Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் -11 | SudhaRaviNovels

அத்தியாயம் -11

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 11

தனது அறையின் ஜன்னலின் வழியே தோட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தவரின் விழிகளில் கண்ணீர். காலம் எத்தனை வேகமாக சென்று விட்டது. எல்லா மனக் காயங்களுக்கும் காலாமொரு மருந்து என்று சொல்வார்களே...ஆனால் என் மனக்காயத்திற்கு அந்தக் காலமே மருந்தாகவில்லையே.

இங்கு நம்பிக்கை மட்டுமா தோற்கடிக்கப்பட்டிருந்தது? அனைவரின் பாசமும் அல்லவா ஒதுக்கி வைக்கப்பட்டது. இங்கு யாரை குற்றம் சொல்வது? தான் பிறந்து வளர்ந்த வீட்டையே மறந்து வெளியூரில் வாழ்ந்தது எதனால்? மனிதர்களும், காலமும் செய்த துரோகத்தினால் தானே என்றெண்ணி கண்ணீர் வடித்தார்.

நடந்தவைகள் ஒவ்வொன்றும் பசுமரத்தாணி போன்று நெஞ்சில் உளி கொண்டு அடித்து வைத்திருக்கிறதே. யாரையும் மன்னிக்க அவர் தயாராக இல்லை. அதற்காக பழிவாங்கவும் தயாராக இல்லை. இதில் எது நடந்தாலும் நடந்தவைகளை மாற்றிவிட முடியாதல்லவா? தனது செயலே தவறாக போன பின்பு அந்த குற்ற உணர்வில் தவித்து கொண்டிருக்கும் எனக்கு விடுதலை கிடைப்பது எப்போது?
அவரின் தோள் மீது அழுத்தமான கரமொன்று படர, கண்ணீர் சுமந்த விழிகளோடு திரும்பி பார்க்க, மித்ரா கண்களை சிமிட்டி ஆதரவாக புன்னகைத்தாள்.

மெல்லிய குரலில் “என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாக தெரியாது பாட்டி. அம்மாவுக்கு தெரிந்த வரை எனக்கு சொல்லி இருக்காங்க. நீங்க வெறுத்து ஒதுங்கி வந்த கதையும் அப்பா மூலியமாக தெரியும். இந்த இடம் உங்களின் பழைய நினைவுகளை கூறு போடுகின்றது என்று புரியுது. நீங்க இப்போ ஸ்ட்ரோங் ஆக இருக்க வேண்டிய நேரம்”.

கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவர் “ம்ம்ம்...போன முறை செய்த தவறை இந்த முறை செய்ய மாட்டேன் மித்து. அதனால நான் இழந்தவைகள் ஏராளம். எனது தவறின் அளவு பெரிது”.

“தட்ஸ் குட பாட்டி. இனி, இங்கே இழப்புகளுக்கு இடமில்லை. துரோகத்தை வேரறுக்க தான் நாம வந்திருக்கோம். எந்தவொரு சூழ்நிலையிலும் ரிஷியை விட்டுக் கொடுக்க கூடாது”.

மித்ராவின் பேச்சு அவருள் ஒரு உத்வேகத்தை கொடுக்க, அவளது தோளில் சாய்ந்து கொண்டவர் “உன்னால தாண்டா எனக்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. எக்காரணம் கொண்டும் அந்த வேதநாயகத்தை விடக் கூடாது” என்றார் தீவிரமான தொனியில்.

“பார்த்துக்கலாம் பாட்டி” என்று சொன்னவள் அவரை லேசாக அணைத்து விடுவித்து “எனக்கு சில வேலைகள் இருக்கு பாட்டி முடிச்சிட்டு மறுபடியும் வரேன்” என்று கூறி அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் செங்கமலத்தின் அறையை விட்டு வெளியேறும் சமயம் அவளது பார்வை லோகநாயகியின் அறையை தொட்டுச் சென்றது. ஏனோ அவரது அறை மர்மங்கள் அடங்கிய அறையாக இருக்குமோ என்று தோன்றியது.

அந்நேரம் ரிஷி ஒருவித கவலை தோய்ந்த முகத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அங்கேயே நின்றவள் “ரிஷி!” என்றழைத்தாள்.

அவனது கவனமோ எங்கோ இருக்க அவள் அழைத்ததை கவனிக்காமல் சென்று கொண்டிருந்தான்.

அதை கண்டவள் “ரிஷி!” என்று மீண்டும் அழைத்தாள்.

சடாரென்று நின்றவன் “கூப்பிட்டீங்களா?” என்றான் சிந்தனையுடனேயே.

அவன் முன் சென்று நின்றவள் “கம்பனி விஷயமாக உங்க கிட்ட பேசணும். நீங்க எப்போ ப்ரீ?”
“எனக்கு கொஞ்சம் வேலைகள் இருக்கு முடித்ததும் சொல்றேன்” என்றான் அவள் முகம் பார்க்காமலே.

அவளோ அவன் முகத்தை பார்த்துக் கொண்டே “எது கவின்யா விஷயமா?” என்றாள் விழிகளால் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடி.

அவளது கேள்வியில் அதிர்ச்சி அடைந்து “வாட்?”

இதழில் எழுந்த புன்னகையை மறைத்தபடி “கவி...கவின்யா வேலையா என்று கேட்டேன்?”

அதுவரை அவளை பவனிடம் ஒப்படைக்க வேண்டுமே என்கிற கவலையுடன் இருந்தவன் மித்ராவின் கேள்வியில் நிதானத்திற்கு வந்து அவளை முறைத்து பார்த்துவிட்டு “மிஸ் மித்ரா உங்களுக்கும் எனக்கும் கம்பனி தாண்டி பேசுவதற்கு எதுவுமில்லை. அதனால என்னோட பெர்சனல் விஷயங்களில் மூக்கை நுழைக்காம இருந்தால் நன்றாக இருக்கும்” என்றவனது பார்வை அப்போதும் அவளது இதழ்களில் அதிக நேரம் நின்று மீண்டது.

இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவனை நன்றாக பார்த்தவள் “சோ உங்க கவியை பவன் கிட்ட ஒப்படைக்க போறீங்க?” என்று கேட்டு குண்டை போட்டாள்.

அவளது கேள்வி தந்த அதிர்ச்சி அவன் முகத்தில் தெரிய வேக நடையுடன் அவள் அருகே சென்று தன்னையும் மீறி அவளது கைகளைப் பற்றி இழுத்தவன் “உனக்கு எப்படி தெரியும்? என்னை வேவு பார்க்குறியா?” என்றான் கோபமாக.

அவனது மூச்சுக் காற்று மேலே படும் தூரத்தில் மிக நெருக்கமாக நிற்கும் அவனைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டவள் “உங்களை வேவு பார்த்து என்ன செய்யப் போகிறேன்?”.

அவனோ விடாது மேலும் நெருங்கி நின்று “உண்மையை சொல்லு உனக்கு எப்படி இது தெரியும்?” என்று மிரட்டினான்.

அப்போதும் அவனது மிரட்டலை கண்டு கொள்ளாது “நீங்க வெளிநாட்டு பிசினெஸ்மேன் ரிஷி.
நானெல்லாம் லோக்கல் தான். ஆனா இங்கே எப்படி எதை செய்யணும்னு கொஞ்சம் தெரியும்” என்றாள் கண்களை சுருக்கி.

அவளின் முக பாவனை அவனை என்னவோ செய்ய தன்னை மறந்து சிறிது நேரம் அப்படியே நிற்க, அந்நேரம் தனது அறையை விட்டு வெளியே வந்த லோகநாயகி அவர்கள் நின்றிருந்த கோலத்தைக் கண்டு “அடபாவி ரிஷி! இதென்ன இப்படி நிற்கிற நடுவீட்டில்? கவிக்கு துரோகம் பண்றியா?” என்று கத்தினார்.

அவரது சப்தம் கேட்டு அவசரமாக விலக இருந்தவனின் இடையைப் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்ட மித்ரா “நீங்க வெளியில் கிங் மேக்கராக இருக்கலாம் ரிஷி. ஆனா உங்க வீட்டிலும் நிறைய மர்மங்கள் நடந்து கொண்டிருக்கு. முக்கியமா இவங்க மேல கவனம் வைங்க” என்று கூறி விடுவித்தாள்.

அவளது அதிரடியில் அதிர்ந்து போய் இருந்தவன் அவள் சொன்னன விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் “என்ன சொல்ற?” என்றான்.

கண்களை சிமிட்டி “உங்களை சுற்றி நடக்கிற விஷயங்களை கொஞ்சம் கவனம் வைங்க பாஸ். வெளியில் மட்டும் எதிரிகள் இல்லை வீட்டிலும் தான்”.

தான் கத்திய பிறகும் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை கண்ட லோகநாயகி “அக்கா! இங்கே வாங்க! இந்த அநியாயத்தைப் பாருங்க” என்று மீண்டும் கத்தினார்.

அதுவரை அணைத்துக் கொண்டு நின்றவர்கள் சட்டென்று பிரிந்து நிற்க, அங்கே வந்த தெய்வநாயகி “எதுக்கு இப்படி கத்துற லோகா?” என்று கடிந்து கொண்டார்.

“உங்க பிள்ளை பண்ற வேலையை பாருங்க. கவியை விழுந்து விழுந்து லவ் பண்ணிட்டு இப்போ நடுவீட்டில் இவளை கட்டிபிடிச்சுகிட்டு நிற்கிறான்”.

அவர்கள் இருவரும் சாதாரணமாக நின்று கொண்டு தெய்வநாயகியை பார்க்க, லோகாவின் பக்கம் திரும்பியவர் “வர வர உனக்கு கூறு கெட்டு போச்சு லோகா. வளர்ந்த பிள்ளைகளை இப்படி தப்பும் தவறுமா பேசாதே. அதுவும் செங்கமலம் அத்தை காதில் விழுந்தா உன்னை உண்டு இல்லேன்னு பண்ணிடுவாங்க”.

ரிஷியோ சற்றே கடுப்புடனும், சந்தேகத்துடனும் லோகநாயகியை பார்த்துக் கொண்டு “மா! இவங்களை அதிகமா பேச வேண்டாம்னு சொல்லுங்க. அப்படி இருக்க முடியலேன்னா நம்ம கெஸ்ட் ஹவுசுக்கு போக சொல்லுங்க”.

மித்ராவோ அவன் சொன்னதை கேட்டு உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியபடி லோகநாயகியை பார்த்தாள்.

அவரோ வீட்டை விட்டு வெளியேற சொன்னவனைக் கண்டு முகம் வெளிறிப் போக பார்த்தவர் “எனக்கென்ன என்னவேனா நடக்கட்டும் நான் எதிலேயும் தலையிட மாட்டேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடுவிடுவென்று தனதறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.

முதன்முறையாக ரிஷியின் பார்வை அவர் மீது சந்தேகத்துடன் பாய்ந்தது.

மித்ராவின் அருகில் சென்ற தெய்வநாயகி “சாரி-டா! லோகா மனசுல எதுவுமில்ல. பட்டு பட்டுன்னு எதையாவது பேசிடுவா” என்றார் சமாதானமாக.

அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த ரிஷி, “மித்ரா உனக்கு எதுவும் வேலை இருக்கா? என்னோட வெளில வர முடியுமா?” என்றான் யோசனையாக.

தெய்வநாயகியும் “ஆமாம்-டா பிள்ளை பாவம் வந்ததில் இருந்து எங்கேயும் போகாம எங்க கூடவே இருக்கிறா. நீ கூட்டிட்டு போய் சுத்தி காண்பி” என்றார்.

மித்ராவும் மறுப்பு எதுவும் சொல்லாமல் அவனுடன் கிளம்ப, காரில் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது. அவன் எங்கே அழைத்துச் செல்கிறான் என்று கேட்டுக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஊரை விட்டு விலகி இருந்த ஒரு வனாந்திரத்தின் நடுவே இருந்த அந்த மாளிகையினுள் கார் நுழைந்தது. அவளை இறங்கும்படி சைகை செய்து விட்டு தானும் இறங்க, மெல்ல அவன் பின்னே சென்றாள்.
அங்கு வரவேற்பறையில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் கவின்யா. அவளைச் சுற்றி இரண்டு மூன்று பெண்கள் கையை பிசைந்தபடி நின்றிருந்தனர். ரிஷியை கண்டதும் “சார் மேடம் எதுவும் சாப்பிட மாட்டேன்றாங்க” என்று புகார் அளித்தனர்.

அவர்களை எல்லாம் அங்கிருந்து போகும்-படி சொன்னவன் கவியின் முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்தான். மித்ரா எதுவும் பேசாது அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு அவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.

தனது கையை நீட்டி அவளது கைகளைப் பற்றிக் கொள்ள முயன்றவனை திடுக்கிடும் விழிகளோடு நோக்கியவள் “டோன்ட் டச் மீ! பவன் எங்கே?” என்றாள் கோபமாக.

தன்னவள் மீதிருந்த கோபம், ஏக்கம் எல்லாம் மனதை அழுத்த மித்ரா இருந்ததை கூட மறந்து “ஏன் கவி? இந்த அளவிற்கு வெறுக்கும் அளவிற்கு நான் என்ன செய்தேன்?” என்றான் கெஞ்சலாக.

அவன் மீண்டும்-மீண்டும் தன்னிடம் கெஞ்சுவதை பொறுக்க முடியாமல் “உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாதா ரிஷி? என்னை விட்டு விலகி நில்லு. நாம எந்த காலத்திலும் ஒன்றாக வாழ முடியாது” என்று கத்தினாள்.

அவனுக்குமே கோபம் ஈழ “அது தான் ஏன்? அந்த காரணத்தை சொல்லு? வேதநாயகம் உன்னை மிரட்டி வச்சிருக்கானா? அதுக்காக தான் என்னை ஒதுக்க நினைக்கிறியா?”

எரிச்சலும், கோபமும் ஒருங்கே எழ “இது நானே சுய சிந்தனையோடு எடுத்த முடிவு. இதற்கு மேலையும் என்னை தொந்திரவு செய்யாதே ரிஷி”.

சட்டென்று எழுந்து அவளது தோள்களைப் பற்றி “அப்போ இத்தனை நாள் என்னோடு உறவாடியது எல்லாம் நடிப்பா? சொல்லுடி” என்று உலுக்கினான்.

அந்நேரம் சரியாக பவனின் கார் உள்ளே நுழைந்தது. சிந்தனையுடன் கூடிய முகத்தோடு உள்ளே நுழைந்தவன் ரிஷி கவின்யாவை உலுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு வேக நடையுடன் சென்று அவளை அவனிடமிருந்து பிரித்தான்.

அவளும் பவனை கண்டதும் “பவா!” என்று கதறிக் கொண்டு அவனை கட்டிக் கொண்டாள்.

அவளது அந்த கதறலே சொல்லியது அவளின் மனநிலையை. ரிஷி அந்த நிமிடம் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை. அவனது சிந்தனை, சுகம், துக்கம் எல்லாமே எப்பொழுதும் அவளை மட்டுமே சார்ந்திருக்கும். நிற்கும் நேரம், தொழில் செய்யும் நேரம், நடக்கும் நேரம் என்று எல்லா நேரமும் அவன் இதயத்தில் அவள் மட்டுமே அமர்ந்திருப்பாள். சமீபகாலமாக மெல்ல- மெல்ல அவள் தன்னை விட்டு விலகுவதையே தாங்க முடியாமல் இருந்தவன் இன்று அவளின் மனம் தன்னை விட்டு மொத்தமாக விலகி நிற்பதை தாங்க முடியாமல் நின்றான்.

மித்ராவுக்கு ரிஷியின் நிலையை கண்டு பரிதாபமாக இருந்தது. என்ன தான் வேதநாயகத்திற்கு பயந்தாலும் தன் காதலை ஏன் கவி விட்டுக் கொடுக்க வேண்டும் என்று புரியாமல் திகைத்து நின்றாள்.

ஒரு கையால் கவின்யாவை அனைத்திருந்தவன் ரிஷியின் அருகில் சென்று “ஐயம் சாரி ரிஷி...ரெண்டு பேருக்கும் நிம்மதி இல்லாத ஒன்றை எதற்கு பிடித்து தொங்கணும். விட்டுடு” என்றான்.

அவனோ கண்களில் வலியை சுமந்து கொண்டு அவளைப் பார்த்து “நானா உன்னுடைய நிம்மதியை கெடுக்கிறேன்? சொல்லு கவி? நானா உன்னுடைய நிம்மதி கெட காரணம்?” என்று கத்தினான்.

அவனது கோபத்தை கண்ட கவியோ அழுகையுடன் பவனின் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு “ப்ளீஸ்! பவா! என்னை இங்கேருந்து கூட்டிட்டு போ!” என்று கதற ஆரம்பித்தாள்.

அவளது அந்த அழுகை ரிஷியின் நெஞ்சில் அமிலத்தை ஊற்றியது. தன்னைக் கண்டு பயந்து விலகிப் போகும் அளவிற்கா இவளை நடத்தினோம் என்று வலி சுமந்த விழிகளுடன் அவளை நோக்கினான்.

அதுவரை அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா எழுந்து வந்து பவனிடம் “அவங்களை கூட்டிட்டு கிளம்புங்க ப்ளீஸ்!” என்றாள்.

ரிஷியை பரிதாபமாக பார்த்துவிட்டு கவியை தோளோடு அணைத்து ஆறுதல் படுத்திக் கொண்டே காருக்கு சென்றான். அதை பார்த்துக் கொண்டிருந்த ரிஷியின் கண்களில் பளபளப்பு. எத்தனை வருட காதல்! சிறுவயதிலிருந்தே அவளுடனே வளர்ந்து அவளுக்கான தேவைகள் அனைத்தையும் பார்த்து-பார்த்து நிறைவேற்றி என்னவள் என்று மனதில் பதித்து வாழ்ந்து கொண்டிருந்த ஒன்று இன்று முற்றிலுமாக அனைத்தையும் உடைத்து நொறுக்கி விட்டு சென்றிருக்கிறது.

தன்னையும் அறியாமல் மித்ரா அவனது கரங்களோடு கரம் கோர்த்து கொண்டு “ரிலாக்ஸ் ரிஷி! மனசை விட்டுடாதீங்க” என்றாள் மெல்லிய குரலில்.

ஆண் தனது துயரத்தை எப்போதும் அத்தனை எளிதாக வெளிக்காட்டிவிட மாட்டான். முற்றிலுமாக உடைந்து போனாலே அன்றி. தன்னை மீறி ஒரு நிமிடம் மித்ராவை லேசாக அணைத்து அவள் தோளில் முகம் புதைத்து விட்டான்.

இதை எதிர்பார்க்காத மித்ரா அதிர்ந்து அப்படியே நின்று விட்டாள்.

அவனது இதயம் துடிப்பது அவளுக்கு நன்றாக கேட்டது. சற்று நேரம் அவன் துயர் தீர அமைதியாக நின்றாள். அப்போது அவனது அலைப்பேசி அடிக்க, தன்னை சுதாரித்துக் கொண்டவன் தனது அணைப்பில் நின்றிருக்கும் அவளைப் பார்த்து பதறி “சாரி! சாரி மித்ரா” என்றான்.

“நோ ப்ராப்லம்...உங்க போன் அடிக்குது” என்றாள் அவன் முகம் பார்க்காமலே.

ஒருவித சங்கடத்துடன் அவளது முகம் பார்க்காமல் மீண்டும் சாரி என்று கூறியவன் போனை எடுத்து காதில் வைத்தான்.

அந்தப் பக்கம் வந்த தகவல் அவனுக்கு மீண்டுமொரு பேரதிர்ச்சியை கொடுத்தது.

“என்ன சொல்றீங்க? இது உண்மையா?”

“ம்ம்...உண்மை தான்”

“எங்க அம்மாவுக்கோ எனக்கோ தெரியாம எப்படி?”

“டாகுமென்ட்ஸ் செக் பண்ணிட்டோம்”.

“அப்போ நீலோற்பலம் எங்கப்பா பேரில் தான் இருக்கா?”

“ஆமாம் ரிஷி! அது உங்க ப்ராபெர்ட்டி தான்”.

“எங்க ப்ராபெர்ட்டினு சொல்றீங்க? வேற யாரோ அதை யூஸ் பண்ணுகிற மாதிரி இருக்கே. எங்க கிட்ட அதற்கான டாகுமென்ட்ஸ் இல்லையே?”

“எனக்கு தெரிந்து அந்த டாகுமென்ட்ஸ் மிஸ்டர் வேதநாயகம் கையில் இருக்குமென்று தோன்றுது”

“வாட்!

ஆமாம்! நீங்க எதுக்கும் உங்க வக்கீலை விசாரிங்க...நிறைய விஷயங்கள் வெளியில் வரலாம்” என்று கூறி போனை வைத்தார்.

அவனது சொன்ன வார்த்தை நீலோற்பலம் என்பதை சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா “இந்தப் பெயரை எங்க பாட்டி சொல்லி கேட்டிருக்கேன் ரிஷி” என்றாள்.

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா