ரௌத்திரம் பழகு - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நிலா சுப்ரமணியம் அவர்கள் "ரௌத்திரம் பழகு" - என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்...........
 
#2
ரௌத்திரம் ப(அ)ழகு

அத்தியாயம்-1

பகலவனை கண்ட வெட்கத்தில் வான மகள் செம்மை பூசிக் கொள்ள ஆரம்பித்த அதிகாலை பொழுது..
புள்ளினங்கள் இரை தேடி, தன் இனிமையான குரலால் ஒலி எழுப்பிக் கொண்டு பறந்து சென்றது..

நடுத்தர மக்கள் வாழும் பகுதி அது..அங்கு உள்ள ஒரு வீட்டில், சுப்ரபாதம் கேட்டுக் கொண்டிருந்தது..

அப்பொழுது தான் தூங்கி எழுந்து,காலை கடன்களை முடித்து விட்டு வந்து, கூடத்தில் அமர்ந்திருந்தான் அருள்மொழி..

அவன் அன்னை ராதா, சமையல் அறையில் அவனுக்கு காபி தயாரித்துக் கொண்டிருந்தார்..

வாசலில் அழைப்பு மணி இசைத்தது..

அதில் கவனம் கலைந்த ராதா,
"தம்பி, யாருன்னு பாரு பா.."
உள்ளிருந்து குரல் கொடுத்தார்..

மெதுவாக எழுந்து, அருகில் இருக்கும் ஊன்று கோலை எடுத்து ஊன்றிக் கொண்டு, வாசலுக்கு சென்றான் அருள்..

வாசல் கதவை திறந்தான்..
அங்கு, அன்று அலர்ந்த பன்னிர் ரோஜா மலர் போன்ற புன்னகையுடன் நின்றாள் யுவதி ஒருத்தி..

"ஹாய், நான் பாரதி..உங்க வீட்டு மாடி போர்சனுக்கு வாடகைக்கு வந்துருக்கோம்..இன்னிக்கு பால் காய்சுனோம்..அதான் பால் கொண்டு வந்தேன்.."

அதன் பின் தான் கவனித்தான்,அவள் கையில் இருந்த தட்டில், பால் கோப்பைகள் இருந்தது..

ஒரு வாரம் முன்பு, மாடி போர்சனுக்கு யாரோ குடி வர போவதாய், அன்னை கூறியதும் ஞாபகம் வந்தது...

"என்னங்க, உள்ள எல்லாம் கூப்பிட மாட்டீங்களா..??"

அவள் கேட்டதும்,தன் உணர்வுக்கு வந்த அருள்,
"வாங்க.."
என்று கூறிவிட்டு, உள்ளே சென்றான்..

அவளும் அவனை பின் தொடர்ந்தாள்..
"யாருப்பா தம்பி..??"
கேட்டுக் கொண்டே வெளியே வந்தார் ராதா..

"ஹாய் ஆன்டி,என் பேர் பாரதி..மாடி போர்சனுக்கு குடி வந்துருக்கோம்..அப்பா மும்பைல வேலை பார்க்குறாங்க..அம்மா இல்லத்தரசி..நான் அவங்க இளவரசி..நிறைய பேரை போல,சிட்டிக்கு உள்ள இருக்குற ஒரு மென்பொருள் நிறுவனத்துல, வேலை பார்க்குறேன்..அவ்ளோ தான் என் கதை சுருக்கம்.."

கலகலவென பேசிய
அந்த பெண்ணை, ராதாவுக்கு பிடித்துப் போனது..

"உட்காரு மா.."

"அப்பாடி நல்லவேளை உட்கார சொன்னிங்க..எங்க உங்க பிள்ளை, உள்ள கூப்பிட யோசிச்ச மாதிரி,உட்கார சொல்ல மாட்டீங்களோன்னு பயந்துட்டேன்.."

வேகமாய் அமர போனவள்,
"இந்தாங்க ஆன்டி, பால் எடுத்துகோங்க.."

அவர் எடுத்து கொண்டதும், இவன் பக்கமும் நீட்டி விட்டு,
"கோச்சுகாதிங்க பாஸ்.. நமக்கு கொஞ்சம் வாய் ஓவர்.."

ஒரு கண்ணை மூடி, ஒரு பக்கமாய் தலை சாய்த்து புன்னகைத்தாள்..

அதை ரசனையோடு ஒரு நொடி பார்த்தவன், சுதாரித்துக் கொண்டு பாலை எடுத்துக் கொண்டான்..

பிறகு இருக்கையில் அமர்ந்தவள்,
"ஒரே கால் வலி ஆன்டி..வீடு மாத்துறதுக்குள்ள..இன்னும் எதுவும் ஒழுங்கு செய்யல, அப்படி அப்படியே இருக்கு..கிச்சேன் பொருள் மட்டும் ஓரளவுக்கு அடுக்கி, பால் காய்சிட்டோம்..
இனி போய் அடுக்குறதை நினைச்சா, தலையே சுத்துது.."

"ஏன்மா,ஆள் இருக்காங்களே இதுக்கு எல்லாம்..அவங்களே இது எல்லாம் செஞ்சு தருவாங்களே.."

"அதுல நெறைய கலை பொருட்கள் இருக்கு.. எல்லோருக்கும் அதோட மதிப்பு தெரியாது..சிலருக்கு தான் சிலரோட,சிலதோட மதிப்பு தெரியும்..அவங்க கையில சேர்ந்தா தான் அதுக்கு மரியாதை..

மத்தவங்க கையில போய் உடைஞ்சு போனா, ரொம்ப வலிக்கும், அதோட மதிப்பு தெரிஞ்சவங்களுக்கு..என்ன ஆன்டி, நான் சொல்லுறது சரி தானே.??.அதான், நானே சரி செஞ்சு தரேன் வீட்டைன்னு என் அம்மா கிட்ட வீர வசனம் பேசிட்டு, இப்போ முழிக்குறேன்.."

"சின்ன பொண்ணா இருக்குற..ஆனா பக்குவமா பேசுற.."

"இதெல்லாம் என் அம்மா காதுல விழுகுற மாதிரி சொல்லுங்க ஆன்டி..நம்பவே மாட்டேங்குறாங்க.."

முகத்தை சோகமாய் வைத்து கொண்டு கூறியவளை பார்த்து,கலகலவென நகைத்தார் ராதா..

அதை வாஞ்சையாக பார்த்திருந்தான் அருள்..பல நாட்களுக்கு பிறகு, அவன் தாய் மனம் விட்டு சிரிக்கிறார்..

"சரி ஆன்டி கிளம்புறேன்..அம்மா தேடுவாங்க.."

"கால் வலின்னு சொன்னியே, கஷாயம் செஞ்சு தரவா..??"

"ஏன் ஆன்டி,ஏன்??என்னை பார்த்தா பாவமா இல்லியா??வாய் பேசுவேன் தான், பட் பேசிக்கல்லி நல்ல பொண்ணு ஆன்டி..என் அம்மா கஷாயம் வைக்குற விஷயம் தெரிஞ்சாலே, வீட்டு பக்கம் வராம கிளம்பிடுவேன்..இதுல முதல் முதலா பார்க்குறோம்..இந்த பச்சை பிள்ளையை துரத்த பிளான் போடுறீங்க,இது நியாயமா??."

"நல்ல பொண்ணுமா நீ.."
புன்னகையுடன் தலை அசைத்து சிரித்தார்..

"உங்களுக்காவது தெரியுதே..சரி ஆன்டி, அப்புறம் மெதுவா வரேன் பேசுவோம்.."

அவள் சென்றவுடன், வீட்டில் அசாத்திய அமைதி சூழ்ந்த உணர்வு அருள் மொழிக்கு..

"அருமையான பொண்ணு,கலகலன்னு பேசுது..இதுக்கு தான், வீட்டுல ஒரு பொம்பளை பிள்ளை வேணுங்குறது.."
கூறிக்கொண்டே உள்ளே சென்றார் ராதா..

புன்னகையுடன் அமர்ந்தான் அருள்..அவள் வந்ததிலிருந்து வித்தியாசமாய் ஒரு பார்வை கூட பார்க்க வில்லை அவனை.

அவன் ஊன்றுகோலையும்,கால்களையும் முதன் முதலில் பார்ப்பவர்கள் அனைவரும்,ஒன்று பரிதாபத்தோடு அல்லது என்ன ஆனது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு,விஷயம் அறிந்தவர்கள் சிலர் பாவப்பட்டு, சிலர் இது தேவையா என்னும் கேள்வியோடு,தேவை தான் இவனுக்கு என்னும் ஏளனதோடு, இப்படி பலதர பட்ட பார்வைகளை சந்தித்தவனுக்கு,இவள் பார்வையில் துளி கூட வித்தியாசம் தெரியவில்லை..

சக மனிதனோடு பேசும் பாவம் மட்டுமே..
அவன் கால்களுக்கு அவள் பார்வை செல்லவே இல்லை..

அவன் மனதில் இதமான தென்றல் வருடிய உணர்வு..
அதன் பின் ராதா தந்த காபியை அருந்தி விட்டு,வேலைக்கு செல்ல ஆயத்தமாக அறைக்குள் சென்றான்..

அவன் வீட்டிற்கு அருகில் இருக்கும் லாரி அலுவலகத்தில் கணக்கர் பிரிவில் வேலை பார்க்கிறான்..

அவனுக்கு சொந்தமாக டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்று ஆசை..பட்ட படிப்பு முடித்த பிறகு,அதற்கு முயன்று கொண்டிருந்தான்..

வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்து கொண்டே, சும்மா இருக்காமல் இந்த அலுவலகத்தில் கணக்கர் பிரிவில் வேலை செய்தான்..

வங்கியில் பல மேலாளர் மாறினார்கள்,பல காரணங்கள் கூறி ஒவ்வொருவரும் நிராகரித்து, கடைசியில் தர முடிவு செய்த பொழுது,அவன் கால்கள் செயல் இழந்தது..பிறகு கனவை மூட்டை கட்டி பரணில் போட்டு விட்டு, தொடர்ந்து இந்த வேலைக்கே செல்கிறான்..

ஒரு பெரு மூச்சோடு வேலைக்கு கிளம்பி,அறையில் இருந்து வெளியே வந்தான்..

காலை உணவை உண்டு விட்டு,மெதுவாய் நடந்து வேலைக்கு சென்றான்..

அவர்கள் இருப்பது வாடகை வீடு தான், கீழே இவர்கள் இருப்பது ஒரு போர்சன்..மாடியில் ஒன்று.வீட்டு உரிமையாளர் வேறு இடத்தில் இருக்கிறார்..

வாடகை வாங்க மட்டும் இங்கு வருவார்..இவன் சிறு வயதாக இருக்கும் போதிலிருந்து, இங்கு தான் இருக்கிறார்கள்..இவன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது,திடீரென உடல் நிலை சரி இல்லாமல் இருந்த இவன் தந்தை, இவ்வுலகை விட்டு சென்றார்..

பிறகு சொந்த ஊரில் இவர்களுக்கு இருக்கும் கொஞ்ச விவசாய நில குத்தகை பணம்,இவன் அன்னையின் தையல் பணம்,இதை வைத்து குடும்பம் நடந்தது..அதனாலேயே அதிகம் செலவு செய்ய முடியாமல்,அரசு கலை கல்லூரியில் சேர்ந்து,நன்றாக படித்து, ஊக்க தொகை பெற்றான்.. அந்த தொகையில் படிப்பு செலவுகள் செய்து, ஒரு பட்டம் பெற்றான்..அத்தோடு படிப்பை முடித்துக் கொண்டு தொழில் வைக்க விரும்பி, முயற்சி எடுத்தான் அருள்..

பழைய நினைவுகளோடு வேலை இடத்தை அடைந்தான்..பிறகு வேலை அவனை இழுத்துக் கொள்ள அதில் மூழ்கிப் போனான்..
 
#3
ரௌத்திரம் ப(அ)ழகு-2அத்தியாயம்-2

ஒரு மாதம் கடந்திருந்தது..வேலைக்கு செல்லும் நேரம் தவிர மீதி நேரம் எல்லாம், அருள் வீட்டில் தான் இருந்தாள் பாரதி..

அவளது கலகல சுபாவத்தால் கவரப்பட்ட ராதாவுக்கு, அவள் வரவில்லை என்றால் ஏதோ இழந்த உணர்வு தோன்றியது..

அவள் தந்தை இடையில் ஒரு முறை வந்து விட்டு சென்றார்..வீடு மாற்றும் போது கூட, இவளும் இவள் அன்னை உமாவும் தான், எல்லாம் செய்தார்கள்..

அவருக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாத படி வேலை என்று கூறியிருந்தாள் பாரதி..

அன்று அவளும் ராதாவும் பேசிக் கொண்டிருக்கும் போது,ரவியும் சேகரும் வந்தார்கள்..இருவரும் அருளின் நண்பர்கள்..

"வாங்க பா,வாங்க..எப்படி இருக்கீங்க??"

"நல்லா இருக்கோம் மா..அருள் எங்க??"

"இதோ உள்ள தான் இருக்கான், கூப்பிடுறேன்.."
அவர் அழைப்பில் வெளியே வந்தான் அருள்..

"வாங்க டா.. உட்காருங்க.."

"இந்தா டா, ஸ்வீட் எடுத்துக்கோ.."

"என்ன விஷயம் டா..??"

"நாங்க ரொம்ப நாளா முயற்சி பண்ணிக்கிட்டு இருந்த வெளிநாட்டு வேலை கிடைச்சுருச்சு டா.. அதுவும் நாங்க விரும்புன மாதிரி, ஒரே இடம் ஒரே கம்பெனி.."

முகத்தில் மகிழ்ச்சி மின்ன,
"வாழ்த்துக்கள் டா.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..ஆமா, அந்த ஏஜென்ட் இழுத்தடிச்சுட்டே இருக்குறான்.. ஒவ்வொரு பாட்ச் அனுப்பும் போதும் காரணம் சொல்லுறான். அப்படி இப்படின்னு சொன்னிங்க..இப்போ மட்டும் எப்படி, ஒரே இடத்துல வாங்கிக் கொடுத்தான்..??"

"அதான் டா எங்களுக்கும் ஆச்சார்யம்.. நாங்க சொன்ன ஒரே கண்டிஷன், ஒரே இடமா வேலை வேணுமுன்னு சொன்னது தான்.. பணமும் பிரச்சனையா இருந்தது..வேலைக்கு பணம் புரட்டி கொடுக்க முடியும்..அவருக்கு கமிசனும் கொடுக்கணும்..

அவர் எங்களுக்கு தெரிஞ்சவர்..நம்பிக்கையானவர்..
ஏமாத்த மாட்டார்..ஆனாலும், அவர் கமிசனை குறைச்சுக்க சொல்லி கேட்டுட்டு இருத்தோம்..அதுனால தான் இழுத்தடிகிறாரோனு நினைச்சோம்..

ஒரு வாரம் முன்ன அவரே போன் பண்ணி,எல்லா டாக்குமெண்ட்டும் கொண்டு வாங்க..அப்படின்னு சொன்னார்..சரின்னு போய் பார்த்தோம்..இன்னும் ஒரு மாசத்துல ஒரு பாட்ச் போகுது, அதுல நீங்க போலாம்..ஒரே கம்பனி ஒரே ப்ரான்ச்.. நீங்க கேட்ட படி.. அந்த கம்பெனியே உங்க பயண செலவுல பாதி கொடுத்துடும்.. என் கமிஷனும் கொடுத்துடும்..அதுனால நீங்க எதுவும் தர வேண்டாம்னு சொன்னார் டா..
எங்களுக்கே ஆச்சர்யம்.."

கண்ணில் மகிழ்ச்சி மின்ன, மாறி மாறி விஷயத்தை கூறினார்கள் இருவரும்..

"கேட்கவே சந்தோசமா இருக்குடா. இவ்ளோ நாள் பட்ட கஷ்டத்துக்கு, நல்ல காலம் பிறந்துடுச்சுன்னு நினைச்சுக்கோங்க.."

"நிச்சயம் டா.."
ராதா சமையல் அறைக்குள் சென்று, சர்க்கரை எடுத்து வந்து, இருவர் வாயிலும் போட்டு விட்டார்..

"இனிமேயாச்சும் உங்க கஷ்டம் தீரட்டும் டா.. உங்க அக்கா தங்கச்சி கல்யாணம் எல்லாம், நல்ல படியா நடக்கட்டும்.."

"உங்க ஆசிர்வாதம் மா.."
அவர் காலில் விழுந்து வணங்கி விட்டு, இருவரும் கிளம்பினார்கள்..

சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று வற்புறுதியும், ஊருக்கு போகும் முன் வருவதாய் கூறிவிட்டு சென்றனர்..

அவர்கள் சென்றதும், கலங்கிய கண்ணை சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டே திரும்பியவர் கண்ணில், பாரதி பட்டாள்..

இவர்கள் சம்பாஷனையை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

அவளை பார்த்து புன்னகைத்தவர்,
"அருளு, ரவி,சேகர்,பரணி,செல்வம் எல்லாரும் சின்ன பிள்ளையில இருந்தே ஒன்னா தான் சுத்துவானுங்க..

எல்லோருக்கும் ஒன்னு ரெண்டு வயசு வித்தியாசம் இருக்கும்..அருளு தான் இவனுங்க எல்லோருக்கும் பெரியவன்..இவனுங்க ரெண்டு வருஷம் சின்னவங்க..செல்வம் ஒரு வயசு சின்னவன்..எல்லோர விடவும் சின்னவன் பரணி..

ஒரே ஏரியா, அதுனால வாடா போடான்னு தான் பேசிக்குவாங்க..
ஒன்னு மண்ணா திரிஞ்ச பிள்ளைங்க.."

எதையோ நினைத்து பெரு மூச்சு விட்டவர்..நிமிர்ந்து அருளின் முகம் பார்த்தார்..

அது இறுக்கி போய் இருந்தது..
'பழசை நியபாக படுத்தி விட்டேனே. இனி ஒரு வாரத்துக்கு இப்படி தான் இருப்பான்..'
மனதில் நினைத்தவர்..

"அருளு சாப்பிட வரியா..??"

"இல்ல மா வேண்டாம்.."
கூறிவிட்டு அறைக்குள் சென்றான்..

முகம் சுருங்க நிமிர்ந்தார்..
"என்னாச்சு ஆன்டி..??"

"அவன் தோழன் பரணி இப்போ உயிரோட இல்ல..நான் ஒரு கூறுகெட்டவ..அதை ஞாபக படுத்திட்டேன்..இனி இவன் சரி ஆக ஒரு வாரம் ஆகும்.."
கண் கலங்க சொன்னார்..

"இப்போ அவர் சாப்பிடணும் அதானே..நீங்க சாப்பாடு எடுத்து வைங்க..நான் கூட்டிட்டு வரேன்.."

"வேண்டாம் கண்ணு..அவன் கோவக்காரன்..திட்டிப்புடுவான்.."

"அதையும் பார்ப்போம்.."
புன்னகையுடன் அவன் அறைக்கு முன் சென்று கதவை தட்டினாள்..திறந்து தான் இருந்தது..அறைக்குள் செல்லவில்லை..

வெளியே நின்று கொண்டே,
"பாஸ்,வாங்க சாப்பிடலாம்..பசிக்கிது.."

அவளை திரும்பிப் பார்த்தவன்..
"நீ போய் சாப்பிடு..எனக்கு பசிக்கல.."

அவளை வாங்க போங்க என அழைத்தவனை,இவள் தான், நான் சிறு பெண் தான் உங்களை விட. கிழவி இல்லை.. நீ, வா என கூப்பிடுங்கள், என்று கூறி இருந்தாள்..

"என்ன பாஸ்..எங்க அம்மா ப்ரதோஷம்னு கோவிலுக்கு போய்ட்டாங்க..உங்க வீட்டுல சாப்பிடலாம்னு, எனக்கு பிடிச்சதெல்லாம் செய்ய சொல்லி, ஆன்டி செஞ்சு வச்சுருக்காங்க..

உங்களை பார்க்க வச்சுக்கிட்டு சாப்பிட்டா, வயிறு வலிக்கும் எனக்கு..வாங்க, சும்மா ரெண்டு வாய் டேஸ்ட் மட்டும் பாருங்க..நீங்க அதிகம் சாப்பிட வேண்டாம்..அப்புறம் என் பங்கு குறைஞ்சுடும்.."
தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்..

அவளை முறைத்தவன்..
"சொன்னா புரிஞ்சுக்கோ..போ.."

"சரி நான் போறேன்..சாப்பிட இல்ல..என் வீட்டுக்கு..இன்னிக்கு நான் சாப்பிடலை..பட்டினி..அதுக்கு காரணம் நீங்க தான்..இந்த பாவம் உங்களை சும்மா விடாது..எமனுக்கு ஒரு நாள் சைடு டிஷ் நீங்க தான்..உங்களை எண்ணெய் சட்டில போட்டு, உப்பு மிளகாய் தடவி வறுப்பார்..பார்த்துக்கோங்க..நான் கிளம்புறேன்.."

காலை உதைத்து கொண்டு அங்கிருந்து சென்றாள்.. சிறு பிள்ளை போல..அவள் செய்கையில், பேச்சில் சிரிப்பு தோன்றினாலும், அசையாமல் அமர்ந்திருந்தான்..

"ஆன்டி நான் கிளம்புறேன்.."

"ஏன்மா?? சாப்பிட்டு போறேன்னு சொன்னியே.இன்னும் சாப்பிடலியே..."

"இல்ல வேண்டாம்.."

"ஏன் வேண்டாம்..??"

"எல்லாம் உங்க மகனால. அவர் கிட்டேயே கேளுங்க..நான் கிளம்புறேன்.."

அதற்கு மேல் கேள்வி கேட்க வந்த ராதாவை, ஜாடை காட்டி பேச வேண்டாம் என்று கூறினாள்..
இரண்டு நிமிடம் அமைதியில் கழிந்தது..

எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவே, தன் ஊன்று கோலின் உதவியுடன், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாய் வந்தான் அருள்..இவர்கள் இருவரும் கூடத்தில் நிற்பதை பார்த்ததும், நிம்மதி பெரு மூச்சு விட்டான்..

வந்த புன்னகையை அடக்கி,
"சாப்பிட வரிங்க தானே..??"

அவளை முறைத்தவனை பார்த்து,
"ஆன்டி நான் நிஜமாவே கிளம்புறேன்.."

அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல்,
"வந்து தொலை.."

"இது,இப்படி பயந்து மரியாதையா நடக்கனும்.."
கெத்தாய் கூறிக் கொண்டே, அவன் பின்னால் சாப்பிட சென்றாள்..

மென் நகையுடன் ராதாவும், அவர்களை தொடர்ந்தார்..
நாட்கள் அதன் போக்கில் விரைய,அன்று பாரதி வேலை முடிந்து வரும் நேரத்துக்கு வரவில்லை..

உமா பதறினாரோ இல்லையோ,ராதா மகனிடம் புலம்பித் தள்ளி கொண்டிருந்தார்..

அப்பொழுது அருளின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது,பாரதியின் எண்ணில் இருந்து.
வேகமாய் இயக்கி பேசினான்..
"பாரதி.."

"மொழி,கொஞ்சம் கிளம்பி வர முடியுமா??"

"என்ன ஆச்சு??எங்க இருக்க??"

"தோழிகள் கூட ஒரு கெட் டு கெதர்க்கு வெளிய வந்தோம்..கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சு..அவங்க எல்லாம் வேற ஏரியா..அதுனால, நான் மட்டும் பஸ்ல திரும்ப வர வழில, பஸ் பிரேக் டௌன்.. கொஞ்சம் அவுட்டர் ஏரியாவா இருக்கு..சீக்கிரம் வாங்களேன்..ப்ளீஸ்.."

குரலில் சற்று பதற்றம் தெரிந்தது..

"கொஞ்ச நேரத்துல வரேன் இரு.."

அவள் இருக்கும் இடம் கேட்டுக் கொண்டு, ஆட்டோவில் விரைந்தான்..
பேருந்தின் அருகே சிலர் நின்றிருந்தனர்..அனைவரும் ஆண்கள்.இவள் அருகே ஒரு வயதான பெண்மணி மட்டும் நின்றிருந்தார்..

இவனை கண்டதும், வேகமாய் சென்று கைகளை பிடித்துக் கொண்டாள்.. கண்கள் லேசாய் கலங்கி இருந்தது..

"ஒன்னும் இல்ல பாரு..பயப்படாதே.."
அவளுக்கு ஆறுதல் கூறினான்..

"ரொம்ப பயந்து போச்சு..பார்த்து கூட்டிட்டு போ பா சம்சாரத்தை.."

அந்த பெண்மணி கூறிவிட்டு, அருகில் இருக்கும் கல்லில் அமர சென்றார்..
இவ்வளவு நேரம் இவள் பயம் உணர்ந்து, அருகில் நின்றிருக்கிறார் என்று புரிந்தது..

அவருக்கு நன்றி உரைத்து விட்டு,
அவளை ஆட்டோவில் அமர வைத்து, இவனும் அருகில் அமர்ந்து கொண்டான்..

"என்ன பாரு இது??நான் உன்னை எவ்ளோ தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன்..இவ்ளோ பயப்படுற.."

"தைரியம்னா என்ன??பயப்படாம நடிக்குறது.. அதான் இவ்ளோ நாள் செஞ்சுருக்கேனு, இப்போ புரியுது..நானும் என்னை தைரியமான பொண்ணுன்னு தான் நினைச்சேன்..இன்னிக்கு மாதிரி ஒரு சூழ்நிலையை சந்திக்காத வரை..அங்க ஒரு குடிகாரன் பார்வையை பார்த்ததும், என் தைரியம் எல்லாம் பறந்து போச்சு..கை பையை இறுக்கி பிடிச்சுகிட்டேன்..உள்ள எல்லா தற்காப்பு விஷயமும் இருக்கு..இருந்தாலும் பயம் போகல.."

இன்னும் அவளுக்கு நடுக்கம் போகவில்லை..அவள் முகத்தை பார்த்து அறிந்தவன்,அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டான்..

அவன் தோளில் சாய்ந்தவள், அப்படியே கண் அயர்ந்தாள்..பாதுகாப்பான இடத்தை அடைந்த உணர்வில்..

வீட்டை அடைந்ததும்,உமா அவளை கடிந்து கொண்டார்..அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றார்..


 
#4
ரௌத்திரம் ப(அ)ழகு-3அத்தியாயம்-3

சில மாதங்கள் கடந்திருந்தது..அன்று உமா,ராதா மற்றும் பாரதி மூவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்..அப்பொழுது உள்ளே நுழைந்த அருளின் முகம் சோர்வாய் இருந்தது..

"என்ன தம்பி,உடம்பு சரி இல்லியா??"

"இல்ல மா..நம்ம பரணிக்கு இன்னும் ரெண்டு நாளுல சாமி கும்பிடுறாங்களாம்.. வழில அவன் அப்பாவை பார்த்தேன்..வர சொன்னார், எல்லாரையும் கூட்டிகிட்டு.."

"ஓ..போலாம் பா"

இரண்டு நாட்கள் கழித்து,பாரதியும் அவர்களோடு சென்றாள்..

அங்கு அந்த பையனின் புகைப்படத்துக்கு மாலை போட்டு, படையல் போட்டிருந்தார்கள்..

இறுக்கமான முகத்தோடு அங்கு நின்றான் அருள்..அவன் காலையிலேயே கிளம்பி வந்திருந்தான்..இப்பொழுது, ராதாவும் இவளும் வந்தார்கள்..

பரணியின் அம்மா,அழுது புலம்பிக் கொண்டிருந்தார்..
"சாக வேண்டிய வயசா எம் புள்ளைக்கு..படுபாவிங்க..அநியாயமா கொன்னுட்டாங்களே.."

இன்னும் அவன் பிறந்தது,வளர்ந்தது முதல், அனைத்தையும் கூறிக்கொண்டிருந்தார்..

திடீரென ஒரு கேவல் ஒலி பாரதியிடம் இருந்து,அனைவர் பார்வையும் அவள் புறம் திரும்பியது..
அழுகையை அடக்க முடியாமல், இருகரம் கொண்டு தன் வாயை மூடிக் கொண்டு, அங்கிருந்து வேகமாய் சென்றாள்..

"பாவம் பிள்ளைக்கு இளகின மனசு போல.."
அங்கிருந்த ஒருவர் கூறினார்..

"ஆமாம் நல்ல பொண்ணு.."
ராதாவும் கூறினார்..

சாமி கும்பிட்டு முடித்த பிறகு,அருளும் ராதாவும் கிளம்பினார்கள்..

"பாரதியை கூட்டிட்டு வரியா அருளு..பாவம் பிள்ளை, சாப்பிட்டுச்சோ இல்லையோ.."

மாடியில் இருக்கும், அவர்கள் வீட்டிற்கு சென்றான் அருள்..வீட்டின் கூடத்தில், உமா மட்டும் அமர்ந்திருந்தார்..

"வாங்க தம்பி.."

"பாரதி இல்லியா??அம்மா பார்க்கணுமுன்னு சொன்னாங்க.."

"அவ அப்போவே மொட்டை மாடிக்கு போனவ..இன்னும் வரல தம்பி..நான் போய் கூப்பிட்டாலும் வர மாட்டேங்குறா.."
கவலையாய் கூறினார்..

"ஓ..நான் போய் பார்க்குறேன்.."

மொட்டை மாடிக்கு சென்றான்.. கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு,இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்..

அவள் அருகில் இவன் சென்றது கூட அறியாமல், அமர்ந்திருந்தாள்..
அவளை அழைத்து பார்த்து விட்டு, அவள் அருகில் அமர்ந்து,அவளின் தோள் தொட்டு அசைத்தான் அருள்..

அதில் உணர்வுக்கு வந்தவள்,அவன் முகம் பார்த்ததும், மீண்டும் தோன்றிய அழுகையுடன், அவள் தோள் சாய்ந்தாள்..

"என்ன பாரதி??ஏன் இவ்ளோ நேரமா அழுதுட்டு இருக்க??"

அவள் பதில் கூறவில்லை..அழுவதையும் விடவில்லை..

அவளே அழுது முடிக்கட்டும் என்று, அவள் முதுகை ஆதரவாய் தடவிய படி அமர்ந்திருந்தான்..
சற்று நேரத்தில் தெளிந்தவள்..

கண்களை துடைத்துக் கொண்டு,
"மொழி,நாம கல்யாணம் பண்ணிக்கலாமா??"
அவள் கேள்வியில் ஒரு நொடி திகைத்தவன்,

"என்ன கேட்ட??"

"உங்களுக்கு சரியா தான் கேட்டுச்சு.."

"விளையாடாத பாரதி.."

"உங்க கூட விளையாடுற மூட்ல நான் இல்ல.."

"உனக்கு மனசு சரி இல்லைன்னு நெனைக்கிறேன்..சரி ஆனதும் கீழ வா.. அம்மா கூப்பிட்டாங்க.."

"நான் கேட்டதுக்கு இது பதில் இல்ல.."

"என்ன திடீருன்னு??"

"திடீருன்னு எல்லாம் இல்லை.. ரொம்ப நாளா யோசிச்சது..இப்போ தோணுச்சு கேட்டேன்.."

"சரி, இதை பத்தி அப்புறம் பேசலாம்..இப்போ கீழ வா.."

"இல்ல,எனக்கு இப்போவே முடிவு சொல்லுங்க.."

"என்ன பிடிவாதம் இது பாரதி..??"

"உங்க வீட்டுல, உங்களுக்கு பொண்ணு பார்கிறாங்க தானே..??அன்னைக்கு கூட ஆன்டி,ஒரு பொண்ணு போட்டோ வச்சுட்டு,என் கிட்ட காட்டுனாங்க..ஸ்கூல் படிப்பு ஏதோ சொன்னாங்க..

அப்புறம் ரெண்டு நாளு கழிச்சு, அந்த பொண்ணு வீட்டுல ஒத்துக்கலைன்னு சொல்லி வருத்தப்பட்டாங்க.."

அவளை கூர்ந்தவன்..
"அதுனால பரிதாபப்பட்டு கேட்குறியா??"

"இதுல பரிதாபப்பட என்ன இருக்கு??சொல்ல போனா, கோபம் தான் வந்துச்சு..என்னை விட்டுட்டு வேற இடத்துல பொண்ணு பார்க்குறதை கேள்விப்பட்டு.."

அவள் பதில் உடனே வந்தது..யோசிக்கவில்லை..திகைக்க வில்லை.. தெளிவாய், தீர்கமாய் வந்தது..

"சரி, ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற,இரக்கப்பட்டா??"

முகம் சுருக்கி அவனை பார்த்தவள்,
"உங்களுக்கு இரக்கப்படுற அளவு என்ன ஆச்சு..??இரக்க பட்டா உதவி பண்ணுவாங்க..யாராச்சும் கல்யாணம் பண்ணுவாங்களா??உங்க கேள்வி, உங்களுக்கே அபத்தமா இல்ல??"

"ச்சு.. பாரதி..புரிஞ்சு பேசுறியா இல்லியா??எனக்கு ஒரு காலு.."

"ஹ்ம்ம்..சொல்லுங்க..என்ன சொல்ல வந்திங்க..??"

"என் ஒரு காலு ஊனம்.."

"எப்போ இருந்து இப்படி யோசிக்க ஆரம்பிச்சிங்க.. உடம்புல ஊனம் இருக்கலாம்,மனசுல தான் இருக்க கூடாது..உங்க தன்னம்பிக்கைல ஊனம் இல்லைன்னு, இவ்ளோ நாள் நினைச்சேன்..அப்படி இல்ல போல.."

"பாரதி.."

"பின்ன என்ன??உங்களை எனக்கு தெரியாதா??இல்ல, இப்போ தான் முதல் முதலா பார்க்குறோமா??உங்களை பத்தி, இப்படி ஒரு விளக்கம் கொடுகுறிங்க..நான் உங்களை காதலிக்கிறேன்..உங்க மனசை..உண்மை காதல், ஒருத்தங்க எப்படி இருந்தாலும், அப்படியே ஏத்துக்கும், குறை நிறையோட..அவங்களை மாத்த நினைக்காது..ஆனா அன்புக்கு மாத்துற சக்தி உண்டு.."

ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு,
"எதுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு,உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண,விருப்பமா இல்லியா??"

"இல்ல பாரதி,இது சரி வராது.."

"ஏன் சரி வராது.. நான் ஒத்துக்குற மாதிரி, ஒரு காரணம் சொல்லுங்க.."

"உங்களை பார்த்தாலே,கொஞ்சம் வசதியானவங்க மாதிரி தெரியுது..உன் அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்க.."

"இதான் காரணமா??அப்போ அதை பத்தி கவலையை விடுங்க..அவங்கள சம்மதிக்க வைக்க வேண்டியது, என் பொறுப்பு.."

"நீ அவசர படுறியோனு தோணுது பாரதி.."

"பாரதி,எப்போவுமே முடிவு எடுக்கறதுக்கு முன்ன தான் யோசிப்பா.. திருவள்ளுவர் வாக்கை காப்பதுறவ..முடிவு எடுத்துட்டு யோசிக்க மாட்டா.. இப்போ உங்க முடிவு தான், தேவை எனக்கு.."

"இல்ல பாரதி,இது சரி வராது.. எனக்கு சம்மதமில்லை.."

"என்ன காரணம்??"

"அது..ஏனோ தோணுது.சரியாய் வராதுன்னு..."

" ஏன்??என்னை பிடிக்கலையா??"

பதில் சொல்லவில்லை அவன்..
"சொல்லுங்க.."

வேறு எங்கோ பார்த்துக் கொண்டு,
"ஆமா.."

"எங்க,என் கண்ணை பார்த்து சொல்லுங்க..நீங்க சொன்ன அதே வார்த்தையை.."
அவன் முகத்தை, இவள் புறம் திருப்பி கேட்டாள்..

அவள் கண்களை சந்தித்தவன்,அவள் கைகளை விலக்கி விட்டு,

"நான் கீழ போறேன்..நீயும் வா..
ரொம்ப நேரம் ஆச்சு..இங்க வந்து.."

"எனக்கு பதில் சொல்லிட்டு போங்க.."

"சொன்ன பதில் தான் பாரதி.."

மெதுவாய் எழுந்து,மாடி படி நோக்கி சென்றான்..

"நீங்களா வந்து சம்மதம் சொல்லுற வரைக்கும்,உங்க வீட்டுக்கு வர மாட்டேன்..உங்க கிட்ட பேசமாட்டேன்..நியாபகம் வச்சுக்கோங்க.."

அவளை திரும்பி பார்த்தான்..அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்..

ஒரு பெரு மூச்சுடன் கீழே சென்றான்..பாரதியை பற்றி கேட்ட அவன் அன்னையிடம்,ஏதோ சொல்லி சமாளித்தான்..

ஒரு வாரம் கடந்தது..
பாரதி சொன்னபடி, இவனுடன் பேசுவதில்லை..இவன் வீட்டுக்கும் வருவதில்லை..

அன்று அவள் வர தாமதம் ஆனதும், அவள் அலைபேசிக்கு தொடர்பு கொண்டான்..முழு ரிங் போய் ஓய்ந்தது..எடுக்கவில்லை..கொஞ்ச நேரத்தில் வீடு வந்து சேர்ந்தாள்..

கேள்வி கேட்ட இவனிடம், பதில் கூறவில்லை..
ஆத்திரம் தலைக்கேற முறைத்தான்.. எதுவும் நடக்காதது போல,மாடிக்கு சென்றுவிட்டாள்..

அன்று அவள் இறங்கி வரும் போது எதிர்ப்பட்ட ராதா,
"ஏன் பாரதி,வீட்டு பக்கமே வரல..நானும் கேட்கணுமுன்னு நினைப்பேன்..உன்னை பார்க்கவே முடிய மாட்டேங்குது...நீ இல்லாம, வீடே ஒரு மாதிரி இருக்கு..வா கண்ணு வீட்டுக்கு.."

"நான் அங்க வாரத்துக்கு தயார் தான் ஆன்டி..உங்க பையன் ஒத்துகிட்டா, நிரந்தரமாவே வரேன்..அவர் தான் பதில் சொல்ல மாட்டேங்குறார்..நான் வராதத்துக்கு காரணம் அவர் தான்.. அவரையே கேளுங்க.."

"என்ன சொல்லுற பாரதி..??"

"ஆமா ஆன்டி,உங்க பையனுக்கு என்னை பிடிக்கலையாம்.கல்யாணம் பண்ணிக்க மாட்டாராம்..
அப்புறம் ஏன், நான் உங்க வீட்டுக்கு வரணும்..??அவருக்கு பிடிச்ச பொண்ணையே, கல்யாணம் பண்ணி வைங்க.."

அவர் திகைத்து நிற்கையில்,இவள் மாடி ஏறிவிட்டாள்.. 
#5
ரௌத்திரம் ப(அ)ழகு-4

அத்தியாயம்-4

வீட்டிற்குள் வந்த ராதா, அருளின் அறைக்கு வந்தார்..

"அருளு,பாரதி என்ன என்னமோ சொல்லுது..அது உண்மையா??"

"என்ன சொன்னா??"

"அவ உன் கிட்ட, அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாளா??"

"ஆமா கேட்டா"

"நீ என்ன சொன்ன??"

"இதெல்லாம் சரி வராதுன்னு சொன்னேன்.."

"ஏன்டா அப்படி சொன்ன??நம்மளை விட வசதி கம்மி,ஸ்கூல் கூட தாண்டாத பிள்ளைங்க எல்லாம்,ஏதேதோ காரணம் சொல்லி வேண்டாம்னு சொன்னுஞ்சுங்க.. இந்த பிள்ளைக்கு என்ன டா குறைச்சல்??மூக்கும் முழியுமா, அழகா லட்சணமா இருக்கு..அதை ஏன்டா வேண்டாம்னு சொன்ன??"

"நீங்க சொன்னது தான் காரணம்..அவ அழகா இருக்கா, நல்லா படிச்சு வேலைக்கு போறா.. அவளுக்கு என்ன தலையெழுத்து, என்னை கல்யாணம் பண்ணிக்கணுமுன்னு.."

"டேய் அருள்..ஏன்டா இப்படி சொல்லுற..??உனக்கு என்னடா குறைச்சல்..??"

கசப்பான ஒரு புன்னகையை சிந்தியவன்,
"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு..அதான், என் குறை உங்களுக்கு தெரியல.."

"ஏன்டா இப்படி பேசுற..??பிறவியிலேயே உனக்கு ஊனமா என்ன??இப்போ இடையில வந்தது..அதுவும், டாக்டர் கிட்ட போய்ட்டு தானே இருக்கோம்..அவரும் சரி ஆகிடுமுன்னு தானே சொல்லுறார்..அப்புறம் என்ன??"

"என் காலு சரி ஆகனுமுன்னா, அதுக்கு லட்ச லட்சமா பணம் வேணும்..இல்லைன்னா, இதான் நிரந்தரம்..நம்ம கிட்ட அவ்ளோ பணம் இருக்கா??"

"என்ன அருளு??ஏதேதோ சொல்லுற.."

"விடுங்க மா..கொஞ்ச நாளுல அவ புரிஞ்சுக்குவா.."

"அவ இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டா..உனக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிட்டு..என்னை பார்த்து சொல்லு,அவளை உனக்கு பிடிக்கலையா??"

"அவளை மட்டும் தான் மா பிடிச்சிருக்கு.."

அவன் பதிலில் முகம் மலர்ந்தவர்..

"அப்புறம் என்ன அருளு..??"

"ஆனா சரி வராது மா.."

கூறிவிட்டு வெளியே சென்றான்..

மேலும் ஒரு வாரம் கடந்தது..பாரதியும் இவனோடு பேசவில்லை..இவனும் இறங்கி வரவில்லை..

"அருள், இந்த பொண்ணு போட்டோ பாரு பிடிச்சுருக்கானு..பிடிச்சுருந்தா, அடுத்த வாரம் பொண்ணு பார்க்க போலாம்.. இவங்க வீட்டுல ஒத்துகிட்டாங்க.."

சற்று திகைத்த அருள்,
"இப்போ எதுக்கு மா அவசரம்..அப்புறம் பேசலாம்.."

"என்ன அவசரமா??உனக்கு பொண்ணு பார்த்துகிட்டு தானே இருக்கோம்..இப்போ ஆரம்பிச்ச மாதிரி சொல்லுற..முதல்ல போட்டோவை பாரு.."

"வேண்டாம் மா..கொஞ்ச நாள் போகட்டும்.."

"ஏன் வேண்டாம்..??இப்போ எதுக்கு கொஞ்ச நாள் போகனும்.."

"…."

"சொல்லு டா.. உன்னால பாரதியை விட்டுட்டு, வேற பொண்ணை எப்போவும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..அதான் உண்மை..அதை ஒத்துக்கோ.."

ஒரு பெரு மூச்சுடன் அமைதியாய் இருந்தான்..

"ஏன்டா இப்படி, உன் வாழ்க்கையோட அந்த பிள்ளையோட வாழ்க்கையும் கேள்வி குறி ஆக்குற??"

"கேள்விக்குறி ஆகிட கூடாதுன்னு தான் மா யோசிக்கிறேன்.."

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது..உன்னை விட, அவளை யாரும் நல்லா பார்த்துக்க முடியாது..சரின்னு சொல்லு டா.."

நீண்ட யோசனைக்கு பிறகு,
"சரிங்க மா..ஆனா ஒரு கண்டிஷன்.."

"என்ன டா..??"

"கல்யாணம் சிம்பிளா, கோவில்ல தான் நடக்கனும்..அதுக்கு சரியான்னு கேட்டு சொல்லு.."

முகத்தில் மகிழ்ச்சி மின்ன,
"இப்போவே கேட்டுட்டு வரேன் டா"
மலர்ந்த முகத்தோடு மாடிக்கு சென்றார்..

"உமா..உமா.."

"சொல்லுங்க அண்ணி.."

"அது..பாரதி எதுவும் சொல்லுச்சா..??"

"எதை பத்தி அண்ணி??"

"அருளு..பாரதி.."
சற்று தயங்கி இழுத்தார்..

"ஆமா அண்ணி,சொன்னா.. கல்யாணம் பண்ணிக்க கேட்டதாகவும்..தம்பி ஒத்துக்கலைனும் சொன்னா.."

"அதான் உமா..இப்போ சரின்னு சொல்லிட்டான்.."

"அப்படியா அண்ணி..சந்தோஷம்.."
முகம் மலர கூறினார்..

"ஆனா, கல்யாணம் விமர்சையா வேண்டாம்..கோவில்ல எளிமையா வச்சுக்கலாம்னு சொல்லுறான்.."

"ஓ…நான் அவ அப்பா கிட்ட கேட்குறேன் அண்ணி..இப்போ, அவ கிட்டயும் பேசுறேன்.."

அலைபேசியில் பாரதியை அழைத்து விஷயத்தை கூறினார்..ராதாவிடமும் அலைபேசியை கொடுக்க சொல்லி பேசிய பாரதி,மாலை அவர்கள் வீட்டுக்கு சென்றாள்..

"ஆன்டி..நான் உங்க பிள்ளை கிட்ட பேசனும். அவர் எங்க??"

"அறைக்குள்ள தான் இருக்கான் பாரதி..கூப்பிடவா..??"

"நானே போய் பேசுறேன்.."
அறை கதவை தட்டி விட்டு, உள்ளே சென்றாள்..

"என்ன பாஸ், ஒரு வழியா ஓகே சொல்லிட்டீங்க போல.."

"அம்மா எல்லாம் சொன்னாங்களா??"

"ஹ்ம்ம்..சொன்னாங்க..கோவில்ல தான் கல்யாணம் வைக்கணும்.. அதானே..??"

"ஆமா.."

"சரி ஒத்துக்குறேன்..அதுக்கப்புறம் வரவேற்பு என் இஷ்டம், எங்க வச்சலும்
வரணும்..சரியா??"

ஒரு நிமிடம் யோசித்தவன்,
"சரி.."

"ஹப்பாடா..இதுக்காவது சரின்னு சொன்னிங்களே..அது சரி, கல்யாணத்துக்கு முழு மனசோட தானே ஒத்துகிட்டீங்க.."

அவளை நிமிர்ந்து முறைத்தான்..

"வாயை திறந்து ஆமாம்னு சொன்னா, குறைஞ்சா போய்டுவீங்க..க்கும்.."

நொடித்துக் கொண்டு சென்றாள்..

வெளியே வந்தவள்,
"ஆன்டி,இல்ல இல்ல இனி அத்தை.. அத்தை, கல்யாண ஏற்பாடு பண்ணுங்க..எந்த கோவில், என்ன விவரம் எல்லாம், அம்மா கிட்ட பேசிக்கோங்க.."

"பாரதி,உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லியே மா.."

"எனக்கு உங்க பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கணும்.. எங்க,எப்படி பண்ணிக்கிட்டா என்ன??அவரை தானே பண்ணிக்க போறேன்.."
புன்னகையோடு கூறினாள்..

"உங்க அம்மா,அப்பா…"

"அவங்க ஒத்துக்குவாங்க அத்தை.. நான் சொன்னா எதையும் ஒத்துக்குவாங்க..நான் தப்பு பண்ண மாட்டேன்னு தெரியும் அவங்களுக்கு.."

மனம் தெளிந்து தலையசைத்தார் ராதா..

அதன் பின் பாரதி என்ன சொன்னாளோ, அவளின் அம்மா உமாவும்,அப்பா ஜெகன்நாதனும், திருமணம் கோவிலில் நடக்க சம்மதம் தெரிவித்தார்கள்..

அவள் தந்தை, அலைபேசி வழியாகவே ராதாவுடன் பேசி,அனைத்தையும் கவனித்தார்…

திருமணத்திற்கு முதல் நாள் வருவதாய் கூறினார்..
திருமண ஏற்பாடுகள் விரைவாய் நடைபெற்றது..

நாள் குறித்து,துணிகள்,நகைகள் வாங்கி மற்ற ஏற்பாடுகள் செய்து,திருமண நாளும் இனிதே விடிந்தது..

அருகில் இருக்கும் முருகன் கோவிலில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
முக்கிய சொந்தங்கள் மட்டும் அழைக்கப் பட்டிருந்தார்கள்..

மிகவும் எளிமையாக அவர்கள் திருமணம் நடந்தது..

மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க, அருளின் கையால் மங்கள நாணை ஏற்றுக் கொண்டாள் பாரதி..
 
#6
ரௌத்திரம் ப(அ)ழகு-5

அத்தியாயம்-5

திருமணம் முடித்து,அருகில் உள்ள உணவு விடுதியில் உணவு முடித்து,வீட்டிற்கு வந்தனர்..

ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்தனர்..

பூஜை அறையில் விளக்கேற்றினாள் பாரதி.,மணமக்கள் இருவருக்கும் பால் பழம் கொடுத்து, கூடத்தில் அமரவைத்தார்கள்..

மாலையில் வரவேற்பு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது..எங்கு வரவேற்பு என்று, எதுவும் சொல்லவில்லை பாரதி..அருளும் கேட்டுக் கொள்ளவில்லை..

சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மாலை வரவேற்புக்கு தயார் ஆனார்கள்..

ராயல் ப்ளூ கோட் சூட்டில் தயார் ஆனான் அருள்..
முதல் நாள் தான் பாரதி,அதை அவனிடம் தந்திருந்தாள்..

இதெல்லாம் எதற்கு என்று மறுத்தவனிடம்,
"வரவேற்பு என் இஷ்டமுன்னு சொல்லி இருக்கேன்.அதுக்கு ஒத்துகிட்டு இருக்கீங்க..அதுனால எதுவும் பேசக்கூடாது"
என சொல்லிக் கொடுத்திருந்தாள்..

அதை நினைத்து கொண்டே, இள நகையுடன் தயார் ஆனான்..
அவன் தயார் ஆகி கூடத்திற்கு வந்த பொழுது,அங்கு அமர்ந்திருந்த ராதா..

அவனை பார்த்து ஆனந்த கண்ணீருடன்,
"ராசா மாதிரி இருக்குற அருளு.."

"எந்த ராஜா கோட் போட்டுருக்கார் மா..??"
சிரித்த படி கேட்டான்..

"போடா,நீயும் பாரதி கூட சேர்ந்து, பேச கத்துக்கிட்ட.."

அதன் பிறகு, வெகு நேரம் கழித்து,கரு நீல லெகாங்காவில், தேவதை போல தயார் ஆகி வந்தாள் பாரதி..

அவளை கண்டதும்,கண்களை விரித்து, அவளை விழுங்கி விடுவது போல பார்த்தான் அருள்..

அவன் அருகில் வந்தவள்,
"வாயை கிளோஸ் பண்ணுங்க..ரெண்டு கொசு உள்ள போய்ட்டு வெளிய வருது..அப்புறம் முட்டை போட்டுரும் உள்ள.."

கண் அடித்த படி, மெதுவாய், அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்..

அவள் கூறியதும், அவளை முறைத்தான்..

"ஹப்பா,என் மொழி தான்..எங்க ஆள் மாறிடுச்சோன்னு பயந்துட்டேன்..அதே முறைப்பு.."
நெஞ்சில் கை வைத்து கூறினாள்..

இதழில் தோன்றிய புன்னகையை மறைக்க, வேறு புறம் திரும்பிக் கொண்டான்..

அதன் பிறகு அனைவரும், காரில் ஏறி சென்றார்கள்..
அவளின் தாயும் தந்தையும், முன்னவே வரவேற்பு ஏற்பாடுகளை கவனிக்க சென்று விட்டார்கள்..

வண்டி நின்ற பின், நிமிர்ந்து பார்த்த அருள் திகைத்தான்..ராதாவும், மலைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தார்..

அது, நகரின் புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர விடுதி..
அங்கு உள்ளே நுழைவதற்கே, நிறைய அச்சடித்த காகிதங்கள் தேவை..

"வாங்க மொழி.."
பாரதியின் அழைப்பில், திகைப்பில் இருந்து வெளியே வந்த அருள்,காரில் இருந்து இறங்கினான்..

அவன் கையை பிடித்து உதவினாள் பாரதி..
அவர்கள் உள்ளே சென்றதும்,அவன் கையில் ஒரு கார்டை திணித்த பாரதி..

"இங்க ரூம் போட்ருக்கு, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..நீங்களும் அத்தையும்..விருந்தினர்கள் வர நேரம் இருக்கு..அப்போ கால் பண்ணுறேன்..
இந்த கார்டு இன்செர்ட் பண்ணா, கதவு லாக் திறந்துக்கும்..இவர் கூட வந்து உதவுவார்.."

அருகில் நின்ற வளர்ந்தவனை காட்டினாள்.. பனை மரத்தில் பாதி இருந்தான் அவன்..
அவள் தந்தை வரும் பொழுது,எப்பொழுதும் இவனும் கூட வருவான்..இன்னும் இருவர் கூட..அவர்களும் இவனை போல வளர்ந்த நெடு மரங்கள்..

"நீ எங்க போற..??"

"நான் அப்பா,அம்மா கூட, அவங்க ரூம்ல கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன்..அடுத்த பிளோர்ல இருக்கு அவங்க ரூம்..சீக்கிரம் வந்துடுறேன்.."

"பாஸ்கி அண்ணா,இவங்க கூடவே இருங்க.."

"சரிங்க மேடம்.."

பணிவாய் சொன்னார் அவர்..
அறைக்குள் வரும் வரை யோசனையிலேயே இருந்தான் அருள்..அவர்களுக்கு உதவி விட்டு, அறைக்கு வெளியே சென்று நின்று கொண்டார் அந்த பாஸ்கி..

அறைக்குள்,
"அருளு,என்ன டா இதெல்லாம்??இவங்க, ரொம்ப பெரிய இடமா இருப்பாங்களோ.??."

ராதாவின் குரலில் பயம் தெரிந்தது..
"ஹ்ம்ம்..அப்படி தான் தோணுது மா..நீங்க அவங்க கிட்ட,அவங்க அப்பா என்ன வேலை பார்க்குறாங்க..என்ன ஏதுன்னு விசாரிகலையா??"

"அது ஏதோ செகரக்டரினோ என்னமோ, உமா சொன்னுச்சு..அப்புறம் நம்ம வீட்டு ஓனர்,அவங்க வசதியானவங்கன்னு சொன்னார்..ஆனா இவ்ளோ வசதின்னு, தெரியாது..டா.."

"ஹ்ம்ம்.."
சிறிது நேரம் யோசித்தவன்,

"அம்மா, நான் அவ இருக்குற அறைக்கு போய்ட்டு வரேன்.."

"என்ன டா??எதுக்கு??எதுவும் சண்டை போட்டுறாத டா.. அவங்க ஏதும் சொல்லாம விடல..நாம கேட்கலை..இதுக்கு போய், எதுவும் பேசி வைக்காத.."
பதட்டத்துடன் சொன்னார்..

"அதெல்லாம் இல்ல மா..சும்மா, சில சந்தேகம் கேட்டுட்டு வரேன்.."

மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தான்..அந்த பாஸ்கி வேகமாய், இவன் அருகில் வந்து,
"எதுவும் வேணுமா சார்..??"

"பாரு அறை எது??அங்க போணும்.."

"இருங்க சார்,மேடம் கிட்ட கால் பண்ணி சொல்லுறேன்.."

"வேண்டாம்..அறையை மட்டும் காட்டுங்க.. நான் போயிடுவேன்.."

"சரி சார்.."
லிஃப்ட்டில் அவனோடு கூட வந்து, அறை வாசல் வரை வந்தான் பாஸ்கி..

"இதான் சார்.."
மெதுவாய் அறை கதவை தட்டினான்..

"யாரு..??"

கேட்டுக்கொண்டே, கதவை திறந்தார் உமா,இவனை கண்டதும்,

"வா.. வாங்க மாப்பிள்ளை.."
திணரலுடன் அழைத்தவர்,

அறைக்குள் பார்வையை பதித்த படி, வழி விட்டார்..

"யாரு மா.."
கேட்ட படி திரும்பினாள் பாரதி..

அவள் அருகில் இன்னொரு இளம் பெண்,மேடிட்டு இருந்த வயிற்றோடு நின்றாள்..

அவளை பார்த்ததும் புருவம் சுருக்கி, சில நொடி யோசித்தான் அருள்..
அதற்குள், அவள் வேகமாய் இவனை நெருங்கி, இவன் காலில் விழுந்தாள்..

"என்னை மன்னிச்சுடுங்க அண்ணா.."

அவள் திடீர் செய்கையில் தடுமாறியவனை, வேகமாய் நெருங்கி வந்து பிடித்துக் கொண்டாள் பாரதி..

சற்று சமநிலை அடைந்ததும், அவள் யார் என்று புரிந்தது..முகம் மாற,
"நீ.. நீங்க..??"

"நான் பாரதியோட சித்தி பொண்ணு..அஞ்சலி.."

கண்ணில் நீர் வழிய கூறினாள்..

அவனுக்கு ஏதோ புரிவது போல இருந்தது..புரிந்த விஷயம், உவப்பானதாக இல்லை..

தற்போது அவள் நிலை கண்ணில் பட,
"எழுந்திரிங்க..இந்த நிலையில, கால்ல எல்லாம் விழ கூடாது..ப்ளீஸ்.."

மெதுவாய் எழுந்தவள்,
"என்னால தான் உங்களுக்கு இப்படி.."
அவன் கால்களை காட்டி, மீண்டும் அழ ஆரம்பித்தாள்..

"நீங்க என்ன பண்ணுவீங்க.??.விடுங்க..எப்படி இருக்கீங்க..??"
கண்களை துடைத்துக் கொண்டவள்..

"நல்லா இருக்கேன் அண்ணா.."

"ஏய் எலி, ஏண்டி முறையை மாத்துற.. மாமான்னு கூப்பிடு ஒழுங்கா.."
நிலைமையை சகஜமாக்க முயன்றாள் பாரதி..

சற்று புன்னகைத்தாள் அஞ்சலி..

அருள் திரும்பி, பாரதியின் முகம் பார்த்தான்..அவன் கண்ணில் ஆயிரம் கேள்விகள்..

முகம் உணர்ச்சி துடைத்து காணப்பட்டது..
அவன் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறான் என்று, புரிந்தது..

நிச்சயம் தவறாய் தான் புரிந்திருப்பான்..யாராய் இருந்தாலும், அப்படி தான் எடுத்துக் கொள்வார்கள்..
இப்பொழுது விளக்கம் சொல்லவோ, சமாதானப்படுத்தவோ நேரம் இல்லை..
வரவேற்புக்கு ஆட்கள் வந்து விடுவார்கள்..

"அப்பா டெல்லில செகரட்டரியேட்ல,கேபினட்ல, ஒன் ஆப் தி செகரெட்டரி..அதுனால ஒரு ப்ரைவசி, சேப்டிகாக, நாங்க கொஞ்சம் தனியா இருப்போம்..சின்ன வயசுல இருந்தே அப்படி தான்..

இன்னிக்கு நம்ம வரவேற்புக்கு, நிறைய அரசியல்வாதிங்க.. பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்க.."
கூறிவிட்டு, அவன் முகம் பார்த்தாள்..

அவர்கள் முன்னால், அவன் புன்னகை முகமாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்கிறாள், என்று புரிந்தது..
புரிந்தது என்று தலை அசைத்தான் அருள்..

சிறிது நேரத்தில் இருவரும் இறங்கி, வரவேற்பு நடக்கும் இடத்துக்கு சென்றார்கள்..
அவர்கள் பின்னே உமா,ஜெகன்நாதன்
அஞ்சலி அனைவரும் சென்றார்கள்..

பாஸ்கி சென்று, ராதாவை அழைத்து வந்தார்..
மகனின் முகம் பார்த்தார் ராதா.. சாதாரணமாய் இருந்தது..

எந்த பிரச்னையும் இல்லை என்று நிம்மதி பெரு மூச்சு விட்டார்..
மருமகளின் முகம் பார்த்தார்..புன்னைகையோடு இருந்தாலும், அவள் அடிக்கடி அருளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

'ஆண்டவா,என் பிள்ளை வாழ்க்கையில, எந்த பிரச்னையும் வந்துட கூடாது..'
இறைவனிடம் அவசரமாய் ஒரு வேண்டுதல் விடுத்தார்..

ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்..அவன் நண்பன் செல்வமும் வந்தான்..

"மச்சான்..உன்னை இப்படி பார்க்க, எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா??"
அவனை அணைத்துக் கொண்டான்..

"பாரதி போன் பண்ணுச்சு..வேலையை விட்டுட்டு கிளம்பி வாங்க அண்ணா..அவரு ஆசை பட்ட மாதிரி, ட்ராவல்ஸ் ஆரம்பிக்க போறோம்..

நீங்களும் அவரும் சேர்ந்து தானே, அதை ஆரம்பிக்க ஆசை பட்டீங்க.. அதனால, இன்னும் எதுக்கு வெளியூர்ல போய் வேலை செஞ்சுக்கிட்டு..கிளம்பி வாங்கன்னு சொன்னுச்சு..

உடனே கிளம்பிட்டேன்..எத்தனை வருஷ கனவு டா இது..இப்போ நிறைவேற போறதை நினைச்சா, சந்தோசமா இருக்கு.."
ஆர்ப்பரிக்கும் அருவி போல பேசினான்..

அருள் சட்டென்று திரும்பி, பாரதியின் முகம் பார்த்தான்..
அவன் கண்களின் கூர்மையில், வேறு புறம் பார்வையை திருப்பினாள்..

அவர்கள் இருவரின் முகத்தை பார்த்த செல்வம்,
"சாரி பாரதி..நீ இவனுக்கு சர்ப்ரைஸ் அஹ் சொல்ல போறேன்னு சொன்ன..நான் தான் சந்தோசத்துல உளறிட்டேன்.."

சற்று அசடு வழிந்தவன்..

"மச்சான்,தங்கச்சியை கோவிச்சுக்காத..எல்லாம் நம்ம நல்லத்துக்கு தானே செய்யுது.."

இறுகிய அவன் முகம்,உடனே சூழ்நிலை உணர்ந்து, பழைய படி மாறியது..

பெரிய,பெரிய அரசியல்வாதிகள்,முக்கிய புள்ளிகள் அனைவரும் வந்தனர்..ஜெகன்நாதன் இவர்கள் அருகில் நின்று, அனைவரையும் வரவேற்று, அறிமுகப்படுத்தி, உபசரித்து,குறை இன்றி அனுப்பி வைத்தார்..

அஞ்சலியும் அவள் கணவனும் வந்தார்கள்..

"இவர் ஹர்ஷா..டெல்லில தான் பிஸ்னெஸ் பண்ணுறார்..அஞ்சலியோட கணவர்.."

அவனை பார்த்தாலே, வட இந்தியன் என்று தெளிவாக தெரிந்தது..

சிவந்த நிறம்,ஆறடி உயரம்..
அழகாய் இருந்தான்..அழகாய் பேசினான்..
அதன் பிறகு, மற்றவர்களுக்கு வழி விட்டு, மேடையை விட்டு இறங்கி சென்று விட்டான்..

"மொழி,கொஞ்ச நேரம் உட்கார்ந்துகோங்க..களைப்பா தெரியுறிங்க..கால் வலிக்கும்.."

அவளை திரும்பி பார்த்து, ஒரு நொடி முறைத்தவன்,அவள் கண்களின் கெஞ்சலில்,அமர்ந்தான்..இவளும் அவனோடு அமர்ந்து கொண்டாள்..

அங்கு இருந்த நேரம் முழுதும், அவன் நலனை, பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாள்..

அந்த அக்கறை மனதிற்கு இதமாய் இருந்தாலும்,மனதின் உறுத்தல் மறையவில்லை..


 
#7
ரௌத்திரம் ப(அ)ழகு-6

அத்தியாயம்-6

வரவேற்பு சிறப்பாய் நடைபெற்று முடிந்தது..மனதிற்குள் பல போராட்டங்கள் இருந்தாலும், முகத்தில் காண்பிக்காமல், மலர்ச்சியாக இருப்பது போல இருந்தான் அருள்..

அனைத்தும் முடிந்து,விருந்தினர்களை சிறப்பாய் கவனித்து அனுப்பி விட்டு, இவர்கள் வீடு வந்து சேர, நடுநிசியை தாண்டி சில மணி நேரங்கள் ஆகி இருந்தது..

விடியலுக்கு சில மணி துளிகள் இருக்கும் போது, வீடு வந்து சேர்ந்தார்கள்..
அனைவரும் களைப்பின் உச்சத்தில் இருந்தார்கள்..

உமா,ஜெகன்நாதன்,அஞ்சலி,ஹர்ஷா அனைவரும் ஹோட்டலிலேயே தங்கி விட்டார்கள்..

வீட்டிற்குள் வந்ததும்,
"அத்தை, நான் மாடிக்கு போறேன்.."

"சரி பாரதி..ஓய்வு எடு.. நல்லா தூங்கு. நாளைக்கு மெதுவா எழுந்து வா.."

"சரி அத்தை.."

சொல்லிவிட்டு திரும்ப போனவளை,
"நில்லு,என் கூட வா.."
அருளின் குரல், தடுத்து நிறுத்தியது..

"என்ன டா அருளு,நேத்தே சொன்னேனே..சாந்தி முகூர்தத்துக்கு, ஐயர் ஒரு வாரம் கழிச்சு தான் தேதி கொடுத்துருக்காருன்னு..இப்போ பாரதி,மாடிக்கு போகட்டும்..அவங்க அம்மா வீட்டுல தூங்கட்டும்.."

அவன் கூப்பிட்டதும்,என்ன கேட்பானோ என்று திகைத்த பாரதிக்கு, இப்பொழுது வந்த சிரிப்பை அடக்குவது பெரும் பாடாய் ஆனது..

"அம்மா…"
பல்லை கடித்தான் அருள்..

"அவ கூட பேசணும்..அதுக்கு தான் கூப்பிடுறேன்..வேற ஒண்ணும் இல்ல..நீ வா.."

'விட மாட்டான் போலயே..'
விழித்தாள் பாரதி..

"இப்போ என்ன பேச்சு??எல்லோருக்கும் களைப்பா இருக்கு..அவளுக்கும் களைப்பா இருக்கும்..நீயும் ஓய்வெடு..நாளைக்கு பேசிக்கலாம்..இப்போ எல்லாம் ஒண்ணும் பேச வேண்டாம்.."
ராதா கண்டிப்புடன் கூறினார்..

ஸ்ட்ரிக்ட் மாமியார் போல..

'சோ ஸ்வீட் அத்தை..'
என்று, அவர் கன்னம் கிள்ளி கொஞ்ச வேண்டும் போல அவா எழுந்தது பாரதிக்கு..

அருளின் முறைப்புக்கு பயந்து,அமைதியானவள்..

"ஆமா மொழி,நாளைக்கு பேசலாம்..ஒரே டையர்ட்..அதோட, பெரியவங்க என்ன சொன்னாலும், நம்ம நல்லத்துக்கு தான் சொல்லுவாங்க..

எல்லாத்துக்கும் நேரம் காலம் இருக்கு..அத்தை சொல்லுறதை மீறுவது நல்லா இல்ல..
நாம மெதுவா பேசுவோம்..

இனி வாழ்நாள் எல்லாம், பேச தானே போறோம்..
இன்னும் ஒரு வாரம் பொறுக்க முடியாத உங்களுக்கு..??
என்ன அத்தை, உங்க பிள்ளை இவ்ளோ அவசரப்படுறார்..??"
கூறிவிட்டு, சிட்டாய் பறந்து விட்டாள் பாரதி..

நின்றிருந்தால், அருளின் கோபாக்கினியில் பொசுங்கி இருப்பாள்..

அவளிடம் காட்ட முடியாத கோபத்தை எல்லாம், அன்னையிடம் முறைப்பில் காட்டி விட்டு, அறைக்குள் சென்றான்..

"இவனுக்கு என்ன இவ்ளோ அவசரம்..??பாரதி எவ்ளோ பொறுப்பா இருக்கா..
நேத்து தான் அவ்ளோ எடுத்து சொல்லுறேன்..
இன்னிக்கு கோவப்படுறான்..
என்ன பிள்ளையோ..?? எல்லாத்துக்கும் கோவம் வருது.."

ராதா, அவர் பாட்டில் புலம்பிக் கொண்டு, அவர் அறைக்கு சென்றார்..

அறைகுள் வந்து உடை மாற்றி கொண்டு படுத்த அருளுக்கு, உறக்கம் வரவில்லை..

அவனிடம் பாரதி, இப்பொழுது பேசி தப்பித்த சாதுர்யம் பார்த்து, ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும்,ஒரு பக்கம் கோபம் வந்தது..

'எவ்ளோ நாள் தப்பிக்கிறன்னு பார்க்குறேன்..என் கிட்ட தானே வந்தாகனும்..'

காதலை தவிர்த்து, வேறு காரணத்துக்காக அவள் தன்னை திருமணம் செய்திருப்பாளோ??என்னும் நினைவே கசந்தது..

அதை உடனே தெரிந்து கொள்ளவில்லை என்றால், உறக்கம் வரும் என்று தோன்றவில்லை..
எனவே தான், உடனே பேச அழைத்தான்..

அதை அவன் அன்னை தவறாய் புரிந்து கொண்டு பேசினால்,இவளும் அதற்கு தகுந்த படி, வேண்டும் என்றே மாற்றி பேசிவிட்டு சென்று விட்டாள்..

'வரட்டும்..இதற்கு ஒரு முடிவு தெரியாமல் விட மாட்டேன்..'

ஒரு பெருமூச்சுடன்,நினைவுகள் இழுத்து சென்ற பக்கம் சென்றான்..

பாரதியும் உறங்கவில்லை..
அவள் படுக்கையில், தலையணையை அணைத்துக் கொண்டு, பழைய நினைவில் மூழ்கி இருந்தாள்..

அவள் பிறந்ததிலிருந்து, கஷ்டம் என்றால் என்ன என்று கூட, தெரியாமல் வளர்ந்தவள்..
அப்பா,அம்மா இருவரும், வசதியான குடும்ப பின்னணி கொண்டவர்கள்..

அவள் அன்னையுடன் உடன் பிறந்தவர், ஒரு தங்கை மட்டுமே..
தந்தைக்கு உடன்பிறப்பு, யாரும் இல்லை..

அவள் அன்னைக்கு, திருமணம் முடிந்து சில வருடங்கள் குழந்தை இல்லை..
பல வேண்டுதல்களுக்கு பிறகு பிறந்தவள் பாரதி..

பாரதியார் கவிதைகள் மேல் கொண்ட காதலால், இவளுக்கு பாரதி என பெயர் வைத்தார், இவள் அன்னை..

இவள் பிறந்து ஒரு மாதத்தில், இவர் சித்திக்கு குழந்தை பிறந்தது..அவள் தான் அஞ்சலி..

இருவருக்கும் சம வயது என்பதால், தோழிகள் போல தான் பழகுவார்கள்..
பாரதியின் அன்னைக்கு, தமிழ்நாட்டை விட்டு செல்ல மனம் இல்லை.. எனவே, இவள் பிறந்த பிறகு, ஐந்து வயது வரை டெல்லியில் இருந்தவர்..பின் கணவனிடம் சொல்லிவிட்டு,அவர் சம்மதத்துடன், இங்கு வந்து விட்டார்..

அவள் தந்தையும் மிகவும் நல்ல மனிதர்,மனைவியின் விருப்பம் உணர்ந்து,பாரதியின் சித்தி வீட்டின் அருகே, வீடு வாங்கி கொடுத்தார்..

சிறு வயதில் இருந்தே,ஒன்றாய் வளர்ந்ததால்,அஞ்சலி,பாரதி இருவருக்கும், எந்த ரகசியமும் இருந்ததில்லை..

அஞ்சலிக்கு பத்து வயது இருக்கும் போது,இவள் சித்திக்கு மஞ்சள் காமாலை வந்தது..சரியாய் கவனிக்காமல் விட்டு, முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது..

அதனால், அவரை காப்பாற்ற முடியவில்லை..
அஞ்சலி சிறு வயதில் இருந்தே, பயந்த சுபாவம்..அன்னையின் இழப்பில், தனக்குள் சுருங்கி கொண்டாள்..

அவளை தேற்ற உமா, மிகவும் பாடு பட்டார்..
பாதி நாட்கள் இவர்கள் வீட்டில் தான் இருப்பாள் அஞ்சலி,அவள் வீட்டுக்கு போக மாட்டாள்..

ஒரு வருடத்தில் அவள் தந்தைக்கு மறுமணம் நடந்தது..அதன் பிறகு அங்கு போவதை, முற்றிலும் நிறுத்தி விட்டாள்..

ஒரே ஊரில் இருந்து கொண்டு, சொந்த வீட்டுக்கு செல்லவில்லை எனில், ஊரார் என்ன பேசுவார்கள் என்று, அவள் தந்தை வருத்தத்தில் ஆழ்ந்தார்..

அதனால், அஞ்சலி தங்களோடு இருக்கட்டும் என்று கூறிய உமா,அவளையும் தங்களோடு வைத்து கொண்டார்..

அஞ்சலியின் தந்தைக்கு சங்கடம் கொடுக்காமல், வேறு ஊருக்கு மாறி விட்டார்கள்..

இருவரும் ஒரே வீட்டில், உடன் பிறப்பு போல வளர்ந்தார்கள்..
கல்லூரியில் அடி எடுத்து வைத்தார்கள் இருவரும்..
அப்பொழுது பெங்களுரில், குடும்பத்தோடு இருந்தார்கள்..

ஜெகன்நாதன் மட்டும் டெல்லியில்..
பொறியியலில் ஈடுபாடு இல்லாத போதும்,தனியாக பாரதியை விட்டு செல்ல மனம் இல்லாமல்,இவளின் கல்லூரியிலேயே சேர்ந்தாள் அஞ்சலி..

ஒரு வருடம் கூட அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை..அதிக பாடங்களில் அரியர்ஸ் வைத்தாள்..
அதற்கும், சோர்ந்து போய் அழுதாள்..

சிறுவயதில் இருந்தே பாரதி,தன் முடிவில் தெளிவாய் இருப்பாள்..முடிவெடுத்தால் மாற மாட்டாள்.. பல முறை யோசித்து முடிவெடுப்பாள்..
அதனால் அவள் எடுக்கும் முடிவை, கேள்வி கேட்காமல் ஏற்று கொள்வார்கள்,உமாவும் ஜெகன்நாதனும்..

ஆனால் அஞ்சலி அப்படி இல்லை.. குழப்ப மனநிலையிலேயே இருப்பாள்..
யோசிக்காமல் முடிவெடுத்து விட்டு,பிறகு திணருவாள்..

எல்லாவற்றிற்கும் அவளுக்கு துணை வேண்டும்,ஒன்று உமா,இல்லையேல் பாரதி..

எவ்வளவு தைரியம் சொன்னாலும்,அப்பொழுது கேட்டு கொள்பவள்,பிறகு அழுது கொண்டு நிற்பாள்..இயற்கையிலேயே அவளின் சுபாவம் உணர்ந்து,அவளை கடிந்து கூட பேச மாட்டார்கள் உமாவும்,ஜெகன் நாதனும்..

பாரதி அப்படி இல்லை.. அவள் தவறு செய்தால் திட்டுவாள்..
அன்னையாய் அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைப்பாள்..

கல்லூரி சேரும் போதே,உனக்கு இது சரி வருமா?? யோசி என பல முறை கூறியும், பாரதியை விட்டு செல்ல மனம் இல்லாமல்,இங்கு சேர்ந்தாள்..

இப்பொழுது அழுதவளை முதலில் திட்டியவள்,
"சரி,போனது போட்டும்.. இப்போ சொல்லு,உன்னால இதை எழுதி கிளியர் பண்ண முடியுமா??"

"முடியாது பாரு.."

"சரி,வேறு எதுல விருப்பம் உனக்கு??"

"இனி என்ன பண்ண முடியும்..??"

கண்ணில் நீருடன் கேட்டாள்..

"கேட்டதுக்கு பதில் சொல்லு..எலி.."

"பாஷன் டிசைனிங் பிடிக்கும்.."

"சரி,ஒரு வருஷம் போனது போட்டும்.. அடுத்த வருஷம் அதை படி..அப்பா கிட்ட சொல்லி, சீட் வாங்கி தர சொல்லுறேன்.."

"இல்ல,வேண்டாம்..இங்க படிச்சது,பணம் எல்லாம் வீணாயுடும்.."

"ஆமா,நீ படிச்சு கிழிச்சது தான் தெரியுதே,ஒண்ணும் மண்டையில ஏறலை..இதுல படிப்பு வீணாம்..பணம் வீணாம்..
பிடிச்சதை படிக்கணும்,அதை விட்டுட்டு, நான் சேர்ந்தேன்னு இதுல சேர்ந்துட்டு,நீ உன் படிப்பை வீண் ஆக்கிட்டே..

இப்போவும் ஒண்ணும் லேட் ஆகலை..
அடுத்த வருஷம் ஒழுங்கா, பிடிச்சதை படி..இப்படி அழுதுட்டே இருக்காம.. தைரியமா இரு..
எல்லாத்தையும் விட வாழ்கை முக்கியம்..அதுல முக்கியமானது படிப்பு..

அதை உனக்கு பிடிச்ச மாதிரி படிச்சா தான், உனக்கும் நல்லது..உன் படிப்புக்கும் நல்லது..
கற்க கசடற..
ஒழுங்கா கத்துக்கோ..நானும் ரௌடி தான் மாதிரி..நானும் படிச்சேன்னு, பேருக்கு படிக்காத எலி..."

அவள் பேச்சில் சற்று தெளிந்த அஞ்சலி,தலைஅசைத்தாள்..

தன் தந்தையிடம் சொல்லி,அஞ்சலிக்கு சென்னையில் சிறந்த கல்லூரியில், சீட் வாங்கி கொடுத்தாள்..
சென்னையா?? விடுதியா?? என முரண்டு பிடித்தவளிடம்,

"எல்லாத்துக்கும் பழகு.நாலு பேர் கூட பழகுனா தான், தைரியம் வரும்"
என்று கூறி அனுப்பி வைத்தாள்..

உமாவுக்கு கூட விருப்பம் இல்லை..
இந்த பூஞ்சை மனம் கொண்ட பெண்,எப்படி தனியே சமாளிப்பாள் என்று..

அவருக்கும் ஆறுதல் கூறி தேற்றியவள் பாரதி தான்..
எல்லாம் நன்றாக தான் சென்றது..

முதல் வருடம் வீட்டு நினைவில் அழுது கரைந்த அஞ்சலி..போக போக பழகி கொண்டாள்..

முதல் வருடம் முழுதும் உமா, அடிக்கடி சென்று பார்த்து வருவார்..ஊருக்கு, அவர் சென்று தான் அழைத்து வருவார்..

அவளாக தனியாய் வந்தால் தான் பயம் தெளியும் என்று, இரண்டாம் வருடத்தில் இருந்து, தனியே வர சொன்னாள் பாரதி..

முதலில் பயந்தவள், அதற்கும் பழகிக் கொண்டாள்..
கடைசி வருடம் படிப்பு முடிந்து வரும் போது தான், அந்த விபரீதம் நடந்தது..
 
#8
ரௌத்திரம் ப(அ)ழகு-7

அத்தியாயம்-7

படுக்கையில் இருந்து வேகமாய் எழுந்து அமர்ந்த பாரதிக்கு, முகம் எல்லாம் வேர்த்து வழிந்தது..அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்..

பல நாள், அவளை குற்ற உணர்வில் தவிக்க விட்ட நிகழ்வு..
இப்பொழுது நினைத்தாலும்,இதயம் தடதடத்தது....

இறுதி தேர்வு முடிந்து,அஞ்சலி கிளம்புவதாய் அலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினாள்..

இவளையும், உமாவையும் அழைத்தாள்..
"நீயும் பெரியம்மாவும் வாங்க.."

"எதுக்கு..??"

"ஹாஸ்டல் காலி பண்ணனும்..படிப்பு முடிஞ்சுது.."

"சரி அதுக்கு??"

"என்ன பாரு??.இத்தனை சுமையும் தூக்கிட்டு, எப்படி வருவேன்..??இவ்ளோ நாள் தனியா தானே வந்தேன்..இப்போ வந்தா, என் பிரெண்ட்ஸ் எல்லாம் நீ பார்க்கலாம்..லக்கேஜ் எடுக்க எனக்கும், வசதியா இருக்கும்ல.."

"ஒழுங்கா நீ, வழக்கம் போல கிளம்பி வா.. வேண்டாததெல்லாம் அங்க உள்ளவங்களுக்கு கொடுத்துட்டு,கிளம்பி வா.. அப்போ சுமை குறைஞ்சுடும்..உன் பிரெண்ட்ஸ் எல்லாம், எனக்கு முன்னவே தெரியும்.."

"பாரு ப்ளீஸ் டி.."

"நோ வே எலி..."

அதன் பிறகு பல முறை அஞ்சலி கெஞ்சியும்,இவள் மசியவில்லை..

அவள் அழைத்த படி சென்றிருக்கலாம் என்று, இவள் பிற்காலத்தில் வருத்தப்பட போவது தெரிந்திருந்தால் சென்றிருப்பாள்..

இன்று பாரமான மனதுடன், போராட மாட்டாள்..
அஞ்சலி தோழிகளுடன் பேசி விட்டு,அறையை காலி செய்து விட்டு, கிளம்ப நேரம் ஆகி விட்டது..

நேரம் சரியாய் தெரியாததால்,இணையம் மூலம் ஆட்டோ புக் செய்யாமல்,வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி, ஏறிக்கொண்டாள்..

அங்கு ஆரம்பித்தது பிரச்சனை..
அலைபேசியில் கவனம் வைத்துக் கொண்டு வந்தவளுக்கு,வெகு நேரம் வரை, ஆட்டோ வழி மாறிச் சென்றது தெரியவில்லை..

வெகு நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்தவள்,சந்தேகமாய் ஆட்டோ ஓட்டுனரை அழைத்து கேட்டதற்கு,அவனிடம் சரியான பதில் இல்லை..

அவளுக்கு புரிந்து விட்டது,அவன் தவறானவன்..அவளை கடத்தி செல்கிறான்..அவன் கூட்டி செல்லும் இடம், எவ்வளவு மோசமாக இருக்கும் என்று கற்பனை செய்தவளுக்கு, உடல் நடுங்கியது..

அலைபேசியில் பாரதிக்கு அழைத்தாள்..அவள் எண்ணை பார்த்து விட்டு,வழக்கம் போல வர சொல்லி நச்சரிப்பாள் என நினைத்து, பாரதி எடுக்க வில்லை..

இரண்டு மூன்று முறை முயன்று பார்த்தாள் அஞ்சலி..
நிராகரிக்க பட்ட அழைப்பால்,
அழுகை வெடித்தது அவளுக்கு..

இதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர்,அவள் அலைபேசியை பிடுங்கி, வெளியே எறிந்து விட்டான்..

எதிர்பாரா நிகழ்வில் திகைத்தவள்.பயத்தில் அவனை தாக்கிக் கொண்டு, கத்த ஆரம்பித்தாள்..

அவளை தடுத்து அறைந்தவன்,வேகமாய் ஓட்டி சென்றான் ஆட்டோவை..

அவள் முற்றிலும் நம்பிக்கை இழக்க போகும் தருவாயில், ஆட்டோ நிறுத்த பட்டது, ஐந்து இளைஞர்களால்.

அவள் கண்ணுக்கு அப்பொழுது, தெய்வமாய் தெரிந்தார்கள் அனைவரும்..

அதன் பின், பலத்த போராட்டத்திற்கு பிறகு,அவள் காப்பாற்ற பட்டு, பாதுகாப்பாய் பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டாள்..

அருளின் நினைவுகளும் அந்த நிகழ்வை தான் சுற்றியது..
நண்பர்கள் ஐந்து பேரும், அந்த தெரு விளக்கின் அடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்..

இவர்களுக்கு தொழில் ஆரம்பிக்க, வங்கி கடன் கிடைக்கும் நிலையில் இருந்தது..

அதை பற்றி மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்..

"லோன் கிடைக்கட்டும் டா.. பெரிய ஹோட்டலா பார்த்து ட்ரீட் கொடுத்துடலாம்.."

"இவனுங்களும் வெளிநாட்டு வேலை வரட்டும், ட்ரீட் தரேன்னு ஏமாத்துரானுங்க..நீங்களுமா டா.."

"கண்டிப்பா தரோம் டா பரணி.."

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது,இவர்களை கடந்து சென்ற ஆட்டோவில், ஆபத்தில் அலறும் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது..

அனைவரும் ஒரு நொடி, அடுத்தவர் முகம் பார்த்தவர்கள், மறுநொடி, தங்கள் வண்டிகளில், அந்த ஆட்டோவை பின் தொடர்ந்தார்கள்..

ஆட்டோ அதி வேகத்துடன் சென்றது..
வெகு நேர தொடர்தலுக்கு பிறகு, அந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்தார்கள்..

அந்த ஓட்டுநர்,ஆயுதங்கள் வைத்திருந்தான்..போர் கலைகள் கற்றிருந்தான்..
அவனின் ஆட்களுக்கும் தகவல் கொடுத்திருப்பான் போல, அவர்கள் சிலரும் வந்து, அவனுடன் சேர்ந்து கொண்டார்கள்..

இது ஒன்றும் சினிமா அல்லவே,ஒரு கதாநாயகன் நூறு பேரை பந்தாடுவதற்கு..

இவர்கள், சாதாரண நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள்..ஆயுதங்கள் எதுவும் இன்றி,தன் கையை தனக்கு உதவி என்னும் வகையில், பள்ளி,கல்லூரிகளில் கற்ற சிற்சில தற்காப்பு கலைகள் வைத்து, முடிந்த வரை போராடி, அந்த பெண்ணை காப்பாற்றினார்கள்..

அந்த போராட்டத்தின் முடிவில், இவனுக்கும் பரணிக்கும் பலத்த காயம்,மற்றவர்களுக்கு ஓரளவு காயம்..

அந்த பெண்ணை பத்திரமாய் பேருந்து ஏற்றி அனுப்பி விட்டு,அதன் பிறகே இவர்கள், மருத்துவமனையில் சென்று சேர்ந்தார்கள்..

பரணிக்கு இவனை விட பலமடங்கு அடி, பல மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்று, மூன்று நாள் பலத்த போராட்டத்துக்கு பிறகு, அனைவரும் கை விரித்து விட்டார்கள்..

இப்பொழுது கண் விழிப்பான்,இதோ விழிப்பான் என்று, மூன்று நாளையும் கடத்திய அவன் அன்னையையும், அவன் குடும்பத்தையும் ஏமாற்றி விட்டு, இறைவன் அடி சேர்த்து விட்டான் பரணி..

இவனுக்கு ஏதும் தெரியாது..இவன் சுய உணர்வுக்கு வர, ஒரு வாரம் ஆனது..காலில் ஏற்பட்ட பலத்த அடியில், வலது கால் முற்றிலும் செயல் இழந்து விட்டது..


சுய உணர்வுக்கு வந்தவன்,முதலில் கேட்டது பரணியை தான்..
அவன் அன்னை பதில் கூற முடியாமல்,வாய் மூடி அழுதார்..
அதிலேயே, அவன் நிலைமை தெரிந்து போனது இவனுக்கு..

அவனை, கடைசியாய் பார்க்க கூட முடியவில்லை என்னும் வருத்தம்..இவன் மனதை இன்றும் அழுத்தும் விஷயம்..

இதயத்தில் பாரம் ஏறி அமர்ந்த உணர்வில், எழுந்து அமர்ந்தான் அருள்..
கண்ணில் நீர் மணிகள், சரம் கோர்க்க ஆரம்பித்தது..

கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது.ஜன்னலின் வழியாக அதை வெறித்து கொண்டிருந்த பாரதிக்கு,இதே போன்ற ஒரு அதிகாலை வேளையில், பிரம்மை பிடித்தவள் போல் பேருந்தில் வந்து இறங்கிய அஞ்சலியின் நினைவு வந்தது..

பேருந்து நிலையத்துக்கு அவளை அழைக்க சென்றார்கள்..தங்கள் காரில்..பாரதியும் உமாவும்,ஓட்டுநர் உதவியுடன்..

அவள் பேருந்தில் ஏறியதும், செய்தி அனுப்பி இருந்தாள்..
ஆனால் அதை செய்தது அஞ்சலி அல்ல.. செல்வம்.அவன் அலைபேசியில், இவளிடம் எண்ணை மட்டும் வாங்கி, செய்தி அனுப்பி இருந்தான்..

அந்த எண்ணை கூட அவள் கொடுத்தது அதிகம் என்பது போல,பொம்மை போல அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் இருந்தாள் அஞ்சலி..

வேறு எண்ணில் இருந்து செய்தி வந்தாலும்,அதை நேரில் கேட்டுக் கொள்வோம் என்று, இவர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்கள்..

இவளின் தோற்றம் பார்த்து அதிர்ந்து, இவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும், பதில் இல்லை அவளிடம்..

நேராய் மருத்துவமனை தான் சென்றார்கள்..
அவளை சோதித்த மருத்துவர்,ஏதோ அதிர்ச்சி என்று மட்டும் கூறி, வீட்டிற்கு அனுப்பி வைத்தார்..

எதுவும் பேசாமல் மருந்துகள் உதவியுடன் தூங்கிய அஞ்சலி, காய்ச்சலில் விழுந்தாள்..

மருத்துவர் ஆலோசனை படி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டாள்.. தினமும் காய்ச்சல் அதிகம் ஆனது..

இதே தொடர்ந்தால், அவள் கோமாவுக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறியதும்,உமாவும் பாரதியும் அதிர்ந்து போனார்கள்..

ஜெகன்நாதன் செய்தி அறிந்து, உடனே கிளம்பி வந்து, இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டார்..

ஒரு வாரம் அனைவரையும், பயத்தின் உச்சியில் நிற்க வைத்து விட்டு,பல வேண்டுதல்களுக்கு பிறகு, கண் விழித்தாள் அஞ்சலி..

பத்து நாட்களில் வீட்டிற்கு வந்தவள்,ஒன்றிரண்டு வார்த்தை பேசவே, ஒரு மாதம் ஆனது..

அவள் இருக்கும் மனநிலையில், எதுவும் கேட்க வேண்டாம் என்று மருத்துவர் கூறியதால்,இவர்களும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை..

அவளை தேற்றி பேச வைத்து, உண்மையை இவர்கள் அறிந்த பொழுது,பல நாட்கள் கடந்திருந்தது..

அவளுக்கு எந்த இடத்தில் இது நடந்தது..காப்பாற்றியவர்கள் பற்றிய தகவல், எதுவும் தெரியவில்லை..சற்று அழுத்தி கேட்டால், அழ ஆரம்பித்தாள்..

அவள் நிலை புரிந்து இவர்களும், வற்புறுத்தவில்லை..
அவள் மனநிலை மாற்றத்திற்காக அனைவரும், டெல்லி சென்றார்கள்..

வீட்டில் இருக்க விடாமல், அவளை அழைத்து கொண்டு வெளியே சென்று வந்தாள் பாரதி..அப்பொழுது அஞ்சலியை ஒரு பார்ட்டியில் பார்த்த ஹர்ஷா,அவளை பிடித்து போய் பெண் கேட்டான்..

அவனை பற்றி நன்றாக தெரியும் ஜெகன்நாதனுக்கு..எனவே அஞ்சலியின் பெற்றவரிடம் பேசி, அஞ்சலியையும் ஹர்ஷாவுடன் பேச வைத்து, அவர்கள் திருமணத்தை உறுதி செய்தார்கள்..

திருமணம் முடிந்தது.. சில நாட்கள் அவளுக்காக டெல்லியிலேயே இருந்தார்கள் உமாவும் பாரதியும்..

அப்பொழுது ஒரு நாள், அனைவரும் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது,ஒரு புகழ் பெற்ற பத்திரிகை நடத்தும் விழாவில்,நிஜ நாயகர்கள் விருது வழங்கப்பட்டது..

அதில் விருது வாங்க வந்தவர்களை பார்த்து விட்டு, சத்தமாய் அழ ஆரம்பித்தாள் அஞ்சலி..

அவளை தேற்றி விசாரித்தார்கள்..
இவர்கள் தான், அவளை காப்பாற்றியவர்கள் என்று கூறினாள்..

அவளை காப்பாற்றிய நிகழ்வுக்கு தான், விருது வழங்க படுகிறது என்று தெரிந்தது..

அதை வைத்து விசாரித்து, அவர்கள் அனைவரின் முழு விபரமும் அறிந்து கொண்டார் ஜெகன்நாதன்..

அவர்களுக்கு கைமாறு செய்ய கிளம்பி வந்தார்கள் அனைவரும்..
ஆனால் இங்கு வந்த பிறகு, சூழ்நிலை கைதி ஆனார்கள்..
 
#9
ரௌத்திரம் (ப)அழகு-8

அத்தியாயம்-8

அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் உதவியுடன், அவர்களை சந்திக்கும் முயற்சியில் இறங்கினார்.. ஜெகன்நாதன்..

அந்த ஐந்து பேரில், பரணி என்ற பையன் இறந்து விட்டதாக, அவர் கூறினார்..மீதி நான்கு பேரில், அருள்மொழி என்பவருக்கு காலில் ஏற்பட்ட அடியில், ஒரு கால் செயல் இழந்து விட்டதாய் கூறினார்..மீதி மூன்று பேரும், ஆளுக்கு ஒரு ஊரில் வேலை செய்கிறார்கள்..

எனவே, இப்பொழுது உள்ளூரில் இருப்பது அருள்மொழி தான், என்று கூறினார்..

அவனை சந்திக்க, அவன் வீட்டுக்கு சென்ற போது, அவன் மருத்துவமனை சென்றிருப்பதாய், தகவல் கிடைத்தது..

ஜெகன்நாதன், பாரதி, உமா மட்டும் மருத்துவமனை சென்றனர்..அஞ்சலி அழுது கொண்டே இருந்ததால், அவளையும் அவள் கணவனையும், ஹோட்டல் அறையில் விட்டு விட்டு, இவர்கள் மட்டும் வந்தார்கள்..

நோயாளிகள் சேர்க்க பட்டிருந்த அறைகளுக்கு, முன் இருந்த வராண்டாவில், ஒரு அம்மா கண்ணீருடன் நின்றிருந்தார்..

அவர் அருகே ஒரு நடுத்தர வயது ஆள், கோபமாய் நின்றிருந்தார்..

"போனா போகுது உறவாச்சேன்னு உதவி பண்ண வந்தா, உன் புள்ள ரொம்ப பேசுறான்.."

"அண்ணா..அவன் ஏதோ கோவத்துல.."

"இந்த கோவத்தால தான் இந்த நிலை,யாருக்கு என்ன ஆனா இவனுக்கு என்ன??யாரோ ஒருத்தியை காப்பாத்த போய், இன்னிக்கு நடக்க முடியாம,இங்க வந்து படுத்துருக்கான்..

இன்னும் திமிர் அடங்கல..
ஏன்டா இந்த வேலைன்னு கேட்டா, பெரியவருன்னு ஒரு மரியாதை வேண்டாம்..

அப்போவே என் பொண்டாட்டி சொன்னா, இதுங்களுக்கு காசு கொடுக்க வேண்டாமுன்னு, ஏதோ பரிதாபத்துல வந்தேன் பாரு, என்னை சொல்லனும்.."
கோபமாய் கத்தி விட்டு, அவர் சென்று விட்டார்..

அறைக்கு உள்ளே சென்றார் அந்த பெண்மணி,
"ஏன் அருளு இப்படி பேசுன??அவரை பாரு, இப்போ கோச்சுக்கிட்டு, காசு கொடுக்காம போயிட்டாரு..இப்போ உன் மருத்துவ செலவுக்கு, என்ன பண்ண??"

"இவர் கிட்ட காசு வாங்கி, எனக்கு சரி ஆக வேண்டாம் மா..நான் இப்படியே இருந்துட்டு போறேன்..உங்களுக்கும் கஷ்டம்னா சொல்லுங்க,எங்கேயாவது போறேன்.."

"டேய், என்ன டா பேசுற??"
சேலை முந்தானையில் வாயை மூடிக் கொண்டு அழுதார்..

"அம்மா,அழாதிங்க..ஏதோ கோபத்துல..யாரை பார்த்தாலும்,என்னை பரிதாபமா, பாவமா,இல்ல ஏளனமா பார்க்குறாங்க..

என்னை சக மனுசனா இவ்ளோ நாள் பார்த்தவங்க..இப்போ ஏதோ, பாவப்பட்ட ஜீவன் மாதிரி பார்க்குறது, எனக்கு பிடிக்கலை மா..என் காலை யாரு பார்த்தாலும், ஆத்திரமா வருது..
என்ன குறைஞ்சு போய்ட்டேன் நான் இப்போ..??

நான் எந்த தப்பும் செய்யல. என் மனசாட்சி படி வாழ்ந்தேன், வாழுறேன்..இதுல என்ன தப்பு..??"

"தப்பு இல்ல டா.. ஆனா நேத்து திரும்பவும் கீழ விழுந்து, காலை உடச்சுக்கிட்டு இருக்க..வேலை பார்க்குற இடத்துல..அவங்க போன் பண்ணி சொன்னப்போ, என் உயிரே என் கிட்ட இல்ல..

எனக்கு இருக்குறது நீ மட்டும் தான்..மாசா மாசம் உன் காலுக்கு ட்ரீட்மெண்ட்க்கு வரோம்..

இப்போ இன்னும் மோசம் ஆனா, என்ன டா பண்ணுறது..
எதிர்பாராத செலவு இது. அதான் காசு இல்லைன்னு, இவர் கிட்ட கேட்டேன்..
அவரையும் நீ பேசி அனுப்பிச்சுட்ட, இப்போ என்ன டா பண்ணுறது.??."

"எனக்கு ஒண்ணும் இல்ல மா..நேத்து ஏதோ கவன குறைவு..அதான் தடுமாறிட்டேன்..இப்போ வாங்க, வீட்டுக்கு போலாம்.."

"என்ன டா, இவ்ளோ அடி பட்டுருக்கு..சாதாரணமா போலாம்னு சொல்லுற..பேசாம இருடா.."

இவர்கள் பேசியது அனைத்தும், வெளியே நின்றிருந்த அனைவர்க்கும் கேட்டது..

அவன் முகத்தை யாரும் பார்க்கவில்லை..அவன் பேச்சை மட்டும், அனைவரும் கேட்டபடி நின்றிருந்தனர்..

துக்கம் நெஞ்சை அடைக்க, வந்த கண்ணீரை கட்டுப்படுத்திய படி நின்றாள் பாரதி..

"சார்,நான் மட்டும் உள்ள போய், நீங்க பணம் கொடுக்குற விஷயத்தை சொல்லுறேன்..அவங்க இப்போ உணர்ச்சிவசப்பட்டு இருக்காங்க.. எதுவும் தப்பா பேசிட்டா, உங்களுக்கு கஷ்டம்.."
கூறிய இன்ஸ்பெக்டர், உள்ளே சென்றார்..

அவர் கூறியதை கேட்ட அருள்,
"அவங்க பொண்ணோட மானத்துக்கு விலை இருக்கா??இருந்தா சொல்லுங்க, வாங்கிக்கிறோம்..நாங்க இதுக்கு பணம் வாங்கினா,அது சரி இல்லை.. எங்களுக்கு வேண்டாம்..அவங்க உதவ நினைச்சதே சந்தோசம்.."

தன்மையாய் பேசி,
கை கூப்பி அனுப்பி வைத்தான்..

மருத்துவமனை வாயில் வரை வந்த பாரதி,
"அப்பா,ஒரு நிமிஷம்…"

என்றவள் ,வேகமாய் அவன் அறைக்கு பின் புறம் சென்று, அங்கிருந்த ஜன்னலின் வழியாக, அவன் முகம் பார்த்தாள்..

"அருளு,நம்ம கருணா ஐயா கிட்ட, வட்டிக்கு பணம் கேட்டு வாங்கிட்டு வரேன்..அது வரை தனியா சமாளிச்சுடுவியா..??"

அவன் ஆமோதிப்பில், வெளியே சென்றார்..கண்கள் மூடி படுக்கையில் சாய்ந்திருந்த அவனை, கண் இமைக்காமல் சில நிமிடம் பார்த்தாள்..

பிறகு கிளம்பி, ஹோட்டல் அறைக்கு வந்து விட்டார்கள்..
அதன் பிறகு பல முறை, அருளிடம் பேசி பார்த்தார் இன்ஸ்பெக்டர்..

எதற்கும் பயன் இல்லை.. அவன் நண்பர்கள் குடும்பமும், அவன் சொல்படி பணத்தை மறுத்து விட்டார்கள்..

தோல்வியுடன் டெல்லி திரும்பினார்கள், பாரதி குடும்பத்தினர்..

உற்சாகம் குறைந்து காணப்பட்டாள் பாரதி..
பாரதிக்கு சென்னையில் வேலை கிடைத்தது..

மனமாற்றம் கிடைக்கும் என்று நினைத்த உமா,
"வேலைக்கு போற தானே பாரதி..??"

"ஆமா மா..போறேன்.."

"அப்போ அப்பா கிட்ட சொல்லி,அங்க வீடு வாங்கலாமா??பேசி முடிக்க சொல்லவா??"

"இல்ல மா,வாடகை வீட்டுக்கு போவோம்.."

"சரி, உன் கம்பெனி கிட்ட பார்க்க சொல்லவா??"

"அருள்மொழி வீட்டுகிட்ட பாருங்க.."

"பாரதி??"

"நான் அவரை விரும்புறேன் மா..கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்..நம்ம பணத்த மறுத்த மாதிரி,என்னை அவர் மறுத்துட்டா, என்னால தாங்க முடியாது..அதுனால, அங்க போய், அவர் கிட்டவே இருந்து,என்னை புரிய வச்சு..கல்யாணம் பண்ணிக்க போறேன்.."

"பாரதி,இது சரி வருமா??ஸ்டேட்டஸ் பத்தி பேசல நான்..அவர் மேல உனக்கு இருக்குறது காதலா??பரிதாபமா??யோசிச்சு முடிவெடு.."

"என்னை பத்தி தெரியாதா மா உங்களுக்கு??அவசர பட்டு முடிவு எடுக்குற ஆளா நான்.??என்னால, அவரை விட்டுட்டு வேற ஒருத்தரை, கல்யாணம் பண்ணிக்க முடியுமுன்னு தோணால மா..."

"அவ சொல்லுறது சரி தான் உமா..இங்க வந்ததுல இருந்து, அவ எப்படி இருந்தா, பார்த்த தானே??.அவ சந்தோசம் அங்க இருக்கும் போது, எதுக்கு தடை போடுற..??"

"இல்லைங்க, அவ அந்த தம்பி மேல இருக்குற அனுதாபத்துல, குழப்பிக்க கூடாதுன்னு சொன்னேன்.."

"கவலைப்படாத மா..என் அருளுக்கு பரிதாபம் பிடிக்காது..இது காதல் தான்.. அவர் ரௌத்திரத்து மேல, அவர் வீரத்து மேல, அவர் தைரியத்து மேல, மொத்தமா, அவர் மேல.."
மென்னகையோடு கூறினாள்..

அவள் உறுதியில், உமாவும் தெளிந்தார்.பிறகு வேலைகள் மளமளவென நடந்து,இன்று திருமணத்தில் முடிந்துள்ளது..

பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தாள் பாரதி..

சூரியன் முழு வீச்சில் இயங்க தொடங்கி இருந்தான்..

எழுந்து, குளித்து, கிளம்பி, கீழே வந்தாள்.. சில சொந்தங்கள் அமர்ந்திருந்தார்கள்..

"புடிச்சாலும் புடிச்ச, பெரிய இடமா புடிச்சுட்ட.."
வழக்கம் போல, ஊர் வம்பு பேசிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்..

அதுவும் அவளுக்கு வசதியாக தான் இருந்தது..அருளிடம் மாட்டாமல், கூட்டத்தில் இருந்தாள்..

அவன் பார்வை இவளையே சுற்றியது..எப்பொழுது தனியே வருவாள், தன் சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என்னும் ஆராய்ச்சியோடு..

"என்ன அருளு??,இப்படி கண் எடுக்காம பார்க்குற, உன் பொண்டாட்டியை..."
கிண்டலாக கேட்டார், ஒரு உறவுப் பெண்மணி..

கொல் என அங்கு ஒரு சிரிப்பலை..
ராதா அவனை முறைத்தார்..முகம் சிவக்க எழுந்து, உள்ளே சென்றான்..
 
#10
ரௌத்திரம் (ப)அழகு-8(1)

மதியம், சமையல் அறையில் இவள் நிற்கும் போது,தண்ணீர் அருந்துவது போல வந்த அருள்,
"சாயங்காலம் வெளிய போறோம்..ரெடியா இரு..ஏதாவது காரணம் சொன்ன..அவ்ளோ தான்.."


மெதுவாய் முணுமுணுத்து விட்டு, அவளை முறைத்து விட்டு சென்றான்..

ஒரு நிமிடம் விழித்த பாரதி,
'எப்போ இருந்தாலும், பேசி தானே ஆக வேண்டும்..இன்றே பேசி விடுவோம்..'
சற்றே தெளிந்து நின்றாள்..


மாலையில், கோவிலுக்கு சென்று வருவோம் என்று அருள் கூறியதும், மறுக்காமல் கிளம்பினாள்..

ராதாவும், கோவிலுக்கு என்றதும் அனுப்பி வைத்தார்..

வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள கோவிலுக்கு சென்று, சாமி கும்பிட்டு, பிரகாரத்தில் அமரும் வரை, எதுவும் பேசவில்லை இருவரும்..

"சொல்லு…"

"என்ன சொல்ல..??"

அவளை முறைத்தவன்..

"எதுக்காக, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட??"

"குடும்பம் நடத்த தான்.."

"ச்சு.. விளையாடாத பாரதி.."

"பின்ன இப்படி கேள்வி கேட்டா, எல்லோரும் எதுக்கு கல்யாணம் பண்ணிக்குவாங்க..??"

"அவங்க விஷயம் வேற,நம்ம விஷயம் வேற..அஞ்சலி..அவங்களுக்காக தானே நம்ம கல்யாணம்..??"

"அவளுக்காக, நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்..??"

"அவங்கள காப்பாத்துனத்துக்காக கைமாறா, என்னை கல்யாணம் பண்ணி இருக்க.."

"நீங்க மட்டும் தான் அவளை காப்பாத்துனீங்களா??எல்லோரையும் கல்யாணம் பண்ண முடியாது, அதுனால என்னை கல்யாணம் பண்ண. அப்படின்னு, தயவு செஞ்சு அபத்தமா சொல்லிடாதீங்க.."

"அப்படி சொல்ல மாட்டேன்..ஆனா, அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான்..பரணி உயிரோட இல்ல..எனக்கு கால் போச்சு..அதுனால உனக்கு பரிதாபம்..எனக்கு வாழ்க்கை கொடுக்குறதா நெனச்சு, கல்யாணம் பண்ணி இருக்க.."

அவனை முறைத்தவள்,
"உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி..அது என்ன வார்த்தை, வாழ்க்கை கொடுக்குறது..யாருக்கும் யாரும், வாழ்க்கை கொடுக்க முடியாது..


ஒருத்தங்க வாழ்க்கையை, இன்னொருத்தங்க வாழ்க்கை கூட இணைச்சுக்கலாம்..வாழ்க்கை துணையா..

அந்த துணை நமக்கு ஏத்தவரான்னு பார்த்து தேர்ந்தெடுக்கலாம்..அன்பு,பாசம்,காதல்,புரிதல்,நம்பிக்கை போன்ற அடிப்படையில..

நான் என்ன கடவுளா?? வாழ்க்கை கொடுக்க..கடவுளை தவிர யாராலயும், யாருக்கும் வாழ்க்கை கொடுக்க முடியாது.."

கோபமாய் மூக்கு விடைக்க பேசியவள்,
"தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை, வாழ்க்கை கொடுக்குறது.."
கடைசியில் கண் அடித்து முடித்தாள்..


அவளை கூர்ந்தவன்,
"அப்போ நீ என்னை கல்யாணம் பண்ண, அஞ்சலி காரணம் இல்ல.."


"நிச்சயமா இல்லை.. அவ மூலம் உங்களை பார்த்தேன்..அவ்ளோ தான்.. நம்ம சந்திப்புக்கு காரணகர்த்தா அவ.... உங்க தோழர்களை கூட, தொலைக்காட்சியில பார்த்தேன்..அவங்க மேல எல்லாம், ஒரு மரியாதை தான் வந்துச்சு..ஆனா, உங்க முகத்தை பார்க்கும் முன்னவே, உங்களை பிடிச்சுது..

உங்க கோபம் பிடிச்சுது,தன்னம்பிக்கை பிடிச்சுது..தன்மானம் பிடிச்சுது.... உங்க குணத்துக்காக தான், உங்களை பிடிச்சுது..இது சாதாரண பிடித்தமா, காதலான்னு தெரிய, சில நாள் தேவை பட்டுச்சு.. தெரிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன், என் துணையை தேடி.."

இன்னும் அவன் முகம் தெளியவில்லை..

"அப்போ இங்க வந்த உடனேயே, இதெல்லாம் சொல்லி இருக்கலாம் தானே..??"

"எங்க பணம் வேண்டாம்னு சொன்ன மாதிரி, என்னையும் சொல்லி இருப்பிங்க..அவ்ளோ பழகுன அப்புறமும், எவ்ளோ நாள் காக்க வச்சீங்க நீங்க..??"

"நாங்க உங்க உதவியை எதிர்பார்த்து, உன் தங்கையை காப்பாத்தலை.."

"தெரியும். அதே நேரம், எங்க திருப்திக்கு உதவி செய்ய வந்தோம்..அதை நீங்க ஏத்துக்கல..

நேரடியா செஞ்சா ஏத்துக்க மாட்டீங்கன்னு தான்.. நாங்கன்னு தெரியாம,உங்க பிரெண்ட்ஸ் வெளிநாடு போக ஏற்பாடு செஞ்சோம்.."

சட்டென்று திரும்பி, அவள் முகம் பார்த்தான்..
ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்..


"ஆமாம். அவங்க பண பிரச்னையால தான், போக முடியாம கஷ்டப்பட்டாங்க..அந்த ஏஜென்ட் கிட்ட பேசி, நாங்களே பணம் தர்றோமுன்னு சொல்லி, அவங்க கேட்ட மாதிரி, ஏற்பாடு செய்ய சொன்னோம்..
சந்தேகம் வர கூடாதுன்னு.. ஏஜென்ட் கமிஷன்,பயண செலவுல பாதி மட்டும் கொடுத்தோம்.கம்பெனி செலவு மாதிரி..."
 
#12
ரௌத்திரம் ப(அ)ழகு-9

அத்தியாயம்-9

முகம் இறுக அமர்ந்திருந்தவன்..

"அப்போ எங்களுக்கு, இப்போ ட்ராவல்ஸ் வச்சு கொடுக்க போறதும்,அது போல தானா??"

"அவங்களும் நீங்களும் ஒண்ணா எனக்கு??அவங்க, அஞ்சலிக்கு உதவி பண்ணவங்க மட்டும் தான். ஆனா நீங்க, எனக்கு எல்லாமும்.அப்புறம் எப்படி?? ரெண்டும் ஒண்ணா ஆகும்..
இது ஒரு மனைவியா, என் கணவனின் கனவுக்கு, தோள் கொடுக்குறேன்.."

"எனக்கு, உன் உதவி வேண்டாம்.."

"ஏன்,ஏன் வேண்டாம்..??பேங்க்ல மேனேஜர் லோன் கொடுத்தா மட்டும், வாங்குறிங்க தானே..??இதுவும் அது போல..எங்க அப்பா தர லோன்.. ட்ராவல்ஸ் லாபத்துல, திருப்பி கொடுங்க..

அப்புறம், இன்னொரு விஷயம்..நாம அடுத்த வாரம், வீடு மாற போறோம்..லோன் போட்டு தான், அந்த வீடு வாங்கி இருக்கேன்..எங்க அப்பா பணம் இல்ல..அதையும், திருப்பி தர்றேன்னு சொன்னாலும் சரி..ஆனா, அங்க போறோம்.."

"என்னால வர முடியாது.."

"ஏன் வர முடியாது..??உங்க பிரெண்ட்ஸ், வேலை தேடி வெளிநாடு போகலையா??செல்வம் அண்ணா, வேலைக்குன்னு வெளியூர் போய் இருக்கலியா..??நாங்க மட்டும் கல்யாணம் செஞ்சுட்டு, உங்களை நம்பி, நீங்க இருக்குற இடத்துக்கு வர்றோம்..நீங்க வர கூடாதா..??

உங்களை, தனி குடித்தனமா கூப்பிட்டேன்..இல்ல, வீட்டோட மாப்பிள்ளையா கூப்பிட்டனா??
மெயின் ஏரியால இருக்கு அந்த வீடு,உங்க ட்ராவல்ஸ், என் வேலை, எல்லாத்துக்கும் சரியாய் இருக்கும் அந்த இடம்.."

"என் காலு இருக்குற நிலையில, என்னால வண்டி ஓட்ட முடியுமா??"

"அதெல்லாம், கைலேயே எல்லாம் செய்யுற மாதிரி, ஒரு கார் ஏற்பாடு செஞ்சுட்டேன்..சொல்லி தர ஆள் கூட..பத்து நாள் கத்துகிட்டா, ஓட்டிடலாம்..

அப்புறம், இப்போதைக்கு ரெண்டு கார் தான் வாங்க போறோம்.உங்களுக்கு ஒன்னு, செல்வம் அண்ணாக்கு ஒன்னு.. அதை அதிகம் ஆக்குறது, உங்க திறமை.."
தோள்களை குலுக்கினாள்..

எந்த முடிவும் கூறவில்லை அவன்..இருவரும், வீடு வந்து சேர்ந்தார்கள்..இரண்டு நாட்கள், முகம் கொடுத்து பேசவில்லை அவன்..அவனுக்கு யோசிக்க நேரம் கொடுத்து, இவளும் தொந்தரவு தரவில்லை..

ஒரு வாரம் கழித்து, புது வீடு மாறினார்கள்..இவர்களுக்கு, வீடு மாற்ற ஏற்பாடு செய்து விட்டு, அஞ்சலி,ஜெகன்நாதன்,உமா, அனைவரும் டெல்லி திரும்பினார்கள்..ஹர்ஷா, முன்பே சென்றிருந்தான்..

ராதாவுக்கு மகிழ்ச்சி..

அன்று, இவர்களுக்கு முதல் இரவு..

சிடுசிடுவென அமர்ந்திருந்தான் அருள்..உள்ளே வந்த பாரதி..அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு,
படுக்கையின் மறுபுறம் சென்று, படுத்து உறங்க ஆயத்தமானாள்..

அவளை திரும்பி பார்த்தவன்,
"என்ன பண்ணுற??"

"ஹ்ம்ம்..தூங்க போறேன்..எத்தனை கதைல படிச்சிருக்கேன்..இப்போ நீங்க, நாம, வெளிய தான் கணவன் மனைவின்னு சொல்லுவீங்க..எனக்கு, தரையில படுத்தா தூக்கம் வராது..அதான் முன்னாடியே, தூங்க வந்துட்டேன்.."

அவளை முறைத்தவன்,
"நான், அப்படி சொன்னனா??நீயா, எல்லா முடிவும் எடுப்பியா??எல்லாம், உன் இஷ்டம் தானா??வீடு,தொழில், எல்லாம் ஏற்பாடு செஞ்சுட்டு சொன்னா.. நான், உன் பின்னாடியே வந்துடனும்..அது போல..இப்போவும், நீயே முடிவெடுத்து பேசுற.என்ன நினைச்சிட்டு இருக்க..??"

"அப்போ இல்லியா..??சரி சொல்லுங்க, உங்க முடிவை.."

மடியில், தலையணையை எடுத்து வைத்துக் கொண்டு, சுவாரஸ்யமாய் கதை கேட்கும் நிலையில் அமர்ந்தாள்..

அவளை பார்த்து பல்லைக் கடித்தான்..

"சீக்கிரம் சொல்லுங்க..எனக்கு தூக்கம் வருது..தூங்கிடுவேன்.."

அவன் நிலையில் மாற்றம் இல்லை என்றதும்,
"சரி,நீங்க சொல்லுற மாதிரி தெரியல.."

மண்டியிட்டு எழுந்தவள், அவனை நெருங்கி, அவன் கழுத்தை வளைத்து, கன்னத்தில் முத்தமிட்டு விட்டு,
"குட் நைட் மொழி"
என்று கூறிவிட்டு, விலக போனாள்..

ஆனால் முடியவில்லை..வன்மையான, அவன் அணைப்பில் இருந்தாள்..
அவன் கோபம், அந்த அணைப்பில் தெரிந்தது..

மென்னகையோடு, அவனுக்கு இசைந்து கொடுத்தாள்..

சில மாதங்கள் கடந்திருந்தது..அருளின் ட்ராவல்ஸ் தொழில், சற்று முன்னேற்ற பாதையில் கால் எடுத்து வைத்தது..

அன்று, வீட்டிற்கு வந்ததும் பாரதி அருளிடம்,
"மொழி,நாளைக்கு ஹாஸ்பிடல் போவோம்..உங்க காலுக்கு காட்ட..அமெரிக்கால இருந்து வந்திருக்க, புகழ் பெற்ற ஸ்பெசலிஸ்ட் டாக்டர் கிட்ட இருந்து, அப்பாய்ண்ட்மெண்ட் கிடைச்சிருக்கு.."

"எத்தனை பேர் கிட்ட காட்டுறது பாரு..??விடு..இப்படியே இருந்துட்டு போறேன்.."

"இவர், பல பேர் குணப்படுத்த முடியாத காலை எல்லாம், சரி செஞ்சுருக்கார்..எனக்காக வாங்க மொழி..ப்ளீஸ்.."
அவனை வற்புறுத்தி அழைத்து சென்றாள்..

அவனை சோதித்து விட்டு,ஒரு ஆபரேஷன் செய்தால், சரியாக வாய்ப்பு அதிகம் என்று கூறினார்..

பாரதியின் முகத்தில் மகிழ்ச்சி,அருளின் முகத்தில், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை..

"என்ன மொழி, என்னாச்சு..??"

"இதுக்கு, சில லட்சங்கள் ஆகும் பாரு..அவர் சொன்னதை கேட்டியா??"

"அதுனால என்ன மொழி..??உங்க கால் முக்கியம் இல்லியா?? பணத்தை விட.."

"இதுக்கும் நீ, உங்க அப்பா கிட்ட வாங்குறது, எனக்கு பிடிக்கல பாரு..விட்டுடு.."

"அப்பா கிட்ட வாங்க கூடாது..அவ்ளோ தானே..என் நகை இருக்கு..என் பேர்ல, பெங்களுர்ல இருக்குற வீடு இருக்கு..அது, என் பாட்டி எனக்கு தந்தது..அதெல்லாம் வச்சு, நான் என்ன பண்ண போறேன்..??"

"இல்ல பாரு.."

"இதுக்கு மேல பேசாதிங்க..நான் பார்த்துக்குறேன்.."

அவன் ஆபரேஷன் நெருங்கியது.வெளியே தைரியமாய் இருந்தாலும், உள்ளே பயத்துடன் போராடிக் கொண்டிருந்தாள், பாரதி..

அதை உணர்ந்து, அவளுக்கு பார்வையிலும் அணைப்பிலும், ஆறுதல் அளித்தான் அருள்..

ஆபரேஷன் தியேட்டர் முன்பு, பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள் பாரதி..
ராதா, பல கடவுள்களை துணைக்கு அழைத்து, வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தார்..

சில மணி நேரங்கள், பல யூகங்கள் போல கடக்க,வெளியே வந்த மருத்துவர்.. ஆபரேஷன் வெற்றியடைந்து விட்டதாய் கூறி, அனைவர் வயிற்றிலும் பாலை வார்த்தார்..

மூன்று மாதம் ஓய்வு தேவை. பிறகு பிசியோதெரபி சிகிச்சை மூலம், கால் பழைய நிலைக்கு வரும் என்று, உத்திரவாதம் அளித்தார்..

தொழில் பற்றி கவலைப்பட்ட அருளிடம்,செல்வம், தான் பார்த்துக் கொள்வதாய் கூறி, ஆறுதல் அளித்தான்..

அவன், சிறிது சிறிதாக தேறி வரும் நேரத்தில், பாரதி தாய்மை அடைந்த செய்தி,அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது..

சில மாதங்கள் கடந்தது..அருள், ஊன்று கோலின் உதவி இன்றி, மெதுவாய் நடக்க ஆரம்பித்து இருந்தான்..

பாரதி, நிறை மாதமாய் இருந்தாள்..
இவள், அருளை விட்டு டெல்லிக்கு வர முடியாது என்று கூறியதால்,உமா இங்கு வந்திருந்தார்..

ஒரு நன்நாளில், பாரதி அருளின் புதல்வன், பூவுலகில் அவதரித்தான்..

குழந்தைக்கு பேர் வைக்கும் வைபவத்தில்,குழந்தையின் காதில்,
"பரணி,பரணி,பரணி.."
என்று கூறி, பலரின் கண்களில், ஆனந்த கண்ணீரை வர வைத்தாள், பாரதி..

அஞ்சலியும் ஹர்ஷாவும், அவர்கள் குழந்தை மஹதியோடு வந்திருந்தார்கள்...

அருளுக்கும், ஆனந்த அதிர்ச்சி..
இரண்டு மாதங்கள் கடந்து,பரணியின் தங்கையின் திருமணத்தை, இவர்கள் செலவில், முன் நின்று நடத்தினார்கள், அருளும் பாரதியும்..

பரணியின் பெற்றோர், கண்களில் கண்ணிரோடு, இவர்களை வாழ்த்தினார்கள்..

அன்று தான், இவர்கள் அறைக்கு வந்திருந்தாள் பாரதி..மூன்று மாதம் ஆகும் வரை, ராதாவின் அறையில் இருந்தாள்..

குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்த பாரதியின் அருகில், அவளை ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தான் அருள்..

"உனக்கு ஏன், என்னை பிடிச்சுது பாரதி..??"

அவனின் திடீர் கேள்வியில்,யோசிப்பது போல பாவனை செய்த பாரதி,

"ஹ்ம்ம்..தெரியலியே. ரௌத்திரம் பழகுன்னு பாரதியார் சொன்னார்..அந்த ரௌத்திரம் கூட, உங்க கிட்ட வந்ததும், அழகா ஆயிடுச்சு..அதுனால பிடிச்சுது போல..
இதான், அழகுல மயங்குறதுன்னு, சொல்லுறது போல.."

அவளது கடைசி வரியில் இருந்த குறும்பில், புன்னகையுடன் அவள் தலையில், விளையாட்டாய் கொட்டினான் அருள்..

"நிஜமாவே, உங்க ரௌத்திரம் அழகு தான் மொழி..சரியான நேரத்துல, தேவைப்படும் போது வரும் ரௌத்திரம், அழகு தான்.. யாருன்னே தெரியாத பொண்ணு..நமக்கு எதுக்கு வம்புன்னு?? விலகி போகாம..உயிர் போனாலும் பரவாயில்லைன்னு, போராடி மீட்ட ரௌத்திரம், அழகு தான்..எல்லா பொண்ணுங்களும், ஹீரோவை கல்யாணம் பண்ணனும்னு தான், ஆசை படுவாங்க..

அவங்க ஆசை படுறது, நிழல் நாயகர்களை..நான் ஆசை பட்டது, நிஜ நாயகர்களில் ஒருத்தரை..நீங்க, நிஜ ஹீரோ மொழி.."

அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

"எனக்கு, போலியா சாகசம் பண்ணுற திரை உலக நாயகர்களை விட, நிஜத்துல, ஒரு பொண்ணோட, உயிருக்கும் மேலான மானத்தை காத்த, நீங்க தான் ஹீரோ.நீங்க, பொக்கிஷம் மாதிரி மொழி.உங்க அருமை,மதிப்பு, எனக்கு மட்டும் தான் தெரியும்..அதான், என் பொக்கிஷத்தை பத்திரமா, நானே எடுத்துகிட்டேன்..."

சிறிது நேரம், மோனத்தில் கழிந்தது பொழுது,
"அது சரி,உங்களுக்கு எதுக்கு பிடிச்சுது என்னை??"

"ஏன்னா, நீ என் ரதி..புற அழகுல மட்டும் இல்லை.. அக அழகுலயும்.. என் வாழ்க்கையில, தென்றலா நுழைஞ்சு, அதிரடியா பல மாற்றங்களை கொண்டு வந்துட்ட..வீடு,தொழில்..எல்லாத்துலயும்..என் நண்பர்கள் வாழ்கையிலயும்.."
கண் அடித்து சிரித்தான்..

"பின்ன, கல்யாணத்துக்கே அவ்ளோ நாள் யோசிசிங்க..இன்னும், எல்லாத்துக்கும் பெர்மிஷன் கேட்டா, அவ்ளோ தான்.. அதான், எல்லா முடிவும் நானே எடுத்துட்டேன்.."

கெத்தாய் கூறிவிட்டு, அவன் தோள் சாய்ந்தாள் பாவை..

அவளின் அதிரடி அன்பில் லயித்த அவள் அழகனும், அவளை அணைத்துக் கொண்டான்..

ரௌத்திரம் பழகினால், சரியான நேரத்தில் வெளிப்பட்டு, அந்த ரௌத்திரமும் அழகாகி விடும்..

சுபம்.
 
#14
இது போல நிஜமாவே நடந்து இருக்கு.பெண்ணை கடத்தி போகும்போது காப்பாற்ற போய் ஒரு உயிர் போனது.திருப்பூர் னு நினைக்கிறேன்.

அருமையா எழுதி இருக்கீங்க.
 
#16
இது போல நிஜமாவே நடந்து இருக்கு.பெண்ணை கடத்தி போகும்போது காப்பாற்ற போய் ஒரு உயிர் போனது.திருப்பூர் னு நினைக்கிறேன்.

அருமையா எழுதி இருக்கீங்க.
thank u so much sis..