Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சந்திரோதயம்-12 | SudhaRaviNovels

சந்திரோதயம்-12

Kripnythaa

Moderator
Mar 26, 2018
462
150
63
சந்திரோதயம்-12

ஆத்ரேயன் பேசியதிலிருந்து அவனின் வலி புரிந்தாலும் ஆரோகன் வாயை திறந்து பேசினானில்லை. அவன் அமைதியை பார்த்தவன் "நீ சென்னையிலதான் படிக்கப் போறீயா? இல்லை வேற ஏதும் ஊா்ல காலேஜ் டிசைட் பண்ணி வெச்சிருக்கியா?", என்றக் கேள்வியை வீசினான்.

அவனின் வினாவிற்கு ஆத்ரேயனை நிமிர்ந்து பார்த்த ஆரோகன் "கொஞ்சநாளைக்கு நான் வெளியூரிலிருந்து படிக்கலாம்னு இருக்கேன். மேக்ஸிமம் மதுரைப் பக்கமா காலேஜ் சேருற ஐடியால இருக்கேன். அப்பாகிட்ட இதைப் பத்தி நானே பேசுறேன். நீ அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாத", என தன்னுடைய பதிலுடன் ஒரு வேண்டுகோளையும் வைத்தான்.

ஆத்ரேயன் அவனை ஒரு கூரிய பார்வை பார்த்துவிட்டு அதன் பின்னர் எதுவும் பேசவில்லை. ஆரோகன் தன்னுடைய முடிவை தன்னுடைய தாத்தாக்கள், பாட்டிகள், அம்மா, அப்பா என அனைவரின் முன்னர் கூறிய பொழுது அனைவரும் ஆத்ரேயனைதான் நோக்கினர். ஆனால் அவனோ இதற்கும்,தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது ஆரோகனின் முடிவு என்பது போல் வேறு எங்கோ வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

வருணாதான் மனம் தாளாமல்
" ரோ! நீ இன்ஜினியரிங் சேருறது எனக்கு சந்தோசம்தான். ஆனால் வேற வே ஊர்ல போய் படிக்கணும்னு ஆசைப்படுறது எனக்கு பிடிக்கலை. இங்கேயே இருந்து வீட்டிலிருந்து போயிட்டு வாடா. நீ இல்லைன்னா எனக்கு ஒரு மாதிரியா இருக்கும்", எனக் கூறினாள். அதனை கேட்டவன் "இல்லைம்மா! நான் கொஞ்ச நாளைக்கு ஹாஸ்டலில் இருந்து தங்கிப் படிக்கணும்னு ஆசைப்படுறேன்", என உறுதியாக உரைத்துவிட்டான்.

எப்போதும் பிள்ளைகளின் முடிவிற்கு மதிப்பு இருக்க வேண்டும் என்று எண்ணும் சந்துருவும் ஆரோகனின் முடிவிற்கு சரி என்று தலையாட்டிவிட்டான். இதனைக்கேட்ட வருணா ஆத்ரேயனிடம் "நீ எங்கடா படிக்கப்போற? ஸ்டேட் விட்டு ஸ்டேட் போய் படிக்கிற ஐடியால இருக்கியா? இல்லை வேற ஏதாவது நாட்டுக்குப் போகப் போறியா?", என தன் மன வருத்தத்தை கோபமாகப் கேட்டாள்.

" நான் எங்கேயும் போறதா இல்லை. வீட்ல நீங்க சமைச்சி போடுறதை சாப்பிட்டுட்டு இங்க இருந்துதான் காலேஜுக்கு போயிட்டு வர்றப் போறேன். அடுத்த வாரம் லைசென்ஸ் எடுக்கனும்.லைசென்ஸ் எடுத்தவுடனே அப்பாகிட்ட சொல்லி எனக்கு ஒரு வண்டியை வாங்கி தரச் சொல்லுங்க. அது மட்டும் எனக்கு போதும்", என தன்னுடைய முடிவை உறுதியாக உரைத்த ஆத்ரேயன் ஆரோகனிடம் அன்றிலிருந்து முகம் கொடுத்து பேசுவதில்லை.

ஆரோகனும் அதன்பின்னர் ஒரு சில முறை மட்டும் தன் இளவலிடம் பேச முயற்சித்தான். ஆனால் அவன் பேசாத காரணத்தினால் தன்னுடைய முயற்சியை விட்டுவிட்டு தான் எந்தெந்த கல்லூரிகளுக்கு செல்லலாம் என தேட ஆரம்பித்து விட்டான்.

மதிப்பெண்கள் வந்த பின்னர் இருவரும் ஏறத்தாழ ஒரே அளவில்தான் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.ஆத்ரேயன் சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியிலேயே தான் எடுக்க நினைத்த பிரிவுக்கு விண்ணப்பித்து அதில் சேர்த்து விட்டான். ஆரோகன் கவுன்சிலிங்கில் மதுரையில் இருக்கும் கல்லூரியை தேர்ந்து எடுத்து அங்கு செல்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கிய பின்னர் மீண்டும் ஆத்ரேயனிடம் வந்து நின்றான்.

"ரே! நான் ஊருக்கு போறது உனக்கும் எனக்கும் நல்லதுதான். நீ தேவையில்லாம வீம்பு புடிச்சுகிட்டு இருக்காத. எப்பவுமே சின்ன வயசுல இருந்து உன்னோட முடிவு, உன்னோட துணை இல்லாமல் நான் இருந்தது கிடையாது. ஆனா இப்ப முதல் தடவையா அப்படி இருக்கப் போறேன். இதுவரைக்கும் நான் உனக்காக செஞ்ச விஷயங்கள், ஏத்துக்கிட்ட பழிகள் இது எதுவுமே இல்லாமல் நான் நானா வாழப்போறேன்.

இதுதான் நம்மோட எதிர்காலத்துக்கு நல்லது. நீயும் உன்னோட லட்சியத்துக்கு மட்டுமே இங்க முயற்சி பண்ணுவன்னு நம்புறேன்", எனக் கூறியவன் இறுதியாக அவனைப்பார்த்து "எது செஞ்சாலும் உன் பேர்ல வர மாதிரியே செய்", எனக் கூறிவிட்டு நகர்ந்து விட்டான்.

ஆரோகன் தனித்து செல்வதில் கோபம் இருந்தாலும் அவன் ஊருக்கு செல்லும் பொழுது நல்ல முறையில் பேசவேண்டும் என்று எண்ணியிருந்த ஆத்ரேயன் அவன் இறுதியாக உரைத்து விட்டு சென்ற வார்த்தைகளில் மீண்டும் கோபம் கொண்டான். அதனால் அவனிடம் பேசும் முடிவை விட்டுவிட்டான்.

வருணாவும், சந்துருவும் எவ்வளவோ கூறியும் ஆத்ரேயன் ஆரோகனிடம் பேசவே இல்லை. சந்துரு ஆரோகனை தனிமையில் அழைத்து "நீ எதுக்காக தனியா போகணும்னு நினைக்கிற அப்படின்னு எனக்கு தெரியாது. ஆனா உன்னோட முடிவுக்கு மதிப்பு தரணும் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் ஒத்துக்கிட்டேன்.

நீங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ். பிறந்ததிலிருந்து உனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை அப்படின்னா ரே தான் இதுவரைக்கும் கூட நின்னு இருக்கான். இப்ப தனியா இருக்கப் போற. கொஞ்சம் பாா்த்து பத்திரமா இரு. ஆத்ரேயன் உன்கிட்ட கோவமா இருந்தாலும் நீ பேசாம இருக்கணும்னு அவசியம் கிடையாது. அவனுக்கு எப்பவும் போல மெசேஜ் அனுப்பு.அவனே ஒருநாள் புரிஞ்சுகிட்டு உன்கிட்ட பேசுவான்.

என்னோட பசங்க ரொம்ப மெச்சூா்ட் அப்படிங்கிற பெருமை எனக்கு எப்பவுமே இருந்துச்சு. ஆனா சின்ன பிள்ளைகளைவிட இப்ப மோசமா பிஹேவ் பண்ணுறீங்க. நீ ஹாஸ்டல்ல தங்குறது உனக்கு பிடிக்கலல அப்படின்னா ஆச்சி வீட்ல இருந்து போயிட்டு வா. நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்", என்று கூறி தன் மகனின் முதுகில் தட்டி விட்டு சென்றான்.

ஆரோகனுக்கும் மனதில் வருத்தமாகத்தான் இருந்தது. ஆத்ரேயனை விட்டு அவன் பிறந்ததிலிருந்து ஒருநாளும் பிரிந்து இருந்தது கிடையாது. யாரேனும் ஆரோகனை ஒரு வார்த்தை சொன்னாலும் ஆத்ரேயன் அவர்களை அடிக்காமல் விட்டது கிடையாது. ஏனோ இம்முறை இம்முடிவை எடுப்பதற்கு முன்னர் அவனிடம் பேச தோன்றவில்லை.

தான் கூறிய பின்னர் ஆத்ரேயன் தன்னிடம் சண்டை போடுவான், தன்னை இங்கிருந்து செல்ல விடமாட்டான் என்று எண்ணியே ஆரோகன் இதனை அவனிடம் கூறி இருந்தான். ஆனால் ஆத்ரேயனோ அவன் எண்ணியதற்கு மாறாக அமைதியைக் கடைப்பிடித்து ஒதுங்கி சென்று விட்டான். அதனால்தான் ஆரோகன் தன் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் தான் வேறு கல்லூரிக்கு வேறு பாட பிரிவுக்கு செல்வதில் உறுதியாக இருந்தான்.

மகன்கள் இருவரும் முறைத்துக்கொண்டு திரிய வருணா மட்டும் அவ்வப்பொழுது கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து அதான் பறந்து போகுது என சோககீதம் வாசித்துக் கொண்டிருந்தாள். அதனைக் கண்ட சந்துரு "வருணா! அவனுங்க ஒருத்தரோட ஒருத்தா் பேசாம இருக்கறது கூட எனக்கு பெரிய விஷயமா தெரியலை. ஆனா அப்பப்ப நீ இந்த டயலாக்கை விட்டு உன்னோட முகத்தை பாவமா வைக்கிற பார்த்தியா? நஜமாவே சொல்லுறேன்.

அதை பாா்க்க சகிக்கலை. கொஞ்சம் அடக்கி வாசிமா", என அவளிடம் கெஞ்சவே ஆரம்பித்து விட்டான். அதற்கும்" என்னோட சோகம் யாருக்காச்சும் புரியுதா?", என பாவமாக முகம் வைத்து கூறியவள் நேராக ஆத்ரேயனிடம் சென்று நின்றாள்.

" டேய் ரே! இந்த ரோ ஊருக்கு போயிட்டா உனக்கு போரடிக்குதோ இல்லையோ, எனக்கு போர் அடிக்குமே! நீ எப்பவுமே என் பின்னாடி திரிய மாட்ட. அவன்தான் அம்மா அம்மான்னு என்னையே சுத்தி சுத்தி வருவோம். இப்ப நான் என்னடா பண்ணுறது?", என அவனிடமே ஆலோசனை கேட்டாள்.

தன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தவன் "இனிமே உங்க துப்பட்டாவை நான் பிடிச்சுட்டு சுத்துறேன். அதனால கவலைப்படாம போய் ஏதாவது சமைக்கிற வேலையை பாருங்க. இதை என்கிட்ட வந்து சொல்றதுக்கு பதிலா அவன்கிட்ட சொல்லி இருக்கலாமே!", என வருணாவின் கேள்விக்கு பதில் கூறி அவனும் ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.

"அவன் யாரு மாதிரின்னு தெரியலைடா. ஓவர் அமுக்குணியா இருக்கான். சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் இருப்பான். ஆனா இப்ப ரொம்ப அமுக்குணி ஆயிட்டான். நீதான் உங்க ஆச்சி ஊர்ல இருந்து வந்தாங்கன்னா அவங்க கூடவே இருப்ப. அவங்களுக்கு எப்பவும் ஆரோகன் தன்னோட குளோசா இல்லை அப்படிங்கற ஒரு வருத்தம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. இப்ப அந்த வருத்தத்தைப் போக்குற விதமா மதுரைக்கு போறானோ", என தன்னுடைய சந்தேகத்தையும் வருணா கேட்டாள்.

"எப்படிப்பட்ட அறிவாளியா இருக்கீங்கம்மா. ரோ ஆச்சி கூட குளோசா இருக்கனும்னா அவங்க வீட்டுக்கு போகணும். ஆனா அவனட ஹாஸ்டல்ல இருந்து படிக்கப் போறான். எனக்கு தெரிஞ்சு மாசத்துக்கு ஒரு தடவை கூட ஆச்சி வீட்டுக்கு போக மாட்டான். ஆச்சியும், தாத்தாவும் போய் அவனை பார்த்துட்டு வந்தாதான் உண்டு. தேவை இல்லாம நீங்க கற்பனையை வளர்த்து விடாதீங்க", என அலுத்துக் கொண்டவன் அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக

"அம்மா! இவனுக்கு ஹாஸ்டல்ல மொபைல் யூஸ் பண்றதுக்கு பெர்மிஷன் உண்டா?", என வினவினான். "ஏன்டா! நாங்க படிக்கிற காலத்திலேயே காலேஜ்ல பெர்மிஷன் கொடுக்கலைன்னாலும் மொபைல் யூஸ் பண்ணுவோம். இப்ப அவங்க கொடுத்தாலும்,இல்லைனாலும் என் பையன் டெய்லி என் கூட பேசணும். அதுக்கு உங்க அப்பா ஏதாவது வழி ஏற்படுத்தி தருவார். நீ கவலைப்படாதே. நீயும் என் கூட சேர்ந்து பேசலாம்", என வருணா கூறிய பதிலில் நொந்து கொண்ட ஆத்ரேயன்

"நான் அவன்கிட்ட பேசணும்னு நினைக்கவே இல்லை. இதோட எனக்கும், அவனுக்குமான பேச்சுவார்த்தை முடிஞ்சிடுச்சு", என கூறிவிட்டு சென்று விட்டான். ஆரோகன் மதுரைக்கு செல்லும் நாளன்று வருணாவும், சந்துருவும் அவனை விட்டுவிட்டு வர கிளம்பிய பொழுது ஆத்ரேயன் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டான்.

"நீங்களே போய் அந்த துரரயை படிக்க விட்டுட்டு வாங்க. நான் இங்க கார்த்தி சித்தப்பா கூட இருந்துக்கிறேன். அப்படி இல்லைன்னா ராஜேந்திரன் தாத்தா வர்றேன்னு சொல்லியிருக்கார் நானும், அவரும் இருந்துப்போம்", எனக் கூறி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டான்.

காரில் பயணிக்கும் பொழுது சந்துருவும், வருணாவும் பேசிக்கொண்டே அவர்களின் பயணத்தை கடந்து கொண்டிருக்கையில் ஆரோகனின் மனம் ஆத்ரேயனை மிகவும் தேடியது. அவனது தம்பி என்பதை தாண்டி அவனுக்கு இருந்த ஒரே நண்பன் ஆத்ரேயன் மட்டும்தான். தேவையில்லாமல் வீம்பு பிடித்து வேறு ஊருக்கு செல்கின்றோம் என்று எண்ணினாலும் இதுதான் இருவருக்குமே நல்லது என்ற எண்ணம் முதலில் வந்து அவனை ஆறுதல் அடையச் செய்தது.

அதன் பின்னரான காலங்களில் இருவரும் அவரவர் கல்லூரி படிப்பு என்று இருந்த நிலை தவிர ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஆரோகன் மாதம் ஒரு முறை சென்னை வந்து செல்வான் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை செமஸ்டர் தேர்வுகள் முடிந்த பின்னர் வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

முதல் ஆறு மாதங்களில் ஆத்ரேயன் தன்னுடைய கல்லூரியில் மற்றவர்களுடன் ஒன்றிட சற்று தயங்கினான். அதன் பின்னர் அவனுடைய இயல்பான துரு துரு பேச்சினால் முதுநிலை படிப்பவா்கள் முதற்கொண்டு அனைவருடனும் தன்னுடைய நட்பினை பலப்படுத்திக் கொண்டான்.

ஆத்ரேயன் முதலாம் ஆண்டு படித்தாலும் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வரை அனைவரும் இவனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த காரணத்தினால் மற்றவர்கள் இவனிடம் வம்பு செய்ய யோசித்தனர்.மற்றவர்கள்தான் யோசித்தனரே தவிர்த்து ஆத்ரேயன் சிறிதும் யோசிக்கவில்லை. பாரபட்சமின்றி அனைவரையும் கலாட்டா செய்து கொண்டிருந்தான். ஆனால் அவனது கலாட்டாக்கள் எப்பொழுதும் வரம்பு மீறியதில்லை என்ற காரணத்தினால் யாரும் அதனை பெரிது படுத்தவில்லை.

கல்லூரியில் மட்டுமின்றி வீட்டிலும் ஆத்ரேயன் செய்த அலம்பல்கள் வருணாவை ஆரோகன் வீட்டில் இல்லாத நிலையை மறக்கடிக்கச் செய்தது. ஆரோகனிடம் தினமும் வருணா போன் பேசும்பொழுது அவளது அருகில் அமர்ந்து என்ன பேசுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர ஒருநாளும் அவனிடம் பேச வேண்டும் எனக் கூறியதில்லை.

சந்துரு ஆத்ரேயனுக்கு தினமும் மெசேஜ் செய்யும்படி ஆரோகனிடம் கூறி இருந்தாலும் அவனும் அதனை செயல்படுத்தவில்லை. காரணமே அறியாத இடைவெளி இருவரிடமும் விழுந்ததில் பெற்றவர்களான சந்துருவும் வருணாவும்தான் மனம் வருந்தினார்கள்.

பல வழிகளில் கேட்டுப் பார்த்தும் ஆரோகன் ஏன் இந்த முடிவை எடுத்தான் என யாரிடமும் கூற விரும்பவில்லை.ஆத்ரேயனிடம் கேட்டால் "அவன் வீணாப் போன முடிவு எடுத்ததுக்கு என்னை ஏன் கேக்குறீங்க? எதுவா இருந்தாலும் அவன்கிட்டே போய் கேட்டுக்கோங்க. எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவனுக்கு தேவைப்பட்டா அவனே வந்து பேசட்டும்", என எடுத்தெறிந்து பேசினான்.

கல்லூரியில் கலாட்டாக்கள் செய்தாலும், வீட்டில் அலப்பறைகள் கூட்டினாலும் தன்னுடைய வாழ்வின் லட்சியத்தை அடைவதற்காக ஆத்ரேயன் முதல் செமஸ்டர் முடிந்த அடுத்த நாளிலிருந்து யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தன்னை தயார் படுத்த ஆரம்பித்தான்.

அதற்கான பிரத்தியேக வகுப்புகளிலும் சேர்ந்துகொண்டு தான் வீட்டில் இருக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான். அதனைப் பார்த்து வருந்திய வருணா சந்துருவிடம் "என்ன ஜி! ரே வீட்டிலேயே தங்க மாட்டேங்குறான். வீட்ல இருக்குற நேரத்துல ஏதாவது ஒரண்டை இழுத்துகிட்டிருக்கானே தவிர முந்தி மாதிரி செல்லம் கொஞ்ச மாட்டேங்குறான்.

என்னதான் அவன் சந்தோசமா இருக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டாலும் அந்த மாதிரி இல்லைன்னு எனக்கு தோணுது. ஏன் இப்படி இருக்கான்?", என புலம்பித் தவித்தாள். "வருணா! அவனுக்கு ரோ இங்கிருந்து போனதை அக்சப்ட் பண்ணிக்க முடியலை. ரெண்டு பேரும் ஒன்னாவே இருந்தாங்க. இப்ப தனித்தனியாய் இருக்குறப்ப கஷ்டப்படுறாங்க.

இவன் நம்ம பக்கத்துல இருக்குறதால இவனோட கஷ்டம் தெரியுது. அவன் தனியா ஹாஸ்டல்ல இருக்கான். அதனால அவனோட கஷ்டம் நமக்கு தெரியாமல் இருக்கு. எதுவா இருந்தாலும் இது அவங்களோட முடிவு. நம்மளுக்கு ரெண்டு பசங்களும் ஒரே மாதிரிதான். அடுத்த வாரம் ஆரோகனைப் பாா்க்க போகணும்.

நீ அங்க வந்தும் இதேபோல புலம்பிட்டு இருக்காத. இந்த தடவை போறப்ப அம்மா,அப்பா கூட ஒரு வாரம் தங்கிட்டுதான் வரப் போறோம். ஆத்ரேயன்கிட்டே சொல்லிடு... அவனுக்கு வர இஷ்டம் இருந்தா வந்து தங்கட்டும். இல்லன்னா நீ உங்க அப்பா அம்மாவை வந்து அவன் கூட இருக்கச் சொல்லு", எனக்கூறிய சந்துரு வருணாவை இதற்கு மேல் இது போன்று புலம்பக் கூடாது என உறுதியாக கட்டளையிட்டு விட்டான்.

சந்துரு கூறியதை மனதில் இருத்திய வருணா மறுநாள் விடிந்தவுடன் ஆத்ரேயனிடம் "ரே! நாங்க இந்த வாரம் ஆரோகனை போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம். வெள்ளிக்கிழமை நைட் கிளம்பி போயிட்டு அடுத்த வாரம் சாட்டர்டே நைட்தான் அங்கிருந்து ரிட்டர்ன் கிளம்புறோம். நீயும் எங்ககூட வரணும்னு நான் ஆசைப்படுறேன்", எனக் கூறினாள்.

வருணாக் கூறியதற்கு அவளை நிமிர்ந்து பார்த்தவன் வேறு ஒன்றும் பதில் கூறவில்லை. "என்னடா நான் பேசுறதுக்கு பதில் சொல்லாம தெனாவட்டா பார்க்குற", என வருணா எகிறிக் கொண்டுவரும்பொழுது சந்துருவும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான்.

"என்னாச்சு வருணா? காலங்காத்தால கத்திகிட்டு இருக்க", என வினவியதற்கு "ஜி! நாம ஊருக்கு போறதைபட பத்தி இவன்கிட்ட சொல்லி வா்றானா இல்லையான்னு கேட்டா எதுவுமே பதில் சொல்லாம முறைக்குறான்", என சிறுபிள்ளையாக புகார் கூறினாள்.

அவள் புகார் கூறிய விதத்தில் சந்துருவிற்கு சிரிப்புதான் வந்தது. ஆனால் அந்த நேரத்திற்கு சிரித்து வைத்தால் வருணா என்ன செய்வாளோ என்ற எண்ணத்தில் சிரிக்காமல் ஆத்ரேயனைப் பார்த்தான்.

சந்துருவின் பார்வையை உணா்ந்தவன் "நான் வரலைப்பா. எனக்கு கோச்சிங் கிளாஸ் போகணும். அடுத்த செமஸ்டரில் நிறைய மார்க் பிளான் பண்ணிருக்கேன்.அதுக்காக ரொம்ப தீவிரமா படிக்கப் போறேன். அது போக கார்த்தி சித்தப்பா, சூா்யா சித்தப்பா கூட சேர்ந்து கொஞ்சம் வேலை முடிக்க வேண்டியது இருக்கு.

ஜானு பாட்டியும், தாத்தாவும் இங்க வரேன்னு சொல்லிட்டாங்க. நீங்க போன மாசமே இந்த மாசம் அவனை பார்க்க போகணும் அப்படின்னுசொல்லி இருந்தீங்கதானே! அதனால நான் தாத்தாவுக்கும், பாட்டிக்கும் ரெண்டு நாளைக்கு முன்னாடியே கால் பண்ணி ரெடியா இருக்க சொல்லிட்டேன்", என ஆத்ரேயன் பதில் கூறி முடித்த பிறகு வாயை திறந்தவாறு இதெல்லாம் எப்படா ப்ளான் பண்ணின எனதான் வருணா அவனைப் பார்த்தாள்.

"ஏன்டா மகனே! நீ அம்புட்டு பெரிய படிப்பாளியா? நம்பிட்டேன் டா, நம்பிட்டேன். உன் கூட பிறந்த அண்ணனை பார்க்கதான் வரலை. ஆச்சி தாத்தாவை பார்க்கவாச்சும் வரலாமே! என வருணா ஆத்ரேயன் பேசியதற்கு பதிலாக வினா எழுப்பினாள்.

அவளின் கேள்வியில் ஒரு முறை முறைத்தவன் "அம்மா! ஊர்ல இருக்கிற ஆச்சி, தாத்தா மட்டும்தான் எனக்கு தாத்தா பாட்டியா?ஜானு பாட்டியும், ராஜேந்திரன் தாத்தாவும் தாத்தா,பாட்டி இல்லையா? இருங்க தாத்தாக்கு போன் பண்ணி சொல்றேன்.

பிறகென்ன சொன்னீங்க? அண்ணனா? எனக்கு எத்தனை நிமிஷத்துக்கு முன்னாடி அவன் பிறந்தான்? முதல்ல அதைச் சொல்லுங்க", எனக் கேட்டான். "ஏன்டா! நல்லாதானே போய்கிட்டு இருக்கு. எங்க அப்பா ஏற்கனவே என் பொண்ணு மேல வச்ச நம்பிக்கை இல்லாம ஆக்கிட்டான்னு அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் புலம்பிக்கிட்டு இருக்காரு. நீ வேற உசுப்பேத்தி விடுறியா? இந்த கோள்மூட்டி விடுற வேலையெல்லாம் நீ உன்னோட வச்சுக்கோ.

உன்னை விட ஒரு செகண்ட் முன்னாடி பிறந்திருந்தாலும் அவன் உனக்கு அண்ணன்தான்டா. ஆனா அவன் நீ பிறக்குறதுக்கு மூணு நிமிஷத்துக்கு முன்னாடி பொறந்துட்டான். அதனால அண்ணன்தான்", என மகனிடம் வருணா வழக்காடுவதை பார்த்த சந்துரு அவன்தான் வேணும்னே வம்பு இழுக்குறான். ஆனால் இந்த லூசு அதை புரிஞ்சுக்காம அவனுக்கேத்த மாதிரி பதில் சொல்லிக்கிட்டு இருக்குது. என்னதான் சொன்னாலும் இதெல்லாம் திருந்தாது", என மனதில் எண்ணியவாறு

"வருணா! ஊருக்கு கிளம்ப தேவையானதெல்லாம் எடுத்து வை.ஆரோகனுக்கு ஏதாவது வேணும்னா சொல்லு போய் வாங்கிட்டு வந்திடுறேன்", என அவளை அவ்விடத்திலிருந்து நகர்த்த முயற்சி செய்தான்.

" ஏன் ஜி! எப்பப் பார்த்தாலும் உங்க பையன் பேசுறதுக்கு பதிலா நான் எதாவது சொல்லிடுவேனோன்னு அவனை எங்கிட்ட இருந்து காப்பாத்துறதுதான் உங்க வேலையா இருக்கு. ஆரோகனுக்கு என்ன வேணுமோ அவன்கிட்ட கேட்டு நீங்களே வாங்கிட்டு வாங்க. நான் என்ன உங்க ரெண்டு பேருக்கும் இன்டர்மீடியேட்டரா? டேய் ரே! உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு. நான் போய் வாங்கிட்டு வர்றேன்", எனக் கேட்டு அவனிடம்தான் இவ்வளவு நேரம் வம்பிழுத்துக் கொண்டிருந்தோம் என்பதை மறந்து சேம் சைட் கோல் ஒன்றை போட்டுவிட்டு அமர்ந்துகொண்டாள்.

இந்த கருமத்த தான் எதிர்பார்த்தேன் என நொந்து கொண்ட சந்துரு ஆத்ரேயனிடம் அவனின் கோச்சிங் கிளாஸ் எவ்வாறு போகிறது, அடுத்த செமஸ்டர் தேர்வுகள் எப்போது என பேச ஆரம்பித்து விட்டான். இவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வருணாவிற்கு அடுத்து என்னக் கூறி பிரச்சினை வளா்க்கலாம் என்ற எண்ணம்தான் தோன்றியது. அவளது முகத்தின் யோசனையிலேயே அதனை புரிந்து கொண்ட இருவரும் அவ்விடத்திலிருந்து சத்தம் செய்யாமல் கிளம்பிப் போயிருந்தனர்.

அவர்கள் இருவரும் சென்றதை சற்று நேரம் கழித்தேப் பார்த்த வருணா "ஒரு அறிவாளி பேசினா இவங்களால பதில் சொல்ல முடியாம எந்திரிச்சு ஓடிட்டாங்க. பேட் ஃபெல்லோஸ்", என தூசு தட்டுவது போல் தட்டி விட்டுவிட்டு தன்னுடைய வேலையை கவனிக்க சென்றாள்.

வருணாவும், சந்துருவும் ஆரோகனை பார்க்கப் புறப்படும் முன்னர் மீண்டும் ஒருமுறை ஆத்ரேயனிடம் தங்களுடன் வருமாறுக் கேட்டுப் பார்த்தனர். ஆனால் அவனோ தான் வர விரும்பவில்லை என உறுதியாக உரைத்து விட்டா.ன் அதனால் அவர்கள் இருவர் மட்டுமே கிளம்பிச் சென்றிருந்தனர்.

அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்ற பின்னர் தன்னுடைய தாத்தா, பாட்டியுடன் நாட்களை கடத்திய ஆத்ரேயன் கல்லூரியில் புதிதாக ஒரு செயலை செய்ய ஆரம்பித்திருந்தான். இது வரை அனைத்திலும் விளையாட்டாக செய்து வந்தவன் தன்னுடைய விளையாட்டுத் தனத்தை எல்லாம் கைவிட்டுவிட்டு இவ்விஷயத்தில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருந்தான்.

ஊரில் இருந்து திரும்பி வந்திருந்த வருணா ஆத்ரேயனது நடவடிக்கையில் இருந்த மாற்றங்களை அதிசயத்திலும் அதிசயமாக முதலாவதாக கண்டு கொண்டாள். அதனை கண்டு கொண்டு நேரடியாக அவனிடமே சென்று "என்னடா உன்னோட நடவடிக்கையில் கொஞ்சம் வித்தியாசம் தெரியுது. ஏதாவது கோல்மால் செஞ்சிக்கிட்டு இருக்கியா? எதுவாயிருந்தாலும் நேரடியா சொல்லிடு", எனப் பேசினால்.

தன்னுடைய அம்மா தன்னிடம் நேரடியாக வந்து கேட்ட கேட்டவுடன் ஆத்ரேயன் முதலில் அதிசயமாக பாா்த்துவிட்டு " என்னம்மா நீங்கள் இந்த மாதிரி என்கிட்ட கேக்குறீங்க? எதுவா இருந்தாலும் கண்டிப்பா முதல்ல உங்ககிட்டதான் சொல்லுவேன்", என என உரைத்தவன் ஏதோ கேட்க தயங்கினான்.

"கேளு! கேளு! ஏதோ கேட்க வந்துட்டு கேட்க யோசிக்காதே!", என வருணா ஊக்கமளித்ததும் "அவன் என்ன பண்றான்? எப்படி இருக்கான்? எப்ப லீவுக்கு வர்றான்?", என தன் பார்வையை எங்கோ பதித்தவாறு வினவினான். அவனா எவன் அவன் என வருணா சிரித்துக்கொண்டே வினவியதற்கு "அதான் என்னை விட மூணு நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்த மூத்தவன் என்ன செஞ்சுகிட்டு இருக்கான்?", என வினவினான்.

"ரொம்ப சூப்பரா இருக்கான். ஆனா கொஞ்சம் கூட நம்மை விட்டு பிரிஞ்சு இருக்குறதுக்கு அவன் ஃபீல் பண்ணவே இல்லை", என வருணாக் கூறியவுடன் தன் கையில் இருந்த வாட்டர் பாட்டிலை அவ்விடத்திலேயே வீசிவிட்டு ஆத்ரேயன் சென்று விட்டான். அவன் அவ்வாறு செய்த பின்னர்தான் வருணாவிற்கும் தான் இந்த விஷயத்தை உரைத்திருக்கக் கூடாது என தோன்றியது.

அன்றைய தினம் வருணா கூறியதற்கு கோபித்துக் கொண்டு சென்றவன் அதன் பின்னர் ஆரோகனை பற்றி வினவிடவில்லை. வெற்றிகரமாக தன்னுடைய இரண்டாவது செமஸ்டர் தேர்வுகளை முடித்து விட்டு மூன்றாவது செமஸ்டர்க்கான பருவத்தில் காலடி எடுத்து இரண்டு மாதங்கள் நகர்ந்து இருந்த நிலையில் வருணாவிடம் வந்து நின்ற ஆத்ரேயன்

"அம்மா! எனக்கு உங்க ஹெல்ப் வேணும்", எனக் கேட்டான். தன்னையும் நம்பி மகன் உதவி கேட்பதில் அகமகிழ்ந்து போன வருணா "சொல்லு! சொல்லு!என்ன செய்யணும்னு சொல்லு. கண்டிப்பா நான் செய்றேன்.என்னால செய்ய முடியாத விஷயமே கிடையாது", என மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினாள்.

"கண்டிப்பா உங்களால மட்டும்தான் இந்த விஷயத்தை செய்ய முடியும்னு தெரிஞ்சுதான் உங்ககிட்ட வந்து கேட்குறேன். நீங்க வர்ற ஃப்ரைடே சூப்பர் புடவை கட்டிகிட்டு செம மேக்கப் போட்டுகிட்டு என்கூட காலேஜுக்கு வரணும்", என ஆத்ரேயன் பதிலளித்தான். "நீ உன்னோட காலேஜூக்கு ஏதாவது கேள்பிரண்ட் கூட போற வயசுல என்னை கூப்பிடுறதுல நிஜமாகவே நான் ரொம்ப சந்தோசப்படுறேன்", என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த வருணா தான் என்ன புடவை கட்டிக் கொள்ளலாம்? இல்லை என்றால் புதுப் புடவை எடுக்கலாமா என தீவிர யோசனையில் இறங்கிவிட்டால்.

புடவையை பற்றியும் மகன் தன்னை அழைத்துச் செல்வதைப் பற்றியும் மட்டுமே யோசித்த வருணா மகன் என்ன காரணத்திற்காக அவனின் கல்லூரிக்கு அழைக்கிறான் என்பதை யோசிக்க மறந்தது விதி செய்த சதியோ? இல்லையெனில் வருணாவின் மதி செய்த சதியோ?
 
Need a gift idea? How about some novelty socks?
Buy it!