மனைவியே சரணம்-9

Kripnythaa

Moderator
Mar 26, 2018
455
150
63
மனைவியே சரணம்-9

அம்பிகா சுந்தரியிடம் கூறியதைக் கேட்ட சுதாகர் சுந்தரி அதிர்ந்து நின்ற நேரத்தில் தன் அறைக்குள் வேகமாக சென்று வந்தவர் மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய பொருட்களின் அடியில் ஒளித்து வைத்திருந்த தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை எடுத்து வந்து ஹாலில் அமர்ந்தார்.

கணவரிடம் கேட்பதற்காக சுந்தரி திரும்பியவுடன் தன் கையிலிருந்த புகைப்படத்தை பார்த்த சுதாகர் "நீ நெனச்சதெல்லாம் நடந்துருச்சும்மா. இதே மாதிரி கல்யாணமான அன்னைக்கே நான் உன்கிட்ட பேசாமல் போனப்ப நீ என் பொண்டாட்டிக்கு தெரியாம அவ காதுல விழாத மாதிரி இதே நிலைமை உனக்கும் ஒரு நாள் வரும் அப்படின்னு முணுமுணுத்த இல்லையா? அது இன்னிக்கு நடந்திருச்சு... நீ ஜெயிச்சுட்டேம்மா!", என கண்களில் கண்ணீர் வழிய வீரவசனம் பேசிக் கொண்டிருந்தார்.

அம்பிகா கூறி விட்டுச் சென்றதை விட சுதாகர் பேசியதில் கடுப்பேறிய சுந்தரி "பெட்டியக் கட்டிட்டு உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பிடுங்க.அந்த இத்துப்போன வீடு அப்படியேதான் இருக்கு. அதுக்கு மராமத்து வேலை எல்லாம் செய்யாமல் கிடக்குன்னு சொன்னீங்கதானே. போய் அங்கிருந்து அந்த வேலையை செஞ்சு உங்க அம்மா இன்னும் எனக்கு தெரியாமல் என்னென்ன முணுமுணுத்து, அதை எல்லாம் உங்க மனசுக்குள்ள போட்டு வச்சு இருக்கீங்களோ அந்த ஆசை எல்லாம் அந்த வீட்ல போய் நிறைவேத்திக்கோங்க. இனி இங்க ஒரு நிமிஷம் நீங்க இருக்கக் கூடாது", என கத்தியவாறு தங்களின் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

சுந்தரி கத்திய கத்தலில் தங்களின் அறைக்குள் சென்ற அம்பிகா வெளியே வந்து என்னவென்று எட்டிப் பார்த்தாள். அவள் எட்டிப் பார்க்கையில் சுதாகர் தன் கையிலிருந்த அவரின் அம்மாவை போட்டோவை வைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாா்.

அவரின் செய்கையை பார்த்தவள் அவரின் எதிரில் வந்தமர்ந்து "என்னாச்சு மாமா? எதுக்காக அத்தையை டென்ஷன் பண்ணிட்டு நீங்க யாரோ பாட்டி போட்டோவை வச்சு அழுதுகிட்டு இருக்கீங்க?", என சிரிப்புடனே வினவினாள். "கல்யாணமாகி வந்த மறுநாளே என் கண்ணுல காபியை காட்டுன ஒரே காரணத்துக்காக என் கல்யாணக் கதையை உனக்கு சொல்றேன் கேட்டுக்கோ மருமகளே!", என நாடக பாணியில் ஆரம்பித்த சுதாகர் தன்னுடைய கண்ணீருக்கு காரணமான அவரின் கல்யாணக் கதையைக் கூற ஆரம்பித்தார்.

"ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு எங்க அம்மாவும், அப்பாவும் என்னை ஆசை ஆசையா வளர்த்தாங்க. நான் என்ஜினியராக ஆகணும்னு ஆசைப்பட்டதுக்கு எங்கே வெயிலுல அலைய வேண்டிய நிலைமை வந்துடுமோன்னு பயந்து எங்க அம்மா நீ வாத்தியார் வேலைக்குப் போ இல்லைன்னா பேங்க் வேலைக்கு போ மகனேனுன்னு மாச கணக்குல அழுது என்னை பேங்க் வேலைக்கு படிக்க வச்சாங்க. பரீட்சை எழுதி வேலைக்கு போன உடனே ஏறத்தாழ 150 பொண்ணு பார்த்து அதுல உங்க அத்தையை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க.

அங்கதான் மருமகளே என்னோட சோகக்கதை சொந்தக் கதை ஆரம்பமாச்சு. கல்யாணத்தன்னிக்கு மணவறையில உட்கார்ந்துட்டு இருந்தப்ப வோ்த்திடுச்சு. அதை பாா்த்த உடனே வேக வேகமாக வந்த எங்க அம்மா பட்டுப்புடவையில் துடைக்க முடியாதுன்னு தெரிஞ்சும் அந்த புடவையை வச்சு ஐயோ எம்பிள்ளைக்கு இப்படி வேர்க்குற மண்டபத்தை பொண்ணு வீட்டுல பிடிச்சிருக்காங்களே அப்படின்னு சொல்லி துடைச்சுவிட்டாங்க.

அன்னைக்கு கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடனே உங்க அத்தை எனக்கு போட்ட முதல் கண்டிஷன் இனிமே உங்க அம்மாகிட்ட நீங்க பக்கத்துல கூட போய் உட்காரக் கூடாது. உங்க அம்மா எந்த வேலை செஞ்சாலும் என் பொண்டாட்டிதான் எனக்கான வேலைகளை செய்யணும் அப்படின்னு நீங்க சொல்லணும்னு சொன்னா. சரி நம்ம மேல இருக்கிற பாசத்துல பேசுறா அப்படின்னு சந்தோஷப்பட்டு நானும் அதே மாதிரி நடந்துக்குறதா சத்தியம் கூட பண்ணிக் கொடுத்தேன். ஆனால் அந்த சத்தியம் பாசமா இல்லை அதிகாரமான்னு இன்னைக்கு வரைக்கும் என்னால புரிஞ்சுக்கவே முடியலை மருமகளே! முடியலை.

அன்னைக்கு நீ உங்க அத்தைகிட்ட வந்து ஒரு டயலாக் சொன்னியே! அந்த டயலாக்கை கொஞ்சம் கூட மாத்தாம என் மாமியார்கிட்ட நான் பொய்யா சொன்னேன். அப்படி சொல்லலைன்னா டெய்லி வாசல்ல முட்டிப் போடணும்னு உங்க அத்தை சொல்லிட்டா. என்ன இருந்தாலும் ஆம்பளை அப்படிங்கிற ஒரு கௌரவத்தை காப்பாத்திக்கனும் இல்லையா? அதுக்காக சரி சரின்னு தலையாட்டினேன். இன்னிக்கு வரைக்கும் தலையை மட்டும் தான் ஆட்டுறேன்.என்னோட சொக்கநாதன் என்னை வச்சு சொக்கட்டான் விளையாடுறான்.

எனக்கு சொர்க்கத்தில் கூட சோகத்தை தாங்க அனுப்பி இருக்கான்", என தன்னுடைய கதையை அவர் கூறி முடித்த பொழுது அம்பிகா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து இருந்தாள். "நாம சொன்ன சோகக் கண்ணீர் கதை அம்புட்டு காமெடியாகவா இருக்கு சொக்கநாதா?", என தன்னுள் வினவி கொண்டவர் மருமகளை பாவமாக ஒரு பார்வை பார்த்து வைத்தார்.

அவரின் பார்வையை பார்த்தவள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "மாமா! அக்கட சூடண்டி", எக அவரின் பின்புறம் திருப்பி காட்டினாள். அங்கே காளி தேவியின் மறு அவதாரமாக சுந்தரி நின்றுகொண்டிருந்தார். கணவர் தன்னை திரும்பி பார்த்த உடன் சுந்தரி "உன்னை கல்யாணம் பண்ணிட்டு இந்த பூலோகத்திலேயே நான் சொர்க்கத்தை பார்த்துட்டேன் அப்படின்னு நீங்க பெனாத்துனதெல்லாம் எவ்வளவு பெரிய பொய்ன்னு எனக்கு தெரியும்.

அது தெரிஞ்சிருந்தாலும் அந்த பொய்யிலேயே சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்த என்னை நேத்து வந்த மருமக முன்னாடி அசிங்கப்படுத்திட்டீங்க இல்லை. அம்மாவும், மகனும் இதை எல்லாம் காலங்காலமா மனசுக்குள்ள வச்சு பழி வாங்குறீங்களோ! என் கையால உங்களுக்கு இனி பச்சை தண்ணிக் கூட தர மாட்டேன்", என சுந்தரி மீண்டும் மலையேறினார்.


சுந்தரி மலையேறியதை பார்த்த அம்பிகா ஹா என்ற ஒரு சத்தத்தை எழுப்பி விட்டு தங்களின் அறைக்குள் சென்று விட்டாள். இவ்வளவு கலவரத்துக்கும் ஷ்யாம் அவனின் அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை. அதுதான் சுந்தரிக்கு உறுத்தலாக இருந்தது. அதனை சொல்லி சொல்லி சுதாகரிடம் புலம்பியவர் உடனே தன்னுடைய மொபைலை எடுத்து மகளுக்கு அழைத்துவிட்டார்.

ஷிவானி மறுபுறம் அழைப்பை ஏற்றவுடன் "உனக்கு விஷயம் தெரியுமா ஷிவானி? என் மகனை நான் ஆசையா பொத்தி பொத்தி வளர்த்தேனே! நேத்து வந்தவ முந்தானையில முடிஞ்சு வெச்சிகிட்டு என் முகத்தை பார்த்து கூட பேச விடாம செஞ்சிட்டாளே! இந்த கொடுமையை எங்க போய் சொல்றது?", என கதற ஆரம்பித்து விட்டார். இதே நிலைமை நாள்தோறும் தொடர ஆரம்பித்தது.

வீட்டில் இருக்கும் நேரங்களில் தன் அம்மாவிடம் என்ன ஏது என்று பேசாத ஷ்யாம் தன் மாமனாரின் அறிவுரையை பின்பற்றி கல்லூரிக்கு செல்லும் வழியில் "அம்மா வீட்ல உங்ககிட்ட சரியா சொல்லாம வந்துட்டேன்", என வீட்டில் பேசாததற்கு சேர்த்துப் பேச ஆரம்பித்தான். அதைப்போன்றே வீட்டிற்கு வரும் முன்னர் "அம்மா இன்னிக்கு வீட்ல வந்து உங்ககிட்ட பேச முடியாது.நிறைய வேலை இருக்கு. நோட்ஸ் எடுக்க வேண்டும்.அதனால இப்பவே கூப்பிட்டேன்", என்ற காரணங்களை அடுக்கிக்கொண்டே போக போக சுந்தரிக்கு புரிந்து போனது.

ஆனால் மகன் மறைமுகமாக மருமகளுக்கு தெரியாமல் அழைத்துப் பேசுவதை தாங்கிக்கொள்ள இயலாமல் ஒருநாள் அம்பிகாவிடம் "என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ?",என வெடித்து விட்டார். என்ன நினைச்சுகிட்டு இருக்கேனா என புரியாமல் பார்த்தவள் "என்னத்தை கேட்கிறீங்க? புரியுற மாதிரி பேசுங்க", என அலுத்துக் கொண்டே கூறினாள்.

"என் பையன் என் பேச்சை தட்ட மாட்டான். வீட்டு மாடியில் இருந்து குதி அப்படின்னு சொன்னா குதிச்சுடுவான். ஆனால் இப்ப என் மூஞ்சை கூட பாா்க்க மாட்டேங்குறான். போன வாரம் கடைக்கு போனப்ப அவனுக்கு பிடிச்ச கலருன்னு நான் எடுத்துட்டு வந்த பஞ்சு மிட்டாய் கலர் சட்டை போடாம நீ எடுத்துட்டு வந்த கண்ணை பறிக்கிற மாதிரி இருந்த ப்ளு கலரு சட்டைதான் புடிச்சிருக்குன்னு போட்டுட்டுப் போறான்.

நான் சமைச்சாதான் சாப்பிடுவான். இப்ப நான் தண்ணி எடுத்து வச்சா கூட அதை குடிக்காம உன்கிட்ட வாங்கி குடிக்கிறான். ஆசை ஆசையாய் பெத்து வளர்த்து,சீராட்டி உனக்கு கட்டிக் கொடுத்தா நீ குடும்பத்துக்குள்ள வந்து பிரிவினையை உண்டாக்குறியா? என் மகனை என் பேச்சைக் கேட்க விடாம செய்றது சரியா?", என அவர் அடுக்கிக் கொண்டே இருந்தார்.

இப்பேச்சு வார்த்தையின் பொழுது வீட்டில் அனைவருமே இருந்தனர். அவர் பேசுவதைக் கேட்டு சுதாகரும்,அரவிந்தும் தங்களுக்குள் பார்த்துக்கொண்டு எங்க அம்மாவும் இதே டயலாக்கை சொன்னாங்களே சொக்கநாதா என எப்பொழுதும் போல் மனதிற்குள் கூறிக் கொண்டனர்.

"ஓ! உங்க மனசுல இவ்வளவு இருக்கா? இது வெளியே காட்டிக்காம இத்தனை நாள் என்கிட்ட சிரிச்சுகிட்டே இருக்கீங்க. உங்க வழிக்கே வர்றேன். இன்னைக்கு வரைக்கும் மாமா உங்க பேச்சைதான் கேக்குறாரு. உங்க மகளோட புருஷன் அவரும் உங்க மக பேச்சுதான் கேக்குறாரு. அப்படி இருக்கிறப்போ உங்க பையன் மட்டும் ஏன் என் பேச்சைக் கேட்கக் கூடாது?

நீங்க மட்டும்தான் ஆசை ஆசையாக பெத்து சீராட்டி பாராட்டி வளர்த்தீங்களா? எனக்கும், அவங்களுக்கெல்லாம் தவிடு புண்ணாக்கு போட்டு வளா்த்தாங்களோ?", என அம்பிகாவும் பதிலுக்கு எகிறிக் கொண்டு நின்றாள். தான் பேசிய உடன் மகன் தன் அருகில் வந்து விடுவான் என எதிர்பார்த்த சுந்தரி அம்பிகா எகிறிய பொழுதும் எதுவும் பேசாமல் தன் அப்பாவின் அருகிலும், மாமாவின் அருகிலும் அமர்ந்துகொண்டு ஒரு வாரத்திற்கு முன்னர் வந்த நியூஸ் பேப்பரை எடுத்து அதில் மூழ்கிய தன் மகனைப் பார்த்த சுந்தரிக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது.

உன் மாமா பேங்க்ல பெத்த உத்தியோகம்னுதான் பேரு. ஆனா மனுஷனுக்கு ஒரு கூறும் பத்தாது. எங்கே எது பேசனும், எங்கே எது செய்யணும்னு இன்னைக்கு வரைக்கும் நான் சொன்னாதான் அவரு ஒழுங்கா செய்வாரு. எனக்கு தெரிஞ்ச விஷயம் அவருக்கு தெரியாது. சூதுவாது இல்லாத மனுஷன். மத்தவங்க அவரை ஏமாத்தக் கூடாது அப்படின்னுதான் நான் அவருக்கு ஒவ்வொன்னா சொல்லிக்கிட்டு இருக்கேன். தவிர இன்னைக்கு வரைக்கும் அவரை நான் அதிகாரம் பண்ணினது கிடையாது", என மருமகளிடம் கூறிய சுந்தரி சுதாகரின் புறம் திரும்பி "ஏங்க! என்னைக்காச்சு நான் உங்களை அதிகாரம் பண்ணி இருக்கேன்னானு சொல்லி தொலைங்",க என ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு கையை ஆட்டி ஆட்டி அவரிடம் கேட்டதில் மிரண்டுபோன சுதாகர் அதிகாரமா இல்லவே இல்லை என வேகவேகமாக பதிலளித்தார்.


என் மக புருஷன் கூட பிறந்தவங்க மூணு பேரு. அவங்க என்ன கேட்டாலும் இந்த மனுஷன் செஞ்சிடுவாரு. அவங்களுக்கு செஞ்சிட்டு இவ ஒன்னும் இல்லாம இருந்தா பிறகு அவளும் அவ புள்ளைகளும் என்ன செய்றது? அதனாலதான் அவளோட புருஷனை அவ இறுக்கி பிடிக்குற. அவரவர் இஷ்டத்துக்கு விட்டா அவங்க குடும்பத்துக்கு யார் செய்வாங்க?

கல்யாணம் ஆகி மூணாவது நாளே புருஷனை முந்தியில முடிச்சுக்கிட்ட நீயா செய்வ?", என சுந்தரி தன் மகளின் பங்கிற்கும் வியாக்கியானம் பிடித்தார். தாய் தனக்காக பேசியவுடன் வராத கண்ணீரை துடைத்துக் கொண்ட ஷிவானி தன் கணவனின் புறம் பாவமான ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

சுந்தரி பேசியதையும் ஷிவானியின் பார்வையையும் பார்த்த அரவிந்த் "அடப்பாவிங்களா! போன மாசம் கூட எங்க அம்மாகிட்ட இருந்து அந்த சொத்தை பிரிச்சு வாங்கிட்டு வந்து ஒத்த பைசா மிச்சமில்லாமல் என் பொண்டாட்டி கையில தானே கொடுத்தேன். நானா இருக்கிறதெல்லாம் என் அம்மாவுக்கு கொடுக்கிறேன். நல்ல நேரம், காலம்தான் என நினைத்துக் கொண்டான்.

சுந்தரி இவ்வளவு பேசிய பின்னர் இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது என நினைத்த அம்பிகா தன் பேச்சினை தொடர்ந்தாள்." நீங்க சொன்ன அத்தனை கூறுகெட்டத்தனமும், அத்தனை துப்புக்கெட்டத் தனமும் என் புருஷன்கிட்டே இருக்கு. பேருக்குதான் வாத்தியாரு. ஆனால் மனுசனுக்கு பாடப்புத்தகத்துல இருக்குற பாடத்தை தவிர்த்து வெளியுலகத்தை பத்தி ஒன்னுமே தெரியலை.


அப்படி இருக்கிறவரை நாள பின்னே உங்க மாப்பிள்ளையை அவங்க கூட பிறந்தவங்க ஏமாத்துற மாதிரி என் புருஷன அவர் கூட பிறந்தவங்க ஏமாத்திட்டாங்கன்னா என்ன செய்றது? அதனால்தான் நான் இப்பவே அவரை உங்களை மாதிரியும், உங்க மகளை மாதிரியும் இறுக்கிப் பிடிக்கிறேன்.இப்ப பிடிச்சாதான் நாளைக்கு அவரு என் குடும்பத்தை பார்ப்பாரு", என சுந்தரியின் வார்த்தைகளிலேயே அம்பிகாவும் பதிலளித்தாள்.

அதனை பார்த்த சுதாகருக்கும், அரவிந்தனுக்கும் எழுந்து நின்று குத்து பாட்டு போட்டு ஆட வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது. செயல்படுத்தினால் சேதாரம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தினால் இருவரும் தங்கள் ஆசையை அடக்கிக் கொண்டனர். அம்பிகா பேசியதில் விக்கித்துப் போன சுந்தரி தன் மகளைப் பார்த்தவுடன் ஷிவானி பேப்பரில் தலையை நுழைத்துக் கொண்டிருந்த ஷ்யாமை தன் கைகளால் மொத்து மொத்தென்று மொத்தி

"ஏன்டா உன் பொண்டாட்டி அம்மாவை இவ்வளவு பேசுறா. நீ கல்லுளி மங்கன் மாதிரி உட்காந்துகிட்டு இருக்க.தடிமாடு மாதிரி வளர்ந்த உன்னை அம்மா இன்னைக்கு வரைக்கும் கன்குக்குட்டி, செல்லக் குட்டின்னு கொஞ்சிட்டு இருக்காங்க. நீ கொஞ்சம் கூட நன்றி இல்லாம அவளை பேசவிட்டு வேடிக்கை பார்க்குற", என தன் பங்கிற்கு பேசி வைத்தாள்.

அக்கா கேட்ட உடன் அவளுக்கு பதில் கூறாமல் தன் மனைவியின் புறம் ஒரு பார்வையை செலுத்திய ஷ்யாம் பதில் பேசட்டுமா என்ற தொனியில் அவளிடம் பார்வையிலேயே கேள்விக்கணை வீசினான். ஷ்யாம் தன்னை பார்த்தவுடன் கர்வ புன்னகை ஒன்றை சிந்திய அம்பிகா பேசுமாறு கையினாலேயே அனுமதி அளித்தாள்.

" அக்கா! அம்மா சொன்ன மாதிரி தான் இப்போ நடந்துக்குறேன். உன்னை கல்யாணம் பண்ணி அனுப்புனப்ப அம்மா உன்கிட்ட சொன்னாங்க தானே! அதையெல்லாம் நீ கேட்டு நடந்துக்கிற தானே! உனக்கு சொன்ன அதை வார்த்தைகள் தானே எனக்கும் பொருந்தும். மாப்பிள்ளை அவங்க வீட்டுக்கே போகக்கூடாது.நீ கல்யாணம் முடிஞ்சி போன அன்னைக்கே தனிக் குடித்தனம்தான் போகணும் அப்படின்னு உன்னை பொண்ணு பாா்த்துட்டு போன அன்னைக்கு அம்மா உனக்கு சொன்னாங்க. நீயும் அதே மாதிரியே நடந்துகிட்ட.

நான் இப்ப அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசினா என் பொண்டாட்டியோட நான் வேற வீடு பாா்த்து போகவேண்டியதா இருக்கும். காலத்துக்கும் அம்மாவையும் அப்பாவையும் நீ பார்த்துடுவியா", எனக் கேட்டவன் வேகவேகமாக தலையாட்டி கொண்டான். அவன் பேசியதிலேயே அதிர்ந்த ஷிவானி அவன் தலையாட்டியதும் என்னடா என வினவினாள்.

"அதெல்லாம் பார்த்துப்ப.அப்பாவுக்கு வா்ற பென்சன் அம்மாகிட்ட இருக்குற நகைக்காக நீ கண்டிப்பா எங்க அம்மாவை மக என்னை மாதிரி வேற யாராலும் பார்க்க முடியாதுன்னு சொல்லி பார்த்துப்ப. அது எதுவுமே இல்லாம நீ அம்மா, அப்பாவை பார்த்துக்குறதா இருந்தா சொல்லு. நான் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறேன்",எனக் கூறினான்.

அவன் பேசியதில் அதிர்ந்துபோன சுந்தரி "கன்னுகடகுட்டி இதெல்லாம் இவ சொல்லிக் கொடுத்து நீ பேசுறியா? உனக்கு இந்த மாதிரி எல்லாம் பேச ஒரு வார்த்தை தெரியாதே. எப்படி மாத்தி வச்சிருக்கா?", என அவனது அருகில் வந்து மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.

"அம்மா! 28 வயசு வரைக்கும் உங்க பேச்சை மட்டும்தான் கேட்டுருக்கேன். இனி மீதி இருக்கிற காலத்துக்கு அவதானே என் கூட வரப் போறா. அதனால அவ பேச்சைதானே நான் கேட்கணும். அப்பாவும், மாமாவும் என்ன செய்றாங்களோ அதைதான் நானும் ஃபாலோ பண்றேன். அம்மா நீங்க இப்படி அழுதுகிட்டு சண்டை போட்டீங்கன்னா ரெண்டு தெரு தள்ளி ஒரு வீடு காலியா இருக்கு. நா அங்க குடி போயிருவேன். நீங்களே யோசிச்சு முடிவு பண்ணிக்கோங்க", என்ற ஷ்யாம் மறக்காமல் தன் கையில் இருந்த பேப்பரை எடுத்துக் கொண்டு அம்பிகாவிடம் உள்ளே போகட்டுமா என அனுமதிக் கோரினான்.

அவன் கேட்டதில், பேசியதில் மகிழ்ந்து போயிருந்த அம்பிகா "போங்க, போங்க! போய் நாளைக்கு கிளாஸ்க்கு நோட்ஸ் எடுக்கணும்னு சொன்னீங்க இல்லை. அந்த வேலையை பாருங்க. பேப்பர் எடுத்து மடிச்சு வைங்க", என தன்னுடைய அதிகாரத்தை அனைவருக்கும் முன் கனவின் மீதம் காட்டி சுந்தரிக்கு தான் அவரது வாழ்நாள் விரோதி என்பதை உணர்த்தினாள்.

ஷ்யாம் உள்ளே சென்றவுடன் தன் மாமியாரை பார்த்த அம்பிகா இதுக்கெல்லாம் ஆரம்ப காரணம் நீங்க மட்டும்தான் அத்தை! உங்க பேச்சை உங்க வீட்டுக்காரர் கேட்கணும். உங்க மகளோட பேச்சை உங்க மருமகன் கேட்கணும். நீங்க ஆசையா பெத்து சீராட்டி ஊட்டி வளர்த்த உங்க மகனுக்கு வர போறவ உங்க மகனோட பேச்சு கேட்கணும்.

உங்களை கல்யாணம் பண்ணிட்டவரையும், உங்க வீட்டுக்கு மாப்பிளையா வந்தவரையும், மருமகளாக வந்தவளையும் அவங்க வீட்டுல உங்களை வளர்த்த மாதிரிதானே வளர்த்திருப்பாங்க. நீங்க செய்ற விதம் எப்படி இருக்கு தெரியுமா? நீங்கள் சமைக்கிறதுதான் பொங்கல். நாங்க சமைச்சா வெறும் களி அப்படிங்கற மாதிரி இருக்கு.

"உங்க மகன் உங்களோட பேச்சு மட்டுமே கேட்டுட்டு இருக்கனும்னா கல்யாணமே பண்ணி தராம உங்களுக்கு ஆமாம் சாமி போடும் அம்மாஞ்சியா வச்சுக்கணும். இன்னொரு வீட்டுலிருந்து மருமகளை கூட்டிட்டு வந்து உங்க குடும்பத்துக்கு தலையாட்டுற மாடு மாதிரி வச்சுக்க நினைக்கக்கூடாது.

என் புருஷன் வேலைக்கு போறப்ப வர்றப்ப உங்களுக்கு போன் பண்ணி பேசுறது எனக்கு தெரியாதுன்னு நெனச்சிகிட்டு இருக்கீங்களா? எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு. இதுக்கு மேலயும் என் மகனை பிரிச்சி, முடிஞ்சு வெச்சுக்கிட்டா அப்படிங்கிற டயலாக் எல்லாம் சொல்லிட்டு இருந்தீங்கன்னா கொஞ்சம் கூட யோசிக்காமல் எங்க அம்மா வீட்டுக்கு உங்க மகனை வீட்டோட மாப்பிள்ளையாக் கூட்டிட்டு போயிடுவேன். அதனால் அளவா உங்க டிராமாவை வச்சுக்கோங்க", எனக் கூறிவிட்டு தங்களின் அறைக்குள் நுழைந்த அம்பிகாவை பார்த்த சுந்தரியின் கண்களில் வெறுப்பு உச்சத்தில் இருந்தது.

சுந்தரியின் வெறுப்பு ஷ்யாமின் வாழ்வினை சுக்குநூறாக்கிடுமா? இல்லையெனில் இதே வெறுப்பு விருப்பமாகிடுமா?
 
  • Like
Reactions: Priyamadhavan