மனைவியே சரணம்-4

Kripnythaa

Moderator
Mar 26, 2018
447
125
63
மனைவியே சரணம்-4

ஒரு வழியாக இரு வீட்டினரும் தங்களின் சம்மதத்தை பேசி நிச்சயத்திற்கான தேதியை முடிவு எடுத்த பின்னர் அதுவரை பொறுத்திருந்த சுதாகர் அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல் ஆனந்தியிடம் "ஏன்மா தங்கச்சி! பொண்ணு பாா்த்த உடனே காப்பி தர்றேன்னு சொன்னியே! அந்த காபியை கொஞ்சம் காட்டுறியா", என வாய்விட்டே கேட்டுவிட்டாா்.

அவரது பேச்சில் சுந்தரியும், வாணியும் தலையில் அடித்துக் கொண்டார்கள். ஆனந்தியும் சிரிப்புடனே "அதுக்கு என்ன அண்ணே! அஞ்சு நிமிஷம் இருங்க. காபியோட பலகாரமும் சேர்த்துக் கொண்டு வர்றேன்", என உள்ளே துள்ளிக் குதித்து ஓடினார். செல்லும்பொழுது அம்பிகாவிற்கு மற்றவர்கள் அறியாமல் கண் ஜாடை காட்டி விட்டு நகர்ந்தார்.

தன் அன்னையின் கண்ஜாடையைக் கண்டவுடன் அம்பிகாவும் சுந்தரியிடம் "நானும் போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன் அத்தை", எனப் பதவிசாகக் கூறிவிட்டு அவர் தலை அசைத்தவுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

சமையலறை சென்றவள் "அம்மா! என்னை எதுக்கு கூப்பிட்டிங்க?பொ்மிஷன் கேட்டுட்டு உதவி செய்ய வர்ற மாதிரி சீன போட்டுட்டு வந்துருக்கேன்" என்றவளிடம் "விடுடி, எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான் அதுக்கு அடுத்து கதையே மாறிடும்", என அவளை சமாதானப்படுத்திய ஆனந்தி ஏற்கனவே வீட்டில் வைத்திருந்த சிற்றுண்டிகளில் சிறிது சிறிது எடுத்து வைத்து "இதை கொண்டுபோய் கொடு. நான் காபி போட்டு கொண்டு வர்றேன்", என அவளிடம் கொடுத்து அனுப்பினார்.

தட்டிலிருந்த சிற்றுண்டிகள் அனைத்தும் வீட்டில் செய்தவையாக இருந்ததால் அதனை பார்த்த உடன் சுதாகருக்கு அவரின் சொக்கநாதரே "அனைத்தையும் அள்ளி சாப்பிடு சுதாகரா! சாப்பிடு சுதாகரா!", என அள்ளி அள்ளித் தருவது போல் தோற்றமளித்தது. சுந்தரி, மகன், மகள், மருமகன் என யாரையும் கண்டுகொள்ளாமல் இரு தட்டுகளை தனது கையில் எடுத்துக்கொண்டவர் நல்லாரு மருமகளே என ஒரு ஆசீர்வாதத்தையும் அம்பிகாவிற்கு வழங்கினார்.

"அவர் எப்பவுமே அப்படிதான். எல்லா இடத்துலேயும் சகஜமாக பழகுவாா்", என சுதாகரின் செயலுக்கு சுந்தரி மேம்போக்காக ஒரு காரணத்தைக் கூறினார். சுதாகரின் செயலைப் பார்த்த அம்பிகா ஓரக்கண்ணால் ஷ்யாமையும் திரும்பிப் பார்த்தாள்.

அவளின் பார்வையை சந்தித்தவன் உடனே தலையை குனிந்து கொண்டு காலினால் மீண்டும் கோலம் வரைய ஆரம்பித்து விட்டால். அதனைப் பார்த்து அம்பிகாவிற்கு இம்முறை சிரிப்பினை அடக்க இயலவில்லை. அதனை மற்றவர்களுக்கு காட்டாத விதமாக ஷிவானியின் கணவன் அரவிந்திடம் சிற்றுண்டி தட்டை நீட்டியவாறு எடுத்துக்கோங்கண்ணா என மரியாதையாகக் கூறினாள்.

ஏற்கனவே தன் மாமனார் சாப்பிட ஆரம்பித்த உடனே "இந்த மனுசரு எப்பவும் நம்மளைப் பத்தி நினைக்கிறதே இல்லை", என மனதில் எண்ணிக் கொண்டிருந்தவன் அம்பிகாவின் வார்த்தையிலும், சிற்றுண்டியிலும் அகமகிழ்ந்து போனவனாக ரொம்ப தேங்க்ஸ் மா என சந்தோஷமாக வாங்கிக் கொண்டால்.

அவனது வார்த்தைகளை கேட்ட சுதாகர் தனது அருகில் அமர்ந்திருந்த அரவிந்துக்கு மட்டும் கேட்குமாறு "அரவிந்தா! உனக்கும் அதே நிலைமைதானா?", எனக் கேட்டார். "முப்பது வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணுன உங்களுக்கே அந்த நிலைமை அப்படிங்கிற பட்சத்தில் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணுன என் நிலைமையில மட்டுமா மாற்றம் இருக்கப் போகுது? உங்களுடைய நிலைமைதான்.

"நீங்களும் ரொம்ப மோசம் மாமா! ரெண்டு தட்டு எடுத்தீங்களே! நம்மள மாதிரி ஒரு அப்பாவி ஜீவன், பாவப்பட்ட ஜீவன் இருக்கானே! அவனுக்கு கொஞ்சம் தருவோம்னு உங்களுக்கு தோணுச்சா? நீங்கெல்லாம் ஒரு மாமனாரா? நான் சாபம் விடுறேன், எதெல்லாம் நீங்க எனக்கு செய்றீங்களோ அத்தனையும் உங்க பையனுக்கு திரும்பி வரும்", என அரவிந்தும் சுதாகருக்கு பதிலடி கொடுத்து விட்டு தனக்கு அளிக்கப்பட்ட சிற்றுண்டியில் கவனம் செலுத்தினான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே காபியுடன் வந்த ஆனந்தி முதலில் அதை சுதாகரிடமே நீட்டினாள். அதனை குடித்துப் பார்த்தவர் "காபி நல்லாதான் இருக்கு தங்கச்சி! இருந்தாலும் சுந்தரி போடுவா பாரு அந்த காபி மாதிரி வரவே இல்லை", என சுதாகர் உரைத்ததில் சுதாகரின் சொக்கநாதர் "அட அண்டப்புளுகா! உனக்கு அடுத்து வர்ற வாரம் முழுக்க அந்த கழனி தண்ணி மட்டும்தான்", என்ற சாபத்தை அள்ளி தந்தார்.

சுதாகர் கூறியதற்கு தன்னுடைய கணவரை திரும்பிப் பார்த்த ஆனந்தி "இவரும் எங்கப் போனாலும் அப்படிதான் சொல்லுவாரு. நீங்களும் அப்படியே இருக்கீங்களே! ரொம்ப சந்தோஷம் அண்ணே! நாளை பின்ன மாப்பிள்ளையும் என் மகள் போடுற காப்பிதான் நல்லா இருக்கும்ன்னு சொல்ல போறாரு", எனக் கூறி சிரித்து வைத்தார்.

ஆனந்தியின் பேச்சில் சுந்தரிக்கு பிடித்தமின்மை இருந்தாலும் அதனை வெளிக்காட்ட விரும்பவில்லை. அனைத்தும் பேசி ஒருவழியாக நிச்சயதார்த்தத்துக்குக்கான நாளை குறித்து அவர்கள் தங்களின் வீட்டிற்கு கிளம்பும் முன்னர் ஷ்யாம் அம்பிகாவை பார்த்து வருகிறேன் என்னும் விதமாக தலையசைத்து விட்டு கிளம்பினான்.

காரில் செல்லும் பொழுது சுந்தரி என சுதாகர் ஆரம்பித்ததற்கு அவரை பஸ்பமாக்கிடும் பாா்வை ஒன்றை செலுத்திய சுந்தரி "வாயை மூடிட்டு வாங்க. எதுவா இருந்தாலும் வீட்டுல போய் உட்கார்ந்து பேசுவோம்", என பேசும் முன்னேரே அவரின் வாயை அடக்கினார்.

சுந்தரியின் பேச்சு காரில் இருந்த அனைவருக்கும் என்பதனை உணர்ந்து இருந்ததனால் யாரும் வாய் திறக்கவில்லை. வீட்டை அடைந்தவுடன் தன் மகனை பாா்த்து சுந்தரி "ஏன்டா அந்த பொண்ணை பார்த்து நீ ஏன் தலை குனிஞ்ச? எனக்கு மானக் கேடாப் போச்சு. கல்யாணம் பண்ணிட்டு வந்ததுக்கப்புறம் இப்படியே இருக்காத. நீ கெத்தா இருந்தாதானே பொண்ணு உனக்கு அடங்கிப் போகும்", என படபடவெனப் பொரிந்து தள்ளினார்.

"அச்சோ அம்மா! நான் தலையை குனிஞ்சது உங்களுக்காகதான். அப்பதான் பையனை பாரு எவ்வளவு அடக்க ஒடுக்கமா வளா்த்து வச்சிருக்காங்கன்னு அந்தப் பாட்டி அந்த பொண்ணை பாராட்டின மாதிரி உங்களையும் பாராட்டுவாங்கன்னு சொல்லிதான் நான் அந்த மாதிரி செஞ்சேன். இல்லைனா உங்க பேரு கெட்டுப்போற மாதிரி நான் நடந்துப்பேனா?", என ஷ்யாம் உடனடியாக தன் தாயிடம் சரணடைந்தவுடன் சுந்தரியின் முகம் ஆயிரம் வாலா பட்டாசு போல் பிரகாசமாக ஒளிா்ந்தது.

இதனை பார்த்த அரவிந்த் தன் மாமனாரிடம் "இந்த மாதிரி டிராமா எல்லாம் நீங்களும், நானும் எப்ப மாமா போடுறது? நம்மளுக்கு சான்ஸ் சிக்க மாட்டேங்குதே!", என வருத்தத்துடன் கூறினான். "மாப்பிள்ளை! ஒரு காலத்துல நீங்க உங்க அம்மாவுக்கும், நான் எங்க அம்மாவுக்கு இதைவிட பெரிய பெரிய ட்ரமா எல்லாம் காமிச்சிருக்கோம். இப்ப நம்ம நிலைமை என்னன்னு தெரியும்தானே?

கவலையேப்படாதீங்க! கூடிய சீக்கிரம் என் பையனும் நம்ம சங்கத்துல மெம்பர் ஆகிடுவான். மெம்பா் ஆக்குறோம், தூக்குறோம்", என சுதாகர் முதலில் மாப்பிள்ளைக்கு சாதகமாக மெது குரலில் பேசியவர் இறுதியில் கூறிய இரு வார்த்தைகளையும் சத்தமாகக் கூறிவிட்டார்.

அதுவரை மகனிடம் பொரிந்து அவன் கூறிய பதிலில் ப்ரைட்டாக( bright) இருந்த சுந்தரி சுதாகர் சத்தமாக வார்த்தைகளை கூறியவுடன் அதுவரை அம்பிகாவின் வீட்டில் அவர் பேசிய பேச்சுகளை மறந்திருந்தவர் திடீரென ஞாபகம் வந்தவராக "அறிவு கெட்ட மனுஷன். வீட்லதான் டெய்லி உங்களுக்கு காலங்காத்தால காபியும் உப்புமாவும் விதவிதமா செஞ்சு தா்றேனே!

அங்க போய் காபி கொடு, டீ கொடுன்னு கேக்குறீங்க. நாளை பின்ன சம்பந்தின்னு மதிப்பாங்களா? உங்களை வச்சு நான் என்ன செய்யுறது?", என கணவரை வைது தீா்த்தவர் "ஷிவானி! உன் புருஷனும் அங்க வந்து உங்க அப்பாவோட சேர்ந்து ஏதோ குசுகுசுன்னு பேசிக்கிட்டிருந்தார். என்னன்னு கொஞ்சம் கவனி.அதோட உன் மாமனார் மாமியார்கிட்ட இப்பவே ஷ்யாமுக்கு பொண்ணு தகைஞ்சதை சொல்ல வேண்டாம். நிச்சயத்தன்னைக்கு திடீர்னு முடிஞ்சதா சொல்லிக்கோ", என தன் மகளைப் பார்த்து கூறியவர் மருமகனையும் ஒரு பார்வை பார்த்து வைத்தார்.

அப்பார்வை இந்த செய்தி உனக்கும் பொருந்தும் என்பதனைக் கூறியது. அவரின் பார்வையிலே அதனை புரிந்து கொண்ட அரவிந்த் தன் மாமனாரை திரும்பிப் பார்த்தபொழுது இம்முறை மெது குரலிலும் கூறாமல், சத்தமாகவும் கூறாமல் தன் மொபைலை எடுத்து டைப் செய்த சுதாகர் அரவிந்தனிடம் அதனை பார்க்குமாறு கண்ணசைவில் கூறினார்.

உடனே எடுத்துப் பார்த்தால் மனைவியிடம் அதற்கும் பதில் கூற வேண்டி இருக்குமே என்று எண்ணி அரவிந்த் "நான் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்", எனக் கூறிவிட்டு வேகமாக சென்று மாமனார் அனுப்பிய செய்தியை திறந்து பார்த்தான். அதில் "டொமேட்டோ சாஸ் எப்பவும் ஒரே மாதிரி டேஸ்ட்ல இருக்காது. இன்னிக்கு நமக்கு வந்த டொமட்டோ சாஸ் நாளைக்கு சுந்தரி பெத்த சுந்தரனுக்கு டிசைன் டிசைனா வரும்னு சொக்கநாதர் சொக்கட்டான் போட்டு என்கிட்ட சொல்லிட்டாரு", என இருந்ததைப் பார்த்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

நன்றாக சிரித்து முடித்து உடனேயே "சத்தம் கேட்டா இவ மொத்திடுவாளே", என்ற எண்ணம் வந்தவுடன்தான் தன்னுடைய சிரிப்பை அடக்கிவிட்டு அமைதியான பிள்ளையாக மீண்டும் அனைவரின் அருகில் வந்து அமர்ந்தான்.

ஷ்யாம் வீட்டினர் சென்ற பின்னர் தன் கணவரைப் பார்த்த ஆனந்தி "என்னங்க அம்பிகாவுக்கு இந்த இந்த குடும்பம் ஒத்துவரும்னு நினைக்கிறீங்களா?", என்ற ஒரு வினாவினை எழுப்பினாா்.

அதற்கு மூர்த்தி பதில் கூறும் முன்னரே முந்திக்கொண்ட அம்பிகா "ரொம்ப நல்லாவே ஒத்துவரும் மா! நீங்க கவலையேப்படாதீங்க. ரொம்ப சந்தோசமா வாழ்வேன்", என வேகவேகமாக பதில் கூறினாள். அவளது பதிலிலேயே அவளுக்கு ஷ்யாமை மிகவும் பிடித்து விட்டது என பெற்றோர் இருவரும் புரிந்து கொண்டனர்.

மூர்த்திதான் "ஏன் அம்பு!நீ மாப்பிள்ளைகிட்ட தனியா பேசலை, ஒரு போன் நம்பர் கூட கேட்கலை பிறகு எப்படி உனக்கு பார்த்த உடனே இந்த இந்த லவ்வாங்கி வந்துச்சு", என்ற வினாவை எழுப்பினார். "ஐயோ அப்பா! எனக்கு மாப்பிள்ளை பத்தி எதுவும் தெரியலைனாலும் அவங்க வீட்டு நிலைமையை பார்த்த உடனே புரிஞ்சு போச்சு. இந்த மாப்பிள்ளைதான் சரியா வருவாரு அப்படின்னு. நீங்க இந்த மாதிரி அறிவாளி தனமான கேள்வி எல்லாம் கேட்குறதை விட்டுட்டு கல்யாணத்துக்கான வேலையை பாருங்க.

அதுக்கு அடுத்து நடக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் நான் பார்த்துப்பேன்", என அசால்ட்டாக உரைத்துவிட்டு அம்பிகா தன் தாயிடம் திரும்பி கண்ணடித்துவிட்டு ஆனந்தி ஆனந்தமாய் இரு எனக் கூறியதுடன் தன் அறைக்குள் சென்றுவிட்டார். அவளது பேச்சிலேயே அதற்கு அடுத்து நடக்க வேண்டிய நிகழ்வுகளை கவனித்து ஆனந்தியும்,மூர்த்தியும் தங்களின் சொந்த பந்தங்களுக்கு நிச்சயத்திற்கான அழைப்பினை விட ஆரம்பித்திருந்தனர்.

இருவித குடும்பங்களும் எவ்வித கருத்து சேதாரம் இன்றி நிச்சயதார்த்தத்தை முடித்து திருமணத்தினை அடுத்து வந்த முதல் முகூர்த்தத்திலேயே நிர்ணயித்தனர். திருமணத்திற்கான தேதி முடிவான உடனே ஷிவானி செய்த முதல் வேலையில் அரவிந்த் அதிர்ந்து போனான்.

அவன் அதிருமளவிற்கு ஷிவானி செய்த வேலைதான் என்ன? அது ஷ்யாமின் திருமணத்தை பாதித்திடுமா இல்லை பலமாக்கிடுமா?
 
  • Like
Reactions: Priyamadhavan