மாயா- கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் - 21

நாட்கள் விரைந்து சென்றன.

இந்தியா வந்து சென்ற யுவன், முடிந்த போதெல்லாம் விஸ்வநாதனுடன் போனில் பேசினான். விஸ்வநாதனும், மனத்திலிருந்த வேதனைகளை பகிர்ந்து கொள்ள முடிந்ததால், அவரது உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றமும் ஏற்பட்டிருந்தது.

யுவன் கொடுத்துவிட்டுச் சென்றிருந்த மனவருத்தம், சத்ய பிரகாஷின் வீட்டில் சிறு மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்த போதும், விரைவாகவே அதிலிருந்து வெளிவந்திருந்தனர். ஸ்பீச் தெரஃபி மூலமாக, மனுவும் ஓரளவு பேசத் துவங்கியிருந்தான். வார்த்தைகள் தெளிவாக இல்லாத போதும், மகன் பேச ஆரம்பித்திருப்பதே அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

அவ்வப்போது மாயாவின் நினைவு தனக்குள் எழுந்த போதும், பவித்ராவின் அன்பாலும், புரிதலாலும் அவனால் எளிதாக அவற்றிலிருந்து வெளிவர முடிந்தது. தனக்குக் கொடுக்கும் முன்னுரிமையை விட, குழந்தையிடம் அவள் கொண்டிருந்த அக்கரையே அவனை அவள்பால் பெருமளவு ஈர்க்கக் காரணமாக இருந்தது.

இந்த நிலையில் சத்ய பிரகாஷ், பவித்ராவின் அன்பான இல்லறத்திற்குச் சாட்சியாக, பவித்ரா உண்டாகியிருந்தாள். மனோன்மணிக்குச் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி.

“மனு கண்ணா! உங்களுக்குத் தங்கச்சிப் பாப்பா வரப்போகுது. நீங்க பாப்பாவோட விளையாடலாம், பேசலாம்” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்க, தனது முத்துப் பற்களைக் காட்டிச் சிரித்தான் மனு.

பவித்ராவிற்கு ஏழாம் மாதம். முக்கியமானவர்களை மட்டும் அழைத்து, வீட்டுடன் வளைகாப்பை நடத்தினான் சத்ய பிரகாஷ். பிறந்த வீடு என்ற சம்பிரதாயத்திற்காக, விஸ்வநாதனின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தாள். நான்காம் நாளே, மனோன்மணி அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

“ஏன் சம்மந்திம்மா! இன்னும் மூணு மாசம் தானே. குழந்தை பிறந்ததும் வீட்டுக்குக் கூட்டிக்கோங்களேன்” என்றார் விஸ்வநாதன்.

“புரியுதுங்கண்ணா! இருந்தாலும், நம்ம வீட்லன்னா அவளோட விருப்பத்துக்கு இருந்துக்க முடியும். தூங்குவா. தூக்கம் வரலன்னா உலாத்திட்டு இருப்பா. சத்யாவும், இவங்க ரெண்டு பேரும் இல்லாம சிரமப்படுறான். நேரமே போகமாட்டேன்னுதுன்னு புலம்பறான். அதோட, ஏழு மாசம் முடிஞ்சிடுச்சி. இந்த நேரத்துல பொம்பளைங்க யாராவது கூட இருக்கறது நல்லது” என்றார் நாசூக்காக.

அவர் எதற்கோ தயங்குகிறார் என்று புரிய, அவர்கள் விருப்பப்படி செய்யும்படி விஸ்வநாதனும் கூறிவிடவே, அன்றே தங்கள் வீட்டிற்கு மருமகளை அழைத்து வந்துவிட்டார்.

வீட்டிற்கு வந்தவுடன், “பாவம் அத்தை அப்பா! அவரோட முகமே வாடிப்போச்சு. காலைல கூட, நீ இங்கேயே இரு. மாமா சந்தோஷப்படுவாங்கன்னு அத்தான் சொன்னாங்க” என்றாள்.

“இருக்கலாம். ஆனா, அதெல்லாம் சரிவராது. முன்ன நீ தனி ஆள். இப்போ, உங்களுக்குன்னு ஒரு வாரிசு வரப்போகுது. ஆயிரம் இருந்தாலும், மாயா அவரோட பொண்ணு. இதுக்கு மேல உனக்குச் சொல்லணும்ன்னு இல்ல” என்றவர் மௌனமாக, பவித்ரா எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

கணவன் வந்ததும் அனைத்தயும் கொட்டித் தீர்த்தவள், “அத்தை ஏன் இப்படி மாறினாங்கன்னு தெரியலத்தான். எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. அப்பா அப்படியா என்னை நடத்தறாங்க?” என்று புலம்பினாள்.

சற்றுநேரம் அமைதியாக இருந்தவன், “சரி விடு. வயசானா, கண்டதையும் யோசிக்கத் தோணும்” என்று இலகுவாகச் சொன்னபோதும், அவனாலும் அதை ஜீரணிக்க முடியவில்லை.

அன்னையிடம் கேட்டாலும், தனக்கு ஏதாவது ஒரு பதிலை வைத்திருப்பார் என்று எண்ணிக்கொண்டு தனது வேலைகளைக் கவனிக்கலானாள்.

அந்த வாரத்தில் ஒரு நாள் சத்யன், தனது மாமனாரைக் காண வீட்டிற்குச் சென்றான்.

ஸ்டோர் ரூமிலிருந்த பழைய தேக்குமரத் தொட்டில் தோட்டத்தில் பிரித்துப் போட்டப்பட்டிருக்க, “இந்தத் தொட்டில் எங்க அப்பாவுக்காக, எங்க தாத்தா செய்தது. எங்கப்பா, நான், என் மகள், என் பெரிய பேரன் எல்லோரும் இதில் படுத்துத் தான் தாலாட்டு கேட்டோம். இப்போ, என் சின்னப் பொண்ணோட வாரிசு வரப்போகுது. அதுக்குத் தான் எடுத்துவரச் சொன்னேன்” என்று தச்சரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மாமனாரின் வார்த்தைகளைக் கேட்ட சத்யனுக்கு, அவர் மீதான மதிப்பும், மரியாதையும் பன்மடங்காக பெருகியது.

‘தனது அன்னையின் தேவையில்லாத சந்தேகம், ஒரு நல்ல மனிதரை எப்படி நோகடித்திருக்கும்’ என்று நினைத்தவனுக்கு வேதனையாக இருந்தது.

மாப்பிள்ளையையும், பேரனையும் கண்டதும் மகிழ்ந்து போன விஸ்வநாதன், மீண்டும் அந்தத் தொட்டிலின் அருமை பெருமைகளைச் சொல்ல, சத்யன் குறுஞ்சிரிப்புடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டான்.

மாலையில் தொட்டிலைப் பூட்டியதும், தனது பேரனை அதில் உட்கார வைத்து ஆட்டிவிட, முதலில் பயந்தாலும், அதை இரசித்துச் சிரிக்க ஆரம்பித்தப் பேரனை கண்குளிர பார்த்தார்.

“இதையெல்லாம் பார்த்துச் சந்தோஷப்பட, உன் அம்மா இல்லடா கண்ணா!” என்றவரது கண்கள் சட்டெனக் கண்ணீரைப் பொழிந்தன.

அவர் சொன்னது அந்த மழலைக்குப் புரிந்ததோ என்னவோ, “தா..ட்.டா உகூம்” என்று அவரது கண்களைத் துடைத்துவிட, மகளின் நினைவில் பேரனை அணைத்துக் கொண்டு மௌனமாக அழுதார்.

****************​

கர்நாடக மாநிலம் ஹாவேரி, அரசு பொது மருத்துவமனை.

ஆழ்ந்த சோகத்துடன் வராண்டாவில் ஒடுங்கிய தேகத்துடன் அமர்ந்திருந்த நடுத்தர வயது தம்பதிகள், ஐசியூவிலிருந்து வந்த டாக்டரைக் கண்டதும் வேகமாக அவரை நோக்கி ஓடினர்.

“எங்க பொண்ணு எப்படி இருக்கா டாக்டர்?” என்று கன்னடத்தில் விசாரித்தனர்.

“அது உங்க பொண்ணா?” என்று சந்தேகத்துடன் கேட்ட டாக்டரிடம் ஆம் என்றனர்.

நம்ப முடியாத பார்வையுடன், “பேரென்ன? எப்போலயிருந்து கோமால இருக்காங்க?” என்று விசாரித்தார்.

“காவேரிங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்ன, ஒரு ஆக்ஸிடெண்ட்ல அப்படி ஆகிப்போச்சுங்க. ஆனா, ஆறேழு மாசத்துல நிதானத்துக்கு வந்துடுச்சி. இருந்தாலும், பழசெல்லாம் மறந்துருச்சிங்க. ரெண்டு நாளைக்கு முன்ன தண்ணி எடுத்துட்டு வரப் போனப் பொண்ணு பாறை வழுக்கிக் கீழே விழுந்து தலைல அடிபட்டுடுச்சி” என்றவரை மேலிருந்து கீழ்வரை பார்த்தார் அந்த மருத்துவர்.

“எங்க பொண்ணு எப்படிங்க இருக்கு?” என்று கேட்ட அந்தப் பெண்மணியின் கண்கள் கலங்கியிருந்தன.

“இத்தனை வருஷமா எந்த ட்ரீட்மெண்டும் கொடுக்காம, உங்க குக் கிராமத்திலேயே கை வைத்தியம் பார்த்து வச்சிருந்திருக்கீங்க. பார்ப்போம். நினைவு வந்ததும் சொல்றோம்” என்றார் அவர்.

தனது அறைக்கு வந்த மருத்துவர், யோசனையுடன் அமர்ந்துவிட்டார். அந்தப் பெண்ணை எங்கோ பார்த்த நினைவு. ஆனால், எங்கே என்று நினைவில் வரவில்லை. தனது ஜுனியரை அழைத்தவர், அந்தப் பெண்ணை எப்போதும் கண்காணிக்க, எப்போதும் இருக்கும்படி ஒரு செவிலியை வைக்கவும் உத்தரவிட்டார். அவளுக்கு நினைவு வந்தவுடன், எந்நேரமாக இருந்தாலும் தன்னை அழைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினார்.

ஐ.சி.யூவின் அரையிருட்டில், நைந்த தேகத்துடன் தலையிலும், கையிலும் கட்டுடணும் படுத்திருந்த காவேரியின் கண்களில் சிறு அலைப்புறுதல். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த வண்ணமே இருந்தன. அவளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலி உள்ளே வந்து அவளைப் பார்த்தார்.

மெலிந்த தேகமும், கண்களைச் சுற்றிலும் கருவளையமுமாக அவளைக் காணவே அவருக்குப் பாவமாக இருந்தது. கண்களில் வழிந்த கண்ணீரை பஞ்சால் துடைத்துவிட்டார்.

அவளைக் கொண்டு வந்து சேர்க்கும்போது, ஏதோ பேசுவதைப் போல உதட்டை அசைத்தவளை அவரும் பார்த்துக் கொண்டிருந்தார். தொலைந்து போன நினைவுகளை மீட்க போராடிக் கொண்டிருக்கிறாள் என்று அவரது அனுபவ அறிவு சொன்னது. அருகிலிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

ஒரு மணி நேரம் சென்றிருக்கும், அமர்ந்த நிலையிலேயே தூங்கியிருந்த செவிலி இடைவிடாமல் ஒலித்த சப்தத்தில் விழித்தெழுந்தார். படுக்கையில் இருந்த அந்தப் பெண்ணின் உடல் வலியில் துடிப்பதைப் போல வெட்டியது.

ஜுனியர் டாக்டரை அழைத்து வர, அங்கே துரிதமாக அவளுக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது. தலைமை மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட, அவர் உடனே கிளம்பி வருவதாகச் சொன்னார்.

மருந்துகளின் உதவியால் அவள் உறங்கிக் கொண்டிருந்தாலும், அது அரைகுறையான உறக்கம். அலைப்புறுதலும் அவள் தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்தாள். தலை வலித்ததோ என்னவோ, வேதனையில் முகத்தைச் சுளித்தாள்.

திடீரென மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் அருவியென பொழிந்தன. உதட்டைக் கூட்டி ஏதோ சொல்ல முயன்றாள். மருத்துவர்கள் நிதானமாகக் கவனிக்க, அவள் ஏதோ பெயரைச் சொல்வது புரிய, ஊன்றிக் கேட்டனர்.

“ம்ம்..ம..னு, சத்..ய..ன்..” என்று அவள் சொன்ன பெயர்கள் புரிய டாக்டர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

சற்று நேரத்தில் அவள் மீண்டும் மயக்கத்திற்குச் செல்ல, புலம்பலும், முகச் சிணுங்கலும் நின்று போயிருந்தன. தலைமை மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, ஜுனியர்களிடம் பேசிவிட்டுச் சிறு ஏமாற்றத்துடன் தனது அறைக்குச் சென்றார்.

அறையில் காத்திருந்த மைத்துனனை அழைத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.

“என்ன மச்சான் அவ்வளவு அவசரமா வந்தீங்க. அரை மணி நேரத்துல திரும்பிட்டீங்க” என்று கேட்டான் அவரது மைத்துனன்.

அந்தப் பெண்ணைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னவர், “எனக்குப் பரிச்சையமான முகமா இருக்கு. ஆனா, யாருன்னு தெரியல” என்றவர், “ஏதோ மனு, சத்யன்னு பேரை முனகியிருக்கா… நாம வர்றதுக்குள்ள திரும்ப மயக்கத்துல போய்ட்டா” என்றபடி கார் வரை நடந்தவர் உடன் வந்த மைத்துனனைக் காணாமல் திரும்பிப் பார்த்தார்.

திகைத்தப் பார்வையும், தவித்த மனமுமாக நான்கடி பின்னால் நின்றிருந்தவனை, “என்னாச்சு அவினாஷ்?” என்றார்.

“நா..ன் அந்தப் பொண்ணைப் பார்க்க முடியுமா? ப்ளீஸ்!” என்றவனைப் புரியாமல் பார்க்க, “ப்ளீஸ் மச்சான்!” என்றவனை, மீண்டும் ஐசியூவிற்கு அழைத்துச் சென்றார்.

தடதடத்த இதயத்துடன், கடவுளே இது அவளாக இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டவனின் இதயம் படபடவெனத் துடித்தது. வேகமாகச் சென்று அவளைப் பார்த்த அவினாஷ், ஓய்ந்து போனவனாக அங்கிருந்த இருக்கையில் பொத்தென அமர்ந்தான்.

“அவினாஷ்! யார் இந்தப் பொண்ணு? உங்களுக்கு அவளைத் தெரியுமா?” என்று பதட்டமும், ஆர்வமுமாக விசாரித்தார்.

ஆம் என்று தலையசைத்தவன், “ம்ம்.. மா..யா… மாயா சத்ய பிரகாஷ்!” என்றான் கலவரம் மிகுந்தக் குரலில்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் - 22"பசும்பொன் விளக்கு வைத்து, பஞ்சு திரி போட்டு, குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்" திருவிளக்கு தோத்திரத்தில் சொன்னவற்றை குறைவில்லாமல் செய்திருந்தவளை தொலைபேசி அழைத்தது.

இருகரம் குவித்து கண்களை மூடி சொல்லிக்கொண்டிருந்தவள், இடைவிடாது ஒலித்த தொலைபேசியின் தொல்லை தாங்காமல், ஸ்லோகத்தை பாதியில் நிறுத்திவிட்டு வந்தாள். காலர் ஐடியில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும், முகத்தில் தெரிந்த சுணக்கம் மறைந்து புன்னகை தோன்றியது.

ரிசீவரை காதுக்குக் கொடுத்தவள், "எப்படிப்பா இருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட் யாருக்கோ பிரச்சனைன்னு சொன்னீங்களே? இப்போ எப்படி இருக்காங்க?" என்று அன்புடன் வினவினாள் பவித்ரா.

"ம்ம், பரவாயில்லம்மா. மாப்பிள்ளை இருந்தா, கூப்பிடும்மா. அவரோட போனுக்கு ட்ரை பண்ணா ஸ்விட்ச் ஆஃப் என்று வருது" என்றவரின் குரல் படபடப்புடன் ஒலித்தது.


அவர் குரலில் தெரிந்த பதற்றம், ஏதோ சரியில்லை என உணர்த்தியது.

"ஏதாவது பிரச்சனையாப்பா? உங்க உடம்புக்கு ஒன்றுமில்லையே..." என்று தவிப்புடன் கேட்டாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா! மாப்பிள்ளை...” என்றார்.

"இன்னைக்கு லேபர்ஸ் மீட்டிங் இருக்கேப்பா... மறந்துட்டீங்களா? என்று கேட்டாள்.

“ஆமாம்மா. மாப்பிள்ளை வந்ததும் மறக்காம எனக்குப் பேசச் சொல்லும்மா" என்றவர் போனை வைத்தார்.

அவளுக்கு, ‘ஏதோ சரியில்லை’ என்று விளங்கியது. எப்போதும், அனைவரையும் விசாரித்துவிட்டுப் போனிலேயே பேரனுடன் கொஞ்சிக் குலவிவிட்டு மனமில்லாமல் போனை வைப்பவர், இன்று ஏதோ அவசரத்துடனேயே இருப்பது போலத் தோன்றியது. இரவு உணவும் சரியாக இறங்கவில்லை.

"என்ன பவித்ரா ஒருமாதிரி இருக்க?" என்ற அத்தைக்கும் மழுப்பலாக பதிலளித்துவிட்டு அறைக்கு வந்தாள்.

மகனை உறங்க வைத்துவிட்டு அருகில் படுத்தவளை, இனம்புரியா பயம் சூழ்ந்திருந்தது. கண்களை மூடி உறங்க முயன்றவள் உறக்கத்திற்குச் செல்லும்போது ஏதோ ஒரு பயம் அவளை உறங்க விடாமல் செய்தது.

ஏசியையும் மீறி வியர்த்த நிலையில் எழுந்து அமர்ந்தவள், தண்ணீரை எடுத்துக் குடித்தாள். கணவனின் தோளில் சாயந்துகொள்ள ஏங்கிய மனத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் எழுந்தாள். அந்த அறைக்குள் இருப்பதே மூச்சு முட்டுவதைப் போலிருக்க, ஹாலுக்கு வந்தாள்.

ஹாலில் விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய வீட்டை அந்த இரவில் பார்ப்பது மனத்திற்குப் பயத்தைக் கொடுத்தது. மனத்தின் குழப்பம் அனைத்தையும் அச்சுறுத்தலாகவே பார்க்க வைத்தது.

மீண்டும் அறைக்கே வந்தவள், குழந்தையை அணைத்தபடி படுத்தாள். எப்படி உறங்கினாளென்று தெரியவில்லை. தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டு விழித்தெழுந்தாள்.

குளியலறையில் விளக்கெறிவதைக் கண்டதும் சத்யன் வந்துவிட்டதை உணர்ந்து எழுந்தவளுக்கு அவனது நெஞ்சில் தலைசாய்த்துக் கதற வேண்டும் போலிருக்க, திடுக்கிட்டுப் போனாள். தனக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம்? ஏன் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று புரியாமல் அமர்ந்திருந்தவள், இரு வலிய கரங்களால் வளைக்கப்பட்டாள்.

சட்டென நினைவிற்கு வந்தவள் கணவனின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“நான் வந்ததுக் கூடத் தெரியாம மகாராணியார் என்ன நினைப்புல உட்கார்ந்திருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே, அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

தன்னைஅணைத்தபடி அமர்ந்த கணவனின் நெஞ்சில் சாய்ந்தவளுக்கு நிம்மதியாக இருந்தது. ‘இது தனக்கான இடம். தனக்கான உரிமை என்று சம்மந்தமில்லாமல் மனத்தில் எழுந்த எண்ணங்களின் வெளிப்பாடு ஏன்?’ என்று அவளுக்குப் புரியவில்லை.

“பவி! உடம்பை ஏதாவது செய்யுதா? ஏன் டல்லா இருக்க?” என்று கேட்டான்.

ஒன்றுமில்லை என்றவளுக்கு அழுகை வந்தது. அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு விம்மியவளை, மிரட்சியுடன் பார்த்தான்.

“என்னடி! உடம்பை ஏதாவது செய்யுதா? வாயைத் திறந்து சொன்னா தானே தெரியும்” என்று பாசத்தினால் விளைந்த கோபத்துடன் கேட்டபோதும், அவள் வாயைத் திறக்கவில்லை.

என்ன செய்வதெனப் புரியாமல், “இரு அம்மாவைக் கூப்பிடுறேன்” என்றவனை எழ விடாமல் கட்டிக்கொண்டாள்.

“பவித்ரா!” என்று சலிப்புடன் அழைத்தவன், அவளை ஆறுதல்படுத்த இறுக அணைத்தான்.

அவளது அழுகை நின்றதும் முகத்தை உயர்த்தினான்.

“என்னம்மா?” என்றவனிடம், ஒன்றுமில்லை என்பதைப் போலத் தலையை அசைத்தாள்.

“எனக்கு மண்டையைக் குடையுது பவி!” என்றவனைப் பார்க்கப் பாவமாக இருக்க, கண்களைத் துடைத்துச் சமாதானமாகி நிமிர்ந்து அமர்ந்தாள்.

அவனது கரத்தை எடுத்து முத்தமிட்டவள், “என்னை விட்டுட்டுப் போயிடமாட்டீங்களே அத்தான்” என்றவளை குழப்பத்துடன் பார்த்தான்.

அவளது முகத்தை இருகைகளாலும் தாங்கியவன், “எது கேட்கறதுனாலும் நேரா கேளு. உன்னை விட்டுட்டு, நான் எங்கே போகப் போறேன்? ஏன் இந்தப் பயம்? யாராவது ஏதாவது சொன்னாங்களா? நீ ஓபனா சொன்னாதான், என்னால அதுக்குப் பதில் சொல்ல முடியும்” என்றான் அழுத்தமாக.

“யாரும் எதுவும் சொல்லல. எனக்குத் தான் என்னவோ நடக்கப் போகுதுன்னு பயமா இருக்கு” என்றவள் பதிலைக் கேட்டுப் புன்னகைக்க, “எந்தக் காரணத்துக்காகவும் என்னை விட்டுட்டுப் போகமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க” என்றவள், அவனது கண்களுக்குப் பிடிவாதக்காரக் குழந்தையாகத் தெரிந்தாள்.

சிரித்துக்கொண்டே, “நீயே, என்னை விட்டுப் போன்னு சொன்னாலும், உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன்” என்றவனது முகத்தில் கணக்கில்லாமல் முத்தமிட்டாள்.

புன்னகையுடன் அவளது செயலுக்கு எதிர்வினையாற்றியவன், இரவு முழுவதும் தனது கையணைப்பிலேயே அவளை வைத்துக்கொண்டான்.

விடிந்தும் விடியாத அந்த அதிகாலை நேரத்தில் அவனது மொபைல் விடாமல் ஒலித்தது.

ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தவன், யார் இந்த நேரத்தில் எனப் புரியாமல் திட்டிக்கொண்டே போனை எடுத்தான்.

மாமனாரின் எண்ணைப் பார்த்ததும் சற்று ஆசுவாசமானவன், “சொல்லுங்க மாமா” என்றான்.

“மாப்பிள்ளை, நேத்து மதியத்துலயிருந்து உங்களுக்கு ட்ரை பண்றேன். பவித்ரா சொல்லலையா?” என்று கேட்டார்.

திரும்பி மனைவியைப் பார்த்தவன், “நைட் ரொம்ப லேட்டா தான் வந்தேன். பரித்ராவும் தூங்கிட்டு இருந்தா” என்றான் சமாளிப்பாக.

“ஓஹ்!” என்று சுரத்தே இல்லாமல் சொன்னவர், “நீங்க உடனே கிளம்பி ஹாவேரி வாங்க. அவசரம். போன்ல என்னால எதுவும் சொல்ல முடியாது. உங்களுக்கு டிக்கெட் நானே போட்டுட்டேன். உங்க மெயில்ல இருக்கும். எட்டு மணிக்கு உங்களுக்குப் ப்ளைட். ஏர்போர்ட்ல நான் பிக் அப் பண்ணிக்கிறேன்” என்றார்.

யாருக்கு என்ன? நான் ஏன் வரவேண்டும் என்று ஆயிரம் கேள்விகள் மனத்தில் உதித்தாலும், அவரது வார்த்தைகளில் இருந்த அவசரம், அவரிடம் எந்தக் கேள்வியையும் கேட்க விடவில்லை.

“சரிங்க மாமா! நான் வரேன்” என்றவன் போனை வைத்தான்.

குழப்பமாக இருந்தது. மணி ஐந்து ஆகியிருந்தது. மூன்றே மணிநேர உறக்கம், அவனது உடலை சோர்வுரச் செய்திருந்தது. ஓய்வு கேட்டுக் கெஞ்சிய விழிகளுக்கு இரக்கமில்லாமல் மறுத்து குளியலறைக்குள் புகுந்தான். மனத்தின் ஓரம் ஏதோ விபரீதம் என்று மட்டும் உணர்த்திக் கொண்டே இருந்தது.

பவித்ரா எழுந்த போது அவனது ட்ராவல் பேக் தயாராக இருந்தது. குளித்து உடை மாற்றிக் கொண்டிருந்தவனை மருட்சியுடன் பார்த்தாள்.

நடந்ததை அவன் சுருக்கமாகச் சொல்ல, அப்போதுதான் விஸ்வநாதன் போன் செய்ததைச் சொல்லாமல் விட்டது அவளுக்கு நினைவு வந்தது. அவனிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னாள்.

“ஒண்ணும் இருக்காது. நீ அந்த செக் புக்கை எடுத்து என் ட்ராவல் பேக்ல வச்சிடு. டிஃபன் லைட்டா இருந்தா போதும்” என்றான்.

“ம்ம்” என்று நகர்ந்தவளை அருகில் இழுத்தவன், “நீ இவ்வளவு வருத்தப்படும் அளவுக்கு எதுவும் இருக்காது. தைரியமா இரு. போய் என்ன விஷயம்ன்னு தெரிஞ்சிகிட்டு உனக்குப் பேசறேன்” என்றவன் அவளை இறுக அணைக்க, தவித்த மனத்துடன் அவனது கரங்களில் சிக்குண்டு கிடந்தாள்.அத்தியாயம் - 23

மாமனாரின் அழைப்பை ஏற்று ஹாவேரி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த சத்ய பிரகாஷ், அவினாஷைக் கண்டதும், “டேய்! நீ எங்கே இந்தப் பக்கம்?” என்று விசாரித்தான்.

“என் வைஃபோட கசின் பிரதர் இங்கே தான் டாக்டரா இருக்கார். அவர் வீட்டுக்கு வந்தேன்” என்றான்.

“ஓஹ்! யாரையாவது ரிசீவ் பண்ண வந்திருக்கியா?” என்று கேட்டான்.

மேலும் கீழுமாகத் தலையை அசைத்தவன், “போலாமா?” என்று கேட்க, குழப்பத்துடன் நண்பனைப் பார்த்தான் சத்யன்.

“நீ…” என்றவனை இடைமறித்து, “பத்து நிமிஷத்துல ஹாஸ்பிட்டலுக்குப் போயிடலாம். அங்கே போனா உனக்கே தெரியும்” என்றதும், மாமனாருக்குத் தான் ஏதோ என்று எண்ணிக் கவலை கொண்டான்.

“மாமாவுக்கு என்ன?” என்றவனுக்குப் பதில் சொல்லாமல் காரைக் கிளப்பினான்.

“ஏன் மாத்தி மாத்தி என் தலையை உருட்டறதுலயே இருக்கீங்க? என்னன்னு சொல்லுடா” என்றான் கோபத்துடன்.

“சொல்ற தைரியம் எனக்கில்ல சத்யா” என்றவன் வேகமாகக் காரைச் செலுத்தினான்.

ஐ.சி.யு வை நெருங்க நெருங்க சத்யனின் இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது. ஆனால், அவன் எண்ணி வந்ததைப் போல இல்லாமல் வராண்டாவில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார் விஸ்வநாதன்.

அவரைக் கண்டதும் ஆசுவாசம் அடைந்தாலும், யாருக்கு என்ன என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் தவிப்பாக இருந்தது. அவனைக் கண்டதும் எழுந்து நின்ற விஸ்வநாதனின் முகம் சோர்வும், குழப்பமுமாக இருந்தது.

“மாமா!” என்றவனை, “உள்ளே போய்ப் பாருங்க” என்றார்.

அவன் எதுவும் புரியாமல், ‘யாரை நான் போய்ப் பார்க்க வேண்டும்?’ என்ற யோசனையுடன் அந்த அறைக்குள் நுழைந்தான். வெளிச்சத்திலிருந்து வந்தவனுக்கு அந்த அரையிருட்டு பழக, சில நொடிகள் தேவைப்பட்டன.

நலிந்த தேகமும், பொலிவிழந்த தோற்றமுமாக படுத்திருந்த மாயாவை கண்டதும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான். தான் காண்பது கனவல்லவே! என்று ஒரு முறைக்கு இருமுறை கண்களைத் திறந்து பார்த்தான்.

தனது வாழ்க்கையை நந்தவனமாக்கிய தேவதையே தான். அவளே தான். நிஜம்! அவள் நிஜம்! நடந்துகொண்டிருக்கும் அத்தனையும் நிஜம் என்று புரிய, அவனுக்குச் சப்தமிட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. அவளை அணைத்துக் கொண்டு அழ வேண்டும் என்ற வேகம் உருவானது.

சட்டென மண்டியிட்டு அவளருகில் அமர்ந்தவன் அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான். ‘மாயா! மாயா!’ என்று உருகிய இதயத்துடன் மெலிந்திருந்த அவளது கரத்தில் முத்தமிட்டான். கலங்கிய விழிகளுடன் அவளது கரத்தைப் பார்த்தான். பூப்போன்று மெத்தென்றிருக்கும் அவளது விரல்கள் காப்பேறி வறண்டிருந்தன.

‘நீயில்லாமல் நான் பட்ட அவதியைத் தானே நீயும் பட்டிருப்ப. எப்படி மாயா என்னை விட்டு இருக்க முடிஞ்சது? இத்தனை நாளா நீ இருக்கேன்னு தெரியாம நான் தவிச்சது எனக்குத்தான்டி தெரியும்’ என்று மனத்திற்குள் கதறியவன், “என்னைத் தேடி வர உனக்கு இவ்வளவு காலமாடி? நீ இல்லாம, என்னவெல்லாம் நடந்து போச்சுன்னு தெரியுமா உனக்கு? உன் இடத்துக்கு இன்னொருத்தி வந்துட்டா. இப்போ அவளுக்கு நான் என்ன சமாதானம் சொல்வேன்? உனக்கு என்ன பதில் சொல்வேன்?” என்று வேதனையில் புலம்பினான்.

இந்தப் பூமி இரண்டாகப் பிளந்து தன்னை விழுங்கிவிடாதா? வரப்போகும் காலங்களில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டுமோ என்ற பயம் அவனது கண்களில் தெரிந்தது.

இருதலைக் கொள்ளியாகத் தவித்தவனை, வேதனையுடன் பார்த்தார் விஸ்வநாதன்.

“மாப்பிள்ளை, அவள் தூங்கட்டும். நீங்க வாங்க” என்று அவனை வெளியே அழைத்து வந்தார்.

வராண்டாவில் இருந்த இருக்கையில் அமர்ந்தவனுக்கு, எதிர்காலம் கேள்விக்குறியாக நின்றது. அடுத்து என்ன என்று அவனால் யோசிக்கக் கூட முடியவில்லை.

அவனருகில் அமர்ந்த விஸ்வநாதன், அவனது தோளைத் தட்டிக் கொடுத்தார்.

“இதை நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல மாப்பிள்ளை” என்றவரை முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வையில், ஆயிரம் ஆயிரம் கேள்விகள் ஒளிந்திருந்தன.

“மாப்பிள்ளை எதுக்கும் வருத்தப்படாதீங்க. சமாளிக்கலாம்” என்றவர் மீது கோபமாக வந்தது.

“இந்தக் கல்யாணம் வேணாம். நானே வேற நல்ல மாப்பிள்ளையா பார்க்கறேன்னு எவ்வளவு தூரம் சொன்னேன். அம்மாவும், நீங்களும் பிடிவாதமா இருந்து கல்யாணத்தை முடிச்சீங்க. இப்போ மாயா திரும்பி வந்திருக்காளே! அவளுக்கு என்ன பதில் சொல்வேன்? பவித்ராவுக்கு என்ன சமாதானம் சொல்வேன்?

ரெண்டு பேரையும், எந்த முகத்தை வச்சிகிட்டுப் பார்ப்பேன். அவங்களோட பார்வையே, என்னைக் கேள்வி கேட்டுத் துளைக்காதா? ரெண்டு பெண்களோட வாழ்க்கையையும், பாழாக்கின பாவியா நிக்கிறேன். இப்..படி என்னை இக்கட்டுல நிற்க வச்சிட்டீங்களே” என்று ஆற்றாமையுடன் கூறியவனுக்கு, ஆறுதல் கூற யாரிடமும் வார்த்தைகள் இல்லை.

விஸ்வநாதன் மீண்டும் ஏதோ பேச முனைய, “ப்ளீஸ்! என்னைத் தனியா விடுங்க” என்று வெறுப்புடன் கூற, விஸ்வநாதன் எழுந்து சென்றார்.

தவிப்புடன், “சத்யா! என்னடா நீ?” என்ற அவினாஷ் அவரின் பின்னாலேயே சென்றான்.

மதியம் வரை அவன் யாரிடமும் பேசவில்லை. வீட்டிலிருந்து வந்த அழைப்பிற்குக் கூட, “முக்கியமான வேலைல இருக்கேன் பவித்ரா. பிறகு பேசுகிறேன். எல்லோரும் நல்லா இருக்காங்க” என்றவன் மொத்தமாகப் போனை அணைத்து வைத்தான். தன்னை நினைத்தே அவனுக்குக் கேவலமாக இருந்தது.

‘உருகி உருகிக் காதலித்த என்னை, இரண்டே வருடங்களில் மறந்து உனக்கொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டாயே என்று அவள் கேட்டால் என்ன சொல்வது?’ என்று மாயா தனது சட்டையைப் பிடித்து உலுக்குவதைப் போன்றே மீண்டும் மீண்டும் அவனது நினைவுக்கு வந்தது.

நேரம் ஆக ஆக, மெல்லத் தன்னிலைக்கு வந்தான்.

சாப்பிட அழைத்தவர்களிம், “பசியில்லை” என்று கூறிவிட்டான்.

“மாப்பிள்ளை! இந்த நிலைமையை யாரும் எதிர்பார்க்கல. என் பொண்ணு வந்துட்டான்னு சந்தோஷப்படறதா? இல்ல, அவளோட வாழ்க்கை என்ன ஆகுமோன்னு வருத்தப்படுறதான்னு எனக்குத் தெரியல. வயசான காலத்துல எனக்கு ஏன் இவ்வளவு போராட்டம்? உங்க நிலைமைக்கு நான்தானே காரணம். என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை” என்று கையெடுத்துக் கும்பிட்டார்.

“மாமா என்ன செய்றீங்க?” என்றபடி பதட்டத்துடன் அவரது கையைப் பற்றிக்கொண்டான். “குழப்பத்துல நான் பேசினதை பெரிசா எடுத்துக்காதீங்க. ப்ளீஸ்!” என்றவன், நீங்க முதல்ல சாப்பிடுங்க” என்று அவினாஷ் கொண்டு வந்திருந்த உணவை அவருக்குப் பரிமாறினான்.

மூவரும் நடந்தவைகளைப் பற்றிப் பேசினர்.

“மாயாவைப் பார்த்ததும் எனக்குக் கொஞ்சநேரம் என்ன செய்யறதுன்னே தெரியல. அப்புறம் எதுவும் சொல்லாம அவசரம் உடனே கிளம்பி வாங்கன்னு அங்கிளை வரவச்சேன்” என்றான் அவினாஷ்.

“என் மகளைப் பார்த்ததும் என்னால நம்பவே முடியல. என் மக கண்ணை முழிச்சி என்னை அடையாளம் தெரிஞ்சிகிட்டதும், முதல்ல உங்களைத் தான் கேட்டா. நான் வந்தது உங்களுக்குத் தெரியாது. முக்கியமான வேலையா ஃபாரின் போயிருக்கீங்கன்னு சொன்னேன். குழந்தையைப் பத்திக் கேட்டா. நான் பதில் சொல்றதுக்குள்ள திரும்ப மயக்கத்துல போய்ட்டா.

ரெண்டு நாள் கழிச்சி நேத்து நைட்தான் அவளுக்கு நினைவு வந்தது. ஓரளவு எல்லாரையும் நினைவு வச்சிருக்கா. உங்களைப் பார்க்கணும்ன்னு ஒரே தொல்லை. நீங்க இன்னும் இந்தியா வரலன்னு சொன்னதும், போனாவது செய்ங்கன்னு அழுதா. அவருக்கு விவரம் சொல்லிட்டோம். உடனே கிளம்பி வரேன்னு சொல்லிட்டார்ன்னு சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சி” என்று வருத்தத்துடன் சொல்லி முடித்தார் விஸ்வநாதன்.

“டாக்டர்ஸ் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு சொல்லி செடக்‌ஷன்ல வச்சிருக்காங்க. நாளைக்கு ரூமுக்கு மாத்திட்ட பின்ன கொஞ்சம் கொஞ்சமா டோஸேஜை குறைச்சிடலாம்ன்னு சொல்லியிருக்காங்க” என்றான் அவினாஷ்.

இருவரும் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டவன், “யார் அவளை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது” என்றதும் டாக்டர் சொன்ன அனைத்தையும் சொல்லி, வெளியே அமர்ந்திருந்த வயதான தம்பதிகள் இருவரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தினான்.

அவர்களது கரங்களைப் பற்றி நன்றி கூறியவன், வேகமாகச் செக் ஒன்றை எழுதி அவர்களிடம் கொடுத்தான்.

அதை வாங்க மறுத்து, “எங்களுக்குப் புள்ளைங்க இல்லங்க. என் பொண்ணா இருந்தா பார்த்திருக்க மாட்டோமா? ஆத்துல அடிச்சிட்டு வந்த புள்ள எங்க வீட்டோரமா கரை ஒதுங்குச்சி. காலம் கிடக்கற காலத்துல வேற யார் கைலயாவது கிடைச்சிருந்தா… கடவுள் இருக்காருங்க. அவ குடும்பத்தோடு சேர்ந்ததே எங்களுக்குச் சந்தோஷங்க” என்ற அந்தப் பெரியவர்கள் கையைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

“ரொம்ப நல்ல புள்ளைங்க. அது புருஷன் புள்ளைங்களோட சந்தோஷமா வாழணும்” என்று அந்தப் பெண்மணி மனதார வாழ்த்தினார்.

அவர்களை வீட்டிற்குச் செல்லும்படியும், மருத்துவமனையிலிருந்து கிளம்பும் முன் வீட்டிற்கு அழைத்து வருவதாகவும் கூறினார் விஸ்வநாதன். அவளைப் பிரிய மனம் இல்லாவிட்டாலும், உரிய இடத்தில் அவளை ஒப்படைத்த மகிழ்ச்சியுடன் ஒரு முறை அவளைப் பார்த்துவிட்டுக் கிளம்பினர்.

அவினாஷிற்கும் நன்றி கூறி, அவனை வீட்டிற்குச் செல்லும்படிச் சொன்னான் சத்யன்.

“டேய்! அவள் எனக்கும் ஃப்ரெண்ட். உன்னோட தேங்க்ஸை நீயே வச்சிக்க” என்றவன் மாலையில் வருவதாகக் கூறிக் கிளம்பினான்.

சற்றுநேரம் இருவரும் அமர்ந்திருந்தனர். இருவரிடமும் மௌனமும், தயக்கமும் மட்டுமே மிஞ்சியிருந்தது.

“நான் வீட்டுக்குப் பேசிட்டு வரேன் மாமா. பவித்ரா என்னன்னு தெரியாம தவிச்சிட்டு இருப்பா” என்றான்.

குனிந்த தலையை நிமிராமல், “சரிங்க மாப்பிள்ளை” என்றார் அவர்.

அவரது சூழ்நிலை புரிந்தாலும், அவனாலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஹாஸ்பிட்டலிலிருந்து வெளியே வந்தவன், பவித்ராவிற்கு அழைத்தான். மாமாவின் உறவினர் ஒருவருக்கு உடல் நலமில்லை. அவங்களுக்கு ஹெல்ப் வேணும்ன்னு என்னை வரவச்சிருக்கார்” என்று உண்மையை மறைத்துக் கூறினான்.

ஆனால், அவன் சொன்னதில் நம்பிக்கை ஏற்படவில்லை என்ற போதும், மேற்கொண்டு அவள் எதுவும் கேட்கவில்லை.

“எப்போ வருவீங்க?” என்று கேட்டாள்.

“ரெண்டு நாள்ல வந்திடுறேன். மனு எப்படி இருக்கான்?” என்று விசாரித்தான்.

“நல்லாயிருக்கான். உங்களை அப்பப்போ கேட்டுட்டு இருக்கான்” என்றாள்.

“வந்திடுறேன் பவித்ரா! அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லு. நான் முடியும் போது பேசறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

அவளிடம் பொய் சொல்லி விட்டோமே என்று மனம் குடைந்தது. ஆனால், நிஜத்தைக் கூறினால் அவளது நிலை என்ன? அதுவும், தானும் இவ்வளவு தூரத்தில் இருக்கும் நிலையில்’ என்று நினைத்துக் கொண்டவனுக்கு, ஆயாசமாக இருந்தது.

கால் போன போக்கில் நடந்தவன், அங்கிருந்த கோவில் வாசலில் சென்று அமர்ந்தான். எல்லாம் சரியாவிடும் என்று போலியான நம்பிக்கையைத் தன்னுள் வளர்த்துக் கொள்ள அவன் தயாராக இல்லை. எப்படியும் சமாளித்து என்ற வார்த்தையைவிட, சூழ்நிலையை எதிர்கொள்ளவது தான் நியாயம்.

ஒன்று எதிர்த்து நின்று பவித்ராவுடனான திருமணத்தை நிறுத்தியிருக்க வேண்டும். அந்தத் துணிவில்லாமல், ஏற்றுக்கொண்ட வாழ்க்கையை முழுதாக வாழவும் தொடங்கியாகிவிட்டது. இல்லை என்று எண்ணியவள், மீண்டும் வாழ்க்கைக்குள் வந்துவிட்டாள். இனி என்ன ஆகும்? என்று கொந்தளித்த மனத்துடன் அமர்ந்திருந்தான்.

போர்க்களத்தில் நின்றாகிவிட்டது. இனி, பின்வாங்கவும் முடியாது எதிர்த்து நின்றே ஆகவேண்டிய சூழ்நிலை. வெற்றியா? தோல்வியா? எதுவாகினும் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வது என்ற முடிவுடன் எழுந்தான்.

அதேநேரத்தில், அவனது செல்போன் ஒலித்தது.

“சொல்லுங்க மாமா!” என்றான்.

“மாயா கண் விழிச்சிட்டா மாப்பிள்ளை” என்று, அவர் முடிக்கும் முன்பே மருத்துவமனையை நோக்கி ஓடினான்.

“அப்பா! அவர் எங்கேப்பா?” என்று அவள் ஈனஸ்வரத்தில் கேட்டுக்கொண்டிருக்க, கதவைத் திறந்துகொண்டு அறைக்குள் நுழைந்தான்.

அவனைக் கண்டதும் அழுகையும், தவிப்புமாக பார்த்தவள், “மாம்ஸ்…” என்று அழைக்க, “மாயா!” என்றபடி ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொள்ள, அவனது இடையைக் கட்டிக்கொண்டு கதறினாள்.

கலங்கிய விழிகளுடன் ஆறுதலாக அவளை அணைத்துக்கொண்டான். அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

மெல்ல அவளது அழுகை, சிரிப்பாக மாறிக்கொண்டிருக்க, “மனு எப்படி இருக்கான்? அத்தை எப்படி இருக்காங்க?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

“நல்லாயிருக்கான். அம்மாவும் நல்லாயிருக்காங்க” என்றான் புன்னகையுடன்.

“வளர்ந்திருப்பான்ல்ல...” என்றவளுக்கும், “ம்” என்று புன்னகைத்தான்.

அவனையும் கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல” என்றவள், “வேணாம் வேணாம் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு வர வேணாம். இன்ஃபெக்‌ஷன் ஆகிடும்” என்றவள், “மனு எப்படி… உங்களைப் போலவே இருப்பானா?” என்று ஆசையுடன் கேட்டாள்.

இல்லையென தலையசைத்தவன், “உன்னை மாதிரியே இருக்கான்” என்றான்.

சந்தோஷத்தில் அவளது முகம் விகசித்தது. “என்னைப் பார்த்தா அடையாளம் தெரிஞ்சிக்குவானா?” என்று அவள் கேட்டக் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

“சொல்லுங்க மாம்ஸ்! தெரிஞ்சிக்குவான் தானே…” என்றவளுக்குத் தலையசைப்பை பதிலாக்கினான்.

கண்ணீரைத் துடைத்தபடி கதவை நோக்கி நகர்ந்த, விஸ்வநாதன், ‘உன்னோட இந்தச் சிரிப்புக்கு ஆயுசு இல்லயேம்மா! நீ எப்படி கண்ணம்மா எல்லாத்தையும் தாங்கப் போற?’ என்று நினைத்தவருக்கு, நெஞ்சை அடைப்பது போலிருந்தது.

‘இல்ல எனக்கு எதுவும் ஆகாது. என் மகளுக்காகவாவது நான் நன்றாக இருக்க வேண்டும். கடவுளே! அவளுக்கு எல்லாத்தையும் தாங்கிக்கிற சக்தியைக் கொடு’ என்று வேண்டிக் கொண்டவர், குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் - 24

மாலையில் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, “ரொம்பப் பேசக்கூடாது மாயா! நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. அப்போதான் சீக்கிரம் வீட்டுக்குப் போக முடியும்” என்றார்

“தூக்கமே வரமாட்டேன்னுதே. நான் நல்லாத்தானே இருக்கேன். என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்களேன். அங்கே போய் தூங்கிக்கிறேன்” என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“இங்கேயே தூங்க மாட்டேன்ற. வீட்ல போய்த் தூங்குவியா? மெடிசின் சாப்பிட்டாலும், நாமளும் தூங்கணும்ன்னு நினைக்கணும். தூக்கம் வரல வரலன்னு நினைச்சா வராது. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. இன்னும் இருபதே நாள்ல, உன்னை வீட்டுக்கு அனுப்பிடுறேன்” என்றார்.

“இன்னும் இருபது நாளா?” என்றவள் பரிதாபமாகப் பார்த்தாள்.

“இருபதே நாள்” என்றவர், “நாளைக்குக் காலைல ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடுங்க” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

விஸ்வநாதனிடமும், சத்யனிடமும் சற்றுநேரம் பேசிவிட்டு விடைபெற்றார்.

“மாமா! நாம ப்ரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு மாறிடலாமா?” என்று கேட்டான் சத்யன்.

“ஏன் மாப்பிள்ளை? இங்கேயே நல்லாதானே பார்க்கறாங்க. அதிலும், டாக்டர் நமக்குத் தெரிஞ்சவரா இருக்கார். இல்லனா, மாயா ஓரளவு நல்லாயிருந்தாலும், நாம இப்படி ஐ.சி.யூல அவகிட்டப் போய்ப் பேசிட்டு வரமுடியுமா?” என்று கேட்க, அவனும் ஒப்புக்கொண்டான்.

மறுநாள் அவளை அறைக்கு மாற்றியதும், மாமனாரை ஓய்வெடுத்துக் கொள்ளும்படிச் சொல்லி அவினாஷுடன் அனுப்பி வைத்தான். இருவரும் கிளம்பிச் சென்றதும், அவளுக்கு மாத்திரையை எடுத்துக் கொடுத்தான்.

“காஃபி சாப்பிடுறியா மாயா?” எனக் கேட்டான்.

“வேணாம்” என்றவளின் கண்கள், காதலுடன் அவனை நோக்கியது.

ஃப்ளாஸ்கில் இருந்த காஃபியை அவன் கப்பில் ஊற்றிக்கொண்டிருக்க, “மாம்ஸ்!” என்று மென்குரலில் அழைத்தாள்.

ஒருநொடி சத்யனின் கரங்கள் அசையாமல் நின்றன. தன்னைச் சமாளித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான்.

“இங்கே வாங்களேன்” என்றவளை நோக்கி நடந்தான்.

அவனது கரத்தைப் பற்றிக்கொண்டவள், “உட்காருங்க” என்று தன்னருகில் அமரச் சொல்ல, அமர்ந்தான்.

ஆசையுடன் அவனைப் பார்த்தவள், “என்னை இறுக்கமா கட்டிப்புடிச்சிக்கோங்க மாம்ஸ்” என்று இரகசியக் குரலில் சொன்னவளைத் திகைப்புடன் பார்த்தான்.

“உன் உடம்பு சரியாகட்டும். வீட்டுக்குப் போனதும்…” என அவன் சொல்லிக்கொண்டிருக்க, அவள் அவனைக் கட்டியணைத்திருந்தாள்.

“மா..யா!” என்றவனது குரல் நடுங்கியது.

“எனக்குத் தெரியும் நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு. அதான், நானே பிடிச்சிக்கிட்டேன்” என்றவள் அவனது நெஞ்சில் முத்தமிட்டாள்.

அவனுக்கு நெருப்பின் மீது நிற்பதைப் போலிருந்தது. சட்டென எழுந்தவன், “நீ ரெஸ்ட் எடு” என்றவன், அறையின் ஓரமாக இருந்த பெஞ்சில் அமர்ந்தான்.

“ம்க்கும். ரொம்பத் தான். எனக்கு என் உடம்பு மேல அக்கறை இல்லயா?” என்றவள் அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு படுத்தாள்.

ஏன் மாமனாரை அனுப்பி வைத்தோம் என்றிருந்தது. அந்த அறைக்குள் அமர முடியாமல் தவித்தான்.

இரண்டு நிமிடம் கூட இருக்காது, அவன் பக்கமாகத் திரும்பியவள், “மாம்ஸ்! நம்ம மனுவோட போட்டோ இருக்கா? குழந்தையைப் பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு” என்று ஏக்கத்துடன் சொன்னாள்.

“அது வேற போன்ல இருக்கு” என்றான்.

“ஓஹ்” என்றவளின் குரல் இறங்கியிருந்தது.

அப்போதுதான் நினைவு வந்தவளாக, “யுவன் எப்படி இருக்கான்? உங்ககூட டச்ல இருக்கானா? என்று கேட்டாள்.

“ஆஹ். எப்போதாவது பேசுவோம்” என்றான்.

“நான் திரும்ப வந்துட்டேன்னு தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவான்? ரொம்பச் சந்தோஷப்படுவான் இல்ல. உங்ககிட்ட ஏதாவது சொன்னானா?” என்று கேட்டுவிட்டு கணவனின் முகத்தையே பார்த்தாள்.

“எதைப் பத்தி?” என்றான் ஈடுபாடே இல்லாமல்.

“என்னைப் பத்திப் பேசுவானான்னு கேட்டேன்” என்று சமாளிப்பாகச் சொன்னவள், “யுவன்கிட்டப் பேசணும் போல இருக்கு. நம்பர் போட்டுத் தரீங்களா?” என்று ஆசையுடன் கேட்டாள்.

“நீ வீட்டுக்கு வா. அப்புறம் எல்லார்கிட்டயும் உட்கார்ந்து மணிக்கணக்கா பேசு” என்றவனின் குரலில் அப்பட்டமாக எரிச்சல் தெரிந்தது.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள், “நம்ம பவி எப்படி இருக்கா?” என்று ஆரம்பித்தவளை கடுகடுவென்ற முகத்துடன் முறைத்தான்.

“சரி சரி நான் எதுவும் கேட்கல. வீட்டுக்குப் போய்ப் பேசிக்கிறேன்” என்றவள் அமைதியாகக் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள்.

சத்யனுக்கு எங்காவது ஓடிவிடலாமா என்றிருந்தது. முன்தினம் மாலையில் பவித்ராவிடம் பேசியது. தான் சொன்னதற்காக அவளும் போன் செய்யவில்லை. அவள் மனமெல்லாம் இங்கே தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு எழுந்தான்.

கண்களை மூடிப் படுத்திருந்தவளின் அருகில் சென்றவன், “தூங்கிட்டியா?” என்று கேட்டான்.

கண்களைத் திறக்காமலேயே, “அதுதான் வரமாட்டேன்னுதே. நீங்களும் பேசமாட்டேன்றீங்க. வளவளன்னு பேசினா உங்களுக்கும் கஷ்டமா தான் இருக்கும். ஆனா, என் வாயை மூட முடியலையே. நான் என்ன செய்ய” என்று சலிப்புடன் சொன்னவள் மீது பரிதாபம் தான் வந்தது.

இதற்குமேல் இங்கே நின்றிருந்தால், தன் வாயாலேயே எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிடுவோம்’ என்று எண்ணியவனாக, “ஆஃபிஸுக்கு ஒரு கால் பண்ணிட்டு வரேன். பத்து நிமிஷத்துல வந்திடுறேன்” என்றான்.

அவளும், “ம்ம்” என்றாள்.

வெளியே வந்தவன் நிதானமாக மூச்சுவிட்டான். தளர்வாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். மனம் ஓய்ந்து போனதைப் போலிருந்தது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தான். வீட்டிற்கு அழைத்தவன், நாளை ஊருக்குக் கிளம்பி வருவதாகக் கூறிவிட்டுப் போனை வைத்தவன், மாமனாருக்கு அழைத்தான்.

மதியத்திற்கு மேல் விஸ்வநாதன் மருத்துவமனைக்கு வர, தந்தையுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

“உங்க மாப்பிள்ளை ரொம்ப மோசம்ப்பா. எப்போ பாரு சிடுசிடுன்னு இருக்கார்” என்று அவனைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசித்தாள்.

“அவருக்கு அலைச்சல். ஆஃபிஸ் டென்ஷன். இப்போ எனக்கும் சேர்த்து மாப்பிள்ளை தான் வேலை பார்க்கிறார். நாளன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. இப்போ, அவர் கிளம்பணும். டென்ஷன் தானேம்மா!” என்றார்.

“கிளம்பணுமா? என்கிட்டச் சொல்லவே இல்ல” என்றாள் ஏமாற்றத்துடன்.

“உன்கூட இருக்கணும்ன்னு தான் அவருக்கும் ஆசை. ஆனா, என்னடா செய்றது? மாப்பிள்ளை போய்ட்டு வரட்டும்” என்றார்.

திரும்பிக் கணவனைப் பார்த்தாள். அவன், அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “எப்போ வருவீங்க?” என்று கேட்டாள்.

“ஒரு வாரத்தில் வந்திடுறேன்” என்றான்.

சோர்ந்த மனத்துடன், “சரி” என்றாள்.

******************​

வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும், “மனு! அப்பா வந்துட்டாங்க” என்று மகனிடம் உற்சாகமாகக் கூறியவள் மேஜை மீதிருந்து அவனை இறக்கி விட்டாள்.

“அப்.பா!” என்று துள்ளிக்கொண்டு வந்த மகனைச் சிரிப்புடன் தூக்கிக் கொண்டான்.

“அ..ப்பா!” என்று தந்தையைக் கண்ட சந்தோஷத்தை வெளிப்படுத்திய மனு, தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

கணவனும், மகனும் கொஞ்சிக்கொண்டே வருவதைக் கண்ட பவித்ராவின் முகம் மகிழ்ச்சியில் விகசித்தது.

“போன வேலை முடிஞ்சிதாப்பா?” என்ற அன்னைக்கு தலையசைப்பை மட்டும் தந்தவன், பவித்ராவைப் பார்த்தான். அவனது இதயம் தவித்தது.

“குளிச்சிட்டு வந்திடுறேன்ம்மா” என்று மகனை இறக்கி விட்டவன் நேராக அறைக்குச் சென்றான்.

தன்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் செல்பவனை ஆராய்ச்சியுடன் பார்த்தாள். வெளியே சிரித்தாலும் மனத்திற்குள் எதையோ புதைத்துக் கொண்டு சொல்ல முடியாமல் தவிக்கிறான்’ என்று புரிந்தது.

பளிச்சென்ற வண்ணத்தில் புடவை, தழைய தழைய பின்னலிட்டு, மல்லிகைப் பூச்சூடி, முகத்தில் எதிர்பார்ப்பும், உதட்டில் புன்சிரிப்புமாக வந்து நின்றவளைப் பார்த்தவனுக்கு ஆயாசமாக இருந்தது.

உன்னிடம் எப்படி உண்மையைச் சொல்லப்போகிறேன் பவித்ரா? உன்னை எப்படிச் சமாதானப்படுத்துவேன்? எவ்வாறு ஆறுதல் கூறுவேன்? உன் சிரிப்பையும், சந்தோஷத்தையும் குழி தோண்டிப் புதைக்கப் போகிறேனே. இதை நீ எப்படித் தாங்குவாய்?’ என்று மனத்திற்குள் குமுறினான்.

அவ்வளவு நேரம் ஷவரில் நின்றது உடலைக் குளிரச் செய்ய, நினைவிற்கு வந்தவனாக வெளியே வந்தான். அவன் எதிர்பார்த்தபடியே பவித்ரா அறையில் இருந்தாள். ஆனால், அவனிடம் எதுவுமே கேட்கவில்லை.

அவன் மௌனமாக உடைமாற்றிக் கொண்டு வர, “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“ம்ம்” என்றதும் அவள் வெளியே செல்ல முயல, அவளது கரத்தைப் பற்ற திரும்பிப் பார்த்தாள். சட்டென அவளை இறுக அணைத்துக்கொண்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் இருந்தவன், திடீரென அன்பை வெளிப்படுத்துவது அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.

இரு கைகளாலும் அவனது கன்னத்தைப் பற்றியவள், “என்னாச்சுத்தான்?” என்றாள் கவலையுடன்.

கண்ணீரைப் பொழிய தயாராக இருந்த விழிகளை மூடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “நீ சாப்டியா?” என்றான்.

“இன்னும் இல்ல. ஆனா, நீங்க ஏன் இப்படி ரியாக்ட் பண்றீங்க? எனக்குப் பயமா இருக்கு” என்றாள் அச்சத்துடன்.

“சரி, சாப்டுட்டுப் பேசலாம்” என்றான்.

“இல்ல. இப்பவே சொல்லுங்க. ரெண்டு நாளா என் மனசே சரியில்லை. நீங்க எதையோ மறைக்கறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ப்ளீஸ் சொல்லுங்கத்தான்” என்றாள் தவிப்புடன்.

“எப்படிச் சொல்வேன் பவி? நீயும் எனக்கு முக்கியம். மாயாவும், எனக்கு முக்கியம்” என்றவனை திகைப்புடன் பார்த்தாள்.

“என்ன சொல்றீங்க? மா..மாயாக்கா பத்தி இப்போ என்ன பேச்சு?” என்றாள் திகிலுடன்.

அவளை தன்னருகில் இழுத்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன், “நான் ஒரு விஷயம் சொல்றேன். நீ டென்ஷன் ஆகக்கூடாது” என்றான்.

அவனது பேச்சே அவளுக்கு அச்சத்தை உண்டாக்க, “எ..ன்..ன?” என்றவளுக்கு நா வறண்டது.

வார்த்தைகள் கிடைக்காததைப் போலத் தடுமாறியவன், “மா..யா.. மாயா உயிரோடு தான் இருக்கா” என்றதும், விழிகள் தெறித்து விடுவதைப் போலப் பார்த்தாள். உலகமே தட்டாமாலை சுற்றுவதைப் போலிருக்க, கால்கள் நிலையில்லாமல் தடுமாற, சுயநினைவின்றி மயங்கிச் சரிந்தவளை, “பவி! பவித்ரா பவித்ரா” என்ற சத்ய பிரகாஷின் பதட்டமான குரல், அவளது சிந்தையை எட்டவே இல்லை.அத்தியாயம் - 25

“பவித்ரா! இன்னும் எவ்வளவு நேரத்துக்கு அழுதுட்டே இருப்ப? நீ ஒரு உயிர் இல்ல. சாப்பிடத்தான் மாட்டேன்ற இந்தப் பாலையாவது குடி” என்ற மாமியாரின் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்காமல் அழுது கொண்டிருந்தாள்.

குழந்தை அவள் மடியில் தலை சாய்த்து படுத்திருக்க, சத்ய பிரகாஷ் வேதனையைச் சுமந்த முகத்துடன் கண்களை மூடி சோஃபாவில் அமர்ந்திருந்தான்.

“நடந்ததுக்கு நாம யாரும் பொறுப்பில்ல. இப்படி ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்திருக்கறதால எதுவும் இல்லன்னு ஆகிடப்போறது இல்ல” என்ற மாமியாரை முறைத்தாள்.

“அதுக்காக ரெண்டு பொண்டாட்டியோடா குடும்பம் நடத்த முடியும்? முதல் பொண்டாட்டி இருக்கும் போது ரெண்டாவது பொண்டாட்டியை என்னன்னு சொல்வாங்க? உங்களுக்குத் தெரியாதா?” என்று ஆத்திரத்துடன் கத்தியவளை, சத்ய பிரகாஷ் வெறித்துப் பார்த்தான்.

“இனி, என் நிலைமையும், என் குழந்தைங்க நிலைமையும் என்ன அத்தை? எனக்கு மட்டும் ஏன் எல்லாமே இப்படி நடக்குது? அம்மாவும் சரியில்ல. அப்பாவும் இறந்துட்டார். கல்யாணமும் ரெண்டாவது. இப்போ வாழாவெட்டின்னு பட்டத்தோட நிற்க போறேன். இவ்வளவு போராட்டத்துக்கும் நடுவுல நான் வாழ்ந்து என்ன செய்யப் போறேன்? அதுக்குப் பட்டினிக் கிடந்து சாகறேன்” என்று கத்தினாள்.

“பவித்ரா!” என்று அதட்டலாகச் சொன்ன சத்யன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

விழிகள் விரிய அச்சத்துடன், ருத்ரமூர்த்தியாக நின்றிருந்த கணவனை வெறித்துப் பார்த்தாள்.

“என்னடி நினைச்சிட்டிருக்க? தேவையில்லாம பேசற. உன்னை அப்படி நடுத்தெருவில் நிறுத்திடுவேனா? இவ்வளவு நாள் என்னோட வாழ்ந்தும் என்னை நீ புரிஞ்சிகிட்ட லட்சணம் இதுதானா?” என்றான் ஆத்திரத்துடன்.

“சத்யா என்னடா இதெல்லாம்? வயித்துப் பிள்ளைக்காரியைக் கை நீட்ற? உன்னை, இப்படியா நான் வளர்த்தேன்?” என்று வருத்தத்துடன் சொன்னான் மனோன்மணி.

கண்களை இறுக மூடித் திறந்தவன், “என்னை என்னம்மா செய்யச் சொல்றீங்க? நான் இவளுக்காக பார்ப்பேனா? மாயாவுக்காக பேசுவேனா? எனக்கு ரெண்டு பேரும் முக்கியம்மா. ஒருத்திக்காக, இன்னொருத்தியை விட்டுக் கொடுக்க முடியல. ரெண்டு பேரையும் ஏத்துக்கவும் முடியல. நான் என்னதான் செய்யட்டும்? இவள், என்னைப் புரிஞ்சிக்குவான்னு நினைச்சேன். இவளுக்கு மட்டும் தான் வருத்தமா? எனக்கில்லயா? எப்பவும் அவளைப் பத்தி மட்டுமே கவலைப்படுறா. இவள், எனக்குத் துணையா இருப்பான்னு நம்பிக்கையோட வந்தேன்” என்றவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.

கண்களில் கண்ணீர் வழிய, இன்னமும் கணவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் நிதானமா இருப்பா” என்று மகனை ஆசுவாசப்படுத்தினார்.

“பேசி எல்லாத்துக்கும் முடிவெடுக்கலாம் சத்யா. இப்படிக் கை நீட்டாதே” என்ற அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தான்.

கட்டிலிலிருந்து இறங்கியவள், அவனை நெருங்கி நின்றாள். மெல்ல அவனது கரத்தைப் பிடித்தவள், “நான் உங்களைச் சந்தேகப்பட்டிருக்கக் கூடாது அத்தான். என்னோட பயம் கோபமா வெளிப்பட்டுடுச்சி. நான், உங்களுக்குத் துணையா இருப்பேன். கொஞ்ச நாளைக்கு, யாராவது ஒருத்தர் ஒதுங்கி இருந்து தானே ஆகணும். நான் இருக்கேன்” என்று அழுதவளை, இறுக அணைத்துக் கொண்டான்.

***************​

“அப்பா! அவர், வீட்டுக்குப் பத்திரமா போய்ச் சேர்ந்துட்டேன்னு, போன் செய்தாரா?” என்று தந்தையை விசாரித்தாள் மாயா.

“நீ தூங்கிட்டு இருக்கும் போது செய்தார். அப்புறம், மனுவோட போட்டோ கேட்டியாமே, வீடியோவே அனுப்பி இருக்கார்” என்றவர், தனது மொபைலிலிருந்த பேரனின் போட்டோவைக் காண்பித்தார்.

வேகமாக வாங்கியவள், மகனின் புகைப்படத்தைக் கண்டதும், கண்களில் கண்ணீர் வழிய அவனது சேட்டைகளைப் பார்த்தாள். “அப்படியே என்னை மாதிரியே இருக்கான்ப்பா” என்றவளுக்கு ஆனந்தக் கண்ணீர் வழிய, சந்தோஷத்தில் குரல் தழுதழுத்தது.

மனம் கனக்க, மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன்.

“அத்தையும் இருக்காங்க. கொஞ்சம் இளைச்சிட்டாங்க இல்லப்பா! பேரன் பின்னால ஓடியே இளைச்சிட்டாங்க போல” என்று சிரித்தவள், “இது பவி தானேப்பா…” என்றவள், அவளை ஊன்றி பார்த்தாள். “பவிக்குக் கல்யாணம் ஆகிடுச்சாப்பா?” என்று நெற்றிச் சுருங்கக் கேட்டாள்.

சட்டென நிமிர்ந்து அமர்ந்த விஸ்வநாதன், “ஆங்… ஆகிடுச்சிம்மா” என்றார் படபடத்த மனத்துடன்.

“எப்போ? மாப்பிள்ளை யாரு?” என்று கேட்க, விஸ்வநாதனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“முன்னே மிலிட்டரில இருக்காருன்னு ஒரு மாப்பிள்ளை பார்த்தோமே… அவர் பேருகூட, வெங்கட் தானே” என்றாள்.

மகளே எடுத்துக் கொடுத்ததைப் பற்றிக்கொண்டு, “ஆமாம்மா! அப்போ நீ இல்லன்னு நினைச்சி கல்யாணத்தை ஒத்தி வச்சோம். ஆனாலும், ரெண்டு வருஷம் கழிச்சி இந்தப் பொண்ணு தான் வேணும்ன்னு அவங்க கேட்டதால முடிச்சிட்டோம்” என்று நடந்த உண்மையைத் தனது பொய்க்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.

“இவ்ளோ நடந்திருக்கு. நான் நேத்து அவர்கிட்டக் கேட்டப்போ ஒரு வார்த்தைக் கூடச் சொல்லல” என்றாள் போலியான கோபத்துடன்.

“சரிம்மா! ரொம்ப நேரம் பேசிட்ட. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்க” என்றார்.

“இப்படிப் பேசிட்டிருந்தாலே நான் சரியாகிடுவேன்ப்பா” என்றவள், “என்னால உங்களுக்கு ரொம்பக் கஷ்டம்ப்பா!” என்றபடி, தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ள, கலங்கிய விழிகளை, அவளறியாமல் துடைத்துக்கொண்டார் விஸ்வநாதன்.

மகனின் வீடியோவைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தவளின் மனம், தனது சந்தோஷமான திருமண வாழ்க்கையை நோக்கிப் பயணித்தது.

*************​

நினைத்தவனையே மணந்து கொள்வதென்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. ஆனால், அது வாய்க்கப் பெற்ற தம்பதிகளாக மாயாவும், சத்ய பிரகாஷும் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்தனர்.

கணவனுக்குத் தன் அன்பை அவள் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாளென்றாள், கொண்டவனின் நேசத்தில் அவள் திக்குமுக்காடிக் கொண்டிருந்தாள்.

அன்பான மாமியார். சமையல் முதல் வீட்டு நிர்வாகம் வரை எல்லாவற்றையும் அவளுக்குப் பொறுப்பாகச் சொல்லிக் கொடுத்தார்.

“அவளே ஒரு எம்.பி.ஏ. அவளுக்கே நிர்வாகத்தைப் பத்திக் கிளாஸா?” என்று சிரித்தான் சத்யன்.

“எனக்குக் கம்பெனி பத்தித் தெரியும். வீட்டைப் பத்தி அத்தைக்குத் தானே நல்லா தெரியும்” என்பவளை மெச்சுதலாகப் பார்ப்பார் மனோ.

சப்தமாகச் சிரிப்பவன், “அம்மா! உங்களுக்கு, அவளைப் பத்தித் தெரியாது. மத்தவங்களுக்கு ஐஸ் வச்சே காரியத்தைச் சாதிச்சிக்குவா” என்று கிண்டலடித்தான்.

“மாம்ஸ்!” என்று அவள் போலிக் கோபத்துடன் முறைத்தால், “இப்படித்தாம்மா, என்னை மிரட்டியே வேலை வாங்கறா” என்று பாவமாகச் சொன்னான்.

“மாம்ஸ்…” என்று அவள் கோபத்துடன் அவனைத் துரத்த, நாசூக்காக அங்கிருந்து விலகிவிடுவார் மனோன்மணி.

அதுவரை அவளுக்குப் பயந்து ஓடிக்கொண்டிருந்தவன், சட்டென அவளைப் பிடித்து அணைத்தான்.

“வரவர எங்க அம்மாமேல கொஞ்சங்கூட பயமில்லாம போச்சு உனக்கு” என்றவன் அவளது முகத்தை நெருங்க, “ஐயோ! அத்தை வந்திடுவாங்க” என்று போலியாகக் கெஞ்சினாள்.

“ரொம்பப் பயந்தவ தான் நீ” என்று, தனது காரியத்தைச் சாதித்துக்கொண்ட பின்பே, அவளை விடுவித்தான்.

மாமியாரிடம் அன்பென்றால், பவித்ராவிடம் கொள்ளைப் பிரியம். பவித்ராவும் தனக்குத் தேவையானதை, அவளிடம் உரிமையுடன் கேட்டு வாங்கிக் கொண்டாள். சமயத்தில் இருவருக்கும் பெரும் சண்டையே நடக்கும்.

“நான் பெரியவ. நான் சொல்றேன் இதை நீ எடுத்துக்க என்று மாயாவும், நான் சின்னவ. அதனால அக்காவுக்குத் தான் முதல் உரிமை என்று பவித்ராவும் அன்பைக் கொடுப்பதிலும்; பெறுவதிலும் போட்டிப் போட்டனர்.

“இதுக்குப் பேர் சண்டையாம். நாம சமாதானம் செய்யணுமாம்” என்று விஸ்வநாதனும், மனோன்மணியும் சிரித்துக் கொள்வர்.

திருமணமான இரண்டாம் மாதமே, அவர்களின் அன்பான தாம்பத்தியத்திற்குப் பரிசாக அவள் உண்டாகியிருப்பது தெரியவர, வீடே விழாக் கோலம் பூண்டது. விஸ்வநாதன் மகளுக்கென்று ஒரு வில்லாவும், மாப்பிள்ளைக்கு எண்டோவர் காரும் பரிசளித்தார்.

அனைவரும் சந்தோஷத்துடன் இருக்க, பவித்ரா சமையலறை வாசலில் மௌனமாக நின்றிருந்தாள். அவளைக் கண்ட மாயாவிற்கு, அவளது மனத்தில் ஓடும் எண்ணங்களை சுலபமாகப் படிக்க முடிந்தது.

“அப்பா! நீங்க எனக்குப் பிரியப்பட்டு வாங்கிக் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்பச் சந்தோஷம். அதேபோல, நான் கேட்கப் போறதையும் நீங்க கொடுத்தால், எனக்கு ரெட்டைச் சந்தோஷம்” என்றாள் பூடகமாக.

“அப்பாக்கிட்ட இருக்கற அத்தனையும், உனக்குத் தானேடா. என்ன வேணும் கேளு?” என்றார்.

புன்னகைத்தவள், “எனக்கு நீங்க என்னவெல்லாம் கொடுத்தீங்களோ, அது அத்தனையையும் பவித்ராவுக்கும் கொடுக்கணும். அவளை, உங்க மகளா ஏத்துக்கணும்” என்றாள்.

பவித்ரா உட்பட, யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.

“மாயா! என்ன பேசற நீ?” என்று இரகசியக் குரலில் அதட்டினான் சத்யன்.

“நான் அப்பாகிட்டக் கேட்கறேன்” என்றவள், “நீங்க சொல்லுங்கப்பா. எனக்கு எதெல்லாம் சொந்தமோ, எனக்கு எதெல்லாம் உரிமையோ அது அத்தனையும் இனி, பவித்ராவுக்கும் சொந்தம்” என்றாள் தெளிவாக.

“அக்கா! இதெல்லாம் ரொம்ப அதிகம். எனக்கு, உங்க அன்பே போதும்” என்ற பவித்ராவை தன்னோடு அணைத்துக் கொண்டவள், “பெரியவ நான் சொல்றேன்; சின்னவ நீ கேட்டுக்கணும்” என்றபடி தந்தையைப் பார்த்தாள்.

“கண்ணம்மா! நீ கேட்டு அப்பா இல்லன்னு ஏதாவது சொல்லியிருக்கேனா? இந்த நிமிஷத்துல இருந்து உன்னைப் போலவே பவித்ராவும் என்னோட பொண்ணு” என்றவரை, “என்னோட செல்ல அப்பா!” என்று அன்புடன் அணைத்துக் கொண்டாள்.

அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அத்தனையும் பின் நாளில், அச்சுப்பிசகாமல் நடக்கப் போவது தெரியாமல் தனது அன்பை வெளிப்படுத்தினாள் மாயா.

ஏழாம் மாதம் வளைப்பூட்டு விழாவை, வெகு விமரிசையாக நடத்தினான் சத்ய பிரகாஷ். பத்தாம் மாதம் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். “மனு நந்தன்” என்று மகனுக்குப் பெயரிட்டனர்.

மகன் பிறந்த சந்தோஷத்தில் இருந்தவளுக்கு, மறுநாளே மார்பகத்தில் வீக்கமும், வலியும் ஏற்பட்டது. சில மணி நேரத்திற்குள் கன்றி சிவந்து போய், அவளால் வலியைத் தாள முடியவில்லை.

மருத்துவர், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட, மனோன்மணிக்கு வேதனையாக இருந்தது. அதைவிட, மருமகளின் அவஸ்தையைக் கண்டு பாவமாக இருந்தது. மாத்திரைகளில் குணமாக்கி விடலாம் என்று எண்ணி மருந்து கொடுத்தும், கட்டி கரையவே இல்லை. அவ்வப்போது ஜுரமும் வந்து அவளைப் பாடாய்படுத்தியது.

அவளால் குழந்தையுடன் நேரத்தைச் செலவழிக்க முடியாமல் வலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். இந்த இடைப்பட்டக் காலத்தில், பவித்ரா தான் குழந்தையைப் பார்த்துக் கொண்டாள். குழந்தைக்கு நேரா நேரத்திற்குப் பால் கலந்து கொடுப்பது, மருந்துகளைக் கொடுப்பது என்று கல்லூரி சென்றுவரும் நேரம் போக, மற்ற நேரங்களில் ஒரு தாயாகவே மாறிப் போனாள்.

குழந்தை பிறந்த இரண்டாம் மாதம், அறுவை சிகிச்சையின் மூலமாக அந்தக் கட்டியை அகற்றினர். எந்த எதிர்மறை விளைவும் இதனால் இல்லை என்றபின்பே, மனோன்மணிக்கு நிம்மதியாக இருந்தது.

திருமணத்திற்கு வந்துசென்ற யுவன், அவ்வப்போது இருவருடனும் வீடியோ காலில் பேசினான். அவளது ஒவ்வொரு சந்தோஷத்திலும், அவனது பங்கு அதிகமாகவே இருந்தது. மகனின் ஒவ்வொரு வளர்ச்சியையும், நண்பனிடம் பகிர்ந்து கொண்டாள் மாயா.

குழந்தைக்கு ஐந்து மாதம் இருக்கும் போது, யுவன் அவளுக்கு வழக்கம் போல வீடியோ காலில் அழைத்தான். ஆரண்யாவிற்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளதாகவும், அடுத்த மாதம் கல்யாணம் அனைவரும் அவசியம் வந்துவிட வேண்டும் என்றும் கூறினான்.

அனைவரும் கட்டாயம் வருவதாகக் கூறினர். ஆரண்யாவும் தனிப்பட்ட முறையில் அவளுக்குப் போன் செய்தாள். சத்யனும் தாங்கள் கட்டாயம் முன்நின்று திருமணத்தை நடத்திவிடலாம் என்று அவளுக்கு உறுதியளித்தான்.

ஆனால், ஆரண்யாவின் திருமண சமயத்தில் விஸ்வநாதனும், சத்யனும் பிசினஸ் விஷயமாக ஜப்பான் செல்வதற்கு ஏற்பாடு செய்திருப்பது நினைவிற்கு வந்தது. எப்படியும் திருமணத்திற்குத் தாங்கள் இருவரும் வந்து விடுவதாகவும், மற்ற மூவரும் முன்னரே கிளம்பிச் செல்லும்படியும் சத்யன் கூறினான்.

அவளும் சம்மதித்தாள். அப்போது கல்லூரியில் ஏதோ பரிட்சை. அதனால் தன்னால் வரமுடியாது என்று பவித்ரா சொல்ல, “நாங்கள் இருவரும் இங்கே இருக்கிறோம். நீங்கள் திருமணத்திற்குச் சென்று வாருங்கள்” என்று மனோன்மணி கூறினார்.

அதன்படி, குழந்தையுடன் மாயா முன் தினமே சென்று விடுவது, ஆண்கள் இருவரும் திருமணத்திற்கு நேராக வந்துவிடுவது என்று முடிவானது. ஆனால், சொன்னபடி அவர்களால் வரமுடியாது போக, மாயா மட்டும் திருமணத்திற்குக் கிளம்பினாள்.

முதல் நாள் இரவு, குழந்தைக்குத் தேவையானது, ஆரண்யாவிற்காக வாங்கிய பரிசுப் பொருட்கள் என்று அனைத்தையும் எடுத்து வைத்து விட்டுப் படுத்தாள். காலையில் எழுந்தபோது, குழந்தைக்கு நல்ல ஜுரம். மாயாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மாமியாரிடம் சொல்ல, ஊருக்குச் செல்ல வேண்டாம் என்று அவர் தடுத்தார். அவளுக்கோ, மனம் ஆறவில்லை. ஆரண்யா, தாயில்லாத பெண். தன்னை மிகவும் எதிர்பார்ப்பாள். நாம் யாருமே செல்லாவிட்டால் நன்றாக இராது என்று எவ்வளவோ சொல்லியும் மனோன்மணி சம்மதிக்கவில்லை.

கணவனுக்குப் போன் செய்து விஷயத்தைக் கூறினாள்.

“அம்மா சொல்றதைக் கேளு மாயா!” என்றான் அவன்.

மீண்டும் மாமியாரிடம் சொன்ன அனைத்தையும், அவனிடமும் படித்தாள்.

“நீ சொல்றது புரியுது. ஆனா, குழந்தையை விட்டுட்டு எப்படிப் போவ?” என்று கேட்டான்.

“மதியம் வரைக்கும், நான் இருப்பேன். பவித்ரா காலேஜ்லயிருந்து வந்ததும், அவள் பார்த்துப்பா. நான் நாளைக்கு ஈவ்னிங் திரும்பி வந்திடுறேன்” என்றாள் கெஞ்சலாக.

ஆனால், அவன் சுலபத்தில் சம்மதிக்கவில்லை. எப்படி எப்படியோ பேசி, ஒருவழியாக அவனது அரைகுறையான சம்மதத்தைப் பெற்றுவிட்டாள். மனோன்மணி மட்டும், “இது நல்லதில்ல மாயா! இந்தப் பிடிவாதமெல்லாம் சரியில்ல” என்று முதன்முறையாக அவளிடம் முகம் சுளித்தார்.

அப்போது அவரது வார்த்தைகள், அவளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. பவித்ராவும், நீங்க வரும்வரைக்கும் மனுவை நான் பார்த்துக்கறேன்” என்று சொன்னாள்.

“நீ பார்த்துப்பேன்ற நம்பிக்கைல கிளம்பறேன் பவி!” என்றவள் அவளை அணைத்துக் கொண்டாள்.

அன்று மட்டும் நான் பிடிவாதமாகக் கிளம்பி வராமல் இருந்திருந்தால், என் சந்தோஷமான வாழ்க்கையை இழந்து, என் அன்பானக் குடும்பத்தின் நிம்மதியையும் குலைத்து, என் குழந்தைக்குத் தாயாக எந்த அன்பையும் கொடுக்காமல் எத்தனைப் பெரிய கொடுமையைச் செய்திருக்கிறோம் என்று நினைத்தவளுக்குக் கண்ணீர் பெருகியது. வீடியோவில் சிரித்து விளையாடிக்கொண்டிருந்த மகனுக்கு, கண்ணீருடன் முத்தமிட்டாள்.