Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மாம்'ஸ் லிட்டில் பிரின்ஸ் | SudhaRaviNovels

மாம்'ஸ் லிட்டில் பிரின்ஸ்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
மாம்'ஸ் லிட்டில் பிரின்ஸ்


Ooh-ooh, ooh-ooh, ooh-ooh
Wanna be loved (Yeah)
Don't wanna be fool, wanna be cool
Wanna be loved 너와의 same love (너와의 same love)
Baby, I want it

என்ற BTS பாடலுடன் சேர்ந்து பாடிக் கொண்டே வீட்டு வேலைகளை மும்மரமாக செய்து கொண்டிருந்த மகா "பாா்த்தியாடா? இந்த டாடி'ஸ் லிட்டில் பிரின்சஸ் அலப்பறை தாங்க முடியலை" என்ற குரலில்தான் தன் உணர்விற்கு வந்தாள்.

" ஆமாப்பா!", என்று ஒத்து ஊதிய குரலை பார்த்து ஒருமுறை முறைத்தவள் "பாப்பா! உங்க அப்பாவுக்கு தாளம் போடாம போய் படிக்கிற வேலையை பாரு", என்று தன்னுடைய சீமந்தபுத்திரியான சிருஷ்டிகாவை பார்த்துக் கூறியவள்,

தன்னைப் பார்த்து எகத்தாளமாக சிரித்துக் கொண்டிருந்த தன் கணவனின் புறம் திரும்பி "நீங்க வந்த உடனே உங்கம்மா அவங்களை கூப்பிடச் சொன்னாங்க. உடனே கூப்பிடுங்க. இல்லைன்னா நான்தான் சொல்ல மறந்துட்டேன், சொல்லாம விட்டுட்டேன்னு அடுத்த ஒரு மூணு, நாலு வருஷத்துக்கு ராமாயணம் படிப்பாங்க", எனக் கூறிவிட்டு விறுவிறுவென அடுப்படிக்குள் நுழைந்து விட்டாள்.

" என்னப்பா! அம்மா இப்படி சொல்லிட்டு போறாங்க. பாட்டி என்ன அப்படியா திட்டுவாங்க?", என்று கேட்ட தன் செல்ல மகளின் புறம் திரும்பிய ராம் "அதெல்லாம் கிடையாது.உங்க அம்மாவுக்கு அவங்க அப்பா ஓவரா செல்லம் கொடுத்து வளர்த்துட்டாரு. கல்யாணம் பண்ணி வந்தப்புறம் கொஞ்சம் மாறுவான்னு நினைச்சேன். இன்னைக்கு வரைக்கும் மாறாம ஆ,ஊனா அந்த டாடியோட லிட்டில் பிரின்சஸ் அப்படிங்கற கெத்தை காமிச்சுக்கிட்டு திரியுறா.

நீ வா! படிக்க போறதுக்கு முன்னாடி பாட்டி தாத்தாகிட்ட பேசிடு. உன்னோட அண்ணன் வந்துட்டானா" என தன் மகளிடம் கூறியவாறு மகனைப் பற்றியும் விசாரித்தான். "இல்லைப்பா! அவன் வரலை. வந்திருந்தா அம்மா கூடவே தானே சுத்திக்கிட்டு இருப்பான். நீங்க வாங்க அவன் வர்றதுக்கு முன்னாடி நாம போய் பாட்டி, தாத்தாகிட்ட பேசலாம்", என மகள் கூறியவுடன் தன்னுடைய லிட்டில் பிரின்சஸ்ஸை அழைத்துக் கொண்டு ராம் தன்னுடைய அன்றாட நிகழ்ச்சி நிரலை தாயிடம் ஒப்பிப்பதற்கான வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அடுப்படிக்கு சென்ற மகாவோ "ஆமா நான் என் அப்பாக்கு லிட்டில் பிரின்சஸ்தான். என்னைக்கு இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வந்தேனோ பிரின்சஸ்ல இருந்து என்னை பிசாசு ஆக்கி விட்டுட்டாங்க. பிசாசுகளோட வாழ்ந்து வாழ்ந்து நானும் பிசாசாவே மாறிட்டேன்", என புலம்பியவாறு அன்றைய இரவு உணவிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தாள்.

அந்த நேரத்தில் அவளுடைய மகனான ரஞ்சன் அம்மா என்று கத்தி அழைத்தவாறு உள்ளே நுழைந்தான். வாடா விளையாண்டு முடிச்சுட்டு அப்படியே கிச்சனுக்குள்ள வந்துட்டியா? போ போய் குளிச்சிட்டு நேரா டைனிங் டேபிளுக்கு வா", என அவனை அனுப்பிவிட்டு அவன் கூற வந்ததை கேட்பதற்கு கூட பொறுமை இல்லாமல் தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த ராம் மகனின் சத்தத்தை கேட்டவுடன் "டேய்! இங்க வா! பாட்டி கூப்பிடுறாங்க வந்து பேசிட்டு போ", என்று அழைத்தான்.

அவனோ "போங்கப்பா நான் விளையாண்
டுட்டு வந்த உடனே அம்மா என்னை குளிக்க சொல்லிட்டாங்க. நான் குளிக்க போறேன் நீங்களே உங்க அம்மா கிட்ட பேசுங்க", எனக் கூறியவாறே குளியல் அறைக்குள் நுழைந்து விட்டான்.

"இப்படிதான்மா அவனை செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து கெடுத்து வைக்குறா", என மகன் பேசாமல் சென்றதற்கான காரணமாக ராம் கூறியவுடன் அந்தப் பக்கம் இருந்த அவனது அம்மாவோ "பசங்களை கண்டிச்சு வளர்க்கணும்னு உன் பொண்டாட்டிக்கு கொஞ்சம் கூட தெரியலை. அவனோட அப்பா நீ கூப்பிட்ட உடனே ஒரு மரியாதை கொடுத்து உன் பக்கத்துல வந்து நிக்க வேண்டாமா? என்ன பிள்ளை வளர்த்து வச்சிருக்கா?", என மகாவை அன்றைய தினத்திற்கான கோட்டாவாக வைது தீர்த்தார்.

நீங்க சொல்றது கரெக்ட்தான் என ராம் இந்த பக்கம் தாளம் அடித்தவுடன் "எல்லாம் அவ அப்பாவை சொல்லனும். ஒரே மகன்னு ஊர்ல இல்லாத செல்லத்தை கொடுத்து கெடுத்து குட்டிச்சுவராக்கி வச்சிருக்காரு. போற வீட்ல பொறுப்பா குடும்பத்தை நிர்வகிக்கனும்னு சொல்லித் தராம வளர்த்து நம்ம தலையில கட்டிட்டாங்க. நானும் சரியா விசாரிக்காம ஒரே பொண்ணு! உனக்கு, நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருப்பானு அவசரப்பட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிட்டேனே கண்ணா", என நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்.


அந்நேரம் உள்ளே எட்டிப் பார்த்த மாகவோ "ஆமா! பத்து வருஷம் ஆகியும் முதல் நாள் புலம்புன அதே புலம்பல் தான் இன்னைக்கு வரைக்கும் வாா்த்தை மாறாம ஓடுது" என எண்ணியவாறு "ரஞ்சன், சிருஷ்டி ரெண்டு பேரும் சாப்பிட வாங்க. உங்க அப்பாவையும் கூப்பிட்டுட்டு வாங்க", என சத்தம் போட்டுக் கூறிவிட்டு அவர்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்க சென்று விட்டாள்.

சரிமா சாப்பிட்டு வந்து திரும்ப உங்ககிட்ட பேசுறேன் என ராம் அழைப்பை துண்டிக்க செல்லும்போது என்ன சமைச்சு இருக்கா என்ற கேள்வி அப்பக்கமிருந்து எதிரொலித்தது. "தெரியலைம்மா. ஏதாவது சமைச்சு வச்சிருப்பா. ஆனா உங்கள மாதிரி பக்குவமா சமைக்க வரமாட்டேங்குது. இன்னும் அவங்க வீட்டு சமையல் தான் செய்றா", என அதற்கும் மகாவை ஒரு குறை கூறிவிட்டே ராம் அழைப்பை துண்டித்தான்.

சாப்பிடும் பொழுதும் பலமுறை மகாவை பார்த்து டாடி'ஸ் லிட்டில் பிரின்சஸ் நீ சுமார் மூஞ்சி சுகுமாரியா இருக்குற மாதிரியே உன் சமையலும் சுமாராதான் இருக்கு என்ன நக்கல் அடித்தவாறே மகா சமைத்து வைத்திருந்த அத்தனையையும் தன் பிள்ளைகளுக்கு மனைவிக்கு இருக்கிறதா இல்லையா என்றே பார்க்காமல் காலி செய்து கொண்டிருந்தான்.

அப்பா எப்பொழுதும் அம்மாவை டாடி'ஸ் லிட்டில் பிரின்சஸ் என்று கிண்டலடிப்பதை பார்த்தே வளர்ந்த பிள்ளைகள் இருவரும் அதே தொனியில் மகாவை அழைக்க ஆரம்பித்து இருந்தனர். அவ்வப்பொழுது பிள்ளைகளை அதற்றினாலும் கணவனை எதுவும் கூறாமலே நாட்களை கடத்திக் கொண்டிருந்த மகாவிற்கு அன்றைய தினம் ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வீறு கொண்டு எழுந்து விட்டது.

அதற்கான நாளாக மறுநாளை தேர்ந்தெடுத்து விட்டு அமைதியாகினாள். மறுநாள் விடியலின் பரபரப்பில் பிள்ளைகளுக்கு முன்னரே அலுவலகம் கிளம்ப வேண்டியது இருந்த காரணத்தினால் ராம் விரைவாக எழுப்ப கூறியிருந்தான்.

எப்பொழுதுமே ராம் கூறியதை அச்சு பிறழாமல் செய்யும் மகாவோ அன்றைய தினம் அலாரம் அடித்ததையும் அணைத்துவிட்டு தூங்கி இருந்தாள். ஏழு மணி போல் மகனுக்கு சுப்ரபாதம் பாட ராமின் அன்னை அழைத்த பொழுதுதான் அடித்து பிடித்து எழுந்த ராமோ அய்யோ அம்மா லேட் ஆயிடுச்சு நான் குளிச்சிட்டு ஆபீஸ் போறப்ப கூப்பிடுறேன் என அரக்கப்பறக்க க குளியலறைக்குள் மகாவைத் திட்டியவாறே நுழைந்தான்.

எதையும் கண்டுகொள்ளாமல் அப்பொழுதும படுத்தே இருந்த மகா தனக்குள் சிரித்துக் கொண்டாள். குளியலறைக்குள் நுழைந்தவனோ அன்றைய தினம் வெண்ணீருக்கான ஸ்விட்ச் ஆன் செய்யப்படாமல் இருந்ததை கவனித்து விட்டு வேறு வழியின்றி பச்சைத்தண்ணீரில் குளித்துக் கொண்டே "திமிருடி! உனக்கு திமிரு ஜாஸ்தி ஆயிடுச்சு. எழுப்பி விட சொன்னா எழுப்பி விடலை. ஹீட்டர் ஆன் பண்ணி வைக்கலை. என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல", என அலறினான்.

அதற்கெல்லாம் அசைந்திடாத மகாவோ "நான் டாடியோட லிட்டில் பிரின்சஸ். அப்படித்தான் இருப்பேன்", என்றவாறு மீண்டும் தூங்க ஆரம்பித்து விட்டாள். அன்றைய காலை உணவிற்கு எதுவும் தயார் செய்யவில்லை. பிள்ளைகளுக்கும் உணவு எதையும் தயார் செய்யாமல் உங்க தேவை எதுவோ அதெல்லாம் நீங்களே செஞ்சிக்கோங்க மீறி ஏதாவது சொன்னீங்கன்னா என்னோட அப்பாவை நான் வர சொல்லிடுவேன்", என அமரிக்கையாக கூறிவிட்டு மீண்டும் படுத்து விட்டாள்.

பிள்ளைகளையும் கிளப்ப வேண்டுமே என பதறிய ராம் இப்போ உன்னால கிளப்ப முடியுமா இல்லையா என்ன கத்தியவாறு அவளை எழுப்பி விட முனைந்தான். அதற்கு மகாவோ "என்னால முடியாதுங்க. எங்க அப்பா என்னை இப்படிதான் செல்லமா வளர்த்தாரு. எங்க அப்பா வீட்டுல இருக்கிற வரைக்கும் நான் இப்படித்தான் தூங்குவேன். எனக்கு எப்ப எந்திரிக்க தோணுதோ அப்பதான் எந்திரிப்பேன். ஏதாவது வேணும்னா நீங்க உங்க அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க", என அவனுக்கு பதிலுரைத்தவாறு தனது மொபைலை எடுத்து அதில் டாடி'ஸ் லிட்டில் பிரின்சஸ் என வந்திருந்த மீம்ஸ் அனைத்திற்கும் கமெண்ட் கொடுக்க ஆரம்பித்தாள்.

வேலைக்கு கிளம்ப வேண்டிய அவசரத்தில் மகாவை மேலும் வருத்தெடுக்க முடியாத ராம் பிள்ளைகளிடம் "நான் உங்க டீச்சருக்கு கால் பண்ணி இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் லீவு அப்படின்னு சொல்லிடுறேன் நீங்க வீட்ல இருங்க. கொஞ்ச நேரத்துல அம்மா எழுந்து சமைச்சு தருவா. அவ தூங்கிட்டே இருந்தா நீங்க ரெண்டு பேரும் போய் எழுப்பி உங்களுக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு தர சொல்லுங்க" எனக் கூறி அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.

அன்றைய தினம் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் காலையில தான் திமிர் பிடிச்சு போய் படுத்திருந்தா. பிள்ளைகளை விட்டுட்டு வந்ததனால கண்டிப்பா எழுந்திருச்சு சமைச்சிருப்பா. இப்ப போய் ஒரு வழி பண்ணனும் என மனதிற்குள் கருவியவாறு வந்தவன் வீடு இருந்த கோலத்தைக் கண்டு அதிா்ந்து விட்டான்.

திருமணமான பின்னர் ஒரு நாளும் அவன் வீடு இவ்வளவு அலங்கோலமாக இருந்து பார்த்ததில்லை. ஆனால் இன்றைய நிலையிலோ அழுக்கு துணிகள் ஒரு இடத்திலும், சாப்பிட்டுவிட்டு போட்ட பாத்திரங்கள் டைனிங் டேபிளிலும், பிள்ளைகளின் புத்தகங்கள், விளையாட்டு சாமான்கள் ,நொறுக்கு தீனி என அனைத்தும் அங்கங்கே சிதறி கிடந்தன. வந்த உடனே கத்த வேண்டாம் என நினைத்தவன் தன் மகனிடமும் மகளிடமும் அம்மா எங்கே என்றிட வெளியில போய் இருக்காங்கப்பா என இருவரும் கோரசாக உரைத்தனர்.

உங்களை தனியா விட்டுட்டா என்றவாறே மகாவிற்கு அழைத்தான். ஆனால் அவளது அலைபேசியோ ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.சரி மத்தியானம் என்ன சாப்பிட்டீங்க என பிள்ளைகளிடம் கேட்டதற்கு " உங்களுக்கு என்ன வேணுமோ நீங்க அதை ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கோங்கன்னு சொல்லிட்டாங்கப்பா. சமைச்சு தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க"என்று கூறிய மகள் "நானே தான் குளிச்சுக்கிட்டேன், எனக்கு தலை கூட அவங்க சீவி விடலை பாருங்களேன்", என சீவப்படாமல், பின்னப்படாமல் சிக்கலுடன் இருந்த தன்னுடைய தலையை தந்தையிடம் காட்டி குறை கூறினாள்.


மகனோ ஒரு படி மேலே போய் ஏதாவது செஞ்சு தாங்கனா உங்க பாட்டிகிட்ட போன் பண்ணி கேளுங்க நான் செய்ய முடியாது அப்படின்னு சொல்றாங்கப்பா என தன்னுடைய பங்கிற்கு குறை கூறினான். மகனும், மகளும் மாற்றி மாறி குறை கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ராமின் அம்மா வீடியோ காலில் வந்து விட்டார்.

கண்ணா காலையில அம்மா உன்கிட்ட பேசாம பச்ச தண்ணி வாயில படலை என்ற பல்லவியுடன்தான் அவர் ஆரம்பித்ததே. நானும் காலையில் இருந்து பச்ச தண்ணி பல்லுல படாமதான் சுத்திகிட்டு இருக்கேன் என ராமும் பதில் உரைக்க என்னது சாப்பிடலையா? என்னாச்சு ராஜா உனக்கு என்ன ஆச்சு என நாடக பாணியில் பதற ஆரம்பித்து விட்டார்.

என்ன ஆச்சுனு வீடு இருக்கிற கோலத்தையும் பிள்ளைங்க இருக்கிற கோலத்தையும் நீங்களே பாருங்க என பேக் கேமராவை ஆன் செய்து வீட்டில் இருந்த நிலைமையும் பிள்ளைகளையும் காட்டிவிட்டு தன்னுடைய முகத்தையும் காண்பித்தான். இப்படி போட்டு வச்சிருக்காளே! என்ன செய்றா அவ? அவளை கூப்பிடு நீ! அவகிட்ட நான் பேசுறேன் என்றற்கு "அவ எங்க வீட்ல இருக்காம்மா? டாடி' ஸ் லிட்டில் பிரின்சஸ் ஷாப்பிங் போயிருக்காங்க", என்ற மறுநிமிடமே அவனது அன்னை நீ வைய் அந்தாளுக்கு போனை போட்டு என்ன வளர்த்து வச்சிருக்காருனு நாக்கை புடுங்கிக்கிற மாதிரி கேள்வியை கேட்குறேன். நான் நாளைக்கு வரேன். பக்கத்தூர்லதானே இருக்காரு அவரையும் வரச் சொல்லி என்னன்னு பஞ்சாயத்து பேசுவோம்.


இப்படியா இருக்கிறது ஒரு குடும்ப பொம்பளை என நீளமாக பேசிக்கொண்டே அழைப்பை துண்டித்த ராமின் அம்மா தன்னுடைய சம்மந்திக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்தார். ஆனால் அன்றைய தினம் காலையிலேயே மாமியார் ,மாமனார், கணவர், பிள்ளைகள் என யாரிடமிருந்து அழைப்பு வந்தாலும் எடுக்கக்கூடாது என மகா தன் பெற்றோர் இருவரிடமும் கூறி வைத்திருந்தாள். அதனால் அவர்கள் இருவரும் இவர்களின் அழைப்பினை ஏற்கவில்லை.

இரவு 8 மணி போல் வீட்டிற்கு வந்த மகாவோ ஹாலில் அமர்ந்திருந்த மூவரையும் கண்டு கொள்ளாமல் நேராக தன்னுடைய அறைக்குள் சென்று உடைமாற்றி படுத்து விட்டாள். அவள் நடவடிக்கை பார்த்து நொந்த ராம் மகா நீ இப்படி பண்றது கொஞ்சம் கூட சரியில்லை என அவளிடம் பேச்சினை வளர்க்க ஆரம்பிக்கும் போது "நான் ரொம்ப டயர்டா இருக்கேன். ஐ நீட் சம் ரெஸ்ட் .ஏதாவது பேசுறதா இருந்தா வெளியில போய் பேசுங்க", என்றவள் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டாள்.


மகாவின் மறுநாளைய விடியல் அவளது மாமனார், மாமியார், தந்தை, தாய் என்ற பெரும் பட்டாளத்துடன்தான் தொடங்கியது.வீட்டிற்கு வந்த அவளுடைய தாய் வீடு இருந்த கோலத்தைப் பார்த்து அடப்பாவி மகளே இப்படியா போட்டு வச்சிருப்பா. இதுக்காக தான் போனை எடுக்க வேண்டாம்னு சொன்னாளா என மனதில் எண்ணியவாறு பேரப்பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்ப ஆரம்பித்தார் .அப்பொழுதும் ராமின் அம்மா எந்த வேலையும் செய்யாமல் சோபாவில் அமர்ந்து மகனை என்ன ராஜா இப்படி இளைச்சிட்ட, இப்படி சுத்தமில்லாம இருந்தா உன் உடம்புக்கு ஒத்துக்காதே என்ற பல்லவியை தான் பாடிக் கொண்டிருந்தார்.

பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பும் வரை அமைதியாக இருந்த மகா அதன் பின்னர்தான் என்ன கூட்டம் கூட்டிட்டு இருக்கீங்க என்ன விஷயம் என வினவினாள். அவள் பேச வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராமின் அம்மா "என்ன மகா நினைச்சிகிட்டு இருக்க. போனா போகுதுன்னு லட்ச லட்சமா சம்பாதிக்கிற என் மகனுக்கு உன்னை நான் பொண்ணு எடுத்தேன். ஆனா நீ வீடு வச்சிருக்கிற நிலைமை எப்படி இருக்குன்னு தெரியுமா?", என அவளை பார்த்து கூறிவிட்டு அவளின் அப்பாவின் புறம் திரும்பி


"எல்லாம் நீங்க செஞ்சு வச்ச வேலைதான். ஒரே மகன்னு செல்லம் கொடுத்து இப்ப எதுக்கெடுத்தாலும் டாடி'ஸ் லிட்டில் பிரின்ஸஸ் அப்படின்னு சொல்லிட்டு திரியிறா உங்க பொண்ணு. என்ன பண்ணி வச்சிருக்கீங்க. இப்படி எல்லாம் இருக்கிறதா இருந்தா உங்க பொண்ணை நீங்களே கூட்டிட்டு போய் வச்சுக்கோங்க. எங்களுக்கு இந்த மாதிரி ஒரு மருமகள் தேவை இல்லை", என எடுத்தெறிந்து பேசினார்.


சூப்பர் ரொம்ப நல்லா பேசுறீங்க நிறைய தமிழ் சினிமா தமிழ் டிராமா எல்லாம் பாா்க்குறீங்க போல இருக்கே என மகா பேச ஆரம்பித்ததும் அவளது அன்னையோ மகா சும்மா இரு. பெரியவங்க பேசுறப்ப எதுத்து பேசிக்கிட்டு என்ன ?தன் மகளை தான் அடக்கினார் .

சும்மா இருங்கம்மா. என்னம்மா பெரியவங்க? எங்க அப்பாதான் என்னை செல்லம் கொடுத்து குட்டி சுவராக்கி வச்சிருக்கார். உங்க மகன் எப்படி? என சிரித்தவாறு வினவினாள். ஏன் என் மகனுக்கு என்ன குறைச்சல் ? ராஜா மாதிரி இருக்கான்.கை நிறைய சம்பாதிக்கிறான். உனக்கு இங்க ஒரு வீடு கட்டி இருக்கான். உனக்கு தனியா கார் வாங்கி கொடுத்திருக்கான். உனக்கு வேணுங்கிறதெல்லாம் செஞ்சு கொடுக்கிறான். இதைவிட என்ன வேணும்?", பெருமைகளை அடுக்கினார்.

எல்லாம் சரிதான் எனக் கூறிய மகாவோ ராமின்புறம் திரும்பி "என்னங்க முந்தாநேத்து உங்களுக்கு நீங்க மாடியில போன் பேசிட்டு இருக்குறப்ப ஒரு காபி கொண்டு வந்து கொடுத்தேனே! அந்த காபி டம்ளர் எங்கே இருக்குங்க? என கேட்டாள். அது மாடியில் தான் இருந்தது நீ எடுத்துட்டு வரலையா?

போன வாரம் தோட்டத்தில் இருக்கிறப்ப சாப்பிடறதுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்தேனே அந்த கிண்ணம் எங்க இருக்கு என்றதற்கு அது தோட்டத்துலதான் இருக்கு நீ இன்னுமா உள்ளே எடுத்து வைக்காமல் இருக்க?

அப்புறம் உங்களோட கார் சாவியை காலைல யாரு எடுத்து கொடுத்தாங்க? நேத்திக்கு வேலைக்கு போறப்ப நீதான் கவுந்து அடிச்சு தூங்கிட்டியே! பிள்ளைங்க ரெண்டு பேரும்தான் தேடி எனக்கு எடுத்து கொடுத்தாங்க எனவும் நீங்க கொஞ்சூண்டு கிச்சன்ல இருந்து தண்ணி நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வந்தா அவங்களுக்கெல்லாம் ஒரு கப்புல வச்சு கொடுப்போம்ல அந்த கப்பில் வைத்து கொண்டு வரீங்களா? என மகா கூறிட ராம் பதில் கூறுவதற்கு முன்னர் அவளின் அன்னை இரு நான் போய் எடுத்துட்டு வரேன் என கிளம்பிட்டாா்.


நீங்க சும்மா உக்காருங்கமா என தனது அன்னையை ஒரு அதட்டியவள் எடுத்துட்டு வாங்க எனவும் இந்த மாதிரி வேலை எல்லாம் செஞ்சு பழக்கம் கிடையாது என ராம் கூறினான். அவன் அவ்வாறு கூறிய உடன் ராமின் அம்மாவோ என் மகனை சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவ வைப்பேன் நானு. அவன் நடந்து போனா அவன் பாதம் வலிக்கும்னு சொல்லி நான் எந்த வேலையும் செய்ய விட்டது கிடையாது என்றவர் அதன் பின்னர் தனது மகனுக்கு தேவையான வேலைகளை அடுக்க ஆரம்பித்து விட்டார்.


இங்க பாரு இந்த மாதிரியெல்லாம் என் மகனை நடத்தாதே. அவன் தண்ணி கேட்டா கொண்டு வந்து நீ கொடுக்கணும். அவன் முந்தா நேத்து காபி குடிச்சிட்டு மேல வச்சிருக்கான் அந்த டம்ளர் கூட எடுத்துட்டு வராம நீ என்ன பண்ற? சாப்பிட்ட அவன் கிண்ணத்தை கார்டன்ல வச்சான்னா அதையும் எடுத்துட்டு வந்து உள்ள வைக்காம உனக்கு என்ன அப்படி ஒரு மறதி வேண்டி கிடக்கு? என் பிள்ளையை எழுப்பி விடுவது நீயாதான் இருக்கணும். அவனுக்கு நேத்திக்கு நீ ஹீட்டர் போட்டு வைக்கலை பச்ச தண்ணில குளிச்சிட்டு போயிருக்கான். ஜலதோஷம் புடிச்சிருச்சுனா பிள்ளை எவ்வளவு பாடு படுவான். சுடுதண்ணி போட்டு தர்றது உன்னோட வேலை. டெய்லி ரெண்டு நாளைக்கு தொடர்ந்து மஞ்சள் மிளகு போட்டு சுக்கு போட்டு பாலாத்தி கொடு அப்பனா தான் தடுமம் பிடிக்காது.


காலையில் அவன் எந்திரிக்கிறப்பவே அவனுக்கு காபி கொடுத்துதான் எழுப்பனும். எந்த பழக்கமும் சரியாவே இல்லை என்று விட்டு தன் மகனின் புறம் திரும்பி நீ இவ்ளோ கஷ்டப்படுவேன் அம்மா ஒரு நாளும் கனவுல நினைச்சு பாக்கலையே ராஜா! கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டியோட நல்லா இருப்பேன்னு நினைச்சேனே! 10 வருஷமா இந்த பாடாவதித்தனத்தை தான் நீ அனுபவிச்சிட்டு இருக்கியா என அழ ஆரம்பித்து விட்டார்.

விடுங்கம்மா எல்லாம் என் தலையெழுத்து என ராம் கூறவுடன் அம்மா மகன் ரெண்டு பேரும் மண்டையும் உடைச்சுடுவேன் என மகா வீறு கொண்டு எழுந்துவிட்டாள். என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? காலையில உங்க மகன் குறட்டை விட்டு தூங்குகிறாா்.குறைஞ்சது 50 தடவை எழுப்ப வேண்டியதா இருக்கு. அதுக்கு அடுத்து போய் ஹீட்டர் ஆன் பண்ணி டவலை போட்டு வச்சா குளிக்கிறவரு அங்கேயே அழுக்கு துணியை போட்டுட்டு வந்துடுறாரு.

அதை எடுத்து அந்த அழுக்கு துணி தொட்டியில் போடுவதற்கு என்ன வந்துச்சு? அதுக்கு துப்பில்லை... முந்தாநேத்து குடிச்ச காபி டம்ளரை நான் தான் எடுத்துட்டு வரணுமா? அங்க வச்சு குடிச்சுட்டு திரும்ப கீழே இறங்கி வர்றப்ப அந்த டம்ளரை கையோட உங்க மகன் எடுத்துட்டு வர்றதுக்கு என்ன வந்துச்சு ? சாப்பிடுற தட்டுல கையை கழுவுறது, கார் சாவியை தேடி எடுத்து கொடுக்கணும், சார்ஜ் போடணும், ஆபீஸ் பேகை ரெடி பண்ணனும், போட்டு வைக்கிற ட்ரெஸ்ஸ துவைச்சி வைக்கணும், திரும்ப வந்து அதற்கான இடத்தில கரெக்டா அந்த ஆர்டர்ல தான் தொங்க விடணும், எல்லாம் நான் தான் பாக்கணும், இதுல யாரை பாத்து லிட்டில் பிரின்சஸ்னு சொல்றீங்க?


எங்க அப்பாவுக்கு நான் பிரின்சஸ் தான். ஆனா எந்த வேலையை எப்ப செய்யணும் எப்படி செய்யணும்னு என்னை பழக்கி விட்டுருக்காங்க. பத்து வருஷமாகியும் என்ன பாடவாதிதனத்தை உங்க மகன் அனுபவிச்சிட்டாரு? பத்து வருஷமா உங்க மகனுக்கு இருக்கிற எல்லா எடுபுடி வேலையும் நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். நான் பிரின்சஸா தான் இருந்தேன். என்னைக்கு உங்க வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சேனோ அன்னையிலிருந்து வேலைக்காரியா மாறிட்டேன்.

. வேலைக்காரின்னு சொல்றதே தப்பு. பாவம் அவங்களும் வந்து இந்த மாதிரி தான் பாடுபடுகிறார்கள் என்று நினைக்கிறப்ப எனக்கும் அவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, நம்ம இனம் அப்படின்னுதான் தோணுது.அதை தவிர்த்து வேலை செய்றவங்கனு நினைக்க தோண மாட்டேங்குது. உங்க மகன் என்ன வேலை செஞ்சிட்டாரு ?

நீங்க சொன்னீங்களே அப்படி வளர்த்திருக்க இப்படி வளர்த்து இருக்கேன்னுட்டு இனிமே உங்க மகனை தான் மாம்'ஸ் லிட்டில் ஸ்பாய்ல்ட் பிரின்ஸ்ன்னு சொல்லணும் என தன் மனதில் இருந்த ஆத்திரங்கள் அனைத்தையும் மகா கொட்டி தீர்த்து விட்டாள். என்ன பேச்சு பேசுறா பாருங்க உங்க மக என அதற்கும் ராமின் அம்மா கூற

என்ன பேச்சு பேசுறேன் என்ன அவரிடம் கூறிவிட்டு ராமின் புறம் திரும்பியவள் "இங்க பாருங்க மாம்'ஸ் லிட்டில் ஸ்பாய்ல்ட் பிரின்ஸ் நான் இப்படித்தான் இருப்பேன். இருக்க இஷ்டம் இருந்தா இருங். இல்லை ஒவ்வொரு வேலைக்கும் எனக்கு எடுபிடி வேணும் அப்படன்னா உங்க அம்மாகிட்டயே போய் அவங்களோட பிரின்ஸா காலம் முழுக்க இருங்க. எனக்கு எந்த வித கஷ்டமும் கிடையாது ,எந்த வருத்தமும் கிடையாது.

நினைச்ச நேரத்துக்கு எந்திரிச்சு நினைச்ச நேரத்துக்கு தூங்கி என் அம்மா வீட்டில் இருந்த மாதிரி எங்க அப்பாவோட லிட்டில் பிரின்சஸா வாழ்ந்த வாழ்க்கை இந்த பத்து வருஷத்துல ஒரு பொழுது கூட எனக்கு கிடைக்கலை. பிள்ளைங்க முன்னாடி எப்ப பாத்தாலும் கிண்டல் பண்றீங்களே! நாளைக்கு உங்க மகளையும் ஒருத்தன் இதே பேச்சு தான் பேசுவான். அப்போ உங்களுக்கு வலிக்குமே! அந்த வலி இன்னைக்கு என்னோட அப்பாவுக்கு இருக்கும்.

உங்களை நம்பி கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு நீங்க அதற்கான மரியாதையை இதுக்கு வரைக்கும் அவரோட மகளுக்கு தரலை அப்படிங்கற பட்சத்துல அந்த மனுசனோட மனசு என்ன வேதனை படும்? காலையில பாத்ரூம் போறதுல இருந்து ராத்திரி குடிக்கிற பால் வரைக்கும் உங்க அம்மாகிட்ட எல்லாத்தையும் ஒப்பிக்கிறீங்களே எவ்வளவு அசிங்கமா இருக்கு. நீங்க பண்ற அத்தனை கொடுமையும் நான் எங்க அப்பா அம்மா கிட்ட சொன்னா என்ன ஆகுறது உங்க நிலைமை?

என்னை பெத்தவங்க இந்த கேள்வி கேட்க மாட்டாங்க என்கிற இஷ்டத்துக்கு கண்டபடி மீம்ஸ் போட்டு விடுகிறது என கூறியவள் தன்னுடைய தாய் தந்தையரை பார்த்து நீங்க ஏன் இவங்க கூப்பிட்டதுக்கெல்லாம் வர்றீங்க. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. இது என் வீடு ,10 வருஷமா இவங்க என்னை நடத்தின நடப்புக்கு இது அத்தனையும் எனக்குதான் சொந்தம்.இந்த அம்மாவோட லிட்டில் பிரின்ஸ் பிரின்ஸா இருக்கணும்னா அவங்க வீட்ல போய் இருக்கட்டும்.

எனக்கு புருஷனாகவும், என் பிள்ளைகளுக்கு அப்பாவும் இருக்கணும்னா ஒழுங்கு மரியாதையா அவர் வேலையை அவரே செஞ்சுக்கணும். நான் சமைக்கிறேன்னா அவர் காய் வெட்டி தரணும், நான் டிபன் எடுத்து வைக்கிறேன்னா அவர்தான் பாத்திரத்தை கழுவனும்.நான் வாஷிங் மெஷின்ல துணியை போட்டா அவர் எடுத்து மடிச்சு வைக்கணும்.பிள்ளைகளை நான் ரெடி பண்ணி அனுப்புறேன்னா பிள்ளைங்க சாயங்காலம் வந்த உடனே முழு நேரமும் அவர்தான் பார்த்துக்கணும்.


காலைல கிளப்புறது மட்டும்தான் நான் செய்வேன். அதுக்கு அடுத்து சாயங்காலம் வேலையெல்லாம் அவர்தான் செய்யணும். அப்படி இருக்கிறதா இருந்தா மட்டும் இருக்கட்டும் "என்று தன் பெற்றோர்களிடம் உரைத்தவள் கணவனின் புறம் திரும்பி "என்ன மாம்'ஸ் லிட்டில் பிாின்ஸ் அம்மா கூட போறீங்களா? இல்ல ஆத்துக்காரி யோட இருக்கீங்களா?", என்ற ஒரு கேள்வியை வீசிவிட்டு அன்றாடம் வீட்டில்தான் செய்யும் வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டாள்.


அம்மாவிடம் அனைத்தையும் ஒப்பிக்கும் ராம் மணவாளனாக இருப்பதும் அவனது அம்மாவின் லிட்டில் ஸ்பாய்ல்ட் பிரின்ஸாக இருப்பதும் வரும் காலங்களில் அவனது நிம்மதியான வாழ்க்கையை நிர்ணயிக்கும்.