மதுராவின் மதுரமான கவிதைகள்

sudharavi

Administrator
Staff member
#1
காற்றின் சுழலுக்குள்
சிக்கிய சிற்றிலையென
அலையும் நினைவுகள்...
இருளை விழுங்கத் துடிக்கும்
ஒளியும்
வெளிச்சத்தை வென்றிட
முயலும் இருளுமாய்
நகரும் நொடிகளுக்குள்
மயங்கித் தவிக்கும்
கால மயக்கத்தின்
கண்ணீர் பக்கங்களில்
கட்டுவிரியன்களும்
கொம்பேறி மூக்கன்களுமாக
மாறி கிடக்கும்
கொடூர நாவுகள்
விதைத்த விஷ வித்துகள்..
காலம் காலமாய்
நச்சுக்கனிகளை உண்டு
பிரசவித்த நிர்மூலங்கள்
உடலைத் தாண்டிய
பரிசுத்த உள்ளங்களை
எங்கனம் தரிசிக்கக் கூடும்?
முள்வனத்தில்
நெடும்பயனமெனில்
காயங்களுக்கோ
பலிகளுக்கோ அஞ்சியொன்றும்
ஆகப் போவதுமில்லை..
பொத்தி வளர்க்கும்
தீப்பிழம்பொன்றைத்
தோள்கொடுக்கும் தோழமையாக்கி
தீக்குளிக்கட்டும் அன்னையர்

உலகம்..
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#2
நவீனத் தாலாட்டு
*******************
ஆராரோ ஆரிரரோ
அசங்காம தூங்கு கண்ணே..

வீட்டு வேலையெல்லாம் வெரசா முடிச்சுபுட்டு
நாட்டுநடப்பை ஃபேஸ்புக்கில் நானறிய வரும்போது
சட்டுனு நீயழுது சங்கடத்தை தாராதே
போட்ட கமெண்ட்டொண்ணு பாதியிலே நிக்குதடா..

சீக்கிரமா தூங்கிடுநீ செல்பி எடுத்துக்கலாம்
உக்கிரமா உன்பாட்டி என்னை முறைக்குமுன்னே...
அத்தை பார்த்துபுட்டு அழகுனு கமெண்டிடுவா..
சித்தப்பா சிரிச்சிடுவார் ஸ்மைலி போட்டபடி..

ஏனிந்த வேலையினு எரிஞ்சு விழுந்தாலும்
போனிலே ஷேர்பண்ணி பீத்திக்குவார் உன்அப்பா..
நட்புக் கூட்டம் லைக்கிட்டு நிறைச்சுடுமே
அட்டகாசப் பின்னூட்டம் ஆயிரத்தைத் தொட்டிடுமே..

காலத்தில் தூங்கிடடா கண்மணியே இப்போது
காலக்கோட்டில் புரைபைல் படம் மாத்தணுமே.
அடம் பிடிச்சு அழுவாதே அப்புறம்
படம் பிடிச்சு போட்டிடுவேன் வாட்சப்பில்....

ஆராரோ ஆரிரரோ
அசங்காம தூங்கு கண்ணே..
 

sudharavi

Administrator
Staff member
#3
#சிற்றிலக்கிய_வரிசை
#இருபா_இருபஃது
காப்பு
சிந்தை நிறைக்கும் சிவனவன் தேவியே
உந்த னருளால் உனைப்பாட - விந்தையாய்த்
தந்தை வெறுத்திட்ட தட்சன் மகளேநீ
தந்திடுவாய் இன்பத் தமிழ்.

வெண்பா...1
தமிழால் வணங்கிடத் தாயே வருவாய்
அமிழ்தாய் இனித்தே யருள்வாய் - குமிழாய்
அமிழ்ந்த நினைவுகள் அன்னையே தங்கச்
சிமிழாய் நிறைத்தாய் சிறப்பு.

அகவல்...2
சிறந்த தலத்தின் சீர்மிகு நாயகி
அறத்தின் வழிநின் றாட்சி புரியும்
புன்னை நல்லூர் புண்ணிய தலத்தின்
அன்னையே தேவி அதிசய மாரியே..
 

sudharavi

Administrator
Staff member
#4
வெண்பா....3
மாரியே எங்கள் மகமாயி வாழ்வளிக்க
ஏரிக் கரையோரம் ஏற்றமாய் - பூரித்துப்
பாரினில் மேன்மை பகிர்ந்தளிக்க வந்தவளே
தேரினில் வந்தருள் தா.

அகவல்.....4
தாவெனக் கேட்டபின் தயக்கமேன் தாயே
வாவென அழைத்திட வாராயோ நிலவை
பட்டருக்குக் காண்பித்த பாவையே பராசக்தி
இட்டமுட னருள்புரி ஏகௌரி அம்மையே..

வெண்பா....5
அம்மையே ஆதியே ஆயிரங் கண்ணுடையாள்
செம்மையாய்ப் பூமி செழித்திட - இம்மையில்
அம்பாளே காத்து அரவணைப்பாய் கண்ணபுர
செம்மலர் மாலையிலே சேர்.

அகவல்.......6
சேர்ந்த இடத்தின் சிறப்பைப் பேசும்
ஊரின் எல்லையில் உமையே காக்கப்
பெரிய பாளையத்துப் பேரழகுத் தாயே
அரிதாம் காட்சி அன்னையின் அருளே..
 

sudharavi

Administrator
Staff member
#5
வெண்பா......7
அருளைப் பொழிந்தே அகிலத்தைக் காக்கும்
இருளை யகற்றும் இடவி - திருவே
தருவா யுடனே தடங்கண்ணித் தாயே
விரும்பும் வரத்தை விரைந்து.

அகவல்.....8
விரைந்தே வந்து வேதனை தீர்க்கும்
கரைந்தே யழுதால் கவலை நீக்கும்
மாங்காட் டுறையும் மங்கலக் காமாட்சி
பாங்கா யருள்வாய் பலனைத் தாயே.

வெண்பா....9
தாயா யெழுந்து தரணியை ஆண்டவளே
மாயா உலகத்தின் மாதரசி - ஓயாமல்
வாயா லுனைப்பாட வந்திடுவாய் மீனாட்சி
பாயாதோ நின்கருணை பார்.

அகவல்....10
பாரெலாம் சிறக்கப் பார்வதி வருவாயே
ஊரெலாம் செழித்திட உண்ணாமுலை யாளே
விவசாயி மனங்குளிர வேதனை தீர்த்தே
அவசர மழைபொழிந் தாதரித் தருள்வாயே
 

sudharavi

Administrator
Staff member
#6
வெண்பா....11
வாராயோ சிங்கமுக வாகனத்தில் பத்ரகாளி
தாராயோ நெஞ்சினிக்கத் தஞ்சமது - பாராத
ஊராகிப் பாழானேன்: உன்னருளால் என்னுயிரை
நேராக்கித் தந்திடுவாய் நீ.

அகவல்.....12
நீதானே எங்குலத்தை நேசமாய்க் காக்கவந்த
தோதான மலையரசி தொழு கின்றேன்
திருவேற் காட்டுறை திரிபுர சுந்தரியே
அருள்வாய் கருணை அங்கயற் கண்ணியே.

வெண்பா....13
கண்ணிமை போலவே காத்திடும் கற்பகமே
பெண்ணே மயிலையின் பேரருளே - மண்ணாளும்
வெண்ணீறன் தேவியே வெட்காளி யம்மாநீ
விண்ணுலகம் போற்றும் வியந்து..

அகவல்....14
வியந்தே அழைத்திட விரைந்தே வருவாய்
நயந்தே நின்றிட நலம்பல அருள்வாய்
காசி் விசாலாட்சி கண்திறந்து பாராய்
ஆசி யருளி அகமகிழ செய்வாயே.!
 

sudharavi

Administrator
Staff member
#7
வெண்பா.....15
செய்யுந் தொழிலினைச் செம்மையா யாக்கிட
உய்யும் உயிரை உலகம்மை - தொய்வின்றி
மெய்யினைக் கண்டிட மேலூரின் நாயகி
உய்விப்பாய் நீயே உரை.

அகவல்.....16
உரைத்திடு உண்மையை உலகுக்கு உத்தமியே
கரையிலாப் பெருங்கருணைக் காட்சி யளித்திடு
பட்டீஸ்வர துர்க்கையே பாராளும் புவனேஸ்வரி
மட்டிலா சுகமளி மங்கையர்க் கரசியே ...

வெண்பா....17
அரசாளும் சக்தியே ஆதியந்த மில்லாச்
சிரமமர்ந்த தேவி சிவையே - வரமாய்
தரவேண்டும் முக்தி தயங்காமல் இங்கே
வரவேண்டும் அம்பிகையே வா.

அகவல்.....18
வந்திடுவாய் காத்திட வாராகி யம்மனே
மந்தையிலே ஆடென மதிமயங்கித் தவிக்கிறோம்..
கருகாவூர் நின்றிடும் கர்ப்பரட் சாம்பிகையே
கருவாய் உருவாக்கிக் காப்பாய் அன்னையே..

வெண்பா.....19
அன்னையே சோதிவடி வானவளே சங்கரி
அன்பினா லாட்சி அபிராமி - தன்னையே
முன்னிறுத்தி வானில் முழுநிலவாய் நின்றவளே
மின்னலென வந்திடு மீள்.

அகவல்.....20
மீளுமோ இவ்வுலகு மீனாட்சி உன்னருளால்
நாளும் பாடட்டும் நாவுகள் உன்புகழைத்
தேங்காமல் தமிழைத் தெளிவாய்த் தந்திட்டால்
நீங்காமல் என்றும் நிறைந்திடும் சிந்தையே.

ஆக்கம்
#மதுரா