மனைவியே சரணம்-10

Kripnythaa

Moderator
Mar 26, 2018
455
150
63
மனைவியே சரணம்-10

சுந்தரியின் வெறுப்பு புலம்பல்கள் ஆக அவ்வப்பொழுது வெளிப்பட வெளிப்பட அம்பிகாவின் ஷியாம் மீதான அடக்குமுறை அதிகமாகிக் கொண்டே சென்றது.

அதனை சுந்தரி உணர்ந்தாரோ இல்லையோ ஷ்யாம் நன்றாகவே உணர்ந்தான். அதன் விளைவாக ஒரு நாள் சுந்தரிடம் நேராக அம்பிகா இருக்கும்பொழுதே வந்தவன் "அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்", எனக் கூறினான். மகன் தன்னிடம் வந்து பேசியதை பெருமையாக எண்ணிய சுந்தரி மருமகளின் புறம் ஒரு வெற்றிப்பாா்வர வீசிட அவளோ அலட்சியமாக அமர்ந்து இருந்தாள்.

"சொல்லு கன்னுக்குட்டி! நீ என்ன பேச போறேன்னு கேட்கதான் அம்மா காத்துகிட்டு இருக்கேன்", என சுந்தரி கொஞ்சிட அவரை தன்னுடைய அருகில் அமர வைத்தவன் அம்பிகாவின் புறம் திரும்பி பார்த்து பேசட்டுமா என்ற ஒரு பார்வையை வீசினான். அதில் சுந்தரியின் வெற்றிப் பாா்வை மீண்டும் கடுப்பானப் பார்வையாக மாறிப்போனது.

ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மகன் பேசுவதை கேட்க ஆர்வமாக காத்திருந்தார். சுந்தரியின் ஆர்வம் ஷ்யாமை பாதித்தாலும் தான் பேசவந்ததை பேசி முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவன் அவரைப்பார்த்து

"அம்மா! நீங்க உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியலை. கல்யாணத்துக்கு முன்னாடி வரப் போற பொண்ணு உனக்கு அடங்கி இருக்கணும்னு சொன்னீங்க. நீங்க சொன்ன விதத்துலதான் நான் இப்படி அடங்கி இருக்க வேண்டிய நிலைமை ஆகிடுச்சு. அப்பா உங்களுக்கு அடங்கி இருக்காரு, மாமா அக்காவுக்கு அடங்கி இருக்காரு, நான் என் பொண்டாட்டிக்கு அடங்கி இருக்கேன்.

இதுல உங்களுக்கு என்னப் பிரச்சனை? ஏன் தேவையில்லாம புலம்பிட்டே இருக்கீங்க? நீங்க புலம்ப புலம்ப நான் உங்ககிட்ட இருந்து ரொம்ப தள்ளிப் போறேன். அது உங்களுக்கு புரியுதா? இல்லையா? முடிஞ்ச அளவுக்கு உங்க புலம்பலை உங்களுடைய ரூமுக்குள்ள அப்பாகிட்ட மட்டும் வச்சுக்கோங்க. வெளியில வந்து நீங்க புலம்புனீங்கன்னா நான் அடி உதை வாங்காத அளவுக்கு பேச்சு வாங்குறேன். என்னோட நிம்மதியே போச்சு.

முடிஞ்சா உங்க புலம்பலை குறைச்சுட்டு அக்கடான்னு இருங்க. அப்படி இருக்க முடியலைன்னு தோணுச்சுன்னா கொஞ்ச நாளைக்கு அக்கா வீட்ல போய் இருந்துட்டு வாங்க. டெய்லி அவதான் இங்க வந்துட்டுப் போறா. நீங்களும் ஒரு வாரத்துக்கு அவ வீட்ல போயி டேரா போட்டீங்கன்னா அவளை விட என் பொண்டாட்டி எவ்வளவு நல்லவன்னு உங்களுக்குப் புரியும்", என நீளமாகப் பேசியவன் சுந்தரியின் பதிலை சற்றும் எதிர்பார்க்காமல் எழுந்து உள்ளே சென்று விட்டான்.

அவன் பேசியதில் அதிர்ந்துபோன சுந்தரி மீண்டும் புலம்ப ஆரம்பித்த பொழுது அருகில் அமர்ந்திருந்த சுதாகர் அவரின் வாயை தன்னுடைய கைகளால் மூடி விட்டார். சுதாகர் தன் வாயை மூடியவுடன் அவரை முறைத்துப் பார்த்த சுந்தரியை பார்த்தவர் "சுந்தரி! இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும் உன் மகன் இதுவரைக்கும் அடி உதை வாங்கலை. அதையும் வாங்கிடுவான். பேசாம எந்திரிச்சு போய் வேலையை பாரு. இல்லைன்னா சாயங்காலமா ஷிவானி வீட்ல கொண்டு போய் நான் உன்னை விட்டுட்டு வர்றேன்", என தன் பங்கிற்கு அவரும் பேசிவிட்டுச் செல்ல சுந்தரி தன் தலையை பிடித்தவாறு அமர்ந்துவிட்டார்.

ஷ்யாம் என்னதான் பேசினாலும் சுந்தரியால் தன்னை மாற்றிக் கொள்ள இயலவில்லை. ஆனால் அம்பிகா ஷ்யாம் சுந்தரியிடம் பேசிய தினத்திலிருந்து தன்னுடைய அடக்கு முறையை சிறிது மாற்றி கொண்டாள். சுந்தரி இருக்கும்பொழுது மட்டுமே ஷ்யாமை அதிகாரம் செய்பவள் அவர்களின் தனிமையிலோ, பொது இடங்களிலோ சாதாரணமாகவே இருக்க பழகினான். அதனை பார்த்த ஷ்யாமிற்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டு அவனே அம்பிகாவிடம் அடங்கிப் போக ஆரம்பித்து விட்டான்.

காலங்கள் அப்படியே நின்றுவிடுவது இல்லைதானே! ஐந்து வருடங்கள் சுந்தரி, அம்பிகா, ஷிவானி இவர்களின் அடக்கு முறைகளில் ஐந்து நொடிகளாக உருண்டோடியிருந்த அந்நாளில் ஷ்யாம் தன்னுடைய மூன்று வயது மகன் மனோஜை மடியில் வைத்து முக்கியமான வார்த்தைகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அம்பிகா வேலையிலிருந்து வந்திராத அந்நேரத்தில் மகனும், பேரனும் அமர்ந்து முக்கியமான பாடம் ஏதோ கற்றுக் கொண்டிருக்கின்றனர் என எண்ணி சமையலறையில் வேலையில் ஈடுபட்டிருந்த சுந்தரி முதலில் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ம காதுல தான் ஏதோ மாதிரி விழுகுது போல என எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் மீண்டும் உற்றுக் கேட்ட பொழுது தான் கேட்ட வார்த்தைகள் உண்மைதான் என்பதை உணர்ந்து கையிலிருந்த பால் பாத்திரத்தை அப்படியே கீழே போட்டு விட்டார்.

தங்களின் வார விடுமுறைக்கு வந்திருந்த ஷிவானி, அரவிந்தும் ஷ்யாம் சொல்லி கொடுத்ததை கேட்டு அதிர்ந்து நின்றுவிட்டனர். பால் பாத்திரத்தை கீழே போட்டவுடன் வேக வேகமாக ஹாலிற்கு வந்த சுந்தரி" டேய் சின்னப் பையனுக்கு என்னடா சொல்லி தந்துட்டு இருக்க?", என சத்தமாகவே வினவினார். அவர் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்த அம்பிகா "அத்தை ஏன் சத்தம் போடுறீங்க? வெளியில கேட் வரைக்கும் கேட்குது" எனக் கேட்டதுடன் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டாள்.

'நான் ஏன் சத்தம் போடுறேன்னு கேக்குறதுக்கு முன்னாடி உன் புருஷன் நீ பெத்த பிள்ளைக்கு என்ன சொல்லி கொடுத்தான்னு கேளு. அதுக்கப்புறம் நானாவது சத்தம் மட்டும்தான் போட்டேன், நீ இரண்டு அடியையும் சேர்த்து போடுவ", என மகனை முறைத்து கொண்டே மருமகளிடம் கூறியவர் அடுத்து அவள் கேட்கப்போகும் கேள்விகளுக்கு காத்து நின்றார்.

சுந்தரி பேசியதை கேட்டு ஷ்யாமின் புறம் திரும்பிய அம்பிகா "சுந்தரியோட கன்னுக்குட்டி என்னத்த செஞ்சு இப்படி கடுப்பேத்தி வச்சீங்க?", என சிரிப்புடன் வினவினாள். அதற்கு அவனோ "ஒன்னுமே இல்லை அம்பிகா! மனோஜுக்கு மனைவியே சரணம் மந்திரத்தை சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன். அவன் இன்னும் சரியா சொல்ல மாட்டேங்குறான். அதனாலதான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்தேன்", என மிகவும் கூலாகக் கூறினான்.

இவ்வளவுதானா என அம்பிகா அமைதியானதை பார்த்த சுந்தரி "என்ன நீ இப்படி இவ்வளவுதானானு கேட்குற. உனக்கு கோபம் வரலையா?", என வினவினார். "ஏன் கோவம் வரணும்", என அம்பிகா கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே சுந்தரி வேக வேகமாக தன் மகனின் அருகில் சென்று நின்றவர் "என்னடா இது! ஏன்டா இப்படி எல்லாம் சொல்லிக் கொடுக்குற? நீ எல்லாம் பாடம் சொல்லிக் கொடுக்குற வாத்தியாரா?", என ஆதங்கத்துடன் வினவினார். "நான் உனக்கு தாயே சரணம் தானடா?", சொல்லிக் கொடுத்தேன் என மேலும் அவர் பேசி வைத்தவுடன் ஷ்யாம் "அதுதான் இந்த மனைவியே சரணத்துக்கான காரணமே", எனக் கூறினான்.

அவனது பதில் புரியாமல் மற்றவர்கள் முழித்து நின்றிருக்க "அம்பிகா இப்ப அந்த விஷயத்தை நான் சொல்லிதான் ஆகணும்", என மிகப் பெரிய பில்டப் உடன் ஷ்யாம் "இது எங்க கல்யாணம் முடிஞ்சு மறு வீட்டுக்கு போனப்ப நடந்த கதை. அதனால எல்லாரும் கவனமா கேளுங்க", எனக் கூற ஆரம்பித்தான்.

"அன்னைக்கு காலையில நான் எந்திரிச்ச உடனே வழக்கம்போல தாயே சரணம் தாயே சரணம்ன்னு மூணு தடவை சொன்னேன். என் பொண்டாட்டி முதல் நாள்தான் உன் வீட்டுல உன் பேச்சை நான் கேட்கிற மாதிரி என் வீட்ல நீ என் பேச்சை கேட்கனும். நான் சொன்னா மட்டும்தான் நீ உட்காரணும், பேசணும்னு எனக்கு சொல்லியிருந்தா. நானும் அதுக்கு சரின்னு சொல்லிட்டேன்.

மறுநாள் இப்படி நான் சொன்னதை கேட்ட உடனே யாரை கேட்டு நீ தாயே சரணம் சொன்னேனு என்னை அடி வெளுத்துட்டா. அதனால நானும் மன்னிப்பு கேட்ட உடனே சரி நீ இனிமே டெய்லி காலையில எந்திரிச்ச உடனே மனைவியே சரணம்ன்னு சொல்லு. நான் உன்னை மன்னிக்கிறேன்னு சொன்னா. அவ வீட்ல இருக்கிற வரைக்கும் அப்படி சொல்லனும்னு நினைச்சு நானும் தப்பு தப்பா ரெண்டு மூணு நாளு சொன்னேன்.

ஆனா நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் நீ இது மட்டும்
தான் சொல்லணும் அப்படின்னு சொல்லிட்டா. ஆரம்பகாலத்தில் தாயே சரணம் மனைவியே சரணம் ரெண்டையும் மாத்தி மாத்தி சொல்லி நிறைய பேச்சு, அடி எல்லாம் வாங்கிட்டேன். என் பையனும் அதே மாதிரி அடி வாங்கக் கூடாதுங்கிற ஒரு நல்ல எண்ணத்தில்தான் இப்ப இருந்தே அவனுக்கு மனைவியே சரணம் சொல்லி தர்றேன்", என ஷ்யாம் தன்னுடைய இத்துப்போன ஃபிளாஷ்பேக்கை கூறி முடித்தவுடன் சுந்தரி தன் நெஞ்சில் கை வைத்து அமர்ந்து விட்டார்.


ஷ்யாம் கூறியதைக் கேட்ட சுதாகரும் அரவிந்தனும் தங்களுக்கு இந்த நிலைமை இல்லை என மகிழ்ந்து கொண்டாலும் வேறு ஒரு சந்தேகம் அவர்கள் இருவருக்கும் தோன்றியது. அதனை சுதாகர் வாய்விட்டு கேட்கும் முன் முந்திக்கொண்டு அரவிந்த் "தங்கச்சி வழக்கமா எல்லா அம்மாக்களும் பையன் தன் பேச்சு மட்டும்தான் கேட்கணும், பொண்டாட்டி பேச்சை கேட்ககூடாதுன்னு நினைப்பாங்க. நீ என்னம்மா இப்படி சொல்லித் தர்ற .இதெல்லாம் விட நீ மாப்பிள்ளையை அடக்குற விதத்துல அண்ணனுக்கு ஏதாவது சப்போர்ட் பண்ணுவ, உங்க அண்ணிய மாத்துவன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீ இப்ப புதுசா எங்களையும் சிக்கல்ல மாட்டி விட்டுட்டியே! உனக்கே இது நியாயமா?", என வினவினான்.


இதற்கு அம்பிகாவின் பதிலை எதிர்பார்த்து அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அரவிந்த் கேட்டவுடன் அவனைப்பார்த்து அம்பிகா "எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்கண்ணா இப்ப நீங்களோ, இல்லை இவரோ, மாமாவோ எங்கேயாவது வெளியில போகணும்னா என்ன செய்வீங்க?", என வினவினாள்.

அதற்கு அரவிந்த் "இது ஒரு பெரிய விஷயமா? நான் ஸ்கூல் படிக்கிறப்போ இருந்து காலேஜ்லயும் சரி, இப்ப வேலைக்கு போற போதும் சரி, எங்க போகனும்னாலும் உடனே கிளம்பி போய்டுவேன். உங்க அண்ணி அதுக்குள்ளாம் ஒன்னுமே சொல்ல மாட்டா. நான் என் பிரண்ட்ஸோட போகணும் அப்படின்னு சொன்னா எனக்கு டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வச்சு உடனே கொடுத்துடுவா.நானும் போயிட்டு வந்துடுவேன். அந்த வகையில் எல்லாம் ரொம்ப கிரேட் என் பொண்டாட்டி", என மிகவும் குதூகலத்துடன் கூறினான்.

மாமா நீங்க என அவனின் பதிலுக்கு பின்னர் அம்பிகா சுதாகரை அடுத்து கேட்டவுடன் "நான் வேலைக்கு போற வரைக்கும் எப்பவுமே அப்படிதான்",என்று பதில் கூறினார். "வேலைக்கு போனப்ப மட்டுமில்லை மாமா! போன மாசம் உங்க ஃப்ரண்டு யாரையோ பார்க்கிறதுக்காக நீங்க இங்க இருந்து உங்க சொந்த ஊருக்கு போயிட்டு வந்தீங்களே! ஏன் அத்தையை கூட்டிட்டு போகலை?", என வினவினாள்.

"என் ஃப்ரண்டை பாா்க்குறதுக்கு உங்க அத்தையை எதுக்குமா கூட்டிட்டு போகணும்? அதான் நான் தனியா போயிட்டு வந்தேன்", என சுதாகர் பதில் கூறியவுடன் சபாஷ் அவள் கூறியதிலேயே அரவிந்தும் சுதாகரும் இன்று தன் மனைவியிடம் வசமாக மாட்டிக் கொண்டார்கள் என ஷ்யாமிற்கு புரிந்துபோனது.

"இதுவே ஒரு பொண்ணு ஸ்கூல் படிக்கிறப்ப எங்கேயாவது போகணும் அப்படின்னு சொன்னா பெத்தவங்க உனக்கு விவரம் பத்தாது, இன்னும் வளரலை, வெளியில போக கூடாதுன்னு சொல்லிடுவாங்க. காலேஜ் படிக்கிறப்ப ஏதாவது ஒரு படத்துக்கு போகலாம்னு முடிவு எடுத்தாலும் அச்சச்சோ எங்க அம்மா பர்மிஷன் தர மாட்டாங்க, எங்க அப்பா அடிப்பாருன்னு எங்கேயும் வெளியே போக முடியாது.

அதுக்கடுத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அப்ப எங்கேயாவது தனியா போகணும்னா, என் பிரண்ட்ஸ் பார்க்க போகணும் அப்படின்னு சொன்னா புருஷனோட சேர்ந்துதான் வெளியில போகணும். அது என்ன நீ உன் பிரண்ட்ஸோட வெளியில சுத்துறது அப்படின்னு தேவையில்லாத பேச்செல்லாம் வரும்.

அதுக்கடுத்து குழந்தை குட்டிங்க வந்ததுக்கு அப்புறம் எங்கேயாவது வெளியில் போகனும்னா பிள்ளை குட்டிகளை பார்த்துக்கவே நேரம் சரியா போயிடும். அந்த நேரம் பொண்ணுங்களுக்கு அவங்களுக்கு என்ன பிடிக்கும் அப்படிங்கறதை மறக்க ஆரம்பிச்சுருப்பாங்க. பிறகு பிள்ளைங்க வளர்ந்து பள்ளிக்கூடம் போனதுக்கப்புறம் பிள்ளைகளுக்கு எக்ஸாம், என்னால எங்கயும் போக முடியாது, வரமுடியாது.

காலேஜ் போறப்ப என் பிள்ளைங்க காலேஜ் படிக்கிறாங்க, அவங்க சொலற அம்மா உங்க சமையல்தான் நல்லா இருக்குன்னு ஒரு வாா்த்தைக்காக அந்த நேரத்திலும் பொண்ணுங்களால எங்கேயும் வெளியே போக முடியாது. அதுக்கடுத்து ஒரு ஸ்டேஜ்ல பிள்ளைங்க வேலைக்கு போறப்ப என் பசங்களுக்கு நான் பொண்ணு பார்க்கணும், மாப்பிள்ளை பாக்கணும், அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அந்த காலகட்டத்திலேயும் அவங்களுக்கான நேரம் ஒதுக்க முடியாது.

பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு அதுக்கடுத்தாவது தன்னோட ஃபிரண்ட்ஸ் பார்க்கவோ, தனக்கு பிடித்த இடங்களுக்கு போகவோ பொண்ணுங்களால நினைக்க முடியாது. கேட்டா பேரப்பிள்ளைகளை பார்த்துக்கணும். கடைசியா அவங்களுக்கே அவங்களுக்கான நேரம் எப்ப கிடைக்கும்னு தெரியுமா? அவங்களோட மூச்சு நின்னு போறப்போ மட்டும்தான் கிடைக்கும்.

இப்ப நீங்களும், அரவிந்த் அண்ணனும் சொன்னீங்களே! நெனச்ச நேரத்துக்கு போயிட்டு வந்துருவோம் அப்படின்னு. ஏன் மாமா உங்க ஃபிரண்டை பாா்க்குறதுக்கு அத்தையை எதுக்கு கூட்டிட்டுப் போகணும்னு யோசிச்ச நீங்க அத்தையை தனியா விட்டுட்டு ஏன் நம்ம ஃபிரண்டை பார்க்கப் போகணும்னு ஏன் யோசிக்கலை?

கல்யாணம் வரைக்கும் அம்மாவுக்கு மதிப்பு கொடுத்து அம்மா சொல்றதுக்கு எல்லாம் சரி சரின்னு சொல்ற நீங்களே உங்க அம்மா அவங்களுக்கான நேரத்தை என்னைக்காச்சும் அனுபவிச்சு இருப்பாங்கன்னு யோசிச்சு பாா்த்தீங்களா? இல்லை கல்யாணத்துக்கு அடுத்து பொண்டாட்டி பேச்சுக்கு தலையாட்டுறமோன்னு நடிக்கிறீங்களே உங்க பொண்டாட்டி உங்களை விட்டுட்டு எத்தனை நாள் அவங்களோட ஃபிரண்ட்ஸ் பார்க்க போய் இருக்காங்க? அதுவும் ஊர் விட்டு ஊர் போய் பார்த்துட்டு வந்து இருக்காங்க?

அதையெல்லாம் நீங்க யோசிக்கிறது கிடையாது, அம்மா பேச்சு கேட்டு நடந்துக்குற ஆம்பளைங்களும் சரி, பொண்டாட்டி பேச்சைக்கேட்டு நடந்துக்கிற ஆம்பளைங்களும் சரி ஒட்டுமொத்த சுயநலவாதிகள்தான். எல்லாவித சுகபோகத்தையும் அனுபவிச்சுட்டு நாங்க பொண்ணுங்களுக்கு அடிமையாகவே வாழுறோம்ன்னு தம்பட்டம் அடிச்சுக்கற சுயநலவாதிகள் ஆண் வர்க்கம்.

எங்களையே நாங்க தொலைச்சு, உங்களை உங்களோட நடிப்பை தெரிஞ்சும் தெரியாத மாதிரி எங்களை நாங்களே ஏமாத்திட்டு நாங்க சொன்னாதான் என் பையன் கேட்பான், என் புருஷன் கேட்பாருன்னு பெருமை பீத்திக்குற ஒரே ஒரு விஷயம்தான் எங்களுக்கு கிடைக்கிற அல்ப சந்தோஷம்.

என் பையனும் அதே மாதிரி ஒரு சுயநலவாதியாகதான் வரப் போறான். அது எதுக்கு ரெண்டு பக்கம் இருக்கிற சுயநலவாதியா வராம ஒரே பக்கமா இருக்கட்டும்னு சொல்லிதான் அவனுக்கு இப்ப இருந்தே மனைவிக்கு மட்டும் அடங்கிப்போற மாதிரி நடிச்சா போதும்ன்னு சொல்லி கொடுக்க சொல்லி நான் என் புருஷன்கிட்ட சொன்னேன்.

அம்பிகா பேசியதைக் கேட்டு சுதாகரும், அரவிந்தும் தேவையில்லாம வாயைக் கொடுத்து நாமளே வாங்கி கட்டிக்கிட்டோமோ என்னும் ரீதியில்தான் பார்த்தனர். ஆனால் ஷ்யாமோ இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலேயே வாங்கிக்கட்டி பழக்கமாயிடுச்சு என்ற ரீதியில் அமர்ந்து இருந்தான்.

முதல்முறையாக சுந்தரிக்கு தன் மருமகள் பேசியதை கேட்டு மிகவும் ஆனந்தமாக இருந்தது. ஆனால் அதற்காக மருமகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடப் போகும் ஒரு நல்ல மாமியாராக அவர் இருந்திட போவதில்லை. என்னதான் அம்பிகா ஒட்டுமொத்த பெண்களின் சார்பாக பேசினாலும் அவரால் அம்பிகாவை தன் மகனை தன்னிடம் இருந்து பிரிக்க வந்த வில்லியாகத்தான் எண்ண முடிந்தது.

ஷிவானியோ அரவிந்தனிடம் "இனிமே காலையில எந்திரிச்ச உடனே மனைவியே சரணம் சொல்லுங்க. பிள்ளைகளுக்கும் சேர்த்து சொல்லி கொடுங்க", என அதிகாரம் செய்து கொண்டிருந்தாள். இவர்கள் அவரவர் எண்ணங்களில் சுழன்று கொண்டிருக்க தன் தந்தை கூறியதை மழலை மொழியில் மனோஜ் கூறிக்கொண்டிருந்த மனைவியே சரணம் என்னும் வார்த்தை பிற்காலத்தில் அவனது சுயநலத்தால் யாரோ ஒரு முகம் தெரியாத பெண்ணை சந்தோசப்படுத்தும் வார்த்தையாக இருக்கும் என எண்ணி அம்பிகா ஒரு பெண்ணாக மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

மனம் முழுவதும் தன்னை மட்டுமே நிரப்பி தனக்காக மட்டுமே வாழ்ந்து மடியும் பெண்ணிடம் "மனைவியே சரணம்" என மண்டியிடுவது தவறில்லை தானே!

முற்றும்.