வானே வானே வானே

Kripnythaa

Moderator
Mar 26, 2018
456
150
63
வானே வானே வானே

நிர்மலமான எவ்வித வேறுபாடு அற்ற நீல வானத்தை காண்பதை விட, பல உருவங்களை வெள்ளை நிறத்தில் நமது கண்களுக்கு காட்சி அளித்திடும் வித்தியாசமான வானமே நமது விருப்பமாகவும் அமைந்திடும்.

அவ்வாறே தன்னுடைய எழுத்து நடையில் ஒவ்வொரு முறையும் வித்தியாசத்தை புகுத்தி தன்னுடைய எழுத்து ஆற்றலால் நம்மை வசீகரித்திடும் ஆசிரியர் ஆர்த்தி ரவி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

கண்ணம்மாவில் கள்ளம் கபடமற்ற ஒரு பெண்ணின் மனதின் உறுதியை கண்ணில் கசியும் நீருடன், ஆங்கிலம் கண்டிடாத கதைக்களத்துடன் வாசித்ததை போன்று "வானே வானே வானே" கதையில் ஓர் ஆழ்ந்த காதலையும், அவரவர் மன விருப்பங்களை பற்றியும்,வேறுபடும் எண்ணங்களைப் பற்றியும் எடுத்து இயம்பிய விதம் நமது எண்ணங்களை பரந்து விரிய செய்கின்றது.

ஒவ்வொரு கதையிலும் அந்நாட்டின் கலாச்சாரத்தை, அவர்களது வாழ்வியலை நம் கண்முன்னே காட்சிகளாக அமைத்திடும் ஆசிரியர் இக்கதையில் தைவான், இந்தியா, அமெரிக்கா என்று காட்சி படுத்தியதுடன் இல்லாமல், அந்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் நம் முன்னே கண்களுக்கு விருந்தளித்துள்ளார். பாரதியின் பாடல்கள் பாமரனையும் பைத்தியமாக்கும் நிலையில் சாரதி கண்ணன் அவற்றை பாடிடும் ஒவ்வொரு இடமும் பரவசம் அளிக்கச் செய்யும் காட்சிகளாகவே அமைந்துள்ளன.

அம்ருதா, சாரதி கண்ணன் காதல் கல்லடியால் கனிய வைக்காத பழமாக இன்றி காத்திருந்து கண்டிடும் குறிஞ்சி மலராக அமைந்துள்ளது. சாரதி பெயரில் மட்டுமின்றி சாரதியின் அம்சமாகவே விளங்குகின்றான். நிறைய கருத்துகளை கூறவே மனம் விளைகின்றது. ஆனால் என்னையும் அறியாமல் முழுக்கதையையும் அளித்து விடுவேனோ என்ற பயத்திலேயே சில வரிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். சாரதியும், அம்ருதாவும் இணைந்தார்களா? இல்லை இன்றைய நடப்பு நிகழ்வுகளை போன்று வேறு வேறு வழியில் சென்று அவரவர் வாழ்வினை அமைத்துக் கொண்டார்களா? என்பதனை வித்தியாசமான முறையில் அழகாக அளித்துள்ள கதைக்களத்தை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

"வானே வானே வானே" வானில் மின்னும் விண்மீன்களில் வேறுபட்ட வித்தியாசமான நட்சத்திரம்.

இதுபோன்று மேலும் பல வித்தியாசமான கதைகளை தங்களது எழுத்து நடையில் கண்டிட ஆவலாக உள்ளோம் என்பதனை ஆர்த்தி ரவி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
  • Like
Reactions: Anuya