Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 1

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரு குதிரை ஒன்று தன் மேலிருந்தவனை பற்றி யோசியாமல் படுவேகமாக ஓடிக் கொண்டிருந்தது. குதிரை மேல் அமர்ந்திருந்தவனோ பயமில்லாமல் குதிரையின் ஓட்டத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தான். அவனும் அந்தக் குதிரையும் பிறந்ததிலிருந்து நண்பர்கள்.

ஒவ்வொரு முறையும் அவர்களுக்குள் பெரும் போட்டியே நடக்கும். அவனை தன் முதுகிலிருந்து தள்ளிவிட பெருமுயற்சி எடுக்கும். ஆனால் அவனோ அதை அழகாக கையாள்வான்.

அவன் ரிஷிவர்மன். மிகுந்த கர்வம் கொண்டவன். அந்த வனப்பகுதி முழுவதும் தனது ஆளுமையின் கீழ் வைத்திருப்பவன். தவறுகளை கண்டால் பொங்கி எழுபவன் தண்டனையின்றி எவரையும் விட்டதாக சரித்திரமில்லை.

அவனது நடை உடை பாவனையே எவரையும் நெருங்க விடாமல் செய்யும். அன்னை மற்றும் மாமன் மனைவி தவிர வேறு ஆதரவின்றி வாழ்பவன். அவனுள் பொங்கும் எரிமலை ஒன்று உறங்கிக் கொண்டிருக்கிறது. அது வெடிக்கும் போது அந்த வனப்பகுதியே சுடுகாடாக மாறும்.

குதிரையின் முதுகில் தட்டி “இன்னைக்கும் நான் தான் ஜெயிச்சேன் பியுட்டி”.

சந்தோஷமாக தலையை உலுக்கிக் கொண்டு அவனது தொடுகையை ரசித்தது.

“சரிடா கிளம்புவோம்...போர்ட் மீட்டிங் இருக்கு” என்று அதன் முதுகில் ஒரு தட்டுதட்ட, சீறிக் கொண்டு பாய்ந்தது அவனது மாளிகையை நோக்கி.

அவனது வருகைக்காக தோட்டத்திலேயே காத்திருந்தார் தெய்வநாயகி. கம்பீரமாக குதிரை மேல் அமர்ந்து வரும் மகனை பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டாலும், உள்ளுக்குள்ளிருந்த வேதனை அதனை மறைத்தது.

நடந்த அனைத்தையும் மறந்து அவன் சாதரணமாக வாழ்ந்துவிடக் கூடாதா? என்கிற ஏக்கம் எழாமல் இல்லை.

அன்னையின் முகத்தை ஆராய்ந்து கொண்டே வந்தவன் “மாம்! என்னாச்சு?” என்றான் யோசனையாக.
மறுப்பாக தலையசைத்து வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் ‘கல்யாணம் பண்ணிகிட்டா பொண்டாட்டியும் குதிரைல தான் கூட்டிட்டு போவியான்னு நினைச்சிட்டு இருந்தேன்” என்றார் சிரிப்புடன்.

“மாம்! ”

அவனது கத்தலைக் கேட்டு விழிநீர் வழிய “மன்னிச்சிடுடா” என்றார் பரிதாபமாக.

அவனோ சிவந்த முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு “போர்ட் மீட்டிங் இருக்கு” என்றான் கற்பாறையாக இறுகிய குரலில்.

அதைக் கேட்டதும் கண்ணீர் கன்னங்களைத் தொட “அவ வருவாளா?” என்றார்.

அன்னையை முறைத்து “நேரமாச்சு” என்றவன் விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்தான்.

வேக நடையுடன் செல்பவனையே பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்களும், மனதும் வலியை உறைத்தது. எப்படி இருந்திருக்க வேண்டியவன். எல்லாம் என்னால் தானே என்று தன்னையே நிந்தித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

அவரது தோள்களைப் பற்றிய அழுத்தமான கரமொன்று “அக்கா!”என்று அதட்டியது.

அந்தக் குரல் கேட்டதும் தாள முடியாமல் “லோகா! நான் என்ன பாவம் செஞ்சேன்? எதுக்கு இந்த வேதனை எனக்கு?” என்று கதற ஆரம்பித்தார்.

அவரின் முன்னே அமர்ந்த லோகநாயகி “இது தான் விதி இப்படித்தான் நடக்கனும்னு இருந்திருக்கு. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்க அக்கா. நீங்களே கலங்கி போனா அவனை எப்படி சமாளிச்சு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்ப?”

“எப்படி லோகா? என்னாலையே தாங்க முடியலையே. உண்மை தெரியாத போதே இத்தனை ஆங்காரத்தோட இருப்பவன் உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்?”

லோகாவும் அவர் சொன்னதை நினைத்து பயந்தார். ரிஷிக்கு அனைத்து உண்மைகளும் தெரியும் போது ஆழி பேரலையாக எழுந்து அனைவரையும் அழித்து விட்டுத் தான் ஓய்வான் என்பதில் ஐயமில்லை.

நீண்ட பெருமூச்சுடன் “நிச்சயம் பூகம்பம் தான் உண்டாகும். அதனால் ஏற்படப் போகும் அழிவுகளை தடுக்க உங்களால் மட்டுமே முடியும் அக்கா”.

லோகாவை நிமிர்ந்து பார்த்தவரின் விழிகளில் வெறுமை. நடந்து முடிந்தவைகளை தன்னாலையே ஏற்க முடியாத போது மகனால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ரிஷியை அழைத்துக் கொண்டு எங்காவது கண்காணாத தேசத்துக்கு போய் விட மாட்டோமா? என்றிருந்தது.

எவ்வளவுக்கு எவ்வளவு இந்த இயற்கையையும், இருப்பிடத்தையும் ரசித்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு வெறுத்துக் கொண்டிருக்கிறார்.

அவரின் முகத்தில் வந்து போன உணர்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லோகாவிற்கு பரிதாபமாக இருந்தது.

“வாங்க அக்கா! இப்படி உட்கார்ந்திருந்தா வேண்டாததை எல்லாம் யோசிசிட்டிருப்பீங்க” என்று கைபிடித்து எழுப்பி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

அப்போது கேட்டைத் தாண்டி ரிஷியின் ரங்க்ளர் ஜீப் வெளியேறியது. இறுகிய தோற்றத்துடன் செல்லும் மகனை திரும்பித் திரும்பி பார்த்தபடி உள்ளே சென்றார். இன்று இந்த மாளிகையே அல்லோகலப்படும் அவன் திரும்பி வந்தப் பிறகு என்பது உறுதி.

என்றெல்லாம் அவளை சந்தித்துவிட்டு வருகிறானோ அன்று அவனது ஆத்திரம் முழுவதும் பயங்கரமாக வெளிப்படும்.

மலைப்பாதைகளின் வழியே பயணித்துக் கொண்டிருந்தவனின் மனமும் சற்றே பின்னோக்கிப் பயணித்தது.

அவள் கவின்யா. பெயரைப் போலவே கவிதை மாதிரி இருப்பவள். பிறந்ததிலிருந்து அவளை கைகளில் தாங்கியவன், பெண்ணவள் வளர வளர நெஞ்சில் தாங்க ஆரம்பித்தான். இப்படியொரு உறவு காலம் முழுவதும் கூட வந்தால் போதும் தன்னைவிட கொடுத்து வைத்தவன் யாருமில்லை என்று கர்வத்தோடு திரிந்தான்.

எந்த நொடியில் எந்த நிமிடத்தில் அனைத்தும் மாறி போனது என்று யாருக்கும் புரியாத புதிர். எவ்வளவுக்கு எவ்வளவு அவளை ரசித்தானோ அவ்வளவுக்கு இந்த உலகத்தில் அவளைத் தான் வெறுக்கிறான்.

எத்தனை முறை இந்த ஜீப்பிலேயே அவளுடன் இந்த மலையை கடந்து சென்றிருக்கிறான்.

அப்போதெல்லாம் அவனது தோள்களில் சாய்ந்து கொண்டு பயணத்தை ரசித்தவள் எங்கே சென்றாள்? அப்போது அவளது விழிகளில் தெரிந்த அந்த காதல் எங்கே சென்றது?

அவனது சிந்தை தடுமாறியது போல, வாகனமும் சற்றே தடுமாறி மீண்டது. ஸ்டியரிங் வீலை அழுந்தப் பற்றிக் கொண்டவனின் முகம் அவளது நினைவுகளில் இலவம் பஞ்சாக மாறியது. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள்? எப்படி அனைத்தையும் சிதைத்து விட முடியும்? என்னால் முடியுமென்று எதிரே எதிரியாக நிற்கின்றாளே.

வர்மா-வர்மா என்று ஒவ்வொன்றிற்கும் சுற்றி சுற்றி வந்தவளுக்கு அனைத்தும் மறந்து போனதா? என்னளவிற்கு அவளுக்கு என் மேல் காதல் இல்லாமல் போயிற்றா? காதலுடன் மயங்கியதெல்லாம் மாயையா?

மனதின் போக்கில் அழுத்தம் ஏற்பட வண்டி ஓட்ட முடியாமல் நிறுத்தியவன் அப்படியே ஸ்டியரிங் வீலின் மீது சரிந்தான். முஷ்டியை மடக்கி அருகே இருந்த சீட்டை குத்தியவன் “முடியலடி! உன்னை வெறுக்கவும் முடியாம, மறக்கவும் முடியாம...நீ செஞ்ச துரோகத்தை ஒவ்வொரு நாளும் நினைச்சு ரத்தம் சிந்திகிட்டு இருக்கேன். ஏண்டி அப்படி பண்ணின?

உன்னை பார்க்கும் போதெல்லாம் கழுத்தை நெறித்து கொன்னு போடணும்னு வெறி வருது. அதையும் என்னால செய்ய முடியலடி. மொத்தத்தில் என்னை கையாலாகதவனா மாற்றிட்டு என் கண்முன்னேயே நடமாடிக்கிட்டு இருக்க. எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ உன்னைப் போல் ஒருத்தியை காதலித்து சின்னாபின்னம் ஆகிட்டு இருக்கேண்டி” என்று முகம் இறுக தனது இயலாமையை சீட்டின் மீது காண்பித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் வரை அப்படியே இருந்தவன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவனின் பார்வை தெளிவடைந்திருந்தது. வேட்டையாடப் போகும் புலியின் பார்வை அதில் வந்திருந்தது.
“விட மாட்டேண்டி! நான் எப்படி புழுவா தினம்-தினம் துடிக்கிறேனோ அப்படி நீயும் துடிக்கனும்”.

தான் அதிகம் நேசித்த ஒருவனே செத்த உடலை பிடுங்கித் தின்னும் ராஜாளியாக மாறப் போவதை உணராமல் போர்ட் மீட்டிங்கிற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் கவின்யா.

கலங்கிய விழிகளின் மீது மையெழுதிக் கொண்டிருந்தவளின் விழிகளில் வெறுமை நிறைந்திருந்தது. மனமோ ரிஷிவர்மனையே சுற்றிக் கொண்டிருந்தது.

‘நான் என்ன விளக்கம் சொன்னாலும் உன்னால ஏற்றுக் கொள்ள முடியாது வர்மா. அதுமட்டுமில்ல சில உண்மைகளை தெரிந்து கொள்ளும் போது உன்னால நிச்சயமாக தாங்கிக் கொள்ள முடியாது’என்றெண்ணி டிரெஸ்ஸிங் டேபிளின் மீதே சாய்ந்து விட்டாள்.

எழுதிய மை அப்படியே இமைகளின் மீது அப்பியிருக்க ‘என்னால உன்னை நேருக்கு நேர் பார்க்க முடியல வர்மா. ப்ளீஸ்! என்னை விட்டுடுங்களேன் நான் எங்கேயாவது போயிடுறேன்’ என்று அழ ஆரம்பித்தாள்.

“கவி!” என்று அதட்டலாக ஒரு குரல் வர, அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
வாக்கிங் ஸ்டிக்கை அழுத்தமாகப் பிடித்தபடி, தனது கூரிய பார்வையால் அவளை ஆராய்ந்து கொண்டு நின்றிருந்த வேதநாயகம் “என்ன பண்ணிட்டு இருக்க கவி?” என்றார் கத்தி போன்ற குரலில்.

“மீட்டிங்க்கிற்கு ரெடி ஆகிட்டு இருக்கேன் மாமா” என்றாள் பதட்டத்துடன்.

கோப முகத்தோடு “பார்த்தா அப்படி தெரியலையே? பழைய காதலனை நினைச்சு கண்ணீர் விடுகிற போல” என்றார் கிண்டலாக.

“மாமா! ப்ளீஸ்!”

ஆழ்ந்த பார்வையோடு “இன்னொரு முறை என்னை கோபப்பட வைத்து விடாதே கவி தாங்க மாட்ட”.

அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டவள் “இல்ல மாமா! நான் இப்போ கிளம்பிடுறேன்” என்றாள் பதட்டமாக.

அவளை சந்தேகமாக பார்த்துவிட்டு “ம்ம்...உனக்கு கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் போட்டுக்கிட்டு தயாராகி கீழே வா” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதுமே பொங்கி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவளிடம் லேசான விசும்பல் மட்டும் இருந்தது. வேகமாக முகம் கழுவி, அவளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆடைகளை அணிந்து கொண்டு கீழே இறங்கி சென்றவளின் முகம் உணர்ச்சிகளை மொத்தமாக துடைத்திருந்தது.

அவளின் ஒப்பனையையும், முகத்தையும் ஒருமுறை ஆராய்ந்து கொண்டவர் “நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கில்ல” என்று கேட்டுவிட்டு காரில் ஏறினார்.

மலைப்பாதையில் அவன் சென்ற வழியே பயணிக்கும் போது அவளது நினைவுகள் அவனிடம் சென்று நின்றது.

அவன் தோள் சாய்ந்து இயற்கை எழிலை ரசித்தபடியே சென்ற நாட்கள் நினைவிற்கு வர, மனம் சப்தமில்லாமல் மௌனமாக அழுது கொண்டிருந்தது.

வளைந்து நெளிந்து போகும் பாதை

மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
 
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!