“குடுக்கா குடுக்கா… நாள் மூச்சுடும் வேலைக்கீது. ராவுல அக்கடான்னு படுத்தா இது வேற நேரங்கெட்ட நேரத்தில வந்துக்கிணு… ஒரே பேஜாராக்கீது!”
“இது வர்றது பேஜாரா உனக்கு? வரலைன்னா தான் பேஜாரு. டைம்மோட வந்ததுக்கு எதுக்கு வருத்தப்படுறே? இந்தா பிடி. இங்கேயே போய் மாத்திக்க.”
முல்லைக்கு, சேனிடரி நாப்கினுடன் தன்னுடைய நைட்டி ஒன்றையும் தந்து, அறைக்குள்ளே அமைந்திருக்கும் குளியலறையைக் கை காட்டினாள் சைந்தவி.
சேனிடரி நாப்கினைப் பெற்றுக் கொண்ட முல்லை நைட்டியை வாங்கிக் கொள்ள மறுத்தாள்.
“இன்னாத்துக்கு நைட்டீ? வேணா வேணா. இத்த மட்டும் தா. மென்சஸ் டேட்டுக்கு ஆறு நாளு இருக்கங்காட்டி வந்து தொலைச்ச எரிச்சல்க்கா. நீ ராங்கா எடுத்துக்காத. நாள மறுநாளுக்கு மெடிக்கலாண்ட போயி வாங்கியாற இருந்தேன்.”
பேசிக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.
“இந்த அர்த்த ராத்திரில அதே நைட்டியை அலசிட்டு ஈரத்தோட படுக்கப் போறியா? பதில் பேசாம இந்த நைட்டியை வாங்கிக்க. இதைப் போட்டுட்டு, உன்னதை இந்தப் பேப்பர்ல சுத்தி வைச்சிடு முல்லை. இப்போ வெளியே போகாத. இங்கேயே படுத்துத் தூங்கு. விடியக்காலைலே எந்திரிச்சு போய் உன் வேலையைப் பாரு.”
நன்றாகத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்த முல்லைக்கு ஒரு விரிப்பையும் சின்னத் தலையணையையும் கொடுத்தாள்.
“இந்தப் பேக்கை இங்கே வைக்கிறேன். அஞ்சு நேப்கின் இருக்கு. நாளைக்குப் போதுமில்ல?”
சம்பளப் பணத்தைக் கணக்கிட்டுக் கடைக்குப் போகயிருந்த முல்லைக்குச் சைந்தவியின் முன் யோசனையும் கரிசனமும் கண்களைக் கரிக்க, “டாங்க்ஸ்க்கா... ரொம்ப டாங்க்ஸ்க்கா!” மனதார நன்றி சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டாள்.
தரையில் படுத்திருந்த முல்லையைக் கருதி, மிதமாக இயங்கிய குளிரூட்டியை அணைத்துவிட்டு, தோட்டத்துப் பக்க ஜன்னல் ஒன்றைப் பாதியாகத் திறந்து வைத்தாள் சைந்தவி.
பின்னர்க் காற்றாடியைச் சற்று அதிகப்படுத்திவிட்டு, தானும் படுத்துக் கொண்டாள். இரவு தூக்கம் கெட்டதால் மறுநாள் வழக்கத்தைவிடத் தாமதமாகவே வேலைக்குச் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டே மொபைலை மியூட்டில் வைத்தாள் சைந்தவி.
கண்களை மூடிப் படுத்ததும் முல்லை கேட்டாள்…
“இம்மாம் ராத்திரில வந்து கதவத் தட்டங்காட்டி, நீ பேயின்னு நினைச்சி பயந்துக்கிணியாக்கா?”.
முல்லை என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தும் வேண்டும் என்றே சைவி பதிலுக்குக் கேட்டாள்…
“என்னது நானு பேயா?”.
அவளுக்குச் சிரிப்புடன் பதிலைச் சொன்னாள் முல்லை...
“இல்லக்கா… உன்னைப் பேயுங்கல. பேய் வந்து கதவத் தட்டிக்கிணு நிக்கிதுன்னு நினைச்சித் தயங்கினாங்காட்டிக்க…”.
இருட்டிலும் பூத்த முறுவலுடன் சைந்தவி சொன்னாள்…
“பேய் வந்தால் ஏன் கதவைத் தட்டிட்டு வெளியே நிக்கப் போகுது முல்லை? கதவைத் தாண்டி அதுபாட்டுக்கு உள்ளே வரும் போகும்.”
சிரிப்பை அடக்கப் பெரும்பாடாக இருந்தது அவளுக்கு. அவள் சொன்னதில் படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் முல்லை.
“இன்னாக்கா பயங்காட்ற… மெய்யாலுமே பேயி வருமா? என்னமோ பேயி ஒந்தோஸ்து கணக்கா சொல்லிக்கிணுக்கீற!”
இன்ஸ்டண்ட்டாக வேர்த்து ஊற்றியது முல்லைக்கு. விடி விளக்கொளியில் தெரிந்த அவளுடைய மருண்ட பார்வையும், அவளுடைய குரலில் அப்பிக்கொண்டிருந்த கலவரமும்… சைந்தவிக்குத் தப்பவில்லை. முல்லையை நோக்கித் திரும்பிப் படுத்தவள் கலகலத்துச் சிரித்தாள்.
“பயப்படாம தூங்கு முல்லை. அப்படிப் பேய் கீய்னு இங்கே எதுவும் வராது.”
“நீ இப்படிச் சிரிச்சிக்கிணு கெட… தப்பி வர்ற பேயும் தலை தெறிக்க ஓடப் போகுது.”
தன்னுடைய ஜோக்குக்கு சைந்தவியுடன் சேர்ந்து சிரித்தாள் முல்லை.
“உனக்குத் தெரிஞ்ச பேய்க்குத் தலை இருக்கோ முல்லை?”
வம்பு வளர்த்தாள் சைந்தவி. இருவருக்கும் பொதுவான புள்ளி இந்த விடுதியைத் தவிர எதுவுமில்லை.
இருந்தும், நீண்ட நாட்களாகப் பழகியவர்கள் போல நட்பு வலை பின்னலினுள்ளே அவர்கள் இருவரும்…
எந்தப் பொருத்தமும் இல்லாத இடத்திலும் அன்பு வெளிப்படுகிறது. உறவற்ற உறவான அரவணைப்பும் அக்கறையும் மனித நேயம். பிரியம் வைக்க, மனம் மட்டும் போதும். பணம்; கல்வி; தகுதி; உறவு என்று அனைத்துமே அர்த்தமற்றவை… காலத்துடன் ஒருவரிடம் அன்பு செலுத்த தெரியாவிட்டால்!
கலகலத்துச் சிரித்தபடி இன்னும் சில நிமிடங்களைக் கரைத்துவிட்டே தூக்கத்தைத் தழுவினார்கள்.
மறுநாள் என்ன வைத்துக்கொண்டு வருகிறது என்பதை அறியாமலேயே சைந்தவி!
இரவில் முல்லையால் தூக்கம் கலைந்து, பின்னரும் நெடு நேரம் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்ததால், காலையில் சைந்தவி, நேரம் எட்டு மணியைத் தொடவிருந்த போது தான் விழித்தாள்.
முல்லை அதிகாலையிலேயே கடமையை எண்ணிச் சென்றிருந்தாள் போல். அவள் இரவை அங்கே கழித்த சுவடே இல்லாமல் ஒதுங்கச் செய்துவிட்டுப் போயிருந்தாள்.
சோம்பலாகக் கண்ணிமைகளைப் பிரித்த சைந்தவி என்றைக்கும் இல்லாத நாளாய் இன்று உற்சாகம் குமிழிட்டது.
முல்லையுடன் கழிந்திருந்த சில மணித்துளிகள் தனிமையைப் போக்கியிருந்தது. அட்லீஸ்ட், இந்த மணித்துளியில் சைந்தவிக்கு மனவுளைச்சலைத் தந்துகொண்டிருந்த விசயங்கள் ஓரளவு மறைந்திருந்தன.
அழகிய நாள் என்பது இது தானா? மனத்தின் உணர்வு தானோ சுற்றுப்புறமும்? சைந்தவிக்குள்ளே தோன்றி இருக்கும் குதூகல மனநிலை, சுற்றுப்புறத்தை இரசிக்கச் சொன்னது.
முல்லை, அறையைவிட்டு வெளியே போகும் முன்னர் இரவு திறந்து வைத்த பாதி ஜன்னலையும் சார்த்திவிட்டுப் போயிருந்தாள். அவள் சார்த்திவிட்டுப் போன ஜன்னலுடன் இன்னொன்றையும் சைந்தவி விரியத் திறந்து வைத்து, வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.
அந்த நேரத்திலேயே வெயில் சுள்ளென்று முகத்திலடித்தது. கூசும் கண்களைச் சுறுக்கி, பார்வையைச் சுழலவிட்டாள். தூரத்துச் சாலையில் தெரிந்த வாகனங்கள் மட்டுமல்ல, மக்களும் சுறுசுறுப்புடன்…
“எங்கே தான் போவாங்களோ இவ்வளவு பரபரப்புடன்?”
வியப்பாகப் புருவங்களை உயர்த்தினாள்.
‘நீயும் தான் நேற்று வரை, பரபரன்னு பறந்திட்டு இருந்த. இன்றைக்கு இப்படி வித்தியாசமாய்த் தெரியுற…’
மனது எடுத்துரைத்ததில் அவளுடைய உதடுகளில் முறுவல் பூ மலர்ந்தது.
விடுதியின் பின் பக்கம் அமைந்துள்ள பூங்காவில் இருக்கும் சரக்கொன்றை மரப்பூக்கள், தாங்களும் முறுவல் பூத்து இருந்ததில் பூமித்தாய் மஞ்சள் குளித்திருந்தாள்.
ஒரு பாத்தி டேலியாக்களும் மறு பாத்தி ரோஜாக்களும் கமுக்கமாகச் சண்டையிட்டதில் வண்ண வண்ண மலர்வுகள்…
பசுமையால் சைந்தவிக்குக் கண்கள் குளிர்ந்து போயின.
வார நாளாக இருப்பினும் தலைக்குக் குளிக்கத் தோன்றியது அவளுக்கு. குளிர்ந்த நீரில் நிதானமாகக் குளித்துவிட்டு, நீர் சொட்டும் கூந்தலைத் துவாலையில் முடிந்தாள். பெரிய கட்டங்களிட்ட மற்றொரு துவாலைக்கு உடலின் செழுமையைத் தாரை வார்த்துவிட்டு, குளியலறையைவிட்டு வெளியே வந்தாள்.
அலமாரியை விரியத் திறந்து வைத்துத் துணிகளைப் பார்வையிட்டாள். புதிதாக வாங்கி வைத்து, சீண்டப்படாமல் கிடந்ததால் சிணுங்கலுடன் ஒதுங்கிப் போயிருந்த அந்த ஆடை அவளுடைய கண்களில் பட்டது.
முத்துக்கள் பளிச்சிட்ட முறுவலுடனேயே துணிகளுக்கிடையே விரல்களை நுழைத்து, அதனை உருவி வெளியே எடுத்தாள்.
வெண் நிற கிராப்ட் பேண்ட்… அதன் கால்களின் வெளிப் பக்கவாட்டின் இரு பக்கமும் பச்சை நிற லேஸ் துணியால் தைக்கப்பட்ட பருத்தி அடைப்பட்ட மணிகள்... இராணுவ வீரர்களின் விரைப்பு மாறாத சீர் நிலையில்…
வலது ஆள்காட்டி விரலை மணிகளில் ஓட்டினாள். வினித்துடன் மாலுக்குச் சென்றிருந்த போது, ப்ரோகேட் பொடீக்கில் வாங்கியது.
சிவப்பும் பச்சையும் கலந்த பூக்களுடன் கொடி இலைகள் ஓடிய வெண்ணிற டாப்பிற்குத் தோதாய் மட்டுமில்லை, அதற்கும் உயர்வாய்!
டாப்பை எடுத்து அணிந்து கொண்டவளுக்கு இவற்றை ஷாப்பிங் செய்த நாளின் ஞாபகக் கிளரல்!