வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே- கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஸ்ரீஷா அவர்கள் "வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்.
 
#2
வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே


அத்தியாயம் 1 :

பெண்மை

உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!

வருடம் 1994:

“ஏலே,பெரியநாயகா!அடுத்தும் பொட்டைக்கோழி தான்லே உமக்கு.
அந்த மருத்துவச்சிகிட்ட சொல்லி,ஆபரேஷன் ஏதும் பண்ணிட வேண்டாம்னு சொல்லுதே,குடும்பத்த தழைக்க செய்ய ஒத்த ஆம்பிளப்பிள்ளையாது வேணும்,இங்கன உனக்கு மூணும் பொட்டையா
நிக்குதுக ”என அந்த ஊரின் மூத்தக்கிழவி,அருகில் புத்தம் புதுமலராய் இன்று மலர்ந்த மகவை கையிலேந்தி நிற்கும் பெரியநாயகத்தைப் பார்த்து உரக்கச் சொல்ல,

பெரியநாயகமோ,
தன்கையில் தவழும் அந்தப்பிஞ்சு மலரின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து யாரையும் கவனிக்காது அதனைக்கொஞ்சி
மகிழ்ந்துக்கொண்டிருந்தார்இப்போது அந்த கிழவியோ, பெரியநாயகத்தைப் புறங்கையில் இடித்து,தான் பேசியதை மறுபதிவு செய்தார்.
காதில் வாங்கிக் கொண்டாலும் பெரியநாயகம் பதிலேதும் பேசவில்லை.
இப்போது பிறந்திருக்கும் பெண் மகவை பிரசுவிக்கும் போதே,அவர் மனைவி பேச்சி,உயிரைப் பணயம் வைத்து தான் ஈன்றெடுத்தனர்.

'இதில் இன்னொரு பிள்ளை என்ற பேச்சா?'என்ற எண்ணம் அவர் மனதில் ஓட,இருந்தும் வயதில் மூத்த கிழவியிடம் தர்க்கம் செய்ய விரும்பாது அமைதியாகக் கேட்டவர்,நேரே மருத்துவச்சியிடம் சென்று தனது மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யச் சொல்லியிருந்தார்.
சிகிச்சைகள் முடிந்து,பேச்சியின் உடல்நிலை சற்று தேறி,கிட்டத்தட்ட பதினாறு நாட்கள் முடிந்து,அவர்கள் வீடுத் திரும்பியிருக்க,
பேச்சி முதல் கேள்வியாக பெரியநாயகத்திடம்,

“ஏஞ்சே !உமக்கு ஆண்வாரிசு வேணும்னு ஆசையில்லையா?என்னால முடியாதுனு உன்னோட விருப்பத்தை விட்டுட்டேலா?”எனக் கண்கள் கலங்கி பாவமாகப் பேச்சிக்கேட்க,

பெரியநாயகமோ பரிவாக தன் மனைவியின் தலைக்கோதி,“ஏன் டேய் விசனபட்டுக்கிட்டு இருக்கவ ?ஆண்பிள்ளை என்னலே ஆண்பிள்ளை.எனக்கு மூணு சிங்கக்குட்டி இருக்குவே.

அதும் இந்தக் கடைக்குட்டி என்னமோ தெரியலை அவளை கையில் ஏந்தும் போதே உடலெல்லாம் ஒரு தைரியம் வருது.
அவதாம்லே என் வாரிசு,நீ வேணா பாரு அந்த சின்னக்குட்டி தான் நம்ம எல்லாரையும் காப்பாத்தப்போகுது.
கண்டதையும் யோசிச்சு உன்னையே வருத்தாதவே,என் பிள்ளைகள் தான் என்ஜாமி.
நீ என் குலசாமி,கிழவிக பேசுனா நான் பார்த்துக்கிருதேன்,நீ பிள்ளைகளை கவனிவே”எனச் சற்று அழுத்தமாகவே தனக்கு ஆண்பிள்ளை இல்லையென்பதில் கவலையில்லை என அவர் சொல்லிச் செல்ல,அதன்பின் தான் பேச்சிக்கு மனமே நிறைந்தது.

பெரியநாயகம் – பேச்சி தென்தமிழகத்தை சேர்ந்த தம்பதி.
அவர்களுக்கு முதல் குழந்தை ரெட்டைப் பெண்பிள்ளையாய் பிறந்திருக்க,தற்பொழுது மூன்றாம் மகவும் பெண்பிள்ளை என்றாக அதில் துளி வருத்தம் இல்லாது,ஈன்ற மக்கட்செல்வங்களை தன் வீட்டுச் செல்வங்களாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவர்கள் குடும்பத்தொழில் உழவு தான்.
ஆனால் சொந்தநிலத்தில் விவசாயம் விட்டுப்போயிருக்க, பெரியநாயகம் ஊர் பண்ணையாரிடம் தினக்கூலியாக வேலைச் செய்து வந்தார்.

அளவான வருமானம்,நிறைவான செல்வங்கள்,வளமான வாழ்க்கையென நாட்கள் கழிய, தன் ரெட்டைப்பிள்ளைகளுக்கு வெண்பா,வெண்மதியென பெயரிட்டிருந்தவர்கள்,மூன்றாம் மகவிற்கு , “அதரா” என பெயர்ச் சூட்டினார்.

அனைவரும் இந்த புதுபெயரில் காரணம் யோசிக்க,பேச்சியோ வாய்விட்டு,“எம்பிள்ளை ரோசா இதழ் மாதிரி பட்டுப்போல தான் இருக்கு,அதுக்குன்னு,“அதரா”
என்றா வைப்பீரு?”என நொடித்துக் கேட்க,

பெரியநாயகமோ பலத்தச் சிரிப்பில்,
“ஏன் டேய் !அதரா என்றா ரோஜா இதழ்னு யார் சொன்னா ?கூறுலில்லாதவளே”எனக்கூறிச் சிரிக்க

பேச்சியோ கணவனின் கலகலச் சிரிப்பிலும்,தனது தவறான கணிப்பிலும் வெட்கம் கொண்டவர்,
சன்னச் சிரிப்போடு,
“சரி போதும்,என்னை ஈசுனது.அர்த்தம் சொல்லுமோய் பிள்ளைப் பெயருக்கு”எனப் பூரிப்போடே கேட்க,

பெரியநாயகம் முகம் கொள்ளா புன்னகையாய்,எதிரில் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருக்கும் தன் மூன்றாம் மகளைப் பார்த்து பெருமை பொங்கப்பேசினார்,

“அதரா என்றால் நெருப்பை குறிக்கும் தமிழ்வார்த்தைவே,அதோடு 'சக்தி,தன்னம்பிக்கை' நிறைந்த பெண்களுக்கு அதரா என்ற பெயர் பொருந்துமாம்.
போனவார துணுக்கு செய்தித்தாளில் பார்த்தேன்.

எம்பிள்ளையும் அப்டிதாம்டே பலம்பொருந்திய பெண்ணாய் இந்த மண்ணை ஆள்வாள்”எனக் கண்களெல்லாம் கனவாய் அவர் சொல்லிச் சிரிக்க,

இத்தனை நேரம் பூரிப்பில் இருந்தப் பேச்சி,
“ஏன்ஜே !நம்ம பிள்ளை,ஊரையெல்லாம் ஆள வேண்டாம்,காலத்துக்கும் நம்ம கண்ணு முன்னாடி நல்லா வாழ்ந்துக் காட்டினாலே போதும்,நீர் ஏதும் கனா காணாதீரு,ஏற்கனவே ஊர் கிழவியெல்லா இனி ஆண்பிள்ளையில்லையென என்னை ஏசுதாக,நீர் இன்னும் ஏச்சு வாங்கித்தர இந்த பிள்ளையை ஆண் போல வளர்க்க நினைக்காதீர்”என அன்பு பாதி,கவலைப்பாதியாக அவர் சொல்லி முடிக்க,பெரியநாயகம் மனைவியின் பேச்சைக் கேட்டாரே தவிர,ஏதும் பேசவில்லை,தன் மகளை மட்டும் பார்த்தமர்ந்திருந்தார்.

வருடம் 2001 :

கிட்டத்தட்ட ஏழு முழு வருடங்கள்,
பெரியநாயகம் – பேச்சியின் அன்பிலும்,பிள்ளைகளை திருத்தமான வளர்ப்பதிலும் கழிய,மூன்று பெண்பிள்ளைகளும் நன்றாகவே வளர்ந்திருந்தனர்.

அப்போது வெண்மதி,வெண்பா ஐந்தாம் வகுப்பிலும்,அதரா ரெண்டாம் வகுப்பிலும் இருந்தனர்.

யார் என்ன சொல்லியும்,'பிள்ளைக்கு போய் ஏன் நெருப்புப்பெயர வைக்கிற' என அறிவுறுத்தியும் கேளாது, அந்த பெயரைத்தான் வைக்கவேண்டுமென உடும்புப்பிடியாக நின்று காரியம் சாதித்திருந்தார் பெரியநாயகம்.

ஒரு நன்நாளில்,அவர்கள் ஊரின் பண்ணையார்,ஊர்மக்கள்,அவரிடம் பணிபுரிவோரென அனைவரையும் அழைத்து உணவிட்டார்.
காரணம்,அன்று அவரது மகனின் ஒன்பதாம் பிறந்தநாள்.

அந்த பண்ணையாரின் பெயர் வேந்தன்.அவர் மனைவி சாரதா,அவர்களுக்கு ஒரே மகன் அமிர்தன்.
பண்ணையார் என்றால் அவர் பண்ணைத்தொழில் மட்டும் செய்பவரில்லை.
அவரது பிரதானத் தொழில் அரசியல்.அந்த ஊரின் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு அவர் பெயரும் அடிபடுமளவு அரசியல் பங்காற்றுபவர்.


இன்று அவர் மகனின் ஒன்பதாம் பிறந்தநாளை ஊர் கூட்டிக்கொண்டாடுவதில் கூட ஒரு மறைமுக அரசியல் உண்டு.
அதாவது மகனின் பிறந்தநாள் விழா ஒருபக்கம் என்றாலும்,மறுபக்கம் கட்சித்தலைமையை அழைத்து,வரும் தேர்தலில் அவரை அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினாராக நிறுத்துமாறு அவரது ஆதரவாளர்கள் வைத்து பேசுவதற்காகவும்,
கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தைக் காட்டி அவரது படைபலத்தைக் கட்சிமுன் காட்டுவதற்காகவும் இந்த விழா..

என்னதான் அவர் தற்பொழுது முழுநேர அரசியல்வாதி என்றாலும்,அவரது பழைய பண்ணைத்தொழில்,
விவசாயம்,அவர் குடும்பப் பாரம்பரியமென எல்லாம் அவரை பண்ணையார் என்றே அழைக்க வைத்தது.


நமது பெரியநாயகம் பணிபுரிவதும் இவரிடம் தான்.இன்று நடக்கும் விழாவிற்குக் கூட எல்லாரையும் போல பெரியநாயகத்தையும் குடும்பத்தோடு அழைத்திருந்தார்.

பெரியநாயகம் பேச்சியிடம் சொல்ல,முதலில் யோசித்த பேச்சி, பின் பிள்ளைகளின் ஆசைக்கண்டு சம்மதிக்க,இதோ இப்போது குடும்பத்துடன் இவ்விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
#3
அது பெரிய மைதானம் போன்றதொரு இடம்,அங்கு முன்பகுதியில் செல்வனிலையில் உயர்ந்தவர்களுக்கு உணவுப் பரிமாறப்பட,அதற்கடுத்து ஒரு மேடைப்போட்டு பிறந்தநாள் விழாவும்,கூடவே விழாவிற்கு வந்திருக்கும் கட்சித்தலைமையை வாழ்த்திப்பேசும் விழாவும் நடந்துக்கொண்டிருக்க,

அதற்கடுத்து மைதான முடிவில் பெரியக்கொட்டகை அமைத்து,

பண்ணையாரிடம் பணிபுரியும் மக்களுக்குக் குடும்பத்தோடு அமர்ந்துண்ணுமாறு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.முதலில் கிளம்பி வந்த வெண்மதி,வெண்பா அன்னையின் கைப்பிடித்து அவர்கள் உணவுண்ணும் மைதானத்தின் கடைசிக்குச் சென்றிருக்க,அதராவோ தந்தையின் கைப்பிடியில் அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

சரியாக அவர்கள் முன்முற்றத்தைக் கடக்கும் நேரம்,பண்ணை வீட்டாள்,

“ஏலே பெரியநாயகம் !நம்ம காரில் பெரியாள்களுக்கு அணிவிக்கும் சால்வ இருக்கும் எடுத்துவாவே.

கட்சி ஆட்களுக்கு சால்வைப் போர்த்தி மரியாதை செய்யணும்,இந்தநேரம் பார்த்து இந்தப் பழனிபயலை காணோ”என மூத்த பண்ணையாரான வேந்தனின் தந்தை அய்யாசாமி கட்டளையிட,கைப்பிடிப்பில் இருந்த தன்மகளை ஒருபார்வைப் பார்த்த பெரியநாயகம்,அவளை அன்னையிடம் போகும்படி கைக்காட்டி விட்டவர்,

பின்தன் முதலாளி ஏவியப்பணியை திறம்படச் செய்யக் காரை நோக்கி ஓடினார்.குட்டிஅதராவோ,

தந்தையில்லாது உள்ளே செல்ல மனமின்றி,அந்த முன்பகுதியில் ஒரு ஓரத்தில் நின்று,முன்னிருக்கும் கூட்டத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.அவளது கரங்களோ,அருகில் நெய்யப்படிருந்த ஓலையில் முட்டுக்கொடுத்துச் சாய்ந்திருக்க, சரியாக அந்நேரம் அங்கிருந்து ஓடி வந்த ஒரு சிறுவன் தவறுதலாக அவளது கையைத் தட்டியிருக்க,அவனை கவனிக்காத அதரா கைத்தட்டபட்ட வேகத்தில் கீழே விழுந்திருந்தாள்.விழுந்த வேகத்தில் எழுந்தவள்,தன்னை தள்ளி விட்டுவனிடம் சண்டையிட போக,அதற்குள் அவளது ஒற்றைச் சடையைப் பிடித்து இழுத்திருந்தான் மற்றுமொருவன்.அதில் கோவத்தின் உச்சத்தையடைந்த குட்டிஅதரா,விழிச்சிவக்க,மூக்குப் புடைக்க,உதடுத்துடிப்போடு திரும்பிப் பார்க்க,அவள் பார்த்த நொடியோ,அவள் எதிரில் இருந்த சிறுவன்,“ஐயோ மன்னிச்சுக்கோ பாப்பா, நான் எனக்கு தெரிஞ்ச பாப்பா என நினைத்து இழுத்துட்டேன்”என முகம் சுருக்கி பாவமன்னிப்பு வேண்ட,அவனது ஒற்றைப் பாப்பாவிலே சமாதானமடைந்து மன்னிப்பு வழங்கிய அதரா,மென்னகைப் புரிந்து அமைதியாக அங்கிருந்து நகர்ந்து நின்றுகொண்டாள்.அவளது சின்னச் சிரிப்பில் கவரப்பட்ட அந்த சிறுவனோ,

“உங்க பெயரென்ன?இங்க ஏன் நிக்குறீங்க” என தன்னை விட சிறிதாக இருந்தவளிடம் தான் ஏதோ பெரிய மனித தோரணையில் அவன் விசாரிக்க,அதராவோ,அவனது நட்பு பேச்சில் மகிழ்ந்து,தனது பெயரை அவனிடம் முதன்முறையாக உச்சரித்தாள்.அந்த சிறுவனோ,வாயில் அதக்கியிருந்த இனிப்பின் தித்திப்பைத் தாண்டி அந்த பெயரை,“அதரா” என தன்னுள் உச்சரித்துப் பார்த்துக் கொண்டான்.அந்த நேரம்,பெரியநாயகம் அவருக்கு இடப்பட்டப் பணியை முடித்து வந்துக் கொண்டிருக்க,அவரை தூரத்திலே கண்டுவிட்ட அதரா,அவருடன் தானும் இணைந்துக் கொள்ளவேண்டும் என்ற அவசரத்தில்,அந்த சிறுவனிடம் திரும்பி,

“உன் பெயரென்ன ?”என்று கேட்டாள்.அவனோ மலர்ந்த முகமாக,

“என்னை தெரியாதா !போஸ்டர்ப் பார்க்கலையா? நான் தான் அமிர்தன்.எனக்குத்தான் இன்னைக்கு பிறந்தநாள்”என்று அவன் விளக்க,அதராவோ புரிந்ததுப் போல தலையாட்டி,தன் தந்தையிடம் செல்லும் அவசரத்தில் அங்கிருந்து ஓடப்பார்க்க,அமிர்தனோ தனது வலதுபக்க சட்டைப்பையில் இருந்த கயிறு சுத்திய மிட்டாயை எடுத்து அவளிடம் நீட்டி, இந்தா என் பிறந்தநாள் இனிப்பு ”என தர,தந்தை தன்னைக் கடந்து உள்ளே சென்றுவிடுவார் என்ற அவசரத்தில் அதரா அவனது கையோடு மிட்டாயை எடுத்தவள், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிர்தன்”என்று வாழ்த்திவிட்டு ஓடியிருந்தாள்.அமிர்தனும் சன்னச்சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.சற்று ஓட்டத்தில் அதரா அவளது தந்தையை அடைந்திருக்க,அவரோ அவரது சின்னக்குட்டி இன்னும் இங்கு நிற்பதில்,

'தன் காவல் அவள் ’என்ற எண்ணம் வளர,அவளை கைகளில் அள்ளிக்கொண்டு தனது மனைவி இருக்குமிடம் விரைந்தார்.மனைவி,மக்கள் என அனைவரும் உண்டு முடிக்க,அதரா மட்டும் அனைவரையும் குழப்பத்தோடுப் பார்த்திருந்தாள்.காரணம்,அவளது கையிலிருக்கும் அமிர்தனின் ,'A' என்று எழுத்து பதித்தத் தங்கக் கைச்சங்கிலி.

'அவன் தந்த கயிறுமிட்டாயை அவனது கையோடுப் பறிக்கும்போது,தனது கையில் வந்திருக்குமோ இந்த கைச்சங்கிலி' என எண்ணிக் கொண்டவள்,தன் வீட்டில் சொல்லி,இதை அவனிடம் திருப்பி தந்துவிடலாம் என நினைத்தவள் மனதில் , 'தெரியாதவங்கக்கிட்ட பண்டம் வாங்குன,அம்மா சூடு வச்சிடுவேன் 'என்ற பேச்சியின் வார்த்தைகள் நியாபகம் வர,

இந்த கைச்சங்கிலியைப் பற்றி, சொன்னால்,கயிறுமிட்டாய் பற்றியும் சொல்லிச்சூடு வாங்க வேண்டுமோ எனப் பயந்து, 'சரி,அடுத்து முறை அமிர்தனை பார்க்கும்போது நாமே அதனை தந்து விடலாம்'என எண்ணியவள் அதனை தன்னிடமே பத்திரப்படுத்தினாள்.விழா முடிய,அறுசுவை உணவு உண்டு நிம்மதியாக வீடு சேர்ந்தவர்கள் உறங்க போக,அதராவோ தனது கைகளுக்குள் ஒலித்து வைக்கப்பட்டிருக்கும் அமிர்தனின் கைச்சங்கிலியை எடுத்து யாருக்கும் தெரியா வண்ணம், தனது பள்ளிப்பையின் உள்பகுதியில் பத்திரப்படுத்தி ,'எப்போதடா அவனிடம் திருப்பி தருவோம் ' என்ற சிந்தனையிலே உறங்கி போனாள்.வீட்டில் அனைவரும் உறங்கியிருக்க,சுருள்பீடி குடித்து வந்த பெரியநாயகமோ,தன் மக்கள் உறங்கி விட்டார்கள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு பேச்சியிடம் பேசினார்.“ஏஞ்ஜே !நீ நம்ம சின்ன குட்டியைப் பத்தி என்ன நினைக்கிற ?” எனக் கேட்க,

பேச்சியோ,'அட கூறீல்லாத மனுஷா' என்ற பார்வையோடு,பெத்தமகளைப் பற்றி யாரோ போல இப்படி அதன் அன்னையிடமே கேட்டால் என்ன பதில் சொல்வது என தெரியாதுக் குழப்பத்தோடு பேச்சி முழிக்க,பேச்சியின் பார்வையைப் படித்த பெரியநாயகம்,

“நேத்து நம்ம பிள்ளைகளை பள்ளியில் விட போயிருந்தேன்ல,அப்போ பெரியமிஸ் என்கிட்ட பேசினாங்கவே.நம்ம அதரா பேச்சுப்போட்டியில் கலந்துக்கொண்டு பல தடவை மேடையேறி பேசுச்சாம்.இந்த சின்னவயதில் இந்த திறமை யாருக்கும் வராதுன்னு சிலாகித்து கூறினார்வே.”கூடவே ,“என்னவோ உங்க பொண்ணுக்கிட்ட இருக்கு,அவளது வார்த்தைகள் ரொம்ப சீக்கிரம் எல்லாரையும் கவருது”என பெரியநாயகம்,பெரியமிஸ் என பள்ளி தலைமையாசிரியர் சொன்னதை பேச்சியிடம் சிலாகித்துக் கூற,பேச்சியோ மிக சாதாரணமாக,

“அதுவா,அவ பேச்சு மட்டுமில்லையா,அவ வார்த்தை ஒவ்வொன்னும் மணிமணியா இருக்கும்.ஒத்த நிமிஷத்தில் என்னையே அவள் பேச்சைக் கேட்க வச்சிடுவானா பார்த்துக்கோ!

என்னமோயா இந்தப் பிள்ளை வளர்ந்து வந்ததும் ஒரு நல்லவன் கையில் பிடிச்சு தந்தாலே,எனக்குப் போதும்.

இப்போ இதுக்கு இருக்கும் திறமையை யார் கண்படாமல் நல்லபடியா வளர்த்து, கரைச் சேர்க்கணும்” என மகளின் நலனில் ஒரு பெருமூச்சோடு அவர் பேசி முடிக்க,பெரியநாயகம் மனதிலோ பலபல சிந்தனைகள் உதிக்க,அந்த எண்ணங்களை கனவில் சுமந்து உறங்கி போனார்.பெண்மை அழகென்றால்

பெண்மையை போற்றும் ஆண்மைப் பேரழகு.. தொடரும்...
 
#4
2.இழப்பைத் தாண்டிய நான்

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான், அவை பிழையாமே சுழற்றுவோன் நான், கண்டல் சக்திக் கணமெலாம் நான் காரணமாகிக் கதித்துளோன் நான்.


வருடம் 2002 :

வண்ணக்கனவுகளை கண்களில் ஏந்தி,மனமெல்லாம் நம்பிக்கை நிறைத்து,நெஞ்சில் நல்லெண்ணங்கள் கொண்டு அந்த குடும்பம் வாழ்ந்திருக்க,யார் கண்பட்டதோ,அவர்கள் தலையில் இடியாய் வந்திறங்கியது அந்த செய்தி.

அது தீபாவளி சமயம்,பெரியநாயகம் தன் மக்கட்செல்வங்களுக்கு பண்டிகைக்கு புதுத்துணியும்,வானவேடிக்கை வெடிகளும் வாங்க டவுனிற்குச் சென்றிருந்தவர்,எல்லாம் வாங்கிவிட்டு மிக மகிழ்ச்சியாக இல்லம் திரும்பும் பயணத்தில்,அவர் பயணித்த இருசக்கர வாகனம் லாரி மோதி, பெரும்விபத்தேற்பட்டு சம்பவ இடத்திலே மரணித்திருந்தார்.

யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு.
பேச்சி,வெண்மதி,வெண்பா,அதரா என அனைவரும் அடித்து கொண்டு அழுதாலும் திருப்பி பெற முடியாத இழப்பு.
அந்த குடும்பத்தின் அடிவேரை,யாரோ வேரோடுப் பறித்தது போன்றதொரு நிலை.
சுற்றங்களும்,உறவினர்களும் கடமைக்கு வந்து இவர்களைப் பார்த்துச்செல்ல,கூடவே இலவச இணைப்பாக,
'எல்லா பொட்டையா நிற்குதுக,இதுக்கு தான் அன்னைக்கே இந்தப் பயல்ட ஒரு ஆண்வாரிசுப் பெத்துக்கனு சொன்னேன்.எங்க கேட்டான் இவன்?இன்னைக்கு இவன் போயிட்டான்,யார் குடும்பத்தை காப்பாத்துவது 'என அவரே இனி இந்தக் குடும்பத்தை தாங்க போவது போல,அத்தனை பேச்சுப்பேசி,பெருந்தமையாய் எந்த உதவியும் செய்யாது அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

பேச்சி அழுதது பத்து நாட்கள் தான்.அதன்பிறகு உணவிற்காக தன் முகத்தைப் பார்க்கும் பிள்ளைகளின் வலிக்கண்டவர்,தனது சோகத்தை தன்னுள்ளே அமிழ்த்திக் கொண்டார்.

‘இது தான் உலகு.யாரும் யாருக்காகவும் வாழ முடியாது,பெற்றப்பிள்ளைகளின் பசிக்கு முன் தன் கவலையை தான் மறக்கத்தான் வேண்டும்'என தன்னையே திடப்படுத்திக் கொண்டார்.

முதலில் பெரியநாயகம் வேலைச் செய்த பண்ணையாரிடமே வேலைக்குக் கேட்கலாமென எண்ணியிருக்க,அதற்குள் அவர்கள் ஊரில் வேலை நடக்கும்,கட்டிடத்தில் சித்தாள் வேலைக்கு அழைப்புவர,அங்கேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டார் பேச்சி.

வெண்பா,வெண்மதி இருவரும் அப்போது உயர்நிலைப்பள்ளி என்பதால்,தந்தையின் இழப்பு மற்றும் வீட்டின் நிதர்சனம் புரிய,படிப்பில் கருத்தாகவும்,வீட்டில் அன்னைக்கு உதவியாகவும் இருந்தனர்.
ஆனால் அதராவோ அப்போது எட்டு வயது சிறுமி.
முதலில் தந்தை இல்லாததில் அனைவருடனும் அழுதவள்,சில நாட்களிலே சமாதானம் ஆகியிருந்தாள்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரவர் பணியை வீட்டிலிருப்போர் பார்க்க,அதராவிற்கு யாருமில்லா தனிமையில் தந்தையின் நியாபகங்கள் பெரிதாகத் தாக்கியது.

வேலைக்குச் செல்லும் அன்னையிடம் தந்தையைக் கேட்டால்,அவரது அழுகையே பரிசாகக் கிடைக்க,அடுத்ததாக தன் தமக்கைகளிடம் கேட்டுப் பார்த்தாள்,அவர்கள் முதலில் பொறுமையாக விளக்கினாலும், அதராவின் தொடர் நச்சர்ப்பில் கடுப்பாகி அவளைத் திட்டியிருந்தனர்.

என்ன தேடியும்,எங்கு தேடியும் கிடைக்காத தந்தையை எண்ணி தவித்துத்தான் போனாள் குட்டி அதரா.

யாருமில்லா நேரம், சிரித்த முகமாக மாலையிடபட்டிருக்கும் பெரியநாயகத்தின் புகைப்படத்தின் முன் நிற்பவள் அவர் முகம் பார்த்து,தினந்தோறும் பள்ளியில் மற்றும் வீட்டில் நடந்த விஷயங்கள்,அவளது ஆசைகள் என அனைத்தையும் பகிர்வாள்.

அவர் கேட்கிறாரா இல்லையா என்றெல்லாம் நினைக்காது,“அப்பா ! இது அப்படிச் சென்சேன்பா.அப்பா நான் தான்பா பேச்சுப்போட்டியில் முதல் பரிசு,அப்பா எனக்கு படிப்பே வரலைபா!அப்பா,மிஸ் நீ என்னவா ஆக போற என்று கேட்டாங்கபா.நான் என்ன சொல்லபா?”என அனைத்தும் பேசி,இறுதியில்,“நீ எப்போபா வருவ?”என அழுகையோடுக் கேட்டு நிற்பாள்.

நாட்கள் செல்ல செல்ல,தன் தாய் ,சகோதரி செய்யும் வேலைகளை காண்பவள் தானும் ஏதாவது செய்வேன் என்று நிற்பாள்.

அதற்கு முதல்பதில் பேச்சியிடமிருந்து தான் வரும்,“முதலில் வர்ற பரிட்சைக்குப் படிச்சு பாஸ் பண்ணு சின்னக்குட்டி.இதெல்லாம் நாங்க பார்த்துக்கொள்கிறோம்”என்பதாக தான் இருக்கும்.

வராதததைச் செய்யச்சொன்னால்,அவளும் தான் என்ன செய்வாள்,படிப்பது போல புத்தகம் வைத்திருப்பாளே தவிர எப்போதும் படித்ததில்லை.

அவ்வப்போது,தனது பள்ளிப்பையின் உள்பகுதியில் அன்று அன்னை,தந்தைக்குப் பயந்து அடுத்தமுறை அமிர்தனைப் பார்க்கும் போது தரவேண்டுமென மறைத்து வைத்திருந்த அவனது கைச்சங்கிலியை எடுத்துப் பார்த்துக்கொள்வாள்.

அவளுக்கு அது சற்று உறுத்தலாக விஷயம் தான்,அடுத்தவரின் பொருள் இத்தனை வருடம் தன்னிடம் இருக்கிறதே என வருத்துவாள்.
இதுவரை,பலமுறை அவனிடம் தந்திடவேண்டுமென அவனை அவள் தேடியிருக்கிறாள் தான்.
ஆனால்,அமிர்தனோ பெரியப்பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காக வெளியூர் சென்றிருப்பதாக தகவல் அறிந்தவள் எப்படி அவனிடம் தருவதென்று தெரியாது அதனைப் பத்திரமாகப் பொத்திப் பாதுகாத்தாள்.வருடம் 2006 :

இப்படியே நாட்கள் வருடங்களாகச் செல்ல,ஒருமுறை பேச்சி வேலைப்பார்த்தக் கட்டிடம் முடிவடைந்து அதன் திறப்புவிழா விமர்சியாக நடக்க ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.

அதற்கு ஊர் பெரியோர்,பஞ்சாயத் தலைவர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என அரசியலில் அனைத்து உயர்மட்டஆட்களும் வந்திருந்தனர்.
அன்றைய தினம் திறப்புவிழா என்பதாலும்,அங்கு நடக்க இருக்கும் விழாவிற்குக்கூட்டம் தேவை என்பதாலும்,அங்கு வேலைப்பார்த்த அனைவரும் அன்றைய உணவோடு எடுபுடி வேலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


இத்தனைச் சிறப்பாக ஒரு கட்டிட திறப்புவிழா நடக்கக் காரணம்,அந்த கட்டிடம் கட்சிஅலுவலக கட்டிடம் என்பதால்.
அங்கு வந்தோரில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நபர்,அந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வேந்தன்,பண்ணையார்.
நம் அமிர்தனின் தந்தை.
அன்று அமிர்தனின் பிறந்தநாள்விழாவில், அவருக்காக பேசியபடி கட்சி இடஒதுக்கீடு தந்திருக்க,கடந்த 2004ஆம் வருடம் நடந்த தேர்தலில் சட்டமன்ற வேட்பாளராக நின்ற வேந்தன்,சிலபல தில்லுமுல்லு செய்து சட்டமன்ற உறுப்பினராகி இருந்தார்.

அத்தகையச் சட்டமன்ற உறுப்பினர் ஊரில் கட்சி அலுவலகம் திறக்கப்பட இருக்க,பல அரசியல்வாதிகள் பங்கேற்பில் விழா சிறப்பாகத் துவங்கியது.

நட்சத்திரப்பேச்சாளர் என்ற முறையில் சினிமா நடிகர் ஒருவர் அந்தக் கட்சியின் வரலாறையும்,அதற்காக தலைமை ஏற்றோரையும் புகழ்ந்துப்பேச,
அதைத்தொடர்ந்து வரிசையாகக் கட்சித்தலைமை குழுவில் உள்ளவர்கள் என ஒவ்வொருவராகக் கட்சியையும்,அதன் ஆட்சியையும்,சட்டமன்ற உறுப்பினரையும் புகழ்ந்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கட்சிப்பேச்சாளர்கள் கட்சியின் பெருமையை ஒருபக்கம் புகழ்ந்து கொண்டிருந்தாலும்,மற்றொருபுறம் கட்சிபணியாட்கள் மத்தியில் சிறு சலசலப்பு ஏற்பட்டு ஏதோ வெகு தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

சரியாக அந்தக் கட்சியாட்கள் பேசிக்கொண்டிருந்த இடம்,அந்தக் கட்டிட வேலையாட்கள் நிற்க வைக்கப்பட்டிருந்த இடம் என்பதால்,அவர்கள் பேச்சு பேச்சியின் காதிலும் விழுந்தது.

அவர்கள் பேச்சின் சாரஹம்சம் இது தான்,
கட்சிஅலுவலகத் திறப்புவிழா என்றாலும்,விரைவில் கட்சி நன்கொடையில் அருகிலிருக்கும் பழைய அரசுப்பள்ளி சீரமைக்கப்பட இருக்க,பணி துவங்கும் முன்னே அதை கௌரவிக்கக் கேட்டு கொண்டதன் பெயரில் அந்த பள்ளி மாணவி ஒருத்தி,'கட்சிப் புகழ்பாடும் பேச்சாளர்'என்ற முறையில் அழைக்கப்பட்டிருக்க,வந்திருந்த பெண் திடீரென மயக்கம் போட்டு விழுந்ததால்,அந்த நிகழ்ச்சிப் பாதியில் நின்று விட்டால்,இனி தலைவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாது, கட்சிப்பணியாளர்கள் அவர்களுள் பதட்டத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களது பேச்சு முழுவதும் பேச்சியின் காதில் விழுந்திருக்க,அவரளவில்,' தற்பொழுது பேச்சுப்போட்டி போல பேச அந்த பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி வேண்டும்'என்பதைப் புரிந்து கொண்டார்.
பேச்சிக்கு,பேச்சுப்போட்டி என்றதும் தன் சின்னமகளின் நினைவு தான் வந்திருந்தது.

'அவர்களிடம் சொல்லலாமா ? வேண்டாமா?அரசியல் கூட்டம் என்பதால் இதில் பேசினால் நாளை அவளிற்கு பிரச்சினை வருமா?'என பேச்சி விடாது யோசித்திருக்க,யோசனையின் முடிவில் ஊர்க்கூடி தன் மகளின் பேச்சிற்கு அனைவரும் கைத்தட்டுவதை கேட்கும் ஆர்வத்தில்,அவர் அதரா பற்றி அந்த கட்சிப்பணியாட்களிடம் சொல்லி நிற்க,முதலில்,'உன் மகள் எல்லாம் இங்கு பேசுவதா?'என்று பார்த்த கட்சியாட்கள்,நேரம் செல்ல செல்ல கட்சித்தலைமையிடம் திட்டு வாங்க கூடாது என உணர்ந்து,பேச்சியுடன் சென்று அவர்களே பள்ளியில் இருந்து அதராவை இங்கு அழைத்து வந்திருந்தனர்.

வரும் போதே,அன்னையின் சேலைத்தலைப்பை பற்றிக் கொண்டே வந்தவள்,இத்தனைக் கூட்டத்தைக் கண்டு பயத்தில் மிரள,அவளின் மிரட்சியில் கட்சி பணியாள்,பேச்சியைப் பார்த்து ,
“என்னா பேச்சி!உன் பிள்ளை அப்படிப்பேசும், இப்படிப்பேசும் என வாயடிச்ச,இப்போ இங்க நிற்கவே பயத்தில் அழுதிடும் போலயே”என நக்கல் பண்ண

பேச்சிக்குக் கோவம் வந்ததோ இல்லையோ!அதராவிற்குப் பயம் சென்று கோவம் வந்திருந்தது.
அத்தனை குட்டி வயதில் ரெட்டைச்சடைப் போட்டு,மூக்கை மட்டும் விடைத்துப்பார்க்கும் சிறுமியின் கோவத்தில் சிரித்த கட்சிப்பணியாள்,

“பார்டா..பாப்பாக்குக் கோவமெல்லாம் வருமா?எங்க உன் கோவத்தை இந்தப் பேச்சில் காட்டு“என வம்பளந்து விட்டு,கூடவே,'என்ன பேச வேண்டும்!எப்படி பேச வேண்டும்?' என எழுந்திருந்த தாள்களை அதராவின் கைகளில் வைக்க, மறுப்பின்றி பெற்றுக் கொண்டவள்,ஒரு அரைமணி நேரத்தில் அதை மனப்பாடம் செய்திருந்தாள்.

ஏனோ படிப்பு வராத அதராவிற்கு,பேச்சுப்போட்டியின் போது மட்டும் அதன் உள்ளடக்கம் மறப்பதில்லை.பிடித்ததை செய்வதன் பலனோ என்னவோ .

தெளிவாக மனப்பாடம் செய்த அதரா,மனதார தந்தையை ஒரு முறை எண்ணி கொண்டவள்,அவளது முறை வர முதன்முறையாக கைக்கால்கள் நடுங்க,இருந்தும் மனதின் தைரியம் கண்களில் மிளிர மேடையேறினாள்.
 
#5
ஏறிய நொடி, கண் முன் இத்தனைக்கூட்டத்தை பார்த்தாலும்,'நான் மட்டுமே நிஜம்,இங்கு யாருமில்லை' என்று பேச்சுப்போட்டியின் விதியை மனதில் உருப்போட்டு கொண்டவள், பேச துவங்கினாள்.

“தமிழே !அமுதே!உனை உயிராய் தொழுவேனே!”எனத் தமிழை முதலில் வணங்கியவள்.

பின் கணீர் குரலில்,

“கூடியிருக்கும் பெரியோர்களும்,சான்றோர்களும்,அரசியல் தலைவர்களுக்கும்,என்னைப் போன்றோர்களுக்கும் என் காலை வணக்கங்கள்.

ஆட்சி,கட்சி இவையிரண்டும் என் தலைவரால் என்றும் மீட்சி.

பசியில் அழும் குழந்தைக்குப் பால்புகட்டுவதுப் போல,கல்விச்செல்வத்தின் தாகத்தில் இருக்கும் எங்களுக்கு எங்கள் பள்ளியைச் சீரமைத்து தரும் எங்கள் தலைவர் வாழ்க!”

எனத் தொடர்ந்து பத்துப்பக்கத்திற்கு ஏற்ற இறக்கத்தில்,பட் பட்டென கேட்போரின் காதுகளில் தேன்வந்து பாய்வது போலவும்,அதே நேரம் பேசும்பொருள் அனைவரையும் அடையும் வகையிலும் கணீர்த்தொனியில், அவளுக்கு தந்த தாள்களில் எழுதிருந்த உள்ளடக்கத்தை எந்தப் பிசிறின்றி அவள் பேச,

மேடையில் இருந்தோர் அரசியல்வாதிகள் முதற்கொண்டு அவள் பேச்சாற்றலில் அசந்து தான் போயினர்.

அதும் கடைசி நேரத்தில் அழைத்து வரப்பட்ட பெண் என்பதும்,சிறுகால அவகாசத்தில் தயாராகிப் பேசும் உரை என்பதையும் தெரிந்து கொண்டவர்கள் அவளை இமைக்க மறந்துப் பார்த்தனர்.

அதராவோ யாரையும் பார்க்கவில்லை,முழுதாக அவள் தயார்ப்படுத்தியிருந்த உள்ளடக்கத்தைப் பேசி முடித்தவள்.

இறுதியில், “சிறுபிள்ளை எனினும் எனக்கும் வாய்ப்பளித்து,நாட்டில் உள்ள எளியோரை வாழ வைப்பதுப் போல,
என்னையும் உயர்த்திக் காட்டும் எம் தலைவரின் புகழ் வாழ்க !
வாழ்க தமிழ்!
வாழ்க இக்கட்சியின் ஆட்சி.
வாய்ப்பிருக்கு நன்றி”

எனச் சொல்லி அவளின் உயரத்திற்காக வைத்திருந்தக் குட்டிமேடையிலிருந்து இறங்கி,அத்தனை கட்சித்தலைவர்களை தாண்டி தன் அன்னையை நோக்கி ஓடினாள்.

கிட்டத்தட்ட 5 நிமிடத்திற்கு அவளதுப் பேச்சிற்கான கைத்தட்டல் அடங்கவேயில்லை.

பேச்சிகோ ஒன்றும் புரிபடவில்லை.
அனைவரும் கீழ் இறக்கிப் பார்த்த காலங்கள் சென்று, ஊர்க்கூடி தனது மகளிற்கு கைத்தட்டுவதில் ஒரு நொடி வானத்திற்கும் பூமிக்கும் தான் குதித்திருந்தார்.


ஒரு அன்னைக்கு இதை விட என்ன வேண்டும்.இருந்தும் பெரிதாக யார் கண்ணும் தன் மகள் மீதுபடாது தன் பின் அவளை மறைத்துக் கொண்டார்.

அதற்குள் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க,பேச்சியை உணவு பரிமாறும் வேலைக்கு அழைத்திருந்தனர்.பேச்சி மறுபடியும் மகளை பள்ளிக்குப் போக சொல்லி சென்றிருக்க,அதரா கிளம்பும் முன் அவளை அழைத்து வந்த கட்சிப்பணியாள் அவளிடம் தலைவர் அழைப்பதாக சொல்ல,அதராவோ அன்னையின் கட்டளையை மீறி அங்கு எப்படி செல்வது என தெரியாதுத் தவித்தாள்.

அதற்குள் அந்தக் கட்சிப்பணியாள், அதரா சிறுப்பிள்ளை என்ற தைரியத்தில் அவளது கையைப்பற்றி இழுத்துச்செல்ல,அதராவோ அவளது குட்டிக்கைகளை வைத்து கட்சியாளின் கைகளை விலக்கப்பார்க்க,அதற்குள் அவர்கள் தலைவர் என சொல்லப்பட வேந்தனை அடைந்திருந்தனர்.

தலைவர் முன் என்றதும்,அந்த பணியாள் அவனாக அதராவின் கையை விட்டிருக்க,அதராவோ இத்தனை நேரம் அவன் பற்றிருந்த கையின் இறுக்கம் தளர்ந்ததும் குனிந்து தன்கையை தேய்த்து விட்டு கொண்டிருந்தாள்.அந்த நேரம் ஒரு குரல்,“ ஹாய் அதரா”எனக் கேட்க,

குனிந்திருந்த அதரா,சட்டென நிமிர்ந்துப் பார்க்க,எதிரில் சட்டமன்ற உறுப்பினரும்,அவர் அருகில் அவர் மகன் அமிர்தனும் இருக்க,அதராவின் அதரங்கள் அவள் அனுமதியின்றி விரிந்தது.

வேந்தனோ,'தன் மகனிற்கு எப்படி இந்தப் பெண்ணை தெரியும் !'என்பது போல பார்க்க,வெகு நாட்கள் கழித்து தன் தோழியைக் கண்டவன் போல, அமிர்தன் ஆர்வமாக,அவளை தன் பிறந்தநாள் அன்று பார்த்தக்கதையை தந்தையிடம் சொன்னான்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட வேந்தன்,“ஓஹோ பெரியநாயகம் பொண்ணா நீ?அவன் கூட சிலவருஷம் முன் இறந்துட்டான்ல?”எனக் கேட்க,

அதராவின் கண்கள் சட்டென நீரைச் சிந்தியது.அவளை பார்த்துக் கொண்டிருந்த அமிர்தன்,சன்னக்குரலில் தந்தையைக் கடிய,

வேந்தனோ சிறுப்பிள்ளைகளின் தெளிவில் சிரித்தவர்,“இந்தா பாப்பா இந்தக் காசை வச்சுக்கோ,ரொம்ப நல்லாப் பேசுன!நீ பேசுற தோரணையே உன்ன உசத்திக் காட்டுது”எனச் சொல்லி காசை அவள் கைகளில் திணிக்க,அதராவோ மறுத்துத் தலையசைக்க,வேந்தன் வம்படியாக அவள் கையில் காசைத் திணித்திருந்தார்.

அதரா அப்போதும் எதும் பேசாது நிற்க,அதற்குள் அமிர்தன் மற்றும் அவன் தந்தைக் கிளம்ப வேண்டிய நேரம் வர,அவளின் மறுப்பை கண்டுக்கொள்ளாதுக் கையசைத்து அங்கிருந்துக் கிளம்பியிருந்தனர்.

அவளது திறமைக்குக் கிடைத்த முதல் பணம்.

வாங்கலாமா,வாங்கக் கூடாதா எனத் தெரியாது,அன்னையிடம் எப்படிச் சொல்வதெனப் புரியாது அவளை தடுமாறி நிற்க வைத்தப்பணம் அது.

சென்ற வாரம் அவளது சகோதரி வெண்மதி,'வகுப்பு தோழிகளுடன் அடிப்படை கணினிப்பயிற்சி வெளியூர் சென்றுப் படிக்க 1000 ரூபாய் வேண்டும்'எனப் பேச்சியிடம் கேட்டிருக்க,
பேச்சியோ குடும்பச்சூழல் கருதி முடியாதென மறுக்க,அதில் வெண்மதி,'அப்பா இருந்தா இதெல்லாம் எனக்கு செஞ்சிருப்பாங்கள்ள'எனச் சொல்லி அழுதிருந்தாள்.

பேச்சி வெண்மதி முன் அழுத்தமாக மறுப்பதுப் போல காட்டிக்கொண்டாலும், வெண்மதியின் வார்த்தை அவரை அசைத்திருந்தது.
'தன்னால் தன் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றவே முடியாதா' என வருந்தியவர் ரெண்டு நாள் சற்று சோகமாகத் திரிய,இதை வெண்பா,வெண்மதி கவனித்தார்களோ இல்லையோ அதரா கவனித்து மனதோடுப் பதித்திருந்தாள்.

இப்பொழுதுக் கையில் 1000 ருபாய் தாள் வந்ததும் அதராவின் மனம் அதைத்தான் நினைத்துப் பார்த்தது.நினைவில் தாயின் வருத்தமுகம் நியாபகம் வர,மிக இறுக்கமாக அந்த 1000 ரூபாய் தாளை பற்றிக் கொண்டாள்.காசென எண்ணவில்லை அன்று நான்,
என் குடும்பத்திற்கு செய்யும் சிறு உதவியென எண்ணினேன்.
எல்லாம் தாண்டி என்னாலும், இந்த வயதிலும் முடியுமென உணர்த்தி,
'என்னை நான் ' என அடையளாப்படுத்தியது அந்த உயிரில்லா ஒற்றைத்தாள் தான்
 
#6
3. துவக்கப்புள்ளி :

மாலை வீட்டிற்க்கு வந்த அதரா, முதல்வேலையாக அத்தனை மக்கள்கூட்டதின் முன்பேசி சம்பாதித்த பணமான 1000ரூபாய் தாளை பேச்சியிடம் காட்டி, வெகுவாக தயங்கி தயங்கி, இன்று வேந்தன் காசு தந்ததையும்,இவள் மறுத்தும் அவர் கேட்காததைச் சொல்லி நடுங்கியபடியே நிற்க,

பேச்சிக்கு அதரா பயப்படுமளவு இதில் கோவம் இல்லையென்றாலும், சிறுபெண் மனதில் தெளிவான புரிதல் வரவேண்டுமென்பதால்,

'இனி இது போல கூட்டத்திலெல்லாம் நீ பேசவேண்டாம்,யார் காசு தந்தாலும் நீ வாங்கக் கூடாது'என மிரட்டும் தொனியில் சொல்ல,அதராவோ வேகமாகத் தலையை உருட்டி கேட்டுக் கொண்டவள்,சன்னக்குரலில், “இந்த காசை வெண்மதி அக்கா கம்ப்யூட்டர் கிளாஸ் போகனும் சொல்லுச்சுல,அதுக்குத் தந்திடவோமா ?”என அவள் வினவ,

பேச்சி உருகித்தான் போனார்,என்றோ ஒரு நாள் பெரியநாயகம் சொல்லியிருந்தார், 'அவதாம்லே என் வாரிசு,நீ வேணா பாரு அந்த சின்னக்குட்டி தான் நம்ம எல்லாரையும் காப்பாத்தப்போகுது' என.
எத்தனை சாத்தியமான வார்த்தை.

கண்டிப்பாக அவள் அக்காவிற்கு இந்தக்காசு தேவையில்லையெனில்,அன்னை திட்டுவாறென அஞ்சி அந்தக் காசை,அப்போதே வாங்கியிருக்க மாட்டாள் அதரா.

இப்போது முதன்முதலில் அவள் கையில் அவள் உழைப்பில் கிடைத்தகாசை,எந்த சிந்தனையுமின்றி அக்காவிற்கு தந்திடட்டுமா?என்ற அவளது வார்த்தையில் பேச்சி நெக்குறுகி தான் போனார்...

இருந்தும் அதரா முன் எதையும் காட்டிக் கொள்ளாது,தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி அந்த காசை வாங்கிய பேச்சி தனியாக அவள் நியாபகமாக ஒதுக்கி வைத்துவிட்டார்.

வருடம் 2007:
நாட்கள் அதன்போக்கில் பிள்ளைகளின் படிப்பில் நகர,ஒரு நாள் வேந்தன் வீட்டிலிருந்து அழைத்திருந்தனர் பேச்சியை.

பேச்சி சென்று அவர் வாசலில் பணிவாக நிற்க,

பொறுமையாக ஒரு மணி நேரம் சென்று வந்த வேந்தனோ,“என்ன நீ மட்டும் வந்திருக்க,உன் பொண்ணு எங்க? நாளைக்கு நடைபெறும் கட்சியின் மூன்றாண்டுச் சாதனைக் கூட்டத்தில் உன் பொண்ணும் தான் பேச போறா!சீக்கிரம் அவளை அனுப்பி விடு“என அவர் கட்டளையாகக் சொல்ல,

பேச்சியோ தலையைச் சொரிந்தப்படி,
“அதில்லைங்க தலைவரே,அதரா சின்னப்பொண்ணு அவளை விட திறமையான எத்தனையோ பேர் கட்சியில் இருக்காங்க,இருந்தும் அவ ஏன்?“என அதராவை அனுப்ப விருப்பமில்லை என்பதை நாசுக்காக சொல்லப்பார்க்க,

வேந்தனோ,“இந்த ஈரவெங்காயமெல்லா எங்களுக்கு தெரியாதா!ஏதோ அன்னைக்கு தெளிவா பேசுச்சே,அதை பார்த்துட்டு நாலு பேர் கொண்டாடினாங்களே,காசுக்கு கஷ்டபடுற நேரத்தில் இதில் வர்ற காசு உதவும்னு சொன்னா என்கிட்டயே மறுத்துப் பேசுறியா?இப்போ சொல்றேன் கேட்டுக்கோ நாளைக்கு கண்டிப்பா உன் பொண்ணு தான் பேசணும்”என அதிகாரமாக சொல்லிவிட்டு அங்கிருந்துக் கிளம்பிவிட்டார்.


பேச்சியோ வெகுவாக குழம்பியிருந்தார்,'எப்படி இத்தனை ஆட்கள் மத்தியில் மறுபடியும் அவளை பேச அனுப்புவது,அதிலும் தான் விருப்பமில்லை என கோடிட்டு காட்டியும் ஏனிந்த வற்புறுத்தல் 'என யோசித்துக் கொண்டே சென்றவர்,நேரடியாக அதராவிடம் இது போல நாளைக்கு ஒரு அரசியல் கட்சியுரை இருக்கிறது பேசுகிறாயா?எனக் கேட்க

அதராவோ,தனியாகப் போக பயந்து கொண்டு,“நீங்களும் வருவீங்களா அம்மா?”எனக் கேட்க,பேச்சிக்கு அவளது பயத்தில்,
கண்களில் நீர்நிறைந்து விட்டது.

பின் மனதில் உறுதியோடு,'இது தான் கடைசி முறையென சொல்லிக் கொண்டவர் ', அதராவிடம்,“வருவேன்” என்பதுபோல சம்மதமாய் தலையசைத்தார்.

அதில் சிரித்த அதரா சந்தோசமாக சம்மதித்து,அவளுக்கு தரப்பட்ட உள்ளடக்கத்தை மனப்பாடம் செய்யத் துவங்கியிருந்தாள்.
பேச்சியோ,இன்று வேந்தன் பேசிய விதத்தில்,இது எங்கு சென்று முடியுமோ என பயந்து, ஒரு விதவலியோடு அவளைப் பார்த்திருந்தார்.

எப்படியும் நடப்பது நடந்தே தீரும் என்பதற்கிணங்க,அதரா அவளது உரைக்கு அடுத்தநாள் தயாராகி வந்தவள்,அன்று போலவே இன்றும் அன்னையின் சேலைத்தலைப்பை பற்றிக்கொண்டே மருண்ட விழிகளோடு ,கட்சியின் மூன்றாண்டுச் சாதனைவிழா நடக்குமிடம் சென்றிருக்க,
அங்கு சேர்ந்த நிமிடம்,தற்பொழுது அதராவை விட பேச்சி தான் அதிகம் பயந்துபோனார்.

அங்கிருந்ததோ அத்தனை கூட்டம்.சென்ற முறையாது நூற்றுக்கணக்கான கட்சியாட்கள் தான் இருந்தனர்.
இந்த முறை சில ஆயிரம் மக்கள்வெள்ளம் திரண்டிருக்க,பயந்த பேச்சி,மகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, வேந்தனைப் போய் பார்த்து சற்று நடுங்கிய குரலிலே பேசினார்.
“தலைவரே,இவளோ பெரியக்கூட்டத்தில் பொண்ணு எப்படி பேசும்!வேற யாரையாவது பார்த்துகோங்களே”எனச் சிறுத்தக்குரலில் வினவ,

இருக்கையில் அமர்ந்திருந்த வேந்தனோ,சட்டென முன்னிருக்கும் பலகையைத் தள்ளிவிட்டு எழுந்து நின்று,“என்ன விளையாடுறியா? இங்க ஒன்னும் உம்பிள்ளை பேசித்தான் எங்க கட்சி நடக்கலை,அதையும் மீறி உன்ன ஏன் வரவச்சேன் என்றால்,அந்த தலைவர் ***பய அன்னைக்கு உன் மகப்பேசியதைப் பார்த்திட்டு இந்த மாதிரி சின்னபிள்ளைகள் பேசினா தான் மக்கள் ஆர்வமா பார்ப்பாங்க,நேரில் விட ஊடகங்களில் இதுக்கு மவுசு அதிகம்னு என்னன்னவோ கதை அளந்தான்.அதான் நானும் அவர்கிட்ட உன்பொண்ணு பேசும்னு ஒரு நம்பிக்கையில் சொல்லிட்டேன்,எனக்கு நான் சொன்ன மாதிரி நடந்தே ஆகணும்.போ இங்க வந்து ஏதாவது உளறிகிட்டு இருக்காம பிள்ளையப் பேச தயார்ப்படுத்து,வேணும்னா காசு அதிகமாக போட்டுத்தரேன்”என சொல்லிய வேந்தன் பேச்சியின் ஏழ்மையை சுட்டித் தாக்க,

பேச்சியோ இந்த நொடி இங்கிருந்து கிளம்பிச் செல்ல முடியாது,இத்தனைப்பேர் முன்னிலையில் மறுபடியும் மறுத்துப் பேசி அவமானப்பட முடியாது,தற்பொழுது அதரா பேசுவதைத் தாண்டி தங்களுக்கு வேறுவழியில்லை என உணர்ந்தவர்,அன்று போலவே,'இனி ஒருமுறை அதராவை மேடையேற அனுமதிக்கக் கூடாது 'என எண்ணியபடியே அங்கிருந்து அகன்றார்.

அன்று போல் அல்லாது, இன்று பலதர தொலைகாட்சி அலைவரிசைகளும்,அதன் கோணங்களும் மேடையைக் குவித்து நிழற்பட கருவியில் படம்பிடிக்க,மேடையின் கீழோ பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்கப்பட்டிருக்க,

விழா சிறப்பாக நடந்து கொண்டிருக்க,அப்போது அதராவின் முறையும் வர,உள்ளுக்குள் அத்தனை பயமிருந்தாலும் அதைத் தாண்டிய வேகம் அவளுள்.

அன்று தான் பேசியதால் அன்னை முகத்தில் இருந்தப் பூரிப்பை,இன்று மற்றொரு முறை தன் கண்களில் நிறுத்தியவள்,தந்தையை மனதார வணங்கி பேசத் துவங்கினாள்.

அன்று போலவே இன்றும்,அவளது பேச்சில் இருக்கும் மாயய் அத்தனை ஜனங்களையும் கட்டிப்போட்டது.

அதும் தேவையின் போது ஒற்றை விரலை அசைத்து,குரலில் ஏற்ற இறக்கம் காட்டி அவள் பேசும் விதம்,கூடவே அவள் பேச்சின் பொருளென அனைத்தும் மக்களை கவர,அத்தனை ஆரவாரம் அவள் பேசி முடித்ததும்.

அவளது இலகு குரல்,தேவையின் போது இறுக்கி ஒலிக்க,
பிள்ளைமொழி வார்த்தைகள் கூட நங்கூரம் போல மக்கள் மனதில் அமிழ்ந்துப் பதிக்க,
அவளது வார்த்தையின் அழுத்ததிலும் ஆழத்திலும் அவளை மெய்மறந்தே பார்த்திருந்தனர் அனைத்திந்திய காந்திய எழுச்சி கழக ஆட்கள்.

கூட்டம் நல்லபடியாக முடிய,அன்று போல அல்லாது சற்று வளர்ந்திருந்த அதரா, மேடையின் மீது அவளுக்காக பொருத்தப்படும் நாற்காலியின் துணையின்றி இறங்கியவள்,கண்களில் அன்னையைத் தேடி, ஓடிச்சென்று அவரிடம் சரண் புகுந்து நின்றுக்கொண்டாள்.

பலர் அவளது விலாசம் விசாரிக்க,சிலர் அவளை மெச்சிப்பார்க்க,இன்னும் வெகு சிலர் அவளை மொய்க்கும் பார்வையில் பார்த்தார்கள்.

இவையெல்லாம் பேச்சி கவனிக்க தவறிய விஷயங்கள்.
அவருக்கு எப்போதாடா மகள் தன் அருகில் வருவாள்,வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு செல்லலாம் என காத்திருந்தவர், அதரா அவரை அடைந்த நொடி,ஒருரூபாய் காசு கூட வேந்தனிடம் வாங்காது அங்கிருந்து கிளம்பியிருந்தார்.

வீடு வந்து சேர்ந்த பின் தான் பேச்சிக்கு மூச்சே வந்தது.
கணவரின் படத்தின் முன் நின்றவர்,மகளையும் தன்னுடன் இருத்திக் கொண்டு,'இந்த பிள்ளை வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் 'என வேண்டிக் கொண்டார்.

என்னதான் பேச்சிக்கு அந்த நிமிடங்கள் பயம் இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல,ஊரில் அனைவரும் அதராவின் பேச்சை அத்தனை உயர்த்திப் பேசுவதில் மகிழ்ச்சியே கொண்டார்.இருந்தும் அந்த மகிழ்ச்சியை தன்னோடே வைத்துக் கொண்டார்.

விதி வலியது,அதும் அதரா விஷயத்தில் சற்று அதிகம் தான் சதி செய்தது.

ஒரு நாள் மாலை,வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, வாசலில் அவர்கள் வளர்க்கும் நாய்க்கு உணவு வைக்க சென்ற வெண்பா நடக்கும் போதே வலிப்பு வந்து விழுந்திருந்தாள்.

முதலில் வழக்கமான முதலுதவி செய்துப் பார்த்த பேச்சி,வெண்பா முழிப்பதற்காக காத்திருக்க,நொடிகள் வேகத்தில் கடந்தும் வெண்பா விழிக்க தவறியிருக்க,பயத்தில் அலறியடித்த பேச்சி வெண்பாவை கைகளில் அள்ளிக்கொண்டு மருத்துவமனை ஓடினார்...

தாயின் அலறலில் அதராவும் பயந்து அழ, அதராவை வீட்டில் நிறுத்திய வெண்மதி,தாயின் துணைக்கு மருத்துவமனை சென்றாள்.
சிகிச்சை தொடர்ந்து நடைபெற,மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்ததினால் வந்த விளைவு என்றும்,இதற்கான உடனடி சிகிச்சை மற்றும் மருந்துகளும் கிட்டத்தட்ட ஒருலட்சம் ஆகும் என்றும் சொல்லியிருக்க,
பேச்சிக்கு உலகமே தள்ளாட்டம் கண்டது.

யாரிடம் காசு கேட்க முடியும்,அத்தனை வசதியில் யாரையும் அவருக்கு தெரியாது அல்லவா,ஆனால் குழந்தையின் உயிரில் காலம் தாழ்த்தவும் முடியாது .

அங்கிருக்கும் மருத்துவர்கள் விளக்கி சொன்னால் கூட பரவாயில்லை,அதைக் கொண்டு பேச்சி ஆசுவாசமடைவார்.
ஆனால் அவர்களோ மிகுந்த பதட்டதோடும்,காசு கட்டினால் உடனடி சிகிச்சை என்பது போலவும் பேச மகளின் நிலையில் பயந்த பேச்சி,காசுக்கு என்ன செய்வதென தெரியாது,அப்படியே தொய்ந்து போய் அமர்ந்து விட்டார்.

அப்போது மனைவியின் உடல்நிலையின் பொருட்டு அங்கு வந்திருந்த வேந்தன் பேச்சியையும்,அவளின் அனாதரவான தோற்றத்தையும் கண்டுவிட்டார்.

வேந்தன்,முதலில் கண்டு கொள்ளாமல் போகலாம் என்று தான் எண்ணினார்.பின் அவர் கட்சி தலைவர் அதரா குறித்துச் சொன்ன, 'இந்த பொண்ணுகிட்ட என்னமோ இருக்குயா.நீ வேணா பாரு வருங்காலத்தில் இந்தப் பொண்ணு அரசியலுக்கு வந்தால் நம்ம எல்லாரையும் தூக்கிப் சாப்பிட்டிடும் ' என்ற வார்த்தைகள் நியாபாகம் வர,ஒரு நொடி தெளிந்தவர் நேரே பேச்சி முன் நின்று,”என்ன விஷயம்?” என விசாரித்தார்.

காசில்லா நேரத்தில் காலனுக்கு மகளைக் கடன் தந்திடுவோமா ?என அஞ்சி இருந்தவர்,வேந்தனே வந்துக் கேட்டதும், மளமளவென கண்ணீர்சிந்தி அனைத்தையும் சொல்லிக் கடனாக ஓருலட்சம் கேட்டிருந்தார்.

வேந்தனோ நொடியும் யோசிக்காது ,“ நான் காசு தரேன்,நீ அதுக்கு பதில் எனக்கு வேறொரு உதவி பண்ணனுமே “என அவர் கொக்கியிட்டு நிறுத்த,

பேச்சியோ,அவர் தவறாக ஏதும் கேட்டு விடுவாரோ எனப் பயந்து,அந்தநேரத்திலும் அவரை கண்டனப்பார்வை பார்க்க,

அதில் நகைத்த வேந்தன்,“இந்த உலகில் எல்லா ஆண்களின் தேவை அதுவாக மட்டும் இருக்கணும் என்ற அவசியமில்லை.அதைத் தாண்டி
எவ்வளவோ இருக்கு.இதில் எனக்கு தேவையானது உன் பொண்ணு அதரா.இதுவும் தப்பா எல்லாமில்லை.அந்த பொண்ணோட பேச்சில் என்னமோ இருக்கு.கண்டிப்பா உன் பொண்ணு பெரிய ஆளா வரும்.என்கிட்ட வேலைக்கு அனுப்பு,நம்ம கட்சிக்கூட்டத்திற்கு,பிரச்சாரத்திற்கு,பாராட்டு விழாவிற்குப் பேச வைக்கிறேன்.
உன்னோட பெண்ணின் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு,என்னைத் தாண்டி ஒரு துரும்பும் உன் பெண்ணைத் தீண்டாது,இது சத்தியம்” என உறுதியாகச் சொல்ல,

பேச்சியோ,அவரது பேச்சில் கால்கள் தள்ளாட இன்னும் ஆடித்தான் போனார்.

ஒரு புறம் உயிருக்கு போராடும் மகள்,
மற்றொருபுறம் இன்னொரு மகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக!
இதில் தான் யாருக்கு நியாயம் செய்ய முடியும்.

ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் சிரத்தை எடுத்து அடுத்த பிள்ளையை உயிரோடு பறிக்கொடுப்பதா?என சிந்தனைகள் அவரைச் சுழட்டி அடிக்க,எண்ணங்களின் முடிவில் இந்த நொடி வெண்பாவின் உயிரே முக்கியமாகப்பட வேந்தனிடம் சம்மதம் தெரிவித்தவர்,காசை வாங்கி மகளின் சிகிச்சைக்குக் கட்டினார்.

வேந்தனுக்கு தெரிந்தவர்கள் என்பதால் சிகிச்சைகள் தரமாகவும், சரியாகவும் மேற்கொள்ளப்பட, நலம்பெற்ற வெண்பா பலநாள் பின் முழுஆரோக்கியத்துடன் வீடு திரும்பினாள்.இப்போது தான் பேச்சிக்கு மூச்சே வந்தது.

ஓரளவுவீடு இயல்பு நிலைக்குத்திரும்ப,பேச்சியும் வழக்கம்போல வேலைக்கு கிளம்பினார்.
 
#7
சரியாக ஒரு மாத காலளவில் பேச்சி வேந்தனால் அழைத்து விடப்பட்டிருக்க,அழைப்பில் சென்ற பேச்சிக்கோ அவர் பேசிய விஷயம் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்திருந்தது.

அன்று அவர்கள் பேசியபோது, அதராவை விடுமுறை தினத்தில் தான் வேந்தன் பேசக்கேட்கிறார் என எண்ணி அவர் சம்மதித்திருக்க,தற்பொழுதோ இன்னும் ரெண்டு வருடம் படிப்பு முடிந்ததும்,அதாவது அதரா பத்தாவது முடித்ததும்,மொத்தமாக அவளைப் படிப்பிலிருந்து நிறுத்திவிட்டு அவர் வீட்டிலிருக்கும் கட்சி அலுவலகத்தில் பணிக்கு வரசொல்லியது அத்தனை வேதனையாக இருந்தது பேச்சிக்கு.

பேச்சி எத்தனை மறுத்து பேசியும் அவர் கேட்கவில்லை,
வேந்தனின் பதில் ஒன்று தான்,
“இந்த காலத்தில் படிச்சவன் எல்லாம் வேலைக்கு தான் போறான்,படிக்காதவன் தான் வேலை தரும் நிலையில் இருக்கான்.அன்னைக்கு சொன்னது தான் இப்பவும் சொல்றேன்,பொட்டைப்பிள்ளையை இங்க அனுப்புறேன் என்று நீ பயப்பட தேவையில்லை.அதரா இனி கட்சிப்பொறுப்பு ”எனச் சொல்லி முடித்தவர்,பேச்சு முடிந்தது என்பதுபோல அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

பேச்சியிடம் இம்முறை எந்த பதிலுமில்லை.தானே மனதை தேற்றி கொண்டார்.

'முதன்முதலில் பெரியநாயகம் அதராவின் பேச்சுத்திறமை பற்றி தன்னிடம் சிலாகித்துப் பேசியது.
அதன் பின் தான் ஒரு ஆர்வத்தில் அதராவைக் கட்டிட திறப்புவிழாவில் பேச வைத்தது,பின் வேந்தன் கட்டாயத்தால் மூன்றாண்டுச் சாதனைவிழாவில் பேச நிகழ்ந்தது,தற்பொழுது வெண்பாவின் உயிருக்காக அதராவின் திறமையை பணயம் வைத்தது என அனைத்திலும் தனது முடிவு தாண்டி,இது தான் அதராவின் விதி,அவளது எதிர்காலம் இதுதானென தீர்மானிக்கப்பட்டதோ?'என்றெல்லாம் பலவாறு யோசித்தப் பேச்சி,மாலைப்பள்ளியிலிருந்து திரும்பிய மகள்களை அழைத்தவர்,மூவருக்கும் பொதுவாக அதராவிடம் பேசினார்.

“ஏன் சின்னக்குட்டி அம்மா ஒன்னு சொன்னா கேட்பியா?”என்றார் தயக்கமாக,

அதராவோ வெகு நாட்கள் கழித்து வீட்டில் அனைவரும் சேர்ந்தமர்ந்து பேசுவதில் மகிழ்ச்சியாகி,“என்னமா பண்ணனும் !சொல்லுங்கம்மா செய்றேன்!செஞ்சா தினமும் இப்படி எல்லாரும் உட்கார்ந்து என்கூட பேசுவீங்களா?”என வெள்ளந்தியாகக் கேட்க பேச்சிக்குத் தொண்டையடைத்தது.

தன்னையே நிதானித்தவர்,“இல்லை சின்னக்குட்டி நீ பத்தாம் வகுப்பு முடித்ததும் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்.அன்னைக்கு மக்கள் கூட்டத்தில் பேசுனீல அது மாதிரி பேசுவதற்கு தான் போக போற!உனக்கு சம்மதமா?”எனக்கேட்டு அவள் முகம் பார்க்க,

அதராவிற்கு முன் வெண்பா,வெண்மதி இருவரும், தங்கையைப் படிக்கவைக்க வேண்டும் எனவும்,இப்படி எங்கும் அனுப்ப வேண்டாமெனவும் சண்டைப்பிடிக்க,
பேச்சி மகள்களின் ஆதங்கத்தில்,தங்களின் இழினிலையினால் தான் இப்படி என்ற எண்ணம் வருத்த அவரின் கண்கள் கண்ணீரை உடைப்பெடுத்தது.

அவரது அழுகையில் மூன்று பிள்ளைகளும் பதற,அதரா என்ன செய்வது என தெரியாது,அவரது கண்ணீரைத் துடைத்து கொண்டே,“நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்மா அழாதீங்க ”எனச் சொல்லி அவளும் தேம்ப,

மகளின் கண்ணீரில் தன்னையே தொகுத்துக் கொண்டவர்,“இங்க பாரு அதரா,அம்மா என்ன பண்ணாலும் உன் நல்லதுக்கு மட்டும் தான் செய்வேன்.நீ நம்ம தலைவர் வீட்டிற்கு தான் வேலைக்கு போக போற,எந்த பயமும் இல்லாமல் இருக்கலாம்,அங்க ஏதாவது ஒரு விஷயம் உனக்குப் பிடிக்கலை என்றாலும் என்கிட்ட சொல்லிடனும் சரியா?”எனக் கேட்க

அதராவிற்கு உள்ளுக்குள் அங்கு செல்வதில் இஷ்டமில்லை என்றாலும்,அன்னையின் வார்த்தைக்காகச் சம்மதித்தார்.

அதராவே சம்மதித்தப்பின் வெண்பா, வெண்மதிக்கும் வேற வழியில்லை..

சரியாகப் பத்தாம் வகுப்பு முடித்ததும் அதரா வேந்தனிடம் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.வாழ்க்கையும் அதன் ஓட்டத்தில் ஓடியிருந்தது.


வருடம் 2012 :

ரெண்டு வருடங்கள் இருபது நிமிடம் போல கடந்திருக்க,பேச்சிக்கும்,அதராவிற்கும் ரெண்டு யுகமாகக் கழிந்திருந்தது.
வெளியே சிரித்து இருப்பது போல அதரா காட்டிக் கொண்டாலும்,அவளுக்கும் இந்த வேலை பிடிக்கவில்லை என்பது தான் நிஜம்.

அவள் நின்றாள்,நடந்தாள் தொடரும் பார்வைகள்,போட்டி விரோதங்கள்,சிலபல அவமானங்கள் என அனைத்தையும் தனக்குள் தான் வைத்துக் கொண்டாள்.
வேந்தன் சொன்னது போல அவள் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது தான் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் எட்டி நின்றாலும் கண்களில் வக்கிரத்தைக் காட்டும் சிலரை கண்டும் காணாது தான் அவள் போகவேண்டியிருந்தது.
அவள் மிக நேசிக்கும் பேச்சுத்திறன் கூட,சில சமயம் அதீதக்கூட்டத்தின் முன் அவளுக்கு மூச்சடைக்கும் உணர்வு தரும்.
மறுபடியும் எந்த கவலையில்லாதப் பள்ளிப்பருவத்திற்குப் போக மாட்டோமோ!என்று கூட ஏங்கி இருக்கிறாள்.

அவளின் இந்த உணர்வுகளை யாரிடமும் பகிராததற்குக் காரணம் பேச்சி.
சரியாக அவள் இங்கு வேலைக்குச் சேர்ந்து நான்குமாதத்தில்,பேச்சி ஒரு கட்டிட வேலையின் போது,தலையில் ஏந்தியிருந்த அதிகச்சுமையில் தள்ளாட்டம் கண்டு,ரெண்டாம் தளத்திலிருந்துக் கீழே விழுந்திருக்க,கிட்டத்தட்ட உயிருக்கு போராடும் நிலையில் அவர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போதும் பேச்சியின் கண்களில் தன் மகள்களின் முகம்மட்டுமே விழுந்தது.
அவரே போராடி உயிரை இழுத்துப்பிடிக்க,ஒருவாறு ரெண்டுமாத முடிவில் அவர் உயிருக்கெந்த ஆபத்துமின்றி உயிர் பிழைத்திருந்தார்.இருந்தும் அவர் எழுந்து நடப்பதெல்லாம் வெகுகடினம் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்க,அவரது மக்களே அவரைக் கண்ணில் வைத்துத் தாங்கினர்.

சிறு நாட்களிலே தேறிய பேச்சி வெண்பாவிடம்,'இத்தனை நாள் செலவிற்கு என்ன செய்தீர்கள்?'எனக் கேட்க,அவளிடம் பதிலில்லை.

விடாத பேச்சி அதையே வெண்மதியிடம் கேட்க,அவளோ ,'தனக்கெதுவும் தெரியாது,எல்லாம் அதரா தான் பார்த்துக்கொள்கிறாள்' எனச் சொல்லிச் சென்றாள்

‘பதினைந்து வயது முதல் ஒரு சிறுமி குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா?எப்படி அதராவிற்கு இத்தனை பணம்'எனப் பேச்சிக் குழம்பி,மாலை வெகுதாமதமாக வீடு வந்த அதராவிடம் ,
“வேந்தனிடம் ஏதும் கடன் வாங்குனியா அதரா?”எனப் பேச்சிக் கேட்க,அவளோ வெறும் மென்னகையை மட்டும் பதிலாக தந்தாள்.

அந்த சிரிப்பின் பின் உள்ள வலி,அவளை போன்ற வாழ்க்கையை வாழ்ந்துப் பார்ப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் உறங்கக்கூட நேரமின்றி,சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஐந்து ஊர்களில் நாளுக்கு மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறாள்.
அவர்களின் நல்லநேரமாக அப்போது பாராளுமன்ற தேர்தல் வந்திருக்க,அதற்கானப் பிரச்சாரம் அந்நேர அவர்களின் வறுமைக்கு கைத்தந்தது.
இத்தனை நாள் உறக்கத்தை,உழைப்பை அன்னையின் முன் ஒற்றை சிரிப்பில் கடந்திருந்தாள் அதரா.

பேச்சியோ மென்னகைப் பூக்கும் மகளின் முகம்கண்டும்,அதில் அவரால் எதையும் இணங்கான முடியவில்லை..
அதராவோ மனதோடு,'எல்லாம் இவருக்காக இவரின் நலனிற்காக 'எனச் சொல்லி கொண்டவள், பேச்சியின் கரத்தை எடுத்து தன் கன்னத்தோடுப் பொருத்திக்கொண்டாள்..

அவளது அதிகப்பட்ச உணர்வின் வெளிப்பாடு இதுவே.ஏனோ அவள் மனம் சில மாதங்களிலேயே அத்தனை இறுகி போயிருந்தது.
 
#8
இப்படிதான் அந்த ரெண்டு வருடத்தையும் முள்மேல் தவமாக கடந்திருந்தாள் அதரா.

என்னவொன்று என்னதான் அவளுக்கு அந்தச் சூழல் பிடிக்கவில்லை என்றாலும்,எந்த இடத்திலும் தனது முழு உழைப்பை தர தவறவில்லை அவள்.
ஊரில் ஒரு கூட்டமென்றாலும் சரி,பெரிய தலைவர்கள் முன் பேச வேண்டுமென்றாலும் சரி,வேந்தனிடம் தனக்கு தோன்றும் சிந்தனைகளை சொல்வதென்றாலும் சரி,அனைத்திலும் அவளது முழு உழைப்பு இருக்கும்.


அதிலும்,இப்பொழுது தான் அதராவிற்கு 18 வயது துவங்கியிருந்தது.

அதரா தற்பொழுது,அனைத்திந்திய காந்திய எழுச்சி கழகத்தின் இளம்பேச்சாளர்.

எந்த ஊரில் கட்சியின் கொள்கையும்,சாதனையும் பேச வேண்டுமென்றாலும்,அவள் தான் பெரிதும் அழைக்கப்படுவாள்.
வாரத்தில் 7 நாட்களில் 4 நாட்கள் கண்டிப்பாக வேறு ஊர்களில் தான் அவள் பேச்சு.காலத்தின் கட்டாயத்திலும்,அன்னையின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு நிற்காது ஓடினாள்.

சில நேரங்களில்,கட்சி அலுவலகம் தாண்டி அவள் வெளியே செல்லும் நேரம், கட்சி தொண்டர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சிலர் அவளிடம் சீண்டுவதும்,சிற்சில வார்த்தைகள் பேசுவதும்,தெரியாதது போல அவளை இடித்துச் செல்வதும் இதைத்தாண்டி கட்சியின் மூத்த பேச்சாளர்கள் இவளின் வளர்ச்சியில் 'எப்போதடா கீழே தள்ளி விடலாம்?'என காத்திருப்பதுமென அவளது வாழ்க்கையை,பிடிக்காத இடத்தில் தன்னை நிறுத்திப் பார்க்கும் விதியில், தன் வாழ்க்கை தன்னை தாண்டி மற்றவரின் பிடியில் இருக்கிறதோ என்ற எண்ணம் பெரிதும் வருத்தும் அளவு அதரா காயப்பட்டிருந்தாள்.

இதில் அவள் மூச்சு விடும் இடமென்றால்,அது வேந்தனின் வீட்டிலிருக்கும் கட்சி அலுவலகம் மட்டுமே.அங்கு கட்சித்தொண்டர்கள் என்றாலும் அவளது அனுமதி பெற்றே உள்ளே வர முடியும்.

இது அவள் காட்டிய விசுவாசத்திற்கு,வேந்தன் தந்த பதில் மரியாதை.வாரத்தில் கட்சிக்கூட்டம் இல்லாத மீது 2-3நாட்கள் அங்கு தான் இருப்பாள்.

கட்சியின் முன்னேற்ற பணி,கட்சி நிதி மேற்பார்வை,கட்சிக்கான விளம்பர வேலைகள் என எல்லாத்திற்கும் திட்டம் வகுத்து வேந்தனிடம் தருவாள்.

வேந்தனோ,இது ஏதோ அவரே போட்ட திட்டங்கள் போல அவரது விசுவாசிகளிடம் சொல்லி சிலாகித்துக் கொள்வார்.
இதை அறியாத அதரா,'தனது வயதிற்கு அதிகமாக யோசனை சொல்கிறோமோ?'என்ற எண்ணத்தில் தனது புதுப்புது யோசனைகளை யாரிடமும் சொல்லாது, நேரடியாக வேந்தனிடம் மட்டுமே சொல்வாள்.
வேந்தனோ மிகத் திறமையாக அவரது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார்.

பொருளை திருடுவது குற்றமென்றால்
பிறரின் திறமையை திருடுவது ?
அதும் ஒருபெண்ணின் ஏழ்மையை பயன்படுத்தி அவளை வஞ்சிப்பது
எத்தகைய பாவச்செயல் !
அதரா அறியாது அவளை வைத்து
வேந்தன் ஆடும் ஆட்டத்தில்
அதரா வீழ்வாளா! வீழ்த்துவாளா?
 
#9
4.பாதுகாப்பு :

இப்படியே நாட்கள் கழிய,அமிர்தன் தனது பள்ளிப்படிப்பை முடித்து இல்லம் திரும்பியிருந்தான்.
அப்போது அமிர்தனுக்கு 20 வயது,இடையில் ஏற்பட்ட பள்ளி இடைநிறுத்தல் காரணமாக தற்பொழுது தான் பள்ளிப்படிப்பை முடித்திருந்தான்.

பலவருடம் விடுதி வாழ்க்கையெனும் கொடுமைத் தாண்டி,அவன் தன் வீட்டினுள் நுழையயிருக்க,அவன் முதலில் கண்டக்காட்சி, காலர் வைத்து,முழுக்கை சுடிதார் அணிந்து, தன் நீண்டக்கூந்தலை நேர்த்தியாகப் பின்னிப்போட்டிருந்த பெண்ணின் பின்புறத்தை தான்.

வீட்டு நுழைவாயிலே கட்சி அலுவலகம் என்பதால், யாரென்றாலும் அந்த அலுவலகத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

அதேபோல அமிர்தன் அலுவலகம் கடக்கும் நேரம்,அவன் கண்களிலும் ஒரு பெண்ணின் பின்புறம் தெரிய,' யாராக இருக்குமென்ற ?' அவனது வயதுக்கு உண்டான யோசனையோடே அலுவகலத்தை நோக்கி வர,ஏதோ கோப்பைக் கையில் வைத்து சரிப்பார்த்து வாசல் நோக்கி நடந்து வந்த அதரா,நிமிர்ந்துப் பாராது சென்றதில் அமிர்தன் மீதே மோதி நின்றிருந்தாள்.

மோதிய வேகத்தில் அவள் பதறி விலக,அமிர்தனோ எங்கோ பார்த்த முகமென்ற பாவனையில் அவளை கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதராவோ நொடியில் அவனைக் கண்டு கொண்டிருந்தாள்.இப்பொழுதும் அவனை பார்த்ததும் அவளுக்கு முதலில் நினைவு வந்தது அந்த கைச்சங்கிலியை தான், கூடவே' இந்தமுறையாது தவறாது அவனிடம் தர வேண்டும்'என எண்ணிக்கொண்டாள்.

அதராவின் தெரிந்தப் பாவனையில் அமிர்தன் இன்னும் குழம்பி நிற்க,
அதற்குள் வீட்டில் இருந்து வெளியே வந்த அமிர்தனின் அன்னை
சாரதா,“ஹே!அமிர்தன் கண்ணு வந்துட்டியா?நாளைக்கு வாரதாதான சொல்லியிருந்த!சரி சரி என்னைக்குனா என்ன,நீ வந்ததே அம்மாக்கு சந்தோசம்”என்றவர் அதரா என்றொருத்தி இல்லாதது போல பேசி,அங்கிருந்து அவனை அழைத்துச் சென்றிருந்தார்.

அதராவிற்கு இது பழகிய ஒன்றுதான்.என்றும் வேந்தனின் மனைவி,கட்சியாட்களை வீட்டில் உள்ளோரிடம் பேச அனுமதிக்க மாட்டார்.அதனால் அவள் இயல்பாக அதனை கடக்கப் போக,அப்போது சட்டென அவள் முன் வந்து நின்ற அமிர்தன்,“அதரா”என்றான் பத்து வயதில் இதழ் தித்திப்பில் சொன்னது போல 20 வயதிலும் அதே தோரணையில் அழைத்தான்.

அவனது உச்சரிப்பே அவளுக்கு சிலிர்ப்பைத் தர,நங்கென்று தன் உள்மனதில் தனக்கே கொட்டு வைத்தவள்,அமிர்தனை எட்டிநிறுத்தும் பார்வைப் பார்த்திருந்தாள்.

அவளது பார்வை மாறுபாட்டை உணர்ந்த அமிர்தன்,“நீங்க அதரா தான?”எனக் கேட்க,அதராவோ அவளது கவரிங்சிமிக்கி காதோடு உரச சம்மதமாகத் தலையசைத்தாள்.
அடுத்து அவன் என்னவோ கேட்க வர,அதற்குள் அவனது அன்னை அழைத்திருந்தார்.

அவரது அழைப்பில்,“நம்ம அப்புறம் பேசலாம் தாரா”என்றவன் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

அதராவோ,' இவன் என்னைத்தான் தாரா என அழைத்து செல்கிறானா?'எனக் குழம்பியவள், குழப்பத்தோடே அங்கிருந்து அகன்றாள்.

நாட்கள் அதன் போக்கில் நகர,அதரா ஒரு பக்கம் ஊர்ஊராகக் கூட்டத்தில் பேசுவதிலும்,அன்னையைக் கவலை அண்டாது பார்த்துக்கொள்வதிலும், வேந்தனுக்கு கட்சி முன்னேற்ற திட்டத்தை தீட்டித் தருவதிலும் கழிந்ததிருக்க,

அமிர்தனோ வந்திருப்பதுப் பரிட்சை விடுமுறை என்றாலும், அவனை இப்போதிருந்தே கட்சிப் பணிகளை கற்றுக்கொள்ள சொல்லி கட்டளையயிட்டிருந்தார் வேந்தன். அமிர்தனுக்குக் கட்சி என்பதில் எல்லாம் துளியும் ஆர்வமில்லை,இருந்தும் வீட்டிற்குள் இருந்தால் தந்தை,தன்னுடன் அன்னையையும் சேர்த்து பேசுவார் என்பதால் அவர்கள் வீட்டின் முகப்பில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் சென்று அமர்ந்து கொள்வான்.

வார நாட்களில் வெளியே செல்லும் அதராவிற்கு அவனது வரவு பெரிதாக எந்த மாறுதலையும் ஏற்படுத்த வில்லையென்றால்,வாரஇறுதி நாட்களில் அவளும் அந்த அலுவலகத்தில் இருப்பது அவனிடம் சிறுசலனத்தை உண்டு பண்ணியது.இந்த சிறுசலனத்திலே அவனிடம் தரவேண்டிய கைச்சங்கிலியை கூட மறந்திருந்தாள்.

கூடவே,மற்ற ஆட்கள் போல அவனைக் கடந்து செல்லவும் முடியாது,நன்றாக உரையாடவும் முடியாது,அவள் இருக்கும் நேரம் அந்த அலுவலகம் வர வேண்டாம் என சொல்லவும் முடியாது சற்று இயல்பிலில்லாது தவித்துதான் போனாள் அதரா .
 
#10
அன்றும் அப்படி தான் அதரா ஏதோ வரைபடம் போல வரைந்து,அடுத்த கட்சிக்கூட்டத்திற்கு இருக்கை அமைப்பு சரிப்பார்த்துக் கொண்டிருக்க,அலுவலகத்திற்குள் வந்த அமிர்தன்,“தாரா!எனக்கு கட்சிப்பத்தி,அரசியல் பத்தி ஏதாவதுச் சொல்லி தர்றியா?எங்க அப்பா போட்டு சாகடிக்கிறார்!”என நேரடி பேச்சுபேச,

ஒரு நொடி அதரா,'இவன் என்ன இப்படி கேட்கிறான் அரசியலை கரைச்சுக் குடிச்ச இவங்க குடும்ப வரலாறு தெரிஞ்சு தான் பேசுறானா?'என்றொரு பார்வைப் பார்க்க,

அமிர்தனோ இயல்பாகச் சிரித்து,
“தாரா மைண்ட் வாய்சில திட்டாத.எங்க தாத்தா,அப்பாக்கு தெரிஞ்ச அரசியல்மேல எனக்கு நாட்டம் இருந்ததில்லை.
இப்போவும் இல்லை தான்,ஆனா இங்க இருக்கப்போற மூணு மாசம் வீட்டில் பிரச்சினை இல்லாமல் இருக்கனுமென்றால் எனக்குக் கட்சிப்பத்தி ஏதாவது தெரிஞ்சிருக்கணும்.
அதான் கேட்கிறேன் தாரா,வேற யார்கிட்ட கேட்டாலும் அவங்க அப்பாகிட்ட சொல்லிடுவாங்க.
ஆனா நீனா சின்ன வயசிலிருந்தே என் ப்ரெண்ட்ல,சோ யார்கிட்டேயும் நீ சொல்ல மாட்டன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”என உரிமையாகக் கேட்க

அதராவோ,'என்னது நான் உனக்கு சின்ன பிள்ளைல இருந்து ப்ரெண்ட் அஹ்,சொல்லவே இல்லை !' என்றொரு பார்வை அவனை நோக்கி வீச,அவளது பார்வையில் சிரித்த அமிர்தன்,“சரி தாரா,நீயும் நானும் பிரெண்ட் இல்லை,எனக்கு மட்டும் நீ சின்ன பிள்ளைல இருந்து ப்ரெண்ட்,சரியா?”என புன்னகைத்துக் கேட்க

என்ன முயன்றும் அதரா,அவனது சேட்டையில் சற்றுச் சிரித்தே விட்டாள்.
அவளது மலர்ந்த முகத்தைப் பார்த்திருந்த அமிர்தன்,“ஹப்பாடி இன்னைக்கு தான் நீ சிரிச்சு நான் பார்க்கிறேன்.நீ சிரிக்கும் போது அழகா இருக்க தாரா,அதே கோவமா பார்க்கும் போது இன்னும் அழகா இருக்க ”என சற்று குழைந்த குரலில் பேசியவன்,அவள் சுதாரிக்கும் முன் அங்கிருந்து ஓடிவிட்டான்.

அவனது சிறுபிள்ளைத் தனமான செயல்,அவளது மனதை இலகுவாக்க,ஒரு நொடி தன்னையே கண்ணாடியில் சிரிப்பது போலவும்,முறைப்பது போலவும் முகம் வைத்துப் பார்த்துக் கொண்டாள்.
அவள் அறியாது அவள் கண்களும்,முகமும் சற்று சிவந்து மிளிர,அதில் தன்னையே தட்டிக்கொண்டவள் அடுத்த வேலையை பார்க்கச்சென்றாள்.

இப்படியே நாட்கள் அழகாகச் செல்ல,அமிர்தன் இப்போது எல்லாம் வீடுதாண்டி வெளியூரிலும் கட்சிச்கூட்டத்திற்குச் சென்று வருகிறான்.

அவன் வருவதன் நன்மை,அதராவை யார் அருகிலும் நிற்க விடாது,அவளுக்கு தனி ஒற்றை இருக்கை ஒதுக்கி அவளை அமர்த்திவிட்டு அவளுக்கு பின் இருக்கையில் கட்சிப்பணியாளர்களுடன் அவன் அமர்ந்து கொள்வான்.

தனியாக அதராவோடு அவன் அமராது,கட்சிப்பணியாளர்களுடன் அவன் அமர்ந்ததால் பெரிதாக யாரும் சலசலக்கவில்லை.
இருந்தும் அவ்வப்போது வேந்தன்,“ஏன்டா கட்சி வண்டியில் போற?தனியா காரெடுத்துக்கிட்டு போ“என்று சொன்னதற்கெல்லாம்,அமிர்தன்,
“அப்பா!நான் அரசியலை அடிமட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ள போகிறேன்”என்று உண்மை போலவே சொல்லி அவரின் வாயடைத்து விடுவான். இருந்தும் அவ்வபோது அவன் மீது ஒரு பார்வை வேந்தனிற்கு இருந்து கொண்டே தான் இருக்கும்.

அனாவசிய பேச்சுகள் எப்போதும் அவனுக்கும் அதராவிற்கும் இருந்திடாததால், அவர்களிடையே இருந்த மெல்லிய நட்பு யாருக்கும் தெரியாது போனது.

நட்பு நட்பாகவே தொடர,இப்போது எல்லாம் கூட்ட நாட்களில் கூட அமிர்தன் தரும் பாதுகாப்பில் நிம்மதியாக தான் இருந்தாள் அதரா.

என்னவொன்று,அவ்வபோது காரணமின்றி கூட அமிர்தன்,அவளது பெயரை,“தாரா ,தாரா”என மூச்சுக்கு முன்னூறு தடவை அழைப்பான்.
காரணம் கேட்டால் ஒரு இதழோர சிரிப்புடன் நகர்வான்.

அந்த சிரிப்பின் அர்த்தம் அமிர்தன் தெரிந்து சிந்தினானா எனத் தெரியாது!
ஆனால் அவனது அழைப்பும்,சிரிப்பும் அவளைச் சிறிது சிறிதாக அவனிடத்தில் சலனப்படுத்தியது என்னவோ உண்மை தான்.

இப்படியே அமிர்தனின் விடுமுறை நாட்களும் முடிய,சென்னையில் அவனுக்கு மிகப்பெரிய கல்லூரியில் பொறியியல் படிப்பிற்கு அனுமதிக்கிட்டியிருந்தது.

ஆனால் அமிர்தனோ,அவர்கள் ஊரில் இருக்கும் கல்லூரியிலே படிக்கயிருப்பதாக சொல்லி மறுத்துவிட்டான்.
எத்தனை யார் சொல்லியும் அவன் கேட்கவில்லை.
‘இப்போது தான் அரசியல் கற்றுக்கொண்டிருப்பதால்,தான் இங்கு தான் இருப்பேன்’என்று பிடிவாதம் பிடிக்க,வேந்தன்,'தன் மகன் தன்னை போலவே அரசியல் ஆர்வம் கொண்டிருக்கிறான் 'என்றெண்ணி அகமகிழ்ந்து அவனது முடிவிற்கு சரியென்று விட்டார்.

அதராவிற்கு சற்று நெருடலாக தான் இருந்தது,அமிர்தனுக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காதென அவள் அறிவாள்,இருந்தும் அவன் ஏன் இங்கிருக்க வேண்டும்.
அதும் அவளது மனம் வேறு அவ்வப்போது அவனது சிறு நொடி அக்கறைக்கு ஏங்குவது அவளுக்கே விந்தையாக தெரிய,கூடவே சில நாட்களாக அவனது பார்வை சொல்லும் அர்த்தம்,அவனை விட்டு விலகுவது தான் தனக்கு நல்லதென சுட்டிக்காட்ட,'அதற்கு அவன் இங்கிருந்து சீக்கிரம் போக வேண்டும்'என அவள் வேண்டிக்கொண்டிருக்க,அவனோ இந்த ஊரிலே கல்லூரியில் இணைவான் என அவள் துளியும் நினைத்துப் பார்க்கவில்லை.

'இனி நாமாக தான் அவனிடம் தடுமாறாது இருக்க வேண்டும்'என எண்ணியவள்,பெரும்பாலும் வாரஇறுதி நாட்கள் கூட கட்சிஅலுவலகம் வராதுக் கூட்டத்திற்கு போய்விடுவாள்.

ஒருவிஷயத்தை தள்ளி வைக்கும் போது தான் அதன் ஈர்ப்பு அதிகரிக்குமாம்.
அது போல அதரா,அவனை விட்டு தள்ளி செல்ல செல்ல அவளுடனே தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அமிர்தனுக்கு அதிகரித்திருந்தது.

அதராவோ,சற்று வயதில் பெரிய பெண்ணென்றால் கூட இந்த உணர்வுகளை போராடித் தவிர்த்து,இதனால் வரபோகும் பாதிப்புகளை தவிர்த்திருப்பாள்,ஆனால் அவளது வயதில் அமிர்தன் தரும் பாதுகாப்பிற்கு மனம் ஏங்க அவனை தவிர்க்க அடிக்கடி கூட்டம் சென்றவள்,சிலநாட்களிலே முன்புபோல் அலுவலகத்திலே இருந்து கொண்டாள்.

தன்னை இத்தனை தவிர்த்தவளை,பல நாட்கள் கழித்து இன்று அலுவலகத்தில் பார்த்ததில் பேரானந்தம் கொண்ட அமிர்தன்,“தாரா”என்றழைத்து, அவளது கைகளைப் பற்றியவன் அவளது கரங்களில் இறுக்கம் தந்து தன்கரத்தில் கோர்க்க,அதில் அதிர்ந்த அதரா யோசிக்காத அவனது கன்னத்தில் அறைந்திருந்தாள்.

இதை அமிர்தன் துளியும் எதிர்பார்க்கவில்லை.இத்தனை நாள் காணாத ஆவலில் அவன் செயலிருக்க,அதராவோ முதன்முறை அந்நிய ஆண்மகனின் உரிமை தீண்டலில் எதிர்வினையாற்றி இருந்தாள்.

உரிமை மறுக்கப்பட்ட இடத்தில்,அவளது முகத்தைப் பார்க்கவே சற்று கீழாக உணர்ந்தான் அமிர்தன்.
அதராவிற்கு அவனை அறைந்தது சரியா?தவறா?என்றெல்லாம் தெரியவில்லை,ஆனால் அறைந்தனொடி அவன் முகம் வெளிப்படுத்திய உணர்வு அவனை விட இவளை பெரிதும் தாக்கியது.

இருந்தும்,'தன்னை தீண்டும் தைரியம் யாருக்கும் எப்போதும் இருக்க கூடாது' என தனக்கே சொல்லி கொண்டவள்,அவனை சமன் செய்யாது அவளது வேலையைப் பார்க்க சென்று விட்டாள்.

அங்கிருந்து அகன்ற அமிர்தன்,அதன்பின் அவள் கண்களில் கூட படவில்லை.

ஒருபக்கம் அவள் தன்னை தவிர்த்ததன் கோவம்,மறுபக்கம் வயதில் சிறிய பெண்ணை காயப்படுத்தி விட்டோமோ என்றொரு பயம்,எல்லாம் தாண்டி அவள் தனக்கு வேண்டுமென்டொரு ஏக்கம் என அவனையே அவனில் யோசிக்க வைக்க, அதராவின் கண்களில் படாது விலகிதான் இருந்தான்.
இப்போது அதே ஈர்ப்பு,அதரா பக்கம் வேலை செய்ய துவங்கியிருந்தது.அதும் கட்சிக்கூட்டதிற்காக பேருந்தில் பயணம் செய்யும்போது,அவளை பழையபடி இடிப்பதும்,சிலர் சீண்டுவதுமாகத் தொடர,அவள் மனம் அந்த நொடி அமிர்தனை தான் வெகுவாக எதிர்பார்த்தது.

அப்படி ஒரு நாள்,வரயிருக்கும் சட்டமன்ற தேர்தல் சிறப்புச் கூட்டதிற்காக,அவர்கள் அனைவரும் அண்டை ஊருக்கு அழைத்துச் செல்லப்பட,அதராவிற்கோ அங்கு அமர கூட இடமில்லை,அதிலும் பின்னிருக்கும் ஆசாமிகள் உரசிவர அருவத்து தான் போனாள்.
சரியாக அந்த நேரம்,பேருந்தில் ஏறிய அமிர்தன்,அங்கிருக்கும் அதராவை பார்க்கக் கூடாது என எண்ணியும்,கட்டுபடுத்த முடியாது அவளது முகம் பார்க்க,அது காட்டிய கலங்கியப் பாவத்தில் சுற்றி ஒரு முறை பார்த்தவன்,முன்னிருக்கும் ரெட்டை இருக்கையில் அமர்ந்திருப்பவரை எழுந்துக் கொள்ள சொல்லிவிட்டு தான் அமர்ந்து கொண்டான்

அமர்ந்தவன்,ஏதோ யோசிப்பது போல பாவனைச் செய்து,பின் சற்றுசத்தமாக, “அதரா !அப்பா உங்ககிட்ட கட்சிச்கூட்டத்தில் பேச வேண்டியக் குறிப்பையும்,அதில் நான் எப்படி பேச வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்ள சொன்னாங்க,இங்க வந்து எப்படின்னு சொல்லி தர்றீங்களா?” எனக் கேட்க, அங்கிருந்தவர்களோ, 'கட்சியின் அடுத்த வாரிசு இவரா?' என முணுமுணுக்கத் துவங்கியிருக்க,
அந்த இடைவேளையில் தன்னை பின்னிருந்து உரசிய ஆசாமியை முன்னிருந்தே வலதுகையை ஒங்கி பின்னோடு அவனது வயிற்றில் குத்துவிட்ட அதரா,தொண்டர்கள் வாரிசென்ற முணுமுணுப்பில் ஆழ்ந்திருந்த நேரம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காது சத்தமின்றி வந்து அமிர்தன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அருகிலமர்ந்தவள்,‘இன்று இவன் தான் கூட்டத்தில் பேச போகிறானா?உண்மைதானா?' என்பது போல அவனை புருவம் உயர்த்திப் பார்க்க,அமிர்தனோ மெல்லிய குரலில்,“அன்னைக்கு உன் கையை நான் தொட்டிருக்கக்கூடாது,சாரி தாரா,ஆனால் என்னைக்கா இருந்தாலும் அந்த கையை என்னோட மட்டும் தான் இணைய போகுது.ஐ லவ் யூ தாரா “என்றான் உயிர் உறையும் குரலில்.

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா
 
#11
5.சிறு சலனம், பெரு வலி :

அதரா அசையக்கூட மறந்து அமர்ந்திருக்க,அமிர்தனோ சற்று உரத்த குரலில்,“ஒஹ் ! இது தான் பேசனுமா, சரி அதரா! நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கட்சியாட்கள் அனைவருக்கும் கேட்கும்படி பேசினான்.

அதராவின் சிமிட்டாத இமைகளில் இன்னும் கவரப்பட்டவன்,அவளைப் பார்த்து கண்சிமிட்டி ,“அப்பா எல்லாம் என்னை பேச சொல்லல!
என் ஆளு கஷ்டப்படுவதை என்னால பார்க்க முடியலை,அதான் நானே களத்தில் இறங்கிட்டேன்”என கொஞ்சி பேச,

அதரா அவனது நேரடி பேச்சில் இன்னும் இன்னும் அதிர்ந்துதான் பார்த்தாள்.

'இவன் என்ன சொல்ல வருகிறான்? தெரிந்து தான் பேசுகிறானா?வேறு யார் காதிலும் விழுந்திருக்குமா? 'என அவள் சற்று நிமிர்ந்து அனைவரையும் பார்க்க,

இப்போது எழுந்து நின்ற அமிர்தனோ,தெளிவான குரலில்,
'இன்று தான் பேச போவதாகவும்,பெரிதாக இல்லையென்றாலும் கட்சியின் கொள்கைக்குறிப்புகள் மட்டும் சொல்ல போகிறேன் 'என அவன் அங்கிருப்போருக்கு விளக்கம் தர, அதரா இன்னும் மீளா அதிர்ச்சியில் தான் அவனை பார்த்திருந்தாள்.

'கிட்டத்தட்ட யாரும் இவர்களை கவனிக்க வண்ணம் அனைவரது கவனத்தையும் பேசியே திசை திருப்பி உள்ளான் 'என அவள் எண்ணி முடித்த நொடி மறுபடியும் அவள் அருகில் சட்டமாக அமர்ந்துக்கொண்டான்.

அதராவிற்கு எழுந்து ஓடிவிடலாம் போல இருந்தது.
உள்ளுக்குள் அத்தனை குறுகுறுப்பு,அதைத் தாண்டி இன்னொருபுறம் இனம்புரியாத பயம் என எல்லாம் சேர்த்து அவளை படபடக்க வைக்க நல்லவேளையாக அவர்கள் இறங்குமிடம் வந்தது.

முதல் ஆளாக அதரா அவனைத் தாண்டி இறங்கி ஓட,பாதையில் கூட அவளுக்கு பின் யாரையும் விடாதவன் அவனும் அவள் பின் இறங்கிச் சென்றான்.

இப்போது சற்று தெளிந்திருந்த அதரா,“என்ன நினைச்சிட்டு பேசுறீங்க? நான் மேஜர் கூட இல்லை?அசிங்கமா இல்லை சின்ன பொண்ணுகிட்ட இப்படி பேச?”என்று உள்ளுக்குள் ஆசையிருந்தும் அவள் நிலையுணர்ந்து வெளியே அவள் சீறி பேச,

அமிர்தனோ,படியில் இறங்கி வரும் கட்சி பணியாட்கள் பார்த்து கையசைத்து கொண்டே மெல்லிய குரலில், “எனக்கு இன்னும் 5வருஷம் கழிச்சு தான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஐடியா இருக்கு,உனக்கு இப்போவே இருக்கா என்ன?அதான் நீ சின்ன பொண்ணுன்னு சொல்றியா?” என இலகுவாகப் பேச,ஒரு நொடி அதராவும்,'தான் சரியாக தான் பேசினோமா ?'என்று தவித்தாள்.

பின் யோசித்தவளாக,அவனைப் பார்த்து பழிப்பு காட்டியவள்,அவனை தவிர்ப்பதற்காகக் கூட்டத்தில் கட்சித்தொண்டர்கள் மத்தியில் தொண்டர் போல அமர்ந்து கொண்டாள்.கண்டிப்பாக மேடை தாண்டி இனி அமிர்தனால் வர முடியாதென்ற தைரியம் அவளை அப்படி செய்ய வைத்தது.

அவளது செயல் அமிர்தனுக்குச் சிரிப்பை தான் தந்தது.
அவனுக்கும் புரிகிறது,அவளும் சிறு வயது தானும் சிறு வயது.
அதனால் தான் இத்தனை தூரம் தள்ளி நின்றாலும் அவளது விழி அசைவில் அவள் மனம் படிக்கிறான்.
இருந்தும் ஒரு முறை,ஒரே ஒரு முறை தனது காதலை அவளிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லியிருந்தான்.
வருடம் 2013:
இப்படியே நாட்கள் நகர,எப்போதும் போல யாரும் கவனிக்கா நேரம் அவளை பார்த்து இமைச்சிமிட்டுவதும்,இதயத்தில் குத்திவிட்டாய் என்பது போல இடப்பக்க நெஞ்சில் குத்திக்காட்டுவதும் என அவனது செல்லச் சேட்டைகளில் தொடர,ஒருநாள் என்ன முயன்றும்,முடியாது அதரா அவளது உள்மன ஆசைகளை முகத்தில் பிரதிபலித்திருந்தாள்.

கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து அவளிடம் இருந்து கிடைத்த முதல் காதல் பார்வையில் அமிர்தன் அந்த நொடியில் மொழியற்று தான் போனான்.


அவளது ஆழ்மன எண்ணங்களை,'இத்தனை நாள் குடும்பத்திற்காகப் போராடிய எனக்காக போராட ஒருவன்,இனி எனக்கென்றால் என்னை தாண்டி இவனுக்கு வலிக்கும் என்ற உணர்வு ,தொலைந்த தந்தையின் பாதுகாப்பு இவனிடம் கிடைக்குமென்ற நம்பிக்கை' என அனைத்தையும் ஒற்றை பார்வையில் தேக்கியவள் அவனை உரிமையாக காதலாகப் பார்த்திருந்தாள்.

அப்போதும் அவளது காதலை வாய்விட்டு சொல்லவில்லை,அமிர்தனும் அவளை கட்டாயப்படுத்தவில்லை.

அவள் பார்வை சொல்லும் உரிமை
அவள் தயக்கம் காட்டும் நெருக்கம்
இதை தாண்டியா அவளது வார்த்தைகள் சொல்லிவிடப் போகிறது என்று விட்டுவிட்டான்.

ஆனால் அவளுடன் இருக்கும் நொடிகளை ஆழ்ந்து அனுபவித்தான்.

வருடம் 2015:

'வாழ்க்கை இத்தனை வண்ணமயமாகுமா? இதழோர சிரிப்பில் தன்னை மொத்தமாக சாய்க்க முடியுமா?விரல் தீண்டாது உயிர் தீண்டா முடியுமா?'என அதராவின் அத்தனை எண்ணத்திற்கும் பதிலாய் அமிர்தன் இந்த மூன்று வருடங்களில் அவளை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறான்.

இப்போது அமிர்தன் மூன்றாம் வருடம் முடித்திருந்தான்.அவனுக்கும் அதராவை போல அத்தனை உணர்வுகள் இருந்தாலும்,சற்று வந்திருந்த பொறுப்பில்,'அடுத்து என்ன படிக்கலாம்,என்ன செய்ய போகிறோம் 'என்றெல்லாம் யோசித்து,' முதுநிலை பட்டபடிப்பு வெளியூர் சென்று படிப்பதென்றும்,கூடவே ஒரு வேலையோடு திரும்பி தன்னவளின் கரம்பிடிக்க வேண்டும் ' எனத் தெளிவாக முடிவு செய்தவன், அதராவை அவளிருக்கும் அவர்கள் கட்சிஅலுவலகம் தேடிச்சென்றான்.

அந்த நேரம் அங்கு யாருமில்லாத போக,எடுத்த முடிவை சொல்லும் முன்,இனிவரும் பிரிவிற்கு ஈடுசெய்யும் வகையில் அவளை பின்னிருந்து அணைத்திருந்தான்.

அதரா பயந்து கத்தப்போக,அவளை அறிந்தார் போல,ஒற்றை கரம்கொண்டு அவளது இதழ்மூடிய அமிர்தன்,”நான் தான்டி கத்திடாத”என பின்னிருந்து அணைத்ததால் அவளது செவித்தீண்டி மெல்லியக் குரலில் அவன் முணுமுணுக்க,அணைத்தது அமிர்தன் என்பதால் ஒரு நொடி அமைதியடைந்தவள்,அடுத்த நொடி,' வேண்டாம், இது தப்பு' என்றெண்ணி,' அவனை கையை எடுக்குமாறு சொல்லியிருந்தால்' அவளுக்கே கேட்காத குரலில்.

அவளது புதுவித உணர்வு,அவளை தாண்டி அவனுக்கு இன்பம் தர இன்னும் அவளை தன்னோடு சேர்த்திறுக்கி கொண்டவன்,“ஒரே ஒரு முறை லவ் யூ சொல்லு தாரா, விடுறேன்” என்று வம்புச்செய்தான்.

அதரா மறுத்தேதோ பேசவர,சட்டென மற்றொரு முத்தத்தை அவளது செவியில் பதித்திருந்தான் அமிர்தன்.

அதராவிற்கு இந்தநொடி வெட்கம்பிடுங்கித் தின்றது.
நொடிக்கு நொடி அவனின் அழுத்தம் அதிகரிக்க,இதற்கு மேல் இருவர் உணர்வுகளோடு விளையாடுவது சரியில்லை என்று உணர்ந்தவள்,“நான் ”என துவங்கி அவளது காதலைச் சொல்ல வந்த நொடி,

பின்னிருந்து யாரோ அமிர்தனை எத்தியிருக்க,அவனோடு சேர்ந்து அவளும் அப்படியே குப்புற விழுந்திருந்தாள்.
ஒரு நொடியில் என்ன நடந்தது என இருவரும் தெளியும் முன்,அடுத்தடுத்து அவர்கள் கன்னத்தில் அறைவிழுந்தது.

அமிர்தனை வேந்தன் அறைய, அதராவை சாரதா அறைந்துக் கொண்டிருந்தார்.
இத்தனைக்கும் கதவுத்திறந்திருக்க வாசலில் நின்ற அத்தனை கட்சியாட்களும் வேடிக்கை பார்த்தனர்.
அந்த நிலையிலும், அமிர்தன்,தாயின் முன் நின்று அதராவை விட்டுவிடும் படி கெஞ்ச,அதற்கும் சேர்த்து அவனை அடித்தனர்.

பின் கட்சியாட்கள் வேடிக்கை பார்ப்பதால்,அவர்கள் அமிர்தனை மட்டும் தரதரவென வீட்டிற்குள் இழுத்துப் போக,அமிர்தனோ அதராவையும் உள்ளே வரும்படி அவளின் கையை அழுத்தமாக பற்றியிருந்தான்.

இதுவரை அதரா மீது கைவைக்காத வேந்தன்,மகனின் செயலில் உச்சக்கோவத்திற்கு சென்று அதராவை பளாரென அறைந்திருந்தார்.
இமைசிமிட்டும் நேரத்தில் நடந்திருக்க,அந்த நொடி அதராவை விட அமிர்தனுக்கு அந்த அடி பெரிதும் வலித்தது.
கூடவே அவனுக்குப் புரிந்தது,'தான் இங்கு நின்று என்ன செய்தாலும் அதராவை தான் தாக்குவார்களென'.
அதராவோ,எந்த ஒரு அடிக்கும் அழுகவேயில்லை.
கண்கள் எல்லாம் தனக்காகப் போராடும் அமிர்தன் மேல்மட்டும் இருந்தது.

அமிர்தனோ,இனி தன்னால் அதரா அடிவாங்குவதை தாங்க முடியாது என எண்ணி,வேகமாக அவனே அனைவரையும் தாண்டி வீட்டிற்குள் சென்று விட்டான்.

அதாவது அதராவை அப்படியே விட்டுவிட்டு.
அவனை தொடர்ந்து அவனது அன்னை, தந்தை மிக அசிங்கமான வார்த்தைகளைப் பேசிக்கொண்டே செல்ல,இப்போது அந்த அலுவலகத்தில் அதரா மட்டும் நிற்க,அவளை அத்தனை பார்வைகள் மொய்த்தது.
சிலர் அருவருப்பாக,சிலர் நாங்க தொட்டப்ப சிலிர்த்துகிட்ட,சிலர் இதெல்லாம் ஒரு பொழப்பு என பார்வைகள் தொடர,கூனிக்குறுகி அந்த இடத்தில் அமர்ந்து விட்டாள்.

அமர்ந்த நொடி வீட்டிற்குள் ஏதேதோ பெருத்த சத்தமும்,பெருங்குரலில் பேச்சுகளும் கேட்க,யார் யாரை அடிக்கிறார் என்று தெரியாவண்ணம் அடிச்சத்தமும் அதரா காதில் விழுந்தது.
ஒரு நொடி அமிர்தனுக்கு எதும் ஆகிடுமோ எனப் பயந்தவள்,எழுந்து வெளியே வர போக,அந்த நேரம் ஆவேசமாக உள்ளே நுழைந்த சாரதா, அவளை இழுத்த மறுபடியும் அறைந்திருந்தார்.

இந்த முறை அதரா அவரது கைகளை அடிக்க முடியாதபடி தடுக்க,அதில் இன்னும் ஆத்திரமடைந்த சாரதா,தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவளை கூந்தலோடுப் பற்றி மிக அசிங்கமான வார்த்தைகளில் திட்ட, இத்தனைநேரம் அடி தாங்கிய அதரவால், வார்த்தைகளின் வலியை தாங்க முடியாது,கோவத்தில் சாரதாவை ஒரே உலுக்கலில் தள்ளி விட்டிருந்தாள்.

விழுந்த நொடி ,சாரதாவிற்கு ஆத்திரம் தலைக்கேற அருகிலிருந்த கத்திரையை எடுத்தவர் அதராவின் நீண்டக் கூந்தலை சரசரவென வெட்டியிருந்தார்.
அதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிழுப்பி மிகமிக கோரமாக மாற்றியிருந்தார்.

அவ்வளவு தான்,இத்தனை நேரம் திரண்டிருந்த தைரியம் வடிய,உடலின் மொத்த பலமும் கத்தரிக்கப்பட்ட கூந்தலில் சென்றது போல,கால்கள் தள்ளாட மிக அதிர்ந்த நிலையில் அதரா அப்படியே மடங்கி அமர்ந்து விட்டாள்.
அமர்ந்த நொடி,இன்னும் அடங்கா ஆத்திரம் கொண்ட சாரதா தகாத வார்த்தைகள் பேச,அதராவோ காதுகளை அழுத்த பொத்திக் கொண்டாள்.

'இப்போது அமிர்தன் வரமாட்டானா?தன்னை காக்க மாட்டானா?இந்த அசிங்கம் நிறைந்தோரின் பார்வையில் படமால் தன்னை மீட்க மாட்டானா?' என மனதிற்குள் லட்சம் முறை அவள் வேண்ட,அமிர்தனோ வரவேயில்லை.

ஆத்திரம் தீர அதராவை அறைந்த சாரதா,அங்கிருந்த ஆட்களிடம் அவளை வெளியே தூக்கிப்போடும் படி கட்டளையிட்டு அங்கிருந்துச் சென்றார்.

இதற்காகவே காத்திருந்தார் போல,அவளை தீண்ட சில அற்ப ஜென்மங்கள் வர,இத்தனை நேரம் கூனிக்குறுகி அமர்ந்திருந்தவள்,அவர்களை ஒற்றை பார்வையில் எட்டி நிறுத்தியிருந்தாள்.

இனியும் இங்கிருப்பது அவளுக்கு சரியாக தெரியவில்லை,கழுகு போல அவளை வேட்டையாடக் காத்திருப்பவர்களாக சுற்றியிருக்கும் ஆட்கள் தெரிய,கடைசி ஒரு முறையாக அமிர்தன் வருவானா என அவள் பார்த்திருக்க,அவளின் ஏக்கங்கள் ஏமாற்றமாக மட்டும் கிடைக்க,முயன்று தன்னைநிலை நிறுத்தியவள் கோரமாக இருந்த முடிகளை கூட திருத்த நினைக்காது அப்படியே அங்கிருந்து எழுந்து சென்றவள்,என்ன முயன்றும் பரிகாச பார்வைகளை தாங்க முடியாது உயிர்துடிக்க, அப்படியே கோரமுடியோடு கிட்டத்தட்ட பித்துப்பிடித்தவள் போல கதறியபடி கால்கள்தள்ளாட ஓடியிருந்தாள்.
 
#12
6.ஊர் மாற்றம்:

ஏதோ பித்து பிடித்தவள் போல, கோர முடிகளோடு அவள் தெருவெங்கிலும் ஓட,ஊரே அவளை ஒரு மாதிரி தான் பார்த்தது.
ஓடி வந்தவள் வீட்டிற்குளடைந்து கதவைச் சாற்றி கொள்ள,வீட்டில் அடைந்து அழும் மகளின் நிலை கண்டு அவளின் அன்னை துடித்து தான் போனார்.

அதும் அவள் நிலை, முடியெல்லாம் வெட்டப்பட்டு,ஏதோ மிக கோரமாக இருக்க,காலை ஊன்றி எழுந்து வர முடியா நிலையிலும்,போராடி எழுந்தவர் எழுந்த வேகத்தில் தரையில் வீழ்ந்திருக்க,அப்படியே தரையோடு இழுத்து கொண்டே சென்று மகளை அடைந்தார் .

தாய் தன்னை அழைத்ததையோ, கீழே விழுந்ததையோ ,பின் இழுத்துக் கொண்டே வந்து தன்னை அடைந்ததையோ உணராத அதரா,தனது தலையில் ஒரு கைப்பட பயத்தில், “அம்மா” என கதறியிருக்க, பேச்சியோ மகளின் கண்ணீரில் தானும் ஓய்ந்து போனார்.

ஒரு வழியாக போராடி பேச்சி, தன் இருப்பை உணர்த்த, நீரினை பிரிந்த மீன் போல துடித்தவள் அன்னையைக் கட்டிக்கொண்டு அனைத்தையும் ஒப்பித்தாள்.

கேட்ட பேச்சிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை,ஆனால் கண்டிப்பாக இன்றோடு இந்த பிரச்சினை முடிவது போல தெரியவில்லை.கண்டிப்பாக வேந்தன் இனி சும்மா விடமாட்டான்.

'என் பெண்ணின் இந்தநிலையை பார்க்கவா தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறேன் 'என்றெண்ணி கண்ணீர் சிந்தியவர்,வேகமாக ஒரு முடிவெடுத்து அதனை மகளிடம் சொன்னார் .

அதராவிற்கு, அவள் அன்னை சொன்னது போல,இந்த ஊரை விட்டு போய் விடுவது ஒரு வகையில் சரியென்றலும்,மற்றொரு புறம் அமிர்தன் தன்னை தேடுவானோ என்று அந்த நொடியும் அவனுக்காக வாடியவள்,பின் தனக்காக தன் குடும்பம் வருந்த வேண்டாம் என்றெண்ணி அன்னை சொன்னது போல அனைவரது உடுப்புகளை எடுத்து வைத்தவள்,தனது சகோதரிகள் வந்ததும் நடந்ததை முழுதுமாக சொல்ல முடியாது கூனிக்குறுக,பேச்சியே நிலையை கையிலெடுத்து, மகள்களிடம் கதறியழுதபடி அனைத்தையும் விளக்கினார்.

இத்தனை நாள் அவளின் உழைப்பில் வாழ்ந்தவர்கள்,முதல்முறையாக தங்கையை வார்த்தையால் சாடினர்.

ஏனோ அவர்கள் வார்த்தைகள் சகோதரி என்ற உரிமை தாண்டி, அவளை அற்பமாக பார்ப்பதுபோலிருக்க உள்ளுக்குள் மரணித்து தான் போனாள் அதரா.

இருந்தும் இந்த நொடி, வேந்தன் பெரிதாக ஏதும் யோசித்து செய்யும்முன், குடும்பத்தை காப்பாற்றுவது ஒன்றே முக்கியமாகப்பட,ஒரு கார் பிடித்தவர்கள் அங்கிருந்து சென்று,யாருக்கும் ஊர்த் தெரியக்கூடாது என்பதற்காக அடுத்த ஊருக்கு பேருந்தில் பயணப்பட்டனர்.

வெண்பா,வெண்மதி இருவருமே பட்டப்படிப்பை முடித்திருந்தனர். நல்லநேரமாக கிளம்பும் அவசரத்திலும் அவர்களது கல்விக்கோப்புகளை அதரா எடுத்துப் பத்திரப்படுத்தியிருந்தாள்,கூடவே அமிர்தனின் கைச்சங்கிலியையும்.

தென்தமிழகத்தில் இருந்தவர்கள்,இருந்த காசில் மேற்கே குடியேற ஒரு இடம் கிடைத்ததிருந்தது.
பாதுகாப்பான இடமடைந்த பின்,அதராவிற்கு மறுபடியும் அமிர்தனின் நியாபகம் தான்,தன்னை அவன் தேடுவானே,கூடவே அவன் நன்றாக இருக்க வேண்டும் என்றொரு வேண்டுதல்.

சிலகாலங்களாக தான் இந்த குடும்பம் நிலையான வாழ்வு வாழ்ந்திருக்க,அதுவும் நிலைக்காது,தன்னால் தான் தன்குடும்பதிற்கு இத்தனைப் பெரிய கஷ்டம் என்றெண்ணிய அதரா,அவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, ஓரிரு நாட்களிலே அருகிலிருக்கும் தொழிற்சாலையில் போராடி கூலிவேலை வாங்கிருந்தாள்.
வெண்பா, வெண்மதியோ அவர்கள் படித்த படிப்பிற்கு தான் வேலைக்கு போவோம் என்று வீட்டிலே நின்று விட்டனர்.
இத்தனை வருடம் அவர்களை பார்த்துக் கொண்ட அதராவிற்கு இப்போது அவர்களை பார்ப்பதுக்கொள்வது அத்தனை பெரிய சுமையாகத் தெரியவில்லை போலும்.

அவளது உழைப்பில் அவர்கள் எவ்வித உறுத்தலின்றி உண்ண,கடைசியாக வெண்மதிக்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில்,வேலைக் கிடைத்திருந்தது.
அதன்பின் அவர்கள் வாழ்க்கைத்தரம் மெல்ல மெல்ல உயர,வெண்பாவுக்கு அவள் எண்ணப்படி வேலைக் கிடைக்காததால்,வேறுவழியின்றி கிடைத்த வேலைக்குச் செல்ல துவங்கியிருந்தாள்.

இப்படியே மூன்று மகள்களும் வேலைக்கு செல்ல,தற்பொழுது அவர்களது குடும்பம் ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தது.

அதராவோ தற்பொழுது அவளது சம்பளத்தை சகோதரியின் திருமணத்திற்கு சேமித்துக் கொண்டிருந்தாள்.
அவளிடம் அவர்கள் இருவரும் பேசவில்லை என்றாலும் ,ஏனோ அவர்கள் இவள் பொறுப்பு என்றொரு எண்ணம் அதராவிற்கு எப்போதும்.


எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நேரம்,வெண்மதி அவளுடன் பணிபுரியும் பையனை காதல்திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நிற்க,பேச்சி அவளது முடிவில் அழுக,அதராவோ ஏதோ சொல்ல வர,ஒற்றைப்பார்வையில் ,' நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா? ' என்பது போல தள்ளிநிறுத்த,அதன் பின் அங்கு அதரா வேடிக்கையாளர் மட்டுமே.

ஆனால்,வெண்பா வெண்மதி இருவரும் மட்டும் இந்த வீட்டின் சகோதரிகள் போல,தாய்வீடு பிரியும் துக்கத்தில் கட்டிக்கொண்டு கதறி அழுது கிளம்ப,அதராவிற்க்கு அழுகை வந்தாலும் உள்ளே இழுத்துக் கொண்டாள்.

இனி வெண்பா மட்டும் என்பதால்,முன்பிருந்தே சகோதரி திருமணத்திற்கு சேமித்த காசைத் திரட்டிய அதரா,அன்னையிடம் சொல்லி அவரே மாப்பிள்ளை பார்த்ததுப்போல செய்து,அவர்கள் வசதியில் ஒரு நல்லவரன் கொண்டு வந்து திருமணம் முடித்து வைத்திருந்தாள்.

எல்லாம் முடிந்தது,இனி அவளும் அன்னையும் மட்டுமே அந்தவீட்டில் என்றாகி போயினர்.

உள்ளுக்குள் இத்தனை நாள் அடக்கிவைத்த அத்தனை உணர்வுகள் கொதித்துக் கொண்டிருந்தாலும்,எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை அதரா.ஏன்,அவளது முடியைக் கூட இன்னும் வளர்க்கவில்லை.

அவள் அந்த ஊரிலிருந்து வந்துக் கிட்டத்தட்ட ஒருவருடம் ஆன நிலையில் கூட அதரா அவள் தோற்றத்தை சிறிதும் மாற்றிகொள்ளவே இல்லை.

இதுவரை அவளது கடமைகள் முடித்து,இனி அவளது எண்ணதிற்கான நேரமென்று வந்திருக்க,அன்னையிடம் சென்று நின்றவள், அவர்கள் சொந்த ஊருக்கும் போகவேண்டும் என்றாள்.

பேச்சிக்கு வார்த்தையே வரவில்லை,அன்று அவள் அழுத அழுகை அவர் அறிந்தது தானே.
மறுபடியும் அங்கு போகவேண்டுமென சொல்கிறாள் என்றால் ,கண்டிப்பாக ஏதோ திட்டம் வைத்திருப்பாள் என்று தான் அவருக்கு தோன்றியது.

அந்த எண்ணமே அவரில் சிறுபயத்தை விதைத்தது,அதில் அவர் சிலநாட்கள் தொடர்ந்து மறுப்பு சொல்ல,எத்தனை பேச்சி சொல்லியும் அதரா அங்கு செல்வதில் உறுதியாக நிற்க,இனி தான் சொல்லி பயனில்லை என்பதை உணர்ந்த பேச்சி அமைதியாக அவளுடன் கிளம்பினார்.
 
#13
7.மீண்டு வருவேன் :
வருடம் 2016 :

சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

அன்று போல இன்றும் கார்ப்பிடித்து கொண்டவ அதரா,மனமெல்லாம் கொண்ட வெறி தீயாய் பற்றியெரிய ,சிலமணி நேர பயணத்தில்,அவர்கள் ஊரடைந்து,அவர்களது சொந்தவீட்டைப் பார்க்க,அது அங்கங்கு கற்கள் வீசப்பட்டும்,சற்று அடித்து நொறுக்கப்பட்டும் சிதைந்துப் போயிருந்தது.

ஒரு நொடி பெருமூச்சை இழுத்து விட்டவள்,கையிலிருக்கும் காசுக்கு ஒரு அறை மற்றும் அடுக்களையை சீர்ப்படுத்த ஏற்பாடுச் செய்திருந்தாள்..

அவளது வரவு வேந்தனின் காதிற்கும் எட்ட,ஒன்றுமில்லாத நிலையில் அவளால் தன்னை என்ன செய்திட முடியும் என்ற எண்ணத்தில் சற்று இலகுவாக தானிருந்தார்.
இருந்தும் தன் பணியாட்களிடம் அவள் மீது ஒரு கண்ணிருக்கும் படி சொல்லி வைத்திருந்தார்.

இந்த ஒரு வருடத்தில்,வேந்தன் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நின்று தோற்றிருக்க,அவனது கட்சியும் சற்று பலமிழந்திருந்தது.
இவர்கள் இப்படியென்றால், அமிர்தன் என்றொருவன் என்ன ஆனானென யாருக்கும் தகவல் தெரியாது.

இப்படியே நாட்கள் செல்ல,அதரா மெல்ல வெளியே நடமாடினாள்.
பலர் கேலி பேசினாலும்,சிலர் நீ அந்த வேந்தன் முன் வாழ்ந்துக் காட்ட வேண்டுமென பேசினர்.

அதராவிற்கோ,வேறு எண்ணம்,' எப்படியும் வேலைக்கு சென்றாள் தான் சாப்பாடு,அந்த ஊர்போல இங்கு கூலி வேலைக்கெல்லாம் போக முடியாது' என்றெண்ணியவள் வேகமாக தனக்குள் கணக்குப் போட்டாள்.


அதை கொண்டு ,அவள் காய்கறி மார்கெட்டிற்குச் செல்ல,அங்கு அவள் நினைத்தது போலவே,அங்கிருந்த கடை உரிமையாளர்களிடம் வசூல் நடந்துக் கொண்டிருந்தது.காசுவாங்கி கொண்டிருந்தது வேந்தனின் ஆட்கள்.

எத்தனை காலங்கள் ஆனாலும், இது மாறாது என்பது போல தான் இந்த கமிஷன் காசு வாங்கும் பழக்கமும்.

முதலில் சற்று நேரம் வேடிக்கை பார்த்த அதரா,அவர்களை நோக்கி நடந்தாள்.

அவளது வரவில்,'நீயெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளா? ' என்பது போல பார்த்த வேந்தனின் ஆட்கள் அவர்கள் பணியைத் தொடர,

அதராவோ,அதிரும் குரலில், “ இனி யாரும் இப்படி கமிஷன் காசு தர வேணாம்,உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் என்கிட்ட சொல்லலாம் “எனக் கணீர்க்குரலில் சொல்ல,

ஒரு நொடி அவளது உறுதியில் திகைத்துப் பார்த்தவர்கள்,அடுத்த நொடி வேந்தனின் ஆட்களின் முகத்தை கேள்வியாகப் பார்த்தனர்.

வேந்தனின் ஆட்களோ,தங்களை தாண்டி ஒருவர் ,அதும் தங்களுக்கு பயந்து ஊரைவிட்டு இவள், எங்களை அதிகாரம் செய்வதா என்றெண்ணி ,“வேண்டாம் அதரா போயிடு,அதான் உனக்கும் நல்லது” என எச்சரிக்க,
அதராவோ,“போங்கடா பொட்டப்பசங்களா? இனி நான் சொல்றது தான் எல்லாம்,என்னைமீறி நீங்க ஒன்னும் பண்ண முடியாது “ என அவள் சற்று மெல்லியக் குரலில் அவர்களுக்கு மட்டும் கேட்கும்படியும் சற்று உசுப்பிவிடும் படியும்பேச,

கேட்ட வேந்தனின் ஆட்களோ,அவர்கள் ஆண்மை சீண்டப்பட்டதாக எண்ணி கோவம் கண்ணை மறைக்க,சட்டென அதராவைக் கன்னத்தில் அறைந்திருந்தனர்.
இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, அதராவை தவிர.

நக்கல் சிரிப்பை அதரா தனக்குள் அமிழ்த்திக் கொள்ள,இதை புரிந்துகொள்ளாத அந்த ஆட்களோ அவளின் மற்றொரு கன்னத்தில் அறைந்திருந்தனர்.

இப்போது அதரா முகத்தை வலிப்பது போல வைக்க,அதில் சிரித்த ஆட்கள், “ என்னடி... வலிக்குதா? “என அவளது சிலும்பிய கூந்தலைப் பற்ற,
அதற்குள் அங்கிருந்த வணிகரில் ஒருவன் ,“என்னபா நினைச்சிட்டு இருக்கீங்க.பொம்பளைப்பிள்ளை மேல கை வைக்குறீங்க,நாங்களும் அமைதியாக இருந்தா எங்க முன்னாடியே அடிப்பீங்களா!
அந்த பிள்ளை என்ன தப்பா கேட்டுட்டு என்று கைய ஓங்குறீங்க?நீங்க இப்போ ஆளும் கட்சிக்கூட இல்லை” என அதராவின் கண் சிமிட்டலில் அவளின் பழைய நலம்விரும்பி பேச,அதராவோ வலிப்பது போல கன்னத்தைப் பற்றி அழுத்தமாக நின்றிருந்தாள்.


முதலில் பேசியவனின் குரலில் உண்மையை உணர்ந்த அங்கிருந்த வியாபாரிகள்,ஒவ்வொருவராய் அதராவிற்கு ஆதரவு போல அவள் பக்கம் நிற்க,அதில் சற்று உயர்ந்த செல்வநிலையில் உள்ளோரும் அவளுக்காகக் குரல்கொடுத்தனர்.

அதராவோ வாயே திறக்கவில்லை.
அவளை ஒன்றுமில்லாது தூக்கி எறிந்தோரின் சாம்ராஜ்யத்தை அழிக்க,முதலடியை சத்தமின்றி எடுத்து வைத்திருந்தாள்.


இது எப்படியென்றால்,அங்கு முதலில் பேசத்துவங்கியத வணிகன் கிட்டத்தட்ட அதராவின் ஆள்தான்,'என்ன பேச வேண்டும் எப்போது பேச வேண்டும்' என அனைத்தையும் சொல்லிதான் அதரா அவனை அழைத்து வந்திருந்தாள்.
அவள் கற்ற அரசியலை அவளே ஆடிப்பார்க்கும் வேகத்திலிருந்தாள் இந்த முறை.

அந்த இடத்தில்,அனைவரின் வாக்குவாதமும் விடாது தொடர, சற்று அழுத்தமான குரலில் அதரா, “இவங்க என் மக்கள்,இவங்களுக்காக என்னனாலும் நான் பண்ணுவேன்,ஏன் என் உயிரை கூட கொடுப்பேன்,இதைப்போய் உங்க தலைவர்கிட்ட அப்படியே சொல்லுங்க” என அவர்கள் பக்கம் பேசுவதாக தன்னை அவள் நிலைநிறுத்திக் காட்ட,

அங்கிருந்த வியாபாரிகளோ, அதராவிற்கு அவர்கள் மீது இருக்கும் அன்பை எண்ணி சிலிர்த்தனர்.
கடந்த வருடம் அவள் ஊரை விட்டு சென்ற போது,ஊருடன் சேர்ந்து இவர்களும் தான் அவளை தகாத வார்த்தையில் திட்டிருந்தனர். இன்றோ ஒன்றிரண்டு அடி வாங்கி,நான்கு வசனம் பேசியதும் சிலிர்த்திருக்கிறார்கள்.

ஆனால் அதரா அறிவாள்,கண்டிப்பாக இதுமட்டும் போதாது,இந்த தொகுதி அவளதாக மாற வேண்டும்,தன்னை அவமதித்த இடத்தில் அசைக்க முடியா சக்தியாக அவள் எழுந்து நிற்க வேண்டும் என்றெண்ணியவள் அதற்கு என்ன செய்யலாம் என அடுத்தடுத்து யோசிக்க துவங்கினாள்.

அன்று காய்கறி சந்தையில் நடந்த வாக்குவாதம் பின் வேந்தனும் சுதாரித்துக் கொண்டார்.
அவருக்கே அரசியல் அறிவுரை சொல்லித் தந்தவள் அல்லவா! அவள்,கண்டிப்பாக ஏதோ திட்டமின்றி இங்கு வந்திருக்க மாட்டாள் என்பதை அவர் அறிவார்.இப்போது அவளது கதையை முடிக்க வேண்டுமென்றால் அவரிடம் பதவிகூட இல்லை.

என்ன செய்யலாம்,எப்படி அவளை இங்கிருந்து துரத்தலாம் என வேந்தனும் யோசிக்க,

சொல்லி வைத்தாற்போல இருவரின் பகை முடிக்க காலம் வந்தது,அந்த ஊரின் சட்டமன்ற உறுப்பினர் இறந்திருக்க,இடைத்தேர்தல் வைக்க ஏற்பாடு நடந்தது.
கண்டிப்பாக வயதைவைத்து அதராவால் போட்டியிட முடியாது என அறிந்த வேந்தன்,கர்வமாக தனது பெயரைப் பதிவு செய்தார்.

அவர் பதிவுச் செய்த அடுத்தநாள் சுயேட்சை வேட்பாளராக , “வெற்றிவேல்”என்பவர் களமிறங்கி இருக்க,அவருக்கு ஆலோசகராக அதரா களத்தில் இறங்கியிருந்தாள்.

இது வேந்தன் எதிர்பாராத திருப்பம்,வெற்றிவேல் அந்த தொகுதியில் மிகப்பெரிய ஆள்தான் ,பலமுறை தேர்தலில் நின்று குறைந்தபட்ச வாக்குஎண்ணிக்கையில் தோத்து இருக்கிறார்.
இந்த முறை அவருடன் அதரா என்பது வேந்தனை சற்று அச்சுறுத்தவே செய்தது.
இனி அவளை மிரட்டவும் முடியாது.கிட்டத்தட்ட வெற்றிவேலின் பாதுகாப்பில் அவள்.

என்ன செய்யலாம் என யோசித்த வேந்தன்,அவர் பக்கப்பிரசாரங்கள்,கட்சிக் கூட்டம்,ஆலோசனை கூட்டம் என தினந்தினம் கூட்டம்போட்டு பணத்தை வாரியிரைத்து போராடிப் பார்த்தனர்.

இங்கு அதராவோ அலட்டாது அவளது பணியைத் திட்டமிட்டு செய்துக்கொண்டிருந்தாள்.

ஊர் திரும்பிய அன்றே இதை அவள் யோசித்தது தான்.
அவள் வயதிற்கு,அனுபவித்திற்கு கண்டிப்பாக இந்தவருடம் அவள் சட்டமன்ற தேர்தலில் நிற்க முடியாது.
ஆனால் இந்த வெற்றி அவள்பக்கம் வேண்டும்!
'என்ன பண்ணலாம்' என யோசித்தவள் மண்டையில் மணியடித்ததுப் போல,'வெற்றிவேல் இருப்பை உணர்ந்தாள் '.

மிக நியாயமான பணக்காரன் வெற்றிவேல்.அவரது குடும்பம் ஒரு காலத்தில் மக்களுக்கு நல்லது பண்ண மட்டும் அரசியலிருந்தனர்.
அதனாலே மிக அதிகமுறை தோற்றுப்போயிருந்தனர்.
தற்பொழுது,ஏற்கனவே செல்வாக்கோடு இருக்கும் வெற்றிவேலின் நல்ல எண்ணத்தை களம் இறக்கி,அதன் மேல் தான் திட்டம் வகுத்து அவரை வெல்ல வைக்க வேண்டும் என முடிவு செய்து அவரை சந்தித்தவள் அவள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சொல்லி உதவி கேட்டாள்.

அவளை நன்கறிந்த வெற்றிவேலோ,ஒன்றுக்கு நான்குமுறை யோசித்தவர்,அவளதுத் திட்டத்திற்கு சம்மதித்தார்.

இப்படியே அந்த தொகுதியில் தேர்தல்பிரசாரங்கள்,கட்சிவாக்குறுதிகளென நாட்கள் களைக்கட்ட,பலர் அதராவை ஓடிபோனாவள் எனக்குறிப்பிட்டாலும் சிலர் அவளது தைரியத்தை மெச்சதான் செய்தனர்.

அதரா கையாண்ட ஒரே யுக்தி,எதையும் தன்னிடம் அண்டவிடவில்லை.
புகழ்ச்சி,பரிகாசப்பேச்சுகள்,சூழ்ச்சி மனிதர்களின் அன்பு வார்த்தைகள்,அன்பு நிறைந்தவர்களின் கனிவானப்பேச்சு என எதையும் அவளின் அருகே அனுமதிக்கவே இல்லை.
அவளுக்கும் இது எதை நோக்கி போகும் பயணமென்று தெரியாது,ஆனால் அவளை வஞ்சித்து,அசிங்க செய்து,ஊரைவிட்டு ஓட செய்தவர்கள் முன் ஒரு வாழ்க்கை வாழ்ந்து காட்டவேண்டும் என்ற தீவிரமான எண்ணம் மட்டுமே அவளிடம்.

அவளது எண்ணத்திலே,வெற்றிவேலுக்கு ஆதரவாக அவள் தீவிர பிரசாரத்திலும்,கட்சிச்கூட்டம் போட்டு வெற்றிவேலுக்கு அவள் மக்கள் படைசேர்க்க,இத்தனை வருடம் வேந்தனுக்கு ரகசியமாக சொன்ன யுக்திகளை வெளிப்படையாக வெற்றிவேல் சார்பில் அவனிற்காக செய்தாள்.
 
#14
இதோ அதோ என தேர்தல் முடிந்து முடிவு அறிவிக்கப்பட,வெற்றிவேல் அதிகபட்ச வாக்குகளில் வெற்றிபெற்றிருந்தான்.

வெற்றிவேலுக்கு நம்பவே முடியவில்லை.
இத்தனை வருடம் போராடித் தோற்ற போதெல்லாம் நிலையாக நின்றவன்,தற்பொழுது கிடைத்த வெற்றியில் நெகிழ்ந்து தான் போனான்.இந்த வெற்றிக்கு காரணமான அதராவிற்கு அவள் மறுக்க மறுக்க அனைத்தும் செய்து தந்தான்.

வீடு,கார் என அவளது வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட,அதரா இத்தனை நாள் அவள் உழைத்தற்கான வெகுமதியாக அதனை எடுத்துக்கொண்டாள்.
அவளுக்கு இனி இந்த உலகில், யாரென்றாலும் சும்மா வேலைப்பார்த்து தரமுடியாது என்ற எண்ணம் உதித்திருந்தது.

இங்கு,வேந்தனோ அடிபட்டப்புலி போலானார்.
முதலில் ஆளும்கட்சியிடம் தோற்றது பெரிதாக தெரியவல்லை அவருக்கு.
ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால்,மற்றொரு கட்சிக்கு அப்படிதான் வெற்றி தோல்வி மாற்றிமாற்றி வருமென ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஆனால் இப்பொழுது தோற்றது சுயேட்சை வேட்பாளரிடமிருந்து,அவர்களது கட்சி மேலிடமே கேள்வி கேட்கும்.யாருக்கு என்ன பதில் சொல்ல முடியும்.
இப்போது,'தான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ?'என்ற எண்ணம் அவருக்கு வழுத்திருந்தது.

வஞ்சத்தை மனதில் தேக்கிய வேந்தன்,கண்டிப்பாக அதராவை அழிக்க வேண்டும் ,அசிங்கபடுத்த வேண்டுமென திட்டம் தீட்டினார்.


திட்டம் அவர் தீட்ட,அவருக்கான விதி இறைவனால் நிச்சயிக்கப்பட்டது.
அதன் விளைவில்,அவர் சென்ற வாகனம் விபத்திற்கு உள்ளானது.மிக பெரிய சேதாரம்,உயிர் பிழைத்ததே அபூர்வம் என்றநிலை.

தந்தைக்கு அத்தனை பெரிய விபத்து நடந்தும்,அவர்கள் கட்சி அத்தனை பெரிய தோல்வியை சந்தித்தும் அமிர்தன் இன்னும் வீடு சேரவில்லை.
வீட்டின் மூத்தஆள் இந்த நிலையில் இருக்க,அவரது அடுத்த அரசியல் வாரிசான அமிர்தனை தான் அனைவரும் தேடினர்.ஆனால் யாருக்கும் பதில் கிடைக்கவில்லை.

இவர்கள் தேடினார்கள் சரி,அதரா தேடினாளா? என்றால் அதற்கும் பதிலில்லை.

அவளுக்கு வேந்தன் அடிபட்டது தெரியும்,இனி அவரால் கட்சிக்கூட்டத்தில் நின்று பேசக்கூடமுடியாது என்று தெரியும்.
இந்த நிலையிலும் அமிர்தன் வரவில்லையென்றால் அவனுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற கேள்விவைத்து ஊரில் பலர்,அவள் காதுபடவே பேசினாலும்,அவள் முகத்தில் துளி இளக்கமில்லை.

வெளியே தான் அப்படியென்றால், அவளது வீட்டிலும் அதே நிலைதான்.
அவளது சகோதரிகளுக்கு,அவள் இந்த ஊர் திரும்பியது பிடிக்கவில்லை,கூடவே அவளுக்கு திருமணம் செய்து வைப்பதாக சொல்லியும் அவளிடம் எந்த பதிலுமில்லாதது,அவர்களை இன்னும் கோவப்படுத்தியது.
பேச்சிக்கூட பல முறை திருமணம் செய்துக்கொள்ள சொல்லி கேட்டு பார்த்தார்.எங்கே மௌனம் மட்டுமே பதில் அதராவிடம்.

முதலில் சுயேட்சைக் கட்சிக்காக உழைக்க துவங்கியிருந்தவள்,நாட்கள் செல்ல செல்ல அவளுக்கென பெயரையும் அவள் உருவாக்க துவங்க,வெற்றிவேல் இதனை அறிந்தாலும் அவளை தடுக்கவில்லை.
அவரது எண்ணம் ஊர் நன்றாக இருக்கவேண்டும் அவ்வளவே.அதனால் அதரா அவளுக்கென தனி முத்திரைகளை அவளது அரசியல் செய்கைகள் மூலம் பதிக்க துவங்கியிருந்தாள்

2019-2020 தேர்தல் வருடம் :


இப்படியே மூன்று வருடங்கள் முடிந்திருக்க,அதராவிற்கு இப்போது 25 வயது.
ஒரு முழு அரசியல்வாதி எப்படி வாழ வேண்டுமோ அப்படி ஒரு வாழ்க்கை அவளிடம்,எட்ட நிற்பவர்களைக் கூட அத்தனை மரியாதையாகப் பார்க்க செய்திருந்தாள்,இந்த வருடம் வரும் தேர்தலில்கூட கட்சி சார்பில் அவளுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.வெற்றிவேல் அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலுக்கு குறிவைக்க, அதரா சட்டமன்ற தேர்தலில் தன்னை நிலைநிறுத்தப் பார்த்தாள்.

எல்லாம் சரியாக போய் கொண்டிருக்க,அவர்கள் எதிர்பார்த்த தேர்தலும் வர,அதரா முதல்முறையாக தேர்தலில் நின்றாள்.
ஊரே அவள் தான் ஜெய்பாள் என பேச,சரியாக அதற்கடுத்த நாள் அமிர்தனும் தேர்தலில் நிற்பதாக அவர்கள் கட்சி சார்பில் தகவல் வெளியானது.
 
#15
8.தனிமை :

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?

ஊரே அமிர்தனின் வரவை பரபரப்பாக பேச,அதரா எந்தசலனமும் இல்லாதிருந்தாள்.

இன்று வேட்புமனுத்தாக்கல் என்றிருக்க,

வழக்கம் போல தந்தையின் முன் நின்றவள்,மனதார அவரை வணங்கி கிளம்பினாள்.
அன்னையிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை.
அவருடன் அவளுக்கு மற்றொரு பிரச்சினை நடந்துக்கொண்டிருக்க,அதனால் வந்து பேசி கொள்ளலாம் என கிளம்பியிருந்தாள்.

சரியான நேரத்திற்கு சென்றவள், வெற்றிவேலிடம் ஒரு வார்த்தைச் பேசிவிட்டு,நேரடியாக தேர்தல்அலுவலகத்திற்குள் சென்று உரிய ஆவணங்களை சமர்பித்து கையொப்பமிட்டு வெளியேறினாள்.

ஒப்புகைச்சீட்டிற்கு அவளைக் காத்திருக்க சொல்ல,அந்த நேரம் அந்த இடமிடமே பரபரப்பாக,அமிர்தன் அவனது கருப்பு நிற ஜீப்பிலிருந்து இறங்கினான்.
கிட்டத்தட்ட ஐந்து வருடம் கழித்து ஊர் திரும்பியவன், ஆண்மையின் மொத்த உருவமாய் திரும்பியிருக்க, அங்கிருந்த மொத்த ஆட்களும் அவனை தான் பார்த்திருந்தனர்.

அமிர்தனோ முன்னிருந்த துடுக்குதனம் காணாமல் போயிருக்க,முகமே இறுகி அத்தனை கர்வமாக யாரையும் விழியால் கூட தீண்டாது,ஒருவித மிடுக்குடன் நடந்து வந்தான்.

அவனது தீடீர் வரவிலும்,அவனது மெத்தன தோரணையிலும் அவள் அறியாது அதரா அசையாது நிற்க,நொடியில் யாரோ போல அவளை கடந்துச் சென்றிருந்தான்.

அமிர்தன் கடந்த பின்னும்,அவனின் தாக்கம் அவளிடம் அதிகமாக இருக்க,ஒருவாறு அவள் உணர்ச்சியின் பிடியில் சிக்கித்தவிக்க, சட்டென அவள் முன் வந்து நின்றவன், “ தாரா , பென் இருக்கா ?” என்றான்.

இத்தனை பேர் சூழ,இரு கட்சி வேட்பாளர்கள் ,அதை தாண்டி முன்னாள் காதலர்கள் நேருக்கு நேர் நிற்பது அங்கிருந்தோருக்கு சுவாரஸ்யம் ஏற,அவர்களை உற்று நோக்க,

அதராவோ,இத்தனை ஆட்கள் மத்தியில்,போரில் எதிராள் போன்று நின்றிருக்கும் தருணத்தில்,எத்தனை தைரியம் இருந்தால் என்னிடம் வந்து பேசுவான்,' என்னால் எதும் முடியாதென இவனது தந்தை போல நினைக்கிறானா? 'என இத்தனை நாள் அவன் தவிக்கவிட்டு சென்றிருந்த கோவத்தை அவள் கண்ணில் தேக்கிப் பார்க்க,

அமிர்தனோ அவளிடம் மட்டும் முகம் இளகி,தணிந்த குரலில், “தாரா” என்றழைக்க அந்தக்குரல் அவளை உயிர்வரைச் சிலிர்க்க வைத்தது.

இனியும் அங்கு நின்றால்,சரிவராது என உணர்ந்தவள்,சட்டென அங்கிருந்து விலகி சென்றிருந்தாள்.
அவள் விலகிய நொடி, ஏதேட்சையாக அவள் கைகளில் இருந்த பேனா நழுவி விழுந்திருக்க,கேட்ட விஷயம் கிடைத்த திருப்தியில் அதைதானே குனிந்து கையிலெடுத்த அமிர்தன் நிறைந்த மனதோடு மனுதாக்கல் செய்து வந்திருந்தான்.

வீட்டிற்கு வந்த அதராவோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அத்தனை ரௌத்திரமாக அமர்ந்திருந்தாள்.' இவனுக்கு எத்தனை தைரியம்,என் வாழ்வில் எதுவுமே நடவாதது போல எப்படி பேசுகிறான்.நான் என்றால் இவனுக்கு சுலபமா?எத்தனை எத்தனை நாட்கள்,வருடங்கள்,என் வலி,என் வேதனை எல்லாம் ஒரு நொடியில் இவனால் கடந்திட முடிந்ததா ?' என எண்ணங்கள் பலவாறு அவள் மனதை சிறையெடுக்க மனம் வெகுவாக தனிமையின் துணைத்தேடியது.

சரியாக அப்போது பேச்சி அவளை அழைக்க,ஏற்கனவே மற்றொரு பிரச்சனையில் அவர் மேல் அவள் கோவமாக இருந்தவள்,தற்பொழுது அழைத்ததும் அவர் முன் சென்று நின்றவள் எதுவும் பேசாது அவரை பார்த்தாள்.

அவளது பார்வையில்,“ என்னால் நீ அடிக்கும் கூத்தையெல்லாம் பார்க்க முடியாது,அந்த வெற்றிவேல் வீட்டிற்கு நீ செல்வதிலே ஊர் சிரிக்குது,கண்டவன் வீட்டில் இரவு பத்து,பதினொரு மணிக்கு உனக்கென்ன வேலை?இதையெல்லாம் நான் கேட்டாலும் பதில் சொல்லமாட்ட?இப்போ அந்த அமிர்தன் வேற வந்துட்டான் ! இனி ஊர்வாய்க்கு அவில் தான்.இந்த கருமத்தையெல்லாம் என்னால பார்க்க முடியாது,நாளைக்கு வெண்பா வர்ற அவ என்னைய கூட்டிட்டு போறேன் சொல்லிட்டா ! நீ முன்ன மாதிரியில்லை,உனக்கு மானம்,மரியாதை போனாலும் பணம் தான் முக்கியம்.நீ இப்படியே இரு,நான் போறேன் “ என அவர் பேசி முடிக்க,

உள்ளுக்குள் அத்தனை உணர்வுகள் எழும்பினாலும் ,ஒற்றை வார்த்தையாக,,"சரி” என்றவள் அவளது அறையில் சென்று அடைந்து கொண்டாள்.

இது அவர்கள் வீட்டில் சமீபமாக நடக்கும் பிரச்சினை.
காரணம் அதரா இரவு நேரத்தில் வெற்றிவேல் வீட்டிற்கு செல்வதே.ஊர் கூட அசிங்கமாக பேசியது தான்.

“ இவள் வெற்றிவேலை கைக்குள் போட்டு தான் இந்த தேர்தலில் சீட் வாங்கியிருக்காள் “
“ இவளுக்கும் வெற்றிவேலுக்கும் தொடர்பு அதான் இரவு நேரத்தில் சந்தித்து கொள்கிறார்கள்”

என இன்னும் நிறைய நிறைய எப்போது போல பேச ஆள் இருக்கிறார்கள் தான்.

அதரா எதையும் கண்டு கொள்ளாததால் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை.
ஆனால் அதே வார்த்தையை தன் தாயின் வார்த்தையில் இருந்து கேட்கும் போது உயிரோடு சரிந்து தான் போனாள்.

அவளுக்கு தெரியும்,அவள் ஏன் வெற்றிவேல் வீட்டிற்கு போகிறாள் என,

வெற்றிவேல் பால்ய பருவத்தில் கொண்ட காதலில்,அவர் காதலித்த பெண் காலத்தின் கோலத்தில் மனநிலை தப்பியிருக்க,அவரை அவ்வப்போது சென்று சந்தித்து வருவது அதராவின் வழக்கம்.

அந்தபெண்ணும் அதராவின் பேச்சில் உள்ள மாயயை உணர்ந்தாரோ என்னவோ,அவள் வந்தால் அமைதியாகி விடுவார். இல்லையென்றால் சில நேரம் கட்டுப்படுத்த முடியாது கத்துவார்.

அதுபோல நேரங்களில், வெற்றிவேல் அழைப்பது அதராவை தான்.அதராவும் இந்த விஷயத்தில் எந்த நேரமென்றாலும் அவருக்கு உதவ முன்வர அதனால் இரவு நேர சந்திப்புகள் தொடர்ந்தது.

இதை அவர்கள் வெளியே சொல்லததற்கு காரணம், வெற்றிவேலுக்கென்று ஒரு குடும்பம் மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள்.அவர் மனைவியும் வெற்றிவேலின் பால்ய காதலையும்,காதலியையும் அறிவார்.அதனால் அவர் பக்கம் பெரிதாக எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் அதராவோ ஊரில் சில மக்களால்,அதும் வேந்தனின் ஆட்களால் தூண்டப்பட்டு,அசிங்கமாக பேசப்பட்டாள்.

அப்போதும் எல்லாம் உணராத வலி தாயின் வார்த்தையில் உணர்ந்தவள்,அதோடு தான் யாரோ போலவும்,வெண்பாவுடன் செல்வதாக கூறியதிலும் மனதால் வெகுவாக அடிவாங்கினாள்.

இவருக்காக தானே நான் படிப்பை விட்டது,
இவருக்காக தானே நான் கூட்டத்திற்கு பேச சென்றது,
இப்போது கூட ஒருகுறையில்லாது பார்த்துக் கொண்டிருக்க,

தன்னை யாரோ போல அவர் தூக்கியெரிந்து பேசுவது வலித்தாலும்,அதை தாண்டிய வெறி அவளுள்,' இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி தனக்கு கண்டிப்பாக கிடைக்கவேண்டும் ' என்பதிலே இருக்க, அமிர்தன், அன்னையென அனைவரையும் ஒதுக்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாள்.
சொன்னது போல அடுத்த நாளே பேச்சி அங்கிருந்து சென்றிருந்தார் வெண்பாவோடு.

இங்கு அமிர்தனோ வேட்பாளராகப் பதிவு செய்ததோடு சரி,அதன் பின் ஒரு கூட்டம் கூட போடவில்லை,யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை,தேர்தல் அறிவிப்புகளும் இல்லை.

அப்படியே அசையாது இருந்தான்.
அவனது செயலை ஊடகங்கள் கிழிக்க,அதராவோ ,' இவன் என்ன முட்டாளா? இல்லை இவன் விட்டு தந்தால் தான் ஜெய்பேன்' என எண்ணுகிறானா என பலவாறு அவனை திட்டியவள்,இருந்தும் நொடி தவறாது அவள் நியாயமான முறையில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து வந்தாள்.

அனைத்தையும் என்பதை விட குறிப்பாக,பெண்களுக்கு பயனுள்ள திட்டம்,வளர்ந்து வரும் மாணவர்களுக்கான கல்விச் சலுகை,வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் முனைவு திட்டம் என மிக சரியாக அங்கிருக்கும் மக்களின் மனமறிந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தாள்.
 
#16
9.மீண்டும் அமிர்தன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

பிரச்சாரங்கள்,தேர்தல் வாக்குறுதிகள்,கட்சி விளம்பரங்கள்,தனிநபர் தேர்தல் ஊர்வலம்,நட்சத்திரப்பேச்சாளர்கள் என அனைத்தும் சிறப்பாக செயல்பட,முதலில் அமிர்தன் எதும் செய்யவில்லை என்றாலும்,நாட்கள் செல்ல செல்ல படுத்தபடுக்கையாக இருக்கும் அவர் தந்தையின் கடைசி ஆசையென்பதால் அவனும் வேறு வழியின்றி சற்று ஆர்வாமகவே செயல்பட்டான்.

இது ஒருபுறம் என்றால்,ஒரு நாள் வெற்றிவேல் அதராவை வீட்டிற்கு அழைத்திருந்தார்.இயல்பு போல அதரா அவர் வீட்டிற்குச் சென்றிருக்க அவளை வரவேற்றது அமிர்தன் தான்.

அவனை சத்தியமாக அவள் அங்கு எதிர்பார்க்காவே இல்லை.கிட்டதட்ட இருவேறு பாதைகள் போல இருவரும் தனித்திருக்கும் போது,
'இன்று ஏன் இவன் இங்கு !' என அவள் யோசிக்க,
கண்டிப்பாக வெற்றிவேலிடம் பேசியிருப்பான்,அவரும் தனக்கு நல்லது செய்வதாக எண்ணி இந்த ஏற்பாடை செய்திருப்பார் என உணர்ந்தவள்,வந்த வேகத்தில் திரும்பப் போக,

அமிர்தன் அவளது கையை அழுத்தமாகப் பற்றியிருந்தான்.

அவனது அழுத்தத்தில் திகைத்தவள்,சற்று திரண்ட குரலில்,“கையை விட்டா நல்லாருக்கும் Mr. அமிர்தன்”என அவள் சீற,
அவனோ,அன்று போலவே இன்றும்,“காலம் முழுதும் இந்த கை என்னுடன் இணைந்திருக்கணும் என்று நினைக்கிறேன் தாரா,இனியும் என்னால உன்னை விட்டு இருக்க முடியாது,ஐ லவ் யூ தாரா“என அவன் சொல்லி முடிக்கும் முன் அவனை பளாரென அறைந்திருந்தாள் அதரா.

“ என்னடா நினைச்சிட்டு இருக்க, நீயா வருவ,லவ் பண்ணுவ,என்னையும் உன்மேல பித்தாகமாத்துவ,அப்புறம் உங்க வீட்டில் பிரச்சினை என்று என்னை விட்டுட்டு போயிடுவ,கடைசியா அஞ்சு வருஷம் கழிச்சு வந்து ஏதுமே நடக்காத மாதிரி பேசுவ ,நான் உன்னை ஏத்துகணுமா? “

“ இத்தனை நாள் நான் செத்து பிழைத்தது உனக்கு தெரியுமா?அன்னைக்கு முடி அறுபட்ட நிலையிலும் நீ வருவ,என்னை கூட்டிட்டு போவனு பைத்தியகாரி மாதிரி அங்கேயே நின்றிருந்தேன்.ஆனா நீ வரவேயில்லை,சரி அன்னைக்கு வரல,அங்கிருந்து சென்ற பின் வருவனு பார்த்தேன் வரல,அடுத்தநாள் பார்த்தேன் வரல, அடுத்த வருஷம் பார்த்தேன் வரல,முழுசா அஞ்சுவருஷம் கழிச்சு வந்து உன்னை ஏற்றுக்கொள்ள சொன்னா நான் ஏத்துகணுமா ?

இத்தனை நாள் மூச்சடைத்த செத்துட்டு இருந்தேன் டா.ஊரில் எல்லாரும் என்னை ஏதோ தப்பான பொண்ணு மாதிரி பார்க்கிறதும்,சொந்த வீட்டிலே அகதி மாதிரி என் அக்காங்களே விலக்கி வச்சுட்டாங்க,இவங்க எல்லாரையும் விடு எங்க அம்மா எனக்கு என்ன பட்டம் தந்தாங்க தெரியுமா ?

இந்த வார்த்தையில் எல்லாம் என்னைக்கோ நான் செத்துட்டேன்.இப்போ உன் முன்னாடி நிற்பது வெறும் பிணம் தான்.இப்போ ஏன் உயிரோட இருக்கேன் தெரியுமா?அந்த இடம் ,உங்க அப்பா அவரோட பதிவியை வச்சு என்னை அவமானப்படுத்திய இடத்திற்கு நான் வரணும்,என்னை அசிங்கமா பேசிய வாயில் நான் எத்தனை உயரம்னு பேசணும்.எல்லாத்துக்கும் எனக்கு அந்த பதவி வேணும்.இது மட்டும் தான் என் வாழ்க்கை ,நீயில்லை “ என ஆத்திரமிகுதியில் இத்தனை நாள் மனதில் தேக்கியதை முதல்முறையாக அவள் வாய்விட்டுச் சொல்லியிருக்க,

அவள் பேசி முடித்த நொடி,அவளை இறுக்கி அணைத்திருந்தான் அமிர்தன்.

அதராவோ மனதின் பாரம் இறங்கிய நிலையில் துளியும் அசையவில்லை.

அமிர்தனின் இதழ்கள், அவளது பெயரை,“ தாரா,தாரா “என விடாது உச்சரிக்க,அவனது கண்ணின் நீர் அவளது மேனியில் பட்டுத்தெறித்தது.

“எல்லாமே என்னால தான் தாரா,நடந்ததையெல்லாம் என்னால மாத்த முடியுமா தெரியலை.ஆனால் இனி நான் உனக்காக இருப்பேன் என்று சொல்ல முடியும்,ஐ லவ் யூ தாரா” என அவன் சொல்ல

அதராவோ பட்டென்ன அவனை தள்ளி,தற்பொழுது கூட அவன் பக்கவிளக்கத்தை சொல்லாது தவிர்க்கும் அவனின் இயல்பில் எரிச்சல் அடைந்தவள்,அவனை தள்ளிவிட்டு செல்ல பார்த்தாள்.

முயன்றாள் தான்,ஆனால் முடியவில்லை,விலகும் அவளது கரங்களை தன்னில் இணைந்திருந்த அமிர்தன் ஒற்றை சுழட்டலில் தன்னில் பொருத்தியவன்,அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு,“நீ போ என்று சொன்னதும் போக,நான் இன்னும் பழைய அமிர்தன் இல்லை தாரா,நீ முழுசா எனக்கு தான்.உனக்கு என்னை பிடிக்குமென எனக்கு தெரியும்.இந்த ஒரு விஷயத்தை தாண்டி எனக்கு உன்கிட்ட எதுவும் வேண்டாம்.மிக விரைவில் கல்யாணம் பண்ணிக்கலாம் தாரா, உன்னால என்னை கல்யாணம் பண்ணிக்க முடியலை என்றால் நான் உன்னை கல்யாணம் பண்ணிகிறேன் “என அழுத்தமாக சொன்னவன் அதை விட அழுத்தமாக அவளது இதழில் புதைந்துப் போனான்.

நொடிகளோ, நிமிடங்களோ காதலில் தாக்கம்,இழந்த நாட்களின் வலி இருவரில் அதிகமாக இருக்க,மீள முடியாது இருவரும் கரைந்தே போயினர்.

முதலில் சுதாரித்த அதரா,அவனின் அண்மையில் தடுமாறும் தன்னையே நொந்து,அவனை தள்ளியிருந்தவள்,இந்த முறை அவனின் கைகளில் அகப்படாமல் வேகமாக அங்கிருந்து ஓடினாள்.

அதில் சிரித்த அமிர்தன்,” ஐ லவ் யூ தாரா “என மிகச் சத்தமாக உரக்கக் கத்தினான்.

அதராவிற்கு பலவருடம் கழித்து மனம் லகுவான உணர்வு.இருந்தும் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.


இவள் இப்படி நினைத்திருக்க,அவனோ அவளது ஓரவிழி பார்வையில் அவள் மனதை அறிந்திருந்தான் அமிர்தன்.அவளது விழியின் மொழி சொல்லும் அவனுக்காக ஏக்கத்தை,அப்படியிருக்க அவளின் இதழ்வார்த்தை அவனை மறுத்ததை நம்பிவிடுவானா என்ன !

அவளை போலவே அவனும் அழுத்தம் தான்.கிட்டத்தட்ட அவளின் நிலைபோல தான் அவனுக்கும்.

அன்று அனைவர் முன் நடந்த களேபரத்தில்,தன்னால் அதரா யாரிடமும் அடிவாங்க கூடாது என்று தான் அங்கிருந்து சென்றான்.அதோடு வெளியே வந்தால்,தனக்காக அவள் காத்திருப்பாள்,அப்படியிருந்தால் அவளை தாண்டி அவனால் செல்ல முடியாது,அதே நேரம் கூட்டிகொண்டும் செல்ல முடியாது என எண்ணியவன் மனதைக் கல்லாக்கி கொண்டு அவனது அறையில் தஞ்சம் புகுந்தான்.கடைசியாக அவள் அலங்கோலமாக தெருவில் ஓடிய காட்சி இன்னும் கண் முன்.

அவனது நெஞ்சத்தை யாரோ கிழித்தது போலொரு வலி,அப்படியும் அவளை சென்று சந்திக்கலாம் என்றால்,அவனது தந்தை அவளை குடும்பத்தோடு அழித்திருவேன் என்றிருக்க, அன்றைய நாளில் அவரிருந்த செல்வாக்கு அவனை சற்று யோசிக்க தான் வைத்தது.

இருந்தும், தான் இனி அவளைச்சென்று காண கூடாதென்றால் அவளிற்கும் ,அவளது குடும்பத்திற்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது என சத்தியம் வாங்கியவன், தன்னவளை மதிக்காத இல்லத்தில் இருந்து தானும் இருக்கபோவதில்லை என்று வெளியேறினான்.

அதராவது வெளியேறிய போது உடன் அன்னை,சகோதரிகள் இருந்தனர்.அமிர்தனுக்கு யாருமில்லை,இருந்தும் தன்னவள் இல்லாத இடத்தில் தானும் இருக்கக் கூடாதென முடிவெடுத்து அவன் வாழ்ந்த வாழ்க்கைத் தரத்தை விட சற்று கீழிறங்கிய நிலையில் தான் வாழ்ந்தான்.

அப்போது தான் அதரா ஊர் திரும்பியதும்,தனது தந்தைக்கு எதிராக காரியமாக அவள் சாதிப்பதையும் கேள்விபட்டவன் சிலிர்த்து தான் போனான்.ஏனோ அவள் பேசும் கூட்டத்தில் அமர்ந்து அவளின் துணிச்சலுக்கும், தன்னம்பிக்கைக்கும் விசில் அடிக்க தோன்றியது அமிர்தனுக்கு.

அந்த நாட்களில் வேந்தனுக்கு விபத்து ஏற்பட்டு அவர்கள் குடும்பம் மொத்தமாக சரிவில் வீழ்ந்திருக்க,அதில் முதலில் மகிழ்ந்தவன் அமிர்தன் தான்.

ஆனால் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் வேந்தன் படுத்தப்படுக்கையாக இருந்தவர்,கடந்த சில நாட்களாக அவரது உயிரின் கடைசி ஆசை துளிர்விட,விரல் அசைவில் தன் ஆசையை சொல்லி அமிர்தனை இங்கு வரவைத்திருந்தார்.


அதாவது அவன் இங்கு வர வேண்டும் என்பதும்,தேர்தலில் நின்று,சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதும் வேந்தனின் கடைசி ஆசையாக இருக்க,வேறு வழியின்றி அதே நேரம் அதராவை தன் வாழ்வில் இணைக்கும் வழியை எண்ணி வந்திருந்தான் அமிர்தன்.

இதோ அதன்பின் இத்தனை நடந்தும்,தனது பக்க காரணங்களை சொல்லி தன்னை நியாயப்படுத்தி கொள்ளவில்லை அவன்.
எக்காலத்திலும் உனக்காக தான் உன்னை விட்டு விலகியிருந்தேனென அவன் சொல்லப் போறதுமில்லை.

காதல் விளக்கம் கேட்காது,
அதும் அவனுக்கு அதரா என்று வருகையில் எல்லாமே அதீதம் தான்,அதனால் கண்டிப்பாக அவனை விளக்கிப் புரிய வைக்க மாட்டான்..
 
#17
10.வஞ்சகம் தீர்த்தேன் :

இப்படியே நாட்கள் நகர,சில நாட்கள் காலஅளவில் தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட,அதரா பெரும்பான்மையாக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாள்.

வெற்றி என்றதும் அவளை ஊர்கூடி வாழ்த்த,அவளின் கண்களோ வாழ்க்கையில் தனக்கு உண்மையான சொந்தம் ஏதாவது கிடைக்குமா என்று தேடியது.

அவளது கண்கள் பனித்து,அழைந்துத் திரிய ,இறுதியில் ஒரு இடத்தில் நிலைக்குத்தி நின்றது.

அங்கு அமிர்தன் முகமெல்லாம் பூரிப்போடு அத்தனை சந்தோசமாக அவளைப் பார்த்திருந்தான்,சரியாக இவளும் பார்த்திருக்க,அவனது பலநாள் ஆசையான அவளது துணிச்சலுக்கு விசிலடிப்பதை அவனது வாகனத்தில் அமர்ந்தபடிச் செய்திருந்தான்.

அதராவிற்க்கு இந்த நொடி அவளது வெற்றி தாண்டி அவனது செயல் அத்தனை இனித்தது,அதே தித்திப்பில் புன்னகையாக வலம் வந்தாள்.

பல்வேறு செய்திஅலைவரிசைகள், “இது யாராலும் முடியாது வெற்றி,
இத்தனை சிறு வயது,என்ன இருந்தாலும் வெற்றிவேலின் தயவென” பலவகையில் பேசினாலும்,
அதரா அவள் இருக்கையில் அமர்ந்த நொடி அதன் கனம் உணர்ந்தாள்.

தான் வாழ்க்கையில் இனி எத்தனை லட்சம் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என உணர்ந்தாள்.
கூடவே தான் வஞ்சகத்தில் வீழ்ந்தது போல எந்த ஒரு சிறுமியும் வீழக்கூடாதென்றும்,அதற்கு தகுந்தாற்போல் சிலபல கல்வித்திட்டங்களை தன்னுள் எண்ணிக் கொண்டவள் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என யோசித்து கொண்டிருந்தாள்.

இவை மனதோடு என்றால்,பதவியேற்பு முடிந்து,வெற்றிவேல் குடும்பத்திற்கு நன்றி சொல்லி முடித்தவள்,கட்சிக்காவும் அவளிற்காகவும் உழைத்தவர்களுக்களை வெகுவாகக் கவனித்திருக்க,எல்லாம் முடித்து வெகு தாமதமாகவே இல்லமடைந்தாள்.

அதே வெறுமையான வீடு.
இந்த நொடி அவள் அடைந்த வெற்றி ஒன்னுமேயில்லை என முகத்தில் அறையும் உண்மையென அவள் முகம் வாடி கதவு திறக்க,அங்கு பேச்சி,வெண்பா,வெண்மதி,அவர்கள் கணவர், சற்று நொடித்தவாறு சாரதா,வெற்றிவேல் அவருடன் அவர் குடும்பம் என பலரும் இருக்க,அவளது கண்கள் நொடியில் கலங்கினாலும் அந்த கலங்கிய நீரிலும் அமிர்தனையே தேடியது.

முதலில் யாருக்கும் என்ன பேசவென வார்த்தையே வரவில்லை.
வெற்றிவேல் தான் சூழ்நிலையை கையிலெடுத்து கொண்டு அவரது முன்னாள் காதலி பற்றியும்,அவளின் மனநிலை பற்றியும் விளக்கினார்.
அதன் பின் பேச்சி நடக்கமுடியா நிலையிலும் வெண்பாவின் உதவியோடு அவளை அடைந்து கையைப்பற்றி,” மன்னிசுக்கோ சின்னக்குட்டி “என்ற வார்த்தை சொல்ல அதரா மொத்தமாக உடைந்தே விட்டாள்.

அதன் பின் ஆள் மாற்றி ஆள் அவளிடம் மன்னிப்பை வேண்ட, 'இருக்கும் ஒரு வாழ்க்கையில் யாரிடம் பகை வளர்த்து என்ன ஆக போகிறது,எத்தனை வெற்றி பெற்றாலும் எனக்கென யாருமில்லை என்றால் நான் தோற்று போனவள் தானே,ஆயினும் என் வஞ்சகம் தீர்த்து என்னை வைத்து வேந்தன் ஆடிய ஆட்டத்தில் அவனை பலியாக்கி நான் வென்றிருக்கிறேன்.இது போதும்.இந்த நொடி போதும் 'என அவள் உள்ளம் பேச,கண்களோ சற்று கோவமாக நின்றிருந்த சாரதாவை பார்த்தது,

இவள் அவரருகே செல்ல,அதற்குள் அவளுக்கு முக்கிய அழைப்பு வந்திருந்தது.

அந்த அழைப்பின் சொல்லப்பட்ட தகவலில் அவள் அந்த ஊர் மைதானத்திற்குச் செல்ல,முன்பு போல அல்லாது விளையாட்டு வாரியாகக்கூடங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்க,இவள் அங்குச் சேர்ந்த நொடி,பாதுகாவலர்கள் ஒவ்வொருவராய் அங்கிருந்து நழுவ,அதரா சுதாரிப்பதற்குள் ஒரு கரம் அவளையிழுத்து அங்கிருந்த அறையில் தள்ளி அதனோடு சிறைச்செய்திருந்தது.

அந்த ஒற்றை அணைப்பில் அத்தனை உணர்வு,அத்தனை பாதுகாப்பு,அத்தனை உறுதி என அனைத்தையும் உணர்த்த,

யாரென அறிந்ததில் சற்று நேரம் கட்டுண்டு இருந்தவள்,இருந்தும் பிடிவாதமாக அவனை விலக்கி,

“நான் உனக்கு வேண்டாம் அமிர்தன்,கண்டிப்பா உன் வீட்டில் வந்து என்னால வாழ முடியாது !”
என சொல்லி முடிக்க

அவளை தன் கையணைவில் நிறுத்தியவன் அவள் நெற்றி முட்டி,“பரவாயில்லை தாரா நான் உன் வீட்டிற்கு வந்துடுறேன்”என சொல்ல,

அதராவோ திருத்தமாக,“அப்போ உங்க அம்மா,அவங்க முகத்தில் எப்படி என்னால் முழிக்க முடியும்,எதையும் என்னால மறக்க முடியுமா?அதே நேரம் அவங்களோட ஒற்றை பையனை நான் அவங்ககிட்ட இருந்துப் பிரிக்க முடியுமா ?”என நியாயவாதியாக அவள் பேச

இந்த முறை அவளது,இரு கண்களுக்கும் மாறி மாறி முத்தமிட்டவன்,“எங்க அம்மாவை நீ பார்க்க வேண்டாம்.நீ ஒரு பாப்பா சீக்கிரம் பெத்துக் கொடுத்திடு,இனி அவங்க பாடு,அவங்க பேரப்பிள்ளை பாடு “ என இலகு குரலில் பேசினான்.

“அமிர்தன் இங்க பாரு,நீ இப்போ ரொம்ப அழகா இருக்க,நான் பாரு என்னோட முடியை பாரு,இன்னும் அப்படியே கோரமுடியாக தான் வச்சூர்கேன்,கடைசி வரை இப்படிதான் இருப்பேன் “என உறுதியாக பேச,

அதில் சிரித்தவன்,“எனக்கு உன்னோட முகம், அதன் அழகு தான் நான் முக்கியமென்று நினைப்பேனு நினைக்கிறியா ?”என நேரடி கேள்விக் கேட்க,

அவனது உண்மைமுகம் அறிந்தாலும்,இத்தனை உரிமையாக கட்டிக்கொண்டிருப்பவனின் அண்மையில் கரைந்தாலும் மறுபடியும்,“ ஊரில் எனக்கு என்ன பெயருனு தெரியுமா அமிர்தன் !வெற்றிவேல் கூட என்னை இணைச்சு என்ன பேசிர்க்காங்க தெரியுமா ?” என அவள் வாதம் செய்ய,

இதற்கு மேல் அவளை பேச விட கூடாது என முடிவு செய்தவன் ,அதற்குண்டான வேலையில் இறங்க, அவளின் கரங்களோ இத்தனை நாள் தவித்த தவிப்புகளும்,கொண்ட ஏக்கங்களும்,ஏங்கிய வாழ்க்கையும் கைச்சேர்ந்த நிம்மதியில் அவன் கேசம் தீண்டி அவனை இன்னும் தன்னில் பதிக்க

அங்கு முடிவு பெறாத காதல் போர் துவங்கியது.

*****

சில மனிதர்கள் மாறபோவதில்லை,அதுபோல தான் வேந்தனும் அவர் கொண்ட வஞ்சம் மரணப்படுக்கையிலும் அவர் மனதோடு.
ஆனால் அதரா வஞ்சகம் தீர்த்தாள்.அவளது திறமையால் ,
நேர்மையாய், அழிக்க முடியா
சரித்திரமாய்.

கொண்ட வெற்றி தாண்டி
கொண்டவனின் காதல் அவளை கவர
வாழும் ஒற்றை வாழ்க்கையில் - அவளுக் கென்ற அடையாளத்துடன் அவனின் கைச் சேர்ந்திருந்தாள்.

-வஞ்சகம் தீர்க்கப்பட்டது.
 
#18
ஶ்ரீ ஷாவின் வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே.
மூன்று பெண்களில் கடைக்குட்டியாக பிறக்கும் அதரா.மூணாவதும் பொட்டை என உறவுகள் சொன்னாலும் ராணி போல தகப்பனால் வளர்க்கப்படுகிறாள்!நெருப்பை குறிக்கும் தமிழ் வார்த்தையில் பெயர் வைத்து அழகு பார்க்கிறார்.
பண்ணையார் மற்றும் அரசியல்வாதியான வேந்தனிடம் வேலை பார்க்கிறார்.அவரின் மகன் அமிர்தனை சிறு வயதில் அவன் பிறந்த நாளில் பார்க்கிறாள்.அவனின் கை செயின் சாக்லெட் குடுக்கும் போது தவறுதலாக இவளிடம் வந்து சேர்கிறது!பேச்சுப்போட்டியில் சிறந்து விளங்கும் சிறுமி ஒரு சந்தர்ப்பத்தில் வேந்தனின் அரசியல் கூட்டத்தில்பேச நேரிடுகிறது.அதை பார்த்து கட்சி மேலிடம் அவளை தொடர்ந்து பேச அழைக்கிறது.
பேச்சி தயங்கினாலும் வேந்தன் தன் பாதுகாப்பில் அவளை பார்த்துக்கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறார்.அவர் சொல்லும் ..இந்த உலகில் எல்லா ஆண்களின் தேவையும் அதுவாக மட்டும் இருக்கணும்னு அவசியமில்லை !இந்த வரிகளில் அந்த கதாபாத்திரத்தின் மீது ஒரு மதிப்பு வருகிறது!ஆனாலும் கதையில் கிட்டத்தட்ட வில்லன் அவர் தான்!அவர் சிறு பெண்ணின் மூளையை திருடி வளர்கிறார்!சுற்றியிருக்கும் கும்பல் அவளை சீண்டுவதும் பார்வையால் தின்பதுமாய் இருக்க,வேந்தனால் வேறு பிரச்சினை இன்றி சமாளிக்கிறாள்.வாலிபன் அமிர்தன் இப்போது அதரா மீது காதல் கொள்கிறான்.விலகி விலகி போனாலும் ஒரு கட்டத்தில் அவளும் காதல் கொள்ளும் போது வேந்தனும் அவர் மனைவியும் அடித்து முடியை வெட்டி துரத்தி விடுகின்ற்றனர்.அப்போது அமிர்தன் வருவான் என நம்புபவள் அவன் வராததாலும் ஊர் குடும்பம் என அனைவரிடமும் அசிங்கப்பட்டு ஊரை விட்டு வெளியேறுகிறாள்.அதன் பின்னர் அவள் எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதை!அரசியல் களமும் அதன் சூழ்ச்சிகளுமாய் படிக்க நல்லாருக்கு கதை!
 
#19
ஶ்ரீ ஷாவின் வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே.
மூன்று பெண்களில் கடைக்குட்டியாக பிறக்கும் அதரா.மூணாவதும் பொட்டை என உறவுகள் சொன்னாலும் ராணி போல தகப்பனால் வளர்க்கப்படுகிறாள்!நெருப்பை குறிக்கும் தமிழ் வார்த்தையில் பெயர் வைத்து அழகு பார்க்கிறார்.
பண்ணையார் மற்றும் அரசியல்வாதியான வேந்தனிடம் வேலை பார்க்கிறார்.அவரின் மகன் அமிர்தனை சிறு வயதில் அவன் பிறந்த நாளில் பார்க்கிறாள்.அவனின் கை செயின் சாக்லெட் குடுக்கும் போது தவறுதலாக இவளிடம் வந்து சேர்கிறது!பேச்சுப்போட்டியில் சிறந்து விளங்கும் சிறுமி ஒரு சந்தர்ப்பத்தில் வேந்தனின் அரசியல் கூட்டத்தில்பேச நேரிடுகிறது.அதை பார்த்து கட்சி மேலிடம் அவளை தொடர்ந்து பேச அழைக்கிறது.
பேச்சி தயங்கினாலும் வேந்தன் தன் பாதுகாப்பில் அவளை பார்த்துக்கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறார்.அவர் சொல்லும் ..இந்த உலகில் எல்லா ஆண்களின் தேவையும் அதுவாக மட்டும் இருக்கணும்னு அவசியமில்லை !இந்த வரிகளில் அந்த கதாபாத்திரத்தின் மீது ஒரு மதிப்பு வருகிறது!ஆனாலும் கதையில் கிட்டத்தட்ட வில்லன் அவர் தான்!அவர் சிறு பெண்ணின் மூளையை திருடி வளர்கிறார்!சுற்றியிருக்கும் கும்பல் அவளை சீண்டுவதும் பார்வையால் தின்பதுமாய் இருக்க,வேந்தனால் வேறு பிரச்சினை இன்றி சமாளிக்கிறாள்.வாலிபன் அமிர்தன் இப்போது அதரா மீது காதல் கொள்கிறான்.விலகி விலகி போனாலும் ஒரு கட்டத்தில் அவளும் காதல் கொள்ளும் போது வேந்தனும் அவர் மனைவியும் அடித்து முடியை வெட்டி துரத்தி விடுகின்ற்றனர்.அப்போது அமிர்தன் வருவான் என நம்புபவள் அவன் வராததாலும் ஊர் குடும்பம் என அனைவரிடமும் அசிங்கப்பட்டு ஊரை விட்டு வெளியேறுகிறாள்.அதன் பின்னர் அவள் எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதை!அரசியல் களமும் அதன் சூழ்ச்சிகளுமாய் படிக்க நல்லாருக்கு கதை!
மிக்க நன்றி செல்வா மா.
மனதோடு இணைக்கும் விமர்சனம்.
கதையை படிக்க தூண்டுவதாக உள்ளது உங்களது வரிகள்.
கதையோடு பயணித்து, கருத்தளித்தற்கு மிக்க நன்றி .

😍😍