Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 20 | SudhaRaviNovels

அத்தியாயம் - 20

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் -20

குஜராத் வந்து இறங்குவதற்குள் கேஷ்விக்கு நடந்த அனைத்தும் சொல்லப்பட்டது. அதை கேட்டதும் அவளது உள்மனம் எரிமலையென கொதிக்க ஆரம்பித்தது. வெளி உலகிற்கு தான் அவனது இரெண்டாவது மனைவியாகி போனதில் உள்ளம் உலை களமானது. அவளது அலைப்பேசியில் வந்திருந்த கால்களின் எண்ணிக்கை அவளது பிபியை ஏற்றிக் கொண்டிருந்தது. நட்பு வட்டம், சொந்தங்கள் என்று அவளது வாழ்க்கையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

இறுகிய மனதுடன் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளை நேராக நானாஜியிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் முன்னே சென்றமர்ந்தவள் எதுவும் பேசாமல் ஆழ்ந்து பார்த்தவண்ணம் இருந்தாள். அவளது பெற்றோர்களோ அடித்து பிடித்து ஓடி வந்தார்கள். அவளை ஆரத் தழுவி கண்ணீர் சிந்தி, நானாஜிக்கு நன்றி தெரிவித்தார்கள்.

“எதுக்கு மா அவருக்கு நன்றி தெரிவிச்சீங்க?”

“என்ன பேட்டி இப்படி கேட்டுட்ட? உன்னை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு பயந்து போயிட்டோம். நானாஜியால தான் இது சாத்தியாமாச்சு”.

“ஆமாம்! அவரால தான்! என்னுடைய மானம் மரியாதை கௌரவம் எல்லாமே கெட்டது அவரால தான்” என்றாள் அழுத்தமாக.

“பேட்டி! பெரியவர் கிட்ட மரியாதை இல்லாம என்ன பேச்சு இது?”

அன்னையை முறைத்து “இவர் பேச்சைக் கேட்டு தானே-மா எனக்கு கல்யாணம் பண்ணுனீங்க? விருப்பம் இல்லாத ஒருவனுக்கு இரெண்டாம் தாரமா கட்டி வச்சிருக்கீங்க. அதை சொன்னாரா? எந்த விஷயத்தையும் நம்ம கிட்ட சொல்லாம மூடி மறைச்சு எதுக்கு இந்த கல்யாணம்? இதனால யாருக்கு ஆதாயம்?” என்று கேட்டு அங்கிருந்தவர்களை பார்த்தாள்.

அவளது கேள்வியை கண்டு கோபமடைந்த தினு “ஏய்! எங்கே வந்து என்ன பேச்சு பேசுற? யார் கிட்ட பேசுறோம்னு யோசிச்சு பேசு! உன்னை எல்லாம் ஒரு ஆளா நினைச்சு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு இப்படி பேசுவியா?”

“அது தான் ஏன் பண்ணி வச்சீங்க? உங்களுக்கு ஆதாயம் இருக்கப் போய் தானே செஞ்சீங்க? இப்போ என்னுடைய பேர் சமூகத்தில் தி கிரேட் சித்தார்த் மல்ஹோத்ராவின் கீப். சீ!”.

அதுவரை அமைதியாக இருந்தவர் “எங்க குடும்பத்தில் வைப்பாட்டியாக இருக்க கூட ஒரு அந்தஸ்து தேவைப்படும்” என்றார் அவளை கூர்மையாக பார்த்தபடி.

அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்து நின்றவள் “இதை நான் சும்மா விட மாட்டேன். சித்தார்த்தின் மனைவி என்கிற அந்தஸ்து எனக்கு வந்தாகணும்” என்றாள்.

அவளை ஏளனமாக பார்த்து சிரித்தவர்கள் “அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? அவன் இங்கே பொம்மை மாதிரி. எந்த அதிகாரமும் கிடையாது. இங்கே நாங்கள் வைத்தது தான் சட்டம்” என்றான் தினு.

அதில் முகம் சுருங்கிப் போனவள் தாய் தந்தையிடம் திரும்பி “இது தான் இவர்களோட உண்மை முகம். இதற்காகவா என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தீங்க?” என்றாள் கோபமாக.

“அவர்களுக்கு வேற வழி கிடையாது கேஷ்வி. குஜராத்தை பொறுத்தவரை இங்கே நடக்கும் ஒவ்வொரு தொழிலும் எங்கள் கட்டுப்பாட்டில். பெண் கொடுக்க மறுத்தால் உங்கள் தொழிலை மூட்டைகட்ட வேண்டிய சூழ்நிலை” என்றார் நக்கலான சிரிப்போடு.

அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனவள் அப்படியே சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தாள். இதற்கு தீர்வு தான் என்ன? தொழிலிலும் பிரச்சனை கொடுப்பார்கள், திருமண வாழ்க்கையும் கேலிக்குறியதாகி போய் இருக்கிறது. எந்தப் பக்கமும் போக முடியாத நிலை.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த நானாஜி “பேட்டி! நான் சொல்வதை கேட்பதை தவிர உனக்கு வேறவழியில்லை. அப்படி கேட்பதால் உனக்கு சித்தார்த் மட்டுமாவது கிடைப்பான் கூடவே உங்கள் தொழிலும் காப்பாற்றப்படும்” என்றார்.

அவரை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் ஒரு அயர்ச்சி “சோ வியுகம் அமைச்சு எங்களை முடக்கிட்டீங்க. உங்க பேச்சை கேட்பதை தவிர எங்களுக்கு வழியில்லை. சொல்லுங்க என்ன செய்யணும்” என்றாள் ஒரு தெளிவுடன்.

மெல்லிய குரலில் செய்ய வேண்டியவைகளை சொல்லத் தொடங்கினார் நானாஜி. தொழிலில் அவனுக்கு கொடுக்க வேண்டிய குடைச்சல்களை மட்டும் காதில் வாங்கிக் கொண்டவள் அவனை தன் வழிக்கு கொண்டு வர சொல்லப்பட்டவைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். அதை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி தடுத்தாள். அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிறகு அங்கிருந்து கிளம்பியவளை யோசனையுடனே பார்த்துக் கொண்டிருந்தார் நானாஜி.

தினுவோ ‘இவ சரி வர மாட்டா பப்பா. இவளை நம்பி காரியத்தில் இறந்காதீங்க” என்று குதித்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவர் “அவளை நம்பி இறங்க நான் ஒன்னும் முட்டாளில்லை. அவ ஒரு துருப்பு சீட்டு நமக்கு. சித்தார்த் கிட்ட நேரடியா நெருங்க போகிறவ அவள். நிச்சயமா அவளால் சில விஷயங்கள் நமக்கு கைகூடும்” என்றார்.

ஏனோ அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால். சித்தார்த்தை தாங்கள் சாதரணமாக எண்ணி இருக்க, அவன் சாதுர்யமாக செயல்படுவது அவர்களுக்கு அதிர்ச்சி தான். ஒருவித திருப்தியின்றி அங்கிருந்து கிளம்பிச் சென்றான் தின்னு. ஆனால் தேவோ மனதிற்குள் எழுந்த சந்தோஷத்தை வெளிக்காட்டாது தந்தையை திரும்பியும் பார்க்காது சென்றார். பிள்ளைகள் இருவரும் கிளம்பியதும் தன ஆட்களில் ஒருவனை அழைத்து மூத்த பிள்ளையை கண்காணிக்கும்படி கூறினார்.
 
  • Like
Reactions: Sumathi mathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
கேஷ்வி நேரே சித்தார்த்தின் மாளிகைக்கு தான் சென்றாள். அங்கு அவள் முதலில் சந்தித்தது பிம்லாவை தான்.

அவள் வரவை எதிர்பார்த்து தான் அமர்ந்திருந்தார். அவர் கண்களில் ஒரு அலட்சியம் இருந்தது.

“நீங்களாவது எனக்கு சாதகமா பேசுவீங்களா இல்ல உங்கப்பா அண்ணன் தம்பிகள் மாதிரி பேசுவீங்களா?”

எதிரே இருந்த சோபாவை காட்டி “உட்கார்! இப்படி உணர்ச்சிவசபட்டா எதையுமே செய்ய முடியாது. உன்னுடைய உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது”.

அவரின் பேச்சில் சற்று கோபம் மட்டுப்பட “சொல்லுங்க” என்றாள்.

“முப்பது வருஷத்துக்கு முன்னே உன் நிலையில் தான் நானும் இருந்தேன். கட்டினவனுக்கு இரெண்டாம் மனைவியாக. ஆனா இன்னைக்கு நான் மட்டுமே இந்த சாம்ராஜ்யத்தின் ராணி” என்றார் கர்வமாக.

அவர் சொன்னத்தை கேட்டு அதிர்ச்சியுடன் பார்த்தவள் “உண்மையாகவா? இது எப்படி சாத்தியமாயிற்று? அப்போ முதல் மனைவி எங்கே?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

நாற்காலியில் நன்றாக பின்னுக்கு சாய்ந்தமர்ந்து கொண்டவர் கண்களை அழுந்த மூடி “நீரஜ் மல்ஹோத்ர காதலித்தது ஒரு பெண்ணை. கட்டாயத்தின் பேரில் மணந்தது என்னை. அவருடைய தந்தையின் அந்தஸ்து மோகத்திற்கு பலியானது நான். அவர் மட்டுமில்லை என்னுடைய தந்தையும் தன்னுடைய தொழிலை வலுப்படுத்த என்னை பலி கொடுத்தாங்க. ஆனால் முதலில் அதிர்ச்சி அடைந்த நான் என் குடும்பத்தை வைத்து அவளை அவரின் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கினேன். இப்போது வெளியுலகை பொறுத்தவரை நீரஜ் மல்ஹோத்ராவின் ஒரே மனைவி நான். என்னுடைய மகன் சித்தார்த்” என்றார் விரக்தியான சிரிப்ப்புடன்.

“கிரேட் அத்தை! நீங்க சொன்னதில் எனக்கு ஒரு சின்ன நம்பிக்கை பிறந்திருக்கு. உங்க வாழ்க்கையை காப்பாத்திகிட்ட மாதிரி எனக்கும் உதவி செய்ங்க”.

பட்டென்று கண்களைத் திறந்து “நான் இன்னும் முழுதாக முடிக்கல கேஷ்வி. சமூகத்தை பொறுத்தவரை நான் அதிர்ஷ்டசாலி. பணக்கார கணவன், அன்பான பிள்ளை வளமான புகுந்த வீடு. ஆனால் நான் இழந்தது? நீரஜின் அன்பு என்னைக்குமே எனக்கு கிடைத்ததில்லை. கடமைக்காக ஒரு வாழ்க்கை. அதில் உருவான பிள்ளை என்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது உண்மை தெரியும் வரை. என் வயிற்றில் உருவான பிள்ளை பிறந்ததுமே இறந்திருக்க, யாரை என் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விட்டதாக எண்ணினேனோ அவளே அவரின் முதல் மனைவியாக உரிமை உள்ளவளாக வாழ்ந்து அதற்கு சாட்சியாக பிள்ளையும் பெற்றிருந்தாள்”.

“வாட்?”

“ம்ம்...அந்தஸ்திற்காக என்னை நீரஜிற்கு கட்டி வைத்த என் மாமனார் என் செயலாலும், என் குடும்பத்தின் செயலாலும் அதிருப்தி அடைந்து இருந்திருக்கிறார். தான் தன் பிள்ளைக்கு துரோகம் இழைத்து விட்டதாக மனைவியிடம் புலம்ப ஆரம்பித்திருக்கிறார். அதன் காரணமாக என் பிள்ளை பிறந்த அதே மருத்துவமனையில் அவள் பிள்ளையும் பிறந்திருக்க, என் மகன் இறந்த செய்தி கேட்டு அவளது மகனை என் மகனாக வைத்து விட்டு தன துரோகத்தின் பரிகாரத்தை நிறைவேற்றி இருக்கிறார்”.

“அத்தை! சித்தார்த் உங்க மகன் இல்லையா?”

“இல்லை! யாரை என் எதிரியாக நினைத்தேனோ யாரை என் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விட்டதாக சந்தோஷம் அடைந்தேனோ அவள் பிள்ளைக்கு பாலூட்டி வளர்த்திருக்கிறேன்” என்றார் ஆத்திரமாக.

“..”

“அவர்களின் காதலில் விளைந்த பிள்ளைக்கு நான் பாலூட்டி வளர்த்திருக்கிறேன். என் உணர்வுகளை நினைத்துப் பார். கடமைக்காக வாழ்ந்த என் கணவரின் பிள்ளையை என் பிள்ளையாக எண்ணி வளர்த்திருக்கிறேன். இதில் என் மாமனார் தான் இறப்பதற்கு முன் கம்பனியில் இருந்து சொத்துக்கள் வரை அனைத்தையும் பேரன் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அப்போ இந்த குடும்பத்தில் நான் யார்? எவளோ பெற்ற பிள்ளையை வளர்க்கும் வேலைகாரியா? என் உணர்வுகளுக்கு இங்கு என்ன மரியாதை?”

வேகமாக எழுந்து அவரின் கைகளைப் பற்றிக் கொண்டவள் “அத்தை௧ ப்ளீஸ்! டென்ஷன் ஆகாதீங்க. எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கு. நானும் உங்கள் நிலையிலேயே இருப்பதால் உங்கள் உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது” என்றால் ஆதரவாக கரம் பற்றி.

“பெற்ற தந்தை, கூடப் பிறந்த அண்ணன், கணவர் என்று என்னைச் சுற்றி உள்ள அனைவரும் என் உணர்வுகளோட விளையாடி இருக்காங்க. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு அதில் ஆசைகள் இருக்குன்னு யாருமே நினைக்கல. பிள்ளையாவது எனக்காக யோசிப்பான்னு நினைத்தேன். ஆனா அவனுமே என் பிள்ளையாக இல்லாமல் போனது எனக்கு என்ன இருக்கு சொல்லு”என்று கேட்டு அவளது தோள்களை குலுக்கினார்.

“அத்தை! நிச்சாயமா உங்கள் கேள்விகள் ஞாயமானவை. ஆனால் இதில் மாமா மேல எந்த குற்றமும் சொல்ல முடியாதே. அவர் சூழ்நிலைக் கைதி தானே?”

“அப்போ சித்தார்த்துக்கும் அது பொருந்தும் தானே?” என்றார் கூர்மையான பார்வையுடன்.

“இல்ல அத்தை...அதெப்படி ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து கோவிலில் திருமணம் முடித்த பின்பு என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?”

“அவன் சூழ்நிலைக் கைதி கேஷ்வி” என்றார் நக்கலாக.

கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் “புரியுது அத்தை. இப்போ உங்க சூழ்நிலையில் தான் நானும் இருக்கிறேன். எனக்கு என்ன செய்யணும்னு புரியல? என் திருமண வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளணும்னு மட்டும் தோணுது”.

“அதில் அன்பிருக்காது கேஷ்வி. நிச்சயமாக அவன் உன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டான்”.

“அப்போ நான் செய்வது அத்தை?”

குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் “உனக்கு என்னால உதவி செய்ய முடியும் கேஷ்வி. ஆனா எனக்கு இதுநாள் வரை வாழ்க்கையில் எதுவுமே நல்லதா நடக்கல. உனக்கு உதவி செய்வதன் மூலம் நீ எனக்கொரு அங்கீகாரத்தை கொடுக்கணும்” என்றார் நடையை நிறுத்தி.

“சொல்லுங்க என்ன செய்யணும்?”

“பேச்சு மாறக் கூடாது”.

“நிச்சயமாக அத்தை”.

“ம்ம்...சித்தார்த் அந்தப் பெண்ணோட இன்னும் வாழத் துவங்கல. அது உனக்கான அட்வான்டேஜ். சோ அந்தப் பெண்ணை அவன் வாழ்க்கையில் இருந்து மொத்தமா விலகிப் போக வைக்க நான் உதவுகிறேன். அவனை உன் அன்பிற்கு அடிமையாக்க வேண்டியது உன் கடமை”.

“முடியுமா அத்தை?”

“முடியனும்! அவள் போயிட்டா அவனுக்கு நீ மட்டும் தான் இருப்ப. அந்த சந்தர்ப்பத்தை நீ உபயோகிச்சுக்கோ”.

“சரி அத்தை பதிலுக்கு நான் என்ன செய்யணும் உங்களுக்கு?”

நடந்து கொண்டிருந்தவர் நின்று அவளை நிமிர்வாகப் பார்த்து “சித்தார்த்தின் ஷேர்ஸ் முழுக்க என் கைக்கு வரணும். கம்பனியை பொறுத்தவரை அதிகாரத்தில் நான் மட்டுமே இருக்கணும். என் முடிவுகளே அங்கே இறுதியாக இருக்கணும். இந்த மாளிகையை பொறுத்தவரை நான் இருக்கும் வரை என் அதிகாரத்தில் தான் இயங்கனும். பிமலா தேவி மல்ஹோத்ராவை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது. என் குடும்பம் உட்பட” என்றார்.

அதுவரை அவரின் பேச்சிற்கு ஆதரவாக இருந்த கேஷ்விக்குள் இருந்த பிசினெஸ் மூளை விழித்துக் கொள்ள “எல்லாவற்றையும் உங்களுக்கு விட்டுக் கொடுத்திட்டு எங்களுக்கு எதற்கு இந்த வாழ்க்கை அத்தை?” என்றாள் கடுப்பாக.

“இது உனக்கு முன்னாடி நான் வைக்கிற சாய்ஸ். முடிவு உன் கையில். என்னுடைய உதவி தேவைப்படாதுன்னா நீயே பார்த்துக்கோ. ஆனா உனக்கு முதல் எதிரியா நானே நிற்ப்பேன். அவன் எனக்கு மகனே இல்லாத போது நீ யாரோ தான்” என்றார்.

பட்டென்று எழுந்து நின்றவள் “ஏதோ உங்க கதை என் கதை மாதிரி இருக்கேன்னு யோசிச்சா எனக்கே ஆப்படிக்க பார்க்கிறீங்களா?” என்றவள் அவரின் முன்னே சொடக்கு போட்டு “ஹலோ மிசஸ் மல்ஹோத்ரா! என் வாழ்க்கையை எப்படி காப்பாற்றிக்கனும்னு எனக்கு தெரியும். சோ இதுவரை எப்படி ஓரமா உட்கார்ந்து இருந்தீங்களோ அப்படியே இருங்க” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்.
 
  • Like
Reactions: Sumathi mathi