லாக் டவுன் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஆர்த்தி ரவி அவர்கள் நமது தளத்தில் தனது புதிய கதையுடன் உங்களை சந்திக்க வருகிறார்..........அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அறிமுகம்:

இனிய வணக்கம்!

கற்பனைகளுக்குப் பஞ்சமில்லை என்றாலும் எல்லாக் கற்பனைகளும் கதைகளாக உருப்பெருவது கிடையாது!

அவை வெறும் கற்பனைகளாக நில்லாமல் கதைகளாக உங்களை வந்தடையுமாயின், ஓர் எழுத்தாளருக்கு அதை விட அதிகச் சந்தோசம் தரும் விசயம் வேறு என்ன இருக்க முடியும்?

ஒவ்வொரு கதையும் எழுத்தாளருக்குப் பிரசவித்த குழந்தையே!

நல்ல மழை நாளில், ஓர் இதமான வானிலையில் விரிந்த என் எண்ணங்களை நினைத்ததும் எழுத அமர்ந்துவிட்டேன்.

சூழ்நிலை உருவாக்கும் மாற்றங்கள்… நிலைத்த உறவும் மாறலாம். உலகத்தில் நிலையானது; ஒருவருக்குச் சொந்தமானது எது? விடைகளற்ற கேள்விகள் உலகத்தில் பல உள்ளன.

ஓர் எளிய கதையுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். கதை மாந்தர்களை வாசிப்பில் அறிந்து கொள்ளலாம். முதல் அத்தியாயம் வரும் வாரத்தில் பதிவிடுகிறேன்.

வாசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]
முகப்புத்தகப் பக்கம்: Tamil novel blooms


நன்றி!

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 

sudharavi

Administrator
Staff member
#2
அத்தியாயம் 01:

இயற்கைக்குத் தான் எத்தனை சக்தி?

மாயமும் செய்யும். மந்திரமும் செய்யும். தன்னையே தஞ்சம் என்று வந்தடையும் உயிரினங்களுக்கு விதவிதமாக ஆறுதலளிக்கும் சக்தி படைத்தது இயற்கை எழில்.

சூரியனும் நிலவும்; வானமும் மேகமும்; காற்றும் மழையும்; கடலும் அலையும்… எத்தனை பரிமாணங்கள்?

பட்டப்பகலில் அனலாகத் தகிக்கும் சூரியனும் உதயமாகும் போது வானத்துடன் கலந்து கூடி, கண்களுக்கு விருந்தளிக்கிறானே.

இதோ, சைந்தவியின் மனத்தைப் போலவே பல மணி நேரம் வெப்பத்தை வாரியிறைத்துவிட்டு, தற்போது சாந்தமாய்… சாத்வீக அழகுடன்… மஞ்சளும் ஆரஞ்சுமாய்க் கூடிய பொன்னிறமாய்க் கவிழ்ந்து… தன்னை வெறிக்க முற்படுகிறவளை ஆதுரத்துடன் பார்த்து விடைபெற முயலுகிறான்.

அவளும் அதனை உணர்ந்து கொண்டது போலக் காணப்பட்டாள். இத்தனை நேரமிருந்த மனத்தின் புழுங்கல் சற்றுத் தணிந்திருப்பதை உணருகிறாள். ஆனாலும் வேதனை மட்டுப்படுவதாயில்லை.

அவ்வளவு எளிதாக மட்டுப்படக் கூடிய துயரமல்ல இவ்வகை. உயிர் வரை வலிக்கிறது என்று சொல்வது இது தானா? உள்ளிருந்து கனத்த உருண்டை ஒன்று உருண்டு உருண்டு இரணத்தை அதிகமாக்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது.

காதல்! இந்தப் பாழாய்ப் போகும் காதல்! நெஞ்சைப் பிளந்து, உருகி, உருக்குலைய வைக்கும் காதல்! விழித்துக்கொண்டே கனவிலேயே குடும்பம் நடத்த வைக்கும் காதல்… சித்தனையும் பித்தம் கொள்ள வைக்கும் காதல்… அறிவாளியையும் முட்டாளாக்கிப் பிதற்ற வைக்கும் காதல்… திறமைசாலியைத் தவற வைக்கும் காதல்… அப்பாவியையும் மூர்க்கனாக்கித் திரிய வைக்கும் காதல்…

அப்பப்பா எத்தனை எத்தனை!

கேட்டிருக்கிறாள். இவ்வாறாகப் பலவற்றைக் கேட்டிருக்கிறாள். பெண்கள் விடுதியிலே பல வருடங்களைக் கழித்தவளுக்குக் காதலைப் பற்றிய அலசல்கள் நன்றாகவே தெரியும். சரளமாக நிறைய புலம்பல்கள் காதிற்கு வரும்.

இப்படியெல்லாம் பலவாறாக நொந்து போய் வரும் வசனங்களைக் கேட்டும் இவளுக்குக் காதலை ஏன் பிடித்தது?

ஏன் தனக்குக் காதல் ஆசை வர வேண்டும்? இப்போது இப்படித் தவிக்க வேண்டும்?

ஒரு வேளை மற்றவர்களைப் போலத் தானும் அன்பான பெற்றோர், விட்டுக் கொடுத்தலும் சண்டையுமாகப் பாசமிக்க உடன் பிறப்பு, ஆதரவான உறவுகள் என்று அமையப் பெற்றிருந்தால்… இப்படி அன்பிற்காக ஏக்கம் பிடித்து; அன்பையும் பாசத்தையும் வெளியே தேடிப் போயிருந்திருக்கத் தேவையில்லை.

பெற்றோரிடம் அன்பு கிடைக்கவில்லை என்று சொல்வது அபத்தம். நினைத்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அம்மா அப்பாவை மட்டும் சுற்றி வந்தாள். ஞாபகங்கள்… சாபமாகவும் ஆகின்றன. ஏன்? தனக்கு மட்டும் சராசரியான வாழ்வு ஏன் அமையவில்லை?

‘அப்படி எதற்கு ஆசைப்பட்டு விட்டேனாம்?’

நினைக்கத் தான் முடிந்தது. எதை நினைத்தாலும் முடிவில் வினித்தே வந்து கண்களுக்குள் நிற்கிறான். அவனுடைய அன்பான வார்த்தைகளை மறக்க முடியுமா?

அவன் அன்பில் தான் கரைந்து மெழுகாக உருகிப் போனது நேற்று நடந்ததைப் போலவே இருக்கிறதே!

மனத்தை வருடிவிட முயலும் உப்புக்காற்றில் சைந்தவியின் கூந்தல் கலைந்து பறக்கத் துடித்தது. உனக்காக நானிருக்கிறேன்… வேகத்துடன் மேலெழுந்த அலைகளைக் காட்டிக் காட்டிச் சொன்னது கடல்.

‘இந்தக் கடலைத் தஞ்சம் அடைந்துவிட்டால் தான் என்ன? அன்னையாக அரவணைத்து மடி தாங்கிக் கொள்வாள்.’

திடீரென அபத்தமான யோசனை வந்தது. சைந்தவியின் கண்கள் நீர்ப்பரப்பில் நிலைத்து நின்றன. பல நிமிடங்கள். கனத்த கணங்கள் அவை.

அவளே முன்னும் பின்னும் தன்னுடைய அபத்தத்தை அலசினாள்.

“சேச்சே என்ன நினைத்து விட்டேன்! அவ்வளவு கோழையா நான்?”

“கோழைகளா செத்துப் போவது?”

“இல்லை.”

“நான் சாக மாட்டேன்.”

“எப்படி முடியும்? என்னால் முடியாது! அதுக்கு நிறைய மனோபலம் வேணும்.”

“பேசாம எங்கேயாவது போயிடலாம். உலகத்தில் வேற எத்தனையோ இடங்கள்... இந்த வேலை வசதிப்படாட்டி வேற வேலையும் கிடைக்கும். இங்கேயே இருந்து இவனைப் பார்த்திட்டே இருந்தா நான்… என்னாலே முடியாது! ரொம்ப கொடுமை அது!”

“என்னைக்காவது ஒரு நாள் வினித் என்னைத் தேடி வந்தால்? அப்போ நான் உயிரோட இருக்கணும்.”

தானாகப் பேசிக் கொண்டாள். மெல்லிய குரலில். வெளியே கேட்காத மாதிரி. தனக்குத் தானே அறிவுறுத்திக்கொண்டு; தன்னைத் தானே திடமாக்க முயன்று!

நேரம் ஓடிற்று.

முன் மாலைப் பொழுதில் துடிக்கும் இதயத்துடன்; பொங்கிச் சிவந்த விழிகளுடன், திக்கற்றப் பறவையாய்; யாருமற்ற அனாதரவான நிலையில்…

‘இனி என்ன? இனி என்ன?’
 

sudharavi

Administrator
Staff member
#3
தொடர்ந்து பூதாகரமாகப் பயமுறுத்திய கேள்வி. எங்கோ போக வேண்டும்… எங்கு எனப் புரியாமல் கடற்கரைக்கு வந்திருந்தாள்.

காதலும் வினித்துமாகக் கரைந்தாள். அழுதாள். மருகினாள்.

‘என்ன கேட்டான் என்ன கேட்டான்?’

மீண்டும் மீண்டும் வினித் இன்று கூறியதை நினைத்துப் பார்த்துக் கொண்டாள்.

‘நான் உன்னைக் காதலிப்பதாக எப்போ சொன்னேன்?’

‘இப்படித்தானே கேட்டான்? கேள்வியாக உயர்ந்த புருவத்துடன் நிதானமாக என் கண்களைப் பார்த்துக்கொண்டே. எப்படி முடிந்தது அவனால்?’

சொல்லிவிட்டானே!

“ஏன் அப்படிச் சொன்னே வினித்? துடித்துப் போயிட்டேன். இன்னும் இங்கே வலிக்குதுடா! இதுவரை நான் பட்டது பரவாயில்லைன்னு ஆகிட்ட. உனக்கு நிஜமா காதலில்லயா?”

இடது மார்புப் புறம் போன அவளுடைய கை அழுத்திக் கொண்டது. வலியைத் தாங்க முயல்வது போல உதட்டைக் கடித்துக் கொண்டாள். மூடிய கண்ணிமைகளின் இடையே கரகரவெனக் கண்ணீர் வழிந்தது.

அங்கே இங்கே என்று எதுவும் கண்களுக்குப் புரியாமல் அலைந்துவிட்டு, முன் மாலையிலேயே அங்கு வந்துவிட்டாள். அப்போது கடற்கரையில் ஆள் அரவம் அவ்வளவாக இல்லை. தொலைவில் கட்டு மரங்கள் இரண்டு தட்டுப்பட்டன. குறைந்த அளவே சின்ன சின்ன அசைவுகளும் குரல்களும்!

இவள் அமர்ந்த இடத்தில் மணல் சூடு தணியாமல் இருந்தது. சுரணையின்றிப் போன உடல் அதை உணரவுமில்லை. மூளையும் உடலிற்கு அதனை உணர்த்த முற்படவில்லை. மனமோ வினித்துடனேயே சுழன்றது.

மாலையான போது கடற்கரை உற்சாகமாகத் தொடங்கியது. கடலை, அலையை, காற்றை, மணலை, கிளிஞ்சல்களை என்று இரசிக்க, விளையாட, ஆட்டம் போட, கவலையை மறக்க, காதல் பேசி மயங்க; மயக்க… வயது பாரபட்சமில்லாத மக்கள் கூட்டம்!

சைந்தவி இவற்றையெல்லாம் உணராத மனநிலையிலே தன்னுடைய சுற்றுப்புறம் மறந்து அமர்ந்திருந்தாள்.

‘நான் உன்னைக் காதலிப்பதாக எப்போ சொன்னேன்?’

மனம் அதிலேயே உழன்று கொண்டிருந்தது.

‘ஆழ்ந்த அக்குரல் என் இதயம் நுழைந்து ஊடுருவ, பாள பாளமாய்ப் பிளந்து போனதே நெஞ்சம்?’

‘அவன் சொல்லவே இல்லையா? என்னைக் காதலிப்பதாக? ஒரு தடவை கூட வினித் என்னைப் பார்த்து; என்னுடைய கண்களினுள் பார்வையைச் செலுத்தி… ஐ லவ் யூ சைந்தவி என்று சொல்லவே இல்லையா?’

யோசித்துப் பார்த்தாள்…

“ஆமாம்!”

மெல்ல மேலும் கீழும் அவளுடைய தலையாடியது.

“வினித் சொல்லவே இல்லை. அவன் கேட்ட மாதிரி எப்போ சொன்னான். ஒரு தடவை கூடச் சொல்லவில்லை. என்னைக் காதலிப்பதாக. அவன் லவ் சொல்லவே இல்லை.”

“நான் மட்டுமே லவ் பண்ணுறேனா… ஒன் சைடட்லி?”

இந்த நினைப்பே தவிப்பை ஏற்படுத்தியது.

‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு சைவி.’

கைகளை அழுந்தப் பற்றிக்கொண்டு... உதடுகளில் குழையும் புன்னகையுடன்; கண்களில் வழியும் கனிவுடன்; மென்மை தோய்ந்த குரலுடன்… சொல்லியிருக்கிறானே!

அந்த மென்மையும் கனிவும்…

இதனை அவனுக்கு நினைவுப்படுத்திய போது அவன் அதற்குப் பதிலையும் எப்படிச் சொன்னான்?

“பிடிச்சிருக்குன்னு சொன்னா அதற்கு அர்த்தம் காதல் ஆகிடுமா சைவி? டோண்ட் பீ ஸில்லி!”

முகத்தைச் சுளித்து எரிச்சலாகிப் போய் அவன் கேட்ட விதம்… அவனுக்குக் கூட எரிச்சலாகப் பேச வருமா? வரும் என்று தெரிந்த வினாடி நேரம், தான் அதிர்ந்தது நினைவிலாடியது.

“யாரு நான் ஸில்லியா வினித்?”

ஏமாற்றமான குரலில், அவனை ஆழமாகப் பார்த்தவாறு கண்கள் கலங்கி வழிய, மூக்கும் சிவந்து போய், உதடுகள் துடிக்க அவன் முன்னே நின்ற போது, இவளை அப்படிக் காணச் சகியாமல் அணைத்து நின்று கூறியிருந்தான்.

“இப்பவும் சொல்றேன், உன்னை எனக்குப் பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும். ஆனால், வாழ்க்கைத் துணையா… ஒரு காதலியா நான் எப்போதும் உன்னை நினைச்சதே இல்லை. அப்படியொரு உணர்வு எனக்குள் வரவுமில்லை.”

“அப்போ நம்ம பழக்கம்? நீ பிடிக்கும்னு சொல்றது…”

அடிபட்டக் குழந்தையாய் மனம் அரற்ற அவன் முன்னால் நின்றிருந்தாலும் தயங்காமல் அவனை ஏறிட்டுக் கேட்டு விட்டாள்.

“ஹே சைவி என்ன கேட்கிறே நீ? ஒரு பொண்ணு கூட ஆண் பேசிப் பழகினா அது காதல் தான்னு சொல்ற நூற்றாண்டிலா நாம் வாழ்ந்திட்டு இருக்கோம்? கமான் யா ரிலாக்ஸ் யுவர் மைண்ட். அதுவும் நம்ம வேலையின் பொருட்டு நாம் இருக்கிறதும் பன்னாட்டு கலாச்சார உலகத்தில்.

நல்லா யோசிச்சு பாரு. நான் வேற மாதிரி… ஒரு லவ்வர் கிட்டே விஷமமாகப் பேசித் தொட்டுப் பழகிற மாதிரி உன் கிட்டே மேலே விழுந்து பழகியிருக்கேனா?”

“பன்னாட்டுக் கலாச்சார உலகம்… ஹஹ்…”

சொல்லிக் கொண்டாள். கசப்பான முறுவலுடன் அவளே தொடர்ந்தாள்.

“லவ்வர்னா மேலே விழுந்து தொட்டுப் பேசித் தான் பழகுவாங்களா? நம்மள மாதிரி லவ்வர்ஸ் இல்லையா வினித்?”

“ஹே நம்ம லவ்வர்ஸ் இல்லைன்னு நான் சொல்லிட்டு இருக்கேன். நீ திரும்பவும் அதையே கேள்வியா கொண்டு வர்ற!”
 

sudharavi

Administrator
Staff member
#4
“அப்போ நீ சொன்ன பிடித்தம் லவ் இல்லை?”

“பிடித்தம்ங்கிறது காதல்னு சொல்லி யாரு டிஃபைன் பண்ணியிருக்கா? சொல்லு பார்க்கலாம்? இரசனை இருக்கிறவங்களுக்குப் பிடித்தம் ஏற்படுவது சகஜம். பூவிலிருந்து பொருள் வரை எனக்கு இரசிக்கத் தோணும். இதிலே மனங்களுக்குள்ள காதல் எங்கே இருந்து வருது?

நீ என்னைக் கவர்ந்தது நிஜம். நல்ல பொண்ணு இவள்னு உன்னைப் பார்த்ததும் எனக்குத் தோணிச்சு. பிரண்ட்ஷிப் பண்ணிக்கிட்டேன். ஏனோ உன் கண்ணுல நான் அடிக்கடிப் பார்த்த அலைப்புறுதல் எனக்குப் பாதிப்பை ஏற்படுத்திச்சு.

உன் வயசுப் பொண்ணுங்களைப் போலில்லாமல் எப்பவும் அமைதியாவே தெரிஞ்சே. உன்னைக் கலகலப்பாக மாற்றணும்னு எனக்குள்ள ஒரு பட்சி சொன்னது. அது நல்ல விசயம் தானே? நட்புன்னா கேரிங்கா பாசமா இருக்கிறதில்லையா?

முதல் முதலில் நாம் சந்திச்ச போது நீ எப்படி இருந்தே சைவி? அந்தச் சோகச் சித்திரமான சைந்தவியை எப்படி மாற்றி இருக்கேன்னு பாரு. உனக்குப் புரியுதா? எனக்கு உன் மேலே அன்பு இருக்குன்னு. அக்கறையும் காட்டினேன். இனியும் காட்டுவேன். அன்பும் அக்கறையும் காதலில்லாமல் ஒருத்தரிடம் வரக் கூடாதா?”

ஆழ்ந்த அவனுடைய பார்வை… ‘இதை, நீ தவறாகவா புரிந்து கொண்டாய்?’ என்று கேட்டது.

அவனுடைய குரலில் தெரிந்த ஆதுரமும், ‘என்னை விளக்கிவிட்டேன். இனி புரிந்து கொள்வாய் அல்லவா?’ என்கிற கேள்வியும் சைந்தவியைச் சென்றடைந்தன.

நீண்ட காலமாகப் பாலைவனமாகக் காய்ந்து வறண்டு அன்பிற்காக ஏங்கி ஏங்கித் தவித்தவளின் வாழ்வில், இந்த வினித்தின் வருகை, மழைச்சாரலாய் அன்பில் நனைய வைத்து; தென்றலாய் மனத்தை வருடி என்னவெல்லாம் மாயம் புரிந்து விட்டது.

ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
மாயம்
மாயம்
யாரோ நீ யாரோ நான்
என்றே நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா…

எத்தனை முறை விடுதி அறையில் தனியாக வினித்தை நினைத்தபடியே, இப்பாடல் வரிகளைப் பாடிப் பார்த்தபடி ஜன்னல் கம்பிகளில் சாய்ந்து நின்று, வெளிப்புறத்தை இரசித்திருக்கிறாள்?

அப்போதெல்லாம் தூரத்திலே வினித் தன் கண்களுக்குத் தப்பாமல் படுவான். நானிருக்கிறேன் சைவி உனக்கு என்பது போலக் கண்களை மூடித் திறப்பான்.

‘இனி மேல் இந்தக் கற்பனைகள் கூட என்னிடம் வரக் கூடாது. அப்படி வந்தால் நல்லதில்லை. இரண்டு பேருக்குள்ளே சங்கடமான நிகழ்வுகளைத் தருவிக்கும் அபாயம் வரலாம்.

எனக்குச் சொந்தமில்லை என்றாகிவிட்ட பின்னர் நான் அவனுடன் இணைவதைப் பற்றிக் கற்பனைகளை வளர்த்து கனவுகளிலே அலைப்பாயலாமா?’

பலவாறு யோசித்தபடியே சைந்தவி அவ்விடத்தைவிட்டு இம்மியும் நகராமல் அமர்ந்திருந்தாள். கவியத் தொடங்கிய இருட்டை விரட்டி விட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் நிலவுப் பெண். உப்புக்காற்று குளிரலாய் வந்து கதை பேசியது.

தனிமையும் இனிமையான இயற்கையும் சைந்தவியைத் தேற்ற முயன்றன. பாரமான மனத்துடன் பொங்கிப் பொங்கி வடியும் அலைகளைக் காணக் காணச் சைந்தவிக்குள் இதம் சேர்ந்து கொண்டு வந்தது.

தான் இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசனை செய்து ஒரு முடிவெடுத்தாள். அந்த முடிவிலே நிலையாக நிற்க முடியுமா என்று கேள்வியெழுப்பிய மனச்சாட்சிக்கு, ‘தெரியலை’ என்று உதட்டைக் கடித்துக்கொண்டு பதில் சொன்னாள்.

அங்கே வினித் பல முறை இவளுடைய எண்ணுக்கு முயன்று தோற்றுப் போன கடுப்பில் இருந்தான்.

“என்ன சொல்லிட்டேன்னு இந்தச் சைவி இப்படி பிகேவ் பண்றா? ஆஃபீஸ் விட்டு மதியமே கிளம்பிப் போயிருக்கா. நான் அத்தனை தூரம் பேசிட்டு தானே போனேன். இரண்டு மணி நேரம் பொறுமையா இருப்பதுக்கு என்ன…

பிரசண்டேஷன் முடிச்சிட்டுக் கூப்பிட்டா மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப். இன்னைக்குச் சாயந்திரம் மாலுக்குப் போகணும்னு ஏற்கெனவே போட்டிருந்த பிளானையும் மறந்துட்டாளா? சொல்லாம கொள்ளாம இப்படியா போறது. சைவீ… எங்கே இருக்கே நீ!”

வினித்திற்குக் கத்த வேண்டும் போலத் தோன்றியது.

அடர்ந்து வளர்ந்து ஹேர் கட்டிங்கிற்காகக் காத்திருக்கும் தலைமுடிக்குள் இரண்டு கை விரல்களை நுழைத்து அழுத்திக் கொண்டான்.

காலால் பக்கத்து ஜல்லிக் குவியலை எட்டி உதைத்தான். அப்படி உதைத்ததில் என்ன கிட்டிற்று?

கழுத்தைச் சுற்றியிருந்த டையைத் தளர்த்திவிட்டு முதல் இரண்டு சட்டை பட்டன்களைத் திறந்துவிட்டான்.

இனி மேல் சைவி எங்கே வரப் போகிறாள். அவளுக்காகக் காத்திருப்பது வீண் என்று நினைத்த வினாடி பைக்கை உதைத்து அந்த இடத்திலிருந்து உறுமலுடன் கிளப்பினான்.

வினித், சென்னையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான்.

இவனுடைய நிறுவனம் அமைந்துள்ள வளாகத்திலேயே வேறு நிறுவனங்களும் உள்ளன. அடுக்கு மாடிக் கட்டிடங்களாகத் திகழும் அவ்விடத்தில் பெரும்பாலும் பன்னாட்டு ஸ்தாபனங்கள் தாம் இருக்கின்றன.

அதே வளாகத்திற்குள்ளே வேறு கட்டிடத்தில் சைந்தவி வேலை செய்யும் நிறுவனம் இருக்கிறது.

இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது மிகமிகத் தற்செயலான ஒன்று. முதலில் ஏற்பட்ட அச்சந்திப்புகள் வினித்திற்குள் இன்றும் பசுமையாக நிற்கின்றன.

எப்போது நினைத்துக் கொண்டாலும், அந்த ‘கேட் வாக் மௌஸ் வாக்’ உரையாடல் அவனுக்குப் புன்சிரிப்பைத் தோற்றுவித்தது.

 

sudharavi

Administrator
Staff member
#5
அத்தியாயம் 02:

ஆறு மாதங்களாக ஆன்சைட்டில் இருந்த வினித் திரும்பி வந்த அந்த நாளில் தான் வினித்தும் சைந்தவியும் முதல் முதலாகப் பார்த்துக் கொண்டது.

அன்று அதிகாலையிலே லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினான் வினித். வீட்டிற்குச் சென்று குளித்து முடித்து அடித்துப் போட்டதைப் போலத் தூங்கினான்.

படுக்கையில் விழுகும் முன்னர் ஞாபகமாக வைத்த அலாரம், சரியாக ஒலித்து அவனை எழுப்பி விட்டது. ஆனால், ஜெட் லாக் (நேர வித்தியாசத்தால் ஏற்படும் பகல் இரவு குழப்பம் தரும் உடல் சோர்வு) அவனை நிரம்பப் படுத்தியது.

சாதாரணமாகவே சில மணிநேரங்களில் இந்த மாதிரியான பயணக் களைப்பு சமன்படாது. இதில் வினித், ஆன்சைட்டில் இருந்து கிளம்பும் முன்னர் ஒரு வாரம் பத்து நாட்களுக்கு மேலேயே காலம் நேரம் பாராமல், தூக்கத்தைத் துறந்து வேலையிலே மூழ்கியிருந்தான்.

அப்படித் தூக்கத்தைத் துறந்தது, பிறகு பிரயாண அலைச்சல் எல்லாம் சேர்ந்து கொண்டு அவனை மேலும் கண் மூடி அலுப்பாற்றச் சொன்னது.

ஆனால், தொடர்ந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வினித்திற்கு முடியாமல் போனது. தூக்கத்தைத் தொடர முடியாமல் அவனுடைய கடமை அழைத்தது.

அவன் அன்றே அலுவலகத்திற்குப் போக வேண்டியது அவசியமாயிருந்தது. மேலிடத்திற்குத் தேவையான அறிக்கைகளை உடனே சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தான்.

மற்றவைகளைக் கூடத் தொலைபேசியிலோ மின்னஞ்சல் மூலமாகவோ சாதித்துக் கொள்ளலாம். முக்கியமான அடுத்தக் கட்டத் திட்டமிடலுக்குத் தேவையான அறிக்கைகள் இவன் வசமிருந்தன. அவற்றை நேரில் சென்று உரியவர்களிடம் கொடுத்துவிட்டு, அரை மணி நேரத்திற்கு அதன் பொருட்டு ஏற்பாடாகியிருக்கும் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும். அச்சந்திப்பைத் தள்ளிப் போட முடியாது.

ஆன்சைட் ஆஃப் ஷோர் நிலை மாற்றம் கால மாற்றம் எல்லாம் சில நேரங்களில் சங்கடங்களைத் தருபவை. ஆனாலும் அப்படிப் பறப்பவர்கள் பழகிவிடுகின்றனர். வினித் பல முறை ஆன் சைட் போய் வருபவன்.

ஒரு வழியாக எழுந்திருந்தான் வினித். கண்கள் எரிந்தன. பரபரவென்று தேய்த்துவிட்டுக் கொண்டான். அவனுடைய உடல் சோர்வை ஒதுக்கினான். கவனமெல்லாம் அலுவலகத்தை அடைவதிலே இருந்தது. அவன் தயாராகி அலுவலகத்தைச் சென்றடைந்த போது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது.

எப்போதும் போலவே பளிச்சென்று அலுவலக உடையில் வந்திருந்தான். நன்றாக உடுத்திக் கொண்டு வந்திருந்தாலும் அவனிடம் சோர்வு தென்பட்டது. கண்கள் சிவந்து; இமைகள் வீங்கி; முகம் உப்பலாகக் காணப்பட்டது.

வண்டியை நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு, தன்னுடைய அலுவலகக் கட்டிடத்தை நோக்கிச் சென்றான். சில மாதங்கள் கழிந்து அங்கு வருவதால் வித்தியாசமாய் உணர்ந்தான். சுற்றுப்புறத்தைப் புன்னகையுடனே உள்வாங்கிக் கொண்டு நடந்தான்.

கண்களுக்குக் குளிர்ச்சியாய் அந்தப் பசுமை; சுவரோர நீர்வீழ்ச்சிகளின் அடுக்குகளிலிருந்து தெரித்த நீரின் தீண்டல் என்று சூழ்நிலை அவனை வரவேற்கும் விதமாய் உணரச் செய்தது. கையிலிருந்த அறிக்கைகள் அடங்கிய ஃபைலை ஆட்டியபடி முன்னேறினான்.

ஒரு திருப்பத்தில் எதிரே வந்து கொண்டிருந்த பெண்ணிற்கு வழிவிட்டு சற்று நகர்ந்தவனின் கையிலிருந்த ஃபைல், அலங்கார வளைவில் தட்டிக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் சிதறிய காகிதங்களைக் கண்டு அவனுக்குப் பதற்றம் வந்தது.

அவசரமாகக் குனிந்து அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினான். ஒன்றிரண்டு காகிதங்கள் பறந்து தூரம் செல்ல, எதிரே வந்த அப்பெண் விரைவாக நகர்ந்து அவற்றைப் பற்றி எடுத்து வந்தாள். வினித்திற்கு அவளின் செய்கை பேருதவி. சரியான நேரத்தில் அறிக்கைகளைப் பறக்கவிடாமல் தடுத்தவளுக்கு நன்றி சொன்னான்.

“தாங்க் யூ வெரி மச்! ரொம்ப முக்கியமான ரிபோர்ட்ஸ். நல்ல சமயத்தில் உதவியிருக்கீங்க மிஸ்…”

நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தான். பதிலுக்கு எதிரே இருந்தவள் புன்னகைக்கவும் இல்லை. தன்னுடைய பெயரை அவன் நிறுத்திய இடத்தில் பொருத்தவும் இல்லை. வினித்தின் சில மணித்துளிகளின் பதற்றம் அவளை அண்டியதாகத் தெரியவில்லை.
 
Status
Not open for further replies.