Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 10 | SudhaRaviNovels

அத்தியாயம் - 10

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 10

நீண்ட நேரத்திற்குப் பிறகு கண் விழித்தாள் கவின்யா. பவனுடன் சென்றது, பின்னர் ஆட்கள் துரத்தியது, கதவை அடித்து உடைப்பது போல் தட்டியது எல்லாம் நினைவிற்கு வர, அவசரமாக எழுந்தமர்ந்து சுற்றுபுறத்தை ஆராய்ந்தாள். ஒரு அறையினுள் இருப்பதை உணர்ந்ததும் மேலும் பயம் எழ, வேகமாக கட்டிலை விட்டு இறங்கி நின்றாள்.

அந்நேரம் ரிஷி கதவை திறந்து கொண்டு உள்ளே வர, அவள் எழுந்து நிற்பதை கண்டதும் “எழுந்திட்டியா ஹனி” என்று அவளருகே செல்ல முயன்றான்.

அவனது ஹனி என்கிற வார்த்தையை கேட்டு உடல் தூக்கிப் போட, அவசரமாக விலகி நின்றவள் “அப்படி என்னை கூப்பிடாதே” என்று கத்தினாள்.

அவள் அருகே செல்ல முயன்றவன் தன் நடையை நிறுத்திவிட்டு யோசனையுடன் “கவி! என்னாச்சு?” என்றான் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டே.

“பவா எங்கே? நீ எதுக்கு என்னை கூட்டிட்டு வந்த?”

“கவி! நீ புரிஞ்சு தான் பேசுறியா?” என்றான் கோபத்தோடு பவனின் பெயரை கேட்டதும்.

“நான் நல்லா புரிஞ்சு தான் பேசுறேன்... நீ என்னை விட்டு விலகிடு. நான் கண்காணாத இடத்திற்கு போயிடுறேன். எனக்கு இந்த இடம் வேண்டாம்” என்று கைகூப்பி அழ ஆரம்பித்தாள்.

அழும் அவளையே யோசனையுடன் பார்த்திருந்தான் ரிஷி. அவளின் ஒதுக்கத்திற்கு காரணம் வேதநாயகம் என்று எண்ணி இருந்தான் அதுநாள் வரை. ஆனால் இன்று அவளின் அழுகை வேறு ஏதோ ஒன்று இருப்பதை உணர்த்தியது. தான் காதலித்த கவி இவளில்லை. நிச்சயம் ஏதோவொன்று அவள் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது.

அவளிடம் தன்மையாக பேசி பார்க்க வேண்டும் என்று எண்ணியவன் “கவி! அமைதியாக இரு. வேதநாயகத்திடம் இருந்து உன்னை காப்பாற்றவே இங்கே அழைச்சிட்டு வந்தேன்”.

அவளோ அவன் பேச்சை காதில் வாங்காமல் “என்னை பவா கிட்ட விட்டுடு. எனக்கு இந்த ஊரும் வேண்டாம், இங்கிருக்கும் மனிதர்களும் வேண்டாம்” என்று மடிந்தமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

அவளது அழுகை அவனை கோபப்படுத்த வேகமாக அவளிடம் சென்று தோள்களைப் பற்றியவன் “என்ன வேண்டாம்? இத்தனை நாள் ரசித்து-ரசித்து காதலித்த நான் வேண்டாமா? எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து-பார்த்து செய்த அந்த கவி எங்கே? உனக்காக சிந்திக்காமல் எனக்காக சிந்தித்த அந்த கவி வேண்டும் எனக்கு. என்னை பார்க்கும் நேரமெல்லாம் அழும் இந்த கவி வேண்டாம்” என்று அவளை உதறி தள்ளினான்.

அவனது கோபம் கண்டு திகைத்தாலும், தன்னை சுதாரித்துக் கொண்டு கண்களை துடைத்துக் கொண்டவள் “நானும் அதை தான் சொல்கிறேன் ரிஷி. நான் வேண்டாம் உனக்கு. என்னை விட்டு ஓரடி தள்ளியே நில். இப்படியொருத்தி உன் வாழ்வில் இருந்ததையே மறந்தாய் என்றால் நிம்மதியாக இருப்பாய்”.

அவளை ஆழ்ந்து பார்த்தவன் இருகைகளையும் கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்று “சரி நீ சொல்கிறபடியே விலகிடுறேன். ஆனா எனக்கு உண்மையான காரணம் வேண்டும். என்னுடைய காதலை விட நீ என் மேல் வைத்திருந்த காதலை நானறிவேன். அப்படி இருக்கும் போது பிரிவை பற்றி பேச நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அது என்ன?”

எதை அவன் கேட்க கூடாது என்று நினைத்தாளோ அதையே அவன் கேட்டுவிட, பதில் சொல்ல தைரியம் இல்லாமல் “எனக்கு இங்கே இருக்கும் யாரையும் பிடிக்கவில்லை. என்னால இனியும் இந்த கொடைக்கானலில் இருக்க முடியாது. இந்தக் காரணம் போதுமா?”

அவனும் விடாது “சரி கொடைக்கானல் தானே வேண்டாம் வா நாம வேறு எங்காவது போய் விடுவோம்” என்றான் விடாக் கண்டனாக.

தனது நிலையை புரிந்து கொள்ளாது பேசும் அவனை எரித்து விடுவது போல் பார்த்தவள் “என்னை இங்கேயே வைத்திருக்கனும்னு நினைத்தா அது நடக்காது ரிஷி. நிச்சயமாக நான் பிணமாக தான் இருப்பேன். எதையுமே ஆராயாமல் அப்படியே என்னை போக விட்டுடு. அது தான் உனக்கு நல்லது” என்றாள் கோபமும், அழுகையுமாக.

அவளின் அழுகை அவனை பாதிக்க அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனம் சொன்னது விஷயம் பெரியது. கவி தன் மனதிலிருப்பதை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தான். அந்த செய்தி தன்னை மிகவும் பாதிக்கப் போவது உறுதி என்று அவன் மனம் கூறியது. அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து வெளியேற முயன்றான்.

“என்னை பவா கிட்டேயே அனுப்பிடு”.

கதவருகே சென்றவன் மெல்ல திரும்பி சற்றே உடைந்த குரலில் “முடிவே பண்ணிட்டியா கவி? என்னை விட்டு போக முடிவு பண்ணிட்டியா?” என்றான் கரகரத்த குரலில்.

அவன் கேட்டதும் அதுவரை இழுத்துப் பிடித்திருந்த உணர்வுகள் கட்டவிழுத்துக் கொள்ள, திரும்பி நின்று கதற ஆரம்பித்தாள். அவளுக்கு மட்டும் விருப்பமா என்ன? நடந்தது விதியின் விளையாட்டா? இல்லை மனிதனின் சுயநலமா? ஆனால் பாதிக்கப்பட்டிருப்பது அவர்கள் அல்லவா?

அவளின் முதுகு குலுங்கியதை கண்டதும் ரிஷியின் கண்களிலும் கண்ணீர் தடம். கவியின் செய்கைக்குப் பின்னே நிச்சயம் பெரிய காரணம் இருக்கிறது. தன்னை அத்தனை காதலித்த அவளால் இப்படி விட்டுக் கொடுக்க முடியாது. தன்னைப் போலவே அவளும் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதையும் தாண்டி விலகி நிற்க, அவளது மனமும் காயப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

“ம்ம்...ரெடியா இரு...பவனை வர சொல்கிறேன்” என்றவன் விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான்.

அவன் சென்றது கூட அறியாது தனது அழுகையை தொடர்ந்திருந்தாள். பெண்ணவள் தனது துயரத்தை அழுகையின் மூலம் துடைத்துக் கொண்டாள். உயிருக்கு உயிராக காதலித்தவளே என்னை விட்டு விலகி விடு என்று சொல்லும் நிலையை அனுபவித்தனோ மனம் தாங்காது நின்றிருந்தான். திடீரென்று மூச்சுக் காற்றிற்கு பஞ்சமாகி போனது.

எத்தனை எத்தனை கனவுகள்? வாழ்வில் துயர் என்கிற ஒன்றை அறியாதவன் அவன். எல்லாவற்றிலும் வெற்றியை மட்டுமே அடைந்தவனுக்கு, வாழ்க்கை கொடுத்த மிகப் பெரிய அடி. அவள் தன்னை வெறுத்து ஒதுக்கவில்லை என்றாலும், ஏதோவொரு காரணத்திற்காக ஒதுங்க நினைக்கிறாள். அவளை நன்றாக அறிந்தவனுக்கு அதன்பின்னே வலுவான காரணம் இருக்கும் என்பதால், அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தான்.

மூளை சொன்ன வழியை இதயம் கேட்க மறுத்தது. அவர்களின் காதலையும், அன்பையும் அனுபவித்த இதயம் அவர்களின் பிரிவை ஏற்க மறுத்தது. வலியை இதயமல்லவா உணர்கிறது. தன்னை மீறி நெஞ்சை தடவியபடியே நிற்க, அவனை முட்டி மோதி வந்து நின்றது அவனது பியுட்டி.

அதன் முகத்தைப் பற்றிக் கொண்டவன் “நீயாவது என்னுடன் இருக்கிறாயே. என்னை மட்டுமே விரும்பி, எனக்காகவே யோசித்து எனக்காகவே வாழ்ந்த அவளின் நாவில் என்னை பவாவிடம் விட்டு விடு என்கிற வார்த்தை வந்து விட்டது. இது எத்தனை பெரிய அவமானம் எனக்கு. எந்த நிலையிலும் அவளின் துயர் துடைப்பேன் என்கிற நம்பிக்கையை அவளுக்கு நான் கொடுக்கவில்லையா? ஏன் அப்படி சொன்னாள் பியுட்டி?”

அதுவோ தனது எஜமானனின் உணர்வுகளை புரிந்து கொண்டது போல, அவன் நெஞ்சில் முட்டி தனது ஆதரவை கொடுத்தது. பியுட்டியின் முகத்தை பற்றிக் கொண்டவன் “எல்லாமும் கிடைத்து கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருந்த என்னை இப்படி ஒற்றை வார்த்தையில் புரட்டி போட்டு விட்டாள்” என்று கண் மூடி நின்றான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவன் “அவனிடம் எப்படி சொல்வேன்? என் காதலியை வந்து அழைத்து போ என்றா? இல்லை! அவள் என்னை வெறுத்து ஒதுக்கி விட்டாள் என்றா? என்ன சொல்லி அவளை அழைத்துச் செல்ல சொல்லுவேன்....அவனிடமிருந்து காப்பாற்றி வரும்போது எத்தனை பெருமையாக உணர்ந்தேன். என் காதலியை என்னிடமே கொண்டு வந்துவிட்டேன் என்று. ஆனால் மீண்டும் நானே அவனை அழைத்து அவளை அழைத்து போ என்று சொல்வதா? என்று மனம் வெதும்பி போனான்.

அவனது துயரத்தை தீர்க்க பியுட்டியை தவிர அங்கு யாருமில்லை. காதல் என்கிற உணர்வு ஒரு மனிதனை இத்தனை உடைத்து போட முடியுமா? உலகம் முழுவதும் பிஸ்னெஸ் செய்து ஒரு மிகப் பெரிய குழுமத்தையே கையில் வைத்திருப்பவன் அங்கே சுக்கு நூறாக உடைந்து நின்றான். ஒரு பெண்ணின் புறக்கணிப்பு அவனது இதயத்தை துடிக்க வைத்துக் கொண்டிருந்தது.

அதே நேரம் வேதநாயகம் கவியை அடைத்து வைத்திருந்தவர்களின் முன் நின்றிருந்தார். ஒவ்வொருவரும் பயந்தபடியே அவரை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அனைவரையும் பார்வையாலேயே விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.

அனைவரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுக்க, கவியிடம் பேசிக் கொண்டிருந்த பெண்ணருகே சென்றவர் அவள் என்னவென்று உணரும் முன் ஓங்கி அறைந்திருந்தார். அதில் அவள் சுருண்டு கீழே விழுந்தாள்.

குனிந்து அவளின் முகத்தருகே “என்னை என்ன கேனப்பயல் என்று நினைச்சியா? என்கிட்டே காசை வாங்கிட்டு அவனுக்கு வேலை பார்த்திருக்க” என்று அவளது கைகளைப் பற்றி எழுப்பினார்.

அவளோ “எனக்கு எதுவும் தெரியாது சார்” என்றாள் கண்ணீருடன்.

அவளை உதறி தள்ளியவர் “எல்லாம் தெரிஞ்சுகிட்டு தான் பேசுறேன். நீ எப்படி ப்ளான் பண்ணி அவன் உள்ளே நுழைவதற்கு இடம் கொடுத்த, யார் அந்த நாய்களை எல்லாம் கட்டி வைத்தார்கள் எல்லாமே எனக்கு தகவல் வந்தாச்சு” என்றார் கோபத்தோடு.

“தெரியாம பண்ணிட்டேன் சார். என்னை மன்னித்து விட்டுடுங்க” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவரோ அங்கிருந்த ஒருவனை அழைத்து “நம்ம தோட்டத்துக்கு உரம் போட்டு நாளாச்சு இல்லையா? போட்டுடு” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அதைக் கேட்டதும் “சார்! என்னை விட்டுடுங்க” என்று கதற ஆரம்பித்தாள்.

சிறிதும் திரும்பி பாராமல் காரில் ஏறி அமர, அவரது கார் அங்கிருந்து வெளியேறியது. அதோடு அந்த பெண்ணின் சப்தமும் மெல்ல தேய ஆரம்பித்தது.

ரிஷியின் மாளிகையில் இருந்த லோகாவின் அலைபேசி விடாது அடிக்க ஆரம்பித்தது. அதை கண்டதுமே ஒருவித பயத்துடன் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர் எடுக்கலாமா வேண்டாமா என்கிற யோசனையுடனே இருந்தார்.

அலைபேசி விடாது அடிக்கவும் அதை எடுத்து காதில் வைத்த நிமிடம் “அடிமையா வாழ்வதற்கு தான் பிறந்தியா நீ? அங்கே என்ன நடக்குது என்று சொல்லக் கூட முடியாமல் என்ன செஞ்சிட்டு இருக்க?”

“நான் முயற்சி செய்தேன். ஆனா என்னால எதையும் தெரிஞ்சுக்க முடியல”.

“அந்தக் கிழவி ஆபிசில் வந்து உட்கார்ந்திருக்கா. பேத்தி என்னவோ கம்பனியே அவளோடது மாதிரி ஆட ஆரம்பிச்சிட்டா. உனக்கு உருப்படியா எதுவும் செய்ய தெரியாதா? உன்னால நான் எங்கே சிக்கி இருக்கேன்னு புரியுதா?”

“மன்னிச்சிடுங்க அண்ணா”

“அவ விஷயத்திலாவது கவனமா இரு. உன் மூலமா எதுவும் தெரிஞ்சுதுன்னு வை தொலைச்சிடுவேன்”.
“சரிங்க அண்ணா ” என்று கூறி போனை அணைத்தார்.

நீலோற்பலம்

தலைவிரி கோலமாக கால்களை நீட்டிப் போட்டு அமர்ந்து கொண்டு கையில் குழந்தை பொம்மையை வைத்திருந்தார் அந்தப் பெண்மணி.

கையிலிருந்த குழந்தை பொம்மையின் முகம் பார்த்து “அழாதாடா தங்கம்...அம்மா உனக்கு பால் எடுத்திட்டு வரேன்-டா” என்று பொம்மையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்தார்.

அவருக்கு ஒரு ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும். அந்தக் குழந்தையை யாரும் தன்னிடமிருந்து பறித்து விடுவார்களோ என்கிற பயத்துடன் அழுத்திப் பிடித்திருந்தார். தள்ளாட்டமான நடையுடன் அங்குமிங்கும் நடந்து அங்கிருந்த மேஜை மேலிருந்த ஒரு டம்ளரை எடுத்து பொம்மையின் வாயில் வைத்து “குடி தங்கம்” என்று கொஞ்சிக் கொண்டிருந்தார்.

அப்போது ஏதோவொரு இடத்தில் யாரோ நடந்து வரும் சப்தம் கேட்க, அவசரமாக குழந்தையை தூக்கிக் கொண்டு மறைவான இடத்தை நோக்கி ஓடினார்.

கண்கள் பயத்தை பிரதிபலிக்க, குழந்தையை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு “உன்னை என்கிட்டே இருந்து பிரிக்க வராங்க...என்னை விட்டு போயிடாதே-டா” என்று மெல்லிய குரலில் விசும்ப ஆரம்பித்தார்.

எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாரோ அப்படியே மயங்கி சரிந்திருந்தார். அவர் கைகளிலிருந்த பொம்மையானது சற்று தள்ளி விழுந்து கிடந்தது.

அப்போது அங்கே வந்த ஒரு ஆணும், பெண்ணும் அவரை பார்த்துவிட்டு :பைத்தியம் மயங்கிடுச்சு.
சீக்கிரம் தூக்கிக் கொண்டு போய் அது அறையில் போட்டுடனும்” என்றான்.

“அந்த பொம்மையையும் எடுத்துக்கையா...இல்லேன்னா கத்தியே நம்மள கொல்லும்” என்றாள் அந்தப் பெண்.

பின்னர் இருவருமாக அந்தப் பெண்மணியை தூக்கிக் கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று படுக்க வைத்தனர். அவர் அருகே அந்த பொம்மையையும் போட்டுவிட்டு அறைக் கதவை அழுந்த சாற்றிவிட்டே சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் தானாகவே மயக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவர் அவசரமாக தனது குழந்தையை தேடினார். அந்த பொம்மை தன்னருகே இருப்பதை பார்த்ததும் அத்தனை சந்தோஷத்துடன் அவசரமாக எழுந்து சென்று சுவற்றில் வரையப்பட்டிருந்த ஒரு உருவத்திடம் “என்னங்க பாருங்க நம்ம குழந்தை எத்தனை அழகா சிரிக்குது” என்று காண்பித்தார்.


சுவற்றிலிருந்த உருவம் நமது கேள்விகளின் பதிலாக இருந்தது. அத்தனை தத்ரூபமாக வரையப்பட்டிருந்த அந்த உருவம் நீலோற்பலத்தின் சொந்தக்காரன். ரிஷி அந்த ஓவியத்தை காணும் போது அவனது நிலை?

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாஞ்சும் கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு

கோவில் புறாவே சாய்ந்தாடு!!