லாக் டவுன் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஆர்த்தி அவர்கள் லாக் டவுன் கதையை தொடரவிருக்கிறார்கள்....கதையில் சில மாற்றங்கள் செய்திருப்பதால் முதலில் இருந்து பதிவிடப்போகிறோம்.....படித்துவிட்டு அவருக்கு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
அத்தியாயம் 01:


இயற்கைக்கு எத்தனை சக்தி?


மாயமும் செய்யும்! மந்திரமும் செய்யும்! தன்னையே தஞ்சம் என்று வந்தடையும் உயிரினங்களுக்கு விதவிதமாக ஆறுதலளிக்கும் வல்லமை படைத்தது இயற்கை எழில்.


இதை நம்மால் மறுக்க முடியாதில்லையா?


சூரியனும் நிலவும்; வானமும் மேகமும்; காற்றும் மழையும்; கடலும் அலையும்… எத்தனை பரிமாணங்கள்?


பட்டப்பகலில் அனலாகத் தகிக்கும் சூரியன் கூட உதயமாகையில் வானத்துடன் கலந்து கூடி, கண்களுக்கு விருந்தளிக்கிறானே!


இதோ, சைந்தவியின் மனத்தைப் போலவே பல மணி நேரம் வெப்பத்தை வாரியிறைத்து விட்டு, தற்போது சாந்தமாய், சாத்வீக அழகுடன் மஞ்சளும் ஆரஞ்சும் கூடிய பொன்னிறமாய்க் கவிழ்ந்து, தன்னை வெறிக்க முற்படுகிறவளை ஆதுரத்துடன் பார்த்து விடைபெற முயன்றான்.


அவளும் அதனை உணர்ந்து கொண்டது போல் காணப்பட்டாள். இத்தனை நேரம் இருந்த மனத்தின் புழுங்கல் சற்றுத் தணிந்து இருப்பதாக உணர்ந்தாள். ஆனாலும் வேதனை மட்டுப்படுவதாயில்லை.


அவ்வளவு எளிதாக மட்டுப்பட கூடிய துயரமல்ல இவ்வகை. உயிர் வரை வலிக்கிறது என்று சொல்வது இது தானா? உள்ளிருந்து கனத்த உருண்டை ஒன்று உருண்டு, உருண்டு இரணத்தை அதிகமாக்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது.


காதல்! இந்தப் பாழாய்ப் போகும் காதல்! நெஞ்சைப் பிளந்து, உருகி, உருக்குலைய வைக்கும் காதல்!


விழித்துக்கொண்டே கனவிலேயே குடும்பம் நடத்த வைக்கும் காதல்… சித்தனையும் பித்தம் கொள்ள வைக்கும் காதல்… அறிவாளியையும் முட்டாளாக்கிப் பிதற்ற வைக்கும் காதல்… திறமைசாலியைத் தவற வைக்கும் காதல்… அப்பாவியையும் மூர்க்கனாக்கித் திரிய வைக்கும் காதல்…


அப்பப்பா எத்தனை எத்தனை!


கேட்டிருக்கிறாள். இந்த மாதிரி பலவற்றைக் கேட்டிருக்கிறாள். பெண்கள் விடுதியில் இத்தனை வருடங்களைக் கழித்தவளுக்கு, காதலைப் பற்றிய அலசல்கள் நன்றாகவே தெரியும். சரளமாக நிறைய புலம்பல்கள் காதிற்கு வந்திருக்கிறது.


இப்படி எல்லாம் பலவாறாக நொந்து போய் வரும் வசனங்களைக் கேட்டும் இவளுக்குக் காதலை ஏன் பிடித்தது? ஏன் தனக்குக் காதல் ஆசை வர வேண்டும்? இப்போது இப்படித் தவிக்க வேண்டும்?


ஒரு வேளை மற்றவர்களைப் போல் தானும் அன்பான பெற்றோர், விட்டுக் கொடுத்தலும் சண்டையுமாகப் பாசமிக்க உடன் பிறப்புடன் பிறந்திருந்து ஆதரவான உறவுகள் என்று அமையப் பெற்றிருந்தால், அன்பிற்காக ஏக்கம் பிடித்து, அதே அன்பையும் பாசத்தையும் வெளியே வேறு ஒருவரிடம் தேடிப் போயிருந்திருக்க வேண்டியதில்லையே?


அவள் பெற்றோரிடம் அன்பு கிடைக்கவில்லை என்று சொல்வது அபத்தம் என்றே தோன்றியது. சில நிமிடங்கள் அம்மா அப்பாவை மட்டும் நினைவுகளில் சுற்றி வந்தாள்.


ஞாபகங்கள் சாபமாகவும் ஆகின்றன. ஏன் தனக்கு மட்டும் ஒரு சராசரியான வாழ்வு அமையாமல் போனது?


‘அப்படி எதற்கு ஆசைப்பட்டு விட்டேனாம்?’


நினைக்கத் தான் முடிந்தது. எதை நினைத்தாலும் முடிவில் வினித்தே வந்து கண்களுக்குள் நின்றான். அவனுடைய அன்பான வார்த்தைகளை மறக்க முடியுமா?


அவன் அன்பில் தான் கரைந்து மெழுகாக உருகிப் போனது நேற்று நடந்ததைப் போலவே இருக்கிறதே!


மனத்தை வருடிவிட முயலும் உப்புக் காற்றில் சைந்தவியின் கூந்தல் கலைந்து, பறக்கத் துடித்தது.


உனக்காக நானிருக்கிறேன். வேகத்துடன் மேலெழுந்த அலைகளைக் காட்டி காட்டிச் சொன்னது கடல்.


‘இந்தக் கடலைத் தஞ்சம் அடைந்து விட்டால் தான் என்ன? அன்னையாக அரவணைத்து மடி தாங்கிக் கொள்வாள்.’


திடீரென அபத்தமான யோசனை வந்தது. சைந்தவியின் கண்கள் நீர்ப்பரப்பில் நிலைத்து நின்றன. பல நிமிடங்கள் கடந்தன. கனத்த கணங்கள் அவை.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
அவளே முன்னும் பின்னும் தன்னுடைய அபத்தத்தை அலசினாள்.


“சேச்சே என்ன நினைத்து விட்டேன்! அவ்வளவு கோழையா நான்?”


“கோழைகளா செத்துப் போவது?”


“இல்லை.”


“நான் சாக மாட்டேன்.”


“எப்படி முடியும்? என்னால் முடியாது! அதுக்கு நிறைய மனோபலம் வேணும்.”


“பேசாம எங்கேயாவது போயிடலாம். உலகத்தில் வேற எத்தனையோ இடங்கள். இந்த வேலை வசதிப்படாட்டி வேற வேலையும் கிடைக்கும். இங்கேயே இருந்து இவனைப் பார்த்திட்டே இருந்தா நான்… நான்... என்னாலே முடியாது! ரொம்ப கொடுமை அது!”


“என்னைக்காவது ஒரு நாள் வினித் என்னைத் தேடி வந்தால்? அப்போ நான் உயிரோட இருக்கணும்.”


தானாகப் பேசிக் கொண்டாள். மெல்லிய குரலில். வெளியே கேட்காத மாதிரி. தனக்குத் தானே அறிவுறுத்திக்கொண்டு; தன்னைத் தானே திடமாக்க முயன்று!


நேரம் ஓடிற்று.


முன் மாலைப் பொழுதில் துடிக்கும் இதயத்துடன்; பொங்கிச் சிவந்த விழிகளுடன், திக்கற்றப் பறவையாய்; யாருமற்ற அனாதரவான நிலையில் இருந்தாள்.


‘இனி என்ன? இனி என்ன?’


தொடர்ந்து பூதாகரமாகப் பயமுறுத்திய கேள்வி. எங்கோ போக வேண்டும்… எங்கு எனப் புரியாமல் கடற்கரைக்கு வந்திருந்தாள்.


காதலும் வினித்துமாக கரைந்தாள். அழுதாள். மருகினாள்.


‘என்ன கேட்டான், என்ன கேட்டான்?’


மீண்டும் மீண்டும் வினித் இன்று கூறியதை நினைத்துப் பார்த்துக் கொண்டாள்.


‘நான் உன்னைக் காதலிப்பதாக எப்போ சொன்னேன்?’


‘இப்படித்தானே கேட்டான்? கேள்வியாக உயர்ந்த புருவத்துடன் நிதானமாக என் கண்களைப் பார்த்துக் கொண்டே. எப்படி முடிந்தது அவனால்?’


சொல்லிவிட்டானே!


‘ஏன் அப்படிச் சொன்னே வினித்? துடித்துப் போயிட்டேன். இன்னும் இங்கே வலிக்குதுடா! இதுவரை நான் பட்டது பரவாயில்லைன்னு ஆக்கிட்ட. உனக்கு நிஜமா என் மேல் காதலில்லையா?’


இடது மார்பு பக்கமாகப் போன கை அங்கே அழுத்திக் கொண்டது. வலியைத் தாங்க முயல்வது போல உதட்டைக் கடித்துக் கொண்டாள். மூடிய கண்ணிமைகளின் இடையே கரகரவென கண்ணீர் வழிந்தது.


அங்கே இங்கே என்று எதுவும் கண்களுக்குப் புரியாமல் அலைந்துவிட்டு, முன் மாலையிலேயே இங்கு வந்துவிட்டாள்.


அப்போது கடற்கரையில் ஆள் அரவம் அவ்வளவாக இல்லை. தொலைவில் கட்டு மரங்கள் இரண்டு தட்டுப்பட்டன. குறைந்த அளவே சின்ன சின்ன அசைவுகளும் குரல்களும்!


இவள் அமர்ந்த இடத்தில் மணல் சூடு தணியாமல் இருந்தது. சுரணையின்றிப் போன உடல் அதை உணரவும் இல்லை. மூளையும் உடலுக்கு அதனை உணர்த்த முற்படவில்லை. மனமோ வினித்துடனேயே சுழன்றது.


மாலையான போது கடற்கரை உற்சாகம் கொள்ளத் தொடங்கியது. கடலை, அலையை, காற்றை, மணலை, கிளிஞ்சல்களை என்று இரசிக்க, விளையாட, ஆட்டம் போட, கவலையை மறக்க, காதல் பேசி மயங்க; மயக்க… வயது பாரபட்சமில்லாத மக்கள் கூட்டம்!


சைந்தவி இவற்றையெல்லாம் உணராத மனநிலையிலே தன்னுடைய சுற்றுப்புறம் மறந்து அமர்ந்திருந்தாள்.


‘நான் உன்னைக் காதலிப்பதாக எப்போ சொன்னேன்?’


மனம் வினித் சொன்னதிலேயே உழன்று கொண்டிருந்தது.


‘ஆழ்ந்த அந்தக் குரல் என் இதயம் நுழைந்து ஊடுருவ, பாள பாளமாய்ப் பிளந்து போனதே நெஞ்சம்?’


‘அவன் சொல்லவே இல்லையா? என்னைக் காதலிப்பதாக? ஒரு தடவை கூட வினித் என்னைப் பார்த்து; என்னுடைய கண்களினுள் பார்வையைச் செலுத்தி, ‘ஐ லவ் யூ சைந்தவி என்று சொல்லவே இல்லையா?’


யோசித்துப் பார்த்தாள்.


“ஆமாம்!”


மெல்ல மேலும் கீழும் அவளுடைய தலையாடியது.


“வினித் சொல்லவே இல்லை. அவன் கேட்ட மாதிரி எப்போ சொன்னான். ஒரு தடவை கூடச் சொல்லவில்லை. என்னைக் காதலிப்பதாக. அவன் என்கிட்ட லவ் சொல்லவே இல்லை.”


“நான் மட்டுமே லவ் பண்ணுறேனா, ஒன் சைடட்லி?”


இந்த நினைப்பே தவிப்பை ஏற்படுத்தியது.


‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு சைவி.’


கைகளை அழுந்தப் பற்றிக்கொண்டு உதடுகளில் குழையும் புன்னகையுடன்; கண்களில் வழியும் கனிவுடன்; மென்மை தோய்ந்த குரலுடன் சொல்லியிருக்கிறானே!


அந்த மென்மையும் கனிவும்…


இதனை அவனுக்கு நினைவு படுத்திய போது அவன் அதற்குப் பதிலும் எப்படிச் சொன்னான்?


“பிடிச்சிருக்குன்னு சொன்னா அதற்கு அர்த்தம் காதல் ஆகிடுமா சைவி? டோண்ட் பீ ஸில்லி!”


முகத்தைச் சுளித்து எரிச்சலாகிப் போய் அவன் கேட்ட விதம்… அவனுக்குக் கூட எரிச்சலாகப் பேச வருமா? வரும் என்று தெரிந்த வினாடி நேரம், தான் அதிர்ந்தது நினைவிலாடியது.


“யாரு நான் ஸில்லியா வினித்?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
ஏமாற்றமான குரலில், அவனை ஆழமாகப் பார்த்தவாறு கண்கள் கலங்கி வழிய, மூக்கும் சிவந்து போய், உதடுகள் துடிக்க அவன் முன்னே நின்ற போது, இவளை அப்படிக் காணச் சகியாமல் அணைத்து நின்று கூறியிருந்தான்.


“இப்பவும் சொல்றேன், உன்னை எனக்குப் பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும். ஆனால், வாழ்க்கை துணையா, ஒரு காதலியா நான் எப்போதும் உன்னை நினைச்சதே இல்லை. அப்படியொரு உணர்வு எனக்குள் வரவுமில்லை.”


“அப்போ நம்ம பழக்கம்? நீ பிடிக்கும்னு சொல்றது…”


அடிபட்ட குழந்தையாய் மனம் அரற்ற அவன் முன்னால் நின்றிருந்தாலும் தயங்காமல் அவனை ஏறிட்டுக் கேட்டு விட்டாள்.


“ஹே சைவி என்ன கேட்கிறே நீ? ஒரு பொண்ணு கூட ஆண் பேசிப் பழகினா அது காதல் தான்னு சொல்ற நூற்றாண்டிலா நாம் வாழ்ந்திட்டு இருக்கோம்? கமான் யா பிராடண் யுவர் மைண்ட். அதுவும் நம்ம வேலையின் பொருட்டு நாம் இருக்கிறதும் பன்னாட்டு கலாச்சார உலகத்தில்.


நல்லா யோசிச்சு பாரு. நான் வேற மாதிரி ஒரு லவ்வர் கிட்டே விஷமமாகப் பேசித் தொட்டு பழகுற மாதிரி உன் கிட்டே மேலே விழுந்து பழகியிருக்கிறேனா?”


“பன்னாட்டுக் கலாச்சார உலகம். ஹஹ்!”


அவன் சொன்னதை திரும்பச் சொல்லிக் கொண்டாள். கசப்பான முறுவலுடன் அவளே தொடர்ந்தாள்.


“லவ்வர்னா மேலே விழுந்து தொட்டுப் பேசி தான் பழகுவாங்களா? நம்மள மாதிரி லவ்வர்ஸ் இல்லையா வினித்?”


“ஹே நம்ம லவ்வர்ஸ் இல்லைன்னு நான் சொல்லிட்டு இருக்கேன். நீ திரும்பவும் அதையே கேள்வியா கொண்டு வர்ற!”


அவன் பயங்கரமாக எரிச்சல்பட்டுப் போய்ச் சொல்ல,


“அப்போ நீ சொன்ன பிடித்தம் லவ் இல்லை?”


ஏமாற்றத்துடன் கேட்டாள். இன்னும் வேற என்ன சொல்லப் போகிறானோ என்கிற பதைப்பு உள்ளுக்குள்ளே!


“பிடித்தம்ங்கிறது காதல்னு சொல்லி யாரு டிஃபைன் பண்ணியிருக்கா? சொல்லு பார்க்கலாம்? இரசனை இருக்கிறவங்களுக்கு பிடித்தம் ஏற்படுவது சகஜம். பூவிலிருந்து பொருள் வரை எனக்கு ரசிக்கத் தோணும். இதிலே மனங்களுக்குள்ள காதல் எங்கே இருந்து வருது?


நீ என்னைக் கவர்ந்தது நிஜம். நல்ல பொண்ணு இவள்னு உன்னைப் பார்த்ததும் எனக்குத் தோணிச்சு. பிரண்ட்ஷிப் பண்ணிக்கிட்டேன். ஏனோ உன் கண்ணுல நான் அடிக்கடி பார்த்த அலைப்புறுதல் எனக்குப் பாதிப்பை ஏற்படுத்திச்சு.


உன் வயசு பொண்ணுங்களை போலில்லாமல் எப்பவும் அமைதியா தெரிஞ்சே. உன்னைக் கலகலப்பாக மாற்றணும்னு எனக்குள்ள ஒரு பட்சி சொன்னது. அது நல்ல விஷயம் தானே? நட்புன்னா கேரிங்கா, பாசமா இருக்கிறதில்லையா?


முதன் முதலில் நாம் சந்திச்ச போது நீ எப்படி இருந்தே சைவி? அந்தச் சோகச் சித்திரமான சைந்தவியை எப்படி மாற்றி இருக்கேன்னு பாரு. உனக்குப் புரியுதா, எனக்கு உன் மேலே அன்பு இருக்குன்னு?


அக்கறையும் காட்டினேன். இன்னும் காட்டுவேன். அன்பும் அக்கறையும் காதலில்லாமல் ஒருத்தரிடம் வரக் கூடாதா?”


ஆழ்ந்த அவனுடைய பார்வை, ‘இதை, நீ தவறாகவா புரிந்து கொண்டாய்?’ என்று கேட்டது.


அவனுடைய குரலில் தெரிந்த ஆதுரமும், ‘என்னை விளக்கிவிட்டேன். இனிப் புரிந்து கொள்வாய் அல்லவா?’ என்கிற கேள்வியும் சைந்தவியைச் சென்றடைந்தன.


நீண்ட காலமாக, பாலைவனமாகக் காய்ந்து வறண்டு அன்பிற்காக ஏங்கி ஏங்கித் தவித்தவளின் வாழ்வில், இந்த வினித்தின் வருகை, மழைச்சாரலாய் அன்பில் நனைய வைத்து; தென்றலாய் மனத்தை வருடி என்னவெல்லாம் மாயம் புரிந்து விட்டது.


ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

மாயம்

மாயம்

யாரோ நீ யாரோ நான்

என்றே நாம் இருந்திடுவோமா

நீயே நான் நானே நீ

ஒன்றாகி இணைந்திடுவோமா…


எத்தனை முறை விடுதி அறையில் தனியாக வினித்தை நினைத்தபடியே, இப்பாடல் வரிகளைப் பாடிப் பார்த்தபடி ஜன்னல் கம்பிகளில் சாய்ந்து நின்று, வெளிப்புறத்தை இரசித்திருக்கிறாள்?


அப்போதெல்லாம் தூரத்தில் வினித் தன் கண்களுக்குத் தப்பாமல் படுவான். நானிருக்கிறேன் சைவி உனக்கு என்பது போல் கண்களை மூடித் திறப்பான்.


‘இனிமேல் இந்தக் கற்பனைகள் கூட என்னிடம் வரக்கூடாது. அப்படி வந்தால் நல்லதில்லை. இரண்டு பேருக்குள்ளே சங்கடமான நிகழ்வுகளைத் தருவிக்கும் அபாயம் வரலாம்.


எனக்குச் சொந்தமில்லை என்றாகிவிட்ட பின்னர் நான் அவனுடன் இணைவது பற்றி, கற்பனைகளை வளர்த்து கனவுகளிலே அலைபாயலாமா?’


பலவாறு யோசித்தபடியே சைந்தவி அவ்விடத்தைவிட்டு இம்மியும் நகராமல் அமர்ந்திருந்தாள். கவிய தொடங்கிய இருட்டை விரட்டி விட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் நிலவுப் பெண்.


உப்புக்காற்று குளிர்ச்சியுடன் வந்து கதை பேசியது.


தனிமையுடன் இனிமையான இயற்கையும் சைந்தவியைத் தேற்ற முயன்றது. பாரமான மனத்துடன் பொங்கி பொங்கி வடியும் அலைகளைக் காண காண சைந்தவிக்குள் இதம் சேர்ந்து கொண்டு வந்தது.


தான் இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசனை செய்து ஒரு முடிவெடுத்தாள். அந்த முடிவிலே நிலையாக நிற்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய மனச்சாட்சிக்கு, ‘தெரியலை’ என்று உதட்டைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னாள்.


அங்கே வினித் பல முறை இவளுடைய எண்ணுக்கு முயன்று தோற்றுப் போன கடுப்பில் இருந்தான்.


‘என்ன சொல்லிட்டேன்னு இந்த சைவி இப்படி பிகேவ் பண்றா? ஆஃபீஸ் விட்டு மதியமே கிளம்பிப் போயிருக்கா. நான் அத்தனை தூரம் பேசிட்டு தானே போனேன். இரண்டு மணி நேரம் பொறுமையா இருக்க முடியலையா?


பிரசண்டேஷன் முடிச்சிட்டுக் கூப்பிட்டா மொபைல் சுவிட்ச்ட் ஆஃப். இன்னைக்கு சாயந்திரம் மாலுக்கு போகணும்னு ஏற்கெனவே போட்டிருந்த பிளானையும் மறந்துட்டாளா? சொல்லாம கொள்ளாம இப்படியா போறது… சைவீ, எங்க இருக்க நீ?’


வினித்திற்குக் கத்த வேண்டும் போல் தோன்றியது.


அடர்ந்து வளர்ந்து ஹேர் கட்டிங்கிற்காக காத்திருக்கும் தலைமுடிக்குள் இரண்டு கை விரல்களை நுழைத்து அழுத்திக் கொண்டான்.


காலால் பக்கத்து ஜல்லிக் குவியலை எட்டி உதைத்தான். அப்படி உதைத்ததில் என்ன கிட்டிற்று?


கழுத்தைச் சுற்றியிருந்த டையை தளர்த்திவிட்டு முதல் இரண்டு சட்டை பட்டன்களை திறந்துவிட்டான்.


இனி மேல் சைவி எங்கே வரப் போகிறாள். அவளுக்காகக் காத்திருப்பது வீண் என்று நினைத்த வினாடி, பைக்கை உதைத்து அந்த இடத்திலிருந்து உறுமலுடன் கிளப்பினான்.


வினித், சென்னையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான். அந்த நிறுவனம் அமைந்துள்ள வளாகத்திலேயே வேறு நிறுவனங்களும் உள்ளன. அடுக்கு மாடிக் கட்டிடங்களாகத் திகழும் அந்த இடத்தில், பெரும்பாலும் பன்னாட்டு ஸ்தாபனங்கள் தாம் இருக்கின்றன.


அதே வளாகத்திற்குள்ளேயே வேறு கட்டிடத்தில் சைந்தவி வேலை செய்யும் நிறுவனமும் இருக்கிறது.


இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது மிக மிகத் தற்செயலான ஒன்று. முதலில் ஏற்பட்ட அந்தச் சந்திப்புகள் வினித்திற்குள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.


எப்போது நினைத்துக் கொண்டாலும், அந்த ‘கேட் வாக் மௌஸ் வாக்’ உரையாடல் அவனுக்குப் புன்சிரிப்பை தோற்றுவித்தது.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
506
151
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 02:

அன்று… ஆறு மாதங்கள் ஆன்சைட்டில் இருந்துவிட்டுத் திரும்பிய வினித்திற்கு அந்நாள் என்றும் மறக்க முடியாத முக்கியமான நாளானது! அன்று தான் அவன் சைந்தவியை முதன்முதலாகப் பார்த்தான்.

அதிகாலையில் லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய வினித், வீட்டிற்குச் சென்று குளித்து முடித்து அடித்துப் போட்டதைப் போல் தூங்கினான்.

படுக்கையில் விழுகும் முன்னர் ஞாபகமாக அலாரம் வைத்துவிட்டே படுத்தான். அது சரியான நேரத்திற்கு ஒலித்து அவனை எழுப்பி விட்டது. அவனோ ஜெட் லேகில் (நேர வித்தியாசத்தால் ஏற்படும் பகல் இரவு குழப்பம் தரும் உடல் சோர்வு) சிக்கியிருந்தான்.

ஜெட் லேக் எல்லாம் சில மணி நேரங்களிலே சரியாவது இல்லை. இந்தப் பயணக் களைப்பு சமன்பட ஒரு வாரம் வரை கூட ஆகும்.

இதில் வினித் வேறு ஆன்சைட்டில் இருந்து கிளம்பும் முன்னர் ஒரு வாரம் பத்து நாட்களுக்கு மேல் காலம் நேரம் பாராமல், தூக்கத்தைத் துறந்து வேலையில் மூழ்கியிருந்தான்.

சில நாட்களாகத் தொலைத்த தூக்கம், பிரயாண அலுப்பு எல்லாம் இப்போது சேர்ந்து கொண்டது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க விடேன் என்று கெஞ்சிய இமைகளை கடினப்பட்டுப் பிரித்தான்.

அன்றே அலுவலகத்திற்குப் போக வேண்டும் என்றிருக்க, தூக்கத்தைத் தொடர முடியாமல் அவனுடைய கடமை முன் நின்று அழைத்தது.

மற்ற வேலைகளை ஒன்றிரண்டு நாட்கள் சென்றும் பார்க்கலாம்… எதற்காவது அவனது உடனடி பார்வை தேவைப்பட்டால் தொலைபேசி, மின்னஞ்சல் என்று கவனித்து முடித்துக் கொள்ள ஆப்ஷன் இருக்கிறது.

அவன் சென்று வந்த ஆன்சைட் அலுவலக வேலைக்கு அடுத்த கட்ட திட்டமிடல் நடந்து கொண்டிருந்தது. அதற்கு வெகு முக்கியத் தேவையான சில அறிக்கைகள் இவன் வசம் இருந்தன. அவற்றை அலுவலகத்தில் அன்றே ஒப்படைக்க வேண்டும்.

வினித்தே நேரில் சென்று உரியவர்களிடம் தந்துவிட்டு, ஓர் அரை மணி நேரம் சந்திப்பில் கலந்து கொள்ள இருந்தான். திட்டமிட்டிருந்த அச்சந்திப்பை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போட முடியாது.

ஆன்சைட் & ஆஃப் ஷோர் நிலை மாற்றம், கால மாற்றம் எல்லாம் சில நேரங்களில் சங்கடங்களைத் தருபவை. அடிக்கடி பறப்பவர்கள் பழகி விடுகிறார்கள். வினித்திற்கும் இதெல்லாம் பழகிவிட்டது. அவனுமே வேலை நிமித்தம் பலமுறை ஆன் சைட் சென்று வந்திருக்கிறான்.

ஒரு வழியாகப் படுக்கையை விட்டு எழுந்தவன் கண் எரிச்சலையும் உடல் சோர்வையும் ஒதுக்கினான். கவனமெல்லாம் அலுவலகத்தை அடைவதில் இருந்தது. தயாராகி அலுவலகத்தைச் சென்றடைந்த போது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது.

எப்போதும் போல அன்றும் அலுவலகத்திற்கு ஃபார்மல்ஸில் வந்திருந்தான். கிளம்பும் நேரம் இன்னுமொரு தடவை குளித்துவிட்டுப் பளிச்சென உடுத்திக் கொண்டு வந்திருந்தாலும் சோர்ந்து காணப்பட்டான்.

கண்கள் சிவந்து; இமைகள் வீங்கி; முகம் உப்பலாகக் காணப்பட்டது.

வண்டியை அதற்குரிய நிறுத்தும் இடத்தில் விட்டுவிட்டு, அவனின் அலுவலகக் கட்டிடத்தை நோக்கிச் சென்றான். சில மாதங்கள் கழித்து வந்ததால் அவனுக்கு அச்சூழ்நிலையே வித்தியாசமாய்!

சுற்றுப்புறத்தைப் புன்னகையுடனே உள்வாங்கிக் கொண்டு நடந்தான். கண்களுக்குக் குளிர்ச்சியாய் அப்பசுமை!

சுவரோர நீர்வீழ்ச்சிகளின் அடுக்குகளிலிருந்து தெறித்த நீரின் தீண்டல் அவனை வரவேற்பதாய்!

அவன் கொண்டு வந்த அறிக்கைகள் அடங்கிய ஃபைலை உள்ளங்கைகளுக்குள்ளே மேலும் கீழும் திருப்பி ஆட்டியபடி நடந்தான்.

ஒரு திருப்பத்தில் ஒரு பெண் எதிரே வந்து கொண்டிருந்தாள். அப்பெண்ணிற்கு வழிவிடும் பொருட்டுச் சற்று நகர்ந்தான். அப்போது கையிலிருந்த ஃபைல் அலங்கார வளைவில் தட்டி கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் உள்ளே இருந்த காகிதங்கள் சிதற, அதைப் பார்த்த வினித் பதறிப் போனான்.

கீழே குனிந்து அவற்றை வேக வேகமாய் சேகரிக்கத் தொடங்கினான். ஒன்றிரண்டு காகிதங்கள் பறந்து தூரம் செல்ல, பார்த்திருந்த அந்தப் பெண்ணும் ஓடிப் போய் அவற்றைக் கைப்பற்றி எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

வினித்திற்கு அவளின் செய்கை பேருதவியாக இருந்தது. கூட நின்று முக்கிய அறிக்கைகள் பறந்து போகாமல் கை சேர்த்தற்கு அவளிடம் நன்றி சொன்னான்.

“தாங்க் யூ வெரி மச்! ரொம்ப முக்கியமான ரிபோர்ட்ஸ். நல்ல சமயத்தில் உதவியிருக்கீங்க மிஸ்…”

நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தான். பதிலுக்கு எதிரே இருந்தவள் புன்னகைக்கவும் இல்லை, தன்னுடைய பெயரை அவன் நிறுத்திய இடத்தில் பொருத்தவும் இல்லை.

வினித்தின் சில மணித்துளிகளின் பதற்றம் அவளைப் பெரிதாக பாதிக்கவில்லை. நிர்மலமான ரியாக்‌ஷன் கொடுத்தாள்.

வினித்தும் அவளுடைய பதிலையோ பிரதிபலிப்பையோ எதிர்பார்க்கும் நிலையிலில்லை. முக்கியமான அறிக்கைகளை வேறு எந்தச் சேதாரமும் இல்லாமல் கைகளில் தந்தவளின் மீது அவனுக்கு மிகுந்த நன்றியுணர்வு வந்திருந்தது.

அந்தச் சந்தோசத்தில் எட்டி அவளுடைய கைகளைப் பற்றி, “ஐ’ம் வினித்! தாங்க்ஸ் அகெயின்!” சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அவனுக்கு மீட்டிங் தொடங்குவதற்கு முன்னர் அலுவலகத்திற்குள்ளே இருக்க வேண்டிய அவசரம். அதனால் உடனே அவளைக் கடந்துவிட்டான்.

அவளுடைய பெயர் சைந்தவி. குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று நாட்களாவது உடற்பயிற்சி மற்றும் தூய்மையான வெளிக்காற்றின் சுவாசத்திற்காக அலுவலக வளாகத்தைச் சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவள்.

இன்றும் அப்படி வந்த போது வினித்திற்கு உதவினாள். வினித் அவளுடைய கவனத்தில் பட்டான். கருத்தில் பதியவில்லை. அவள் அப்படித்தான்.

நட்புக்கரத்தை எளிதில் நீட்டிவிட மாட்டாள். ரிசர்வ்ட் நேச்சர். மிகவும் சுருக்கமான நட்பு வட்டம். பெரும்பாலும் அவளே அவளுடைய உலகம். அவளை முக்கால்வாசி நேரமும் தனியாகத் தான் பார்க்க முடியும்.

உடன் பணி புரிபவர்களில் சிலர் சைந்தவியை நன்றாக அறிந்தவர்களாக ஓர் இடைவெளி விட்டே பழகினார்கள். அவள் கூப்பிட்டால் ஒன்றிரண்டு பேர் இந்த மதிய நேர வாக்கிங்கிற்கு வரக் கூடியவர்களே.

தனக்குப் பிடித்த நேரத்தில் தன்னுடைய சௌகரியத்திற்கு நடைப்பயிற்சியை மேற்கொள்பவள் அதைத் தாண்டி யோசிப்பதில்லை.

பேசுவாள், அவளுக்குத் தோன்றும் போது. புன்னகைப்பாள், அவசியத்திற்கு. கொண்டாட்டம்; அரட்டை; கலகலப்பு; சிரிப்பு ஆகியவற்றை சைந்தவி தூரம் பண்ணிக் கொண்டாளா, இல்லை, இவையெல்லாம் அவளைக் கண்டு தயங்கினவா?

வினித், தானே அவளுடைய கையைப் பிடித்துக் குலுக்கி, அறிமுகம் செய்து கொண்ட போதும், அவள் அவனுடன் பேசவில்லை. சாதாரணப் புன்னகை கூட சைந்தவியின் உதடுகளில் தோன்றவில்லை.

சோஷியலைஸிங் என்பது ஒரு கலை. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு புன்னகை… ஒரு தலையசைப்பு தருவது எல்லாம் சராசரியான நட்புணர்வைத் தரக்கூடிய குணங்கள். அலுவலகச் சூழ்நிலைக்கேற்ப சில குணங்கள் அவசியமானவை.

நன்றி சொன்னவனுக்கு அதனை ஏற்றுக் கொண்டாள் என்று காட்டிட ஒரு தலையசைப்பு தரலாமில்லையா? செய்யவில்லை சைந்தவி. வினித் இருந்த அவசரத்திலே அவளுடைய செயல் அவனைப் பாதிக்கவில்லை.

ஆனால், அவனைக் கடந்து சில அடிகளை எடுத்து வைத்ததும் சைந்தவி நினைத்தாள், ‘நான் ஏன் இப்படி?’. அவளுக்கே அவளுடைய நடவடிக்கைகள் சில சமயங்களிலே புதிராய்!

தன்னுடன் பேசியவனைக் கடந்து அவளுடைய மூளை வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது.

அப்போது தட் என்று சத்தம்… ஓர் அதிர்வைத் தந்தபடி ஒலித்தது.

மெதுவாகக் கேட்டாலும், யாரோ எதுவோ விழுந்துவிட்டதை மிகத் துல்லியமாக அந்த அதிர்வு சைந்தவிக்கு உணர்த்தியது.

உடனே திரும்பிப் பார்க்க, சற்று முன்னர் தன்னிடம் பேசியவன் தரையில் கிடந்தான். அவனுடைய கைகளில் இருந்த ஃபைலை அந்நேரங்கூட கெட்டியாகப் பிடித்திருந்தான். வெளியே எட்டிப் பார்த்த சில காகிதங்கள் காற்றில் படபடத்தன.

அவளுடைய உள்ளுணர்வு அவளிடம் சொன்னது, ‘என்னாச்சுன்னு போயி பாரு சைந்து’.

வேகமாக சைந்தவி அவனருகில் சென்றாள். விழுந்தது தலைக்குப்புற என்றாலும் அவனுடைய முகத்தின் ஒரு பக்கம் மட்டும் தரையிலிருந்தது. பாதி முகம் அவளுடைய கண் பார்வையில் தெரிய, சலனமில்லாமல் விழுந்து கிடந்தான். ஃபைலில் ஒரு கையை வைத்தபடி அவனைத் தொட்டு எழுப்ப முயற்சித்தாள்.

“மயக்கமாகிட்டானா? ஹலோ ஹலோ…”

அவளையும் மீறி, அவளுடைய ஹலோ சற்று உரக்கவே வந்தது. இருந்தும் அவனிடம் அசைவே இல்லை. உதவிக்காக அவள் சுற்றும் முற்றும் பார்வையால் அலச, அந்த நேரம் யாரும் அருகே தென்படவில்லை.

“என்ன பேர் சொன்னான்? வி… சம்திங்… ம்ம்… வினோத்தா? வினோத் வினோத்!”

அவன் அறிமுகப்படுத்திக் கொண்ட பெயர் அவளுக்கு நினைவிலே இல்லை. ஆகையால், வினித் அவளுக்கு வினோத் ஆனான்.

சில வினாடிகள் சென்றிருக்க, அவனுக்கு மூச்சிருக்கிறதா என்று ஆராய முகத்தின் அருகே குனிந்தாள். மூச்சு வந்தது. கூடவே ஒரு வாசனை ஒன்றும் வந்தது.

அவனுடைய பெர்ஃப்யூமில் மிதமான வகையில் வெளிப்பட்ட சிகார் வாசத்தைத் துல்லியமாய் உணர்ந்தவள் மூக்கைச் சுருக்கிக்கொண்டே சொன்னாள்.

“குடிச்சிட்டு ஆஃபீஸ் வந்திருக்கானா!”

‘சிகார் எப்படித் தண்ணி அடிச்சதாச்சோ!’ ஆண்டவனுக்கே வெளிச்சம். மாஸ்குலின் தன்மையை ஆழமாய் எடுத்துக்காட்டிய பெர்ஃப்யூமில் மிகுதியான வகையில் வெளிப்பட்ட மற்ற வாசனைகள் எல்லாவற்றையும் அவளுடைய நாசி உதாசீனப்படுத்தியது போல.

“என்ன கூத்தோ போ. இப்ப உன்னை எப்படி எழுப்ப? தண்ணீ…”

தண்ணீர் பைப்பைத் தேடி அலைந்தன கண்கள். ஞாபகம் வந்தவளாகச் சட்டெனத் தலையில் அடித்துக் கொண்டாள்.

“மடியிலேயே வாட்டர் பாட்டிலை வச்சிட்டு எங்கே தண்ணீன்னு தேடிட்டிருக்கேன். அறிவுக்களஞ்சியம்!”

போற்றிக் கொண்டாள் தன்னுடைய மறதியை.

“எச்சி தண்ணியை முகத்தில் தெளிக்கவா? ம்ப்ச்… ஆபத்துக்குப் பாவமில்லைன்னு சொல்வாங்களே…”

முணுமுணுத்துக் கொண்டே இடுப்புப்பட்டியிலிருந்த பாட்டிலை உருவி வினித்தின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள். அவனிடம் பிரதிபலிப்பு எதுவுமில்லை. சற்றுத் தயங்கியவள் கை நிறையத் தண்ணீரை எடுத்து அவன் முகம் முழுவதும் வேகமாக அடித்தாள்.

முகம் முற்றிலும் ஈரமாகி தண்ணீர் வழிய, அதற்குப் பலன் கிடைத்தது. அவனிடம் மெல்லிய அசைவு தெரிந்தது.

அதைப் பார்த்ததும் அவனுடைய தோளைத் தட்டி, “வினோத்… வினோத்… கெட் அப்.” என்றாள்.

அவளுடைய குரல் அவனை எட்டியது. விழிக்கத் துடித்தவனால் உடனே முடியவில்லை. ஆனால் யோசனையாக…

‘வினோத்தா? யாரு? யாரு யாரைக் கூப்பிடுறாங்க?’ நினைத்தான்.

ஒன்றும் புரியாமல் கண்களைத் திறந்தான். அவனுடைய முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்த சைந்தவிக்கு அந்தக் கண்ணின் சிவப்பு நிறம் தான் முதலில் பட்டது.

வினித்தின் கண்ணைக் கூர்மையாகப் பார்த்த சைந்தவி “தண்ணியடிச்சிட்டு ஆஃபீஸ் வந்தா இப்படித் தான்.” என்றாள்.

வினித்தை நோக்கிச் சொன்ன வார்த்தைகள் அவனைச் சரியாகச் சென்றடைந்து புலன்களை ஊக்குவிக்க, “வாட்! என்ன சொன்ன இப்போ?” அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து வினவினான்.

“நீ… நீங்க குடிக்கலையா?”

‘தவறாக எண்ணிவிட்டேனா?’ நினைத்துக்கொண்டாள்.

“பாகல் (பைத்தியம்)!”

ஏற்கெனவே வேதனையில் இருந்தவன் அவளைக் கடிந்தான். அவன் சொன்ன ஹிந்தி வார்த்தை புரிந்தும் சைந்தவியோ சலனமில்லாமல் அவனைப் பார்வையிட, அவனே சொன்னான்.

“ஒன்னுமே குடிக்காம வந்தாலும் மயக்கம் வரும்.”

கண்களை மூடிக்கொண்டான். தன் பாட்டில் தண்ணீரைக் கொடுக்கலாமா வேண்டாமா என்று சைந்தவி நினைக்கும் போது வினித் சொன்னான்,

“ஜெட் லாக்! ஆன்சைட்ல இருந்து மார்னிங் தான் வந்தேன்.”

சைந்தவி உடனே தன்னுடைய தவறுக்காக மன்னிப்புக் கேட்டாள்.

“சாரி!”

“ம்ம்… கையைப் பிடிச்சி ஹெல்ப் பண்ணு… நான் எழுந்துக்கணும்.”

“இதோ…”

வலது கையை அவனை நோக்கி நீட்டினாள். வினித் ஒரு கையைத் தரையில் ஊன்றி, மறு கையால் அவளைப் பற்றிக்கொண்டு எழுந்தான்.

சைந்தவி அப்போது தான் நெற்றியோரத்தில் இருந்த அவனுடைய காயத்தைக் கவனித்தாள்.

“ப்ளட் வருது வினோத். உன் நெத்தியிலே காயம் பட்டிருக்கு. அந்தப் பெஞ்சில் உட்கார்ந்துக்கோ. நான் யாரையாவது கூட்டிட்டு வர்றேன்.”

நெற்றியைத் தொட்டுப் பார்த்தவாறே அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்த வினித், “நான் வினித். வினோத் இல்லை. எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. அவசரமா போகணும். தா… உன் தண்ணியை. குடிச்சிட்டுப் போறேன்.” அவளிடம் தண்ணீர் பாட்டிலை கேட்டான்.

கைக்குட்டையை உருவி நெற்றிக்காயத்தில் வைத்துக்கொண்டான். தயங்கியபடியே தன் பாட்டிலை நீட்டினாள்.

“இட்ஸ் ஓகே தா” அவளுடைய தயக்கத்தைப் புரிந்தவனாக வாங்கிக் குடித்தான்.

நேரமாவதை உணர்ந்து மறுபடியும் அவளுக்கு நன்றி கூறி விடைபெற, “இப்போ பரவாயில்லையா… ஹாஸ்பிட்டல் போக வேண்டாமா?” யோசனையுடன் சைந்தவி கேட்டாள்.

“ஐ’ம் ஓகே… நோ நீட் டு கோ டு தி ஹாஸ்பிட்டல்.”

அந்த நேரத்தில் அந்தப் பக்கமாகச் சிலர் வந்தார்கள். அதில் வினித்துடன் வேலை பார்ப்பவர்கள் இரண்டு பேர் இருக்க, வினித்தை அந்த இடத்தில் பார்த்ததும், “ஹே வினித் டா!” எதிர்பாராத ஆச்சரியத்துடன் அவனருகே சென்றார்கள்.

அருகே வந்ததும் அவனுடைய நிலையை பார்த்துச் சற்றுப் பதறித் தான் போனார்கள். என்ன நடந்தது என்று கேட்டறிந்து, சைந்தவிக்கு நன்றி சொல்லிவிட்டு வினித்தைத் தங்களுடனே அழைத்துக்கொண்டு போனார்கள்.

அங்கிருந்து போகும் முன்னர் அவளுக்குப் புன்னகையுடன் ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டே சென்றான் வினித். அப்போதும் அவளுடைய பெயர் அவனுக்குத் தெரியாமலேயே போய்விட்டது.

வினித் வேலையில் ஒன்றி பிஸியாக மூன்று வாரங்கள் விரைந்திருந்தன. ஒரு மதிய வேளையில் புதிய கிளையண்ட் ஒப்பந்தத்தை முன்னிட்டு ஏற்பாடாகியிருந்த லன்ச்சன்னிற்கு போகப் புறப்பட்டு வெளியே வந்தவனின் கண்களில் சைந்தவி விழுந்தாள்.

புன்னகையுடன் அவளை நெருங்கினான்.

“ஹலோ!”

அந்தக் குரலில் திரும்பிப் பார்த்தாள் சைந்தவி. அவனை அடையாளம் கண்டு கொண்ட சலனமில்லை அவளிடம். வெறுமனே பார்த்தாள்.

வினித் குழம்பிப் போனான்.

“என்னைத் தெரியலையா? வினித்… அன்னைக்கு மயக்…”

அவளுக்கு அவனை நன்றாகத் தெரிந்தது. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

அவனே வந்து பேசி, நினைவுப்படுத்திய பின்னர் “ஹலோ” சொன்னாள். வேறு பேசவில்லை. பேசி உரையாடலை வளர்க்கும் எண்ணம் தோன்றாதவளாக நின்றிருந்தாள்.

அவளுடைய முகத்தையே சில வினாடிகள் பார்த்தவன் கேட்டான்.

“இப்பவாச்சும் உன் பெயரைச் சொல்லலாமில்லையா?”

“ஐ’யம் சைந்தவி”.

“நைஸ் டு மீட் யூ அகெயின் சைந்தவி!” வலது கையை அவளை நோக்கி நீட்டியபடி நின்ற வினித்தின் உதடுகளிலிருந்த புன்னகை, அவளிடம் இல்லை. ஆனால், அவனுடைய கையைப் பற்றிக் குலுக்கி நின்றாள்.

‘இவளிடம் எதுவோ வித்தியாசமாப்படுது.’ வினித்திற்குத் தோன்றியது.

“மீண்டும் சந்திப்போம் சைந்தவி. கொலீக்ஸ் காத்துக்கிட்டிருப்பாங்க. லன்ச்சன்னிற்கு போகணும். பை! டேக் கேர்!”

அவன் சொன்ன ‘டேக் கேர்’ அவளிடம் சேர்ந்தது.

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

வினித்தின் அந்த ‘டேக் கேர்’ கொண்டு வந்து சேர்த்த இதத்தில், அவன் போனதும் சைந்தவியின் உதடுகளில் மெலிதாய்ப் புன்னகை உதித்தது.

அந்தக் கணத்தில் அவளுடைய மனத்தில் தோன்றிய இதம், வெளிப்படையாகவே முகத்தில் வெளிச்சம் பரப்பியது.

அதன் பின்னர் வந்த நாட்களில் வினித்தின் நினைவில் சைந்தவி அவ்வப்போது வந்தாள். தனக்கு தக்கச்சமயத்தில் உதவி செய்தவளை அவன் மறக்கவில்லை. அவளை நினைக்கும் போது ஏனோ அவனுக்குள் சிந்தனை.

‘நாம் அன்றாடம் சந்திக்க நேரிடும் பெண்களைப் போல் சைந்தவி இல்லையோ? இல்லை நான் தான் அப்படி வித்தியாசமா கற்பனை பண்ணிக்கிறேனா? என் கற்பனையோ நிஜமோ. எதுவோ ஒன்னு. இருக்கட்டும். எப்படி இருந்தாலும் சைந்தவியுடன் நட்பாகிக்கணும்.’

அவனுக்கு அவளிடம் நல்லுணர்வு பிறக்க, தன் நட்புக்கரத்தை நீட்டும் வாய்ப்பை எதிர்பார்க்கத் தொடங்கினான்.