லாக் டவுன் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
உடனே பதில் தந்தான்.

“ப்ச் நீ வேற… ஏன்னு சொல்லு!”

“எதுக்கு இப்போ இந்தக் கேள்வி… இங்க திருப்பி வந்து அந்தப் பிளைட்டைப் பிடிக்கப் போறியா என்ன?”

“என்னன்னு கேட்டா பதிலை ஒழுங்கா சொல்லணும்! அதைவிட்டுட்டு… என்னாச்சு உனக்கு இந்த நேரத்தில் நக்கல் பண்ணிட்டு இருக்க?”

“உங்க அப்பாவை நீ ரிசீவ் பண்ண லட்சணத்தைப் பார்த்துட்டு வந்த கடுப்பு. வேறென்ன?”

“??????”

கண்ணை உருட்டிப் பார்க்கும் எமோஜிகளைத் தட்டிவிட்டாள்.

“நீ திருந்த மாட்டேயில்ல?”

அவன் கேட்டான்.

“??????”

அதற்கு அவளிடம் இருந்த வரிசைகட்டிக் கொண்டு இந்தத் தலைகீழ் ஸ்மைலிக்கள் பறந்தன.

“நான் தலைகீழா நின்னு பார்த்தாலும் மாட்டேன்ற? ரைட்டு! நான் இனி மேல் பேசுறதுக்கு ஒன்னுமில்லை. அந்தப் பிளைட் ஈவ்னிங் அஞ்சு மணிக்கப்புறம் தான் டைமிங். தெரியுமில்ல? அதுவும் போக இன்னைக்கு அதுவும் இல்லையாம். கேன்சல் பண்ணி வச்சிருக்காங்க.

உங்கப்பா வந்து இறங்க லேட்டாகும்னு தெரிஞ்சதும் அலெக்ஸ் வேற எதுவும் வழியிருக்கா சீக்கிரம் போகன்னு எல்லாத்தையும் பார்த்திட்டான். உங்கப்பாவுக்கும் தெரியும். உங்க வீட்டுக்குத் தகவல் தெரிவிச்சிட்டாரு.

நீ இதையெல்லாம் வெட்டியா யோசிச்சது போதும். இப்போ உருப்படியா யோசிச்சு கொஞ்சம் படா (பெரிய) மனசு பண்ணி அவருக்குத் துணையா நில்லு போதும்.

ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மனுசனை மேலும் வருத்தப்பட வச்சு தொலைக்காதே. இப்ப எனக்கு மெசேஜ் பண்ணுறதை நிறுத்து. நான் ஆஃபீஸ்ல இருக்கேன். ரொம்ப முக்கியமான வேலை போயிட்டு இருக்கு.”

“Ttylbye!”

அப்புறம் பேசலாம் என்று சைந்தவியும் வினித்திற்கு ‘பை’ சொன்னாள். அவன் முக்கியமான வேலை போயிட்டு இருக்கு என்று சொன்னதும் புரிந்து கொண்டாள். மனிதாபிமானம் எட்டிப் பார்த்ததில், அப்பாவிற்காக இப்போதும் சப்போர்ட் பண்ணிப் பேசுகிறான் என்று அவனிடம் எகிறவில்லை.

காரைச் சற்றே வேகத்துடன் தான் அந்த ஓட்டுநர் செலுத்திக் கொண்டிருந்தான். ஒரே டீ பிரேக் எடுத்ததுடன் சரி. வேறு எங்கும் அவர்கள் காரை நிறுத்தவில்லை.

அவ்வளவு விரைந்த போதும் உபயோகமில்லாமல் போனது. முக்கால்வாசி தூரத்தைக் கடக்கும் போதே நேரம் ஐந்தரையைக் கடந்து இருந்தது.

வழக்கத்தை விடவும் நாற்பது நிமிடங்களுக்கு முன்னர் வந்தடைய இருந்தும், அவர்களுடைய ஊரான தர்மபுரி வரும் முன்னரே வானம் வேறு இருட்டிக் கொண்டு வந்தது. அவர்களைத் துரத்திக்கொண்டு வந்த மழை மேகங்கள் முந்திச் சென்று இறங்கி இருந்தன.

ஊருக்குள் நுழைய பத்துக் கிலோ மீட்டர் இருக்கும் போதே மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் நஞ்சமில்லை… சரசரவென இறங்கியது பின்னர் இடி முழக்கங்களுடன் அடித்துச் சாய்க்க முயன்றது.

“திடீர்னு இப்படிப் பிடிச்சிக்கிடுச்சே!”

ஓட்டுநர் வருத்தத்தை வெளியிட்டபடியே சாலையில் கவனமானான். இருட்டும் மழையும் எனச் சேர்ந்து பார்வைக்குப் பாதையை மங்கலாக்கி இருந்தன.

“பார்த்துப்பா… நீ சூதானமா ஓட்டு. இந்த மழைக்காக எத்தனை ஜனங்க காத்திட்டு இருந்தாங்களோ. பெய்யட்டும் பெய்யட்டும். எல்லாத்துக்கும் ஒரு நேரத்தைக் குறிச்சி வச்சிருக்கு. அது அது அப்ப தானே நடக்கும். நீயும் எங்களுக்காக இந்தளவு முயற்சி செஞ்சது ரொம்ப பெரிய விசயம்ப்பா.”

சரள்கண்ணன் ஓட்டுநரிடம் பேசியபடி தனக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டார்.

சோவெனக் கொட்டும் மழையைக் கண்டதும், ‘இனி எந்த நேரம் போய் இறங்கினால் என்ன’ என்று நினைத்தவராக உட்கார்ந்திருந்தார்.

வெளியே சொல்லிவிட்டார் தான். அமைதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றாலும், அவரின் மனத்தில் துக்கத்தின் பந்தாட்டம்.

கூடைப்பந்து கூடைக்குள் விழுவது போலவே, துக்கப்பந்து உருண்டையும் மனச்சுவற்றில் முட்டி முட்டி கீழே இறங்கி உருண்டு, வயிற்றைக் கவ்வி பிடித்துக் கொண்டிருந்தது.

அப்பாவின் நிலையைக் கவனித்த சைந்தவி, எட்டி அவருடைய தோளில் கை வைத்து அழுத்தினாள். கண் மூடி அதனைக் கிரகித்தவர், திரும்பி மகளைப் பார்த்தார். அவருடைய கண்கள் கலங்கியிருந்தன.

அவளுக்கு, உள்ளுக்குள் வேதனை சுருண்டு வந்தது. ஆனால், அதனை அவரிடம் வார்த்தைகளாகப் பகிர்ந்து கொள்ளவில்லை. அவருக்கும் பேச்சில்லா மௌனம் ஆட்சி செய்த கணங்கள் ஆகினும், மகளின் செய்கையால் பொங்கி வந்தது. அவளின் கையின் அழுத்தம் பலம் தந்தது.

அப்படியே இருவரும் ஊர் போய்ச் சேர்ந்திருக்கலாம். ஆனால், அவரை வேறொரு கடமை அழைத்தது. மழை இன்னும் பெய்தாலும் வேகம் சற்றுத் தணிந்து இருந்தது. காருக்குள் நிலவிய அமைதியில் சரள்கண்ணன் நேரத்தைப் பார்க்க...

‘தாமினி… மினிக்குச் சொல்ல வேண்டும்.’ நினைத்தார்.

நினைத்த உடனேயே தன்னுடைய மொபைலை எடுத்துப் பார்த்தார். எப்போதும் எடுத்து வரும் இந்திய சிம் கார்ட்டைக் கொண்டு வரவில்லை என்கிற ஞாபகம் மீண்டும் வந்தது.

சென்னையிலேயே அதனைக் கவனித்து இருந்தார். விமானத்தைவிட்டு வெளியே வந்ததும், அங்கேயே விமான நிலையத்திலிருக்கும் பொதுத் தொலைபேசி வழியே தாமினியைக் கூப்பிட்டுப் பேசியிருந்தார்.

இப்போது நேரத்தைப் பார்த்தவருக்கு அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால் நல்லது என்று பட்டது. இந்திய நேரத்தைவிட மலேசிய நேரம் இரண்டரை மணி நேரம் முன்னே நகர்கிறது.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
இன்னும் இருபது நிமிடத்திற்குள் வீட்டைச் சென்றடையும் போது சூழ்நிலை மாறிவிடும். அப்புறம் எப்போது நேரம் அமையுமோ. இப்பவே மலேசியாவில் தூங்கும் நேரம். நினைத்துக் கொண்டே பக்கவாட்டில் திரும்பி மகளைக் கூப்பிட்டார்.

“சவிம்மா…”

“என்னப்பா…”

“உன் மொபைல்ல ஹாட் ஸ்பாட் ஆன் பண்ணி விடுறியாடா? வீட்டுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிடுறேன். அவசர அவசரமா கிளம்பினதுல நம்ம ஊரு சிம் கார்ட்டை எடுத்திட்டு வராம விட்டுட்டேன்.”

“அதுக்கென்னப்பா இதோ ஆன் பண்ணறேன். ஆமா எதுக்கு இப்போ போயி அவங்களுக்கு மெசேஜ் பண்ணிக்கிட்டு? நாம தான் இன்னும் பதினைஞ்சு நிமிசத்துக்குள்ள வீட்டுக்குப் போகப் போறோம்லப்பா.

வேணும்னா என் மொபைல்ல இருந்து கால் பண்ணி தகவல் சொல்லுங்க. யாருக்குக் கூப்பிட… நம்பர் சொல்லுங்க.”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாவுடன் நல்ல மாதிரி உரையாடத் தொடங்கினாள். அவளுடைய மனத்தில் தோன்றியிருக்கும் சிறிதளவு இளக்கமும் வினித்தின் அறிவுரைகளும் சேர்ந்து வேலை செய்யத் தொடங்கின.

ஆனால், இந்தச் சுமூக நிலைமை நீடிக்கக் கூடாது என்பது விதியின் சதி போல். தனக்குத் தானே செல்ஃப் ஆப்பு வைத்துக்கொள்ளத் தொடங்கி இருந்தார் சரள்கண்ணன்.

இந்த நிமிடம் இடைப்பட்ட காலத்தில் மகள் தன்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டது மறைந்து போயிருந்தது.

“இல்லடா இது இங்க நம்ம வீட்டுக்கில்ல. மலேசியாவுக்கு… ஊரு வந்து சேர்ந்துட்டேன்னு சொல்லிட்டேன்னா நிம்மதியா போயிரும்.”

தயக்கமில்லாமல் தான் சரள்கண்ணன் மகளிடம் பேசி விசயத்தைப் பகிர்ந்தார். சைந்தவியின் முகம் வினாடியில் சுண்டிப் போனது. சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏற, பல்லைக் கடித்துக் கொண்டாள்.

“ஓ… அப்போ உங்க வீட்டுக்குன்னு தெளிவா சொல்லுறது!”

முணுமுணுத்துக் கொண்டாள். அவளுடைய உதடுகள் உணர்ச்சி வேகத்தில் துடித்தன.

சரள்கண்ணன் மகளின் முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை. மொபைலில் கவனமாக இருந்தார். சைந்தவி, அப்பா கேட்டதுமே ஹாட் ஸ்பாட் (டேட்டா சேரிங்) ஆப்ஷனை ஆன் செய்து கொண்டே தான் அவருக்குப் பதில் சொல்லியிருந்தாள்.

இப்போது அவரும் வாட்ஸ்ஆப்பில் மும்முரமாகி இருந்தார். அதனால், மகளின் நிலைமை அவருடைய கண்களுக்குத் தப்பி இருந்தது.

அவர் வரவை அந்த ஆப்பில் பார்த்தவுடன் தாமினி அழைத்துவிட்டாள். கொஞ்சம் பொறுத்து இருந்தால் கணவருடைய குறுஞ்செய்தியைப் பார்த்து, அதற்குத் தக்கன நடந்திருப்பாள்.

இரண்டு வருடங்களாகச் சரள்கண்ணன் பட்டுக் கொண்டிருக்கும் வேதனை அவளையும் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பது உண்மை.

தங்கள் வீட்டுச் சூழ்நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவளுக்கு நிரம்ப முக்கியம். அதன் பொருட்டே பக்குவமாக நடந்து கொள்வாள். தன்னுடைய வயிற்றிலே பிறந்த இரண்டு குழந்தைகளின் மனத்தை வருத்தவிட்டதே இல்லை.

“இன்னும் பத்து நிமிசத்துல ஊர்ல இருப்போம். இன்னைக்குச் சடங்கு செய்ய முடியாது. இங்க ஏழு மணி தாண்டிடுச்சு. நாளைக்குக் காலைல தான் அம்மாவை அனுப்பி வைக்க முடியும். வீட்டுக்குப் போனதும் நிலைமை என்னன்னு பார்த்திட்டு அப்புறமா உனக்கு என்ன ஏதுன்னு தகவல் அனுப்பி வைக்கிறேன் மினி.

குழந்தைகளைப் பத்திரமா பார்த்துக்க. நாளைக்குப் பேசுறேன்னு அவங்களுக்குச் சொல்லிடு. நீயும் படுத்துத் தூங்கும்மா. வெயிட் பண்ணாதே. என்னால உடனே கால் பண்ண முடியாது.”

சரள்கண்ணன், மனைவியின் புரிதலுக்காக இத்தனை விளக்கமான குறுஞ்செய்தியை அடித்து, அனுப்புப் பொத்தானை அமுக்கி முடித்த வினாடியே தாமினி அவரை அழைத்துவிட்டாள். அவள் கணவருடைய குறுஞ்செய்தியைப் பார்த்திருக்கவில்லை.

மொபைலை உள்ளே வைக்கப் போனார் சரள்கண்ணன். அதே நேரத்திலே அது ஒளிர்ந்து ஒலித்தது. மனைவியின் அழைப்பைக் கண்டதும் சரள்கண்ணன் அதனை ஏற்றுப் பேசத் தொடங்கினார்.

“சொல்லு மினி. இப்ப தானே மெசேஜ் அனுப்பிவிட்டேன். நீ பார்க்கலையா?”

“இல்லைங்க உங்களை ஆன்லைன்ல பார்த்ததும் கால் பண்ணிட்டேன்.”

“சரி சரி. குழந்தைங்க சாப்பிட்டுட்டு படுத்துட்டாங்களாம்மா? நீ என்ன செய்றே?”

“எல்லாம் சாப்பிட்டாச்சுங்க. உங்க போன்காலுக்குத் தான் காத்திட்டு இருந்தோம். பக்கத்துல உட்கார்ந்து நச்சு பண்ணிட்டு இருக்கா உங்க பொண்ணு. முதல்ல அவ தான் உங்கட்ட பேசணுமாம். இருடி. பேசிட்டு இருக்கேன்ல? நான் உங்கப்பாட்ட பேசி முடிச்சதும் உங்கக்கிட்ட தர மாட்டேனா என்ன? இரு இரு. மொபைலைப் பிடுங்கிறா. நீங்க உங்க பொண்ணுட்டயே பேசுங்கங்க. அப்புறம் நம்ம பேசலாம்.”

‘உங்க பொண்ணு… உங்க பொண்ணு’ என்று தாமினி அழுத்திச் சொன்னதை அந்த நேரத்திலும் சரள்கண்ணனின் கருத்தில் படத் தவறவில்லை.

‘இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு தடவையும் இவளுக்கு இந்த நிலையில்லாத தவிப்பு எதுக்கு வருது?’

இரண்டாம் மனைவியானவளின் பாதுகாப்பற்ற உணர்வு கொடுக்கும் நிலையில்லாத தவிப்பும் பரபரப்பும் அவருக்கு வருத்தத்தை முதலில் கொடுத்திருந்தது. ஆனால், இத்தனை வருசங்கள் ஆகியும் தொடர்வது எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அதுவும், இப்போது தான் துக்கக் காரியத்துக்கு வந்திருக்கும் போதுமா என்கிற யோசனையால் சற்றுக் கோபம் கூட அவருக்கு.

“மினி மினி பொறு. நா…”

இப்போது தன்னால் பேச இயலாது என்று சொல்வதற்குள்ளே அந்தப்பக்கம் மொபைல் கை மாறி இருந்தது.

“அப்பாஆ…”

அந்த இனிய குரல் அவரைச் சுண்டி இழுத்துப் பிடித்து வைக்க…

“அம்மாடி… சனா… என்னடா பண்ணுறீங்க இன்னும் தூங்காம? நாளைக்கு ஸ்கூல் டே தானே?”

“உங்க பக்கத்துல படுக்காம தூக்கம் வரலைப்பா… பத்து நாள்ல வந்திர்வீங்க தானேப்பா? நான் இப்படிச் சொன்னா சரத் இல்லைன்னு சொல்லுறான்.”

“சனா… சனா…”

நெகிழ்ந்து உருகிப் போயிருந்தார் சரள்கண்ணன். இந்தப் பெண் தாமினியின் வயிற்றிலிருந்து பிறக்காததற்கு முன்னரே அவரை இழுத்துக் கொண்டவள். இப்போதோ, இந்தக் குரலும் நேரில் காணும் இவளுடைய பாவனையும் அவரைக் கட்டிப்போடுகின்றன என்பது மிகையல்ல.

“அப்பா… அப்பா… ஐ மிஸ் யூப்பா!”

“மீ டூ மிஸ் யூ சனா கண்ணம்மா! அப்பா இரண்டு வாரத்துக்குள்ள கண்டிப்பா வந்திர்றேன். நீ தம்பி பக்கத்திலே படுத்துத் தூங்குடா. பிக் கெர்ளா சரத்தை நீ தானே கேர் பண்ணனும்.”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
குழைந்து போய் ஒலித்த அப்பாவின் குரல், அவருடைய இரண்டு மகள்களை வெவ்வேறு விதமாகச் சென்றடைந்தது.

தூரத்திலே, மலேசியாவில் இருக்கும் மகள் ஷானவியைச் சாந்தப்படுத்தியது என்றால், அவர் அருகே உட்கார்ந்திருக்கும் மகள் சைந்தவியைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தது.

‘மினியாம் மினி! குண்டோதரி அந்தம்மா… அவளைப் போயி இப்படி பேபி ரேஜுக்கு மினி மினின்னு கூப்பிட்டுத் தொலைக்கிறாரு. அய்யோன்னு வருது எனக்கு… கத்தணும் போல இருக்கே!’

சைந்தவி தலையைப் பிடித்தபடி குனிந்திருந்தாள். அலை அலையாய் உணர்வுகள் கிளம்பி எம்பி எம்பி ஆட்டம்‍ போட்டு, அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தன.

இதிலே அவர் சனா சனா என்று உருகிக் குழைந்ததும் அதிகமான வேதனை முட்கள் வினாடியில் நெஞ்சை பதம் பார்த்துப் பொத்தல் ஆக்கத் தொடங்கின.

“சபாஷ்! எப்பேர்ப்பட்ட அப்பா இவரு? உசுரோட இவர் இரத்தத்திலே உருவான நான் பக்கத்திலே இவ்வளவு துடிச்சிட்டு இருக்கேன். இவருக்கு இரத்த சம்மந்தம் இல்லாத, தான் பெறாத அந்த ஜீவன் மேலே இம்புட்டுப் பாசமா? கொடுத்து வச்சிருக்கு அந்தப் பொண்ணுக்கு.”

முணுமுணுப்பாகப் பேசிக் கொண்டவள் சத்தம் எழும்பாமல் அழுது கொண்டிருந்தாள்.

அப்போது அவள் காதில் விழுந்தது…

“அக்காவைப் பார்த்திட்டீங்களாப்பா… அவங்க எப்படி இருக்காங்க? நல்லா இருக்காங்கள்ள. இப்ப உங்க பக்கத்தில் இருந்தா நான் பேசட்டுமா?”

சரத் அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருப்பது சைந்தவியுடைய காதில் விழுந்தது. கேட்டதும் இவள் நினைத்துக் கொண்டாள்…

‘ஹ்ம்… அப்பா பெத்த ரெண்டாவது… இரத்த பாசம் பொங்குது போல இவனுக்கு. என்னை ரொம்ப அக்கறையா விசாரிக்கிறானே!’

அவர்களின் குடும்பக் கூட்டில் தான் இல்லை. தான் என்றும் தனி!

அப்போது கார் அந்தப் பெரிய மதில் சுவர் வைத்த வீட்டின் முன்னால் வந்து சர்ரென்று மழைத் தண்ணீரை இரைத்து நின்றது.

“சரத் வீடு வந்திருச்சு கண்ணா. நாளைக்குக் கூப்பிடும் போது பேசுவியாம். அம்மாட்ட சொல்லிடு. என் மெசேஜ் பார்த்துக்கச் சொல்லு. பைடா!”

மொபைல் அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓட்டுநர் பக்கம் திரும்பி ஏதோ சொல்லிவிட்டு இறங்குவதில் மும்முரமானார் சரள்கண்ணன்.

அவருடைய வீட்டைப் பார்த்ததும், எப்போதும் வாசலுக்கு ஓடி வந்து தன்னை வரவேற்கும் அம்மா இன்றும் கண் முன்னே தோன்றிப் புன்னகைக்க, அதுவரை அவரிடம் ஒட்டி இருந்த அமைதியான மனநிலை விடைபெற்றுக் கொண்டது.

மனம் கனத்துப் போனது. கண்கள் சரம் கோர்க்கத் தொடங்கின. அவர் அவருடைய உணர்வுக் குவியலில் அடைபட்டுக் கொண்டார்.

சைந்தவியோ மோசமான மனநிலையில் சிக்கித் துடித்துக் கொண்டிருந்தாள்.

விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு...

‘இதுவரை சொந்தமெனச் சொல்லிக்கொள்ள இருந்த அப்பத்தாவும் அவுட். விதி, என்னை மட்டையால் அடிக்காமலேயே தவிக்க வைக்க நினைச்சு இன்னொரு விக்கெட்டை எடுத்திடுச்சு.’

தன்னைத் திட்டிக்கொண்டே இருந்தாலும் நல்ல பாதுகாப்புத் தந்து, உலகத்தை ஒரு பெண்ணாக எதிர்கொள்வது என்று கற்றுத் தந்தவர். சின்ன வயதில் தன்னுடைய தாயை இழந்து, இங்கே வந்து அந்தப் புதுச் சூழ்நிலையில் பொருத்திக்கொள்ள முடியாமல், தடுமாறி நின்றவளைக் கடுமையாக எதிர்கொண்டார் என்றே இதுவரை நினைத்திருந்தாள்.

ஆனால், அப்படி அவர் இவளிடம் கடுமையைக் காட்டி உடலை வணக்கி வேலை செய்ய வைத்தது இவளுடைய நன்மைக்கே என்று பிந்நாளில் பட்டது. மனத்தில் பட்டதை ஏற்றுக்கொள்ள இதுவரை மனது வரவில்லை.

‘இப்போ அந்தக் கோவக்காரி அப்பத்தாவும் என்னைவிட்டுடுப் போயிடுச்சு!’

ஏற்கெனவே அப்பா… சனா… மினி என்று நொந்து உடைந்திருந்தவளுக்கு, இப்போது இந்த வீட்டைப் பார்த்ததும் அப்பத்தாவின் மறைவும் தாக்க, கேவல்கள் புறப்பட்டன. அடக்கிக் கொள்ள முயன்றாள்.

மழை பலம் கொண்டு பெய்ததால் யாரும் வெளியே இருக்கவில்லை. நெருங்கிய உறவினர்களும் வீட்டினருமாகப் பதினெட்டு இருபது மக்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்.

வெளி மதில் சுவருக்கும் வீட்டிற்கும் இருபது அடிக்கும் மேலேயே தூரம். உள் அமைப்பில் இருந்த வீட்டுக்குள்ளே இருந்தவர்கள் இவர்களுடைய வரவை அறியவில்லை. மழைச் சத்தம் வேறு!

ஆனால், முதல் மாடியில் இருந்த வசந்தன் கார் வந்ததைக் கவனித்தான். ஜன்னல் அருகே உட்கார்ந்து முக்கியமான பைலைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தான். காரின் ஹெட்லைட் வெளிச்சம் வந்து விழ, வெளியே எட்டிப் பார்த்தான்.

வந்துள்ளது யார் என்று உணர்ந்ததும் பைலை மூடி பத்திரப்படுத்திவிட்டு எழுந்தான். மேல் சட்டையை அணிந்தபடி குடையை எடுத்துக்கொண்டு, படிகளில் விறுவிறுவென இறங்கினான்.

கடைசிப் படியை வந்தடையும் முன்னர், “மணீ… மணீ” குரல் கொடுத்தான்.

“சார்…”

மாடிப்படி அருகே, கீழே அமைந்திருக்கும் அந்த அறையிலிருந்து வசந்தனுடைய உதவியாளர் மணிகண்டன் அவசரமாக வெளியே வர,

“அவங்க வந்துட்டாங்க மணி. குடை எடுத்திட்டு வாங்க. சீக்கிரம்!”

“அவங்களா... யாரு சார்?”

அப்போது தான் அறைக்குள்ளே நுழைந்து அக்கடா என்று உட்கார்ந்து இருப்பான். வசந்தன் மீண்டும் கூப்பிட, குழப்பம் வந்துவிட்டது.

“உங்களுக்கு இப்ப விளக்கம் சொல்லிட்டு இங்கேயே நிக்கவா? இல்லை, வெளியே வந்திருப்பவங்களை ரெண்டு பேரும் போய் மழையில் நனையாமல் உள்ளே கூப்பிட்டு வரலாமா?”

கேட்டுக்கொண்டே வசந்தன் முன்னால் விரைய, “குடையை எடுத்திட்டு இதோ வர்றேன் சார்.” மணிக்கண்டனும் வசந்தனைத் தொடர்ந்து வெளி வாசலை நோக்கிப் போனான்.

வெளியே அரவத்தை உணர்ந்து தென்னம்பாளையும் வந்துவிட்டார்.

“கண்ணைய்யா வந்துட்டாரு” உள்நோக்கிக் குரல் கொடுத்துவிட்டு அவரும் ஒரு குடையை விரித்துக்கொண்டு வெளி கேட்டைப் பார்த்துப் போக, அங்கே நிலைமை பரபரப்பாகி இருந்தது.

வெளியே வந்த வசந்தன் முதலில் பார்த்தது சைந்தவியைத் தான். மழைச்சாரல்களுக்கு இடையே ஊடுருவிய அவனுடைய பார்வையில் கலங்கிய கண்களுடன் சோகச் சித்திரமாய் அவள்!

அவளைச் சந்தித்த பார்வை, விழி வழியே இதயத்திற்கு அனுப்பி வைத்த உணர்வில் அந்தச் சின்ன இதயம் அவளுக்காகத் துடிக்க ஆரம்பித்தது!
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
வணக்கம்!

தொடர்ந்து வாசித்துக்கொண்டு, உங்கள் கருத்துகள் மற்றும் விருப்பங்களைக் கூறி வரும் எல்லோருக்கும் நன்றி!
இந்த அத்தியாயத்தை வாசித்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்க?
அன்புடன், ஆர்த்தி ரவி

அத்தியாயம் 12:

“வசந்த்…”

சரள்கண்ணன் காரிலிருந்து இறங்கும் போதே வசந்த் அவரின் அருகே வந்துவிட்டான். அவருக்குத் தோதாகக் கையை முன்னால் நீட்டி நனையாமல் குடையைப் பிடித்து நின்றான்.

அவரின் தழு தழுத்த விளிப்பில், மற்ற கையால் அவரைப் பற்றிக்கொண்டு தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தான். அந்த மனக் கனத்தை என்ன பேசி தகர்ப்பது?

வார்த்தைகளைத் தொண்டைக்குழிக்குள்ளே ஓய்வெடுக்கத் தள்ளினான். மௌனமும் கைப் பற்றல் வழியே மொழியாய்… மழைச்சாரலின் ஊடே கனமான கணங்கள்!

வசந்த் இன்று தான் சரள்கண்ணனை முதல் தடவை நேரில் சந்திக்கிறான். இவன் அவரை நேரில் சந்தித்ததே இல்லை என்றாலும், கடந்த நான்கு மாத பழக்கத்தில் நன்றாகவே அவரை அறிவான். இருவரும் தொலைபேசியில் பேசியிருக்கின்றார்கள்.

“வசந்த்… அம்மா?”

தன்னுடைய இழப்பை முதல் முறை இன்னொருத்தரிடம் காட்டி, என்ன எப்படி என்று கேட்காமலேயே கேட்டு அங்கே சரள்கண்ணன் நிற்க, வசந்திற்கு அவரின் பரிதவிப்பும் கேள்விகளும் பேசாமலேயே புரிந்தன.

அவருடைய தவிப்பும் கலங்கிய முகமும் இவனையும் பாதித்தன. என்ன தான் இரத்தக் கலப்பும் உறவும் இல்லையென்றாலும், பரிமளம் பாட்டியின் எதிர்பார்த்திராத இறப்பு வசந்தை மிகவும் வருத்திக் கொண்டிருக்கிறது.

குறைந்த காலத்திலேயே இருவருக்குள்ளும் நல்ல பழக்கம் ஏற்பட்டுப் போயிருக்க, பாசமும் உருவாகி அவர்களைப் பிணைத்து இருந்தது.

நேற்று இரவில் தன்னைக் கூப்பிட்டு வைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவர், காலையில் இல்லாமல் போனதை அவனால் ஜீரணிக்க முடியாமல் இன்றைய பொழுது முழுவதும் கடந்து இருந்தது.

பரிமளம் பாட்டி இரவில் தாங்கள் பேசிய பேச்சின் கனம் தாளாமல் மட்டுமில்லை, சில காலமாக அவர் அனுபவித்து வந்த மனத்தின் கனமே இந்தத் திடீர் மரணம் என்பதை வசந்த் மட்டுமே அறிவான்.

அவனுக்குள் பல கலவையான உணர்வுகள் ஆக்கிரமிப்பைச் செலுத்த தொடங்கி இருந்தன. அவனால் அவற்றை வெளிப்படையாகவே உணர முடிந்தது. அவன் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பை மனத்தில் நிறுத்திக் கொண்டான்.

தான் கற்றுத் தேர்ந்திருக்கும் பாடங்களும் அவற்றைச் செயல்படுத்தும் அனுபவமும் கொடுத்திருக்கும் ஞானம் எல்லாவற்றிலும் கை கொடுகின்றன. ஆனால் இந்தப் பொறுப்புக்கு ஞானம் எம்மாத்திரம்? அவனுக்கு உதவுமா?

“அம்மா…”

சரள்கண்ணனின் கேள்வியைப் புரிந்தவனாய் பதில் சொன்னான் வசந்த்.

“நம்ம காலைல பேசினதும் ஐஸ் பாக்ஸ்க்கு (குளிர் சாதனச் சவப்பெட்டி) ஏற்பாடு பண்ணிட்டேன் அங்கிள். ரெண்டு மணி நேரத்துக்குள்ளேயே வச்சிட்டோம். உங்க அக்காவும் வந்திட்டாங்க. நாளைக்காக எல்லாம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கு. மழையிலே நனையாம இப்ப நீங்க உள்ளே போங்க.”

“ம்ம் சரிப்பா.”

வசந்திற்குத் தலையாட்டியவர் மகளைக் காண, இன்னும் காருக்குள்ளேயே இருந்தாள்.

“சவிம்மா… சவீ… கீழே இறங்கி வாடா.”

சைந்தவிக்கு அவருடைய குரல் எட்டவில்லை. அவள் சுற்றுப்புறத்தையே உணராத போது, அப்பா கூப்பிட்டது எங்கே கேட்டிருக்கும்?

வசந்தின் பார்வையில் துல்லியமாக அவளுடைய கோலம் விழுந்திருக்க, ‘இவருக்கு மகளுடைய நிலைமை கண்ணில் படவில்லையா?’ நினைத்துக்கொண்டே சரள்கண்ணனுக்குத் தானே பதில் தந்தான்.

“நான் அவங்களை உள்ளே கூப்பிட்டுட்டு வர்றேன். நீங்க முன்னால போங்க அங்கிள்.”

மகளின் பக்கம் அவர் பார்க்க, கீழே குனிந்திருந்தாள். ஏதோ உடைமைகளைச் சேகரித்துக்கொண்டிருக்கிறாள்… பொருட்களை எடுத்துக்கொண்டு வருவாள் என்றே அந்த நேரம் நினைத்தார் சரள்கண்ணன்.

கண்டிப்பாக அவளுடைய நிலைமை அவருடைய கருத்தில் படவில்லை. தன்னால் மகள் மீண்டும் தவிப்பிற்குள்ளாகி அழுது கரைந்தது அவருக்குத் தெரியாமலே போனது. அவருடைய துரதிஷ்டமாகிப் போனது.

பாட்டியின் மரணம் இங்கே வந்து சேர்ந்ததும், அவளையும் தன்னைப் போலப் பாதித்திருக்கும் என்று நினைக்க, மேலும் கலக்கம் வந்து சேர்ந்தது.

“சரிப்பா… ரொம்ப சென்சிடிவ் சவிம்மா… பார்த்து வசந்த்.”

“ஐ வில் டேக் கேர் அங்கிள்.”

அழுத்திச் சொன்னான் வசந்த். சரள்கண்ணன் அந்த அழுத்தத்தைக் குறித்துக்கொள்ளத் தப்பினார்.

“மணீ…”

“சார்!”

வசந்த் குரல் கொடுத்ததும், அவசரமாக அவன் எதிரே வந்து பணிவுடன் நின்றான் மணிகண்டன்.

“அங்கிளை உள்ளே அழைச்சிட்டுப் போங்க மணி. விட்டுட்டு நீங்க திரும்ப இங்கே வாங்க.”

“சரி சார்.”

வசந்திற்குப் பதில் தந்துவிட்டு மணிகண்டன், சரள்கண்ணனுக்குக் குடை பிடிக்க நகர, அதுவரை தள்ளி நின்றிருந்த தென்னம்பாளை வேகமாக வந்து அந்த வேலையைத் தனதாக்கிக் கொண்டார். இவ்வளவு நேரம் வசந்த் சரள்கண்ணனின் அருகே இருக்கவும், அவனுக்கான மரியாதையின் பொருட்டுத் தள்ளியே நின்றிருந்தார் தென்னம்பாளை.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,115
113
“ஐயா…”

தழு தழுப்புடன் விளித்தார் தென்னம்பாளை. அவருக்குப் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.

பரிமளத்துடன் அதிகமாகத் தங்கிவிட்டது தென்னம்பாளை ஒருவர் மட்டுமே. அவரை ‘அம்மா’ என்கிற நிலையில் வைத்துப் பார்த்துக் கொண்டவர். எடுபிடி, வேலைக்காரன், தோட்டக்காரன், கணக்குப்பிள்ளை என்று எல்லா விதமான பாத்திரத்தில் பொருந்தி வந்தவர்.

சரள்கண்ணனின் துவண்டிருக்கும் தோற்றமும் மெல்லிய நடுக்கமும் கருத்தில் பட, தென்னம்பாளை துக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு தங்களுடைய கண்ணைய்யனை முகப்பு வாசலைத் தாண்டி உள்ளே அழைத்துப் போனார்.

மழையும் மெல்லிய தூரலாக மாறியிருந்தது.

அவர்கள் இருவரும் உள்ளே போக, வசந்த் பின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் சைந்தவியைப் பார்த்தபடி அவளருகே வந்தான்.

அப்போது தான் கார் ஓட்டுநருக்கு அவனை முழுமையாகப் பார்க்க முடிந்தது. வசந்தின் முகவடிவம் அவனுடைய மண்டைக்குள் டார்ச் லைட்டால் லைட்டாகத் தட்டி ஒளி பரப்ப, அந்த வெளிச்சம் கண்கள் வரை நீண்டது.

‘அவரா இவரு?’

நினைத்தவனின் நினைப்பு உறுதிபடவும், காரைவிட்டு வேக வேகமாக இறங்கி, “வணக்கம் சார்!” பணிவு காட்டி நின்றான்.

ஒரு தலை அசைப்புடன் ஓட்டுநருக்குப் பதில் கொடுத்துவிட்டு, “மணி, இவருக்கு எவ்வளவு செட்டில்மெண்ட்ன்னு பார்த்திட்டு அப்படியே லக்கேஜ் எல்லாம் உள்ளார கொண்டு போய் வச்சிடுங்க. மேலே வந்து என்கிட்ட பணத்தை வாங்கிக்குங்க மணி.” சொல்லிவிட்டு அவசரமாகச் சைந்தவியின் பக்கம் திரும்பிப் பார்க்க, அவள் இவனைக் கவனித்த அறிகுறியே இல்லை.

“சைவி…”

அவள் அமர்ந்து இருக்கும் பக்கம் காரின் கதவைத் திறந்து தலையை உள்ளேவிட்டு கூப்பிட, சைந்தவி அழுகையின் மிச்சத்தில் இருந்தாள்.

“சைவிம்மா…”

வசந்த் அறியாமலேயே ஆதுரமாக விளித்திருந்தான்.

விழுக்கென்று சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய அம்மா மதுமிதாவிற்குப் பின்னர் அப்படிக் கூப்பிடுவது வினித் ஒருவனே.

அவன் தான் தன்னை அனுப்பி வைத்துவிட்டு, பின்னர் மனம் கேளாமல் பின்தொடர்ந்து வந்துவிட்டானோ என்று ஒரு வினாடி அவள் குழப்பம் அடைந்தாள். தான் சாய்ந்து கொள்ளத் தோள் தேடி பரிதவித்தது அவளுடைய மனது.

‘கண்ணெதிரே நிற்பது வினித் இல்லை… நெடு நெடுவென வளர்ந்து நிற்கும் இந்த நெட்டுவாங்கி யாரு?’

வினித் இல்லை அங்கே… வசந்தைப் பார்த்ததும், சைந்தவியின் ஏமாற்றம் இன்னும் கொஞ்சம் கண்ணீரை இரைத்துப் பாத்திகள் எனக் கன்னங்களில் பாய்த்தது!

மனத்தில் துக்கமும் அநாதரவான நிலையின் அழுத்தமும் துன்புறுத்த, அலைபாய்தலும் கண்ணீருமாய்க் கருமணிகள்!

வசந்த் அருகே கண்டது அவளுடைய கண்ணீரையும் துக்கத்தையும் மட்டுமே. ஒரு வினாடி வியப்பில் நின்றான்.

‘எப்படி இந்தளவுக்குத் துக்கம் சாத்தியம்? அப்பத்தாவை இவளுக்குப் பிடிக்குமோ?’

குழம்பி நின்றிருந்தாலும், ‘ரொம்ப அழுறா. அழுகையை நிறுத்துன்னு சொல்லவும் முடியாது.’ நினைத்துக்கொண்டான்.

ஆனால், அவனுடைய உள்ளத்தில் அவளுக்காகத் தவிப்பு உண்டாகி இருக்க, அவனுடைய குணவியல்பு மாறியது அவளிடம்.

அவளை உற்றுப் பார்த்துச் சொன்னான்…

“பெரியவங்க… வயசாச்சில்ல? நல்ல முறையிலே உயிர் பிரிஞ்சிருக்கு. அவங்க உடம்பளவுல எந்தக் கஷ்டமும் படலை சைவி. அழாதீங்க…”

பரிவுடன் சொன்னான். அவனுக்கு அந்த அழுகையைக் காண முடியவில்லை. உள்ளுக்குள்ளே வேதனை படரத் தொடங்கியது.

காலையிலிருந்து யார் யாரோ வந்து அழுதிருந்தார்கள் தான். அதைப் பார்த்து, துக்க அனுஷ்டிப்பு என்று இருந்தவன் தான்.

ஒப்பாரியும் அழுகையும் மரணத்தை மனிதன் எதிர்கொள்ளும் முறை என்று இத்தனை காலமும் சாதாரணமாகக் கடந்து வந்தவனுக்கு இப்போது ஏனென்று தெரியாமலேயே மனது துடித்தது. சைந்தவியின் அழுகை அவனுடைய சின்ன இதயத்தின் கனத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தது.

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?

“சைவி அழாதீங்க… சைவி… சைவிம்மா…”

அவளுடைய கவனத்தைத் தன்னுடைய பக்கம் திருப்ப, அவள் முகத்தின் முன்னே கையை நீட்டியபடி பேசினான்.

மீண்டும் சைவிம்மா… அந்தக் குரலில் சைந்தவி தன் நிலை குலைந்தாள். கேவல் ஒன்று புறப்பட, சட்டென கண்களின் முன்னே நீண்டிருக்கும் கையிலே அவளுடைய முகம் புதைந்தது. கரகரவெனக் கண்ணீர் சுரக்க, கேவலை அடக்க முயன்று தோற்றுப் போய், பொங்கிய அழுகையை வசந்துடைய கைகளில் வழிய விட்டாள்.

அவனுக்கு அவள் அப்படி உடைந்து போகக் கூடும் என்று தோன்றி இருக்கவில்லை. கையில் முழுதாக வட்ட நிலவு புதைந்துள்ளது போலவே!

வெண்ணிலவு எங்கே கண்ணீர் சிந்தும்? கரு மேகங்கள் சூழ வானம் பொழிவது போலவே!

தான் ஸ்பரிசித்துக் கொண்டிருக்கும் முகவடிவைவிட, கையை நனைக்கும் சூடான கண்ணீர் பரபரவென்று அவனுக்குள் ஊடுருவியது.

முதலில் எதிர்பாராத திடுக்கிடலுடன் திகைத்து நின்றான். உடனே சுதாரித்தும் கொண்டான்.

“சைவிம்மா… என்ன… என்ன இது? இவ்வளவு அழுதா உங்க அப்பத்தாவின் ஆத்மா எப்படி இங்க இருந்து நிம்மதியா கிளம்ப முடியும்? நீங்க அவங்களுக்கு முட்டுக்கட்டையா நிக்கலாமா? நல்லவிதமா நாளைக்கு அனுப்பி வைக்கத் தயாராகிக்கணும். அவங்களோட கடைசி நேரம் மூச்சுல நீங்க மட்டும் தான் நிறைஞ்சி இருந்தீங்க. மனசைத் தேத்திட்டு முதல்ல வீட்டுக்குள்ள போங்க. இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கப் போறீங்க? ஹ்ம்…”

வசந்த் சைந்தவியைத் தேற்ற முயன்றான். அவனுடைய வார்த்தைகள் இதத்துடன் ஒலித்தன.

சைந்தவிக்குள் அவன் பேசியது இறங்கியது. மனவலிக்கு மருந்தாய் அவனுடைய அக்கறை!

நிலவுப் பந்தைக் கையில் ஏந்தி இருக்கிற மாதிரி மென்மையுடன் அவளுடைய முகத்தைத் தன்னுடைய கைகளில் தாங்கி நின்றிருந்தான் வசந்த்.

அவளுடைய சூடான கண்ணீர் வசந்தின் கையை நிறைத்தது. நெஞ்சிலும் அச்சூட்டை உணர்ந்தான். மற்ற கையை அவளுடைய தலையில் வைத்து அழுத்திவிட்டு, சில வினாடிகளை அவளுக்குக் கொடுத்தான்.

“சைவிம்மா…”

மனத்துடிப்பால் கரகரத்துப் போயிருந்த தொண்டையைச் சரி செய்துவிட்டு, சற்றுக் குரலை உயர்த்திச் சொன்னான்.
 
Status
Not open for further replies.