மாயா- கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,828
1,976
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

"மாயா" கதைக்கான அத்தியாயங்கள் இங்கு பதிவிடப்படும்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
201
436
63
தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளையாக உள்ளத்தைக் கொண்டிருந்தாலும், கள்ளிச் செடியாகவே மற்றவரின் பார்வைக்குத் தோற்றமளிப்பவள். நேசத்துடன் கரம்பிடித்தவனுக்கே, புரியாத புதிர் அவள்.
பெற்றோருக்கு, செல்ல மகள். கணவனுக்கு, அன்பான ராட்சஷி.

விதிவசத்தால் வாழ்க்கைப் பாதையின் திசைமாற, அன்பைப் கொட்டியவர்களுக்கு எட்டிக் காயாகக் கசந்து போனவள்.

அவள் – மாயா!
 
  • Like
Reactions: Buvik

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
201
436
63
அத்தியாயம் - 1

பால் நிலவின் குளிர்ச்சியும், தென்றலின் வருடலும், அந்த இரவை ரம்யமாகக் கொண்டிருந்தது. அவன் ஒருவனைத் தவிர.

‘இப்படியொரு இக்கட்டில் தான் சிறைப்பட்டிருப்பதை எண்ணி வருந்துவதா, இல்லை மகனுக்காக இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதா?’ என்று தெரியாமல் உணர்வுகளைக் களைந்த முகத்துடன் ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தான் சத்ய பிரகாஷ்.

‘வாழ்க்கை எப்போதும் ஒன்று போலவே இருப்பதில்லை’ என்று புரிந்து கொண்டிருந்த சத்ய பிரகாஷுக்கு, தன்னை மீறி நடந்து கொண்டிருப்பதெல்லாம் விதியின் சதியாகத் தான் தோன்றியது.

செல்வச் செழிப்பில் வளர்ந்தவளின் அன்பில் திளைத்து, குடும்பத்தில் இணைந்து, பிள்ளையொன்றை ஈன்றெடுத்தவள் எதிர்பாராமல் இவ்உலகை விட்டுச் சென்றது ஒரு கொடுமை என்றால், உடன் வளர்ந்தவளை இரண்டாவதாகத் திருமணம் செய்யவேண்டிய கட்டாயத்தில், தனது வாழ்க்கையின் திசையே மாற்றிவிட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டிருந்தான்.

‘மாயா! உனக்கேன் இவ்வளவு அவசரம்?’ என்று அவன் மனத்திற்குள் வெதும்பிக் கொண்டிருக்க, ஒரு கையில் வெள்ளிச் செம்பில் பாலும், மறுகையால் தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பிடித்தபடியுமாக அறைக்குள் வந்தாள் பவித்ரா.

பால் சொம்பை மேஜை மேல் வைத்துவிட்டுக் குழந்தையைக் கட்டிலில் இட்டவள், பால்கனிக்குச் செல்லும் வாசற்படியில் வந்து நின்றாள். அவள் வந்ததை அறிந்திருந்த போதும், அவனது கவனம் அண்டவெளியை ஆராய்வதைப் போலச் சுற்றித் திரிந்தது.

இருட்டிலிருந்த அந்த இடத்தில், அறையிலிருந்து வந்த வெளிச்சத்தினால் விளைந்த தனது நிழல், அவனது நிஜத்துடன் இணைந்து தெரிய, ஆயாசத்துடன் பெருமூச்சு விட்டாள்.

சில நொடிகள் நின்று பார்த்தவள், “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நின்னுட்டு இருக்கறதா உத்தேசம்?” என்றாள் மெல்லிய ஆனால், அழுத்தமான குரலில்.

சொந்தத் தாய்மாமனின் மகள்தான். ஆனால், இத்தனை ஆண்டுகளில் அவள் ஒருமுறை கூட இப்படித் தன்னிடம் நின்று பேசியதில்லை என்றுணர்ந்த சத்ய பிரகாஷ், திரும்பி அவளைப் பார்த்தான்.

சந்தன நிறச் சேலையில் வாசற்படியின் இருபுறமும் கைகளை ஊன்றியபடி நின்றிருந்தவளை ஆழ்ந்து பார்த்தான். ஆனால், அந்தப் பார்வையில் துளியும் மனைவி என்ற உரிமையோ; காதலோ இல்லை.

‘நினைத்திருந்தால், இவளால் இந்தத் திருமணத்தை நிறுத்தியிருக்க முடியும். ஆயினும், அதைச் செய்யாமல் என்னுடைய வாழ்க்கையை மட்டுமல்லாமல், தன்னுடைய வாழ்க்கையும் அல்லவா கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறாள்’ என்ற ஆற்றாமை உள்ளுக்குள் துளிர்த்தது.

எதுவும் சொல்லாமல் இறுகிய முகத்துடன் அவன் உள்ளே வர, அவள் ஒதுங்கி வழிவிட்டு நின்றாள்.

கதவைத் தாளிட்டவள், “நடந்த எதுக்குமே, நாம ரெண்டு பேரும் பொறுப்பாக மாட்டோம் அத்தான்!” என்றாள் தணிந்த குரலில்.

அதுவரை இருந்த பொறுமை சட்டெனப் பறந்து போக, சுர்ரென கோபம் ஏறியது அவனுக்கு.

“நீ நினைச்சிருந்தா தடுத்திருக்க முடியும்!” என்றான் உறுதியான குரலில்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நீங்களும் அதைச் செய்திருக்கலாம்” என்றாள் நிதானமாக.

“புத்திச்சாலித்தனமா பேசறதா நினைப்போ?” என்றான் கடுப்புடன்.

“என்னைக்குமே… தேர்ந்தெடுக்கற உரிமை, பிச்சைக்காரங்களுக்குக் கிடையாது!” என்றாள் அவளும் சற்றுக் காட்டமாக.

“ஏய்! நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசற? உன்னைப் பிச்சைக்காரி மாதிரியா, எங்க அம்மா வளர்த்தாங்க? சொந்தப் பிள்ளை, என்னைக் கூட ஹாஸ்டல்ல விட்டுட்டு, உன்னைத் தானே பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டாங்க. மாயா, உன்னைச் சொந்தத் தங்கை மாதிரித் தானே பார்த்துக்கிட்டா. மகாராணியா தானே இந்த வீட்டில் இருந்த. இதுல, பிச்சைக்காரி எங்கே வந்தா?” என்றான் ஆத்திரத்துடன்.

“நான் சொல்ல வந்ததை, நீங்க சரியாகப் புரிஞ்சிக்கல. இன்னைக்கு என்னோட கல்யாணம் நின்று போக நேரடியாக இல்லனாலும், நீங்கதான் காரணம்” என்று அவள் உரைக்க, அவன் இறுகிய முகத்துடன் மௌனமாக நின்றான்.

‘உண்மை தானே! மாப்பிள்ளை வீட்டில் தாங்கள் இருவரும் ஒரே வீட்டில் இருப்பதையும், முக்கியமாக நான் மனைவியை இழந்தபின் இந்தப் பெண்ணைத் தங்கள் வீட்டிலேயே வைத்திருந்ததும், குழந்தையை அவள்தான் வளர்த்து வருகிறாள் என்று அம்மா சொன்ன சொல்லும் தான் இவளது நிலைக்குக் காரணம்.

நானும் அமைதியாக இருந்திருக்கலாம். இதையெல்லாம் காரணம் காட்டித் திருமணத்திற்கு முதல் நாள் இரவு, உறவினர்கள் தவறாக பேசுகிறார்கள். அதனால், வரதட்சணையைச் சற்று அதிகம் கேட்டதும், வெகுண்டெழுந்து சண்டையிட்டதால் தானே தனது தலையும் அங்கே உருண்டது. அதற்குமேல் எதற்கும் இடம் கொடுக்காமல், அம்மாவும், மாமனாரும் சேர்ந்து தன்னையல்லவா மணமகனாக மாற்றிவிட்டனர்’ என்று கோபம் இப்போது அவர்களின் மீதும் பாயத் துவங்கியது.

அவனது மௌனம் அவளுக்குப் பலத்தை அளிக்க, “சின்ன வயசுலயே அம்மாவை பறிகொடுத்துட்டேன். அத்தைதான் எனக்கு எல்லாமா இருந்து வளர்த்தாங்க. நீங்க அத்தை மகனா இருந்தாலும், ஒரு நாளும் உங்களை எனக்குச் சொந்தமாக்கிக்கணும்னு கனவுல கூட நினைச்சதில்ல.

சொல்லப்போனா உங்களைவிட எனக்குத் தான் அதிர்ச்சியும், வேதனையும் அதிகம். எல்லாப் பெண்களுக்குமே கணவன் தனக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற எண்ணம் இருக்கும். ஆனா, அந்த நினைப்புக் கூட குற்றம்ங்கறது போல எனக்கு நடந்திருக்கு. என் கழுத்தில் தொங்கிட்டு இருக்க இந்தத் தாலிக்கு, நான் உரிமையானவள் தானா? அந்த உரிமை எனக்குக் கிடைக்குமா?

நீங்க, மனைவியை இழந்துட்டு நிக்கிறீங்க. உங்களுக்கு, அவங்களோட வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திடுமா? என்னால அதை மாற்ற முடியுமா? அப்படி மாத்த நான் மேனகையாவா மாற முடியும்? உங்களைவிட, என்னோட சூழ்நிலைதான் இங்கே ரொம்ப மோசமா இருக்கு” என்றவளது குரல் தழுதழுத்தது.

“யாரும் என்னை, இந்தக் கல்யாணத்துல உனக்குச் சம்மதமான்னு கேட்டெல்லாம் நடத்தி வைக்கல. இதுதான் உன்னோட வாழ்க்கைன்னு, பிடிச்சித் தள்ளி விட்டுட்டாங்க. எல்லோருக்கும் ஒரு சுயநலம். அதுல, என்னோட விருப்பு வெறுப்பெல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்க, யாருக்கும் தோணல. எல்லாத்தையுமே விதின்னும் விட முடியல! நாளைக்கு விடியல் எப்படி இருக்கும்ன்னும் தெரியாது. இனி, ஒவ்வொரு நாளும் எனக்குப் போராட்டமாகத் தான் இருக்கப் போகுது” என்றவள் ஆயாசத்துடன் கட்டிலில் அமர்ந்தாள்.

குற்ற உணர்ச்சியுடன் அவளைப் பார்த்தான் சத்ய பிரகாஷ்.

“ரொம்ப ஓய்ஞ்சி போயிருக்கேன். ப்ளீஸ்! நான் படுத்துக்கட்டுமா?” என்று இறைஞ்சிய குரலில் அவள் கேட்டபோது, அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

அவன், “ம்ம்” என்றதும், “தேங்க்யூ!” என்றவள் குழந்தையை கட்டிலின் நடுவில் இட்டவள், ஒரு பக்கத்தில் படுத்தாள்.

சற்றுநேரம் நின்று அவளைப் பார்த்தவனுக்கு, தன்னைவிட பாதிக்கப்பட்டிருப்பது அவள்தான் என்று புரிய, பெருமூச்சுடன் கட்டிலின் மறுபக்கம் வந்தான். குழந்தையின் நெற்றியில் புரண்ட கேசத்தை விலக்கி முத்தமிட்டவன், விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் வீழ்ந்தான்.

மனம் இன்னமும் உலைகளமாகத் தான் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது மனைவி என்ற ஸ்தானத்தில் வந்திருப்பவளுக்கும் சேர்த்து யோசித்தது.

நாளைய விடியல், யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? இதையும், அந்த விதியினிடத்திலேயே விட்டுவிடுவது தான் புத்திசாலித்தனம்.

அத்தியாயம் – 2

ஈர இதழ்கள் தனது கன்னத்தில் அழுந்த பதிவதை அறைகுறை உறக்கத்திலிருந்த சத்ய பிரகாஷ் உணர, புன்னகையுடன் அவளை வளைத்து அணைத்தான்.

விரும்பி அவனது அணைப்பில் சிறைபட்டாலும், “அச்சச்சோ மாம்ஸ்! நான் குளிச்சிட்டேன்” என்றாள் சிணுங்கலுடன்.

அவளை இழுத்துக் கட்டிலில் கிடத்தியவன், “அப்போ எதுக்குடி என்னை வந்து உசுப்பேத்தற?” என்றபடி அவளை இறுக அணைத்தான்.

“ம்ம், இன்னைக்கு ஆஃபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. சீக்கிரம் கிளம்பணும்ன்னு நேத்தெல்லாம் பாட்டுப் பாடினதால” என்றபடி அவனது கன்னத்தில் மூக்கை உரசினாள்.

“அதுக்கு இப்படியா எழுப்புவாங்க?” என்றபடி அவளது கழுத்தில் முகம் பதித்தான்.

“டைம் ஆகலயா மாம்ஸ்!” என்று போலியாக அவனைச் சீண்டியவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளது குறுகுறு பார்வையைக் கண்டதும், “சரியான கள்ளிடி நீ!” என்றபடி அவளை முழுதாக ஆட்கொண்டான்.

கிர்ரென விடாமல் அலராம் அடிக்க, “மாம்ஸ்! அலராம் அடிக்குது” என்று அவள் இரகசியக் குரலில் பகர, “அதுவேலையை, அது பார்க்குது. நம்ம வேலையை, நாம பார்ப்போம்” என்றவன் அவளது இதழ்களைச் சிறைபிடித்தபடி, மொபைல் அலாரத்தை நிறுத்தத் தனது கைகளைத் துழாவினான்.

திடீரென வெளியே பாத்திரம் விழும் சப்தம் கேட்க, படாரெனக் கண்களைத் திறந்தான். தனது அணைப்பில் இருந்தவள், எதிரில் புகைப்படமாகச் சிரித்துக் கொண்டிருப்பதை, ஏமாற்றத்துடன் பார்த்தான்.

மனம் வெறுமையாக இருந்தது. வாழ்க்கையே கனவாகப் போனதை எண்ணிச் சோர்ந்த மனத்துடன், அலாரத்தை நிறுத்திவிட்டு எழுந்தான். குளித்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்லத் தயாரானவன், அவளது புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தனது வாழ்க்கையிலிருந்து மொத்த சந்தோஷத்தையும் துடைத்தெடுத்துக்கொண்டு மறைந்து போனவளின் நினைவு, எப்போதையும் விட இன்று அவனை அதிகமாகத் தாக்கியது.

கோடைக்கு முன்பான வசந்தகாலமாக தன் வாழ்க்கையில் வந்தவள், சித்திரை வெயிலெனச் சுட்டெரித்திருக்கிறாள். அதேநேரம், முன்பனியாக குளிர்விக்கவும் செய்தவள். அவளில்லாத இந்த வாழ்க்கை, அவனுக்கு இலையுதிர்க் காலமாகத் தோன்றியது.

‘நீ இல்லாத காலங்கள் கூட எனக்குப் பழகிவிட்ட நேரத்தில், வேறொருத்தியின் வரவால் செய்வதறியாமல் தவிக்கிறேனே! விருப்பமில்லாத போதும், காலத்தின் கட்டாயத்தால் என் வாழ்க்கையில் இணைந்துவிட்டவளை என்ன செய்வது? அவளுக்கான நியாயத்தை, என்னால் வழங்க முடியுமா?’ என்று யோசித்தவனுக்குக் கண்ணோரங்கள் துளிர்த்தன.

“ப்பா!” என்றழைத்தபடி காலைக் கட்டிக்கொண்ட மகனைக் கண்டதும் கண்களைத் துடைத்துக்கொண்டவன், “மனு கண்ணா!” என்றபடி தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டான்.

கன்னத்தில் குழிவிழச் சிரித்த மகனின் முகத்தில், தனது மனங்கவர்ந்தவளின் முகமே பிரதி பிம்பமாகத் தெரிய, மகனைச் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

எந்தச் சலனமும் இல்லாமல் சமையலறையில் சுழன்றுகொண்டிருந்த மருமகளை, வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் மனோன்மணி.

மகளைப் போலத் தன்னால் வளர்க்கப்பட்டவள், இக்கட்டான சூழ்நிலையில் தன்னாலேயே மருமகளாக, ஆக்கப்பட்டதில் அவருக்குமே வருத்தமாக இருந்தது. தனது மணவாழ்க்கைக் குறித்து ஒவ்வொரு பெண்ணிற்குமே கனவுகள் இருக்கும். அவை அனைத்தையும் சிதைத்து, தன் மகனே ஆனபோதும், இரண்டாம் தாரமாக கொண்டு வந்ததை எண்ணி முன்தினத்திலிருந்து மனத்திற்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்.

அதிலும், தாலி கட்டியதிலிருந்தே மகனின் முகத்தில் தெரிந்த கோபமும், ஆத்திரமும் அவருக்கு உள்ளுக்குள் அச்சத்தைக் கொடுத்தாலும், கடவுள் தீர்ப்பு இதுதானோ! என்று தனக்குச் சமாதானமும் சொல்லிக் கொண்டார்.

ஆனாலும், காலையில் எழுந்து வந்ததிலிருந்து மருமகளின் முகத்திலிருந்து எதையும் கண்டறியவும் இயலவில்லை. அவள் வழக்கம் போல இருந்தாலும், தன்னிடம் அநாவசியமாக எதுவும் பேசாதே, அவருக்குப் பெரும் அவஸ்தையாக இருந்தது.

குழந்தைக்குக் கஞ்சி காய்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் மனம் வெதும்பியது.

காலையில் எழுந்தவள், அவனை எழுப்பும் மனமின்றி ஏழரை மணிக்கு அடிக்கும்படியாக அலாரத்தை வைத்துவிட்டு வெளியே வந்தாள். ஆனால், அவள் நினைத்ததைப் போல அவன் எழவும் இல்லை. அலாரமும் நின்றபாடில்லை.

விடாமல் அலறிய அலாரத்தை நிறுத்தச் சென்றவள், காற்றில் கைகளால் துழாவிக் கொண்டிருந்தவனின் நினைவு, இப்போது அவன்வசம் இல்லை என்பதை, அவனது செய்கையே உணர்த்த எதுவும் செய்யாமல், வெளியே வந்தாள்.

அறைக்கு வெளியே இருந்த வெண்கலப் பூ ஜாடியை அவள் தட்டிவிட, படிக்கட்டில் உருண்டு பளிங்குத் தரையில் மோதி அது பலமான சப்தத்தை ஏற்படுத்தியது. சப்தத்தில் சுயநினைவிற்கு வந்திருப்பான் என்று தனது வேலைகளைப் பார்க்கத் துவங்கினாள்.

எட்டு மணியாகியும் அறையிலிருந்து அவன் வெளியே வராமல் போயிருக்க, மீண்டும் அறைக்குச் சென்றாள். அவன், மாயாவின் புகைப்படத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், மனத்தில் சிறு ஏமாற்றம் பரவுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மனம் கதறியது. இது தேவையில்லாத கதறல் என்று புரிந்த போதும், ஒரு பெண்ணாக அதை ஏற்க அவளால் முடியவில்லை.

ஒன்று, திருமணம் வேண்டாம் என்று மறுக்கும் தைரியம் இருந்திருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், முட்டிமோதி மண்டையை உடைத்துக் கொண்டாவது தனக்கான வாழ்வைப் பெற்றே தீரவேண்டும்’ என்று எண்ணிக்கொண்டு வேலைகளைக் கவனிக்கலானாள்.

குழந்தையை தங்கள் அறைக்கு அனுப்பிவிட்டு, சமையலறைக்கு வந்தாள். மாமியார் அங்கும் இங்கும் நடையாக நடப்பதைப் பார்த்தபோதும், இப்போது எது பேசினாலும், இருக்கும் ஆத்திரத்தில் ஏதேனும் வார்த்தைகள் தடிக்கக் கூடும் என்று மௌனமாக வேலைகளைக் கவனிக்கலானாள்.

மகனுடன் வெளியே வந்த சத்ய பிரகாஷ், பூஜையறைக்குச் சென்றான். நெற்றிக்குத் திருநீரை அணிந்துகொண்டு அவன் டைனிங்கில் வந்து அமர, அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகி வந்திருக்கும் மகனை விதிர்த்த நெஞ்சுடன் பார்த்தார் மனோ.

“என்னப்பா? ரெண்டு பேரும் வெளியே போறீங்களா?” என்று எதுவும் அறியாததைப் போலக் கேட்ட அன்னையை நிமிர்ந்து பார்த்தான்.

“முதல்ல அவளைக் கூட்டிட்டுப் போ. குழந்தையை நான் பார்த்துக்கறேன்” என்றார் சமாளிப்புப் புன்னகையுடன்.

“ஆஃபிஸ்ல கொஞ்சம் வேலையிருக்கும்மா!” என்றான் நிதானமான குரலில்.

“நேத்துத் தான் கல்யாணம் ஆச்சு. இன்னைக்கு ஆஃபிஸ் போகணுமா? நம்ம ஆஃபிஸ்தானே. உன் மாமனார் புரிஞ்சிக்கமாட்டாரா என்ன? அவரும் இதையே தான் சொல்வார்” என்றார்.

“அவர் இப்போ என் மாமனார் இல்ல. முன்னாள் மாமனார்” என்றான் அழுத்தமான குரலில்.

அவர்களது பேச்சைக் காதில் வாங்கினாலும், எதையும் கண்டுகொள்ளாமல் அவனுக்கு உணவைப் பரிமாறிவிட்டு, சற்றுத் தள்ளி அமர்ந்து குழந்தைக்குக் கஞ்சியை ஊட்டத் துவங்கினாள் பவித்ரா.

வேகவேகமாக உணவை உண்டுவிட்டு எழுந்தவன், கையைக் கழுவிக்கொண்டு ப்ரீஃப்கேசுடன் வந்தான். குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு, “பைடா கண்ணா!” என்றான்.

“ப்பா!” என்று முத்துப்பல் தெரிய சிரித்தக் குழந்தையை ஆதூரத்துடன் பார்த்துவிட்டு, “வரேன்ம்மா” என்று அவன் கிளம்பிச் செல்ல, பவித்ராவின் மனத்திற்குள் சிறு ஏமாற்றம் பரவியது.

ஏமாற்றம் என்பதைவிட, அவமானம் என்பது தான் சரியாக இருக்கும். வேலையாட்கள் அவ்வப்போது ஜாடைமாடையாக கவனிப்பதைப் பார்த்தவளுக்கு, ஆத்திரத்தில் கண்ணீர் அரும்பியது.

‘என் மீது திணிக்கப்பட்ட வாழ்க்கை என்றபோதும், அதை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருந்தது உண்மை. ஆனால், இதற்கெல்லாம் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாத தன்மீது அவனுக்கு ஏன் இத்தனை வன்மம்? எல்லாவற்றிற்கும் காரணமான, அன்னையிடம் சொல்லிவிட்டுச் செல்ல முடிகின்றது. இதில், சம்மந்தமில்லாமல் சேர்த்துவிடப்பட்ட தன்மீது எதற்கு இந்த துவேஷம்?

வாழ்க்கை ஒரு வரம். அதைச் செம்மைபடுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்ற வார்த்தை ஜாலங்களெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் அனுபவிப்பவற்களுக்கே அதன் வேதனை தெரியும்’ என்று நினைத்துக் கொண்டவளால் அங்கே அமர முடியவில்லை.

அதேநேரம் அங்கிருந்து எழுந்து சென்று அனைவருக்கும் காட்சிப்பொருளாக மாறவும் விரும்பவில்லை. எல்லாவற்றையும் எதிர்பார்த்தே இருப்பதைப் போலவும், இந்த உதாசீனமெல்லாம் தன்னை எதுவும் செய்யாது என்பதைப் போலவும், முகத்தை சிரிப்பதைப் போல வைத்துக் கொண்டு மகனைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

‘தாய் அறியாத சூல் உண்டா?’ மனோன்மணி, அவளைப் பெறாவிட்டாலும், தாயாக அவளைப் போற்றி வளர்த்தவருக்குத் தெரியாதா அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் மனம்படும் துயரம்.

மகனிடம் பேசவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு, எட்டிஎட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வேலையாட்களை அழைத்து வேலைகளை ஏவியபடி அங்கிருந்து செல்ல, பவித்ராவிற்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது.

அந்த ஆசுவாசத்தில் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. கன்னங்களை நனைத்த ஈரத்தை அவள் துடைக்க, அவளையே பார்த்துக்கொண்டிருந்த குழந்தை, “ம்மா!” என்றபடி சிணுங்கியபடி அவளது கண்ணீரைக் காண முடியாமல் எழுந்து அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

பெறாத மகனின் பாசத்தில், அவளது கண்கள் பொலபொலவெனக் கண்ணீரைப் பொழிந்தன.

“மனு கண்ணா! ஒண்ணுமில்லடா. இங்கே பாரு அம்மா சிரிக்கிறேன் பாரு” என்று அவள் மகனுக்காக சிரிக்க, குழந்தையும் அவளது கன்னத்தைத் தட்டித் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்த, அவள் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுச் சிரித்தாள்.

விட்டுவிட்டுச் சென்ற ஃபைல் ஒன்றை எடுப்பதற்காக வீட்டிற்கு வந்த சத்யா, இந்தக் காட்சியைப் பார்த்ததும் மனம் துடிக்க நின்றான். தனக்காக இல்லாவிடினும், குழந்தைக்காக இவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவனறியாமலே மனத்திற்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.

**************​

பவித்ரா, குழந்தையிடம் பிஸ்கெட் ஒன்றைக் கொடுத்து விட்டு புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்தாள். திடீரென, “ப்பா! ப்பா!” என்று குழந்தை இறங்கி ஓட, அப்போது தான் வாசலில் காரின் சப்தம் கேட்பதை உணர்ந்தாள்.

திரும்பி மணியைப் பார்த்தாள். நான்கு தான் ஆகியிருந்தது. அவன் இத்தனை விரைவாக வருவது அபூர்வம் தான். இன்று என்ன விசேஷம்? என்று நினைத்துக் கொண்டு எழுந்தாள்.

“ஹேய் குட்டிப் பையா!” என்று உற்சாகமாக அழைத்தபடி, மகனைத் தூக்கிக் கொண்டு சிரிப்புடன் வீட்டிற்குள் வந்தவனை, ஆச்சரியத்துடன் பார்த்தாள் பவித்ரா.

மகனின் வரவைக் கண்டு மனோன்மணியும் ஹாலுக்கு வந்தார்.

“அம்மா! மாமா வராங்க. டிஃபன் ரெடி பண்ணுங்க” என்றான் மெல்லிய குரலில்.

அவனது உற்சாகத்திற்கான காரணத்தைப் புரிந்து கொண்ட பவித்ராவின் மனத்தில், ஏமாற்றம் சூழ்வதைத் தடுக்க முடியவில்லை.

அடுத்த அரைமணி நேரத்தில் அவன் சொன்னபடியே மாயாவின் தந்தை விஸ்வநாதன் வர, பின்னாலேயே வெள்ளித் தட்டில் பழம், பூ, இனிப்புகள் அடங்கிய தட்டை டிரைவர் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றார்.

சம்பிரதாய உபசரிப்பிற்குப் பிறகு, “சம்மந்தியம்மா! முறைப்படி மாப்பிள்ளையையும், பொண்ணையும் மறுவீட்டுக்குக் கூட்டிட்டுப் போக வந்திருக்கேன்” என்றார் விஸ்வநாதன்.

தாயும், மகனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “உங்களுக்குத் தெரியாதது இல்ல… பவியும், உங்க பொண்ணுதான் அப்பான்னு, மாயா அடிக்கடிச் சொல்வா. என் பொண்ணு இருந்தபோதும் சரி, இல்லாத இந்த ரெண்டு வருஷத்துலயும் பவித்ராவும் என்னை அப்பாவா தானே நினைச்சிட்டு இருந்தா. அவள் இருந்திருந்தா நிலைமையே வேற” என்றவருக்கு மகளின் நினைவில் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

அங்கிருந்த அனைவரது நிலையும் அவரது மனநிலையை ஒத்தே இருந்தது.

தன்னைச் சமாளித்துக் கொண்ட விஸ்வநாதன், “நல்ல விஷயத்துக்கு வந்த இடத்துல, என்னென்னவோ பேசிட்டிருக்கேன். என் பொண்ணு, மாப்பிள்ளைக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்ய வேணாமா? அதான், மறு வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக வந்திருக்கேன். முன்னமே சொல்லியிருக்கணும்…” என்றார்.

மனோன்மணி மகனைப் பார்க்க, அவன் குழந்தையின் தலையை வருடிக் கொடுத்தபடி எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

சுதாரித்த மனோ, “ரொம்பச் சந்தோஷம் அண்ணா! உங்க பொண்ணையும், மாப்பிள்ளையையும் அழைக்கறீங்க” என்றவர், “சத்யா! நீதான் இப்போ பதில் சொல்லணும்” என்று மகனே சமாளிக்கட்டும் என்று அவனை பேச்சில் இழுத்தார்.

நிமிர்ந்து பார்த்தவன், “வரோம் மாமா! காலைல ஆஃபிஸ்ல முக்கியமான வேலை இருந்ததால பவித்ராவைக் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகல. நாங்க போய்ட்டு நேரா வீட்டுக்கு வந்திடுறோம்” என்று தனது சம்மதத்தையும், அவளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வதை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் சொல்லிவிட்டான்.

மனோன்மணிக்கு உச்சிக் குளிர்ந்து போனது.

பவித்ராவிற்கோ, ‘எதற்காக இந்த வேஷம்?’ என்று உள்ளுக்குள் எரிச்சல் மண்டியது.

எழுந்தவன், “பவி! மாமாவுக்கு டிஃபன் வை. நான் டிரெஸ் மாத்திட்டு வந்திடுறேன்” என்று அவளது கண்களை நேராகப் பார்த்துச் சொல்லிவிட்டு அறைக்குச் செல்ல, அவள் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தாள்.

பெரியவருக்கு சிற்றுண்டியைப் பரிமாறியவளிடம், “அம்மாடி! நீ போய் ரெண்டு நாளைக்குத் தேவையானதை எடுத்து வச்சிட்டு, கிளம்பி வா. நான் பார்த்துக்கறேன்” என்று மருமகளை அனுப்பி வைத்தார் மனோன்மணி.

அவள் சென்றதும், “ரொம்ப சந்தோஷம் அண்ணா! நானே உங்ககிட்டப் பேசணும்ன்னு இருந்தேன். எப்படின்னு கொஞ்சம் தயக்கமா இருந்தது. நல்லவேளை நீங்களே அவங்களை மறுவீட்டுக்குக் கூப்பிட்டுட்டீங்க” என்றார் மகிழ்ச்சியுடன்.

“ம்ம், தெரியும்மா! யாருமே எதிர்பார்க்காம நடந்த கல்யாணம். ஆனா, பாதிப்பு அவங்க ரெண்டு பேருக்கும் தான் அதிகம். எல்லாமே சீக்கிரமே சரியாகிடும்மா” என்று நம்பிக்கையுடன் சொல்ல, அதை ஆமோதிப்பதைப் போலப் புன்னகைத்தார் மனோ.

“சரி அவங்களைக் கிளம்பச் சொல்லிட்டு நீங்க என்ன செய்றீங்க? கிளம்புங்க. அவங்களுக்காகச் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு” என்றார் பூடகமாக.

‘அவர் எது செய்தாலும், தனது மகனின் நன்மைக்காகவே’ என்று உணர்ந்திருந்த மனோன்மணி புன்னகையுடன் தலையசைத்தார்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
201
436
63
அத்தியாயம் – 3

அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறைக்குள் நிற்பதே, மூச்சு முட்டுவதைப் போலிருந்தது பவித்ராவிற்கு.

எதிரிலிருந்த கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தைப் பார்த்தாள். கை நிறையக் கண்ணாடி வளையல்கள். சன்னக் கறையிட்ட சந்தன நிறப் புடவை, தழையத் தழையப் பின்னியிருந்த கூந்தலில் மல்லிகைச் சூடி, தன்னை ஒரு தேவதையாகக் காட்டிய கண்ணாடியைப் பார்க்கப் பார்க்க கோபமும், ஆத்திரமும் தான் வந்தது.

திருமணமான நொடியிலிருந்து, நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள். திருமண நாளின் முதலிரவில், தான் அவனைச் சமாதானப்படுத்த வேண்டி இருந்ததை எண்ணி இப்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது.

காலையில் அவன் நடந்துகொண்டதும், மாலையில் பவி என்ற அழைப்பும்கூட தனக்கானது இல்லை என்ற நிஜம் அவளை வண்டாகக் குடைந்தது. கோவிலுக்கு அழைத்துச் சென்றது. இரவு விருந்தில் அனைவருக்கு எதிரிலும் இயல்பாக என்னருகில் அமர்ந்தது, பேசியது எல்லாமே நாடகத்தனமாகத் தோன்றியது.

எந்த நொடியிலும், அவன் தன்னை மனைவியாக நினைக்கவில்லை என்ற உண்மை அவளைச் சுட்டது. எந்தக் காரணமும் இல்லாமல், என் வாழ்க்கை அல்லவா இங்கே பலியாகி இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் என் தன்மானம் அல்லவா, பகடைக்காயாக உருட்டி விளையாடப்படுகிறது.

மறுவீடு என்று அழைத்து வந்து, இதெல்லாம் தேவைதானா? இது, மாயாவின் வாழ்க்கை. அவன், மாயாவின் கணவன். ஒரு பெண்ணின் மன உணர்வுகளை, யாரும் புரிந்து கொள்ளவே மாட்டார்களா?’ என்று மனத்திற்குள் புழுங்கியவளுக்கு ஆத்திரத்தில் உடல் அதிர்ந்தது.

அங்கே நிற்க முடியாமல், அறையைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

வந்திருந்த உறவினர்களை வழியனுப்பிவிட்டு விஸ்வநாதனும், தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தட்டிக்கொடுத்தபடி சத்யனும் வராண்டாவில் நின்று பேசிக்கொண்டிருக்க, மனோன்மணி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

இருண்ட முகத்துடன் மாடியிலிருந்து அவள் இறங்கி வருவதைக் கண்ட மனோன்மணி வேகமாக அவளை நெருங்கி, “பவி! உன்னை ரூம்லதானே இருக்கச் சொன்னேன். இங்கே என்ன பண்ற?” என்று அடிக்குரலில் கேட்டார்.

அத்தை என்றபோதும், தன்னை அன்னையாக காத்து வளர்த்தவராயிற்றே என்ற தைரியத்தில், “அத்தை! இன்னைக்கு ஒரு நாளைக்கு நான் உங்கக்கூட படுத்துக்கறேன். ப்ளீஸ்!” என்றவளை அதிர்ந்த முகத்துடன் பார்த்தார்.

“முதல்ல வா!” என்றவர், அவளது கரத்தைப் பற்றி மீண்டும் மாடிக்கு இழுத்துச் சென்றார்.

அறைக்குச் சென்றபின்பே அவளது கரத்தை விட்டவர், “பவித்ரா! உனக்கென்ன பைத்தியமா?” என்றார் கோபத்துடன்.

“என்னை என்ன பண்ணச் சொல்றீங்க அத்தை! விருப்பமே இல்லாத கல்யாணம். அதிலும், அத்தானோட மனசு முழுக்க, மாயா அக்காதான் இருக்காங்க” என்றவளது கண்கள் கலங்க ஆரம்பித்தது.

“இது, அவங்க வாழ்க்கை. அதை என்னால எப்படி வாழ முடியும்?” என்று அழுதவளை, எப்படித் தேற்றுவது என்று அவருக்குத் தெரியவில்லை.

“பவித்ரா! இங்கே பாரும்மா…” என்று அவளது முகத்தைப் பற்றி நிமிர்த்தியவர், “இதுக்கெல்லாம் நீ எப்படிக் காரணமில்லயோ, அதேபோல சத்யாவும் காரணமில்லம்மா” என்றார் இறக்கிய குரலில்.

கலங்கிய விழிகளுடன் அவரைப் பார்த்தாள்.

“நடக்கறதெல்லாம் உனக்குத் தப்பா தெரியலாம். ஆனா, உன்னோட கல்யாணம் நினைச்சபடி நடந்திருந்தா, நீ காலமெல்லாம் வருத்தப்படுறதா ஆகியிருக்கும். நீ மட்டுமா, உன்னோட வாழ்க்கையைப் பாழாக்கிட்டோம்ன்னு, நாங்களும் நிம்மதி இல்லாம இருந்திருப்போம்” என்றதும் அவளுக்கும் உண்மை புரிய, கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“மாயான்னு ஒருத்தி இப்போ இல்லம்மா. அவள் இருந்திருந்தா, உன்னோட வாழ்க்கை இன்னும் சந்தோஷமா இருந்திருக்கலாம். நடந்த எதையும், யாரும் ப்ளான் பண்ணிச் செய்யல. உனக்கு நல்லது செய்யணும்ன்னு நினைச்சோம். அப்படியே உன்னைச் சத்யாவுக்குக் கல்யாணம் செய்து வைக்காம வேற இடம் பார்த்திருந்தாலும், நேத்து நடந்ததே திரும்ப நடக்காதுங்கறதுக்கு என்ன உத்தரவாதம் இருக்கு?

நல்லதோ; கெட்டதோ, நடந்தததை நல்லாத எடுத்துக்குவோம். மாயாவோட அவன் ஒன்றரை வருஷம் வாழ்ந்திருக்கான். ஆனா, ரெண்டு வருஷம் அவள் இல்லாம இருந்திருக்கான். கொண்டவனோட மனசைக் களவாடிக்கிறது, அவ்வளவு கஷ்டம் இல்ல பவித்ரா” என்றவர் மருமகளின் முகத்தைப் பார்த்தார்.

‘பெரிதாகத் தெளிவில்லாத போதும், முன்மிருந்த கலக்கம் இப்போது இல்லை’ என்பதே நிம்மதியாக இருந்தது.

“போ! போய் முகத்தைக் கழுவிட்டு வா” என்றவர் அவளது கன்னத்தை வழித்து, “நீ, நீயாகவே இரு. எல்லாம் தன்னால நடக்கும். கொஞ்சம் நேரம் ஆகலாம். ஆனா, நிச்சயமா உனக்கான வாழ்க்கை எங்கேயும் போகாது” என்றார் உறுதியான குரலில்.

ஆழ்ந்த மூச்சுடன் அவள் குளியலறைக்குச் செல்ல, முகத்தைத் துடைத்தபடி அறையிலிருந்து வெளியே வந்தவர், உறங்கியிருந்த மகனை மடியில் கிடத்தியபடி, மாமனாருடன் பேசிக்கொண்டிருந்த மகனின் அருகில் சென்றார்.

“சரிங்க மாப்பிள்ளை! நான் போய்ப் படுக்கறேன். ரொம்ப டயர்டா இருக்கு” என்றபடி எழுந்தார் விஸ்வநாதன்.

“சரிங்க மாமா! டேப்லெட்ஸ் போட்டுட்டீங்களா?” என்று அக்கறையுடன் கேட்டான்.

“எடுத்துக்கிட்டேன் மாப்பிள்ளை” என்றவர் தனது அறைக்குச் செல்ல, சத்யனும் எழுந்தான்.

“சத்யா! குழந்தையை நான் பார்த்துக்கறேன்” என்று பேரனை வாங்க முற்பட்டார்.

அவரை ஆழ்ந்து பார்த்தவன், “அம்மா! நான், எதுவும் புரியாத சின்னப் பையன் இல்ல” என்றான் சிறு எரிச்சலுடன்.

மகனைத் தீர்க்கமாகப் பார்த்தவர், “பவித்ராவும் ஒரு பொண்ணுதாம்ப்பா. அவளுக்கும், ஆசாபாசங்கள் இருக்கும். இதுவும் உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்” என்றபடி பேரனை வாங்கிக் கொண்டு தனது அறைக்குச் செல்ல, அவன் சற்றுநேரம் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான்.

நிதானமான நடையுடன் அறைக்குள் வந்தவன், அந்த அலங்காரங்களை எதிர்பார்க்கவில்லை. சோர்ந்த முகத்துடன் கட்டிலருகில் நின்றிருந்த பவித்ராவைப் பார்த்தான்.

கதவைத் திறந்த சப்தம் கேட்டு மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். செவ்வரியோடியிருந்த விழிகள் அவளது நிலையைப் பறைசாற்றின.

எதிர்பாராதது தான். ஆனால், நடந்துவிட்டதை மாற்றவா முடியும்? இனி, நடக்கப் போவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மாயாவின் இடத்தில், பவித்ராவை ஏற்றுக் கொள்வது சிரமம் தான். ஆனால், அவளுக்கான நியாயத்தை வழங்கியே ஆகவேண்டும்’ என்று எண்ணிக் கொண்டான்.

கதவைத் தாளிட்டவன், “ஏன் நின்னுட்டே இருக்க? உட்கார்” என்று கட்டிலைக் காட்டினான்.

படபடத்த இதயத்துடன் கட்டிலில் அமர்ந்தாள். முன் தினம் இருந்த தைரியமெல்லாம் இன்று கரை கடந்து சென்றிருந்தது.

கால்களை நீட்டிக் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், “நடந்ததுக்கு நாம ரெண்டு பேருமே பொறுப்பில்ல. உன்னை வருத்தறதுல எனக்கும் விருப்பமில்ல. ஆனா, எனக்காக நீ கொஞ்ச நாள் காத்திருக்கணும். சாரி! பிடிக்குதோ பிடிக்கலையோ மாயாவைப் பத்திப் பேசியே ஆகவேண்டிய நிலைமை” என்றவன் அவளது முகத்தைப் பார்த்தான்.

அவள் வெறுமையான பார்வையுடன், அவனை வெறித்தாள்.

“எனக்கான பொறுப்பை நிச்சயம் தட்டிக்கழிக்க மாட்டேன். மனுவைப் பத்தியும் எனக்கு எந்தக் கவலையும் இல்ல. நிச்சயமா அவனுக்கு நீ நல்ல அம்மாவா இருப்ப. ஆனா, எல்லாத்தையும் இயல்பா ஏத்துக்க எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்” என்றவன் அவளிடமிருந்து பதிலை எதிர்பார்த்தான்.

அவனது பார்வைக்கான அர்த்தம் புரிய, “நீங்க சொல்றது புரியுது” என்றாள் மெல்லிய குரலில்.

“தேங்க்ஸ்!” என்றவன், “உன்னை ஹர்ட் பண்றது போல ஏதாவது செய்திருந்தா சாரி!” என்றவன் பார்வையால் அந்த அறையை அளந்தான்.

அவன் சொன்னது விளங்க, “எதுக்குமே நாம காரணம் இல்லயே. இதுதான் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கறதுன்னா, அதை ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்” என்றவளது குரல் தெளிந்திருந்தது.

முறுவலித்தவன், “படுத்துக்க. குட் நைட்” என்று விளக்கை அணைத்துவிட்டுச் சாய, மறுபக்கமாக அவளும் படுக்கையில் சாய்ந்தாள்.

‘தனது வாழ்க்கையின் குழப்பங்கள் இவ்வளவு எளிதாகத் தீர்ந்து போகும் என்று நினைக்கவே இல்லை’ என்று எண்ணியவளின் இதழ்கள் முறுவலில் மலர, கண்கள் உறக்கத்தைத் தழுவியது.

இனிமேல் தான் எல்லாக் குழப்பங்களும் ஆரம்பமாகப் போகிறது என்று, அப்போது அந்தப் பேதைக்குத் தெரியவில்லை.அத்தியாயம் - 4ஒரு மாதத் தொடர் அலுவலகப் பயணங்களுக்குப் பிறகு, அன்று தான் மீண்டும் பணிக்குத் திரும்பியிருந்தான் யுவன்.

ஃபீனிக்ஸில், ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ரீஜினல் மேனேஜராகப் பணிபுரிகிறான். அவனது உழைப்பிற்கும், திறமைக்கும் ஈடாக ஆறு இலக்கச் சம்பளம், வீடு, கார்… என்று அனைத்து வசதிகளையும் அலுவலகமே அவனுக்குச் செய்து கொடுத்திருந்தது.

புன்னகையுடன் அனைவரிடமும் காலை வணக்கத்தைப் பகிர்ந்தபடி, தனது கேபினுக்குள் நுழைந்தான்.

பின்னாலேயே வந்த அவனது செக்கரட்டரி, அவனது அன்றைய வேலைகளைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, “உங்களுக்கு வந்த போஸ்ட்ஸ்” என்று ஒரு கட்டுத் தபால்களை எடுத்து அவனிடம் கொடுத்தான்.

“தேங்க்யூ ஹென்றி!” என்றவன், ஒவ்வொரு கவராக பெர்சனல், அஃபிஷியல் என்று பிரித்தவன், மஞ்சள் வண்ணத் திருமண அழைப்பிதழைக் கண்டதும், நெற்றிச் சுருங்க கையிலெடுத்தான்.

பவித்ரா வெட்ஸ் வெங்கட் என்றிருந்த அழைப்பிதழைப் பார்த்ததுமே, அவனது காலடியில் பூமி நழுவுவதைப் போலிருந்தது. பொத்தென இருக்கையில் அமர்ந்தவன், நடுங்கும் விரல்களால் அழைப்பிதழைப் பிரித்தான்.

திருமணம் முடிந்து, பத்து நாட்கள் ஆகியிருந்தன. அதுவரை இருந்த உற்சாகமெல்லாம், மொத்தமாக வடிந்தது போலானது அவனுக்கு. இரண்டரை வருடக் காதல், நிமிடத்தில் கை நழுவிப் போனதில் பெரிதும் ஓய்ந்து போனான்.

மனத்திற்குள் பூத்தக் காதல், மலராமலேயே கருகிப் போனதை என்னவென்று சொல்வது! சொல்ல வேண்டும் என்று எண்ணியபோதெல்லாம், ஏதேனும் ஒரு தடை வந்ததில் இன்று மொத்தமாக அவளை இழந்து நிற்பதை, அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தான் அவளிடம் மனம் திறக்கா விட்டாலும், தன் மனத்திலிருப்பதை முழுதாக அறிந்தவள் தான் என்பதில், அவனுக்குச் சிறிதும் ஐயமில்லை. ‘அவளுக்கு ஏன் என்னைப் பிடிக்காமல் போனது?’ என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

‘மாயா இருந்திருந்தால், தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்’ என்று நினைத்தவன், தோற்றுப் போன காதலால் விளைந்த ஏமாற்றத்தினால், எதிலும் கவனத்தைச் செலுத்த முடியாமல் தவித்தான்.

அரை நாளை எப்படியோ கடத்தியவன், மதியத்திற்கு மேல் வீட்டிற்குக் கிளம்பி விட்டான். இந்த ஆறாண்டு கால வெளிநாட்டு வாசத்தில் தெரியாத தனிமை இன்று, பெருமளவில் அவனை வாட்டியது. எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து சென்றவனால், இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

காலம் நமக்குக் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற வார்த்தை எவ்வளவு உண்மை என்று தோன்றியது. இனி, வருந்திப் பயனில்லை. ஆனால், இதிலிருந்து வெளிவர சில காலம் ஆகும்’ எனத் தன்னையே தேற்றிக் கொண்டான்.

ஆனாலும், மனத்தின் இறுக்கம் ஏதேனும் மாற்றம் வேண்டுமென மன்றாடியது. மனம் விட்டுப் பேசிக்கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் என்று அவனுக்கு யாருமில்லை. இருந்த ஒருத்தியும் இரண்டாண்டுகளுக்கு முன்பு உலகத்தை விட்டே சென்றிருந்தாள்.

அவன் பீனிக்ஸிற்கு வேலைக்கு வந்த மூன்றாவது மாதம், தனது கல்லூரியின் ப்ராஜெக்ட் விஷயமாக, தனது கம்பெனிக்கு வந்திருந்த மாயாவை சந்தித்தான். அவளது நினைவில் கண்கள் கலங்கின.

“காலங்கார்த்தால இப்படி ஒரு இம்சைகிட்ட மாட்டுவேனா யுவன்! கேள்வியா கேட்டு, என் உயிரை வாங்கறா” என்றபடி அவனருகில் வந்தமர்ந்தான் அவனுடன் பணிபுரியும் விஷ்வா.

“யாருடா? என்னாச்சு?” என்று தலையை உயர்த்தாமல் கேட்டான் யுவன்.

“இண்டன்ஷிப்காக வந்திருக்க எம்.பி.ஏ ஸ்டூடன்ஸ்ல ஒருத்தி மாயாவாம். வேதாளம்ன்னு வச்சிருக்கலாம். கேள்வியா கேட்டு கொல்றாடா” என்றான் எரிச்சலுடன்.

புன்னகைத்தவன், “சொல்ல வேண்டியது தானே. அதுக்குத் தானே உன்னை வச்சிருக்காங்க” என்றவன், “தமிழ்ப் பொண்ணா?” என்று கேட்டான்.

“ஆமாம். எல்லா பசங்களும் சொன்னதைக் கேட்டுட்டு, பேசாம நோட்ஸ் எடுக்குதுங்க. இவ ஒருத்தி மட்டும் தோண்டித் துருவுறா. ஒரு நாள்னா சமாளிக்கலாம். இன்னும் ஒரு வாரம் இருக்கு” என்றான் கடுப்புடன்.

“மூணு நாள் சமாளிச்சவனுக்கு, இன்னும் பத்து நாள் சமாளிக்க முடியாதா?” என்றான் கிண்டலாக.

“அதுக்காக, அவகிட்ட வாயே கொடுக்க முடியலடா. எது சொன்னாலும், கௌண்டர் கொடுக்கிறா” என்றவன் சேரை நகர்த்தி அவனருகில் நெருங்கி அமர்ந்து, “முதல் நாள் ஈவ்னிங் இவதான் கடைசியா கிளம்பினா. நான் எதார்த்தமா, நம்ம ஊர்ப் பொண்ணாச்சேன்னு அவளைப் பத்தி விசாரிச்சேன்.

தன்னைப் பத்திச் சொல்லிட்டு, என்னைப் பத்திக் கேட்டா. நானும் சொன்னேன். கடைசில, எங்க அப்பா பேரு விஸ்வநாதன். உங்க பேரு விஷ்வா. இனி, உங்களை நான் சித்தப்பான்னு கூப்பிடுறேன்னு, ரெண்டு நாளா சித்தப்பு சித்தப்புன்னு எல்லோர் முன்னாலயும், என் மானத்தை வாங்கறாடா!” என்றான் அழாத குறையாக.

நகைத்த யுவன், “நீதானே பொண்ணுங்கன்னதும் நான் லீட் பண்றேன்னு முந்தி ஓடின. அனுபவி” என்றான்.

விஷ்வா மேற்கொண்டு பேசும் முன், “சித்தப்பு! ரெண்டு நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டு, இங்கே வந்து அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க” என்ற குரலைக் கேட்டதும் யுவன் திரும்பிப் பார்த்தான்.

துறுதுறு விழிகள், தூக்கிக் கட்டப்பட்ட குதிரைவால், மஞ்சள் நிறக் குர்த்தி, ஜீன்ஸ் என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்தான். தனது, தங்கையின் மறுபிம்பமாகவே தோன்றினாள் அவள்.

“ஹாய், நான் யுவன்!” என்று அவன் கைநீட்ட, “ஹாய்! நான் மாயா! மாயா விஸ்வநாதன்” என்று குதூகலமாக உரைத்தவள், அவனுடன் கை குலுக்கினாள்.

அதுதான் அவர்களது அறிமுகம். அதன் பின்னான சந்திப்புகள் இருவருக்கிடையிலும் நெருங்கிய நட்பை உருவாக்கியது.

கடிகாரத்திலிருந்த குருவி மூன்று முறை கூவ, நினைவுலகிற்கு வந்தான்.

தனது அன்னை, தங்கை இருவருக்குப் பின்பு, தன் வாழ்க்கையின் சந்தோஷத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துகொள்ள அவனுக்குக் கிடைத்த ஒரே துணை மாயா மட்டுமே. அன்னைக்கு அன்னையாக; தங்கைக்குத் தங்கையாக; தோழிக்குத் தோழியாக அவனது வாழ்க்கையில் பெரும் பங்கை வகித்தவள் மாயா.

இன்று தனது துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள அவள் இல்லை. அவள் இருந்திருந்தால், இந்தத் துன்பம் நேராமலே போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

மனம் ஏனோ, இன்று அதிகமாக அவளை எதிர்பார்த்தது. அவளது ஆறுதல் வார்த்தைகளுக்காக ஏங்கியது. எழுந்து வீட்டைச் சுற்றி நடந்தான். ஆனால், மனம் மட்டும் சமாதானம் அடைய மறுத்தது.

மனமாற்றம் வேண்டி, தங்கைக்குப் போன் செய்து பேசினான். அண்ணனின் சோர்ந்த குரலில் ஏதோ சரியில்லை என்று துறுவித் துறுவிக் கேட்டத் தங்கையிடம், மழுப்பலாகப் பதிலளித்துவிட்டு போனை அணைத்தான்.

ஆனால், அடுத்தப் பத்தாவது நிமிடம் அவனது தந்தையிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர, தவிப்புடன் எடுத்தான்.

“யுவன்!” என்ற தந்தையின் அன்பான அழைப்பு, அவனை வெகுவாகப் பாதித்தது.

மளமளவென அவரிடம் கொட்டித் தீர்த்தான்.

மகனின் வார்த்தைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், “கண்ணா! சில விஷயங்கள் நடக்காமல் போவது ஏதோ ஒரு நன்மைக்காக இருக்கும். அது இப்போ இல்லனாலும், நிச்சயம் உனக்கு ஒரு நாளைக்குப் புரியும்” என்றார் ஆறுதலாக.

அவன் மௌனமாக இருக்க, “உனக்கு நான் சொல்லணும்ன்னு அவசியம் இல்ல. மனசைத் தேத்திக்க. உனக்குன்னு ஒருத்தி இனி பிறந்து வரப்போறது இல்ல. கசப்பான விஷயம் தான். ஆனா, மறந்துதானே ஆகணும்” என்றார் நிதானமான குரலில்.

“புரியுதுப்பா! ஆனா, அவளுக்கு ஏன்ப்பா என்னைப் பிடிக்காமல் போச்சு?” என்று சிறுபிள்ளையாக மாறிக் கேட்ட மகனுக்கு ஆறுதல் சொல்ல அவரிடம் வார்த்தைகள் இல்லை.

“காலம் தான்ப்பா எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்” என்றார் சமாதானமாக.

அவன் சமாதானமாகாத போதும், “ரொம்பத் தேங்க்ஸ்ப்பா!” என்றான் ஆத்மார்த்தமாக.

“எங்கேயாவது வெளியே போய்ட்டு வாப்பா. மனசுக்குக் கொஞ்சம் மாறுதலா இருக்கும்” என்றார் கனிவுடன்.

“ரெண்டு நாள் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். நான் பார்த்துக்கறேன்” என்றவன், “சரிப்பா. நீங்க தூங்குங்க. உங்களை இந்தக் குட்டி ராட்சஷி கலவரம் பண்ணிட்டா போல” என்றான்.

“ஆமாம்ப்பா! அண்ணா இப்படி டல்லா பேசி பார்த்ததே இல்ல. என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்றாங்க. நீங்க பேசுங்கன்னு அழாத குறை. அவள் ரொம்பப் பயந்து போயிருக்கா. நான் இப்போ போன் செய்து சொல்லும் வரைக்கும் அவள் தூங்கமாட்டா. வைக்கட்டுமா” என்றார்.

“சரிங்கப்பா!” என்றவன், அவர்களது அன்பால் விளைந்த புன்னகையுடன் போனை அணைத்தான்.