Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
148
493
63
758

அத்தியாயம் - 23​

தனது முழு கோபத்தையும் ஸ்கூட்டியின் பிரேக்கில் காண்பிக்க, கீறிச்சிட்டு சப்தத்துடன் நின்றது வாகனம்.

ஹாலில் அமர்ந்திருந்த கௌரியம்மா என்னவென்று புரியாமல் வாசலைப் பார்த்தார். வந்த வேகத்திற்கு செருப்பைக் கழட்டி எறிந்துவிட்டு, தனது அறையை நோக்கி நடந்தாள் தேவி.

“தேவி! நில்லு… என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படிச் செருப்பை உருவி எறிஞ்சிட்டு வர?” அதட்டலுடன் கேட்டார் கௌரி.

“என்னம்மா! வரவர நீயும் அண்ணி மாதிரி குடைஞ்சி குடைஞ்சி கேள்வி கேட்கற?” சுள்ளென்று பேசியவள் பூஜையறையிலிருந்து வெளியே வந்த சஹானாவைப் பார்த்ததும், சங்கடத்துடன் உதட்டை அழுந்த கடித்தாள்.

“ஏய்! கேட்கறதுக்குப் பதில் சொல்லாம, உங்க அண்ணியை எதுக்கு இதுல இழுக்கற? வரவர வாய் அதிகமாத்தான் போய்ட்டிருக்கு உனக்கு” சற்று கோபத்துடனேயே சொன்னார் கௌரி.

என்ன நினைத்தாளோ!

“சாரிம்மா!” என்றவள் கலங்கிய விழிகளுடன் அறையை நோக்கி நடந்தாள்.

கௌரி புரியாமல் சஹானாவைப் பார்க்க, “காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ்கூட ஏதாவது பிரச்சனையா இருக்கும் அத்தை! நான் கேட்கறேன்” என்றவள் அங்கிருந்து சென்றாள்.

உடையைக் கூட மாற்றாமல் ஏசியை முழு குளிர்ச்சியில் வைத்தவள் கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். தமிழ்ச் செல்வனை நினைக்க நினைக்க அவளுக்குக் கோபமாக வந்தது.

‘இவனெல்லாம் ஒரு போலீஸ் ஆஃபீஸர். ரோட் சைட் ரோமியோ மாதிரி நடந்துக்கறான். அதுக்கு மேல கேட்டா… ஐ நோ மை ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ் அண்ட் டியூட்டின்னு பெரிய இவன் மாதிரி பேசறான்.

சரியான…. நல்லா சென்னைத் தமிழ்ல திட்டணும் போலயிருக்கு. சை! என்னை இப்படிப் புலம்ப வச்சிட்டானே! எல்லாம் அந்த ரியா குரங்கால வந்தது. அன்னைக்கு வாயை மூடிகிட்டு இருந்திருந்தா, இன்னைக்கு நான் இந்தப் பாடுபடவேண்டி இருந்திருக்காது. எல்லாம் என் தலையெழுத்து’ மனத்திற்குள் புலம்பினாள்.

கல்லூரி முடிந்ததும், தனியாக அமர்ந்து தனது கற்பனையில் உதித்த ஆடையின் வடிவமைப்பை காகிதத்தில் ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தாள்.

அந்தநேரத்தில் அவளது மொபைல் ஒலித்தது. அந்த எண்ணைப் பார்த்ததுமே அவளுக்குச் சர்வமும் நடுங்கியது. நேற்றிலிருந்து இத்துடன் மூன்றாவது முறையாக அவளுக்கு இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்துவிட்டது.

முதன்முறை அந்த எண்ணிலிருந்து அழைப்பும் வந்ததும், புதிய எண் என்று எடுக்காமல் தான் இருந்தாள். ஆனாலும், விடாமல் ஆறேழு ஒலிக்கவும், ‘ஒருவேளை தனக்குத் தெரிந்த யாரேனும், அந்த எண்ணிலிருந்து முயற்சிக்கிறார்களோ’ என்று எண்ணிப் போனை எடுத்தாள்.

ஆனால், பேசியவனோ தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமல், நேரடியாக அவளது உடையின் நேர்த்தியையும், அது அவளுக்குப் பாந்தமாகப் பொருந்தி இருப்பதையும் சொன்னவன், அதற்குமேல் உச்சரிக்க இயலாத வார்த்தைகளைப் பேச, அவள் கூனிக் குறுகிப் போனாள்.

சட்டென போனை அணைத்தவள், சுற்றும் முற்றும் பார்த்தாள்.

பேசியவன், இதே கல்லூரிக்குள் தான் இருக்கிறான். எங்கிருந்தோ தன்னைக் கண்காணிக்கிறான் என்று புரிந்து கொண்டவள், வேகமாகக் கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டாள்.

மறுநாளும் அதே எண்ணிலிருந்து அழைப்புவர, பயத்துடன் போனை அணைத்து வைத்தாள். நண்பர்கள் அருகில் வந்து இயல்பாகப் பேசுவதையும் சந்தேகக் கண்ணோடு தான் அவளால் பார்க்க முடிந்தது.

வீட்டில் சொல்லிவிடலாமென்ற எண்ணம் வந்த வேகத்திலேயே மறைந்து, தமிழ்ச் செல்வனின் நினைவு வந்தது அவளுக்கு. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அவனது செல் நம்பரை தேடிக் கண்டுபிடித்து, அவனுக்கு அழைத்தாள்.

“ஹேய்! நீயா எனக்குக் கால் பண்ற? ஆச்சரியம் தான் போ. ஊரிலிருந்து வந்து பத்து நாள் ஆகியும் நான் உன்கூட பேசலைன்னு, நீயே என் ஆஃபிஸ் நம்பருக்குப் போன் பண்ணிட்டியே. தேங்க்யூ!” என்று மெச்சுதலும், காதலுமாகச் சொன்னான்.

“அது… இல்லங்க சார்! வந்து…” ஏற்கெனவேயிருந்த அச்சமும், அவன் பேசிய விதத்தில் எழுந்த பதட்டத்தாலும், திக்கித் திணறினாள்.

“சாரா? உன்னைத் தமிழ்ன்னு தானே கூப்பிட சொன்னேன். சார்ங்கறது பிரிட்டீஷ்காரன் நாம அவனுக்கு அடிமைங்கறதை எப்பவும் நினைவு வச்சிக்கறத்துக்காகவே உண்டாக்கின வார்த்தை. புரிஞ்சிதா. கால் மீ தமிழ்!” என்றான்.

தேவிக்குத் தலையிலடித்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது. அவனை அழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதை நினைத்துத் தன்னையே நொந்துகொண்டாள்.

அவளது அமைதியைக் கண்டவன், “உனக்குப் பேர் சொல்லிக் கூப்பிட தயக்கமாயிருந்தா அத்தான், மாமான்னு எத்தனையோ வார்த்தைகள் இருக்கு. அதை யூஸ் பண்ணிக்க” என்றான் சிரிப்புடன்.

இந்தமுறை அவள் எதையும் நினைக்கவில்லை. கையிலிருந்த செல்போனால் நங்கென்று மண்டையில் அடித்துக்கொண்டவள் வலிதாங்காமல், “அப்பா! என்று முனகினாள்.

”ஹேய்! அத்தான்னு கூப்பிடச் சொன்னா, அப்பான்னு கூப்பிடுற. இது உனக்கே அதிகமா தெரியல” என்றான்.

“ஐயோ! என்னால தாங்க முடியல. ஏன் இப்படி என் கழுத்தை மொக்கைக் கத்தியால அறுக்கறீங்க?” விட்டால் அழுதுவிடுபவள் போலப் பேசினாள்.

“ஓகே… ஓகே… சும்மா உன்கிட்ட கொஞ்சம் ரிலாக்ஸா பேசலாம்னு நினைச்சேன். அதை மொக்கைன்னு சொல்லி, என்னை அசடு வழிய வச்சிட்ட. சரி சொல்லு. இந்த நேரத்தில் எதுக்குப் போன் பண்ண?”

“உங்களை நேர்ல பார்த்துப் பேசணும். ரொம்ப முக்கியமான விஷயம்” என்றாள்.

“நீ என்னை நேர்ல பார்க்கணும்னு சொல்றதே முக்கியமான விஷயம்தான். அதை இவ்வளவு லேட்டா சொல்ற. சரி, எங்கே மீட் பண்ணலாம்? முதன்முதல்ல கோயிலுக்குப் போகணும்னு ஏதாவது சென்டிமெண்ட்ஸ் வச்சிருக்கியா?” எனக் கேட்டான்.

“இல்ல இல்ல இல்ல…” என்று அலறியவள், “நீங்க உண்மையாவே அசிஸ்டண்ட் கமிஷனர் தானா? இப்படிப் பேசறீங்க” என்று தனது மனத்திலிருந்ததைக் கேட்டே விட்டாள்.

“கஷ்டப்பட்டு படிச்சி, ரெண்டே கால் வருஷம் ட்ரெயிண்ட் ஆகி மெரிட்ல வந்த ஆஃபிஸரை இப்படி ஒரு கேள்வி கேட்கற. ம்ஹும்!” என்று போலியாகப் பெருமூச்சு விட்டான்.

அவனது பதில் அவளுக்குச் சற்று சங்கடத்தைக் கொடுக்க, “சாரி! இப்படிப் பொறுப்பான பதவில இருந்துட்டு விளையாட்டுத்தனமா பேசறீங்களே… அதுக்குத்தான் கேட்டேன்” என்றாள்.
“ஐ நோ மை ரெஸ்பான்ஸிபிளிட்டீஸ், அண்ட் டியூட்டீஸ். பொறுப்பான பதவியில் இருந்தாலும், நானும் மனுஷன்தானே!” என்றான்.

அவளுக்கு என்ன தோன்றியதோ… சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

ஹும் என்று சீறலாக மூச்சுவிட்டவன், “உரிமையுள்ள பொண்ணாச்சேன்னு அப்படிப் பேசினேன். சரி சொல்லு, எதுக்காக எனக்குப் போன் பண்ண? ஏதாவது முக்கியமான விஷயமா?” எனக் கேட்டான்.

“ஆமாம்” என்றாள்.

“சரி நீ எங்கே இருக்கேன்னு சொல்லு. நான் கிளம்பி வரேன்” என்றவன் அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

தயக்கத்துடன் அவனிடம் நடந்த அனைத்தையும் சொன்னாள்.

“ஓ!” என்றவனது ஒற்றை வார்த்தையிலேயே ஒரு விறைப்புத்தன்மை தெரிய, அத்தனை நேரமிருந்த விளையாட்டுத்தனமெல்லாம் மறைந்து, நிலைமையின் தீவிரம் உணர்ந்தவனாக மாறிப் போனான்.

அவளுக்கு வந்த அழைப்பின் எண்ணை வாங்கித் தன்னுடைய மொபைலில் அழைத்தான். ஆனால், அது ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. அவளிடம் சில கேள்விகளைக் கேட்டவன், “அடுத்தமுறை போன் வந்தா எடுத்து தைரியமா பேசு. முடிச்சதும் எனக்கு உடனே, கால் பண்ணு. இது என்னுடைய பர்சனல் நம்பர்” என்றவன், அவளிடமிருந்த மொபைலை வாங்கி அவனே தன்னுடைய எண்ணை பதிந்தும் கொடுத்தான்.

திரும்ப வந்தால் பேசறதா என்ற பயத்துடனேயே சரியென்பது போலத் தலையை உருட்டினாள்.

“அதையே நினைச்சிட்டு இருக்காத. இந்த விஷயம் முடியட்டும்… மத்ததை எதையும் யோசிக்காதே. உன் ஃப்ரெண்ட்ஸ் யாருக்காவது இதேபோல போன் வருதான்னு விசாரி. பயத்தாலேயும், வெளியே சொன்னா தப்பா நினைப்பாங்களோன்னு சொல்லாமல் இருக்கலாம். அப்படி ஏதாவதுன்னா உடனே எனக்கும் தெரியப்படுத்து. என்கிட்ட சொல்லிட்ட இல்ல நான் பார்த்துக்கறேன். நீ படிப்பில் கவனத்தை வை” என்றான்.

சிறு தலை உருட்டலுடன் முறுவலித்தவள், “ரொம்ப தேங்க்ஸ்!” என்றாள்.

“இது என்னுடைய கடமை. பெர்சனல் கடமை, அது தனி. தைரியமா நீ இதைச் சொன்ன பாரு. அதுக்காகவே உன்னை அப்ரிஷியேட் பண்றேன். கிளம்பு” என்று அவனும் மென்சிரிப்புடன் சொன்னான்.

கல்லூரிக்கு வந்து விசாரித்ததில், மேலும் சிலருக்கு இப்படித் தொடர்ந்து போன் கால்கள் வருவதும், அனைவருக்குமே ஒரே எண்ணிலிருந்து போன் வருவதில்லை என்றும் தெரிய, அதை உடனே அவனுக்குத் தெரிவித்தாள்.

அதன்பின் ஒரே நாள் தான். மீண்டும் அவளுக்குப் போன் வர, ரியாவின் போனிலிருந்து தமிழ்ச் செல்வனுக்கு அழைத்தாள்.

அவன் உடனடியாக தேவியுடன் பேசிக்கொண்டிருப்பவனின் எண்ணையும், அவன் எங்கிருந்து பேசுகிறான் என்றும் கண்டுபிடித்துவிட, தயாராக இருந்த தன்னுடைய டீமுடன் அவளது கல்லூரி முடியும் நேரத்திற்கு விரைந்தான்.

அனைவருமே சீருடை அணிந்திராததால் மாணவ, மாணவியருக்குப் பெரிதாக எந்தச் சந்தேகமும் வரவில்லை. கல்லூரி முதல்வரிடம் விஷயத்தைச் சொல்லி, அங்கு பணிபுரியும் அனைவரையும், முக்கியமான மீட்டிங் என்று ஆடிடோரியத்தில் ஒன்று திரட்டினர்.

பொதுவாகவே கல்லூரி நேரத்தில் மாணவர்கள் மட்டும் அல்ல, பேராசிரியர்களும் தங்களது மொபைலை அணைத்து வைத்திருக்க வேண்டும் என்ற சட்டமே இருந்ததால், போலீசாரின் கவனம் முழுவதும் கல்லூரி அலுவலக ஊழியர்கள் மீது தான் முதலில் விழுந்தது.

அதைச் சற்றும் பொய்யாக்காமல், அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே இதற்குக் காரணமானவன் மாட்டிக் கொண்டான். கல்லூரி முடிந்து ஏறக்குறைய அனைத்து மாணவ, மாணவிகளும் புறப்பட்டுச் சென்றிருந்ததால்… பெரிதாக விஷயம் வெளியே பரவாமல் போனது.

ஆனால், அன்று இரவு செய்திகள் அனைத்திலும் கல்லூரி, மற்றும் மாணவிகளின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் அந்தச் செய்தி ஒளிபரப்பானது.

பிரபலமான கல்லூரி ஒன்றில், பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவரின் வக்கிரமான எண்ணங்களால், அங்கு படிக்கும் சில மாணவிகள் தங்களது மன அமைதியை இழந்து ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், அதில் துணிச்சலுடன் ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு கண்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

குற்றவாளியைக் கைது செய்த அதிகாரி என்ற முறையில், தமிழ்ச் செல்வனின் பேட்டியும் ஒளிபரப்பானது.

“இது போல் தங்களுக்கு நேரும் வன்கொடுமைகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்கும் துணிவு பெண்களுக்கு வரவேண்டும். அட்லீஸ்ட், காவல்துறைக்காவது தகவல் கொடுக்கப்பட வேண்டும். பயமும், இதனால் நம்மை தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டு, எதிர்த்துப் போராட பெண்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தன்னை மட்டும் அல்ல… அடுத்தவருக்கும் இது நேராமல் காப்பாற்ற முடியும். அதற்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்” என்று பேசினான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கௌரி சற்று கலவரமாகியிருந்தார்.

அதுவரை விஷயத்தை வீட்டில் சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த தேவி, அன்னையின் முகம் போன போக்கையும், பயத்துடன் அவர் பேசியதையும் கேட்டவள் இதைச் சொல்லப் போவதில்லை என்று திடமாக முடிவெடுத்துக் கொண்டாள்.

‘இதற்கெல்லாம் காரணம் தமிழ்ச்செல்வன்! அவன் மட்டும் இல்லாவிட்டால், நிலைமை நிச்சயம் கைமீறி போயிருக்கும். வாய் அதிகம் இருந்தாலும், ஆளு செம ஷார்ப்’ என்று நினைத்தவள் மெல்லப் புன்னகைத்துக் கொண்டாள்.

அவனைப் போனில் அழைத்து நன்றி சொல்லவேண்டும் என்று எண்ணியவள் மணி பதினொன்றைத் தாண்டிவிட்டதை உணர்ந்து விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள்.

மறுநாளும் அவனுக்கு அழைத்தபோது அவன் போனை எடுக்கவில்லை என்றதும், வேலையாக இருப்பானாயிருக்கும் என எண்ணி விட்டுவிட்டாள். கல்லூரி முடிந்து வெளியில் வந்தவள், அங்கே காரின் மீது சாய்ந்து நின்றிருந்த தமிழ்ச் செல்வனைக் கண்டதும் புன்னகையுடன் அவனை நோக்கிச் சென்றாள்.

‘இப்போதைக்குத் திருமணமே வேண்டாம்’ என்றிருப்பவளது மனத்தை, அவன் முழுவதுமாக ஈர்க்கவில்லை. என்றாலும், உதவி செய்தவன் என்ற எண்ணத்தில் மட்டுமே அவனிடம் பேசச் சென்றாள்.

“ஹாய்!” என்று அவனிடம் புன்னகைத்தாள்.

“ஹாய்!” என்றவன், “ஸ்கூட்டியை அந்தப் பார்க்கிங்கில் விட்டுட்டு, வந்து கார்ல ஏறு” என்றான்.

“என்னது?”

“புரியாத பாஷைலயா சொல்றேன்! சீக்கிரம் வா நேரமாகுது” என்றான்.

“நான் எதுக்கு வரணும்?” என்று கோபத்துடன் கேட்டாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றான்.

“சேச்சே அதெல்லாம் இல்ல…” அவசரமாக மறுத்தவளுக்கு பிறகுதான், ‘ஏன் மறுத்தோம்?’ என்று தோன்றியது.

அவன் தனது பதிலுக்காகக் காத்திருப்பது புரிய, “அது வீட்ல தேடுவாங்க” என்றாள்.

“இது உனக்கே ஓவரா இல்ல…” என்றவன் சிரிக்க, அவளுக்கு வெட்கமாகிவிட்டது.

“அது பழைய கதை. இப்போலாம் நான் காலேஜ் விட்டதும் முடிஞ்ச வரைக்கும் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போயிடுறேன்” என்றாள்.

“மணி மூணுதான் ஆகுது. ஏழு மணிக்கெல்லாம் நீ வீட்ல இருக்கலாம். ஓகேவா?” என்றான்.

வேறு வழியில்லாமல், “ம்” என்றாள்.

‘நாம ஏன் இப்படி மாறிட்டோம்? உன்கூட வரமுடியாதுன்னு சொல்லிட்டுக் கிளம்பியிருந்தால், அவனால் என்ன செய்திருக்க முடியும்? இங்கேயே காரை நிறுத்தச் சொல்லி இறங்கிடலாமா?’ மனத்திற்குள் பல கேள்விகள் சிறகை விரிக்க ஆரம்பித்தன.

“என்ன பலமான யோசனை?” என்றான்.
“ஆஹ்… அது… கார் உங்களோடதா? என்றாள்.

“ஆமாம்னு சொன்னா, லவ் பண்ணுவியா?” என்றான் கிண்டலாக.

அவனை முறைத்தவள், “அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்” என்றாள்.

“எனக்குத்தான் ரொம்பத் தேவையான விஷயம்” என்றான் அதே வேகத்துடன்.

எரிச்சலுடன் வாயை மூடிக் கொண்டாள்.

இருபது நிமிடப் பயணத்திற்குப் பின், கார் ஒரு அப்பார்ட்மெண்டின் முன்பாக நின்றது.

“இறங்கு!” என்றான்.

“எங்கே வந்திருக்கோம்?” என்று கேட்டாள்.
“உனக்கு, ஒரு சின்ன ட்ரீட் கொடுக்கலாம்னு கூட்டிட்டு வந்திருக்கேன்.”

“அதுக்கு ஹோட்டலுக்குத் தானே போகணும்?”

“எங்கம்மாவோட சமையலைச் சாப்பிட்டுப் பார். அப்புறம் சொல்லு” என்றான்.

“அச்சச்சோ! உங்க வீடா? நான் வரமாட்டேன்” என்று காரிலிருந்து இறங்காமலேயே அமர்ந்திருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த பக்கமாக வந்து கதவைத் திறந்தவன், “நீயா இறங்கி வரலன்னா, உன்னைத் தூக்கிட்டுப் போக நான் தயார். என்ன சொல்ற?” என்றான்.

அவனது கண்களில் இருந்த தீர்மானத்தைக் கண்டுகொண்டவள், “வேணாம் வேணாம். நானே வரேன்” என்றபடி முகத்தைச் சுளித்துக் கொண்டே இறங்கினாள்.

சிரிப்புடன், “ம், வா!” என்று மூன்றாவது மாடியிலிருந்த தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
“இவங்க தான் என் அம்மா, அப்பா…” என்று அவளுக்கு அறிமுகப்படுத்த, முயன்று சிரித்தவள், “வணக்கம்” என்றாள்.

“நான் சொன்னேன் இல்ல தேவி. நம்ம சஹியோட நாத்தனார். உங்க வருங்கால மருமகள்” என்றான் பெற்றோரிடம்.

“தெரியுமே! வர்ஷாவோட வளைகாப்புல பார்த்திருக்கேனே. நீ கூட்டிட்டு வரேன்னு சொல்லும் போதே இப்படி ஏதாவது இருக்கும்னு நினைச்சேன்” வாய் நிறைய சிரிப்புடன் சொன்னார் அவனது அன்னை.

இதை எப்படி மறுப்பது எனத் தெரியாமல் அவள் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்க, “உள்ளே வாம்மா!” என்று அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

“அப்பா! உங்க மருமகளைக் காட்டிட்டேன். இனி, எப்போடா கல்யாணம் செய்துக்கறேன்னு என்னைப் போட்டுப் படுத்தாதீங்க. உங்க கேள்வியை இனிமே இவள்கிட்டயே கேட்டுக்கோங்க” என்றான்.

“கண்ணுக்கு இலட்சணமா மருமகளைக் கொண்டு வந்துட்ட. சஹியோட நாத்தனார் வேற. இதுக்குமேல என்ன வேணும்?” என்ற அவனது அன்னை, அவளது குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்.

பல்லைக் கடித்துக் கொண்டு அவர்கள் கேட்டவற்றிற்கு மட்டும் பதிலளித்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், “நான் கிளம்பறேன் ஆன்ட்டி! வீட்ல சொல்லாம வந்துட்டேன்” என எழுந்தாள்.

“இரும்மா. நீ வரேன்னு உன் அத்தை என்னென்னவோ செய்து வச்சிருக்கா. நீ கிளம்பறியே? தமிழே உன்னை வீட்ல விட்ருவான்மா” என்றார் அவனது தந்தை.

“இல்ல அங்கிள்” என்று அவள் ஆரம்பிக்க, “நீங்க கொண்டு வாங்கம்மா! அவள் சாப்டுட்டே கிளம்புவா” என்று இடைமறித்தான் தமிழ்.

“இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பிடலாம்மா” என்றபடி சமையலறைக்குச் சென்றார் அவனது அன்னை.

கடமைக்காக அவர்கள் கொடுத்ததை உண்டு முடித்தவள், பையைத் தூக்கிகொண்டு எழுந்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி! நான் கிளம்பறேன். வரேன் அங்கிள்!” என்று பெரியவர்களிடம் விடைபெற்றாள்.

“விட்டுட்டு வந்திடுறேன்ம்மா!” என்றபடி அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

அவளது ஸ்கூட்டியை நிறுத்தி வைத்த இடம் வரும் வரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை.

காரை நிறுத்தியவன், “உன்னைக் கூட்டிட்டுப் போன மரியாதைக்காவது என் பேரண்ட்ஸ்கிட்ட கொஞ்சம் சிரிச்சி பேசியிருக்கலாம்” என்றான் எரிச்சலுடன்.

அவளுக்கும் சுள்ளென கோபம் வந்தது.

“நான் ஒண்ணும் உங்கக்கூட வரேன்னு சொல்லல. எங்கே போறோம்னு சொல்லாமலேயே கூட்டிட்டுப் போனா என்ன அர்த்தம்? அதோட, நான் எப்போ சொன்னேன் உங்களைக் காதலிக்கிறேன்னு. எனக்கு ஹெல்ப் பண்ணீங்க. அண்ணிக்குத் தெரிஞ்சவங்கங்கறதால தான் உங்ககிட்ட பேசினேன். மத்தபடி இதுவரைக்கும் உங்கமேல எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்ல…” என்றவள் வேகமாக இறங்கினாள்.

கோபத்துடன் ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு செல்பவளை, குறுஞ்சிரிப்புடன் பார்த்தான்.

‘கொழுப்புடி உனக்கு. வேணாம் வேணாம்னு சொல்லவேண்டியது. அப்புறம் ஓரக்கண்ணால திருட்டுப் பார்வை பார்க்கறது. சரியான திருட்டுக்கோட்டு’ என்று அவளைச் செல்லம் கொஞ்சிகொண்டான்.

ஓங்கி ஒலித்த மொபைலின் சப்தத்தில் தனது நினைவுகளைக் களைந்து நிகழ்வுக்கு வந்தவள், போனை எடுத்தாள். தமிழ்தான் அழைக்கிறான் என்று தெரிந்ததும், அழைப்பை எடுத்தாள்.

“வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துட்டியா?”

“ம்” ஒற்றை எழுத்து பதில்தான் அவனுக்கு.

“சரி வைக்கிறேன். இனிமேல், இப்படி வேகமா ஸ்கூட்டி ஓட்டாதே. உனக்கு அவ்வளவு கோபம் இருந்ததுக்கு இன்னும் ரெண்டு திட்டு சேர்த்து திட்டிட்டுப் போயிருக்கலாம்” என்றான்.

அவன் சொன்னதற்குச் சம்மந்தமே இல்லாமல், “தேங்க்ஸ்!” என்றாள் இறங்கிய குரலில்.

“எதுக்கு?” என்றான்.

“வீடு வரைக்கும் எனக்கு பாடிகார்ட் வேலைப் பார்த்ததுக்கு…” என்றவள் பட்டென போனை வைத்துவிட்டு எழுந்தவள், கதவருகில் நின்றிருந்த சஹானாவைப் பார்த்ததும் மலங்க மலங்க விழித்தாள்.

காதல் வளரும்...
 
  • Like
Reactions: saru and lakshmi
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!