஜிலி வெடியான என்னோட கதையை கேட்ட நீங்க பெரிய பெரிய வெடிகளால் இன்னும் எவ்வளவு கஷ்டம் இருக்கும் அப்படின்னு யோசிச்சுக்கோங்க.

காற்று மாசுபாடு, சத்தத்தோட மாசுபாடு இதெல்லாம் யோசிக்கறப்ப பத்து மாசம் பாடுபட்டு வயிறுக்கு பத்தாத பழங்கஞ்சி குடிச்சு வாழ்பவர்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. இந்த பிஜிலியின் பிறப்பும் பத்து மாதங்களே! 10 மாதங்களில் பிறந்து பத்து நொடியில் பரலோகம் அடையும் பிஜிலி பை பை பை கூறி விடைபெறுகின்றேன்.

அன்புடன்
தீபி