வேட்டையாடு விளையாடு - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
#22
அத்தியாயம்- 2


மறுவாரம் முழுவதும் எந்த குழப்பமும் இல்லாமால் எப்பொழுதும் போல சென்றது. சூர்யா தன் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் அவன் பாதையில் செல்ல, சந்த்ருவும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் பின் தொடரும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார்.


மல்லிகாவும், சந்த்ருவும் புதிய வீட்டில் அக்கம் பக்கத்தினர் எல்லோரிடமும் பழகினார்களோ இல்லையோ சூர்யா அனைவரிடமும் பழகி விட்டான்.


அன்று காலை வழக்கம் போல பல புத்திமதிகளை கேட்டுக் கொண்டு பைக் சாவியோடு கீழே வந்தவனை எதிர் கொண்டாள் கிருத்திகா. அவளும் கதிரும் வேலைக்கு கிளம்பி கதவை பூட்டிக் கொண்டிருக்க, அவர்களை பார்த்தவன் “ஹாய் கிருத்தி...ஹாய் கதிர் அண்ணா” என்றான்.


புதிதாக திருமணமான கதிரோ புது மாப்பிள்ளைக்கே உரிய உரிமை உணர்வுடன் மனைவியை எவரிடமும் விட்டுக் கொடுக்காமல் அடைக்காத்துக் கொண்டிருந்தான்.


இதில் கிருத்திகாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே மலர்ந்துள்ள இந்த நட்பு அவனது தூக்கத்தை இழக்க செய்திருந்தது.


அதிலும் சூர்யா அவளை கிருத்தி என்று கூப்பிட்டதும் மனைவியை முறைத்தவன் “நானே உன்னை கிருத்த்தின்னு கூப்பிடுறதில்லை. இவன் என்ன சுருக்கி கூப்பிடுறது?” என்று அவளிடம் கடுகடுத்தான்.


அவளோ சாதரணமாக “ஹே என்னப்பா நீங்க...சூரி சின்னப் பையன். அவனை போய்” என்று கூறியதும் மேலும் கடுமையாக முறைத்து “அதென்ன சூரி! எனக்கு இதெல்லாம் பிடிக்கல கிருத்தி..கா” என்றான் அழுத்தமாக.


அவர்கள் இருவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து உள்ளே நுழைந்தவன் இருவருக்கும் இடையே நின்று “அண்ணா! நீங்க கிருத்தி கிட்ட அப்புறம் பேசிக் கோங்க...இப்போ எனக்காக கொஞ்ச நேரம் விட்டுக் கொடுங்க” என்றவன் அவளிடம் “இந்த டிரஸ்ல கலக்குற கிருத்தி” என்றான்.


அவளோ கண்கள் விரிய “நிஜமா நல்லா இருக்கா சூர்யா? இந்த டிரஸ் போட்டதுல இருந்து நானும் எத்தனை முறை இவர் கிட்ட கேட்டிருப்பேன். ஒரு வார்த்தை இப்படி சொல்லவே இல்லையே” என்று கதிரை முறைத்தாள்.


அவனோ கதிரை பார்த்து “அண்ணாக்கு ரசனை இல்ல கிருத்தி” என்று கூறி அவளுடன் ஹை பை செய்தான்.


முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க “ஆபிசுக்கு நேரமாச்சுன்னு சொன்னியே. வரியா இல்லையா?” என்றான் கோபமாக.


அந்நேரம் கீழே வந்த சந்துரு, மகன் கிருத்திகா- கதிர் தம்பதியுடன் நிற்பதை பார்த்து வேகமாக ஓடி வந்து “இன்னும் பைக் எடுக்காமல் என்ன பண்ணிட்டு இருக்க?” என்று எரிந்து விழுந்தார்.


அதற்குள் கிருத்திகாவை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு சென்றிருந்தான் கதிர்.


அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் பைக்கை எடுத்தவன் அருகில் சென்ற சந்துரு “அவங்க கிட்ட உனக்கு என்ன பேச்சு?” என்றார் கடுமையாக.


அப்போது சி ஒன்னில் இருக்கும் கீதா மாமி காய் பையுடன் வருவதை கண்டு “ஹாய் கீது டார்லிங்” என்றான் சத்தமாக.


பையை கீழே வைத்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்த கீதா “என்ன சூர்யா இன்னும் கிளம்பலையா?” என்றார்.


மகன் புதிய பெண்மணியை டார்லிங் என்று கூப்பிட்டதிலேயே அதிர்ந்து நின்ற சந்துரு கடுப்புடன் “நேரமாச்சு கிளம்பு” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.


அவனோ சிறிதும் அசராமல் “என்ன டார்லிங் நீங்க போய் காய் வாங்கிட்டு வரீங்க? மாமா எங்கே? வீட்டுல சும்மா தானே இருக்கார்?” என்றான்.


அவர் சந்துருவை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு “உங்கப்பாவா சூர்யா?” என்றவர் “அதை ஏன் கேட்கிற சூர்யா. அந்த மனுஷன் காலையில எழுந்து பேப்பரை வச்சு கிட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டார். இப்போ போனதும் காப்பி கொடுக்கலேன்னு சத்தம் போடுவார்” என்றார் பையை கையில் எடுத்துக் கொண்டார்.

“ஓஹோ...உங்களுக்கு ஹெல்ப் பண்ணாம காப்பி கேட்குதாமா அவருக்கு. பேசாம சர்க்கரைக்கு பதில் உப்பை போட்டுக் கொடுத்திடுங்க டார்லிங்” என்று கூறியவன் பைக்கில் அமர்ந்து காலாலேயே நகர்த்த ஆரம்பித்தான்.


அவன் சொன்னதைக் கேட்ட சந்துருவிற்கு நெஞ்சு லேசாக வலித்தது. இவன் போகிற ஸ்பீடில் சென்றால் அடுத்த மாதமே வேற வீடு பார்க்கணும் போல இருக்கே என்று திகைத்து நின்றார்.


அதே சமயம் கீதா மாமியின் கணவர் விசாகன் கையில் பேப்பருடன் சூர்யாவை முறைத்துக் கொண்டு நின்றார்.


அதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் மாமியைப் பார்த்து கண்ணடித்துவிட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.


அவன் பின்னே சென்றவரை நிறுத்திய விசாகன் “இவன் உங்க பையனா சார். ரொம்ப பேசுறானே” என்றார்.


அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “ஆமாம் சார்” என்று கூறி விட்டு பல்லைக் கடித்துக் கொண்டு அவன் பின்னே ஸ்கூட்டரை எடுத்துக் கொடு சென்றார்.


மனமோ இவனை என்ன செய்றது? இந்தாளு முறைப்பதை பார்த்தா இவனே நம்மளுக்கு பிரச்னையை உண்டாக்கிடுவான் போல இருக்கே. யாருக்கு தான் கோவம் வராது. அவர் பொண்டாட்டியை போய் டார்லிங்க்ன்னு இவன் கூப்பிடுறான். இன்னைக்கு வீட்டுக்கு வரட்டும் பெல்ட்டை கழட்டி விளாசிடுறேன் என்று பொரிந்து கொண்டே பின் தொடர்ந்தார்.


கல்லூரிக்குள் நுழைந்தவன் அங்கு மரத்தடியில் தன் நண்பர்கள் இல்லாததைக் கண்டு அதிசயித்துக் கொண்டே பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு வகுப்பறைக்குச் சென்றான்.


இவனுங்களுக்கு என்னாச்சு? காலையிலேயே கிளாசுக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கானுங்க என்று எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்தான். அங்கு முதல் பெஞ்சிலேயே அவனது நண்பர்கள் அனைவரும் இருக்க அடுத்த அதிர்ச்சியாக இருந்தது.


“என்னங்கடா இங்கே உட்கார்ந்திருகீங்க?”


அவனது கையைப் பற்றிய ரிஷி அருகில் அமர்த்தி மெல்லிய குரலில் “மச்சான் பாடம் எடுக்க இளசா பட்சி வரப் போகுதாம்” என்றான் கண்களை சிமிட்டி.


அவனை நம்பாத பார்வை பார்த்து “உண்மையா? நம்ம காலேஜில் பல்லு போனதை தான் எடுப்பானுங்க” என்றான்.


“இல்லடா! நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வந்தது” என்றான்.


அவன் சொன்னதும் சூர்யாவின் முகத்தில் வழக்கமான புன்னகை வந்தமர்ந்து கொண்டது.


“அப்போ இனி ஜெகஜோதியா இருக்குமா ரிஷி” என்றான் கண்களில் மயக்கத்துடன்.


“ஆமாடா!” என்றவன் பெஞ்சில் தாளம் போட, ரமேஷும் சக்தியும் விசிலடிக்க சூர்யா எழுந்து நின்று ஆட ஆரம்பித்தான்.


“டங்கா மாறி ஊதாரி புட்டுகின நீ நாறி” என்று அவன் ஆட ஆரம்பித்ததும் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் சூழ்ந்து கொள்ள விசிலும், கை தட்டலும் தூள் பறக்க ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது.


அப்போது வகுப்பறையின் வாயிற் கதவு படபடவென அடிக்கப்பட்டது. சூர்யாவை சுற்றி நின்ற மாணவர்கள் மெல்ல திரும்பி பார்த்துவிட்டு சற்றே பயத்துடன் நகர்ந்து கொண்டனர். சூர்யாவோ அவனது நண்பர்களோ எதையும் கண்டு கொள்ளாது ஆடுவதிலேயே மும்மரமாக இருந்தனர்.


மற்ற மாணவர்கள் அவசரமாக தங்களது இடங்களுக்கு செல்ல, வகுப்பறையின் மேஜை அழுத்தமாக தட்டப்பட்டது. அப்போது ஆடலுக்கு யார் இடையூறு செய்வது என்கிற கோபத்தில் “எவ அவ?” என்று கேட்டுக் கொண்டே திரும்பி பார்த்தான் சூர்யா.


அங்கே சுமார் ஐம்பது வயது மதிக்கத் தக்க பெண்மணி ஒருவர் கோபத்துடன் முறைத்துக் கொண்டு நின்றார்.


அவரை பார்த்ததும் அவசரமாக ஆட்டத்தை நிறுத்தியவன் வேகமாக அவர் அருகில் சென்று “மேம்! அட்மின் ஆபிஸ் இங்கே இல்ல. அது முதல் பில்டிங்” என்றான்.


அவனை முறைத்துக் கொண்டே அவனிடம் பதில் சொல்லாது “ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும் அவங்க அவங்க இடத்தில் போய் உட்காருங்க” என்றார் அழுத்தமாக.


அவர் சொன்னதைக் கேட்டு சூர்யா சந்தேகமாக பார்த்துக் கொண்டே தன் இடத்திற்கு நகர, சொடக்கு போட்டு அவனை அழைத்தவர் “உன் பேர் என்ன?” என்றார்.


அதில் உள்ளுக்குள் கடுப்பானாலும் அதை வெளிக்காட்டாது “சூர்யா” என்றான்.
 

sudharavi

Administrator
Staff member
#23
“அவுட்!” என்று கையை வெளியே காட்டியவர் “இன்னைல இருந்து ஒரு வாரத்துக்கு நீ என் கிளாஸ்ல இருக்க கூடாது! உன்னை மாதிரி ஸ்டுடென்ட்ஸ் இருக்கிறதுனால தான் படிக்கிறவங்க கூட படிக்கிறது இல்லை” என்றார்.


அவர் சொன்னதின் அர்த்தம் புரிந்தவன் லேசாக சிரித்து “இவனுங்களை நான் கெடுக்கிறேனா மேம்...நல்லா படிக்க வைங்க” என்று கூறி விட்டு வாயிலில் சென்று நின்று விட்டான்.


அவரோ அவனை எதிரியை பார்ப்பது போல பார்த்துவிட்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பாடம் எடுக்க ஆரம்பித்தார். அப்போது கல்லூரி முதல்வர் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருக்க, சூர்யா வாயிலில் நிற்பதை பார்த்ததும் “நீ ஏன் கிளாசில் இல்லாம இங்கே நிற்கிற” என்றார்.


அவன் நடந்ததை கூற, வகுப்பறைக்குள் நுழைந்த முதல்வர் “சகுந்தலா மேடம்! நல்லா படிக்கிற ஸ்டுடென்ட்டை எதுக்கு வெளில நிற்க வச்சிருக்கீங்க?” என்றார்.


முதல்வர் வந்து கேட்டதும் பயந்து போனவர் நடந்ததை கூற, “சூர்யா நல்ல ஸ்டுடென்ட் மேம்...சோ இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க” என்றவர் சூர்யாவிடம் “நீ உள்ளே வா” என்று கூறி அமர வைத்துவிட்டு சென்று விட்டார்.


சகுந்தலாவிற்கு முதல் நாளே அவன் மீது தவறான எண்ணம் வந்து விட்டது. அதிலும் முதல்வர் அனைத்து மாணவர்கள் முன்பும் அவனுக்காக தன்னை அவமதித்து விட்டதாக எண்ணினார். அவனை பார்த்த பார்வையிலேயே சூடு தெரிந்தது.


மெல்ல ரிஷியிடம் “ஏண்டா இதுவா இளசான பட்சி! உங்களை எல்லாம் கொல்லனும்டா” என்றான்.


அவனோ கடுப்புடன் “எனக்கென்ன தெரியும். நம்ம மணி அண்ணன் தான் சொன்னார். செம பிகர் ஒன்னு வரப் போகுதுன்னு” என்றான் எரிச்சலாக.


அதைக் கேட்ட சூர்யா “டேய்! அவர் ரேஞ்சுக்கு சொல்லி இருப்பார் டா. இந்தம்மாவை பாரு போர்டு பக்கம் திரும்பி எழுதவே ஒரு நாள் ஆகும் போல” என்றான் கடுப்பாக.


“அது மட்டுமில்லடா..இந்தம்மா உனக்கு வில்லி. உன் இன்டெர்னல் மார்க்ல எல்லாம் கையை வைக்கப் போகுது” என்றான் ரிஷி பயத்துடன்.


“பார்த்துக்கலாம் டா” என்றவன் அவர் பாடம் எடுப்பதை கவனிக்க ஆரம்பித்தான்.


மதிய நேரம் மணி இவர்கள் கும்பலை கண்டு அவசரமாக மறைந்து ஓட, அவரை துரத்திப் பிடித்த சூர்யா “ஏன் அண்ணே! உங்களுக்கே நியாயமா இருக்கா? ஒரு பேரலை போய் சூப்பர் பிகர் வருதுன்னு சொல்லி எங்களை ஏமாத்திட்டீங்களே” என்றான் அவர் தோளில் கையைப் போட்டபடி.


“அட நீ வேறப்பா! ஒரு பொண்ணு வந்துச்சு அது தான் வரப் போகுதுன்னு நினைச்சு சொன்னா இந்தம்மா வந்து நிற்குது. உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை” என்றார் வருத்தமாக.


அன்றைய பொழுது சகுந்தலா மேடமை பற்றிய பேசி ஓய்ந்து போனார்கள். மாலை பைக்கை எடுத்துக் கொண்டு கல்லூரியை விட்டு வெளியேறும் நேரம், கல்லூரிக்குள் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது.


அதிலிருந்து இறங்கிய ஜீவா நேரே அட்மின் பில்டிங்கிற்கு சென்றான். சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து சென்றான். போலீஸ் ஜீப் வந்ததை பார்த்துக் கொண்டே சென்ற சூர்யாவின் மனதில் எதற்கு வந்திருப்பார்கள் என்கிற யோசனை எழுந்தது. புதிதாக யாரோ போலீஸ் குடும்பத்தில் இருந்து படிக்க வருகிறார்கள் போல என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்கு சென்றான்.


கீழே பார்க்கிங்கில் யாரும் கிடைக்காமல் ஒழுங்காக வீடு போய் சேர்ந்தான். மல்லிகா அன்று மகனுக்குப் பிடித்த உருளை கிழங்கு போண்டா செய்தது வைத்துக் கொண்டு காத்திருந்தார்.


அவன் சென்று முகம் கழுவி வந்தமர்ந்ததும் போண்டாவை கொடுத்து, காப்பியும் அருகில் வைத்தவர் “சூர்யா” என்றார்.


டிவியை பார்த்துக் கொண்டே போண்டாவை சுவைத்துக் கொண்டிருந்தவன் “என்னம்மா” என்றான்.


“நீ எங்களுக்கு ஒரே புள்ளப்பா...உன்னை எப்படி எல்லாம் வளர்க்கனும்னு ஆசைப்படுறோம் தெரியுமா?” என்றார்.


“ம்ம்...நல்லா தானே வளர்க்குறீங்க” என்றான் டிவியில் கண்ணை எடுக்காமலே.


“இல்லடா! நீ அப்பாவுக்கு கொடுக்கிற டென்ஷனை குறைக்கலாம் இல்லையா? எதுக்கு ஏல்லா பொம்பளைங்க கிட்டேயும் பேசுற?”


காப்பி கப்பை கையில் எடுத்துக் கொண்டு அவர் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டவன் “அம்மா! நான் ஒன்னு சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே. அப்பாவுக்கு சந்தேக புத்தி இருக்கும்மா. நல்லவேளை நீங்க எந்த ஆம்பளையோடையும் பேசுறது இல்ல. அப்படி பேசி இருந்தா உங்களை அவர் கொடுமைபடுத்தி இருப்பார்” என்றான்.


அதை கேட்டதும் பயந்து போன மல்லிகா “என்னடா சொல்ற?” கலங்கிய குரலில்.


“ஆம்பள நான் பெண்கள் கிட்ட பேசுறதையே அவர் தப்பா சொல்றார். அப்போ அவருக்கு சந்தேகப்படுற வியாதி இருக்கு தானே” என்று கொளுத்திப் போட்டான்.


“அப்படியா சொல்ற?” என்றார் யோசனையாக.


“ஆமாம்மா...நீங்க வேணா இன்னைக்கு நான் சொன்ன மாதிரி சொல்லி பாருங்க. விசாகன் அங்கிள் கிட்ட மிக்சி ரிப்பேர் பண்ணி வாங்கிட்டு வந்தேன்னு சொல்லுங்க. அப்புறம் தெரியும்” என்றான் நமுட்டு சிரிப்புடன்.


மகனை மாற்ற வந்த மல்லிகா அவன் குழப்பியதில் குழம்பி போய் “இன்னைக்கு வரட்டும் அவருக்கு இருக்கு” என்று கூறிய படி உள்ளே சென்றார்.
 

sudharavi

Administrator
Staff member
#24
அன்னையை குழப்பி விட்டு தன்னறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டு படிக்க ஆரம்பித்தான்.


சுமார் ஆறு மணி வாக்கில் வீட்டிற்கு வந்தவர் முகம் கை கால் கழுவி வந்தமர்ந்து மனைவி கொடுத்த காப்பி டிபனை சாப்பிட்டு முடித்து விட்டு மகனுடனான பஞ்சாயத்திற்கு தயாரானார்.


“உன் புள்ளைய கூப்பிடு” என்றார் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.


“சூர்யா! அப்பா கூப்பிடுறாங்க” என்றவுடன் கதவை திறந்து கொண்டு அவர் முன்னே வந்து நின்றான்.


அவனை மேலும் கீழும் பார்த்தவர் “என்னதிது! கையில்லாத பனியன், முக்கா டவுசர்! போய் கைலியை கட்டிட்டு வா” என்றார் முகத்தை சுளித்தபடி.


அவனோ அங்கிருந்து நகராமல் “எனக்கு இது தான் வசதி” என்றான் எங்கோ பார்த்தபடி.


உடனே மல்லியை பார்த்து “அவனை போய் டிரஸ் மாத்திட்டு வர சொல்லு” என்றார் கடுப்பாக.


மல்லிகாவோ “அது எதுக்கு என் கிட்ட சொல்றீங்க? அவன் கிட்டேயே சொல்லுங்க” என்று கூறி திருப்பிக் கொண்டார்.


‘இன்னைக்கு ஆரம்பமே சரியில்லேயே’ என்று மனதிற்குள் யோசித்தவர் “காலையில கீழ் வீட்டு பொண்ணோட உனக்கு என்ன பேச்சு?” என்றார்.


அவரை ஒரு பார்வை பார்த்தவன் “பிரெண்டு கிட்ட பேசினதை எல்லாம் சொல்ல முடியாதுப்பா” என்றான்.


அதில் பல்லைக் கடித்தவர் “அவ புருஷன் இருக்கிறப்ப அந்த பொண்ணு கிட்ட என்ன பிரெண்ட்ஷிப் வேண்டி இருக்கு?” என்றார்.


அவரை ஒரு மாதிரியாக பார்த்தவன் “புருஷன் இல்லாதப்ப பிரெண்ட்ஷிப் வச்சுகிட்டா தான் தப்பு” என்றான் கடுப்பாக.


அவனது பேச்சில் பிபி எகிற “பாருடி! உன் புள்ள எப்படி பேசுறான்னு பாரு” என்றார்.


மல்லிகாவோ “அது என்ன தேவைக்கு? அப்பாரும் பிள்ளையும் பேசுறப்ப என்னை எதுக்கு இழுக்குறீங்க?” என்றார் கழுத்தை வெட்டி.


மனைவியை ஒரு பார்வை பார்த்தவர் ‘இவ என்ன இன்னைக்கு ஒரு மாதிரியா பேசுறா’ என்று சந்தேகமாக பார்த்தார்.


சூர்யாவோ லேசாக ஆடிக் கொண்டே நின்றான்.


மகனை முறைத்து “அந்த மாமியை ஏன் டார்லிங்னு கூப்பிட்ட? அது தப்பில்ல?” என்றார்.


“என்ன தப்பு? என் மனசிலேயும் விகல்பம் இல்லை. அவங்க மனசிலேயும் விகல்பம் இல்ல. அவங்க என் பிரெண்ட் அவ்வளோ தான் ” என்றான்.


“அப்போ நான் தான் தப்பா பார்க்கிறேனா?’ என்று பாய்ந்தார்.


மகனும், கணவரும் பேசுவதை கேட்க ஒரு காதை வைத்திருந்தவர் பேச்சு போகும் பாதையை உணர்ந்து மகனை நிமிர்ந்து பார்த்தார். அவனும் அன்னையைப் பார்த்து கண்களால் சைகை செய்தான்.


“அப்பா! நான் ஒன்னு கேட்கவா?”


“என்ன?”


“போன வாரம் நாம ஹோட்டலுக்கு போனப்ப நம்ம எதிர் டேபிளில் இருந்த ஒரு ஆண்டி சும்மா தளதளன்னு தக்காளி மாதிரி இருந்தாங்க. நீங்க அம்மாவை பார்த்ததை விட, அவங்களை தானே அதிகம் பார்த்தீங்க...இந்த வயசிலேயே நீங்க சைட் அடிக்கிறப்ப நான் அடிக்க கூடாதா?” என்று கேட்டவுடன் அதிர்ந்து போய் மனைவியை பார்க்க, அவரோ இடுப்பில் கை வைத்து முறைத்தபடி நின்றிருந்தார்.


“இல்ல மல்லி...நான் அந்த சிகப்பு சேலை கட்டின அம்மாவை பார்க்கவே இல்ல” என்று உளறி கொட்டினார்.


அவனோ “பார்த்துக்கோங்க அம்மா...ஒரு வாரம் ஆச்சு. இன்னமும் புடவை கலர் கூட நியாபகம் இருக்கு” என்று மேலும் நெய்யை ஊற்றினான்.


வேகமாக சந்துருவின் அருகில் சென்ற மல்லி “நான் என்ன புடவை கட்டுறேன்னு கூட நியாபகம் இல்லாத மனுஷனுக்கு என்னைக்கோ பார்த்தவளோட புடவை கலர் கூட நியாபகம் இருக்கா” என்று முறைக்க ஆரம்பித்தார்.


“இல்லம்மா..அப்படி எல்லாம் இல்ல..உன்னை விட்டுட்டு நான் வேற ஒருத்தரை பார்ப்பேன்னா” என்று மனைவியை கெஞ்ச ஆரம்பித்தார்.


அவர்கள் இருவரையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன் தன்னறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.


மொபைலை ஆன் செய்து பாடலை ஒலிக்க விட்டு ஆட ஆரம்பித்தான்...


தக தக தக தகவென ஆடவா

சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

போட்டு தாக்கு போட்டு தாக்கு ...என்று இவன் ஆடிக் கொண்டிருக்க அங்கே சந்திரு மனைவியிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“அவன் தான் பேசுறான்னு என்னை சந்தேகப்படுவியா நீ”.


மல்லிகாவோ “பார்ப்போம்..இனிமே எவ பக்கமாவாது கண்ணு போச்சு அப்போ இருக்கு” என்று கையில் வேப்பிலை இல்லாத குறையாக ஆடித் தீர்த்தார்.....
 

Anuya

Well-known member
#25
Haha.... Super ud sudha maa😍😍😍 athu thaane husband illatha pothu pesuna thappu sollalam irukum bothu thaane pesuraan ..... Haha .... Appaku vachana aapu 😂😂 ini amma appa ku panchayathu pannanum pola.... Super sudha maa😍
 
Status
Not open for further replies.