லாக் டவுன் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
அவனுடைய வேலையிலே ஒன்றிப் போனான். இருவரும் ஒன்றாகச் செல்லும் மதிய நேர நடைகள் நின்றுவிட்டன.

வினித்தின் உலகத்தில் சைந்தவி மட்டுமில்லையே? அவனுக்கு வேறு கடமைகளும் இருப்பதால் அவற்றின் ஆக்கிரமிப்பில் நாட்கள் நிமிடங்களாகின.

அடுத்தடுத்து இரண்டு தடவை மும்பைக்குப் போய் வந்தான்.

கோபம்; ஏமாற்றம்; இயலாமை என்றிருக்கும் போது மூளை வேகமாக யோசிக்கும். ஆனால், விவேகமாக யோசிக்காது. சைந்தவிக்குத் தெரிந்திருந்தாலும், உணர்ச்சிப்பட்டிருந்த நேரத்திலே எல்லாவற்றையும் வேக வேகமாகத்தான் நடத்தினாள்.

வெவ்வேறு வேலைகளுக்கும் அதே வேகத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கினாள். முதலில் விண்ணப்பித்த மூன்றும் அவளுடைய தகுதிகளுக்குத் தக்கதாயில்லை. அதை அவளும் உணரவே இல்லை. மின்னஞ்சல் ஒன்று வரும் வரையில்.

அதிலே குறிப்பிட்டிருந்த வேலைக்கான தலைப்பைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டாள்.

“இதுக்குப் போயா ரெஸ்யூமே அனுப்பி வச்சிருக்கேன்!”

பரபரவென்று மற்ற வேலைக்கான தகுதிக் குறிப்புகளையும் பங்களிப்பு விபரங்களையும் ஆராய்ந்தாள். எதுவுமே உவப்பானதாக இருக்கவில்லை.

அதன் பிறகே சைந்தவி நிதானித்தாள். இனி பார்த்துச் செய்ய வேண்டும் என்று மண்டைக்குள் ஏற்றிக் கொண்டாள்.

அவளுடைய வேகமான செயல்கள் அப்பாவிடமிருந்து வந்த குணம் என்று தோன்றிற்று.

உதட்டைக் கடித்தபடியே ஜன்னல் அருகே சென்று தோட்டத்தைக் கடந்து சாலையை வெறித்தாள். சனிக்கிழமையின் இரவை வாகனப் போக்குவரத்து மிகவும் பிஸியாக வைத்திருந்தது.

சிவப்பு மஞ்சள் விளக்கொளிகளின் அசைவையும் வேகத்தையும் அளந்தது பார்வை.

எண்ணங்கள் வேகத்துடன் அப்பாவைப் பற்றிக் கொண்டன. அவரிடம் நிதானம் இருந்திருந்தால் தன்னுடைய வாழ்க்கையில் தனிமை வந்திருக்கவே வந்திருக்காது என்று நிச்சயமாகத் தெரிந்த ஒன்றை மீண்டும் நினைத்துக்கொண்டாள்.

“இப்போ அதை எல்லாம் நினைச்சு என்ன ஆகப் போகுது? போனது திரும்ப வராது. அனுபவிச்சதும் இல்லைன்னு ஆகப் போகுதா? இனி வரப் போவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கணும்.”

முறுவலின் கசப்பு, நாவின் வறட்சியை உணர்த்தியது. மடமடவென்று தண்ணீரைத் தொண்டையில் சரித்துக்கொண்டாள்.

வினித்தினால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையில் தானும் நிதானம் இழந்து போனது புரிந்தது.

அவளுடைய அலுவலகத்திலேயே உடனடி ஆன்சைட் தேவைகள் இருக்குமாயின், தான் வேலை மாற வேண்டாம் என்று நினைத்தாள் சைந்தவி.

அடுத்த அலுவலக நாளில் தன்னுடைய மேலதிகாரியைச் சந்தித்தாள்.

ஆன்சைட் போவதற்குத் தோதான வேறு பிராஜக்ட் தனக்கு அமையுமா என்று முதலில் விசாரித்துப் பார்த்தாள்.

அவர், ‘அதற்கான வாய்ப்பு இப்போது கிடையாது’ என்று சொல்லிவிட்டார். அதன் பின்னரே வெளியே தேடுவது தான் தன்னுடைய முடிவிற்குச் சரியாக வரும் என்று அவளுக்குத் தோன்றியது.

‘அடுத்து வேலை கிடைத்தாலும், அங்கே ஆன்சைட் வாய்ப்பு எப்போது அமையும் என்று உறுதியாகத் தெரியாது. அப்படி உடனே வருவது எல்லாம் அரிதான அதிர்ஷ்டம்’ நினைத்துக் கொண்டாள்.

தற்போதுள்ள அலுவலக வளாகத்தைவிட்டுத் தள்ளியிருக்கும் அலுவலகம் என்றால் கூட முதலில் சேர்ந்து கொள்ளலாம் என்றே நினைத்தாள். வினித்தை அடிக்கடி பார்க்க நேரிடுவதைத் தவிர்க்க நல்ல வழியாக இருக்கும்.

சைந்தவி முடிவாகக் கனத்த மனதுடன் வேறு வேலையைத் தேடுவதில் தீவிரமாக இறங்கியிருந்தாள். அதில் முதல் முக்கியத் தேவையாக ஆன்சைட் வாய்ப்பைத் தரக்கூடிய நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தே விண்ணப்பித்திருந்தாள்.

தற்போதுள்ள நிறுவனத்திலிருந்து ஒரு முறை ஆன்சைட் சென்று வந்த அனுபவத்துடன்; குறிப்பிட்ட வகையில் சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருந்தாள்.

வினித்தின் வழிக்காட்டலிலும் வலியுறுத்தலிலும் தனித்துவம் வாய்ந்ததொரு டெக்னிகல் தகுதியைச் சமீபத்தில் வளர்த்துக் கொண்டிருந்தாள். புதிய டெக்னாலஜி… நுண்ணியத் திறனுடன் ஆற்றக் கூடிய பணி அது.

இந்த ‘ஸ்பெஷல் ஸ்கில் செட்’ (சிறப்புத் தகுதி) அவளுக்குப் புதிய வேலையில் நியமனம் பெறக் காரணமாகியது. அதுவும் வெகு விரைவிலேயே.

அவள், இத்தனை விரைவில் தன்னுடைய எதிர்பார்ப்பிற்குத் தக்க மாதிரி வேறு வேலை அமையும் என்று நினைத்திருக்கவில்லை. அதிலும் அந்தக் குறிப்பிடத்தக்க நிறுவனத்திலே.

இந்த வேலைக்காக நான்கு கட்டங்களைக் கொண்ட நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தகுதித் தேர்வு, வேலைத் திறனின் சோதனை மற்றும் நேர்காணல் என்று அத்தனையையும் கடப்பது சைந்தவிக்கு எளிதாக இருந்திருக்கவில்லை.

தன்னால் இயன்ற அளவு நன்றாகவே செய்திருந்த போதும், அவ்வேலை கிடைக்கும் என்று சைந்தவி எதிர்பார்த்திருக்கவில்லை.

எதிர்பாராமல் வந்த நியமனக்கடிதத்தைப் பார்த்ததும் அவளுடைய மனத்தில் சந்தோஷம் பூத்தது. சந்தோஷத்தில் இரண்டு குதி குதித்தாள். தன்னுடைய சந்தோஷத்தை உடனே வினித்திடம் பகிர மனது பரபரத்தது.

மறந்து போயிருந்தாள் அந்தக் கணம்… அவனைவிட்டுத் தூரப் போகவே இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தது. இனி சில நாட்களில் புதிய வேலையில் சேர வேண்டும். வினித்தைவிட்டுப் போகும் வாய்ப்பு கிடைத்ததிற்கான மகிழ்வா?

இதை உணராமல் குதூகலித்தாள். தன்னுடைய குதூகலத்தைக் கொண்டாட வினித்தையும் அழைத்தாள்.

சைந்தவி அழைத்த போது வினித் நீலிமாவுடன் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தான். யாருடைய அழைப்பு என்று பார்க்காமலேயே சைந்தவியின் அழைப்பை நிராகரித்தான். மூன்று நான்கு முறை முயன்று பார்த்து ஓய்ந்தாள் சைவி.

நீலிமாவைவிட வினித்திற்கு வேறு எதுவும் அந்த நேரம் பெரிதில்லை. அவளுடன் பேசி முடித்து அந்த ஞாபகத்துடன் சுற்றி வந்தான். நீண்ட நேரம் சென்றே மீண்டும் மொபைலைக் கையில் எடுத்தான்.

அப்போது தான் கவனித்தான், சைந்தவியிடம் இருந்து வந்திருந்த அழைப்புகளை. புருவச் சுறுக்கங்களுடன் யோசித்தான்…

‘இவ எதுக்கு இந்த நேரத்திலே கூப்பிட்டிருக்கா? அதுவும் இத்தனை நாளா பேசாமல் இருந்திட்டு?’
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
இனிய வணக்கம்!
எல்லோரும் நலம் தானே?
இதுவரை வந்திருக்கும் அத்தியாயங்களை வாசித்து உங்கள் விருப்பங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி! பகிராவதங்க இனி மேல் பகிருங்கள். மகிழ்வேன்.
வாரம் இரண்டு எபி தர நினைச்சாலும் முடியலை. அப்படி எழுத முடிந்தால் நானும் ஹேப்பி!
இப்போது கதைக்குப் போகலாம் வாங்க…
அன்புடன்,
ஆர்த்தி ரவி
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
அத்தியாயம் 07:

வினித்திடம் தன்னுடைய சந்தோஷத்தைப் பகிர விழைந்த சைந்தவிக்கு, அவன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் ஏமாற்றமாகிப் போனது.

முன்னிரவில் அவனுடன் பேச முயன்றிருந்தாள். அவன் பேசியிருந்தால் கண்டிப்பாக அவனை அப்போதே சந்திக்கக் கேட்டிருப்பாள். இரவு உணவை இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டு இருக்கலாம்.

அவனுடைய வழிக்காட்டலால் கற்றது… அந்தக் கூடுதல் தகுதியால் கிடைக்கப் பெற்ற வேலை… வெளிப்படையாகத் தான் நன்றி சொன்னால் முறைத்துக் கொண்டிருப்பான். வாயால் நன்றி சொல்லிட்டு இருக்காமல், நிச்சயம் அவனுக்கு ஒரு டின்னர் ட்ரீட் தர நினைத்தாள்.

ஆனால், சைந்தவி நினைத்தது எதுவும் நடக்கவில்லை. மனம் வாடிப் போயிற்று. முகத்திலும் சுணக்கம் வந்திருந்தது.

‘எப்போ என் மனசு போல நடந்திருக்கு… சந்தோஷமோ கஷ்டமோ பகிர்ந்துக்கப் பக்கத்தில் யாரு இருக்கா?’

உறவுகளற்ற தனிமையின் குவியம்… கொஞ்சம் நேரம் உம்மென்று உட்கார்ந்திருந்தாள்.

‘இதென்ன உனக்குப் புதுசா சைவி… கமான் கெர்ல். சியர் அப் யுவர்செல்ஃப்.’

தன்னைத் தானே தேற்றி, தேறிக் கொண்டதும் அதனைக் கடந்து விட்டாள்.

வினித், ஏன் தன்னுடைய அழைப்பை எடுத்துப் பேசவில்லை, மிஸ்ட் கால்களைப் பார்த்தும் இன்னும் ஏன் தன்னைக் கூப்பிடவில்லை என்று யோசனை வந்தது. அப்படி வந்திருந்த போதும், அதனைப் பெரிதாக நினைத்துப் பிடித்து வைக்கவில்லை அவள். அவனே கூப்பிடட்டும் என்று விட்டு விட்டாள்.

சில சமயங்களில் இவ்வாறு அழைப்புகள் ஏற்கப் படாமல் போகும் போது, அவனே எப்படியும் கூப்பிடுவான். இவளுடைய குறுஞ்செய்திகளைப் பார்த்தாலும் அப்படித்தான். அவசரம் என்று சொன்னால் மட்டும் நேரம் காலம் பார்க்க மாட்டான். உடனே பேசிவிடுவான் தான்.

இன்று ஒன்றும் அவசரமான விசயம் இல்லையே. சைந்தவி அவனுக்கு எந்தக் குறுஞ்செய்தியையும் அனுப்ப முனையவில்லை. நல்ல விசயத்தை அவனுக்கு நேரில் சொல்லவே விருப்பப்பட்டாள்.

வினித் அழைப்பை எடுத்துப் பேசினாலும் அவனிடம் ஃபோனில் விசயத்தை உடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அவளுடைய விடுதி அறையிலிருந்தவள், அந்த அறையை நடையால் அளந்தாள். தனியறை என்பதால் தனக்கேற்ற வகையில் அதனை வசதிப்படுத்தி வைத்திருந்தாள். அதில் அவளுக்கு நெருக்கமான சில பொருட்கள் உண்டு.

குடும்பப் படங்கள், ஆல்பங்கள், அம்மாவுடைய சிறு ஞாபகங்கள் என்றுள்ள பொருட்கள் எல்லாமும் எப்பவும் பெட்டியில் உறங்கிற்று.

மொபைலில் சில புகைப்படங்களைப் பதிவேற்றி, அவற்றைத் தன்னுடைய மின்னஞ்சலிலே சேமித்து வைத்திருந்தாள். ஏனோ, அவற்றையும் அதிகம் எடுத்துப் பார்ப்பதற்கான ஆவல் அவளுக்குள்ளே ஓங்குவதில்லை.

எப்போதாவது அரிதாக மொக்குகளைப் பெற்றுப் பூக்கும் செடியைப் போல, ஆர்வ அடுக்கில் ஜனித்துக் குவியலாகும் ஞாபகங்கள் உந்தித் தள்ளும் போது பார்ப்பதுடன் சரி.

காலத்தின் சிறப்பை எண்ணிப் பார்த்தால், சுகமும் துக்கமும்!

அழகான கவிதை போன்று அமைந்திருந்த வாழ்வு… கலைந்து போனது. சிதறலாய் ஞாபகங்களுக்குள் பிம்பங்களின் பொதிவு!

இவள் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது, விபத்தில் பறி கொடுத்த அம்மா மதுமிதாவின் முகம் கூட நினைவில் மங்கலாகிவிட்டதாகத் தோன்றியது. அதே விபத்தில் தான் ஆச்சியும் (அம்மாவைப் பெற்ற பாட்டி) தாத்தாவும் இறந்திருந்தனர்.

அம்மாவும் போய், அம்மா பக்கத்து உறவின் அரவணைப்பும் அற்றுப் போன கொடுமையைத் திருப்பிப் பார்க்கும் திராணியற்றே அவர்களின் ஞாபகங்களைத் தவிர்ப்பது.

அப்பா சரள்கண்ணன், உயிருடன் இருக்கிறார். இருந்தும் இவள் தனிமைப்பட்டிருக்கிறாள். நிராயுதபாணி என்கிற நிலையை அவர் ஏற்படவிடவில்லை. ஆனால், அவர் தனக்குத் தனிமையைத் தந்தது மன்னிக்க முடியாத குற்றமாகிவிட்டது.

முன்பு ஏக்கத்துடன் அவரிடம் முறையிட்டவள் தான். தன்னுடைய ஏக்கம்; விருப்பம் என்று அப்பாவிடம் எதுவும் போய்ச் சேரவில்லையா இல்லை கண்டுகொள்ளப்படவில்லையா என்று புரியாமல் தத்தளித்த காலம் ஒரு புள்ளியில் முற்றுப் பெற்றது.

அதிலிருந்து சில காலமாகக் கோபத்திலும் வெறுப்பிலும் தத்தளிக்கிறாள்… சரள்கண்ணனைக் குற்றவாளியாக்கி! என்ன ஒன்று… அவரைக் கூண்டில் ஏற்றவில்லை. அவ்வளவு தான்.

அவருக்கும் இவளுக்குமான உறவு விரிசல் விட்டு மட்டும் நிற்கவில்லை… பாளமாகப் பிளந்து கெக்கலித்தது. அவரிடம் இவளாகக் கூப்பிட்டுப் பேசுவது நின்றே விட்டது. அவர் கூப்பிடும் போது பேசுவதுடன் சரி.

அவரும் என்ன உணர்ந்து கொண்டாரோ? சீனச் சுவராய் ஒரு பனித்திரை!

யார், யாரிடம் முறையிடுவது?

இன்று, இந்த நிமிடம் சைந்தவிக்குத் தன்னைப் பெற்றவர்களின் நினைவு எழுந்தது. அப்பாவை மனது அவசரமாகத் தவிர்த்தது. அம்மாவின் மடியில் படுத்துக் கொள்ள மனது ஆவலாகியது.

அறையின் வலது மூலையில் உட்கார்ந்திருந்த நாற்காலி அருகே சென்றாள். அதுவும், அதன் முன்னாலிருக்கும் மேசையும் இவள் ஆறாம் வகுப்புப் போனதும் செய்யப்பட்டது. அம்மா சொல்லி, அப்பா ஒரு தச்சரை வீட்டிற்கு வரவழைத்து இருந்தார்.

“உனக்குத் தான் ராஜாத்தி… இந்தா, மாடல் பார்த்துச் சொல்லு.”

அம்மா நீட்டிய அந்தக் கேட்டலாக்கைப் பற்றியபடியே அப்போது கேட்டிருந்தாள்…

“ஐ! எனக்கே எனக்காக ஒரு டேபிளும் சேருமாம்மா? நான் உட்கார்ந்து ஹோம் வொர்க் பண்ணுறதுக்கா செய்யப் போறீங்க? அம்மாவும் நீங்களும் புதுசா இவங்க பண்ணப் போகிற டேபிளை யூஸ் பண்ண மாட்டீங்களாப்பா? இந்தப் புதுச் சேரிலே உட்கார மாட்டீங்களாம்மா?”

கணவன் சரள்கண்ணனுடைய கையை அவசரமாகப் பிடித்துக் கொண்டாள் மதுமிதா. சரள்கண்ணனை மகளுக்குப் பதில் சொல்வதைத் தடுத்துவிட்டு, அவரை ஏறிட்டுக் கண் சிமிட்டிப் புன்னகைத்தாள்.

பின்னர், இன்னும் அகலப் புன்னகையைத் தாங்கியபடி, மகளின் மின்னிய கண்களைப் பார்த்துக்கொண்டே மதுமிதா சொல்லியிருந்தாள்…

“உனக்கே உனக்குத்தான்டா இந்தப் புது டேபிளும் சேரும். அப்பாவுக்கு ஏற்கெனவே ஒன்னு இருக்கே… ஆமா, எங்க மகளுக்காக வாங்குறதிலே நாங்க உட்காரக் கூடாதாடா?”

மகளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவளுக்குப் பதிலாக,

“இல்லம்மா அப்படி இல்லம்மா…”

வேகமாக உரைத்திருந்தாள் சைந்தவி.

“உனக்குத் தான்டா சவி. உங்க அம்மா செய்யச் சொல்லி ஐடியா கொடுத்திருக்கா.”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
விரிந்த முறுவலும் கண்களில் ஒளிர்ந்த சந்தோஷமுமாகத் தன்னை உயரத் தூக்கிக் கன்னத்தில் முத்தம் வைத்த அப்பாவுக்கு முத்தம் தந்தவள், அம்மாவையும் அருகில் இழுத்து முத்தம் தந்திருந்தாள்.

குடும்பமாக மூவரும் சேர்ந்து மகிழ்ந்த கணங்களில் ஒன்று, இந்த நினைவு. இவளின் கண்களின் முன்னே ஒலியிழந்தக் காட்சியாய் ஓடியது!

வேகமாகத் தலையாட்டி அப்பாவை விரட்ட முயன்றாள். அவரா அப்படியே போவார்?

‘ஸ்டைல் லுக்குடன் இருந்த அப்பாவுக்குச் சரள்கண்ணன்னு பேரு!

கொழுப்பு பிடிச்ச அப்பத்தால்ல… வேற எப்படிப் பேரு வைக்கும்? அப்புராணி புருசனைத் தலையாட்டிப் பொம்மையாயில்ல வச்சிருந்திச்சு…’

அப்பாவுடன் அவரைப் பெற்றவர்களைப் பற்றி நினைத்தாள்.

‘மதுமிதா பேருல ஸ்டைல்… லுக்கு ரொம்ப சாதாரணம். BMI (body mass index) எப்பவும் off லேடி மதுமிதாவுக்கு. அந்த ஐந்தடி இரண்டு அங்குலத்துக்குக் கூடுதலான எடையிலே.’

அம்மாவின் நிழல் பிம்பம் அவளுடைய மனக்கண்ணில் வலம் வந்தது. மெல்லிய புன்னகை வந்து உதடுகளில் படர்ந்தது.

‘மகனைக் கைக்குள்ளேயே வச்சிக்கணும்… மருமவப்புள்ள முந்தானையிலே மகன் சிக்கிக்கக் கூடாதுன்னு பிளான் போட்டு ம்ம்… மேட்சே இல்லாம ஒரு கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கு. அப்படியாப்பட்ட அப்பத்தாவுக்கே நோஸ்கட் தந்திட்டாங்களே… அம்மாவும் அப்பாவும்!’

வாய்விட்டுச் சிரித்துக் கொண்டாள். சரள்கண்ணனும் மதுமிதாவும் வாழ்ந்த வாழ்க்கை அப்படியாப்பட்டது.

‘வீட்ல பார்த்து பெரியவங்க செஞ்சு வச்ச கல்யாணம் மாதிரி இல்லாம லவ் மேரேஜ் மாதிரி அவ்வளவு மேட்சிங்கா… நல்ல மனப்பொருத்தத்துடன் வாழ்ந்த அப்பா அம்மாவை விதி எதுக்குப் பிரிச்சதோ! கடவுள் எங்களை அப்படியே வாழ வச்சி விட்டிருக்கலாம்.’

எண்ணிக் கொண்டவளுக்குக் கண்கள் கலங்கிப் போயின. துடைத்துக்கொண்டே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

“அப்பானாலே அம்மா இல்லாத வாழ்க்கையைச் சமாளிக்கத் தெரியலையே!”

கடந்த காலத்தின் கருநிழல் சூழ்க்கை அவளைப் போர்த்திக் கொண்டது.

அதனடியில் எழுந்த பெருமூச்சை அடக்க முடியவில்லை. வெளியேற்றிவிட்டு, புதுச் சுவாசக்காற்றில் புத்துணர்ச்சியைத் தேடினாள்.

“அப்பாவைவிட்டு அம்மாவை யோசிச்சுக் கூடப் பார்க்க முடியலை. அப்பாவை விட்டுட்டு அம்மா எப்போ தனியா இருந்திருக்காங்க? அவங்களை மட்டுமே நான் நினைச்சுப் பார்க்க…”

மேசையில் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

சில நிமிடங்களைக் கண்களை மூடி அமைதியில் கழித்தாள். அம்மாவின் குட்டி; குண்டு குண்டு விரல்கள் தன்னை வருடுவதாக நினைத்துக் கொண்டாள்.

ஆழ்ந்த அமைதியின் இறுதியிலே நிழல் விலகிப் போயிருந்தது. ரீ-சார்ஜ் பெற்று விட்டது மனது என்பதை உணர்ந்தாள். அதன் ஒளியைக் கண்களும் சிந்தின.

அவளுடைய துக்கத்திற்கு இதெல்லாம் வேலைக்கு ஆகாது. சந்தோஷத்திற்கு மட்டுமே இந்த ரீ-சார்ஜ் எல்லாமும் பொருத்தம்.

துக்கம்; சோகம்; ஏக்கம்; கவலை என்ற மற்ற உணர்வுகளுக்குப் பெற்றோரும், அவர்களின் நினைவுமே காரணமாகிக் கிடக்க, அப்போது எங்கிருந்து இப்படி ரீ-சார்ஜ் ஆகிக் கொள்வது?

அந்த நேரங்களில் நெஞ்சம் நாடுவது வினித்தைத் தான். அவனைத் தவிர இன்னும் ஒருத்தி கூட இருந்தாள் தான். அவள் அருணா.

தற்போது அவளிருக்கும் தொலைவும் அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளை நினைத்தும், சைந்தவி தன்னுடைய சோகங்களை அவளுடன் பகிருவதை நிறுத்திவிட்டாள். தன்னுடைய சங்கடங்களை மனக்கிடங்கில் ஒளித்து வைத்துக்கொண்டாள்.

ஆனால் புது வேலை கிடைத்திருப்பதை அருணாவிடம் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும் என்றே நினைத்தாள்.

தன்னுடைய உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி. படிபடியாக முன்னேற்றம் அடைந்திருக்கும் தன்னுடைய வாழ்க்கையின் பாதையில் அடுத்தச் சாதனை இந்தப் புதிய வேலை.

வேறு எதுவும் நினைக்காமல், இந்த நிமிடம் வேலை நியமன அழைப்புக் கடிதத்தை மறுபடியும் பார்வையிட்டாள். சந்தோஷக் காற்று இதமாக்கியது. இறுக்கமும் சோகமும் இருந்த இடம் தெரியவில்லை.

மனத்தில் குமிழியிடும் ஆனந்த அலையால் உதடுகள் பாடல் வரிகளை முணு முணுத்துக்கொண்டு இருந்தன.

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…

பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

வினித்தைத் தவிர இவள் நன்றாகப் பேசக் கூடிய, இவளிடம் அக்கறை செலுத்தும் அந்த நல்ல உள்ளம் அருணா. இருவரும் கல்லூரி தோழிகள். சென்னையில் ஒன்றாகப் பொறியியல் பட்டப் படிப்புப் பயின்றவர்கள்.

இப்போது சைந்தவிக்கு அருணாவை அழைத்துப் பேசத் தோன்றிற்று. தன்னுடைய சந்தோசத்தை இப்போதே அவளிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் மேலிட்டது.

“ஹலோ அருணா!

நீண்ட நாட்களுக்குப் பின்னர்ச் சைந்தவியின் குரல் கேட்டதில் அருணாவும் குதூகலித்தாள்.

“ஹேய் சைந்தூ! எப்படிடீ இருக்கே? நம்ம பேசி எவ்வளவு நாளாச்சு… சோன்னு கொட்டுது போ!”

தோழி தானாக அழைத்துப் பேசியதைக் கிண்டலடித்து, சோவென்று வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினாள் அருணா.

“ஹாஹாஹ்ஹா! உங்க பெங்களூரூல இப்போ என்னாலே தான் மழை சோன்னு பெய்யப் போகுதாக்கும். போடி இவளே. நேத்தும் அங்கே மழை பேஞ்சதே.”

“இந்த மழைக்கணக்கை எல்லாம் சரியா சொல்லிடு.”

வினித்தைப் பற்றிய நினைவில் உழன்றதில் நீண்ட நாட்களாகச் சைந்தவி அவளிடம் பேசி இருக்கவில்லை.

‘ஸ்ஸ்…’

நாக்கைக் கடித்துக் கொண்டாள் சைவி.

தன்னிடம் குறைபட்ட தோழியின் மனத்தில் உள்ளது தெரிந்தும், சைந்தவியும் தானிருக்கும் குதூகல மனத்தை விடாமல் பேச்சை அதன் மேலேயே வளர்த்தாள்.

“வேற என்ன கணக்கை மறந்தேனாம்… சொல்லுங்க மேடம் சொல்லுங்க. கேட்டுக்கிறேன்.”

சிரிப்புடன் கேட்டாள்.

“சரண் பிறந்த நாளுக்கு ஏன்டீ விஷ் பண்ணலை? ஒரு மெஸேஜ் போட கூட வலியெடுத்துக்கிச்சோ அம்மணிக்கு…”

சரண்… சரவணன். அருணாவின் கணவன். அருணாவிற்குப் படிப்பை முடிக்கும் முன்னரே திருமணத்தை நிச்சயித்து இருந்தனர். படிப்பை முடித்த ஒரே வாரத்திலே திருமணமும் முடிந்தது.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
அதற்கு அப்புறம் அவள் முழுக்க முழுக்கப் பெங்களூருவாசி ஆகிவிட்டாள். சரவணனின் சொந்த ஊர் பெல்காம். அருணாவின் சொந்த ஊர் ஓசூர்.

சென்னைக்கு வருவதற்கு அவளுக்கு எந்தக் காரணமும் கிடைப்பதில்லை. தோழிகள் இருவருக்குள்ளும் கல்லூரி காலத்தின் மூன்றரை வருடத்தின் வசந்தம் மட்டுமாய்!

நான்கு ஆண்டுகளில் கடைசி ஆறு மாதங்களும் சரண் சரண் சரண்… படிப்புடன் புராஜக்ட் வேலைகள் என்று இருந்தவர்களுக்கிடையே சரவணனும் புகுந்திருந்தான்.

அப்போதே சைந்தவி அருணாவை மிஸ் செய்ய ஆரம்பித்ததால், அவளை அவ்வளவாகத் தொந்தரவு செய்வது கிடையாது.

“ஓஹோ! உங்க வீட்டுக்காரரின் பிறந்தநாளுக்கு நான் விஷ் பண்ணாதது பெரிய குத்தம்ங்கிற? இதுக்கெல்லாமா வலியெடுக்கப் போகுது கைக்கும் வாய்க்கும்?”

“யாருக்குத் தெரியும்… உனக்கு எதுக்கு ஓரவஞ்சனைன்னு!”

“அடேயப்பா! அவருக்கு எம்புட்டு வக்காலத்து?”

“சொல்லுடி எதுக்கு நீ கூப்பிடலை?”

உரிமையுடன் கேள்வி கேட்டாள் அருணா. அந்த உரிமையில் சைந்தவி நெகிழ்ந்தவளாகச் சொன்னாள்…

“ஞாபகமே இல்லைடி எனக்கு. உன் பர்த் டேயையும், ஆர்ணவ் குட்டிப்பையா பர்த் டேயையும் மறந்தா என்னை என்னன்னு கேளு. சரவணன் பர்த் டே எல்லாம் நீ தானே எனக்குச் சொல்லுவ.

நம்ம பேசும் போது, ஒரு மாசத்துக்கு முன்னாலே இருந்து அதைப் பற்றி ஏதாவது சொல்லிட்டே இருப்பியா... எனக்கும் ஞாபகத்திலே பதியும். இந்தத் தடவை, நம்ம தான் பேசியே ரொம்ப நாளாச்சே!

சாரிடி! ப்ளீஸ் விட்டுடு என்னை!

இப்போ சரவணன் பக்கத்திலே இருந்தா மொபைலை அவர்கிட்டே தா. விஷ் பண்ணிடறேன். என்னைக்கு அவருக்குப் பர்த் டே இருந்திச்சு? நான் எத்தனை நாள் லேட்டு?”

“ஓகே இப்போ பிழைச்சிப் போ பரதேவதை. அடுத்த வருசம் என்ன பண்ணுறேன்னு பார்க்குறேன். பர்த் டே முந்தா நாள்டி. சரண் ஹால்லே இருக்காரு. நம்ம பேசி முடிச்சிக்கலாம் முதல்ல. அப்புறமா அவர்கிட்ட தர்றேன்… இனி மேலாவது அடிக்கடிப் பேசுடி. நான் தான் வேலை, வீடு, குடும்பம்னு பிஸியா இருக்கேன்னா, உனக்குமா நேரமில்லை?”

“சும்மா சும்மா உன்னைத் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு தான் பேசலை. அதுவுமில்லாம ஆஃபீஸ்லேயும் டைட்டா போகுது.”

“நீ பேசுறது எனக்குத் தொந்தரவா சைந்து?”

“உனக்கில்லே…”

“புரிஞ்சதுடி… ‘உனக்கில்லடி உன் மாமிக்கு’ன்னு சொல்ல வர்றே?”

சங்கடமான மௌனம் அவசரமாய் வந்து சேர்ந்து தோழிகளைத் தழுவியது. அருணாவை ஒரு பெருமூச்சால் தங்களைச் சூழ்ந்திருந்த இறுக்கத்தையும் மௌனத்தையும் ஊதித் தள்ளினாள்.

“சைந்து… மாமிக்குப் பேசத் தெரியலை. வெடுக்குன்னு வாயிலே வார்த்தை வந்திடும். அப்புறமா தான் நினைப்பாங்க… ‘நான் நல்லதுக்குன்னு நினைச்சு சொல்லப் போக இப்படித் தப்பாயிடிச்சேன்னு.’

சரணும் அடிக்கொரு தரம் அவங்களைக் கண்டிச்சு சொல்லுறான்… ‘நல்லதுன்னாலும் பார்த்துப் பேசுங்கம்மா. யாரையும் உங்க வார்த்தைகள் புண்படுத்த கூடாது!’ன்னு.

நல்லாப் பாசத்தைக் காண்பிக்கிறவங்க தான்டி. மாமியின் பேச்சு தான் அப்பப்போ குத்தும். நீ இருக்கும் போது பொரியுறவங்க, உனக்குப் பின்னால உன்னைப் பற்றிக் கவலைப்பட்டுப் பேசுறாங்க.”

அருணா வருத்தமும் ஆதங்கமுமாகத் தோழிக்கு விளக்கம் சொன்னாள்.

சைந்தவி சில தடவை அருணாவைப் பார்க்கப் பெங்களூரூவுக்குப் பயணித்திருக்கிறாள். அருணாவின் வளைகாப்பு, ஆர்ணவ் பிறந்து சில மாதங்களில், ஆர்ணவ்வின் முதல் பிறந்த நாள் இப்படிச் சென்றது போக, அலுவலக ரீதியாகச் சென்ற போது, அங்கும் சென்று எட்டிப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்.

அப்படிப் போகும் போது, சரவணனின் அம்மா இவள் புண்படும்படி இரண்டு மூன்று தரம் பேசவும், சைந்தவி அதற்குப் பிறகு அருணாவின் வீட்டிற்குப் போகவில்லை. அதிலிருந்து அருணாவுடன் பேச்சும் குறைந்து போனது.

“நீ இவ்வளவு ஃபீல் பண்ணி விளக்கம் சொல்ல வேண்டியதில்லைடி. அவங்க சரண் அம்மா. எனக்கும் அம்மா மாதிரி தான். சரி மாமா மாமி ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? அவங்க ஹெல்த் ஓகே வா?”

இதற்கு மேலே இந்தப் பேச்சை விடு. வேறு பேசலாம் என்பதாக இருந்தது சைந்தவியின் பதிலும் அவளுடைய குழலும். அருணாவும் புரிந்து கொண்டாள்.

“ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. ஆனா பெங்களூரூ அவங்களுக்குச் செட்டாகலை. பெல்காமை ரொம்ப மிஸ் பண்றாங்க. ஆர்ணவ் தான் அவங்களை இங்கே பிடிச்சி வச்சிருக்கான்.”

“அவங்கவங்க இருப்பிடம் தான் அவங்களுக்குச் சொர்க்கம். ஒரு வயசைக் கடந்துட்ட பிறகு வேற சூழ்நிலையில் போய்த் தங்களைப் பொருத்திக் கொள்வது சிரமம் அருணா.”

“நீ சொல்றது ரொம்ப சரிடி… எங்க அப்பா அம்மாவை எங்களாலே ஒரு வாரம் கூட இங்கே சேர்ந்தாப்புல பிடிச்சு வைக்க முடியாது. ஆர்ணவ்காகன்னு சொன்னா, அவனை லீவுக்கு அங்கே கொண்டு வந்து விடுன்னு சொல்லிடுறாங்க.”

“ம்ம்… ஆர்ணவ் எங்கேடி சத்தத்தையே காணோம்? அவனுக்கு ஸ்கூல் எப்படிப் போகுது?”

“பிளே ஸ்கூல் தானே. நல்லா என்ஜாய் பண்ணுறான். பாடம் படிக்கிற மாதிரி நிறைய ஆக்டிவிட்டீஸ் நடத்துறாங்க.

இப்போ அவங்க தாத்தா பாட்டியை இழுத்திட்டு வெளியே போயிருக்கான்.”

“என்னை ஞாபகம் வச்சிருக்கானாடி?”

“நல்லாக் கேட்ட போ! உன்னை எப்படிடீ மறப்பான்? நம்ம ஃபோட்டோவை எல்லாம் எடுத்து வச்சி அடிக்கடிப் பார்த்துப்பான். ஒரு நாள் நிதானமா உன்கிட்ட அவனைப் பேச வைக்கிறேன். சொல்லு வேற என்ன விசயம்?”

“ஒரு குட் நியூஸ் அருணா. அதைச் சொல்லத் தான் உன்னைக் கூப்பிட்டேன். நம்ம பேச்சு மும்முரத்திலே அது பின்னுக்குப் போயிடுச்சு. எனக்கு வேற வேலை கிடைச்சிருக்குடீ.”

“ஏய் என்னடீ சொல்லுற? புது வேலையா? வேற கம்பெனிலேயாடி? நீ வேற வேலைக்கு டிரை பண்ணுறேன்னு சொல்லவே இல்லையே? எங்கே, என்ன பொசிஷன், எப்போ வேலையில் சேரணும்?”

அவளின் மகிழ்ச்சியால் ஏற்பட்டிருக்கும் எக்சைட்மெண்டில் தொடர்ந்து கேள்விகளை அடுக்கிய அருணாவிற்குப் பொறுமையாகப் பதில் சொன்னாள் சைந்தவி. மேலும் சில விபரங்களையும் பகிர்ந்து கொண்டாள்.

“ஐ’ம் வெரி ஹேப்பிடி சைந்து! நல்ல வேலை. ரொம்பவும் இம்ப்ரசிவ்வா தெரியுது. இப்படியொரு பாதையைக் காட்டிய அந்த வினித்துக்குப் பெரிய ட்ரீட் வைக்கிறே. ரைட்டு! எனக்குச் சின்னதாவேனும் ட்ரீட் தருவியா?”

“உனக்கு என்ன வேணும் சொல்லுடி. நாளைக்கே ஆர்டர் பண்ணுறேன். நேரிலே பார்க்கும் போது ட்ரீட் வச்சிக்கலாம்.”

மனதாரச் சொன்னாள் சைந்தவி.

தோழிகளுக்கிடையே பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. இடையே சரவணனிடமும் சைந்தவி பேசினாள்.

அருணா, கடைசியில் சைந்தவியின் தந்தையைப் பற்றியும் விசாரித்தாள். பின்னர்த் தோழிக்கு நல்லது நினைத்து சிறிது அறிவுறுத்தினாள்.

“உன் மனசு எனக்குப் புரியுது. இனி எதை மாற்ற முடியும் சொல்லு? ஆனாலும், அவரைவிட்டு நீ ரொம்ப விலகிப் போறது நல்லதில்லைடி. புரிஞ்சிக்கோ சைந்து. அங்கிளுக்கு உன் மேலே பிரியம் அக்கறை எல்லாமும் இல்லாமையா என்னையும் அடிக்கடிக் கூப்பிட்டுப் பேசினாரு?

நல்லவரு தான்டி. அவருடைய சூழ்நிலை… எப்படி வாய்ச்சுதோ. ம்ம்… உனக்கு ஒரு வாழ்க்கை அமையுற வரைக்குமாவது பொறுமையை விட்டுடாதே!”

“....”

அமைதிக்குள்ளே புதைந்து கொண்டாள் சைந்தவி. அருணா அவள் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள்.

“சரி விடு. உன்னை வருத்தப்பட வைக்கலை. உன் மனசு போல இரு. நேரமாச்சுடி… நான் வச்சிடறேன். நீயும் போயி சாப்பிட்டுட்டுத் தூங்கு. உன் பிரண்ட் வினித்துக்கு ஒரு ஹாய் சொல்லிடு. பைடி!”

அன்றிரவு சைந்தவி உறங்கும் வரை வினித் அவளை அழைக்கவில்லை. மொபைலை அருகே வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டாள் சைந்தவி.

அவளுடைய உற்சாகம் சற்று மட்டுப் பெற்றிருந்தது. மறுநாள் அலுவலகத்தில், தான் வேலையில் இருந்து விலகுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி யோசித்தபடி உறக்கத்தைத் தழுவினாள்.

சைந்தவி நல்ல ஆழ்ந்தத் தூக்கத்தில் இருந்தாள். தொடர்ந்து கதவைத் தட்டும் சத்தத்தில் விழித்துக் கொண்டாள். தலைமாட்டில் இருந்த மொபைலில் மணியைப் பார்த்தாள். நள்ளிரவைத் தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தன.

‘இந்த நேரத்துல கதவைத் தட்டுறாங்க?’

யோசனையும் சிறு கலவரமுமாகக் கதவருகே சென்றாள் சைந்தவி.

“யாரு?”

 
Status
Not open for further replies.