Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript விருந்தோம்பல் | SudhaRaviNovels

விருந்தோம்பல்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
462
150
63
விருந்தோம்பல்

இருள் கவிழ்ந்திருந்த நடுநிசியில் நாய்களின் குரைப்பு சத்தத்தையும் கண்டுகொள்ளாமல் மிகவும் வேகவேகமாக நடந்து சென்றவன் இப்படியும் ஒரு இடம் இருக்கிறதா என யாராலும் கண்டறிய முடியாத இடத்தில் இருந்த அந்தக் கட்டிடத்தின் கதவினை காற்றினை விடவும் பலத்த வேகத்தில் கடந்தான்.

அவன் இவ்வளவு வேகமாக வந்த பொழுதிலும் அனைவருக்கும் பின் தாமதமாகவே வந்துள்ளான் என்பதை அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அவனது சீனியர்களின் முகபாவனை உணர்த்தியது. "அச்சச்சோ ஏற்கனவே வச்சு செய்வாங்க... இன்னைக்கு கூட்டத்துக்கு லேட்டா வந்ததுக்கு இன்னும் என்னெல்லாம் பேச்சு வாங்கனுமோ", என மனதில் எண்ணியவாறே வெளியில் தன்னுடைய பற்கள் அனைத்தையும் காட்டி "சாரி சீனியர்ஸ்! கொஞ்சூண்டு லேட்டாயிடுச்சு", என மன்னிப்புக் கேட்க விரும்பாத குரலில் பேசியவனை கண்டு அவனுடைய சீனியா்கள் இகழ்ச்சியான புன்னகை ஒன்றை வீசினர்.

அது புரிந்தாலும் புரியாத மாதிரியே அவர்களின் அருகில் சென்று அமர்ந்தான். தங்கள் அருகில் வந்து அமர்ந்தவனை பார்த்தவர்கள் மீண்டும் தங்களுக்குள்ளேயே தங்களின் பேச்சினை தொடர்ந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை அவர்கள் அவமதிப்பதாக உணர்ந்தாலும் இப்பொழுதைய நேரத்திற்கு எது பேசினாலும் தன்னை மட்டம் தட்டியே பேசுவார்கள் என எண்ணியவன் அவர்களின் பேச்சில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் மட்டம் தட்டினாலும் பின்னர் ஜூனியரையும் தங்களின் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதையே காலம் காலமாக பின்பற்றும் சீனியர்கள் இங்கேயும் அதனையே பின்பற்றினர். சீனர்களில் அனைவருக்கும் மூத்தவனான பிளாக் "ஏன்டா கோவ்! ஏறத்தாழ 200 மில்லியன் பேரை போட்டுத் தள்ளுன என்னை விட நீ பெரிய அப்பாடக்கரா ஆகிட்டியே! அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லி தொலையேன். மறுபடியும் நாங்க ஏதாவது புது அவதாரம் எடுத்து டானா நடமாட முடியுமானு பார்க்குறோம்", எனக் கேட்டவுடன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கோவ் தன் கர்ணக் கொடூர குரலில் கத்தி அழ ஆரம்பித்துவிட்டான்.

அவனின் அழு குரலில் தான் எதுவும் தவறாக கேட்டு விட்டோமோ என பதறிய பிளாக் "டேய்! நான் என்ன கேட்டேன் இப்படி ஒரு ஒப்பாரி வச்சுட்டிருக்க. யாராவது உன் சத்தத்தைக் கேட்டா நான் உன்னை கொடுமைப் படுத்துறதா சொல்லுவாங்க. வாயை மூடு. என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே தெரியும்", என அதட்டியவுடன் தன் அழுகையை நிறுத்தி விசும்ப ஆரம்பித்துவிட்டான்.

மீண்டும் பிளாக் அவனை சத்தம் போட வாய் திறந்த நொடியில் அவனது அருகில் அமர்ந்திருந்த சாஸ் எதுவும் பேச வேண்டாம் என கண்ணால் ஜாடை செய்துவிட்டு கோவை கட்டியணைத்து ஆறுதல் படுத்த தொடங்கினான். சாஸின் ஆறுதலில் சற்று தெளிந்தவன் தன்னுடைய சீனியர்கள் அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தான்.

"சீனியர்ஸ்! நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் சந்தோசமா இல்லை. பேரு பெத்த பேரு தாகந்துகு நீலு லேதுன்னு சொல்லுவாங்களே அந்த கதைதான் என்னோட கதையும்", என கோவ் தன்னுடைய சோகக் கதையை பின்னணியில் சோக இசை வாசிக்கக் கூற ஆரம்பித்தான்.

அவன் பேச ஆரம்பிக்கும் முன்னரே இடை புகுந்த ஜிகா "ஏன்டா கோவ்! உலகத்தையே ஆட்டிப் படைக்கிற பெரிய டான் நீ... சோக கதையை சொல்லப் போறியா? இது நம்புற மாதிரி இல்லையே! உன்னை விட நாங்களும் பெரிய ஆளா இருந்தவங்கதான்டா! ஆனா எங்களையெல்லாம் கட்டி மூலையில தூக்கிப் போட்டுட்டாங்க. நீ எப்படி இத்தனை நாள் ஆகியும் மாட்டாம இருக்க? இப்ப வந்து எங்ககிட்ட கட்டுக்கதை சொல்லிக்கிட்டுருக்குறயா?", என கோபத்துடன் கேட்டவுடன் மீண்டும் சாஸை பார்த்த கோவ்

"நான் சொல்றதெல்லாம் உண்மை சீனியர்! நான் எங்கே போக மாட்டேன்னு சொல்றேன் இவங்கதான் என்னை விட மாட்டேங்கிறாங்க. நான் சொல்றத கேட்டுட்டு நீங்களே நிஜத்தை புரிஞ்சிப்பீங்க சீனியர்!", என பாவமாகக் கூறினான். தன்னைப் பார்த்துக் கொண்டே பேசியவனை அனுதாபத்துடன் நோக்கிய சாஸ் அவன் சொல்வதை கொஞ்சம் கேட்போமே எனக் கூறியவுடன் அனைவரும் அமைதியாகி விட்டனர்.

மீண்டும் சில நிமிடங்களை தன்னுடைய விசும்பலில் செலவழித்த கோவ் தன் கதையின் ஆரம்பத்தை மற்றவர்கள் பேசி கெடுக்கும் முன்னர் கூற ஆரம்பித்து விட்டான். "உண்மைதான் உங்க எல்லாரையும் விட நான் இந்த உலகத்தையே ஆட்டி படைத்தது. ஆரம்பத்துல எனக்கும் நாடு விட்டு நாடு போய் அங்க எல்லாரையும் கொன்னு குவிக்கிறதுல இருந்த சந்தோஷம் இப்ப சுத்தமாவே இல்லை...

உலகத்துல இருக்குற எல்லாருமே ஒரே மாதிரி இருப்பாங்கன்னு நான் கற்பனை பண்ணிக்கிட்டு இருக்குறப்ப நாங்க அப்படி எல்லாம் இல்லைடான்னு என் மண்டையில நங்குன்னு குட்டி நச்சுன்னு புரிய வச்சது ஒரு நாடு. பிறந்தோம்,வளர்ந்தோம் மத்தவங்களை நம்ம ஆதிக்கத்துக்குக் கீழ கொண்டு வந்தோம்
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
462
150
63
அப்படின்னு ஜாலியா சுத்திட்டு இருந்தேன்.

இவனுங்க மட்டும் சாதாரணமா திரியுறானுங்களேன்னு அவங்க நாட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சேன். இப்ப நானே நினைச்சாலும் என்னை வெளியில விட மாட்டேங்குறாங்க சீனியர்!", என பேசிக் கொண்டே இருந்தவன் மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டான். இந்த முறை அவனின் அழுகையை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. அதற்கு பதிலாக ஐயோ பாவம் என்ற பார்வையை அவனை நோக்கி செலுத்திய வண்ணம் இருந்தனர். யாராவது தன்னை ஆறுதல் படுத்துவார்கள் இன்னும் தன்னை புகழ்வார்கள் என மனதிற்குள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவன் அதெல்லாம் நடக்காத நிலையில் தானே அழுகையை நிறுத்திவிட்டு தன்னுடைய கதையை தொடர்ந்தான்.

இந்தியாக்குள்ள போனப்ப மத்த நாடு மாதிரியும் இவங்களும் நமக்கு பயந்துகிட்டு நாம ஆட்டம் ஆடுற வரைக்கும் அடங்கி ஒடுங்கி இருப்பாங்க. அதுக்கு அடுத்து வேற இடம் பாா்த்து போயிடலாம், சீனியர்ஸோட செட்டில் ஆயிடலாம்னு நான் கனவு கண்டுட்டு இருந்தேன்.அதெல்லாம் அங்க உள்ள நுழையுற வரைக்கும்தான்.

உள்ளே நுழைஞ்சதுக்கப்புறம் எனக்கு விருந்தா வச்சுக் கொல்லுறாங்க", என கோவ் நொந்து போன குரலில் கூறியவுடன் டிங்கு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான். டிங்குவின் சிரிப்பை தொடர்ந்து மற்ற சீனியர்களும் தங்களின் கோர சிரிப்பை வெளிப்படுத்தியதும் கடுப்பான கோவ் "என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு இல்லை என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்குன்னு கேட்குறேன். இவங்கதான் விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்களே! நம்மளை ஒரு மூணு மாசத்துக்கு விருந்து போட்டுட்டு வெளியே அனுப்பிடுவாங்கன்னு பார்த்தா உன்னை அனுப்பவே நாங்க விரும்பலடா அப்படிங்கற மாதிரி வச்சு செய்றாங்க.

இவங்களை நான் வச்சு செய்றேனா இல்லை என்னை இவங்க வச்சு செய்றாங்களான்னு புரியாமலேயே 24 மணி நேரமும் சுத்திகிட்டு இருக்கேன். சரி மூணாவது வீட்டுல இருக்கிற முனுசாமி ரொம்ப ஆசைப்பட்டு விருந்துக்கு கூப்பிட்டதனால போய் அவங்க குடும்பத்துல ஒரு மாசத்துக்கு தங்கி இருந்துட்டு வரலாம்னு போனா அந்தப் பய புள்ளைக்கு அப்பதான் நாலு ஊரு தள்ளி இருக்குற நந்தனா மேல பாசம் பெருக்கெடுத்து போயி இந்தா என் வீட்ல இருந்த கோவ் வை உன் வீட்டு விருந்துக்கு அனுப்புறேன்னு அங்க அனுப்பி வைக்கிறான்.

"சரி அந்த வீட்ல ரெண்டு பேரை போட்டுத் தள்ளுனா நம்மளை யாரும் விருந்துக்கு கூப்பிட மாட்டாங்கன்னு ரெண்டு பேரை போட்டு தள்ளினேன். ஆனா அப்ப நடந்துச்சுப் பாருங்க அதுதான் பெரும் கூத்து. என் வீட்டுல மட்டும் எப்படி ரெண்டு பேரை நீ போட்டு தள்ளல்லாம் இன்னும் நிறைய பேர் வீட்டுல நீ போட்டு தள்ளனும். இன்பமோ துன்பமோ எனக்கு வருவது மத்தவங்களுக்கு வந்தே ஆகனும் அப்படிங்குற நல்லெண்ணத்துல நந்தனா ஊரையே கூட்டிட்டு வந்து எனக்கு விருந்து வைக்க சொல்லிட்டா...

சரி இந்த ஊரோட நம்ம விருந்தை முடிச்சுப்போம் அப்படின்னு பாா்த்துட்டு இருக்குறப்பதான் என் சொந்த பந்தத்துல கல்யாணம் வருது.உன் சொந்தபந்த கல்யாணத்துக்கு நீ போகாம இருப்பியா? என்னை மட்டும் விட மாட்டேங்குறியே அப்படின்னு என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு அந்த ஊர்ல இருந்த ஒரு குடும்பம் என்னையும் சொந்தபந்தம் ஆக்கி ஒரு பெரும் கூட்டத்தோட கல்யாணத்துக்கு கூட்டிட்டுப் போச்சு.

எவனாவது ஒருத்தன் என்னை விரட்டி விடுவான். இல்லை என்கிட்ட இருந்து ஒதுங்கி நிப்பான்னுப் பார்த்தா தோளு மேல கை போட்டுட்டு அப்புறம் அவங்க வீட்டுக்கு போய் இருக்க...என் வீட்டுக்கு நீ எப்படி வராம இருக்கலாமுன்னு வம்படியா இழுத்துட்டுப் போறாங்க. இப்படி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் விருந்து வச்சு ஆட்களைப் போட்டுத் தள்ளியும் என்னை டானா வச்சுக்கிட்டு திரியுறாங்க.

இதுல என்னை பார்த்து பயந்து யாராவது ஒருத்தர் "mask must" ன்னு சொன்னா "நீ just shut" ன்னு சொல்லி என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறாங்க. இன்னைக்கு கிளம்பலாம் நாளைக்கு கிளம்பலாமுன்னு பா த் தி தா முடியாம அது அவங்க ஊரு பேப்பர்ல போடுற சிந்துபாத் கதை மாதிரி நீண்டுட்டே இருக்கு" என கோவ் தன் கதையை கூறி முடித்து விட்டு அங்கிருந்த விட்டத்தை வெறித்து நோக்க அரம்பித்தான்.

கோவ் சோக கீதம் வாசித்துக்கொண்டே கூறியதில் மற்ற சீனியர்களுக்கும் ஐயோ பாவம் எவ்வளவுதான் தனியா சமாளிப்பான் என்ற எண்ணமே தோன்றியது. குனியா மட்டும் கோவை நோக்கி "இந்த மாதிரி ஒருத்தன் ஊருக்குள்ள ஆட்களைக் கொன்னுட்டு அலையுறான். வெளியிலேயே வராதீங்கன்னு சொல்லியிருப்பாங்க. அதை மீறி எப்படி உன்னை விருந்துக்குக் கூப்பிடுறாங்க", என வினா எழுப்பினான்.

"எல்லாம் சொல்லதான் செய்றாங்க. பிரேக் த ரூல்ஸ் தாரகமந்திரம் உருவாக்குனவங்க அதை மட்டும் எப்படி மீறாமல் இருப்பாங்க? ரெண்டு மணி நேரம் வந்து திங்கிறதுக்கு மட்டும் வாங்கிட்டு போய் வீட்டு
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
462
150
63
வீட்டுக்குள் அடைஞ்சு கிடங்க அப்படின்னா அடுத்த நாள் விடியவே விடியாது அப்படிங்கற மாதிரி டெய்லி அந்த ரெண்டு மணி நேரத்துல கூடுறாங்க. கூட்டம் கூட்டமாக இருக்குற இடத்துலதானே நம்ம வேலையும் ஈஸியா முடியும்.அப்படிதான் என் பொழப்பு போய்கிட்டு இருக்கு.

இன்னும் எத்தனை நாளைக்கு இவங்க வைக்கிற விருந்து சாப்பாட்டை நான் தின்னுகிட்டே இருக்கப் போறேன்னு எனக்கும் புரியலை", என சலித்துக் கொண்டே கூறிய கோவ் அங்கிருந்த கடிகாரத்தை பார்த்து விட்டு "சரி சீனியர் இந்நேரம் என்னைத் தேடி ஒரு பெரும் கும்பலே கிளம்பி இருக்கும். நான் போய் அவங்களை பார்த்து எனக்கு அவங்க தர்ற விருந்தை ஏத்துக்கிட்டு என்னைக்கோ ஒரு நாள் உங்ககிட்ட வந்து ஐக்கியமாகிடுவேன்னு நம்பிக்கையில கிளம்புறேன்", என உரைத்துவிட்டு அனைத்து சீனியர்களையும் தனித்தனியாக கட்டிப்பிடித்துவிட்டு அவ்விடத்திலிருந்து வெளியேறினான்.

விருந்தோம்பல் வாழ வழி செய்வதாக இருக்க வேண்டுமே தவிர வாழ்வின் நொடிகளை பயத்திலும் இறுதியிலும் தள்ளுவதாக இருக்கக் கூடாது.

Mask must
Just shut in home
Destruct Covid

கோவ் -Covid
சாஸ் -SARS
பிளாக்-Plague
டிங்கு -Dengue
குனியா-Chikungunya