Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
148
493
63
757

அத்தியாயம் - 22

ஸ்கூட்டியை உள்ளே நிறுத்திவிட்டு வெள்ளைக் கோட்டை தோளில் போட்டுக்கொண்டு ஒரு கையில் கைப்பையையும் மற்றொரு கையில் காய்கறிகள் அடங்கிய பையையும் சுமக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்தாள் திவ்யா.

பையைக் கீழே வைத்துவிட்டு கையை உதறிக்கொண்டவள், அழைப்பு மணியை அழுத்திய அடுத்த நொடி கதவைத் திறந்தவளைப் பார்த்ததும், ஆச்சரியத்தில் விழிவிரித்தாள்.

“ஹாய் கல்யாணப் பொண்ணு!” என்று இருகரங்களையும் விரித்த மயூரியை, “அண்ணீ!” என்றபடி தாவி அணைத்துக் கொண்டாள்.

“என்னண்ணி! சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா கொடுக்கறீங்க? நாளைக்குத்தான் வருவேன்னு சொல்லிட்டு இன்னைக்கே வந்து நிக்கிறீங்க” என்று கேட்டுக்கொண்டே குனிந்து பையை எடுத்தாள்.

“அதையெல்லாம், உன் அண்ணாகிட்ட கேளு” என்றவள், திவ்யாவின் கையிலிருந்து பையை வாங்க முயன்றாள்.

“மூச்… இப்போ நீங்க கெஸ்ட். இங்கேல்லாம் வேலை செய்ய அலௌட் கிடையாது” எனச் சிரித்துக்கொண்டே சொன்னவள், “வேணா இதை எடுத்துட்டு வாங்க” என்று தனது தோளில் தொங்கிக்கொண்டிருந்த கோட்டையும், ஸ்டெதஸ்கோப்பையும் மயூரியின் தோளுக்கு மாற்றினாள்.

“ஆமாம். இது பெரிய பாரம் பாரு. என்னையே கெஸ்ட்ன்னு சொல்றயா” என்றபடி திவ்யாவின் முதுகில் ஒரு தட்டு தட்டினாள்.

திவ்யாவின் குரலைக் கேட்டதும், சமையலறையிலிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள் மயூரியின் மூன்றரை வயது மகள் அஞ்சலி.

குழந்தையைக் கண்டதும் விழிகள் மின்ன, மகிழ்ச்சியில் இதழ்கள் மலர, “அஜ்ஜு குட்டி!” என்றழைத்தாள் திவ்யா.

அவளை அடையாளம் கண்டுகொண்ட குழந்தையும் குதூகலத்துடன் நின்ற இடத்திலேயே இரு கால்களையும் வேகமாகத் தட்டிவிட்டு, சமையலறையில் வேலையாக இருந்த வைதேகியின் காலைக் கட்டிக்கொண்டாள்.

“அத்தைகிட்ட வராம, பாட்டிகிட்ட ஓடுறீங்களா?” என்றவள் குனிந்த வாக்கிலேயே ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கி முத்தமிட, அவளது கன்னத்தில் இரு கைகளாலும் செல்லமாகத் தட்டி விளையாடியது அந்த மழலை.

“உங்களைப் பார்த்து எவ்ளோ நாள் ஆகுதுடி தங்கம்!” என்று கொஞ்சியவள், குழந்தையை ஆசையுடன் அணைத்து அதன் கன்னத்தில் கணக்கிலடங்கா முத்தத்தைக் கொட்டிக் கொடுத்தாள்.

அவள் ஓய்ந்து போய் நிறுத்தியதும், அந்த வேலையைக் குழந்தை கையிலெடுத்துக் கொள்ள, கலகலவென நகைத்தாள் திவ்யா.

“பார்த்து திவி! மிஸ்டர். மாப்பிள்ளை இதைப் பார்த்துட்டு சண்டைக்கு வந்துடப் போறார்” என்று மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படிச் சொன்னாள் மயூரி.

“அண்ணி!” என்று வெட்கத்தில் சிணுங்கினாள் திவ்யா.

“அண்ணா எங்கேண்ணி?”

“குற்றாலம் வரைக்கும் ஒரு வேலையா போயிருக்கார். ஒன் ஹவர்ல வந்திடுறேன்னு இப்போதான் போன் பண்ணார்” என்றாள் மயூரி.

“அங்கிள், ஆன்ட்டிலாம் நல்லாயிருக்காங்களா? அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே.”

“அத்தைக்குக் கொஞ்சம் கால்வலி பிரச்சனை. அதனாலதான் ரெண்டு பேரும் வரல. உங்களை ரொம்பவே விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க. இவரும், உன் நிச்சயதார்த்தப்போ திடீர்னு வெளியூர் கிளம்பிட்டார். கல்யாணத்துக்கு கட்டாயம் எல்லோரும் வந்திடுவோம்” என்றாள்.

“நிச்சயத்துக்கு வராததுக்கே சண்டை போடணும்னு இருந்தேன். கல்யாணத்துக்கு எல்லோரும் வரலைனா சும்மா விட்டுடுவேணா?” எனக் கேட்டாள்.

“உங்க அண்ணன் வந்ததும் உட்கார வச்சி நைட்டெல்லாம் சண்டை போடு. யாரு வேணான்னா? என்னை மட்டும் விட்டுடும்மா…”

“ஆன்ட்டிக்காகத்தான் உங்களுக்குப் பெர்மிஷன் கொடுத்துட்டேன். இல்லன்னா, முதல் சண்டை உங்ககிட்டதான்” என்று செல்லம் கொஞ்சினாள்.

மயூரி அமர்ந்திருக்க, அவள் மீது சாய்ந்து அமர்ந்தவண்ணம் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் திவ்யா.

“திவி! நேரா உட்காரு. அண்ணி நல்லா உட்காரட்டும். ஏற்கெனவே, டிராவலிங் வந்தது உடம்பு வலிக்கும்” அக்கறையாகச் சொன்ன வைதேகி வாழைக்காய் பஜ்ஜியையும், சட்னியையும் கொண்டு வந்து வைத்தார்.

“யம்மி பஜ்ஜி!” என்ற திவ்யா தான் ஒன்றை எடுத்துக்கொண்டு, “அஜ்ஜு பேபி! நீங்க சாப்பிடுறீங்களா?” எனக் கேட்டாள்.

“நோ நோ! அத்தை! அஜஜுக்கு சாக்லெட் மட்டும் போதும்” என கையை அசைத்து கண்கள் விரியச் சொன்ன குழந்தையை அள்ளியெடுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

“ச்சோ ஸ்வீட் பேபி!” என்று கொஞ்சிக் கொண்டவள், “மாமா வந்ததும் நிறைய்ய்யய.. சாக்கீஸ் வாங்களாம். ஓகே. டூ மினிட்ஸ் அத்தை வரேன்” என்றவள் போனுடன் அறைக்கு ஓடினாள்.


************

பார்க்கிங்கிலிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு அலுவலக வாசலை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீராமின் மொபைல் அலற, புன்னகையுடன் போனை எடுத்தான்.

“சொல்லுங்க பொண்டாட்டி!” என்றான்.

“ராம்! இப்படிச் சொல்லாதீங்கன்னு உங்ககிட்ட எத்தனை முறை சொல்றேன்” என்று செல்லம் கொஞ்சினாள்.

சிரித்தவன், “அப்போ அதைத் தீவிரமா சொல்லணும். இப்படிக் கொஞ்சிகிட்டே சொன்னா, இப்படித்தான்” என்றான்.

“உங்ககிட்ட பேசி ஜெயிக்கமுடியாது. நடுல எதுவும் பேசாதீங்க. எங்க மயூரி அண்ணியும், சைலேஷ் அண்ணாவும் சென்னைலயிருந்து வந்திருக்காங்க. நாளைக்கு ஈவ்னிங் கிளம்பிடுவாங்க போலத் தெரியுது. இன்னைக்கு, உங்களால வரமுடியுமா?” எனக் கேட்டாள்.

“இப்போ நான் பேசலாமா!” எனக் கிண்டலாகக் கேட்டான்.

‘தான் ஏதாவது சொன்னால் திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிப்பான்’ என்று எண்ணியவள், “ம்ம்” என்றாள்.

“எனக்கு உன்னைப் பார்க்கணும் போலயிருக்கு, வீட்டுக்கு வாங்கன்னு சொன்னா, வரமாட்டேன்னா சொல்லப் போறேன் மை டியர் பெட்டர் ஹால்ஃப்!” என்று அவன் சொன்னதும் தலையிலடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

“மிஸ்டர். ராம்! நீங்க ஒண்ணும் வரவேணாம். வீட்டுக்குக் கிளம்புங்க. நான் போனை வைக்கிறேன்” என்றவள், அவன் மேற்கொண்டு பேசும் முன் போனை அணைத்தாள்.

‘ஹப்பா!’ என்று பெருமூச்சு விட்டவள், குறுஞ்சிரிப்புடன் ஹாலுக்கு வந்தாள்.

“அம்மா! அந்தப் பேக்ல காலிஃபளவர் இருக்கு. கொஞ்சம் காலிஃபளவர் பக்கோடா பண்ணிடேன் ப்ளீஸ்! ராம் வருவார்” என்றாள்.

சிரித்துக்கொண்டே, “சரிடா! உனக்குக் காஃபி கொண்டு வரவா” எனக் கேட்டார்.

“இல்லம்மா! அண்ணாவும், ராமும் வந்துடட்டும்” என்றவள் குழந்தையை இழுத்து கையணைப்பில் வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.

“ஹும்! அதுக்குள்ள மாப்பிள்ளையைப் பார்க்க ஆசை வந்துடுச்சா?” என்றாள் மயூரி.

“அவர்கிட்ட உங்களைப் பத்தியெல்லாம் சொல்லியிருக்கேன். நீங்க நாளைக்கு வருவீங்கன்னும் சொன்னேன். அவர் பார்க்க வரேன்னு சொன்னார். அதான்…” என்றாள்.

“ஹப்பா! எத்தனை ‘அவர்’. அந்த ‘அவர்’ரை நாங்க பார்த்தே ஆகணும்” என்று கிண்டலாகச் சொன்னாள் மயூரி.

“ம், வருவார் பாருங்க. எங்க செலக்‌ஷன் எப்படின்னு சொல்லுங்க.”

“நாங்கதான் போட்டோ பார்த்தோமே…”

“போட்டோ தானே பார்த்தீங்க. பேசிப் பழகலையே…” என்றவள் சிரித்துக்கொண்டே எழுந்து சென்றாள்.

அவள் சிரித்துக்கொண்டே சென்றதற்கு அர்த்தம் புரியாமல், “வரட்டும் பேசிடுவோம்” என்று தோள்களைக் குலுக்கிய மயூரி, “உன் ஃபியான்ஸியை எங்கேயோ பார்த்தது மாதிரியே இருக்காம் உங்க அண்ணனுக்கு” என்று கூடுதல் தகவல் ஒன்றையும் சொன்னாள்.

“சென்னைக்கு அடிக்கடி வேலை விஷயமா வருவார் அண்ணி! அப்போ பார்த்திருக்கலாம்” என்று பதிலளித்தாள் திவ்யா.

“ம், இருக்கலாம்” என்றாள்.

சற்றுநேரம் விளையாடிக்கொண்டிருந்த அஞ்சலி, “அம்மா! அப்பா எங்கே?” என்று சிணுங்களுடன் ஆரம்பித்தாள்.

“ம், இனி அவ்வளவுதான். சரியான, அப்பா பைத்தியம். அப்பா பாட்டு பாட ஆரம்பிச்சிட்டா நிறுத்தமாட்டாளே” என்று சலித்துக்கொண்டாலும், மயூரியின் முகம் பெருமிதத்தில் மிளிர்ந்தது.

“அப்போ, உங்களுக்கு வீட்ல வேலையே இல்லைன்னு சொல்லுங்க” எனக் கிண்டலடித்தாள்.

“ஏம்மா சொல்லமாட்ட! நான் ஆஃபிஸுக்கு வரலைனா, உங்க அண்ணனுக்கு வேலை ஓடாது. ஆபிஸுக்கும், வீட்டுக்கும் நான் அலையா அலையறது உனக்கெங்கே தெரியும்!” என்று அலுத்துக்கொண்டாள்.

“ஹும்! பிடிச்சிருந்தாலும் நாம்தான் வெளியே காட்டிக்கமாட்டோமே” என்று அவளைக் கேலிச் செய்தாள் திவ்யா.

“ஆமாம், நீதான் மெச்சிக்கணும்.”

“என்னண்ணி! இப்படிச் சொல்றீங்க? ரெண்டு பேரும் இருபத்திநாலு மணிநேரமும் ஒண்ணாவே இருக்கறது எல்லாராலயும் முடியுமா?” எனக் கேட்டாள்.

“இக்கரைக்கு அக்கரைப் பச்சை. நாளெல்லாம் ஒண்ணாயிருந்தாதானே தெரியும்” என்று சலித்துக் கொண்டாள் மயூரி.

“ஓஹ்! எங்க அண்ணன் கூட இருக்கறது உங்களுக்குக் கஷ்டமாயிருக்கா. அண்ணன் வரட்டும் இன்னைக்கு, இதுக்கு ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணிடுவோம்” என்றாள் வேண்டுமென்றே.

“என்ன பண்ணாலாம் மயூன்னு, அதுக்கும் உன் அண்ணன் என்கிட்டதான் வந்து நிப்பார்” என்று சிரித்தாள் மயூரி.

“ஓஹ்! நைஸ் அண்ணி! எனக்கும் அந்த இரகசியத்தைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்” என்று வேண்டுமென்றே கேட்டு மயூரியிடம் செல்லமாக இரண்டு அடிகள் வாங்கிக்கொண்டாள் திவ்யா.

“அம்மா! அப்பா வேணும்” என்று குழந்தை மீண்டும் அழுகையைத் துவங்க, “அப்பா வந்துடுவாங்கடா செல்லம்” என்ற மயூரியின் சமாதானத்திற்கு கட்டுப்படவேயில்லை.

“அஜ்ஜு பேபி! வாங்க அப்பா வர்றாங்களான்னு நாம வெளியே போய்ப் பார்க்கலாமா” எனக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு எழுந்தாள் திவ்யா.

“அஜ்ஜூம்மா! அத்தை உங்களை அப்பாவைப் பார்க்கக் கூட்டிட்டுப் போறாங்களா. இல்லை… அவங்க அத்தானைப் பார்க்கக் கூட்டிட்டுப் போறாங்களா?” என்று மயூரி வம்பிழுக்க, “அண்ணி!” என்று செல்லமாக முகத்தைச் சுருக்கியவள், முறுவலுடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

ஐந்து நிமிடங்கள் குழந்தைக்கு விளையாட்டு காட்டிக்கொண்டே நின்றுகொண்டிருக்க, ஸ்ரீராம் வந்து இறங்கினான்.

“ஹாய் பொண்டாட்டி! வரவே வேணாம்னு சொல்லிட்டு, என்னை எதிர்பார்த்து வழிமேல் விழி வச்சி காத்திருக்க போல” என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் வந்தான்.

“ரொம்பக் கனவு காண வேணாம். நாங்க அஜ்ஜுவோட அப்பாவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம். இல்ல அஜ்ஜும்மா!” என்று தனக்குத் துணைக்கு அழைத்துக் கொண்டாள்.

குழந்தையும், “ம்” என்று தலையை ஆட்ட, திவ்யா கிளுக்கெனச் சிரித்தாள்.

“கூட்டணிக்கு ஆள் சேர்க்கறியா நீ” என்றவன், “ஹாய் அஜ்ஜு டார்லிங்! மாமாகிட்ட வரீங்களா?” எனக் கேட்டுக்கொண்டே பெரிய டெய்ரி மில்க் பார் ஒன்றை ஆட்டிக்காட்ட, அடுத்த நொடி தாவி அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள் அஞ்சலி.

“அத்தையோட கூட்டணிக்கு டெபாஸிட் காலி” என்றவனை செல்லமாக முறைத்துக்கொண்டே அவள் வீட்டிற்குள் செல்ல, அவளைத் தொடர்ந்து அவனும் சென்றான்.

அவனை வரவேற்று உபசரித்த வைதேகி, மயூரியை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

“இவங்க மயூரி! சென்னைல எங்க வீட்டுக்கு எதிர் வீட்ல இருந்தாங்க” என அவளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் போதே மயூரியின் கணவன் சைலேஷ், வீட்டிற்கு வந்தான்.

“வாங்கண்ணா!” என்ற திவ்யா அவனை, ஸ்ரீராமிற்கு அறிமுகப்படுத்தினாள்.

ஆண்கள் இருவரும் கைகுலுக்கிக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“எனக்கு உங்க முகம் ஃபெமிலியரா இருக்கு. ஆனா, எப்படித் தெரியும்னு சரியா நினைவு இல்ல” என்றான் ஸ்ரீராம்.

மனைவியைப் பார்த்துச் சிரித்த சைலேஷ், “நான் சொல்லல மயூ” என்றவன், “இதைத் தான் சார் நான் உங்க போட்டோ பார்த்ததுல இருந்து சொல்லிட்டிருக்கேன்” என்றான்.

“நீங்க எங்கே ஒர்க் பண்றீங்க?” எனக் கேட்டான் ஸ்ரீராம்.

“ஷேர் மார்க்கெட் கண்சல்டண்ட்டா இருக்கேன்” என்றான் சைலேஷ்.

சட்டென நினைவிற்கு வர, “எஸ். என் சிஸ்டரோட கல்யாண ரிசப்ஷன்ல இண்ட்ரடியூஸ் ஆனோம். எங்க மாப்பிள்ளை கௌரி இண்டஸ்ட்ர்ரீஸோட எம்.டி மிஸ்டர். பிரபு” என்றான்.

“ஆஹ்! ஆமாம். பிரபுவோட ஷேர்மார்க்கெட் டீலிங்க்ஸ் நாங்கதானே பார்த்துக்கறோம்” என்றான் சிரிப்புடன்.

“அப்பவே, நம்ம உறவு தொட்டுத் தொடர்ந்துட்டு இருக்கு” என்றாள் மயூரி.

அதன்பிறகு, அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, மயூரி திவ்யாவைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“திவி மெடிக்கல் ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்கும்போது தான் எங்க கல்யாணம் நடந்தது. வைதேகி அக்காதான் எனக்கு ஓரளவு பழக்கம். அவ போறதும் தெரியாது வர்றதும் தெரியாது” என்றாள் பெருமையாக.

“ஓஹ்! இன்விசிபிள் கேர்ள்லா நீ!” என்று அவன் சமயம் தெரியாமல் கலாய்க்க, திவ்யா அவனை முறைத்தாள்.

“ராம்! கலாய்க்கறேன்னு என் காதுல இரத்தம் வர வச்சிடாதீங்க. ப்ளீஸ்! என்னால தாங்க முடியாது” என்று அழுவதைப் போலச் சொன்னாள்.

“சரி விடு. உனக்குக் கொடுத்துவச்சது அவ்வளவுதான்” என்றவன் சைலேஷிடம் பேச ஆரம்பித்தான்.

சமையலறைக்குச் சென்ற மயூரி, “அக்கா! சும்மா சொல்லக்கூடாது உங்க மாப்பிள்ளை தங்கம்னா தங்கம்தான். நம்ம திவி ரொம்பச் சந்தோஷமா இருப்பா” என்றாள் நிறைவாக.

மலர்ந்த முகத்துடன், “அவங்க வீட்ல எல்லோருமே அப்படித்தான் மயூரி! ரொம்ப அட்ஜஸ்டபிள்” என்றார்.

“ம், இவரோட சிஸ்டர் சஹானாவையே நான் ரெண்டு மூணு முறை மீட் பண்ணியிருக்கேன். ரொம்பப் பொறுப்பான பொண்ணு. அவளோட அண்ணன் மட்டும் எப்படியிருப்பார்? நீங்க பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் இருக்குக்கா” என்றவளை கண்கலங்க பார்த்தார் வைதேகி.

இரவு உணவிற்குப் பிறகு, அவசியம் வீட்டிற்கு வரவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்துவிட்டுக் கிளம்பினான் ஸ்ரீராம்.

நாசூக்காக அனைவரும் வீட்டிலேயே இருக்க, திவ்யா அவனுடன் சென்றாள்.

வராண்டாவில் நின்று அவன் ஷுவை மாட்டிக்கொண்டிருக்க, “ரொம்பத் தேங்க்ஸ்” என்றாள்.

“எதுக்கு?” என்றான்.

“நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு” என்றாள் சிரிப்புடன்.

நிமிர்ந்து நின்றவன், “நிச்சயதார்த்தம் முடிஞ்சி பத்து நாள் ஆகுது. உன்னைப் பார்க்க ஏதாவது சாக்கு கிடைக்காதான்னு நினைச்சிட்டே இருந்தேன். நீயே கூப்பிட்டுட்ட…” என்றவனை விழியகல பார்த்தாள்.

“ம், கெத்தா இல்லாம, உண்மையை ஒத்துகிட்டதுக்கு இன்னொரு தேங்க்ஸ்” என்றாள்.

முறுவலித்தவன், “ஈலோகத்தில் யோக்கியன் ஒருவன் உண்டெங்கில், அது ஈ தென்காசி ஸ்ரீராமாக்கும்” என்றவனைப் பார்த்துச் சப்தம் வராமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

“போங்க ராம்! எப்போ பாரு காமெடி பண்ணிட்டு” எனச் சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்.

“நான் யோக்கியன்னு சொல்றது, உனக்குக் காமெடியா இருக்கா!” என்றபடி அவளை இழுத்து அணைத்தான்.

“ராம்! கையை எடுங்க. யாராவது வரப்போறாங்க” என்று மென்குரலில் சிணுங்கினாள்.

“நிச்சயமான நாள்லயிருந்து நீயும் இதையே தான் சொல்ற. நான் எங்கேயாவது கேட்கறேனா! அப்புறம் எதுக்கு இந்த டயலாக் வேஸ்டா. இனி, இதை ட்ரை பண்ணாத” என்றவன் அவளது இதழ்களை நோக்கி முன்னேறினான்.

குழந்தையும், சைலேஷும் வைதேகியின் அறையில் உறங்கிவிட, வைதேகி திவ்யாவின் அறையில் படுத்துக்கொண்டிருந்தார்.

ஹாலில் அமர்ந்திருந்த திவ்யாவும், மயூரியும் மென்குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.

“வழியணுப்ப போன ஆளு ரொம்ப நேரமா காணோமே… பேசிட்டு இருந்தியா திவி!” என்று கிண்டலாகக் கேட்ட மயூரியை போலியாக முறைத்தாள்.

“அண்ணி! வேணாம். அப்புறம் உங்க லவ் ஸ்டோரியைக் கிளறவேண்டியிருக்கும்” என்று போலியாக மிரட்டினாள்.

”சரிசரி வேணாம்…” என்ற மயூரி சற்று நேரம் அவளது வேலையைப் பற்றி விசாரித்தாள்.

அவளது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன திவ்யா, “ஓகே அண்ணி! நீங்க படுங்க. நாளைக்குக் காலைல பேசலாம்” என்றாள்.

“திவி!” என்றவள் தயக்கத்துடன், “உனக்குக் கல்யாணம் நிச்சயமான விஷயத்தை உன் அப்பாவுக்குச் சொல்லலையா? நீதான் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டியாம். அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க” என்றாள் மயூரி.

“அண்ணி! நல்ல நேரத்துல எதுக்கு அந்த ஆளை நினைவுபடுத்தறீங்க? இந்த அம்மாவுக்கு எவ்வளவுதான் பட்டாலும் தெரியாது. கட்டின பொண்டாட்டியை சக மனுஷியா மதிக்கத் தெரியாத, பெத்தப் பொண்ணுன்னு பாசம் காட்டத் தெரியாத மனுஷனுக்கு இதைச் சொன்னா மட்டும் பாசம் பொங்கிடவா போகுது” என்றாள் கோபத்துடன்.

”அதில்லடா என்னைக்கிருந்தாலும், அப்பான்னு ஒருத்தர் சபைல இருந்து கல்யாணம் செய்து கொடுக்கிற மாதிரி வருமா சொல்லு. அப்பா யாருன்னு தெரியாம பெத்தவளோட அன்பு இல்லாம வளர்றது எவ்வளவு பெரிய கொடுமைன்னு எனக்குத் தெரியும் திவி. நமக்காகன்னு இல்லன்னாலும், இந்தச் சமூகத்துக்காக சிலதை நாம ஏத்துக்கத்தான் வேணும்” என்றாள்.

“சமூகமும், சமுதாயமும் அன்னைக்கு எங்கம்மா கஷ்டப்படும் போது வந்து தங்கலையே. வேடிக்கைதானே பார்த்துச்சு. இதையும் அப்படியே பார்த்துட்டுப் போகட்டும். சமூகத்துக்காக நாம இல்ல அண்ணி! நமக்காகத்தான் இந்தச் சமூகம். உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்ல. விஷயம் வேணா வேறயாக இருக்கலாம். ஆனா, நாம ரெண்டு பேரும் ஒரே இனம் தான்” என்றாள் அழுத்தமாக.

மயூரி அவளைப் பரிவுடன் பார்த்தாள்.

“எனக்காக யோசிக்கன்னு நீங்கள்லாம் இருக்கீங்க. உங்களோட ஆசீர்வாதமெல்லாம் போதும். நாங்க நல்லா இருப்போம். என்னால மனசுல ஒண்ணை வச்சிகிட்டு, வெளியே சிரிச்சிப் பேசி நடிக்க முடியாது. போதும் அண்ணி! நேரமாச்சு தூங்கலாம். காலைல நான் டியூட்டிக்குப் போகணும்” என்றவள் நிமிர்ந்த நடையுடன் அறைக்குச் செல்ல, மயூரி மென்மையாகப் புன்னகைத்துக்கொண்டாள்.

காதல் வளரும்...
 
Last edited:
  • Like
Reactions: lakshmi and saru
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!