Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 19 | SudhaRaviNovels

அத்தியாயம் - 19

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 19

வேதநாயகம் செண்பகத்தை அழைத்துக் கொண்டு காரில் பயணித்துக் கொண்டிருக்க, ரிஷியின் மாளிகையில் முன்பக்க தோட்டம் முழுவதும் ஆட்களின் நடமாட்டமும், மெஷின்களின் சப்தமும் ஒலிக்கலாயிற்று.

காட்டுப் பாதையைத் தாண்டி மலைப்பாதையில் வந்தவரின் கவனம் தூரத்தில் தெரிந்த வெளிச்சப் புள்ளிகளின் மீது விழுந்தது. அது ரிஷியின் மாளிகை இருக்கும் பக்கத்திலிருந்து வருகிறது என்று புரிந்ததும் சடாரென்று காரை நிறுத்தி விட்டார்.

அங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்றாலும் தவறாக எதுவோ நடக்கப் போகிறது என்று புரிந்தது. காரை விட்டு இறங்கி சற்று நேரம் அதே திசையில் பார்த்திருந்தவரின் மனம் சில கணக்குகளை போட்டுக் கொண்டது. பின்னர் காரில் ஏறி அமர்ந்தவர் மீண்டும் நீலோற்பலத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார்.

பத்து நிமிட பயணத்தில் நீலோற்பலத்தை அடைந்தவர் காரை லாக் செய்துவிட்டு அவசரமாக உள்ளே சென்றார். அங்கு அவரைப் பார்த்ததும் ஓடி வந்த கருப்பன் “என்னங்கையா?” என்றான்.

அவனிடம் சில பல உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு வேகமாக படியில் ஏறிச் சென்றார். முன்னர் செண்பகம் இருந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் கருப்பனும் வந்துவிட, அவனுடன் சேர்ந்து அங்கிருந்த ஒரு பழைய பிரம்மாண்டமான படத்தை அகற்ற, அதன்பின்னே சிறிய மஞ்சள் நிற பல்புகள் எரிந்திருக்க, நீண்ட இருள சூழ்ந்த நெடிய பாதை ஒன்று சென்றது.

கருப்பனின் விழிகள் அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் விரிந்தது. வேதநாயகமோ தீவிரமான முகத்துடன் கருப்பனிடமிருந்து அவன் கொண்டு வந்த பெட்ரோலை வாங்கி அந்த வழியெங்கும் ஊற்ற ஆரம்பித்தார். அவனை அங்கேயே நிற்கும்படி பணிந்துவிட்டு அந்த வழியெங்கும் சென்று ஒரு இடத்தையும் விடாது பெட்ரோலை ஊற்றி விட்டு வந்தார். மொத்தமாக முடித்ததும் கண்களை ஒரு நிமிடம் மூடித் திறந்தவர் தீக்குச்சியை உரசி அங்கே போட்டார். அடுத்த நிமிடம் நெருப்பு ஜுவாலை அந்த வழி எங்கும் பிடித்துக் கொண்டது.

பெட்ரோல் ஊற்றியதால் பேய் போல பிடித்துக் கொண்டு அந்த வழி முழுவதும் அனலை பரப்பி ரிஷியின் மாளிகையை நோக்கிச் சென்றது. அதை திருப்தியாக பார்த்துவிட்டு கருப்பனிடம் “நான் வெளியேறியதும் இந்த மாளிகை முழுவதும் பற்ற வைத்துவிடு. எதுவும் மிஞ்சக் கூடாது. இப்படியொரு இடம் இருந்ததற்கான அடையாளமே தெரியக் கூடாது” என்று மிரட்டிவிட்டு வாசலுக்குச் சென்றார்.

அங்கே சென்றவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கார் கதவு திறந்திருக்க செண்பகம் இறங்கி ஓடி இருந்தார். அந்த இருளில் எங்கே சென்று தேடுவது? செண்பகம் தான் முக்கிய துருப்பு சீட்டு. இப்படியாகும் என்று எதிர்பார்க்காதாவர் நாலாப் புறமும் தேடி அலைந்து நொந்து போய் “சரி நான் பார்த்துக்கிறேன். நீ நான் சொன்ன வேலை செஞ்சிடு” என்று கூறிவிட்டு காரை எடுத்தார்.

அதே நேரம் நீலோற்பலத்தில் தொடங்கிய நெருப்பானது லோகநாயகியின் அறையைத் தொட்டிருந்தது. மும்மரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க, லோகநாயகியின் அறை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் திடீரென்று வீட்டினுள் எழுந்த ஜுவாலையைக் கண்டு பயந்து போய் பணியை நிறுத்தி விட்டு தீயை அணைக்க ஓடினார்கள்.

ரிஷிக்கோ எப்படி தீப்பிடித்தது என்று புரியாமல் திகைத்து நிற்க, மித்ரா தான் அவனை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள். அதே சமயம் தோட்டத்திலும் சுரங்கப் பாதையில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது.

அந்தப் பகுதி முழுவதும் கலவரமானது. பக்கத்து எஸ்டேட்டிலிருந்தவர்கள் புகார் கொடுத்திருக்க, பயர் எஞ்சின் மற்றும் போலீஸ் குழு வந்து விட்டிருந்தனர். பவனுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்க, அவனும் கிளம்பி வந்துவிட்டான். அனைவரின் மனதிலும் கலக்கமும், பயமும் சூழ்ந்திருந்தது.

வேதநாயகமோ இருளில் செண்பகத்தை தேடி அலைந்து கொண்டிருந்தார். எங்கு தேடியும் கண்ணில் படவில்லை. இத்தனை நாள் பாதுகாத்து வைத்ததின் பலன் இன்று பூஜ்யமாக போய் விட்டது. தன் கண்ணில் படவில்லை என்றாலும் வேறு யார் கண்ணிலும் படாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தார்.
ஆனால் நேரம் ஆக-ஆக அவர் கிடைப்பார் என்கிற நம்பிக்கை குறைந்தது. அதனால் காரை எடுத்துக் கொண்டு பவன் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்றார். பவனுக்கு வந்த செய்தியை எண்ணி கவலையுடன் அமர்ந்திருந்தார்கள் கவியும், அருணாவும்.

திடீரென்று அவர்களின் வீட்டு வாயிலில் வாட்ச்மேன் யாரோ ஒருவருடன் வாக்குவாதம் செய்யும் சப்தம் கேட்க, எழுந்து சென்று என்னவென்று பார்த்தார். அங்கே வேதநாயகத்தை கண்டதும் அதிர்ந்து போனவர்,

உடனே கவியிடம் சென்று “நான் சொல்வதை கேள்வி கேட்காம செய் கவி. அந்தாள் இங்கே வந்துட்டார்”.

அதை கேட்டதுமே பயந்து போன கவி “என்ன சொல்றீங்க?” என்று அரண்டு போனாள்.

அவளது கையைப் பற்றி இழுத்துக் கொண்டு கீழே சென்றவர் பின் வாசல் அருகே சென்று மெல்ல கதவை திறந்து விட்டு “ஓடு கவி! ரிஷியோட மாளிகை நோக்கி ஓடிடு. அங்கே தான் எல்லோரும் இருக்காங்க. அது தான் உனக்கு பாதுகாப்பு” என்று கூறி அவளை விரட்டினார்.

“நீங்க அத்தை” என்றாள் கலங்கிய கண்களுடன்.

திரும்பி- திரும்பி பார்த்துக் கொண்டே “என்னைப் பற்றி கவலைப்படாதே-டா. சீக்கிரம் நீ கிளம்பு” என்று கூறிவிட்டு கதவை சாத்திவிட்டார்.

அவர் சென்றதும் வேதநாயகம் வந்துவிடுவான் என்கிற பயத்தில் ஓட ஆரம்பித்தாள். இருள் பயமுறுத்தினாலும் மிருகங்களை விட மோசமானவன் வேதநாயகம். அவனிடம் சிக்கிவிடக் கூடாது என்கிற பயத்தில் கண்மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

சாதாரண இருளே பயமுறுத்தும். இதுவோ மலைகள் சூழ்ந்தப் பகுதி. ஊதக் காற்றும், பூச்சிகளின் ரீங்காரமும் அந்த இருளும் அவளை அதிகம் பயமுறுத்தியது. அவளது குறிக்கோள் ஒன்று மட்டும் தான். எப்படியாவது ரிஷியின் மாளிகைக்கு சென்றுவிட வேண்டும் என்பதே. எக்காரணம் கொண்டும் வேதநாயகம் கையில் சிக்கிவிடக் கூடாது.

கவியை அனுப்பிவிட்டு ஹாலிற்கு வரும் நேரம், வேதநாயகம் வாசல் கதவை படபடவென்று தட்ட ஆரம்பித்திருந்தார். மனதில் மெல்லிய பயம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாது சென்று கதவைத் திறந்தார். வேதநாயகமோ அவளை ஒரு தள்ளு தள்ளிவிட்டு “கவி! கவி!” என்று கத்திக் கொண்டே வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்.

இருகைகளையும் கட்டிக் கொண்டு சற்றே நிமிர்ந்து நின்று வேதநாயகத்தை பார்த்துக் கொண்டிருந்தார் அருணா. வீடு முழுவதும் ஓடி ஓடி தேடி அலுத்துப் போய் அருணாவின் முன் வந்து நின்றவர் “கவி எங்கே? அவளை என்கிட்டே ஒப்படைச்சிடு” என்றார் மிரட்டலாக.

“அவ கிடைக்க மாட்டா”.

வேகமாக சென்று அருணாவின் கழுத்தை நெரித்து “ஏய்! ஒழுங்கா அவளை எங்கே ஒளிச்சு வைச்சிருக்கேன்னு சொல்லிடு” என்றார்.

கண்கள் கலங்கி மூச்சுக்கு தவித்தாலும் இதழ்களில் கேலிப் புன்னகை எழ அவரையே பார்த்தார்.

“சொல்லு! எங்கே வச்சிருக்க?”

“முடியாது!”.

அவரது கழுத்தை விட்டுவிட்டு ஓங்கி அறை ஒன்றை விட்டு, “மரியாதையா சொல்லிடு” என்றார் உறுமலுடன்.

உன்னால் எதுவும் செய்ய முடியாது என்பது போல அழுத்தமாக பார்த்தபடி நின்றிருந்தார் அருணா.

வேதநாயகம் அடித்ததில் உதடு கிழிந்து ரத்தம் வேறு வர தொடங்கி இருந்தது.

சற்று நேரம் அமைதியாக நின்றிருந்த வேதநாயகம் பட்டென்று அருணாவின் முடியை கொத்தாகப் பற்றி “அவ இல்லேன்னா என்ன? நீ இருக்கியே” என்றவர் அவரை இழுத்துக் கொண்டு காருக்கு சென்றார்.

அருணாவோ அவரிடமிருந்து விடுபட போராடி பார்த்தார். ஆனால் வேதநாயாகத்தின் பிடி இரும்புப் பிடியாக இருக்க, அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் காருக்குள் தள்ளப்பட்டார். அவரின் கைகால்கள் கட்டப்பட, வாயில் பிளாஸ்திரி போடப்பட்டது. அருணாவோ அவரை முகம் சுளித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

அதே நேரம் ரிஷியின் மாளிகை அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களது தோட்டம் முழுவதும் தீப்பற்றி காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்திருந்தது. காற்றின் வேகத்திற்கு அக்கம்பக்கம் இருந்த மரங்கள் செடிகொடிகள் எல்லாம் பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்திருந்தது.

ஒருபக்கம் வீட்டினுள் பிடித்திருந்த நெருப்பை அணைக்க ஒரு குழு போராடிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் தோட்டத்தில் வேகமாக பரவிக் கொண்டிருந்த நெருப்பை அணைக்க தண்ணீரை ஊற்ற ஆரம்பித்திருந்தனர்.

இவர்கள் சுத்தம் செய்ய நினைத்த தோட்டம் பாதிக்கு மேல் கருகி சாம்பலாகி இருக்க, எங்கும் புகையும் நாற்றமுமாக இருந்தது. வீட்டினுள் எரிந்த நெருப்பை அணைத்து விட்டு தோட்டத்திற்கு ஓடி வந்தார்கள். அதற்குள் செங்கமலமும், தெய்வநாயகியும் வந்திருக்க அவர்களுக்கு பேரதிர்ச்சி. வாசமல்லி கூறியதை போல அங்கு நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் மனதிற்குள் இனம் புரியாத பயத்தை உருவாக்கியது.
ரிஷி பையர் பைட்டர்களுடன் கருகிய தோட்டத்தின் வழியே நடக்க ஆரம்பித்திருந்தான். மித்ராவோ அங்கே போக பயந்து அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அப்போது அங்கு பவனும் வந்துவிட, அவனும் ரிஷியுடன் சேர்ந்து கொண்டான்.

“திடீர்னு எப்படி?”

“எனக்கும் அது தான் தெரியல. அதுவும் சித்தி ரூமிலிருந்து தான் நெருப்பு பிடிச்சிருக்கு” என்றான் யோசனையாக.

“அந்தாளோட வேலையாக இருக்குமோ?”

“யாருமே இல்லாத அறையில் எப்படி நெருப்பு பற்றும். அதை அவர் எப்படி செய்ய முடியும்?”

“ம்ம்...சரியான கேள்வி” என்றவர்கள் தோட்டத்தின் நடுப் பகுதிக்கு வந்திருந்தனர்.

ரிஷியும், பவனும் ஓரிடத்தில் நின்று சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லா இடங்களிலும் சென்று பார்வையிட ஆரம்பித்திருந்தனர். வந்திருந்த குழு பரபரவென்று எரிந்த பகுதிகளை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று ஒருவன் “சார்! சீக்கிரம் இங்கே வாங்க” என்று கத்தினான்.

அவனது அலறலில் அனைவரும் அவனிருந்த இடத்திற்கு சென்றனர். அங்கு சென்றவர்களுக்கு என்ன இருக்கிறது என்று புரியாமல் அந்த இடத்தை பார்த்தனர். அப்போது கத்தியவனோ ஓரிடத்தை சுட்டிக் காட்டி “இங்கே பாருங்க சார். தரை மட்டத்துக்கு கீழே நெருப்பு பொறி தெரியுது பாருங்க” என்று காண்பித்தான்.

அவன் சொன்னதும் தான் அங்கே வந்து கொண்டிருந்த நெருப்பு பொறியை அனைவரும் கவனித்தனர்.

ரிஷிக்கு சட்டேன்று ஒரு விஷயம் புரிய, பவனிடம் திரும்பி “உனக்கு என்னன்னு புரியுதா?” என்றான்.

அவனுக்கும் அங்கு என்ன இருக்கும் என்று புரிந்ததால் அதிர்ச்சியுடன் “ம்ம்..” என்றான்.

ரிஷி உடனே “கைஸ்! சீக்கிரம் இந்த இடத்தை தோண்ட ஆரம்பிங்க” என்று கட்டளையிட்டான்.

அடுத்த நிமிடம் அங்கிருந்தவர்கள் அசுர வேகத்துடன் தோண்ட ஆரம்பித்தனர். பள்ளம் கீழே ஆழமாக போக போக உள்ளே சுரங்கம் இருப்பது தெரிய வர, சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.

அதோடு சுரங்கத்தின் ஒருவழி லோகநாயகியின் அறைக்குச் சென்றது.

மற்றொரு வழியை ஆராய ரிஷியும், பவனும் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். நடப்பதை எல்லாம் பார்த்து செங்கமலத்தின் நெஞ்சு லேசாக வலிக்க ஆரம்பித்திருந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து உள்ளே செல்ல, அங்கே அந்தப் பாதையில் அனல் அதிகமாக இருந்தது. அதையும் மீறி சென்றவர்களை நீலோற்பலத்தின் அறை வாயில் வரவேற்றது.

கதவும் எரிந்திருக்க, ரிஷி முதலில் உள்ளே செல்ல அவனை தொடர்ந்தான் பவன். அந்த அறைக்குள் நுழைந்ததுமே ரிஷிக்கு அங்கு வந்த ஞாபகம் வர, அவசரமாக அங்குமிங்கும் ஓடினான். வேகமாக படியில் இறங்கி ஓடியவனைக் கண்டு தானும் பின்னே ஓடினான்.

வாசலுக்கு சென்று நின்றவனின் பார்வை சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த கல்லின் மீது படிந்தது. நீல வண்ணத்தில் கொடிகள் சூழ, நீலோற்பலம் என்கிற எழுத்து கம்பீரமாக கண்ணுக்குத் தெரிந்தது.
அப்போது பவன் யாரையோ பார்த்துவிட்டு ஓடுவது தெரிய, வேகமாக அவனை தொடர்ந்தான். அங்கு கருப்பன் மண்ணில் முகம் புதைத்து கிடந்தான். அவனை தொட்டு திருப்பி போட்டான் பவன். கருப்பனின் வாயில் நுரை தள்ளி இருக்க, உடலெல்லாம் நீலம் பாரித்து போயிருந்தது.

நாகம் தீண்டி இறந்திருக்கிறான் என்று இருவரும் உணர்ந்து கொண்டார்கள். அந்நேரம் சற்று தூரத்தில் யாரோ பயத்துடன் அழும் சப்தம் கேட்க, இருவரும் கீழே கிடந்த கழிகளை எடுத்துக் கொண்டு விரைந்தார்கள். அப்போது புதர் மண்டிய அந்த இடத்தில் சரசரவென்று எதுவோ நகரும் ஓசை கேட்டது. அந்நேரம் யாரோ ஓடும் சப்தமும் கேட்க, இருவரும் அந்த திசையில் ஓட ஆரம்பித்தார்கள்.

திடகாத்திரமான ஆள் ஓடுவது போல் அல்லாமல் யாரோ தட்டுதடுமாறி ஓடுவது போலத் தோன்ற, அவர்களின் அசைவை வைத்தே எங்கே இருக்கிறார்கள் என்பதை அனுமானித்து இருவரும் சுற்றி வளைத்திருந்தனர்.

அங்கே செண்பகம் தலைவிரி கோலமாக நின்று கொண்டிருந்தார். அவர்கள் இருவரையும் பார்த்ததும் “என்னை விட்டுடு! என் குழந்தையை கொடு” என்று அழ ஆரம்பித்தார்.

யாரோ ஒரு ஆளாக இருக்கும் என்றெண்ணி துரத்தியவர்களுக்கு அவரைக் கண்டதும் அதிர்ச்சியாக போனது.

பவனுக்கு அவர் யாரென்று தெரியாது. யாரோ ஒரு பெண்மணி என்று தான் நினைத்தான். ஆனால் ரிஷிக்கு அன்று தன்னைப் பார்த்து ஓடி ஒளிந்தவர் இவராக தான் இருக்கும் என்று புரிந்து போனது.

“பைத்தியம் போல ரிஷி. இவங்கள என்ன பண்றது?” என்றான் பவன்.

ரிஷி யோசனையுடன் அவரின் கைகளைப் பற்றி இழுத்து “இவங்க இந்த வீட்டில் இருக்கிறவங்க பவா” என்றவன் செண்பகத்தை தோளோடு அணைத்துக் கொண்டான்.

அதுவரை பயந்து அழுது கொண்டிருந்தவரோ அவனது அணைப்பில் அமைதியானார். கோழிக்குஞ்சை போன்று அவனது பாதுகாப்பு வேண்டி நின்றார்.

“இந்த மாளிகை யாரோடதுன்னு உனக்கு தெரியுமா ரிஷி?”

செண்பகத்தை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தவன் “அப்பாவோடது தான் பவன். நான் எதிர்பாராமல் ஒரு நாள் இங்கே வந்தேன். அதன்பின்னர் தான் விசாரித்து இந்த மாளிகை யாரோடதுன்னு தெரிந்து கொண்டேன்”.

“சுரங்கப் பாதை போடும் அளவிற்கு இங்கே என்ன மர்மம் இருக்கு?”

இருவரும் செண்பகத்தை அழைத்துக் கொண்டு நடக்க “அப்பாவின் பெயரில் மட்டும் இருக்கும் மாளிகை ஆனால் இதை வைத்திருந்தது வேதநாயகம். இந்தம்மாவையும் இங்கே மறைத்து வைத்திருந்திருகிறார். இவங்களுக்கு ஒரு குழந்தை இருந்திருக்கும் போல. எப்பவும் என் குழந்தையை கொடுன்னு அழுவாங்க” என்றான்.

நடந்து கொண்டிருந்த பவன் சடாரென்று நிற்க “என்ன சொன்ன? அந்தாள் கிட்ட இருந்துதா? குழந்தையா?” என்றான் அதிர்ச்சியுடன்.

என்னவென்று புரியாமல் ரிஷி அவனைப் பார்க்க, நடுங்கும் குரலில் “ரிஷி! இவங்க கவியோட அம்மாவா இருக்குமோ?”.

இதை எதிர்பார்க்காத ரிஷி “என்ன சொல்ற?”

“நிச்சயமா இவங்க கவியோட அம்மாவாக தான் இருக்கணும்”.

இருவரும் அந்த நிமிடம் எப்படி உணர்ந்தார்கள் என்றே சொல்ல இயலவில்லை. இருவருக்கும் அடுத்ததை பேச பயம். அமைதியாக அவரை அழைத்துக் கொண்டு வந்த வழியே திரும்ப ஆரம்பித்தனர். வானம் லேசாக விடிய தொடங்கி இருந்தது.

சுரங்கத்தின் வழியே வெளியே வந்தவர்களைக் கண்டு விழிவிரித்து பார்த்தனர் அனைவரும்.

செங்கமலத்தின் பார்வை செண்பகத்தின் மீது படிய, ஒரு நிமிடம் அவரின் இதயம் நின்று துடிக்க “அம்மாடி செண்பகம்” என்று பாய்ந்து சென்று கட்டிக் கொண்டார்.

ரிஷியும், பவனும் அவர்களை பார்த்தபடியே நின்றிருந்தனர். மித்ரா மட்டும் ரிஷியிடம் “சுரங்கம் எங்கே போய் முடிந்தது? அங்கே என்ன இருக்கு?” என்றாள் படபடப்புடன்.

அவளுக்கு பதில் சொல்லாமல் தோட்டத்தின் மீது பார்வையை திருப்பினான். அங்கே அனைத்துக்கும் சாட்சியான கோவில் கம்பீரமாக நின்றிருந்தது. அதைக் கண்டதும் அங்கே செல்ல நகர்ந்தவனை தடுத்து நிறுத்தியது மெல்லிய மந்திர உச்சாடனம்.

பவனும் அந்த சப்தம் வந்த திசையை நோக்கிப் பார்க்க அங்கே வாசமல்லியும் அவரது ஆட்களும் வந்து கொண்டிருந்தனர்.