Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம்- 11 | SudhaRaviNovels

அத்தியாயம்- 11

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 11

கோயம்பத்தூர் ஏர்போர்ட்டில் இறங்கிய பஜ்ரங் தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டான். அதற்குள் அவன் கேட்ட தகவல்கள் அனைத்தும் அவன் கைக்கு வந்து சேர்ந்திருந்தது. அவற்றை அறிந்து கொண்டவனுக்கு அதிர்ச்சி. உடனே தாதிக்கு அழைத்து அனைத்தையும் கூறி விட்டான்.

“என்ன சொல்ற? இதெல்லாம் எப்போ நடந்தது?’

அவன் நடந்தவற்றை எல்லாம் கூறியதும் கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டார். தான் முன்னமே சுதாரித்து இருக்க வேண்டுமோ என்கிற எண்ணம் எழாமல் இல்லை. நிலைமை இந்தளவிற்கு விபரீதமாக போயிருக்கும் என்று சற்றும் எண்ணவில்லை.

“சித்தார்த்துக்கு தெரியுமா?”

“இல்ல மேம்! அவருக்கு எதுவும் தெரியாது. அவரை இங்கே இருந்து தூக்கிட்டு வந்த பின்னர் யாரிடமும் காண்டக்டில் இல்லை”.

“ம்...ஒ..மை காட்! நாம் இன்னும் சுதாரிப்பாக இருந்திருக்கலாம் பஜ்ரங். அந்தப் பேய் இந்தளவிற்கு ஆடும் என்று தெரியாமல் விட்டு விட்டோமே” என்று புலம்பினார்.

“மேம்! சித்தார்த் சாபிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும்”.

“ம்ம்...நிச்சயமா அவன் தாங்க மாட்டான் பஜ்ரங். அவனுக்கு தெரிய வேண்டாம். இப்போ நிறைய முடிக்க வேண்டிய காரியங்கள் இருக்கு. அது முடிந்ததும் அவனுக்கு தெரிந்தால் போதும். நீ எக்காரணம் கொண்டும் என் பேத்திகளை விட்டு நகர கூடாது. என்னால் முடிந்த அளவிற்கு என் பேரன் மனைவிக்கு நான் ஞாயம் செய்ய வேண்டும்” என்றார் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

“ஓகே மேம்! நான் சற்று நேரத்தில் அவங்க இருக்கும் இடத்திற்கு கிளம்பி விடுவேன். இனி, என்னை மீறி தான் அவர்களை யாரும் நெருங்க முடியும்” என்றான்.

“நீ எனக்கு ஒன்று செய்யணுமே பஜ்ரங்”.

“சொல்லுங்க மேம்”.

“அங்கே போனதும் என் பேரன் மனைவியை பார்த்ததும் அவளுக்கு தெரியாமல் எனக்கு அவளை காண்பிக்க வேண்டும்”.

“ஓகே மேம்!”

“சரி நீ கிளம்பு” என்றவர் போனை அணைத்து விட்டு கண் மூடி சாய்ந்து விட்டார்.

அவரது மனம் வர்ஷினிக்கு நேரந்ததை எண்ணி துடித்துக் கொண்டிருந்தது. சின்னப் பெண் தவித்து போயிருப்பாளே. திருமணம் செய்தவனும் மாயமாய் மறைந்திருக்க, பெற்றவர்களும் விபத்தில் இறந்து போயிருக்க, விபத்தில் காலையும் இழந்து நிர்கதியாய் நின்றிருப்பாளே. எத்தனை பாவங்களை தான் சேர்ப்பார்கள் இவர்கள்? எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் இவர்கள் அடங்கப் போவதில்லை என்றெண்ணி துயரத்தோடு அமர்ந்து விட்டார்.

அதே நேரம் பஜ்ரங் வர்ஷிணியின் வீட்டின் அருகே இருந்தான். அவனது கார் ஒரு மரத்தடியில் பார்க் செய்யபட்டிருக்க, அதிலேயே அமர்ந்து அந்த வீட்டை கவனித்துக் கொண்டிருந்தான்.

வர்ஷினியும், தான்யாவும் கல்லூரிக்கும் பள்ளிக்கும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். பாட்டி வசந்தா அவர்களுக்காக உணவை தயாரித்து வைத்துக் கொண்டு காத்திருந்தார். வர்ஷினி செயற்கை காலை பொருத்துவதற்கு உதவி செய்து விட்டு இருவரும் சேர்ந்து ஹாலிற்கு வந்தனர்.

அவர்களுக்காக மதிய உணவை கூட லஞ்ச் பாக்ஸில் எடுத்து வைத்துவிட்டு அமர்ந்திருந்த பாட்டியை “என்ன பாட்டி இது! இதை கூட நாங்க செஞ்சுக்க மாட்டோமா?” என்று கடிந்து கொண்டே சென்றமர்ந்தாள் வர்ஷு.

அவளை பார்த்து பெருமூச்சு விட்ட வசந்தா “என் பேத்திகளுக்கு இதை கூட செய்ய முடியாதா என்ன? உங்கம்மா இருந்திருந்தா செய்திருப்பா தானே?” என்றார் கலங்கிய கண்களுடன்.

சட்டென்று வர்ஷுவின் கண்களும் கலங்கி விட, அவசரமாக தங்கையைப் பார்க்க அவளின் முகமும் கசங்கி இருந்தது.

“பாட்டி! ப்ளீஸ்! சாப்பாடு எடுத்து வைங்க. நாம பேசி பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை. போனவங்க திரும்பி வரப் போறதில்லை. அட்லீஸ்ட் நாங்க ரெண்டு பேரும் படிச்சு நல்லவேலையில் அமர்ந்து அவங்க ரெண்டு பேருடைய ஆத்மாவிற்கும் நிம்மதியை கொடுக்கிறோம்”.

“ஆமாம் பாட்டி. அக்கா சொல்றது போல தான் செய்யணும்” என்றாள் தான்யா.

“ம்ம்..சரி சாப்பிடுங்க நேரமாச்சு. ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. உங்க ரெண்டு பேர் பொறுப்பும் என் கிட்ட தான்” என்றார் கவலையுடன்.

இருவரும் எதுவும் பேசாமல் உணவை உண்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். வாசலில் நிறுத்தி வைத்திருந்த டூ வீலரை ஸ்டார்ட் செய்த வர்ஷு, தங்கை பின்னே அமர்ந்ததும் வீட்டை விட்டு வெளியேறினாள்.

அவள் வாசலுக்கு வந்ததில் இருந்து வெளியேறும் வரை தாதிக்கு வீடியோ காலில் அனைத்தையும் காண்பித்தான் பஜ்ரங். அவளது நிமிர்வையும் காலை இழந்த போதும் மனம் சோர்ந்து போகாமல் தைரியமாக இருப்பதைக் கண்டு மனம் குளிர்ந்து போனார்.

“நல்ல நிமிர்வான பெண்ணாக இருக்கிறாளே பஜ்ரங். அவளைப் பார்த்தாள் சமீபத்தில் துயரம் நடந்த மாதிரி தெரியவில்லை. தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்ணாக இருக்கிறாள். என் பேரனுடைய தேர்வு அற்புதம்” என்று பாராட்டிக் கொண்டார்.

“ஆமாம் மேம்”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“சரி நீ போனை வைத்து விட்டு அவளுடன் காவலுக்கு இரு. அவளுடைய தங்கையும் விட்டு விடாதே. அவளும் நம் குடும்பத்து பெண் தான். இருவரையும் பாதுகாத்து சித்தார்த் கையில் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

“ஓகே மேம்” என்றவன் போனை அணைத்து விட்டு தான்யாவிற்கு செய்திருக்கும் ஏற்பாடுகளை போன் பண்ணி கேட்டுக் கொண்டு வர்ஷினியின் கல்லூரி வாசலுக்கு சென்று விட்டான்.

தங்கையை பள்ளியில் விட்டுவிட்டு கல்லூரிக்கு வந்தவளை அவளது தோழிகள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. மறுநாள் தேர்வு இருக்க, அதைப் பற்றி பேசியபடி வகுப்பிற்கு சென்றார்கள். மாலினியும், அவளும் தங்கள் இடத்தில் சென்றமர, வர்ஷுவின் அருகே அமர்ந்திருந்த வித்யா “எப்படி தான் உன்னால இப்படி இருக்க முடியுதோ?” என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்து “புரியல?”

“இல்ல நீயும் சித்தார்த்தும் லவ் பண்ணுனீங்க. அவன் காலேஜ் விட்டு போயிட்டான். அடுத்து உங்க அப்பா, அம்மாவும் விபத்துல இறந்து போயிட்டாங்க. ஆனா நீ எதுவுமே நடக்காத மாதிரி இருக்க. எப்படி உன்னால இருக்க முடியுது?” என்று வார்த்தையில் அமிலத்தை ஊற்றினாள்.

இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தவள் “நான் இப்படி இருக்கிறதுல உனக்கு எதுவும் பிரச்சனையா?’ என்றாள் வர்ஷு.

அவளது கேள்வியைக் கண்டு “இல்ல..அது”.

“நான் வருத்தப்பட்டு அழுதுகிட்டு இருந்தா என்னோட வருத்தத்தையும் சோகத்தையும் நீ ஷேர் செஞ்சுக்க போறியா? இல்லேல்ல அப்புறம் எதுக்கு கேள்வி கேட்கிற?” என்றாள் கடுமையாக.

அவளின் தாக்குதலில் முகம் கன்றிப் போனவள் “சாரி” என்று தயக்கமாக கூறிவிட்டு திரும்பி அமர்ந்து விட்டாள்.

வர்ஷினியின் மனமோ ‘ஆறக் கூடிய காயங்களா அவை? மறக்க கூடிய ரணமா அது. ஒரே நாளில் அனைத்தையும் இழந்து நின்றது மறக்குமா? உருகி உருகி காதலித்தவன் ஓடிப் போய் விட்டான் கோழை போல. அவன் காரியம் முடிந்ததும் இவள் தேவை இல்லை என்று போய் விட்டான். மகளின் நிலை அறிந்த பெற்றவர்களோ அடுத்து என்ன என்று நினைப்பதற்குள் போய் சேர்ந்து விட்டனர். ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு இரவையும் கடப்பதற்குள் நான் படும்பாட்டை யார் அறிவார்கள். எத்தனை காதல் மொழி பேசி இருப்பான்? அதில் ஒன்று கூடவா அவனுக்கு நினைவில்லை? அநாதரவாக விட்டுச் சென்றோமே உயிருடன் இருக்கிறாளா இல்லை செத்து விட்டாளா? என்று அறிந்து கொள்ள கூட தொடர்பு கொள்ள முயலவில்லை.

இதழில் ஏளனத்துடன் ‘அத்தனை பயம். அவனிடம் வாழ்க்கைப் பிச்சை கேட்டு விடுவேன் என்று பயந்து விட்டான் போல’ என்றேன்னியவளின் மனம் அவனை முற்றிலுமாக வெறுத்தது.

அவளின் எண்ணத்தின் நாயகனோ அலுவலகத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். முகம் இறுகி இருந்தாலும் அவனது கம்பீரமும் தோரணையும் பார்பவரின் கண்களை ரசிக்க வைக்கும்படி இருந்தது.

தனது அறையிலிருந்து கதவை திறந்து கொண்டு வந்த கேஷ்வி பட்டேலை அவன் திரும்பி கூட பார்க்கவில்லை. ஆனால் அவளது பார்வை முழுவதும் அவன் மீது தான். கண்ணாடியின் முன் நின்று தலையை சீவிக் கொண்டிருந்தவன் அருகே சென்றவள் நெருங்கி நின்று “இந்த சூட்டில் அழகாக இருக்கிறாய் சித்து” என்றாள்.

அவளின் தோள் அவனுடன் உரசியதை கண்டு சட்டென்று நகர்ந்தவன் “லுக் கேஷ்வி! இந்த அறைக்குள்ள நாம ரூம் மேட்ஸ் தான். சோ ப்ளீஸ் மெயின்டென் டிஸ்டன்ஸ்” என்றான் கடுப்பான குரலில்.

அவனது பேச்சில் எழுந்த புன்னகையுடன் “ம்ம்...ஓகே” என்று சொல்லிவிட்டு அவனை சுவாரசியமாக பார்த்தபடி அறையை விட்டு வெளியேறினாள்.

அவனும் அவளது கண்களில் தெரிந்த ஆர்வத்தை யோசித்தபடியே அவளை பின் தொடர்ந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவளை நெருங்கி இடையில் கைப் போட்டு தன்னருகே இழுத்து அணைத்தபடி நடந்தான்.

அங்கு உணவறையில் அவர்களுக்காக காத்திருந்தா பிம்லா தேவியின் பார்வையில் அவர்களின் நெருக்கம் பட, ஒருவித நிம்மதி அவர் கண்களில் ஒளிர்ந்தது.

“வா கேஷ்வி! வா சித்து”.

அவள் அமர்வதற்காக நாற்காலியை பின்னுக்கு தள்ளி உதவியவன் அவளருகே தானும் அமர்ந்து கொண்டான். மகனின் செய்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவனது முகத்தையும் தான். அதில் எதுவும் சோகமோ, வருத்தமோ தெரியவில்லை. அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது.

இருவரும் அமர்ந்ததும் உணவருந்த ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பேசிக் கொண்டே சாப்பிட்டார் பிம்லா. பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டே இருந்தவர் சித்தார்த்திடம் “சித்து! இன்னைக்கு உங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் இருக்கு. பதினொரு மணிக்கு வந்துடு”.

“ஓகே மாம்!”

“கேஷ்வி! நீயும் மறக்காம வந்துடு”.

“ஷ்யூர் ஆன்ட்டி”.

அதன்பிறகு சாதரணமாக பேசிக் கொண்டு சாப்பிட்டு முடித்துவிட்டு அவரவர் வேலைக்காக கிளம்பினார்கள். சித்துவின் மனமோ பிம்லா மறந்தும் தந்தையை கேட்கவில்லை என்பதை குறித்துக் கொண்டான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
தனது அலுவலகத்திற்கு வந்தமர்ந்தவனின் மனம் தாதி சொன்னவற்றையே எண்ணி சுழன்று கொண்டிருந்தது. உனது கண், காது அனைத்தையும் திறந்து வை. உன்னுடைய எதிரி உன் கண் முன்னாள் தெரிவார் என்று சொன்னதை யோசித்தான்.

அலுவலக மேஜையை திறந்தவன் அதில் உறங்கிக் கொண்டிருந்த மொபைலை எடுத்தவன் அதை ஆன் செய்தான். அந்நேரம் அவனது கதவ தட்டப்பட, அந்த மொபைலை உள்ளே போட்டுவிட்டு “எஸ்!” என்றான்.

உள்ளே ஆர்ப்பாட்டமாக வந்தமர்ந்தார் தேவ். பிம்லாதேவியின் மூத்த சகோதரன். சித்தார்த்தின் மாமா.

“சித்து பேட்டா! எப்படி இருக்க? மேரேஜ் லைப் எப்படி போகுது?” என்றார் சிரித்தபடி.

அவரை பார்த்ததும் உற்சாகமானவன் “நல்லா இருக்கேன் மாமா” என்றான் சிரிப்புடன்.

“ம்ம்...ஓகே பிசினெஸ் பேசலாமா?” என்றார் சிரிப்புடன்.

“யா ஷ்யூர் மாமா”.

“நமக்கு பெரிய ஆபர் ஒன்னு வந்திருக்கு. போன மாதம் தான் நீரஜ் கிட்ட வந்தாங்க. பட் நடுவில நடந்தது எதிர்பாராதது. அவங்க இன்னைக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க. நீ அதுக்குள்ள அவங்க கொடுத்த பைலை பார்த்திடு” என்றார்.

அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவனது மனமோ அவரை ஆராய்ந்து கொண்டிருந்தது. அவர் உண்மையானவரா? மாமனாக இருந்தாலும் இவரே கூட தங்கள் எதிரியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிற எண்ணத்தில் பார்க்க ஆரம்பித்தான்.

“சரி மாமா...நான் பார்த்திடுறேன்” என்றான்.

அவனிடம் மேலும் சிலவற்றை பேசிவிட்டு எழுந்து கொண்டவர் கதவருகே செல்லும் நேரம் “நான் சொல்றேன் என்பதற்காக செய்யாம எதையும் ஆராய்ந்து பார்த்து செய் சித்து” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அதைக் கேட்டதும் அவனது மனம் ‘என்னடா இது! எல்லோரும் இப்படி சொல்றாங்க. அப்போ யாரைத் தான் நம்புவது? என்று குழம்பிப் போனான்.

அதன்பின் அந்த மொபைலை எடுத்து சில பல செய்திகளை அனுப்பிவிட்டு, மாமன் சொன்ன பைலை எடுத்து பார்க்க ஆரம்பித்தான். சரியாக பத்தே முக்காலுக்கு பிம்லா அவனை அழைத்தார்.

“கிளம்பிட்டியா சித்து?”

“கிளம்பிட்டேன் மாம்”

“ஓகே” என்று ஒற்றை வார்த்தையுடன் முடித்துக் கொண்டார்.

கார் கீயை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைலில் இருந்து “ஜெனரேட் கோட் த்ரீ” என்று செய்தியை அனுப்பி விட்டு அதை ஆப் செய்து போட்டவன் பார்க்கிங் வந்து விட்டான்.

அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு ரெஜிஸ்டர் ஆபிசில் வந்து கேஷ்விக்காக காத்திருக்க ஆரம்பித்தான். பதினொரு மணிக்கு அங்கிருக்க வேண்டியவளோ பதினொன்றரை மணி வரையிலும் வரவில்லை. அதற்குள் பல முறை அவனை அழைத்து கேட்டிருந்தார் பிம்லா. அவளுக்கும் அழைத்து பார்த்திருக்க, அவளோ போனை எடுக்கவே இல்லை. அவனும் அவளை பல முறை அழைத்துப் பார்த்தான் ஆனால் போன் ரிங் போய் கொண்டே இருந்தது அவள் எடுக்கவே இல்லை.

பனிரெண்டு மணி வரை ஆங்கிருந்து விட்டு கிளம்பியவன் பாதி தூரம் போகும் போது அவளிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லு கேஷ்வி? என்னாச்சு?”

“என் கோடவுனில் தீ பிடிச்சிருச்சு. ஷார்ட் சர்கியுட் ஆகி இருக்கு” என்றாள் பரபரப்புடன்.

அவனோ பதட்டத்துடன் “ஒ மை காட்! நான் அங்கு வரவா?” என்றான்.

“நோ நீட்! நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். பட் நம்ம ரெஜிஸ்டர் மேரேஜ் டைம் முடிஞ்சு போச்சில்ல”.

“நோ இஷுயுஸ்...இப்போ இது தான் முக்கியம். நீ அதை பார்” என்று விட்டான்.

அவளும் அங்கே இருக்கும் கலவரத்தில் அவனிடம் அதிகம் பேசாமல் போனை வைத்து விட்டாள்.

போனை அணைத்து தூக்கிப் போட்டவனின் இதழில் விரிந்த புன்னகை. மனமோ பாட்டி முதல் ஸ்டெப்ப்பில் பாஸ் ஆகிட்டேன். இனி என்னை சுற்றி உள்ள சதி வலையை மெல்ல அறுத்து எறிஞ்சுட்டு என் வர்ஷுவை என்னிடம் கொண்டு வந்துடுவேன்.

அதே நேரம் பிம்லா தேவி தன் தமையன் தினுவிடம் சப்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

“ஒரு வேலையை ஒழுங்கா செய்ய முடியாதா தினு? கேஷ்வி பாக்டரியில் எப்படி தீ பிடித்தது? இன்னைக்கு அவங்க ரெண்டு பேருக்கும் ரெஜிஸ்டர் பண்ணி இருக்கணும். எல்லாம் கெட்டுச்சு” என்று தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

“தீதீ! இது நானே எதிர்பார்க்காதது. சித்துவை பொறுத்தவரை நம்ம கண்ட்ரோலில் தான் இருக்கான். எனக்கு தெரிந்து அவன் யாரிடமும் பேசல, யாரையும் புதுசா காண்டாக்ட் பண்ணல. கேஷ்வி பாக்டரியில் நடந்தது எதேச்சையாக நடந்திருக்கலாம்” என்றவனை முறைத்தவர் “நடந்திருக்கலாம் என்பது உன்னுடைய யூகம். நாம எப்பவுமே எதையுமே இது தான் உண்மைன்னு முழுமையாக நம்பிடக் கூடாது தினு. சித்துவின் மேல இன்னும் அதிகமா கண் வைங்க. அதே சமயம் அந்தக் கிழவியையும் கவனிக்கணும்” என்று சொல்லிக் கொண்டார்.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Naa correct ah guess பண்ணிட்டேன் அவன் அம்மா தான்.... ஏன் அந்த pombaalai ku evvallavu கொலை veri.... Varshu நடந்தது yaarukum theriyala இப்போ தான் பாட்டி ku therinji இருக்கு
 

Shanbagavalli

New member
Mar 26, 2018
23
4
3
நிஜமாகவே பிம்லா தான் அம்மாவா?. தொழில் அவ்வளவு முக்கியமான?
 
  • Love
Reactions: sudharavi