Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript வேண்டுதல் | SudhaRaviNovels

வேண்டுதல்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
வேண்டுதல்

"பஹி ராமசந்திர பாலிதா சுரேந்திர பரம பாவன சத்குனா சந்த்ரா

நிராதா நிலா முன்இந்த்ரா ஹதயா நராதா ஸேவிதா ஸரஸ நயனா"

என்ற ராமச்சந்திர சங்கராபரணம் வரிகள் அந்த ராமர் கோவிலில் கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கர்களின் வழியாக அத்தெரு முழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அன்றைய தினம் ராம நவமியாக அமைந்ததால் கோவிலில் கூட்டத்திற்கும் பஞ்சமில்லாமல் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். வந்தவர்களின் பார்வை உள்ளே அலங்கரிக்கப்பட்டிருந்த ராமரை பார்த்ததை விட கோவிலின் வாசலில் சன்யாசிகளுடன் அமர்ந்திருந்த ஒரு வாலிபனின் மேல்தான் அதிகமாக பதிந்து சென்றது.

பார்த்ததுடன் இல்லாமல் சிலர் அவ்விடத்தில் நின்று சன்னியாசிகளுடன் அமர்ந்திருந்தாலும் தன்னுடைய லேப்டாப்பில் எதையோ மும்முரமாக தட்டிக்கொண்டு, தனது காதில் மாட்டியிருந்த ஹெட் போன் மூலமாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த அவனை வேடிக்கை பொருள் போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோவிலுக்குள் கூட்டம் கூடாமல் வெளியில் கூடுவதை பார்த்த கோவில் பட்டர் வேகமாக வெளியில் வந்து தனது வேலையில் மூழ்கி இருந்த அந்த இளைஞனின் தோளில் தட்டி "ஆதவா! எல்லாரும் உன்னையே வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காங்க. இன்னைக்கு ராம நவமி! எனக்கு தட்டுல விழுகிற வருமானம் அதிகமா இல்லைன்னா வீட்டுல மாமி என்னை பிளந்து கட்டிடுவா.

நீ செத்த நேரம் மடப்பள்ளியில போய் உட்கார்ந்துக்கோ. கூட்டம் கலைஞ்சதுக்கு அப்புறம் இங்க வந்து உட்காரு", எனக் கூறினார். அவர் தட்டியவுடன் காதில் இருந்த ஹெட் போனை நீக்கியவன் அவர் கூறியதைக் கேட்டவுடன் சரிங்க மாமா எனக் கூறிவிட்டு மிக வேகமாக தனது உடமைகளான லேப்டாப் மேலும் ஒரு பேக் இவற்றுடன் மடப்பள்ளியை நோக்கிச் சென்றான்.

அவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தவுடன் கூடியிருந்தவர்கள் அனைவரும் "யாரு சாமி இந்த பையன்? பார்க்க படிச்சவனாட்டம் இருக்கான். நல்லா இங்கிலீஷ் பேசுறான். ஆனா இந்த வயசுல துறவி ஆயிட்டானே?",எனப் கேட்டதற்கு "அந்த கதையெல்லாம் அப்புறம் வந்து கேட்டுக்கோங்க. இப்ப வந்து ராமரை சேவிச்சுண்டு ஜோலிய பாருங்க", என அவர்களை விரட்டி அதன் பின்னர் பூஜை முடித்தார்.

பட்டரின் பேச்சைக் கேட்டு அனைவரும் உள்ளே சென்றாலும் ஏறத்தாழ 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி மட்டும் உள்ளே செல்லாமல் மடப்பள்ளி நோக்கி சென்ற ஆதவனை பார்க்க சென்றார். அவர் அந்த பக்கமாக செல்வதை பார்த்த பட்டரின் உதவியாளன் "அம்மா இங்க வாங்கோ! சாமியை சேவிச்சுண்டு பிறகு போயி ஆதவன்கிட்ட பேசுங்க. இன்னும் பத்து நாளைக்கு இங்கதான் இருப்பான்", என அவரை வம்படியாக ராமரை தரிசிக்க இழுத்துச் சென்றான்.

கோவிலுக்கு பொதுவாக கடவுள் தரிசனம் செய்ய சென்றாலும் பெரும்பாலும் பெரும்பாலானோரின் பார்வைகள், எண்ணங்கள் அனைத்தும் அலைபாய்பவையாகவே இருக்கும். அதுபோன்றுதான் அன்று கோவிலுக்கு வந்த அனைவரின் எண்ணங்களும் ஆதவனின் தோற்றத்தில்தான் இருந்தது. பிரசாதம் வாங்க கூட யாரும் காத்திராமல் மடப்பள்ளியை எட்டிப் பார்த்த வண்ணமே பிரகாரத்தை சுற்றிவர ஆரம்பித்தனர்.

உதவியாளன் இழுத்துச் சென்ற அப்பெண்மணி பிரகாரத்தை கூட சுற்றாமல் மடப்பள்ளியை நோக்கி செல்லவும் மேலும் 4,5 பெண்மணிகளும் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அங்கு சென்றவர் பட்டர் அவனின் தோளை தட்டி அழைத்தது போல அழைத்து "ஏம்ப்பா தம்பி இந்த வயசிலேயே உனக்கு என்ன இவ்வளவு விரக்தி? ஏன் இப்படி வந்து உட்கார்ந்திருக்க? நீ பேசுற இங்கிலீஷ்ம் ,நீ வேகவேகமா அந்த லேப்டாப்ல தட்டுறதையும் பார்த்தா ரொம்ப படிச்சி இருப்ப போல. கண்டிப்பா இப்ப இருக்குறவங்க எல்லாரும் மாதிரி இந்த கம்ப்யூட்டர் வேலதான் பார்த்துக்கிட்டு இருக்க. உனக்கு ஏன் இந்த தலையெழுத்து?", என ஆதங்கத்துடன் வினவினார்.

அவர் பேசவும் தன்னுடைய லேப்டாப்பையும் ,கையில் கட்டி இருந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சையும் பார்த்தவன் "ஆன்ட்டி! இப்ப நான் ரொம்ப பிசி! இன்னைக்கு ப்ராஜெக்ட் ஒர்க் முடிச்சே ஆகணும். அதனால என்ன பண்றீங்கனா ஞாயிற்றுக்கிழமை சாவகாசமா ஒரு 11 மணிக்கு போல வந்துருங்க. நான் என்ன கதைனு உங்களுக்கு சொல்றேன்", எனக் கூறியவன் அவரின் பதிலை கூட எதிர்பாராமல் தன்னுடைய வேலையில் மூழ்கி விட்டான்.

அப்பெண்மணியுடன் சென்றிருந்த மற்றவர்களும் இதனைக் கேட்டவுடன் ஒருவர் மாற்றி ஒருவர் என தகவலை பரப்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் அனைவரும் அங்கே கூடி விட வேண்டும் என்ற முடிவுடன் அவரவர் வேலையை பார்க்கச் சென்றனர்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த உதவியாளன் "பகவான் ராமரை விட ஆதவன் தான் நம்ம கோவிலில் ரொம்ப பாப்புலர் ஆயிட்டு வரான் மாமா!", என பட்டாரிடம் உரைத்தான். அதனை கேட்டு சிரித்தவர் "சித்த சும்மா இருடா! அவன் இங்க வாசல்ல உட்காருறதாலதான் நம்மளுக்கு வருமானம் ஜாஸ்தியாயிண்டு இருக்கு. எங்க பத்து நாளுல கிளம்பிடுவான்.

இப்படியே ஒக்காருடானு சொன்னா கேட்கவா போறான், கேட்க மாட்டான்", என புலம்பியவா் நடையை சாத்தி கொண்டு குளம் பி விட்டார். அவா் கிளம்பிய பின்னர் ஆதவன் கோவிலின் உள்ளேயே ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டு தன்னுடைய வேலையை தொடர ஆரம்பித்தான்.

தனக்கிருந்த வேலைப்பளுவில் தன்னிடம் அன்று கேட்ட பெண்மணியை ஞாயிற்றுக்கிழமை வரச் சொன்னதையே மறந்து போன ஆதவன் பட்டர் தந்த பிரசாதத்தை உண்டவாறு நெட்ப்ளிக்ஸில் தனக்கு படித்த சீரியஸை பார்த்துக் கொண்டிருந்தான்.

"வேக வேகமாக வந்த அப்பெண்மணி "ஆதவா! சாரிப்பா லேட் ஆயிடுச்சு. 11 மணிக்கு எல்லாம் வந்துடனும் அப்படின்னு நினைச்சேன். ஆனா என் மகனுக்கு, பேரன்,பேத்திக்குனு எல்லாருக்கும் மதிய சமையல் முடிச்சு வச்சுட்டு நீங்களே போட்டு சாப்பிட்டுக்கோங்கனு சொல்லிட்டு ஓடி வர லேட்டாயிடுச்சு", என மூச்சு வாங்க பேசினார்.

அவர் பேசியதில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முழித்த ஆதவனிடம் "நீ தானே ஞாயிற்றுக்கிழமை 11:00 மணிக்கு வாங்கம்மான்னு சொன்ன உன் கதையை சொல்றதுக்கு", என ஞாபகமூட்டினார். அவர் கூறியதை கேட்ட ஆதவன் இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த பட்டரை நோக்கி ஒரு பெரும் சிரிப்பை உதிர்த்தான்.

அவரோ "இங்க சிரிக்கிறதை விட்டுட்டு அங்க வாசலாண்டப் பாரு" என்றதும் திரும்பிப் பார்த்தவன் சற்று அதிர்ந்தே போனான். ஏனெனில் ராம நவமி அன்று வந்திருந்த கூட்டத்திற்கு குறையாமல் ஞாயிறன்றும் ஆதவன் கதையைக் கேட்டிட வந்திருந்தனர். "இவ்வளவு பேரு வந்து இருக்காங்க .என் குரல் கேட்குமா பேசாம மைக் ரெடி பண்றீங்களா?", என அந்த சூழ்நிலையிலும் ஆதவன் கலாய்த்து கொண்டிருந்தான்.

"வந்திருக்கிற கூட்டத்தை பார்த்தா கோவில்ல பஜனை, கதாகாலட்சேபத்துக்கு கூட வராதவங்க எல்லாம் வந்து இருக்காங்கன்னு தெரியுது. மைக் மட்டும் போதுமா? இல்லை மேடை எதுவும் ரெடி பண்ணி நம்ம லோக்கல் கேபிள் டிவி சேனலை வரச்சொல்லி லைவ் டெலிகாஸ்ட் பண்ணுவோமா?", என அவரும் ஆதவனுக்கு குறையாமல் அவனை கலாய்த்தார்.

"கேட்குறதுக்கு இது கூட நல்லாதான் இருக்கு. ஒரே ஸ்டோரில ஆதவன் அனைத்திந்திய தொலைக்காட்சிகளில் இடம்பெறுகிறான் அப்படின்னு வீட்டுக்கு போனை போட்டு ஒரு வார்த்தை சொல்லிடுங்க", என அவரிடம் கூறியவன் வந்திருந்த கூட்டத்தின் புறம் திரும்பி "இவ்வளவு பேரும் என் கதையை கேட்க தான் வந்திருக்கீங்களா? ஞாயிற்றுக்கிழமை வீட்ல வகை வகையா சமைச்சு சாப்பிடுவீங்களே! அதெல்லாம் இன்னைக்கு கட்டா?", என வினவினான்.

"அதெல்லாம் காலையிலேயே சேர்த்து சமைச்சு வச்சுட்டு வந்துட்டோம். சீக்கிரமா கதை முடிஞ்சதுனா போய் பரிமாறுவோம். இல்லைன்னா பசிச்சா அவரங்களே எடுத்து போட்டு சாப்பிட்டுக்கட்டும்னு வந்துட்டோம்", எனக் கூறிவர்களின் பதிலில் சிரித்தவன் முதலில் வந்த பெண்மணிபுறம் திரும்பினான்.


இப்படி உட்காருங்க என தனது அருகில் அவரை அமர்த்திக் கொண்டு "சொல்றக் கதையை கேட்கிறதோட விட்டுரனும். அதை எக்ஸ்பிரிமெண்ட் பண்றேன்னு பின்விளைவுகளுக்கு என்னை பொறுப்பாக்கிடக் கூடாது. அதனால எல்லாரும் இந்த ராமர் மேல சத்தியம் பண்ணுங்க. நாளைக்கு வீட்டுக்குள்ள என்ன நடந்தாலும் உங்க வீட்ல இருக்கிறவங்க யாரும் வந்து என்னை ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது", என சில பல முஸ்தீபுகளுடன் தன் கதையை ஆரம்பித்தான்.

அவன் கூறியதை கேட்டு சிரித்தவர்கள் "ஆமா அவங்க அவங்க வேலையை பார்க்க மட்டும்தான் இருக்காங்க. எங்களை அந்த வேலை இந்த வேலைனு செய்ய சொல்றதுக்கே அவங்களுக்கு நேரம் பத்தலை. இதுல உன்கிட்ட வந்து கேக்குறாங்களாம் ?",என நொடித்துக் கொண்டனர்.

அவர்களது நொடிப்பினை பார்த்தவன் தன்னுடைய கதையை கூற ஆரம்பித்தான். "எங்க அப்பா, அம்மா தவம் இருந்து பெத்த ஒரே பிள்ளை நான்", என முதல் வரிஆரம்பித்த உடனே கூடி இருந்தவர்கள் "ஒத்த பிள்ளையா இருந்துட்டு இப்படி துறவி ஆயிட்டே! பெத்த மனசு என்ன கஷ்டப்படும்?", என பரிதாபம் காட்டினார்கள்.

அந்த குரலை கேட்டு அவர்கள் புறம் திரும்பியவன் "என்னது பெத்த மனசு கஷ்டப்படுமா? அந்த பெத்த மனசுதான் என்னை இன்னைக்கு ராமர் கோவிலுல உட்கார வச்சிருக்கு. முழு கதையை கேளுங்க. இல்லைனா வீட்டை பார்த்து நடையக் கட்டுங்க", எனக் கூறி மீண்டும் தொடர்ந்தான்.

படிக்க வச்சாங்க, ஆசைப்பட்டதெல்லாம் கேட்டு வாங்கி தந்தாங்க. வேலையில சேர்ந்து ஆன்சைட்ல லண்டன் போயிட்டு வந்தப்ப ஊரெல்லாம் பெருமை அடிச்சுக்கிட்டாங்க. எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு. தேடிப்பிடிச்சு ஊரு உலகத்துல இல்லாத அழகான மருமக வேணும் அவ்வளவு சீா்சனத்தையோட வேணும்னு பார்த்து பார்த்து எனக்கும் பிடிச்ச மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சாங்க. வச்சாங்களா?", என்றதும்

"என்னது கல்யாணம் ஆயிடுச்சா?", என்று அவர்களின் திகைத்த பார்வையை பார்த்த பின்னர் சிரிப்புடன் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தான். மாமியார், மருமகள் சண்டை, மாமனார் மருமகள் சண்டை எல்லாம் ஜெகஜோதியா போய்கிட்டு இருந்தாலும் அதுல எதுலயுமே சிக்காம சிங்கமா நடுராத்திரி வரைக்கும் கூட கம்பெனியில் உட்கார்ந்து வேலையை பார்த்துட்டு வந்தேன்.


அப்படி சிங்கமா இருந்த நான் கொரோனாவில் போட்ட லாக் டவுன்ல மூணு பேரு சண்டையிலயும் கொத்துக்கறியா மாட்டிகிட்டேன். சரி கொத்துக்கறி ஆனாலும் பரவாயில்லை வீட்டுக்குள்ளே குடும்பத்தோட இருக்கோமே அப்படின்னு சந்தோசபட்டுகிட்டு இருந்தேன். லாக் டவுன் முடிஞ்சது. ஆனால் அந்த நேரத்துல என் பொண்டாட்டி என்கிட்ட வந்து ஒரு கோரிக்கையை வச்சா", என தன் கதையை நிறுத்தினான்.

ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் "அப்புறம் என்ன? அப்புறம் என்ன ஆச்சு?", என வினவியவுடன் "இவ்வளவு நேரம் கதை சொன்னதுல தொண்டை எல்லாம் வலிக்குது. யாரவது போயி தொண்டைக்கு இதமா ஒரு மாதுளம் பழம் ஜூஸ், ஒரு வாட்டர் மெலன் ஜூஸ் வாங்கிட்டு வாங்க. விட்ட கதையை சொல்றேன்",என்றான்.

அடப்பாவி அம்மா அப்பாவுக்கு ஒரே பிள்ளைன்னு சொல்றான். கல்யாணம் வேற ஆயிருச்சுன்னு சொல்றான். பிறகு எப்படி கோவில்ல சன்னியாசியானானு தெரியலையே என மண்டையை பிடித்துக் கொண்டவர்கள் ஜூஸ் வாங்க செல்லவா வேண்டாமா என தத்துளித்துக் கொண்டிருந்தனர். மீதி கதையை கேட்காவிட்டால் மண்டை வெடிச்சிடுமே என எண்ணிய சிலர் அவன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்ததுடன் இல்லாமல் மேலும் சில பல நொறுக்கு தீனிகளையும் அவனுக்கு வாங்கி வந்தனர்.

அதனை எல்லாம் தனது அருகில் வாங்கி வைத்துக் கொண்டவன் பரவாயில்ல இது கூட நல்லா தான் இருக்கு என்றவாறு ஜூசை குடித்துவிட்டு தன் கதையை தொடர்ந்தான். சுருக்கமாக சொல்ல வேண்டிய கதையை அவன் இழுத்து இழுத்து ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாகக் கூறியதில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடந்திருந்தது. நடை சாற்றிய பட்டர் "ஆத்துல போய் யாருக்கும் சாப்பிடுற எண்ணம் இல்லையா? அவன் கதையைக் கேட்டுண்டு இருக்கேள்", என விரட்டினார்.

ஆனால் யாரும் அவ்விடத்தை விட்டு சிறிதும் அசையவில்லை. பட்டரை பாா்த்து நக்கல் சிரிப்பு சிரித்த ஆதவன் "விடுங்களேன், ஒரு நேரம் பட்டினியா இருந்தா ஒன்னும் ஆகிடாது. கதை முக்கியமா சோறு முக்கியமா?", என வந்திருந்தவர்களை நோக்கி கேட்டான். கதை தான் முக்கியம் என அவர்கள் கூறிய உடன் கதையை தொடா்ந்தான்.

ஐடில வேலை பாா்க்குறதுல ஒரு சௌகரியம் என்னன்னா எல்லா நாளும் நாங்க ஆபீஸ் போக தேவை இல்லை. வாரத்துல ஒரு நாள் வந்தா போதும் அப்படிங்கற மாதிரி சொன்னாங்க. சரி சந்தோஷமா ஒரு நாள் மட்டும் போயிட்டு வரலாம் மீதி நாளுல வீட்ல இருந்து நெனச்சபடி வேலை செய்யலாம்னு சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்குறப்ப என் முன்னாடி வந்து நின்னு என் பொண்டாட்டி திடீர்னு ஒரு காவி உடைய குடுத்து போன மாசம் எங்க அம்மாவுக்கு கொரோனா வந்தப்ப உங்கள சிவன் கோவில்ல 15 நாள் சாமியார் ஆக்குறதா வேண்டிகிட்டேன். அதனால திங்கட்கிழமை இருந்து அடுத்து வர 15 நாளைக்கு நீங்க சிவன் கோவிலில் தங்கி அங்கே சாமியார இருக்கணும் அப்படின்னு சொல்லி அதற்கு தேவையான எல்லாத்தையும் முன்னாடி வச்சா.

இவளுக்கு மண்டையில் ஏதும் கலந்துடிச்சோ அப்படின்னு நான் யோசிச்சிட்டு இருக்குறப்பவே வேக வேகமா வந்த எங்க அம்மா எனக்கு பதில் அவகிட்ட நீ உன் மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்க. என் பையனை சாமியார் ஆகணும்னு சொல்ற அப்படினு சண்டை போட ஆரம்பிச்சாங்க. எங்க அப்பாவும் வந்து அவகிட்ட சண்டை போடறப்ப ஏற்கனவே ஒரு நாள் ஆபீஸ் போக வேண்டியது இருக்கேனு நொந்து போய் உட்கார்ந்துகிட்டு இருந்தப்ப இவங்க சண்டை எனக்கு மேலும் தலைவலிதான் கொடுத்துச்சு.

இந்த தலைவலிக்கு சிவன் கோயில்ல போய் சாமியாரர உட்காருறதே நிம்மதின்னு நான் சரின்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். வந்து முதல்ல மூணு நாள் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. பக்கத்துல அந்த தெருவுல இருந்த ஒரு சின்ன வீடை வாடகைக்கு எடுத்துக்கிட்டு குளிக்க செய்ய எல்லாத்தையும் அங்க பார்த்துகிட்டு லேப்டாப்போட கோவிலுக்கு வந்துருவேன். ராத்திரி நடைய சாத்துற வரைக்கும் கோவில்ல உக்காந்துட்டு திரும்ப அந்த வீட்ல போய் படுத்து தூங்கிடுவேன். அது கூட நிம்மதியா இருந்தது. பொண்டாட்டி சத்தம் இல்லாம,அம்மா சத்தம் இல்லாம அது பாட்டுக்கு நிம்மதியா போயிட்டு இருந்தது. சரி 15 நாள் முடிஞ்சிருச்சு அப்படின்னு வீட்டுக்கு போயி ஒரு ரெண்டு நாள் கையை நீட்டி கால நீட்டி நெனச்சதெல்லாம் சாப்பிட்டுட்டு அசந்து இருந்த நேரம் என்னோட அம்மா வந்து காவி உடைய வச்சு அடுத்து ஒரு 15 நாள் நீ முருகன் கோவிலில் போய் சாமியாரா இருக்கணும் அப்படின்னு சொன்னாங்க.


என்னது அப்படின்னு நான் அரண்டுட்டு இருக்கிறப்பவே என் பொண்டாட்டி ஏன் என்னோட வீட்டுக்காரர் போகணும் அப்படின்னு சண்டை ஆரம்பிச்சா. அடுத்த தலைவலியானு நான் யோசிக்கிறப்பவே எங்கம்மா கேட்டாங்களே ஒரு கேள்வி என மோட்டு வளையை நோக்கி ஆதவன் சிந்தித்திட மற்றவர்களும் அவனைப் போன்று மேலே பார்த்தனர். என்னத்த கேட்டாங்கன்னு சொல்லி தொலைடா என கூட்டத்திலிருந்து ஒரு குரல் அவனது சிந்தனையை கலைத்தது.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்டாட்டி சொன்னதை கேட்டு சிவன் கோவிலில் போய் சாமியாராக உட்கார்ந்த. உன்னை பெத்து வளர்த்த அம்மா நான் சொல்றதை கேட்க மாட்டியா? கல்யாணம் ஆகுற வரைக்கும்தான் அம்மா அம்மான்னு சுத்தி வருறது. கல்யாணம் ஆனா பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு அம்மா அப்பாவை மதிக்கிறது இல்லை அப்படின்னு அழுது புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.

அவங்க அழுகையை கேட்டு பக்கத்து தெருவுல இருந்து கூட ஓடி வர ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாா்த்துக்கோங்க. வந்தவங்க என்ன ஏதுன்னு விவரம் தெரியாம பெத்தவங்களையும் மதிக்கணும்பா பொண்டாட்டி பேச்சை மட்டும் கேட்கக்கூடாது. அம்மா அப்பா சொல்ற பேச்சையும் கேட்கணும்னு ஆளாளுக்கு எனக்கு புத்திமதி சொன்னாங்க. அடப்பாவிங்களா என்ன விஷயம்னு தெரியாமலே நாட்டாமை பண்ண வரீங்களே! நல்லா இருங்கடா அப்படினு வாழ்த்திட்டு நானும் அம்மா சொன்ன கோவில்ல போய் அடுத்த 15 நாள் உட்கார்ந்துட்டேன்.

அப்புறம்தான் எங்க அம்மாவுக்கு ஃபோனை போட்டு எதுக்காகமா முருகன் கோயிலுல வேண்டிக்கிட்டனு கேட்டேன். சொன்னாங்க பாருங்க ஒரு காரணம் அதுல நொந்துட்டேன். அவங்களோட தங்கச்சியோட நாத்தனாரோட ஒன்ன விட்ட சின்னமாமியாருக்கு கால் ஒடிஞ்சிருச்சாம். அது சரியாகணும்னு வேண்டிக்கிட்டாங்களாம்", என தனக்கு வராத கண்ணீரை ஆதவன் துடைத்த பொழுது அனைவரும் அவனை மிகவும் கேவலமான பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.

புரியுது புரியுது நீங்க பாக்குற பார்வை எல்லாம் புரியுது. முருகன் கோவில் முடிஞ்சது, சிவன் கோவில் முடிஞ்சது, இப்ப ஏன் ராமர் கோவிலுல உக்காந்திருக்குறனுதானே கேக்குறீங்க. மாசத்துல 27 நாள் என்னை விரட்டி விட்ட அவங்க இப்ப எல்லாம் மாசத்துல 15 நாள் மட்டும் தான் விரட்டி விடுறாங்க ஒவ்வொரு கோவிலுக்கும். இது என் கணக்குல எட்டாவது கோவில். அஞ்சு நாளும் முழுசா ஆபீஸ் போற நிலைமை வர வரைக்கும் எனக்கு இது தான் கதி", என தன் கதையை கூறி முடித்தான்.

"எல்லாரும் கதையை கேட்டு நல்லா தெரிஞ்சுகிட்டீங்களா? போங்க போங்க, போய் வீட்ல போய் பொங்கி வச்ச சோறு போட்டு நல்லா சாப்பிடுங்க. பிள்ளை குட்டிகளுக்கு செய்றதை நேரத்துக்கு செஞ்சு கொடுத்து சாப்பிட வச்சு உடம்பை தேத்துங்க. எங்க அம்மா விரட்டி விட்டது இல்லாம என் பொண்டாட்டியும் என்னை விரட்டி விட்டுட்டா. நீங்க யாரும் அந்த மாதிரி பண்ணாதீங்க", என அவர்களுக்கு அறிவுரையை கூறி முடித்த ஆதவன் மதிய சாப்பாட்டிற்கு சொமேட்டோவில் எந்த கடையில் என்ன ஆர்டர் செய்யலாம் என பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அவன் கதையை கேட்ட பாதி பேர் பரிதாப ப்பட்டு சென்றனர் என்றால் மீதி இருந்த சிலரோ நலலா இருக்கே நாம ஏன் இதை ட்ரை பண்ணக் கூடாது என பேசியவாறு சென்றனர். அவர்களின் பேச்சு ஆதவனின் காதில் விழுந்த பொழுது அப்பாடி இப்பதான் நிம்மதியா இருக்கு. சிங்கம் சிங்கிளாவே சுத்துறேனே எப்ப கூட்டத்தோட சுத்துறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நல்ல வேலை எப்படியும் ஒரு பத்து பேராவது நமக்கு துணைக்கு வந்துருவாங்க என மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.


மறுநாள் அவனது வீட்டில் நுழைந்த அவனின் சித்தி நேராக தன் உடன் பிறந்த அக்காவிடம் சென்று சண்டைக்கு போடுவதைப் போல் நின்றார்.என்னக்கா பண்ணி வச்சிருக்க? ஆசையாசையா பெத்த ஒத்த பிள்ளையை கோவில் கோயிலா சுத்த விட்டுகிட்டு இருக்கீங்க நீயும் உன் மருமகளும். என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க?", என எடுத்த உடன் சத்தமிட ஆரம்பித்தார்.

அவரின் சத்தத்தை கேட்டு ஆதவனின் அம்மாவோ "நிறுத்து! ஓவரா கூவாத. என்ன விஷயம்னு முழுசா சொல்லு. என்றதும் நேத்திக்கு என் நாத்தனாா் மக ராமர் கோவில்ல ஏதோ கதாகாலட்சேபம் நடக்குதுன்னு சொல்லி இருக்காங்கனு போய் பார்த்தா நம்ம ஆதவன் சாமியார் ஆன கதையை எல்லாருக்கும் சொல்லி இருக்கான். அவ என்கிட்ட வந்து சொன்ன உடனே எவ்வளவு மனசுக்கு வேதனையா இருந்தது தெரியுமா", என கண்ணீரே வராமல் கதறினார்.


அவரது கதறலை கேட்டு ஆதவனின் அம்மா, மனைவி, அப்பா மூவரும் பலமாக சிரித்த சிரிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களின் சிரிப்பை பார்த்து லூசு குடும்பமா என அவர் எண்ணுவது அவரது முகத்தில் தெரிந்தது. என்ன லூசானு நினைக்கிறயா? அதெல்லாம் கிடையாது. இந்தா இருக்காளே மருமக சரியான அப்பாவி. அவன் லாக்டவுனுக்கு முன்னாடி நடுராத்திரிக்கு வந்து ஏதாவது சமைச்சு தர சொன்னாலும் சமைச்சு தருவா.

என்னைக்காவது ஒரு நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாலும் நீ எப்படி போகலாம் அப்படியா இப்படியான தாம் தூம்னு குதிப்பான். அது மட்டுமா லாக்டவுன்ல வீட்ல இருந்து வேலைய பாருடான்னு சொன்னா அவன் வேலையை பார்த்ததைவிட திங்கிறதுக்கு எங்களை ஏவின வேலைதான் ஜாஸ்தி. அப்பவே அவனை எங்கேயாவது துரத்தி அடிக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா என் மருமகதான் பாவம் பார்த்து விடுங்க நம்மளுக்குன்னு ஒரு நேரம் வர்றப்ப பாத்துக்கலாம் அப்படின்னு சொன்னா. அதனாலதான் விட்டு வச்சேன். இல்லன்னா லாக்டவுன்ல வேலைய பாக்காம எங்கள வேலையை ஏவுனவனை அன்னைக்கே தொரத்து விட்டுருப்பேன்",என அவர் கடுப்புடன் கூறி முடிக்கவும் ஆதவனின் தந்தை தொடர்ந்தார்.


" ஏன்மா மாமியார் மருமக அப்படினாவே போட்டி போட்டுட்டு தான் இருக்கணுமா? நானும்தான் வேலை பார்த்தேன். உங்க அக்காவை அந்த வேலை செய் இந்த வேலை செய்யினு 24 மணி நேரமும் ஏவிக்கிட்டு இருந்திருந்தா இன்னைக்கு நான் இங்க நிம்மதியா உட்காா்ந்து இருக்க முடியுமா? அந்த பயலுக்கு அந்த நிம்மதியை பத்தி கொஞ்சம் கூட அக்கறையில்லர போல இருக்கு. இப்பவே இந்த ஆட்டம் ஆடுனா இன்னும் ரெண்டு மூணு வருஷம் போனா குரைக்குற குணம் வந்துரும். அதெல்லாம் சரி வராதுன்னு சொல்லி இந்த ஐடியாவை என் மருமகளுக்கும், என் பொண்டாட்டிக்கும் சொல்லிக் கொடுத்ததே நான் தான்", என அடுத்த குண்டை வீசினார்.

என்னது என ஆதவனின் சித்தி அதிர்ந்த நிலையில் நின்று இருந்த பொழுது ஆதவனின் மனைவியும் அவனின் அம்மாவும் ஆதவனுக்கான அடுத்த வேண்டுதல் எங்கே என விவாதிக்க ஆரம்பித்து இருந்தனர்.

முற்றும்
 
Need a gift idea? How about some novelty socks?
Buy it!