Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் -24 | SudhaRaviNovels

அத்தியாயம் -24

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 24

நடப்பது எதையும் அறியாத மூவரும் தேவ்வை இதில் சிக்க வைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மகளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்நேரம் அவர்கள் இருந்த அறையின் கதவு தட்டப்பட, தினு சென்று திறக்கவும் பிம்லாவின் பிஎ டென்ஷனுடன் உள்ளே நுழைந்தான்.

“மேம்! தேவ் சார் ஷேர்ஹோல்டர்களை மீட் பண்ணி பேசிட்டு இருக்கார்” என்கிற குண்டைத் தூக்கிப் போட்டான்.

அதைக் கேட்டதும் அங்கிருந்த மூவருக்கும் அதிர்ச்சி. பிம்லா நாற்காலியை விட்டு எழுந்து கொண்டு “என்ன! என்னை கேட்காம எப்படி?” என்றார் அவனிடம்.

“நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார் மேம்” என்றான் பதட்டத்துடன்.

தினு அவசரமாக அங்கிருந்து செல்ல முயல “எங்கே போற தினு? இப்போ போகாதே! அங்கே போய் கலாட்டா எதுவும் செஞ்சா பிம்லாவுக்கு தான் கஷ்டம். அமைதியா இரு. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றார் நானாஜி.

“அவனுக்கு எதுக்கு இந்த வேலை பப்பா? பிம்லா பதில் சொல்ல வேண்டிய கேள்விக்கு இவன் என்ன சொல்லப் போறான்?” என்றான் எரிச்சலாக.

“அவனை நன்றாக கவனின்னு சொன்னப்ப அதை சரியா செய்யல நீ. அவன் எப்போதும் நீரஜுக்கு சப்போர்ட் செய்றவன். நீ உன் வேலையை சரியா செஞ்சிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது” என்றார் கோபமாக.

தந்தையிடம் பதில் சொல்ல முடியாமல் அடிப்பட்ட புலி போல அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். பிம்லாவோ ஏசி அறையிலும் வியர்க்க விறுவிறுக்க, மனதில் பல குழப்பங்களுடன் அமர்ந்திருந்தார்.

அவர்கள் அனைவரையும் டென்ஷனில் வைத்திருந்த தேவ் மீட்டிங்கை முடித்து விட்டு அவர்களுக்குள் டிஸ்கஸ் செய்ய டைம் கொடுத்துவிட்டு தங்கையைப் பார்க்க வந்தார். அவர் அறையினுள் நுழைந்ததுமே பாய்ந்து அவரின் சட்டையைப் பிடித்த தினுவை “என்னாச்சு தினு? என்ன டென்ஷன்?” என்றார் எந்தவித பதட்டமும் இல்லாமல்.

அவன் பதில் சொல்லாமல் சட்டையை அழுத்திப் பிடித்திருக்க பிம்லாவோ “நீ எதுக்கு அவர்களை மீட் பண்ணுனீங்க? அதுவும் என்னை கேட்காமல் எதுக்கு மீட்டிங் அரேஞ் செஞ்சீங்க?” என்றார் கோபமாக.

அதைக் கேட்டதும் தினுவின் கைகளை சட்டையிலிருந்து மெதுவாக எடுத்து விட்டவர் “இதுக்கா எல்லோரும் கோபமா இருக்கீங்க?” என்றவரின் பார்வை தந்தையின் மீது படிந்து விலகியது.

கூர்மையான பார்வையுடன் “எங்களை கேட்காம, கலந்துக்காம நீ மட்டும் எப்படி மீட்டிங்கை ஏற்பாடு செய்யலாம்?” என்றார் நானாஜி.

தந்தையின் முன் சென்று அமர்ந்தவர் “இத்தனை வருடம் உங்களோட இருக்கேன் பப்பா. ஒரு விஷயத்தை எப்படி ஹாண்டில் செய்யணும்னு கூடவா தெரியாது. அதுவும் பிம்லாவுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சனை. அவளே அந்த டென்ஷனில் இருக்கிறாள் அதனால தான் நானே இதை பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சேன்” என்றார்.

“பிஸ்னெஸ் பொறுத்தவரை யாரும் யாரையும் கேட்காம எதையும் செய்வது இல்லை தேவ். முக்கியமா என்னிடம் சொல்லாமல் எந்த முடிவுகளும் எடுப்பதில்லைன்னு உனக்கு தெரியாதா?’ என்றார் கத்திப் போன்ற குரலில்.

“நீங்க சொல்றது எல்லாம் சரி தான் பப்பா. ஆனா பிம்லா கஷ்டத்தில் இருக்காளே அவளுக்கு உதவனும்னு தான் இந்த முடிவு எடுத்தேன்” என்றார்.

அந்நேரம் மீண்டும் கதவு தட்டப்பட் பிஎ உள்ளே வந்தான். ஷேர்ஹோல்டர்கள் அனைவரையும் அழைப்பதாக கூறினான். நானாஜிக்கு எதுவோ சரியில்லை என்கிற எண்ணம் எழ தினுவை பார்த்தார். அவனுக்குமே அப்படித்தான் தோன்றியது. பிம்லாவோ அவர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்கிற சிந்தனையுடனே கிளம்பினார்.

அந்த சூழலே ஒருவித இறுக்கத்துடன் அமைய, அனைவரும் மீட்டிங் ஹாலிற்கு சென்றனர். அங்கு பிம்லா நடுநாயகமாக அமர, அவரின் ஒருபுறம் நானாஜி அமர்ந்து கொள்ள, மறுபுறம் தேவ் அமர்ந்தார். மற்றொரு நாற்காலியில் அமர்ந்து அனைவரின் முகத்திலும் தெரியும் உணர்வுகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் தினு.

அவர்கள் அனைவரையும் கண்டதும் அங்கு பேரமைதி சூழ்ந்தது. ஒரு சில நிமிடங்கள் யார் ஆரம்பிப்பது என்கிற யோசனையுடன் செல்ல, மூத்தவர் ஒருவர் மெல்ல ஆரம்பித்தார். நடந்தவற்றில் முழு தவறும் பிம்லாவின் மீது இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால் வரப் போகும் நஷ்டம் அனைத்தையும் அவர் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

மற்றவர்களும் அவரின் பேச்சிற்கு ஆதரவு தெரிவிக்க, பிம்லா அதிர்ந்து போனார். அவரின் கனவு ப்ராஜெக்ட் இது. பல கோடிகளை கொட்டும் என்று எதிர்பார்த்து ஆரம்பித்த ஒன்று. அதற்கு முன்னேற்பாடாக சில கோடிகளை செலவழித்து இருக்கிறார். மொத்த நஷ்டத்தையும் தானே ஏற்றால் தன்னுடைய இத்தனை வருட கையிருப்பும் குறையும் அபாயம் இருப்பதாக தோன்ற அவர்களின் முடிவை மறுத்தார்.

“இதை என்னால் ஏற்க முடியாது. இந்த பிஸ்னெஸ் மற்றும் கம்பனிகள் எல்லாமே சித்தார்த்திற்காக நான் பார்த்துக் கொள்வது. அவனுடைய சம்மதத்தின் பேரில் தான் இந்த ப்ராஜெக்ட்டில் என்னுடைய தலையீடு இருந்தது. அப்படி இருக்கும் போது நான் மட்டுமே இந்த தவறுக்கு எப்படி பொறுப்பேற்க முடியும்?”.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவரின் பேச்சைக் கேட்டு சற்றே ஆசுவாசம் அடைந்த நானாஜி மகளை கண்களாலேயே பாராட்டினார். மனதிற்குள் சபாஷ் என் மகள் என்பதை நிருபித்து விட்டாள்.

அங்கிருந்தவர்களுக்கு அவரின் பதிலில் பெரும் குழப்பம். சித்தார்த் அவரின் மகன். ஒரே குடும்பத்தில் நஷ்டத்தை தாய் ஏற்றால் என்ன மகன் ஏற்றால் என்ன என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்போது அந்த மூத்த ஷேர்ஹோல்டர் “மேம்! நீங்க சொல்வது எல்லாம் சரி. ஆனால் இந்த ப்ராஜெக்டை பொறுத்தவரை எல்லா இடத்திலும் நீங்கள் மட்டும் தான் பொறுப்பேற்று இருக்கீங்க. சோ சித்தார்த்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

“அப்படி சொல்ல முடியாது...” என்றவரை இடைமறித்த மற்றொருவர் “மேம்! சரியாக விசாரிக்காமல் இன்வெஸ்ட் செய்தது உங்கள் தவறு தான். அதோடு நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கிறோம்”.

நானாஜிக்கு பேச்சு போகும் பாதை புரிய “என்ன செய்யலாம்னு சொல்றீங்க?” என்றார்.

அதற்குள் ஒருவர் “சித்தார்த் எங்கே? அவர் ஏன் மீட்டிங்கிற்கு வரவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

அவர்கள் அந்நேரம் எதிர்பார்க்காத கேள்வி ஒரு நிமிடம் அனைவரும் அதிர்ந்து விழிக்க, முதலில் சுதாரித்துக் கொண்ட தினு “மாமாவுக்கு உடல்நலம் சரியில்லேன்னு போயிருக்கான்” என்று பதிலை கூறினான்.

இவை அனைத்தையும் தன்னுடைய நண்பனின் ரிசார்ட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் இதழ்களில் மெல்லிய புன்னகை. அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரியும் பதட்டம், டென்ஷன் அனைத்தும் அவனை ரசிக்க வைத்தது. மனமோ ‘எத்தனை பேரை இப்படி பயப்படுத்தி, வலியை உண்டாக்கி உங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருப்பீங்க. இப்போ உங்கள் நேரம் அனுபவிங்க’ என்று சொல்லிக் கொண்டு நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் மாளிகையில் தாதி கமிஷனருடன் பேச ஆபிஸ் அறைக்கு சென்றிருக்க, தான்யாவோ தோட்டத்திற்கு சென்றிருக்க, தனியாக அமர்ந்திருந்தவளின் முன்பு வந்தமர்ந்தாள் கேஷ்வி.

அவளை பார்த்ததும் சற்றே யோசனை எழ, அவளே பேசட்டும் என்று அமைதியாக அவள் முகத்தை பார்த்தாள் வர்ஷினி.

“ஐயாம் சாரி வர்ஷினி” என்றாள் எடுத்ததுமே.

மனமோ இது எதுக்கு என்று யோசித்தது.

“நீ சித்தார்த்தை காணாமல் வருத்தத்தில் இருப்பேன்னு தெரியும். இன்னைக்கு நான் உன்கிட்ட மனசு விட்டு பேசணும்னு வந்திருக்கேன்” என்றாள்.

அதற்கும் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக அவளது முகத்தை பார்த்தப்படி இருந்தாள் வர்ஷினி.

“என்னுடைய விருப்பம் இல்லாமல் தான் நடந்தது எனக்கும் சித்தார்துக்குமான கல்யாணம். ஒரு பிஸ்னெஸ் டீல் மாதிரி தான். கல்யாணத்துக்கு பிறகும் சித்தார்த் கிட்ட நான் சொல்லிட்டேன் நீ உன் வழியை பார்த்து இருன்னு” என்றவளை கண்களில் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷூ.

“எனக்கு என் தொழிலை நல்லா வளர்க்கணும் நான் இங்கே ஒரு மிகப் பெரிய தொழிலதிபரா வளரணும்னு என்பது தான் என் ஆசை. ஆனால் என்னோட அம்மா அப்பா தான் இந்த திருமணத்தின் மூலியமா எல்லாவற்றையும் குழி தோண்டி புதைச்சிட்டாங்க” என்றாள்.

“விருப்பம் இல்லேன்னா முடியாதுன்னு சொல்லி இருக்கலாமே?”

“எப்படி சொல்ல? நீ இந்த திருமணத்திற்கு ஒத்துக்கலேன்னா நாம எல்லோரும் நடுத்தெருவில் தான் நிற்கணும்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க. சித்தார்த்தின் நானாஜி இங்கே பிஸ்னெசில் ஒரு டான் மாதிரி. அவரை மீறி புதுசா யாரும் நுழைஞ்சிட முடியாது. அவர்களோடு ஒத்துப் போனால் இங்கே பொழைக்கலாம்”.

“ஒ..”

“அதனால என்னால மறுக்க முடியாத சூழ்நிலை. ஆனா சித்தார்த்துடன் ஒரே அறையில் இருக்க ஆரம்பித்த அந்த நொடி எல்லாவற்றையும் மீறி எனக்கு அவர் மேல ஒரு இண்ட்ரஸ்ட் வந்துடுச்சு. அதோடு அவரை என் கையில் வச்சுகிட்டா நானாஜியின் குடும்பத்தை ஆட்டி வைக்கலாம்னு யோசனை”.

அவள் அவன் மீதான ஈர்ப்பை சொன்னதும் முகம் சோர்வடைய “ம்ம்..” என்றாள்.

அவளது முகத்தை ஆராய்ந்து கொண்டே “இதில் நான் எதிர்பார்க்காதது உன்னுடைய வரவை. என்னுடைய எல்லா ப்ளான்களையும் நீ கெடுத்துட்ட. சித்தார்த்துடைய மனைவி என்கிற அந்தஸ்த்தும் இல்லாமல் என்னுடைய பிஸ்னெசை காப்பாற்றிக் கொள்ளவும் முடியாமல் சமூகத்தில் கேலிக்குரிய ஒரு நிலையில் இருக்கிறேன்”.

அவளின் பேச்சு வர்ஷினிக்கு அவள் மீதான பரிதாபத்தைக் கொடுக்க “சாரி கேஷ்வி. என்னால உன்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியுது” என்றாள்.

“ம்ம்...ஒரு நாலு மாதத்திற்கு முன்பு என்னை தொழிலதிபர் சித்தார்த்தின் மனைவி என்று தூக்கி வைத்து கொண்டாடியது. எனது கம்பனிகளுக்கான மதிப்பும் நல்ல நிலைக்கு சென்றது. அதே சமூகம் இப்போ சித்தார்த் உன்னை சட்டபூர்வமான மனைவி என்று அறிமுகப்படுத்தியதும் என்னை குப்பையாக ஒதுக்கி தூக்கி எறிந்து விட்டது”.

அவளின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டவள் “எனக்கு மனசு கஷ்டமா இருக்கு கேஷ்வி. இதெல்லாம் என்னால தான்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு” என்றாள்.

அதுவரை மிக இயல்பாக சாதரணமாக பேசிக் கொண்டிருந்த கேஷ்வியின் உடல் மொழியில் சற்றே மாற்றம் ஏற்பட “நிச்சயமா உன்னால தான் என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம். நீ மட்டும் தான். சித்தார்த் வாழ்வில் நீ இல்லாமல் இருந்திருந்தால் நான் நினைத்ததை அடைந்திருப்பேன்” என்று சொன்னவளின் கண்களில் ஒரு வெறி.

அதை கவனிக்காத வர்ஷினி “நான் என்ன செஞ்சா உங்க கஷ்டம் போகும் சொல்லுங்க?” என்றாள்.

பட்டென்று கையில் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து கலந்த கர்சீப்பை எடுத்து அவள் மூக்கில் வைக்க அதில் வர்ஷினி அப்படியே மயங்கி சரிந்தாள். அவசரமாக எழுந்து கொண்ட கேஷ்வி அறை வாயிலில் நின்று எட்டிப் பார்க்க, யாரும் தன்னை பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அதன்பின்னர் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு பின்னர் தான்யா தோட்டத்திலிருந்து வந்தவள் வர்ஷினியை எழுப்பி பார்த்து விட்டு சப்தம் போட தாதியும் மற்றவர்களும் வந்து வர்ஷினியின் மயக்கத்தை தெளிவிக்க பார்க்க, அவள் எழுந்தாள் இல்லை. உடனே தாதி மருத்துவருக்கு அழைத்தார்.

தனக்கு ஒரு ஆபரேஷன் இருப்பதால் தனக்கு பதிலாக தன்னுடை ஜூனியர் வருவார் என்று சொல்லி வைத்து விட்டார். பத்து நிமிடங்களில் அந்த மருத்துவரின் ஜூனியர் வந்து வர்ஷூவை சோதித்து பார்த்து அப்போதும் மயக்கம் தெளியாமல் இருக்க, மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடலாம் என்று கூறினார். அதன்படி தங்களது காரிலேயே அழைத்துச செல்லலாம் என்று தாதி கூற, அதற்கு மறுத்த மருத்துவர் வர்ஷினிக்கு ஆக்சிஜன் லெவல் குறைந்து கொண்டே வருவதாகவும் ஆம்புலன்சில் சென்றால் நல்லது என்றார். அதற்கு தாதி ஒத்துகொள்ள சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, அதில் வர்ஷினியை ஏற்றிக் கொண்டு கூட தான்யாவும் அமர்ந்து கொள்ள அவர்களை தாதியின் கார் பின் தொடர்ந்தது.

ட்ராபிக் அதிகமாக இருக்க, ஆம்புலன்சுக்கும் தாதியின் காருக்கும் இடைவெளி அதிகமாக ஒரு கட்டத்தில் ஆம்புலன்ஸ் அவர்களின் கண்ணில் படாமல் மறைந்து போனது. அதைக் கண்டு தாதி பதட்டமாகி சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்ல பணிந்தார். அங்கு சென்று பார்த்ததும் அதுவரை அம்புலன்ஸ் வந்து சேர்ந்திருக்கவில்லை. தாதி பயந்து போய் மருத்துவரை சென்று பார்த்தார்.

அவரின் ஜூனியர் வந்து பார்த்ததில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது வரை அனைத்தையும் கூறி அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேரவில்லை என்று கூறினார். மருத்துவருக்கோ அதிர்ச்சி. அவரின் ஜூனியர் இப்போது தான் சென்று கொண்டிருப்பதாக தகவல் அனுப்பியதை காண்பித்து, தங்கள் மருத்துவனமையில் இருந்து எந்த ஆம்புலன்சும் அனுப்பபடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு தாதியிடம் தெரிவித்தார்.

அதைக் கேட்டதும் பதட்டமான தாதிக்கு வர்ஷினி கடத்தப்பட்டது புரிந்து போனது.

“என்னை நம்பித் தானே இரண்டு பொண்ணுங்களையும் விட்டுட்டு போனான். இப்படி ஏமாந்து விட்டுட்டேனே” என்று புலம்ப ஆரம்பித்தார்.

பஜ்ரங்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட, அந்த ஆம்புலன்சை தேடி தன் ஆட்களை ஏவி விட்டு, அவரும் தேடுதல் வேட்டையை தொடங்கினார்.
 
  • Like
Reactions: Sumathi mathi