Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 4 | SudhaRaviNovels

அத்தியாயம் - 4

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
574
404
63
அத்தியாயம் – 4

அறைக்குள் வந்ததில் இருந்து தலையைப் பிடித்தபடி அமர்ந்தவனுக்கு தலையைப் பிடித்து விட்டாளே தவிர என்ன என்று கேட்டுக் கொள்ளவில்லை. அவர்களாக சொன்னால் தான் உண்டு. தானாக கேட்டால் பதில் என்ன வரும் என்று தெரியுமாதலால் அமைதியாக வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தாள்.
மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்தவன் “இப்படி உட்காரு மலரு” என்று கைகளைப் பிடித்து அமர்த்தினான்.
அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்தவள் எதுவும் கேட்கவில்லை. அவனே சொல்லட்டும் என்று இருந்தாள்.

“இந்திரனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்க போறாங்க”.

“ம்ம்..”

“நீ என்ன பண்ணற உன் வீட்டில் பேசி வர வெள்ளிக்கிழமை லாவண்யாவைப் பார்க்க எல்லோரும் வரோம்னு சொல்லிடு” என்று படாரென்று போட்டு உடைத்தான்.

அதிர்ந்து போய் பட்டென்று எழுந்து விட்டாள்.

“என்ன சொல்றீங்க? லாவண்யாவையா?”

“ஆமாம்! பொண்ணு பார்க்க போறது சும்மா தான். அன்னைக்கு நிச்சயம் பண்ணிட்டே வந்துடலாம்னு சொல்லிட்டாங்க”.

அவனுடைய பதிலில் கடுப்பாகி விட்டாள்.

“உங்க தம்பிக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“இனிமே தான் சொல்லணும்”.

“இல்ல எனக்கு புரியல. கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கு தெரியாது. பொண்ணு வீட்டுல தெரியாது. ஆனா நீங்களே எல்லாவற்றையும் முடிவு பண்ணுவீங்களா?”

அவளின் கோபத்தை உணர்ந்து கொண்டவன் “மலர்! உன் மனசு எனக்கு புரியுது. நீ தான் உங்க வீட்டில் பொறுமையா இந்த கல்யாண விஷயத்தைப் பேசணும்”.

“என்னன்னு பேச? என் மச்சினர் இப்படி அப்படி அதனால ஊர்ல யாரும் பெண் கொடுக்க மாட்டேன்றாங்க. நான் இந்த வீட்டு மருமகளா இருப்பதாலையும், நமக்கு வசதி வாய்ப்பு இல்லாததனால இந்த கல்யாணத்துக்கு நாம ஒத்துக்கணும்னு சொல்லவா?” என்றாள் விழிகளை உருட்டி.

அவளது பேச்சில் சற்றே சூடானவன் எழுந்து நின்று “மலர்! என்ன கொழுப்பா? ஓவரா பேசுற நீ!”

“ஆமாங்க! கொழுப்பு தான்! உங்க வீட்டு உப்பை தின்னதில் வந்த கொழுப்பு தான். ஆனா பாருங்க என் தங்கச்சிக்கு இந்த கொழுப்பு வேண்டாங்க”.

“ஏய்!”

“ம்ம்...என்ன சொல்லணுமோ சொல்லுங்க. ஆனா என்னால என் தங்கச்சி வாழ்க்கையை கெடுக்க முடியாது”.

“அப்போ நீயும் உங்க வீட்டுக்குப் போயிடு. உனக்கும் இங்கே இடமில்லை”.

அவன் சொன்னதில் அதிர்ந்து போனவள் கண்கள் கலங்கிவிட “அவ்வளவு தானா? எத்தனை ஈசியா நீயும் போயிடுன்னு சொல்லிட்டீங்க. நாம வாழ்ந்த வாழ்க்கையை ஒரே நொடியில் தூக்கிப் போட்டுடீங்க இல்ல. நான் போறேன். ஒரு நாள் கொடுங்க என் பிள்ளையும் தூக்கிட்டு எங்க வீட்டுக்குப் போயிடுறேன்” என்றாள் கண்களைத் துடைத்தபடி.

“உன்னை மட்டும் தான் போக சொன்னேன். என் பிள்ளை எங்கயும் வர மாட்டான்”.

அவன் கண்களையே வெறித்துப் பார்த்தவள் “அவன் உங்க பிள்ளைன்னா நான் யார்? உங்கப் பிள்ளைக்கு அம்மா. உங்க மனைவி அது உங்களுக்கு ஞாபகம் வரல” என்றவள் அப்படியே படுக்கையில் அமர்ந்து “தெரியுங்க! ஏழை பணக்கார வீட்டு மருமகளா ஆனாலும் அவள் ஏழை தான். அவளுக்கு எங்கேயும் மரியாதை கிடைக்காது என்று தெரியும். இந்த நிலைமை என் தங்கச்சிக்கு வர வேண்டாம்னு தான் நினைக்கிறேன். உத்தமரா இருக்கிற நீங்களே இத்தனை வருஷ வாழ்க்கையை மறந்து என்னை தூக்கிப் போட்டுட்டீங்க? உங்க தம்பி என் தங்கச்சியை தூக்கிப் போட மாட்டாருன்னு என்ன நிச்சயம்?” என்று எழுந்து நின்று அவனது சட்டையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.

அவனுக்கு அவளின் பரிதவிப்பு புரிந்தது. இந்த திருமணத்தில் அவனுக்குமே உடன்பாடு இல்லை. ஆனால் ஐயாவும் அம்மாவும் முடிவு செய்து விட்டனர். தான் அதை மறுக்க கூடாது என்பது மட்டும் புரிந்தது.
அவளின் கரங்களைப் பற்றிக் கொண்டவன் “நீ எதுக்கு கவலைப்படுறேன்னு என்று எனக்கு புரியுது-டா. நாம எதுக்கு இருக்கிறோம் மலர். உன் தங்கச்சிக்கு எதுவும் கெடுதல் நடக்காம பார்த்துக்குவோம்
”.
பட்டென்று அவனைத் தள்ளி விட்டவள் “அவளுக்கு உங்க தம்பி வேண்டாங்க. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா நீங்க கொடுப்பீங்களா? எனக்கு மனசு கேட்க மாட்டேங்குது” கண்ணீருடன்.

“வேற வழியே இல்லை மலர். நீ உங்க வீட்டில் பேசி தான் ஆகணும். அப்புறம் இன்னொன்னு இந்திரனைப் பற்றி ஒற்றை வார்த்தை அங்கே போக கூடாது”.

அவனையே வெறித்துப் பார்த்தவண்ணம் விலகி நின்றாள்.

“இது தான் உங்க முடிவா? அப்போ உங்களுக்கு என் மேலையும் எங்க குடும்பத்து மேலையும் அக்கறை இல்லை. நான் ஒருநாளும் எங்க வீட்டில் இது சம்மந்தமா பேச மாட்டேன். இவ்வளவு செய்த நீங்க அதையும் செஞ்சிடுங்க. எங்க வீட்டில் பேசி முடிச்சு இந்த கல்யாணம் நடக்கும் போது நானும் நீங்களும் ஒரே வீட்டில் இருந்தாலும் உங்க கிட்ட இருந்து விலகி நிற்கிறேன். இது தான் நாம பேசுற கடைசி பேச்சு”.

“மலர்! என்ன..”

“வேண்டாங்க! என் வாழ்க்கை அவளுக்கு ஒரு நரகத்தை கொடுக்கப் போகுது. என் மனசுல கடவுளா கும்பிட்டவர் என் பேச்சை காது கொடுத்து கேட்கல. உங்க விருப்பபடி இந்த கல்யாணம் நடக்கும். அதே சமயம் நம்ம வாழ்க்கை முடிந்து போகும்” என்று சொல்லிவிட்டு அறைக் கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டாள்.

அவளின் பேச்சில் அதிர்ந்து அப்படியே அமர்ந்து விட்டான். சற்று நேரம் யோசித்தவன் விரக்தியில் பேசுகிறாள் எல்லாம் சரியாகும் என்று எண்ணிக் கொண்டு தம்பியை சரிகட்ட கிளம்பினான்.

மனதில் ஏறிய பாரத்துடன் வீட்டின் தோப்பு இருந்த பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள். தினம் ஒருத்தியுடன் வாழும் ஒருவனுடன் தன் தங்கைக்கு திருமணமா? என்று மனம் புழுங்கித் தவித்தது.

கலங்கிய கண்களுடன் அங்கு வந்து அமர்ந்தவளின் அருகே வந்தமர்ந்தார் தேவிகா.

“என்னாச்சு மலரு?” என்றார் தோள் பற்றி.

“மோசம் போயிட்டேன் அக்கா. என் குடியை கெடுத்திட்டாங்க. லாவண்யாவை சின்னவருக்கு பண்ணி வைக்கப் போறாங்களாம்”.

“என்ன! இதென்ன புது கதையா இருக்கு? யார் சொன்னா?”

“எல்லாம் உங்க மச்சினர் தான் சொல்றார். வந்தவுங்க யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க போல. இருக்கவே இருக்கேன் ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாதவளா. அது தான் என் தங்கச்சியை பண்ணி வச்சிடுவோம் உங்க வீட்டில் சொல்லிடுன்னு சொல்லியாச்சு”,

“நீ முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?”

“சொன்னேனே! உடனே நீ மூட்டையைக் கட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு கிளம்பிடுன்னு சொல்லியாச்சு. அதுவும் பிள்ளை அவர் பிள்ளையாம். போனா நான் மட்டும் தான் போகணுமாம்”.

வாயில் கை வைத்து விட்டார் தேவிகா.

“தம்பியா பேசினார்?”

“என்ன வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன் பாருங்க அக்கா. என் வாழ்க்கையே இப்படி சிரிப்பா சிரிக்குதே. ஊர்ல ஒரு பெண்ணை விடாம சுத்துற சின்னவரைக் கட்டிகிட்டா என் தங்கச்சி வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்று கண்ணீர் விட்டாள்.

“உங்க அம்மா கிட்ட இவர் இப்படின்னு சொல்லிடேன் மலரு”.

“அதுக்கும் சத்தியம் வாங்கியாச்சுக்கா. சின்னவரைப் பற்றி நான் எதுவும் சொல்லக் கூடாதாம்”.

அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. மாமியாரின் மீதும் மற்றவர்களின் மீதும் கோபமாக வந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கலாமா? இதென்ன இப்படியொரு அடாவடித்தனம் என்று எண்ணி நொந்து போனார்.

சுரேந்திரன் அங்கே இந்திரனிடம் பேச ஆரம்பித்திருந்தான்.

“என்ன சுரேன்? இங்கே வந்திருக்க?”

“உன் கல்யாண விஷயமா தான் பேச வந்திருக்கேன்-டா” சலிப்புடன் கூறினான்.

எழுந்து வந்து அவன் தோளில் தட்டி “நைஸ் ஜோக்! சரி எதுக்கு வந்த சொல்லு?”

“டேய்! உன்னால எனக்கும் மலருக்கும் சண்டை. நீ வேற ஏண்டா”.

“என்னாச்சு ப்ரோ? ஏன் திடீர்னு டென்ஷன்?”

“அட! ஏண்டா! உனக்கு என் மச்சினச்சியை கட்டி வைக்கப் போறாங்களாம். இது உனக்கும் தெரியாது என் மாமனாருக்கும் தெரியாது”.

“வாட்!”

“அதே தான்”.

“நோ வே! என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது! நான் பேசுறேன் ஐயா கிட்ட”.

“நீ என்ன பேசினாலும் நடக்காதுடி! வர வெள்ளிக்கிழமை நிச்சயம் பண்ண முடிவு பண்ணியாச்சு”.

“இது டூ மச். அது சரி அண்ணிக்கும் உனக்கும் என்ன சண்டை?”

“நீ ஒரு பொருக்கியாம் உனக்கு அவள் தங்கச்சியை கொடுக்க இஷ்டமில்லேன்னு சொல்லி ஒரே சண்டை”.
“வாட்! கம் அகைன்! அண்ணியா சொன்னாங்க?”

“அவளே தான்! உங்களை மாதிரி இருந்தா என் தங்கச்சியை கொடுக்க எனக்கு பிரச்சனை இல்லேன்னு சொல்றா”.

இந்திரனின் கோபம் உச்சத்திற்குப் போக “அப்படி என்ன அவங்க தங்கச்சி ரம்பையா? என்னைப் போல ஒருவன் அவங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா கற்பனையில் நினைத்தால் கூட கிடைக்காது”.

“அது உனக்கும் எனக்கும் தெரியுது. அவளுக்கு தெரியலையே. ஓவரா பேசினா கிளம்பி வீட்டுக்குப் போடின்னு சொல்லிட்டு வந்துட்டேன்”.

தாடையை அழுத்தமாக வருடிக் கொண்டவன் “நீ உன் மாமனார் கிட்ட பேசிடு சுரேன். அந்த ரம்பையை கட்டி வந்து வீட்டில் போட்டுடுவோம். அப்போ தான் ஐயாவும், அம்மாவும் அடங்குவாங்க”.
 
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!