Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
134
484
63
அத்தியாயம் - 10

பணிநேரம் முடிந்து, களைத்த முகத்துடன் தனது கோட்டைக் கழற்றியபடி வந்த திவ்யா, எதிரில் வந்து கொண்டிருந்த வைதேகியைப் பார்த்தாள்.

“என்னம்மா! இந்த நேரத்துக்குக் கோயில்ல இருப்ப… திடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் ஹாஸ்பிட்டல் வந்திருக்க? உடம்புக்கு ஒண்ணுமில்லையே…” என்றவளது பார்வை, அன்னையை கவலையுடன் ஆராய்ந்தது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லடா. நான் நல்லாதான் இருக்கேன். உன் டியூட்டி முடிஞ்சிடுச்சி தானே. நீ இருக்கியோ இல்லையோன்னு நினைச்சிகிட்டே வந்தேன்…”

“முடிஞ்சிடுச்சி. என்னை ரிலீவ் பண்ண வேண்டிய டாக்டர் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. சரி என்ன விஷயம்?”

“பரிமளம் அக்காவோட மருமகளை, இங்கே அட்மிட் பண்ணியிருக்காங்களாம். அதான், அவங்களைப் பார்க்கலாம்னு வந்தேன். நீயும் கூட வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்” என்றார் கனிவுடன்.

அன்னையை உறுத்து விழித்தவள், “ஒரு நிமிஷத்துல என்னைக் கலங்கடிச்சிட்டம்மா!” என்றவள், “சரிம்மா! கொஞ்ச நேரம் உள்ளே வந்து உட்காரு. நான் வந்திடுறேன்” என்றாள்.

“நீ வா. நான் இங்கேயே இருக்கேன்” என்ற வைதேகி வராண்டாவிலிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.

“ம், ஐஞ்சே நிமிஷம்” என்றபடி அறைக்குச் சென்றாள்.

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த வைதேகி, வேகமாக வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீராமைப் பார்த்தார்.

அவரையும் அறியாமல் எழுந்தவர், “எப்படித் தம்பி இருக்கீங்க?” என்று வினவ, அதுவரை அவரை கவனிக்காதவன் நிதானித்துத் திரும்பிப் பார்த்தான்.

சட்டென அவரை அடையாளம் காண முடியாமல் தடுமாறியவன், “நீங்க…” என இழுக்கும் போதே நினைவு வந்துவிட, “ஓஹ்! எப்படியிருக்கீங்க?” என்று முறுவலித்தான்.

“நல்லயிருக்கேன் தம்பி! இப்போதான் வீட்டுக்காரம்மா மூலமா விஷயம் கேள்விப்பட்டேன். தங்கச்சியைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றார்.

“அப்படியா, வாங்க…” என்று அவரை உடன் அழைத்துச் செல்ல முயல, “இல்ல தம்பி ஒருத்தர் வரணும். அவங்களுக்காக காத்துட்டு இருக்கேன்” என்றார்.

“சரிங்க, நேரா போய் ரைட்ல போனா மூன்றாவது ரூம்” என்று அறைக்குச் செல்லும் வழியைச் சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கிளம்பிச் சென்றான்.

மகளுக்காகக் காத்திருந்த வைதேகிக்கு, மனம் அடித்துக் கொண்டது.

நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், அமைதியான கூட்டுக் குடும்பம். அனைவருமே படித்தவர்கள் என்பதோடு, ஸ்ரீராமைப் பார்த்ததுமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மகளுக்கு, இதைவிட அருமையான இடம் அமையாது என்ற சந்தோஷத்தில் இருந்தார்.

ஆயினும், மகளது மனத்தில் யாரிடமோ நாட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்ததிலிருந்தே, அவருக்குச் சற்று வருத்தம்தான். அதனாலேயே மகளைப் பற்றி அவனிடம் எதுவும் சொல்லவில்லை.

ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவர், ‘இதுவரை எந்தவிதமான சந்தோஷத்தையும் அடையாத மகளுக்கு, அவளது மனம் போல ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் போதும்’ என்ற எண்ணத்துடன் திவ்யாவிற்காகக் காத்திருந்தார்.

“சாரிம்மா! ஒரு போன் வந்தது அட்டெண்ட் பண்ணிட்டு வர லேட் ஆகிடுச்சி. கிளம்பலாம்” என்றதும், தனது எண்ணங்களின் பிடியிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டார்.

அமைதியாக இருவரும் வராண்டாவில் நடந்து கொண்டிருக்க, வலது பக்கம் திரும்பியதுமே அவளது இதயம் தடக்தடக்கெனத் துடிக்க ஆரம்பித்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், ஸ்ரீராமை அங்கே கண்ட அடுத்த இரு நாட்களும் அவளுக்கு ஓய்வுநாள் என்பதால், அவனைக் காணக்கூடிய சந்தர்ப்பம் அமையவில்லை. இன்று முழுவதும் முடிந்த வரை, அவள் அந்தப் பக்கமாக வரவேயில்லை.

இப்போது அந்த வழியில் செல்லவும், ‘அவன் இருப்பானோ? தன் கண்களில் அகப்பட்டு விடுவானோ?’ என்ற அச்சத்துடனேயே சென்றவளுக்குக் கால்கள் தள்ளாடின.

தன்னை நினைத்து அவளுக்கே வேதனையாக இருந்தது. ‘என் எண்ணங்கள் ஏன் இப்படித் தறிகெட்டுத் துடிக்கிறது? அதிலும், அவன் திருமணம் ஆனவன் என்று அறிந்தும்…’ திவ்யாவிற்கு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போலிருந்தது.

“திவி! இந்த ரூம்தான்.”

அன்னை சுட்டிக் காட்டிய அறையைக் கண்டதும், தடுமாறிப் போனாள்.

“ந..ல்லாத் தெரியுமாம்மா, இந்..த ரூம்.. தானா?” வார்த்தைகளும் அவளது பதட்டத்திற்குக் குறைவில்லாமல் தந்தியடித்தது.

“தெரியும்டா!” என்றவர் மெல்லக் கதவைத் தட்டினார்.

“வாம்மா வைதேகி!” என்றழைத்த பரிமளம், பின்னாலேயே வந்த திவ்யாவைப் பார்த்தார்.

அவரது கண்கள் அங்கிருந்த சுகுணாவிடம் பதிய, அதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட சுகுணா, அவளை ஏறஇறங்கப் பார்த்து, திருப்தியுடன் பரிமளத்திடம் கண்களாலேயே சம்மதம் சொன்னார்.

அவர்களது கண் ஜாடைகளைக் கவனித்துவிட்ட வைதேகிக்கு, தர்மசங்கடமாக இருந்தது.

சமாளித்துக் கொண்டு, “இவள்தான் என் பொண்ணு திவ்யா! இதே ஹாஸ்பிட்டல்ல தான் டாக்டரா இருக்கா” என்று மகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.

“ஆமாமில்ல… எங்களுக்கு இருந்த மனநிலையில எதுவுமே நினைவுக்கு வரலை வைதேகி” என்றார் பரிமளம்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் தவிப்பதை வெளியில் காட்டாமலிருக்க, பிரம்ம பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

“உட்காருங்க வைதேகி!” என்ற சுகுணா திவ்யாவிடம், “நீயும் உட்காரும்மா” என்றார்.

“பரவாயில்ல…” என்றவளது பார்வை வர்ஷாவிடம் சென்றது.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த வர்ஷா, அவளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள். அவளைப் பார்த்து முறுவலிக்க முடியாமல், இவளுக்குத் தான் தவிப்பாக இருந்தது.

வலிய வரவழைத்த புன்னகையுடன் வர்ஷாவை நெருங்கியவள், “எப்படி இருக்கீங்க?” என்று இளையவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, பெரியவர்கள் தங்களது பேச்சில் முனைப்பாயினர்.

கேஸ் ஷீட்டை எடுத்து நோட்டமிட்ட திவ்யாவின் கண்களில் முதலில் பட்டது வர்ஷா பிரபாகரன் என்ற பெயர் தான். அதைப் படித்ததுமே அவளையும் அறியாமல் மனத்திற்குள் ஒரு பரபரப்பும், சந்தோஷமும் ஒருசேர தொற்றிக் கொண்டது.

‘அப்படியானால் இவள் ஸ்ரீராமின்… சேச்சே இதில்தான் க்ளியரா போட்டிருக்கே. இதுக்கும் மேல என்ன வேணும்? வேற எதையும் யோசிச்சிக் குழம்பிக்காதே’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

கேஸ்ஷீட்டை பார்த்து இத்தனை வகையான முகபாவனை ஏன் தோன்றவேண்டும் என்று புரியாமல் வர்ஷா, அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உங்க ஹஸ்பண்ட் பேர் பிரபாகரா?” என்று படபடத்த திவ்யாவை வியப்புடன் பார்த்தாள் வர்ஷா.

நெற்றியைச் சுருக்கியபடி, “ஆமாம்” என்றாள்.

அவளது ஆராய்ச்சிப் பார்வையைக் கண்ட திவ்யா, “இல்ல… நீங்க மழை; உங்க கணவர் சூரியனா?” என்று சிரித்தாள்.

“ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ் ஈச் அதர் இல்லயா” என்று வர்ஷா சொல்ல, அதற்கும் வாய்விட்டுச் சிரித்தாள் அவள்.

அவர்கள் கிளம்பும் நேரம் பிரபாகரும் அங்கே வந்துவிட, வர்ஷா அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

ஸ்ரீராம் இல்லை என்று தெரிந்ததுமே நிம்மதியாக இருந்தவளது மனம், பிரபாகரை அறிமுகப்படுத்தியதும் மேலும் அமைதியடைந்தது. அந்தநொடி ஸ்ரீராமின் மீதிருந்த வருத்தமெல்லாம் மறைந்து போக, அவனை வாய்க்கு வந்தபடி பேசியதை நினைத்துக் கவலை கொண்டாலும், மனம் பெரும் ஆறுதலுடன் இருந்தது.

‘நாளை வர்ஷாவை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்வதற்குள், அவனைச் சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்’ என்ற முடிவுடன் விடைபெற்றுக் கிளம்பினாள்.

************

எப்போதும் பரபரவென பறந்துகட்டிக் கொண்டு கிளம்புபவள், இன்று நிதானமாக பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி தயாராவதை, கண்டும் காணாமல் சமைத்துக் கொண்டிருந்தார் வைதேகி.

ஐடி கார்டை கழுத்தில் மாட்டிக் கொண்டு திரும்பியவளிடம், லஞ்ச் பாக்ஸை கொடுத்தவர், “இன்னைக்கும் வேலை இருந்தது, ஆப்பரேஷன் இருந்ததுன்னு சாப்பிடாம வராதே. நேரத்துக்குச் சாப்பிடு” என்றார்.

“ஹப்பா! ஒருநாள் சாப்பிடாமல் வந்ததுக்கு இத்தனை அட்வைஸா? இனி, என்ன வேலை இருந்தாலும் அப்படியே போட்டுட்டு ஓடி வந்து சாப்டுட்டு மீதி வேலையைப் பார்த்துக்கறேன். சரியா?” என்றாள்.

“வாலு!” என்று அவளது முதுகில் செல்லமாகத் தட்டினார் வைதேகி.

“உன் பொண்ணு தானே வைதேகி! பின்னே எப்படியிருப்பேன்” என்று அன்னையின் கன்னங்களைப் பிடித்து ஆட்டினாள்.

“ஆ! உனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கேன்” - சொன்ன வைதேகியின் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது.

“எனக்குச் செல்லம் கொடுக்காம, வேற யாருக்குக் கொடுக்கப் போறே… என் செ..ல்..ல அம்மா!” என்றவள் எதிர்பாராத நேரத்தில் அவரது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓட, புன்னகையுடன் அவளைப் பின்தொடர்ந்தார் வைதேகி.

ஸ்கூட்டியை வாசலுக்குத் தள்ளிக் கொண்டு வந்தவள், “அம்மா! நான் வர்ஷாவைப் பார்க்கப் போறேன். அவங்ககிட்ட ஏதாவது சொல்லணுமா? இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கன்னு நேத்து சொன்னாங்களே” என்று கேட்டாள்.

வைதேகிக்கு முழுதாக விஷயம் விளங்காவிட்டாலும், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை அறிந்திருந்தவருக்கு, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிட மட்டும் தோன்றவேயில்லை.

‘என்ன திடீர்னு வர்ஷா மீது பாசம்?’ வாய்வரை வந்த கேள்வியை மட்டும் ஏனோ அவர் கேட்கவில்லை.

“அவளை உடம்பைப் பார்த்துக்கச் சொல்லு. ஒருநாள் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்னு சொல்லு” என்றார்.

“ம், மறக்காமல் சொல்லிடுறேன். வரேம்மா!” என்று மலர்ந்த முகத்துடன் செல்லும் மகளைக் கண்கொட்டாமல் பார்த்தார்.

சிலிசிலுவென வீசிய காற்று பருவமழையின் வரவேற்பை உணர்த்துவதாக இருந்தது. மருத்துவமனைக்கு வந்தவள் முதல் வேலையாக வர்ஷாவைக் காணச் சென்றாள். அவளுக்குத் துணையாக, சஹானா மட்டுமே இருந்தாள்.

கதவைத் தட்டிவிட்டு, “ஹாய்!” என்றபடி உள்ளே சென்றாள் திவ்யா.

“ஹாய்! வாங்க” என்ற வர்ஷா, தங்கைக்கு அவளை அறிமுகப்படுத்தி வைத்தாள். தனது வருங்கால அண்ணியை ஆர்வத்துடன் பார்த்த சஹானாவும், ஸ்நேகத்துடன் புன்னகைத்தாள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போதும் திவ்யாவின் மனம், ஸ்ரீராமைக் காணவேண்டும் என்ற ஆவலில் தவிக்க, கண்கள் அதைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

சகோதரிகள் இருவரும் அவளறியாமல் ஒருவரையொருவர் பார்த்து இரகசியமாகப் புன்னகைத்துக் கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரை, வைதேகி மூலமாக அவள் விஷயத்தை அறிந்திருக்கக் கூடும் என்றே நினைத்தனர். ஆனால், ஸ்ரீராமிடம் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருந்தனர்.

“சஹி! ஸ்ரீ அண்ணா வரேன்னு சொன்னாரே ஏன் வரலை? போன் செய்து கேட்டியா?” என்றாள் வர்ஷா.

திடீரென தமக்கை அப்படிக் கேட்டபோதும், திவ்யாவிற்காக சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவள், “கிளம்பிட்டேன்னு சொன்னாங்க. இந்நேரம் வந்துட்டு இருக்கணும்” என்றாள்.

அதுவரை மனத்திற்குள் தவிப்புடன் அமர்ந்திருந்த திவ்யா, ‘இப்போதிருக்கும் மனநிலையில் அவனைப் பார்த்தால், தான் எப்படி நடந்து கொள்வோம் என்று தனக்கே தெரியாத நிலையில், இங்கிருந்து சென்று விடுவதே நல்லது’ என்ற முடிவுடன் எழுந்தாள்.

“எனக்கு டியூட்டிக்கு நேரமாகுது. நான் ஈவ்னிங் வந்து பார்க்கிறேன். உடம்பைப் பார்த்துக்கோங்க. வரேன்” என்று இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அதற்கு மேலும் அவளை அலைகழிக்க வேண்டாம் என்று எண்ணியதால் சகோதரிகள் இருவரும் விடைகொடுத்து அனுப்பினர்.

அறைக்குள் நுழைந்தவள் எதிரில் அமர்ந்திருந்தவளைக் கண்டுகொள்ளாமல் யோசனையுடன் இருக்க, டேபிள் மீதிருந்த ஸ்டெத்தை எடுத்து பட்டென அவளது கையிலேயே அடித்தாள் கல்பனா.

“ஸ்! ஆஹ்!” என்றவள் மலங்க மலங்க விழித்தாள்.

“என்னடி! திருவிழால காணாமப் போன பிள்ளை மாதிரி இந்த முழிமுழிக்கிற? என்ன உன் ஆள் கண்ல படாம ஏமாத்திட்டாரா?” என்றாள் கல்பனா.

“சீ! அதென்னடி உன் ஆள்? அசிங்கமா…” என்று சிடுசிடுத்தாள்.

“ஓ! அப்போ வேற எப்படி சொல்றதாம்? பிராணநாதான்னு சொல்லட்டுமா?” என்றாள் கிண்டலாக.

“நீ ஒண்ணும் சொல்ல வேணாம். என் எரிச்சலைக் கிளப்பாதே. அன்னைக்கு அவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சின்னு நினைச்சி எவ்ளோ ஃபீலிங்ல இருந்தேன். வர்ஷா அவரோட தங்கைன்னு ஒரு வார்த்தை சொன்னியா? எனக்கு எவ்ளோ கில்டியா இருந்தது தெரியுமா?” என்றாள்.

“இதுக்குத்தான் நேத்து என்னை அரைமணி நேரம் காய்ச்சி எடுத்தியே. இன்னுமா அதைத் தொடரணும்? இப்போ உன் பிரச்சனை என்ன? ஸ்ரீராம் சாரைப் பார்க்கணுமா?”

“அது மட்டும் இல்ல…”

“வேற என்ன? உன் லவ்வை சொல்லணுமா!”

“அடச்சீ! முதல்ல மன்னிப்பு கேட்கணும்.”

“அவ்வளவு தானே…”

“அவ்வளவு தானேன்னு ஈஸியா சொல்ற. ஆனா, அவரோட முகத்தைப் பார்த்துச் சாரி கேட்கறது எவ்ளோ கஷ்டம்?”

“ஓ! அன்னைக்கு வாய் கிழியச் சண்டை போட்டப்போ, இதெல்லாம் தெரியல” என்றாள் கிண்டலாக.

“அதையே திரும்பத் திரும்பச் சொல்லாதே கல்ப்ஸ்! அப்போ நடந்தது அதுவேற…” என்றவளது குரல் குழைந்தது.

“ஹூம்! ரொம்ப முத்திப் போயிருக்கு. இதுக்குக் கட்டாயம் மருந்து கொடுத்தே ஆகணும்.”

“அவரை நினைச்சாலே கைகாலெல்லாம் தந்தியடிக்குது கல்பனா! இன்னைக்குக்கூட அவர் வந்திட்டு இருக்காருன்னு தெரிஞ்சதும், அங்கேயிருந்து ஓடி வந்துட்டேன் தெரியுமா? இந்த லவ் இருக்கே இது ரொம்ப ரொம்ப மோசம்…”

“மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சதே பெரிசு. அதை ஹாஸ்பிட்டல்லயே தான் செய்யணுமா என்ன? அவரோட ஆஃபிஸுக்குப் போயும் கேட்கலாம். போதாக்குறைக்கு, தெரிஞ்சவங்களாவும் ஆகிட்டாங்க. சோ…”

“சோ…” ஆர்வத்துடன் கேட்டாள் திவ்யா.

“ஏன்டி! எல்லாத்தையும் நானே சொல்லணுமா? நீயும் கொஞ்சம் யோசிச்சித் தொலையேன்” என்று கடுப்படித்தாள் கல்பனா.

“சரி தாயே… நானே யோசிச்சிக்கிறேன்” என்று வீராப்பாகச் சொன்னவள், “அப்போ, இன்னைக்குப் பார்த்தாலும் பேசவே முடியாதா?” என்று சோகமாகக் கேட்டாள்.

அவளை ஒருமாதிரியாகப் பார்த்த கல்பனா, திடீரென விழுந்து விழுந்துச் சிரித்தாள்.

“மன்னிப்பு எப்போ வேணாலும் கேட்டுக்கலாம்னு தான் சொன்னேன். பார்க்கக் கூடாதுன்னா சொன்னேன். ஆனால், திவி! நிச்சயமா உன்கிட்ட இதை எதிர்பார்க்கல…” சொல்லிவிட்டு அவள் மேலும் கேலிசெய்தாள்.

“சும்மா இருடி நீ வேற…” வெட்கத்துடன் சிரித்தாள் திவ்யா.

காதல் பூக்கும்...