Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மஹாளய அம்மாவாசை - சாரதா கிருஷ்ணன் | SudhaRaviNovels

மஹாளய அம்மாவாசை - சாரதா கிருஷ்ணன்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
வரும் 17ம் தேதி செப்டம்பர் மாதம் மகாளய அமாவாசை வருகிறது . மஹாளய அமாவாசை என்றால் என்ன.....? பார்க்கலாம். ஆவணி மாதம் பௌர்ணமியில் இருந்து புரட்டாசி மாதம் அமாவாசை வரை வரும் நாட்களை மாளய பட்சம் என்று அழைப்பார்கள். மகாளயம் என்றால் கூட்டமாக என்று அர்த்தம் .பக்ஷம் என்றால் 15 நாட்கள். நம்முடைய முன்னோர்கள் கூட்டமாக இந்த 15 நாட்களும் பூலோகம் வந்து தங்களுடைய வாரிசுகளின் குடும்பத்தைக் காண அவர்கள் அளிக்கும் உணவை உண்ண ஆர்வத்துடன் பூமிக்கு வருவார்களாம் அவர்களுக்கு நாம் எள்ளும் தண்ணீரும் வார்த்து அவர்களுக்கு பிடித்த உணவை படைத்தால் நம்முடைய முன்னோர்கள் மகிழ்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள். பித்ருக்களின் சாபங்கள் கூட நீங்கிவிடுமாம், அவ்வளவு மகிமை வாய்ந்தது இந்த மாளயபட்சம். நாம் மாதா மாதம் செய்யும் அமாவாசை தர்ப்பணம் எள்ளும் நீரும் எம்தர்மனின் கையில் போய் சேருமாம்.எமன் அதை உரியவரிடம் சேர்த்து விடுவாராம்.ஆனால் இந்த 15 நாட்களும் வரும் திதிகளில் அதாவது பிரதமை முதல் சதுர்த்தசி வரை நம்முடைய முன்னோர்கள் நம்வீட்டீற்க்கு வந்து ஆசை தீர சாப்பிடுவார்களாம் இறந்த திதிகளிலும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம், இல்லை ஏதாவது ஒரு நாளில் கூட செய்யலாம்- அதிலும்


அஷ்டமி திதி வரும் தினம் மத்யாஷ்டமி, நவமி திதி வரும் மகா நவமி என இந்த இரண்டு தினங்களில்ஏதாவது ஒரு நாளில் நாம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் /திதி கொடுக்கலாம் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த தினங்கள். அதிலும் மகா நவமி சுமங்கலியாக இறந்து போனவர்களுக்கு திதி கொடுக்க ரொம்ப விசேஷமான தினம். நம் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகள் வைத்து இலையில் பரிமாறி பூஜித்து காக்கைக்கு போட்டு பின்பு அன்னதானம் இடலாம். அன்று அன்னதானம் வஸ்திர தானம் சில பேர் குடை செருப்பு என்று கூட கொடுப்பார்கள். ஆனால் அன்னதானத்திற்கு ஈடானது எதுவுமே இல்லை.


மஹாளயபட்சத்திற்கும் கொடை வள்ளல் கர்ணனுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது அது என்ன என்று பார்ப்போமா ....நமக்கெல்லாம் தெரியும் இல்லை என்று சொல்லாமல் தன் உயிர் இருக்கும் வரை தானம் அளித்தவன் கர்ணன். அந்த அர்ஜுனனின் வில்லும் கர்ணனின் உயிரை எடுக்கவில்லை அம்பு குத்தி கீழே சாய்ந்த கர்ணன் ரத்தம் ஒழுக நிலத்தில் படுத்திருக்க அவன் உயிர் ஊசலாடிக் கொண்டு தான் இருந்தது. அளித்த தானங்கள் தர்மங்கள் அந்த உயிரை பாதுகாத்தது. அதனால்தான் கண்ணபிரான் முதியவர் போல் வேடமிட்டு அந்த தர்மத்தையும் தானமாக பெற்றுக் கொண்டார் .அதன்பிறகுதான் கர்ணனின் உயிர் பிரிந்தது. கண்ணனின் கட்டளைப்படி எமதர்மன் கர்ணனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார் அங்கே கர்ணனும் சந்தோஷமாக இருந்தான். ஆனால் அவனுக்கு ஒரு நாள் பசி எடுத்தது.. சொர்க்கலோகத்தில் சாப்பிட என்று எதுவுமே இல்லை மற்ற எல்லா வசதிகளும் இருந்தது. அங்கு இருந்தவர்களிடம் அவன் கேட்டபோது அவர்களுக்கு ஒரே ஆச்சரியம், எங்களுக்கு அப்படி எல்லாம் பசி ஒன்றும் இங்கே எடுக்கவே எடுக்காது, ,இதுவரைக்கும் பசி எடுக்கவும் இல்லை என்றார்கள். கர்ணனுக்கு ஒரே குழப்பமாக போய்விட்டது. எமதர்மராஜன் இடம் சென்று கேட்டான் .அவர் பிரகஸ்பதி இடம் கர்ணனை அழைத்துச் சென்றார். பிரகஸ்பதி தியானம் மூலமாக ஒரு விஷயத்தை கண்டறிந்தார், கர்ணனிடம் சொன்னார், “, கர்ணா சிறந்த கொடை வள்ளல் நீ, தானத்தில் உன்னை மிஞ்ச ஆள் இல்லை, ஆனால் நீ பூவுலகில் ஒரு முறை கூட உன் வாழ்நாளில் அன்னதானம் என்ற ஒன்றை செய்யவே இல்லை, அதனால்தான் உனக்கு பசி எடுக்கிறது “. கர்ணன் பதட்டம் அடைந்தான். “ குருவே , இப்போது நான் என்ன செய்ய வேண்டும்”.

“ உன்னுடைய வலது கை ஆட்காட்டி விரலை வாயில் வைத்து வைத்துக்கொள் உன் பசி தீரும் “ அதுபோலவே கர்ணனும் செய்தான் அவன், பசி அடங்கி விட்டது. மிக ஆச்சரியமாக போயிற்று.” குருவே, இது என்ன புதுமையாக இருக்கிறதே!” பிரகஸ்பதி சொன்னார் ஒரு முறை உன்னிடம் பசிக்காக அன்னம் கேட்டு வந்த ஒருவரை நீ அன்னதானம் கூடம் ஒன்றை உன் சுட்டுவிரலால் கைகாட்டி அங்கே சென்று உணவு அருந்துங்கள் என்று சொல்ல அவரும் அங்கே சென்று வயிறார உண்டு மகிழ்ந்தார் அதனால் தான் உன் சுட்டு விரல் உன் பசியை போக்கியது” என்றார். கர்ணன் , “அப்படி என்றால் நான் அன்னதானம் செய்ய என்ன வழி ,அது செய்தால் தான் என்னுடைய பசி தீரும் என்றால் அந்த ஒரு தானத்தையும் நான் செய்ய ஆசைப்படுகிறேன், பூமிக்குச் சென்று சிலநாள் இருந்து அன்னதானம் செய்து என்னுடைய அந்தக் குறையைப் போக்கிக் கொள்ள நினைக்கிறேன்” என்றான். எமதர்மன் “சரி போய்விட்டு வா, ஆனால் அன்னதானம் முடிந்ததும் 15 நாட்களில் நான் பூமிக்கு வருவேன் உன்னை கூப்பிட, என்னுடன் வந்து விட வேண்டும் “என்றார். அதன்படி கர்ணன் பூலோகம் சென்று அவன் மனக்குறை தீரும் வண்ணம் நிறைய அன்னதானம் செய்தான். எமதர்மனும் வந்து கர்ணனுக்கு காத்திருந்து மீண்டும் இருவரும் சொர்க்கலோகத்துக்கு சென்றுவிட்டனர்.


கர்ணன் எமதர்மராஜனுக்கு நன்றி சொன்னான். எமனும் , “ஆமாம் கர்ணா நீ சொன்ன சொல் தவறாதவன், அதற்காக நானும் உனக்கு ஒரு வரம் தருகிறேன் என்ன வேண்டும் கேள்” என்றார் . கர்ணன் , “நான் அன்னதானம் இட்ட இந்த 15 நாட்கள் பித்ருக்கள் அனைவருக்கும் பூலோகத்தில் எல்லோரும் அவரவர்கள் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து அன்னம் தானம் செய்ய பித்ருக்கள் பூலோகம் சென்று உணவருந்தி அவர்களை வாழ்த்தட்டும். திதி செய்யும் சந்ததி இல்லாத பித்ருக்கள் கூட மற்றவர்களுடன் சேர்ந்து வந்து உணவருந்தலாம்” என்றான். எமதர்மராஜாவும் “ அப்படியே ஆகட்டும்”. என்றார்.
இவ்வளவு பெருமைகள் கொண்ட மஹாளய அமாவாசையை பக்தியுடன் கொண்டாடுவோம். அதிலும் காவெரி கங்கை போன்ற புண்ணிய நதிகரைகளிலும் ராமேஸ்வரம் காசி புண்ணியஸ்தலங்கள்லும் செய்வது மிக விசேஷமானது.
 
Last edited: