Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மனைவியே சரணம்-3 | SudhaRaviNovels

மனைவியே சரணம்-3

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
மனைவியே சரணம்-3

ஷ்யாம் அன்றைய தினம் வேலையை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் தன்னுடைய அக்காவும் தங்கள் வீட்டில் இருப்பதை பார்த்து மகிழ்ந்தவன்"அம்மா! அக்கா வந்திருக்கா, அக்காவுக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா?", என சுந்தரியிடம் வினவினான்.

அவன் கேட்டதை பார்த்து நொந்து கொண்ட சுதாகர் "காலைல ஒரு கிண்ணம் தவிடு போட்டுட்டு மத்தியானத்துக்கு பழைய கஞ்சியை ஊத்திட்டு ரெண்டு பொம்பளைங்களும் உட்கார்ந்து நகை,புடவைன்னு கதை பேசிக்கிட்டு இருக்காங்க. இவனோட அப்கா வாரத்துல ஆறரை நாளும் இங்கதான் இருக்கா. இவளுக்கு இவன் புதுசா வேற ஏதாவது வாங்கிட்டு வந்து தரப்போறானா?

சொக்கநாதா இந்த சோகத்தை எல்லாம் நீ எனக்குதான் கொடுக்கணுமா?", என எப்போதும் போல் தனக்குள்ளேயே பேசி கொண்டவர் அதற்கு அடுத்து நடக்கப் போகும் டிராமாவையும் பார்க்கத் தயாரானார். மகன் கேட்டதில் மகிழ்ந்துபோன சுந்தரி "அதெல்லாம் ஒன்னும் வேணாம் கன்னுக்குட்டி நீ போய் டிரஸ் மாத்திட்டு வா... அம்மா உனக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வர்றேன்", என மகனை கொஞ்சி அனுப்பினார்.

சுந்தரி ஜூஸ் என்றவுடன் சுதாகர் தனக்கு அதில் மிச்சமிருக்கும் தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் தன் கையில் இருந்த பேப்பரை மடித்து வைத்து வேக வேகமாக வந்து மகளின் அருகில் அமர்ந்துகொண்டார். அவரின் வேகத்தை பார்த்த ஷிவானி "அம்மா! ஜூஸ் நிறைய தண்ணி ஊத்தாம தம்பிக்கு நல்லா திக்கா போட்டுக் கொடுங்க", எனக் கூறி அவரின் ஒரு சிறு ஆசையிலும் தண்ணீர் ஊற்ற விடாமல் செய்தாள்.

மகளின் பேச்சை கேட்ட சுதாகர் "சொக்கநாதா ஜூசு தண்ணியும் போச்சா... இனி ராத்திரிக்கு போடுற அந்த வரட்டியைதான் சாப்பிடணும்.என்னை நல்லா வச்சு செய்ற. திருவிளையாடல் நடத்துறேங்கிற போ்ல திங்க விடாமல் செஞ்சுட்டு இருக்குற", என எப்பொழுதும் போல் பேசிவிட்டு மனைவி தன் மகனின் கையில் கொண்டு வந்து கொடுத்த ஜூஸை நாவில் நீர் ஊற பார்க்கும் வேலையை ஆரம்பித்தார்.

ஜூஸ் குடிக்க ஆரம்பித்த ஷ்யாம் தன்னுடைய தந்தை தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் "அம்மா! இங்க பாருங்கம்மா இந்த அப்பா நான் ஜூஸ் குடிக்கிறதை பாா்த்துக்கிட்டே இருக்காரு. எனக்கு குடிக்கவே தோண மாட்டேங்குது", என முறையிட்டு அன்றைய கோள் மூட்டும் வேலையை நன்றாகவே ஆரம்பித்து வைத்தான்.

"அந்த மனுஷனுக்கு புத்தியே கிடையாது.பிள்ளை சாப்பிடுறதைப் பார்த்து யாராவது கண்ணு வைப்பாங்களா?", என கணவரை நொடித்த சுந்தரி மகனின் புறம் திரும்பி அவனது கன்னத்தை தடவிக் கொடுத்தவாறு அமர்ந்தார்." கன்னுக்குட்டி ஞாயித்துக்கிழமை உனக்கு பொண்ணு பாா்க்கப் போகலாம்னு அம்மா முடிவு பண்ணி இருக்கேன். அந்த பொண்ணை பத்தி நீ எதுவும் கேட்கனுமா கண்ணா?", என சுந்தரி கேட்டவுடன் தன் கையிலிருந்த ஜூஸை ஒரே மடக்கில் குடித்து முடித்த ஷ்யாம்

"அம்மா பெண்ணை உங்களுக்கு புடிச்சிருந்தா சரிதான். என்னோட ஒரே ஒரு எதிர்பார்ப்பு நீங்க சொன்னீங்கதானே நான் எந்திரிக்க சொன்னா அந்த பொண்ணு எந்திரிக்கணும். உட்காரச் சொன்னா அந்த பொண்ணு உட்காரணும். அது மாதிரி இருந்தா மட்டும் போதும்மா. எனக்கு நாளைக்கு கிளாஸுக்கு நோட்ஸ் எடுக்க வேண்டியது இருக்கு. நான் எடுக்க போகட்டுமா?", என தன்னுடைய எதிர்பார்ப்பையும் கூறி தான் செய்யப்போகும் வேலைக்கு தன் அன்னையிடம் அனுமதியும் வேண்டி நின்றான்.

"சரி நீ போய் உன் வேலையைப் பாரு", என சுந்தரி அனுமதி அளித்தவுடன் அங்கிருந்து நகன்றவனின் பின்னாலேயே சுதாகரும் சென்றார். தன்னுடைய அப்பா தன்னை பின்தொடர்வதை உணர்ந்தவன் "என்னப்பா என்கிட்ட எதுவும் கேட்கணுமா? இல்லை சொல்லனுமா?", என வினவினான். "உன்னோட ரூமுக்கு போ.அங்க வந்து கேட்கிறேன்", என அவனிடம் ரகசியம் பேசிய சுதாகர் அவனின் அறையில் நுழைந்தவுடன் கதவை தாழிட்டு விட்டு அவனது எதிரில் அமர்ந்தார்.

"நான் கேட்குறதுகடகு நிஜமான பதில் சொல்லணும். பொய் எல்லாம் சொல்லக்கூடாது", என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார். சரி என தலையாட்டியவுடன் "நிஜமாவே காலேஜ்ல நீ வாத்தியார் வேலை பாா்க்குறியாடா?" என்ற ஒரு வினாவினை சுதாகர் எழுப்பியவுடன் கடுப்பான ஷ்யாம் "அது உங்களுக்கு தெரியாதா? பிஎச்டி முடிச்சுட்டு காலேஜ்ல நான் என்ன வேலை பார்க்குறேன்னு உங்களுக்கு தெரியாதா?", எனக் கேட்டான்.

"இல்லைடா நீ படிச்சது தெரியும். வேலைக்கு சேர்ந்தது தெரியும். மாசம் சம்பளம் வாங்கின உடனே உங்க அம்மாகிட்ட கொடுக்கிறது தெரியும். எல்லாமே நல்லாவே தெரியுது. ஆனா வீட்டுல வந்து உங்க அம்மா,அக்கா இவங்க ரெண்டு பேருகிட்ட நீ பேசுறதை பாா்த்தா காலேஜ்ல நீ எப்படி பாடம் நடத்துறன்னு எனக்கு சந்தேகமா இருக்கு... அதனால்தான் தெரிஞ்சுக்க கேட்டேன். நியாயமா பார்த்தா நீ சந்தோசப்படனும்.

உன் ஸ்டூடண்ட்ஸ் யார்கிட்டயாவது கேட்டு மானத்தை வாங்காம நேரடிய உன்கிட்ட கேட்குறேன். அதுக்காக நீ பெருமைப்படுடா", என சுதாகர் தன் பக்க நியாயத்தை விளக்கினார்.

"வீட்ல இருக்குற மாதிரி வேலை பார்க்கிற இடத்தில் எல்லாருமே இருக்க மாட்டாங்க. அப்பா, அம்மா, என் அக்கா என் பொண்டாட்டி எல்லாருக்கும் வீட்ல நான் செல்லப்பிள்ளை. ஆனால் காலேஜ்ல ரொம்ப ஸ்டிரிக்டான டீச்சர். நீங்க என்னோட ஸ்டூடன்ட்ஸ்கிட்ட கேட்டு பாருங்க. நான் எவ்வளவு புத்திசாலி,ஸ்டிரிக்ட்ன்னு சொல்லுவாங்க", என ஷ்யாம் தன்னுடைய தற்பெருமையை அள்ளி வீசினான்.

சோறு போடாம காதுல தக்காளி சட்னி வர வைக்கிற குடும்பத்தை எனக்கு கொடுத்துட்டியே சொக்கநாதா என நொந்து கொண்டு சுதாகர் கிளம்பும் வேளையில் அவரை தடுத்து நிறுத்திய ஷ்யாம் "அப்பா! அம்மா சொன்னாங்களே அந்த பொண்ணு பேரு என்னது?", என்றுக் கேட்டார்.

"உங்க அம்மாகிட்ட பொண்ணு உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் போதும்னு சொன்னதானே! பொண்ணு பேரும் தெரியனும்னு சொல்ல வேண்டியதுதானே", என அவனுக்கு பதிலடி தந்தவர் "எனக்கு அந்த பொண்ணு பேரு தெரியாது. பொண்ணு பொண்ணுன்னு தான் சொல்றாங்களே தவிா்த்து பேரை சொல்ல மாட்டேங்கிறாங்க. வேணும்னா நீ வந்து உங்க அம்மாகிட்ட கேளு. கூட சேர்ந்து நானும் காதுல வாங்கிக்கிறேன்", எனக் கூறி விட்டு வெளியேறி விட்டார்.

இவர்கிட்ட கேட்டதுக்கு அம்மாகிட்டயே கேட்டிருக்கலாம் என தனக்குள் பேசிக் கொண்டவன் மறுநாள் வகுப்பிற்கு தேவையான நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தான். பெயரை அம்மாவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியவன் அதனை கேட்கவுமில்லை. கேட்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவும் இல்லை. வாரத்தில் மீதியிருந்த நாட்கள் கடந்து சென்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் இரு வீட்டினருக்கும் அழகாக புலர்ந்தது.

அனைவருக்கும் முன்னராக வெள்ளை வெளேரென்று வேட்டி சட்டையில், நெற்றியில் பட்டை தீட்டி கிளம்பி ஹாலில் அமர்ந்திருந்த சுதாகர் அன்றைய தினம் அவருக்கு தரப்படும் கழனி தண்ணி,தவிடு என எதனையும் எதிர்பார்க்கவில்லை. அவர் கிளம்பி அமர்ந்திருப்பதைப் பார்த்த சுந்தரி "பையனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம். உங்களுக்கு இல்லை. அந்த நெனப்பு இருக்கட்டும். மனுஷன் வெள்ளையும் சொள்ளையுமா கிளம்பி உட்கார்ந்து இருக்காரு பாரு", என திட்டிய போதிலும் அவர் மனதில்

"சொக்கநாதா! பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வருதோ இல்லையோ! எனக்கு போன உடனே கள்ளிச் சொட்டு பால்ல போட்டுக்கொடுத்த காபியும், நாலே நாலு பஜ்ஜியும் ஒரு கிண்ணம் கேசரி மட்டும் கொடுத்திடனும். அதுவும் என் பொண்டாட்டி சமைக்கிற மாதிரி சுமாரா இல்லாம சூப்பரா இருக்கணும்", என வேண்டுதலை வைத்துவிட்டு அனைவரும் கிளம்பி வர காத்திருந்தார்.

ஷிவானி தன் இரு குழந்தைகளுடனும், கணவருடனும் வந்தவள் "அப்பா நீங்க அவரோட வண்டியை எடுத்துட்டு வாங்க. நாங்க நாலு பேரும் கார்ல வர்றோம்", என தன் தந்தைக்கு கட்டளை வேறு இட்டாள். அதனை கேட்டுக் கொண்டே வெளியில் வந்த ஷ்யாம் "எதுக்குக்கா? இன்னோவால தான் போறோம். அதனால எல்லாருமே அதிலேயே போயிடலாம்", என்றவாறு சுதாகரின் என் மேக்கப் கலைஞ்சுடுமா என்ற எண்ணத்திலிருந்து அவரைக் காப்பாற்றினான்.

அனைவரும் கிளம்பி சென்ற பொழுது அம்பிகாவின் வீட்டில் இவர்களை வாசலில் அவளின் பக்கத்துவீட்டு சிசிடிவி பாட்டிதான் இவர்களை எதிர்கொண்டார். சிசிடிவி பாட்டி "வாங்க! வாங்க! நல்ல நேரத்தில் வந்திருக்கீங்க", என கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அந்தக் குரலில் வெளிவந்த மூர்த்தியும், ஆனந்தியும் அனைவரையும் வரவேற்று உள்ளே அமர வைத்தனர்.

அனைவரும் அமர்ந்தவுடன் ஆனந்தி தான் உரைத்தது போலவே ஆளுக்கு ஒரு டம்ளர் என்ற விதத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டு வந்தார். சுதாகரின் கையில் அந்த தண்ணீரை கொடுத்தவுடன் "தண்ணியெல்லாம் எல்லாம் வேண்டாம்மா. காப்பியே கொடுங்க", என எந்தவித வெட்கமும் இன்றி தன்னுடைய தேவையை தெளிவாகவே உரைத்து விட்டார்.

ஆனால் ஆனந்தியும் விடாக்கண்டியாக "அதுக்கு என்ன? பொண்ணு பார்த்ததுக்கப்புறமே காபி கொண்டு வந்து தர்றேன். இப்போதைக்கு இந்த தண்ணீயை எடுத்துக் குடிங்க", என சிரித்த முகமாகவே கூறிவிட்டு தன் மகளை அழைக்க உள்ளே சென்று விட்டார்.

உள்ளே வந்த ஆனந்தியை பார்த்து அம்பிகா "ஏம்மா இந்தா இருக்குற ஹாலுல இருந்து இந்த ரூமுக்கு நீங்க வந்துதான் என்னை கூப்பிடனுமா? நீங்க கூப்பிடாம நானே வர மாட்டேனா?", என தன் அன்னைக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவள் மிகவும் சாதாரணமாகவே எழுந்து ஹாலிற்கு வந்தாள். ஏற்கனவே போட்டோவில் பார்த்திருந்த பொழுதே சுந்தரிக்கும், ஷிவானிக்கும் பெண்ணை மிகவும் பிடித்திருந்த காரணத்தினால் நேரில் பார்த்தும் இருவரும் தங்களின் திருப்தியை உணா்த்திக் கொண்டார்கள்.

இங்க வந்து உட்காருமா என்ற சுந்தரி அம்பிகாவிடம் அவள் வேலை செய்யும் வங்கியை பற்றியு,ம் எத்தனை மணிக்கு சென்று எத்தனை மணிக்கு வருவார், வேலை எப்படி போகிறது, எதுவும் கஷ்டமா என்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் போதே தனக்கு வரப்போகும் மனைவியை நன்றாக பார்த்து ஷ்யாம் தன் திருப்தியை கை கைஅழுத்தத்தில் தன் தாயிடம் உணர்த்தினான்.

அவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே பக்கத்து வீட்டு பாட்டி "அதெல்லாம் புள்ள வாய்திறந்து பேசாது. அது பேசுதா இல்லையானு வாயை பார்த்தா மட்டும்தான் நமக்குத் தெரியும். பிறந்ததிலிருந்து பார்க்கிறேன். வீட்டுக்குள்ள இருந்து வெளியில போய் பார்த்ததே கிடையாது. இப்ப வேலைக்கு போகுது அப்படின்னாலும் எந்நேரம் போகுது எந்நேரம் வருதுனு கூட தெரியாத அளவுக்கு அமைதியான பிள்ளை.

இந்த மாதிரி பிள்ளை ஊரு உலகத்துல கிடைக்கவே கிடைக்காது. உங்க பையன் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ இந்த மாதிரி மருமக உங்க வீட்டுக்கு வரப் போறா", என தன்னுடைய நற்சான்றிதழை தாராளமாகவே வழங்கினார்.

ஏற்கனவே தாங்கள் விசாரித்ததிலும் நற்சான்றிதழ் கிடைத்ததில் சுந்தரி குடும்பத்திற்கு இப்பெண்ணை முடித்து விடும் நோக்கம் வலுப்பெற்றது. தன் கணவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு பதில் கூறாமல் தானே கூறினால் மாமனாரை மதிக்காத மாமியார் என்ற எண்ணம் இப்போதே மருமகளிடம் வலுப்பெற்று விடும் என்ற எண்ணத்தினால் சுந்தரி சுதாகரை திரும்பிப் பார்த்தார்.

ஆனால் அவரோ கிட்சன் பக்கமே தன் பார்வையை வைத்திருந்தார். இந்த மனுசனை வச்சுகிட்டு என தனக்குள் நொந்து கொண்டவா் "என்னங்க! எங்க எல்லாருக்கும் மருமகளை ரொம்ப புடிச்சிருக்கு. இருந்தாலும் நீங்கதான் வீட்டுக்கு தலைவர். நீங்க பார்த்து முடிவு சொல்லிடுங்க", என நைச்சியமாகவே சுதாகரிடம் சுந்தரி பேசியதைக் கேட்ட ஆனந்தியும், மூர்த்தியும் ஒருவருக்கொருவர் தங்களின் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.

அம்பிகாவிற்கு இவர்கள் பேசுவது அவர்கள் நடந்து கொள்வது அனைத்தையும் பார்க்கும் பொழுது டிவியில் போடும் மெகா சீரியல் பார்ப்பது போன்ற எண்ணம் தோன்றியது. அதனால் சற்றே சிரித்தவன் ஷ்யாம் தன்னை பார்ப்பதை உணர்ந்து தன் புருவத்தை தூக்கி என்ன எனும் விதமாக அவனிடம் வினவினால்.

அவள் அவ்வாறு செய்தவுடன் டக்கென்று தன் தலையை குனிந்து கொண்டு ஷ்யாம் தன் கால் விரல்களினால் தரையினில் கோலம் வரைய ஆரம்பித்தான். இதனை பார்த்த உடன் அம்பிகா தன் தாய் தந்தை இருவரிடமும் தனக்கும் பிடித்திருப்பதை கண்ணசைவில் உணர்த்தினாள்.

சுந்தரி கூறியவுடன் சற்றுநேரம் அருகில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என திரும்பி பார்த்த சுதாகர் "வெளியில வந்ததால நம்ம பொண்டாட்டி நம்மள புலின்னு காமிக்க விரும்புறாப் போல இருக்கு. ஆனாலும் மருமககிட்ட அப்புறமா வீட்டிலே இருக்கிற சமையலுக்கு போடுற புளி அளவுக்கு கூட நான் வொா்த் இல்லாம்மான்னு சொல்லிடணும். உண்மையை சொன்னாலாச்ம்சு கொஞ்சம் உப்பு ,உரப்போட சாப்பாடு கிடைக்கும்", என்ற எண்ணமிட்டவர்

"நான் சொன்னா என்ன சுந்தரி? நீ சொன்னா என்ன? நம்ம ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னுதானே! நீயே சொல்லிடுமா. உனக்கு இருக்குற விவரம் எனக்கு பத்தாது. அது எல்லாருக்கும் தெரியும்தானே! நீ ஏன் எப்பவுமே நான் அறிவாளி மாதிரி எல்லாத்துகிட்டயும் காமிக்கிற? உன் பெருந்தன்மை யாருக்கும் வராது", என சிலபல பிட்டுகளை சேர்த்துக் கூறியவர் உடனே கிட்சன்புறம் தன்னுடைய பார்வையைத் திருப்பி விட்டார்.

தன் கணவர் கூறிய வார்த்தைகளில் அகமகிழ்ந்து போன சுந்தரி "அவர் எப்பவுமே இப்படிதான். எங்களுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. நாங்க மத்தவங்கள மாதிரி சீரு, செனத்தி எதுவும் கேட்க மாட்டோம். உங்க பொண்ணுக்கு போடுறதும், போடாததும் உங்க இஷ்டம். பொண்ணை மட்டும் எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சா போதும்", என பெருந்தன்மையாக தன்னுடைய ஒப்புதலை கூறிய சுந்தரி மருமகளின் புறம் தன்னுடைய பார்வையை வீசினார்.

அதுவரை அவரின் அங்க அசைவுகளை பார்த்துக்கொண்டிருந்த அம்பிகா அவர் தன்னை பார்த்தவுடன் தலையை குனிந்து கொண்டாள். நல்ல பொண்ணு என சுந்தரி தனக்குள்ளே சிலாகித்துக் கொண்டார்.

இதே சிலாகிப்பு, இதே நல்ல பொண்ணு என்ற வார்த்தைகள் திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்திடுமா? இல்லை மாறிடுமா?
 
  • Like
Reactions: Priyamadhavan