மாயா- கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
201
436
63
30

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைப்பதும், அழுவதுமாக அமர்ந்திருந்த பவித்ராவை அதிருப்தியுடன் பார்த்தார் மனோன்மணி.

“இன்னும் எவ்வளவு நேரத்துக்கு அழுதுட்டிருக்கப் போற? அவன் இன்னைக்கு ஒரு நைட் அங்கே தங்கறதுல என்ன ஆகிடப் போகுது? இத்தனை நாளா, உன்னோட தானே இருந்தான். காலைல வந்திடுவான். அமைதியா தூங்கு. மனசை குழப்பிக்காதேம்மா!” என்ற மாமியாரின் வார்த்தைகள் அவளது கவலையைச் சற்றும் குறைக்கவில்லை.

எதுவும் சொல்லாமல் படுத்தபோதும், அவளால் உறங்க முடியவில்லை. இது நியாயமே இல்லை என்று தெரிந்தும், அவளால் சமாதானம் அடைய முடியவில்லை. அன்று கணவனிடமிருந்து போன் வந்ததைப் போல, இன்றும் வரும் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விடிய விடிய விழித்துக் கொண்டிருந்தவள், தன்னையறியாமல் உறங்க ஆரம்பித்தாள். வெயிலின் தாக்கம் அறைக்குள் பரவ ஆரம்பிக்க, மெல்லக் கண்விழித்தாள். மணி எட்டரை ஆகியிருந்தது. குழந்தை ஸ்கூலுக்குக் கிளம்பியிருப்பானே என எண்ணிக் கொண்டே வெளியே எட்டிப் பார்த்தாள்.

பேரனை பஸ்ஸில் ஏற்றிவிட்டு உள்ளே வந்து கொண்டிருந்தார் மனோன்மணி.

“தம்பியை நானே கிளப்பி அனுப்பிட்டேன். நீ குளிச்சிட்டு வா. உனக்குப் பிடிச்ச பயித்தம் பருப்பு புட்டு பண்ணியிருக்கேன்” என்று அன்புடன் சொல்லிவிட்டுச் செல்ல, குளித்துவிட்டு வந்தாள்.

பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு வெளியே வந்தவள், சத்ய பிரகாஷுடன் சிரித்துப் பேசிக்கொண்டே வந்த மாயாவைப் பார்த்ததும், திகைத்து நின்றாள். மாயாவின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியைக் கண்டவளுக்கு அடிவயிறு கலங்கியது.

“ஹாய் பவி! எப்படி இருக்க?” என்று உற்சாகமாக ஒலித்தவளின் குரலைக் கேட்டு ஹாலுக்கு வந்த மனோன்மணி, மருமகள்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

தலையை அசைத்தவள், “ம்ம், இருக்கேன்” என்றாள் மென்குரலில்.

“அதென்ன இருக்கேன். நல்லாயிருக்கேன்னு சொல்லு” என்றவள், “மனு எங்கே?” எனக் கேட்டாள்.

கணவனைப் பார்த்துக் கொண்டே, “ஸ்கூலுக்குப் போயிருக்கான்” என்றாள் மென்குரலில்.

“ஏன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு? நைட் தூக்கமில்லயா? நானும் மனுவை உண்டாகியிருக்கும் போது அப்படித்தான் இருந்தது. இன்னும் ஆறேழு மாசத்துக்கு உனக்குச் சரியான தூக்கம் இருக்காது” என்றவள் அப்போது தான் மாமியாரைப் பார்த்தாள்.

“அத்தை! நீங்க சொன்னபடியே நான் என் வீட்டுக்கு வந்திருக்கேன். ஈவ்னிங் வரைக்கும் இங்கே தான் வாசம்” என்றாள்.

“ரொம்பச் சந்தோஷம்மா!” என்றவர், ஏன் மாயா வருவதை முன்பே சொல்லவில்லை என்பதைப் போலப் பார்த்தார்.

“நான் காரில் ஏறும் வரை எதுவும் பேசாமல் இருந்துட்டு, கடைசி நிமிஷத்துல நானும் வீட்டுக்கு வரேன்னு கிளம்பி வந்துட்டாங்க” என்றான் பொதுவாக.

மற்ற இருவரும் அமைதியாக இருக்க, “சரி நான் போய் டிரெஸ் மாத்திட்டு வரேன்” என்றவள் சத்யனின் அறையை நோக்கி நடந்தாள்.

கையோடு கொண்டு வந்திருந்த உடைகளுடன் தங்கள் அறைக்குச் சென்றவள், அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். தங்கள் ஓன்றரை ஆண்டு கால வாழ்க்கையின் சந்தோஷத்தை இன்னமும் பறை சாற்றுவதைப் போல, அவளது அறை பளிச்சென இருந்தது.

சுவற்றிலிருந்த தங்கள் திருமண புகைப்படத்தை ஆழ்ந்து பார்த்தாள். இருவரது கண்களிலும் ஆயிரம் ஆயிரம் கனவுகளும், கற்பனைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தெரிந்தன. புகைப்படத்தில் தெரிந்த அவனது முகத்தை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

முன்பு ஒரு முறை இதே போல அவனது புகைப்படத்திற்கு அவள் முத்தம் கொடுத்த நேரம், அவளறியாமல் உள்ளே வந்தவன் பின்னாலிருந்து அணைத்து, “நிஜமிருக்க, நிழலுக்கு ஏனடி உன் இதழ் ஸ்பரிசம்?” என்று காதோரம் கிசுகிசுத்தவனின் குரல் இப்போதும் காதில் ஒலித்தது.

அந்த உணர்வும், உயிர்ப்பும் இப்போதும் அவளுள் எழ, சிலிர்ப்புடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள். அங்கே அவன் இல்லை. பெருமூச்சு விட்டபடி பார்த்தவளின் கண்கள் கட்டில் மீது படிந்தது.

இது தாங்கள் பயன்படுத்தியது அல்லவே! என்று தோன்றிய போதே, ‘ஓஹ்! என்னுடைய இழப்பிற்குப் பிறகு, இதையும் மாற்றிவிட்டாரோ!’ என்றெண்ணி புன்னகையுடன் வார்ட்ரோபைத் திறந்தாள்.

அவள் விட்டுச் சென்றிருந்த உடைகள் அனைத்தும், அங்கே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கணவனை மெச்சிக்கொண்டவள், முதன்முதலில் சத்யன் அவளுக்காக வாங்கிக் கொடுத்த புடவையை எடுத்தாள்.

மஞ்சள் நிறத்தில் சிகப்புப் பூக்கள் நிறைந்த, அந்தக் காட்டன் புடவை அவனுக்கு மிகவும் பிடித்தமானது. அவள் அதை உடுத்திக் கொண்டு வந்தவுடன் அவன் அடித்த லூட்டியை நினைத்துச் சிரித்துக் கொண்டே புடவையை அணிந்து கொண்டாள்.

கதவைத் திறந்து, “என்னங்க. கொஞ்சம் வாங்களேன்” என்று குரல் கொடுக்க, பவித்ராவிடம் பேசிக்கொண்டிருந்தவன், என்னவோ என்றெண்ணி வேகமாக மேலே சென்றான்.

உள்ளே வந்தவன், அவளைக் கண்டதும் இமைக்க மறந்து நின்றான். அவளுக்குத் தோன்றிய அனைத்தும் அவனுக்கும் நினைவிற்கு வந்தன. அவன் உள்ளே வந்ததும் கதவை மூடியவள், அவனைப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள்.

அவனது உணர்வுப் போராட்டத்தை உணராமல், “ஐ லவ் யூ மாம்ஸ்!” என்றவள் இறுக அணைத்துக் கொண்டாள்.

அவனது இதயம் தாறுமாறாக துடித்தது. அவளை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான். காதல் கொண்டு மணந்தவள். தன்னை நேசத்திலேயே மூழ்கடித்தவள் அவளது அருகாமை அவனைப் பித்தம் கொள்ளத்தான் செய்தது.

அதேநேரம் தனது வாழ்விலிருந்தே தொலைந்து போனவளின் நினைவை மெல்ல மெல்ல மூழ்கடித்து தனது அன்பினாலும், பண்பினாலும் இணைந்தவளுக்குத் துரோகம் செய்யவும் மனமில்லாமல் தவித்தான்.

“மாம்ஸ்! ஏன் எதுவுமே சொல்ல மாட்டேன்றீங்க?” என்று கிறக்கமாகக் கேட்டவளுக்கு அவனால் எந்தப் பதிலையும் அளிக்க முடியவில்லை.

அவனது போராட்டத்தை பார்க்க முடியாத கடவுளே, அவனது உதவிக்கு வந்தார். மாயாவின் கைப்பேசி ஒலிக்க, சலிப்புடன் நகர்ந்தாள். ஆரண்யா அழைத்திருந்தாள். அவளிடம் வளவளக்கத் துவங்க, சத்யன் அறையிலிருந்து மெல்ல நகர்ந்தான்.

அரைமணி நேரம் கடந்த பின்பே அவள் கீழே இறங்கி வந்தாள். அதற்குள் அலுவலகம் செல்லத் தயாராக இருந்தவன், மாலையில் விரைவாக வந்துவிடுவதாகவும், தான் வந்தபின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினான்.

மனோன்மணி அவளைச் சாப்பிட அழைக்க, சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டதாகக் கூறி டைனிங் டேபிளில் அவரெதிரில் அமர்ந்து பேசத் துவங்கினாள்.

ரெண்டு நாட்களுக்கு முன்பு எதேச்சையாக பவித்ரா, ‘மாயா திடீரென வீட்டிற்கு வந்தால் என்ன செய்வது? அதனால் நான் என் அறையிலேயே தங்கிக் கொள்கிறேன்’ என்று அவளது அறைக்கே சென்றது எவ்வளவு நல்லதாகப் போயிற்று’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

மாயா ஏதேதோ கேட்டுக்கொண்டிருக்க, பவித்ரா அமைதியாக உணவை விழுங்கிக் கொண்டிருந்தாள்.

மனோன்மணிக்கு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். நிறை மாதக் கர்ப்பிணி. இன்றோ; நாளையோ என்றிருப்பவள். இந்த நேரத்தில் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டிய நேரத்தில் இவளுக்கு எத்தனைச் சோதனை என்று எண்ணியவருக்கு வேதனையாக இருந்தது.

திடீரென, “உன் வீட்டுக்காரர் போன் பேசினாரா பவி?” என்று கேட்க, அந்தக் கேள்வியை எதிர்பாராதவளுக்குப் புரையேறியது.

“மெதுவா! பார்த்துச் சாப்பிடு” என்று அவளது முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

பவித்ராவின் கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்தது. “அச்சச்சோ! என்ன உனக்கு இப்படித் தண்ணி வருது. நீ சாப்பிடு மெதுவா பேசலாம்” என்றவள் மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவளது வளைகாப்புப் போட்டோவைக் காண்பிக்கும்படிக் கேட்டாள்.

“ஆல்பத்தை எங்கே வச்சேன்னு தெரியல. தேடி எடுத்துக் கொடுக்கிறேன்” என்றார் அவர்.

“வீடியோ எடுக்கலையா?” என்றாள் விடாமல்.

“எடுத்தோம்மா. எல்லாம் ஒரே பேக்ல தான் இருந்தது” என்று அவரும் சளைக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

“என்னத்தை நீங்க? கல்யாண ஆல்பம் கேட்டா அவளோட ஹஸ்பண்ட்கிட்ட இருக்குன்னு சொல்றீங்க. வளைகாப்புப் போட்டோவைக் கேட்டா எங்கே வச்சேன்னு தெரியலங்கறீங்க. என்னவோ போங்க” என்றாள் சலிப்புடன்.

“நீ அடுத்த முறை வரும் முன்ன கட்டாயம் எடுத்து வைக்கிறேன்” என்றார் அவர் சமாளிப்பாக.

குழந்தை வந்ததும், மனம் நிறைய ஆசையும், ஆவலும் இருந்த போதும் மகனின் அருகிலேயே அவள் செல்லவில்லை. அவனுக்காக வாங்கி வந்திருந்த பொருட்களை அவனிடம் கொடுக்க, அவன் வாங்காமல் பவித்ராவைக் கண்டான்.

“வாங்கிக்கோ கண்ணா! அவங்களும் அம்மா தான்” என்றாள் மெல்லிய குரலில்.

அந்த வார்த்தை மாயாவின் இதயத்தைச் சுருக்கெனத் தைத்தது. இருந்தாலும், கீழுதட்டை அழுந்தக் கடித்துத் தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் மகனின் அருகில் விளையாட்டுப் பொருட்களை வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டே வந்த சத்யன், தன்னிடம் ஓடிவந்த மகனைத் தூக்கிக் கொண்டு மாயாவின் அருகில் சென்று அமர்ந்தான். அவளது முகத்தைக் கூடப் பார்க்காமல் திரும்பிய மகனை மெல்ல அழைத்தான்.

“மனு கண்ணா! அப்பா பாருங்க” என்றதும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பார்த்த மகனைச் சிரிப்புடன் நோக்கினான்.

“இவங்க. அம்மா. மனுவோட அம்மா” என்றான் அழுத்தமாக.

பவித்ரா அடிபட்டப் பறவையைப் போல அவர்களைப் பார்க்க, மனோன்மணி எதுவும் சொல்ல முடியாமல் மூவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

“மாயா!” என்று அவளை அருகில் இழுத்தவன், “நீ கூப்பிடு” என்றான்.

“மனு… உங்களுக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பார்த்தீங்களா? ரோபோ பொம்மை, ரிமோட் கார்” என்று ஒவ்வொன்றாகச் சொல்ல, குழந்தை அவற்றைப் பார்க்கத் துவங்கினான்.

“அப்பா… கார்” என்று தந்தையின் கன்னத்தைத் தட்டிச் சொல்ல, “யார் வாங்கிட்டு வந்தாங்க?” என்று கேட்டான்.

மாயாவைக் கைக் காட்டினான்.

“அம்மான்னு சொல்லணும். சொல்லுங்க அம்மா…” என்று அவன் சொல்லிக் கொடுக்க, மாயாவை ஒருமுறை பார்த்த மனு, பவித்ராவையும் பார்த்தான்.

“அம்மா!” என்று பவித்ராவைக் கை காண்பிக்க, மாயாவிற்கு நெஞ்சை அடைத்தது. பவித்ராவின் மனமோ, ஆனந்தத்தில் திளைத்தது.

சத்யன் எதுவும் சொல்லமுடியாமல் மாயாவைப் பார்க்க, அவள் யாரையும் பாராமல் விறுவிறுவென அறைக்குச் செல்ல, குழந்தையைக் கீழே விட்டுவிட்டு தவிப்புடன், அவள் பின்னாலேயே சென்றான்.

குழந்தையை அணைத்துக் கொண்டு, அவனது கன்னத்தில் கணக்கிலடங்கா முத்தத்தைப் பொழிந்தாள் பவித்ரா. அவளது, மனம் பெருமிதத்தில் கூத்தாடியது. அதேநேரம் கணவனின் அன்பில் உரிமைக்கோரும் மாயாவின் மீது எரிச்சல் வந்தது.

‘இது எங்கே போய் முடியும்?’ என்றெண்ணிய மனோன்மணி யாருக்காகப் பேசுவது? யாருக்காகப் பார்ப்பது என்று தெரியாமல் திண்டாடினார். பவித்ரா சொந்த அண்ணனின் மகள். அவளிடம் இருக்கும் அன்பும், அனுசரணையும் இயல்பானது.

ஆனால், மாயா! மகனின் அன்பைப் பெற்று, அந்த வீட்டின் கிரகலஷ்மியாக வந்தவள். தான், கோட்டீஸ்வரனின் மகள் என்ற கர்வமோ, அலட்டலோ துளிக்கூட இல்லாமல், இயல்பாகப் புகுந்த வீட்டில் ஒட்டிக்கொண்டவள்.

அவள் செய்த ஒரே தவறு, பிஞ்சுக் குழந்தையைத் தங்களிடம் விட்டுவிட்டு, யார் துணையும் இல்லாமல் அந்தத் திருமணத்திற்குச் சென்றது மட்டுமே. அவள் இல்லை என்று ஆனபின், அம்மாவின் அரவணைப்பில்லாத குழந்தைக்கு எல்லாமுமாக இருந்த பவித்ராவை, அவனே தான் அம்மா என்று அழைக்க ஆரம்பித்தான்.

ஸ்பீச் தெராபிக்கு வரும் பெற்றோரைப் பார்த்தோ அன்றி, அவளது அன்பும், அக்கறையும் அவனை அப்படி அழைக்கத் தூண்டியிருக்கிறது. ஆனால், விதி அவளையே அவனுக்கு அம்மாவாகவும் கொண்டு வந்தது. மாயாவின் திடீர் வருகையே அனைத்தையும் தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

இதில் யாருடைய தவறு இருக்கிறது? விதியைத் தவிர யாரையும் நொந்துகொள்ள முடியாத சூழ்நிலை. ஆனால், அந்த விதிக்கு என் மகனின் மீது ஏன் இவ்வளவு வன்மம்?’ இருவருக்கும் இடையில் அவன் படும் அல்லலைக் காண்கையில் பெற்றவளின் நெஞ்சம் குமுறியது.

‘பவித்ராவின் பிரசவம் முடிந்த பின், எவ்வளவு விரைவாக அவளிடம் பேச முடிகிறதோ, பேசி விட வேண்டும்’ என்ற முடிவுடன் நின்றிருந்தவர், சென்ற வேகத்தில் திரும்பி வந்துகொண்டிருந்த மருமகளைக் கண்டதும் திகைத்தார்.

சத்யனின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், அடுத்த ஐந்தே நிமிடங்களில் வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள் மாயா. தனியே செல்கிறேன் என்றவளை வற்புறுத்திக் காரில் அழைத்து வந்தான்.

அந்தப் பயணம் அவர்களுக்கிடையில் பெரும் இடைவெளியை உண்டாக்கிக் கொண்டிருந்தது. மாயா ஒருவித குழப்பமான மனநிலையிலேயே இருந்தாள். மாயாவின் பார்வை சாலையை வெறித்துக் கொண்டிருந்தது. ஆனால், அவளது அமைதிக்குப் பின்னால் பெரும் யுத்தமே நடந்து கொண்டிருந்தது.

தன்னைச் சுற்றி என்னவோ நடக்கிறது என்று உணர்ந்தவளுக்கு, அது என்ன? என்று மட்டும் புரியவில்லை. நடப்பதையெல்லாம் பார்த்து அவளது நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக பலகீனம் அடைந்து கொண்டிருந்தது. அந்தப் பலகீனமும், இயலாமையும் அடுத்தவர் மீது கோபமாக உருவாகியது.

வாசலில் காரை நிறுத்திவிட்டு அவனும் இறங்க முயல, “நீங்க கிளம்புங்க” என்றாள் அழுத்தமாக.

“மாயா…” என்றான் அடிபட்டக் குரலில்.

“ப்ளீஸ்! நீங்க சொல்ற எந்த ஆறுதலான வார்த்தைகளும் என்னைச் சமாதானப்படுத்தாது” என்றவள், “இதைவிட, என்னைக் கேவலப்படுத்த முடியாது சத்யன். கடைசியில, அம்மாவா இருக்கக் கூட எனக்குத் தகுதியில்லாம ஆக்கிட்டீங்க” என்றவளது கண்கள் மளமளவென மடைதிறந்த வெள்ளமாகக் கண்ணீரைப் பொழிந்தன.

புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டவளின் கையைப் பற்றி, “மாயா! சாரி மாயா… இப்படி ஒரு சூழ்நிலையை நாங்க யாருமே எதிர்பார்க்கலம்மா. புரிஞ்சிக்க ப்ளீஸ்!” என்றான் இறைஞ்சுதலுடன்.

அவனது பிடியைப் பார்த்தவள் மெல்லக் கையை உறுவிக்கொண்டு, சத்யனின் முகத்தைப் பார்த்தாள்.

“காலமெல்லாம் என்னோட இன்பத் துன்பத்திலும், கூடவே வருவேன்னு தான் என் கையைப் பிடிச்சீங்க. அப்போயிருந்த அந்த நேசமும், உங்க பார்வைல தெரிந்த கனிவும், அன்பும், இப்போ இல்ல. இதுக்கெல்லாம் நான் உரிமையானவளான்னே எனக்கு சந்தேகமா இருக்கு” என்றவளை இமைக்காமல் பார்த்தான்.

“நடக்கற எல்லாத்துக்குமே முழுப் பொறுப்பு நான்தான். என்னோட தப்புக்குத் தண்டனையை அனுபவிக்கிறேன்னு நினைச்சிக்கிறேன். நீங்க கிளம்புங்க. எனக்குக் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்” என்று கறாராகச் சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கியவளை, கையாலாகாதனத்துடன் பார்த்தான்.31

இருண்டிருந்த அறையில் விளைந்த திடீர் வெளிச்சத்தினால், கைகளால் கண்களை மறைத்தபடி நிமிர்ந்து பார்த்தாள். விஸ்வநாதன் நின்றிருந்தார்.

“மாயாம்மா! என்னாச்சுடா?” என்றவர், மகளின் அருகில் அமர்ந்தபடி, “ஏம்மா விளக்கைக் கூடப் போடாமல் உட்கார்ந்திருக்க?” என்று மிருதுவாகக் கேட்டார்.

முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு, “உங்க பிரியமான மாப்பிள்ளை எல்லாத்தையும் உங்கக்கிட்டச் சொல்லியிருப்பாரேப்பா!” என்றாள் கரகரத்தக் குரலில்.

சற்றுநேரம் மௌனமாக இருந்தவர், “சரியாகிடும்மா!” என்றவருக்கே தன் வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்பது, அவரது குரல் நடுங்கியதிலிருந்தே தெரிந்தது.

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், தந்தையை ஆழ்ந்து நோக்கினாள்.

நா தழுதழுக்க, “நான் திரும்பி வந்திருக்கவே கூடாதில்லப்பா!” மென்குரலில் கூறிய அதிர்ச்சியுடன் பார்த்தார்.

மகளை, தோளோடு அணைத்துக் கொண்ட விஸ்வநாதனுக்கு, தன் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவதைப் போல வலித்தது.

தனது சோகத்தையும், வேதனையையும் மென்று விழுங்கியவர், “ஏன்டாம்மா இப்படிப் பேசற? நீ நினைக்கிற அளவுக்கு எதுவும் நடந்திடல” என்று மகளுக்கு ஆறுதல் கூறினார்.

“இல்லப்பா! நான், எல்லோருக்கும் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கறேனோன்னு தோணுதுப்பா!” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.

“ஏம்மா இப்படி விரக்தியா பேசற? மனு குழந்தைடா! நீ இல்லன்னு தெரியாத அளவுக்கு, பவித்ரா அவனைப் பார்த்துக்கிட்டா. அதனால தான், அவனுக்கு அம்மான்னதும்…” என்று சமாதானமாகப் பேசியவரைக் குறுக்கிட்டாள்.

“போதும்ப்பா! திரும்ப, நீங்க எதுவும் சொல்லாதீங்க. தன்னோட உதிரத்துல உருவான, அந்த உயிர் அம்மான்னு கூப்பிடும் போதுதான், ஒரு பொண்ணோட மனசு நிறையும். அவளோட வாழ்க்கையும் முழுமையடையும். அந்தத் தகுதி கூட, எனக்கு இல்லயாப்பா?

நான் உங்களை முதன்முதல்ல அப்பான்னு கூப்பிட்டப்போ, நீங்க எப்படிப் பூரிச்சிருப்பீங்க. அப்படித் தானேப்பா, நானும் நினைப்பேன். என் குழந்தை, என் பக்கத்திலேயே வரமாட்டேன்றானே. என்னைத் தொடக்கூட விடமாட்டேன்றான். நான் என்னப்பா பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?” என்று கதறிய மகளைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டார்.

அவர் என்னவென்று பதில் சொல்வார்? என்ன வார்த்தைகள் சொன்னால் அவளது மனம் சமாதானமடையும்? அந்தச் சமாதானம் நிரந்தரமானதா?’ யோசித்த விஸ்வநாதனின் இதயம் மகளின் கண்ணீரை நிறுத்தும் வழி தெரியாமல் நைந்து போனது.

“உங்க பேச்சையெல்லாம் கேட்காமல், நான் கிளம்பிப் போனது தப்புத்தான்ப்பா! அதுக்காக, இவ்வளவு பெரிய தண்டனையா? நானும் கலங்கி என்னைச் சேர்ந்தவங்களையும் வருத்திக்கிட்டு…” என்றவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

எதற்குமே கலங்காத மகளின் கண்ணீர் விஸ்வநாதனுக்கு பெரும் துயரத்தைக் கொடுத்தது.

“போதும்டா விட்ரு. என் செல்லப் பொண்ணு நீ. உன்னோட கண்ணீரைத் தாங்கற சக்தி எனக்கு இல்லம்மா” என்றவரும் மகளுடன் சேர்ந்து கலங்கினார்.

“முடியலப்பா! நீங்க, என்னைக் கொஞ்சம் கண்டிச்சி வளர்த்திருக்கலாம்ப்பா” என்றவள் தாரைத் தாரையாகக் கண்ணீர் விட்டபடி தந்தையின் மடியில் தலைசாய்த்துக் கொண்டாள்.

அதுவரையிலும், தன் மனத்தை வெளியில் காட்டாத விஸ்வநாதன், “நீ, என்னோட தேவதைடா! இதுவரைக்கும் அப்பாவுக்கு, நீ எந்தக் கஷ்டத்தையும் கொடுத்ததே இல்லயேடா! அம்மா இல்லன்னாலும், ஒரு நாளும் எனக்கு அம்மா வேணும்ன்னு என்கிட்டக் கேட்டதில்ல. எல்லோரிடமும் மரியாதையோடும், அன்போடும் பழகின.

நல்லா படிச்ச. சத்யனை விரும்பின. உனக்கு ரொம்பப் பொருத்தமா இருப்பான்னு, நானே உங்களுக்குக் கல்யாணம் செய்து வச்சேன். நல்ல மனைவின்னும், அருமையான மருமகள்ன்னு பேர் வாங்கின. யாருக்குமே, நீ எந்தக் குறையையும் வைக்கலையேம்மா. உன்னை, நான் எப்படிக் கண்டிச்சி வளர்க்க முடியும்?” என்றவரின் கண்கள் குளமாகின.

“உனக்காக... உன் சந்தோஷத்துக்காக, அப்பா என்ன வேணும்னாலும் செய்வேன்டா. நீ கஷ்டப்படாதேம்மா. உன் அம்மா போன பின்ன உனக்காகவே, உன் அப்பன் உயிரோட இருக்கேன். நீ என்னோட இளவரசிடா” என்று வாஞ்சையுடன் ஒலித்தத் தந்தையின் வார்த்தைகள், அவளுக்குள் மேலும் குற்ற உணர்ச்சியை மட்டுமே தூண்டியது.

அதை அறியாத விஸ்வநாதன், மகளுக்காக எந்த நிலைக்கும் போக, மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தார்.

அடுத்து வந்த இரண்டு தினங்களும், அவள் அவளாகவே இல்லை. அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவளை, விஸ்வநாதனால் தேற்றவும் முடியவில்லை. அவள் ஓடித் திரிந்து, பேசிச் சிரித்த அந்த வீட்டில், அவள் இல்லை என்றிருந்த அந்த இரண்டரை வருடங்களும், வெறுமை இருந்ததே தவிர, இப்படிச் சூன்யமாக இல்லை.

பிரியமானவர்களின் கண்ணீரும், பாராமுகமும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவள் தந்தைக்கு உபதேசித்துக் கொண்டிருந்தாள். அவளது மனவருத்தமும், ஆழ்ந்த அமைதியும் விஸ்வநாதனுக்குத் திகிலைக் கொடுத்தது.

இரண்டு நாட்களும் அவர் அலுவலகத்திற்குச் செல்லும் தைரியமற்று வீட்டிலேயே இருந்தார். அவரைத் தவிர அந்த அறைக்குள் அவள் யாரையும் அனுமதிக்கவில்லை. எதேச்சையாக விஸ்வநாதனுக்குப் போன் செய்த சரண்யா விஷயம் கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்தாள். அப்போதும், அவள் வெளியே வரவில்லை.

ஊண், உறக்கம் இன்றி, வெளியுலகத் தொடர்பின்றி அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

அந்த இரண்டு நாட்களும், எத்தனையோ முறை சத்யன் போன் செய்தும் அவள் எடுக்கவில்லை. நேரில் வந்தவனைக் காணவும், அறையிலிருந்து வரவில்லை. அவன் எவ்வளவோ மன்றாடியும், கதவையும் திறக்கவில்லை. சத்யனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.

“என்ன மாமா இவள் இப்படிப் பிடிவாதமா இருக்கா? பவித்ராவுக்கு டெலிவரி முடிஞ்சி இவகிட்டப் பேசலாம்ன்னு இருந்தோம். இப்படி இருந்தா என்ன அர்த்தம்? எனக்குத் தலை வெடிச்சிடும் போல இருக்கு” என்று சலிப்புடன் கூறியவனை அமைதியாகப் பார்த்தார் விஸ்வநாதன்.

அவரது அமைதி அவனுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

“என்ன மாமா எதுவுமே பேசமாட்டேன்றீங்க?” என்று கேட்டான்.

“என் மககிட்ட, என்ன பேசப்போறீங்க?” என்றவரை, விழியகல பார்த்தான்.

“இன்னைக்கு என்னை இந்த நிலையில நிற்க வச்சதுல உங்களுக்கும் பங்கிருக்கு. எதுவும் புரியாதது போல என்னைக் கேட்கறீங்க?” என்று கோபத்துடன் கேட்டான்.

விஸ்வநாதன் அமைதியாக நிற்க, “மாயா மட்டுமே இருந்திருந்தா, நான் இப்படி அல்லாடியிருப்பேனா? அவள் வந்த, சந்தோஷத்தைக் கொண்டாடி இருக்கமாட்டேனா? அவளை இப்படித் தனியாக விட்டுட்டு இருந்திருப்பேனா? என்ன பேசப்போறன்னு என்னைக் கேட்கறீங்க” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

“அவள் கேட்கற நியாயமான கேள்விக்குக் கூட என்கிட்டப் பதில் இல்லயே நான் என்ன செய்யட்டும்?” என்றவரை ஆழ்ந்து நோக்கினான்.

“நீங்க எதை மனசுல வச்சிக்கிட்டுப் பேசறீங்கன்னு எனக்குப் புரியுது மாமா! இந்த நிலைமைல என்னால மட்டும் என்ன செய்யமுடியும்? அவள் இல்லாம போய்ட்டா. திரும்பி வருவான்னு நம்ம யாருக்குமே தெரியாதே. அம்மா, மாயாவை இங்கே விட்டுட்டுப் போறதைப் பத்தி உங்ககிட்டத் தனியா பேசியிருக்கலாம்.

ஆனா, அதனால என்ன பிரயோஜனம்? அவங்க பவித்ராவுக்குக் கொடுக்கற முக்கியத்துவத்தை மாயாவுக்குக் கொடுக்கலன்னு நினைக்கிறீங்களா? அவங்களும் என்னதான் செய்ய முடியும்? ஒரு பொண்ணுக்குக் கர்ப்பக் காலம் எவ்வளவு முக்கியானதுன்னு உங்களுக்குத் தெரியாததில்ல. அந்த நேரத்தில் தன்னோட வாழ்க்கையையே பணயம் வச்சிட்டு மௌனமா இருக்கறவளுக்கு வேற என்ன தான் ஆறுதல்?

கடைசில நீங்களும், உங்க மகளுக்காகத் தானே யோசிக்கிறீங்க. உங்க ரெண்டு பக்கமும் இல்லாம நான் நடுவுல அல்லாடிட்டு இருக்கேன். ஒரு பக்கம், அவள் அழுதே கரையறா. இந்தப் பக்கம், இவள் பேசாமலே கொல்றா. நான் யாருக்குன்னு பார்க்கறது? எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும் போலயிருக்கு. இனி, நான் சாகற வரை, நிம்மதின்னு ஒண்ணு என் வாழ்க்கைல வரவே போறதில்ல” என்றவன் கோபத்துடன் வெளியேற, விஸ்வநாதன் எந்த உணர்வுகளையும் முகத்தில் காண்பிக்காமல் அமர்ந்திருந்தார்.

‘பிறக்கும் போதே கோடீஸ்வரனின் வாரிசு. நல்ல மனைவி, அருமையான குழந்தை என்று வாழ்க்கையில் எல்லாவற்றையும் நிறைவாகக் கொடுத்த இறைவன், வயதான காலத்தில், தன்னை ஏன் இப்படிச் சோதிக்கிறான்?’ என்று புரியாமல் ஆழ்ந்த அமைதியுடன் இருந்தார்.

மறுநாள் அதிகாலையில் விஸ்வநாதனின் செல்போன் ஒலிக்க எடுத்தார்.

“மாமா பொண்ணு பிறந்திருக்கா!” என்று உற்சாகமாக ஒலித்த சத்ய பிரகாஷின் வார்த்தைகள் அவருக்குள் என்னமாதிரியான எண்ணங்களை உண்டாக்கியது என்று அவருக்கே புரியவில்லை.

“வாழ்த்துகள் மாப்பிள்ளை! ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்களா?” என்று விசாரித்தார்.

“நல்லாயிருக்காங்க மாமா. ரெண்டு நாள்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்களாம்” என்றான்.

“சந்தோஷம். நான், ஈவ்னிங் வந்து பார்க்கிறேன்” என்றவர் போனை வைத்தார்.

சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவர், குளித்துவிட்டு வெளியே கிளம்பிச் சென்றார். தளர்ந்த நடையுடன் கோவிலினுள்ளே நுழைந்தவர் பிரகாரத்தில் சென்று அமர்ந்தார். சன்னிதானத்தில், பூஜை நடந்து கொண்டிருந்தது.

‘எத்தனை நாட்கள் உனக்குத் தேனாலும், பாலாலும் அபிஷேகம் செய்திருக்கேன். என் மகளோட வாழ்க்கையை இப்படிக் கேள்விக்குறி ஆக்கிட்டியே’ என்று கல்லாய் இருந்த தெய்வத்தைக் கேள்வி கேட்டார்.

மனத்தில் இருந்த வெறுமை அவருக்குக் கண்ணீரைக் கூட வரவழைக்கவில்லை. கண்களை மூடி வெகுநேரம் அமர்ந்திருந்தவரின் தோளைத் தொட்டு யாரோ அழைக்கக் கண்களைத் திறந்தார்.

“என்ன சார் ரொம்ப நேரமா இங்கேயே உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு எதுவும் சரியில்லயா? உங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு பார்த்தேன். ஆனா, மணி பத்தாகப் போகுதேன்னு கூப்பிட்டேன்” என்றார் கோவிலின் அர்ச்சகர்.

“கடவுள் புண்ணியத்துல உடம்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. ஏதோ ஞாபகத்துல அப்படியே தூங்கிட்டிருக்கேன். கிளம்பறேன்” என்றவர் அவர் கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு, சுட்டெரிக்கும் சூரியனைக் கூடப் பொருட்படுத்தாமல் நடந்தே வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

“அம்மா ஐயா வந்துட்டாங்க” என்று வேலையாள் குரல் கொடுக்க வெளிறிய முகமும், கையில் போனுமாக அவரை நோக்கி ஓடிவந்தாள் மாயா.

“எங்கேப்பா போய்ட்டீங்க? நான் பதறிப் போயிட்டேன்” என்றபடி அவரை அணைத்துக் கொண்டவள், குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“கோவிலுக்குப் போயிருந்தேன்டா!” என்றார் பாசத்துடன்.

“என்கிட்ட, ஒரு வார்த்தைச் சொல்லிட்டுப் போயிருக்கலாமேப்பா! கார் கூட எடுத்துக்காம…” என்றவள், அவரது பார்வையில் கூனிக் குறுகிப் போனாள்.

“சாரிப்பா! நான் திரும்பத் திரும்பத் தப்புப் பண்றேன். என்னோட கஷ்டம் தான் பெரிசுன்னு நினைச்சேனே தவிர, உங்க யாரைப் பத்தியுமே நான் நினைக்கல. வெரி சாரிப்பா” என்றாள்.

“பரவாயில்லடா. ஆனா, அப்பாவுக்கு ஏதாவதுன்னாதான் உன்னோட கோபத்தையெல்லாம் ஒதுக்கிட்டு வருவியா?” என்ற கேட்டத் தந்தையிடம், “சாரிப்பா!” என்றபடி அவரது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

அதே நேரம், “மாயா!” என்றபடி உள்ளே வந்த அவினாஷும் அவனது மனைவியும், விஸ்வநாதனைக் கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

“அங்கிள்! உங்களைக் காணோம்ன்னு இவள் பண்ணின கலாட்டால நான் விழுந்தடிச்சி ஓடி வரேன்” என்றபடி இலகுவாக அமர்ந்தான்.

“ஏம்மா இன்னும் யாராருக்கெல்லாம் போன் செய்த? வரிசையா வந்துடப் போறாங்க” என்று அவர் கிண்டலாகச் சொன்னார்.

“உங்க மாப்பிள்ளைக்குத் தான் போன் செய்தேன். அவருக்கு லைன் கிடைக்கவே இல்ல. அப்புறம் தான் அவிக்குக் கூப்பிட்டேன்” என்றாள்.

“அவன், ஹாஸ்பிட்டல்ல பிஸியா இருப்பான்” என்றான் அவினாஷ்.

பதட்டத்துடன் சோபாவின் விளிம்பிற்கு வந்தவள், “என்னாச்சு?” என்றாள்.

“அவனுக்குக் குழந்தை பிறந்திருக்கில்ல” என்றவன் தனது வார்த்தைப் பிரயோகத்தின் அர்த்தத்தை உணர்ந்து அவசரமாக, “பவித்ராவுக்குக் குழந்தை பிறந்திருக்கே” என்றான்.

மகளுக்கு யோசிக்க அவகாசம் தராமல், “ஆமாம்மா! காலைலயே போன் வந்தது. எழுந்துட்டதால, அப்படியே காலார நடந்து கோவிலுக்குப் போனேன். தெரிஞ்சவங்க கூடப் பேசிட்டிருந்ததுல நேரம் போயிடுச்சி. அதான், உன்கிட்டச் சொல்ல முடியல” என்றார் உள்ளுக்குள் பதட்டத்துடன்.

“ஓஹ்! என்ன குழந்தை? எந்த ஹாஸ்பிட்டல்? நார்மல் டெலிவரியா? நாம போய்ப் பார்க்கலாம்ப்பா. நான் அத்தைக்குப் போன் செய்துட்டு வந்திடுறேன்” என்று தனது அறைக்கு ஓடினாள்.

அவளது உற்சாகத்தைக் கண்ட மூவருக்கும், ஆற்றாமையாக இருந்தது.

“அங்கிள்! அவளோட, ஓவர் எக்ஸைட்மெண்ட்டைப் பார்க்கும் போது, எனக்குப் பயமா இருக்கு. எவ்வளவு சீக்கிரம் பக்குவமா சொல்லிட முடியுமோ. சொல்லிடுங்க” என்றான் அவினாஷ்.

“ம்ம்” என்ற விஸ்வநாதனும் அதே நினைப்பில் தான் இருந்தார்.