நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் – 60

அதிகாலைச் சூரியனின் இதமான அந்தக் காலை வேளையில், தனது கதிர்களால் வெளிச்சத்தைப் பரவவிட்டான். தூக்கம் கலைந்து எழுந்தவன், முன்தின இரவின் இனிய நினைவுகள் சூழ்ந்திருந்தாலும், அவளிடம் மறைத்திருக்கும் விஷயத்தைச் சொல்லாமல் துரோகம் செய்கிறோமோ!’ என்ற எண்ணம், அவனது இதயத்தில் முள்ளாக உறுத்தியது.

‘இது சரியா? என்னதான் அவள் சொல்லவேண்டாம் என்றாலும், நான் சொல்லியிருக்க வேண்டும். காலம் முழுவதும் உறுத்தலுடன் எப்படி வாழ்வது?’ என்று கேள்வி கேட்டு கொண்டாலும், ‘இதுவும் அவளுக்காக, அவளது சந்தோஷத்திற்காக... இப்போதைக்கு, அவளது மன அமைதி தான் முக்கியம். இவ்வளவு நாள் அவள்பட்ட துன்பமெல்லாம் போதும். இனியாவது, அவளை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்.

‘இந்த நிமிடம் தான் நிஜம்! இந்த நிமிடம் என் மது சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க வேண்டும். அவள் சந்தோஷத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தாலும் சமாளித்துக் கொள்வேன். என் காதலை அவளுக்கு உணர்த்துவேன். நிச்சயம் என்னைப் புரிந்துக்கொள்வாள்’ என்று ஒரு முடிவிற்கு வந்த பின் தான் அவனுக்கு மனம் நிம்மதி அடைந்தது. குளியலறை கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் சித்தார்த் கண்ணை மூடிக்கொண்டான்.

நெற்றிக்குத் திலகம் வைத்துக்கொண்டவள், அங்கிருந்த சுவாமி படத்தை வணங்கிவிட்டு, கணவனின் அருகில் வந்து நின்றாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக நினைத்து சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள், மெல்ல குனிந்து அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள். அதுவரை தனக்குள் குழம்பிக்கொண்டிருந்தவன், தன்னவளின் அருகாமையில் அதுவரை ஒடிய எண்ணங்கள் எல்லாம் மறந்து போக, அடுத்த நொடி அவனது கையணைப்பில் இருந்தாள்.

“குட் மார்னிங் மேடம்!” என்று அவள் மூக்குடன் மூக்கை வைத்து உரசினான்.

"விடுங்க சித்தூ" என்று எழ முயன்றவளை, இன்னும் இறுக அணைத்து அவளது கூந்தலில் வாசத்தை முகர்ந்தவன், "இப்படிக் காலைல ஃப்ரெஷ்ஷா பக்கத்துல வந்து முத்தம் வேற கொடுத்துட்டு, விடுங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று சொல்லிக்கொண்டே அவள் கழுத்து வளைவில் முத்தமிட ஆரம்பித்தவன் தொடர்ந்து முன்னேற, கூச்சத்தில் தவித்தாள்.

கணவனின் அணைப்பில் நெகிழ்ந்தாலும், தன்னை மீட்டுக்கொள்ள முயன்றபடி, “நேரம் ஆகுதுங்க. இன்னைக்கு நாம ஊருக்குக் கிளம்பணும்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து கொள்ள முயன்றவளை விடாமல், அவளைச் சிறிதுநேரம் முகம் சிவக்கச் செய்துவிட்டு பின்பே விடுவித்தான்.

அடுத்த ஒருமணி நேரத்தில் தயாரானவர்கள் ஹரியின் நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவர்களது உதவிக்கு நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டனர். டெல்லி வந்து சேர்ந்தவர்களை, வரவேற்று, மதுவின் நலத்தையும் கேட்டுகொண்டு ஹரி தன் அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றார்.

குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்தனர். வருண் சித்தார்த்தை விளையாட அழைத்தான். இருவரும் வீட்டின் பின்புறமிருந்த டென்னிஸ் கோர்ட்டில் வருணுக்குத் தகுந்தபடி விளையாடிக்கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்துக்கொண்டே, அருந்ததியை மடியில் வைத்து ரைம்ஸ் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சற்றுநேரத்தில் வருணை அவனுடைய நண்பர்கள் வந்து அழைக்கவும் அவர்களுடன் சென்றுவிட, மது பக்கத்தில் வந்து அமர்ந்தான் சித்தார்த்.

குழந்தையுடன் சேர்ந்து ரைம்ஸ் சொல்லிக்கொண்டிருந்தவளை, “என்ன ட்ரெய்னிங்கா?" என்றான்.
மது அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

சித்தார்த் அவளது கழுத்தில் விரல்களால் சில்மிஷம் செய்ய, அவள் கூச்சத்துடன் நெளிந்தாள். அவனது சீண்டல் தொடர்ந்துகொண்டிருக்க, அருந்ததியைத் தூக்கி அவன் மடியில் அமர வைத்துவிட்டு, சிரித்துக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள்.

அன்று மாலை வரை சித்தார்த்தின் அருகில் வராமலே அவனுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள். மாலையில் சித்தார்த் இருப்பது தெரியாமல் அறைக்குள் சென்றவளை பின்னாலிருந்து அணைத்தவன், “ஏய்... இன்னைக்கெல்லாம் எனக்கு விளையாட்டு காட்டிட்டு இருந்த இல்ல. இப்போ பாரு... வசமா மாட்டிகிட்ட" என்றான் தாபத்துடன்.

"உங்ககிட்டப் பெரிய தொல்லையா போச்சுங்க. ஒரு நேரம் காலம் கிடையாது. கதவு வேற திறந்திருக்கு. குழந்தைங்க வரப்போறாங்க விடுங்க" என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"சரி, என் கேள்விக்குப் பதில் சொல்லு. விட்டுடறேன். தொல்லையா போச்சுன்னு வேற சொல்லிட்ட... அதுக்கெல்லாம் இருக்கு உனக்குப் பனிஷ்மென்ட்" என்றவன், "உன் வெயிட் எவ்வளவு இருக்கும்?" என்றான்.

"இதென்ன இப்போ கேள்வி? ஐம்பத்தைந்து கிலோ" என்றாள்.

"அப்போ உன்னை பிபிட்டி கேஜீ தாஜ்மகால்னு பாட முடியாதா? சரி நீ சொல்வது உண்மையான்னு டெஸ்ட் பண்ணிடுவோம்" என்று சொல்லிக்கொண்டே சட்டென அவளைத் தூக்கினான்.

இதைச் சற்றும் எதிர்பாராதவள், “ஐயோ! இறக்கிவிடுங்க யாராவது வரப்போறாங்க" என்றவளை கீழே விடாமல், "பார்க்கட்டுமே என் பொண்டாட்டியை, நான் தூக்கறேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "மது! இந்தப் புடவை…" என்றபடி அறைக்குள் நுழைந்த சுபா ஸ்தம்பித்துப் போனாள்.

இருவரும் இருந்த நிலையைப் பார்த்து என்ன சொல்வது என்று புரியாமல் அவள் நிற்க, தமக்கையை எதிர்பார்க்காத சித்தார்த், அப்படியே நின்றிருக்க, ‘இவ்ளோ நேரம் படித்துப் படித்துச் சொன்னேன். கேட்டா தானே...’ என்று எண்ணிக்கொண்டிருக்க, இவை அனைத்தும் ஒருசில நொடிகளில் நடந்து முடிந்தன.

முதலில் சுதாரித்த சுபா, "சாரி" என்று வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்றபடி வெளியே சென்றாள்.
சித்தார்த், அவளை இறக்கி விட்டுவிட்டுச் சிரிக்க, மதுவோ ஏக கடுப்பில் இருந்தாள்.

"என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? என் மானமே போச்சு. அப்போதே சொன்னேன் கதவு திறந்திருக்கு யாராவது வரப்போறாங்கன்னு கேட்டீங்களா? நான் எப்படி இனி, அண்ணி முகத்தைப் பார்ப்பேன்?" என்று தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.

“அப்போ, கதவை மூடிட்டு வந்து உன்னைத் தூக்கவா?" என்று தீவிர பாவனையுடன் கேட்டவனைப் பார்த்ததும், "உங்களை" என்று சுற்றிப் பார்த்தவளை, "என்ன அடிக்க ஏதாவது தேடறியா? அடிப்பது தான் அடிக்கிற... எதையாவது தூக்கி அடிச்சி வச்சிடாதே. இதிலேயே அடி. மெத்து மெத்துனாவது விழும்" என்று பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்துக் கொடுக்க, “அடிக்க தலையணையா எடுத்து கொடுக்கறீங்க?" என்று அவனைத் துரத்தினாள்.

அறைவாசலில் சென்று நின்றவன், "நான் இப்போ வெளியே போறேன். தைரியம் இருந்த நீயும் வெளியே வா பார்ப்போம்" என்றதும் ஆத்திரத்துடன் தலையணையை அவன் மீது தூக்கி எறிய, சித்தார்த் மறுபுறம் விலகிச் சென்றுவிட தலையணை ஹாலில் போய் விழுந்தது.

"ஆஹா...! நீ விட்ட ஏவுகணை குறி தவறிப் போய்டுச்சி. இதுக்குத் தான் பேச்சு பேச்சா இருக்கணும். இப்போ பாரு என்ன ஆச்சுன்னு?" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு செல்ல, சிணுங்கலுடன் அமர்ந்தவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.

சிரித்துக்கொண்டே ஹரியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

"என்னடா மாப்பிள்ளை! தலையணை ஹாலுக்கு வந்து விழுது?” என்றார்.

"ஏன்? இந்த நேரம், இத்தனை மணிக்கு, இத்தனை நிமிஷத்துக்கு, இத்தனை நொடிக்கு... இந்த விஷயம் நடந்ததுன்னு, உங்க பொண்டாட்டி பிபிசில நியூஸ் வாசிச்சி இருப்பாங்களே வாசிக்கலையா?" என்று அப்பாவியாகக் கேட்டான்.

"கொழுப்புடா உனக்கு" என்று கையிலிருந்த குஷனை எடுத்து தம்பியை ஒன்று வைத்தாள் சுபா.

"இந்தப் பொம்பளைங்களுக்குத் தலையணைல அடிப்பதுன்னா ரொம்பப் பிடிக்கும் போல" என்றான்.

"உனக்கு இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு. இது வெறும் ட்ரையல். இனி, தான் எந்தப் பொருளால எந்த மாதிரி அடிக்கலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்க " என்று சொன்னதும், சுபா, “நீங்க அப்படி எத்தனை முறை அடி வாங்கி இருக்கீங்க?" என்று கேட்டாள்.

"விடு சுபா! நைட் தோப்புகரணம் போடும்போது கூட ஒரு ஐம்பத்து சேர்த்துப் போடச் சொல்லிடு" என்றதும், "அடப்பாவி நீ சப்போர்ட் பண்ணுவன்னு நினைச்சா இப்படிக் காலை வாரி விடுறியே?" என்றார் ஹரி.

அனைவரும் சிரிப்புடன் அமர்ந்திருக்க, "சித்தார்த்! நீங்க ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்கன்னு தெரிஞ்சதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்று உண்மையான மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

சித்தார்த் சலிப்புடன் "ம்ச்சு" என்றான்.

"என்னடா ஏன் இவ்வளவு சலிப்பு?" என்றார் ஹரி.

தன் தலையை அழுந்தக் கோதியவன் தன் மனதில் இருக்கும் தவிப்பைச் சொல்ல, சுபா கோபத்துடன், "ஏன்டா! உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? மதுவே இப்போ தான் மனசு மாறி வந்திருக்கா. அவளோட நிம்மதியா குடும்பம் நடத்தற வழியைப் பாரு. பைத்தியக்காரத்தனமா ஏதாவது செய்து இருக்குற நிம்மதியைக் கெடுத்துக்காதே" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

"என்ன பேசற சுபா? எனக்கு மட்டும் அவளோட சந்தோஷமா இருக்கணும்னு எண்ணம் இல்லையா? ஆனா, ஒவ்வொரு நாளும் என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்குமே? ”

"சித்தார்த், நீ நல்லவனா இருக்கலாம். அதுக்காக, இவ்ளோ நல்லவனா இருக்க நினைக்கக் கூடாது. இப்போ என்ன ஆகிப்போச்சு? நீ ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட. அப்போ உனக்கு மதுவைப் பற்றி என்ன தெரியும்? அவ மேல தப்பு இல்லைன்னு தெரிந்ததும் அவளைக் கல்யாணம் செய்துக்கப் பிரியப்பட்ட. அவளோட கடந்த கால வாழ்க்கை தெரிந்ததும் அவளுக்காக உருகின. உன்னால் தான் அவ வாழ்க்கை இப்படி ஆகிடுச்சின்னு உன்னை நீயே வருத்திகிட்டு இருந்த. அவளைக் கலயாணம் செய்து சந்தோஷமா வைத்திருக்கணும்னு நினைச்ச. இதுவரைக்கும் நீ செய்ததெல்லாம் சரி.

ஆனா, தேவையே இல்லாமல் நீ இந்தக் கதையை அவளிடம் ஏன் சொல்லணும்? அவ சந்தோஷமாக இருக்கணும்ன்னு தானே நீ நினைக்கிற. இந்த விஷயம் தெரிஞ்சா அவ சந்தோஷபடுவாளா?" என்று ஹரி அவனுக்குச் சொல்லிக் கொண்டிருக்க, சித்தார்த் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

"போதும்டா சித்தார்த். நீ பட்ட வேதனையெல்லாம் போதும். இந்த விஷயத்தை நாங்க யாரும் அவளிடம் சொல்லப் போரதில்ல. நீ இன்னும் அந்த டைரியைப் பத்திரமா பொக்கிஷமா வச்சிட்டு இருக்கியா? ஊருக்குப் போனதும் முதல் வேலையா அந்த டைரியை எடுத்து உன் தலையைச் சுத்தித் தூக்கிக் கடல்ல போடுவியோ... இல்ல எரிச்சிச் சாம்பலாக்குவியோ... இன்னொரு முறை உறுத்தலா இருக்கு. அதுவா இருக்குன்னு நீயே உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே. புரிஞ்சிதா" என்று அவன் கையை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தாள்.

எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்கும் தன் தம்பியைப் பார்த்தவள், நம்பிக்கை இல்லாமல் தன் கணவனைப் பார்த்து உதட்டைச் சுழித்தாள். இதற்கு மேல் கடவுள் விட்ட வழி என்று சொல்வது போல ஒரு பார்வைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

தற்செயலாக ஜன்னலருகில் வந்த மதுவின் காதில், இவர்கள் பேசியது எதுவும் விழவில்லை என்றாலும், இந்தக் காட்சியைப் பார்த்துக் குழம்பினாள்.

‘இவ்வளவு நேரம் நன்றாகத் தானே இருந்தார். இப்போது என்ன ஆயிற்று? ஒருவேளை பிஸ்னசில் ஏதாவது பிரச்சனையா?’ என்று குழப்பத்துடன் அங்கிருந்து விலகினாள்.

அப்போதிருந்தே சித்தார்த்தைக் கவனிக்க ஆரம்பித்தாள். அனைவரும் இருக்கும் போது நன்றாகப் பேசுபவன் தனிமை கிடைக்கும் போது சற்றுச் சோர்வாகவே இருந்தான். நாளையும் இதே நிலை தொடர்ந்தால், ஊருக்குச் சென்றதும் கட்டாயம் அவனிடம் பேசவேண்டும். அவனுடைய இந்த முகவாட்டம் தன்னைப் பாதிக்கிறது என்று உணர்ந்தாள். அவன் தன் உயிரோடுக் கலந்துவிட்டான் என்று புரிந்தது. முகத்தில் மெல்லப் புன்னகை மலர்ந்தது. ‘என்ன ஆனாலும், உனக்கு நான் இருக்கிறேன்’ என்று தன் நெஞ்சோடு அணைத்து, ஆறுதல் சொல்லவேண்டும் போலத் தோன்றியது.

மறுநாள் எழுந்ததும் சித்தார்த்தின் முகத்தைப் பார்த்தவள், சாதாரணமாக இருப்பதாகத் தோன்ற நிம்மதியுடன் வேலைகளைக் கவனித்தாள். மேலும் இரண்டு நாட்கள் சுபாவின் வீட்டில் இருந்தவர்கள் அன்று ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர்.

மதுவிற்கு குங்குமம் கொடுத்துவிட்டு, ஆதரவாக அவள் கையைப் பற்றிக்கொண்டு, "ரொம்பச் சந்தோஷம் மது! நாங்க எதிர்பார்த்தது இதைத் தான். அவன் கொஞ்சம் கோபக்காரன். ஏதாவது முன்கோபத்தில் சொன்னாலும், நீ கொஞ்சம் பொறுமையா போடா. அவனுக்கே தெரியாமல் அவன் ஏதாவது தப்பு செய்திருந்தாலும், நீ மட்டும் அவனை வெறுத்துடாதே" என்று கண்கலங்கச் சொன்னதும், "என்ன அண்ணி இப்படிச் சொல்றீங்க? அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது" என்று சொல்லிகொண்டிருக்கும் போது சித்தார்த் அருந்ததியைத் தூக்கிக்கொண்டு வந்தான்.

அவள் அவசரமாகக் கண்ணைத் துடைப்பதைப் பார்த்தவன், “என்ன சுபா என் பொண்டாட்டியை ஏதாவது மிரட்டினாயா?" என்று கேட்டான்.

"நான் ஏன்டாப்பா உன் பொண்டாட்டியைத் திட்டப் போறேன். உன்னைப் பத்திக் கொஞ்சம் சொன்னேன். உன் பொண்டாட்டி பயந்துட்டா" என் பாவனையுடன் சொல்ல மூவரும் சேர்ந்து சிரித்தனர்.

மதுவிடம் ரகசியமாக, “மது கூடிய சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லணும் ஓகே வா?" என்று சுபா கேட்டதும், கன்னங்கள் சிவந்து நாணப் புன்னகையுடன் நின்றவளைக் கண் நிறைய நிறைத்துக் கொண்டான்.

ஊருக்குச் செல்லும் முன்பு இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் இருந்த வித்தியாசத்தை அனைவருமே நன்கு உணர்ந்தனர். சுபா ஏற்கெனவே விஷயத்தைச் சொல்லியிருந்தாள். தேவகி சந்தோஷத்தை வெளிக்காட்டாத போதும், பாபா கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்ததே, அவரது மனத்தின் நிறைவை வெளிக்காட்டியது.

மறுநாள் காலையில் ஹோமிற்குச் செல்லக் கிளம்பிய மது, நேத்ராவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவளது அறைக்குச் சென்றாள். எப்போதும் துள்ளிக் குதித்து அஷ்வந்துடன் வம்பு செய்தபடி வளைய வருபவள், இன்று கண்களில் கண்ணீருடன் கட்டிலில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

“நேத்ரா! ஏன் டல்லா இருக்க? ஹாஸ்பிட்டல்ல ஏதாவது பிரச்சனையா? எதுக்கு அழற?" என்று கேட்டதும் பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்தியபடி, "ஒண்ணுமில்ல அண்ணி! நேத்து ஹாஸ்பிட்டல்ல ஒரு கேஸ் ரொம்ப முயற்சி செய்தும் காப்பாத்த முடியல. அதை நினைச்சேன்..." என்று பாதி உண்மையையும் பாதி பொய்யுமாகச் சொல்லி முடித்தாள்.

"ஒஹ்! என்ன செய்றது? சில சமயம் நம்மையும் மீறி ஏதாவது நடக்கும் போது, நாம ஒண்ணுமே செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டவள், "சரி நான் ஹோமுக்குப் போறேன். நீயும் வரியான்னு கேட்கத்தான் வந்தேன்" என்றாள்.

ஹோமுக்கு என்றதும் அவசரமாக திரும்பியவள், “இல்லண்ணி எனக்கு எங்கேயும் வரப் பிடிக்கல. நீங்க போய்ட்டு வாங்க" என்றாள்.

யோசனையுடன் நாத்தனாரைப் பார்த்துவிட்டு அவள் கிளம்பிச் சென்றதும், நேத்ரா கதவை மூடிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். நேத்ராவின் நடவடிக்கையில் தெரியும் மாற்றத்தைக் கவனித்து கொண்டிருந்த அஷ்வந்த், இரண்டு நாள்களாக அவளிடம் பெரும் மாற்றம் தெரிவதை உணர்ந்தான்.

அதைப் பற்றி யோசித்தபடி தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தவன் அறைக்குள் நடந்த இருவரின் உரையாடலையும், மது சென்றதும் நேத்ராவின் அழுகையும் அவனை ஓரளவிற்கு நடந்தவற்றை யூகிக்க வைத்தது.

நேத்ரா இரண்டு நாள்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை எண்ணி எண்ணி அழுது கொண்டிருந்தாள். அன்று வீட்டிற்கு ஸ்ரீ தன் நண்பரை அழைத்துக்கொண்டு ஆதியைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். ஸ்ரீராமைக் கண்டதும் நேத்ரா அலுவலக அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருக்க, அவன் வேண்டா வெறுப்பாக அவளது கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல அவளுக்கே தோன்றியது.

அவளுக்குப் போன் வரவும், வெளியே வந்து பேசிக்கொண்டிருந்த போதும், பார்வை முழுதும் ஸ்ரீராமின் மீதே இருந்தது. ஆனால், அவன் மறந்தும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. காஃபி கொண்டு வந்த மீராவிடமும், அவனை விசாரித்த தனது அன்னையிடமும் எந்தத் தயக்கமும் இல்லாமல் நன்றாகச் சிரித்துப் பேசுபவன் தன்னிடம் மட்டும் அளந்து வைத்தது போலப் பேசுவதையும், அதுவும் சில நாள்களாகத் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பது போலத் தோன்ற, ‘இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்’ என்று எண்ணிக்கொண்டாள்.

அவனுக்காக வெளியே தோட்டத்திலேயே காத்திருந்தாள். ஆனால், வெளியே வந்தவன், அவள் அங்கே நின்றிருந்ததைப் பார்த்தது போல் கூட அவளுக்குத் தோன்றவில்லை. தன் நண்பருடன் பேசிக்கொண்டே சென்றுவிட்டான்.

‘ஸ்ரீ நீங்க என்னை எவ்வளவு அவாய்ட் பண்றீங்களோ... அந்த அளவுக்கு என் மனசுல ஆழமா பதிந்துக்கொண்டே தான் இருக்கிறீர்கள். வரேன் எனக்கு இரண்டில் ஒன்று தெரிந்ததே ஆகவேண்டும்’ என்ற அவளது பிடிவாத குணம் தலை தூக்கியது.

மறுநாள் விடிந்தும் விடியாததுமாக, ஸ்ரீராமின் வீட்டுக் கதவை தட்டினாள். ‘யாரது? இவ்வளவு காலையில் ஏதாவது குழந்தைக்குப் பிரச்சனையா?’ என்று எண்ணிக்கொண்டே தூக்கம் கலையாத கண்களுடன் அவசரமாக வந்து கதவைத் திறந்தான்.

புன்னகையுடன் நின்றிருந்த நேத்ராவைப் பார்த்ததும் என்ன சொல்வதென்று தோன்றாமல் நின்றுகொண்டிருக்க, "குட் மார்னிங் ஸ்ரீ!" என்று அவளே ஆரம்பித்தாள்.

பதிலுக்குக் "குட் மார்னிங்" என்றான்.

"ஹலோ உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். உள்ளே வான்னு கூப்பிட மாட்டீங்களா?" என்று கேட்டாள்.

"உள்ளே வா! உட்கார்" என்றவன் முகத்தைக் கழுவிக்கொண்டு இருவருக்கும் காஃபி எடுத்துக்கொண்டு வந்தான்.

"ம்ம்.. தேங்க்ஸ்" என்று சொல்லி வாங்கிக்கொண்டவள், அதை ரசித்து ருசித்துப் பருக, அவனது பொறுமை பறந்து கொண்டிருந்தது.

அவள் ஒரு முடிவுடன் தான் வந்திருக்கிறாள் என்று புரிந்துக்கொண்டவன், "என்ன விஷயமா என்னைப் பார்க்க இவ்வளவு காலையில் கிளம்பி வந்திருக்கிங்க?" என்றான்.

அவள் பொறுமையாக, "காஃபி சூப்பரா இருந்தது" என்று புன்னகைத்தாள்.

கடுப்பானவன், "அவ்வளவு தானே ரொம்பத் தேங்க்ஸ். யாரும் பார்க்கும் முன்ன கிளம்புங்க" என்று அவளைத் துரத்தாத குறையாகச் சொல்லிவிட்டு, கப்புகளை எடுத்துச் சென்று கழுவி வைத்துவிட்டுத் திரும்பியவன், கிச்சன் வாசலில் நின்றிருந்த நேத்ராவைப் பார்த்தான்.

“இந்த வேலையையும் நீங்கதான் செய்யணுமா? இதுக்குத் தான் வீட்ல ஒரு பொண்ணு இருக்கணும்ங்கறது. வீட்டு வேலையையும் கவனிச்சிக்கிட்டு, உங்களையும் பார்த்துக்குவாங்க" என்றாள் பார்வையில் எதிர்பார்ப்புடன்.

அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், "உங்க சஜஷனுக்கு ரொம்ப நன்றி. நீங்க கிளம்பறீங்களா... எனக்கு வேலையிருக்கு" என்று சொல்லிவிட்டு அவளைத் தாண்டிச் செல்ல முயன்றான்.

நேத்ரா கோபத்துடன் குறுக்கே நின்று, அவனைத் தடுத்து நிறுத்தினாள்.

"நேத்ரா! என்ன இது? வழியை விடு" என்றான்.

"ஸ்ரீ இன்னுமா உங்களுக்குப் புரியல? இல்ல, புரியாதது போல நடிக்கிறீங்களா? இன்னும் எப்படிச் சொல்லி உங்களுக்குப் புரிய வைப்பேன்" என்று அழாத குறையாகச் சொன்னாள்.

"நீ சொல்றது, எனக்குப் புரியுது. ஆனா, இது நடக்காத விஷயம். உன் மனசைக் குழப்பிக்காதே. நீ சின்னப் பொண்ணு. உனக்கு எப்போ என்ன செய்யணும்னு பார்த்துச் செய்ய உனக்கு அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் இருக்காங்க. நீ முட்டாள்தனமாக ஏதாவது யோசிக்காதே. இன்னைக்குச் சரின்னு தோணுறதெல்லாம் நாளைக்கு உனக்குத் தப்பா தெரியும். வீட்டுக்குப் போய் நல்லா யோசி. உனக்கே புரியும்" என்று பொறுமையாகச் சொன்னான்.

"இல்ல ஸ்ரீ! நான் நிதானமா தான் இருக்கேன். எங்க வீட்டில் ஏதாவது சொல்வாங்கன்னு நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்" என்று பேசிக்கொண்டே போக அவன் கோபத்துடன், "நானும் சின்னப் பொண்ணாச்சேன்னு பார்த்துட்டே இருக்கேன். நீ பேசிட்டே போற. வீட்ல சொல்லும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துகிட்டி நிம்மதியா இரு.

நான் இந்த ஹோமை என் உயிரா நினைத்துக்கொண்டிருக்கிறேன். இதை விட்டு என்னால் வரமுடியாது. இந்த வீட்டில உன்னால வாழ முடியாது. நீ வசதியா வளர்ந்தப் பொண்ணு. என்னைக் கல்யாணம் செய்துகிட்டா அதையெல்லாம் இழக்கணும். என்னை நம்பி வரும் பொண்ணுக்கு மூன்று வேலை சாப்பாடு போட்டு, அவளை நிம்மதியா வச்சிக்க மட்டும்தான் என்னால முடியும். அப்படிச் சாதாரணமா வாழ உன்னால முடியாது.

இந்த ஹோமை கவனிச்சிக்க பொறுமை ரொம்ப முக்கியம். உன்னோட துடுக்குத்தனத்திற்கும், கோபத்திற்கும், விளையாட்டுத்தனத்திற்கும், இந்த இடம் ஒத்துவராது இதுக்கு மேல, நீ எதுவும் பேசாம கிளம்பு. இனி, நீ இங்கே வரவேண்டாம்" என்று சொன்னதும், அவள் அசையாமல் அவனையே பார்த்துக்கொண்டு நிற்க, கோபத்துடன் அவள் கையைப் பிடித்து இழுத்துவந்து வெளியே விட்டான்.

நடந்ததை நினைத்தவள், "ஸ்ரீ! எப்படி ஸ்ரீ என்னோட காதலை மறுக்க உங்களால முடிஞ்சது?" என்று அழுகையோடு புலம்பினாள்.

ஜன்னல் வழியாகப் பார்த்த அஷ்வந்த், தன் தங்கையின் கண்ணீரைக் கண்டதும் தாங்க முடியவில்லை. இன்றே இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டே சென்றான்.

அன்று மாலை ஆதியும், சித்தார்த்தும் வந்ததும் தன் அண்ணிகளை, தனியாக அழைத்துச் சென்றவன் அனைத்தையும் சொன்னான். அதன்படி ஐவரும் கூடிப் பேசி, அப்பாவிடம் சொல்லி நேத்ராவிற்கு உடனே மாப்பிள்ளைப் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என்ற முடிவுடன், அன்று இரவே தன் பெற்றோரிடம் சென்று பேசினார். இது எதையும் அறியாத நேத்ரா, தன் அறையில் சுருண்டு படுத்திருந்தாள்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, அன்று காலையில் நேத்ரா ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது, அவளது தந்தை அழைத்தார்.

"நேத்ராம்மா! உனக்குக் கல்யாணம் செய்துடலாம்ன்னு முடிவு செய்திருக்கோம். நல்ல சம்மந்தம். நீ மாப்பிள்ளையோட போட்டோ பார்த்துச் சரின்னு சொன்னா, நிச்சயத்தை முடிச்சிடலாம். என்ன சொல்கிறாய்?" என்றதும், நேத்ரா கோபத்துடன் கையிலிருந்த கோட்டை தூக்கி வீசினாள்.

"யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்தீங்க? எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்" என்று திடமாகச் சொன்னாள்.

"நேத்ரா! ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற? அப்பா உன்னோட நன்மைக்குத் தானே சொல்றாங்க. மாப்பிள்ளை வீட்ல பெரியவர்க யாரும் கிடையாது. ஒரே ஒரு தங்கை மட்டும் தான் இருக்காம்" என்று மதுவைப் பார்த்துச் சொல்ல, அவள் புன்னகையோடு நின்றிருந்தாள்.

"யாருக்கு யார் வேணாலும் இருந்துட்டுப் போகட்டும். எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்" என்று எரிச்சலுடன் சொன்னாள்.

"அடடடடா... நீங்க முதலில் மாப்பிள்ளையோட போட்டோவை அவகிட்ட காட்டுங்க. இந்த மாப்பிள்ளையை அவ வேண்டாம்னு சொன்னா அவள் காலம் பூரா ஒவ்வையார் தான். அவளுக்கு வேற மாப்பிள்ளையைப் பார்க்கவே பார்க்காதீங்க. நேரா நம்ம மேட்டரை முடிச்சிடுங்க" என்று வெட்கப்படுவது போலச் சொன்னான் அஷ்வந்த்.

"ரொம்ப நிம்மதி! நானா உங்களைக் கல்யாணம் செய்து வைங்கன்னு கேட்டேன். அப்படி உங்களுக்கெல்லாம் யாருக்காவது கல்யாணம் செய்து வைக்கிறதென்றால் இதோ, இந்த தடியனுக்கே கல்யாணம் செய்து வைங்க. எனக்கு நேரமாகுது" என்று கிளம்ப ஆயத்தமானாள்.

"நேத்ரா! இந்தப் போட்டோவைப் பாரு. உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம்" என்று ஆதி சொல்ல, "பாரு நேத்ரா! உனக்கு வேண்டாம்னா வேண்டாம்" என்று சித்தார்த்தும் அழுத்திச் சொன்னான்.

வேறு வழி இல்லாமல் போட்டோவை வாங்கிப் பார்த்தவள் நம்பமுடியாமலும், சந்தோஷத்திலும் போட்டோவையே பார்த்துக் கொண்டிருக்க. "என்ன நேத்ரா இந்த மாப்பிள்ளை பிடிக்கலையா? வேண்டாம்னு சொல்லிடலாமா?" என்று கேட்ட அம்மாவை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள். சந்தோஷத்தில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

"இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம். சந்தோஷமா?" என்று கேட்டதும், "அப்பா தேங்க்ஸ்! ரொம்பத் தேங்க்ஸ்" என்று அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

"ம்ம்...ம்ம்... போதும் போதும் இந்தப் பாச மழை. இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் முடிவாக யாரு காரணம்னு நம்ம கல்யாணப் பொண்ணுகிட்ட எடுத்துச் சொல்லுங்க" என்று அஷ்வந்த் சாவதானமாக கால் மேல் கால் போட்டு சோஃபாவில் அமர்ந்தான்.

"ஆமாம் நேத்ரா! அஷ்வந்த் தான் எங்களிடம் வந்து சொன்னான். அதனால் தான் நாங்க நேராக போய் ஸ்ரீராமிடம் கல்யாணத்திற்குப் பேசினோம்” என்றாள் மீரா.

"மாமாவும், உங்க அண்ணன்களும் நேர்ல போய்ப் பேசினாங்க. ஹரி அண்ணாவும் டெல்லிலயிருந்து பேசினாங்க" என்று மது சொல்ல, அஷ்வந்தை நோக்கி வந்தவள் “ரொம்பத் தேங்க்ஸ்டா அஷ்வந்த்” என்று அவன் மடியில் சாய்ந்து அழ, அவன் மட்டும் அல்ல அனைவருமே நெகிழ்ந்து இருந்தனர்.

அவளைச் சிரிக்க வைக்கவேண்டி, "ஏய் நேத்ஸ்! இப்போ உனக்கு ஒரு கதை சொல்றேன் கேட்க்கிறாயா?" என்றான்.

"ஏன்டா? உன்கிட்டக் கொன்சம் ஃபீளிங்க்ஸைக் காட்டினதுக்கு, நீ கதைன்னு சொல்லிப் போடப் போற மொக்கைக்கு நாங்களெல்லாம் பலி ஆகணுமா?" என்று பரிதாபமாகக் கேட்டாள்.

“ச்சு.. தேவையில்லாம பேசாதே. கதையைக் கேளு" என்றவன், ஒரு காட்டுல ஒரு குரங்கு கூட்டம் இருந்ததாம். அந்தக் குரங்கு கூட்டத்துத் தலைவன் திடீர்ன்னு இறந்து போச்சாம். உடனே, எல்லாக் குரங்கும் கூடி நமக்கு ஒரு தலைவன் தேவை. அதனால் நாமளே ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்கணுன்னு ஒரு வயசான குரங்கு சொல்லுச்சாம். சரின்னு எல்லா குரங்கும் ஒத்துக்குச்சாம்.

அப்போ அந்த வயசானக் குரங்கு, நான் ஒரு கேள்வி கேட்பேன். அதுக்கு யார் சரியான பதில் சொல்றாங்களோ, அவங்க தான் தலைவன்னு சொன்னதும், எல்லா குரங்குகளும் சரின்னு சம்மதம் சொல்லிவிச்சி. இப்போ அந்த வயசான குரங்கு கேட்டுதாம்" என்று சொல்லிக்கொண்டிருக்க, அது என்ன கேள்வி என்று அனைவரும் அஷ்வந்தின் முகத்தைப் ஆர்வத்துடன் பார்த்தனர்.

"சேவல், வட்டமா முட்டை போடுமா? இல்ல ,சதுரமா முட்டை போடுமா?" என்று கேட்டதும் நேத்ரா அவசரமாக, "டேய்! சேவல் எங்கேடா முட்டை போடும்? கோழி தானே முட்டை போடும்" என்று சொல்ல, அஷ்வந்த் அவளது கன்னத்தை வழித்து, “என் தங்கம்!” என்றவன் தன்னை மீறி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

"ஏன்டா நீ என்ன லூசா? எதுக்கு இப்படிச் சிரிக்கிற?" என்று எரிச்சல் பட்டதும், "கங்கிராஜுலேஷன்ஸ்!” என்று அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான்.

"எதுக்குடா?" என்றவளைப் பார்த்துச் சிரிப்புடன், "நீ சரியா பதில் சொல்லி அவ்வளவு பெரிய குரங்கு கூட்டத்துக்குத் தலைவியா ஆகிட்டியே அதுக்குத்தான்" என்றதும், அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க, "அடப்பாவி! உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று நேத்ரா அவனைத் துரத்த, வேண்டுமென்றே அவளிடம் மாட்டி இரண்டு உதை வாங்கினான்.

சந்தோஷத்திலும், சிரிப்பிலுமே அன்றைய நாள் ஓடியது. இரவு, சித்தார்த்திற்குப் பால் எடுத்துக் கொண்டு வந்தவளை, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், கை நீட்டி அழைக்க, புன்னகையுடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். இருவருமே சிறிதுநேரம் ஒன்றும் பேசவில்லை.

"ஏங்க. நீங்க ஸ்ரீ அண்ணாகிட்ட போய் பேசி நேத்ரா கல்யாணத்தை இவ்வளவு சீக்கிரம் முடித்துவைப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. ஸ்ரீ அண்ணா ஸாஃப்ட். ஆனா, ஒரு முடிவெடுத்தா, அதிலிருந்து மாறவே மாட்டார். அதான் எனக்கு ஆச்சரியம்" என்றாள்.

"அது பெரிதாக ஒன்றும் இல்லை மது! நேத்ரா பத்திக் கொஞ்சம் எடுத்துச் சொன்னேன். அவர் கொஞ்சம் கௌரவம் பார்க்கிறவர். அதான், கல்யாணமானாலும் நாம் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ எந்த விதத்திலும் அவராக கேட்காம உதவி செய்யக்கூடாதுன்னு நினைத்தார். அவரோட பேச்சிலேயே அது தெரிந்தது. அதான், அதற்கு ஏற்றார்போல பேசினேன். விஷயம் சுபம்" என்றான்.

"நீங்க யாரு? எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன். உங்க பேச்சுல மயங்காத ஆள் இருக்க முடியுமா?" என்று அவள் சிரிக்க, "உன்னைத் தவிர" என்றான் புன்னகையுடன்.

புன்னகைத்தவள் அவன் மார்பை நீவியபடி, "அது அப்போ, இப்போ...” என்று சொல்லிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்தவள் அன்புடன் முத்தமிட்டாள்.

"என்ன மேடம்?, இன்னைக்கு நல்ல மூட்லயிருக்கீங்களா... கேட்காமலே எல்லாம் கிடைக்குது" என்று சிரித்தான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “இன்னைக்கு நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்குன்னா, அதுக்கு நீங்களும் ஒரு காரணம்ன்னு நினைக்கும் போது எனக்கு அப்படியே பறக்கறது போலயிருக்கு" என்றாள்.

"பறந்தது போதும்... கொஞ்சம் கீழே வாங்க" என்று மேலும் இறுக அணைத்துக்கொண்டான்.

அவளும் சிறிதுநேரம் அவனுக்கு ஈடுகொடுத்து நடந்துகொண்டாள். இருவரும் தங்களை மீட்டுக்கொண்ட நேரத்தில் மது அவனிடமிருந்து விலகிச் செல்ல முயல, “எங்கே போற? போதும் நீ என்னைப் பார்த்து ஓடி ஒளிந்ததெல்லாம். இனி, என்னை விட்டுப் போக நினைச்சா அவ்வளவுதான்" என்று அவளை அருகில் இழுத்து அணைத்தான்.

சிரித்தபடி, "ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா உங்களுக்கு" என்று சொல்லிவிட்டுக் குறும்பாகச் சிரித்தாள்.

"அது, காதலிக்கத் தெரியாதவர்களுக்காகச் சொல்லி இருப்பாங்க. நாம தான் காதல் பறவைகளாச்சே" என்று அவள் கழுத்தில் முத்தமிட்டவன், தொடர்ந்து முன்னேற அவனது கரங்களும் அவளுடலில் அத்துமீறத் துவங்கின.

அத்தியாயம்---61

காலையிலிருந்து அனைவரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, மது மாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்தனர். தேவகியும், ராம மூர்த்தியும், வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்து சென்றனர். "அக்கா ஒரு வழியா பொண்ணுக்கும் கல்யாணத்தை முடிவு செய்துட்டீங்க" என்று ராஜி சொல்ல. "எல்லாம் கடவுள் செயல் ராஜி, விமலா வாங்க இப்படி உட்காருங்க. வாம்மா வித்யா, மேகலா எப்படியிருக்கீங்க? செக்அப் போய் வரீங்களா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

"பெரியம்மா மது எங்கே?" என்றாள் வித்யா. “மேல அவ ரூம்லயிருக்காம்மா போய் பாரேன்" என்று வித்யாவையும், மேகலாவையும் அனுப்பி வைத்தார்.

சித்தார்த் மதுவின் இடையை பற்றி அணைத்தபடி நின்றிருக்க "பேசாம நில்லுங்க சித்தூ! நீங்க என்ன சின்னக் குழந்தையா? இன்னைக்கு என்னவோ புதுசா என்னை டை கட்டிவிடச் சொல்றீங்க?" என்று புலம்பிக்கொண்டே டையைக் கட்டினாள்.

டையைக் கட்டி முடித்ததும் விலக முயன்றவளை விடாமல் அவள் இடையில் சித்தார்த்தின் கரங்கள் விளையாட, "என்னங்க இது, எல்லோரும் வந்திடுவாங்க. கிளம்பியாச்சு இல்ல, நல்ல பிள்ளை இல்ல. கீழே போங்க. நான் பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்" என்று அவன் தாடையை பிடித்து கொஞ்சியபடி சொன்னாள்.

"ஹே ... ஏஞ்சல் இன்னைக்கு என்னவோ தெரியலைடா அப்படியே உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் போலிருக்கு. என் கைக்குள்ளேயே வைத்திருக்கணும் போலிருக்கு. என்ன மாயம்டா செய்த, என்னை இப்படி மயக்கி வச்சிருக்க?" என்றான் கிறக்கமாக.

உதட்டைக் கடித்துக்கொண்டு சிரித்தவளின் முகத்தைப் பற்றி அருகில் இழுத்தவன், "மது....மை....ஸ்வீட் லிட்டில் ஏஞ்சல்" என்று கிறக்க குரலில் கொஞ்சிக்கொண்டே அவள் முகமெங்கும் இதழ் பதித்தான்.

தன் முகம் சிவக்க வாங்கிக்கொண்டு அவனுக்குப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தவள் நிலைமையை உணர்ந்து, "சித்தூ! எல்லோரும் வந்திடுவாங்க. கிளம்பி போகணும் சித்தூ” என்று சொன்னாலும் குரல் வெளியே வராமலும், அவனிடமிருந்து விலகாமலும் சொன்னாள்.

அவனும் அவளை விலக்காமல், "போவதென்றால் போ" என்றான்.

"போ போன்னு சொல்லிட்டு இப்படி என்னை விடாமல் பிடித்திருந்தால் என்ன அர்த்தம்?” என்று பேசிக்கொண்டே தன்னாலும் அவனிடமிருந்து தன்னை மீட்டுக்கொண்டு வர முடியாமலும், அவனது அன்பின் வேகத்தில் கட்டுண்டு, தன் இரு கைகளையும் மாலையாக கோர்த்து அவன் கழுத்தை சுற்றிப் போட்டவள்......

"அச்சச்சோ....., அய்யோ...!! ஐயம் சாரி" என்ற வார்த்தைகளால் திடுக்கிட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, மேகலாவும், வித்யாவும், கதவை மூடிக்கொண்டு வெளியே செல்வதைப் பார்த்ததும், மது வெட்கத்திலும், சித்தார்த் ஒருவிதமான தவிப்பிலும் இருக்க, சமாளித்த சித்தார்த், "மது நான் கீழே போறேண்டா, நீ சீக்கிரம் வா" என்று கட்டிலில் அம்ர்ந்திருந்தவளின் கரத்தை பிடித்து அழுத்திவிட்டுக் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே சென்றான்.

வெளியே மேகலாவும், வித்யாவும், மனம் நிறைய மதுவின் மாற்றம் குறித்து சந்தோஷத்துடனும், இப்படி அவர்களின் அந்தரங்கத்தில் அத்து மீறி நுழைந்துவிட்டோமே என்று சற்று கவலையுடனும் நின்றிருக்க, வெளியில் வந்த சித்தார்த் சாதாரணமாக இருவரையும் விசாரித்து விட்டு, “உள்ளே போங்க" என்று சொல்லிவிட்டு கீழே சென்றுவிட்டான்.

உள்ளே சென்ற இருவரும், மதுவின் அருகில் சென்று நிற்க மது எழுந்து நின்றதும் வித்யா , "சாரிமா நாங்க ரெண்டுத் தடவை கதவை தட்டினோம் ஆனால், குரலே இல்லை அதனால் தான்...." என்று விளக்கம் சொல்ல நிமிர்ந்து இருவரையும் பார்த்த மது, "பரவாயில்லை" என்று நாணப்புன்னகை புரிய மேகலா, "அத்தான் சரியா சொல்லி இருந்தார் மது, மது சீக்கிரமே மனம் மாறிவிடுவாள், சித்தார்த் அவளைப் பார்த்துப்பார். பொறுப்பான கைகளில் நாம் மதுவை ஒப்படைத்துவிட்டோம் எந்தக் கவலையும் நமக்கு வேண்டாம் அப்படின்னு. அது இன்னைக்கு உண்மையாக ஆகிடுச்சி".

"உங்க அண்ணன் இதை கேட்டால் எப்படி சந்தோஷப்படுவார் தெரியுமா? எங்களுடைய இத்தனை நாள் வேண்டுதல் வீண் போகவில்லை. சரி கீழே போகலாமா?” என்று ஒன்றும் பேசாமல் நின்றிருந்தவளை கேட்டதும், “ம்ம்..." என்று சொல்லிக்கொண்டே என்னோட சந்தோஷம் எத்தனைப் பேரை சந்தோஷபட வைக்கிறது. ஆனால், இவ்வளவு பாசமாக இருப்பவர்களை நான் எவ்வளவு,கவலைப்பட வைத்திருக்கிறேன்' என்று எண்ணிக்கொண்டே கீழே வந்தவள் அங்கிருந்த தன் உறவினர்களை எல்லாம் பார்த்து சகஜ நிலைக்குத் திரும்பினாள்.

சற்றுநேரத்தில், ஜீவா, சுரேஷ், ரமேஷ், அவன் அம்மா, கீதா, சம்மந்தி வீட்டினர், மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் சூழ்ந்திருக்க, அத்வைதும், ஹரியும், ஸ்ரீயை அழைத்துவர சென்றுவிட, சித்தார்த், அஷ்வந்த் இருவரும் வீட்டில் இருந்து அனைவரையும் வரவேற்று, உபசரித்துக்கொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராமும் வந்து விட நிச்சய தாம்பூலம் சிறப்பாக நடந்து முடிந்தது. மதுவும், மீராவும், வீட்டு மருமகள்களாக எல்லாவற்றையும் பொறுப்பாக செய்துக்கொண்டிருந்தனர். இடையிடையே சித்தார்த்தும், மதுவும், கண் ஜாடையிலேயே பேசிக்கொள்ளவும் தவறவில்லை. அது மற்றவர் கண்களுக்கும் தவறவில்லை.

ஸ்ரீராம் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச்சென்றதும், நண்பர்கள் கூட்டம் முழுதும் தோட்டத்தில் போடப்பட்டிருந்த பந்தலின் கீழே அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, நேரம் ஓடிக்கொண்டிருந்தது, அஷ்வந்த் வழக்கம் போல தன் ஜோக்குகளால் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

பேச்சு திசை மாறி திசை மாறி, கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சனைகளைப் பற்றி வந்து நின்றது. ஆண்கள் அனைவரும் பிரச்சனைகளுக்கு முழுக்காரணமும் பெண்களே என்று சொல்ல, பெண்களோ ஆண்களே என்று சூடாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.

அஷ்வந்த், "இங்க பாருங்க. பெண்கள் எல்லோரும் வெளியே கிளம்பச் சொன்னால் அவ்வளவு தான். நாளைக்குப் போறதுக்கு நாம் இன்னைக்கே சொல்லணும். நீங்களே ‘லேடி’ன்னு தமிழ்ல எழுதிட்டு அதை ரிவேர்ஸ்ல படிங்க ‘டிலே’ ன்னு வரும் என்றதும், "டேய் அஷ் எப்படில்லாம் திங்க் பண்றடா. மேதைடா நீ" என்றான் சுரேஷ்.

"நன்றி தலைவா" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

"போதும்டா ரம்பம், கொஞ்சம் உன் வாயை மூடு. உனக்கு வரப்போறா பாரு ஐயோ பாவம் அந்த மகராசி எங்கே இருக்காளோ" என்று வானத்தைப் பார்த்து கையைத் தூக்கி சொன்னாள்.

"உனக்கே ஒரு ஸ்ரீராம் கிடைக்கும் போது எனக்கு ஒரு ஸ்ரீதேவி கிடைக்க மாட்டாளா?" என்று பந்தாவாக கூற, தீபக்கும், மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

"என்ன அண்ணி இப்படி மர்மமா சிரிக்கிறீங்க? என்ன விஷயம்?" என்றான்.

"உங்க அண்ணிக்கு நானும் அவளும் சின்ன வயசுல போடும் சண்டையெல்லாம் ஞாபகம் வந்துவிட்டதாம்." என்றான் தீபக்.

"மது போடாத சண்டையா? நாங்க வாங்காத அடியா? அப்பா! இப்போ நினைத்தாலும் அப்படியே நடுங்குது" என்றான் சுரேஷ்.

"போதும் போதும் அப்படியே பேசி வேற டாபிக் போய்டாதீங்க. முதலில் விஷயத்தை முடிங்க. மது நீ சொல்லுடி உன்னோட கருத்தை" என்று கீதா சொன்னதும், மது, “என்னைப் பொறுத்த வரைக்கும் பிரச்சனை வர ரெண்டு பேருமே தான் காரணம்" என்றதும், சுரேஷ், "மது நீ நியாயவாதி! எப்படி உண்மையைச் சொல்ற பாரு?" என்றான்.

"ஹஸ்பன்ட் அண்ட் வைப் ரெண்டு பேருக்கும் எதனால பிரச்சனை வருது? ரெண்டு பேரும் முதலில் மனம் விட்டுப் பேசுறதே கிடையாது. ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கை வைக்கணும். தெரியாம செய்யும் தவறை பெரிசு பண்ணக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் உண்மையா, ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தா நிச்சயம் பிரச்சனைகள் வராது. இது தான் என்னுடைய கருத்து" என்றதும் அனைவரும் மதுவின் கூற்றில் உண்மை இருப்பதாக சொல்லிக்கொண்டனர்.

மது, சித்தார்த்தை திரும்பிப் பார்க்க அவன் முகமோ கலவையான முக பாவத்தை வெளிப்படுத்தியது. குழப்பம் நிறைத்து காணப்பட்டது.

‘அன்று சுபா அண்ணியின் வீட்டில் இருந்தபோதும் சித்தார்த்தின் முகம் இதே போலத் தானே இருந்தது. இவனுக்கு என்ன பிரச்சனை. இன்று கட்டாயம் என்ன விஷயம் என்று கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அவன் நிம்மதி தான், தன் வாழ்க்கை’ என்று நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
இரவு அனைவரும் கிளம்பிச் சென்றுவிட சுபா, மது, மீரா மூவரும் சமையலறையை சீர் படுத்திக் கொண்டிருந்த போது அங்கே வந்த தேவகி, "போதும்மா! மூணு பேரும் போய்ப் படுங்க. நேரம் ஆகுது. காலையில் எழுந்து மற்ற வேலைகளைப் பார்த்துக்கொள்ளலாம். மூணு பேரும் பாலை எடுத்துட்டுக் கிளம்புங்க" என்று மூவரையும் பிடித்துத் தள்ளாத குறையாக அனுப்பி வைத்தார்.

விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தவள், "என்ன தீவிர சிந்தனைல இருக்கீங்க?" என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் எழுந்து அமர்ந்தவனிடம் பால் டம்ளரைக் கொடுத்தவள், “நீங்க குடிங்க. நான் போய்க் குளிச்சிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டே குளியலறைக்குச் சென்றாள்.

அலுப்புத் தீரக் குளித்துவிட்டு வந்தவள், பால் டம்ளர் கட்டிலருகிலிருந்த மேஜை மீது இருக்க, அவன் மாடியில் உலவிக்கொண்டிருந்தான். யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவன் அருகில் சென்றவள், பின்னாலிருந்து அவனை அணைத்துக்கொண்டாள்.

சித்தார்த் கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்தான். அவளை விலக்கவும் இல்லை. அணைக்கவும் முயலவில்லை. ஒருவிதமான தடுமாற்றத்துடனேயே இருந்தான். அவனிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காததில் குழப்பத்துடன் அவனெதிரில் வந்து நின்றாள்.

அவன் எதுவும் பேசாமல் அறைக்குச் செல்ல, குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள். இரு கைகளிலும் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அவன் எதிரில் சென்று மண்டியிட்டு அமர்ந்தாள்.

"என்னங்க ஆச்சு உங்களுக்கு? நானும் இந்த இரண்டு வாரமா பார்த்துட்டிருக்கேன். அடிக்கடி ஏதோ யோசனைக்குப் போயிடுறீங்க. ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்சனையா? ஆனா, அதுக்கெல்லாம் நீங்க இப்படி அப்செட் ஆகமாட்டீங்களே? எதாவது சொல்லுங்க. எனக்கு உங்களை இந்த நிலைல பார்க்கவே முடியல" என்று கெஞ்சலாகச் சொன்னதும், அவளை அமரவைத்து கையைப் பற்றிக்கொண்டான்.

"உன்னிடம் இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல மது? என்னை நினைச்சி, என் செயலை நினைச்சி நானே வேதனைப்பட்டுட்டு இருக்கேன். பல முறை உன்கிட்டச் சொல்லிணும்னு நினைப்பேன். ஆனா, முடியல" என்று வேதனை நிறைந்த குரலில் அவன் சொல்லச் சொல்ல, அவளது மனத்தில் ஒரு பயம் சூழ ஆரம்பித்தது.
"அதுவும் நீ இன்னைக்குப் பேசியதைக் கேட்டதும், இனியும் உன்னிடம் மறைக்கக் கூடாதுன்னு முடிவு செய்துவிட்டேன். ஆனா, அதை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தான் தெரியல" என்றவன், ஒரு முடிவுடன் பீரோவிலிருந்த டைரியை எடுத்துக் கொடுத்தான்.

“மது! இந்த டைரியைப் படி. என்னுடைய இந்த நிலைக்கான விளக்கம் உனக்குக் கிடைக்கும். நான் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சி வரேன்” என்றவன் அவள் பதிலை எதிர் பாராமல் வீட்டுச் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் செல்லும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள், நடுங்கும் விரல்களால் அந்த டைரியைத் திறந்தாள்.

முன்னால் சில பக்கங்கள் வெற்றுத் தாள்களாக இருந்தன. திருப்பிக்கொண்டே வந்தவளின் கண்கள் ஓரிடத்தில் நிலைத்தது. சித்தார்த்தின் அழகிய கையெழுத்தில்,எழுதி இருந்த கவிதை

"பெண்ணே நீ என் தேவதை
பார்த்தவுடன் என் நெஞ்சில்
நிறைந்த தாரகை
நீயா அல்லி ராணி
இல்லை இல்லை
என் இதய வீட்டில்
குடியிருக்கும் என்
இதய ராணி .....
என் இதய சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும்
உன்னை நான்
மாலைசூட்டி ஆக்குவேன்
என் பட்டத்து ராணி.....”

அந்தக் கவிதையை வாசித்தவள் மெதுவாகப் பக்கத்தைத் திருப்ப, அதிலிருந்த போட்டோவைக் கண்டதும் நம்ப முடியாமல் விழி அகலப் பார்த்தாள்.

ஒவ்வொரு பக்கமாக படித்துக்கொண்டே வர, அவளது நெஞ்சில் தோன்றிய உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவளது நெஞ்சக்கூட்டுக்குள் ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள் அலை மோதின

மொத்த டைரியும் படித்தவள், பொத்தென சோஃபாவில் அமர்ந்தாள். ஒன்றரை மணி நேரமாக மனக்கலக்கத்துடன் பீச்சில் அமர்ந்திருந்த சித்தார்த் வீட்டை நோக்கி நடந்தான்.

அறைக்கதவைத் திறந்தவன், சிலையென அமர்ந்திருந்தவள் அருகில் சென்று, “மது" என்றழைத்தபடி அவளது தோளில் கையை வைத்ததும், சரேலென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளது விழிகளில் தோன்றிய பாவம், இன்னதென்று அவனால் வரையறுக்க இயலவில்லை.

அவ்வளவு நேரமும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள் அவனைக் கண்டதும், “நீங்களா..? நீங்களா... என்னைச் சந்தேகப்பட்டீங்க சித்தூ!” என்று மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே அவனிடமிருந்து விலகிப் பின்னாலேயே சென்றாள்.

இரண்டே எட்டில் அவளை அணுகியவன், "இல்லடா மது..." என்று பேசத் தொடங்கியவனை "வேற யார் சந்தேகப்பட்டிருந்தாலும் பரவாயில்ல. நீங்..க.. நீங்க எப்படிச் சித்தூ சந்தேகப்படலாம்? அதுவும் என்னை... என்னைப் போய்..." என்று கத்திக்கொண்டே பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியபடி கேட்க, அடிபட்ட மானின் கதறலாய் அவளது வார்த்தைகள், அவனது செவியில் அறைந்தன.

'இதற்கு என்ன பதில் சொல்வேன் கடவுளே!' என்று அவன் மனம் அரற்றத் துவங்க அதற்கு மேல் அவளது கதறல்கள், அவனுடைய காதில் நுழைந்தாலும், கருத்தில் பதியவில்லை.

"மது! ப்ளீஸ்டா... அழாதே" என்றதும் அவன் நெஞ்சில் சாய்ந்து கதறினாள்.

“ஏன்.. ஏன்...? சித்தூ நீங்க என்கிட்ட மறைச்சீங்க. நீங்க என்னைக் காதலித்ததை ஏன் முதலிலேயே என்கிட்டச் சொல்லலை? எதுக்காக என்னிடமிருந்து விலகி போனீர்கள்? நீங்க அன்னைக்கே என்கிட்டச் சொல்லியிருந்தா, அர்ஜுன்னு ஒருவன் என் வாழ்க்கையில் வராமலேயே போயிருப்பானே. வேற ஏதாவது ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உயிரோடு இருந்திருப்பானே!

என் வாழ்க்கையும் திசை மாறிப் போகாமல் இருந்திருக்குமே. நாமளும் சந்தோஷமாக இருந்திருக்கலாமே? ஏன் சித்தூ நீங்க முதலிலேயே சொல்லவில்லை? நீங்க என்னை சந்தேகப்பட்ட போதாவது நேரடியா வந்து என்னிடம் பேசி இருக்கலாமே?" என்று தன் மீது சாய்ந்துக்கொண்டு புலம்புபவளைத் தேற்ற வழி தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.

அவன் மனதில் மீண்டும் மீண்டும், ‘நீ என்னைச் சந்தேகபட்டாயே?’ என்ற அந்த ஒரு கேள்வியே சுற்றிச் சுற்றி வந்து அவனைச் சுட்டேரித்துக்கொண்டிருந்தது. அவள் புலம்பிய மற்ற எதுவும், அவனது மனத்தில் பதியவில்லை. மனம் நிறைய வலியுடன், ஒன்றும் பேசாமல் அவளை அணைத்தபடி நின்றுகொண்டிருந்தான்.
தான் இவ்வளவு தூரம் பேசியும் அவனிடமிருந்து ஒரு பதிலும் வராததால், நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள் திகைத்தாள். உலகத்தின் அத்தனைச் சோகத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டவனைப் போன்ற அவனது முகபாவனை, அவளைத் திகைக்க வைத்தது. அவள் வாயிலிருந்து, மேலும் வெளிவரத் துடித்த வார்த்தைகள் அப்படியே அடங்கின.

மெல்ல தன் அணைப்பிலிருந்து விலகத் தொடங்கியவளை அவனது கரங்கள் விலகவிடாமல் இறுகப் பற்றியது. தன்னை மறந்து மீண்டும் அவன் மார்பில் ஒண்டியவளின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

அந்த ஆற்றில் கலக்கத் துடிக்கும் அருவி நீர் போல, அவனது கண்களிலிருந்தும் கண்ணீர் வெளிவர ஆரம்பித்தது. தன் மேல் விழுந்த முதல் இரண்டுத் துளி கண்ணீரை உணர்ந்தவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள். கலங்கிய இருவரின் கண்களிலும் அடுத்தவர் உருவம், பனித்திரையின் ஊடே பார்பது போல்தான் தெரிந்தது.

தன்னை மறந்து கத்தியதால் எழுந்த உணர்ச்சி வேகத்தில், அவள் உடல் தள்ளாடுவதை உணர்ந்தவன், அவளை மெல்ல நடத்திச் சென்று கட்டிலில் அமர வைத்தான். பயத்தில் இருக்கும் புறாவின் சிறகுகள் போல, அவளது உடல் நடுங்க, ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.

சிறு குழந்தையைத் தேற்றுவது போல், அவனது விரல்கள் அவளை வருடிக்கொடுத்தன. ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை, அவனுடைய அந்த வருடல் தந்தது. அவளது அழுகை மெல்ல விசும்பலாகி, ஓய்ந்து போய் அவள் தூங்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது.

எதிலிருந்தோ அவளைக் காப்பாற்றத் துடிப்பவன் போல், அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு இறுக அணைத்திருந்த சித்தார்த், தூக்கத்தில் அவள் தளர்வதைக் கண்டதும், அலுங்காமல் அவளைப் படுக்கையில் படுக்க வைத்தான்.

தூக்கத்திலும் விசும்பும், அவளது நிலையைக் கண்டவன் நெஞ்சம், உலைகலனாய் கொதித்தது. ‘என் மதுவை இனி, கண் போலப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேனே ஆண்டவா! இன்று அந்தக் கண்களில் வழியும் கண்ணீரைக்கூட என்னால் துடைக்க முடியவில்லையே… அதற்குரிய தகுதியும் எனக்கில்லையே. அவள் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லையே...’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவன், அந்த அறையில் மூச்சு முட்டுவது போல் உணர்ந்தான். மது நல்ல உறக்கத்தில் இருப்பதைத் தெளிவு படுத்திக்கொண்டு அறையிலிருந்து வேகத்துடன் கிளம்பினான்.

மதுவின் கண்ணீர் துளிகள் பட்டு, கறையாகியிருந்த அவனுடைய சர்ட், கண்ணில் பட்டாலும் அது அவனது கருத்தில் எட்டவில்லை, வருத்தத்துடன் தலையைக் குலுக்கிக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

விவரம் தெரிந்த நாளிலிருந்து காரை இயக்கிக் கொண்டிருப்பதால், அனிச்சை செயலாக கைகளும் கால்களும் ஒத்துழைக்க, கார் சாலையில் போய் கொண்டிருந்தது. அவனது மனம் அவளது வார்த்தைகளிலேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும், தன் காதுகளில் ஒலித்த அவளது கதறல் மட்டுமே அவனை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

வெளிக்காற்று முகத்தில் பட்டு, சிறிதே சமநிலை அடைந்தவன், சடாரென்று காரை நிறுத்தினான்.

'ஓ மது! நீ என்ன சொன்னாய்?' இது வரை அவள் கதறல் ஒலி மட்டுமே காதுகளையும், மனதையும் அடைத்திருக்க அந்த நொடியில்தான் அவளுடைய வார்த்தைகளின் அர்த்தம், கதறல் ஒலியைக் கிழித்துக்கொண்டு அவனது மனத்தில் நுழைந்தது.

‘ஏன், சித்தூ நீங்கள் உடனே வந்து சொல்லவில்லை?' அவளுடைய வார்த்தைகளின் முழு அர்த்தம் புரிந்ததும், கோடி பிரகாசம் அவன் கண்களில் தோன்றியது. அந்த நொடி வரை தன்னை உலகதிலேயே அதிகம் சபிக்கப்பட்டவனாய் உணர்ந்தவன் இப்போது, உலகத்திலேயே அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தான்.

‘மது! இந்த நிலையிலும் நீ என்னை வெறுக்கவில்லை. உனக்கு என் காதலை உன்னிடம் சொல்லாதது தான் வருத்தமா? அப்படியானால் நான் உன்னைத் தவறாக புரிந்து கொண்டதை நீ மன்னித்துவிட்டாயா? நான்தான் நீ சொன்ன வார்த்தைகளின் முழு உண்மையையும் அறியமுடியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தேன். அவ்வளவு நேரமும் மனத்தில் இருந்த இறுக்கம் மறைந்து, உற்சாகம் பிறந்தது.

‘இதோ வந்துவிட்டேன் என் உயிரே! இனி, நம்மைப் பிரிப்பதற்கு இந்த உலகத்தில் எதற்கும் சக்தியில்லை’ என்று கூறியபடி, மனம் முழுதும் உற்சாகம் பெருக்கெடுக்க தன்னவளை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் முழு வேகத்தில் அவன் வந்த பாதையில் அவன் காரைத் திருப்பிய போது..

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள், "சித்தூ..." என்ற கூக்குரலுடன் அலறித் துடித்து எழுந்தாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம்—62

தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்தவள், ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முகம் முழுதும் வியர்த்திருந்தது. அனிச்சை செயலாகக் கைகள் முகத்தைத் துடைத்தபடி, ‘என்ன இது இப்படி ஒரு கெட்டக் கனவு’ என்று எண்ணிக்கொண்டே திரும்பிப் பார்த்தவள் சித்தார்த் அங்கில்லாததைக் கண்டதும் திடுக்கிடலுடன், அறை முழுதும் தன் கண்களை அலையவிட்டாள்.

அவனது அணைப்பிலேயே, உறங்கும் வரை அவன் தன்னருகில் இருந்தது நன்கு நினைவில் இருந்தது. ஒரு வேளை உறக்கம் வராமல் மாடியில் இருக்கிறானோ!’ என்று எண்ணிக்கொண்டே, கதவை நெருங்கியவள் பூட்டி இருப்பதைப் பார்த்தாள்.

மனம் நிறைய பயத்துடன் விளக்கைப் போட்டாள். மணி இரண்டைத் தாண்டி இருந்தது. சித்தார்த் அறையில் இல்லாதது, தான் கண்ட கனவையும் சேர்த்துப் பார்த்து பயத்துடன் கீழே ஓடினாள். யாரை எழுப்புவது? என்ன சொல்வது?’ என்று புரியாமல் திகைத்தவள்,அஷ்வந்தின் அறையில் விளக்கு எரிவதைக் கண்டு அங்குச் சென்று அவன் அறைக்கதவை வேகமாக தட்டினாள்.

தூக்க கலக்கத்துடன், யாருடனோ போனில் பேசிக்கொண்டே வந்து கதவைத் திறந்தவன் அந்த நேரத்தில் மதுவை கண்டதும், அவள் கலங்கிய விழிகளைக் கண்டவன் போனில் பேசியவரிடம், “நான் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷன் ஃபாலோ பண்ணுங்க" என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, அவளிடம் திரும்பினான். ஆனால், அந்த அரை நொடியில் அவளது மனம் எதையெதையோ எண்ணிக் கலங்கியது.

"அண்ணி என்ன ஆச்சு? ஏன் இப்படியிருக்கீங்க? இந்த நேரத்தில் நீங்க... ஆமாம் அண்ணன் எங்கே?" என்றதும், "அஷ்வந்த் உங்க அண்ணனை ரூம்ல காணோம். நான் தூங்கும் வரை என் பக்கத்தில் தான் இருந்தார்" என்று முழுதுமாக திக்கித் திணறிச் சொல்லி முடித்தாள்.

"ஒரு நிமிஷம் அண்ணி!” என்றவன், வீட்டைத் திறந்து கொண்டு வெளியே சென்றவன், ஷெட்டில் சித்தார்த்தின் கார் இல்லாததைக் கண்டதும் வாட்ச் மேனிடம் சென்று விசாரித்தான்.

வேகமாக உள்ளே வந்தவன் சித்தார்த்தின் மொபைலுக்கு முயன்றுகொண்டே, "அண்ணி அண்ணன் பன்னிரண்டு மணிகிட்ட காரை எடுத்துட்டுப் போயிருக்கார்" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து சித்தார்த்தின் மொபைலுக்கு முயன்று கொண்டிருந்தான்.

எத்தனையோ முறை முயன்றும், அவுட் ஆப் கவரேஜ் என்று மீண்டும் மீண்டும் வரவும், ஜீவாவிற்குப் போன் செய்து சித்தார்த் அங்கு வந்தானா? என்று விசாரிக்க, இல்லை என்ன விஷயம் என்று கேட்டுத்தெரிந்துக்கொண்ட ஜீவா தானும் முயன்று பார்ப்பதாக சொன்னான். மது ஏதாவது ஒரு நல்ல பதில் வராதா என்று பயத்துடனும், ஒரு எதிர்பார்ப்புடனும், சஷ்டி சொல்லியபடி அஷ்வந்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதேநேரம் ஹாலில் இருந்த போன் ஒலித்ததும், அவள் ஓடிச்சென்று போனை எடுத்து பதட்டத்துடன், "ஹலோ" என்றாள்.

எதிர் முனையிலிருந்து சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் பேச வாய் வராமல், சிலையாக நின்றவளின் கையிலிருந்து ரிசீவரை வாங்கியவன், மறுபுறம் இருந்து வந்த செய்தியில் சற்று நிலை குலைந்தாலும், சமாளித்துக்கொண்டவன் அனைத்து விவரங்களையும் கேட்டுக் கொண்டு ரிசீவரை வைத்துவிட்டு மதுவைப் பார்த்தான்.

செய்தியைக் கேட்டு, மூச்சுக்குத் தவிப்பவள் போலத் திணறியபடி, ஆதாரத்திற்குச் சோஃபாவைப் பற்றிக்கொண்டு கண்களில் நீர் தளும்ப, பிரமை பிடித்தவளைப் போல நின்றிருந்தாள்.

“அண்ணி!” என்ற அழைப்புக்கு வாயைத் திறந்தவள், வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளிவராமல் தவித்தாள்.

தண்ணீரை விட்டு வெளியே எடுத்துப்போடப்பட்ட மீன் தன் மூச்சுக்கற்றுக்கு வாயைத் திறப்பது போன்ற அவளது பாவனையில் திகைத்தவன், ஆதியின் அறைக்கு ஓடினான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆதி உடையை மாற்றிக்கொண்டு வருவதற்கு முன்னால், மதுவை நோக்கி ஓடிவந்தாள் மீரா.
"மது மது என்னம்மா... ஆச்சு?" என்று பரிவுடன் கேட்டவள், பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மதுவிற்கு சிறிதளவு புகட்டினாள்.

"மது! ஒண்ணும் இல்லம்மா. பயப்படாதே" என்று தேற்றிக்கொண்டிருக்கும் போதே, “எனக்கு மட்டும் ஏன்க்கா இப்படியெல்லாம் நடக்குது" என்று அழுதவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள்.

களைப்புடன் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் ஹாலில் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று எழுந்து வெளியில் வர, மது அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்த தேவகியிடம் அஷ்வந்த் நடந்ததைச் சொல்ல அனைவரும் அதிர்ந்தனர்.

மதுவின் அருகில் வந்த தேவகி, “மது, இங்கே பாரு எல்லாம் சரியாகிவிடும். எழுந்துக்கோம்மா" என்றதும் அந்தப் பரிவில், “சித்தூ..." என்று பெருங்குரலேடுத்து முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தாள். திகைத்துப்போன அனைவரும் அவரவருக்குத் தகுந்த விதத்தில் ஆறுதல் படுத்த முனைந்தனர்.

"மது! கொஞ்சம் கட்டுப்படுத்திக்கோம்மா. அவனை ஹாஸ்பிட்டலில் போய்ப் பார்க்க வேண்டாமா?" என்றதும் விலுக்கென்று நிமிர்ந்தவள்,

"வேண்டாம் அண்ணி! ஹாஸ்பிட்டல் வேண்டாம்.ஒரு முறை நான் ஹாஸ்பிட்டல் போனதே இந்த ஜென்மத்துக்கும் போதும். அவரை பத்திரமா என்னிடம் கொண்டு வந்து சேர்த்துடுங்க” என்று சம்மந்தமில்லாமல் அவள் புலம்ப ஆரம்பிக்க, அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.

‘நேரமாகிக்கொண்டே இருக்கிறது. அங்கே சித்தார்த் என்ன நிலையிலிருக்கின்றானோ!’ என்று எண்ணிய அஷ்வந்த் உரத்த குரலில், “அண்ணி! கொஞ்சம் நிறுத்தறீங்களா?" என்று அதட்ட, இதுவரை அதுபோன்ற குரலில் அவன் பேசியறியாதவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

"வாயை முடிக்கிட்டுப் போய்க் காரில் ஏறுங்க" என்று இரைந்தான்.

அடிபட்ட சிறு குழந்தையின் பாவனையில் மதுவின் கண்களில் தெரிந்த வலி, அஷ்வந்தை மிகவும் துன்புறுத்தியது. ‘மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணி!' என்று மானசீகமாக அவளிடம் மன்னிப்பு வேண்டியவன் வேகமாக வெளியே ஓட, அனைவரும் பின்தொடந்தனர்.

அத்வைத் ஷெட்டிலிருந்து காரை கொண்டு வந்து போர்ட்டிக்கோவில் நிறுத்த,
ஒரு விதமான மரத்த உணர்வோடு பின்தொடர்ந்தவள் அஷ்வந்தின் அதட்டலால், புலம்பலை நிறுத்தியிருந்தாலும், மனம் இரு மடங்கு உரக்கத் தன் புலம்பலைத் தொடர்ந்தது.

ஹரி, "மீரா! நீயும், சுபாவும், குழந்தைகளோட இங்கேயே இருங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

வழிமுழுதும் அழுதுக்கொண்டே வந்தவளை, தன் துன்பத்தைக் கூட மறைத்துக்கொண்டு தன் மருமகளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தார் தேவகி. ஆதி எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாகக் காரைச் செலுத்தி ஹாஸ்பிட்டலை அடைந்தான்.

ஹாஸ்பிட்டல் வாசலிலேயே ரமேஷும், ஜீவாவும் நின்றிருந்தனர். ஆதியின் காரை கண்டதும், இருவரும் அருகில் வந்தனர். முதலில் இறங்கிய ராம மூர்த்தியில் கையைப் பிடித்த ஜீவா, “ட்ரீட்மென்ட் கொடுத்துட்டிருக்காங்க அங்கிள்! ப்ளட் வேணும்னு கேட்டாங்க ஏற்பாடு பண்ணிட்டோம்" என்று சொல்லிக்கொண்டிருக்க, தேவகியைத் தொடர்ந்து இறங்கிய மதுவின் மீது பார்வை விழுந்தது. அவளது மனஉளைச்சல் அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

ஜீவா சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டே இறங்கியவளின் மனமும், உடலும் தளர, அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்று அவளது மனம் அரற்றத் தொடங்கியது.

அருகில் வந்த ரமேஷ், "மது! டோன்ட் வொர்ரி. ஒண்ணும் ஆகாது" என்றான்.

"அண்ணா.... அவர் இப்போ...." என்று திக்கி திணறியவளைப் பார்த்து, “ஐ.சி.யூல இருக்கான். டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க" என்று சொன்னது தான் தாமதம் அனைவரையும் முந்திக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஐ.சி.யு வார்டின் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வை, சித்தார்த்தைக் கண்டதும் நிலைகுத்தி நின்றது.

கை, தலையில் கட்டுகள், உடலில் ஆங்காங்கே சில இடங்களில் காயம். அங்கே, அவளது மனக்கண்ணின் முன்னே ஒரே ஒரு நொடி அவன் அர்ஜுனாகத் தெரிய, தடுமாறியவள் கண்களை இறுக மூடி திறந்து, கண்களை அகல விரித்துப் பார்த்தாள்.

சித்தார்த் மயக்கத்தில் இருந்தான். வாயைப் பொத்தியபடி அவனருகில் சென்றவள், அவனது இந்த நிலைக்கு, தான் தான் காரணம் என்று குற்ற உணர்வு எழ, அது பெரிய கேவலாக வெளிப்பட்டது.

தடுப்புக்கு மறுபுறம் இருந்து வந்த நர்ஸ், "மேடம்! உங்களை யாரு உள்ளே விட்டது? இங்கெல்லாம் வரக்கூடாது. வெளியே போங்க" என்று சொல்லச் சொல்ல அவள் நகர மறுத்து, "சித்தூ..." என்று அழுதவளை இரண்டு பேராக இழுத்து வராத குறையாக வெளியில் கொண்டு வந்து விட்டனர்.

வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்த நர்ஸ் சத்தம் போட்டு விட்டுச் செல்ல, அழுதுகொண்டே திரும்பியவள் பதட்டத்துடன் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த ராஜேஷைக் கண்டதும், கோபத்துடன் அவனை நோக்கி சென்றாள்.

கலங்கிய விழிகளுடன், "மதும்மா" என்றவனை, "சந்தோஷம் தானே! இப்போ உனக்குச் சந்தோஷம் தானே. இதைத் தானே எதிர்பார்த்த! இப்போ உனக்குத் திருப்தியா? திருப்தியா? நான் எவ்வளவு தூரம் சொன்னேன். எனக்குக் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு. கேட்டியா? அவர் வாழ்க்கையாவது நல்லாயிருக்கணும்னு நான் நினைத்தது தப்பா. கடைசியில் நான் நினைச்சது போலவே ஆகிடுச்சே! என் சித்தூவை நான் இந்த நிலையில் பார்க்கணும்னு தான் எனக்குக் கல்யாணம் செய்து வைத்தாயா?” என்று கதறினாள்.

"மது ப்ளீஸ்! நான் உனக்கு..." என்றவனை, "நல்லது செய்றேன்னு, நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்கணும் என்று நினைத்தாயா? பார்த்த இல்ல நீ செய்த நல்லதை, என் சித்தூ இன்னைக்கு எந்த நிலையில் இருக்காருன்னு" என்று கோபத்துடன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, ராஜேஷின் சட்டையை பிடித்து உலுக்கியபடி தன்னை மறந்து கத்தினாள்.

அனைவருமே ஒருவித பயத்துடனும், செய்வதறியாமலும் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு அங்கே வந்த நர்ஸ், “என்ன இது இப்படி ஐசியு வார்டு முன்னால் நின்று இப்படிச் சத்தம் போட்டுட்டிருக்கீங்க. ஏம்மா படிச்சவங்க தானே நீங்க. மற்றவர்களுக்கு இடையூறா இருக்கும்ன்னு தெரியாது உங்களுக்கு?” என்று சொன்ன நர்சை மது முறைத்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

அருகில் வந்த தேவகி, “மது! வாம்மா வந்து இப்படி உட்கார்” என்றதும், கோபம் சிறிதும் அடங்காமல், வராண்டாவில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

கண்களை மூடி அமர்ந்த மதுவின் நினைவுகள் சித்தார்த்தை நோக்கி பாய்ந்து சென்றன. ‘சித்தூ...சித்தூ... நீங்கள் என் உயிரல்லவா? நான் உங்களை எப்படியெல்லாம் அருமையாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்காக நீங்கள் எவ்வளவு துன்பம் அனுபவித்தீர்கள்? அதற்கு ஈடாக நான் என்ன தர முடியும்? இனி, நிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நீங்காமல் இருக்க வேண்டும் என்று நான் நினைத்து தவறா? ப்ளீஸ் சித்தூ! இந்த ஒருமுறை நீங்கள், என் பேச்சைக் கேளுங்கள். நீங்கள் எப்போதும் என் பேச்சைத்தான் கேட்டீர்கள். நான் உங்களுக்கு வேண்டாம் என்று சொன்னபோது கூட. இப்போதும், இந்த ஒரு முறை எனக்காக மீண்டு வாருங்கள்’ என்று மானசிகமாக அவனிடம் இரைஞ்சியபடி அமர்ந்திருந்தாள்.

அவளுடைய மோன தவத்தைக் கலைக்காமல் அனைவரும் சிறிது ஒதுங்கி அமர்ந்து கொண்டனர். அப்போது காரிடாரில், 'குழந்தை பிறந்தது, ராசியான நேரம் என்று யாரோ சொல்லிக்கொண்டு போனது சுருக்கென்று, அவள் கவனத்தை தைத்தது.

ராசி... ராசி... என்றதும் அவளது நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. அர்ஜுனின் மறைவிற்குப் பிறகு, நேரில் பார்த்துச் சிரித்துப் பேசும் உறவினர்களே! அவளது முதுகுக்குப் பின்னே சென்றதும், அவளை ஏளனம் பேசியதும், ராசி இல்லாதவள்; பிறந்ததும், அப்பா, அம்மாவை முழுங்கிடுச்சி; இப்போ கல்யாணம் செய்துக்க இருந்த பையன். இன்னும் எத்தனை எத்தனைப் பேரை இப்படித் தூக்கிக் கொடுக்கணுமோ!’ என்று பேசியபோதும் அதையெல்லாம் மனத்தில் தாங்கிக்கொண்டு, வெளியே சிரித்துக்கொண்டும் நடமாடியதெல்லாம் நினைவிற்கு வந்தது.

ஆமாம். எல்லோரும் சொன்னது உண்மையே! ஆண்டவனே இதற்காகத் தானே நான் இவ்வளவு தயங்கினேன். என்னுடைய வாழ்க்கை எப்படிப் போனாலும் சரி... சித்தூ நல்லபடியா இருக்கணும்னு நினைசேன். என்னைப் புரிந்து கொள்ளாமல் எல்லோரும் கரிச்சுக் கொட்டினாங்க. கடவுளே! இந்த ஒரு முறை என் சித்துவைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு. அதன்பின் அவருக்கு, நல்லது எது என்று பார்த்து, நான் செய்து கொள்கிறேன்.

என்னைப் பிரிந்து தான் அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று விதி இருந்தால், அவரை பிரிவது எனக்கு உயிர் வேதனை என்றாலும், அவருடைய நலனுக்காக அந்த முடிவை ஏற்க நான் தயார்!' என்று கடவுளிடம் மானசிகப் பேரம் நடத்திக்கொண்டிருந்தாள். அந்த ஒரு நொடியில் அவள் மனதில் விழுந்த அந்த விதை, அடுத்து வந்த நாள்களில், வேருன்றி பெரிய விருட்சமாய் வளர்ந்து நின்றது.

டாக்டர்கள் சொன்ன இருபத்துநாலு மணி நேரம் முடியும் போது, மது தான் எடுத்திருந்த முடிவில் திடமாக இருந்தாள். ‘அவன் குணமாகும் வரை உடன் இருக்கவேண்டும். அவனுக்குப் பணிவிடைகள் செய்து அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று ஒருமனதாக முடிவெடுத்துக்கொண்டாள். எங்கே செல்ல வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் அமர்ந்திருந்த நேரம், சித்தார்த் கண்விழித்து விட்டதாகவும், இனி, ஒன்றும் பயமில்லை என்றும் மேலும் செய்ய வேண்டியதையும் சொல்லிவிட்டு, “யாராவது இரண்டு பேர் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வாங்க. நாளைக்கு ரூமிற்கு மாத்திடலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

கடவுளுக்கு கோடி முறை நன்றி சொல்லிவிட்டுத் தேவகியும், மதுவும், உள்ளே சென்றனர். கண் மூடி படுத்திருந்தான். வலியின் தீவிரம், முகத்தில் தெரிந்தது. மயக்க மருந்தின் வீரியத்தில் நடு நடுவில் கண் விழிப்பதும், சில நொடிகளில் கண்ணை மூடிக்கொள்வதுமாக இருந்தான்.

மகனின் அருகில் சென்ற தேவகி, சித்தார்த்தின் தலையை மெல்லக் கோதிவிட்டார். அவரது கண்கள் கலங்க நாசூக்காகத் துடைத்துக்கொண்டு, "மதும்மா! நான் வெளியே இருக்கேன். நீ ஐந்து நிமிடத்தில் வந்துவிடு. அவன் எதிரில் அழாதேம்மா. அவன் கண்திறந்து பார்த்தால் அவனும் வருத்தப்படுவான்" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சித்தார்த்தின் கையைத் தொட்டுத் தடவியவளின் கண்ணீர் அவனது கரங்களில் விழுந்தது. லேசாக விழிகளைத் திறந்தவனுக்கு நிழல் உருவமாகத் தெரிந்தவளைப் பார்த்ததும், “மது" என்று முனகியவன், மீண்டும் மயக்கத்திற்குச் சென்றுவிட, அவனையே பார்த்தபடி சிறிதுநேரம் நின்றுகொண்டிருந்தவள், கண்களை துடைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

மறுநாள் சொன்னபடி சித்தார்த்தை ரூமிற்கு மாற்றிவிட்டனர். சித்தார்த் மயக்கத்திலேயே இருந்தான். அறைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மெல்லக் கண்விழித்தான். வலது கையில் வலி இருக்க, லேசாக முகம் சுளித்தான். அனைவரும் அவனைச் சுற்றி நின்றுகொண்டிருக்க அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவனது விழிகள் அவளது மதிமுகத்தைத் தேடி அலைந்தன.

அவனது தேடலைப் புரிந்துகொண்டு, ஒவ்வொருவராக வெளியேறினர். சுவற்றில் சாய்ந்தபடி நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தான்.

அவளருகில் வந்த தேவகி, “மது! நான் வீட்டுக்குப் போய் உங்களுக்குத் தேவையானதை எடுத்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றதும், சித்தார்த்தின் பார்வை மது மீது விழுந்தது.

கண்கள் கலங்க நின்றிருந்தவளை நோக்கி, தன் இடது கையை நீட்டியதும் தான் தாமதம்... ஓடி வந்து அவன் கைகளை பிடித்து கன்னத்தில் பதித்துக் க்ண்டாள்.

"மது, ப்ளீஸ்... அழாதடா. எனக்குத்தான் ஒண்ணுமில்லயே" என்று சொன்னபோதும் நிறுத்தாமல் அழுது தீர்த்தாள்.

"என்னால் தானே சித்தூ! என்னால் தானே நீங்க அந்த நேரத்தில் வெளியே போனீங்க. நான் உங்களிடம் சத்தம் போடாமல் இருந்திருந்தா, நீங்க என்னை விட்டு அந்த நேரத்தில் யோயிஉக்க மாட்டீங்க இல்லயா... எல்லாத்துக்கும் நான்தான் காரணம். என்னால உங்களுக்கு எப்போதும் பிரச்சனை தான்" என்று அழுதவளைத் தேற்ற வழி தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

சற்று சாய்ந்தபடி அமர்ந்திருந்தவனின் அருகில் குனிந்து நின்றிருந்தவள் கன்னத்தில் முத்தமிட்டவன், "ச்சீ! அழாதடா ஒரே உப்பு கரிக்குது" என்றதும் நிமிர்ந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள். தன் இடது கையை எடுத்து அவளை வளைத்துக்கொண்டான்.

அடிபட்டிருந்த வலது கையைத் தடவியபடி, "இப்போ எப்படியிருக்கு? ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டுக்கொண்டே அவனது வலது கையைத் தடவிக்கொடுத்தாள்.

"ஊகூம்" என்று தலையசைத்தவன், “என் ஏஞ்சல் என் கூடவே இருக்கும் போது எனக்கு எப்படி வலிக்கும்?" என்று புன்னகைத்தான். அவன் பதிலைக் கேட்டதும் மதுவின் முகம் சில நொடிகள் கருத்து, பின்னர் தெளிவு பெற்றது.

சித்தார்த்திற்கு நன்கு குணமாகும் வரை கண்டிப்பாக அவனுடன் இருந்து தான் ஆக வேண்டும். சித்தார்த்தை விட்டுப் பிரிந்து செல்வது என்பது உறுதியாகிவிட்டது. இனி, அவனை விட்டுச் செல்லும் வரை, தான் எந்த விதத்திலும் அதை வெளிப்படுத்தக்கூடாது. இங்கு இருக்கும் சில நாட்களும் அவனை நிம்மதியாக, சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

அதன் பிறகு வந்த நாள்களில் தன் எண்ணப்படியே நடந்துகொண்டாள். முழுதாக இருபது நாள்களுக்குப் பிறகு, சித்தார்த்தை வீட்டிற்கு அழைத்து வந்தனர். தலை காயமும், உடலில் இருந்த பெரும்பாலான காயங்களும் ஆறி இருந்தன. காலில் இருந்த கட்டும், வலது கை கட்டு மட்டும் பிரிக்க இன்னும் பதினைந்து நாள்கள் ஆகும் என்று சொல்லி இருந்தனர். ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று, சித்தார்த்தின் அறையில் அவனைப் படுக்க வைத்தனர்.

சற்றுநேரம் அனைவரும் அவனுடன் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பினர். சித்தார்த்தும் லேப்டாப்பில் தனக்கு வந்த மெயில்களைப் பார்த்துக்கொண்டிருக்க, மது சோஃபாவில் அமர்ந்து அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கண்களின் ஓரம் துளிர்த்த கண்ணீரைச் சுண்டியெறிந்துவிட்டு எழுந்து சென்று அவனுக்கு இரவு உணவை கொண்டுவந்து தானே ஊட்டிவிட்டாள். மருந்து மாத்திரைகளைக் கொடுத்து படுக்க வைத்தாள்.

தன் வேலைகளை முடித்துக்கொண்டு, வந்து சித்தார்த் உறங்கிவிட்டான் என்று தெரிந்து கொண்டு, மொபைலை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்று கதவை மூடிவிட்டு, தன் தோழியுடன் வெகுநேரம் பேசிவிட்டு, ஊஞ்சலில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். இது எல்லாமே சித்தார்த்துக்காக தானே என்று நினைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் அறைக்கு வந்தாள்.

சித்தார்த்தின் இடது கரம் மதுவின் இடையை வளைத்து அருகில் இழுக்க, கண்களில் கண்ணீருடன் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவதைப் போன்ற வேதனையில் தவித்தாள். 'ஓ' வென்று கண்ணீர் விட்டுக் கதறி அழுது புலம்பவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதை அடக்கியபடி இறுகிப் போய்ப் படுத்திருந்தாள்.

வீட்டிற்கு வந்து பதினைந்து நாள்களுக்குப் பிறகு, அவனது கை கட்டும் பிரிக்கப்பட்டது. அதற்குள் மது, தன் தோழி மூலமாக, தன் பயணத்திற்குத் தேவையான, பாஸ்போர்ட் அவளிடம் இருந்ததால், விசா மட்டும் தன் தோழி மூலமாகவே வாங்கி மெயிலில் வந்ததைப் பிரிண்ட் எடுத்துப் பத்திரமாக மறைத்து வைத்தாள். தன் சர்ட்டிஃபிகேட், மற்றும் தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.
இரண்டு நாட்களாக, சித்தார்த்தும் அலுவலகம் சென்றுவர ஆரம்பித்திருந்தான். வலது கையைச் சாதரணமாக இயக்கலாம் என்று சொல்லி இருந்தாலும், மதுவின் வற்புறுத்தலால் டிரைவர் காரை ஓட்ட, சித்தார்த் ஒருநாளைக்கு சில மணி நேரம் மட்டுமே ஆபீஸ் சென்று வந்தான்.

மாலை நேரங்களில் அவ்னுடன் சேர்ந்து பீச்சில் நடந்துவிட்டு வருவாள். ஒரு நாள் சித்தார்த் மதுவை வெகுவாக கடிந்துக்கொண்டான். "மது! நீ என்னைக் கவனிச்சிக்கிறேன்னு சொல்லி உன்னைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக்கறது இல்ல. சரியா சாப்பிடுறதில்ல. தூங்கறதில்ல. நான் எத்தனையோ நாள் பார்த்தேன், ஆழ்ந்த தூக்கம் இல்லாம ஒரு தவிப்போட இருப்ப. உன்னை மெதுவா தட்டிகொடுத்தாலோ... இல்லை என் அணைப்பில் தான் நீ நல்லா தூங்குற" என்றான்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அணைப்பும், ஆறுதலும்? ஒரு மாதமோ இரண்டு மாதமோ!’ என்று எண்ணுகையிலேயே கண்களில் நீர் கோர்த்தது. சித்தார்த் அறியாமல் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

அன்று இரவு மது தலையை விரித்து தளர பின்னிக்கொண்டிருக்க, சித்தார்த் பின்னால் வந்து நின்றான். நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவனது எண்ணம் புரிய, ஒன்றும் சொல்லாமல் பேசாமல் இருந்தாள். “மதூ!” என்று தாபத்துடன் அணைத்துக்கொண்டவனின் விருப்பத்திற்கிணங்க நடந்து கொண்டாள்.

காலையில் மது எழும்போது தலையைத் தூக்க முடியாமல் சுற்றிக்கொண்டு வந்தது. எழுந்துக்கொள்ள முயன்றவள் முடியாமல் மீண்டும் படுக்கையிலேயே விழுந்தாள்.

‘என்ன ஆச்சு எனக்கு? இரண்டு நாட்களாகவே லேசாக இப்படித் தான் இருந்தது. இன்று ரொம்பத் தொல்லையாக இருக்கே’ என்று எண்ணிக்கொண்டே, மெதுவாக எழுந்தவள் மனத்தில் சுருக்கென்றது.

‘இதை எப்படி நான் மறந்தேன்? சித்தார்த்தைப் பற்றிய நினைப்பினில் மொத்தமாக இந்த விஷயத்தை மறந்துவிட்டேனா? இன்றே டாக்டரிடம் போய் வர வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டே குளிர்ந்த நீரை முகத்தில் அடித்துக் கழுவினாள். சற்று பரவாயில்லை போலத் தோன்றியது. தன் கடன்களை முடித்துக்கொண்டு கீழே வந்தாள்.

சித்தார்த் அலுவலகம் கிளம்பி சென்றுவிட, தன் அத்தையிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு லேடி டாக்டரிடம் சென்று கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டு சிறு அதிர்ச்சியுடன், வெளியே வந்தாள்.

அருகில் இருந்த கோவிலின் உள்ளே சென்று அமர்ந்தவளுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கண்களை மூடித் தூணில் சாய்ந்து அமர்ந்தவளின் கண்கள் கண்ணீரைப் பொழிய, ‘எவ்வளவு சந்தோஷமான விஷயம்! சித்தார்த்துக்குத் தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்? வீட்டில் எல்லோருக்கும் தெரிந்தால், வீடே கொண்டாட்டமாக இருக்குமே... ஆனால், அது எதற்கும் வழி இல்லாமல் போய் விட்டதே. இன்னும் சில நாளில் சொந்தபந்தம் இல்லாமல் என் குழந்தை வளரப் போகிறதே எனும் வேதனையும் சேர்த்து அவளைப் பாடாய்படுத்தியது.

‘இது கடவுள் எனக்குக் கொடுத்தப் பரிசு! என் சித்தார்த்தின் நினைவாக, என் வாழ்க்கையின் பற்றுக்கோடாக எனக்கு ஒரு துணையைக் கடவுளே கொடுத்திருக்கிறார். என் குழந்தை, என் சித்தார்த்தின் ரத்தம். காலமெல்லாம் தனியாக இருக்கவேண்டுமே என்ற என் எண்ணத்தை மாற்ற கடவுள் இந்தக் குழந்தையை எனக்குக் கொடுத்திருக்கிறார். என் குழந்தையை நான் நன்றாக வளர்ப்பேன்’ என்ற முடிவுடன் கிளம்பினாள்.

காரை நேராக ஸ்ரீயின் ஹோமிற்குச் சென்று சிறிதுநேரம் செலவழித்த பின் வீட்டிற்குக் கிளம்பினாள். வரும் வழியிலேயே ‘இனி, வெகு நாட்கள் கடத்த முடியாது. இப்போதே லேசாக அதற்கான அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டது. வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிவதற்கு முன், கிளம்பிவிட வேண்டும்’ என்று எண்ணி தன் தோழிக்குப் போன் செய்து, இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வந்துவிடுவதாகவும், அதற்குத் தேவையான ஏற்பாட்டைச் செய்யும்படியும் சொன்னாள்.

வீட்டிலிருந்து எப்படிக் கிளம்புவது? என்று யோசித்தவள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து விட்டு அதையே செய்வது என்ற தீர்மானத்துடன் வீட்டிற்குச் சென்றாள். அன்று மாலை தேவகியிடம், "அத்தை நான் ஒரு பதினைந்து நாள் மாமா வீட்டிற்குப் போய் வரட்டுமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டதும், தேவகி அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்.

"என்ன மது திடீர்னு? நாங்களா போய்ட்டு வான்னு சொன்னாலும், போக மாட்டா. இன்னைக்கு நீயே கேட்கிற?" என்று கேட்டதும், "இல்ல அத்தை! இவருக்கு உடம்பு குணமாகிட்டா விரதம் இருப்பதா வேண்டிக்கிட்டேன். இங்கே இருந்தா கொஞ்சம் கஷ்டம். அதோடு, வித்யாவுக்கும் பிரசவ நேரம். நானும் கொஞ்சம் அங்கே இருந்தால் அத்தைக்கு ஈசியாக இருக்கும் " என்று தலையைக் குனிந்துக்கொண்டு சொன்னாள்.

"சித்தார்த்கிட்டச் சொல்லிவிட்டாயா?" என்றார்.

“நான் சொன்னா அவர் எதாவது சொல்லுவார். நீங்களே சொல்லிடுங்களேன்" என்றாள்.

தேவகி சிரித்துக்கொண்டே, "சரி, நான் சொல்றேன். நீ என்னைக்குக் கிளம்பற?" என்றார்.

"நாளைக்குக் காலைல" என்றாள்.

அன்று இரவு தேவகி சித்தார்த்திடம் சொன்னதும் சித்தார்த் மதுவைப் பார்த்தான். மது அவனைப் பார்க்காமல் உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். "சரிம்மா உங்க இஷ்டம்" என்றவன் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அறைக்கு வந்த மது ஊஞ்சலில் அமர்ந்திருந்த சித்தார்த்தின் அருகில் வந்தாள். அவன் பேசாமல் அமர்ந்திருக்க, அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். குர்த்தாவில் சூடாக கண்ணீர் இறங்குவதை உணர்ந்தவன், "ஹே! எதுக்கு அழற? நான் பேசலன்னா... நீ பதினைந்து நாள் இருக்கமாட்டியேன்னு கவலை தான்டா. நீ தாரளமா போய்ட்டு வா" என்றான்.

"சித்தூ..." என்று அவனை அணைத்துக்கொண்டு அழுது தீர்த்தாள் அவனது எத்தனையோ விதமான ஆறுதலும் அவளை அமைதிபடுத்தவில்லை. அவளை உள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே வந்தவள், அவன் சற்றும் எதிர்பாராத விதமாக, அவன் கழுத்தை வளைத்து முத்தங்களை அவன் முகம் முழுதும் இறைத்தாள். இரவு அவன் தன் அன்பையெல்லாம் வெளிக்காட்டிய போது, அவனிடம் முழுமையாக அடைக்கலம் கொண்டாள்.

மறுநாள் சித்தார்த் அலுவலகம் கிளம்பும்போதே தன் அத்தை, மாமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு கண்கள் கலங்க அனைவரிடமும் பிரியா விடைபெற்று, சித்தார்த்துடன் சென்றாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம்—63

"ஹேய்! மது வாவா. வாங்கண்ணா! எப்படியிருக்கீங்க?"

“நல்லாயிருக்கேன் வித்யா. நீ எப்படியிருக்க?" என்றான் புன்னகையுடன்.

"நல்லாயிருக்கேன், வாங்க. அம்மா அண்ணாவும், மதுவும் வந்தாச்சு" என்று குரல் கொடுத்தபடி என்று உள்ளே அழைத்துச் சென்றாள்.

“வாங்க வாங்க” என்று அழைத்தபடி ராஜியும், விமலாவும் வந்தனர்.

"என்ன சித்தார்த் இப்போ உன் உடம்பு எப்படியிருக்கு? நல்லாயிருக்கியா? மது உன்னை நல்லா பார்த்துக்கொள்கிறாளா?" என்று விமலா தொடர்ந்து கேள்விகளால் அவனைத் துளைக்க, அனைத்திற்கும் சிரித்தபடி பதில் சொல்லிக்கொண்டிருந்தவனை, இருவருக்குள்ளும் இருந்த பாசத்தை மௌன புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மதுவின் தோளில் இடித்த மேகலா, “என்னடி! இப்படி வச்சகண் வாங்காம சைட் அடிக்கிற" என் மதுவின் காதில் கிசுகிசுக்க, அவள் சிறு புன்னகையுடன் பேசாமல் இருப்பதைப் பார்த்த மேகலா வித்தியாசமாகப் பார்த்தாள்.

மேகலாவின் பார்வையை புரிந்து கொண்ட மது, ‘அவசரப்பட்டு உன் மேல் மற்றவர்களுக்குச் சந்தேகம் வருவது போல நடந்து கொள்ளாதே. நீயும், இங்கே இருக்கப் போவது சிலநாட்கள் தான். எல்லோருடனும் முடிந்த வரை சாதாரணமாகவே பழக முயற்சி செய்! இனி, வாழ் நாளெல்லாம் இதை நினைத்துத் தான், உன் வாழ்க்கையை ஒட்டவேண்டும்’ என்று மனத்திற்குள் நினைத்தபடி மேகலாவைத் திரும்பிப் பார்த்தாள்.

மேகலா மதுவின் முகத்தில் தெரிந்த பலவிதமான முகபாவத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் அல்ல சித்தார்த்தும் தான்.

சித்தார்த் கிளம்பும் நேரம் மதுவை அழைத்து, "என்ன மது ஒரு மாதிரி இருக்க? இந்த விரதமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். சாமிகிட்ட ஒரு சாரி சொல்லிக்கலாம். நான் ஈவ்னிங் வந்து கூட்டிட்டுப் போறேன். நீ தயாராக இரு" என்றான்.

அவனது பதில் ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், காரியமே கெட்டுது என்று எண்ணிக்கொண்டு, "அதெல்லாம் வேண்டாம். இந்த விரதம் உங்களுக்காக. நீங்க நல்லாயிருக்கணும் என்று நான் ஏற்றுக்கொண்டது. கட்டாயம் நான் அதை செய்தே ஆகணும்" என்று சொன்னாள்.

ஒருமுறை அவளைப் பார்த்தவன், “சரி நான் கிளம்பறேன் ஈவ்னிங் வந்துவிட்டுப் போறேன். நாளைலயிருந்து என்னை வரக்கூடாதுன்னு சொல்லிட்ட. அட்லீஸ்ட் போனாவது செய்யலாமா?" என்று கேட்டதும் "ம்ம்.." என்று தலையாட்டிய மனைவியைக் காதலுடன் பார்த்துவிட்டு, அவள் கையை பற்றி முத்தமிட்டுவிட்டு கிளம்பினான். கார் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்தபடி நின்றிருந்தாள்.

அன்று மாலை நான்கு மணிக்கெல்லாம் சித்தார்த் ஆபிஸிலிருந்து வந்துவிட்டான். விமலாவிடம் அமர்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தான். சிறிதுநேரம் கழித்து எழுந்து அறைக்குச் சென்றான். தீபக்கும், சித்தார்த்தைக் காண அறைக்குச் சென்றான். மது இருவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்துவிட்டு கீழே சென்றுவிட, "என்ன சித்தார்த் திடீர்னு உங்க பொண்டாட்டியைக் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போக மனசு வந்திருக்கு" என்றான் தீபக்.

"அட நீ வேற சும்மா இருப்பா. என்னவோ விரதமாம். நான் குணமாகிட்டா செய்றேன்னு வேண்டிக்கிட்டாளாம். இவளை யாரு இப்படியெலாம் விரதம் இருக்கச் சொல்லி வேண்டிக்கச் சொன்னது? கோவிலுக்குப் போயிட்டு வர வேண்டியது தானே" என்று எரிச்சலுடன் சொன்னான்.

சிரித்த தீபக், “என்ன சித்தார்த் உனக்காக அவள் வேண்டிட்டிருக்கா. இதுலயிருந்து தெரியல அவள் உன்னை எவ்வளவு காதலிக்கிறானு... சந்தோஷப்படுப்பா. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல அவங்க அண்ணன் சட்டையைப் பிடித்து எப்படிக் கத்தினா தெரியுமா? அப்பவே அவளோட காதலை நாங்க புரிஞ்சிகிட்டோம். பதினைந்து நாள் தானே... கொஞ்சம் பல்லைக் கடிச்சிட்டு ஓட்டுப்பா" என்றான்.

"வேற வழி, அதுவும் பார்க்கக் கூட வரக்கூடாதாம். இதெல்லாம் அதிகமா இல்லை. மனுஷனோட ஃபீலிங்க்ஸைப் புரிஞ்சிக்கவே மாட்டேன்னா எப்படி?" என்று புலம்பினான்.

“அப்போ ஏம்பா இங்க உட்கார்ந்திருக்க? உன் பொண்டாட்டிகிட்டப் பேசிக்கொண்டிரு" என்றவன் எழுந்து சென்றான். சமையலறையில் இரவு உணவுக்குத் தயார் செய்து கொண்டிருந்த ராஜி, விமலாவிற்கு மது உதவி செய்துகொண்டிருந்தாள்.
"மது! தேவகி பெரியம்மா போன்ல இருக்காங்க. நீ போய்ப் பேசிட்டு பொறுமையா வா. மீதி வேலையை அம்மா பார்த்துக்குவாங்க" என்றான்.

"நானும் அதான் சொல்லிட்டிருக்கேன். போதும் நீ கொஞ்சநேரம் உட்கார்ன்னு. ஆனா, எங்கே சொல்றதைக் கேட்டா. நீ போ மது நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார் விமலா.

"சரி அத்தை" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள். சித்தார்த் கட்டிலில் சாய்ந்த படி அமர்ந்திருந்தான். உள்ளே வந்த மது, “என்னங்க அத்தை போன் பேசி வைத்துவிட்டார்களா?" என்று கேட்டதும் தீபக் தான் அனுப்பி இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டே சிரித்தபடி, “வச்சிட்டாங்க" என்றான். “என்ன சொன்னாங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டாள்.

"ம்ம்... சொன்னாங்களே என்னடா இன்னும் பதினைந்து நாள் கழித்து தான் உன் பொண்டாட்டியை பார்க்க போற அதுவரை தாங்கறா மாதிரி ஸ்ட்ராங்கா வாங்கிட்டு வான்னு சொன்னாங்க" என் சொல்லிவிட்டுக் கண்ணை சிமிட்டி சிரித்தவனை இடுப்பில் கை வைத்து முறைத்துவிட்டு "ஸ்ட்ராங்கா தானே கொடுத்துவிட்டால் போச்சு" என்று கை முட்டியை மடக்கி பாக்சிங் போடுவது போல வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தபடி, “போனா போகுது சின்னப் பையனாசேன்னு விடறேன்" என்று சொல்லிவிட்டுக் கதவை நோக்கி நடக்க, சித்தார்த் விரைந்து சென்று கதவை தாளிட்டான்.

தாளிட்டவன் திரும்பி மது எதிரில் வந்து நின்றான். என்ன என்பது போல புருவத்தை உயர்த்தினான். "விளையாடாதீங்க சித்தூ. நான் கீழே போறேன்" என்று அவனை சுற்றிக்கொண்டு செல்ல முயல, அவள் இடுப்பை வளைத்து அருகில் இழுத்தான். "விடுங்க சித்தூ இதுக்குத்தான் உங்களை வரவேண்டாம்ன்னு சொன்னேன்" என்று சொன்னாள்.

"நீ சொல்லுவ. ஆனா, நான் கேட்கமாட்டேன். என்னைப் போய்ச் சின்னப் பையன்னா சொல்ற? இந்தச் சின்னப் பையன் என்னவெல்லாம் செய்றேன்னு பாரு" என்றபடி மதுவின் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான். மதுவின் கரங்கள் தானாக அவனை இறுக அணைத்தது. அது எவ்வளவு நேரம் நீடித்ததோ விலகும் போது இருவருக்குமே மூச்சு வாங்கியது.

"ஹே... மது எப்படியிருந்தது? என்னவோ நான் மட்டும்தான் ஆசையா இருப்பது மாதிரி பிகு பண்ண" என்று ரகசிய குரலில் சொல்லிக்கொண்டே அவள் கழுத்தில் முத்தமிட்டவனை வேகமாக தள்ளி விட்டுவிட்டுச் செல்ல முயன்றவளை இழுத்துத் தன் மீது சாய்த்துக் கொண்டான். "கொஞ்சநேரம் இருடீன்னா ரொம்ப தான் பிகுப் பண்றியே?" என்றவன் கட்டிலில் அமர்ந்து தன் மீது சாய்த்துக்கொண்டு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

சித்தார்த் இரவு உணவையும் அங்கேயே முடித்துக்கொண்டு கிளம்பினான். அவ்வளவு நேரம் சாதாரணமாக நடந்துகொண்டவளால் அதற்கு மேல் முடியவில்லை. கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது. அவளது முகத்தைப் பார்த்ததாலோ என்னவோ யாரும் சித்தார்த்தை வழி அனுப்ப வெளியே வரவில்லை.

கார் கதவைத் திறந்துவிட்டு, "மது!" என்று அழைத்தபடி திரும்பிய சித்தார்த்தை "சித்தூ" என்று இறுகக் கட்டிக்கொண்டு அழுதாள்.

"மது! என்ன இது? பதினைந்து நாள்தானே... நிமிஷமா ஓடிப் போயிடும். இங்கே பாரு நிமிர்ந்து என்னைப் பாருடா" என்று அவள் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான்.

"உங்களை விட்டு நான் தனியா எப்படி சித்தூ இருப்பேன்?" என்று அழுதவளை, "தினம் போன் செய். நானும் செய்கிறேன். கண் எதிரில் இருக்கும் வரை கஷ்டமாதான் இருக்கும். பார்க்காம இருந்தா அந்த அளவுக்குத் தெரியாதுடா. ஓகே. இப்போ கண்ணைத் துடை" என்று அவனே துடைத்துவிட்டு, "நான் கிளம்பறேன்" என்று அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுக் கிளம்பினான்.

வீட்டிற்குச் சென்றதும் சிறிதுநேரம் அவளுடன் மொபைலில் பேசினான். சமாதானம் சொல்லிவிட்டுப் படுத்தவனால் தூங்கவே முடியவில்லை. எங்குப் பார்த்தாலும் மதுவே நிற்பது போலத் தோன்றியது. கட்டிலின் மேல்புற ஷோகேசில் இருந்த மதுவின் போட்டோவை எடுத்து அணைத்தபடி படுத்துக்கொண்டான்.

அடுத்துவந்த நாள்களை மது தான் செய்ய எண்ணி இருந்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். முதல் வேலையாகச் சித்தார்த் தன் பெயரில் மாற்றி எழுதியிருந்த கம்பெனி ஷேர்களைச் சித்தார்த்தின் பெயரிலேயே மாற்றினாள். தான் கம்பெனி டைரக்டர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தார்த், ஜீவா, ரமேஷ் மூவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதினாள்.

சித்தார்த் ஆரம்பித்துக் கொடுத்த பேங்க் அக்கௌன்ட்டை முடித்துவிட்டு, அந்தப் பணத்தை அப்படியே டிடி எடுத்து அதையும் அந்தக் கவரில் வைத்தாள். கடைசியாக வக்கீல் ஒருவரின் உதவியுடன், விடுதலை பத்திரம் ஒன்றையும் எழுதி, அதில் தனக்கு சித்தார்த்துடன் வாழ விருப்பமில்லை. அதனால் தான் பிரிந்து செல்வதாகவும், அவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதாகவும்... அந்த வரிகளைச் சொல்லும் போது உடைந்து போய் அழுதவளை வக்கீலே ஆச்சரியமாகவும், சற்று கவலையுடனும் பார்த்தார். தன்னால் அந்த வரிகளை எழுத முடியாது என்று உணர்ந்து எழுதிக் கொடுக்கச் சொல்லி வாங்கி வந்தாள். வீட்டிற்கு வந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். பிறகு நடுங்கும் விரல்களால் அந்த விடுதலை பாத்திரத்தில் கையெழுத்து போட்டாள். ‘எல்லாமே என் சித்துக்காக’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

மறுநாள் மாலை, "அத்தை! நாளன்னைக்கு என் ப்ரெண்ட் ஒருத்திக்குத் திருநெல்வேலியில் கல்யாணம். நான் போய் வரலாம்னு இருக்கேன்" என்றாள் ராஜியிடம்.

"தேவகி அக்காவிடம் கேட்டியா?" என்றார்.

“காலைலேயே பேசிட்டேன் அத்தை. அத்தையும் சரி சொல்லிட்டாங்க. நானும் என் பிரெண்ட்ஸ் இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து போய்ட்டு வரலாம்னு இருக்கோம்."

"சரி போய்ட்டு வா. நான் மாமாவிடம் சொல்லிக்கொள்கிறேன்.”

"தேங்க்ஸ் அத்தை" என்று ராஜியைக் கட்டியணைத்து முத்தமிட்டு விட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.

சித்தார்த்திற்குப் போன் செய்து தான் சென்றுவர இருப்பதாகக் கூற, சற்று யோசித்த சித்தார்த், சம்மதம் சொன்னான்.

மது சிங்கப்பூர் கிளம்ப வேண்டிய நாள். வீட்டிற்குச் சென்று அனைவரையும் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் போலத் தோன்ற, காலையில் சித்தார்த்துக்குப் போன் செய்தாள். மறுநாள் காலையில் சித்தார்த்திற்கு மது போன் செய்து பேசிவிட்டுத் தான் கிளம்புவதாகக் கூறிவிட்டு மீண்டும், "நான் போறேன் சித்தார்த்!" என்று வந்த கண்ணீரை அடைக்கியபடி சொன்னாள்.

"என்னடா மது? நாளைக்கு ஒரு நாள் தானே நடுவில்... நாளன்னைக்கு ஈவ்னிங் உன்னைப் பார்க்க ஓடிவந்திடுவேன் இல்ல. நீ காலைல வந்துவிடுவா இல்ல" என்று கேட்டதற்கு எதுவும் சொல்லாமல், ‘அவன் எத்தனை மணிக்கு வீட்டிற்கு வருவான் என்று கேட்டுக்கொண்டு சற்றுநேரம் வேறுகதைகள் பேசிவிட்டுப் போனை வைத்தாள்.

அவன் வருவதற்குள் தான் சென்று அனைவரையும் பார்த்துவிட்டு இந்தக் கவரையும் அவன் பார்வையில் படும்படி வைத்துவிட்டு வந்துவிடலாம். நேத்ராவின் திருமணத்திற்கும் தான் இருக்க முடியாது என்று எண்ணிக்கொண்டு கவரையும் எடுத்துக்கொண்டு நேத்ராவிற்கு நல்லதாக அவளுக்குப் பிடித்த நிறத்தில் பட்டு புடவையும், பேர்ல் செட் ஒன்றும் குழந்தைகளுக்கும் டிரஸ்ஸும் வாங்கிக்கொண்டு, சித்தார்த்தின் வீட்டிற்குச் சென்றாள்.

மதுவைப் பார்த்ததும், அவளை ஆவலுடன் வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர். நேத்ராவிற்கு வாங்கிய அன்பளிப்பைக் கொடுத்ததும், அவளது மலர்ந்த முகத்தைப் பார்த்துச் சந்தோஷம் அடைந்தாள். அதே போலக் குழந்தைகளுக்கும் வாங்கி வந்திருந்ததை எடுத்துக் கொடுத்துவிட்டு அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தாள்.

ஆர்த்தி மதுவின் கைப்பையிலிருந்த மொபைலை எடுத்து விளையாடிக் கொண்டிருக்க, அதைக் கவனிக்காமல் பெரியவர்களின் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.

மதிய உணவை அவர்களுடன் உண்டுவிட்டு, தன் அறைக்கு வந்தாள். தன் பின்னாலேயே ஆர்த்தியும் உள்ளே வந்ததை அவள் கவனிக்கவில்லை. வார்ட்ரோபைத் திறந்து, சித்தார்த்தின் டி- ஷர்ட் ஒன்றையும் எடுத்துக்கொண்டு, அவன் கண்ணில் படுவது போல கொண்டுவந்த கவரை வைத்தாள்.

கட்டிலுடன் அமைந்திருந்த ஷோகேஸில் இருந்த சித்தார்த்தின் போட்டோவை எடுத்து அவள் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அழுவதை, ஆர்த்தி பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.

கண்களைத் துடைத்துக்கொண்டு டி-ஷர்ட்டையும், போட்டோவையும் தன் கைப்பையில் வைத்துக்கொண்டு எழுந்தவள், தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ஆர்த்தியைக் கண்டதும் அவசரமாக அவசரமாக முகத்தைத் திருத்திக்கொண்டாள்.

“ஆர்த்திக் குட்டி!" என்று கையை நீட்டினாள்.

"சித்தி! ஏன் சித்தி அழறீங்க?" என்றதும், "ஒண்ணுமில்லடா சித்தி கண்ல தூசு விழுந்துடுச்சி" என்று சமாளித்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு, ஆர்த்தியையும் அழைத்துக்கொண்டு கீழே வந்தாள்.

ஈவ்னிங் டிபனை முடித்துக்கொண்டு அவள் கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில் சித்தார்த் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

"என்னண்ணா! இன்னைக்குச் சீக்கிரமா வந்துட்டீங்க? கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அண்ணியைப் பார்த்திருக்கலாம்" என்றாள் நேத்த்ரா.

"மதுவா! நான் காலைல பேசினேனே! அவள் வர்றதா ஒரு வார்த்தைக் கூடச் சொல்லவில்லையே" என்று ஆச்சரியமும், குழப்பமுமாகக் கேட்டான்.
"அது மட்டும் இல்ல... எனக்குப் ப்ரசென்ட் வாங்கிட்டு வந்து கொடுத்தாங்களே” என்று குழந்தையைப் போலச் சிரித்துக்கொண்டே கொண்டு வந்து காட்டினாள்.

தேவகியும் மகனிடம் சொல்ல யோசனையுடன் தன் அறைக்குச் செல்லும் போது, "சித்தப்பா! சித்தி எனக்கு டிரஸ் வாங்கிட்டு வந்து கொடுத்தாங்களே” என்றதும் சித்தார்த் புருவத்தைச் சுருக்கி, ‘நாம இல்லாத போது வந்து போயிருக்கா! நேத்ராவுக்கும், குழந்தைகளுக்கும் டிரஸ் வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கா’ என்று நினைத்துக்கொண்டே ஆர்த்தியைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

அதேநேரம், ஆர்த்தியின் ப்ராக் பாக்கெட்டிலிருந்த மதுவின் மொபைல் ஒலித்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தவன், ஆர்த்தியின் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்தான். அதற்குள் மொபைல் தன் அழைப்பை நிறுத்தி இருந்தது.

"என்னடா இது? சித்தி போனை விட்டுட்டுப் போய்ட்டாங்களா? அதை நீங்க எடுத்து வச்சிகிட்டீங்க்ளா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டவன் மிஸ்ட் காலில் இருந்த எண்ணைப் பார்த்தான்.

அயல்நாட்டு அழைப்பு என்று புரிந்தது. ஆனால், யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. சரி என் முகத்தைக் கழுவிக்கொண்டு வருவதற்குள், மேலும் இரண்டு முறை கால் வந்து நின்றிருந்தது.

“ஆர்த்திக் குட்டி! சித்தி, வேற என்ன சொன்னாங்க?" என்றான் விசாரணையாக.

குழந்தையும் பார்த்ததை மறைக்காமல், "சித்தி! உங்க போட்டோ பார்த்து அழுதாங்க. அப்புறம், உங்க டிரஸ்... அந்தப் போட்டோ எடுத்து பேக்ல வச்சிக்கிட்டாங்க" என்று சொல்லச் சொல்ல, சித்தார்த்தின் முகம் வெகுவாகக் குழம்பியது. மீண்டும் மொபைல் ஒரே ரிங்கில் கட்டாகிவிட, இந்த முறை சித்தார்த்தே அந்த எண்ணைத் தொடர்பு கொண்டான்.

அவன் பேசும் முன்பே, “ஏன்டி மது! எத்தனை முறை போன் செய்றது? நான் கிளம்பும் முன் எனக்குப் போன் செய்யச் சொன்னேன் இல்ல. நான் ஏர்போர்ட் வந்து, உன்னை ரிசீவ் பண்ணிக்கிறேன். உனக்கு வேண்டிய எல்லாம் ஏற்பாடும் செய்துட்டேன்" என்று அவள் சொல்லச் சொல்லச் சித்தார்த்தின் மனம் கோபத்திலும், ஆத்திரத்திலும் துடித்தது.

மதுவின் தோழி பேசிக்கொண்டிருக்கும் போதே மொபைலை அணைத்தவன், மது அங்கிருந்து கிளம்பிச் சென்ற நாள் முதல் நடந்த ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தவனுக்கு, ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றியது. அப்படியானால் அவள் கல்யாணத்துக்குப் போகவில்லை. என்னை விட்டு முழுவதுமாகப் போகப் போகிறாளா? பிறகு, எதற்கு இங்கே வந்தாள்?’ என்று எண்ணி கண்களால் ரூமை அளந்தான். ஏதோ தோன்ற வார்ட்ரோபைத் திறந்தவன் கண்களில் பட்டக் கவரை எடுத்துப் பிரித்தான்.

டிடி, கடிதம், என்று ஒவ்வொன்றாகப் பார்க்கப் பார்க்கக் கடைசியாக விடுதலை பத்திரத்தை எடுத்துப் படித்தவனின் கண்களில் தெரிந்த கோபமும், ஆத்திரமும், அவனை நிலைதடுமாறச் செய்தது. கையிலிருந்தவற்றை தூக்கி எறிந்தான். கண்களில் கோபத் தீ தெரிய, வெறியுடன் விடுதலை பத்திரத்தை மட்டும் கவரில் போட்டு எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினான்.

“மது! பத்திரமா பார்த்துப் போய் வா. ரெண்டு நாள்ல வந்துடுவ தானே... ஒன்றாகவே போயிட்டு ஒன்றாகவே வாங்க. போய்ச் சேர்ந்ததும் போன் செய். நைட்டும் போன் பண்ணு” என்று ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல, செயற்கையாக சிரித்தபடி அனைத்தையும் கேட்டுக் கொண்டாள்.

விமலா, வியர்த்திருந்த மதுவின் முகத்தைத் தன் முந்தானையால் துடைத்து விட்டதும், அவளையும் மீறி கண்ணீர் வர, ட்ராலி பேகை எடுப்பது போலக் குனிந்துக்கொண்டாள்.

"கொடு மது! நான் கொண்டு வருகிறேன்" என்று ராஜேஷ் வாங்கிக் கொண்டான்.

அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு நா தழுதழுக்க, "நான் கிளம்பறேன்" என்றாள். ‘கடவுளே! இத்தனைப் பேரின் சந்தோஷத்தையும் மொத்தமாக அழித்துவிட்டுப் போகிறேனே! என்னை மன்னித்துவிடு’ என்று எண்ணிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தவள், கோபத்துடன் வந்து கொண்டிருந்த கணவனைக் கண்டதும் அதிர்ந்து நின்றாள்.

புயலென விட்டிற்குள் நுழைந்தவனை அனைவரும் பார்க்க ராஜேஷ், “வா சித்தார்த்! என்ன மதுவை வழியனுப்ப வந்திருக்கியா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

முறைத்துக்கொண்டே அவளருகில் வந்த சித்தார்த், அவளது திகைத்த முகத்தைப் பார்த்ததும் மதுவைப் பளாரென ஓங்கிக் கன்னத்தில் அறைந்தான். அவனுடைய இந்த அதிரடி நடவடிக்கையால் நிலை குலைந்து போனாள்.

ஹாலில் கூடியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், ‘அவர்கள் இருவரும் தனியாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டியது இது’ என்று உணர்ந்தவர் போலப் பார்வைகளைப் பரிமாறி, அனைவரும் அகன்றனர். இருந்தாலும், ஆளுக்கொரு கோணத்திலிருந்து அவர்களைக் கண்காணிக்கத் தவறவில்லை.

"சே! நானும் பொறுத்து பொறுத்துப் போகிறேன், என்னோட பொறுமையை ரொம்பவே சோதிக்கிறே நீ! இத்தனை நாளா நினைக்கல. ஆனா, இப்போது உன்னை ஏன் தான் பார்தோமோன்னு நினைக்கிறேன்" என்று வெறுப்புடன் அவளைப் பார்த்து கூறினான்.

திகைத்து விலகாமலேயே நின்றிருந்தவள், ஈனஸ்வரத்தில், "சித்தார்த்" என்று அழைக்க, "என்ன சித்தார்த்?" ஏதாவது புதுக் கதை வச்சிருக்கியா?” என்று உறுமியவன், “இதுக்கு என்ன அர்த்தம்?” என்று கையிலிருந்த கவரை அவள் முன்னே ஆட்டினான்.

பயந்த பார்வையுடன் மலங்க மலங்க விழித்தவள், என்ன சொல்வது என்று புரியாமல் திகைப்புடன் நிற்கவும், "சே" என்று ஒரு தலையசைவுடன் சோபாவில் போய்த் தொப்பென அமர்ந்தான்.

அவனை எப்படி அணுகுவது என்று புரியாமல், மெதுவான குரலில், “சித்தூ" என்று அழைத்தவளைத் தீயென விழித்துப் பார்த்தவன் கண்களில், அவளது கன்னத்தில் பதிந்திருந்த விரல் அடையாளமும் பட்டது.

“வேகமா அடிக்கிற காத்துக்கூட, உன்னைத் துன்புறுத்தக் கூடாதுன்னு நினைச்சிருந்தேனே பாவி! நீ பாவம் செய்து, என்னையும் பாவியாக்கிட்டியே! உன்னை அடிச்சது இங்கே வலிக்குதுடி” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.

அவன் அருகே சென்று, அவன் தலைமுடியை கோதி தன்னோடுச் சேர்த்து அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற துடிப்பு இருந்தாலும், அவனை நெருங்கித் தன் எண்ணத்தை நிறைவேற்ற தைரியம் இல்லாமல், “முதல்ல என்னைக் கொஞ்சம் சொல்ல விடுங்க சித்தூ!” என்றாள்.

“ஓகோ! மேடம் இதுக்கு விளக்கம் வேற வச்சிருக்கீங்களா? சொல்லுங்க கேட்கறேன்" என்றான் கிண்டலாக.

"ப்ளிஸ் சித்தூ!" என்றவளை "என்னை அப்படிக் கூப்பிடாதடீ! உன் மனசு முழுக்கக் காதலோடு கூப்பிடுறன்னு தான் இத்தனை நாளா நினைச்சிருந்தேன். ஆனா, இன்னைக்குத் தான்டீ புரிஞ்சிது உன் மனசு முழுக்க விஷம்ன்னு" என்று இரைந்தான்.
அவள் பரிதாபமாக விழித்து, “ப்ளிஸ்!” என்று வாயசைவில் சொல்லவும், ஒரு வேதனையான பாவனை அவன் முகத்தில் படிந்தது. சொல்லு என்பது போல அவன் கையசைவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

"உங்க நன்மைகாகத் தான் இப்படிச் செய்தேன்" என்றதும், ‘என்ன?’ என்பது போல, அவன் ஒரு புருவத்தைக் கிண்டலாகத் தூக்கினான்.

"நிஜமாவேதான் சொல்றேன்... சி..." என்று ஆரம்பித்து விட்டு மரத்த குரலில், “நான் சொல்றதைச் சொல்லிடுறேன்” என்றவள், மடமடவென்று தன் முடிவிற்கான காரணத்தைச் சொல்லி முடித்தாள்.

அவள் பேசப் பேச வேறு வேறு பாவனைகள் அவன் முகத்தில் வந்து போயின. பேசி முடித்ததும், "நிறுத்துடீ!" என்று எழுந்து நின்று இரைந்தவன், அவளுடைய விடுதலை பத்திரத்தை எடுத்து அவள் முகத்தில் வீசியடித்து, "இதில் எப்போ நீ கையெழுத்து போட்டியோ... அப்பவே நான் செத்துட்டேன்" என்று உச்சஸ்தானியில் உறுமினான்.

ஒரு நிமிடம் தலை கிறுகிறுக்க விழப்போனவள் தன்னைச் சமாளித்துக்கொண்டு, "சித்தூ" என்று ஒரு பெரிய அலறலுடன் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

"வேணாம். தயவுசெய்து உங்க வாயால அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லாதீங்க. இந்த வார்த்தையைக் கேட்கவா நான் உயிரோடு இருக்கேன். என்னைக்குமே நீங்க நல்லாயிருக்கணும்ன்னு தான் நினைக்கிறேன். அதுக்காகத் தானே என் உயிராய் நினைச்சிட்டு இருக்கும் உங்களை விட்டுப் பிரிந்து போகணும்னு நினைச்சேன்.

கடைசில உங்க வாயாலேயே இந்த வார்த்தையைக் கேட்கவா நான் உயிரோடு இருக்கணும். ஐயோ! அம்மா... என்னால தாங்க முடியலையே" என்று கதற ஆரம்பிக்கவும், பாறையாக இறுகி இருந்த அவனது நெஞ்சம், கற்பூரமாய் கரையத் தொடங்கியது. அவனது கோபம் சற்றுக் குறைந்தது. ஆயினும், அவளது கதறல் நிற்காமல் தொடர, அவர்களது காதலே இறுதியில் வென்றது.

அவளை தன் முன்னே இழுத்தவன், சோபாவில் அமர வைத்தான். அவனும் அருகே அமர்ந்து, “மது! நீ என்னுடன் இருந்து எவ்வளவு சீக்கிரம் நான் செத்துப் போனாலும் எனக்குச் சந்தோஷம். ஆனா, நீ என்னைப் பிரிந்து போனால், அந்த நொடியே நான் பிணம் தான்" என்றதும் அவனது வார்த்தைகளைக் கேட்டவள் வேகமாகத் தலையை ஆட்டி, அவன் வாயை பொத்தினாள்.

"அப்படியெல்லாம் பேச்சுக்குக்கூடச் சொல்லாதீங்க சித்தூ!" என்றவள் அதற்கு மேல் கதற அவள் உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றாக பெருக்கெடுத்தது. அப்படியே சரிந்து சோபாவை விட்டு இறங்கியவள் அவன் மடியில் முகம் புதைத்துத் தன் அழுகையைத் தொடர்ந்தாள்.

கண்ணை மூடி சோஃபாவின் பின்புறம் சாய்ந்தவனின் கரங்கள், அவளது முதுகை ஆறுதலாக நீவிக் கொடுக்க, அவன் காலடியிலேயே மயங்கிச் சரிந்தாள். அவளது நிலையைக் கண்டதும், "மது....மது... இங்கே பாரும்மா! மது கண்ணைத் திற மது!" என்று அவன் தவிக்க, சப்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்தனர்.

ஆளாளுக்கு அவளைக் கன்னத்தில் தட்டியும், தண்ணீரில் முகத்தைத் துடைத்தும் மயங்கியவள் அசைந்து கொடுக்கவே இல்லை. அதற்குள், தீபக் டாக்டருக்குப் போன் செய்து வரவழைத்தான். அவளது நிலைக்குத் தான் தான் காரணம் என்று தன்னையே திட்டிக்கொண்டு, தனக்குள்ளே உடைந்து நொறுங்கிப் போனான்.

டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, "கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர்.சித்தார்த் நீங்க அப்பாவாகப் போறீங்க" என்ற டாக்டரின் வார்த்தைகளைக் கேட்டதும், அவ்வளவு நேரமும் என்னவோ ஏதோவென நினைத்துக்கொண்டிருந்தவன், இந்தச் சந்தோஷச் செய்தியைக் கேட்டதும், உலகத்தையே ஜெயித்தது போலிருந்தது.

“ரொம்ப வீக்கா இருக்காங்க. நல்ல சத்துள்ள ஆகாரமா கொடுங்க" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

டாக்டர் சென்றதும் ஆளாளுக்கு சித்தார்த்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டுச் சித்தார்த்தை கிண்டல் செய்துக்கொண்டிருந்தனர். அனைவரையும் சமாளித்துவிட்டு வந்த சித்தார்த் தன் வீட்டிற்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்ல, தேவகி உடனே மதுவைப் பார்க்க வருவதாக சொன்னார்.

சித்தார்த்தோ, “நானே நாளைக்கு அவளை வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன். இப்போ, மயக்கத்தில் இருக்கா” என்றவன் போனை வைத்தான்.

அவள் கண்களை விழிக்க மொபைல் அணைத்துவிட்டு, வேகமாக அவளருகில் வந்தான்.

"மதும்மா! தேங்க்ஸ்டா தேங்க்யூ மை ஸ்வீட்டி!" என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான். ஒரு கணம் புரியாமல் விழித்தவள் விஷயத்தை யூகித்து, "சித்தூ!" என்று முகம் சிவக்க நாணத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள். தன் காதலுக்குப் பரிசை தன் வயிற்றில் சுமந்திருக்கும் மனைவியைச் சந்தோஷத்துடன் அணைத்துக்கொண்டான்.


அத்தியாயம் -- 63​

தன் மீது சாய்ந்திருந்தவள் முகத்தை நிமிர்த்தி, நெற்றியில் முத்தமிட்டான். கன்றிச் சிவந்திருந்த அவளது கன்னத்தைப் பார்த்தவன் வேதனையுடன் வருடியபடி, “வலிக்குதாடா" என்றான் மெதுவாக.

மெல்ல தலையசைத்தவள், “வலிக்குது. ஆனா, உங்களுக்கு வலித்ததை விடக் குறைவுதான்" என்று அவனது நெஞ்சைத் தடவி விட்டவளை இறுக அணைத்துக்கொண்டான்.

“நீ என்னைப் பிரிஞ்சி போறதைத் தாங்க முடியாம, அந்த ஆத்திரத்தில் தான் நான் உன்னை அடிச்சிட்டேன் ஹனி! சாரிடா" என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

"என் மேலேயும் தப்பு இருக்கு சித்தூ! ஆனால், உங்களைப் பிரிஞ்சி நானும் நிம்மதியாக இருந்திருக்க முடியாது. நீங்க நல்லாயிருக்கணும்ங்கற அந்த ஒரு விஷயம் தான், உங்களை விட்டுப் போக நினைக்க வச்சது. நீங்களும் என் அளவுக்கு வேதனைப்படுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சிப் பார்க்கல. ஒருவேளை நான் சிங்கப்பூர் போயிருந்தா என்னை எப்படிக் கண்டு பிடிச்சிருப்பீங்களா?" என்றதும், கிண்டலாகப் பார்த்தவன், "நீ இங்க வாங்கின அறையை சிங்கப்பூர் வந்து உனக்குக் கொடுத்திருப்பேன்" என்று சிரித்தான்.

அவனைப் பார்த்து முறைத்தவளின் கன்னத்தைத் தட்டி, "உன்னைக் கண்டு பிடிப்பது அவ்வளவு கஷ்டம்னு நினைச்சியா? என்னோட காதலே, உன்னை திரும்பக் கொண்டு வந்து சேர்த்திருக்கும். ஆனா, ராசியில்ல… அது இதுன்னு நீ ஏன் உன்னை இப்படி வருத்திட்டிருக்க?" என்றான் கவலையுடன்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள், "இல்ல சித்தூ! நான் அனுபவிச்ச வேதனை, உங்களுக்குத் தெரியாது. என் மனசு வலிக்கும்ன்னு கொஞ்சங் கூட யோசிக்காம எத்தனைப் பேர் எனக்கு முன்னாலும், பின்னாலும் பேசியிருக்காங்க தெரியுமா? எங்க மாமா வீட்டில் கூட, யாருக்கும் சொன்னதில்லை. அந்த வலியையெல்லாம் என் மனசுக்குள்ளேயே போட்டுட்டு... புதைச்சிட்டு இருந்திருக்கேன்.. காலம் எல்லா வலியையும் மாத்தும்ன்னு பேசலாம். ஆனா, மனதில் பதிந்த அந்தக் காயத்தின் வடு, காலம் முழுக்க நம்மோடவே இருக்கும். நான் செய்த காரியம் உங்க எல்லோருக்கும் முட்டாள்தனமாக இருக்கும். ஆனா, என்னோட நிலையிலிருந்து பார்த்தால் மட்டும்தான் என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்க முடியும்" என்று கலங்கியவளை ஆதூரத்துடன் பார்த்தான். அவளைத் தன்னுள்ளே புதைத்துக் கொள்வதைப் போல, இறுக அணைத்துக்கொண்டான்.

"எதுவாக இருந்தாலும், தயவுசெய்து இதைப் போலத் தவறான முடிவை மட்டும் எடுக்காதே" என்றான்.

"இல்ல சித்தூ! இனி, உங்களை விட்டுக் கனவில் கூடப் பிரியமாட்டேன்" என்றாள் காதலுடன்.

"போதும் போனதெல்லாம் போகட்டும். இனி, நம்ம வாழ்க்கையில் நமக்குள்ளே பிரிவுங்கற வார்த்தையே வரக்கூடாது. உன் மனசுல என்ன இருந்தாலும், என் மேல் கோபம் இருந்தாலும், நேரடியாக என்கிட்டக் கேட்டுச் சண்டை கூடப் போடு. இப்படி உன் மனசுலேயே மறைச்சி வைக்கக் கூடாது புரியுதா?" என்றவனைக் காதலுடன் பார்த்துச் சரியென தலையை ஆட்டினாள்.

மறுநாள் காலையில் அவளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு கிளம்பினான். இருவரையும் ஆசிர்வதித்து, மதுவிற்கு ஏகப்பட்ட அறிவுரையும் சொல்லி அனுப்பி வைத்தனர். சித்தார்த் வீட்டிற்குச் சென்றதும், சந்தோஷத்துடன் அவளை எதிர்க்கொண்டு, தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர். சுபாவும் போன் செய்து மதுவிடம் பேசி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தாள். சித்தார்த் ஹரியுடன் பேசிவிட்டு வந்தான்.

வெகுநேரம் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்வளை, “நீ போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ மது” என்று தேவகி அவளை அனுப்பி வைத்தார்.

சித்தார்த் தன் பெற்றோரிடம் அனைத்தைய்ம் சொல்ல, தேவகி சற்று கலங்கினாலும், “அவள் உனக்காகத் தாண்டா இத்தனை தூரம் செய்திருக்கா. நீ நல்லாருக்கணும்ன்னு நம்ம அத்தனைப் பேரையும் விட்டுட்டுப் போக அவளுக்கு எவ்வளவு கஷடமா இருந்திருக்கும்” என்றவருக்கு மருமகளை எண்ணி வருத்தமும், சந்தோஷமும் ஒருசேர தோன்றியது.

சற்றுநேரம் அவர்களிடம் பேசிவிட்டு, அறைக்குச் சென்றான். மது உறங்கிக்கொண்டிருக்க, அவளது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவன் மனம் நிறைந்த சந்தோஷத்துடன், அவளது கைகளைப் பற்றியபடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

இரண்டு நாள்கள் கழித்துச் சித்தார்த், அவளிடம் ஒரு கவரை நீட்டினான். பிரித்தவள் அதில், சுவிட்சர்லாந்து செல்ல இரண்டு விமான டிக்கெட்டுக்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியத்துடன் கணவனைப் நோக்கினாள்.

"என்னடா செல்லம்ஸ் அப்படிப் பார்க்கற?" என்று கேட்டுக்கொண்டே தன் கையணைப்பில் நிறுத்திக்கொண்டான்.

"எதுக்குங்க இப்போ சுவிஸ்...?" என்று கேள்வியுடன் பார்த்தாள்.

"நீதான்டா கண்ணம்மா சிங்கப்பூர் பார்க்கணும்னு கிளம்பின. சிங்கப்பூர் என்ன சிங்கப்பூர்? என் ஏஞ்சலை நான் சுவிஸ்ஸுக்குக் கூட்டிட்டுப் போகப் போறேன்" என்று சொல்லிக் கொண்டே அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவனுக்குச் சிறிதுநேரம் ஈடுகொடுத்தவள், "டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ண வேண்டாமா?" என்றவளின் முகம் பார்த்து, “அதெல்லாம் நான் ஏற்கெனவே பேசிட்டேனே. ஒரு அனுபவசாலி டாக்டரான அம்மாவிடமும். வளர்ந்துவரும் டாக்டரான நேத்ராவிடமும், பேசி அப்பாவிடமும் பர்மிஷன் வாங்கின பிறகுதான், உனக்குச் சொல்றேன்" என்றான்.

"இன்னும் ரெண்டு நாள் தான். அதுக்குள்ளே பேக்கிங்கை முடிக்கணும். இங்கேயிருந்து டெல்லி, சுபாவும், மாமாவும் அங்கே வந்திடுவாங்க. அவங்களோட கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணிட்டு சுவிஸ் ஃப்ளைட் பிடிக்கணும்" என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டுச் சென்றான்.

அடுத்துவந்த இருநாள்களும், இறக்கை கட்டிக்கொண்டு பறந்தன. இருவரும் ஒருவர்ருக்கொருவர் தெரியாமல் பரிசுப்பொருளை வாங்கித் தங்கள் சூட்கேசில் மறைத்து வைத்தனர். மூன்றாம் நாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பறந்தனர்.

மறுநாள் காலையில் சித்தார்த் மதுவுடன், ஜுரிச் விமான நிலையத்தில் இறங்கினான். அங்கே ஜீவாவின் உறவினர் ஒருவரின் உதவியுடன், அடில்ச்பெர்க் ஹில்சில் அமைந்திருந்த ஹோட்டலுக்குச் சென்றனர். ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த அறைக்குச் சென்று தங்கிக்கொண்டனர்.

குளித்துவிட்டு, அங்கிருந்த பழங்கால ஓவியர்களின் ஓவியங்களையும், அருகிலிருந்த புகழ்பெற்ற சர்ச் ஒன்றிற்கும் அழைத்துச் சென்றான். மேலும், முடிந்தவரை சுற்றிவிட்டு இருவரும் அறைக்கு வந்து சேர்ந்தனர்.
பெட்ரூமிற்குச் செல்ல முயன்றவளை, "மது டார்லிங்! அந்த ரூமிற்கு இப்போ போக வேண்டாம்" என்று அவளைப் பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றான்.

"என்ன சித்தூ என்ன விஷயம்? ஏதாவது சர்ப்ரைஸ் வச்சிருக்கீங்களா?" என்றாள்.

" ஒரு குட்டிச் சர்ப்ரைஸ்" என்று கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.

"என்ன சர் ப்ரைஸ் சித்தூ ப்ளீஸ் சீக்கிரம் சொல்லுங்களேன்?” என்று அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சியவளை ரசனையுடன் பார்த்தவன், "ஹனி! நான் என்னை ரொம்பக் கண்ட்ரோல் பண்ணிட்டிருக்கேன். நீ இப்படிக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி என்னைத் தடுமாற வைக்காதே" என்று சொல்ல, அவள் உதட்டைச் சுழித்துச் சிரித்தாள்.

அதைக் கண்டவன், "இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா அவஸ்தை படப்போற மது! என்னை ரொம்பச் சீண்டாதே" என்றபடி அவளது இதழ்களைச் சிறைசெய்தான்.

அவளை விலக்கிவிட்டு குளியலறையை நோக்கி நடந்தவன், “மது! அந்த ரூமை திறக்காதே... அந்தப் பக்கமே போகக்கூடாது புரியுதா?" என்றவனைப் பார்த்துச் சரியென தலையாட்டினாள்.

‘அப்படி என்ன இருக்கு அந்த அறையில்?’ என்று யோசித்தபடியே மது அமர்ந்திருக்க, அவன் குளித்துவிட்டு வந்தான். சூட்கேசைத் திறந்தவனை அவசரமாக, “சித்தூ! சித்தூ! கொஞ்சம் இருங்க" என்றவள், அவனது கண்களில் படாமல் மறைத்து வைத்திருந்த பெட்டியை அவனிடம் கொடுத்தாள்.

"சித்தூ! இது என்னோட முதல் கிப்ட்! உங்களுக்காக நானே போய் வாங்கிட்டு வந்தேன். பிடிச்சிருக்கான்னு சொல்லுங்கள்" என்றாள் வெட்கத்துடன்.

புன்னகையுடன் வாங்கிக்கொண்டவன், “தப்பு தப்பா சொல்லாதேடி! என்னோட முதல் கிஃப்ட் நீ! என்று அவளது ஒரு கண்ணில் முத்தமிட்டான். “ரெண்டாவது பரிசு நம்ம நேசத்துக்கு அடையாளமா கடவுள் கொடுத்த நம்ம குழந்தை” என்றவன் அவளது மற்றொரு கண்ணில் முத்தமிட்டான். “மூணாவது தான் இப்போ நீ கொடுத்திருக்கிறது...” என்றவன் அவளது விழிகளை ஆர்வத்துடன் பார்த்தான்.

அவளும் குறும்பு தத்தளிக்கும் பார்வையுடன் அவனை மையலுடன் பார்த்தாள். “இதுக்கான கிஃப்டை அப்புறமா கொடுக்கறேன். டின்னருக்குக் கிளம்பணும். சீக்கிரம்” என்று அவளது மூக்குடன் மூக்கை உரசியவன்” சிரித்துக்கொண்டே விலகினான்.

அவளை அனுப்பிவிட்டு கிஃப்ட் ராப்பைப் பிரித்தான். உள்ளேயிருந்த உடையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே அதை அணிந்துக்கொண்டு வரவும், அவள் குளித்துவிட்டு வரவும் சரியாக இருந்தது.

ஓய்ட் அண்ட் ஓய்ட் த்ரெட்வொர்க் ஷெர்வானியில் சிரித்தபடி அட்டகாமாக நின்று கொண்டிருந்தவனைப் பார்த்தவள் மலர்ந்த புன்னகையுடன் அருகில் வந்தாள். பக்கத்திலிருந்த பூக்குவளையிலிருந்து ஒரு சிகப்பு ரோஜாவை ஷெர்வானியில் சொருகிவிட்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “ஐ லவ் யூ சித்தூ!" என்றவளின் உச்சியில் முத்தமிட்டான்.

"ஒன் மினிட்" என்றவன் அவள் கொடுத்ததைப் போலவே ஒரு பெட்டியையும், ஹோட்டலுக்கு வரும்போதே ரிசப்ஷனிலிருந்து வாங்கி வந்த ஒரு பெட்டியையும் சேர்த்து அவளிடம் கொடுத்தான்.

"மது! சீக்கிரம் கிளம்பி வா" என்று சொல்லிவிட்டுச் சோபாவில் அமர்ந்தான்.

கிஃப்ட் ராப்பைப் பிரித்ததும் அதன் மீது, "டு மை ப்ரேஷியஸ் லிட்டில் ஏஞ்சல்" என்று எழுதி இருந்ததைப் பார்த்தவளுக்குக் கண்களில் நீர் கோர்த்தது. அட்டை பெட்டியைத் திறந்தவள் உள்ளே தூய வெள்ளை நிற புடவையில் இருபுறமும், வெள்ளைக் கற்களும், வெள்ளை சமிக்கியும் வைத்து முழுதும் த்ரெட் வொர்க் செய்திருந்த புடவையை வருடிக் கொடுத்தாள்.

பரவசத்துடன் அந்தப் புடவையை அணிந்துகொண்டாள். ரிசப்ஷனில் வாங்கி வந்த பெட்டியைத் திறக்கும் போதே, அதன் வாசம் மூக்கைத் துளைக்க மது சிரிப்புடன், தனக்காக எவ்வளவு ஆசையுடன் இங்கே இதை வரவைத்திருக்கிறான், என்று எண்ணிக்கொண்டே பெட்டியைத் திறந்து, மல்லிகைச் சரத்தைத் தலையில் சூடிக்கொண்டாள்.

தன் கைப்பையிலிருந்த சிறிய டப்பாவை எடுத்து வெளியே வந்தாள். அவன் வெளியில் காத்திருக்க, வெள்ளை உடையில் தேவதையாக ஜொலித்த மனைவியைக் காதலுடன் பார்த்தான்.

அவளுக்குப் பின்னால் வந்து நின்றவன், தன் பாக்கெட்டிலிருந்து எடுத்த செயினை அவளது கழுத்தில் அணிவித்தான். அதில் சிகப்பு நிற டாலரில் பொடிப் பொடியான வைரத்தில் எம் என்ற எழுத்து எஸ் என்ற எழுத்தில் உள்ளடங்கி இருந்தது. ஆசையுடன் அவன் அணிவித்த சங்கிலியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

அவளும், சித்தார்த்தின் கரத்தைப் பிடித்துத் தன் கையிலிருந்த சிறிய டப்பாவிலிருந்த மோதிரத்தை எடுத்துக் கணவனின் கரத்தில் அணிவித்தாள். மோதிரத்தைப் பார்த்தவன், அதில் எம் என்ற எழுத்தைச் சுற்றியிருந்த கொடியாக எஸ் என்ற எழுத்து இருந்ததைப் பார்த்தான்.

"நம்ம ரெண்டு பேரொட மனசும் ஒரே மாதிரி யோசிக்கறது இதிலேயே புரியுது இல்லையா மதும்மா?" என்றதும், அவனை இறுக அணைத்துக்கொண்டு, "ஐ லவ் யு, ஐ லவ் யு, ஐ லவ் யு... சித்தூ!" என்று அவன் முகமெங்கும் தன் முத்திரைகளைப் பதித்து ஆனந்தக் கண்ணீர் விட, “ரிலாக்ஸ், மது ரிலாக்ஸ்..." என்று மெல்ல அவள் முதுகை இதமாக வருடிக் கொடுத்தான்.

"மது டார்லிங் உன் காதலைச் சொல்லிட்ட, என் காதலைச் சொல்ல நான் வார்த்தைகளைத் தேடறேன்டா. இருந்தாலும், இப்போதைக்கு என் காதலையும் நான் இப்படியே சொல்லிக்கிறேன்” என்றவன் அவள் காதருகில் "ஐ லவ் யு" என்று ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தமாகச் சொன்னான்.

தன் காதலைச் சொல்ல வார்த்தை இல்லையென்றால் என்ன பொருள்? அவன் காதலுக்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது என்று தானே, இதற்கு ஈடாக தான் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டவளுக்குப் பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது.

ஹோட்டலின் ரூஃப் டாப்பிற்குக் கூட்டிச் சென்றான். மின் தூக்கியிலிருந்து வெளியே வந்தவள், "வாவ்!" என்று ஆச்சரியத்துடன் விழிகளை விரித்தாள். அந்த ரூப் டாப் முழுதும், வெஜிடபுள் கார்விங் செய்து அதன் நடுவில் மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கபட்டிருக்க, அந்த இடமே ரம்யமாக இருந்தது. நடுவில் ஒரு டேபுளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு கேசரோலில் உணவு வகைகளும் வைக்கப்பட்டிருந்தது.

"என்ன பிரின்சஸ் அப்படியே நின்னுட்டீங்க? வாங்க" என்று அழைத்துச் சென்றான்.

"சித்தூ! எனக்காக நீங்க எவ்வளவு செய்றீங்க?" என்று திணறியவளை, "இது உங்களுக்காக மட்டும் இல்லை மேடம், என்னோட காதலை உங்களுக்குத் தெரியப்படுத்த ஒரு சந்தர்ப்பம். அதே போல உங்க காதலை வேற வகையில் தெரியப்படுத்துங்க” என்று புருவத்தை உயர்த்திச் சிரிக்க, அவனது புன்னகையில் தன்னையும் இணைத்துக்கொண்டாள்.

இரவு உணவை முடித்துக்கொண்டு இருவரும் அறைக்குத் திரும்பியதும், கதவை மூடியவன் அவளைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டான். சிரிப்புடன் அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டவள், அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

படுக்கை அறையின் கதவைத் திறக்கவும், இருவரின் மீதும் மேலிருந்து ரோஜா இதழ்களாகக் கொட்ட, அவள் சந்தோஷ மழையில் நனைந்தாள். அவளை இறக்கி விட்டுவிட்டுக் கதவை மூடியவன் இரு கன்னத்திலும் தன் கைகளை வைத்துக்கொண்டு குதூகலத்துடன் இருந்தவளை காதலுடன் பார்த்தான்.

கணவன், தன்னைக் கண் சிமிட்டாமல் பார்ப்பதை உணர்ந்தவளது வதனம் நாணத்தில் சிவந்தது. தனது முகச்சிவப்பை மறைக்க முடியாமல் தலைகுனிய, அருகில் வந்தவன் இரு கைகளாலும் தாங்கிக் கொண்டான்.

“என்ன சித்தூ இப்படிப் பார்க்கறீங்க?” என்றாள் சிணுங்கலுடன்.

அவளது கன்னத்தை வருடியவன், “பனியில் கூட ரோஜா பூக்கும்னு உன்னோட கன்னத்தைப் பார்த்தா தான் புரியுது" என்று கிறக்கமாகச் சொன்னவன் கன்னம், நெற்றி என்று வருடியவாறு அவளது உதட்டில் குவிய, அவன் தொட்ட இடமெல்லாம் சிவப்பு ரோஜாக்களாக மலர்வதை ஆர்வத்துடன் ரசித்தான்.

அவளை அணைத்து தன்னருகில் இழுத்தவன், "நான்தான் புதுசா பார்க்கற மாதிரியே பார்கிறேன்... ஆனா, நீயும் தினமும் இதெல்லாம் புதுசு மாதிரியே இன்னும் முகம் சிவக்குறியே" என்றான்.

மேலும் சிவந்தவள் அவனது நெஞ்சத்தை தனது மறைவிடமாக்கிக் கொள்ள முயலுகையில் விடாப்பிடியாக முகத்தை நிமிர்த்தி உதடுகளை அருகில் கொண்டு செல்ல, அவள் கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.

“இப்படிக் கண்ணை மூடிக்கிட்டா பிடிக்கலைன்னு அர்த்தமா?" என்று கேட்க, "என்ன சொல்றீங்க? நான் ஏன் கண்ணை மூடினேன்னு தெரியாதா?" என்று கண்களைப் படக்கென்று திறந்தவாறு கேட்டாள்.

சித்தார்த், "ஹப்பா...! பிடிச்சிருக்கா அடடா எனக்குத் தெரியாம போயிடுச்சே" என்று போலி வருத்தத்துடன் உதடுகளைக் கன்னத்தில் புதைத்தவாறு, "அப்போ பிடிச்சிருக்கு. அப்புறம், எதுக்குக் கண்ணை மூடற?" என்று வேண்டுமென்றே கேட்டவாறு உதடுகளை அவளது காது மடல்கள், கழுத்து என்று பரவ விட்டான்.

முகத்தில் ஒரு பரவசத்துடன், "எதுக்குக் கண்ணை மூடினேன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டவளது குரல் கொஞ்சிக் குழைந்தது.

"தெரியாதேடா எதுக்கு?" என்று கேட்டவனுக்குக் காதல் விளையாட்டில் இந்த மாதிரி அர்த்தமற்ற கேள்விகளும் பதில்களும் சகஜம் என்பது புரிந்தது.

அவள் ஏதோ பேச முயலுகையில், பேசியது போதும் என்பது போல உதடுகள் பொறுமையிழந்து மெல்ல முத்திரையைப் பதிக்க, அவளது கைகள் அவனைச் சுற்றித் தழுவிக்கொண்டன.

அவளை இறுக்கி அணைத்தவன் கைகள் அவள் தோள்கள், முதுகு என்று தடவிக் கொண்டே வந்து இடையை இருக்கியவன் சட்டென்று நினைவு வந்தவனாக, தன் பிடியைத் தளர்த்த... அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

கொஞ்சம் ஏமாற்றம் படர்ந்த முகத்தைப் பார்த்த சித்தார்த் அவளைப் படுக்கையில் கிடத்தி "குட்டிப் பையன் இருக்கானே! இறுக்கமா பிடிச்சா அவனுக்கு வலிக்காதா?" என்று கைகளை மென்மையாக வயிற்றில் தடவியவாறு கேட்டான்.

சித்தார்த்தின் கைகள் விடாமல் வயிற்றைத் தடவிக் கொடுக்க மது நாணத்தை விடாமல், "ஏன் சித்தூ பொண்ணா இருக்கக் கூடாதா? நீங்க வேணும்னா பாருங்க பொண்ணாதான் இருக்கும்" என்றாள்.

"அப்படியா மது இரு பார்த்து சொல்றேன்" என்று சொன்னவன் அவள் வயிற்றில் தன் கன்னங்களைப் புதைக்க கூச்சத்தில் "மது ப்ளீஸ் சித்தூ விடுங்க" என்றாள்.

அவளை அசைய விடாமல் தடுத்தவன் அவள் வயிற்றில் உதடுகளைப் பதித்துச் சிறிது நேர விளையாட்டிற்குப் பிறகு, "பையன் தான் மது! நான் கேட்டுட்டேன் அப்பான்னு கூப்பிடறான். அவனுக்குக் கொடுத்த முத்தமெல்லாம் போதுமாம். அம்மாவுக்கு நிறைய கொடுக்கச் சொல்றான்" என்றான்.

சிறிதுநேரம் பையன்தான் பொண்ணுதான் என்று செல்லச் சண்டை போட்டாலும், சித்தார்த்தின் கைகள் அவளோடு விளையாடுவதை நிறுத்தவும் இல்லை; மதுவின் நாணம் குறையவுமில்லை. அவனது மென்மையான வருடல்களிலும், முத்தங்களிலும் தன்னைத் தொலைத்து அவன் கன்னத்தில் மெல்லிய முத்திரையைப் பதித்தாள்.

“ஹனி! முத்தத்தை எங்கே கொடுக்கணும்னு இவ்வளவு நாள்ல உனக்கு இன்னும் தெரியலையா?" என்று கேட்க, "தெரியலையே சித்தூ!" என்றாள் அப்பாவியாக.

“உனக்குத் தெரியாதா? தெரியாதா... டார்லிங்" என்று அவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியபடி கேட்டதும், அவள் முகம் குங்குமமாய் சிவந்து எல்லாம் தெரியும் என்ற பதிலைச் சொல்லாமல் சொன்னது.

சுற்றியிருந்த ரோஜாக்களுக்குப் போட்டியாக சிவந்த முகத்தை, அவனது மார்பில் பதித்துக் கண்களை மூடிக் கொண்டாள். தன் மனம் கவர்ந்தவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன் மனத்திலும்; அவனது அணைப்பில் தன்னை மறந்திருந்தவளின் மனத்திலும் இன்பம் மட்டுமே நிலைத்திருந்தது. இனி, இந்த இன்பம் மட்டுமே அவர்களின் வாழ்வில் நிரந்தரமாக இருக்கும்.

இரண்டாம் பாகம் முற்றும்​