மாயா- கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் - 5

அடுத்து வந்த நான்கு நாட்களும் சத்ய பிரகாஷ், பவித்ரா இடையில் பெரிதான பேச்சுக்கள் இல்லாவிட்டாலும், அவர்களுக்கிடையில் இருந்த தயக்கம் சற்று மறைந்திருந்தது.

காலையில் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த கணவனின் பின்னால் வந்து நின்றவள், “அத்தான்! ஈவ்னிங் குழந்தையை செக்அப்க்குக் கூட்டிட்டுப் போகணும்” என்றாள்.

தலையை வாரிக்கொண்டிருந்தவன், “சரி, நீ மனுவைக் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் வந்திடு. நான் நேரா வந்திடுறேன்” என்றான்.

ஒப்புதலாக, “ம்ம்” என்றாள்.

கழுத்தில் டையை மாட்டிக்கொண்டு முடிச்சிட ஆரம்பிக்க, மேஜை மீதிருந்த அவனது கைப்பேசி ஒலித்தது.

“நான் எடுத்துக்கறேன்” என்றவள் போனை எடுத்துத் திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்தாள்.

“சரண்யா அக்கா வீட்லயிருந்து” என்றபடி போனை அவனிடம் கொடுத்தாள்.

“ஹலோ சரண்யா! எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தான்.

“நல்லாயிருக்கோம். பவித்ரா எப்படி இருக்கா?” என்று விசாரித்தாள்.

“ம்ம், இங்கே தான் இருக்கா. கொடுக்கிறேன் பேசுங்க” என்றான்.

“இருங்க மாப்பிள்ளை சார்! அப்பா பேசணும்ன்னு சொன்னாங்க” என்றவள் தனது தந்தையிடம் கொடுத்தாள்.

பரஸ்பர விசாரிப்பிற்குப் பிறகு, “சத்யா! இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ரீயா?” என்று கேட்டார் சரண்யாவின் தந்தை சுப்ரமணியன்.

“மனுவை செக் அப்புக்குக் கூட்டிட்டுப் போகும் வேலை இருக்கு. என்ன விஷயம் சார்?” என்று கேட்டான்.

“உங்க ரெண்டு பேரையும் நைட் டின்னருக்குக் கூப்பிடத் தான் கேட்டேன். தம்பியைக் கூட்டிட்டு வந்திடுங்க. மாப்பிள்ளையும், சரண்யாவும் நம்ம வீட்ல தானே இருப்பாங்க. வீட்லயே பார்த்திடலாம்” என்றார்.

சற்று யோசித்தவன், “பவித்ராகிட்டப் பேசிட்டு, நானே உங்களுக்குக் கால் பண்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனை அணைத்தான்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம் விஷயத்தைச் சொன்னவன், “போய்ட்டு வருவோமா?” என்று கேட்டான்.

அவன் தனது உணர்வுகளுக்கு மதிப்பளித்துக் கேட்பதை எண்ணிச் சந்தோஷத்துடன், “ம்ம், போய் வரலாம்” என்றாள் சிரிப்புடன்.

மென்நகையுடன், “அம்மாகிட்டச் சொல்லிடு. அப்படியே டிஃபன் எடுத்து வை. நான், சாருக்குக் கால் பண்ணிட்டு வரேன்” என்றதும், உற்சாகம் ததும்பிய முகத்துடன் வெளியே சென்றாள்.

மாமியாரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி காலை உணவைப் பரிமாற தயார் செய்துவிட்டு, குழந்தையைத் தூக்கி மேஜை மீது அமர வைத்தாள்.

அவள் மெல்லியக் குரலில் பாடிக்கொண்டே குழந்தைக்கு உணவை அளிக்க, அன்னையின் உற்சாகம் அவனையும் தொற்றிக்கொள்ள, அமர்ந்தபடியே நடனமாட, அவள் இன்னும் உற்சாகத்துடன் பாடினாள்.

மருமகளின் சந்தோஷத்தை சிரிப்புடன் பார்த்த மனோன்மணி, மகன் வருவதைக் கண்டதும் அங்கிருந்து சென்றார்.

இருக்கையை நகர்த்திவிட்டு அமர்ந்த சத்யா, மகனின் தலையைக் கலைத்துவிட்டு, “அம்மாவும், பையனும் குஷியா இருக்கீங்க போல? என்ன விஷயம்?” என்று கேட்டான்.

அவன் வந்ததை அறியாமல் பாடிக்கொண்டிருந்த பவித்ரா சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டு, பொங்கலை தட்டில் வைத்து அவனுக்கு வைத்தவள், “நான் போய் தோசை கொண்டு வரேன்” என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

சிறுமுறுவலுடன் மகனுக்கு பொங்கலை ஊட்டியவன், தானும் உண்ணத் துவங்கினான்.

மாலையில் சொன்னபடி குழந்தையுடன், சரண்யாவின் வீட்டில் இருந்தனர். சரண்யாவின் தந்தை சுப்ரமணியன், விஸ்வநாதனின் நெருங்கிய நண்பர். சரண்யா வீட்டிற்கு ஒரே பெண். குழந்தை நல மருத்துவர். அவளது கணவன் கைலாஷ் இதய அறுவை சிகிச்சை நிபுணன்.

ஒரே மகள் என்பதால் திருமணத்திற்குப் பிறகு, பெற்றோரை தன்னுடனேயே வைத்துக் கொண்டாள் சரண்யா. சரண்யாவும், மாயாவும் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்ததால், இருவருக்கிடையிலும் ஆத்மார்த்தமான நட்புடன், சகோதரிகளைப் போன்று அன்புடனும் இருந்தனர்.

உடன்பிறந்த சகோதரியைப் போன்றிருந்த மாயாவின் இறப்பு அவளுக்குப் பெரும் அதிர்ச்சி. அதேநேரம் கைக்குழந்தையான மனுவை வளர்க்க, இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சரண்யாவும், அவளது கணவனும் சத்யாவிடம் எத்தனையோ முறை பேசியிருக்கின்றனர்.

ஆனால், அவன் எதற்குமே பிடிகொடுக்காமலேயே இருந்தான். இப்போது கடவுளே, அவனது மௌனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததைக் குறித்து, அனைவருக்குமே சந்தோஷமாக இருந்தது. அதிலும், குழந்தையின் மீது பவித்ரா வைத்திருக்கும் அன்பைக் கண்கூடாகக் கண்டவர்களுக்கு, மனம் நிறைவுடன் இருந்தது.

“வாங்க மாப்பிள்ளை சார்!” என்று சிரிப்புடன் அழைத்த சரண்யா, அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, “ஹேய் புதுப் பொண்ணு! வாவா” என்று பின்னால் வந்த பவித்ராவை தோளோடு அணைத்துக் கொண்டாள்.

ஆண்கள் ஹாலில் அமர பரஸ்பர உபசரிப்பிற்குப் பிறகு, பெண்கள் மறுபக்கமிருந்த சிறு ஹாலில் சென்று அமர்ந்தனர். சரண்யாவின் நான்கு வயது மகளுடன், விளையாடிக் கொண்டிருந்தான் மனு. அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போதும், பவித்ராவின் கண்கள் அவ்வப்போது மகனிடமே சென்று வந்தது.

சரண்யாவின் அன்னை எழுந்து சமையலறைக்குச் செல்ல, பவித்ராவின் பக்கமாகத் திரும்பினாள் அவள்.

“புதுப் பொண்ணே எப்படிப் போகுது வாழ்க்கை?” என்று கேட்டாள்.

“சந்தோஷமா இருக்கேன்க்கா!” என்று மலர்ந்த முகத்துடன் கூறினாள் பவித்ரா.

“ம்ம், சத்யாவோட முகம் முன்னவிட இப்போ தெளிவா இருக்கறதிலேயே தெரியுது” என்றாள் குறுஞ்சிரிப்புடன்.

பவித்ரா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, “நான் கிண்டலுக்குச் சொல்லல பவி. உண்மையைத் தான் சொல்றேன். மாயா இல்லங்கற உண்மையை அவர் ஏத்துக்கிட்டாலும், மனசுல குழந்தையைப் பத்தின கவலை அவருக்கு அதிகமாவே இருந்தது. பலமுறை கைலாஷ்கிட்ட, அவர் சொல்லியிருக்கார். பழைய சத்யாவா இல்லன்னாலும், சீக்கிரமே அவரை அப்படிப் பார்ப்போம்ன்னு என் உள்மனசு சொல்லுது” என்று அன்புடன் சொன்னாள்.

மௌனமான புன்னகையுடன் பவித்ரா அமர்ந்திருக்க, “ம்மா!” என்றபடி குழந்தை அவளைத் தேடி வர, மகனை மடியில் அமரவைத்துக் கொண்டாள்.

சரண்யா விளையாட்டுப் போலவே குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தாள். அவனும் சைகை மூலமாகவும் சிலவற்றை அறைகுறையாகவும் பேசிப் பதில் கொடுத்தான். சத்ய பிரகாஷும், அவர்கள் எதிரில் வந்து அமர்ந்து குழந்தையைக் கவனித்தான்.

கடைசியாக சரண்யா, “மனு கண்ணா அக்கா எங்கே?” என்று கேட்க, சரண்யாவின் மகளைக் கைகாட்டினான்.

“குட். இவங்க யாரு?” என்று சத்யாவைக் காண்பிக்க, “ப்ப்பா” என்றான் சிரிப்புடன்.

“ம்ம், இவங்க யாரு? என்று பவித்ராவைக் கான்பிக்க, “ம்மா” என்றவன் எக்கி அவளது கழுத்தை இறுக அணைத்துக் கொள்ள, பவித்ராவின் விழிகள் பாசத்தில் பனித்தன.

ஆழ்ந்த பார்வையுடன் அவளது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டான் சத்ய பிரகாஷ்.

அவனது பார்வையைக் கண்ட சரண்யாவும், கைலாஷும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

அங்கிருந்த அமைதியைக் கலைத்து, “மனுகிட்ட நல்ல முன்னேற்றம். தொடர்ந்து ஸ்பீச் தெராபி கொடுத்துட்டே இரு பவித்ரா. அவன்கிட்ட நிறைய பேசு. அவனையும் பேச வை. சீக்கிரமே பேச ஆரம்பிச்சிடுவான்” என்றாள் சரண்யா.

“ரொம்பத் தேங்க்ஸ்க்கா!” என்றவள் மகனின் முன்னுச்சியில் மென்மையாக இதழ் பதித்தாள்.

“சாப்பிட வாங்க” என்று சரண்யாவின் அன்னை வந்து அழைக்க, அனைவரும் எழுந்து சென்றனர்.

சிரிப்பும், மகிழ்ச்சியுமாக நேரம் சென்றது தெரியாமல் சாப்பிட்டுவிட்டு, அனைவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். பவித்ராவின் பேச்சையும், சிரிப்பையும் முதன்முறையாக கவனிக்க ஆரம்பித்தான் அவன்.

இருவரும், விடைபெற்றுக் கிளம்பினர். வரும் வழியிலேயே குழந்தை உறங்கியிருக்க, அவனைத் தூக்கிக்கொண்டு அவள் முன்னே செல்ல, கதவைப் பூட்டிவிட்டு அன்னையிடம் சற்றுநேரம் பேசிவிட்டு அறைக்கு வந்தான்.

அதற்குள் உடைமாற்றியிருந்தவள், “உங்களுக்குப் பழம் ஏதாவது கொண்டு வரவா?” என்று கேட்டாள்.

“வேணாம்” என்றான்.

“அப்போ நான் படுத்துக்கறேன்” என்றவள் தண்ணீர் பாட்டிலை கட்டிலருகில் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.

“பவி!” என்று மென்மையானக் குரலில் அவளை அழைத்தான்.

“ம்ம்” என்றபடி திரும்பிப் பார்த்தவளின் விழிகளில் ஆச்சரியமும், ஒரு எதிர்பார்ப்பும் இணைந்து தெரிந்தது.

“தேங்க்ஸ்” என்றான் ஆத்மார்த்தமாக.

சட்டென அவளது முகம் இறுக, “அவன் எனக்கும் பிள்ளைதான்” என்று காட்டமாக உரைத்தவள், “தேங்க்ஸாம் தேங்க்ஸ். இவரை யாரு கேட்டாங்க?” என்று முணுமுணுத்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தாள்.

சில நொடிகள் அப்படியே நின்றிருந்தவன் விளக்கை அணைத்துவிட்டு பால்கனிக்கு வந்தான். சிலுசிலுவென்ற காற்று அவனைத் தழுவிக்கொண்டது. மனம் முழுதும் இனம்புரியா இன்பம் சூழ்ந்திருக்க, மனதார அவனால் சிரிக்க முடிந்தது.

ஒரு வாரத்திற்கு முன்பு, இதே போன்றதோர் இரவில் தான் இருந்த நிலையும், இப்போதிருக்கும் நிலையையும் எண்ணியவனுக்குச் சிரிப்புதான் வந்தது. அவளது கோபத்தை எண்ணிச் சிரித்தபடி, ஒருவித மோன நிலையில் நின்றிருந்தவனை அவனது கைப்பேசி அழைத்தது.

எடுத்தவன், அதில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் நெற்றியைச் சுருக்கினான்.

“ஹலோ!” என்றவனின் குரலில் சுரத்தே இல்லை.

“ஹாய் சத்யன்! எப்படி இருக்கீங்க? ஜூனியர் எப்படி இருக்கான்?” என்று விசாரித்த யுவனின் குரல் அதற்கு நேர்மாறாக உற்சாகத்துடன் ஒலித்தது.

“ஹாங்… எல்லோரும் நல்லாயிருக்கோம்” என்றான்.

சம்பிரதாய விசாரிப்பிற்குப் பிறகு, பவித்ராவின் திருமண அழைப்பிதழ் கிடைத்ததையும், அலுவலக பயணத்தால் திருமணத்திற்கு வர இயலாததையும் கூறினான்.

அவன் வராதது எவ்வளவு நல்லது என்று நினைத்துக்கொண்டு, “இட்ஸ் ஓகே” என்றான்.

“சரிப்பா. நீ டயர்டா இருக்க போல தூங்கு. நெக்ஸ்ட் மந்த் இண்டியா வரும்போது அவங்களைப் பார்த்து விஷ் பண்ணிறேன்” என்றான்.

“நெக்ஸ்ட் மந்த்தா? என்ன விசேஷம்?” என்றவனுக்கு, “விசேஷமா? மாயாவோட செகண்ட் ஆனிவர்சரிக்காக வரேன்” என்று இடியை இறக்கினான்.

‘இதை எப்படி மறந்தேன்?’ என்று எண்ணியவனின் நினைவுகள் அவன் வசமில்லை.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் – 6


தியாகராஜனும், சுப்ரமணியனும், மாயாவின் தந்தை விஸ்வநாதனின் நெருங்கிய நண்பர்கள். மூவரும், கனரக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலில் முன்னணியில் இருந்தனர்.

மூவருக்குமே ஆஸ்திக்கும், ஆசைக்குமாக ஒற்றைக் குழந்தைகளாகவே போயிற்று. சுப்ரமணியத்தின் மகள் சரண்யாவும், தியாகராஜனின் மகன் அவினாஷும் சம வயதுடையவர்கள். மாயா அவர்களை விட நான்கு ஆண்டுகள் இளையவள்.

மாயாவின் அன்னை அவளது சிறு வயதிலேயே இறந்து போக, மூன்று வீட்டிற்கும் செல்லக் குழந்தையாகவே வளர்ந்தாள். அதிலும், தியாகராஜனுக்கு அவளை மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்று கொள்ளைப் பிரியம்.

விசேஷங்கள், பண்டிகள் என்றால் மூன்று குடும்பங்களும் அந்தந்த வீடுகளில் கூடிவிடுவர். தனது பெற்றோரின் இருபத்தி ஐந்தாவது திருமண நாள் என்று, நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அவினாஷ்.

மாயாவும், தனது தந்தையுடன் சென்றிருந்தாள். சிறிதுநேரம் அங்கிருந்துவிட்டு, முக்கியமான அலுவல் காரணமாகச் செல்ல வேண்டியிருந்த அவசியத்தால், அவளை விட்டுவிட்டு விஸ்வநாதன் மட்டும் கிளம்பிச் சென்றார்.

அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, துறுதுறுவென அங்கும் இங்குமாகத் துள்ளித் திரிந்து கொண்டிருந்த மாயாவை அழைத்துப் பழச்சாறு நிறைந்த டம்ளர்களை தட்டில் அடுக்கி அனைவருக்கும் கொடுக்கும்படி சொன்னார் அவினாஷின் அன்னை.

பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி அவள் வர, பூங்கொத்துடன் அங்கே வந்துகொண்டிருந்தவன் மீது மோதினாள். அந்த வேகத்தில் பழச்சாறு அவனது சட்டையை நனைக்க, இருவரும் தடுமாறி நின்றனர்.

சலிப்புடன் அவன் தன்னைக் குனிந்துப் பார்க்க, “ஐயம் சாரி! ஐயம் சாரி! கவனிக்காம வந்துட்டேன்…” என்றவள், எதையும் யோசிக்காமல் தனது கைக்குட்டையால் அவனது கையில் கொட்டியிருந்ததைத் துடைக்கத் துவங்கினாள்.

சட்டெனத் தனது கரத்தை விலக்கிக் கொண்டவன், “இட்ஸ் ஓகே” என்றபடி அங்கிருந்து நகர, அவனது செய்கை அவளை எரிச்சலடைய செய்தது.

“சரியான சிடுமூஞ்சி” என்று முனகியவள், தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

“வாடா! பலமான வரவேற்போடு வர்ற” என்றபடி நண்பர்கள் அவனைக் கிண்டல் செய்ய, அதைக் கண்டுகொள்ளாதவனாக, “திருமண நாள் வாழ்த்துகள் அங்கிள்” என்று அவர்களது பாதத்தைத் தொட்டு வணங்கினான்.

நண்பர்கள் அனைவரும், ஓஹோ… என்று ஒன்றாகக் குரலெழுப்ப, “நீங்க யாராவது காலில் விழுந்தீங்களா? சத்யாவைப் பார்த்துக் கத்துக்கோங்க” என்றார் தியாகராஜன்.

“அவங்க வீட்ல போய்ப் பார்த்தாதானே தெரியும்” என்று ஒரு அரட்டை குரல் கொடுக்க, மீண்டும் கொல்லென்ற சிரிப்பு எழுந்தது.

அங்கே வந்த அவினாஷின் அன்னை, “வாப்பா! சத்யா” என்று அவனை வரவேற்க, பளிச்சென புன்னகைத்தான்.

அவருக்கும் வாழ்த்தைத் தெரிவித்தவன், “சட்டை கறையாகிடும் ஆன்ட்டி! வாஷ் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றான்.

“பண்ணிக்கோப்பா!” என்றார்.

சட்டையைத் தண்ணீர் விட்டுத் துடைத்துக் கொண்டு, அவினாஷின் பக்கத்தில் வந்து அமர்ந்தான். அவனுக்கு மாயாவை அறிமுகப்படுத்தி வைத்தான்.

“ஹலோ!” என்றதோடு, அவளிருந்த பக்கமாக அவன் திரும்பக் கூட இல்லை.

ஏனோ, மாயாவின் கவனம் முழுவதும் அவன் மீதே இருந்தது. எல்லோருடனும் பேசிச் சிரித்தாலும், மற்றவர்களிடமிருந்து அவன் சற்று ஒதுங்கி இருப்பதைப் போலவே தென்பட்டது. அவனது எளிமையான உடையும், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பாக இருந்ததும் அவளை வெகுவாகக் கவர்ந்தது.

அன்றைய தினத்திற்குப் பின்னர், அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்காத போதும், அவ்வப்போது அவனது நினைவுகள் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஒருநாள் பேச்சோடு பேச்சாக அவினாஷிடம் அவனைப் பற்றி விசாரித்தாள்.

குறுகுறுவென்ற பார்வையை அவள் மீது செலுத்தியவன், “நான் அன்னைக்கே கவனிச்சிசேன். நீயும் அப்பப்போ அதைக் கன்பார்ம் பண்றது மாதிரி தான் நடந்துகற. இன்னைக்குக் கத்திரிக்கா கடைத்தெருவுக்கு வந்திடுச்சி. சீக்கிரமே இலையைப் போட்டு விருந்து பரிமாறிட வேண்டியது தான்” என்றான் சிரிப்புடன்.

அவனை அலட்சியமாகப் பார்த்தவள், “அடங்கறியா. இது வரைக்கும் என் மனசுல அப்படி எதுவும் இல்ல. அதோடு, முதல்ல விருந்து வைக்கிறது நீயா, இல்ல நானான்னு பார்ப்போமா?” என்று அவனது காதல் கதையை அம்பலப்படுத்தி விடுவேன் என்று மறைமுகச் சவால் விடுத்தாள்.

“தாயே! உன் திசைக்கே ஒரு கும்பிடு” என்று கையெடுத்துக் கும்பிட்டவன், “உனக்கு, சத்யாவைப் பத்தித் தெரியணும் அவ்வளவு தானே” என்று அவனைப் பற்றிச் சொல்லத் துவங்கினான்.

“சொந்த ஊர் அம்பாசமுத்திரம். அப்பா கிடையாது. சின்ன வயசுலயிருந்து ஹாஸ்டல்ல தான் இருக்கான். அவங்க அம்மா, அவனோட மாமா வீட்டோட இருந்ததாகவும், நாலஞ்சி வருஷத்துக்கு முன்ன அவரும் இறந்துட்டதால, அவரோட பொண்ணு இப்போ இவங்க வீட்லதான் வளர்றா.

மெரிட்ல எம்.பி.ஏ படிக்க வந்தான். அவன் உண்டு; அவன் வேலை உண்டுன்னு இருப்பான். அவ்வளவு சீக்கிரம் மனசுல இருக்கறதை யாரிடமும் பகிர்ந்துக்க மாட்டான். நான் ரெண்டு மூணு முறை அவங்க வீட்டுக்குப் போயிருக்கறதால, ஓரளவுக்கு விஷயம் தெரியும்.

எங்க செட்ல, அவன் மட்டும்தான் மிடில் கிளாஸ். அதனால, எல்லோரிடமும் சகஜமா பேசினாலும், எங்ககிட்ட எந்த அட்வாண்டேஜும் எடுத்துக்க மாட்டான். அதுக்காக, எதையும் விட்டுக் கொடுக்கவும் மாட்டான்.

ஆரம்பத்திலிருந்தே என்கிட்டக் கொஞ்சம் க்ளோஸா பழகுவான். அம்மாவும் அப்பப்போ காலேஜுக்கு வருவாங்க. அவன்கிட்ட நல்லா பேசுவாங்க. அதனால, நம்ம வீட்டுக்கு மட்டும் வருவான். என்கிட்டத் தான் கொஞ்சம் மனசு விட்டுப் பேசுவான். அதுவும் காலேஜ் விஷயம் மட்டும்.

இப்போ அவங்கவங்க பிஸ்னஸ், வேலைன்னு ஓடிட்டு இருக்கோம். நேரம் கிடைச்சா, இப்படி மீட் பண்ணிக்கிறது” என்றவன், “அவனுக்குள்ள, சின்னதா ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கறது நிஜம். ஆனா, அதை ஒத்துக்கமாட்டான்” என்று நண்பனைப் பற்றி விரிவாக விளக்கினான்.

அவனைப் பற்றி அறிந்துகொண்டவளுக்கு, அவன் புரியாத புதிராகவே தோன்றினான். அதுவே, அவன் மீது சுவாரசியம் தோன்ற ஏதுவானது.

அதன்பிறகு, அவினாஷின் வீட்டிலேயே இரண்டொரு முறை அவனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும், அவனது பார்வை அவள் பக்கமாகத் திரும்பியது இல்லை. அவனது அந்தக் குணம் தான், அவளை அவன் பக்கமாகச் சாய்த்தது.

எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு ஏற்ப, தனது எண்ணத்தின் நாயகனை ஒருசில இடங்களில் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. அப்போதும், அவன் சிறு புன்னகையுடன் அவளை நலம் விசாரித்து விட்டுக் கிளம்புவதிலேயே குறியாக இருந்தான்.

அவனது நடவடிக்கையில் அலுத்துக் கொண்டாலும், மனத்திற்குள் மெல்லிய சாரல் வீசியது அவளுக்கு. அதுவரையில் அவளிடம் அநாவசியமாக பேச்சோ, பார்வையோ எவ்வித அனுகூலத்தையோ எடுத்துக் கொள்ளாததே அவன் மீதான ஈர்ப்பு வளரக் காரணமாக இருந்தது.

ஒருநாள், அவினாஷின் அழைப்பை ஏற்று காஃபி ஷாப் ஒன்றின் அருகில் காத்திருந்தான். அவினாஷ் எங்கே இருக்கிறான்? என்று கேட்க, அவனைக் கைப்பேசியில் அழைத்தான். முக்கியமான வேலையில் இருப்பதாகவும், சற்றுநேரத்தில் வந்துவிடுவதாக அவனிடமிருந்து செய்தி மட்டும் வர உள்ளே சென்று அமர்ந்தான்.

அவனது தேவையை அறிந்துகொள்ள வந்த பணியாளரிடம் சற்று நேரத்தில் தானே அழைப்பதாகக் கூறிவிட்டுத் திரும்பியவனின் பார்வை, நான்கைந்து டேபிள்கள் தள்ளி அமர்ந்திருந்த மாயாவையும்ம், சரண்யாவையும் கண்டான்.

ஆனால், அவர்கள் இருவரும் அவனைக் கவனிக்கவில்லை போலும். மாயாவின் முகம் சற்று இறுக்கத்துடன் இருந்தது. சரண்யா ஏதோ சொல்ல, அதை மறுத்து அவளும் என்னவோ பேசினாள். அவனுக்கு பேசுவது கேட்காத போதும், எதைக் குறித்தோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

மேலும் சில நிமிடங்கள் கடந்தும், அவினாஷ் வருவதாகத் தெரியவில்லை. சிறு சலிப்புடன் அவன் அமர்ந்திருக்க, “இந்தப் பிடிவாதம், உன்னை எங்கே கொண்டு போய் விடப்போகுதோ தெரியல” என்று சற்று உரத்தக் குரலில் சொல்லிவிட்டுச் சென்ற சரண்யாவின் குரலில் நிமிர்ந்தான்.

பதில் ஏதும் சொல்லாமல் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்த மாயாவை ஆழ்ந்து பார்த்தான். சில விஷயங்களை வேண்டாம் வேண்டாம் என்று மூளை சொன்னாலும், மனம் அதனை ஏற்பதற்குத் தயாராக இருப்பதில்லை.

நண்பனின் வீட்டிலும், வெளியில் தன்னைச் சந்திக்க நேர்ந்தாலும், மாயாவின் பார்வை தன்னைப் பின்தொடர்வதை அவனுமே கவனித்திருந்தான். ‘செல்வச் செழிப்பில் புரண்டு கொண்டிருப்பவள், தன்னுடனான வாழ்க்கைக்கு எவ்வகையிலும் பொறுந்த முடியாது’ என்று திடமாக நம்பினான்.

இருப்பினும், மனமும்; மூளையும் இணைந்து செயல்பட வேண்டிய விஷயத்தில், எதற்கும் கட்டுப்படாமல் முரண்டு பிடித்துக் கொண்டு நிற்கும் மனத்தை, அவனாலேயே கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எழுந்து அவளை நோக்கிச் சென்றான்.

“ஹாய் மாயா! எப்படி இருக்கீங்க?” என்றபடி அவளெதிரில் அமர்ந்தான்.

அத்தனை நேரமிருந்த இறுக்கம் களைந்து இமைகள் விரிய, “வாட் எ சர்ப்ரைஸ்!” என்றாள் சிரிப்புடன்.

குறுஞ்சிரிப்புடன், “என்ன சர்ப்ரைஸ்?” என்றவனது கண்ணோரங்கள் சுருங்கின.

“நீங்களா வந்து பேசறீங்களே!” என்று சொல்லிவிட்டுக் கலகலவென நகைத்தாள்.

“அவினாஷுக்காக, வெயிட் பண்ணிட்டு இருந்தேன். பார்த்தா, நீங்களும் உங்க ஃப்ரெண்ட் சரண்யாவும் பேசிட்டு இருந்தீங்க. சரி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு அங்கேயே உட்கார்ந்துட்டேன்” என்றான்.

‘நீதான் எப்பவோ என்னை டிஸ்டர்ப் பண்ண ஆரம்பிச்சிட்டியே’ என்று மனத்துக்குள் முனகிக்கொண்டவள், “சரண்யா அக்கா எழுந்து போகலன்னா, நீங்க வந்து பேசியே இருக்கமாட்டீங்க” என்றாள்.

புருவங்கள் இடுங்க தலையை அசைத்தவன், “இருக்கலாம்” என்றான் அதே புன்னகையுடன்.

“ரொம்ப ஜாக்கிரதை தான்” என்றவள், “ஆனா, நீங்க பேச வரலன்னா, நானே உங்ககிட்டப் பேச வந்திருப்பேன்” என்றாள்.

“என்ன?” என்று மீண்டும் புருவங்கள் இடுங்கக் கேட்டவனின் சிரிப்பு அவனை அறியாமல் விடுபட்டிருந்தது. உள்ளுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது.

“அவினாஷ் மூலமா, உங்களை இங்கே வரவச்சதே நான்தான்” என்றாள் நிதானமான குரலில்.


அத்தியாயம் - 7

மாயாவின் வார்த்தைகள் அவனுக்குள் கோபத்தை விளைவிக்க, அவ்வளவு நேரமிருந்த ஸ்நேகபாவம் மறைய, “எவ்ளோ சீப் பிஹேவியர் உனக்கு” என்றான் கோபத்துடன்.

என்னதான் அவனுக்குத் தெரியாமலேயே அவனை வரவழைத்திருந்தாலும், அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு ஆத்திரமாக வந்தது.

“உங்ககிட்டச் சொல்லியிருந்தா, நீங்க வந்திருப்பீங்களா? இல்ல, பேசணும்ன்னு கேட்டிருந்தா எனக்காக நேரம் ஒதுக்கியிருப்பீங்களா?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“நிச்சயமா மாட்டேன்” என்றான் நிர்தாட்சன்யமாக.

அவள் பதில் சொல்லமுடியாமல் தயக்கத்துடன் பார்த்தாள். என்ன நடந்துவிட்டது என்று இப்படி இரக்கமே இல்லாமல் பேசுகிறான்’ என்று எண்ணினாள்.

“இங்கே பார் மாயா! உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கும் தெரியும். இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. சரியாகவும் வராது. நீ வளர்ந்த விதமும், வாழ்க்கை முறையும் வேற. நான், வாழ்க்கைக்குத் தேவையானதை வச்சி வாழறவன். நீங்கள்லாம் பகட்டுக்காக எல்லாத்தையும் செய்துக்கறவங்க. யூ டோண்ட் டிசர்வ் மீ” என்று கடைசி வாக்கியத்தைக் காட்டமாகச் சொல்லிவிட்டு வேகமாக எழுந்து சென்றான்.

அவன் சொன்ன கடைசி வாக்கியம் அவளது மனத்தை உடைத்ததுடன், ‘இவனைத் திரும்பச் சந்திக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துவிடாதே கடவுளே!’ என்று வேண்டிக்கொண்டாள்.

சற்று நேரத்திற்கு முன்பு, “இதெல்லாம் சரிவராது மாயா. அவன் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். இப்போது தான் தனது சொந்தக் காலில் நிற்க ஆரம்பிச்சிருக்கான். மூணு, நாலு வருஷமா பழகின நண்பர்களிடமே, தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவன்.

அவனுடைய ஈகோவை சீண்டி விடுவதைப் போல, இப்போ உன் காதலைச் சொல்லித் தொலைக்காதே. வெளிநாட்டுக்குப் போய்ப் படிக்கறது தான் என் விருப்பம்ன்னு சொல்லிட்டு இருந்த. முதல்ல காலேஜ்ல போய்ச் சேரு. படிப்பை முடி. நீ திரும்பி வந்த பின்னால, நிதானமாக யோசி.

அப்போதும் உனக்கு இந்தச் சத்யா மேல், நீ சொல்லும் காதல் இருந்தால் பேசிப் பார்க்கலாம்” என்று சரண்யா சொன்ன அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்காமல், தனது நேசம் பெரிது என்று எண்ணி, இவனிடம் பேச எண்ணிய மடமையை எண்ணித் தன்னையே திட்டிக் கொண்டாள்.

தான் என்ன சொல்ல வந்தோம் என்பதைக் கூடக் கேட்காமல், கடிவாளமிட்டக் குதிரையைப் போலத் தனது மனத்திலிருக்கும் தவறான கணிப்பை, தன் மீது வார்த்தைகளாக உமிழ்ந்துவிட்டுச் சென்றவனை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவனைப் பற்றிய எண்ணத்தையும், நினைவையும் மறக்க வேண்டும் என்று அவள் முழுமூச்சாக இருப்பதாகத் தோன்றினாலும், அவனது எண்ணமும், நினைவுகளுமே அனுதினமும் அவளுடைய சிந்தனையைக் களவாடிக் கொண்டிருந்தன.

முயன்று தன்னை ஏதேனும் வேலைகளில் புகுத்திக் கொண்டாள். இப்போதெல்லாம் சத்யா என்ற அவனது பெயரைக் கூட அவள் கேட்க விரும்புவதில்லை. சரண்யாவும் அவளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவனைப் பற்றித் தன்னிடம் எதுவும் பேசாததிலிருந்தே, என்ன நடந்திருக்கும் என்று சரண்யா யூகித்துவிட்டாள். அதைப் பற்றி அவளும் எதுவும் கேட்கவில்லை.

வெளிநாடு கிளம்ப இன்னும் பத்து நாட்களே இருக்க, இருவருமாக பர்சேசிங்கில் மூழ்கிப் போயினர். அன்று அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அந்த மாலிலிருந்த ஐஸ்கிரீம் பார்லரில் ஆளுக்கொரு பலூடாவுடன் அங்கிருந்த டேபிளில் வந்து அமர்ந்தனர்.

சரண்யா பலூடாவை ருசித்துக் கொண்டிருக்க, “அக்கா!” என்றழைத்தாள் மாயா.

“ம்ம்” என்றபடி அவள் நிமிர்ந்து பார்க்க, “அன்னைக்கு நீங்க கிளம்பிப் போன பின்னால என்ன நடந்ததுன்னு நீங்க ஒரு வார்த்தைக் கூடக் கேட்கலையே” என்றாள் பரிதாபமாக.

சரண்யா ஆழ்ந்த பார்வையை அவள் மீது செலுத்தி, “வேணாம் மாயா! நீ மறக்க நினைக்கிறதை, நான் ஞாபகப்படுத்த விரும்பல” என்றாள்.

அந்த நொடி, அத்தனை நாட்களாக அவளை அழுத்திக் கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் கரைந்து போகும் அளவுக்கு மேஜை மீது கவிழ்ந்து அழலானாள்.

“மாயா!” என்று அழைத்தவள், அதற்கு மேல் எதுவும் பேசாமல் ஆறுதலாக அவளது முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

சில நிமிடங்களில் சமாளித்துக் கொண்டு எழுந்தவளிடம் வெட் டிஷ்யூவை நீட்டினாள். அவளும் மறுக்காமல் வாங்கி முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

“காலம் எல்லாத்துக்கும் மருந்து வச்சிருக்கும். இன்னைக்குக் கஷ்டமா இருந்தாலும், நாளைக்கு அது எவ்வளவு நல்லதுன்னு புரியும்” என்றாள் மென்குரலில்.

அவளும் தலையை ஆட்டிக் கொண்டாள். ஆனாலும், சரண்யாவின் மனம் சத்ய பிரகாஷின் மீது பெரும் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தகுதி இல்லாத அவளவிற்கு அவள் என்ன செய்துவிட்டாள்? மாயாவைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? இப்படி ஒரு ஈகோயிஸ்டிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தாளே என்று நிம்மதியாக இருந்தது.

மனத்திலிருந்த அழுத்தத்தைக் கொட்டித் தீர்த்த பின், மனம் சற்று இலகுவாக ஆனது அவளுக்கு. அதன் பின் வந்த நாட்களில், தந்தையுடன் வம்பளக்கவும், சரண்யாவுடன் சண்டையிடவும் முடிந்தது.

பீனிக்ஸ் வந்த பின்பு, படிப்பைத் தவிர அனைத்தும் இரண்டாம் பட்சமாகிப் போனது. அவ்வப்போது அவனது வார்த்தைகள் முள்ளாக இதயத்தைக் குத்திய போதும், அதை ஒதுக்கித் தள்ளும் தைரியம் வந்திருந்தது.

யுவனின் தோழமை கிடைத்த பின்பு, தந்தையுடனான போன் உரையாடலில் பாதிக் கதைகள் அவனையும், அவனது குடும்பத்தைப் பற்றியுமானதாக இருந்தது.

“எனக்குக் கூடப் பிறந்தவங்க யாரும் இல்லன்னு ரொம்பக் கவலைப்படுவீங்க இல்லப்பா… யுவன் எனக்கு அந்தக் குறையே இல்லாம பார்த்துக்கறான்” என்று தந்தையிடம் பெருமை பீற்றிக் கொள்வாள்.

சரண்யாவிடம், “இன்னைக்கு யுவன் உருளைக் கிழங்கு வறுவல் செய்திருந்தான் பாருங்கக்கா… ம்ம், யம்மி!” என்று அப்போது தான் அதைச் சாப்பிடுவதைப் போல ரசித்துச் சொல்வாள்.

ஹாஸ்டலில் இருந்தாலும், வாரத்தில் பாதி நாட்கள் யுவனின் அப்பார்ட்மெண்ட்டில் தான் அவளது வாசம்.

“டேய் யுவன்! வத்தக் குழம்பு சாப்பிடணும் போலயிருக்கு செய்து கொடேன்” என்று சிறு குழந்தையாகக் காலையில் வாசலில் வந்து நிற்பவளைச் சிரிப்புடன் பார்ப்பான்.

மகளைக் காணவென்று ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் பீனிக்ஸில் தங்கிவிடும் விஸ்வநாதனுக்கு, யுவனின் சிறு அப்பார்ட்மெண்ட் சொர்க்கமாகத் தோன்றும்.

“அப்பா! நான் சொன்னேன்ல சித்தப்பு இவர்தான்” என்று யுவனின் வீட்டிற்கு வந்திருந்த விஷ்வாவை தந்தைக்கு அறிமுகப்படுத்தினாள்.

“எப்படி அங்கிள் இவளைச் சமாளிக்கிறீங்க. தெய்வம் நீங்க” என்று அவனும் தன் பங்கிற்கு அவளைக் கிண்டல் செய்வான்.

“என் பொண்ணு சொல்லும் போது கூட நம்பல யுவன். உன்னைக் கல்யாணம் செய்துக்கப் போறப் பொண்ணு ரொம்பக் கொடுத்து வச்சவ” என்று தன் பங்கிற்கு வத்தக் குழம்பையும், வெங்காய சாம்பாரையும் மிச்சம் வைக்காமல் திருப்தியாக உண்டுவிட்டு ஏப்பம் விடுவார்.

இரண்டு வருடம் சென்ற வேகம் தெரியாமல் மறைந்து போனது. அவர்களது சின்னஞ்சிறு உலகத்தில் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்த மாயா மீண்டும் தாய் நாட்டிற்கு வந்து சேர்ந்தாள். ஒரு வாரம் வரை பேச நிறையக் கதைகளும், சென்று வர நிறைய இடங்களும் இருந்தன.

அதன்பிறகு, எல்லாம் நடைமுறைக்குத் திரும்ப, சில காலம் மனத்திற்குள் மறைந்திருந்தவன் மெல்லத் தலையெடுக்க ஆரம்பித்தான்.

ஒருநாள் வீட்டிற்கு வந்த அவினாஷ், “ஃப்ரெண்ட்ஸோட வெளியே போய்ட்டு வரலாமா? சத்யாவும் வரான்” என்றான்.

“இல்ல அவி. எனக்கு அன்னைக்கு வேலை இருக்கு” என்று நாசூக்காக மறுத்தாள்.

அவளை இமைக்காமல் பார்த்தவன், “அன்னைக்கு ஏதோ ஒரு மூட்ல அப்படிப் பேசியிருப்பான். நீ திரும்ப மீட் பண்ணிப் பேசினா…” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.

“அவனுக்கு மட்டும் தான் தன்மானம், சுயமரியாதையெல்லாம் இருக்கா? எனக்கு இல்லயா? சொல்ல வந்ததைக் காதுகொடுத்துக் கேட்க முடியாத பொறுமைசாலி. அவனோட வாழ்க்கைல வர எனக்குத் தகுதி இல்லன்னு சொல்றான். இன்னைக்கு நான் சொல்றேன்… என் வாழ்க்கைல வர, அவனுக்கு எந்தத் தகுதியும் இல்ல” என்றாள் கோபத்துடன்.

ஆனால், அடுத்த நொடியே தனது வார்த்தைக்கான அர்த்தம் புரிய, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

இரண்டொரு நாட்கள் ஏதோ யோசனையிலேயே இருந்தவள், “அப்பா! நானும் நம்ம ஆஃபிஸுக்கு வரட்டுமா? வீட்ல இருக்க ரொம்பப் போர் அடிக்குது” என்ற மகளை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

அப்போது தான் மகள் வளர்ந்து நிற்பதே அவருக்குப் புரிந்தது. உறவினர்கள் சிலர் அவ்வப்போது எப்போது மாயாவிற்குத் திருமணம் என்று கேட்கும் போதெல்லாம், இன்னும் ரெண்டு மூணு வருஷமாகட்டும் என்றவர், விரைவில் அவளுக்கான ஒருவனைத் தேடிப் பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

“நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க எதுவுமே சொல்ல மாட்டேன்றீங்களே!” என்றாள் அவள்.

“நானே சொல்லணும்னு நினைச்சேன்ம்மா. அடுத்த வாரம் நாள் நல்லாயிருக்கு. ஜாயின் பண்ணிடு” என்றார் சந்தோஷத்துடன்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் - 8

தன்னால் முடிந்த அளவிற்கு ஆர்வமும், ஈடுபாடுமாக வேலைகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாள். அந்த நேரத்தில் தான் அவினாஷிற்காக, அவளைப் பெண் கேட்டு வந்தார் தியாகராஜன்.

விஸ்வநாதனுக்கோ, எல்லையில்லா மகிழ்ச்சி. தாயின் அன்பில் பொத்தி வளர்க்கப்பட வேண்டியவள், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தாள். அவளை, முன்பின் தெரியாத யாருக்கோ மணம் செய்து கொடுப்பதைவிட, அவினாஷ் போன்ற திறமைசாலியான ஒருவனை மருமகனாக்கிக் கொண்டால், தனது தொழில் சாம்ராஜியத்தையும் கவனித்துக் கொள்வான். மகளையும் கண்ணெதிரிலேயே வைத்துக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்துடன், மகளிடம் கலந்து பேசிவிட்டுச் சொல்வதாகச் சொன்னார்.

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த மாயா, “இன்னைக்கு தியாகு அங்கிள் உங்களைப் பார்க்க ஆஃபிஸ் வந்திருந்தாராமே, என்னப்பா விஷயம்?” என்று அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

காராணத்தைச் சொன்னவர், எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்த மகளைப் பார்த்தார்.

“உனக்கு ஓகே தானே கண்ணா!” என்று கேட்ட தந்தையின் குரலிலிருந்தே இந்தச் சம்மந்தத்தில் அவருக்கு இருக்கும் விருப்பம் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

ஆழமூச்செடுத்தவள், “என்னோட சம்மதம் இருக்கட்டும் நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டாள்.

முறுவலித்தவர், “அப்போ புரிஞ்சிகிட்டே தான் கேட்கற?” என்றார்.

அவளும் விடாமல், “தெரிஞ்சிக்கலாம்ன்னு கேட்கிறேன்” என்றாள்.

“ஹும்! எனக்குப் பரிபூரண சம்மதம்” என்றார்.

அவள் அமைதியாக நெற்றியைத் தடவிக்கொள்ள, “என்னம்மா?” என்று கேட்டார்.

“எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்கப்பா ப்ளீஸ்!” என்றவளிடம் மேற்கொண்டு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்?

“மாயா நீ யாரை…” என்று ஆரம்பித்தவரை இடைமறித்து, “எனக்கு ஒரு பத்து நாள் டைம் கொடுங்கப்பா” என்றாள் கெஞ்சலாக.

தந்தை தன்னை ஆராய்ச்சியுடன் பார்ப்பதைக் கண்டவளுக்கு, தனது மனத்திலிருப்பதை வெளிப்படையாக காட்டிவிடக் கூடாதே என்ற எண்ணத்துடன் முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ள முயன்று, வெற்றியும் பெற்றுவிட்டாள்.

“சரிடா. நீ தப்பா எந்த முடிவும் எடுக்க மாட்டேங்கற நம்பிக்கை அப்பாவுக்கு நிறையவே இருக்கு” என்றவர், மகளின் தலையை வருடிக் கொடுத்துவிட்டுச் செல்ல, அவள் ஆயாசத்துடன் மூச்சுவிட்டாள்.

அறைக்கு வந்தவளால், நிம்மதியாக ஒரு இடத்தில் அமர முடியவில்லை. அவளது பிரச்சனை அவினாஷ் அல்ல. அவனுக்கு ஏற்கெனவே ஒரு காதல் இருப்பது அவள் அறிந்த விஷயமே. இப்போது அவினாஷில் ஆரம்பித்திருக்கும் இந்த மாப்பிள்ளை பார்க்கும் படலம், இனி தொடர்ந்து வருமே என்ற அச்சமே காரணம்.

மனத்தில் இருப்பவனை தூக்கியெறியவும் முடியவில்லை. போராடி தனது நேசத்தை அவனுக்கு உணர்த்திவிடும் தைரியமும் இல்லை. என்ன செய்வது? அவனைச் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம் என்று எண்ணியவளுக்குக் கண்ணைக் கரித்தது.

முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தவள் அவினாஷிற்கு அழைத்து விஷயத்தைக் கூறினாள். அவனுக்கே அது அதிர்ச்சியாக இருந்தது.

“இதை நான் எதிர்பார்க்கவே இல்லை மாயா. உண்மையா தான் சொல்றியா?” என்று அவளிடமே கேட்டான்.

அவளுக்கு ஆத்திரமாக வர, “கொன்னே போட்றுவேன். ஒழுங்கா, உன் காதலை வீட்ல சொல்ற. இல்ல, தலையெழுத்தேன்னு என்னைக் கல்யாணம் செய்துக்க” என்று ஆத்திரத்துடன் சொன்னாள்.

“ஐயையோ!” என்று அலறியவன், “ஒரு வாரம் பொறுத்துக்க… நான் ஏதாவது ஏற்பாடு செய்றேன். ப்ளீஸ்!” என்று கெஞ்சலாகச் சொன்னான்.

“செய்ற. இல்ல, எனக்குச் சம்மதம்ன்னு அப்பாகிட்டச் சொல்லிடுவேன். ஞாபகம் வச்சிக்க” என்றவள் போனை அணைத்தாள்.

அவளது வார்த்தைக்கு மதிப்பு இருக்கத் தான் செய்தது. அடுத்த நான்கே நாட்களில் அவினாஷ் தனது பெற்றோரிடம் பேச, தியாகராஜன் கொதித்துப் போனார். இதை முன்பே சொல்லித் தொலைத்திருந்தால், விஸ்வநாதனிடம் நான் பேசியே இருக்கமாட்டேனே. இப்படி என் தலையைக் குனியச் செய்துவிட்டாயே’ என்று மகனைக் கடிந்து கொண்டார்.

தாயும், மகனுமாக அவரைச் சமாதானம் செய்து மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கும்படிக் கூறினர். நண்பனிடம் இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது? என்ற தயக்கமும், வேதனையும் அவரை தடுமாற வைத்தது.

திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் வரை, விஸ்வநாதனைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்து வந்தார். விஸ்வநாதனோ, தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கின்றனர் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தியாகராஜன் தம்பதி சமேதராக, விஸ்வநாதனின் வீட்டிற்கு வந்தனர்.

வரவேற்பும், உபசரிப்பும் முடிய தியாகராஜன் மெல்ல விஷயத்தை ஆரம்பித்தார். அவர் சொல்லச் சொல்ல விஸ்வநாதனின் முகம் சிறுக்க, மனத்திற்குள் ஏமாற்றம் பரவியது.

“கல்யாணத்துக்குச் சம்மதிக்கலன்னா, ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவேன்னு சொல்றான். நான் காதலுக்கு எதிரி இல்ல. ஆனா, மாயா எங்க வீட்டு மருமகளா வரணும்ன்னு ரொம்ப விருப்பப்பட்டேன் விஸ்வா” என்று புலம்பியவருக்கு, மனத்தைத் தேற்றிக் கொண்டு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவருக்கு.

அன்று மகளின் அமைதியும், தன்னிடம் அவகாசம் கேட்டதும் அவளுக்கு முதலிலேயே விஷயம் தெரிந்ததால் தானோ என்று எண்ணினார்.

“ஒரே பையன். தோளுக்கு மேல வளர்ந்துட்டான். அவனோட சந்தோஷம் முக்கியமில்லயா?” என்ற அவினாஷின் அன்னையின் கூற்று, அவரை யோசிக்க வைத்தது.

பெற்றவள் என்று ஒருத்தி இருந்தால், தகப்பனுக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்படாமல் அவள் பார்த்துக் கொள்வாள். மகளின் உணர்வுகளையும், ஏக்கங்களையும் அவளைத் தவிர, யாரால் புரிந்து கொள்ள முடியும்?

சிறுவயதிலிருந்தே செல்லமாக வளர்ந்த மகளுக்கு, அவள் விருப்பப்பட்ட அனைத்தையும் கொடுத்தே பழக்கப்பட்டவர். இனியும், அது தொடரும். ‘என் மகளின் அத்தனை ஆசைகளையும், ஒரு தந்தையாக நிறைவேற்றி வைப்பேன்’ என்ற எண்ணத்துடன் அவர்கள் கொடுத்த திருமணப் பத்திரிகையை வாங்கிக் கொண்டார்.

மாயாவிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததே, ‘அவினாஷின் விஷயம் ஏற்கெனவே அவளுக்குத் தெரிந்திருக்கிறது’ என்று புரிந்துகொண்டார்.

அவர் அமைதியாக இருப்பதைச் சோர்வு என்று எண்ணிக் கொண்டவள், “இதுக்காகவாப்பா டல்லா இருக்கீங்க? உங்களோட ராஜகுமாரிக்கு ஏத்த ராஜகுமாரன் இவன் இல்ல” என்றாள் சிரிப்புடன்.

மகளின் முகத்தை ஆழ்ந்து நோக்கியவர், “உனக்கு இந்த விஷயமெல்லாம் முதலிலேயே தெரியும் தானே” என்று அவர் கேட்க, ஆமென்று தலையசைத்தாள்.

“என்கிட்டச் சொல்லியிருக்கலாமேடா!” என்றார் இறங்கிய குரலில்.

“அவினாஷ் என்னோட ஃப்ரெண்ட்ப்பா. அவனோட ரகசியத்தை எப்படிச் சொல்வேன்?” என்றாள் நிதானமாக.

சிரித்துக்கொண்ட விஸ்வநாதன், “இதுமட்டும் தானா… இல்ல, ராஜகுமாரனோட ரகசியம் ஏதாவது இருக்கா?” என்று கொக்கிப் போட்டார்.

அவளது சிரிப்பு சட்டென நின்றது. ஆனால், சமாளித்துக் கொண்டவள், “அப்பா! எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நீங்களும் போய்த் தூங்குங்க” என்றபடி எழுந்து சென்றாள்.

ஆனால், விஸ்வநாதனின் பார்வை மகளின் மீதே நிலைத்திருந்தது.அத்தியாயம் - 9

விழாக்கோலம் பூண்டிருந்த அந்தப் பங்களாவை பார்த்துக் கொண்டே, பூங்கொத்தைச் சுமந்தபடி காரிலிருந்து இறங்கினாள் மாயா.

வரவேற்பிற்கு வந்தவர்களைக் கண்டதும் வேகமாக வந்த தியாகராஜன், “வா விஸ்வம்! நீங்க ரெண்டு பேரும் வந்ததுல ரொம்பச் சந்தோஷம்” என்று நண்பரின் கரத்தைப் பற்றிக்கொண்டு, “வாம்மா மாயா!” என்று அவளையும் வரவேற்றார்.

“அதெப்படி வராமல் இருப்பேன் தியாகு?” என்று நண்பரின் கரத்தை ஆறுதலாகப் பற்றிக் கொண்ட தந்தையைச் சிரிப்புடன் பார்த்தாள்.

“நீ உள்ளே போம்மா. சரண்யா, உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் முன்னால இருக்காங்க” என்றார்.

“ஓஹ்! சீனியர்ஸ் குரூப் சேர, என்னை உள்ளே அனுப்பறீங்க. என்ஜாய்” என்று கண்களைச் சிமிட்டிச் சிரித்துக்கொண்டே சென்றாள்.

ஒரு பக்கம் மெல்லிசை கச்சேரி நடந்துகொண்டிருக்க, மணமக்கள் புகைப்படக்காரரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து அதன்படி நடந்துகொண்டிருந்தனர். மாயா மௌனச் சிரிப்புடன் அவர்கள் எதிரில் சென்று நின்றாள்.

அவளைக் கண்டதும் விருட்டென இருக்கையிலிருந்து எழுந்த அவினாஷ், “ஹே மாயா!” என்று அவளை அணைத்துக் கொண்டான்.

பின்னாலேயே வந்த மணப்பெண் சிநேகத்துடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“இருடா! உனக்கு இருக்கு” என்றவள், “ஹேப்பி மேரீட் லைஃப்” என்று மலர்க்கொத்தை புதுப்பெண்ணிடம் கொடுத்தாள்.

“தேங்க்யூ! கல்யாணம்னாலே பிடிகொடுக்காம இருந்தார். திடீர்ன்னு பொண்ணு கேட்க வீட்டுக்கு வந்ததும். எனக்குச் ஷாக்கா இருந்தது. நீங்கதான் இந்தக் கல்யாணத்துக்குக் காரணம்ன்னு சொன்னார்” என்றாள் அப்பாவியாக.

“அப்படியா சொன்னான் இந்தக் கேடி?” என்று கலகலவென நகைத்தாள்.

மணப்பெண் புரியாமல் பார்க்க, “அப்படி மட்டும் இல்லன்னா, இவன் தலைல என்னையில்ல கட்டி வச்சிருப்பாங்க. அதான், தப்பிச்சா போதும்ன்னு அலறியடிச்சி உங்களைக் கல்யாணம் செய்துகிட்டான்” என்றாள் சிரிப்புடன்.

“இதையெல்லாம் அவர் என்கிட்டச் சொல்லவே இல்லயே…” என்ற மணப்பெண்ணின் குரல் உள்ளடங்கிப் போனது.

அவள் காதோரம் ரகசியக் குரலில், “அதெல்லாம் நாளைக்கு நைட் விளக்கமா கேட்டுக்கோங்க. விடாதீங்க” என்று அவளை மேலும் சீண்டிவிட, “ஏய்! மாயா… திஸ் இஸ் டூ மச். விளக்கம் சொல்ற நேரமாடி அது?” என்றவனிடம் நாக்கைத் துருத்திக் காண்பித்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினாள்.

அவன் வருங்கால மனைவியை தாஜா செய்து கொண்டிருக்க, அவள் தனது தோழிகளை நாடிச் சென்றாள். தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்ததில், நேரம் சென்றதே தெரியவில்லை. மணமக்களுடன் அனைவரும் சாப்பிடச் செல்ல, அவர்களுக்குத் தனிமை கொடுத்து தோழிகள் அனைவரும் சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அவளருகில் வந்த ஒரு பெண்மணி, “நீ மாயா தானே” என்று கேட்டார்.

“ஆமாம்” என்றாள்.

“எப்படி வளர்ந்துட்ட? அப்பா, உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கறதா சொன்னாங்க. அடுத்தக் கல்யாணம் உனக்குத் தான்” என்றார்.

அவரது பேச்சு அவளுக்கு எரிச்சலைக் கொடுக்க, “நீங்க சாப்பிடுங்க ஆன்ட்டி! இதோ வரேன்” என்றவள் பாதி இருந்த சூப் கிண்ணத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

எதிர்பட்டவர்கள் சிலரைப் பார்த்துச் சிரிப்புடன் அவள் நகர, “ரிசப்ஷனுக்கு வர்ற நேரமாடா இது?” என்று யாரையோ கேட்டுக் கொண்டிருந்தான் அவினாஷ்.

அதைக் காதில் வாங்கியபடி சென்று கொண்டிருந்தவள், “சாரிடா! கார் கொஞ்சம் பிரச்சனை பண்ணிடுச்சி” என்று ஒலித்த அந்தக் குரலில் ஆட்கொள்ளப்பட்டவளாக அப்படியே நின்றாள்.

‘அந்தக் குரல், அவனே தான்’ என்று எண்ணியபடி அவள் திரும்பவும், அதேநேரம் அவினாஷுடன் பேசிக் கொண்டிருந்தவன் பின்னாலேயே இரண்டடி எடுத்து வைத்துத் திரும்ப, இருவரும் மோதிக் கொண்டனர்.

அவள் கையிலிருந்த சூப், அவனது வெள்ளை நிறச் சட்டையில் அபிஷேகமாகி இருந்தது.

சலிப்புடன் நிமிர்ந்தவனும், “சாரி! கவனிக்காம…” என்று ஆரம்பித்தவளின் பார்வையும், சந்தித்துக் கொள்ள, இருவருமே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழி தெரியாமல் நின்றனர்.

முதலில் சுதாரித்துக் கொண்டவன், “சாரி” என்று உரைக்க, “இன்னும் நீங்க ரெண்டு பேரும் முட்டிக்கிறதை நிறுத்தலயா?” என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்தான் அவினாஷ்.

“நான் வாஷ் பண்ணிட்டு வரேன்” என்று அவன் நகர, அவன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்தாள் மாயா.

“ஹேய்! நீ சாப்பிடல. சூப் கப்போடு நிக்கிற?” எனக் கேட்டான் அவினாஷ்.

“இதோ…” என்று சமாளிப்பாகச் சிரித்தவளை ஆழ்ந்து பார்த்தவன், “மாயா! இன்னுமா அவனை நினைச்சிட்டு இருக்க?” என்று மென்குரலில் கேட்டான்.

அவனது பார்வையைச் சந்திக்கும் திராணியின்றி, “உன் வைஃப் தனியா இருக்காங்க கம்பெனி கொடு” என்றவள் அங்கிருந்து சென்றாள்.

அவினாஷின் திருமண வரவேற்பிற்கு, சத்யாவும் வருவான் என்று ஏனோ அவளுக்குத் தோன்றவே இல்லை. இனி, அவனைச் சந்திக்கவே கூடாது என்று வேண்டிக் கொண்டதெல்லாம், அவனைக் கண்ட நொடியில் மறந்து போனது.

அவனது விலகலும், முகச்சுளிப்பும் மனத்திற்குச் சஞ்சலத்தைக் கொடுத்தது. இத்தனை மாதப் பிரிவிற்குப் பிறகும், அவனால் தன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? பார்த்ததற்காகவாவது எப்படி இருக்கிறாய்? என்று ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாமே’ என்று பேதையின் மனம் புலம்பிக் கொண்டிருந்தது.

இருவரையும் கண்ட சரண்யா அங்கு நடப்பவைகளை, ஒன்று விடாமல் கவனித்துக் கொண்டிருந்தாள். மாயாவின் மனநிலையை புரிந்து கொண்டவள், அதை மாற்ற எண்ணி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். வீட்டிற்குக் கிளம்பும் வரை, அவளைத் தனியாகவே விடவில்லை.

வரவேற்பிற்குச் சென்றபோது மகிழ்ச்சியுடன் வந்த மகள், இப்போது இறுகிய முகத்துடன் மௌனமாக வருவதைக் கண்ட விஸ்வநாதன், மகளிடம் விசாரித்தார்.

“ஒண்ணுமில்லப்பா! கொஞ்சம் டயர்டா இருக்கு. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்றாள்.

அன்று மகளுடன் பேசும் முன்பிருந்த விஸ்வநாதனாக இருந்திருந்தால், அவள் சொன்னதும் சமாதானம் ஆகியிருப்பார். ஆனால், இப்போது மகளின் மனத்தில் ஏதோவொரு இரகசியம் மறைந்திருப்பதாக அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

அதிலும், விருந்து நடக்கும் இடத்திற்குச் செல்லும்வரை சாதாரணமாக இருந்தவள், இப்போது எதையோ பறிகொடுத்ததைப் போல இருப்பது எதனாலென்று, அவரால் ஆராயாமல் இருக்க முடியவில்லை.

அன்னை என்ற ஒருத்தியின் பங்கு, குழந்தைகளின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று, அப்போது தான் அவருக்கு முழுமையாகப் புரிந்தது.

விடிந்த பின்பும் எழ மனமில்லாமல், படுக்கையிலேயே இருந்தாள் மாயா. மனம் முழுவதையும், சத்ய பிரகாஷே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்.

தன்னைக் கண்ட நொடியில் அவனுக்கும் தயக்கமும், தடுமாற்றமும் எழுந்ததை அவனது முகமே காட்டிக்கொடுத்ததை, அந்தச் சூழலிலும் அவள் கவனித்திருந்தாள். உள்ளுக்குள் அது சந்தோஷமாகவே இருந்தது. ஆயினும், அந்த ஆச்சரியத்திற்கான ஆயுள் சில நொடிகள் கூட இல்லை என்பது ஏமாற்றமாக இருந்தது.

கவிழ்ந்து படுத்துத் தலையணையில் முகத்தைப் புதைத்தபடி, அவனது நினைவுகளில் ஆழ்ந்திருக்க, “மாயாம்மா!” என்ற தந்தையின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். திருமணத்திற்குச் செல்லத் தயாராகியிருந்தார் அவர்.

சட்டென எழுந்தவள், “சொல்லுங்கப்பா! கிளம்பிட்டீங்களா?” என்றபடி கட்டிலிலிருந்து இறங்கினாள்.

“நான் கிளம்பிட்டேன். நீயும் ரெடியாகிடு” என்று மகளின் தோளைத் தட்டினார்.

“நான் கண்டிப்பா வரணுமாப்பா! அதான், நேத்து வந்தேனே…” என்று தயக்கத்துடன் ஒலித்தது.

“கல்யாணம் தானே முக்கியம் கண்ணா! கிளம்பு. இன்னைக்குச் சில முக்கியமான ஆட்களெல்லாம் வராங்க. உன்னை, அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். சீக்கிரம்” என்று அவளது மனநிலை புரியாமல் சொல்லிவிட்டுச் சென்றார்.

தனது நிலையை நொந்தபடி குளித்துவிட்டு, மஞ்சளும், சிகப்பும் கலந்த பட்டுச் சுடிதாரை அணிந்து தயாராகி வந்தாள்.

மகளைத் திருப்தியாகப் பார்த்தவர், “புடவை கட்டியிருந்தா, இன்னும் பிரமாதமா இருந்திருக்கும்” என்றார் சிரிப்புடன்.

“புடவையா! எதுக்குப்பா ரிஸ்க்? இதுவே நல்லாயிருக்கு. கிளம்புவோமா?” என்று உற்சாகமாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டாள்.

“சரி சரி கிளம்புவோம்” என்றார் சிரித்துக்கொண்டே.

திருமண மண்டபத்தை அடைந்தபோது மழை லேசாகத் தூற ஆரம்பித்தது.

“என்ன விஸ்வா? நீயே இவ்வளவு லேட்டா வரலாமா?” வரவேற்பில் நின்றிருந்த தியாகராஜன் கேட்க, “லேட்டானாலும் லேட்டஸ்டா வந்துட்டோமே அங்கிள்” என்றாள் புன்னகையுடன்.

“அப்பாவை, ஒரு வார்த்தை சொல்லக்கூடாதே. இந்தப் பொண்ணுங்களுக்குக் கோபம் வந்திடுமே” என்று சிரிப்புடன் தியாகராஜன் சொல்லிக்கொண்டிருக்க, “அங்கிள்!” என்றபடி அங்கே வந்தான் சத்ய பிரகாஷ்.

அவர் சொன்னதைச் சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தவள், அவனைக் கண்டதும் அமைதியானாள்.

அவனது பார்வை தன் பக்கமாகத் திரும்புவதைக் கண்டதும், “எக்ஸ்க்யூஸ்மீ! நான் உள்ளே போறேன் அங்கிள்” என்றவள் விடுவிடுவென உள்ளே சென்றாள்.

அவள் செல்வதை ஓரப் பார்வை பார்த்தவன், “அங்கிள், ஆன்ட்டி உங்களைக் கூப்பிடுறாங்க. ஏதோ கேட்கணுமாம்” என்றான்.

“இதோ” என்றவர், “விஸ்வா! இவன் சத்யா. சத்ய பிரகாஷ்! நம்ம அவினாஷோட ஃப்ரெண்ட். ஹைட்ராபாட்ல ஒரு கம்பெனில ஃபினான்ஷியல் மேனேஜரா இருக்கான்” என்றவர், “சத்யா, இவர் என் க்ளோஸ் ஃப்ரெண்ட் விஸ்வநாதன். நம்ம மாயாவோட அப்பா” என்று அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

விறைப்புடன், “ஹலோ சார்!” என்று அவருக்குக் கரத்தை நீட்ட, புன்னகையோடு அவனுடன் கை குலுக்கினார் விஸ்வநாதன்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் - 10

கோலாகத்துடன் திருமணம் முடிய, அறுசுவை உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. திருமணம் முடிந்ததும் ப்ரீ போட்டோஷூட்டில் எடுத்தப் புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டு, ஆங்காங்கே இருந்த பெரிய எல்.ஈ.டி திரையில் ஒளிபரப்பப்பட்டது.

மேடையில் நண்பர்களில் கிண்டலும், மணமக்களின் வெட்கமுமாக அங்கே உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இது எதிலும் கலந்து கொள்ளாமல், அவர்களை வேடிக்கை பார்த்தபடி கீழே அமர்ந்திருந்தான் சத்ய பிரகாஷ்.

மணமகளின் அருகே அமர்ந்தபடி மாயா வளவளத்துக்கொண்டிருக்க, “மாயா! அந்தச் சத்யா ஏன் கீழே உட்கார்ந்திருக்கான்? கூப்பிடேன்” என்ற அவினாஷை கண்களை உருட்டி விழித்தாள்.

“ஓகே ஓகே விடு” என்று சமாதானக் கொடியைக் காட்டியவன், “டேய் சத்யா! மேலே வா” என்றழைத்தான்.

அவனோ, இருக்கட்டும் என்பதைப் போலக் கைகாட்டி விட்டு அங்கேயே அமர்ந்திருந்தான். அவனது பெயரைக் கேட்கும் போதெல்லாம், இதயம் படபடவென அடித்துக் கொள்வதை அவளால் தடுக்க முடியவில்லை.

“உங்க செட்லயே, இவர் ரொம்ப பெக்கூலியர் கேரக்டர் இல்ல அவி” என்றாள் மணமகள்.

“அவன், ஏற்கெனவே அப்படித்தான். அதுவும் இப்போ சொல்லவே வேணாம்’ என்றவனது பார்வை மாயாவைச் சீண்ட, “செருப்புப் பிஞ்சிடும்” என்று அவன் மட்டும் பார்க்கும்வண்ணம் உதட்டை அசைத்தாள்.

“இனி, அதெல்லாம் முடியாது. அந்த உரிமையெல்லாம் என் பொண்டாட்டிக்கு மட்டும் தான்” என்று அவன் சப்தமாகச் சொல்ல, “என்னது?” என்றபடி கணவனைப் பார்த்தாள் புதுப் பெண்.

“எல்லாமே தான் பேபி” என்று அவன் சமாளிக்க, அவள் தலையிலடித்துக் கொண்டாள்.

கீழே அமர்ந்திருந்த சத்ய பிரகாஷின் பார்வை முழுவதும் மாயாவின் மீதே இருந்தது. மனம் அடங்கு அடங்கு என்று எச்சரித்தாலும், அவளை நாடிச் செல்லும் பார்வையைத் திசை மாற்றுவது பெரும் சிரமமாக இருந்தது.

“என்னப்பா! நீங்க தனியா இங்கே உட்கார்ந்துட்டீங்க. ஃப்ரெண்ட்ஸோடு என்ஜாய் பண்ண வேண்டியது தானே” என்றார் அவனருகில் வந்தமர்ந்த விஸ்வநாதன்.

“இருக்கட்டும் சார்” என்று புன்னகைத்தான்.

“நேத்துலயிருந்து, நீதான் ஓடியாடி எல்லா வேலையும் பார்த்திருக்க. அந்தக் களைப்புத் தீர ஜாலியா கொஞ்ச நேரம் அரட்டை அடிக்க வேண்டியது தானே” என்றார் நட்பாக.

அவனும், அவரது இயல்பான பேச்சில் கவரப்பட்டவனாக, பேசிக்கொண்டிருந்தான்.

மணமக்களுடன் இருந்தாலும், மாயாவின் பார்வை அவ்வப்போது தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் அவன் மீதே சென்று வந்தது. என்றும் இல்லாதத் திருநாளாக தந்தை இப்படி அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தாலும், அதற்கான வழி தெரியாமல் உள்ளுக்குள் தவித்தாள்.

‘இந்தச் சரண்யா அக்கா வந்திருந்தாலாவது ஏதாவது தெரிஞ்சிக்க வழி இருந்திருக்கும். அவங்களும், ஹாஸ்பிட்டலுக்குப் போய்ட்டாங்க’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டிருக்க, அவினாஷின் அன்னை அவளை அழைத்தார்.

“மாயா! இந்த ஜுவல்ஸ் அன்பளிப்பா வந்தது. இதையெல்லாம் கொஞ்சம் மேலே அவினாஷ் இருந்த ரூம்ல வச்சிடுறியா? இந்தா பீரோ சாவி. உன் அங்கிள், இப்போ தான் ரூம் சாவியோட மேலே போனார். கையோட கொண்டு போய்டு கண்ணம்மா!” என்றார்.

“போய் வைன்னா வைக்கப் போறேன். எதுக்கு ஆன்ட்டி இவ்ளோ கொஞ்சல்?” என்று அவரது கொழுகொழு கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிவிட்டு, அவரிடமிருந்து இரண்டு பைகளை வாங்கிக் கொண்டாள்.

அவள் மேலே சென்றபோது, மழை பூந்தூரலாக தூறிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்து வைத்துவிட்டு, சாலையைப் பார்த்தவண்ணம் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார் தியாகராஜன். உள் அறைக்குச் சென்றவள், பொருட்களை பீரோவில் வைத்துப் பூட்டினாள்.

எதிரிலிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தைப் பார்த்தாள். மணமக்கள் மீது விழ வேண்டிய அட்சதை அவளது தலையிலும் விழுந்திருக்க, கண்ணாடியைப் பார்த்து நிதானமாக எடுத்தாள். மழை முகத்தில் பன்னீராகத் தூவிவிட்டுச் சென்ற பூஞ்சாரலை ஒற்றியெடுத்தாள். தலையைச் சீர்படுத்திக் கொண்டு அவள் முன்னறைக்கு வந்தபோது, அறையின் கதவு மூடப்பட்டிருந்தது.

திறந்திருந்த கதவு மூடியிருப்பதைக் கண்டதும், சந்தேகத்துடன் இழுத்தாள். வெளியே பூட்டியிருந்தது. தான் உள்ளே இருப்பதைக் கவனிக்காமல் கதவைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டதை உணர்ந்தாள்.

‘நல்லவேளை கையில் செல்போனைக் கொண்டு வந்தது நல்லதாகிப் போனது’ என எண்ணிக்கொண்டு, அவினாஷின் அன்னைக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.

“உன் அங்கிள் இப்படித்தான் ஒரு வேலைக்கு, பத்து வேலை வைப்பார். கொஞ்ச நேரம் பொறுத்துக்கோடா சாவியோட யாரையாவது அனுப்பறேன்” என்றவர் கணவனை அந்தக் கூட்டத்தில் தேடினார்.

சில நொடிகள் அறைக்குள் அமர்ந்திருந்தவள், பின் பக்கமிருந்த பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள். பூந்தூறல் மெல்லிய சாரலாக மாறி சற்று நேரத்தில் மழையாகப் பொழிய ஆரம்பித்தது.

மழையைக் கண்டது சிறுகுழந்தையாக மாறி மனம் குதூகலிக்க, கைகளை நனைத்து விளையாடினாள். முகத்தில் சிதறியடித்த மழைநீரில் உடல் சிலிர்க்க, சிரிப்புடன் அதை அனுபவித்தவள், தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதைப் போலத் தோன்ற, திரும்பிப் பார்த்தாள்.

கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, பால்கனி கதவில் சாய்ந்து நின்று குறுகுறுவென்று, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்ய பிரகாஷ்.

அனிச்சையாக அவளது கைகள் பின்னுக்கு இழுக்கப்பட, துப்பட்டாவை இழுத்துச் சரிசெய்தபடி அங்கிருந்து செல்ல முயன்று கதவை நோக்கி நடந்தாள். ஆனால், அவன் நகர்ந்தால் தானே, அவள் போக முடியும். அவன் அசையாமல் அப்படியே நின்றிருந்தான்.

கீழுததட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு கண்களை அழுந்த மூடித் திறந்தவள், அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், “கொஞ்சம் வழியை விடுறீங்களா?” என்றாள்.

“எப்படி இருக்க மாயா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

தனது பெயரை அவன் உச்சரித்தது, மனத்தில் சாமரம் கொண்டு வீசுவதைப் போலிருந்தது. ஆனாலும், தன் மனத்தைக் காயப்படுத்தி விட்டுச் சென்றவனுடன், அத்தனைச் சீக்கிரம் சமாதானமாகிவிட அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

நெஞ்சம் தடதடத்த போதும், “வழியை விடறீங்களா ப்ளீஸ்!” என்றாள் பொறுமையை இழுத்துப் பிடித்தக் குரலில்.

அவளது ஊடலுக்கான காரணம் புரிந்த போதும், தனது கேள்விக்குப் பதில் சொல்லாமல், தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் இருப்பவள் மீது கடுகடுவென வந்தது அவனுக்கு.

மறுபக்கமாக சாய்ந்து நின்றவன், “விடறேன். விடாம உன்னைப் பிடிச்சி வச்சி நான் என்ன செய்யப் போறேன்?” என்றான் சீண்டும் விதமாக.

சுர்ரென அவளுக்குக் கோபம் தலைக்கேற, “பிடிச்சி வச்சிப் பாருங்களேன் தெரியும்” என்று வீம்பாகச் சொன்னாள்.

அவனது உதடுகளில் முறுவல் குடியேற இரகசியக் குரலில், “என்ன தெரியும்?” என்றான் கிண்டலாக.

இதற்கு என்ன பதில் சொல்வாள்? திருதிருவென விழித்தவள் முகம் சிறுக்க, “தள்ளிப் போகப் போறீங்களா இல்லயா?” என்றாள்.

“மாயா அன்னைக்கு…” என்று அவன் பேச ஆரம்பிக்க, யாரோ அறைக்குள் வரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

உள்ளே வந்த அவினாஷ், அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“என்னடா நடக்குது இங்கே?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாலும், அவனது முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது.

“பேசிட்டு இருந்தோம்” என்றான் சத்ய பிரகாஷ்.

எரிச்சலில் இருந்தவளுக்கு அவினாஷின் கேள்வி கடுப்பைக் கொடுத்தது. சத்ய பிரகாஷ் சற்று நகர்ந்து வரவும், கிடைத்த இடைவெளியில் புகுந்து, அவர்களைக் கடக்க முயன்றாள்.

சட்டென அவளது கரத்தைப் பற்றியவன், “மாயா! உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றான்.

வேகமாக கையை உதறி விடுவித்துக் கொள்ள முயல, அவன் பிடித்திருந்த அழுத்தத்தில் கையிலிருந்த கண்ணாடி வளையல்கள் உடைந்துச் சிதறின.

“அடப்பாவி! வளையளை உடைச்சிட்டியேடா?” என்று நேரம் காலம் தெரியாமல் அவினாஷ் கலாய்த்தான்.

அவனை முறைத்தவள், “முன்னபின்ன தெரியாதவங்ககிட்டப் பேச, எனக்கு எந்த விஷயமும் இல்லன்னு உன் ஃப்ரெண்ட்கிட்டச் சொல்லு” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்ற திசையைப் பார்த்தவன், தன் கையிலிருந்த உடைந்த வளையல் துண்டுகளைப் பார்த்தான்.

“பொக்கிஷமாக சேர்த்து வைக்கப் போகிறாயா நண்பா!” என்று ஆர்வமும், ஆவலுமாகக் கேட்டான்.

“நான் ஏன்டா சேர்த்து வைக்கணும்? லவ் பண்ற அலப்பறைங்க தான் இதெல்லாம் செய்யும்” என்றான்.

அவினாஷிற்கு, மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

“டேய்! உண்மையிலேயே என்னதான் நடக்குது?” என்று புலம்பினான்.

சிரித்தவன், “இப்போ என்ன நடக்குதுன்னு தெரியணும் அவ்வளவு தானே! அவகிட்ட அன்னைக்கு அப்படிப் பேசினதுக்கு, ஒரு சாரி கேட்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா, நின்னு பேசக்கூட மாட்டேன்றா” என்றான் தாடையைத் தடவியபடி.

“சாரி கேட்கவா இவ்ளோ நேரம் இங்கே தவம் இருந்த?” அவன் கேலியாகக் கேட்டான்.

“பின்ன, லவ் பண்றேன்னு சொல்லவா?” என்று அவனுக்கே எதிர் கேள்வி கேட்டான்.

“நீங்க லவ்வாவது பண்ணுங்க, டைவர்ஸாவது பண்ணுங்க. எங்களை வாழ விடுங்கடா!” என்று அவன் கடுப்பில் கத்திவிட்டு, மருவீட்டு உடையை அணிந்து கொள்ள ஆரம்பித்தான்.

சத்ய பிரகாஷ் கீழே வந்தபோது, தனது தந்தையின் அருகில் அமர்ந்திருந்தாள். அந்தநேரத்தில் அவளுடைய கைப்பேசி அழைக்க, முகம் கொள்ளா சிரிப்புடன் எடுத்துப் பேச ஆரம்பித்தாள். அவளது முகத்தில் தெரிந்த வர்ணஜாலத்தை இரசித்தபடி, அவள் தனது பார்வையில் படும் தூரத்தில் அமர்ந்தான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் - 11

அவசர அவசரமாக மதிய விருந்தை உண்டபடி, கண்களைச் சுழலவிட்டாள். ஆனால், அவள் யாரைத் தேடினாளோ அவன், அவளது கண்களிலேயே படவில்லை.

மகளை கவனித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன், “யாரம்மா தேடிட்டு இருக்க?” என்று கேட்டுக்கொண்டே கேரட் அல்வாவை வாயிலிட்டுக் கொண்டார்.

அப்போதுதான் பிஸிபேளாபாத்தை ஒரு வாய் உண்டவளுக்கு, தந்தையின் கேள்வியில் புரையேறியது.

“அடடா! மெதுவாம்மா” என்று அவளது தலையில் தட்டியவர், அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொடுத்தார்.

அவள் வாங்கிக் குடிக்க, “இதுக்குத் தான் சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்றது” என்ற தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தவள், “நான் எங்கேப்பா பேசினேன்?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.

அவரும் தீவிர பாவனையுடன், “இதோ இப்போ பேசறியே” என்று சொல்லிவிட்டுச் சிரிக்க, “ப்ளீஸ்ப்பா அழுதிடுவேன்” என்று அழுவதைப் போல ஜாலம் செய்தாள்.

“சரிம்மா சீக்கிரம் சாப்பிடு. அப்புறம், ஃப்ளைட் வந்துடும்” என்றார் அவளுக்கு நினைவு படுத்தும் விதமாக.

“ம்ம், எஸ்ப்பா. ஃபைவ் மினிட்ஸ் என்று அவசரமாக உண்டுவிட்டு கையைக் கழுவிக் கொண்டு வந்தவள், “என்னைச் சொல்லிட்டு நீங்க இன்னும் லஞ்ச் முடிக்கல. சீக்கிரம்ப்பா” என்றாள்.

“கண்ணா! நான் இங்கேயே இருக்கேன். நீ ஏர்போர்ட் போய், யுவனை பிக்அப் பண்ணிட்டு வீட்டுக்குப் போய்டு. ஈவ்னிங், எனக்குக் கார் அனுப்பு. இல்லனா, நான் தியாகுவோட கார்லயே வந்திடுறேன்” என்றார் விஸ்வநாதன்.

“நீங்க கால் பண்ணுங்கப்பா. நான் கார் அனுப்பி வைக்கிறேன்” என்றவள் அனைவரிடமும் விடை பெற்று, வெளியே வந்தாள்.

மழை லேசாகத் தூறுவதைப் போல இருந்தது. ஆனால், வெளியே வந்தபின்தான் சடசடவென பொழிவது தெரிய, கார் பார்க்கிங்கை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.

அவள் ஏர்போர்ட்டை அடைந்தபோது யுவன் வெளியே வந்திருந்தான். அவனைக் கண்டதும் ஓடிச் சென்று வரவேற்பாக அணைத்துக் கொண்டாள். இருவரும் வளவளவென பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர்.

ஏற்கெனவே அவன் இரண்டு முறை அவள் வீட்டிற்கு வந்திருந்ததால், வேலையாட்கள் அனைவரையும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அவர்களை விசாரித்துவிட்டு, தனக்காக கொடுத்திருந்த அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தான்.

அவனுக்கு மதிய உணவை பரிமாறியபடி, “கேட்க மறந்துட்டேன். நம்ம சித்தப்பு எப்படி இருக்கார்?” என்றாள் சிரிப்புடன்.

“ரொம்ப நல்லா இருக்கான். உன்னை விசாரிச்சதா சொல்லச் சொன்னான். ஈவ்னிங் உனக்குக் கால் பண்றேன்னு சொல்லியிருக்கான்” என்றான்.

“பார்த்தியா, சித்தப்பு என்னை விசாரிச்சதை நீ சொல்லாம மறைச்சிட்ட” என்றாள் வேண்டுமென்றே.

“நீ எங்கே என்னைப் பேச விட்ட? விடாம பேசிட்டே இருந்தா நான் என்னன்னு பேசறது?” என்றான் கிண்டலாக.

“உனக்குப் பேசவே தெரியாது பாரு” என்றாள்.

“சரி, நம்ம சண்டை அப்புறம். ரெண்டு நிமிஷம் கொடு சாப்டுட்டு வந்திடுறேன்” என்றவன் சாப்பிட்டுவிட்டு, அவளை அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவளுக்காக வாங்கி வந்திருந்த அன்பளிப்பை அவளிடம் கொடுத்தவன், “இந்தக் குர்த்தி ஆரண்யாவோட கிஃப்ட். இந்த வாட்ச் அப்பாவோட கிஃப்ட்” என்றான்.

“வாவ்! வெரி நைஸ். வாட்ச்சும் சூப்பர். குர்த்தியும் செம கியூட். அதுவும், இந்த சீக்வென்ஸ் டிசைன்ஸ் ரொம்பக் கிராண்டா இருக்கு” என்று பாராட்டினாள்.

“அவளே டிசைன் பண்ணினாளாம். அவள் கத்துக்கற பேஷன் டிசைனிங்கையெல்லாம் உன்னை வச்சி டெமோ பார்த்துக்கறா” என்றான் சிரிப்புடன்.

“போடா! சும்மா அவளைக் கிண்டல் பண்ணிகிட்டு. ரொம்ப அழகா ஸ்டிச் பண்ணியிருக்கா. நீ ரெஸ்ட் எடு. நான் அவகிட்டப் பேசிட்டு வரேன்” என்று அவனளித்த அன்பளிப்புகளுடன் தனது அறைக்குச் சென்றாள்.

யுவனின் தந்தையிடமும், தங்கையிடமும் பேசிவிட்டு மீண்டும் அவனுடைய அறைக்கு வந்தபோது, அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மீண்டும் அறைக்கு வந்தவள் படுக்கையில் விழுந்தாள். அதுவரை மறந்திருந்த சத்ய பிரகாஷின் நினைவுகள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தன.

‘அவ்வளவு நேரம் அங்கிருந்தவன், திடீரென எங்கே சென்றிருப்பான்?’ என்று யோசித்தபடி படுத்திருந்தவள் தன்னை மீறி உறங்கிப் போனாள்.

உறக்கம் கலைந்து எழுந்தவள், மொபைலைத் துழாவினாள். அது ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்க, எழுந்து மணியைப் பார்த்தாள். மணி நான்காகி இருந்தது. எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

“யுவன் எழுந்தாச்சா? என்று கேட்டாள்.

“தம்பி எங்கேயோ வெளியே போயிருக்காங்க சின்னம்மா” என்றார் வேலையாள்.

“அப்பா போன் செய்தாங்களா?” என்று கேட்டாள்.

“அரை மணி நேரத்துக்கு முன்ன போன் பண்ணாங்கம்மா. உங்களுக்குக் கால் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்ததாம். அதனால, ஐயாவே வந்திடுறேன்னு சொல்லச் சொன்னாங்க” என்றார்.

அவரை முறைத்தவர், “எல்லாத்தையும் நான் கேட்டாதான் சொல்லணுமா?” என்று எரிச்சலுடன் கேட்டவள், போனை எடுத்துத் தந்தையின் எண்ணுக்கு அழைத்தாள்.

போனை எடுத்தவரிடம், தான் உறங்கிவிட்டதையும், மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆனதையும் சொல்ல, தான் இன்னும் சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்து விடுவதாகச் சொல்லி போனை வைத்தார்.

“சின்னம்மா உங்களுக்குக் காஃபி!” என்று கேட்ட வேலையாளிடம், “அப்பா வந்ததும் சேர்ந்து சாப்பிடுறேன்” என்றவள், யுவனுக்கு அழைத்தாள்.

அவன் போனை எடுக்கவே இல்லை. ‘எங்கே போய்விட்டான்? போனையும் எடுக்க மாட்டேன்றான்” என்று அவள் முனகிக்கொண்டே அமர்ந்திருக்க, “ஹாய்! கும்பகர்ணி எழுந்தாச்சா?” என்று கேட்டுக்கொண்டே, அவளெதிரில் வந்து அமர்ந்தான்.

“நீ கொடுத்தத் திங்க்ஸை, என் ரூம்ல வச்சிட்டு வர்றதுக்குள்ள தூங்கின நீ கேட்கக்கூடாது” என்றாள் அவளும் பதிலுக்கு.

“அது, ஊருக்கு வந்து நாலு நாள் தான் ஆச்சு. வந்ததிலிருந்து சரியா தூக்கமில்ல. நடுவுல உன்னைப் பார்க்கக் கிளம்பிட்டேனா…” என்று இழுக்க, “சரி சரி விடு. எங்கேயாவது வெளியே போகலாமா?” என்றாள்.

“நைட் வாக் போகலாம். நாளைக்கு எங்கேயாவது அவுட்டிங் போகலாம்” என்றான்.

எங்கே செல்லலாம் என இருவரும் மாற்றி மாற்றி இடங்களை அடுக்கிக் கொண்டே போனபோதும், ஒருவர் கூறிய இடம் அடுத்தவருக்குப் பிடித்தமில்லாமல் போனது.

சலிப்புடன், “போடா! எதுக்குமே நீ சரிப்பட மாட்டேன்ற” என்று அருகிலிருந்த புத்தகத்தை அவன் மீது வீசியெறிந்தாள்.

“என்னம்மா உன்கிட்ட அடிவாங்க ஆள் வந்தாச்சா?” என்றபடி வந்தார் விஸ்வநாதன்.

“நீங்களே கேளுங்கப்பா! எங்கேயாவது வெளியே போகலாம்ன்னு சொன்னா கேட்க மாட்டேன்றான்” என்று தந்தையிடம் சிபாரிசுக்குச் சென்றாள்.

யுவன் புன்னகைக்க, “இன்னும் ரெண்டு நாள் இருக்கப் போறார். நாளைக்கு போகலாம். இன்னைக்கு வீட்லயே கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டும்ம்மா” என்றார் அவர்.

“நீங்களுமாப்பா. என்னைவிட, இவனைத் தான் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள் குறையாக.

“நீதானேடா யுவன் எனக்குப் பிரதர் மாதிரின்னு சொன்ன” என்று அவரும் விடாமல் பதிலளித்தார்.

“ஹும்!” என்று காலை உதறிக்கொண்டு உள்ளே செல்ல, இருவரும் சிரித்துக் கொண்டனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் சமாதானமாகி வந்தவள், அவர்களுடன் அமர்ந்து தனது அரட்டையைத் தொடர்ந்தாள். இரவு உணவிற்குப் பிறகு, அலுவலக விஷயமாகப் பேசவேண்டும் என்று விஸ்வநாதன் தனது அறைக்குச் செல்ல, இளையவர்கள் இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பேச்சு எங்கெங்கோ சென்று, ஆரண்யாவிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதில் வந்து முடிந்தது.

“வெரி குட். ஆரு என்ன சொன்னா? மாப்பிள்ளை பார்க்க ஒத்துக்கிட்டாளா?” என்று கேட்டாள்.

“லேசுல சம்மதிக்கல. அப்பாவுக்குக் ஹெல்த் கொஞ்சம் இஷ்யூஸ் இருக்கு. நானும் பக்கத்தில் இல்ல. உனக்குக் கல்யாணம் செய்துட்டா, நான் அப்பாவை என்னோடவே கூட்டிட்டுப் போயிடுவேன்னு சொன்னேன். உடனே, ஓன்னு ஒரே அழுகை” என்றான்.

“பின்ன, அழமாட்டாளா? பேசாம அவளையும் பாரின்லயே…” என்றவள் விழிகள் மின்ன, “நம்ம சித்தப்புக்கே கல்யாணம் செய்து கொடுத்திடலாமா யுவன்?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

அவளையே பார்த்தவன், “லூசு. அவள், அவனை அண்ணான்னு தான் கூப்பிடுவா” என்று தலையிலேயே தட்டினான்.

“ஆமாம்ல… மறந்தே போயிட்டேன்” என்று அசடு வழிந்தவள், “உனக்கு ஓகேன்னா சொல்லு, அப்பாகிட்டச் சொல்லி, நல்ல மாப்பிள்ளை யாராவது இருந்தா சொல்லச் சொல்றேன். யூ.எஸ் ல இருந்தாலும் உனக்கு ஓகே தானே” என்று கேட்டாள்.

“எனக்கு ஓகே. ஆனா, அவள் சம்மதிக்கணும்” என்றவன், “சரி அதை விடு. உன் லவ் என்னாச்சு? திரும்ப உன் லவ்வர் பாயை பார்த்தியா?” என்று கேட்டான்.

சட்டென அவளது சிரிப்பு மறைய, “அதெல்லாம் முடிஞ்ச விஷயம்ன்னு சொன்னேனே” என்றாள்.

“முடிஞ்ச விஷயம்ன்னா, அதை என்கிட்டச் சொல்லாமலே இருந்திருக்கலாமே” என்றான்.

“அதெல்லாம் சரி வராது யுவன். ஒருத்தரோட மனசை உடைச்சா, எவ்வளவு வலி கொடுக்கும்ன்னு அனுபவிக்கிற போது தான் தெரியும். சத்யாவைப் பார்க்காத நாள்ல கூட நான் அதை மறந்திருந்தேன். ஆனா, திரும்ப மீட் பண்ணினப்போ, என்னால இயல்பா இருக்க முடியல” என்றாள் தழுதழுப்புடன்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “அப்போ, நீ அவரை மீட் பண்ணியிருக்க. ரைட்” என்றான்.

ம்ம் என்று தலையசைத்தாள்.

“பேசினியா?”

“இல்ல.”

“ஏன்?”

“அவர், என்னைக் காயப்படுத்தி இருக்கார்” என்றாள் எரிச்சலுடன்.

சற்று மௌனமாக இருந்தவன், “உன்னைப் பார்த்ததும், அவர் எப்படி ரியாக்ட் பண்ணார்?” என்று கேட்டான்.

“பேச ட்ரை பண்ணார். நான் அதுக்கு இடமே கொடுக்கல” என்றாள் பிடிவாதமான குரலில்.

அவளையே ஆழ்ந்து பார்த்தவன், “ஆர் யூ ஹேப்பி நௌ?” என்று கேட்டான்.

“எங்கே? பேசியிருக்கலாம்ன்னு அப்புறம் தோணுது. ஆனா, அவரைப் பார்க்கும்போது என்னை ஹர்ட் பண்ணதுதான் நினைவுக்கு வருது” என்றாள் கடுப்புடன்.

“மனுஷனுக்கு, ஈகோ மட்டும் கூடவே கூடாது. அதுவும், நம்ம லைஃப் பார்ட்னர்கிட்ட நிச்சயமா இருக்கக் கூடாது. அவர், பேசி ஹர்ட் பண்ணார். நீ, பேசாம ஹர்ட் பண்ண. அவர் செய்ததைத் தான், நீயும் செய்திருக்க. ஒரே ஒரு முறை, அவருக்குப் பேச வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். இந்த நிலைமையே மாறி இருக்கலாம்” என்றான் நிதானமாக.

அவள், திகைப்புடன் அவனைப் பார்த்தாள். யோசிக்கும் போது, யுவன் சொல்வது சரி என்றே தோன்றியது. ‘அவன் பேச முயற்சித்தான். ஆனால், நான் தானே அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால், வரவேற்பன்று தன்னைக் கண்டதும் எதுவும் பேசவில்லையே’ என்று கேள்வி கேட்ட மனத்திற்கு, ‘தன்னைப் போலவே அவனும் எதிர்பார்த்திருக்காமல் இருந்திருக்கலாம்’ என்று சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

“இப்போ அவர்கிட்ட பேசினா, சமாதானம் ஆகிடுவாரா?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.

“அதை நான் எப்படிச் சொல்ல முடியும்?” என்று முறுவலுடன் தோளைக் குலுக்கினான்.

“அப்போ எதுக்குடா இந்தப் பேச்சை எடுத்த?” என்று அவனை இரண்டு அடி அடித்தாள்.

சரியாக அதே நேரம் விஷ்வாவிடமிருந்து அழைப்பு வர, “எப்படிடா இருக்க?” என்றான் யுவன்.

“நல்லா இருக்கேன். மாயா எங்கே?” என்று கேட்டான்.

“இதோ இருக்கா. கொடுக்கிறேன்” என்றவன் அவளிடம் மொபைலைக் கொடுத்தான்.

“ஹாய் விஷ்வா எப்படி இருக்கீங்க?” என்றதும், “என்ன மாயா உன் வழக்கமான சித்தப்புவைக் கேட்கலாம்ன்னு நினைச்சா இப்படி கூப்பிடுற? எனி பிராப்ளம்?” என்று அவன் கேட்க சட்டென நிதானத்திற்கு வந்தாள்.

“சேச்சே அதெல்லாம் இல்ல. அப்போ விளையாட்டா பேசினது. இன்னும் அப்படியே பேச முடியுமா?” என்று கேட்டாள்.

“அடடே! ஒரே வாரத்துல இவ்ளோ வளர்ந்துட்டியா? போன மாசம் பேசினப்போ சித்தப்புன்னு என்னைக் கலாய்ச்சதெல்லாம் மறந்து போச்சா?” என்றான் சிரிப்புடன்.

“ஓகே சித்தப்பு கொஞ்சம் மரியாதையா கூப்பிடலாம்ன்னு பார்த்தா, உங்களுக்குப் பிடிக்கல. சொல்லுங்க சித்தப்பு. என்னவோ சீக்ரெட் சொல்லணும்ன்னு காத்திருக்கீங்க. சொல்லுங்க சொல்லுங்க” என்றாள்.

சட்டென குரல் குழைய, “எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு” என்றான்.

“மை காட் வாழ்த்துகள் சித்தப்பு! சித்திக்கும் என் வாழ்த்தைச் சொல்லிடுங்க” என்றாள்.

“சித்தியா? உனக்கே ஓவரா இல்ல…” என்றான்.

“தமிழ்நாட்ல சித்தி எவ்வளவு பேமஸ் தெரியுமா சித்தப்பு” என்று அவனைக் கலாய்த்து அவன் போதும் போதும் என்று கெஞ்சிய பின்பே போனை வைத்தாள்.

“இனிமே உன்கிட்ட இரகசியம் சொல்லணும்ன்னு வரவே மாட்டான்” என்று சிரித்தான் யுவன்.

“அப்போ நான் சத்யன்கிட்டப் பேசட்டுமா யுவன்?” என்று கேட்டவளை விழிகள் விரிய பார்த்தான்.

“இவ்ளோ ஆசையை மனசுக்குள்ள வச்சிக்கிட்டு எதுக்கு இந்த டிராமா?” என்று அவன் சிரிக்க, “எனக்குத் தூக்கம் வருது. நான் போறேன்” என்றவள், வெட்கப் புன்னகையுடன் துள்ளிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினாள்.அத்தியாயம் - 12

புல்லினங்களின் இன்னிசையில் கண்விழித்த மாயாவிற்கு, மனத்திற்குள் உற்சாகம் பொங்கி வழிந்தது. எல்லாமே புதிதாகத் தோன்றியது. தூரத்தில் தெரிந்த கடற்கரையின் அழகு மனத்தை மயக்குவதாக இருந்தது.

உதட்டில் உறைந்த புன்னகையுடன் தனது வேலைகளை முடித்துக்கொண்டு பாடலொன்றை முணுமுணுத்தபடி கீழே வந்தவள், “குட் மார்னிங்ப்பா!” என்றபடி அவரருகில் வந்தமர்ந்தாள்.

“வெரி குட் மார்னிங் கண்ணம்மா!” என்றவர் தன்னருகில் இருந்த எகனாமிக் டைம்ஸை அவளிடம் கொடுத்தார்.

“தேங்க்யூப்பா!” என்றபடி வாங்கிக் கொண்டவள், “யுவன் வாக்கிங் முடிச்சிட்டு வந்தாச்சா? உங்களுக்கும் காஃபி சர்வ் பண்ணட்டுமாப்பா” என்று கேட்டுக்கொண்டே கெட்டிலிலிருந்த காஃபியை கப்பில் ஊற்றினாள்.

“நானும், யுவனும் சாப்டுட்டோம்மா. நீ சாப்பிடு” என்றார்.

உதடுகள் பாடலை முணுமுணுக்க, காஃபி கப்பைக் கையிலெடுத்தாள்.

“இன்னைக்கு வெளியே எங்கேயாவது போறீங்களா?”

“தெரியலப்பா. யுவன் வந்தால் கேட்கணும்” என்றாள்.

குளித்துவிட்டு அங்கே வந்த யுவன், “குட் மார்னிங் மாயா!” என்றபடி அவளெதிரில் அமர்ந்தான்.

“குட் மார்னிங். இன்னைக்கு வெளியே போகலாமா?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா போகலாம். அப்புறம், நான் நாளைக்கு மதியமே ஊருக்குக் கிளம்பலாம்ன்னு பார்க்கிறேன் மாயா” என்றான்.

“என்னாச்சு? மூணு நாள் இருக்கறேன்னு தானே சொன்ன” என்றாள்.

“மார்னிங் ஆஃபிஸ்லயிருந்து கால் வந்தது முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வரச்சொல்லியிருக்காங்க” என்றதும் மாயாவின் முகம் சுருங்கிப் போனது.

“சரிப்பா. உன்னுடைய வசதிபடி செய். மாயாதான் அப்செட் ஆகிடுவா” என்றார் விஸ்வநாதன்.

“ஆஃபிஸ்ல வரச் சொன்னா, போய்த்தானே ஆகணும்” என்றாள் நிதானமான குரலில்.

அவள் மனத்தை அறிந்தவளாக, “வெரி சாரி மாயா. அடுத்த முறை கட்டாயம் வந்து நாலு நாள் தங்கறேன். ப்ளீஸ்!” என்றான்.

“கோவம் வருது. இருந்தாலும், ஓகே” என்றாள்.

காலை உணவிற்குப் பிறகு, சற்றுநேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். விஸ்வநாதன் அலுவலகத்திற்குக் கிளம்பிச் செல்ல, இருவரும் மற்றொரு காரில் சினிமா, பீச், ஹோட்டல் என்று சுற்றிவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்பி வந்தனர். அது வரையிலும், அவன், சத்ய பிரகாஷைப் பற்றிய பேச்சை எடுக்கவே இல்லை.

இரவு உணவை ஹோட்டலில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும்போது, “என்ன முடிவெடுத்திருக்க மாயா?” என்று கேட்டான்.

அவன் என்ன கேட்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது. ஆனாலும், “எதைப் பத்தி?” என்று கேட்டாள்.

அவளது கள்ளத்தனத்தைக் கண்டுகொண்டவனாக, “சத்யாகிட்ட பேசறதைப் பத்தி” என்றான்.

திரும்பி அவனைப் பார்த்தவள், “எங்கே நீ கேட்கவே மாட்டியோன்னு நினைச்சேன்” என்றாள் சிரிப்புடன்.

“நீயா பேசறியா இல்லயான்னு பார்த்தேன். பரவாயில்ல தேறிட்ட” என்றான்.

புன்னகைத்தவள், “அவரோட பேசணும். ஆனா, ரெண்டு நாள் ஆகட்டும்” என்றாள்.

“அவரா? மரியாதை கூடிப் போச்சு. ஆனா, ஏன் ரெண்டு நாள் தாமதம்?” என்று நெற்றிச் சுருங்கக் கேட்டான்.

“எது செய்றதுன்னாலும் கொஞ்சம் யோசிச்சி செய்ன்னு நீதானே அடிக்கடி சொல்வ” என்றாள் மெதுவாக.

வியப்புடன், “என்ன அதிசயமெல்லாம் நடக்குது. நான் வளர்கிறேனே மம்மின்னு வளர்ந்து நிக்கிற மாயாவைப் பார்க்கவே பிரமிப்பா இருக்கு” என்றான் சிரிப்புடன்.

“கிண்டல் பண்ணாத யுவன்” என்றாள் வெட்கத்துடன்.

ஆச்சரியத்துடன், “அட! இந்தமாதிரி அதிசயமெல்லாம் எப்போதாவது தான் நடக்கும். நடக்கும் போதே, மனசுல நல்லா பதிய வச்சிக்கணும்” என்று தனக்கே சொல்லிக்கொள்ள, “போடா!” என்றவள் வெட்கத்துடன்.

“நான் நாளைக்குக் கிளம்பிடுவேன். ஆனா, சத்யன் ஹைட்ராபாத்ல தானே இருக்கார். கல்யாணத்துக்காக இங்கே வந்தவர், இன்னுமா சென்னைல இருப்பார்?” என்று சந்தேகத்தைக் கேட்டான்.

“ஆஃபிஸ் வேலையும் சேர்த்து வச்சிட்டுத் தான் வந்திருக்கார். இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே தான் வாசம். அவங்க அம்மா சொந்த ஊருக்குப் போயிருக்காங்களாம். வர மூணு நாள் ஆகுமாம். நம்ம வீட்லயே தங்குன்னு ஆன்ட்டியும், தியாகு அங்கிளும் சொன்னாங்களாம். அவர்தான் பெரிய இவராச்சே. உங்களுக்கு, வீட்ல வேலை இருக்கும். நான், கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கிறேன்னு சொல்லிட்டாராம். கெஸ்ட் ஹவுஸ் போன் நம்பர், அட்ரஸ் கூட வாங்கிட்டேன் நெட்ல தேடி எடுத்துட்டேன்” என்றாள் வேகமாக.

“ஏன் மொபைல் நம்பர் வாங்கலையா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“ஏற்கெனவே இருக்கு. ஆனா, அதே நம்பரான்னு தெரியாது. ஒரு வேளை என் நம்பரைப் பார்த்து எடுக்காம விட்டுட்டா?” என்றாள் கண்கள் விரிய.

“அதானே பார்த்தேன். என்னடா பிள்ளை வளர்ந்துடுச்சோன்னு கொஞ்சம் நம்பிட்டேன். ஆனா, ஒரே ராத்திரியில என்னவெல்லாம் வேலை பார்த்திருக்க. உன்கிட்ட இவ்வளவு விஷயத்தையும் யார் சொன்னது?” என்று கேட்டான்.

“ஆன்ட்டி தான்! கல்யாண வீட்லயிருந்து கிளம்பும் போது அவர் இல்ல. பூட்டியிருந்த ரூமைத் திறந்து விட்டவருக்கு ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்லலன்னு ஆன்ட்டிகிட்டச் சொன்னேன். அதுக்கே, அவரோட ஜாதகத்தையே புட்டுப் புட்டு வச்சிட்டாங்க” என்றாள் பெருமையாக.

“பேசாம, நீயே ஜாதகத்தையும் வாங்கிப் பொருத்தம் பார்த்துக் கல்யாண நாளும் குறிச்சிட்டு எங்களுக்கெல்லாம் சொல்லு. நாங்க வந்திடுறோம்” என்றான் கிண்டலாக.

“சேச்சே அது அப்பாவோட வேலை. ஆனா, இதை அப்பாகிட்ட எப்படிச் சொல்றதுன்னுதான் யோசனையா இருக்கு” என்று பெருமூச்சு விட்டாள்.

“யுவன் இருக்க பயமேன்… நானே அங்கிள்கிட்டச் சொல்லிட்றேன்” என்றான் ஆர்வத்துடன்.

“ஆணியே பிடுங்க வேணாம். நானே பார்த்துக்கறேன். நீ ஏதாவது கலக்கி விட்டுட்டுப் போயிடாதே சொல்லிட்டேன்” என்றாள் எச்சரிக்கும் விதமாக.

“உன்கிட்டச் சொல்லாம வேலையை முடிச்சிருக்கணும்” என்றான் போலியான கவலையுடன்.

“அப்படி மட்டும் ஏதாவது நடந்திருந்தா தெரிந்திருக்கும் சேதி” என்றாள் மிரட்டும் விதமாக.

“ஒரு காதலைச் சேர்த்து வச்சப் புண்ணியத்தைத் தேடிக்கலாம்ன்னு பார்த்தேன். பொறுக்காதே” என்றவன் காரை வீட்டின் வாசலில் நிறுத்தினான்.

அவள் இறங்க முற்பட, “சத்யனை கெஸ்ட் ஹவுஸ்ல போய்ப் பார்க்கப் போறியா?” என்று கேட்டான்.

“அதுக்கும் சான்ஸ் வரலாம்” என்றவளை, சிறு தயக்கத்துடன் பார்த்தான்.

“என்னயிருந்தாலும்…” என்று இழுத்தவனை, “எனக்கு, சத்யன் மேலேயும் நம்பிக்கை இருக்கு. என் மேலயும், நம்பிக்கை இருக்கு” என்று சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே இறங்கினாள்.

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. இருந்தாலும், அதை செகண்ட் ஆப்ஷனா வச்சிக்க. பொதுவா ஜென்ட்ஸ் அதை விரும்பமாட்டாங்க” என்றான் எடுத்துச் சொல்லும் விதமாக.

கண்களைச் சுழற்றி, “ம்ம், நிச்சயமா” என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

ஹாலில் அமர்ந்திருந்த தந்தையிடம் சிறிதுநேரம் அளவளாவி விட்டு, யுவனை எச்சரிக்கும் விதமாகக் கண்ணை உருட்டிக் காண்பித்துவிட்டு அவள் அறைக்குச் செல்ல, யுவனும் சிரித்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றான்.

மறுநாள் காலையிலிருந்து பேச்சும், சிரிப்புமாக நேரம் கழிந்தது. இருவருமாகச் சென்று ஆரண்யாவிற்கும், அவள் தந்தைக்கும் பரிசுப் பொருட்களை வாங்கி வந்தனர். யுவனுக்கென்று ஒரு ஸ்போர்ட்ஸ் ஷுவும், ட்ராக் சூட்டும் வாங்கி வைத்திருந்ததைக் கொடுத்தாள்.

மதியம் இருவரும் வீட்டிலிருந்து கிளம்ப, விஸ்வநாதன் அலுவலகத்திலிருந்து நேராக விமான நிலையத்திற்கு வந்துவிட்டார்.

யுவன் கிளம்பும் நேரத்தில், “அங்கிள்! அடுத்த முறை நான் இந்தியா வர்றதுக்குள்ள மாயாவுக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிடுங்க. கல்யாண விருந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு” என்றவன் அவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான்.

அவள் திடுக்கிட்டு அவனையும், தந்தையையும் பார்க்க, “அதுக்கென்னப்பா, உனக்குத் தெரிஞ்ச நல்ல பையன் இருந்தா சொல்லு முடிச்சிடுவோம்” என்றார் இயல்பாக.

“எப்பவும் மாயாவோட செலக்‌ஷன் பெஸ்டா தான் இருக்கு. நீங்க அவகிட்டயே அபிப்ராயம் கேட்கறது நல்லது” என்றான்.

விஸ்வநாதன் மகளைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தார்.

அவள் தவிப்புடன், “கொஞ்சம் சும்மா இரேன். உனக்குக் கல்யாண சாப்பாடு சாப்பிட ஆசையா இருந்தா, ஆரண்யாவுக்குச் சீக்கிரமா கல்யாண ஏற்பாடு பண்ணு” என்றாள்.

“அதுவும் சரிதான். ரெண்டும் சேர்த்தே பண்ணிடலாம்” என்றான் சிரிப்புடன்.

அவனுக்கான விமான அழைப்பு வர, “சரி அங்கிள் கிளம்பறேன். வரேன் மாயா. டேக் கேர்” என்று அவளது தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினான்.

நண்பனைப் பிரியும் வருத்தம் இருந்தபோதும் புன்னகையுடன் அவனுக்குக் கையசைத்து வழியனுப்பி வைத்தாள்.

கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தபடி, “நானும், உங்களோட ஆஃபிஸ் வரேன்ப்பா” என்றாள்.

“சரிம்மா வா. உன் கார்ல போய்டலாம். இந்தக் காரை டிரைவர் வீட்டுக்கு எடுத்துட்டுப் போகட்டும்” என்றார்.

“சரிப்பா! நீங்க இங்கேயே இருங்க நான் காரை எடுத்துட்டு வரேன்” என்று பார்க்கிங்கை நோக்கி நடந்தாள்.

அவள் அந்தப் பக்கம் நகர்ந்த இரண்டு நிமிடங்களில் விஸ்வநாதனின் அலைபேசி ஒலிக்க எடுத்தார். அழைப்பு அவரது நம்பிக்கைக்குரியவரான பி.ஏ பரந்தாமனிடமிருந்து.

“சொல்லுங்க பரந்தாமன்” என்றார்.

“சார்! நீங்க சொன்னபடி அந்தப் பையனைப் பத்தி விசாரிச்சி ரிப்போர்ட் வாங்கிட்டேன். நீங்க ஆஃபிஸ் வருவீங்கன்னா இங்கேயே வெயிட் பண்றேன்” என்றார்.

“குட். நான் இன்னும் அரைமணி நேரத்தில் ஆஃபிஸ்ல இருப்பேன்” என்றவர் போனை வைக்க, காருடன் அங்கே வந்தாள் மாயா.