Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
188
131
43
அத்தியாயம் – 1

இருளைக் கிழித்துக் கொண்டு காரின் விளக்கொளியில் அடை மழையில் தன் கையில் இருந்த பையை தூக்கி வீசி விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த ஒருவனை பல வித வாகனங்கள் நாலா புறமும் தேடிக் கொண்டிருந்தது. ஓடியவன் மனமோ இன்றுடன் என் ஆயுள் முடிந்தது ஆனால் தன் வாழ்வின் கடமையை முடிப்பதற்கான சிறிய சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருந்தான். அதற்கு ஏதும் வழி கிட்டுமோ என்ற எண்ணத்துடனே ஓடிக் கொண்டிருந்தான்.

ஓடியவனை தேடியவனோ தன்னை தவிர இவன் யார் கையில் சிக்க கூடாது என்று வெறியுடன் தேடலை தொடங்கி இருந்தான். தங்களின் ரகசியத்தை கண்டுபிடிக்க வந்தவனை தன் கையாலேயே முடிக்க வேண்டும் என்று தேடினான்.

இருவருக்கும் இடையில் நடந்த ஓட்டப்பந்தயம் ஒரு முடிவுக்கு வந்தது. மழையின் காரணமாக தெருவெங்கும் ஓடிய நீரினாலும் ஏற்கனவே அடியாட்களிடம் சிக்கி உடல் நைந்து போய் இருந்ததாலும் அவனால் தொடர்ந்து வேகமாக ஓட முடியவில்லை கால்கள் எந்த நேரம் தொய்ந்து விழுமோ என்ற நிலையில் பறந்து வந்து தாக்கிய உருட்டு கட்டை சரியாக காலில் தாக்க வலியில் அப்படியே மடங்கி விழுந்தான்.

அவனை தேடிக் கொண்டு வந்த வண்டிகள் அனைத்தும் க்ரீச்...என்று சத்தத்துடன் நிற்கவும் அதிலிருந்த ஆட்கள் மட மடவென்று குதித்து கீழே விழுந்து கிடந்தவனை சுற்றிக் கொண்டனர்.

அப்போது அங்கு வந்து நின்ற ஜாகுவார் காரில் இருந்து இறங்கிய ஆர்ஜேவை கண்டதும் சுற்றி நின்ற அடியாட்கள் அவனுக்கு வழி விட்டு இருபுறமும் நின்று கொண்டனர். வந்தவன் நேரே சென்று கீழே கிடந்தவனை சட்டையை பற்றி தூக்கினான். இருவருவரின் கண்களிலும் ஒரு வித சீற்றம் இருந்தது.

ஆர்ஜேவின் கையில் இருந்து தன் சட்டையை உதறிக் கொண்டு நின்ற ஹரி அவனை பார்த்து நக்கலாக சிரித்தான். “என்ன, என்னை பிடிச்சிட்டா உன்னோட ரகசியங்கள் எல்லாம் வெளிவராதுன்னு நினைக்கிறியா?”

அவனது சிரிப்பில் கொதிநிலைக்குப் போனவன் “நீ எதை எல்லாம் கண்டு பிடிச்சியோ அதை எதையுமே சொல்ல முடியாத நிலைக்கு போக போற, இது எங்க சாம்ராஜ்யம் எங்களை மீறி ஒரு ஈ எறும்பு கூட நுழைய முடியாது” என்று சொல்லி கீழே தள்ளினான்.

கீழே விழுந்தவன் மீண்டும் மெல்ல எழுந்து நின்று தன்னை சுற்றி உள்ள ஆட்களை ஒருதரம் பார்த்து விட்டு “ம்ம்ம்...உன்னை சுத்தி இத்தனை பாதுகாப்பு இருக்கும்போதே தனி ஒருவனா நான் உள்ளே நுழைஞ்சு உன்னை கண்டுபிடிச்சு இருக்கேன்.இன்னைக்கு நீ என்னை என்ன பண்ணினாலும் கண்டிப்பா நான் இல்லேன்னாலும் இன்னொருத்தன் வருவான் அவனுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்”.

அதை கேட்டு கண்களில் கொலைவெறியுடன் நின்று கொண்டிருந்த ஆர்ஜே தன் ஆட்களில் முக்கியமானவனை கண்ணசைவில் அருகில் அழைத்தான்.

ஆர்ஜேவின் அருகில் வந்த பாண்டி “இவனை முடிச்சிடவா ரொம்பப் பேசுறானே” என்றான்.

உடனே அவனை கை காட்டி நிறுத்திவிட்டு “இவன் எனக்கு உயிரோட இருக்கணும். இவனோட நாக்கையும்,கை ,கால் எல்லாத்தையும் எடுத்திட்டு நம்ம இடத்துல கொண்டு போடுங்க”.

அதை கேட்டு சிரித்த ஹரி “நீ இதை தான் பண்ணுவேன்னு தெரியும் ஆர்ஜே. உன்னுடைய ஆட்டம் அடங்க போற நாள் வெகு தூரத்தில இல்ல நியாபகம் வச்சுக்கோ!”

அவன் சொல்லி முடியும் முன் ஓங்கி அறை ஒன்றை கொடுத்த ஆர்ஜே “இவனை இழுத்திட்டு போய் நான் சொன்னதை செய்ங்க, இவன் பேச்சை மறுபடியும் நான் கேட்க கூடாது” என்று சொல்லி திரும்பி நடக்கத் தொடங்கினான்.

பாண்டியும் மற்ற ஆட்களும் சேர்ந்து ஹரியை தங்கள் கைகளில் இருந்த உருட்டு கட்டைகளால் தாக்க தொடங்கினர். கண்மண் தெரியாமல் நடந்த தாக்குதலில் உடலெங்கும் ரத்தமயமாகி போனது. அப்போது இருவர் கைகளை பிடித்துக் கொள்ள ஒருவன் வீச்சரிவாளுடன் வந்து ஹரியின் இரு கைகளையும் துண்டாக்கினான். மீண்டு மற்றிருவர் கால்களை பிடித்துக் கொள்ள கால்களும் வெட்டப்பட்டது.

காரினருகில் சென்று நின்று கொண்டிருந்த ஆர்ஜே அவனின் மரண ஓலத்தில் நிம்மதியாக ஒரு புன்சிரிப்பை சிந்திக் கொண்டே கையால் தன் முகத்தை மூடி இருந்த துணியை சரி செய்து கொண்டு காரினுள்ளே ஏறச் சென்றான். அப்போது ஹரி கைகளையும் இழந்து கால்களையும் இழந்து மண்ணில் வீழ்ந்து கிடக்கும் நிலையில் இருந்தபடியே “ஆர்ஜே நான் உன்னோட ரகசியத்தை எந்த அளவுக்கு கண்டு பிடிச்சேன்னு தெரிஞ்சுகிட்டு போ!” என்றான்.

அதை கேட்ட ஆர்ஜே நின்று நிதானமாக திரும்பி இடி இடிப்பது போல ஒரு சிரிப்பை உதிர்த்து...”இனி எந்த ரகசியமும் என்னை ஒன்னும் செய்ய முடியாது” என்றான்.

தலை உடைந்து ரத்தம் கன்னங்களில் வழிய நிமிர்ந்து அவனை பார்த்து வலியுடன் ஒரு ஏளன சிரிப்பை சிரித்து “உன்னுடைய பலம் எது பலவீனம் எதுன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன் ஆர்ஜே”.

“ஹாஹா என்னுடைய பலம், பலவீனம் இருக்கட்டும். இனி, உனக்கு பலவீனம் மட்டும் தான் என்று சொல்லி டேய் இவனை தூக்கிட்டு போங்கடா பேசியே கொல்றான்” என்று ஆணையிட்டு விட்டு கார் கதவை திறக்க சென்றான்.

“உத்ரா”

ஹரி அந்த பெயரை உச்சரித்த நேரம் காரின் கதவை திறந்து கொண்டிருந்த ஆர்ஜேவின் உடம்பில் ஒரு அதிர்வு தோன்றி மறைந்தது.

“உத்ரா”

மீண்டும் ஹரி உச்சரித்து முடிக்கும் முன் அவன் முன் வந்து நின்ற ஆர்ஜேவின் கண்கள் நெருப்பு துண்டங்களாக சிவந்திருந்தது. ஹரியின் முகத்தருகே குனிந்து அவன் தலைமுடியை ஒரு கையால் பிடித்து மற்றொரு கையை பாண்டியின் பக்கம் நீட்டினான். பாண்டி தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியை அவனிடம் கொடுக்க, அடுத்த நிமிடம் ஹரியின் தலை துண்டாக மழை நீரில் ரத்தவெள்ளத்துடன் கலந்து உருண்டோடிக் கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த ஆர்ஜேவின் ஆட்களுக்கே திகில் பிடித்து போய் நின்றனர். கொலையே தொழிலாக கொண்டவர்கள் கூட அந்த நிமிடம் ஆர்ஜேவின் செயலில் அதிர்ந்து போய் நின்றனர்.

தலை இல்லாத ஹரியின் சடலத்தை தன் காலால் ஓங்கி உதைத்து “யாருடைய பெயரை சொல்ற? அவ என்னோட உயிர்.நான் மட்டுமே அவ பெயரை உச்சரிக்கணும்” என்று சொல்லி தன் கையிலிருந்த பட்டாகத்தியை தூக்கி போட்டுவிட்டு பித்து பிடித்தவன் போல மண்டியிட்டு அமர்ந்து நெஞ்சில் கை வைத்து.வானத்தை நோக்கி “என் உத்ரா...என் உத்ரா...என் உயிர்...உடமை எல்லாமே அவள். அவள் விடும் மூச்சுக்காற்றை கூட நான் மட்டுமே சுவாசிக்கணும் , அவளை தீண்டிய காற்று என்னை மட்டுமே தீண்டனும்” என்று வெறி பிடித்தவன் போல கத்தினான்.

நடந்து கொண்டிருந்த சம்பவங்களை கண்டு அந்த வானமே நடுங்கி போய் கண்ணீரை சிந்திக் கொண்டிருந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவில் வாசல்..

கருப்புகலர் ஆடி கார் ஒன்று வந்து நிற்க காரை நிறுத்தி விட்டு டிரைவர் அவசரமாக ஓடி வந்து பின் கதவை திறந்து விட்டார். அதிலிருந்து அம்பிகையின் மறுவடிவாக ஒரு வயதான பெண்மணியும் அவரின் பின்னே இரு இளவயது பெண்களும் இறங்கினர்.

கோவில் குருக்கள் வாசலுக்கே வந்து அவர்களை சன்னதிக்கு அழைத்து சென்றார்.

“என்ன ரங்காச்சாரி உங்க வீட்டமா நல்லாருக்காங்களா? போன தடவை பார்த்தப்பவே மூட்டு வலின்னு சொல்லிட்டு இருந்தாங்களே?”

“நன்னா இருக்காமா அவளுக்கென்ன சதா எதையாவது சொல்லிண்டு இருப்பா”.

குருக்களிடம் பேசிக் கொண்டே தன் மருமகள்களிடம் திரும்பி அர்ச்சனை செய்வதற்கான தட்டை வாங்கி குருக்களிடம் கொடுத்தார் லோகேஸ்வரி.

சிதம்பரத்தில் சிவதாண்டவம் என்றால் தெரியாதவர்களே இல்லை எனலாம். மிகப் பெரிய கோடீஸ்வரர். அவருக்கு பல தொழில்கள். தொழில்களில் கொடிகட்டி பறந்தாலும் ஏழை எளியவருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி லோகேஸ்வரி அம்மாளும் கணவனுக்கேத்த மனைவி. இறைவனுக்கு ஒரு பக்கம் சேவை ,ஒரு பக்கம் இல்லாத மக்களுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள். கந்தவேல், குமாரவேல் மற்றும் கதிர்வேல்.

கந்தவேலுக்கு மகாலக்ஷ்மியுடன் திருமணம் முடிந்து விஷால் என்ற மூன்று வயது பையன் உண்டு. குமாரவேலுவுக்கு வனிதாவுடன் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது. கதிர்வேலுவிற்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. அண்ணன் தம்பிகள் மூவரும் தந்தையின் தொழிலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கந்தவேலும், குமாரவேலும் தந்தையைப் போலவே தொழிலை நடத்துவதில் தேர்ந்தவர்கள். கதிர்வேலுவோ மிகவும் மென்மையானவன். அதிர்ந்து ஒரு வார்த்தை கூட யாரையும் பேசாதவன். அவனது இந்த குணத்தை தந்தையும் அண்ணன்களும் விரும்பவில்லை. பிசினசிற்கு அது ஏற்ற குணம் இல்லை என்று சொல்லி அவனின் இந்த குணத்தை எப்பாடுபட்டாவது மாற்றி தங்கள் தொழிலுக்குள் அவனை கொண்டு வந்து விட வேண்டும் என்று நினைத்தனர்.

கோவிலில் பூஜையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்திறங்கிய மூவரும் விஷாலுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த கதிரை பார்த்தனர். மூவரின் மனதிலும் கலவையான எண்ணங்கள். மருமகள்கள் இருவரும் நம் கணவர்களும் கதிர் மாதிரி குடும்பத்தின் மீது பாசமாக இருந்திருக்கலாமோ , எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்களே குடும்பத்தை பற்றி எண்ணுவதில்லையே என்று எண்ணி பெருமூச்சை விட்டார்கள். லோகேஸ்வரியோ இவன் கொஞ்சமாவது அப்பாவின் மனதை புரிந்து கொண்டு நடந்தால் தான் என்ன, எப்பவும் பொறுப்பில்லாமல் சுற்றுகிறானே என்று எண்ணிக் கொண்டார்.

கதிர் விஷாலுடன் கண்ணை கட்டி கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். விஷால் அவன் மேல் சிறு சிறு கல்லை தூக்கி போட்டுக் கொண்டே இருந்தான். அப்போது அவன் கையில் சற்று பெரிய கல் கிடைக்க அதை எடுத்து கதிர் மேல் போட, அது அவன் மேல் விழாமல் பக்கத்தில் இருந்த நின்று கொண்டிருந்த அவனின் வளர்ப்பு நாய் மேல் விழ, அதன் காதோரம் பட்டு லேசாக ரத்தம் வர ஆரம்பித்தது. நாயின் சத்தத்தை கேட்டவன் அவசரமாக கண்ணில் இருந்த கட்டை அவிழ்த்து விட்டு அதனருகில் ஓடினான். விஷால் அங்கிருப்பதையே மறந்து விட்டு அதன் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே “சாரி, தம்பி...தெரியாம போட்டுட்டான்” என்று சொல்லி தன் கையில் இருந்த கர்சீப்பால் காயத்தை துடைத்து விட்டான்.. அதுவரை அவன் கவனம் முழுவதும் நாயின் மீது மட்டுமே இருந்தது பக்கத்தில் இருந்த குழந்தையை கூட மறந்திருந்தான்.

அதை பார்த்த மஹாவும், வனிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். ஈஸ்வரிக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது, என்ன இவன் இப்படி இருக்கிறானே உள்ளே மற்றவர்கள் மூவரும் கம்பனி விஷயமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருக்க இவனோ நாயுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறானே என்று கடுப்பாகி விட்டார்.. முரட்டுத்தனம் வேண்டாம் தான் ஆனால் அதுக்காக இப்படியும் இருக்க வேண்டாமே என்று மகனை நினைத்து கவலைப்பட்டது. அந்த கவலையுடன் மகனை அழைத்தார்...

“என்ன கதிர் நீ இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? அப்பா இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொன்னாங்கல்ல”அவரின் அழைப்பில் திரும்பி பார்த்தவன் விஷாலை தூக்கி கொண்டு அன்னையின் அருகில் வந்தான் “கூல் மா நீங்க எல்லாரும் கோயிலுக்கு போயிட்டீங்க. நீங்க வரும் வரை அவனுக்கு கம்பெனி கொடுத்தேன் அவ்வளவு தான்” என்றான்.

அவன் கையில் இருந்த விஷாலை வாங்கி மகாவிடம் கொடுத்தனுப்பி விட்டு “சரி-சரி நீ போய் கிளம்பு. அப்பா சத்தம் போட போறாங்க” என்று அவனை கிளப்பி விட்டு உள்ளே சென்றார்.

சிவதாண்டவமும்,கந்தவேலும் குடும்பத்தினரிடம் அன்பாக இருந்தாலும் அதை காண்பித்துக் கொள்ளாமல் ஒருவித மிடுக்குடனே நடந்து கொள்வார்.சாப்பிட வந்தமர்ந்த சிவதாண்டவம் “என்ன ஈஸ்வரி இன்னைக்கு என்ன காலையில கோயிலுக்கு போயிட்டீங்க. என்ன விசேஷம்?”

“ஒன்னும் பெருசா இல்லைங்க. மனசுக்கு என்னவோ சரியில்லாத மாதிரி தோனுச்சு அது தான் போயிட்டு வந்தேன் “.

மனைவி தட்டிலிட்ட பொங்கலை சுவைத்துக் கொண்டே “ஏன் எல்லாம் நல்லா தானே போய்கிட்டு இருக்கு .திடீர்ன்னு மனசு சரியில்லாம போக என்ன காரணம்”என்றார்.

பேரன் விஷாலுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தவர் கணவரை நிமிர்ந்து பார்த்து விட்டு “கதிருக்கு நல்ல பெண்ணா கிடைக்கணுமே. அதுக்கு தான் போய் வேண்டிக்கிட்டு வந்தோம்”என்றார் ஈஸ்வரி.

“ஒ...உன் பையனை கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க சொல்லு. நல்ல பெண்ணா பார்த்திடலாம்”என்றவர் கதிரிடம் திரும்பி “நான் சொன்னதை எல்லாம் தயாரா வச்சிருக்கியா கதிர். இந்த கேசவன் ரொம்ப தொல்லை பிடிச்சவன்.அவனுக்கு எல்லாமே சரியா இருக்கணும். அப்புறம் அவன் கிட்ட நாம பேசி சமாளிக்க முடியாது” என்றார்.

அதை கேட்டுக் கொண்டிருந்த குமாரவேல் “ஹாஹா அப்போ கதிரையே அவனை சமாதானப்படுத்த சொல்ல வேண்டியது தான்” என்றான்.

அதை கேட்டு சிறு கண்டிப்புடன் அவனை அழைத்த ஈஸ்வரி “குமரா! என்ன இது? நீயே அவனை இப்படி கிண்டல் பண்ணினா வெளில உள்ளவங்க என்ன பேசுவாங்க”.

அதை கேட்ட கதிர் “அண்ணன் தானே சொல்றாங்க விடுங்கம்மா” என்றான்.

“சரிடா விடுங்க ரெண்டு பேரும் சீக்கிரம் சாப்பாட்டை முடிச்சுகிட்டு அப்பா ஆபீஸ் ரூமுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு தந்தையின் பின்னே சென்றான் கந்தவேல்.

அவர்கள் சென்ற பிறகு இருவரும் பேசி சிரித்தபடியே உணவை உண்டு முடித்து விட்டு தந்தையின் அலுவலக அறைக்கு சென்றனர். அங்கு கந்தவேல் நாளேடை கையில் வைத்துக் கொண்டு முகத்தில் கவலையோடு தந்தையிடம் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தான்.வேகமாக சென்று கந்தவேலின் தோளின் மேல் கையை வைத்து “ஏதாவது சீரியசான விஷயமா கந்தா?” என்று கேட்டான் குமார்.

தன் கையிலிருந்த நாளேட்டை குமாரின் கையில் கொடுத்து படிக்குமாறு சைகை காட்டினான். அதில் ஹரியின் படத்தை போட்டு அவனின் கொலையை பற்றிய செய்தி முதல் பக்கத்தில் வந்திருந்தது. அந்த செய்தியை படித்து முடித்து எதற்காக தன்னிடம் இந்த செய்தியை படிக்க சொன்னார்கள் என்று புரியாமல் அவர்களை நோக்கினான்.

“இந்த படத்தில இருக்கானே இவனை முந்தாநாள் நம்ம ஸ்டீல் தொழிற்சாலைல பார்த்தேன்”என்றான் கந்தவேல்.

“சரி அதனால என்ன? யாரையாவது பார்க்க வந்திருப்பான்”என்றான் குமாரவேல்.

அதுவரை அமைதியாய் இருந்து மகன்களிடையே நடக்கும் பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டிருந்தவர் இடைப் புகுந்து “ஆமாம் பார்க்க தான் வந்தான்.வேவு பார்க்க” என்றார் சிவதாண்டவம்.

“என்ன வேவு பார்க்கவா? அப்போ இவன்”என்று அதிர்ச்சியுடன் கேட்டான் குமாரவேல்.

“போலிஸ் கைக்கூலி” என்றான் கந்தவேல்.”

அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்த விவாதத்தை பார்த்த கதிருக்கு ஒன்றும் புரியவில்லை. யாரோ ஒருவன் இறந்ததற்கு இவர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள். அதிலும் ஒவ்வொருவர் முகத்திலும் இவ்வளவு கவலை தெரியும்படியான விஷயமாக இருக்கிறது என்றால் அவன் இவர்களுக்கு வேண்டியவனோ என்று நினைத்து அதை கேட்கவும் செய்தான்.

அதை காதில் வாங்காமல் சிவதாண்டவம் தன் பெரிய மகனிடம் “அவன் எப்படி தொழிற்ச்சாலைக்குள்ளே வந்தான்?”

“கதிர் தான் கூட்டிட்டு வந்தான் பா.அவனை கதிர் கூட தான் பார்த்தேன்” என்றான் கந்தவேல்.

அதை கேட்டு சட்டென்று தலையிலடித்துக் கொண்ட சிவதாண்டவம் “இத்தனை வருஷமா தொழில் பண்றேன் தனியாளா. இதுவரை இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. ஆனா பசங்க உங்களை நம்பி விட்டேன் பாருங்க அது தான் என் தப்பு”.

“என்னப்பா இது அவர் நம்ம ப்ரொடக்ஷன் மேனேஜரோட மச்சான்னு சொன்னார்.ஊர்லே இருந்து வந்திருக்கேன் அவசரமா பார்க்கனும் என்று சொன்னார். அது தான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் கதிர்.

இவர்களின் பேச்சில் ஊடே வராமல் தன் சிந்தனையில் மூழ்கி இருந்த குமாரவேல் தம்பியின் பதிலில் கடுப்பாகி எரிச்சலாக “ஏண்டா உனக்கென்ன அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா? யாராவது ஏதாவது சொன்னா உடனே நம்பிடுவியா?”என்றான்.

“விடு குமரா அவனை சத்தம் போட்டு இனி பிரயோஜனம் இல்லைஆனா இந்த ஹரி நம்ம தொழிற்ச்சாலைக்குள்ள வந்து யார் யார் கூட பேசினான் என்ன பண்ணினான்னு நமக்கு தெரியனும்.அதை கண்டுபிடிக்கிற வழியை பாருங்க ரெண்டு பேரும்”.

“ஆனா அப்பா இவனை யார் போட்டது? அதுவும் இவ்வளவு கொடூரமா?”என்று கேட்டான் குமாரவேல்.

“ஆர்ஜே தானாம்.ஏதோ முன் பகைன்னு சொல்றாங்க”என்றார் தாண்டவம்.

“யாருப்பா அவன்?எங்கே இருந்து வந்தான்னும் தெரியல.என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னும் தெரியல.ஆனா அவனோட பேர் ஊர் முழுக்க பரவி போயிருக்கு.அவன் ஆட்களை தவிர அவனை யாரும் பார்த்தது இல்லேன்னு சொல்றாங்க” என்றான் கந்தவேல்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கதிர்” ஏம்ப்பா நீங்க ஏதோ கடத்தல் பண்றதா ஊர்ல பேசிக்கிறாங்களே அது உண்மையா? அதை பார்க்க தான் இவன் வந்தானா? என்றான்.

“எதுக்குப்பா அவன் வந்ததுக்கு இவ்வளவு பதட்டப்படுறீங்க? என்றான் கதிர்.

அதுவரை பொறுமையாய் இருந்த சிவதாண்டவம் கதிரின் கேள்வியில் வெகுண்டெழுந்து அவனை அடிக்க கையை ஓங்கியபடி பாய்ந்தார்.

“பண்றதையும் பண்ணிட்டு என்ன கேட்குறான் பாருங்கடா.முதல்ல இவனை இங்கேருந்து போகச் சொல்லுங்க.இனி, இவனை எந்ததொழிற்சாலைக்குள்ளும் நுழைய விடாதீங்க.இவனை ஆபீஸ் தவிர வேற எங்கேயும் விடாதீங்க”.

அவரை தடுத்து பிடித்து நிறுத்திக் கொண்ட கந்தவேல் “குமரா அவனை வெளில அழைச்சிட்டு போடா” என்றான்.

கதிரின் தோளில் கையை போட்டு அறைக்கு வெளிய அழைத்து வந்த குமாரவேல் “இங்க பாரு கதிர் கொஞ்ச நாளைக்கு அப்பா கண்ணுல படாம இரு.அவர் கோவம் போகட்டும்.அப்பா சொன்ன மாதிரி நீ நம்ம ஹெட் ஆபீஸ்க்கு மட்டும் வந்திட்டு போயிட்டிரு.ஒண்ணும் கவலைப்படாதே எல்லாம் சரியாகிடும்” என்று சொல்லி தம்பியின் தோளில் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தான்.

போகும் முன் திரும்பி “நான் இன்னைக்கு மீட்டிங்கிற்கு வரலாமா கூடாதா குமார்”என்று கேட்டான் கதிர்.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நாங்க பார்த்துக்கிறோம்.நீ போய் தயார் பண்ணி வச்ச பைல்சை மட்டும் என் கிட்ட கொடு”.

எதுவும் பேசாமல் சென்று பைல்லை கொடுத்து விட்டு தோட்டத்தில் சென்றுமர்ந்து கொண்டான்.அவ்வளவு நேரம் அங்கே நடந்து கொண்டிருந்த களேபரங்களை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி மகன் பின்னே வந்து அவனருகில் அமர்ந்து தலையை வருடிக் கொடுத்தார். மகனின் முகத்தில் இருந்த வேதனையின் சாயல் அவரை கவலை கொள்ள வைத்தது.

சிறுவயதில் இருந்தே பெரியவர்கள் இருவரும் முரட்டுத்தனமாக வளர்ந்தார்கள் என்றால் கதிர் மிகவும் மென்மையானவனாக வளர்ந்தான். அவனது அந்த குணமே தந்தையிடம் அதிகம் நெருங்க விடாமல் செய்தது. கந்தவேலும், குமாரவேலும் தந்தையிடம் ஒட்டிக் கொண்டார்கள் என்றால் இவன் ஈஸ்வரியினிடமே ஒட்டிக் கொண்டான்.

தன் உணர்வுகள் அனைத்துமே ஈஸ்வரியிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வான். அண்ணன்களின் முரட்டுத்தனம் அவனை அவர்களிடம் ஒன்ற விடாமல் செய்தது. கந்தவேலும் , குமாரவேலும் தம்பி என்று பாசம் காட்டினாலும் அவனது தைரியம் இல்லாத போக்கு அவர்களுக்கு பல சமயங்களில் பிடித்தம் இல்லாததாக இருந்தது.

“ஏம்மா என்னை அப்பாவுக்கு பிடிக்கல.நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க தான் முயற்சி பண்றேன். ஆனா, எல்லாமே தப்பா போயிடுது”என்று சோகமாக புலம்பினான் கதிர்.

அவனது கேள்வியில் அதிர்ந்து போன ஈஸ்வரி “இல்ல ராஜா யாருக்கும் உன்னை பிடிக்காம இல்ல, ஒவ்வொருத்தருக்கு ஒரு விதமான குணம்.நம்ம கையில் உள்ள எல்லா விரல்களும் ஒரே மாதிரியாவா இருக்கு அது மாதிரி தான் குணமும்.மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும்.நீ எப்பவும் மனசை விட்டுடாம தைரியமா இருக்கணும் ராஜா”.

“ஹாஹா...தைரியம்.அது தான் இங்க பிரச்சனையே.சரி விடுங்கம்மா. நான் நம்ம குடௌனுக்குப் போறேன்.பாக்டரிக்கு தான் உள்ளே நுழைய கூடாதுன்னு அப்பா சொல்லிட்டாங்க.இங்கேயாவது போயிட்டு வரேன்.போன வாரம் வந்த பொருள் எல்லாம் சரி பார்க்கணும்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.

“சரிப்பா இனியாவது புது ஆளுங்க கிட்ட பேசும்போது கவனமா இரு”என்றார் ஈஸ்வரி.

அன்னையிடம் சொல்லிவிட்டு தன்னறைக்கு வந்தவன் கதவை சாத்திவிட்டு கதவின் மேல் சாய்ந்து கொண்டான்.மனமோ நடந்தவைகளையே அசைப் போட்டுக் கொண்டிருந்தது. மெல்ல நடந்து சென்று தன் கப்போர்டில் துணிகளுக்கு கீழே இருந்த ஒரு போட்டோவை எடுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு ஆழ்ந்த பெருமூச்சை விட்டான்.

“உத்ரா” என்று உதடுகள் அவள் பெயரை உச்சரித்தது.